Thursday, January 4, 2024

கவிதை -எதிர்வீடு

 30/10/23

12 வது கவியரங்கம்


எதிர்வீடு

எதிர்வீடு ரொம்ப நாளாய்ப்
பூட்டிக்கிடந்தது
வாடகைக்கு யாரும் வரவில்லை
நாய்களும் பூனைகளும்
இணங்கிப் பிணங்கி உறங்கின
நேற்று எதுவோ ஒரு குடும்பம்
லாரிச் சாமான்களோடு
அந்த வீட்டிற்குள் புகுந்தது
வீட்டு ஓனருக்கு நிம்மதி
மழைச்சற்றுக்கூடுதலானால்
வீதித்தண்ணீர் உள்ளே வரும்
நமக்கேன் பொல்லாப்பு
நான் ஒன்றும் சொல்லவில்லை
வாடகைக்கு வீடென்று
ஊரெல்லாம் சுற்றி
கடைசியாய்க்கிடைத்த வீடு
போதுமென அவர்கள் வருகை
நாய்களும் பூனைகளும்
நடுத்தெருவில் சீற்றத்துடன் அழவும் செய்தன
அறிவுஜீவிப் பாம்பு
அழைத்தது அவைகளை
அமைதியாய்ச் சொன்னது
சும்மா கிடக்கவா கட்டியவீடு
மனிதர்கள் குடிபுக வேண்டும்
மனிதர் வர மாடுவரும்
ஆடு வரும்
அரிசி வரும்
பருப்பு வரும்
எலிகள் வரும் பூனைக்காகும்
கழிவுநீர்தேங்கும் தவளை வரும்
பாம்புக்காகும்
சோறு மீதப் படும் நாயுக்காகும்
சூழல் நின்னை ஆள்வதா
சூழலை நீ ஆள்வதா
உபதேசித்த பாம்பு நழுவிப்
போயிற்று புற்றுக்குள்
நாய்களும் பூனைகளும்
ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன
பிரமித்துப் போய்.

No comments:

Post a Comment