Wednesday, May 27, 2015

VADU -STORY





வடு -எஸ்ஸார்சி



கையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்த அவன் அந்தப்பெண்மணி எங்கே எங்கே என்று தேடினான்.எந்தப்பெண்மணி த்தேடினான் என்பதைச்சொல்லி ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாத புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஆண்டு தோறும் வரும் .மார்ச் மாதம் எட்டாம் தேதி இது மகளிர் தினம்.அவன் அலுவலகம் உற்சாகத்தோடு கொண்டாடும் திருநாள்.சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்த பெண்மணி சென்னையிலிருந்து வந்திருந்தார்.அவர் புரசைவாக்கம் ஒரு அரசு வங்கியில் வேலைபார்க்கிறார். நடுத்த்ர வயதுக்காரர்.சட்டம் படித்தவர்.
இந்த சமுத்திரகுப்பத்து வங்கி ஊழியர்கள் குறிப்பாக உழைக்கும் ப்பெண்கள் கூடிக்கொண்டாடும் ஒரு விழா. அதற்கு வருகின்ற ஒரு பெண் பேச்சாளர் என்றால் ஒன்றும் லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை.அந்தப்பெண்மணியைத்தான் அவன் தேடுகிறான்.
'யாரத்தேடுரீங்க சாரு' அருகிலில் நின்றிருந்த ஒரு ஆட்டோக்காரன் அவனிடம் கேட்டான்.
'' இல்லை வாழைப்பழம் வேணும்னு அந்த லேடி கேட்டாங்க. வாங்கப்போனேன். நானு வர்ரத்துக்குள்ள போயிட்டாங்கன்னா எப்படி'
''சார் நீங்க அப்படி நவுந்தீங்க அவுங்க ப்ட்டுன்னு நின்னுகினு இருந்த ஆட்டோவுல ஏரி குந்துனாங்க பஸ் ஸ்டேண்டு போவுணும் வண்டி எடுன்னு சொன்னாங்க போயிட்டாங்க. பாத்துகிட்டேதானே இருக்கேன்''
'இல்ல என்னை வாழப்பழம் வாங்கியாங்கன்னு சொன்னவங்க. அதுக்குள்ள ஆட்டோவுல ஏறிகினு போயிடுவாங்களா'
'சார் நான் சொல்லுறன் அவுங்க உங்களை வாழைப்பழம் வாங்க போகச்சொன்னதே உங்க்கிட்டே இருந்து தப்பிச்சி கிட்டு ப்போக இருக்கலாம்.என்னா சொல்லுறீங்க' என்றான் ஆட்டோக்காரன்.
அவன் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தான். ஆட்டோக்காரன் இவ்வளவு பேசுவது சரியில்லை. வேறு ஏதோ நல்ல வேலைக்குப்போக வேண்டிய ஆசாமி ஆட்டோ ஓட்ட மாட்டிக்கொண்டான் போல..அவனுக்கு எரிச்சலாய் வந்தது.
மகளிர்தினக்கூட்டத்திற்கு வந்தவர்கள் அவனிடம் நடந்து முடிந்த நிகழ்ச்சிக்காக வாழ்த்தும் பாராட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
'வருடம் தவறாம இத செய்யுறீங்க. அதுலயும் இந்த வருடம் ரொம்ப சிறப்பு' என்றார் ஒரு தனியார் வங்கி அதிகாரி.அவர் வேறு யாருமில்லை. அவன் வேலைசெய்யும் அதே கிளை அலுவலகத்தில் அவருக்கு கணக்காளர் வேலை..அவன் பக்கத்து இருக்கைக்காரர்.
சமுத்திரகுப்பத்து அர்சுப் பெரிய வங்கியின் மேலாளர் ஒரு வட இந்தியப்பெண். முழுக்கால் சட்டையும் பொருத்தமே இல்லாத ஒரு டாப்ஸ்ம் அணிந்திருந்தாள்.' அவள் அவனிடம் வந்து இரு கைகளை க்கூப்பினாள்.
'யூ அ மேல் அண்ட் யு ஆர் டூயிங்க் அ வொண்டர்ஃபுல் ஜாப்.மை கங்க்ராடஸ் டூ யூ அன்ட் யுவர் டீம்.சம்திங்க் அன்ஃபர்கெட்டபல் இன் மை லைஃப் குளோரியஸ் விமன்ஸ்டே.ஐ பார்டிசிபேடட் டுடே'
அவன் நெகிழ்ந்து போனான்.புன்னகை செய்தான். நிகழ்ச்சி நிறைவாக இருந்ததை அந்த அதிகாரி சொல்லும்போது.அவனுக்கு ஜில்லென்று இருந்தது.
சமுத்திரகுப்பத்து பக்கத்து ஊர்க்காரர்கள் வங்கி ஊழியர்கள்தான் அவனிடம் வந்து நின்றுகொண்டார்கள்.
'சார் இந்த அம்மாவை எப்பிடிப்புடிச்சிங்க.எங்க வங்கியிலதான் ப்புரசவாக்கம் கிளையில இருக்குறாங்க ஆனா எங்களுக்கு தெரியலே.என்னா சார் கொடுமை இது.அவுங்க தொடாத விஷயமே இல்லயே.மும்பை கெம் ஆஸ்பிட்டல்ல ஒரு நர்சை இருவது வயசுல கற்பழிச்சி இருக்கான் ஒரு அயோக்கியன். அந்த பொண்ணு நாற்பது வருஷமா கோமாவுல கெடந்து அழிஞ்ச சோகத்தை அவுங்க சொன்னப்ப கூட்ட்த்துக்கு வந்திருந்தவங்க எல்லாருக்கும் கண்ணு கலங்கியிருந்ததை நீங்க கவனிச்சிங்களா.அந்த மும்பைப்பொண்ணு மட்டும் சாபம் விட்டா இந்த நாடே பற்றி எரிஞ்சி சாம்பலாயிடாதான்னு ஒரு கேள்வி வச்சாங்க்ளே அப்பப்பா என்னா பேச்சு என்னா பேச்சு'.
சொல்லிக்கொண்டே போனார் ஒரு மூத்த பெண் தோழியர்.'அவுங்க் விலாசம் போன் நெம்பர் எனக்கு கொடுங்க இன்னும் எதாவது முக்கியமான கூட்டம் அது இதுன்னா அவுங்களை கூப்பிட்டுக்குவோம்'
கூட்டத்திற்கு வந்த உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் அவனிடம் சொல்லிக்கொண்டு விடை பெற்றார்கள்.
' இலங்கை யாழ்ப்பாணத்துல இனப்படுகொலை நடந்த அப்ப அங்க போய் நிகழ்ந்த வன்கொடுமை அத்தனையும் படம் புடிச்சி கொண்டுவந்தாங்க. அந்த சென்னை ப்பொண்ணு பிரியம் வதா. அந்த பத்திரிகையாளர் பத்திப்பேசுனது எங்களுக்குப்பெருமை' என்றார் ஒரு நிருபர்.
அவன் தன் கையில் இன்னும் அந்த வாழைப்பழ சீப்பை வைத்துக்கொண்டுதான் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தான்.
அவன் அந்த வங்கியில் மகளிர் அனைவரும் கூடிக்கொண்டாடும் அந்த விழாவுக்கு அத்தனை ஒத்தாசை செய்வான்.மேடையில் மகளிர் மட்டுமே அமர்ந்து அலங்கரிக்க வேண்டு மென்று யோசனை சொன்னான்.மகளிர் தின விழா அழைப்பிதழில் ஆண்கள் பெயர் ஒன்று கூட இடம் பெறக்கூடாது என்பதை வலிய்றுத்தியவன் அவன்தான்.தமிழ்த்தாய் வணக்கத்திலிருந்து நன்றி நவிலல் வரை பெண்கள் மட்டுமே நிகழ்த்தவேண்டும் என்று யோசனை வைத்தான்.நிகழ்ச்சியை அவன் ஒரு ஓரமாக நின்றுமட்டுமே கவனிப்பான்.ஆனால்; நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர் யார் வரவேண்டும் எத்தனை மணித்துளிகள் அவருக்குக்கொடுக்கவேண்டும் என்பது சொல்லுவான்.கூட்டம் கறாராக எட்டரை மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பான்.அப்போதுதான் உழைக்கும் பெண்கள் கூட்டத்திற்கு தவறாது நம்பிக்கையோடு வருவார்கள் என்று பேசுவான்.தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று யார் பெண் விடுதலைக்கு க்குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் சமுத்திரகுப்பம் வந்து போனவர்கள்தான்.அங்கே அந்த மேடையில் முழங்கியவர்கள்தான்.
கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட போட்டோக்காரன் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
' அம்மா பேசுனது என் நெஞ்ச தொட்டுது. என் ஊரு மயிலாடுதுறை பக்கம். அந்த தில்லையாடி. வள்ளியம்மையை இப்படி சிறப்பாக ச்சொல்லுறதுன்னா அதுக்கு எவ்வளவு விஷயம் அந்த அம்மாவுக்குப் பிடிபட்டு இருக்கணும். தெய்வத்தமிழ் பேசுன காரைக்கால் அம்மையாரைத்தான் விட்டு வச்சாங்களா. எல்லாத்தையும்தான் கூட்டத்துல பேசுனாங்க.போதும் சாரு இப்படி ஒரு கூட்டம் போட்டா.போதும்' போட்டோக்காரன் நிறைவாச்சொல்லிவிட்டுகக்கிளம்பினான். வழக்கமாய் வரும் பிலிப் மைக் செட் காரனும் சேர் டேபிள் வாடகைக்கு வண்டியில் கொண்டுவந்த சுல்தான் பாயும்' ரொம்ப ஜோர் கச்சிதமா நடந்தது கூட்டம். நல்ல கும்பல் அய்யா ஏற்பாடுல்ல' என்றனர்.
கடைசியாய் க்கூட்டத்தை முன்னின்று நடத்திய பெண்கள் அமைப்பின் தலைவி அவனிடம் வந்து.
' சமுத்திரகுப்பத்து தமிழ் அமைப்பிலேந்து எல்லோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாங்க.சங்கு வளவதுரையனும் பேர்ராசிரியர் பாசுகரனும் வக்கீல் மன்றவாணனும்,விமரிசகர் ரகுநாதனும் எல் ஐ சியில வேல பாக்குற படைப்பாளி ஜெயஸ்ரீயும் , கவிஞ்ர்கள் கோவிஜேயும் பால்கியும் புலவர் அரங்க நாதனும்,திசைஎட்டும் குறிஞ்சிவேலனும் தமிழாசிரிய பானுமதியும் வந்திருந்தது ரொம்ப ரொம்ப சிறப்புங்க அந்த பேச்சாளர் அம்மா சென்னைக்கு பஸ் ஏறிட்டாங்களா.போக வர பேருந்து கட்டணம் அதோட எல்லாமா சேத்து ரூபாய் அய்நூறு கவர்ல வச்சி கொடுத்தேன். என்னா நினைக்கிறாங்களோ'
' இதுல என்ன இருக்கு நினைக்கிறதுக்கு அவுங்க உள்ளத்துல கனலா இருக்குற அந்த .உணர்வுதான் அவுங்களை இங்க் வரவழிக்குது நம்ம கொடுக்குற காசா அவுங்களை. இங்க வரவழிக்குது'.ஏதோ அவனுக்குத்தெரிந்தவரை நீட்டி ப் பேசினான். பேசியது சரியாகத்தான் இருக்கும் என்று எப்போதும் போல் நினைத்துக்கொண்டான்.
அவன் சைக்கிள் மட்டும் அலுவலக வாயிலில் அநாதையாக நின்றுகொண்டிருந்தது.இப்போது அவன் மட்டுமே அலுவலக வாயிலில் இருந்தான்.வங்கிக்கு வாட்ச்மென் போட்டு வேலை பார்த்தது அந்தக்காலம். அதெல்லாம் மாறி ஆண்டுகள் பல ஆகிவிட்டது. கணக்குத்தணிக்கைசெய்பவர்கள் ஒரு குடும்பத்தின் விளக்கு எரிவது பற்றி எல்லாம் கவலைப்படுவார்களா என்ன.அவர்கள் சிவப்பு மையினால் எந்தக்கணக்கையாவது சுழித்துவிட்டால் கதைகந்தல். ஆண்டு முழுவதும் பார்த்தவேலைக்கும் வாங்கிய சம்பளத்திற்கும் பதிலை யார் சொல்வது.
கைவசமிருந்த வாழைப்பழ சீப்பை சைக்கிள் காரியரில் பத்திரமாக வைத்துவிட்டு ஏறி மிதித்தான்.வண்டி நெளித்துக்கொண்டு புறப்பட்டது. சென்னயிலிருந்து கூட்டம் பேச வந்த அந்தப்பெண்மணி தன்னை த்தப்பாக நினைத்தாரா, தன் அந்தஸ்துக்கு இந்த கூட்டம் எல்லாம் எம்மாத்திரம் என்று முடிவு செய்தாரா கூட்டத்தில் போர்த்திய சால்வை கசங்கி கிசங்கி இருந்ததா, கூட்டத்திற்கு வந்துபோக கொடுத்த பணம் ரொம்ப குறைச்சலா ஒரே குழப்பமாக இருந்தது.. கைபேசியை எடுத்து அந்தப்பெண்மணிக்கு ஒரு அழைப்பு போட்டான். மீண்டும் போட்டான்.ஒன்றும் கதை ஆகவில்லை.ஆகவேயில்லை.
தன் குடிய்ருப்பு நோக்கி சைக்கிளை மிதித்தான்.காரியரில் வாழைப்பழம் பத்திரமாக இருப்பதைத் திரும்பிப்பார்த்து உறுதி செய்து கொண்டான்.
தன் வீட்டு வாயிலில் அவன் மனைவி இன்னும் இரவு உணவு சாப்பிடாமல் அமர்ந்து கொண்டிருந்தாள்.
'' கூட்டம் முடிஞ்சு எல்லாரும் வந்துட்டாங்க நீங்கதான் லேட்டா வர்ரீங்க்'
'' என்ன செய்யுறது கூட்டத்திற்கு பேசவந்த அந்த அம்மாவை சென்னைக்கு அனுப்பி வச்சிட்டுதான நான் வரணும்'
' சரி வுடுங்க. நானு பேச என்னா இருக்குது. என்னா சைக்கில் காரியர்ல வாழைப்பழமா அதிசயண்டா இது இண்ணைக்குதான் நான் ஒருத்தி இருக்குறத் ஞாபகம் வந்துதுபோல'
'ஆமாம். உனக்குன்னுதான் ரஸ்தாளி பழம் ஒரு சீப்பு நல்லா இருக்கேன்னு வாங்கிவந்தேன்'
'பழத்தை சைக்கிள் காரியர்ல வச்சா எங்கனா உருப்ப்டுமா. பாருங்க இங்க் சீப்புல பழக்காம்புவ மட்டும் பத்திரமா இருக்கு பழம் எல்லாம் இரும்பு கம்பி அழுத்தி நசுங்கி வீணா போயிருக்கு'
அந்த வாழைப்பழச்சீப்பை அவன் கையில் எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே கம்பீரமாய் நுழைந்தான்.
========================================================
..

pisaku -story




பிசகு -எஸ்ஸார்சி





பெரியசாமி மீது எந்த தவறுமில்லை.எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு.
மணி முத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன் இலாகாவில் நானும் பெரியசாமியும் வேலையில் சேர்ந்தோம் சிலர் டெலிபோன் இலாகாவில் வேலை பார்த்தோம் என்பார்கள் ஒருசிலர் வேலைசெய்தோம் என்பார்கள் ஒரு அலுவலகத்தில் வேலையைப் பார்ப்பதா இல்லை செய்வதா என்கிற ஆராய்ச்சிக்குள் போய் யாருக்கும் ஒன்றும் ஆகப்போவது இல்லை.
எது எப்படி என்று கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள் டெலிபோன் இலாகாவில் வேலை செய்கிறவர்களுக்கு தொழிற்சங்கம் அதன் தொடர்பான பணிகள் எல்லாம்தான் மூச்சுக்காற்று.வேறு எங்காவது வேலைக்குப்போயிருந்தால் தொழிற்சங்கம் இத்யாதிகள் இப்படியெல்லாம் அனுபவமாகுமா என்றால் அதனைச் சொல்லமுடியாததுதான்
.தொலைபேசிப்பணியாளர் தொழிற்சங்கத்தில் இரண்டு மூன்று பிரிவுகள் இருக்கும்.சிவப்பு, சிவப்பிலிலேயே கொஞ்சம் திக்காக வேறு பிற்கு வெள்ளை என ச்சங்கக்கொடிகள் கொண்டவை அவை.
என் நண்பர் பெரியசாமி நான் இருக்கின்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லை எப்படியாகிலும் விஸ்தாரமாய்ப் பேசி என் சங்கத்தற்கு அவரைக்கொண்டு வரவேண்டும்.. இது ரொம்ப நாளாக எனக்கு ஆசை எல்லோருமே நான் இருக்கும் தொழிற்சங்கத்தில் உறுப்பினராகிவிட்டால் தான் சரி என்று கூட எனக்குத்தோன்றும். இந்த் நோக்கத்தோடுதான் நான் எப்போதும் இருந்தேன். இது எல்லாம் சரிப்படுமா இல்லை உறுப்படுமா என்கிற விஷயம் எனக்கு எங்கே தெரிந்தது.அந்த பெரியநெசலூர் பெரியசாமி எந்த சங்கத்தில் இருந்தார் யாருக்குத்தான் என்ன என்று எல்லோரும் வேதாந்தியாய் இருந்துவிட்டால் சண்டை ஏது சச்சரவு ஏது
அப்படியெல்லாம் விட்டுவிடத்தான் முடிகிறதா என்ன. மனக்குரங்கு சதா சர்வகாலமும் விழித்துக்கொண்டு திருவிளையாடலைச் செய்துகொண்டே இருக்கிறதே எங்கே மனிதர்களைச்சும்மா இருக்க விடுகிறதா என்ன.. உலகமே ஒரு மாயை என்று சொல்லிகொள்வானேன் பின் அந்த ஆதிசங்கரர் காவிக்கட்டிகொண்டு கையில் கொடியும் கோஷமுமாய் பாரதம் முழுதும் திரிந்து திரிந்து சங்கர மட க்கிளைகள் நிறுவியது எல்லாம் எதற்கு?.ஆசையே துன்பத்திற்கு ஆதிமூலம் என்று சொல்லி போதி மரத்துக்கீழ் அமர்ந்த புத்தருக்கும் தன் கொள்கையை அகண்ட இந்தியா என்ன இன்னும் தாண்டி தாண்டி பரப்பிவிடத்தான் ஒரு பெரிய ஆசை இல்லாமலா போனது..
சில ஆசாமிகளை ப்பார்த்தால் கொஞ்சம் பேசினால் நான் இருக்கின்ற என் சங்கத்திற்கு வந்து விடுவார்கள் என்று தோன்றும்.சிலரைப்பார்த்தால் இதெல்லாம் ஒன்றும் தேறாதப்பா என்கிறபடிக்கு கல்லுப்பிள்ளையார் மாதிரி தோற்றமளிப்பார்கள்.ஒரு சிலரைப்பார்த்த மாத்திர்மே இவர்கள் நம் சங்கத்திற்கு வரவே வேண்டாம் தோன்றிவிடும். இதற்கெல்லாம் வெளியில் சொல்லிக்கொள்ளும்படியாய்க் காரணம் ஒன்றுமில்லை. ஆனாலும் மனதிற்கு சில ஆசாமிகளை ப்பிடிக்கவில்லையே என்ன செய்ய
தொழிலாளி என்பவனுக்கு வாங்குகிற சம்பளத்திற்கு வேலைசெய்யத்தெரிகிறதோ இல்லையோ கடன் எங்கே எப்படிக்க்ிடைக்கும் என்பது முதலில் தெரியவேண்டும்.கடன் கொடுப்பதற்கு ஒரு வங்கி. இருக்கிறதா என க்கண்டுபிடித்து அதனில் உறுப்பினர் ஆதல் என்பது மிக முக்கியம்.சம்பளம் போடும் அதிகாரியிடம் ஒரு கையெழுத்து வாங்கி சென்னையில் பத்திரமாக இருக்கும் அந்த சொசைட்டிக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைத்தால் கடன் தொகை கைக்கு வந்துவிடும்.சூரிடி என்பதாய் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தொழிலாளி கடன் வாங்குவதற்கு ஜாமின் கையெழுத்துப்போட வேண்டும்.அவரும் கடன் கொடுக்கும் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது என்பதுதான் இதில் மிக மிக முக்கியமானது.
அந்தப்படிக்கு என் நண்பர் பெரியசாமிக்கு கடன் வாங்க வேண்டிய குடும்ப சூழல். வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து அந்த பெரியசாமியும் கடன் கொடுக்கும் சங்கத்தில் உறுப்பினர். அவர் கடன் கேட்கும் பத்திரத்தில் சூரிடி கையெழுத்துப்போடத்தான் ஆள் கிடைக்கவில்லை. அவர் உறுப்பினராக இருக்கும் வெள்ளைக்கொடிஉடைய சங்கத்தில் அவருக்கு சூரிடி போட அதாவது ஒரு நபரின் கையெழுத்து வாங்க அலையோ அலை என்று அலைந்தார். ஒன்றும் கதை ஆகவில்லை.என்ன என்னமோ பேசிப்பார்த்தார்.குழைந்து பார்த்தார். நகைச்சுவையாக ப்பேசினார். வீிறாப்பாகப்பேசினார். விறைத்துக்கொண்டு பேசினார். யாரும் மசியவில்லை.
'எனக்கு ஒரு சூரிடி கையெழுத்து வேணுமே'
அவர் என்னிடம்கடைசியாக்கேட்டார்.
'உங்க வெள்ளைக்கொடி சங்கத்தில் உங்களுக்கு யாரும் போடலயா'
'இல்லயே கேட்டுப்பார்த்தேன் கையெழுத்துபோட யாரும் ஒத்துக்கொள்ளவில்லை'
'என் சங்க உறுப்பினருக்கு மட்டும்தான் நான் சூரிடி போடுவேன். உங்களுக்குப்போட முடியாதே.' நான் வெள்ளைக்கொடி சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்பதை அந்த ப்பெரியசாமி அறிந்தவர்தான்.
'நானு உங்க சாதா சிவப்பு சங்கத்துக்கு வந்துடுவேன். கொஞ்சம் பொறுங்க'
' அதுல என்ன பிரச்சனை'
'சாரு நானு கைமாத்தா அந்த வெள்ளைக்கொடி சங்கத்துக்காரர்கிட்ட வாங்குன பணத்தை த் திருப்பிக்கொடுத்துட்டு பெற்குதான் வரமுடியும்.இப்ப வரமுடியாதே'
'எப்ப அந்த கைமாத்த திருப்பிகொடுப்பிங்க எப்ப நீங்க என் சங்கத்துக்கு வருவிங்க'
'சாரு நீங்க என் சுசைட்டி கடனுக்கு இப்பவே சூரிடி கையெழுத்துப்போடுறீங்க். எனக்கு கடன்பணம் சுசைடியிலிருந்து வந்துடும். அதுல அந்த கைமாத்தயும் அடச்சி புடுவேன். பெறகுதான நானு உங்க சங்கத்துக்கு வர்ரது எல்லாம்'
பெரியசாமி சரியாகத்தான் சொல்கிறார்.நான் அவருக்கு சூரிடி கையெழுத்துப்போட்டுவிடுவது என முடிவுக்கு வந்தேன்.
பெரியசாமி தயாராக வைத்திருந்த சொசைட்டி கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.
'வார்த்தை மாறக்கூடாது. உறுப்பினர் சந்தா தொகை என் சாதா சிவப்பு சங்கத்துக்குசெலுத்தி ரசீது வாங்கி காட்டுணும். இல்ல நான் விடமாட்டேன்'
'நீங்க என்னை நம்பி சூரிடி கையெழுத்து போடுறீங்க.நானு பேச்சு மாறுவனா.எனக்கும் பேசுன வார்த்தை முக்கியம்' பெரியசாமி என்னிடம் உருக்கமாகப்பேசினார்.
நான் பெரியசாமிக்கு கடன் விண்ணப்பத்தில் சூரிடி கையெழுத்துப்போட்டேன்.. அவர் மகிழ்ந்து போனார். என் வாயைமூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் நான்தான் அவரிடம் சொன்னேன்.
' பெரியசாமி நீங்க எங்க சங்கத்துல உறுப்பினரா ஆன பிறகு வர்ர ஆண்டு மாநாட்டுக்கூட்டத்துல உங்களை கவுரவிக்கறம்.சென்னையிலேந்து வர்ர மா நிலச்செயலர் பெரிய தலைவரே உங்களுக்கு சால்வ போத்துவாரு. போதுமா'
'அப்படியே செய்யுங்க' என்றார் பெரியசாமி. கடன் விண்ணப்பத்தில் கடைசியாய் வாங்குகிற சம்பளம், பிடித்தம் இவை குறிப்பிட்டு கணக்கு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கியபின் கையெழுத்துக்கு அடியில் சீல்போட போய் நின்றசமயம் அலுவலகத்தில் யாரோ நோட்டம்விட்டு நான்பெரியசாமிக்கு சூரிட்டி கையொப்பம் போட்டிருப்பதை வெள்ளைக்கொடித்தலைமைக்குத்தகவல் சொல்லிவிட்டார்கள்,அதிலிருந்து என் நண்பர் பெரியசாமிக்கு மேற்படியார் தொல்லை பல கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெரியசாமி எப்படியும் சதா சிவப்பு சங்கத்திற்கு போய்விடுவார் என்பது பற்றி அலுவலகத்தில் குசு குசு பேசிக்கொண்டார்கள்.
'எனக்கு சூரிட்டி போட யாரு வருவாங்கன்னு நாயா பேயா அலைஞ்சன் அப்ப எந்த கழுதயும் வந்து தே நா இருக்குறன்னு வந்து நிக்குல. இப்ப சங்கத்து விட்டு பூடுவேன் அது இதுன்னு எதுக்கு புரளி பேசுறது.' பெரியசாமி ஓங்கிக்கத்தினார்.சில நாட்களுக்கு அமைதியான சூழலே அலுவலகத்தில் நிலவியது.
பிறகு பெரியசாமி புதியதாகக்கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் நடந்தது.நானும் பெரியசாமியும் பார்த்து பார்த்து பத்திரிகை கொடுத்தோம். சாதா சிவப்புசங்கத்திற்கு பெரியசாமி அப்போதுதான் வந்த சமயம் என்பதால் சாதா சிவப்பு சங்கத்தோழர்கள் ஒருவர் விடாமல் எல்லோருமே புதுமனைப் புகுதல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.
ஆண்டு மாநாடு வந்தது. மாநாட்டு நிகழ்ச்சியில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.புதியதாக உறுப்பினராகச்சேர்ந்த பெரியசாமியும் மேடைக்கு எதிரே அமர்ந்திருந்தார்.மாநாட்டுத்தலைவர் ஒரு அறிவிப்பு செய்தார்.
'அதாவது பெரிய நெசலூர் பெரியசாமி நம் சாதா சிவப்பு சங்கத்தில் புதிய உறுப்பினராகச்சேர்ந்துள்ளார். அவர் இப்போது நம் மாநிலச்செயல்ருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிப்பார்'
பெரிய நெசலூர் பெரியசாமி தன் இருக்கைய விட்டு எழுந்தார்.மேடைக்குச்சென்றார். விழாத்தலைவரிடம் சால்வையை வாங்கினார். பிரித்தார் .தானே தன் கழுத்தில் மாலையாக அந்த சால்வையை அணிந்துகொண்டார்.இரண்டு கைகளையும் கூப்பிப் பார்வையாளர்களை வணங்கினார்.தன் இருக்கைக்குச்சென்று அமர்ந்துகொண்டார்.
கூட்டம் அமைதியாய் நிகழ்ந்தது அனைத்தும் பார்த்துக்கொண்டது.நான் வேறு ஒரு சால்வை எடுத்துக்கொண்டேன். விழாத்தலைவரிடம் நடந்துவிட்ட விஷயம் சொல்லி ப்பின் மாநிலச்செயலருக்கு அதை அணிவித்து நிறைவு செய்தேன்.
'இது எல்லாம் அங்கங்க நடக்கிற சின்ன விஷயம்தான் விடுங்க' என்று சொல்லிய மாநிலச்செயலர் ஆண்டு மாநாட்டு அரங்கத்தில் நேர்ந்துதுவிட்ட நிகழ்வைச் சமாளித்து முடித்தார்.
அடுத்த நாளிலிருந்து பெரியசாமி என்னிடம் பேசவே இல்லை.அவருக்கு எதனை யார் எப்படி எப்படிச்சொன்னார்களோ நான் அருகில் போய் 'நண்பரே' என்றுபேச ஆரம்பித்தேன்.
'போதும் சாரு போதும் இனி ஒரு வார்த்தை எங்கிட்ட பேசாதீங்க அதான் ஆண்டு மாநாட்டுலயே அய்யாவை பாத்துட்டேனே நான் உப்பு போட்டுகினுதான் சாப்புடறன் மானஸ்தன்'
வெள்ளைக்கொடி சங்க தகவல் பலகையில் ஒரு செய்தி போட்டிருந்தார்கள். 'தோழர் பெரிய நெசலூர் பெரியசாமி தாய்ச்சங்கத்தில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' நான் படித்துக்கொண்டேன். எத்தனைக்காலம்தான் ஒருவர் படிப்பது.
-------------------------------------------------------------------------------------------------


Tuesday, May 12, 2015

nerutal -story




நெருடல் -எஸ்ஸார்சி




அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் 'படித்தலும் படைத்தலும்' அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். த்ரமான ஒரு இலக்கிய பத்திரிகையிலும் அது பிரசுரமாகி வெளி வந்திருந்தது.. அந்த இலக்கிய பத்திரிகையைப்பிரித்து அதனைப்பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி.அதே இலக்கிய பத்திரிகையில் அவ்வப்போது அவன் எழுதிய கட்டுரைகள்தான் சமீபத்தில் இப்படி ஒரு புத்தகமாக வந்தது...
அவன் எழுதி அவை வெளியும் வந்து சற்று பேசவும் பட்ட அவைகளை த் தொகுத்து ஒரு நூலாகவெளியிட சின்னதாக அவனுக்கு ஆசை. எங்கு எங்கோ போனான் எவர் எவரையோ கேட்டுப்பார்த்தான்.ஒன்றும் கதை ஆகவில்லை.கடைசியாக அண்டை ஊரில் ஒரு பதிப்பாளருக்கு ஒரு இலக்கிய நண்பர் வழி காட்டினார். நண்பர் ஊரும் பெயரும் மட்டும் சொல்லக்கூடாதுதான்.அவனுக்கு அங்கு போக அரைகுறை மனது. இருந்தாலும் போய்விட்டு வந்தான்.
யார் வேண்டாம் என்றார்கள். புத்தகத்தை த் தானே அச்சிட்டும் வெளியிடலாம். அப்படியெல்லாம் ஒரு காலம் இருந்தது.அதற்கு அரசாங்க நூலகங்களின் ஏற்பாணை வந்து சேரும். புத்தகம் அச்சிட செலவு செய்த காசு கையைக்கடிக்காமல் அந்தந்த மாவட்ட நூலக நிர்வாகத்திலிருந்து தாமதமாகவாவது அந்தப் படைப்பாளியின் வங்கிக்கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும். புத்தகம் போட்டதில் நட்டம் என்று ஆகிவிடாது. புத்தகம் போடாமல் எப்படி ஒரு எழுத்தாளன் ஜீவிப்பது என்கிறபடிக்கு நினைப்புள்ள முந்திரிக்கொட்டைகள் ஒருவிதமாய்ப் பிழைத்துக்கொண்டு விடலாம்.
புத்தகத்தேர்வு என்னும் சடங்கு அதில் தரமாவது கிரமாவது நூலக ஏற்பிற்கென்று குறுக்கு வழிகள் நிச்சயமாக உண்டென்பார் சிலர் . அப்படியும் சென்று வென்று வென்று வந்தவர்கள் ஏராளம் உண்டு. வெற்றி எனபது என்ன என்று கேள்வி எல்லாம் கேட்டு வைக்காதீர்கள். ரொம்பவும் சிரமம்.அவனுக்கு அது எல்லாம் தெரிந்திருந்தால் ஏன் இப்படி..நேர்வழி போகவே உன்ன்னைப்பிடி என்னைப்பிடி என்பதுதானே அவன் சமாச்சாரம்அவனைச்சொல்லி குற்றமில்லை. அவன் வந்த வழி அப்படி.
கைகாசு போட்டு இலக்கியக் கட்டுரை நூலை அச்சிட்டு.
அதற்கு அரசாங்க நூலக ஆணையும் கிட்டாது போய்விட்டால் அப்போது என்ன செய்வது.
அரசாங்கம் தன் ஊழியருக்கு ஒதுக்கிய வீடுதானே அவன் குடியிருப்பது ஆக வீட்டுப்பரணையில் சில மாதங்கள் அச்சிட்ட அந்தப் புத்தகங்களை துயில் கொள்ளச்செய்யலாம். பிறகு பழைய புத்தகம் பேப்பர் பிய்ந்த பிளாஸ்டிக் செருப்பு இத்யாதிகள் வாங்க கள்ளத்தராசு சகிதம் வீதி வலம் வரும் அரிச்சந்திர பூபதிளிடம் . எடைக்குப்போட்லாம். வெங்காயம் தக்காளி எனச்சிலதுகள் வாங்கலாம். அப்படி மனம் வருமா என்னா. வேறு வழி தெரியவில்லையே
.பார்ப்பது அரசாங்க உத்யோகம்.மாதம் பிறந்தால் சம்பளம். அதனைக் கையில்.வாங்கவும் இன்னார் இன்னாருக்கு கொடுத்து பட்டுவாடா செய்யவும்தான் அவனால் முடிந்தது.
அண்டையூர் புத்தகப் பதிப்பாளரை அவரை ப்புத்தக வியாபாரி என்று சொன்னால் அது மிகச்சரி
ஒரு நாள் அந்த அண்டையூர் பதிப்பாள்ர் அவனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். 'சார் உங்க கட்டுரை பத்தகம் ரெடி நீங்க வரலாம் நீங்க கொடுத்த அந்த பத்தாயிரத்துக்கும் ஒரு நூறு காபி எடுத்துக்கலாம், நீங்க எப்ப முடியுமோ அப்ப வாங்க' அவன் மகிழ்ந்து போனான்.இப்படிஎல்லாம் கூட டெலிபோனில் கூப்பிட்டு விஷயம் சொல்லும் பெரிய மனமுள்ள ஒரு பதிப்பாளர் எந்த எழுத்தாளருக்கேனும் கிடைப்பாரா என்ன? மனதில் எண்ணிப்பார்த்தான். ஒரு பேருந்து பிடித்து அடுத்த ஊருக்குப்போய் வந்துவிடவேண்டியத்தான் அச்சிடப்பட்ட அந்த ப் புத்தகம் பார்க்காமல் மனம் கிடந்து அடித்துக்கொண்டது. ஒரு குழந்தையைப் பிரசவித்து மருத்துவ மனையில் அவன் மனைவி படுத்துக்கிடப்பது போலவும் உடன் தான் போய்ப்பார்க்காவிட்டால் எப்படியாவது என்கிறமாதிரியும் அவனுக்குத்தோன்றியது.ஒரு புத்தகம் அச்சில் வந்து அதனை அச்சுக்கூடத்தில் போய் முதல் முதலாய்ப்பார்த்தல் என்பது ஒரு படைப்பாளியாய் இருந்து அனுபவித்துப்பார்த்தால் மட்டுமே தெரியவரும். மற்றபடி இது விஷயம் பற்றி எவ்வளவு எழுதினாலும் அது சரிப்படாது.
பதிப்பகம் இருக்கும் அந்த அண்டை ஊருக்குப் பேருந்து பிடித்து அதனில் ஏறி அமர்ந்து கொண்டான்.மனம் புத்தகம் பற்றிய அதே நினைப்பில் நிறைந்து கிடந்தது.பேருந்தில் டிக்கட் வாங்கி அவனோடு அமர்ந்து பயணிப்பவர்களை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.ஏன் எல்லோருமே அவனைவிட உயரத்தில் ஒரு சாண் குறைந்த மாதிரியே தெரிகிறார்கள். அவனுக்கு அந்த சூட்சுமம்தான் பிடிபடவில்லை பேருந்தைவிட்டு இறங்கி நடந்தான். பதிப்பகம் இன்னும் தூரத்தில் இருந்தது.அது ஆட்டோ பிடித்துப்போகும் தூரத்திலும் இல்லை. ஆட்டோ வேண்டாம் நடந்தே சென்று விடலாம் என்கிற தூரத்திலும் இல்லை.இரண்டு கெட்டானாய் ஒரு தூரம் அது. வீதி வழி செல்லும் ஆட்டோக்காரன் ஒருவன்' சாரு எங்க போகணும்' என்று கேட்டதுதான் தாமதம். அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டான்.இப்படி லபக் என்று ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொள்ள ஆலாய்ப்பறக்கும் தனக்கு வேகு வேகு என்று நடக்கிற பிடிவாதம் எல்லாம் எதற்கு அவன் மனசாட்சியையே அவன் கேட்டுக்கொண்டான்.இது மாதிரி இன்னும் எத்தனையோ நடந்து தானே இருக்கிறது. நண்பர் வீட்டிற்குச்சென்று அங்கு சாப்பிடச்சொன்னால் முதலில் பிகு செய்வது பிறகு சாப்பிட உட்கார்ந்து மொத்தமாய் சமைத்த எல்லாவற்றையும் காலி செய்வது. சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முறை அவன் தோழர்களோடு காவேரி க்கல்லணைக்கு உல்லாசப்பயணம் போனான். காவேரியில் தண்ணீர் நிறைந்து கரையைத்தொட்டுக்கொண்டுபோன அந்தக்காலம்.கர்நாடகக்காரர்கள் தண்ணீர் பஞ்ச்சாயத்தில் இத்தனை சூது வாது புரட்டல் இத்யாதிகள் கற்றுக்கொண்டிராத நல்ல காலம் டூருக்குப்பணம் கட்டிவிட்டதால் வேறு வழி இன்றி போகவேண்டியதாயிற்று. டூருக்குக்கிளம்பும் அந்த சமயம் பார்த்து அவனுக்கு வயிறு என்னமோ செய்தது. வயிற்றை ப்பற்றி யாரும் லேசில் எடை போட்டுவிடாதீர்கள். ஒருவன் வாய் கிழியப் பேசிய அந்த ஜம்பத்தை எல்லாம் நான்கு முறை வயிறு கலக்கிக்கொண்டு பின்புறம் போய் போய்வந்த பிறகுதான் பார்க்க வேண்டும். கல்லணை டூருக்கு வரமுடியவில்லை உடம்பு கொஞ்சம் சுகம் இல்லை என்றால் அவன் கட்டிய காசு கோவிந்தா என்றார்கள்.டூர் நடத்துனர்கள் லேசுப்பட்டவர்களா என்ன.டூருக்கு வந்தவர்களுக்கு எல்லாம் சொன்னபடி இட்டலி பொட்டலம் வினியோகித்தார்கள்.அவனும் ஏழு இட்டலிகள் துயின்ற ஒரு பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டான் அந்த டூர் நிர்வாகிதான் அவனைப்பார்த்துக்க்கேட்டார்'உடம்பு சரியில்லை டூருக்கே வருவது சந்தேகம் என்றாய் எண்ணெய் மிளகாய்ப்பொடி முக்கிய ஏழு இட்டலிகள்.சாப்பீட்டு விட்டாய் பரவாயில்லை ' இப்படி எத்தனையோ வாங்கிக்கட்டிக்கொண்டுதானிருக்கிறான். கிடக்கிறது நம் கதைக்கு வந்துவிடுவோம். அவன்.
பதிப்பாளர் வீட்டு வாயிலில் ஆட்டோ விலிருந்து இறங்கிக்கொண்டான்.பதிப்பாளருக்கு வீடு அலுவலகம் எல்லாம் ஒன்றுதான்.
'வாங்க தசுரா வாங்க புத்தகம் பாக்க வந்தீகளா'
'ஆமாம். புத்தகம் பார்க்கத்தான் வந்தேன்'
' என் டேபிள்ள பத்திரமா ஒரு காபி இருக்கு பாருங்க உங்களுக்குச்சேரவேண்டியது அந்த நூறு காபியும் ஒரு பார்சலா கட்டி வச்சிருக்கேன். எடுத்துகுங்க. வேறு என்ன செய்தி' என்றார் பதிப்பாளர். அவன் திண்டாடித்தெருவில் நின்று ரூபாய் பத்தாயிரம் அவரிடம் கொடுத்துத்தான் இருந்தான்.பதிப்பகத்தாருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. நூலக ஆணை வந்தால் லாபம் அப்படி இல்லை என்றால் ஒன்றும் குடி முழுகி விடாது..பதிப்பகத்தில் புதிய புதிய அச்சிட்ட புத்தகங்கள் இறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான்.அவன் எழுதிய கட்டுரை நூல் படித்தலும் படைத்தலும் மேசையின் மீது அழகாக அமர்ந்திருந்தது.கையில் எடுத்துக்கொண்டான்.தான் எழுதிய அந்த 'என்னுரை' யை வாசிக்கத்தொடங்கினான்.முதல் பக்கத்திலேயே எழுத்துப்பிழைகள். அவனுக்கு மனம் நொந்துபோனது.பக்கம் பக்கமாகப்புரட்டினான்.எழுத்துப்பிழை இல்லாத பக்கமே இல்லை. வாக்கிய்த்திற்கு வாக்கியம் எழுத்துப்பிழை.
பதிப்பாளர் தன் மேசையில் ஜோசியப்புத்தகம் எதையோ ஒன்றை வைத்துகொண்டு 'மாமாங்க வருடத்தில் திருமணம் செய்யலாமா' என்பதைப் படித்துக்கொண்டிருந்தார்.
'சார் இந்த புத்தகத்துக்கு ப்ரூஃப் பார்த்தது யாரு'
'ஏன் வழக்கமா ப்பாக்குற அந்த தீர்த்தமலைதான் '
'எனக்கும் அவரை த்தெரியுமே தீபம் தீர்த்தமலை தானே நீங்க சொல்றது'
'ஆமாம் அவரேதான் அந்த வயசான மனுசன் உயரமா தல க்கூட வழுக்கயா'
'கொஞ்சம் அவுரு டெலிபோன் நெம்பரு இருந்தா கொடுங்களேன்'
' ரைட்டா தர்ரேன் இதோ டேபிள் மேலேயே எழுதி வச்சிருக்கேன் பாருங்க'
அவன் அந்த தீர்த்தமலையின் டெலிபோன் எண்ணை ப்பார்தததுமே உடன் தன் செல் பேசி எடுத்துக்கொண்டு அடித்துப் பேசினான்.
'யாரு தீர்த்தமலை சாருதானா வணக்கம் சார்'
'யாரு பேசுறதுன்னு சொல்லிட்டு பேசலாமே'
'தப்புதான் நான் தசுரா பேசுறன்'
'அந்த தருமங்குடி சுந்தரேசன் ராமச்சந்திரன் தானே.'
'ஆமாம் சார் நானேதான் பேசுறேன்'
' உங்க கட்டுரை புத்தகம் பார்த்தேன். ப்ரூஃப் திருத்தணும்னு பதிப்பகத்துல குடுத்தாங்க. கவனமா படிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிது. ரொம்ப ப்பிரமாதம்னு வச்சிகுங்க. தொடர்ந்து எழுதுங்க சாரு, நீங்க எல்லாம் எழுதறத வுட்டுடப்பிடாது. ஆழமா இருக்கு அழகாவும் வருது.எனக்கு உங்கள நேரா கூப்பிட்டு பாராட்டணும்னு ஆசை.ஆனா உங்க நெம்ப்ரு தெரியலே. அதான்'
' அதே புத்தகத்துக்கு நான் எழுதியிருக்கிற என்னுரையில என் என் டெலிபோன் நெம்பரு கொடுத்து இருக்கேன் பாத்து இருக்கலாமே'
' ஆனா எனக்கு தோணலே. வயசாச்சி பாருங்கோ தசுரா நான் என்ன பண்ணுவேன்'
'பதிப்பகத்துக்காரங்க சொன்னாங்க தீர்த்தமலைதான் ப்ரூஃப் பார்த்ததுன்னு. அதனாலே உங்களை கூப்பிட்டு நான் ஒரு நன்றி சொல்லணும் இல்லயா அதுக்குத்தான் கூப்பிட்டேன்'
' இந்த காலத்துல இப்படி எல்லாம் நன்றி யாரு சொல்லுறா. தசுரா சார்னா ஒரு தனிரகம்னு சொல்வேன்'
'ரொம்ப நல்லா ப்ரூஃப் பார்த்து இருக்கிங்க நன்றி ரொம்ப நன்றி சாரு'
'என் கடமையை நான் செஞ்சேன். இதுல எனக்கு என்ன நன்றி அது இது எல்லாம்'
'அப்படி சொல்லக்கூடாது சார் நீங்க பெரிய வா நான் உங்களுக்கு எப்பவும் கடமைப்பட்டவன்'
'நீங்க பேசினதே ரொம்ப மகிழ்ச்சி..கொஞ்சம் பிசி மன்னிச்சுக்கணும் தசுரா'
தீர்த்தமலை டெலிபோனை வைத்துவிட்டார்.
அவன் பதிப்பாளரை ப்பார்த்துக்கொண்டான்.'
'சாரு தீர்த்தமலைண்ட பேசினீங்களா என்ன சொல்லுறாரு'
'ஒண்ணும் இல்லே ஒரு நன்றி சொன்னேன்'
'இதுல என்னா இருக்கு. சொல்லவேண்டிய விஷயம்தானே'
அவன் வேறு எதுவும் பதிப்பகத்தாரிடம் பேசவில்லை. அப்படிப்பேசித்தான் இனி என்ன ஆக இருக்கிறது;
'உங்க் புத்தகங்க நூத்தையும் எப்படி எடுத்த்கிட்டுப்போறீங்க இங்க இட நெருக்கடி புத்தகங்க வீணா போயிடும் இப்பவே எடுத்துகிணு போயிடுங்க அதான் நல்லது'
'இப்ப அப்படி வருல்லே. வேற ஒரு வேல இருக்கு அத முடிச்சிகிட்டு நான் ஊருக்கு ப்போகணும்'
'அப்படி என்னா வேல சாரு'
'அதையும் சொல்லிடறேன் நண்பர் பொண்ணுக்கு இன்னக்கி மஞ்ச தண்ணீ அதுக்குத்தான் வந்தேன் அப்படியே புத்தகத்தையும் பாத்துட்டு போலாம்னு'
'அப்படியா எனக்கும் ஒரு மஞ்ச தண்ணீருக்குப்போகணும் நீங்க எங்க சார் போகணும்'
அவனுக்கு கடுப்பாக வந்தது.பதிப்பாளருக்கு பதிப்பக வேலை ஒன்று மட்டுமா என்ன நினைத்துக்கொண்டான்.
மனதில் தைர்யத்தை வரவ்ழைத்துக்கொண்டு' அந்த கரும்பு விவசாயிங்க சங்க மண்டபத்துல அந்த நிகழ்ச்சிய வச்சிருக்காங்க. அங்கதான் போகணும்'
'அப்படி ப்போடுங்க நானும் அதே மண்டபத்து அதே மஞ்சதண்ணீருக்குத்தான் போறன். அவுரு உங்களுக்கு உறவா அவுரு ரெட்டியாரு இல்ல'
' எனக்கு அவர் உறவு இல்ல நண்பரு'
' அதானே பாத்தேன்.வாங்க நானு வண்டியில போறன். என் வண்டியிலயே உங்கள கூட்டிகினு போயி உட்டுடுறன் என்ன சாரு'
' மன்னிக்கணும் ஒரு அன்பளிப்பு வாங்கியாகணும் அதுக்கு கொஞ்சம் நேரம் வேணும் கடைத்ருவுல நாலு கட ஏறி எறங்கி வாங்கணும் சும்மா வாங்க முடியுமா'
'ஒரு புத்தகத்தையே பரிசா குடுக்கலாம் நீங்க எழுதின அந்த கட்டுரை நூலை கூட அன்பளிப்பா கொடுக்கலாம் அப்பதான் நீங்க ஒரு எழுத்தாளர்னு பளிச்சினு தெரியும்'
'நாம்ப எழுதறத நம்ப பொண்டாட்டி புள்ளங்களே படிக்க மாட்டேங்குது அப்பிடி இருக்கறப்ப ஏன் அந்த சின்ன பொண்ண தொந்தரவு பண்ணிகிட்டு'
'அப்புறம் உங்க சவுகரியம்' பதிப்பாளர் பேச்சை முடித்துக்கொண்டார் அவன் கையில் இன்னும் அந்த கட்டுரைப் புத்தகம் இருந்தது.மனம் கிடந்து அடித்துக்கொண்டது.பதிப்பகத்தை விட்டுக்கிளம்பினான்.
மஞ்சள் நீர் சடங்குக்கு வந்தது என்பதெல்லாம் அவன் சும்மாவிட்ட கதைதானே ஆமாம் அது எப்படி பதிப்பாளருக்கும் அதே மண்டபத்தில் ஒரு மஞ்சள் நீர் சடங்கு போகவேண்டும் என்கிறார். யோசிக்க யோசிக்க அவனுக்கு மண்டை விண் விண் என்று வலித்தத்து.
அவன் பொடி நடையாய் பேருந்து நிலையம் வந்தடைந்தான்.ஆட்டோ வாவது கீட்டோவாவது.அவன் நடக்கின்ற அசுர வேகத்தில் எந்த ஆட்டோக்காரன் தான் பேசுவான். கட்டுரைப்புத்தகத்தை அச்சிடுகிறேன் என்று சொல்லி அதனை வீணாக்கி க்கொடுத்திருக்கிறார் அந்த பதிப்பாளர்.இனி என்ன செய்ய இருக்கிறது.ஆனது ஆயிற்று.கொட்டிய பாலும் உடைந்த கண்ணாடியும் ஒப்பாரிவைத்து அழுதால் திரும்ப வந்துவிடுமா நமக்கு எதிலும் அவசரம் எதை ஒழுங்காய் ச்செய்ய நமக்கு யோக்கியதை இருக்கிறது. அவனையே அவன் திட்டித்தீர்த்தான்.
கையிலிருந்த கட்டுரைப்புத்தகத்தை வீசி எறிந்து விடலாமா என யோசித்தான்.நாம் பெற்ற பிள்ளை நொண்டியோ முடமோ நம்மோடு என்று சமாதானம் சொல்லிக்கொண்டான்.புத்தகத்தின் மேலட்டை யாருக்கும் தெரியாமல் இருக்க ஒரு நியூஸ் பேப்பரால் அட்டை போட்டு அடக்கமாய் க்கையில் வைத்துக்கொண்டான்.புத்தகத்தைப்பிரித்துப்பார்க்கவே பயமாக இருந்தது.
அவன் கை எழுத்தும் அத்தனை மோசம்.நன்றாக எழுதவேண்டும் என்றாலும் அவன் எழுதுவான்தான். சமயத்தில் கிறுக்கியும்விடுவான். ஆனால் புத்தகம்போட க்கொடுத்த அத்தனையும் அச்சில் வெளி வந்தவையின் செராக்ஸ் நகல் தானே பின் ஏன் இப்படி என்று அவனையே அவன் நொந்துகொண்டான். வீட்டில் கொண்டுபோய் யாருக்கும் கண்ணில் படாமல் இருக்க அந்த க்கட்டுரைப் புத்தகத்தை வைத்தான்.ஒருக்கால் மனைவி கண்ணில் பட்டுவிட்டால் போனது மோசம் இத்தனை பிழை கொண்ட புத்தகம் அச்சிட எத்தனைச் செலவு என்பாள்
.நூறு புத்தகம் நமக்கென்று அங்கு கட்டிக்கிடப்பது பதிப்பாளரிடமே கிடக்கட்டும்.அது வீட்டுக்கே வரவேண்டாம் என முடிவோடு இருந்தான்.இப்படியாகக்காலம் சென்று கொண்டிருந்தது.இன்னொரு நல்ல புத்தகம் பிழை இல்லாமல் போட்டால் மட்டுமே மனம் ஆரும். அவன் மனம் ஆறினால் யாருக்கென்ன ஆறாவிட்டால் யாருக்கென்ன இருக்கிறது.
இப்படி வெட்டியாய் க்காலம் சென்று.கொண்டிருக்கும்போதுதான் ஜிஜியார் எழுதிய விமரிசனம் அதே இலக்கிய இதழில் வெளிவந்தது. அதிலும் சூப்பர் விஷயம் இதுதான்.'தசுரா அவர் நேரத்தையும் வீணாக்கி நமது நேரத்தையும் வீணாக்கிட இப்படி ஒரு கட்டுரை நூல் எழுதாமல் இருந்திருந்தால் அதுவே ஒரு இலக்கிய சேவையாக இருந்திருக்கும்'. இதைவிடவும் அவனுக்கு வேறு என்ன பரிசு வேண்டும். இந்த புத்தகத்தை ஜிஜியாருக்கு எந்த புண்னியவான் அனுப்பிக் கொடுத்தானோ.நன்றாக எழுதியதாய் ஒரு புத்தகத்தை ஊரெல்லாம் சொன்னாலும் ஒருவரி விமரிசனம் எழுத கையையும் காலையும் பிடிக்க வேண்டியிருக்கிற கலி காலம். இது யாருக்கும் தெரியவே வேண்டாம் என்று நினைத்து அவன் ஒரு முடிவோடு இருக்கும் அந்தக் கட்டுரை நூலுக்கு விமரிசனம் வேறு. .ஜிஜியார் மீது தப்பில்லை. அவர் சரியாத்தான் எழுதியிருக்கிறார்.
பதிப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதை அவன் மனைவி அப்போதுதான் அவனிடம் காண்பித்தாள்.
' உங்களின் கட்டுரை நூலுக்கு அரசு நூலக ஏற்பு. ஆணை கிடைத்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்' அவன் படித்துமுடித்தான்
அவன் தன் நண்பர் எழுத்தாளர் சபாவிடம் பதிப்பாளர் பற்றிச் சொல்லிக்குறை பட்டுக்கொண்டான் இந்தக்கட்டுரை நூல் பிழை மலிந்து அச்சான அந்த விதம் பற்றித்தான். சபாசார்தான் அவனுக்கு ஆறுதலாய்ச் சொன்னார்' இலக்கிய பத்திரிகையில வந்திருக்குற அந்த ஜிஜியார் விமரிசனத்தை.ப்படிச்சிப்பார்க்கப்போறவங்க ரெண்டே பேரு ஒண்ணு நீங்க, ரெண்டு விமரிசனம் எழுதினதாலே அந்த ஜிஜியார். அதோடு சரி இதுல வருத்தப்பட என்ன இருக்கு தள்ளுங்க கழுதய'
---------------------------------------------------

...


. .



.
.