Tuesday, January 23, 2024

கவிதை-தொலைப்பு

 இணைய கால கவியரங்கம் 97


23/1/24


தொலைப்பு


நேற்று மதியம் 

தருமங்குடி போனேன்

என் பிறந்த அகம்

அனாதையாய்க் கிடந்தது

அப்பாவும் தாத்தாவும்

ஜப சந்தி செய்த

திண்ணையில்

ஊர் உதிரிகள்

குடித்துப்போட்ட சாராயபாட்டில்கள் சயனித்து உறங்குகின்றன

ஓட்டு வீட்டின் 

நாட்டு ஓடுகள் வானரங்களால்

புறட்டப்பட்டு முட்டு முட்டாய்க்கிடந்தன

வீட்டுசசுவரில் ஆலும் அரசும்

வளர்ந்து வரவேற்றன

தேங்காய்களைத் தொலைத்த தென்னை மரங்கள்

பரிதாபமாய் நின்றுகொண்டிருந்தன

வீடு பூட்டிக்கிடக்கிறது

வீட்டுச்சாவி வைத்திருக்கும்

சிவாச்சாரியார் ஊரில் இல்லை.

துருப்பிடித்துக் கதவு நாதாங்கியில் உறங்கிக்கிடக்கும்

திண்டுக்கல் பூட்டை

முறைத்துவிட்டு

வீடு திரும்பினேன்

பூட்டு என்னதான் செய்யும்.


No comments:

Post a Comment