Friday, November 18, 2022

விழுதுகள்

 

 

 

விழுதுகள்                                                  

வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய  வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும்  இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன  மாமா எப்போதோ அந்த  பகவானிடம் போய்ச்சேர்ந்தாயிற்று. ஒரேபிள்ளை. அவனும் எங்கோ வெகு தூரத்தில். பல  ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளான்.திரைகடல் ஓடித் திரவியம் தேடும் கூட்டத்தில் அவனும் ஒருவன். எப்போதேனும் இந்தப்பக்கம் வருவான். ஊர்ச் சுற்றிச் சுற்றி எல்லாம் பார்த்துவிட்டுப் புறப்படுவான். மாமிக்கு எது  எல்லாம் வேண்டுமோ அதுகள் செய்து கொடுப்பான். மாமிக்குக்காசு பணத்திற்குக் கஷ்டம் ஏதுமில்லை. குடும்ப ஓய்வூதியம் வருகிறது. அது போதும். பையனும் அவ்வப்போது  தேவையானதை அனுப்பியே வைக்கிறான்.

ஏன்தான்  அவன் திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இன்னும் இருக்கிறானோ  மாமி  விசாரப்படுவாள். மாமி விசாரப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. வசந்தி மாமி தன் தங்கையின் வீட்டில் தங்கியிருக்கிறாள். குருபுரத்துக்கு அருகில் தங்கையின் வீடு   அதுவும்  இந்த வெண்காட்டில்தான்  இருக்கிறது. வெண்காடு கோவில் நிரவாகத்துக்கு ஒரு பெரிய  பள்ளி. அதனில் மாமியின் தங்கைக்கு  இசை ஆசிரியை உத்யோகம்.  யார் இப்போது பள்ளியில்  பாடங்கள் படித்துக்கொண்டே இசையை எல்லாம் கற்றுக்கொள்கிறார்கள். மதிப்பெண்கள்தானே வாழ்க்கை. பள்ளி நிர்வாகங்கள் இசை ஆசிரியருக்கு, ஓவிய ஆசிரியருக்கு  என்று  வேறு ஆயிரம் வேலைகள் வைத்திருக்கும். இசைப் பற்றி பள்ளி நிர்வாகிகளுக்கு   அக்கறை  புதிதாக  என்ன வந்துவிடப்போகிறது.

 மாதம் ஒரு நடை  வசந்தி மாமி குருபுரம் அக்கிரகாரம் வருவாள்.  குருபுரம் மாமி வீட்டில் காவலுக்கு  என்று  ஒரு ஆசாமி. அவன் இரவில் படுக்க ஏற்பாடு ஆகியிருந்தது.. அந்த ஆசாமிக்கு மாத சம்பளம். அதனைக்கொடுத்துவிட்டு தன் வீட்டருகே இருக்கும் சண்டோத் சண்ட விநாயகரைப்பார்த்து  மாமி ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான்   வழக்கமாய்  அந்த வெண்காடு  திரும்புவாள்.  மாமிக்கு வாடிக்கையாய் வருபவன் ஒரு ஆட்டோக்காரன். அவன் வசந்தி மாமியை பத்திரமாய்க்  குருபுரம் அழைத்துப்போய்  வருவான்.

 வசந்திமாமி தன்  குருபுரம் வீட்டில் வேலை  எதாவது இருந்தால் பார்ப்பாள். ஆட்டோக்காரன் குருபுரம்  மாமி வீட்டின் தோட்டத்தில் விளைந்த எலுமிச்சம்பழம்  தென்னை மரங்களிருந்து  கீழே விழுந்து கிடக்கும்  நெற்றுத்தேங்காய்கள், வாழைக்காய் வாழை இலை கறி வேப்பிலை பெரண்டை இன்னுமேதும் இருந்தாலும் சேகரித்து  ஆட்டோவில் எடுத்து வைப்பான். இதில் பாதி அவனுக்கு வந்துவிடும்.

 ‘யார் இது புதுசா ரெண்டுபேரு.’

ஆணு பொண்ணும் வயசானவங்கதான் இருந்தாலும்  வசந்திமாமி மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

‘அம்மா நாங்க இதே தெருவுதான். உங்களுக்கு எங்கள தெரியாது. பழக்கமில்லில்ல. அவ்வளவுதான்  கிழவன்   சொன்னான்.

‘ நா ஏற்பாடு பண்ணுன ஆளு  ராத்திரில காவலுக்கு இங்க  படுத்துக்குல’

‘நாலு நாளா நாங்கதான் படுத்துக்கறம். அவரு அவுரு வீட்டுலயேதான் படுத்து இருக்காரு.’

‘ அதுதான் ஏன்னு கேக்குறன்’ என்றாள் வசந்தி மாமி.

கிழவி ஆரம்பித்தாள்.

‘ இந்த அக்கிரகாரத்து கடைசி வீடு எங்க வீடு. கூரை வீடு.  எம்மொவனுக்கு  சமீபமா கல்யாணம் கட்டுனம். நாங்க கெழவன் கெழவி ரெண்டு பேரும்  எங்க பழைய   கூரை வீட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன சாளயா போட்டுகிட்டு தனியாதான்  குடி இருந்தம். எம்மொவனுக்கும் என்ன கவருமெண்டு வேலயா. கூலி வேலக்கி  அங்கங்க போவான் வருவான். அவனும் அவன் பொண்டாட்டியும்  புதுசா கல்யாணம் கட்டிகிட்டவங்க ஆக நாம தனியா  இருந்துதுருவம்னுட்டு அந்த கூர கொட்டாயிலதான் குடி இருந்தம்.  ஊர்ல  நாலு நாளா நல்ல மழயாச்சா.  இந்த மழ வெங்காட்டுலயும் பெஞ்சி இருக்கும்ல. பேஞ்ச  மழத் தண்ணி வெள்ளமாயி  தெருவுல ஓடி  எங்க சாள வூட்டுல பூந்துட்டுது. வீடு பூரா சேறும் சகதியுமா போச்சி. எம்மவன்  இருக்குற வூட்டுல போய்  கட்டுன துணியோட மொடங்கிகதான்  ரவ எடம் கேட்டம். சரி படுத்துகன்னு  மவனும் மருமவளும் சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும்  அந்த வூட்டுலயே  அண்ணிக்கி ராத்திரி மொடங்கிகினம். ராவுல இந்த கெழவரு நாலு தரம் கதவ தொறந்துகிட்டு ஒண்ணுக்கு இருக்குணும்னு  போயிட்டு  போயிட்டு வந்தாரு. எம்  மருமொவ  இப்பிடி ஆரம்பிச்சாளே பாக்குணும்.. ‘ ரா முச்சூடும்  பெரிசு லொட்டு லொட்டுன்னு  தெருக்கதவு தொறக்குது, மூடுது. இது எல்லாம் என்னா ஈனத்தனமான  வேல கெழவருக்கு.  ராவுல  செத்த  தூங்க முடியுதா மனுசாளால. பெரிய இமுசை. எப்பிடி மாமி  இந்தக்கத தெனம் நடக்குறது தானா, இது பெரிய  புடுங்கலுதான்  எம்மா’ இப்பிடி எங்கிட்ட  ரப்பா   ராங்கியா நீட்டிப் பேசுனா. கெழவர்ன்னா ராத்திரில ரெண்டு தரம் மூணு தரம் எழுஞ்சி போயி வரமாட்டாங்களா அதுக்குன்னு இப்பிடி மரிமவ  பேசுனா நெயாயமா. இனிமேலுக்கு   மவன் வூட்டுல நாம  படுக்கறது தப்புன்னூ முடிவு பண்ணினேன். கெழவன இட்டுகினு  ரவ  எடம் தேடிகிட்டே உங்க வூட்டுக்கு வந்தம். உங்க வூட்ட  அந்தக் காவலுக்கு படுத்துகிறவருகிட்ட கேட்டன். அவுருதான் நா எம்பொண்டாட்டி புள்ளிவள வுட்டுல வுட்டு புட்டு நாலு காசு கெடக்குமே, அது கெடச்சா  அந்த புள்ளிவுளுக்கு  ஒரு செலவுக்கு ஆவுமேன்னு  இந்த மாமி வூட்டயே மொடங்கிகிறேன்னு சொன்னாரு. நாங்க மாமி வூட்ட பாத்துகறம் அந்த மாமி  மாசா மாசம் குடுக்குற  சம்பள காச நீயே வாங்கிக. எங்களுக்கு  காசு வேணாம். நாங்க   இந்த பெரிய திண்ணையில ராவுல ரவ மொடங்கிகறம்.  மாமி வூட்டயும் நல்லா பாத்துகறம்னுட்டு சொன்னன்’

‘நீங்க ரெண்டு பேரும் இப்ப   என் வீட்டுக்கு காவலு. அந்த  ஆசாமி  நா காவலுக்குன்னு   என் வூட்டுக்கு வச்ச ஆளு  அவுரு   வூட்டுல  பொண்டாட்டி புள்ளிங்களோட  இருக்காரு அதான் நீ சொல்ற சேதி’

‘அதான் மாமி வேற ஒண்ணும் இல்ல’

கிழவனும் கிழவியும்  வசந்தி மாமியை வணங்கிக்கொண்டே நின்றார்கள்.

‘ வேணாம் நீங்க  வயசுல பெரியவங்க  இப்பிடி எல்லாம் செய்யவேணாம்’ மாமி அழுத்தமாய்ச்சொன்னாள்.

வேக வேக மாக நடந்து  தூரத்தில் வந்துகொண்டிருந்தான் வசந்தி மாமி தன் வீட்டுக்குக்காவலுக்கு ஏற்பாடு செய்த  அதே ஆசாமி.

‘மாமி கும்புடறன்’

‘ என்ன காவல்காரரே எங்க போயிட்டீரு’

‘ ஒரு தப்பு  உங்க கையில இப்பவே  சொல்லுணும். ஒரு நா ராவுல இந்த பெரியவங்க படுத்துக ரவ எடம் வேனும்னாங்க.  அவுங்க இருந்த  குச்சி  வூடு  பெருசா பேஞ்ச  இந்த மழல்ல மாட்டிகினு சேரும் சகதியுமா  நாறி புடுச்சி. இவுங்க  இந்த ஊருதான்.  இதே தெருவுதான்.  நல்ல மனுஷாளு.  வயசுங்கறது  ஆருக்கும் ஆவும்தான.  இதே தெருவு கடைசி கூர வூடு அவுங்களது. பெத்த மவன் மருமவ பேசுன பேச்சி பொறுக்கமாட்டாத தான் என்கிட்ட வந்து  என் கைய புடிச்சிகினு  ரொம்ப  கேட்டுகினாங்க.  உடம் பொறப்பா நினச்சி ஒதவுன்னாங்க. எம்மனசு கேக்குல. சரின்னுட்டேன். அது தப்புதான். அதனபிரசங்கி நா.  ஒங்க கையில  இந்த சேதிய ஒடனே சொல்லுணும்னு பாத்தன். முடியல. இந்த மழலு வேற ஒயல’

‘இப்ப எப்பிடி  வீட்டுக்கு வந்தீரு நா வந்தது உனக்கு தெரியுமா’

மாமி பெரியவரிடம் கேட்டாள்.

‘’நல்லா கேட்டிங்க. இந்த பெரியவங்களோட  அதே மருமவ ஓட்டமும் நடையுமா எங்க வூட்டுக்கு வந்துது. மாமி வந்துருக்காங்க  சட்டுன்னு வான்னு சொல்லிச்சி’

‘நல்ல விஷயம்தானே இது’ மாமி சொல்லிக்  கொண்டாள்.

’அப்பிடி  போவுலயே  சேதி.  மாமி  குடுக்குற  வூட்டுக்காவல் சம்பளத்த உங்கிட்டல்ல அவுங்க தரணும். அத எம் மாமியாரும் மாமனாரும்  உன்ன ஏமாத்தி வாங்கிகிட்டா என்னா செய்யிறது. அது பெசகுல்லன்னுட்டு அது ரைட்டா பேசிச்சி.’

 இதுக்குதான் உன் வீட்டுக்கு  வந்துதா’

‘ ஆமாங்க மாமி. காச அவுங்க வாங்கிகினா நீ  என்ன செய்யிறதுன்னு ரொம்ப அக்கறையா எங்கிட்ட பேசுனாங்க’

மாமி சற்று யோசித்தாள். டக்கென்று முடிவு செய்தாள்.

‘தேவலாம் கத.  உன்கிட்ட  நா  பேசுன படி காவலுக்கு    மாச சம்பளம்  ஆயிரம் இந்தா  அத நீ வச்சுக’

‘ நா இங்க படுக்குல. அவுங்கதான வூட்ட பாத்துகினாங்க’

மாமி வீட்டில் படுக்கைக்கு வந்திருந்த கிழவரும் கிழவியும்’ அவுருகிட்டயே காசு குடுத்துடுங்க, அப்பிடித்தான் நாங்க பேசி இருக்குறம் அந்தப்படிக்குதான் நாங்க படுக்கறதும்’ என்றனர்.

‘ ஆயிரம் ரூவாய தரன்  ஆளுக்குப்பாதியா ஐநூறு ஐநூறுன்னு பிரிச்சிகுங்க’. மாமி சொன்னாள்.

புதிதாக படுக்கைக்கு வந்த  அந்த நாதியற்ற  பெரியவர்கள் இருவரும் ’காசு  மொத்தமும் அவரண்ட குடுத்துடுங்க மாமி,  மொடங்கிக  ரவ எடம் குடுத்ததே போதும்’ எகோபித்துச்சொன்னார்கள்.

காவலுக்கு மாமியே ஏற்பாடு செய்தப் பெரியவரோ’ அவுங்கதான படுத்துகிறாங்க அவுங்க கிட்ட சம்பளம் முழு காசும் குடுத்துடுங்க’ என்றார்.

வசந்திமாமி  இரண்டாயிரத்தை கையில் எடுத்து இரண்டு பெரியவரிடமும் தலா ஒரு ஆயிரமாகக் கொடுத்து முடித்தார். இருவரும்  வாங்கிக்கொண்டார்கள்.

இரண்டு பெரியவர்களும் மாமியை வணங்கி நின்றார்கள்.

‘வூட்ட பாத்துகுங்க. பெரியவரும் அந்த பெரியம்மாவும் படுத்துகறவரைக்கும் இங்க படுத்துகட்டும்.  காவலு பாக்குற நீ அப்ப அப்ப வந்து தோட்டம் தொறவ பாத்துக. நா கெளம்புறன்’ என்றாள் மாமி.

பெரியவர்களை விரட்டிய அந்த மருமகள் எட்டி  நின்று அனைத்தையும் வேடிக்க்கை  பார்த்துக்கொண்டே இருந்தாள். வசந்தி மாமி அந்த மருமகளையும் கவனித்துக்கொண்டாள்..

‘இதென்னாடி இங்க நடக்குறது எல்லாம்  ஒரே அதிஷயமா இருக்கு’  அந்த மருமகள் சொல்லிக்கொண்டாள்.

ஆட்டோக்காரன் வண்டியை கிளப்பினான் வசந்தி மாமி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். வண்டி வெண்காட்டிற்குப்புறப்பட்டது.. வசந்தி மாமி அந்த மருமகளைப்பார்த்து ‘ பெரியங்கள நீ நல்லாவே பாத்துகற  சந்தோஷம்’என்றாள்.

‘கூர வூட்ட மொடங்கின கெழம்  இண்ணக்கி இந்த மாமி மச்சு வூட்டுக்கு வந்து படுக்குதுன்னா. அது எல்லாம்  யாரால’  அந்த மருமகள் மாமிக்குப்பதில் சொன்னாள். வசந்தி மாமிக்கு இது .கேட்டும் இருக்கலாம்.

-------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, November 9, 2022

கதை - பயணம்

 

 

பயணம்                                                        

 

புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என் மனைவியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தோம். இது நாள் வரைக்கும் வாடகைக்காரில் மட்டுமே  எங்கள் பயணம்.  அது மட்டுமே சாத்தியமானது. ஆம் அப்படித்தான்   சென்றும்  வந்தும் இருக்கிறோம்

  எல்லோ போர்டு மாட்டிக் கொண்ட வண்டியில் சென்ற போதெல்லாம் போகும் சாலை எப்படி  என்று அதன் தரம்  என்ன வென்று எல்லாம் பெரிதாகக்கவலைப்பட்டது இல்லை. எந்தபடிக்கு  சாலை இருந்தால்  நமக்கு என்ன அது  எக்கேடு கெட்டும் போகட்டும் என்றிருப்பேன். சாலையில்  ஆங்காங்கு இருக்கும் குண்டு குழி பற்றிக்கவலைப்பட்டது இல்லை. சாலையில் இங்கும் அங்குமாய் இறைந்து கிடக்கும் கூர்மையான  ஆணிகள் இரும்புக் கம்பிகள் மாடு குதிரையின்  கால்களிலிருந்து கழண்டு விழுந்த உலோக லாடங்கள் பற்றி   இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தேன். தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தானே புரிகிறது.

மகன் வண்டியை  ஓட்டுவதால் மனது சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தது. தூக்கம் கண்ணை  மூடு மூடு என்று மூடத்தான்  வைத்தது. மனம் நீ  எப்படிடா  தூங்குவாய்    உன்னை அனுமதிக்கமாட்டேன் என்றது

மொபைலில் கூகுள் காட்டும்   பரமபத பாம்பு ஒத்த வழித்தடம்  பார்த்துப்பார்த்து  பெரும்பாலும்  என் மகன் வண்டியை ஓட்டினான். சில இடங்களில்  கூகுள்  நாம் செல்ல வேண்டிய  வழியைத் தவறாகக்காட்டுவதும் உண்டுதான். ஷார்டெஸ்ட் ரூட் தான் கூகுளுக்கு கணக்கே தவிர  அந்த வழியில் வண்டி போய்ச்சேருமா என்பதெல்லாம் அதற்குக் கிடையாது.    முழுதாக  கூகுளை நம்பவும் கூடாது. நம்பாமல் அதனை  ஒதுக்கவும் முடியாது.

 சாலையில்  எங்கோ இருக்கும் ஒரு  ஊரின் பெயர் மற்றும்  அந்த ஊர் இருக்கும் தூரம் காட்டும் பலகைகள் சில இடங்களில் இருந்தன.  எழுத்து பளிச்சென்று இல்லைதான். பல இடங்களில் பலகைகள் காணப்படவுமில்லை. நெடுஞ்சாலைத்துறை அது தன் விருப்பத்துக்கு வேலை செய்து விட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

சாலையில் பல இடங்கள் வெற்றுக் கற்களாகவே கிடந்தன. சில இடங்களில் மண் குவியல்கள் மட்டுமே சாலையை நிறைத்துக்கொண்டிருந்தது. ’டேக் டைவெர்ஷன்’  என எழுதிய அறிவிப்புகள்  ஆங்காங்கே  செல்லும் வழியை மாற்றிக்காட்டியது. பாலம் வேலை நடைபெறும் இடங்களாகவே அவை இருந்தன.

 சில இடங்களில் ’ஒன் வே’  எழுதிக்கொண்ட பலகை குறுக்கிட்டது. சில இடங்களில்  சாலை டிவைடர்கள் என்கிற பிரிப்பான்கள் செம்மையாக எழுப்பப்பட்டிருந்தன. அனேக இடங்களில் அவை  உடைந்து உடைந்து பொக்கையும்  போரையுமாக பல் இளித்தன.  பசுமாடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் சாலையில் தெரிந்தன.  சில ஆடுகளும் சாலைகளில் நடமாடின.அவை இட்ட சாணமும்  புழுக்கையும்  பயணிகளுக்குக் காட்சிப்பொருளாயின. சாலையில்  பன்றிகள் தென்படவில்லை. வாகன ஓட்டிகள் அக்காடா என்று நிம்மதிப்படலாம்.பன்றிகளை ஒரு வாகனம் இடித்தாலே ஏதோ போதாத காலம்  வாகனத்திற்கு என்பது மூடநம்பிக்கை. அது  யாரையும் பிடித்து  ஆட்டித்தானே முடிக்கிறது.

 சாலையின்  இரு ஓரத்திலும் மனிதர்கள் யாருமே நடந்து செல்லவில்லை. அசோகமன்னர் வந்து  நிழல்தரும் மரம் நட வாய்ப்பேதும் இல்லை.  சுமை தாங்கிக் கற்கள் இல்லை. அப்படி எல்லாம் சொன்னால் யாருக்கேனும் புரியுமா என்ன?   சைக்கிளில் செல்பவர்கள் ஒருவரும்  இல்லை. மாட்டு வண்டிகள் மருந்துக்குக்கூட  இல்லை. டூ வீலர் ஓட்டிகள் மட்டும்  ஓரிருவர் தென்பட்டார்கள்.

 சிவப்பு விளக்கும் சிவப்புக்கொடியும்  தூக்கிப்பிடித்த ராட்சத டிரக் பூட்டிக்கொண்ட பெரிய லாரிகள் நிறைய  நிறைய பயணிக்கின்றன. பதினாறு சக்கரங்கள் அவைகளை இழுத்துச்சென்றன. அவை  யாவுமே தனியார் உடமைதான். அவைகள்   விரைந்து  செல்லத்தான் இச்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ..

டோல்கேட் நிறுத்தங்கள் கறாராய் வண்டிகளை நிறுத்தி வசூலை பெருக்கிக்கொண்டன. எத்தனைக்காலம் இந்த வசூல் கொள்ளை தொடருமோ யாருக்கும் தெரியாது. அது எப்போதேனும் நிறுத்தப்படுமா அதுவும் தெரியாது. இந்த வசூல் எப்படிச்செலவாகிறது இதனில்  என்னதான் விஞ்சுகிறது.  இந்த டோலில் லாபம் பெறுவது அரசா, தனியாரா, அரசியல் கட்சிகளா? யாருக்கும் அது பற்றிய கவலை இல்லை.  தகவல் பெற  ஆர் டி ஐ என்று ஒரு வழி உண்டு.யாரும் முயல்வதுதான் இல்லை.

ஐம்பது கிலோமிட்டருக்கு  போலீஸ்காரர்கள்  இருவர்  சிவப்புக்கலர் ஜீப்போடு நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் முன்பாக நாலைந்து லாரிகள் நின்றுகொண்டு இருந்தன. ஏதோ பஞ்சாயத்து  அவர்களுக்குள்ளாக காரசாரமாக நடந்துகொண்டிருந்தது.  இந்தக்காட்சியை அவ்வப்போது பார்க்கமுடிந்தது. லைசென்ஸ் இருக்கா ? வண்டி ஆர் சியை காட்டுங்க, பொல்யூஷன் சர்டிபிகேட் இருக்கா,டேஞ்சர் லைட் பல்ப் சரியா எரியுதா, ஹெட் லைட்டுல சென்டர்ல கருப்பு வண்ணத்துல வட்டப்புள்ளி  இருக்கா,  வண்டிபர்மிட், எஃப் சி,   இன்சூரன்ஸ் காட்டுங்க,   சீட் பெல்ட் எல்லாம் போட்டுகிட்டு இருக்காங்களா என  அதே கேள்விகளை ஒருவர்  மாற்றி ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு பேருந்து டூவீலர்க்காரனோடு மோதி அதில் டூவீலரில் பயணித்த  ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணிக்க அதில்  ஜனித்தது பெருஞ் சண்டை.  அந்தக் கிராமத்து ஜனங்கள் பஸ்ஸை மறித்துப்போட்டார்கள். டிரைவரை அருகிலிருந்த புளியமரத்தில் கட்டிப்போட்டு சகட்டுமேனிக்கு அடித்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வழி வந்த சில வாகனங்கள் மேல்கொண்டு செல்லமுடியாமல்  வந்தவழியே   யூ டேர்ன் போட்டு திரும்பிக்கொண்டன. தப்பித்தால் போதுமென அவை ஓட்டம் பிடித்தன.

 இன்னொரு ஊர்ச் சாலையின் நடுமையத்தில் அரசியல் வாதி ஒருவர்  தொண்டர்களுக்கு  ஏதோ அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார். ஆளுங்கட்சியில் பெரிய புள்ளி எனத்தெரிந்தது. பாதுகாப்புக்காவலர்கள் ஆயுதங்களோடு தலைவருடன்  உடன் ஏகத்துக்கு இருந்தார்கள். வரிசையாக   பெரிய பெரிய மகிழுந்துகள் அகம்பாவத்தோடு ஒன்றை அடுத்து ஒன்று நின்றுகொண்டிருந்தன. அவை  சாலையில் அவ்வப்போது ஊர்ந்து செல்லவும் செய்தன.  வானத்தில்  வேட்டுச்சத்தம். வாண வேடிக்கை விட்டுக்கொண்டு இருவர் சாலை ஓரமாய்  அமர்க்களப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.  ஆகப்பெரிய   மனிதர்கள்   இங்கே இதோ வந்து விட்டார்கள் என்பதை மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

எங்களின்  கார் போல் எத்தனையோ வண்டிகள் சாலையின் ஓரமாய் ஒன்றன் பின் ஒன்று என ஊர்ந்து ‘ அய்யா பெரியவங்களே  நாங்கள்  என்றுமே உங்களுக்குக்கீழ்ப்படிந்தவர்கள்’ என்பதைச்சொல்லிக்கொண்டே சென்றன.

 சாலையோர உணவுவிடுதிகள் பலதினுசுகளாய் இருந்தன. பஞ்சாபி டபா என்று அனேக உணவு விடுதிகள் இருந்தன.  உடுப்பி ஹோட்டல்களும் முனியாண்டி விலாசுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. இயற்கை அழைப்புக்களைச் சமாளிக்க பயணிகள் இங்குதான் வந்து செல்லவேண்டி இருக்கிறது. உணவு விடுதிகளின்  ஜிகினா அலங்கரிப்புக்கள் மட்டும் அதிகம். உணவின் தரம் அது இது  எல்லாம்  மூச் கேட்காதீர்கள்.

மல்லிகை பூக்களைச் சரமாய்த் தொடுத்துக்  கூவிக்கூவி விற்கும் சிறுமிகள்  மகளிர் அனேகரைப் பார்க்கமுடிந்தது..

வெள்ளரிபிஞ்சுகள் நுங்குகள் இள நீர்,  மிளகாய்ப்பொடி உப்புப்பொடி சேர்த்து அரிந்த ஒட்டு மாங்காய் என விற்போர் பலர்.  சாலை ஓரத்தில் வளர்ந்து நிற்கும் மரங்களின் கீழ்விழும்  அவர்களைத்  தரிசிக்க முடிகிறது. எளிய மனிதர்களின் வணிகம். அவர்கள் பயணிப்போரைக் கெஞ்சுவதும் மன்றாடுவதும்  மனதிற்கு பாரமாக மட்டுமே உணரமுடியும்.

பயணத்தில் கர்நாடக மாநிலம் பிறகு ஆந்திரம் தொடர்ந்து தமிழ்நாடு இறுதியாய்ப் புதுச்சேரி என நான்கு மாநிலங்கள். தமிழ் மாநிலத்தில்தான் நெருக்கமாய் ஊர்கள் தெரிகின்றன.கிராமங்கள் ஒன்றைஅடுத்து ஒன்று எனத் தொடர்ந்து வருகின்றன. செழிப்பும் வனப்பும் தமிழ் நிலத்தில் கூடித்தெரிந்தன.

இப்பயண அனுபவம் ஏனோ என்னை பின்னோக்கி அழைத்துச்சென்றது. முதுகுன்றம் நகரில் பேருந்து நிலையம் அருகே  அறை  ஒன்று  மாத வாடகைக்கு எடுத்து நான் தங்கியிருந்தேன்.  தொடக்கத்தில் அங்குதான் பணியாற்றினேன். அது ஒரு காலம். எழுபதுகளில் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

 என் அறைக்கு அருகில் மூன்று தனியார் பேருந்து  நிறுவனங்களின் அலுவலகங்கள் அடுத்தடுத்து இருக்கும். பேருந்தின் கண்டக்டரும் டிரைவரும் அன்றாட வசூலை மானேஜர்களிடம் ஒப்படைப்பார்கள். குறைந்தபட்ச வசூல்   ஒரு நாளைக்கு இன்னது  அதுவும்  இன்ன வண்டிக்கு என நிர்ணயித்து இருப்பார்கள். அதனைத்தாண்ட முடியாது போன கண்டக்டர்கள் வரிசையாக நின்று முதலாளிக்குப் பதில் சொல்லவேண்டும்.  முதலாளிக்கு திருப்தி இல்லாத படசத்தில் ’ பிரம்பால் பூசையோ, கொட பாட்டோ நிச்சயம்’ உண்டு. கொட பாட்டோ  என்றால் அது  குடைகின்ற வசைச்சொல்.

 டீசல் அதிகமாய் செலவழித்த டிரைவர்களுக்குப்பிரத்யேக தனிக்கச்சேரி  இருக்கும். கண்டக்டரும்  அதற்கு  விழி பிதுங்கி பதில் சொல்லி மீண்டு வருவார்கள். முதலாளிகள் நாராசமாய் அவர்களைத் திட்டுவது காதால் கேட்கவே சங்கடமாயிருக்கும். சிலருக்கு’ நாளையிலிருந்து நீ வேலைக்கு வரவேணாம் வேற வேல எதாவது  இருந்தா பார்’ என்று அனுப்பி வைப்பார்கள். அவர்கள் கண்கள் நீர் சொரிய  முதலாளி வீட்டை விட்டுத்  தட்டுத்தடுமாறி  நடப்பார்கள்.  முதுகுன்ற  பேச்சிலர் வாழ்க்கையில் தினமும் நான் இரவு டீக்கடையில் பால் என்ற ஒன்றைக் குடித்து விட்டு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவரச்செல்வது  வழக்கம். இந்த டிரைவர் கண்டக்டருக்கு நடக்கும் பூசைகளை எத்தனையோ முறை கேட்டும் இருக்கிறேன். அதனை இப்போது நினைத்து  நினைத்து வருத்தப்படுகிறேன்.

 அன்றிருந்த சாலையில்.  அதுவும்   தரம் என்று எதுவுமே இல்லாத கப்பிச்சாலையில் எப்படியெல்லாம் பேருந்துகளை  டிரைவர்கள் இயக்கினார்களோ.  கண்டக்டர்கள்  அன்றாடம்  குறைந்தபட்ச வசூல் கொண்டு வரவில்லை என்றால் மூன்று முறை  மாப்பென்று அனுமதிப்பார்கள். நான்காவது முறை என்றால் அவர்கள் நேராக அவரவர்  வீட்டுக்குத்தான் போகவேண்டும். இது எழுதப்படாத சட்டமாக இருக்கும். வேலை போனது போனது தான்.

அந்தக்காலப் பேருந்து ஓட்டிகளை கண்டக்டர்களை நினைத்துக்கொண்டே புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்குக் காரில் திரும்பிக்கொண்டு இருந்தேன்.

‘மகன் பக்கத்துல இருந்தா  ஒரு வார்த்தை பேசக் கூட வராது அய்யாவுக்கு’ மனைவி முகத்தைத்தூக்கிவைத்துக்கொண்டாள். என் பயணக் கதையை உங்களிடம் மட்டும் தானே சொல்லமுடியும்..

--------------------------------------------