Saturday, April 26, 2025

சிறுகதை எல்லாமே புரியணுமா.

 

எல்லாமே புரியணுமா?                               

 

என் பையன்  தனி வீடு ஒன்றை    சென்னைப்புறநகர்  பழைய பெருங்களத்தூரில் வாங்கியிருந்தான். அப்படி  அவன்  வீடு   வாங்கியதில்   வங்கிக்கடனுக்கு  மாதம் ஐம்பது ஆயிரம்  ரூபாய் ஈ எம் ஐ வந்தது. அவன் குடும்பம்  மனைவி  ஒரு பெண் குழந்தை  அவர்கள் மூவரும் என்னோடுதான் இருந்தார்கள்.  அவன் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான். அதில்  மாத வாடகையாய் மாதம் பத்தாயிரம் ரூபாய் வந்தது.

 வங்கிக்கு  கட்டுகின்ற ஈ எம் ஐ யுக்கும் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் மாத  வருவாயுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. வீடு வாங்கும் ஒவ்வொருவரும் வங்கியில் கடன் கிடைத்தால் போதும் என்று குல சாமியை வேண்டிக்கொள்கிறார்கள்.  கடன் கொடுத்த  வங்கிக்கு திருப்பிக்கட்டப்போகும்  அந்த வட்டியை அவர்கள் கணக்குப்போட்டுப்பார்த்தால்  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிடும். வீட்டுக்கடன் முடிவதற்கும் அதை வாங்கிய ஆசாமிக்கு சஷ்டியப்த பூர்த்தி வருவதற்கும் சரியாக இருக்கும். கண்புரை  இரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை எல்லாம் தொட்டு தொட்டுப் பார்த்துக்கொண்டு கண் சிமிட்ட ஆரம்பித்து விடும். பிறகு  எல்லாமே இறங்கு முகம்தான்.  ஒருவருக்கு அறுபது வயதானால்  வேலை செய்யும்   ஆபிசில் மரியாதை இருக்காது. எழுபது வயதானால் சுற்றத்தார் மதிக்கமாட்டார்கள். எண்பதைத்தொட்டால்  நம்மை  நமக்கே  பிடிக்காதாம். சொல்கிறார்கள். பட்டால்தான் எதுவுமே தெரிகிறது.

இந்த வங்கிக்கடன் எப்போது அடைவது. இன்னும் ஒரு இருபது ஆண்டுகளுக்கு அந்தக்கடனை இழுத்துக்கொண்டா  போவது.  எப்போது கடனிலிருந்து மீள்வது  பையன்  யோசித்தான். அவன் பார்ப்பது பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு  ஐ டி கம்பெனி உத்யோகம். அவ்வப்போது வரும்  குடும்ப கஷ்டத்திற்கு எல்லாம் நாங்கள்   பழனி  மலை முருகனுக்குத்தான் வேண்டிக்கொள்வோம். அவனும் அந்தப் படிக்கு முருகனுக்குத்தான் வேண்டிக்கொண்டான். 

நேராகவே  பழனிமலைக்குப்போனான். அந்த முருகனிடம்  கோரிக்கையைச் சொல்லிவிட்டு வந்தான். ஒரு பத்து நாள் ஆகியிருக்கும். அவனுக்குக் ’கலிஃபோர்னியாவுக்குப் போய் வேலை பார்’ என்று அவன் அலுவலகத்தில் உத்தரவு போட்டுவிட்டார்கள். பாஸ் போர்ட்டும்  எச் ஒன் பி விசாவும்   தயார். அவன் ஒண்டியாய் கலிஃபோர்னியா சென்று வேலை பார்த்தால் செலவு அவ்வளவாக இருக்காது, காசு மீறும்  என்று யோசித்தான். வீட்டுக்கடன் விரைவில்  அடையும்.  வங்கிச் சிறையில் இருக்கும்  கிரயப்பத்திரம் வீட்டுப் பீரோவுக்கு  வந்துவிடும் என்கிற கணக்குப்போட்டான்.

 அவன் மனையாள் ’நானும்தான் கூடவே  வருவேன் ’ என்றாள். ஏற்கனவே அங்கு போனவர்கள்  அவனுக்குச் சொன்னார்கள். ஒரு ஆள் சம்பாரித்து கலிஃபோர்னியாவில் குப்பை கொட்ட முடியாது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குப்போகவேண்டும். இல்லா விட்டால் இராப்பட்டினிதான் என்றார்கள். அவன் மனைவியிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். ‘நானும்தான் படிச்சிருக்கேன்.  அங்கு வந்து  ஒரு வேல பார்ப்பேன்’ அவள் குரல் உயர்த்தினாள். ஆகப்  பேத்தியோடு  மூவரும்தான் கலிஃபோர்னியாவுக்குப்போனார்கள்.  பிறகு  அங்கு நடப்பதெல்லாம் அவர்கள் பிழைப்பின்  கதை. அதனில் நான் சொல்வதற்கு எதுவுமில்லை.  வீட்டின் வாடகையை வாங்கி மாதாமாதம்  அவன்  வங்கிக்கணக்கில் கட்டச்சொல்லியிருக்கிறான். அது மட்டுமே என் பணியாக இருந்தது.

பையன் வீட்டுக்கு யாரேனும் வாடகைக்கு வருவார்கள். ஆறு மாதம் இருப்பார்கள். பின்னர் வேறு ஒருவர் வருவார்  சற்றுக் கூடவும்  இருப்பார். வாங்கும் வாடகையில் வீட்டு வரி,, தண்ணீர் வரி கட்டுவது, பிளம்பர் எலக்ட்ரிசியன் கொத்தனார் ஆசாரி மேஸ்திரி பெயிண்டர் மோட்டார் மெக்கானிக் என அவ்வப்போது செலவு   போக மிஞ்சும் பாக்கியை  நான் வங்கிக்குச் சென்று கட்டிவிடுவேன். இப்படியாக காலட்சேபம் நடந்து வருகையில்  ஐடி ஊழியன் ஒருவன் பையன் வீட்டிற்கு வாடகைக்கு வந்தான். பார்ப்பதற்கு பள பள என்று  நம்பியார் கணக்காய் இருந்தான்.  முழுக்கை சட்டை . கருப்புக்கண்ணாடி. ராயல் என்ஃபீல்ட் வண்டி மின்னிக்கொண்டிருந்தது. வண்டியின் விலை எப்படியும் ஒன்றரை லட்சத்திற்குக் குறையாதுதான்.

‘சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சா’

‘ஏன் அப்பிடி கேக்குறீங்க’

‘இல்ல பேச்சிலருக்கு  நாங்க வீடு குடுக்கறது இல்லே’  நாங்கள் பேசிக்கொண்டோம். கையில் ஒரு சூட் கேஸ் வைத்திருந்தான். அதனை அவசர அவசர மாகத் திறந்தான். அதனுள் திருமணப்பத்திரிகை கத்தையாக இருந்தது. ’இதுதான் என் கல்யாணப்பத்திரிகை. இண்ணையிலேந்து சரியா இன்னும் ஒரு மாசம் இருக்குது என் கல்யாணத்துக்கு’ என்றான். அதற்குமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது. ஆகக் கல்யாணம்  அவனுக்கு ஆகத்தான் போகிறது. ஆக நிம்மதி.  அந்த ஐ டி ஊழியனுக்கே  பையன் வீட்டை  வாடகைக்கு விட்டேன்.

வாடகைக்கு வீட்டை விட்டதிலிருந்து அவன் ரோதனை சொல்லிமுடியாது. மாத வாடகையைப் பத்து நாள் கழித்துத்தான்  தருவான். நான் நாலுதடவை அவனுக்குப் போன் போடுவேன். மெசேஜ் அனுப்புவேன். பிறகு                   ஜீ. பே வரும். ’சார் ஃபேன் ஓடும் போதே இறைச்சல் வருகிறது  பிளம்பரை அனுப்புங்கள் என்பான். ’தண்ணீர் மோட்டார் ஓடும் போது  கிர்ரிக் கிர்ரிக் என்று சவுண்ட்  வருகிறது’. அதனை வீடியோ பிடித்து  வாட்சாப்பில் அனுப்புவான். மெக்கானிக் யாரையாவது உடனே அனுப்புங்கள் என்பான். வாயிலில் செல்லும் ’தெருச்சாக்கடைக்கு  மூடியிருக்கும் சிமெண்ட் காங்க்ரீட் விரிசலாக இருக்கிறது. என் டூவீலர் ஏற்றி மேலே வைக்கவேண்டும். அதனை சற்று மாற்றுங்கள்’ என்பான். ’தண்ணீர்  டேங்க்கிலிருந்து வரும்போது பழுப்பு நிறமாய் வருகிறது பாருங்கள் பாருங்கள்’ என்று அலறுவான். டேங்க்கை சுத்தம் செய்ய  நான் ஆள் பிடித்து அனுப்பவேண்டும். ஒரு நாள் ’தோட்டத்துப் பக்கமாய் இருக்கும் கதவில் ஏதோ ஒரு காளான் வந்து கொண்டே இருக்கிறது. அதனைத் தினமும் பிய்த்து பிய்த்து போடுகிறேன். பார்க்கவே அருவருப்பாய்  இருக்கிறது. அந்தக் கதவை  இப்போதே  மாற்றுங்கள்’ என்றான். அதற்கு ஆசாரிக்கும்  வாள் பட்டறைக்கும்  மரவாடிக்கும்   அலைந்தேன்.   இன்னொரு நாள்,’வீட்டுக்கு வரும் கரண்ட் பில் ரொம்ப ஜாஸ்தி, அந்த  ஈ. பி. மீட்டரில் ஏதோ கோளாறு இருக்கிறது. மின்சார இலாகாவுக்கு உடனே புகார் எழுதுங்கள்’ என்றான்.தொல்லையோ தொல்லை. தாங்க முடியவில்லை.

 தலைவலிக்காரனைக்கொண்டு வந்து வீட்டில் வாடகைக்கு வைத்து விட்டோமே  எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

ஒரு நாள் நேராக வாடகைக்கு விட்ட  வீட்டிற்கே சென்றேன். வீடுதான் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதைப்பார்த்து வரலாம் என்று. மொட்டை மாடியில் ஒரு ஆலமரத்தின் சிறு செடி ஒன்று முளைத்துத் தழைத்து வளர்ந்து கொண்டிருந்தது.

‘இத கொஞ்சம்  கட் பண்ணி எறியலாமில்ல.  வீட்டு செவுத்துக்கு கேடு’ என்றேன்.

’பால் மரத்த நா கட் பண்ணக்கூடாது. அது  பெரிய தோஷம்’ என்றான் அவன்  ஐ டி ஊழியன். நானே அதனைப்பிடுங்கிப்போட்டேன். மொட்டை மாடியில் ஒரு  சிறிய அறை இருந்தது. அந்த அறையின் கதவு லேசாக சாத்தியிருந்தது. அதனை விலக்கிப்பார்த்தேன்.’ அடடா என்ன இது’    ஒர்  ஐந்து முகக் குத்து விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு மட்டைத்தேங்காய். அதன் மீது குங்குமமும் சிவப்பும் அப்பிக்கிடந்தது.  மூன்று கடல்  சங்குகள். வெள்ளை ரோஸ் வண்ணத்தில். அவை   சைசிலும் பெரியவையாக இருந்தன. அவைகளில் துளசித் தண்ணீர் நிரம்பி யிருந்தது. அறையின் சுவரில் பத்து ஃபிரேம்  போட்ட சித்தர் படங்கள் ஆணியில் தொங்கிகொண்டு  இருந்தன. தாடி மீசை கோவணம் கையில் மணி மாலை என்று எல்லா சாமியாரும்  காட்சியானார்கள். தாயத்து கட்டிய  கருப்புக்கயறு ஒன்று  மேலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது. எனக்குக் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இதை யெல்லாம் பார்த்ததில் குடியிருப்பவன் ஒரு மந்திர வாதியாய் இருப்பானோ என்கிற அய்யமும் முளைத்தது. நான் அந்த அறையைப்பார்த்தது   அவனுக்குத் தெரியாது. குடியிருப்பவனைத்தேடி னேன். அவன் வாயிலில்  ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்தான்.  அவன் மனைவி, சினிமா நடிகை போல்  அவனுடன் இருந்தாள். அவன் அவளோடு கொஞ்சி கொஞ்சிப் பேசிக்கொண்டு இருந்ததைப்பார்த்தேன்.

’ சார் என் மிசஸ் ‘ என்றான். அவள் ‘;நமஸ்காரம்’ என்றாள். நான் அவளை ஒரு முறை நன்றாகப்பார்த்துக்கொண்டேன். அழகாகத்தான் இருந்தாள். அவளுக்கும் ஐ டியில்தான் உத்யோகம்.

‘சார் மட்டும்தான்  இப்ப இங்க இருக்காரு. அப்ப அப்ப  இங்க எட்டிப்பாப்பாரு அவ்வவளவுதான். மத்தபடி  எங்க குடும்பம் இங்க இல்ல. வேற வீடு பாத்து  அங்கதான் நாங்க குடியிருக்கறம்.’’ என்றாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

 மிக நெருக்கமான  நண்பர் ஒருவரிடம்  யோசனை கேட்டேன். ‘ இதானே, நீ விடு நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். அவரேதான் ஒரு நாள் என் பையன் வீட்டுக்குப்போனார். ’மோட்டார் ஓடும் போது  ஏதோ சத்தம் வருகிறதாமே  அதனைப்  பார்த்து  விட்டுப் போகிறேன் என்றார். மோட்டார்  ஃப்யூசை கையோடு  எடுத்துக்கொண்டார். ‘ இந்த போர்ல தண்ண சுத்தமா  இல்ல. அதான் மோட்டார் கர்ரு கர்ருன்னு இழுக்குது.   புதுசா வேற  ஒரு  போர் போட்டதான்  தண்ணி.வரும்’   குடியிருப்பவனிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டார்.

குடியிருப்பவன் எனக்குப் போன் செய்து ‘ சார்  போர்ல தண்ணி இல்ல.  புதுசா போர் போடுணும்னு மெக்கானிக் சொல்றாரு’ என்று ஆரம்பித்தான்.  ‘ அவர் இந்த சேதிய என்கிட்ட சொல்லிட்டாரு, அமெரிக்காவுல இருக்குற பையன கிட்ட இதச் சொன்னேன்.  இன்னும் மூணு மாசத்துல இந்தியா வந்துடறேன். அங்க வந்து எதுவானாலும்  நான் பாத்துகுறேன்னு சொல்லிட்டான். நீங்க வேற வீட்ட  பாத்துகுகுங்க’ என்றேன்.

மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். வீட்டுச்சாவியைக்கொண்டு வந்து கொடுத்தான்.வீட்டுக்குக்கொடுத்திருந்த அட்வான்சை வாங்கிக்கொண்டான். அந்த தாடிவைத்த  பத்து சித்தர் படங்கள், சங்குகள் மணிமாலை கருப்புக்கயறு எல்லாம்  அவன் எங்கு கொண்டு வைத்திருப்பான். அவன் மனைவியும் அவைகளை எல்லாம்பார்த்திருப்பாளா என்கிற கவலை இல்லாமலில்லை.  பையன் வீட்டு இரும்புக் கேட்டில்  மீண்டும் ‘ டு லெட் போர்டு’ மாட்டி வைத்திருக்கிறேன். நல்ல மனுஷாள் யாரும் வாடகைக்குக் கேட்டால் எனக்கு மறக்காமல் போன் போடுங்கள்.

--------------------------------------------------------------------

 

  

 

 

 

 

 

Wednesday, April 16, 2025

சிறுகதை -பரஸ்பரம்

 

 

பரஸ்பரம்                                                  

 

கந்தசாமி  என் நண்பன்தான் என்னை மொபைலில்  அழைத்தான். எப்போதாவது  போனில்  தொடர்பு கொள்வான்.  நீண்ட நேரம் பேசுவான். என் பால்யகாலத்து சினேகிதன். நானும் அவனும் முதுகுன்றத்தில் டெலிபோன் இலாகாவில் ஒன்றாய்  வேலை செய்தவர்கள்.  அவனுக்கு ஜெயங்கொண்டம் அருகே டி. பழூர் சொந்த ஊர்.  அந்த  ஊருக்கு  இனிஷியல்  டி. அது  தாதம்பேட்டை,,  அருகிலிருக்கும் பெரிய ஊரரைக்குறிக்கும். எனக்குச்சொந்த ஊர்  முதுகுன்றம் சிதம்பரம்  செல்லும் சாலையில்  இருக்கிற தருமங்குடி.  இருவரும்  முதுகுன்றம்  அய்யனார் கோயில் தெரு சேக்கிழார் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். பேச்சிலர்கள் தங்கியிருக்கும்  லாட்ஜுக்கு எல்லாம் போய்   பெரிய புராணத்து சேக்கிழார் பெயரை வைப்பார்களா என்ன. நாங்கள்  தங்கியிருந்த  லாட்ஜுக்கு அப்படித்தான்பெயர்  வைத்திருந்தார்கள். முதுகுன்றம் நகரில் அனேக மாமி மெஸ்கள் உண்டு.  கல்பாத்தி  மலையாள மாமி  ஒரு மெஸ் வைத்திருந்தார்கள். அந்த மெஸ்ஸில்தான்  நாங்கள் ஒன்றாய்ச் சாப்பிடுவோம்.

 எப்போதேனும் செம்பட்டையாய்த்தண்ணீர்   இரண்டுகரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடும்  மணிமுத்தாறு, ஐந்து  ராஜ கோபுரங்கள், ஆழத்து விநாயகர் என  அருள்பாலிக்கும் பழமலையான் திருக்கோயில்,   கோர்ட்டுக்கு எல்லாம் போக முடியாத  சேவார்த்திகள் பிராது  எழுதி சூலத்தில் கட்டினால்  சிவில் கேசுகள் மட்டுமே  பார்த்துப்பார்த்து நியாயம் வழங்கும்  கொளஞ்சியப்பர் கோயில், அப்படியே  சேவார்த்திகளின் கிரிமினல் கேசுகள் மட்டுமே   விசாரணைக்கு  எடுத்துக்கொண்டு   குற்ற தண்டனை வழங்கும் வேடப்பர் கோயில் என  முதுகுன்றத்தைச் சுற்றிச் சுற்றி வருவதும் உண்டு. பேச்சிலர்கள் தங்கியிருக்கும்  லாட்ஜுக்கு எல்லாம் போய்   பெரிய புராணத்து சேக்கிழார் பெயரை வைப்பார்களா என்ன. நாங்கள்  தங்கியிருந்த  லாட்ஜுக்கு அப்படித்தான்பெயர்  வைத்திருந்தார்கள்.

 கந்தசாமி கணக்கில் கெட்டிக்காரன். கையெழுத்தும் முத்து முத்தாய் இருக்கும். அப்படி இப்படி என்று எங்கு எங்கோ  பரிட்சை எழுதப்போய் வருவான். வள்ளுவம் பொய்க்குமா என்ன. முயற்சித் திருவினை ஆக்கியது.  அவனுக்கு கனரா வங்கியில் நல்ல  வேலை கிடைத்தது.  முதுகுன்றம்நகரை  விட்டு திருச்சிக்குப்போனான். எப்போதேனும்  என்னிடம் பேசுவான். கடிதங்கள் சில காலம் எழுதினான்.பின் நிறுத்திக்கொண்டான். உலகம்தான் கடிதம் எழுதுவதை அறவே  நிறுத்திக்கொண்டு விட்டதே.

ஆண்டுகள் ஓடின. ஆகா  இப்படி எல்லாம் காலம் தன்னை சுருக்கிக்கொண்டு  ஓட்டமாய் விடும் என்று  நான் எண்ணியதில்லை. அவனும் பணி ஓய்வு பெற்று சென்னையில் ஒரு அபார்மெண்ட் வாங்கிக்கொண்டு செட்டில் ஆனான். நானும்  அப்படித்தான் சென்னையில் தங்கிவிட்டேன்.. அவனுக்கு இரண்டு பையன்கள். எனக்கும் இரண்டு  பையன்கள். என் பெரிய பையன் கலிஃபோர்னியாவில்  அவன் குடும்பத்தோடு ,சின்னவன் ராமமூர்த்திநகர் பெங்களூரில், கிழமாகிவிட்ட  நானும் என்னவளும் சென்னைக்கும் பெங்களூருக்கும் ஷண்டிங்க் அடித்தபடிக்குக்  காலம் ஓடிக்கொண்டிருந்தது.

என் நண்பன் கந்தசாமிக்கு இரண்டு பிள்ளைகள் பெரியவனுக்கு க் கல்யாணம் ஆவதற்கு முன்பாகவே சின்னவன்  முந்திக்கொண்டு விட்டான்.அவன் நல்லவன் தான் அவன்  ஜாதகம் அப்படி. அவன் தான் என்னிடம்  சொன்னான். பெரிய பையனுக்கு ரொம்பநாளாக பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் அமையவில்லை  நான்  என்னதான் செய்வது என்பான். இந்தக்காலத்தில் ஆண்பிள்ளைகளில் சற்று சூட்டிகை இருந்தால்தான் கல்யாணம்  கில்யாணம் எல்லாம் ஆகும்போல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒண்டிக்கட்டைதான். கடைசிவரைக்கும் அப்படித்தான்.  பார்ப்பவர்கள் எல்லாம் பாவம் என்றுதான் சொல்வார்கள்.

அவன் மொபைலில் என்னை அழைத்தான் என்கிற  அந்தப்பல்லவிக்கு மீண்டும் வந்து விடுகிறேன்.

‘நா கந்தசாமி பேசறேன்’

‘சொல்லுப்பா’

‘சவுக்கியமா, எப்பிடி இருக்கே’

‘சவுக்கியம்’

‘என் பெரிய பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்’

 பெரியப்பா பையனுக்குக் கல்யாணம்  வைத்திருக்கிறேன் என்றுதான்  அவன் சொல்வதாய்  என் காதில்  விழுகிறது.

‘நா எங்க வரப்போறன் சொல்லு. கல்யாணம் எங்கே என்றேன்’ பெரியப்பா பிள்ளை கல்யாணத்துக்கு எல்லாம் நம்மை எதற்கு இந்த  பிஸ்து  அழைக்கிறான் என் மனதில் நினைத்துக்கொண்டேன்.

‘திருச்சி ஸ்ரீரெங்கத்தில் ஏ ஆர் மண்டபத்தில்’

அவன் பெரிய பையனுக்குக் கல்யாணம் என்றாலும் போய்வரலாம்.  பெரியப்பா பையனுக்குக் கல்யாணம் என்று அவன் சொன்னதாய்த்தானே  நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

‘ மண மக்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்’

‘அப்ப நீ வரல’

‘சாரிப்பா’ முடித்துக்கொண்டேன்.

அவன் போனை வைத்துவிட்டான். நானும் அந்தக்கல்யாணத்தையே மறந்து போனேன். ஒரு நாள் என் திருச்சி நண்பன் தாயுமானவன்  எனக்குப் போன் செய்தான்.

‘என்னப்பா எப்பிடி இருக்கே’

‘சவுக்கியம்தான் நீ எப்பிடி’

‘’கந்தசாமி  பெரிய பையனுக்குக் கல்யாணம் நடந்துது. உனக்கு ரொம்ப வேண்டியவனாச்சே. நீ குடும்பத்தோட வருவேன்னு எதிர்பாத்தேன். ஏமாந்துதான்  போனேன். நீ வரலேயே ஏன்?  என் கிட்ட   அவன்   நீ கல்யாணத்துக்கு  வரலேன்னு வருத்தப்பட்டு சொன்னான்.’

‘என்னது   அந்தக் கல்யாணம் யாருக்குன்னு  நீ சொல்ற’

‘கந்தசாமி பெரிய பையனுக்குத்தான்’

‘என் கிட்ட பெரியப்பா பையனுக்குக் கல்யாணம்னு சொன்னான்.  அதுக்கெல்லாம் நா எங்கப்பா வர்ரதுன்னு டக்குன்னு  முடிச்சுனூட்டேன்’

‘சரியாபோச்சி.  சாக்‌ஷாத்  அவன் பெரிய பையனுக்குதான் கல்யாணம். நானும் என் வைஃபும்  போயிட்டு வந்தோம்’

‘ என்னடா இது விஷயம்  இப்பிடி ஆயிபோச்சி’

‘சரி சென்னையில்தான இருக்கே  அந்தக் கல்யாணத்த ஒரு நா போய் விசாரிச்சிடு’

‘சரி அப்படியே செய்யறேன்’

நான் போனை வைத்துவிட்டேன். வாட்சாப்பில் கந்தசாமியின் பெரிய பையன் கல்யாணப்பத்திரிகையையும் தாயுமானவன் எனக்கு அனுப்பியிருக்கிறான். அதனைத் திறந்து பார்த்தேன். கந்தசாமியின் ஜேஷ்ட குமாரன் திருமணம் என்பது உறுதியானது. எனக்கு என்னமோ போல் ஆகி விட்டது. நண்பனின் சின்ன பையனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அவன் ஜாதகம் அப்படி. ஏழில் சுக்கிரன் உச்சம். அண்ணனுக்கு முன்பே  தம்பிக்குத் திருமணம் காதும் காதும் வைத்த மாதிரி நடந்து முடிந்தது. அந்தத் திருமணத்திற்குக்  கந்தசாமி யாரையும் அழைக்கவும் இல்லை. பெரிய பையன் திருமணத்திற்கு இருக்கும் போது  அது அடுத்தவனின் அவசரக் கல்யாணம். கந்தசாமி என்ன செய்வான். அவனுக்கு மனசே சரியில்லை.

ஆனால்  இதுவோ பெரிய பையனின் கல்யாணம்  அவனே பெண் பார்த்துக் கல்யாண ஏற்பாடு எல்லாம் செய்து முடித்திருக்கிறான். எல்லோரையும் அழைத்து இருக்கிறான். பத்திரிகை அடித்து எல்லோருக்கும் அனுப்பி இருக்கிறான். பெரிய  மண்டபம் பார்த்து ஸ்ரீரெங்கத்தில் கல்யாணம். போகாமல் இருந்து விட்டோமே. பெரிய தப்பு. பெரிய தப்பு என்று  எனக்கு  நானே அனேகதடவை  சொல்லிக்கொண்டேன்.

இன்றைக்கு  முப்பது  ஆண்டுகளுக்கு  முன்னர் கந்தசாமிக்குக் கல்யாணம் கும்பகோணத்தில் நடந்தது. நானும் என் மனைவியோடு  கல்யாணத்துக்குப்போயிருந்தேன். கா;லையில்  கந்தசாமிக்குத் திருமணம். தொடர்ந்தாற்போல்  அதே மண்டபத்தில் மணமக்களை வாழ்த்தி ஒரு கூட்டம். அந்த மைக் வைத்தகூட்டத்தில் மணமக்களை வாழ்த்திப்பேசினேன். அது  இப்போதும் நினைவுக்கு வருகிறது.   நண்பன்  கந்தசாமி வீட்டில் நடந்த பெரிய பையனின் கல்யாணத்திற்கு இப்படிப் போகாமல் இருந்துவிட்டோம். பெரிய  மடத்தனம் என்று சதா  மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. நேராக ஒரு நாள் கந்தசாமி வீட்டிற்குச்சென்று அவன் பையன் கல்யாணத்தைக் கட்டாயம்  விசாரித்து வரவேண்டும் என்று யோசனையில் இருந்தேன். நேரம்தான் சரிப்பட்டு வராமல் இருந்தது. ஏதோ தள்ளிக்கொண்டே போனது.

ஒருநாள் திடீரென்று கந்தசாமி என்னை மொபைலில் அழைத்தான்.

‘என்னப்பா எப்பிடி இருக்கே’

‘நா நல்லா இருக்கேன் உன் பையன் கல்யாணம் நல்லா ஆச்சா.  திருச்சி தாயுமானவன் சொன்னாரு. அவர் கல்யாணத்துக்கு தன் மனைவியோட நேரா வந்திருந்தாராமே’

‘ஆமாம் வந்திருந்தார். அவருக்கு உடம்பு முடியல்லதான்.  அவர் ஸ்ரீரெங்கத்துலயேதான இருக்காரு. கல்யாணமும் அங்கதான. எப்படியோ சமாளிச்சிகிட்டு வந்துட்டாரு. அது சரி  நீ பெங்களூர்லேந்து  சென்னைக்கு எப்ப வந்த’

‘நான் இப்பதான் வந்தேன்’ சமாளித்துக்கொண்டு  பொய் சொன்னேன்.

‘பெங்களூர்லேந்து நீ எங்க  ஸ்ரீரெஙம் வரப்போற. அதான் நீ அப்பவே சொல்லிட்டயே’

‘ஒரு நா  உன்  வீட்டுக்கு  வைஃபோட   வரேன் . தப்பா எடுத்துக்காத. கல்யாணத்துக்கே நா வந்துருக்கணும்’

‘வா. எப்ப வேணுன்னாலும் வா. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்’

கந்தசாமி போனை வைத்துவிட்டான்.

பையன் கல்யாண விஷயமாய் பேசும்போது ‘ நீ எங்கே இருக்கிறாய் என்றான்.நான் பெருங்களத்தூரில் இருக்கிறேன் என்றேன். அது அவனுக்கு  நான் பெங்களூரில் இருப்பதாகக் காதில் விழுந்திருக்கிறது.

அதே மாதிரி அவன் என்  பெரிய பையனுக்குக் கல்யாணம் என்றானே அது பெரியப்பா பையனுக்குக் கல்யாணம் என்றுதான்  என் காதில் விழுந்திருக்கிறது.

 இவை நிற்க பெரியப்பா குடும்பத்திற்கும்  இதே கந்தசாமிதான் பொறுப்பாய் இருந்தான் என்பது எனக்கு  முன்னமேயே  தெரிந்த விஷயம்.

--------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

Saturday, April 12, 2025

கவிதைகள் 3

 

 

 

எஸ்ஸார்சி கவிதைகள்

 

 

கும்பமேளா

 

கும்பமேளாவில் நெரிசல்

கோடி கோடியாய் மக்கள் கூட்டம்

நூற்று நாற்பத்து நான்கு ஆண்டுகட்கு

ஒருமுறை வரும் பெரு விழா

உலக அளவில் இத்தனை

மக்கள் திரள்

கூடுவதில்லையாம் எங்குமே

நெட்டித்தள்ளிய நெரிசலில் முப்பதுபேர் பலி

எண்ணற்றோர் காயம்

தண்ணீத் தரமிழந்து தவிக்கிறது

ஆயிரம் ஆண்டுகள்  ஆகியிருக்கலாம்

சித்தர்கள் பாடிப்போனார்கள்

கங்கைச் சங்கமத்தில்

சதா சர்வ காலமும் வாழ்ந்து மடியும்

மீனும்  தவளையும் நண்டும் நத்தையும்

பாம்பும்பெற்றிடுமோ சொர்க்கமென்று

நீயே அது  ஆவாய்- தத் துவம் அசி

நவின்றிட்ட தேசமிது

பாவிக்கத்தான் ஆட்களில்லை

பாரதத்தில்.

 

நியாயத்தலம்

 

சென்ற முறை தேர்தலில்

வென்றது ஜோபைடன்

அவர்  நாற்காலியில் அமர்வதற்குள்ளாய்

எத்தனைக் கலகம்

எத்தனை உயிர்ப்பலி

அமெரிக்கக் காங்கிரசில் அன்று

நிகழ்த்திய அக்கிரமத்திற்கு

சிறையிலிருந்தவர்கள்

அத்தனைபேரையும் மன்னித்து மொத்தமாய்

விடுதலை செய்தார் டொனால்ட் டிரம்ப்

என்ன அமெரிக்க மக்களே

யாரைத்தேர்ந்தெடுத்து

அரியணைக்கு அனுப்பி வைத்தீர்

மக்களாட்சி மத்துவத்தில்.

 

எது தெய்வம்?

 

தெய்வம் என்ற ஒன்று

தன் மக்களை மட்டுமே

பார்த்துப் பார்த்து

 காக்குமென்று சொன்னால்

அது தெய்வமாக இருக்குமா

எந்த மதமாக இருந்தாலென்ன

கடவுளின் குணங்கள் வேறுபடுமா/

உலகத்தை ஒரு குடும்பமாகப் பார்க்கச்சொன்னதுதான்

இராமனின் இந்து மதம்

பகை வளர்த்துப்பயன் பெறுவது

என்ன குணமோ

எந்த நாடோ எந்த இனமோ

அன்பை அடிவயிற்றிலிருந்து

அனுசரிக்கத்தெரியாதவர்கள்

பூமிக்குச் சுமையாய்

மட்டுமே வரலாற்றில்.

 

 

 

லாஸ் ஏஞ்சலிசில் தீ

 

அங்கங்கே எரிகிறது தீ

காட்டுத்தீ

கலிஃபோர்னியாவில் பூகம்பம் வருமென்று

அது மனித உயிர்களைக்

குடிக்குமென்று

மரத்தாலான வீடுகளை

பெரும்பாலும் அமைத்திருக்கிறார்கள்

காட்டுத்தீ எரிகிறது

காற்று அடிக்கிறது செமையாய்

ஆயிரம் தீயணைப்பு வண்டிகள்

வானூர்திகள் தீயை அணைக்கிறது

லட்சம் லட்சமாய்  மக்கள்  தங்க வைக்கும் கூடாரம்

நோக்கிப் பயணிக்கிறார்கள்

கனடாவை இணைக்கலாம்

பனாமாவைக் கைப்பற்றலாம்

மெக்சிகோவைப் பணியவைக்கலாம்

ஓயாமல் வக்கிரமாய்க்

 கொக்கரிக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

-----------------------

 

 

 

 

 

கவிதை- பிழைப்பு - 3

 

எஸ்ஸார்சி கவிதைகள்

 

பிழைப்பு

 

எல்லோரும் ஓர்விலை

எல்லோரும் ஓரினம்

அந்தப்பாரதிப் புலவன் தான் பாவம்

விடுதலைப் பெற்று

ஆயின  எழுபத்தெட்டு ஆண்டுகள்

கிராமப் பஞ்சாயத்து உறுப்பினராய் ஆவதற்கும்

வேண்டும் பல லட்சம்

சட்டமன்ற உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர்

பல கோடிகள் இருந்தால் மட்டுமே

நின்று பார்க்கலாம்

சாதி வோட்டு வலு வேண்டும்               

பொய்யும் புரட்டும்

பித்தலாட்டமும் கை வரவேண்டும்

பொதுத்தேர்தல்களின் நியதி

பொய்மையே வெல்லும்

மக்களால் மக்களுடைய மக்களுக்காக

மூடுங்கள் வாயை

எந்த நாடாக இருந்தாலும்

உலகெங்கும் இதுவே சட்டமாய்.

 

நீதியும் நிதியும்

 

கீழமை நீதிமன்றம் உன்னைக்குற்றவாளி

அறிவிக்கும்

மேலமை நீதி மன்றமோ

நிரபராதி என்னும்

வாதிடுகின்ற  வக்கீலைப்பொறுத்து

நீதியின் தீர்ப்பு மாறும்

பொதுவாய் ஒரு நியாயமுமில்லையா?

ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள்

சொல்வது தீர்ப்பென்றால்

ஏதும் அறியாதவர்கள்  அவ்விருவருமா?

சட்டம் ஒரு இருட்டறை

வக்கீலின் வாதம் ஒரு விளக்கென்றால்

உன் வங்கிக்கையிருப்பே வக்கீலைத்தீர்மானிக்கும்

ஆக  நியாயங்கள் வேறு

தர்மங்கள் வேறுதான்.

 

 

பழங் கணக்குகள்

 

காமராஜும் கக்கனும்

ஜீவாவும் வாழ்ந்து காட்டியது

அரசியல் வாழ்க்கை.

இணையாக வேறு  ஒரு தலைவரை

கூறிடத்தான் முடியுமா?

பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஜெயலலிதாவின் சொத்துக்களை

தமிழக அரசிடம் ஒப்படை.

ஆறு டிரங்க் பெட்டிகளில் தங்க வைர நகைகள்

ஆயிரத்து ஐநூற்று இருபத்தாறு

ஏக்கர்  நில ஆவணங்கள் ஒப்படைப்பு

மாதம் முடிந்தால்  பெற்றதோ

 ரூபாய் ஒன்று மட்டுமே ஊதியமாய்

மறந்திருப்பீர்கள் மக்களே.

வேட்டித் துண்டோடு பாராண்ட

இங்கிலாந்து அரசர் அரசியை

சந்தித்த மகாத்மாவின் தேசமிது.

 

 

 

 

 

 

 

ஜெயந்தன் விருது விபரம்

 

 ஜெயந்தன்  படைப்பிலக்கிய விருதுக்கான தேர்வாளர்களுக்கு எனது  குறிப்புகள்.

எஸ்ஸார்சி

எஸ்.ராமச்சந்திரன்.

எம் ஏ எம் ஃபில் (  ஆங்கிலம் )  எல் எல் பி,       தொலைபேசித்துறை ஓய்வு

பிறப்பு 04/03/1954     தருமநல்லூர்  கடலூர்  மாவட்டம்

இதுவரை 35 நூல்கள்,        புதினம் 8  சிறுகதைநூல் 11 கவிதை 5  மொழிபெயர்ப்பு 3 கட்டுரை 6  ஆங்கிலம் 2

சிகா என்னும் புதினம் 2024ல்  சுவடு பதிப்பகம்    (நல்லுR லிங்கம்)  வெளியிட்டது. முதற்பதிப்பு.

’சிகா’

பெயருக்கு மட்டுமே முன்னேறிய வகுப்பென்று சொல்லப்படும் குருக்கள் சமூக பெண் ஒருத்தியின்  வாழ்க்கைக்கதை.  எத்தனைக்கோ அந்தக்  குருக்கள் குடும்பம் கஷ்டப்படுகிறது. படிப்பறிவு இல்லாத சமுதாயமாய்,   பிராமண உயர் வகுப்பால் புறக்கணிக்கப்பட்டு, பிற சாதி மக்களால் உயர்ந்த நிலை சமுதாயமாகத் தவறாகக் கருதப்பட்டு,   இறைவனை மட்டுமேயே  அண்டி வாழும்  ஒரு சிறு பான்மைச் சமூகம். அவளோ  நாதியில்லா அச் சமூகத்தில் பெண்ணாய் பிறந்துவிட்டஒரு பாவி.

மனம் பெரிதான சிவகாமி என்னும் பேராசிரியையால் அவள்  தூக்கி நிறுத்தப்பட்ட கதை. ந்ன்றிக்கடனாகத் தன் பெயரையே அவள் சிகா ( சிவகாமி) என மாற்றிக்கொள்கிறாள். ஐந்தாம் வகுப்புவரை படித்த ஒரு குருக்கள் பெண்ணை, ஒரு பேராசிரியராய் கொண்டு வந்தது எப்படி என்ற சேதியை  வாசகனுக்குச் சொல்லும் கதை.

தினமணியாலும் , பேசும்புதியசக்தியாலும் பாராட்டப்பட்ட புதினம்.  மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி நல்லதொரு ஆய்வு  வழங்கியுள்ளார்.

 550 பக்கங்கள் விலை ரூ 600.

 

 

,

தமிழ் மணம் நுகர்வோம்

 

 

 

தமிழ்மணம் நுகர்வோம்.

 சங்க இலக்கியமான எட்டுத்தொகையில்  நற்றிணை  முதல் நூல். அக நூலான இந்நற்றிணையில் வரும்  177 வது பாடல்.  காமுற்று வருகிறான் தலைவன். தலைவனைக்  கவனப்படுத்துவதாக தோழி இவண் கூறுகிறாள்.

‘இதோ நிற்கிறதே  இது வெறும்  புன்னை மரம்தான் என்று எண்ணிவிடாதே.   வெண்மணலில் புன்னை விதையைப்  புதைத்து  வைத்து மூடுவோம்.  அது எங்கே புதைந்து இருக்கிறது காட்டு காட்டு எனச்  சிறார்களொடு  விளையாடியது ஒரு  காலம். அன்று ஒரு நாள்  மழை வந்து விட்டது.   வெள்ளை மணலில் புன்னை விதையை  மூடிப்புதைத்து விட்டுச்சென்றோம்.   நான்கைந்து நாட்களில் அப் புன்னை விதை மரமாக வளர்ந்தது. அது வளர  வளர நெய்யொடு இனிய பாலை அன்றோ அத்தலைவியின் தாய் ஊற்றினாள்.  அம்மரத்தைத்  தலைவிக்குச் சகோதரி என்றாள்.  தலைவியினும் சிறப்பு மிக்கவள்தான் அப்புன்னை. அய்யய்ய !    இணையே  உம் தலைவி  நாணுகிறாள்.  அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.. தலைவனோடு சோதரப்புன்னை மரத்தருகே எப்படித்தான்  அவள் நகைத்து விளையாடுவது? ’

’நற்றிணைப்பாடலைக்காண்போம்.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்தகாழ் முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம! நாணுதும் நும்மொடு நகையே’.

 

-எஸ்ஸார்சி

Tuesday, April 1, 2025

கடிதம்

 

 

அன்புசால் தோழரே  வணக்கம்.

’காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.’

என்றார் மகாகவி பாரதியார். தொலைத்தகவல் துறையிலே  அன்றாடம்  அபரிமித வளர்ச்சியும்  மாற்றமும் தொடர்கின்றன.  தொழில்நுணுக்கம் உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.  மானுடம் வென்றிருக்கிறது. பெருமைப்படுகிறோம். இவற்றையெல்லாம் சாதித்து நிற்கும் அறிவியலாளர்கள், பொறியாளர்கள்,தொழில்நுட்ப வல்லுநர்கள், உடன் உழைத்திட்ட தொழிலாளர்கள் அத்தனைபேரும் நமது வணக்கத்திற்குரியவர்கள்.

அறிவியலின் எழுச்சியை அதன் ஆளுகையை தவிர்க்கவொண்ணா அதன் மாற்றத்தை அவதானிக்க ஆற்றல்மிகு தலைமை உடனடித் தேவையானது. இயல்பாகவே தேசியத் தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியத்தலைமை அதனைப் பெற்றிருந்தது. அவ்வமைப்பின் ஒப்பற்ற தலைவராக ஓம் பிரகாஷ் குப்தா விளங்கினார். கணிப்பொறியின் ஆட்சிகண்டு அதனைத் தொழிலாளி வர்க்கம் எப்படி அணுகுவது, அதனை எங்ஙனம் பணியாற்றும் ஊழியர்கட்குச் சாதகமாக்கிக்கொள்வது என்பதறிந்து செயல்பட்டார். காலத்தை அவதானிக்கத்தெரிந்த  தொழிற்சங்க மேதை குப்தா. தொழில் நுணுக்கம்  கொணர்ந்த பிரச்சனையை எப்படி அணுகவேண்டுமோ அப்படி அனுகினார். ‘ Assimilate Autamation’   என்கிற புதிய கோஷத்தை  தொலைத்தொடர்புத்தொழிலாளிக்குப் புரியவைத்தார்.சமுதாயத்தின் தேவை நாட்டின் வளர்ச்சி இவை கொணர்ந்த நெருக்கடியை மிகச்சரியாக  எதிர்கொண்டார்.

நமது இலாகா பொதுத்துறையாவது தவிர்க்கமுடியாதது என்றாகியபோது தொழிலாளிக்கு எது பிரதானமானது என்பதனை ஆய்ந்து   ஒரு பொறுப்புள்ள  தலைவனாய்  பிரச்சனையை சந்தித்த பிதாமகன்  தோழர் குப்தா. ஓய்வு பெற்ற தோழர்கள்  இன்று பெறுகின்ற ஓய்வூதியம் தானாக வந்துவிடவில்லை. இழக்கப்போவது எது  என்பது அறியாதவர்களாய்   தொழிலாளர்கள் இருந்தபோது  ஓய்வூதியத்திற்காக நம்மைப்போராட வைத்துச் சாதித்துக்காட்டிய வித்தகத்தலைவர் குப்தா.அரசுத்துறை தொலைபேசி  பொதுத்துறையாகின்ற போது அங்கே  பணியாற்றும்  ஊழியர்கள்  அரசுத்துறையின் ஓய்வூதியத்தைப்பெற்றாக வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாக இருந்தார். ஓய்வூதியத்திற்கு மத்திய அரசின் உத்திரவாதம் பெற்றுத்தந்தார். தோழர் ஓம் பிரகாஷ் குப்தா  இயக்கத்திற்குத்   தலைமையேற்க நாம் எத்தனைப் பேறு பெற்றோம்.

என்றுமே  இது வரலாறு. அகில இந்திய சங்கத்திற்குப் பிரதான அச்சாகி இயக்கத்தை முன்னெடுத்துச்செல்வது தமிழ் மாநில சங்கம். தமிழ் மாநிலத்தின் ஆற்றல் மிகு அன்புத்தலைவன் தோழர் ஜகன். அவர் காட்டிய  தோழமை வெளிச்சத்தில் முகிழ்த்து எழுந்தது  நமது மாநில சங்கம்.  நமது துறையில் காசுவல் ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள்  என  அத்துக்கூலிகளாய்  லட்சத்திற்கும் மேலாகத்  தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும்  இலாகாவின் நிரந்தர  ஊழியர்களாக்க தஞ்சைத்தரணியில் தோழர். ஜகன்  காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டதை  நித்தம் நித்தம் நினைத்துப்பார்க்கிறோம்.தோழர் ஆர் கே. அப்படிச்சொல்லலாமா, அஞ்சா நெஞ்சன் தோழர் ஆர். கே. என்பதுவே சரி.  தமிழ் மாநிலச்செயலராய் விளங்கிய  தோழர் ஆர்.கே  ’ தலமட்டத்தில் பிரச்சனை வந்ததா, நீ போராடு.  உன் அதிகாரி என்னைக் கூப்பிட்டுப் பேசட்டும்’  ஆர். கே நமக்குச் சொன்ன இயக்கத் திருவாசகம்.

தோழர் ஜகனுக்கு ஆசானாய் விளங்கிய தோழர் பி. டி  சிரில் இயக்கம் கண்டது கடலூர் பூமி. தோழர்கள் ரகுநாதன், ரெங்கநாதன் ஆகிய இரட்டையர்கள் தமது  தோழமையால் பாசத்தால் அன்பால் கடலூர் தொலைபேசிப்பகுதியைப் போராட்டக் களமாய் மாற்றிக்காட்டிய சாகசக்காரர்கள். நேர்மை பளிச்சிடும் அவர்தம் நடப்பால் நமது முன்னோடிகள்  அதிகாரவர்க்கத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கினர். அவர்களோடு நாம் இயக்கம் கண்டோம் என்பதே நமக்கு வரலாற்றுப் பெருமை.

சிதம்பரம் பகுதியிலே தமிழ் மாநில மாடு. ஆனந்த தாண்டவம் ஆடும்  இறைவனின் திருத்தலம். அன்னம் பாலிக்கும் தில்லை என்பார் பெரியோர்.  இந்நகரம் விருந்தோம்பலுக்குப் பெயர்போன பெரிய மனமுடை சான்றோர் உறைநிலம். நமது அண்ணாச்சி தோழர் ரெங்கநாதன்.  அவர் தொழிலாளியின் இலக்கணம் இப்படி என்று நமக்கு வாழ்ந்து  வழிகாட்டிய தோழமை மண். அவருடைய பெயரால் தமிழ் மாநில மாநாட்டு அரங்கம். இப்பகுதித்தோழர்களின் மூச்சுக்காற்றய் உலாவந்த தோழர் ரகுநாதன்.  அவரின் பேராலே  பொறுத்தமான ஆளுமைகளின் விவாத மேடை. சிதம்பரத்து உடன்பிறவாச் சகோதரன், சுதாகரன்.  நம்மைப் பாசத்தால் நெகிழவைவைத்த அருமைத்தோழர். அவர் பெயரிலே  தமிழ் மாநில மாநாட்டு உணவுக்கூடம்.

இந்நாடு நமது. நமது  தொழிற்சங்க இயக்கம் தேசபக்தி மிக்கது. இயற்கை பேரிடர் சுனாமியும், கடுங்காற்றும், கொட்டும் மழைவெள்லமும் எதிர்கொண்டு  நமது  சேவையைச் செவ்வனே ஆற்றுபவர்கள் நாம். இத்தேசமும்  இம்மக்கள் சமுதாயமும் நமது  இருகண்கள். நமது சேவையைத் திறம்படச்செய்வதே நமது ஆற்றல். இவை அனைத்தும் கற்பிக்கும் பள்ளியாய் நமது தொழிற்சங்கம்.

நமது தொலைத்தகவல் பகுதிக்குப் பெருந்தலைவரும் நிர்வாக இயக்குனருமாய் இயக்குனராயும் இன்று பெருமையோடு  விளங்கும்  திரு………………………………………… நமது அண்டையூர் புதுச்சேரிக்காரர். தான் பிறந்த மண்ணின் மாண்பு போற்றுபவர்.சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு வருகைதந்து சிறப்பிப்பதாய் உறுதி சொல்லியிருக்கிறார்கள்.அவரின் வருகை நமது சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு விழுமியம் சேர்ப்பது.

இத்தேசத்தின்  ஆன்ற பெருமை, நமது தேசியத் தொலைத்தொடர்பு சம்மேளளனத்தின் தியாக வரலாறு, நமக்கு வழிகாட்டி மறைந்த தியாகத்தலைவர்கள் நமக்குக் காட்டிய செம்பாதை  இவை நமக்கு முன்னே பளிச்சிட்டு நிற்கின்றன. நாம்  நமது  தந்நலமற்ற தலைவர்களுக்கு என்றும் கடமைப்பட்டவர்களாய் இருப்போம் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்.

சிதம்பரம் மாநிலமாநாடு வெற்றிகரமாக அமையட்டும். அம்மாநாடு  சிறக்க  நம்மால்  இயன்ற பொருளுதவி அளித்து உதவிடவேண்டியது நம் அனைவரின் வர்க்கக்கடமை. உங்கள் மனமோ என்றும் பெரிது. இது உங்கள் இல்லம்.  இவ்வியக்கம்  நமது. விண்ணை அளக்கட்டும்  நமது  தியாகச்செங்கொடி. நாம் நமது கடமைஉணர்ந்து  செயல்படுவோம்.  சிதம்பரம்  மாநில மாநாடு  சிறக்க   பொருளுதவி அளித்து தோழமையோடு உதவுவீர்கள் என்கிற பெரு நம்பிக்கையோடு.

 

                                                                                                                                                  இவண்