Friday, January 26, 2024

கவிதை- வேண்டும்

 இணைய கால கவியரங்கம் 100


26/1/24


வேண்டும் 


கவிதை எழுதுதல்  பெரிசல்ல

எழுதிய அதைப்படித்துப்பார்க்க

நிறைவொன்று வரவேண்டும்

மனதிற்குள் நிச்சயமாய்.

யாரும் சால்வை போற்றி

சான்றிதழ்‌ அளித்து

சன்மானம் வழங்குவது

எல்லாம் அதற்குப்பின்னேதான்.

படைப்பாளிக்கு

என்றோ எழுதிய வரிகள்

என்றைக்கு எடுத்துப்படித்தாலும்

அவனோடு பேசிப்பார்ப்பது

வாய்க்க வேண்டும்

உயிர்ப்போடு உலவும்

அவ்வெல்லுஞ்சொல்  மனத்திரையில் பளிச்சிட வேண்டும்

வாசகனை மிடுக்காய்

அது அசைத்துப்பார்க்க வேண்டும்.

'அட' என்று கவிதை வாசித்த மனம் புன்னகைத்துப்பின்

நகர வேண்டும்.

அதற்கீடாகாது

ஒரு போதும் 

ஆயிரம் புகழ்ச்சிகள்.


Thursday, January 25, 2024

கவிதை-வருத்தம்தான்

 இணைய கால கவியரங்கம் 99


25/1/24



வருத்தம்தான்



தேவன் எழுதிய

துப்பறியும் சாம்பு

கதைப்புத்தகத்தை

உன்னிடமிருந்து கடனாகப்

பெற்றுப் படித்தேன்

திருப்பிக் கொடுத்த போது

ஒரு பக்கத்து மூலை

மடங்கியதற்காய்

என்ன பேச்சு பேசினாய் நீ

அத்தோடு சரி

உன்னிடமிருந்து எந்தப்

புத்தகத்தையும்

கடன் வாங்கியதில்லை நான்

எனக்கும் ரோசம் தான்

நீயோ விடைபெற்றுச்

சென்றுவிட்டாய் எல்லாரிடமிருந்தும்.

நீ நேசித்த அத்தனை

புத்தகங்களையும்

யார் யாருக்கோ

நின்வீட்டார் 

அள்ளி அள்ளிக் கொடுத்து அலமாரிகளைக்

காலி செய்தது நீ அறிய மாட்டாய்

யாருக்கும் பிடிபடாதது

எத்தனையோ புதிர்களோடு

என்னவோ உலகம் இது.


Wednesday, January 24, 2024

கவிதை-சொந்தக்கதை

 இணைய கால கவியரங்கம்

98




சொந்தக் கதை



புத்தகங்கள் வாங்கியவை

அடுக்கிக் கிடக்கின்றன

படித்து முடித்து விட்டால்

மனம் நிம்மதிப் படும்

முடியவில்லையே

புத்தகங்கள் கூடிக்கொண்டே போகின்றன

இத்தனைக்குள் 

நாமே எழுதுவதற்கும்

நேரம் ஒதுக்கத் தான் வேண்டும்

அவை படைப்பாய் மலர்ந்து

பேர் சொல்ல வேண்டும்

பதிப்பகத்தின் உறவோ

கத்திமேல் நடப்பது போல்.

அத்தனையும் தாண்டி

விருதுகளின் அரசியல்

சும்மா விடாது படைப்பாளியை.

எழுத்தாளனுக்கு

காசும் வேண்டும்

காத்திரமான உடலும் வேண்டும்

ஆரோக்கியமும் வாய்க்க வேண்டும்

துளி அதிர்ஷ்டம்

வேண்டும்தான்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.


Tuesday, January 23, 2024

கவிதை-தொலைப்பு

 இணைய கால கவியரங்கம் 97


23/1/24


தொலைப்பு


நேற்று மதியம் 

தருமங்குடி போனேன்

என் பிறந்த அகம்

அனாதையாய்க் கிடந்தது

அப்பாவும் தாத்தாவும்

ஜப சந்தி செய்த

திண்ணையில்

ஊர் உதிரிகள்

குடித்துப்போட்ட சாராயபாட்டில்கள் சயனித்து உறங்குகின்றன

ஓட்டு வீட்டின் 

நாட்டு ஓடுகள் வானரங்களால்

புறட்டப்பட்டு முட்டு முட்டாய்க்கிடந்தன

வீட்டுசசுவரில் ஆலும் அரசும்

வளர்ந்து வரவேற்றன

தேங்காய்களைத் தொலைத்த தென்னை மரங்கள்

பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தன

வீடு பூட்டிக்கிடக்கிறது

வீட்டுச்சாவி வைத்திருக்கும்

சிவாச்சாரியார் ஊரில் இல்லை.

துருப்பிடித்துக் கதவு நாதாங்கியில் உறங்கிக்கிடக்கும்

திண்டுக்கல் பூட்டை

முறைத்துவிட்டு

வீடு திரும்பினேன்

பூட்டு என்னதான் செய்யும்.


Monday, January 22, 2024

கவிதை-அயோத்தி

 இணைய கால கவியரங்கம் 96


22/1/24


அயோத்தி


அயோத்தி ராமர் கோவில்

திறப்பு

பிரதமர் மோடி

அக்னி தீர்த்தத்தில் மூழ்கியதும்

புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் வாளிகொண்டு

நீர் சேந்தித் தலையில்

கொட்டிக்கொண்டதும்

திருவரங்கத்து ஆனை

ஆண்டாளின் தும்பிக்கையை

வருடிக் கொடுத்ததும்

சாதாரண மனிதனாய்

பிரதமரைக் காட்டியது

உலகுக்கு .

அதுவே ஓர் அதிசயமாய்

ஆனந்தமாய் பிரமிப்பாய்

சுயநலம் அற்ற  மாமனிதரை 

அடையாளம் காட்டியது எனக்கு.

ஆயிரம் விமரிசனம்

எப்போதும் உண்டுதான் 

அது வேறு இது வேறு.


Sunday, January 21, 2024

கவிதை- அலப்பறை

 இணைய கால

கவியரங்கம் 95

21/1/24


அலப்பறை


புத்தகக்காட்சிக்குப் போனேன்

நேற்று சிற்றரங்கில்

ஒரு இலக்கியக் கூட்டம்

இரண்டு மணி என்று

போட்டுவிட்டு மூன்று

மணிக்குத் துவங்கினார்கள்

சுய அறிமுகம் என்று நூறு

பேருக்கு மைக்கில் ஆரம்பித்தால் அதற்கே

ஒருமணிக்கு மேலானது

பெரிய பெரியவர்ளைவர்

ஒருவர் ஒருவராய்ப் பேசி

முடித்தனர் 

ஆகா ஊகு

அதெல்லாம் இல்லை

அரைத்த அதே மாவுதான்

அன் டு  திஸ் லாஸ்ட் நமக்கு

காந்தியைத் தந்தது என்றபடிக்கு.

செல்ஃபீ எடுத்துக்கொள்ளும்

மும்முரம் கனஜோர்

அதே மிக்சர் ஒரு கரண்டி

பாயசமாய்த் தேநீர்

புதியதாய் வந்த இளைஞர்கள் நாற்காலியில் உட்கார்ந்து

எழுந்து போனார்கள்

கையில் கட்டாயமாய்

நிகழ்தேதி இல்லா

மெமன்டோவோடு.


Saturday, January 20, 2024

கவிதை - நல்ல விஷயம்

 இணைய கால கவியரங்கம் 93


19/1/24


நல்ல விஷயம்



கோடை வெயிலும்

குளிர்கால மழையும்

சென்னைக்குச் சாபம்

பெருங்களத்தூர்

 என் வீட்டருகே

பெருமழையின் வெள்ளத்தின் மிச்ச சொச்சம். திருநீர்மலை வாழ் நூறு வெள்ளை கொக்குகள்

அதிகாலையே

இரை பொறுக்க வருகின்றன

நீர் உறை பூச்சி புழுக்கள் தாம் இரை

எப்போதும் கூட்டமாய்

புறாக்கள் இங்கேயுண்டு

இப்போது கொக்குகள்

நரிக்குறவர்கள் கிராமப்புறத்தில் புறாக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போய்

பசி ஆறுவார்கள்

அதுமட்டும் நிகழ்வதில்லை

இங்கு

 நல்ல விஷயம்.


கவிதை-சிறகு

 இணைய கால கவியரங்கம் 94


20/1/24


சிறகு


பதிவுத்தபாலில்

இலக்கிய இதழொன்று

என் முகவரி எழுதி

சரியாகவே வந்தது

இளக்கிய இதழென

பெயரிட்டிருக்கிறார் மனம் இளகி.

ஆசிரியர் சிறகு இரவிச்சந்திரன்

(மட்டும்) ‌ என்பது அடைப்புக்குள்.

துணை இணை உதவி

பகுதி பத்திஆசிரியர்

எல்லாமும் அவரேதான்.

வாரமா மாதமா காலாண்டிதழா எனக்கேட்டால்

அவ்வப்போது வரும் என்கிறார்

இதழுக்கு சந்தா கிடையாது

தன்னார்வ நன்கொடையாம்

நல்ல கண்டுபிடிப்பு

சிற்றிதழ் மட்டுமில்லை

அதற்கு இலவச இணைப்பாய் பெருங்கதை

நூலும் உண்டு

பார்த்த இதழில் சுரேஷ்

ராஜகோபாலின்

ஒருவரி உண்மைகள்

சிக்கெனப்பிடித்தது

சாவியை யாரோ தொலைக்க‌ அடிவிழுவதோ

அப்பாவிப் பூட்டுக்கு.


Thursday, January 18, 2024

கவிதை-அசடு

 இணைய கால கவியரங்கம் 92

18/1/24


அசடு


முட்டிவலி யோடிருக்கும்

மனையாளை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு

அழைத்துப் போனேன்

மணிரெண்டு சாப்பாட்டு நேரம்

நல்ல கூட்டம்

கேண்டீனைத்தேடி உட்கார்ந்தேன்

இருநூறு ரூபாய் காஷியரிடம் கொடுத்தேன்

இரண்டு சாப்பாடு  போக பாக்கி பன்னிரெண்டு ரூபாய் தந்து ஒரு ரூபாய் இல்லை சாரி என்றான்

ஆக சாப்பாடொன்று ரூபாய் தொண்ணூற்று மூணரை

என்ன சித்திரா புத்தன் கணக்கோ

மதிய சாப்பாட்டை

 சில்வர்

தட்டொன்றில் வைத்து

குழம்பு ரசம்

முட்டைக்கோசிலேயே பொறியலும் கூட்டுமெனக்

கொடுத்தான்

தண்ணீர் ஜக் மட்டும் இருந்தது டம்ப்ளர்கள் இல்லை

அப்படியே தூக்கிக் குடியுங்கள் என்றான்.

ஜக்கையோ தூக்கமுடியவில்லை பளு.

மோரோ தயிரோ இல்லையே என்றேன்

குழம்பே மோர்க்குழம்பு 

அப்புறம் எதுக்கு தனியா

தயிரு மோரு என்கிறான்

சாப்பாடு முடித்து

ரெஸ்ட் ரூம் எங்கே தேடினேன் 

'அதுக்கு

ஆஸ்பத்திரிக்குள்ளே தான்

போவணும்'  அவன்  சொன்ன பதில்.

அசடு நானே தான்.


Wednesday, January 17, 2024

கவிதை- பிடிபடாதது

 இணைய கால கவியரங்கம் 91


17/1/24


பிடிபடாதது



நல்வாய்ப்பு எல்லார்க்கும்

வாய்த்து விடாது

தெரிந்த நல்லதை

யோசிக்காமல் செய்

நல்ல எண்ணங்கள்

தோன்றி அது செயலாக

மலர்வது கொடுப்பினை

எப்போதேனும் உதிக்கும்

நல்லெண்ணம் சட்டென

மறைந்துவிடும்

சாக்குரதை

மனிதனாக வாழ்வதுவே

அடுத்தவர்க்கு நன்மை செய்ய

இவ்வெண்ணம் செயலாக

மாறும்தருணம்

நீ மனிதனாகிறாய்

அதனைப்போற்று.

அது வளரட்டும் உறுதி கொள்

நல்லவனாக நான் இருந்து

என்ன ஆக வேண்டும்

எண்ணிவிடாதே

குறுக்காய் கேள்வி வேண்டாம்

நிறுத்து கேள்வியை

நற்செயல்கள் தொடரட்டும்

அதில் என்னவோ

மறைந்து கிடப்பதுண்மை.


கவிதை- என்ன செய்ய?

 இணைய கால கவியரங்கம்

5/1/24


என்ன செய்ய?



காலத்தே படிப்போம்

ஆழ்ந்து படிப்போம்

ஓயாமல் படிப்போம்

படிக்கவேண்டியன படிப்போம்

சிநதனை செழிக்கப்

படிப்போம்

செயலாய் அது கனிய

உழைப்போம்

உழைப்புக்குத்துணை

தோழமை.

துணைகொள்வோம்

தோழமை என்றுமே

நல்லன விழைவோம்

நல்லதே நடக்கட்டும் .


கவிதை-இயற்கை

 இணைய கால கவியரங்கம்

10/1/24


இயற்கை


வனம் ஒன்றில்

சிங்கம் புலி ஆனை

என வரிசையாய் வாழலாம்

காட்டுப்பூனை

காட்டு எருமை

காட்டு நாய் என்று

அங்கிருக்கத்தான் செய்யும்

சிங்கத்தால் பூனையை

எருமையை நாயை

அடித்துத் தின்னமுடியும்

ஆனால்

பூனையாக எருமையாக

நாயாக தன் உருவை

மாற்றிக் காட்ட முடியாது

சிங்கம் சிங்கமாய் வாழ

பூனை ஆனை நாய்

அது  அதுவும் அது அதுவாய் வாழத்தான்

விதித்திருக்கிறது இயற்கை.


Tuesday, January 16, 2024

கவிதை-பிடிக்காது ஜல்லிக்கட்டு

 இணைய கால கவியரங்கம் 90


16/1/24



பிடிக்காது  ஜல்லிக்கட்டு


எனக்கு சுத்தமாய்ப்

பிடிக்காது ஜல்லிக்கட்டு

அரசும் நீதிமன்றமும்

நடக்கட்டும் அதுவென

பச்சைக் கொடி காட்டியபின்

நீங்களும் நானும்

சொல்ல ஒன்றுமில்லை

அதற்காக மவுனம்

காத்திடத்தான் முடியுமா

காளைகள்

 கால் குளம்புகளுக்கிடையே

கூர் கொம்புகளுக்கிடையே

கருதிகொட்டி

சிதைக்கப்படும் மனிதனைக் கண்டும்

எப்படி ஏற்கிறதோ

மனித மனம்.

காளைகளின் விருப்பம்

யார் கேட்டார்கள்

வாயில்லா அவை சொல்லத்தான் போகிறதா?

சிங்கம் புலி ஆனைகளோடு

ஜல்லிக்கட்டு வைத்தாலென்ன?


கவிதைகள் 5

 

சட்டத்தின் அழகு


அரிஹாஷா

ஏழுமாத இந்தியக்குழந்தை

அடிபட்டது என ஆஸ்பத்திரி போனார்கள்

பெர்லின் நகர குழந்தைகள் நல அமைப்பு

ஜூகண்டாம்டின் கொண்டு சேர்த்தது ஃபாஸ்டர் ஹோமில்

தாயும் தந்தையும்

பெற்ற குழந்தையைக் கவனிக்கவில்லை குற்றச்சாட்டு

நீதிமன்றம் விடுவித்தது

குற்றம் இல்லை அவர்கள் மீதென

ஆண்டுகள் ரெண்டாகியும் குழந்தை

பெற்றோரைச்சேரவில்லை

ஜெர்மன் தேசத்தில் தவிக்கின்ற தாயும் தந்தையும்

பிரதம மந்திரி முதல் மந்திரி

தெரிந்த எம்பிக்கள் என் எல்லோருக்கும்

மனுப்போட்டு மன்றாடுகின்றனர்.


யாதுமாகி



என் வீட்டுத்தோட்டத்தில்

வாழைமரமுண்டு ரஸ்தாளி

கட்டாயம் இலை வேண்டும் அமாவாசைக்கு

மகிழ்ச்சி இல்லை வாழை தார் போட்டோலோ

அவளும் நானும்  வீட்டில்

இருவருக்கும் சர்க்கரை

வாழைத்தார் வெட்டி 

மரத்தை அசமடக்கி

அது பழுக்கக்காத்திருந்து

அக்கம் பக்கத்தார்க்குக்கொடுக்க

‘யார் கேட்டது’ என்பார்கள்

பின் வாங்கிக்கொள்வார்கள்

வீதியில் எப்போது பசுமாடு வரும்

பழம் போடக்காத்திருப்பதுவா வேலை.

அருகிருக்கும் செல்லித்தாய் கோவிலில்

கொண்டுபோய் வைக்கிறேன்

யாதுமாகியவளுக்கு அத்தனையும்.


நிராசை


உங்க அம்மாவையும் அப்பாவையும்

கண்கலங்காம சந்தோஷமா  வச்சிகணும்

இல்லைன்னா விவாகரத்துதான்னு

சொல்ற பொண்டாட்டிய

கண்ணால பாக்கணும்

எல்லா கணவன் மார்களுக்கும்

அடிமனத்தில் ஆசை

செவியுற்ற பிரமன் சொன்னார்

முயன்று முயன்று தோற்றுப்போனேன்

சாத்தியமில்லை விட்டு விடு

வேறேதேனும் ஆசைப்படு.


வந்தே பாரத் ரயில்


பள பளா வந்தே பாரத்

ரயில் பார்த்து சந்தோஷப்பட்டேன்

பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியும்

பெரிய பெரிய மனிதர்கள்

வைத்திருந்தார்கள்  கம்பீரமாக

வண்டிக்கு பிரேக் வாங்கி பொருத்தாமல்

சந்தனப்பொட்டோடு

குங்கும அலங்காரம் வண்டிக்கு செய்த கதை

ஓரிசாவில் அம்பலமானது

மூன்று ரயில்கள் முட்டி சோகம்.



தீராது நோய்


படேலுக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

ராமானுஜருக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

வள்ளுவருக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

விழுப்புரத்தில் சாதிச்சண்டையில்

மண்டை உடைந்தது

கொவிலுக்கு சீல் வைத்தார்கள்

அம்மனுக்கு சிறை

மனம் செம்மையாகாமல் மார்க்கம் ஏது?






Monday, January 15, 2024

இராமலிங்கம் அஞ்சலிக்கட்டுரை

 

ட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் விடைபெற்றுக்கொண்டார்.

இலக்கியச்சிறகு என்னும் இலக்கியச்சிற்றிதழின் ஆசிரியர். ஷைன் என்னும் ஆங்கில இலக்கியச்சிற்றிதழும் பட்டுக்கோட்டையிலிருந்து  என்னும் சிறுநகரத்திலிருந்துகொண்டு சிறப்பாக நடத்தியவர். தனது  84 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். எளிமையே உருவான மனிதர். தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் பணுயாற்றி ஓய்வு பெற்றவர்.தன்னுடைய ஓய்வூதியத்தை தமிழ் இலக்கியப்பணிக்காகச் செலவிடுகின்ற  பல பெரியவர்களுள் இராமலிங்கமும் ஒருவர். 13/1/2024 அன்று காலை அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் அமரரானார்.

இலக்கியச்சிறகு என்னும் எண் வழிச் சிற்றிதழ் 23 அண்மையில்தான் வெளிவந்தது. அதனில் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

மழைக்கால முகில் திட்டு என்னும் கவிதை.

’மழைக்காலம்

கூந்தல் பனையோரம்

கரையெங்கும் செங்காந்தள் பூக்கள்!

பச்சைப்பயிர்களின் ஊடே

குனிந்து களையெடுத்தாள்

கருங்கூந்தல் கன்னியொருத்தி

இடுப்பு கடுத்ததால் இளைப்பாற நிமிர்ந்தாள்

வானம் பார்த்தாள்

நாவற்பழ முகத்தாளை

நகர்ந்த முகில் திட்டொன்று              

மோகங்கொண்டு

அசையாமல் மிதந்தது

கண நேரத்தில் கரம் நீட்டி

தளிர்க்கொடியாளை

இறுகத்தழுவியது

மேகலையாள் தேகம் எரிந்தது

மேகத்தின் மோகமும் தீர்ந்தது!

 ஒரு இருபது வயதுக்கார இளங்கவிஞன் எழுதும் கவிதையோ எனத்தோன்றும். வான் உலாவும்  திட்டு மேகம் ஒன்று     வயலில்  நாற்று நட்டு   நிமிரும்   ஒரு பெண்ணின் முகத்தைக் கண்டது.   அவள் மீது மோகம் கொண்டது. அம்மேகம்  மின்னலாகியது.   அம்மின்னல் நாற்று நடும்  அந்த அழகிய பெண்ணைத்தழுவியது. அதன் மோகம் தீர்ந்தது. நடவு செய்யும் மேகலையாளோ எரிந்துபோனாள். நாற்று நடும் பெண்ணொருத்தி மின்னல்தாக்கி இறந்துபோனதுவே செய்தி. இதனைத்தான் நண்பர் இராமலிங்கம் கவிதையாக்கித்தந்தார்.

அடுத்த இலக்கியச்சிறகு  இதழுக்கான திட்டத்தை  இராமலிங்கம் என்னோடு விவாதித்தார். படைப்புக்களை எழுத்தாளர்களிடமிருந்து பெற ஆலோசனை சில சொன்னார். தானும் ஒரு சிறுகதை எழுதி உடன் அனுப்பிவிடுவேன் என்றார். படைப்புக்கள் பெற ஜனவரி 31 வரை எழுத்தாளர்களுக்கு அவகாசம் தாருங்கள் என்றார்.  அடுத்த இதழுக்கான அச்சுப்பணியை அதே  கடலூர்  ரமேஷ் அச்சகத்தில் கொடுங்கள் அவர் பொறுப்போடு செய்கிறார் என்றார்.

பட்டுக்கோட்டை ராஜா தன்னுடைய சிறுகதையை அடுத்த இதழுக்காக அனுப்பிவைத்தார்.  நானும் என்னுடைய சிறுகதை ஒன்றை அனுப்பிவிட்டேன். அச்சகப்பணி  ஏற்பாடு  அனைத்தும் நண்பர்  கடலூர் வளவதுரையன். அவரே  இலக்கிச்சிறகுக்கு ஆலோசனைக்குழு உறுப்பினரும் ஆவார்.

 இச்சூழலில் 13/1/24 அன்று  காலை நண்பர் பட்டுக்கோட்டை ராஜா தொலைபேசியில் என்னை அழைத்தார். எனக்கு இவ்வளவு காலையில் இவர் ஏன் அழைக்கிறார் என்கிற அய்யமும் எழுந்தது.’ இராமலிங்கம் அய்யா மறைந்துவிட்டார்’ என்கிற செய்தியைத் துயரத்தோடு சொன்னார்.  ஒரு நிமிடம் ஆடிப்போனேன். இத்தனை விரைவாக இந்த செய்தி வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை.

மறைந்த இராமலிங்கத்தோடு சில நினைவுத்துளிகள்.

தஞ்சையில் சுந்தர சுகன்  ஒரு இலக்கிய  விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு விருத்தாசலம் வே.சபாநாயகம் என்னையும் அழைத்துக்கொண்டு போனார்.தஞ்சைப்பிரகாஷ் எழுதிய நூல் ஒன்றிர்க்கான ஆய்வுக்கூட்டம். தஞ்சைப்பகுதி இலக்கிய ஆர்வலர்கள் அனேகர் வந்திருந்தனர். அங்கு வைத்துதான் எனக்கு பட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அறிமுகமானார். நானும்  எழுத்தாளர் சபாநாயகமும் சுந்தரசுகன் வீட்டில் இரவு சிற்றுண்டி முடித்துக்கொண்டு புறப்பட்டோம். சுந்தரசுகனின் அன்னையார் இலக்கிய நண்பர்களை அத்தனை அன்போடு கவனிப்பவர். அமரர் சுந்தர சுகனும் அப்படித்தான்.

தஞ்சைக்கூட்டத்தில்தான் இராமலிங்கம் தான் ஒரு சிற்றிதழ் தொடங்க இருப்பதாய்ச்சொன்னார். ஆங்கில சிற்றிதழும்  கூட அவரே தொடங்க இருப்பதையும்  எனக்குச்சொன்னார். தமிழ் சிற்றிதழுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்கிற யோசனையில் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு முறை  விருத்தாசலம் வந்தார். நண்பர்கள் இலக்கிய விஷயங்கள் விவாதித்தோம். வே. சபாநாயகம் இல்லத்தில் நானும் இராமலிங்கமும் மதிய உணவு சாப்பிட்டோம். இதழுக்கு’ இலக்கியச்சிறகு’ என்று பெயர் வைப்பதாய் முடிவாகியது.

இலக்கியச்சிற்றிதழின் முதல் இதழை வடலூர் வள்ளல் இராமலிங்கர் சந்நிதியில் வைத்து வெளியிடவேண்டும் என்று விரும்பினார்.அப்படியே அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகியது. கவிஞர்கள் பா. சத்தியமோகன். கோவி. ஜெயராமன், சங்கு வளவதுரையன்  முனைவர் பாசுகரன்  ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். சிலகாலம் சிதம்பரம் தனியார் அச்சகம் ஒன்றில் இலக்கியச்சிறகு அச்சானது. பிறகு   இதழ் அச்சடிப்பதை தஞ்சைக்கு  மாற்றிக்கொண்டார்.

ஆங்கிலச்சிற்றிதழ் ‘ஷைன்’ தமிழ் சிற்றிதழ்’ இலக்கியச்சிறகு’ என வெளியிட்டுக்கொண்டிருந்தார். இலக்கியச்சிறகு இதழில் வெளிவந்த கவிதைகளைத் தொகுத்து’ வெயிலொழுகும் குடிசைகள்’ என்னும் தலைப்பில் ஒரு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தத்தொகுப்பை தினமணி வெகுவாய்ப்பாராட்டி எழுதியிருந்தது.  தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பட்டுக்கோட்டை சென்றால் மு. இராமலிங்கத்தை நேரில் சந்திக்கவேண்டும் என்கிற தன் விருப்பத்தைக்குறிப்பிட்டிருந்தார்.

அந்த கவிதைத்தொகுப்பில் இராமலிங்கம் ஒரு கவிதையில் சொல்லுவார்,

கவிதையின் தலைப்பு ‘உதிரும் பூக்கள்’

‘வரும் வசந்தத்தில்

என் வாழ்க்கை முடிந்துவிடும்

அப்போது என் உடலை

ஒற்றையடிப்பாதையில்

கொண்டு செல்லுங்கள்

அப்போதுதான் பயணவழியெங்கும்

பறவைகளின் கீதம்

மிதந்து வரும்.

அவரின் இலக்கியச்சிறகு மேலட்டையில் தரும் அடையாள வாசகம் இப்படி.’ இலக்கியச்சோலை அமைப்போம் விரியும் சிறகோசை கேட்போம்’ . பறவைகளின் கீச்சு கீச்சு ஒலி கேட்க அவாவியவர்  பட்டுக்கோட்டை இராமலிங்கம். இலக்கியச்சோலை அமைத்து எத்தனையோ கவிதை பாடும்  கவிப் பறவைகளின் கீதம் கேட்கவைத்தவர். அந்த எத்தனையோ பறவைகளில் யானும் ஒருவனாய் இருக்கக்கூடும்.

பட்டுக்கோட்டை அரசு நூலகத்தில் நூலக வார விழா ஒன்றில் என்னை அழைத்துப்பேசச்சொன்னார். அது போழ்து  நான் இராமலிங்கம் அய்யாவீட்டில் ஓர் இரவு தங்கியிருந்துவிட்டு சொந்த ஊர் திரும்பினேன். இராமலிங்கத்தின் துணைவியார்  அத்தனை மிகப்பிரியத்தோடு என்னை வரவேற்று உபசரித்தார்.

யான் இலக்கிய விரும்பிகள்  தமிழ்ப் படைபாளர்கள்   வாழ்  விருத்தாசலம் நகரில்  பல காலம்,  கடலூரில் சில காலம் தொலைபேசித்துறையில் பணியாற்றினேன். கடலூர் மஞ்சகுப்பம் என் வீட்டிற்கு ஒரு முறை இராமலிங்கம் வருகை புரிந்தார்.  வியத்தகு பாசத்தோடு பழகும்  நண்பர் இராமலிங்கம்  என்னுடைய குடும்ப உறுப்பினர்களோடு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்தார்.

அவருடைய துணைவியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்னைக்கு வந்தார். திருப்போரூர் அருகே ரொம்பதூரம் போனால் வரும்  அவரின் மகள்   வீடு.  இராமலிங்கம்  அவரின் மனைவி  இருவரையும் பார்த்துப் நீண்ட நேரம் பேசிவிட்டு வந்தேன். மிகவும் திருப்திபட்டுக்கொண்டார். அது உவப்பத்தலைகூடுதல் அல்லவா.

விருத்தாசலம் நண்பர் வே.சபாநாயகம் மறைந்தபோது மிகவும் வருந்தினார். அவர் எண்பதாம் ஆண்டு பிறந்தநாளுக்கு இலக்கியச்சிறகு சிறப்பு மலர் வெளியிட்டார். அதனில் வே.சபாநாயகம் அய்யா பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வெளியாகியது. வே.சபாநாயகம் அய்யாவுக்கு கொள்ளை சந்தோஷம். இலக்கியச்செல்வர்  தி.க.சி அவர்கள் நெல்லையிலிருந்து அந்தக் கட்டுரையைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார். ‘வே.சபாநாயகம் எனும் தமிழ் விருட்சம்’ எஸ்ஸார்சியின் கட்டுரை இவ்விதழின் மகுடம்’ இப்படி.

இராமலிங்கம்  இறப்புச்செய்தி கேட்டு நான்  பட்டுக்கோட்டை  சென்று அவர் உடலத்தைக்கடைசியாய்க் கண்டு வணங்கி வந்திருக்கவேண்டும்.  சென்னையிலுள்ள  என்னால், என் வசதிக்கும் உடல் நிலைக்கும்  இயைந்து அங்கு வரமுடியாமல் அழுதுகொண்டிருந்தேன். இராமலிங்கம் அய்யாவின் கவிதைகளை, கட்டுரைகளைப்படித்து மனத்தைத் தேற்றிகொள்கிறேன். முடியவில்லைதான்..

இராமலிங்கத்தின் கவிதையிலிருந்து சில வரிகள் நான்  எண்ணுவது போலவே,

கவிதையின் தலைப்பு ,    ‘காலப்போக்கில்’,

‘மாலை ஒன்று கொண்டுவந்து

உனக்கு மரியாதை செய்திருக்கலாம்

வெறுங்கையோடு வந்தாவது

உன் வெற்றுடலைத் தொழுதிருக்கலாம்

ஒன்றுமே செய்யவில்லை நான்….

இராமலிங்கம் தனது நண்பர் ஒருவர் மறைவுக்கு வருந்தி எழுதிய கவிதை. இந்த வரிகளை  நானே   சொன்னது போல் உணர்கிறேன்.

மாசிலா மனம் ஒன்று மறைந்து விட்டது. அன்னாருக்கு என்  இதய பூர்வ அஞ்சலி.

--------------------------------------------

 

 

 

 

 

கவிதை-வித்யாசமாய்

 இணைய கால கவியரங்கம் 89


15/1/24


வித்தியாசமாய்



பழையனக் கழிதலும்

புதியன புகுதலும் ஆகிப்

போகியும்  வந்தது

பொங்கலும் வந்தது

உழவர் திருநாள் அல்லவா இது

தமிழரின் பெருமைமிகு

விழாநாள்

உழைப்புக்கும் நட்புக்கும்

மெருகு சேர்க்கும் நந்நாள்

கால்நடைச்செல்வமாம்

மாடுகளுக்கு விவசாயி

நன்றி சொல்லும் பொன்நாள்

ஆடவர்கள் தமிழர்களாய்த்தெரிய 

வேட்டி

உடுத்திக் கொண்டார்கள்

உள்ளூர் பூங்கா ஒன்றில்

பெண்களின் கும்மியும் கோலாட்டமும்

எல்லாமும்தான் அரங்கேறிற்று

நான் வசிக்கும் 

தெரு முழுவதும் பொங்கலுக்கு

அழகழகாய்க் கோலம் போட்டிருந்தார்கள்

ஏனோ ஹேப்பி பொங்கல்

ஆங்கில எழுத்தில்

எல்லாக் கோலத்திலும்.


கவிதை-பொங்கலோ பொங்கல்

 இணைய கால கவியரங்கம் 88

14/1/24



பொங்கலோ பொங்கல்



சுழன்றும் ஏர் பின்னது

உலகம் என்பார் வள்ளுவர்

எந்தத் தொழிலிலும்

இடைத்தரகர் மட்டுமே

கொழிக்கின்ற

பொல்லாக்காலமிது

முதலே போடாமல்

லாபம் சம்பாதிக்கத்

தெரிந்தவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்

உழவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது

என்பது நிதர்சனம்

காளை மாட்டின் ஆண்மை அகற்றிய பின்தானே அது கொம்பு சீவி

ஏர்உழுது பிணையல் அடித்து வண்டி இழுக்கிறது

அதற்கு நன்றிக்கடனாய்

மாட்டுப்பொங்கல்

என்ன நேர்மையோ.

இந்தியா ஓர் விவசாயநாடு

எந்த உழவன் பாராண்டான்

நாமும் இங்கே கண்டோம்

விவசாயியாய் வேடமிட்டு

மேடைஏறியவன் பின்தானே மொத்தமாய் நாம்.


Sunday, January 14, 2024

கவிதை- இராமலிங்கம் விடைபெற்றார்

 இணைய கால கவியரங்கம் 87


இராமலிங்கம் விடைபெற்றார்



பட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் இலக்கியச்சிறகு இதழ்

ஆசிரியர்.

 ஷைன்

என்னும் ஆங்கில இதழும்

அவர் நடத்தினார்

இதழ் பணியில் நான்

அவரோடு உடனிருந்தேன்

இன்று காலை அன்னார்

அமரரானார் பட்டுக்கோட்டை ராஜா

ஃபோன் செய்து 

அவர்

இறப்பைச் சொன்னார்

இராமலிங்கம் 

என் சஹிருதயர்.

எழுத்தாளர் வே.சபாநாயகம் வழி

எனக்கு நண்பரானார்

காதம்பரி 

மருத்துவர்அறிவுடைநம்பி

இன்னும் தஞ்சைத்தோழர்கள்

கீரனூர் ஜாகிர்ராஜா

தஞ்சைப் பிரகாஷ்

சுந்தர சுகன் என்னும்

நட்புவட்டத்திற்கு

என்னை அறிமுகப்படுத்தியவர்

பாசத்திற்குரிய இன்னொரு

நட்புப்பொக்கிஷத்தைக்

காலம் கொண்டு போனது

கண்கள் குளமாகின்றன

என் மனம் கனத்துப்போகிறது


Friday, January 12, 2024

கவிதை- அதர்மம்

 இணைய கால கவியரங்கம் 86


12/1/24


அதர்மம்


இந்த மண்ணில் பிறந்த பெண்

பெரிய நிறுவனமொன்றில்

சி ஈ ஓ

லட்சம் லட்சமாய்ச் சம்பளம்

பெற்ற குழந்தையைக் கொன்று சூட்கேசில்

திணித்து சொகுசுக்காரில்

பயணம் போக முடிகிறது

கணவன் மனைவிக்குள்

சண்டை

 நீதிமன்றம் போனார்கள்

விவாகரத்தின் போது

நீதிபதி பெற்ற தகப்பனை

வாரம் ஓர் முறை

குழந்தையைப் பார்க்க

அனுமதித்துவிட்டாராம்

ஆகத்தான் இந்த விபரீத முடிவு

பெற்ற தாய் தன் குழந்தையைக்

கொன்றுவிட்டு

சட்டம் பேசுவதைப்பார்த்தபின்னும்

வானம் பொய்க்காமல் என்ன செய்யும்?


Thursday, January 11, 2024

கவிதை-நிற்க அதற்குத்தக

இணைய கால கவியரங்கம் 85


11/1/24 


நிற்க அதற்குத் தக



அவன் எழுத்தாளன்

அவ்வப்போது மொபைல்

வைத்துப் போட்டோ

எடுத்து எடுத்து 

மகிழ்ந்து

போகிறான்

தன் பெயரை அச்சில்காண

ஓயாது அலைகிறான்

விருதுக்குத்தன் பெயர்

சிபாரிசு ஆகாதா எனப்

பார்த்துப்பார்த்து

தூக்கம் தொலைக்கிறான்.

 மக்கள் போராட்டம் எதனிலும்

அவன் 

முன் கை எடுத்துப் போராடுவதே இல்லை

பெண்கள் சீரழிக்கப்படு வதற்கு எதிராய்க்

குழந்தைத் தொழிலாளர்கள்

உருக்குலைக்கப்படுவதற்கெதிராய் 

குடித்துக் குடித்து இளைய சமுதாயமும்

போதைப்பொருள் உபயோகித்து மாணவச்சமுதாயமும்

சிதைந்து போவதற்கெதிராய்

கற்பழிப்புக் கொலை செய்த

பதினோரு பேர் விடுதலை ஆனதற்கெதிராய்

சுண்டுவிரல் அசைத்திருப்பானா அவன்

திருக்குறளை விடாமல் படித்தான்.

அவனைக் கற்றபின் 

நிற்கத்தான் சொன்னார்

வள்ளுவர்

இந்த நிற்க  இல்லையே அது.


Tuesday, January 9, 2024

கவிதை-நாய்

 இணைய கால கவியரங்கம் 83


9/1/24


நாய்



நாய்கள் குறைப்பது 

தலைவேதனை

நாய்கள் ஓலமிடுவது ரோதனை

நாய்களின் கண்கள்

பேய் பிசாசு மட்டுமில்லை

எமன் வருவதும்

பார்த்துவிடுமாம்

நாய் அழுகை மழை

வரப் போவதைச் சொல்வது என்பார் சிலர்

நாய்கள் தூரத்தில் இருந்தால் அழகு

கிட்ட வந்தால் இம்சை

பாதி மனிதர்கள் நாய்களோடு கூடவே

ஓடியும் வருகிறார்கள்

நாய் வளர்ப்பு மனிதபராமரிப்பை விடச்

செலவு பிடிக்குமாம்

அனுபஸ்வத்தர் சொன்னது

அடுப்பங்கரையில் மீந்திருந்த சோற்றை இப்போது

தெருச்சொறிநாய்

சாப்பிட மறுக்கிறது

நாய்களும் கூட ஜபர்தஸ்து

காட்டுகின்றன நம்மைப்போல.


Monday, January 8, 2024

கவிதை-காலம் மாறுது

 இணைய கால கவியரங்கம் 82


8/1/24


காலம் மாறுது


பேனாவால் எழுதியிருந்தால்

என் பிள்ளைகளே படிக்கமாட்டார்கள்

தாத்தா காலத்து கிரய பத்திரத்தை

இன்றைய தலைமுறை

வாசிக்கவே மாட்டார்கள்

பேனாவை வைத்து எழுதுவது

என்பது விடைபெற்றுக்கொள்ள

மடிக்கணினி அவ்விடத்தை ஆக்கிரமித்தது

அகராதி இல்லாது படிப்பது சாத்தியமில்லை

என்பது போய்

கூகிள்  எஜமானர் இட்டபணி எல்லாமாய்

செய்துகிடக்கிறது

எழுத்துப்பிழை இலக்கணப்பிழை

எல்லாம் கணினியின் நிர்வாகமே

வாயினால் சொல்வதைக்

கணிப்பொறி 

டைப்

அடித்துக்காட்டுகிறது

ஜோராய் ஒரு மொழியில்

தருவதை பிறிதொரு

மொழியில் பெயர்த்துக்காட்டுகிறது

கணிப்பொறியே

 இனி கவிதைகள் எழுதும்

கவியரங்கம் நிகழ்த்தும்.


Sunday, January 7, 2024

கவிதை-ரேஷன் கடை

 இணைய கால கவியரங்கம் 81


7/1/24


ரேஷன்கடை


கியா காரில் வந்திறங்கி

ரேஷன்கடை அரிசி வாங்கி

கறவை மாடுகளுக்கு வைக்கிறார்கள்.

பாமாயில் பாக்கெட்

 வாங்கி ஜோராய்த்

திருவிளக்குப் போடுகிறார்கள்.  

எனக்கு முன்னால்

க்யூவில் நின்ற ஆசாமி

பச்சரிசியும் புழுங்கலரிசியும்

ஒரே  சாக்குபையில் வாங்க

ஏன் அப்படி ? கேட்டேன் நான்

மாட்டுக்குத்தானே அது

பதில் தந்தார்

ரேஷன்கடைக்கு வரும்

அரிசியில் பாதியை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்

எங்கெல்லாம் போகிறதோ அது 

யாரறிவார்

வாங்காத அரிசிக்கு வாங்கியதாய்க் குறுஞ்செய்தி கட்டாயம் வரும்.

மத்திய மாநில நிர்வாகங்கள் கண்களை மூடி கனா மட்டுமே காண்பார்கள்

அவ்வளவே.


Saturday, January 6, 2024

கவிதை-எங்கே போகிறோம்

 இணைய கால கவியரங்கம் 80

6/1/24


எங்கே போகிறோம்.



வார இதழ் விகடனுக்காய்

கல்கிக்காய் துக்ளக் கிற்காய் தெருவாசிகள்

க்யூ கட்டி நின்ற காலம் இருந்தது

மனநலம் கெட்டு  

வேலை தொலைத்த ஹெட்மாஸ்டர் மனைவி வீதியில் பிச்சைக்கு வருவாள்

கல்கி மட்டும் கடனாகக் கேட்டு

 வீட்டு வாசலில் குந்திப்

படித்து விட்டுப்போவாள்

புத்தகம் படிக்கும் பழக்கத்தை சின்னத்திரை

விழுங்கிப் போயிற்று

வாட்ஸ்ஆப் அதனோடு ஜோடி

சேர்ந்து கொண்டது

பள்ளிப் பாடங்கள் படிப்பதுவோ

மதிப்பெண்ணிற்காக மட்டுமே

 யாருக்கும் ஐயமில்லை.

வாழ்க்கைப் பாடத்திற்கான

ஆசான்கள்  எங்கோ தொலைந்து போயினர்


Thursday, January 4, 2024

கவிதை-நடப்பு

 

நடப்பு

இணையக்கால கவியரங்கம்

மலை மலையாய்
எழுதுகிறார்கள்
பிரமித்துப்போகிறோம்
யதார்த்தத்தில் எப்படி எல்லாமோ வாழ்கிறார்கள்
சிலர் இலக்கிய மகுடம்
பெறுகிறார்கள்
ஆயின் என்ன?
அவர்கள் மீது மதிப்பில்லை
எனக்கு
எழுதிய வண்ணம்
கிஞ்சித் தேனும் வாழ்ந்து காட்டினால் வாழ்த்திப்
பாராட்டலாம் வணங்கி
மகிழலாம்.
திறமையும்
ஆற்றலும் உச்சத்தில்
இருப்பதால் மட்டும் என்ன
அடுத்தவனுக்கு நல்லன
சாதிக்க பயன்படுகின்றனவா
என்பதே மனிதனை அளக்கும் அளவுகோல்.
எதிரில் இருப்போரை
தூசாக மதித்து விட்டு
ஆயிரம் எழுதி என்ன ஆவதற்கு ?
இவை பித்தலாட்டங்கள் சுயநலத்திற்குப்பற்பல வேடங்கள் un
கண்முன்னே அலுத்துக் போகிறது நடப்பு.
மனிதனாய் வாழாதவன்
பேனாவை கீழே போட்டால் உலகம் உருப்படும்

  


கவிதை- யாதானும்

 இணைய கால கவியரங்கம்


30/12/23




யாதானும் நாடாமால்


இந்த மண்ணில்

படித்துப் பட்டம் வாங்கி

வேலைதேடி

அமெரிக்கா போனால்

அங்கேயே தங்கியும் விடுகிறார்கள் நிரந்தரமாய்

பிறந்த பொன்நாடும்

செப்பிய செந்தமிழும்

தூரம் போய்விடுகின்றன

அடுத்த தலைமுறையோ முற்றுமாய்

இற்றுக்கொண்டு விடுகிறது

வள்ளுவர் சொன்னாரே

யாதானும் நாடாமால்

 ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாதவாறு

அது இது தானோ.


கவிதை-ஜனநாயகம்

 

/ஜனநாயகம்

விருட்சம் கவியரங்கம்
13/10/23

வாசித்த கவிதை

இலங்கை தேசத்தில்
சகோதரத்தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள்
லட்சக்கணக்கில்.
ஆப்கனில் நடந்தேறிய
அடாவடித்தனம் உலகறியும்.
ரோஹிங்யா முசுலிம்கள்
ஆயிரம் ஆயிரமாய்
துரத்தப்பட்டார்கள் புத்த
பர்மாவிலிருந்து.
உக்ரைன் ரசியா ஓரினம்
முடிந்தபாடில்லை இன்னும்
போர்.
லட்சம் போர்வீரர்கள்
சாம்பலாயினர் மொத்தமாய்.
மணிப்பூரில் மனித உடல்கள் கேட்பாரற்றுக்கிடக்கின்றன
பிணக்கிடங்கில்.
சீன நீர்மூழ்கிக்கப்பலில்
வேவுபார்த்த அய்ம்பது விஞ்ஞானிகள் ஜலசமாதி ஆனார்கள் அண்மையில்.
ஆரம்பமாகிவிட்டது
இஸ்ரேல் ஹமஸ் சண்டை
யூதர்களும் இசுலாமியர்களும்
செத்துப்போகிறார்கள் அன்றாடம்
பிணங்களை எண்ணி எண்ணிக் கணக்குக் தருகின்றன மீடியாக்கள்.
துப்பாக்கிக் குண்டுகள்
விற்றால் போதுமென
பெருமுதலாளிகள் இருக்கிறார்கள்
அவர்கள் அள்ளிப்போடும்
பிச்சைக்காசில்
தேர்தல் மகோற்சவம் நடக்கிறது.
எந்த நாடானாலும் என்ன
வல்லவன் முன்னே
நல்லவன் மண்டியிட்டபடி
இது என்றைக்கும்தான்.
வல்லவனே நல்லவனாய்
இருப்பது
புராணங்களில் மட்டுமே

கவிதை-மாற்று ஆள்

 


மாற்று ஆள் 

1/9/23 மெய்நிகர்
கவிதை அமர்வில்
வாசித்த கவிதை

காம்பவுண்டு சுவர் எழுப்ப
பீகார்க்காரன்
வெள்ளை அடிக்க அஸ்ஸாமி
ஜல்லிபோட
ஜார்கண்ட் காரன்
சலூன்கடைக்குப்போனால்
சப்பைமூக்கு நேபாளி
சாப்பிட ஓட்டலுக்குப்போனால்
கல்தோசைபோடவும்
கல்லா அமரவும்
ஒரியாக்காரன்
எக்மோர் ஸ்டேஷனில்
ஸ்பானர் கொரடாவோடு
வங்காளி
மெட்ரோவுக்கு குழிவெட்ட
சிவப்பு பட்டையோடு
உபிகாரன்
ரயில்வே சிப்பந்தியில்
தமிழ் பேசுபவன்
தடைசெய்யப்பட்டு
ஆண்டுகள் எத்தனையோ
வங்கியில் இங்கொன்றும்
அங்கொன்றுமாய் தமிழ்
தெரிந்த கிளார்க்குகள்
நண்பனைக்கேட்டேன்
நம்ப ஆட்களை
எங்கேயும் காணோமே
ஏனப்பா?
விடை சொன்னான் நண்பன்
துபாயில் சிங்கப்பூரில்
கனடாவில் யூகேயில் ஈரோப் ஆஸ்திரேலியா
அமெரிக்காவில் என
குப்பை கொட்டுகிறான்
தமிழன் என்றார்.
சுமங்கலிப்பெண்டுக்கும்
பிராமணார்த்தத்திற்கும்
கோவில் பூசைக்கும்
மட்டுமே
அதே அய்யர்கள்
அதே மாமிகள்
மாத்தாளே வரக்காணும் இன்னும்

கவிதை-ராசி

20/12/23


ராசி

சென்னையில் மீண்டும்
வெள்ளம் என் வீட்டிலும் தான்
ஆராயிரம் ரூபாய்
அரசு தருதிறதாம்
வந்திருக்கிற லிஸ்டில்
என் பெயரில்லை
ஏன் இல்லை அதுதான்
யாருக்கும் தெரியாது
விண்ணப்பம் எழுதிக்கொடுங்கள்
என்றனர்
அது எங்கே கிடைக்கும் என்றேன்
சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலாசம்
தந்தார்கள்
அவ்விலாசம்
சென்றேன் தேடினேன்
கொடுப்பவர்கள் வரவில்லை என்றனர்
விண்ணப்பம் பெறுபவர்கள் மட்டுமே வந்திருந்தனர்
நாளை அவர்கள் வருவார்களா?
நாளை வந்து பாருங்கள்
பதிலாய் வந்தது
எது எதை வைத்து
எப்படி எழுதிக் கொடுக்க
வேண்டுமோ அப்படிக் கொடுத்தால்
வருமோ அது.
எதுவும் எளிதல்ல
என்னைப் பொறுத்தவரை.
வெள்ளம் நேர்படத்தான் நடந்து
கொண்டது
அதற்கு வஞ்சனையே
இல்லை.
கும்பத்திற்கு இன்று சனி வந்திருக்கிறான் ஆக அப்படித்தான் என்கிறாள்
அவள்.

கவிதை- அன்றும் இன்றும்

 

அன்றும் இன்றும்

இணையக் கால கவியரங்கம் 65

23/12/23

எழுபதுகளில் எழுத்தராய்
தொலைபேசிச் சேவையில் சேர்ந்தபோது
மாதம் முந்நூறு ரூபாய் சம்பளம்
ஒருமாத சம்பளத்தில்
ரெண்டு சவரன் தங்கம்
வாங்கலாம்
டெல்லிக்கு கால் மூன்று நிமிடம் பேச அறுபது ரூபாய்
மூன்று மணி காத்திருப்பு
பர்டிகுலர் பர்சனல் காலானால்
இன்னும் முப்பது ரூபாய்
கூட்ட வேண்டும்
மாதம் மூன்று டிரங்க்கால்
டில்லிக்குப்பேசினால்
மாத சம்பளம் காலி
ஓவர்சீஸ் கால் பற்றி
பேசவே கூடாது
நீண்ட நீலக்கவர் ஒன்றே வழி
இன்று அமெரிக்காவில்
படிக்கும் பேத்தியோடு
மணிக்கணக்கில் பேசுகிறான் காசில்லை
ஆயிரம் கடிதங்கள்
ஆயிரம் விலாசங்கள்
உலகெங்கும் அனுப்பினாலும்
கட்டணமில்லை
தகவல் துறையில் மட்டும்
இவ்வதிசயம் எப்படிச் சாத்தியம்
செல்பேசி இணையதளம்
வழங்கிய விஞ்ஞானிகளே
அத்தனையும் சாத்தியமாக்கிய
சாதனையாளர்கள்
என்றேனும் ஒரு கணம் நினைப்போமா நாம்.

கவிதை-புத்தகக்காட்சி

 இணையக்கால கவியரங்கம்

  1. 27/11/23

புத்தகக்கண்காட்சி
வரவிருக்கிறது சென்னையில்.
ஆயிரம் அரங்குகளில்
புத்தகம் விற்பார்கள்
ஒவ்வொருவரும் தமக்கென்று
நான்கு அரங்குகளைத்
தேர்வு செய்யுங்கள்
போதும் அதற்கே நேரம்
சரியாக இருக்கும்.
நான்கு நண்பர்களைச்
சந்தியுங்கள் அதுவே போதும்
மீறினால் நட்பு நீர்த்துப்போகும்
சில அரங்குகளைக்
கண்களை மூடிக்கடக்கலாம்
சில அரங்குகளை விட்டு
வெளிவர மனசே வராது
ஆனால் வருவோம்.
திருவேறு தெள்ளியராதலும் வேறு.
பணம் செலவாக செலவாகக்
கையில் வாங்கிய புத்தகங்கள்
எடை கூடும்
அட்டை மட்டுமே அழகாக இருக்கும் புத்தகம்
தலைப்பு மட்டுமே அழகாக
இருக்கும் புத்தகம்
முதல் அத்யாயம் மட்டுமே
நமக்குப்பிடிக்கும்
புத்தகம்
இப்படி இப்படி
முழுவதும் சிறப்பாய்
இனிதான் எழுதுவார்கள்.
வாங்கிய புத்தகங்களை
வீட்டுக்கு வந்து பார்த்தால்
ஏற்கனவே அதனை இருமுறை வாங்கி ஓரமாய்க்கிடக்கும்.
நுழைவு டோக்கனை
விலாசம் எழுதி பெட்டியில்
போட்டு ஆனந்தப்படாதீர்கள்
எனக்குத்தெரிந்து பரிசு
பெற்றவர்களை நான்
கண்டதே இல்லை.
யாரேனும் பதிப்பகத்தார்
ஃப்ரீ டோக்கன் இதோ சாப்பாட்டுக்குப் போங்கள்
என்றால் போகலாம்
சந்திராஷ்டமம் உங்களுக்கு.
நூலரங்கிற்குச் செல்லுமுன் பழைய புத்தகக்கடையில் எப்போதேனும்
அரிய புத்தகங்கள் முன்னோர் விட்டுச்சென்றது நம்மை ஈர்க்கலாம்.
ஆயிரம் கொனஷ்டைகள் சொல்லலாம்
ஆனாலும்
புத்தகக்கண்காட்சி
அழகுதான் போங்கள்.

கவிதை- வீடுவாங்கணும்

 

எஸ்ஸார்சி/வீடு வாங்கணும்

இணையக்கால கவியரங்கம் 35
23/11/23

சென்னையில்தான்
வீடொன்று வாங்கணும்
என்றான் பையன்
இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளம்
வந்த ஏரியா வேண்டாம்
இடுகாட்டுக்குச் சவம் போகும் தெரு வேண்டாம்
தெருவின்‌ கடைக்கோடி
வீடு வேண்டாம்
சிஎம்டிஏ அப்ரூவல்
கட்டாயம் வேண்டும்
தண்ணீருக்கு போரும்
கழிவுநீர்ச் சாக்கடையும்
சரியா இருக்கணும்
வீட்டு வாசலில் டிரான்ஸ்ஃபார்மர்
நிற்கக் கூடாது
வீடு கட்டிப் பத்து வருஷத்துக்குள் இருக்கவேணும்
சொத்து டாகுமென்ட்
வில்லங்கம் இல்லாம இருக்கணும்
அடிமண் ரெண்டாயிரம் சதுர அடி
டயூப்லெக்ஸ் வீடு கூடாது
வாசப்படி வடக்கு பாத்து இருக்கணும்
சந்துகுத்து தெருக்குத்து
வேணவே வேணாம்
பக்கத்துல பஸ் ஏற எறங்க
சவுகரியம் இருக்கணும்
பள்ளிக்கூடம் ஆஸ்பத்ரியுந்தான்
வீட்டுக்கு நெருக்கமா
சரச்சோ கோவிலோ
கூடவே கூடாது
இன்னும் சில சொன்னான்
கொஞ்சம் பாருங்களேன்
என்றான் பவ்யமாய்.
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்
எது கொஞ்சம்?

கவிதை- செல்லம்மாவுக்கு

 

செல்லம்மாவுக்கு

செல்லம்மாவுக்குச் சிலை
வைத்தார்கள்
கடையத்தில்
சமீபமாய்
கொண்டாடினார்கள்
கடையத்துச் சனங்கள்
தாழ்த்தப்பட்டோனைப்
பாரதி
தன் தெருவழியே கூட்டிவரத்
தீட்டுப் பட்டுவிடும் தெருவெல்லாம்
ஜாக்கிரதை எச்சரித்தார்கள்
கழுதையொன்றை
அடுத்த நாள்
கழுத்தில் கைபோட்டு
நடத்திவரப்
பைத்தியக்காரா போ என்றார்கள்
கழுதை வரலாம் தெருவழியே
ஓர் மானிடன் வந்தால்
தீட்டாமோ தெரு?
பாரதி வினா வைத்தான்
அக்கிரகாரத்தில் ஏதிடம் உனக்கு?
கடையத்து அவாள்கள்
அடித்தார்கள் துரத்தி
கடையத்து மலையடிவார
ஆலமர நிழல்
படுத்தக் கவிஞன்
ஞானப் பாடல்கள் தந்தான்
என் செய்வாள் அவள்
ஊரே பேசியது கேலி
வேளைக்குச் சமைத்து
கணவனுக்கு அது கொடுத்து
மீள்வாள் செல்லம்மா
மாகவிக்கு வாக்கப்பட்ட
சகோதரி சந்தித்த சோதனைகள் ஏராளம்
துணைவியை ஓர் நாளும்
சீ என்று சொல்லாத
பாரதி அன்புமலை.
மாகவிஞன் வயிற்றுப் பசிக்குச்
சோறிட்ட செல்லம்மா
நினக்கு
சொக்கத் தங்கத்தில்
எழுப்பலாம் சிலை.

கவிதை -எதிர்வீடு

 30/10/23

12 வது கவியரங்கம்


எதிர்வீடு

எதிர்வீடு ரொம்ப நாளாய்ப்
பூட்டிக்கிடந்தது
வாடகைக்கு யாரும் வரவில்லை
நாய்களும் பூனைகளும்
இணங்கிப் பிணங்கி உறங்கின
நேற்று எதுவோ ஒரு குடும்பம்
லாரிச் சாமான்களோடு
அந்த வீட்டிற்குள் புகுந்தது
வீட்டு ஓனருக்கு நிம்மதி
மழைச்சற்றுக்கூடுதலானால்
வீதித்தண்ணீர் உள்ளே வரும்
நமக்கேன் பொல்லாப்பு
நான் ஒன்றும் சொல்லவில்லை
வாடகைக்கு வீடென்று
ஊரெல்லாம் சுற்றி
கடைசியாய்க்கிடைத்த வீடு
போதுமென அவர்கள் வருகை
நாய்களும் பூனைகளும்
நடுத்தெருவில் சீற்றத்துடன் அழவும் செய்தன
அறிவுஜீவிப் பாம்பு
அழைத்தது அவைகளை
அமைதியாய்ச் சொன்னது
சும்மா கிடக்கவா கட்டியவீடு
மனிதர்கள் குடிபுக வேண்டும்
மனிதர் வர மாடுவரும்
ஆடு வரும்
அரிசி வரும்
பருப்பு வரும்
எலிகள் வரும் பூனைக்காகும்
கழிவுநீர்தேங்கும் தவளை வரும்
பாம்புக்காகும்
சோறு மீதப் படும் நாயுக்காகும்
சூழல் நின்னை ஆள்வதா
சூழலை நீ ஆள்வதா
உபதேசித்த பாம்பு நழுவிப்
போயிற்று புற்றுக்குள்
நாய்களும் பூனைகளும்
ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன
பிரமித்துப் போய்.

கவிதை- சமத்துவம்

 இணையக்கால கவியரங்கம் 78


4/1/24


சமத்துவம்


சாதாரண குப்பனும் சுப்பனும் எத்தனைக்குப்

புழுவாய்ச் சுருக்கிக்கொள்கிறார்கள்

என்பதைக் கண்முன்னே

காண்பீர்கள்.

நீதிமன்றங்கள் நிகழ்போது

போய்ப் பாருங்கள்.

ஆண்ட அரசர்கள்எல்லாம்

இல்லாது போக

இம்மண்ணில் எப்படி

நீதித்துறையில் மன்னர்கள்

அவதரித்தனர் விந்தையாய்.

நீதிமன்ற வளாகத்தில்

நீதி அரசர்கள் நடைபோது

பெரிய பெரிய அட்வகேட்டுக்களே

சுவரோடு பல்லியென

ஒட்டிக்கொள்வதைத் தரிசியுங்கள்.

நீதிபதியின் இருக்கைக்கு

நேராய் கடந்து செல்லும்

யாவரும் முதுகை நெளித்து வளைத்துக் கொண்டு போகும் 

காட்சி காணுங்கள். 

எல்லோரும் ஓர்நிறை

எல்லோரும் ஓர் விலை

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

இசையோடு பாடுங்கள்

அதில் குறை வைக்ககாதீர் எப்போதும்.


Wednesday, January 3, 2024

கவிதை- பெண்டிரை மதிப்போமா.

 

இணைய கால கவியரங்கம் 77


3/1/24


பெண்டிரை மதிப்போமா.



பாரதி மாகவி சொன்ன சொல்

பாதகம் செய்பவரைக்கண்டால்

பயங்கொள்ளாதே நீ

காரி உமிழ்  அவர் முகத்தில்

போது மிதி

சாத்தியமாகிறதா இன்று

கற்பைச்சூறையாடும்

எத்தனைபேர் ஆட்சியின் அங்கமாய்

ஆகப்பெரிய பதவி வகிப்போராய்

பவனி வருகிறார்கள்

பல்லக்கில்.

உலக மேடையில் நாட்டின்

கவுரவத்தைக் கூட்டிய சோதரிகள்

பதக்கத்தை வீசி எறிகிறார்கள்.

தாம் கீழ்மையாய் நடத்தப்பட்டதற்குக்

கண்ணீர் விடுகின்றனர்.

பெண்மையை காலால் மிதித்துவிட்டு

காரியம் பார்க்கிறவர்கள்

கடவுளையும் கேலி பேசுகிறார்கள்

மகுடம் சூட்டிய மகாராசா என்கிறார்கள்

பூவுலகில் வாழத்தகுதியற்ற புல்லர்கள்.


Tuesday, January 2, 2024

கவிதை-சூட்சுமம்

 இணைய கால கவியரங்கம் 76


2/1/24



சூட்சுமம்


தெரியாதவர்க்கு அகங்காரமாய்

தெரிந்தவர்க்கு இறையாய்

அகப்படா விஷயமொன்று

எப்போதும் இருக்கவே செய்கிறது.

எத்தனை வேகமாய் எழுதினாலும்

எத்தனை வேகமாய்ப்

பேசினாலும் பிடிபடா ஒன்று சாசுவதமாய் 

கூடவே இருக்கிறது நின்னோடு.

அகப்படா அது

எப்போதும்

நகைக்கிறது

அத்தனையும் வென்று.


Monday, January 1, 2024

கவிதை-தெரிவார்

 இணைய கால கவியரங்கம் 75


1/1/24


தெரிவார்



வாய்மை உண்மையொடு

கேள்வி அமைதி

அய்ம்புலனடக்கம்

மனவடக்கம்

வறியார்க்கு ஈதல்

தியானம்

நற்செயல்கள் இவை

அத்தனைக்கும் மணமுண்டு

ஒளியுண்டு நாவுண்டு

யாரே தெரிவார்

 வினா வைத்தால்

தெரிந்தவர் தெரிவார்

 இதை

என்பதே விடையாய்.