1.பிரம்ம முடிச்சு
’மணவிலக்கு பெற்றவரோ
கணவனை இழந்தவரோ ஒரு குழந்தையுடன் இருந்தாலும் சரியே ஜாதியோ மதமோ பார்க்காமல்
திருமணம் செய்துகொள்ள சம்மதம்.ஆங்கிலம் ஓரளவுக்குத் தெரிந்திருந்தால் சிறப்பு .வயது
முப்பதுக்குள் இருத்தல் நலம்’ இப்படி வந்திருந்தது விளம்பரம். மணமகனுக்கு ஹைதராபாத்தில் வேலை. ஐடியில் போதுமான வருமானம். வயது முப்பத்தைந்து. அப்பாதான்
விளம்பரத்தைக்கொண்டு வந்து காட்டினார். நான் வாங்கிப் படித்துப்பார்த்தேன். விளம்பர
அழகே என்னைத் திரும்ப திரும்ப வாசிக்க வைத்தது.
தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார்கள்.
‘இது இரண்டாவது மணமாக இருக்கும். அப்படித்தான் தோன்றுகிறது
எனக்கும்’ அம்மா சொன்னாள்.அம்மா எப்போதும் அப்பாவின் கோணத்திலிருந்து எதையும் பார்க்க மாட்டாள்தான்.
‘அப்படித்தான் இருக்கட்டுமே.’ அப்பா பட்டென்று சொன்னார்.
என்னைப்பார்த்தார். அவன் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். உள்மனம் சேதி சொல்லிற்று. அப்பாவுக்கு நான் பதில் ஏதும் சொல்லவில்லை. என்னைப்பற்றி உங்களுக்கு
முதலில் சொல்லி விடவேண்டும். அதுதானே பிரதானமானது.
தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிறு நகரம் சேரன்மாதேவி நான்
பிறந்தது. ஊருக்கு வடக்கே ஆற்றங்கரை.பெரிய
பெரிய புளிய மரங்கள் வானைத்தொட்டுக்கொண்டு நிற்கும். புளியந்தோப்பு முழுவதும் . குரங்குகளின்
ஆட்சி. ஆற்றோரமாய் ஓரமாய் ஒரு விநாயகர் கோவில். கோவிலைச்சுற்றிலும் தடித்தடியாய் செம்பட்டை
நிறத்தில் படுத்துக்கிடக்கும் பாறாங்கற்கள்.
கோவில் சுவரைத் தொட்டுக்கொண்டு மங்களூர் ஓடு போட்ட அர்ச்சகர் வீடு. கோவில் தர்மகர்த்தாதான் அப்பாவுக்குக் கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கு
விநாயகர் கோவிலில் பூஜை முறை. பூஜை நேரம் முடிந்தகையோடு தாமிர பரணி ஆற்றின் கரையில்
திதி கொடுப்பவர்கள் தானம் கொடுப்பவர்கள் அப்பாவைக்கையோடு கூட்டிப்போய்விடுவார்கள்.
அப்பா வெறுங்கையோடுதான் ஆற்றுக்குப் போவார். கூடைகள் பல அரிசி காய்கறியோடு வீட்டிற்கு வந்துவிடும். அமாவாசையன்று ஆற்றில் நல்ல கூட்டமிருக்கும். அப்பா எல்லாவற்றையும்
சமாளிக்கவே திணறிப்போவார்.
‘ஒரு ஆம்ள புள்ளயா
நீ பொறந்திருக்கக் கூடாதா.’ அம்மா அடிக்கடி சொல்லிக்கொள்வாள். அப்பா அதற்கெல்லாம் பதில்
சொல்லவே மாட்டார்.
‘உங்களுக்கு ஒரு
கை ஒத்தாசையா இருக்குமேன்னுதான் சொல்றேன்’ அம்மா அழுத்திச்சொன்னாள்.
‘ஒருத்தர் எங்க பொறக்கணும் எப்ப பொறக்கணும் எப்பிடி பொறக்கணும்னு
யார் தீர்மானம்பண்றா. இல்ல ஒருத்தர் எப்பிடி
முடியணும் எப்ப முடியணும்னுதான் யாரானு
தீர்மானம் பண்ணிக்க முடியுமா.’
அப்பா அம்மாவுக்கு விளங்காததையெல்லாம் பேசிவிட்டு ஒதுங்கிவிடுவார்.
சரி என் கதைக்கு
வருகிறேன். விநாயகர் கோவிலுக்கு பூ மாலை கட்டி
ஒரு பெண்மணி அன்றாடம் அனுப்பிவைப்பார். அந்த அம்மாவின் பையன் தான் ஒரு தென்னங்குடலையில்
பூ மாலையை எடுத்து வந்து கொடுப்பான். அவ்வப்போது அந்த மாலை கட்டும் பெண்மணியும் ஸ்வாமிக்கு மாலையை எடுத்துக்கொண்டு வருவதுண்டு.
சேரன்மாதேவி பேருந்து நிலையத்தில் இவர்களுக்கு ஒரு பூக்கடை இருந்தது. அப்பா மாலையை
கோவிலில் வாங்கி வைப்பார். அன்றாடம் விநாயகருக்குச் சாத்துவார். அப்பா எங்காவது வெளியில் சென்றிருந்தால் நான் அந்த பூவை வாங்கி வைப்பேன். அப்பாவிடம் சேர்த்துவிடுவேன்.
இது எத்தனையோ வருஷமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த பூக்காரியின் பையன் பத்தாம்
வகுப்பு வரை படித்தான். பள்ளியை விட்டு நின்று போனான்.
‘பாக்குற பூ கட்டுற வேலைக்கு பத்து கிளாஸ் வல்ரைக்கும் பெரிய ஸ்கூலு
போய் வந்தது போதாதா. இவுரு மேலைக்கு என்ன கலைக்டரு
ஒத்யோகம் பாக்க போறாரு’ என்றாள் அவனின் தாய். அவன் தினம் பூக்கூடை எடுத்து வருவான். நான் தான் ஒருநாள் விநாயகருக்கான
அந்த மாலையை வாங்கி வைத்தேன். பூமாலையை
என்னிடம் கொடுக்கும்போது அவன் கை என் கை மீது பட்டது. பளிச்சென்று ஒரு மின்னல் தாக்கியதாய்
உணர்ந்தேன். இது தெரிந்தே அவன் செய்தானா அவனை அறியாமல் இப்படி நிகழ்ந்ததா எனக்குப்பிடிபடவில்லை. ஏன் இப்பிடி
இது நிகழ்ந்தது என்று மனம் விசாரிக்க ஆரம்பித்தது. நல்ல விசாரணையாய்த்தான் முதலில் ஆரம்பித்தது. மற்றொரு நாள் என் கை அவன் கை மீது பட்டது. ஏதோ அத்தொடுகை ஒரு பூரிப்பை மகிழ்ச்சியைத் தந்ததாய் உணர்ந்தேன்.
இத்தொடுகை தொடர்ந்தது. விளையாட்டாய் நீண்டது.
ஒரு நாள் திருநெல்வெலி இருட்டுக்கடை அல்வா வாங்கி வந்தான். பூமாலையோடு
அல்வா பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுப்போனான்.
நான்தான் சரியாய்ப் பார்க்கவேயில்லை. அப்பா
அல்வாவை பார்த்துவிட்டு ’இது ஏது அல்வா பொட்டலம்’ என்று என்னைக்கேட்டார். நான்
எனக்கும் தெரியாது என்றேன். அவன் இதை என்னிடம் சொல்லித்தான் கொடுத்தானா நான் தான் அதைக்காதில் சரியாக வாங்காமல் இருந்துவிட்டேனா ஐயம்
வந்துகொண்டே இருந்தது. விநாயகருக்கு மாலையோடு எனக்கு ஒரு முழம் ஜாதி மல்லி யை ஒரு பொட்டலாய்க்கட்டி
எடுத்து வந்தான்
.’ ஒனக்கும் பூ கொண்டாந்து இருக்கன்’ என்றான்.
‘ உன்னை யார் கேட்டா பூ’ என்றேன்.
’நானேதான் கொண்டு
வந்தேன்.’ என்றான்.
’எடுத்துக்கொள்’ அழுத்திச்சொன்னான்.
வேண்டா வெறுப்பாக
அப்பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டேன். அப்பா இது பற்றி எல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.
அம்மா மட்டும்
’ஏது பூ’ என்றாள்.
’கோவிலுக்கு வந்தது. கொஞ்சம் தலைக்கு வைத்துக்கொண்டேன்’
பொய் சொன்னேன்.
எனக்கு பூக்காரியின் மகன் நினைவே அடிக்கடி வந்து போனது. ’இது தவறல்லாவா’ என்றது என் மனம். ’ஒன்றும் தவறில்லை’ விடு என்றது இன்னொரு சமயம் அதே மனம். எனக்கு அவ்வப்போது அவனைப்பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. தூக்கம் அரைகுறையானது.
ஒரு நாள் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவன்
பூக்கடைக்குப் போய் நின்றேன். அவனைச் சும்மா பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று தான் கிளம்பினேன். பூக்காரியைக் காணவில்லை.
‘அம்மா இல்லையா’
‘சரக்கு வாங்க டவுண் போயிருக்காங்க’
அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அங்கேயே தயங்கி நின்று கொண்டு இருந்தேன். நான் அப்படி
ஏன் நின்றேன்.
‘கடை உள்ளார வரலாம். செத்த உக்காரலாம்’ அவன்.
நான் கடைக்குள்ளாகச் சென்றேன். கடைக்குப்பின்னால் சிறிய
புழக்கடை. குடத்தில் தண்ணீர். அதன் வாயில் ஒரு குவளை.ஒரு நாடா கட்டில் பாவமாய்க்கிடந்தது. அந்தக்கட்டிலில் சற்று உட்கார்ந்து
பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. அவன் கடையின் வாயிலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் சாக்கை அவிழ்த்து விட்டான். கடை சாத்தப்பட்டிருப்பதாக
வெளியே இருப்போர்க்கு அது அறிவித்தது. நான் அந்த கட்டிலிலேயே இன்னும் அமர்ந்து
தானே இருக்கிறேன்.’ பரவாயில்லை’ என்று பாழும் மனம் சொல்லியது. அவன் கட்டில் அருகில்
வந்தான். நான் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.அவன் என் அருகில் அமர்ந்தான்.
என் கைகளைத் தொட்டான். நான் அவன் மடியில் சாய்ந்தேன். அவன் கதகதப்பான மடி. அது மட்டுமே
இன்னும் இன்னும் வேண்டுமென்று மனம் என்னைக் கெஞ்சியது. அவன் கைகளை நானே எடுத்து என்
மார்போடு இருக்கி வைத்தேன்.சற்று இருக்கியும் வைத்தேன்.அவன் என் உடல் முழுவதும் முத்தமிட்டான்.
நானும்தான். அவனை மொத்தமாய்க்கடித்துத் தின்று விடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
இருவரும் சர்ப்பமாய் இருக்கிக்கொண்டோம். பிறகு அதுதான் நிகழ்ந்தது. ஆம் அதுவே நிகழ்ந்தது. உடல்
சிலிர்த்தது. ஆகாயத்தில் பறந்து கருமேகத்தை
எல்லாம் தொட்டுக் கொஞ்சிப் பேசி விட்டு வந்ததாய்
உணர்ந்தேன். அவன் பைய எழுந்தான். முகம் துடைத்துக்கொண்டான்.அவன்
கடைப்பகுதிக்குச் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த சாக்கை மீண்டும் சுருட்டி மேலே கட்டி
விட்டான். பூக் கடை திறந்து கொண்டது.
சாதித்துவிட்டதாய்த்தோன்றியது முதலில்
எனக்கு. சற்றைக்கு எல்லாம் வயிற்றைக் கலக்கியது. மனம் ’தொலைந்து போனாயடி நீ’
என்று விரட்டியது. கள்ள மனம் திருட்டுப்பூனையாய் இயங்குவதை நன்கு உணர்ந்தேன்.என் அப்பாவுக்கோ
உள்ளூர் விநாயகர் கோவில் பூஜை. வீதியில் வருவோரும்
போவோரும் அவரை ‘வணக்கம் சாமி’ என்று மட்டுமே
மரியாதை செய்வதைத் தினம் பார்த்து வருபவள் நான்.
அவனே தான் தினம் தினம் விநாயகர் கோவிலுக்கு மாலை எடுத்து
வருவான். கூடவே எனக்கும் பூக் கொண்டு தருவான்.என்
அம்மாவும் அதனைத்தவறாகவே எடுத்துக்கொள்ளவில்லையே. நானும் பூக்காரி இல்லாத நேரங்களில்
கடைக்குப்போவேன். ஆசை விரட்டியது. அந்த தவறை
தொடர்ந்து செய்துகொண்டே இருந்தோம். ஒரு நாள் இனி நான் என் வீட்டுக்குப் போக மாட்டேன். உன்னோடேயே இருப்பேன்
என்று இருந்து விட்டேன். பூக்காரிக்குத் தெரிந்து போனது விஷயம்.
‘அடி ஜோட்டால. அவுக யாரு. நாம யாரு. நீ மாபாவியா இருப்பயா,
இது அடுக்குமா. சாமின்னு நாம கீழ உழுந்து கும்புடற சனம். நாம கண்ட கசமாலத்த திங்குற ஈன சாதின்னு ஒரு ஒணக்க வேணாமா. இப்ப அந்த கோவிலு அய்யிரு மொகத்துல நா எப்பிடி முழிக்குவேன். தீயில்ல வச்சிட்ட
அவுக சாகையிலே. இந்த பாவத்ததான் நா எப்பிடி வெளிய சொல்லுவேன் இத ஆராலயும் கழுவத்தான்
வைக்குமா’ பூக்காரி ஒப்பாரி வைத்து
அழுதாள்.
‘நீ ஒசந்தகுடி பிலஸ் டூ வல்ரைக்கும் படிச்ச பொண்ணு. ஆயி அப்பன நெனச்சி பாக்கமாட்டியா.‘ பீயதுன்னுப்புட்டயே. இது அடுக்குமா. பொறப்புலயே
ஆம்பள சனம் மொத்தமா நாயிவதான, என் சாமி நீ ஏமாந்து
பூட்டயே. தங்கமே நீ என்னாத்த தொலச்சிபுட்டு நிக்குறன்னு ஒனக்கு வெளங்குதா இது என்னடா தும்பம்’. புலம்பினாள்.
என்னைத்தேடிக்கொண்டு என் அப்பா அம்மா யாரும் பூக்கடைக்கு
வரவில்லை. வந்துதான் இனி என்ன ஆகப்போகிறது. அவர்கள் அப்படி வரத்தான் முடியுமா
வருவார்களா, வரலாமா, ஊராருக்கு இல்லை
கோவில் தருமகர்த்தாவுக்கு இது விஷயம்
தெரிந்தால் அப்பாவை அம்மாவை எத்தனைக்கேவலமாக பார்ப்பார்களோ. என் கண்கள் நீரைச்சொறிந்து
சிவந்து போயின. என் மனம் கனத்தது.
‘ நா அந்த அய்யிரு மூஞ்சில முழிக்க மாட்டன். எந்த மொகத்த
வச்சி இனி அவுர பாக்குறது’ என்ற பூக்காரி அந்த
ஊரை விட்டே கிளம்பினாள். ‘ கெளம்புங்க இங்க
என்ன ஜோலி நமக்கு’ எங்களையும் வேண்டினாள். அருகேயுள்ள பாபநாசம் ஈசுவரன் சந்நிதிக்கு
நாங்கள் மூவரும் புறப்பட்டுச்சென்றோம். பூக்காரிக்குத் தெரிந்தவர்கள் ஒரு கடை போட உதவினார்கள். பூக்கடைதான் வைத்தோம். காலம் கைவரிசை காட்டியது.
எனக்கு ஒரு பையன் பிறந்தான். அம்மா அப்பா என் மனதிற்குள் மட்டுமேயிருந்தார்கள். இனி நாம் எங்கே சேரன்மாதேவி போவது என்றிருந்தேன்.
தினம் தினம் தாமிரபரணியில்
குளித்துவிட்டு வரும் என் கணவன் ஒரு நாள் வெகு நேறம் ஆகியும் வீடு திரும்பவில்லை. நானும்
பூக்கார மாமியாரும் குளிக்கப்போன ஆளைக்காணவில்லையே
என யோசனையில் இருந்தோம். தாமிரபரணியில் அன்று வெள்ளம். அணை திறந்திருந்தார்கள். தாமிரபரணிச்
சுழலில் மாட்டிய என் கணவன் பிணமாகத்தான் வீடு திரும்பினான். கதை முடிந்துபோனது. நடக்கவேண்டியவைகள் எல்லாம் சட்டப்படியே ஆயிற்று. கைக்குழந்தையோடு நானும் என் மாமியாரும் மட்டுமே
வீட்டில் இருந்தோம். விதி என் வாழ்க்கையை எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கியது நான் நினைத்து
நினைத்து அழுதுகொண்டேயிருப்பேன்.பூக்காரியான மாமியார் தன் மகன் இறப்புக்குப்பின் சுத்தமாய் நொடிந்துபோனாள்.
‘என் தங்கமே நீ
ஒன் அப்பா ஆத்தா வூட்டுக்கு போயிடு.
அவுக ஒனக்கு ஒரு வழிய காட்டுவாக. ஒன்னய வுட்டுட மாட்டாங்க. கை புள்ளக்காரி நீ’ என்றாள்.
ஏதோ கொஞ்சம் உடம்புக்கு முடியவில்லை என்று படுத்தாள். அவ்வளவுதான் பொசுக்கென்று போய்ச்சேர்ந்தாள்.
நானும் என் இரண்டு வயது பையனும் பாபநாச நாதர்
சந்நிதியில் விழுந்து கும்பிட்டு விட்டுப் புறப்பட்டோம். எனக்கு அச்சமாக இருந்தது. எப்படியோ சேரன் மாதேவிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு பேருந்து
நிலையமே பிரம்மாண்டமாய் மாறியிருந்தது. சுற்றிலும் நோட்டம் விட்டேன். அந்த பூக்கடயைத்தான் நான் இனி எங்கே
தேடுவது. சேரன்மாதேவியில் அதே விநாயகர் கோவில்
வீட்டில்தான் அம்மாவும் அப்பாவும் மெலிந்து
உடல் மெலிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
நான்’ அம்மா’ என்று அலறினேன். வீட்டு வாயிலில் போய் நின்றேன். அம்மா என்னைப்பார்த்துவிட்டாள்.
‘ஒனக்கு கருமாதி பண்ணியாச்சி. அந்தத் தாமிரபரணில எள்ளும் தண்ணி விட்டாச்சே. நீ தெருவோட போயிண்டே இரு. என் முன்னாடி நிக்காதே’
ஓங்கிச்சொல்லிய என் அம்மா கதவை பட்டென்று சாத்தினாள். நான் கையில் குழந்தையோடு வீதியில் நின்று கொண்டிருந்தேன். அப்பா கதவைத்திறந்து
கொண்டு வெளியே வந்தார். என்னருகேயே வந்தார்.
என் கைகளைப் பிடித்துக்கொண்டார். நரைத்த முடி அடர்ந்த மார்பு துள்ளத் துள்ள குலுங்கி
அழுதார்.
‘ ஒனக்கு விஜயகணபதின்னு நாந்தான் பேர் வச்சேன். நா பூஜையில என்ன கொற வச்சேண்டா .. இப்பிடி என்ன செதச்சிட்டயேடா என் அப்பனே என் தெய்வமே’ என்று விநாயகரைப்பார்த்துக் கத்தினார்.
என் குழந்தை அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா என்னைப்பார்த்தார். ‘ வா எம் பின்னால’ என்றார்.
விநாயகர் கோவில் சந்நிதிக்கு அழைத்துப்போனார். கோவில் ராட்டினக்கிணற்றில் மூன்று வாளி
தண்ணீர் சேந்தி என் தலையிலும் என் பிள்ளைத்தலையிலும் ‘கணபதி கணபதி ’ ன்னு சொல்லிக்
கொட்டினார். ‘புள்ளயார ஒரு சுத்து சுத்திவா.
அந்த தெய்வத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணு.
ஆத்துக்கு போ’ என்றார். எனக்கு என்ன நிகழ்ந்தது
எதுவும் அப்பா கேட்கவில்லை. நான் அழுதுகொண்டே சொன்னேன். பாபநாசம் வாழ்க்கையை முழுவதுமாய்ச்சொன்னேன்.
என் கணவர் தாமிரபரணிச் சுழலில் முடிந்துபோனதை
அந்த சோகத்தில் பூக்காரி இறந்ததைச் சொல்லி முடித்தேன் அப்பா பின்னாடியே பைய நடந்தேன்..தலையில்
நீர் சொட்ட சொட்ட நானும் என் பிள்ளையும் வீட்டுக்குள் நுழைந்தோம். அவ்வளவுதான்.
அம்மா மட்டும்
என்னோடு சரியாகப்பேசுவதில்லை. நான்
என்ன என்றால் அவள் என்ன என்பாள் அவ்வளவே. அம்மாவின்
மன ரணம் ஆரவேயில்லை. என் அப்பாதான் எனக்குத்
தாயுமானார்.
ஆரம்ப கதைக்கு வரவேண்டாமா. என் அப்பா அந்த ஹைதராபாத் விலாசத்துக்குப் போன்
போட்டார். கேட்ட விபரம் சொன்னார். அந்த ஐ டி
மாப்பிள்ளை உடன் புறப்பட்டு சேரன்மாதேவிக்கே
வந்தார். என்னை என் குழந்தையைப் பார்த்தார். ‘ ஓகே’ என்றார்.
‘உனக்கு’ என்றார்.
நான் அவர் காலைப்பிடித்துக்கொண்டேன். ‘ என்ன இது’ அதிர்ந்து பேசினார்.
‘நீ பேருஏமி ’ குழந்தையைக் கேட்டார்.
‘விஜய்’ என்று
மழலையில் உளறினான் குழந்தை. அம்மா முகத்தில் சிரிப்பு.
அதனை முதல் தடவையாகப்பார்த்தேன்.
அப்பா நித்யபடி
பூஜை செய்யும் அந்த விஜயகணபதி சந்நிதியில்
எங்களுக்குத் திருமணம். மாலை மாற்றிக்கொண்டோம்.சேரன்மாதேவியிலேயே திருமணப்பதிவு முடித்தோம்.
காச்சிகூடா ரயிலுக்கு முன்பதிவு செய்து மூவரும்
ஹைதராபாத் புறப்பட்டோம்.
அம்மா அப்பா நெல்லை சந்திப்புக்கு வந்து எங்களை வழி அனுப்பிவைத்தனர்.
‘ மாப்பிள்ளயோட கொலம் கோத்ரம் ஜாதி பாஷ ஜாதகம் எதுவுமே விஜாரிக்கல நாம’ என்றாள் அம்மா.
‘அவரும் எதையும் நம்மள கேக்கல’ என்றார் அப்பா. வடக்கு நோக்கி
புறப்பட்டது எங்கள் ரயில்.
----------------------------------------------------------
2.பெண்பாவம்.
அண்ணன் தருமங்குடி கிராமத்திலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார்.
கடைத்தெருவில் ஏதேனும் வேலை ஒன்றை வைத்துக்கொண்டுதான் இப்படிப் பயணமாய் வருவார். கிராமத்தில் கிடைக்கும். காய்கறிகள் கீரைகள் எலுமிச்சம்பழம் தேங்காய் இவற்றை எடுத்து வந்து தவறாமல்
கொடுப்பார். அண்ணனின் விஜயம் மாதம்
ஒருமுறை கட்டாயம் இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் வேகாத வெயிலில்
அண்ணா வந்தார். நான் என் வீட்டு சமையலறையில்
சில்லறை வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.
‘என்னடா நீ பத்து பாத்திரம் தேய்க்கற, இது என்ன புது சேதியா
இருக்கு. இந்த வேலைக்கெல்லாம் ஒரு வேலைக்கார பொண்ணு இருந்தாளே அவ என்னடா ஆனா.
ஒரு கல்யாணத்த பண்ணிண்டு போற வயசும் இல்லயே அவளுக்கு’
‘அவ இப்ப இங்க இல்ல. சொந்த ஊருக்கே போயாச்சி. நானும் எங்காத்துக் காரியும் கெளம்பினோம். அவள கையோடு அழச்சிண்டோம். அவ சொந்த ஊர் அரியலூர். அதுக்கு ரயில்ல போனோம்.
அவ அம்மாண்ட அவள விட்டுட்டு வந்துட்டம்’
‘அது என்ன ரயில்ல
போனோம்னு அழுத்தி சொல்ற. ’
‘ அதுல விஷயம் இருக்கே. அரியலூருக்கு ரயில்ல போய் அந்த ஸ்டேஷன்ல எறங்கினாத்தான் தன் வீட்டுக்குப்
போக வழி தெரியும்னு அந்தப் பொண்ணு சொல்லித்து.
அவ அம்மா அரியலூர் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்துல வாடிக்கையா
வெள்ளரி பிஞ்சு விக்கறவ . அதுதான் அங்க முக்கியம்’
‘ஏண்டா ஆத்து
வேலைக்கு மனுஷா கெடைக்கிறது அபூர்வமா இருக்கு. கெடச்ச பொண்ணயும் கொண்டு போய் அவா அம்மா கிட்ட உட்டுட்டு வந்துட்டேன்கிற எனக்கு ஒண்ணும் புரியலயே. அந்த வேலக்கார பொண்ணு சேதி இருக்கட்டும் உன் பசங்க ஸ்கூல் போயிருப்பா. உன் ஆத்துக்காரி வாத்தியாராச்சே அவளும்
ஸ்கூல் போயாச்சு. என்ன ஆச்சுடா உன் ஆபிஸ்
உன் உத்யோகம்’
‘எல்லாம் சொல்றேன். கேளு. நா வீட்லே இருந்துண்டு என் வேலய
பாக்கறேன். ஆபிஸ் போகவேண்டாம். கம்ப்யூட்டர்ல வேல செய்யணும். மடியில வச்சிண்டு வேல செய்யுற கம்ப்யூட்டர் ஆபிஸ்காரா
எனக்கு வாங்கி குடுத்துருக்கா. அத ஓயாம தொட்டுக்கணும். ஆத்துலேயே நா வேல செஞ்சா போறும். இததான் ’வர்க்
ஃப்ரம் ஹோம்’னு சொல்லுவா, ஆத்துலேந்து பண்ற வேலன்னு வச்சிக்கோ’
‘அதே சம்பளம் தருவாளா’
‘சம்பளம் அதே தான்.
ஆபிஸ் போய் வேல செஞ்சா எவ்வளவோ சம்பளமா தருவாளோ அதுவேதான்.
இதுக்கு வர்க் ஃப்ரம் ஹோம்னு பேரு’
‘அது போறது.. இப்ப சொல்லு
நீ ஆத்து வேலைக்கு
ஒரு பொண்ண வச்சிருந்தயே அவ இப்ப என்ன
ஆனா எங்க போனா ’
நான் சமையல்கட்டு வேலையை அசமடக்கிவிட்டு அண்னனுக்கு ஒரு
கப் காபி போட்டுக்கொடுத்தேன். காபியை நிறைவோடு
சாப்பிட்டார். முகத்தில்தான் எத்தனை
சந்தோஷம் அவருக்கு.
‘ நீ நன்னா காப்பி போடற. ஃபில்டர் காப்பின்னா விருதாஜலம் கடைத்தெருவுல குட்டி அய்யர்
ஹோடல்ல நாராயணன்னு ஒத்தர் போடுவார் அவருக்கப்பறம் காப்பியாவது மண்ணாங்கட்டியாவது யாருக்கென்ன தெரியர்து’
அண்ணாவும் நானும் சோஃபாவில் அமர்ந்து கொண்டோம்.
‘ஊர்ல எல்லாரும் சவுக்கியம்தானே புதுசா சேதி ஏதும் உண்டா’
‘ஒண்ணும் புது சேதி இல்லே. அது அது பாட்டுக்கு ஓடிண்டு
இருக்கு’
‘நா ஏன் பத்து தேக்கிறேன். அந்த வேலக்காரப் பொண்ணு என்ன
ஆனான்னு ஒன்கிட்ட சொல்லிடவேண்டாமா’
‘சொல்லுடா அதுலதான் நானே பேச்ச ஆரம்பிச்சேன்’
பத்து நாள் ஆகியிருக்கும் இது நடந்துன்னு வச்சிக்கோ, அன்னிக்கி
ஒரு நா கம்பியூட்டர் வச்சிண்டு வேலயில மும்முரமா
இருந்தேன். என் ஆத்துக்காரிய கூப்பிட்டேன்.’
தாகமா இருக்கு ஒரு டம்ப்ளர் ஜலம் குடுன்னேன்.’
அவ பாத் ரூம்ல் இருந்துருக்கா எனக்கும் தெரியல. வீடு கூட்டிண்டு இருந்த அந்த வேலக்கார பொண்ணு ஒரு டம்ப்ளர்ல ஜலம் எடுத்துண்டு
வந்தா என் கிட்ட வந்து நீட்டினா. என்னடா இது
புது பழக்கம்னு அந்த டம்ப்ளர கையில வாங்கினேன். என் மொழங்கையை கெட்டியா
புடிச்சா. என்னயும் மொறச்சி பாத்தா. நா பதறிப்போனேன். இது விபரீதம். இது ஒண்ணும் சரியில்ல. ஏதோ பெரிய தப்புதான் இதுன்னு என் மண்டையில பட்டுது’
‘ ஒன் கைய கெட்டியா புடிச்சாளா’
‘ஆமாண்ணா, என் கையைத்தான் புடிச்சா’
‘’இது என்ன புதூ
சேதியா இருக்கு. பயம்மா இருக்கேடா’
‘நா ஒண்ணுமே பேசல. சமாளிச்சிண்டேன். அவ கொண்டு குடுத்த டம்ப்ளர் தண்ணிய குடிச்சேன். அவளும் வேற ஒண்ணுமே
செய்யல. அன்னிக்கி இருந்த ஆத்து காரியம் எல்லாம் முடிச்சிட்டு அவ வீட்டுக்கும் போயிட்டா’
’ அப்பறம்’
‘என் ஆத்துக்காரிண்ட நடந்த விஷயத்த அப்பிடியே சொன்னேன்.
அவுளுக்கு வயறு கலக்க ஆரம்பிச்சுட்து. இத இப்படியே விடப்பிடாது. விட்டா மொதலுக்கே மோசமாயிடும்னுட்டு யோஜனை பண்ணினா.
இந்த வேலக்கார பொண்ண எங்களுக்கு அனுப்பி வச்ச அந்த அம்மாவ
தேடிண்டு போனா. அவளும் ஒரு ப்ரொஃபசர் ஆத்துல
ஆத்துக்காரியம் பண்றா. அந்த ப்ரொஃபசர
என் ஆத்துக்காரிக்கும் நன்னா தெரியும். அன்னிக்கி
அந்த ப்ரொஃபசர் வீட்டுல இல்ல. அவா வீட்டுல வேல செய்யுற வேலக்கார அம்மாவ பாக்கணும்னு ப்ரொஃபசர் வீட்டு அம்மாகிட்ட என் மனைவி
கேட்டிருக்கா. அந்த வேலைக்காரிய் இப்பதான் மாவு மிஷினுக்கு அனுப்பியிருக்கேன்.
அந்த அம்மாவோட ஒங்க வீட்டுல வேல செய்யுற அந்த
குட்டியும் போயிருக்குன்னு அவசொன்னா’
‘ரொம்ப சுவாரசியமா போறதேடா’
‘ உங்க வீட்டுல வேல பாக்குற அந்த அம்மா எப்பிடின்னு கேட்டிருக்கா என் வயிஃப்.’
‘அது எதுக்கு கேக்குறீங்கன்னு அந்த ப்ரொஃபசர் வயிஃப் கேட்டிருக்கா.’
‘ உங்க கிட்ட ஒரு சேதி. இது நேத்து நடந்திருக்கு .நா இல்லாத நேரம். எங்க வீட்டுல
அந்த பொண்ணு வேல செய்யுறா. எம் புருஷன் என்னண்டதான் குடிக்க தண்ணி குடுன்னு சொல்லியிருக்கார். நா பாத் ரூம்ல இருந்திருக்கேன். அவருக்குத்
தெரியாது. ஒரு டம்ப்ளர் தண்ணி எடுத்துண்டு
போய் அவருக்கு அவளே குடுத்துருக்கா. அத சாக்கா வச்சி எம் புருசன் கைய புடிச்சிட்டான்னு அவரே என்னண்ட
சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியல. இனி
தாமதிக்க கூடாது. இவ எப்பிடி என்னா சேதின்னு
தெரிஞ்சிக்கலாம்னுட்டு உங்ககிட்ட வந்தன்’ என்
மனைவி சொல்லியிருக்கிறாள்.
அந்த ப்ரொஃபசர் வயிஃப் தன் வீட்டுக்குள்ளார என் வயிஃப அழச்சிண்டு போனா.
‘ என் வீட்டுல பத்து பாத்திரம் தேச்சி வேல
சேயிறவ இப்ப என் புருசனயே
வளைச்சி போட்டுகிட்டா. எனக்கு அது தெரிஞ்சிபோச்சி.
என்னடா செய்யுறதுன்னு நா இப்ப திண்டாடிட்டுக்கு இருக்கன். இவகிட்டேந்து எம்புருசன எப்பிடி
காப்பாத்தி கொண்டாறதுன்னு எனக்கு தெரியல. அவுரு லோகல் பெரிய காலேஜில ஃபிசிக்ஸ்ல
எச் ஓடி. பிரின்சிபலாவும் ஆகப் போறாரு. இது ப்ரமோஷனுக்கு ஆர்டர் வர்ர நேரம்.. இப்பிடி
ஒரு தப்பான சேதி வெளிய தெரியக்கூடாதுன்னு பாக்குறன். என் புருசன்
நல்ல மனுசந்தான். யாராயிருந்தா என்ன, ஒரு பொம்பள
கச்சிதமா திட்டம் போட்டு ஒரு ஆம்பள மேல
மனசு வச்சுட்டா அதிலேந்து மீண்டு வர்ரது சங்கடமாச்சே. உங்கள என் உடன் பொறப்பா நெனச்சி சொல்லுறன். இத வெளில சொல்லிடாதிங்க. என் வீட்டுல வேல செய்யிறது ஒரு பெரிய
கொள்ளி. அந்தக்கொள்ளிதான உங்களுக்கும் வீட்டு வேலைக்கு சின்னக்கொள்ளிய அனுப்பியிருக்குது. அப்பறம்
இதுல பேச என்ன இருக்கு.’
ப்ரொஃபசர் மனைவி சொல்ல என் மனைவி நொந்துபோனாள். கடைசியாக ப்ரொஃபசர் மனைவியிடம்,
‘இவுங்களுக்கு சொந்த ஊர் எதுன்னு’ என் மனைவி கேட்டிருக்கிறாள்.
‘ அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் தான் இவாளுக்கு
எல்லாமே’ அவர் பதில் தந்திருக்கிறார். என் மனைவி வீட்டுக்கு வந்து எல்லா சேதியும் சொன்னாள்.
மறுநாள் காலை. எனக்கும் அன்று விடுமுறை அவளுக்கும்தான்.
அந்த வேலைக்காரப்பெண் என் வீட்டிற்கு வேலைக்கு
பரபரப்பாக வந்தாள்.என் மனைவி அவளிடம் பேச ஆரம்பித்தாள். நான் என் அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
‘ உனக்கு ஒரு சேதி.’
என் மனைவி அவளிடம் ஆரம்பித்தாள்.
‘என்னங்க அம்மா’
‘அரியலூர் ஸ்டேஷன்ல உங்கம்மா அடிபட்டு கெடக்குறாங்கன்னு
சேதி வந்துருக்கு’
‘என்னம்மா சொல்றிங்க’ அவள் பதறிப்போனாள்.
‘நீ எங்க வீட்டுல வேல செய்யுறதா உங்க அம்மாவுக்கு தெரிஞ்சி இருக்கு. இந்த ஊர் ரயில்வே
ஸ்டேஷனுக்கு தகவல் வந்துருக்கு. அவுங்க ரயில்வே ஸ்டேஷன்ல வேல செய்யுற ஹெல்த் மேஸ்திரி சுப்பையா பிள்ளைகிட்ட சொல்லி அந்த சேதிய என்கிட்ட சொல்லியிருக்காங்க. நா உன்
கிட்ட சொல்லிட்டேன்’
அந்தப்பெண்ணின் கண்கள் குளமாகியிருந்தது.
‘இப்ப என்ன செய்யுலாம்’
‘ எனக்கு அம்மாவ உடனே
பாக்குணும்’ அவள் அழ ஆரம்பித்தாள்.
‘எப்பிடி போறது’
‘ரயில்ல ஏறி போவுணும்’
‘அரியலூர்னு டிக்கட் வாங்கி என்ன ரயில்ல ஏத்தி உடுங்க. நா அரியலூர் ஸ்டேசன்ல
எறங்கிகுவேன் என் அம்மாவ பாத்துகுவேன்’
‘இங்க யார்கிட்டயும் எதாவது சொல்லுணுமா’
‘மொதல்ல அரியலூர் ஸ்டேசன் போயிடணும். அம்மாவ பாக்கணும். மத்தத அப்பறமா பாத்துக்கலாம்’
அவள் சொன்னாள்.
அவளை அழைத்துக்கொண்டு நானும் என் மனைவியும் ரயில்வே ஜங்கஷன் நோக்கிப்புறப்பட்டோம். என் குழந்தைகள்
மாலை ஐந்து மணிக்குத்தான் வருவார்கள். அவர்களுக்குப் பள்ளி இருந்தது. என் பக்கத்து வீட்டில் தாலுக்கா சர்வேயர் குடியிருந்தார்.
அவரிடம் வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டு குழந்தைகள் வந்தால் சாவியைக் கொடுங்கள் என்று சொல்லிப் புறப்பட்டோம்.
பதினோறு மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். அதனில் டிக்கட் வாங்கிக்கொண்டு ஜெனரல் கம்பாட்மெண்டில்
ஏறி நின்று கொண்டோம். ஒரு மணி நேரப்பயணம்.
அரியலூர் வந்தது. மூவரும் இறங்கினோம்.
‘எப்பிடி போறது உன் வீட்டுக்கு’
‘என் பின்னாலேயே வாங்க’ என்றாள். நாங்களும் அவளைப்பின்
தொடர்ந்தோம். ஸ்டேஷன் அலுவலகம் இருப்பதற்கு எதிர்த்திசையில் நடந்தாள். தண்டவாளங்கள்
சில குறுக்கிட்டன. ரயில் எதுவும் வரவில்லை. நான்கு தெருக்கள் இருந்தன . பனை மட்டைப்போட்ட
குடிசை வீடுகளாய் இருந்தன. ஒரு வீட்டு வாயிலில் காடைப்புறா கூண்டு இருந்தது. அதனுள்
ஒரு பெரிய புறாவும் சில குஞ்சுகளும் இருந்தன. இரைக்கம்பும் தண்ணீரும் அவற்றின் அருகில் கிண்ணங்களில் இருந்தன. அவைகளைப்
பார்த்த அந்தப் பெண் ‘ நீங்க தேவலாம் இங்க குந்தி
குதியாளம் போடுறீங்க’ சொல்லிக்கொஞ்சினாள்.
‘அம்மா அம்மா அம்மா’ குரல் கொடுத்தாள். வீட்டுக்கதவு சும்மாதான் சாத்தியிருந்தது. கதவைத்திறந்து கொண்டு உள்ளே போனாள். வீட்டில் யாரையும்
காணோம்.
‘ஒத்தரையும் காணுல’ என்றாள்.
அவள் அம்மா அடுப்பு
எரிக்க
குச்சி பொறுக்க வெளியே சென்றிருக்கிறாள்.
தலையில் ஒரு கட்டு காய்ந்த விறகோடு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள்.
‘என் அம்மா என் அம்மாவே’ என்று ஓடி கட்டி பிடித்துக்கொண்டு
அவள் அழுதாள்.
‘உனக்கு ஒடம்புக்கு ஒன்னும் இல்லயே அம்மா, நல்லா இருக்கதானே’ அம்மாவைக் கேட்டாள்.
‘நா நல்லாதான் இருக்கேன் பாப்பா எனக்கென்ன’
நானும் என் மனைவியும் ஒரு ஓரமாக நின்றோம்.
‘இவுக ரெண்டு பேர் யாரு பாப்பா’
‘இவுக வீட்டுலதான் நான் வேல செய்யுறன். அவுகதான் என்ன இட்டுகினு வந்தாங்க’
‘ வணக்கம் சாரு வணக்கம் அம்மா’ என்றாள் அந்த அம்மாள். சாயம்
தொலைத்த ரேஷன் கடைப் புடவை மட்டும் கட்டியிருந்தாள்.
ஜாக்கெட் என்று எதுவும் இல்லை.
கணவன் இல்லாத பெண் அவள் என்பதை
மட்டும் அறிய முடிந்தது. பனைமட்டையால் கூரை போட்ட
வீட்டின் சாக்குக்கதவைத்திறந்தாள்.
‘வாங்க அய்யா வீட்டு உள்ளார வாங்க’
நாங்கள் இருவரும் வீட்டின் உள்ளாகச்சென்றோம். கோரைப்பாய்
எடுத்துப் போட்டாள். நாங்கள் உட்கார்ந்துகொண்டோம். சாப்பிட வெள்ளரிப்பிஞ்சு ஒரு பிளாஸ்டி தட்டில் எடுத்து வைத்தாள். அலுமினியக்
குவளை நிறைய மோர் கொடுத்தாள்.
‘எனக்கு பம்பாய்க்கு
வேலை மாற்றல் வந்துடிச்சி. நாங்க குடும்பத்தோட
பம்பாய்க்கு கெளம்பறம். அதனால உங்க பொண்ண உங்க
கிட்ட ஒப்படைச்சிட்டு போலாம்னு வந்தம்’ என்றேன் நான். என் மனைவியை ஒருமுறைப் பார்த்துக்கொண்டேன்.
‘ரொம்ப சந்தோஷம் பம்பாய்க்கு அவள கூட்டிகிட்டு போறிங்களா.’
என்றாள்.
‘அது இப்பக்கி சாத்தியமில்லை’ என்றேன்.
என் மனைவி ஆயிரம்
ரூபாய் எடுத்து ‘ அந்த அம்மாவிடம் எண்ணிக்
கொடுத்தாள். பத்து நூறு ரூபாய் நோட்டுக்கள் அவை.
‘பணம் பத்திரம்’
‘ஆயிரம் ரூபா வரைக்கும் நா பாத்துக்குவேன். அதுக்கு மேலன்னா
கஸ்டம். நீங்க பணம் குடுத்தது எனக்கு பெரிய
ஒத்தாசை’ என் மனைவியிடம் சொன்னாள்.
‘உங்க கொழந்தய நீங்களே வச்சிகுங்க. உங்க கண் முன்னாலேயே உங்க பொண்ணு இருக்கட்டும். யார் கிட்டயும் வேலைக்கு
போ அது இதுன்னு அனுப்பி வைக்காதிங்க.’
‘ என்னோடயே பல
காலமா வெள்ளரி பிஞ்சு விக்குற ஒரு அம்மாதான் எம்பொண்ண விருத்தாசலம் வான்னு இட்டுகினு போச்சி.
’ ஒம் பொண்ணுக்கு ஒர் நல்ல வழி காமிக்கறேன் கவலப்படாதேன்னு என்கிட்ட சொல்லிச்சு’ . நானும் அந்த வார்த்தய
நம்பி அனுப்பிச்சிட்டேன்’
’ஒங்க மனசுக்கு நல்லா தெரிஞ்ச மனுஷாளா இருந்தா மட்டும் உங்க பொண்ண
வேலைக்கு அனுப்பி வையுங்க. அதுவரைக்கும் உங்களோட மட்டும் தான் அவ இருக்குணும். இத உங்க
கிட்ட சொல்லிட்டுப்போணுமே அதுக்குத்தான் நாங்க
வந்தம்’
‘ நீ என்னதான்
சொல்லுற பாப்பா’ என்றாள் அந்தத்தாய் தன் மகளிடம். அந்தப்பெண் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘அய்யா அம்மா சொல்றதுதான், நான் என்ன சொல்லப்போறன்’ என்றாள் மகள். அவளைப்பார்க்க
எனக்குச் சங்கடமாக இருந்தது. நான் என் மனைவியின் முகம் பார்த்துக்கொண்டேன்.
நாங்கள் இருவரும் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டோம். அரியலூர்
ஸ்டேஷனில் அடுத்த ரயிலைப்பிடித்தோம். விருத்தாசலம் வந்து விட்டோம். என் குழந்தைகள்
சர்வேயர் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அன்றிலிருந்துதான்
நானும் அவளும் மாறி மாறி பத்தும் பாத்திரமும் தேய்த்துக்கொண்டே இருக்கிறோம்’
அண்ணனிடம் கதை சொல்லி முடித்தேன்.
‘சரிடாப்பா போறும் பெரிய கதய சொன்ன.
எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும். மனுஷனுக்கு எந்த ரூபத்துல வேணா கஷ்டம் வந்து சேந்துடும் ஆத்துக்காரி வந்ததும்
நா அர்ஜெண்ட்டா வந்துட்டு போனேன்னு சொல்லு ’ என்றார் அண்ணா.
’எனக்கு கடைத்தெருவுல தலைக்குமேல
வேல கெடக்கு நா கெளம்பறேன்’ சொல்லிக்கொண்டே புறப்பட்டார். வீட்டில் நான் மட்டும்தான். என் லாப்டாப்பைத்திறந்து என் வேலையைத்தொடர்ந்து
கொண்டேன்.
‘
3. பிசகு
கொனஷ்டை ஒரு எழுத்தாளரின்
புனை பெயர். அவர் யாரென்று கேட்கிறீர்களா
சென்னையில் உயர்நீதிமன்ற நீதிபதியாய்
உத்யோகம் பார்த்த சீனுவாசாச்சாரியார் அவரே தான். அழகிய சிங்கரின் இணையதள ’ கதை புதிது’
நிகழ்வில் பேசுவதற்கு அவரின் கதைத்தொகுப்பிலிருந்து சில கதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள்..
எனக்குக் கொனஷ்டையின் ’துப்பறிவு’ என்னும் சிறுகதையை அழகிய
சிங்கர் அனுப்பியிருந்தார். அந்தக்கதை ஏ 4
சைசில் பத்து பக்கத்திற்கு வந்தது.
இரண்டு மூன்று பக்கங்கள் மங்கலாகவே தெரிந்தன.
அவைகளை ஒரு ஊகமாய்ப்படிக்கலாம் அவ்வளவே. எப்படியோ கதையைப்படித்து முடித்தேன்.
இரண்டு மூன்று தடவை மொபைல் போனிலேயே கதையை
வாசித்துவிட்டேன். கண் வலிக்கத்தான் செய்தது. இதெல்லாம் பார்த்தால் முடியுமா.
துப்பறிவு கதையில் வரும் கணவனும் மனைவியும் தடக் புடக் என்று நடந்து கொள்கிறார்கள்.
எந்த வீராப்புக்கும் குறைச்சல் இல்லை.கற்பனை செய்து விஷயத்தை நீட்டிச் சொல்வதில் ஒருவருக்கொருவர் போட்டாபோட்டி
நடக்கிறது. மனைவிபெயர் லலிதா. அனேக தமிழ்க் கதைகளில் இந்த லலிதா என்கிற பெயர் தொத்திக்கொண்டேதான் வருகிறது. மனைவி ஒரு வீணை வித்வானிடம் பாட்டு சொல்லிக்கொள்கிறாள்.’
சச ரி ரி கக மம பப தத நிநி’ என்கிற ஜண்டை வரிசை பாடம் நடக்கிறது.கணவனுக்கோ அந்த இசைப்பாடமே
பிடிக்கவில்லை. மனைவியை கத்தி கத்தி அழைக்கிறான்.அவள் எதிரே வந்து நிற்கிறாள்.’பாட்டுக்கார
வாத்யார் போயாச்சா’ என்கிறான்.’’ நீங்க என்ன கூப்பிட்ட உங்க குரல் சுரத்தைக் கேட்டதுமே புறப்பட்டு விட்டார்’ என்று
கச்சிதமாய்ப் பதில் சொல்கிறாள்.
அவர்கள் வழ்ந்துவரும் தெருவின் கோடியில் ரோஸ் கலர் பெயிண்ட்
அடித்த ஒரு வீடு. அந்த வீட்டில் திருடு போய்
விட்டதாகக் கதையை கதா நாயகன் ஆரம்பிக்கிறார்.
திருடு போன சாமான்களில் விலை உயரந்த கமல மோதிரமும் உண்டென்று அவன் சொல்கிறான். கமல
மோதிரம் போட்டுக்கொண்டு வீணை வாசித்தால் மிகச்சிறப்பாக
இருக்குமென்றும் ஆகக் கமல மோதிரம் வேண்டுமென்றும் அவள் முன்னமே கோரிக்கை வைத்தவள். இப்படியெல்லாம் சொன்னால் தான் அவள் கமல மோதிரம் வேண்டுமெனத்திரும்பவும் கேட்கமாட்டாள் என்கிற கேவலமான எண்ணமா
தன் கணவனுக்கு என்றுகூட அவள் கேட்டு விடுகிறாள். அந்த ரோஸ் கலர் வீட்டில் குடியிருப்பவர்களைத் தனக்கு தெரியும் என்றும்
அந்த வீட்டு மாமி தனது பாட்டிக்கு சிநேகிதி
என்றும் நடந்துவிட்ட இந்த நிகழ்வை தான் போய்
விசாரித்துவிட்டு வருவதாய் அவன் மனைவி புறப்படுகிறாள்.
கிளப் செகரட்ரியாக இருக்கும் அவள் தன் அலுவலகப்பையனை வைத்து
முதலில் அங்கு என்ன நடந்தது என்று விசாரித்து
வரச்சொல்லிவிட்டு பின்னர் தான் போகலாம் என முடிவு செய்கிறாள். ரோஸ் கலர் வீட்டில் கமல
மோதிரம் திருடிய திருடன் விலை உயர்ந்த பச்சை
மோதிரம் ஒன்றை அதே இடத்தில் வைத்துவிட்டுச்சென்றுவிட்டானாம்.
இதை அவர்களே தன்னிடம் சொன்னதாக மனைவி கணவனிடம்
சொல்கிறாள்.
தனது நண்பனிடம் இருந்து போலிஸ் உடையை
இரவல் வாங்கி போட்டுக்கொண்டு இன்ஸ்பெக்டர் கணக்காய் தானே போய் அந்தத் திருட்டை
விசாரித்துவிட்டு வந்ததாகவும் அப்போது பச்சை மோதிரத்துக்குப் பக்கத்தில் ஒரு விரல்
வெட்டப்பட்டு அங்கேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் அவன் வந்து தன் மனைவியிடம்
சொல்கிறான்.
அவளோ திரும்பவும்
ரோஸ் கலர் வீட்டுக்குச்சென்று தனது கணவன்தான் போலிஸ் உடையில் வந்து திருட்டை விசாரித்ததாகச்சொல்கிறாள்.
அவர்கள் இந்த வெட்டப்பட்ட விரலை அவள் கணவனே
அந்தப்பெட்டியில் கொண்டு வந்து வைத்துவிட்டுச்
சென்றிருக்கலாம் என்கிறார்கள்.அவள் கணவனின் இந்தச்செயல் குறித்து போலிசில் புகார் செய்ய
இருப்பதாகச்சொல்கிறார்கள். லலிதாவுக்கு அச்சம் வந்துவிடுகிறது. ’ நாம் இருவரும் இந்த ஊரைவிட்டு
இப்போதே ஓடிவிடுவோம்’ சொல்லிய அவள்
அவர்களது துணிமணியை புதிய சூட்கேசில் அடுக்குகிறாள்.
இஸ்திரி மடிப்பு செய்யப்பட்ட தனது சட்டை கலைக்கப்படுவது
கண்டு அவனுக்கு மனம் பதறுகிறது.
அவன் இந்தத்தெருவில் ரோஸ் கலர் வீடும் இல்லை. அங்கு யாரும் குடிவரவும்
இல்லை அந்த வீட்டில் கமல மோதிரம் திருடு போகவும் இல்லை. இன்னும் இவை
இவை எல்லாமே மொத்தமாய் டூப் என்கிறான்.
ஒரு மோதிரத்தை தன்மனைவிக்கு அவள் கேட்டபடியே
வாங்கி வந்து வீட்டில் வைக்கிறான்.
அவளோ ‘நான் தூங்கும் போது நீங்கள் விரல் அளவு எடுத்தது
எனக்குத்தெரியும்’ என்கிறாள்.
’விரல் அளவே நான்
எடுக்கவில்லை. தோராயமாய் ஒரு அளவில் வாங்கியதே இந்த மோதிரம்’ என்கிறான் அவன். அவ்வளவுதான் கதை.
இந்தக்கதையத்தான் நான் இணைய தளத்தில் அன்பர்களுக்குச்சொல்லவேண்டும். துப்பறிவு
என்கிற தலைப்புக்கும் இந்தக்கதைக்கும்
என்ன சம்பந்தமோ, நீங்கள் யாரேனும் துப்பறியலாம்.
அன்று மதியம் சாப்பிட்டு எழுந்தேன். பல்லில் ஏதோ ஒட்டிக்கொண்ட
மாதிரி தெரிந்தது. வலி நம நம என்று எடுக்க ஆரம்பித்தது. கை விரலால் ஒன்றும் காரியம் ஆகவில்லை. சுவாமி பிறையில் ஊது வத்தி எரிந்து பாக்கி இருக்கும்
அதன் கட்டைக்குச்சியில் ஒன்றை எடுத்து வந்தேன். பல்லில் உறுத்துகின்ற இடத்தில் வைத்து குத்தி குத்திப் பார்த்தேன். மாட்டிக்கொண்ட ஒன்றும் வெளிப்படவில்லை. பல் லேசாக
ஆடுவதைக் கவனித்தேன். ஆட்டிப்பார்த்தால் எல்லா
பல்லுமே ஆடுவதுபோல்தான் தெரிந்தது. பல் வலி
குறைந்த பாடில்லை. மணி மலை ஐந்தரை. இன்னும்
ஒரு மணி இருக்கிறது. ஆறரைக்குத்தான் இந்தக் கொனஷ்டையின் கதையை ஆன் லைனில் சொல்லவேண்டும்.
அதற்குள்ளாக நாம் பல் டாக்டரிடமிருந்து திரும்பி வந்து விடலாம். பல் டாக்டர் என்ன ஒரு பத்து நிமிடம் எடுத்துக்கொள்வாரா
அதற்கு மேல் என்னவாகிவிடப்போகிறது. பாட்டி வைத்தியமாய் கிராம்பு ஒன்றை பல் வலிக்கின்ற
இடத்தில் சற்று நேரத்திற்கு வைத்துக்கொண்டால் பல் வலி நின்று போய்விடலாம். அது எல்லாம் சரியான
தீர்வா என்ன என்று குரங்கு மனம் யோசனை சொல்ல ஆரம்பித்தது.
நான் குடியிருக்கும் பழைய பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம்
போனால்தான் பல் டாக்டரைப்பார்க்கமுடியும். விவரமான பல் டாக்டர் அங்கேதான் இருக்கிறார்.
என் வீட்டு அருகில் போர்டு போட்டுக்கொண்டு
உட்கார்ந்திருக்கும் பல் டாக்டர்களுக்கெல்லாம்
அவ்வளவாக விஷயம் போதாது என்பது ரொம்ப நாளாக என் அபிப்ராயம். இதுகள் எல்லாம் மனப்பிராந்தியோ என்றுகூட எனக்குத்தோன்றும். சோதிடம் பொய் என்று
வியாக்கியானம் செய்ய முடிகிறது. யதார்த்தத்தில் அஷ்டமி நவமி திதி நாட்களில் ஒரு திருமணம் கூட கல்யாண மண்டபத்தில்
புக் ஆவது இல்லையே அது மாதிரிதான். கருப்புக்கொடி வைத்துக்கொண்டு சுனா மனாவைத் தூக்கிப் பேசுபவர்கள் ராகு கால நேரத்தில்
தாலி கட்டுவது எல்லாம் ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழ்ந்ததுண்டு. நானும்
பார்த்தும் இருக்கிறேன். அது கூட இப்போது எல்லாம்
நிகழமாட்டேன் என்கிறது. அதுதான் யதார்த்தம். அறிவியல் ஆராய்ச்சிகள் அன்றாடம்
விரிந்துகொண்டே போகும் மூட நம்பிக்கைகள் மட்டும் சும்மா இருக்குமா என்ன.
என்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு தாம்பரம் கிளம்பினேன்.
ஹெல்மெட் போட்டுக்கொள்ளாமல் தாம்பரம் போகமுடியாதுதான். போலிசுகாரர்களின் கெடுபிடிக்குப்
பயந்துத்தானே ஹெல்மெட் அணிகிறோம். தவிர ஆத்மார்த்தமாய் அதை எல்லாம் நாம் எங்கே அனுசரிக்கிறோம்.
இன்னும் ஒரு மணிநேரம் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதற்குள்ளாய் டூவீலரில் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடவேண்டும். வந்து
இந்த கொனஷ்டை அய்யா எழுதிய துப்பறிவு கதையை இணைய அரங்கில் சொல்லியாகவேண்டும். நமது
பெயரைப்போட்டு கொட்டையாய் அறிவிப்பும் வெளியிட்டு இருக்கிறார் அழகிய சிங்கர். அதற்கு
நேர்மையாய் இருக்கவேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். மீண்டும் ஒருமுறை உறுதி சொல்லிக்கொண்டேன். தாம்பரத்தில் முத்துலிங்கம் தெருவில்
தான் அந்த பல் டாக்டர் கிளினிக் வைத்திருக்கிறார்.
டூ வீலரை உருட்டிக்கொண்டு முடிச்சூர் தாம்பரம்
சாலையில் சென்றேன்.முத்துலிங்கம் தெரு வந்தாயிற்று. பல் டாக்டரின் ரிசப்ஷனிஸ்ட்டிடம்
நேராகச் சென்றேன். கடிகாரத்தில் மணியைப் பார்த்துக்கொண்டேன்.
இன்னும் நாற்பது நிமிடங்களே இருந்தன. அதற்குள்ளாக வலிக்கும் பல்லைக்காட்டி
வைத்தியம் செய்துகொண்டு வீடு திரும்பவேண்டும். கொனஷ்டை சாருக்கு நாம் நியாயம்
செய்தாகவேண்டும். பல் டாக்டர் ஆலோசனைக்கு என்று
ஒரு ஐநூறு ரூபாயைக்கொடுத்தேன். பாக்கி இருநூறு
என்று எழுதி ரிசப்ஷனிஸ்ட்டிடம் வாங்கிக்கொண்டு
டாக்டரிடம் சென்றேன்.
‘டாக்டர் சார் என்ன நீங்க ஒரு இருவது நிமிஷத்துல அனுப்பிடுவிங்களா’
‘நீங்க எதுக்கு வந்திங்க உங்களுக்கு என்ன பிரச்சனன்னு சொல்லவேயில்ல.’
‘ஆமாம் மறந்து போனேன். எனக்குப் பல் வலி’ வலிக்கும் பல்லைக்காண்பித்தேன்.
‘ஏறிப்படுங்க’ நாற்காலியும் பெஞ்சுமாய் தன் உருவை ஒரு மண் புழு போல் சுறுக்கி சுறுக்கி மாற்றிக்கொள்ளும்
ஒரு பல் சிகிச்சை படுக்கை அமைப்பின் மீது ஏறிப்படுத்துக்கொண்டேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருபானந்தன் சாரை போனில் அழைத்தேன்.’ சார் பல் வலி தாங்க முடியலேன்னுட்டு
பல் டாக்டர் கிட்ட வந்துட்டன். இன்னிக்கு கொனஷ்டை சாரோட சிறுகதை சொல்லணும். நாந்தான்
மொதல் ஆளுன்னு போட்டு இருக்காங்க. மொத கத என்னுதுதான் தலைப்பு
துப்பறிவு. அத கொஞ்சம் கடைசில கொண்டு
போய்ட்டிங்கன்னா பெரிய உதவி’
’ நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது உங்கள காணலன்னா, அத கடைசில தள்ளி விட்டுடறேன். ஆனா நீங்க
நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிங்களா இல்லையான்னு பாத்துகிட்டுதான் அதை செய்யுவேன்’ எனக்கு சாதகமாகத்தான் சொன்னார்
கிருபானந்தன்.
பல் டாக்டர் நான் வலி என்று கூறிய அந்தப்பல்லத் தட்டி தட்டிப்
பார்த்தார். ஒரு நர்ஸ் ஹோஸ் ஒன்றை வைத்துக்கொண்டு என் வாயில் தண்ணீர் விட்டுக்கொண்டே
இருந்தார். பல் கரைந்து நிஜமாகவே பல் பொடி
வயிற்றுக்குள் சென்றுகொண்டிருந்தது. பல் தீயும் துர்நாற்றம் லேசாக வந்தது. புகை வரவில்லை.
‘ஆ’ என்றார் டாக்டர். நான் வாயைதிறந்து வைத்தேன்.
‘நல்லா நல்லா’
என் வாய் வலிக்கின்ற வரைக்கும் திறந்தேன்.
‘பல்லு கூசுதா’
‘ஆமாம் டாக்டர்’
உளறி உளறிப் பேசினேன்.
‘கடிச்சுகுங்க நல்லா கடிச்சுகுங்க’
டாக்டர் சொல்வதை எல்லாம் செய்தேன். எனக்குக் கொனஷ்டை சாரின்
துப்பறிவு கதை மட்டுமே நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. ஒரு ஒரு விஷயமாக சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.
‘சரி இது போதும்’ என்று முடிவுக்கு வந்தேன். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. டாக்டர் என்னைச்
சற்று ‘ போய் வா’ என்று விட்டால் தேவலை. மொபைலில் யாரோ என்னை அழைக்கிறார்கள். ஒருக்கால்
அழகியசிங்கர் கூட என்னை அழைக்கலாம். நிகழ்ச்சிக்கு
நேரமாகிவிட்டதோ. ஒரே பரபரப்பாக இருந்தது.
‘இந்த பல்லு இனி சரிப்பட்டு வராது’
‘சொல்லுங்க டாக்டர்’
‘இத எடுத்துடுவேண்டியதுதான்’
‘ஓ கே டாக்டர்’
‘வாயில மரத்து போகிறமாதிரிக்கு ஒரு ஊசி போடறேன்’
‘ டாக்டர் இன்னும்
கொஞ்ச நேரத்துல ஒரு ப்ரொக்ராம்ல நா பேசுணும்’
‘பேசலாம் ‘பேசறதுக்கு ஒண்ணும் எடஞ்சல் வராது’
எனக்கு ஆறுதலாக டாக்டர் செய்தி சொன்னார். வாயில் மரத்துப்போகிற
ஊசியைப்போட்டார்.
‘இன்னும் பதினைஞ்சி நிமிஷம் வைட் பண்ணுங்க’
‘நா அந்த ப்ரொகிராமுக்கு போகணும்’
‘’எத்தனி நிமிஷம் ப்ரொகிராம்’
‘ஒரு அஞ்சி நிமிஷம்’
‘அப்பறம் என்ன அத முடிச்சிட்டு இங்க வந்துடுங்க. நா பல்ல எடுத்தன்னா நீங்க அரை மணி நேரத்துக்கு
பேசக்கூடாதுன்னு சொல்லிடுவேன்’
‘சரிங்க டாக்டர் நா அத முடிச்சிட்டு வந்துடறேன்’
‘ஓகே’ என்றார் டாக்டர்.
என்னுடைய லேப் டாப்போ வீட்டில் இருக்கிறது. அதுதான் இணையதள
நிகழ்ச்சியில் பங்கேற்க சவுகரியமாக
இருக்கும். பல் மருத்துவ மனைக்கு வந்தாயிற்று. என்ன செய்வது. இனி அதெல்லாம் சாத்தியப்படாது.
மொபைலை வைத்துக்கொண்டு ஜூம் ஆப் பை த்தேடிக்கண்டு பிடித்தேன். அய் டி
பாஸ்வேர்ட் எல்லாம் நினைவில் இருந்ததால் தப்பித்தேன்.
நான் தற்சமயம் இருப்பது பல் ஆஸ்பத்திரி. அப்போதைக்கு
அப்போது ஜனங்கள் எதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல்
சப்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
எனக்கு வசதியாய் ஒரு இடம் வேண்டுமே.
நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. பல் ஆஸ்பத்திரியின் மொட்டை மாடிக்குப்போகும் படிக்கட்டில்
வந்து நின்று கொண்டேன். வாயெல்லாம் வீங்கிப்போனமாதிரிக்கு
இருந்தது. இன்று இங்கு வந்திருக்கவே வேண்டாம்.
நம் கணக்குத்தவறாக ஆகிவிட்டது. நாம் நினைத்த மாதிரிக்கு எல்லாம் காரியங்கள் நடந்துவிட்டால் பிறகென்ன இருக்கிறது.
அதுதான் இல்லையே.
ஜூமில் என் வெண்தலையைப்பார்த்த்வர்கள்
‘ எஸ்ஸார்சி வந்து விட்டார். அவர் இப்பவே பேசிடுவார்’ என்றனர். எனக்கும் கேட்டது.
‘ எல்லோருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்து’ துப்பறிவு’ கதைக்கு வந்தேன். நாம் ஒன்று
சொல்ல அடுத்தவர்க்கு வேறு ஏதும் கேட்குமோ என்று சந்தேகம் வந்தது. நாக்கு தடித்து குளறுகிற மாதிரி இருந்தது. விரைத்துக்கொண்ட உதடுகள் மரக்கட்டை மாதிரிக்கு உணர ஆரம்பித்தேன். இது பற்றி
எல்லாம் யோசிக்க நேரம் ஏது. கொனஷ்டையின் துப்பறிவு கதையை ஒரு வழியாய்ச் சொல்லி முடித்தேன்.
பொன்னான வாய்ப்பு தந்த அழகிய சிங்கருக்கும் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் எனது நன்றி
பலவும் சொல்லி வெளியேறினேன். ‘லீவ்’ பட்டனைத்
தொட்டு முடித்தேன்.
பல் டாக்டர் எங்கே
என்று தேடினேன். விட்ட குறை தொட்டகுறை இருக்கிறதே. அதனை முடித்தாக வேண்டுமே.
‘ஏறிப்படுங்க’ என்னைத்தான்.
யார் இப்படி நம்மைப்
படுக்கச்சொல்கிறார்கள்.காலை நீட்டிப் படுத்துக்கொண்டேன். டாக்டர் என்னை நிகழ்ச்சி முடிந்ததா
என்று கூடக் கேட்கவில்லை. அவருக்கு இதற்கெல்லாம் நேரம் வேறு இருக்கிறதா என்ன ? கொறடா
மாதிரி ஒரு சாமானைக்கையில் எடுத்து பிடுங்கவேண்டிய பல்லின் மீது வைத்தார். வலிதெரியாமல் இருக்க மரத்துப்போகும் ஊசி போட்டிருக்கிறார்தான்.
இருந்தாலும் பயம் இல்லாமலா. உச்சி மண்டையில் யாரோ பளார் என்று அறைந்தமாதிரிக்கு உணர்ந்தேன்.
டாக்டர் என் உடைந்த கடைவாய்ப் பல்லை வேறோடு
பிடுங்கி எடுத்து அதன் பீங்கான் கிண்ணத்தில்
வைத்தார்.
‘இதான் அந்த பல்லு’
நான் அந்த பல்லைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
பிரஸ்கிரிப்ஷனில்
மாத்திரை எதையோ எழுதிக் கொடுத்து ‘ரொம்ப ஜில்லினு ரொம்ப சூடா எதுவும் இண்ணைக்கு
வேணாம்’ என்றார்.
தலையை ஆட்டிவிட்டுப்புறப்பட்டேன்.
ரிசப்ஷனிஸ்ட் தரவேண்டிய முந்நூறு ரூபாய் பாக்கி நினைவுக்கு
வந்துவிட்டது. அதை ஞாபகமாய் அவரிடம் இருந்து
வாங்கிக்கொண்டேன்.
இன்னுமொரு ஆயிரம் ரூபாயுக்கு பில்லை ரிசப்ஷனிஸ்ட் நீட்டினார். க்யூ ஆர் கோடு படம் பார்த்து ஜிபேயில் அதனைச் சரிசெய்தேன்.
என்னதான் பல் வலி
அமர்க்களம் என்றாலும் சாமர்த்தியமாய்
எனக்கு வரவேண்டிய பாக்கியை ரிசப்ஷனிஸ்ட்டிடம் திரும்ப வாங்கி விட்டதற்காய் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
அல்ப சந்தோஷங்களுக்குத்தான் அலாதி மரியாதை.
பல் டாக்டரைப்பார்ப்போமே என்று முடிவு
எடுத்தேன். அவசரமாய் ஒரு முடிவு.
அது நிறைவேற நான் பட்ட அவஸ்தையை எப்படிச் சொல்வது. தலைவலியும் திருகு வலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும் என்கிறார்களே அது
சரித்தான்.
முடிந்துபோன இணையவழிக்
கதை சொல்லல் நிகழ்ச்சியை வீடியோ வில் ரெண்டு
நாள் கழித்துப்போடுவது அழகிய சிங்கரின் வாடிக்கை. நாட்கள் எவ்வளவோ ஓடிவிட்டன. அவர்
போடவேயில்லை. மறந்துமிருக்கலாம். எனக்கும் கூட அதில் வருத்தமில்லை.
----------------------------------
‘
4.பாவம் அப்பா
’ சார்
சார்’ என்று வீதியில் யாரோ என்னத்தான் கூப்பிடுகிறார்கள். தோட்டத்தில்
மாமரத்துக்குக் கீழாக நின்றுகொண்டிருந்தவன் சட்டென்று தெருவுக்கு வந்தேன். கார்குடல் அருணாசல வாத்தியார்தான் நின்றுகொண்டிருந்தார்.
அவருக்குப் பக்கத்தில் என் அப்பா.
‘ பூதாமூர் ஸ்டாப்பிங்கல இறங்கின
உங்கப்பா உங்க வீட்டைத்தான் தேடியிருக்காரு எப்படியோ எங்க தெருவுக்கு வந்துட்டாரு. அதான் நானே கையோட அழச்சிண்டு வந்தேன்’
என் அப்பாதான் கையில் ஒரு மஞ்சள் பையோடு வந்திருந்தார்.
அது நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அவருடைய வயதுக்குத் தூக்க முடியாத சுமை. எப்போதும் சும்மாவே வரமாட்டார்.
தருமங்குடி வீட்டில் கிடைக்கும் தேங்காய் கருவேப்பிலை வாழைக்காய் நார்த்தங்காய் எலுமிச்சங்காய்
என்று பையில் திணித்து வைத்துக்கொண்டுதான்
என் வீட்டிற்குப்புறப்படுவார். நான் தருமங்குடி போனாலும் அப்படித்தான் என் குடும்பத்திற்குத் தேவை என்று தோன்றுவதை அவரே சேகரிப்பார். என் பையை நிரப்பி நிரப்பி வைத்துப் பேருந்து நிறுத்தம்வரை
தூக்கிக்கொண்டு நடந்தே வருவார். பேருந்து நிறுத்தத்திற்கு நடந்துதான் வரவேண்டும். அங்கு வேறு எந்த வசதியும்
கிடையாதே.
‘வாப்பா, வா எங்க போயிட்ட நீ, நம்ம தெரு
அடையாளம் உனக்கு தெரியலயா’
‘நீ இருக்குற தெருவுல ஆரம்பத்திலேயே ஒரு போஸ்ட் ஆபிசு இருக்கும்.
அந்த செகப்பு போர்டை , தபால் பெட்டியைப் பாத்துண்டுதான்
தெருவுக்குள்ளே வருவேன்.இன்னிக்கு அத எல்லாம் காணல. கொஞ்சம்
குழப்பம். அதனால அடுத்த தெரு, அடுத்ததெருன்னு பாத்துண்டே போனேன். நாலாவது தெருவுக்கே போயிட்டேன்.அங்கதான் இந்த சார் என்ன பாத்தாரு’
‘அந்த போஸ்டாபீசை
இப்பதான் எடம் மாத்தி இருக்கா. அதனாலதான்’ நான் அப்பாவுக்குச் சொன்னேன்.
உடன் அருணாசல வாத்தியார் ஆரம்பித்தார்,
‘புது மனுஷா ஒத்தர் தெருவுல வர்ரதை பாத்தேன்.
தலயில சிண்டு, இடுப்புல பஞ்ச கச்சம்
மேல அங்க வஸ்த்ரம் நெத்தில வெண்டக்காய தலை
கீழா நிக்க வச்ச மாதிரிக்கு சந்தனம்.
இந்த பெரியவர் ஒண்ணு என் ஆத்துக்கு வரணும் இல்ல உங்காத்துக்கு வரணும். நாம ரெண்டுபேர்தான்
இந்த முதுகுன்றம் நகரத்து தெற்குப் பெரியார்
நகர்ல இப்பிடி அப்பிடி
இருந்துண்டு இருக்கம். பெரியவர் ஏதோ
திண்டாடற மாதிரி தெரிஞ்சது. ‘யாரத் தேடறேள்’ னு கேட்டேன்.
’என் பையன் வீட்டைத்தேடறேன். அவன் பேர் ராமு. அவுனுக்கு டெலிபோன் ஆபிசுல வேல’ன்னார். அப்பறம் என்ன?
அது நீரேதான். ‘ பெரியவரை வாங்கோ என் பின்னாடின்னேன்’ வந்தார். கொண்டு வந்து
உங்காத்துல விட்டுட்டேன்’ அருணாசல வாத்தியார் முடித்துக்கொண்டார்.
‘வாங்கோ உக்காருங்கோ ஒரு வாய் காபி சாப்டுட்டு போலாம்’
‘இல்ல நேக்கு தலைக்குமேல வேல இருக்கு’ அவர் கிளம்பி விட்டார். நான் அப்பாவை வீட்டுக்குள்ளாக
கூட்டிப்போய் உட்காரவைத்தேன்.
’வாங்கோ மாமா’ அடுப்படியில் வேலையாய் இருந்த என் மனைவி அப்பாவை வரவேற்றாள். அப்பா தான் கொண்டு வந்த மஞ்சள்
பையை அவளிடம் கொடுத்து,’ இது எடுத்துகோ’ என்றார்.
‘இது எல்லாம் தூக்கிண்டு எதுக்கு அவஸ்தை’
‘எனக்கு இதுலதான் சந்தோஷமே’
‘உங்களுக்கு வயசு ஆகறது நீங்க ஒண்டியா பஸ் ஏறி வர்ரதே பெரிசு’
அவள் பேசி முடித்தாள்.
‘பேரக்குழந்தைகள் எங்கே’
‘ரெண்டும் டியூஷனுக்கு பூதாமூர் கோர்ட்டர்ஸ்க்கு போயிருக்கு.
வரணும். வர்ர நேரம்தான்’ மருமகள் மாமனாருக்குப்பதில் சொன்னாள்.
‘ஏய் ராமு இங்க வா’
அப்பா குரல் உயர்த்திப்பேசினார்.
‘நா தினமும் தருமங்குடில
சாமிதுரை பழைய பிரெசிடெண்ட் ஆத்துக்கு போய்
தினமலர் தமிழ் பேப்பர் படிக்கறது பழக்கம்.
உனக்குதான் தெரியுமே. சேதி ஒவ்வொண்ணா படிச்சிண்டே வந்தேன். திடீர்னு பாத்தா
டெலிபோன் ஆபிசர் வீட்டில் திருட்டுன்னு போட்டிருந்தது. நா பாட்டுக்கு
படிச்சிண்டே போறேன். உம்பேரு உன் வீடு
எல்லாம் வர்ரது. இது என்னடா விபரீதம்னு படிச்சேன். தங்க வளையல் வெள்ளி சாமான்கள் ரொக்கம் ஐயாயிரம் களவு போனதுன்னு
எழுதியிருக்கான். சம்பவத்தண்ணிக்கி ராத்திரி பத்து மணிக்குள்ள இத்தனையும் நடந்துருக்குன்னு
படிக்கும்போது பகீர்னு இருந்துது. மறு நாள் போலிஸ் நாய் வந்தது
அது ஊர சுத்தி சுத்தி போச்சின்னு பேப்பர்ல
எழுதியிருந்தா . ஆத்துக்கு வந்து உன் அம்மா கிட்ட எதுவும் பேசவேயில்லை. வாயத் தெறந்து ஒரு வார்த்த இத பத்தி யார் கிட்டயும் நான் கேட்கவுமிலை. பட்டுன்னு கெளம்பிட்டேன் இங்க வந்துட்டேன்
. ’ உங்கம்மா எங்க
திடீர்னு போறேள்னா’
’பக்கத்துல கத்தாழை
கிராமத்துல ஒரு காமன் கோவில்ல ’ தீ வைபவம் ’ நான் தானே அந்த ஊருக்கும் புரோகிதர். அத பண்ணியும்
வைக்கணும். அது முடியறதுக்கு ராத்திரி பத்து மணிகூட ஆயிடும்னு சொன்னேன்.’
‘சரி ஆகட்டும் ’ன்னா அம்மா.
தான் எடுத்து வந்த மஞ்சள் பையை மட்டும் எப்படி நிரப்பி எடுத்துவந்தாரோ அப்பா என்று
நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
’நா பொறப்டு வந்துட்டேன்.
உன்ன நேரா பாத்து விஜாரிக்கணும். என்னதான்
இங்க நடந்துதுன்னு தெரிஞ்சிண்டு போகணும்னு வந்தேன். நேக்கு மண்ட வெடிச்சுடும்
போல இருந்துது இது என்ன கொடுமைடா’
‘ அப்பா உனக்கு
இது எல்லாம் தெரிய வேண்டாம்னு இருந்தோம். நேத்துதான் உனக்கு சதாபிஷேகம் நடந்துது. திருமுதுகுன்றம் வடக்கு கோட்டை வீதி கோமுட்டி செட்டியார்
கல்யாண மண்டபத்துலதான். ஆனா பாரு ரெண்டு நாளுக்கு
மின்னாடி என்னாத்துல இந்த திருட்டு நடந்துருக்கு. நான், என்
ஆம்படையா ,என் அண்ணா, மன்னி எல்லோருமா சிதம்பரம் போய் உன் சதாபிஷேகத்துக்கு ஜவுளி
வழக்கமா போடற அதே கஸ்தூரிபாய் கடையில போட்டம். செதம்பரம் மாதிரி திருமுதுகுன்றத்துல பல தினுசுகள்
கெடைக்காது. சிதம்பரம்னா புடவைகள் பலதும் இருக்கும்னுதான் போனம். எல்லாமே
இருந்துது. மத்தியானமாதான் கெளம்பிப்
போனம். பர்சேஸ் எல்லாம் முடிச்சிண்டு அங்கயே தெற்கு சந்நிதி லட்சுமி பவன்ல டிபன முடிச்சிண்டம்.
தெற்கு வீதியிலயே இந்தியன் பாங்க்கண்ட திருமுதுகுன்றம் பஸ்ச புடிச்சம். எடமும் இருந்துது.
அண்ணா மன்னியும் தருமங்குடியில எறங்கினூட்டா. நாங்க திருமுதுகுன்றம் வந்துட்டம். வாங்கின ஜவுளிய எல்லாம் நாலு கட்டை பையில அடச்சி கொண்டுனு வந்தம். பூதாமூர்ல எறங்கி நடந்தே ஆத்துக்கு வந்தம். நம்ம ஆத்து வாசல்ல கேட்டு சும்மா சாத்தியிருந்தது.
அத திறந்துண்டு போய் முன்னால இருக்குற நாலு
படி ஏறினேன். பேண்ட் பாக்கெட்லேந்து வீட்டு
சாவிய எடுக்கறேன். வராண்டா வாசல்ல இருக்குற தள்ளு கேட்டுல பூட்டிட்டு போன திண்டுக்கல்
பூட்ட யே காணல்ல. ஆகா என் கையில சாவி இருக்கு. இது என்னடா விபரீதம்னு சொல்லிண்டே
இரும்பு கேட்ட தள்ளி விட்டுட்டு வெராண்டாவ தாண்டி போறன். நெலக்கதவு உள் பக்கமா
தாப்பா போட்டுருக்கு. போச்சிடா ஆத்துல யாரோ இருக்கா. கள்ளன் தான் இருக்கான்னு நேக்கு
தெரிஞ்சி போச்சி. இப்ப என்ன பண்றதுன்னு. தோட்டத்து பக்கமா போய் பாத்தேன். அங்கயும்
உள் பக்கமா கதவு தாப்பா போட்டபடி இருக்கு. எம் பொண்டாட்டிக்கு வெட வெடன்னு கை கால் நடுங்கிண்டு இருக்கு. நாங்க ஆத்துக்கு வந்தது, வாச கதவ தட்டினது, தோட்டக்கதவ
தட்டினது, எல்லாம் உள்ள இருக்குற திருடனுக்கு தெரிஞ்சி அவன் வெளில வர தயாராயிட்டான்.
எம் பொண்டாட்டி வாசல்ல இருந்த காலிங் பெல்லயும் நீட்டா அடிச்சிட்டா. நானும் அவளும் ஜவுளி மூடட்டையோட
வாசல்ல பக்கத்துல பக்கத்துல நிக்கறம். நிலக்கதவு
பட்டுன்னு தெறந்துது. ரெண்டு திருடனுங்க
சேப்பு ஜட்டிபோட்டுண்டு இருக்கான் கையில பிச்சுவா கத்தி. உடம்பெல்லாம் வெளக்கெண்ண தடவிண்டு
இருக்கான். மொகத்துல கருப்பு கர்சிஃப் கட்டிண்டு
இருக்கான். எங்க ரெண்டு பேரையும் பாத்து பள
பளங்கற கத்திய காமிச்சிண்டே ஓடிட்டானுக. நாங்க அப்பிடியே மரம் மாதிறி நிக்கறம்’
‘என்னடா சினிமால வர்ர மாதிரி இருக்கு. எனக்கே பயமா இருக்கேடா’
‘கேளு. கேளு. அதுக்குள்ள அக்கம் பக்கம் இருக்குறவா வந்தா.
கூட்டம் கூடிட்து. ‘ நீங்க வாசக்கதவு நாதாங்கிய இழுத்து மாட்டி
இருந்தா திருடனுங்க உங்க வீட்டுள்ளாரயே மாட்டியிருப்பானுக. போலிசுக்கு சேதி சொல்லி உடனே
வரவழிச்சம்னா திருட்டு நாயுவுள இங்கயே புடிச்சிருந்து இருக்கலாம். உட்டுட்டிங்க
நீங்க’ என்று எங்களுக்குக் குற்றப்பத்திரிக்கை
வாசித்தனர். ’
’திருடர்கள் கையில் பிச்சுவா கத்தியோடு இருக்கிறார்கள்.
சும்மா போவார்களா. ஒரு சொறுகு சொறுகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்’ நான் சொன்னேன்.
‘கொழந்தகள் ரெண்டும் என்ன பண்ணித்து அதுங்கள பத்தி ஒண்ணுமே சொல்லல
‘ ராத்திரி மணி பத்து. ரெண்டும் திண்டாடறது. அரகொற தூக்கத்துல முழிச்சிண்டு அலறிண்டு நிக்கறது’
‘அய்யோ பாவமே’ ஓங்கிக்கத்தினார் அப்பா.
‘எந்த பாவத்த பாக்கறது. என் சைக்கிள எடுத்துண்டு அந்த அர்த்த ராத்திரில டவுன் போலிஸ் ஸ்டேஷனுக்குப்
போனேன். என்ன நடந்ததோ அதச் சொன்னேன். போலிஸ் ஸ்டேஷனில் ரெண்டு போலிசுகாரர்கள் மட்டுமே இருந்தா. அவாளும்
அரைகுறை தூக்கம்தான். ஒரு போலிஸ்காரர் பெரிய மோட்டார் பைக் எடுத்துக்கொண்டு என் வீட்டுக்குப்புறப்பட்டார்.
’உங்க ‘வூடு எங்க’
என்னைக்கேட்டார்.
‘தெற்கு பெரியார் நகர் திருவள்ளுவர் வீதி மூணாவது தெரு.
மூணாவது வீடு. போஸ்டாபீசு இருந்தது மொதல் வீடு.
அடுத்து ரெண்டு மூணாவது வீடு. வீட்டு வாசல்ல ஜனம் கூடி நிக்குது.’ நான் அவருக்குப் பதில் சொன்னேன்.
‘நா பாத்துகறேன் நீங்க சைக்கிள்ள வாங்க. நா போயிகிட்டே
இருக்கன்’ என்றார் அந்த போலிஸ்காரர். அவர்
முன்பாகச் செல்ல அவர் பின்னே சைக்கிளில் தொடர்ந்து
வந்தேன். என் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்
வீட்டைச் சுற்றி வந்தார். வாயில் கதவைப் பார்த்தார்.’
திருடன் ரூம்ல நொழஞ்சிதான் வேல பாத்துருக்கான் அந்த பீரோவயும் தொறந்து இருக்கான்’
‘ஆமாம் சார்’
‘இப்ப என்ன என்ன களவு போச்சுது ’ தொடர்ந்தார்.
‘ஐயாயிரம் ரொக்கம், ரெண்டு பவுன் வளையல் கொஞ்சம் வெள்ளி
சாமான்’ என்றேன்.
‘பீரோ சாவி எங்கிருந்துது’
‘பீரோ மேலயே இருந்துது’ நான் பதில் சொன்னேன்.
‘பீரோவ பூட்டி
அந்த சாவிய மேல வச்சா என்னா அருத்தம்’
‘தொறக்க கொள்ள சவுகரியமா இருக்குமேன்னு அப்பிடி வக்கறது’
‘பேசுறது நல்லா யில்லயே. தப்பா இருக்கே. பீரோ சாவிய
நீங்க வேற எடத்துல எங்கயாவது ஒளிச்சில்ல
வக்கணும்’ கோபமாய்க்கேட்டார்.
‘வக்கிலயே சார்’
பயந்துகொண்டே சொன்னேன்.
‘வளையலு வாங்குனதுக்கு நகைக்கடை ரசீது இருக்கா’
‘அது எப்பவோ வாங்குனது. ரசீது எல்லாம் என்கிட்ட இருக்காதுங்க’
’தங்க வளையல் ரெண்டு களவு போயிடுச்சினு நீங்க சும்மா கூடம் சொல்லுலாம்ல’
‘அப்பிடி சொல்லுலாங்களா’ நான்தான் இழுத்துச் சொன்னேன்.
‘வெள்ளந்தியா பேசுறீங்க சரி நாளைக்கி காலையைல வந்து களவு போனதுக்கு கம்ப்ளெய்ண்ட் எழுதி குடுங்க. நா கெளம்புறேன். இப்பக்கி பெட்ரோலுக்கு மட்டும் ஒரு ஐம்பது ரூபா குடுங்க’ என்றார்.
என்னிடம் சட்டைப்பையில் பார்த்தேன். அஞ்சோ பத்தோதான் இருந்தது.
என் மனைவி வீட்டு வாயில் கேட் ஓரமாய் ஒரு ஐம்பது
ரூபாய் நோட்டு கீழே கிடந்தது என்று சொல்லி
அந்தத் திருடன் விட்டுப்போன பணத்தை என்னிடம்
கொடுத்திருந்தாள். அதைப் போலிசுகாரரிடம் கொடுத்தேன்.
‘திருடனுவ ஓடகுள்ள
வுட்டுட்டு போனதா’ என்றார். வாங்கிக்கொண்டார்.
மறு நாள் போலிஸ் மோப்ப நாய் கடலூரிலிருந்து
ஒரு வேனில் வந்தது. கை ரேகை நிபுணர்கள் இருவர்
கூடவே வந்தனர். ரெண்டு மணி நேரம் பீரோவைக் குடைந்தனர். கள்ளனின் கைரேகை எடுப்பதாய் ஆங்காங்கு வெள்ளைப் பவுடரை இரைத்தனர். குறிப்பேட்டில் ஏதோ சில
எழுதிக்கொண்டனர். போலிஸ் நாய் வேகம் வேகமாக
என் வீட்டிலிருந்து ஓடியது. முதுகுன்றம்
வண்ணார் குடியிருப்புக்குச் சொந்தமான ஒரு மாரியம்மன்
கோவில் வாசலில் போய் நின்றது. அதற்குப்பிறகு
திருடர்கள் நடந்து செல்லவில்லை. ஏதோ வாகனத்தில் ஏறிச்சென்றுவிட்டார்கள் என்கிற
ஒரு சேதி மட்டும் தெளிவாய்ச் சொன்னார்கள்.
நாய்க் கதை அவ்வளவே .
அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன. அவர் கண்களைத் துடைத்துக்கொண்டார்.
‘கிரகசாரம்’ என்றார்.
‘மறுநாள்தான் உனக்கு சதாபிஷேகம். கோமுட்டி செட்டியார் மண்டபத்தில். எல்லா ஏற்பாடுகளும்
செய்தாயிற்று. மேளக்காரன் சமையல்காரன் சாஸ்திரிகள் எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறோமே. பிறகென்ன ? இந்தக்
களவுபோன விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம் என்று
நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். உன் எண்பது சாந்தி விழா நன்றாகவே
நடந்தது. வைபவத்தில் எந்த குறையும்
இல்லையே. உறவினர்கள் நண்பர்கள் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரும் வந்திருந்தனர்.
களவுபோன விஷயம் வெளியில் தெரியாமல் நானும்
என் மனைவியும் எப்படியோ சமாளித்து விட்டோம். நண்பர்கள் எனக்கு கடன் கொடுத்து உதவினார்கள். பாக்கியம் செட்டியார் மளிகைக்கடை பாக்கிதான் இன்னும் அப்படியே இருக்கிறது. அவ்வளவுதான்.’
‘ரொம்ப சமத்துதான் நீங்க ரெண்டு பேரும். தினமலர்க் காரன் இந்த சேதியபோட்டிருக்கான். அத நா படிச்சேன்.
பதறிப்போனேன். ஓடி வந்தேன். எம்மனசு கேக்கலடா’ அப்பா சொன்னார்.
என் பையன்கள் இருவரும் டியூஷன் முடித்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
தாத்தா அவர்களை அன்போடு கட்டி அணைத்துக்கொண்டு பேசினார். பேச்சுத்தான் சற்றுக் குளறியது.
‘ பாட்டி எங்களுக்குனு என்ன குடுத்தனுப்பினா, தாத்தா
நீங்களும் வெறுங்கையோட வரமாட்டேளே’
பேரக்குழந்தைகள் தாத்தாவிடம் கேட்டுக்கொண்டிருக்க, அப்பா மேலும் கீழும் பார்த்து விழித்துக்கொண்டிருந்தார்.
என் மனைவி ’ பசங்களா
உங்களுக்குன்னு கருப்பட்டில மள்ளாட்ட
உருண்ட புடிச்சி பாட்டி ஒரு டப்பா நிறைய அனுப்பி இருக்கா எடுத்துகுங்கோ’ சொல்லி அந்த டப்பாவைக்கொண்டு வந்து கூடத்தின் மய்யமாய் வைத்தாள். நான் தான் இன்று மதியம் வீதியில் மணிலாகொட்டை விற்கும் கார்குடல்
ஆயா விடம் அந்த உருண்டைகளை வாங்கினேன். மனைவியிடம் கொடுத்திருந்தேன்.
‘ரொம்ப
பேஷ்’ சொல்லிய அப்பா அயர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். கண்கள் குளமாகியிருந்தன. அவரைப் பார்க்கவே பாவமாய் இருந்தது.
5.பரஸ்பரம்
கந்தசாமி என் நண்பன்தான்
என்னை மொபைலில் அழைத்தான். எப்போதாவது போனில்
தொடர்பு கொள்வான். நீண்ட நேரம் பேசுவான்.
என் பால்யகாலத்து சினேகிதன். நானும் அவனும் முதுகுன்றத்தில் டெலிபோன் இலாகாவில் ஒன்றாய் வேலை செய்தவர்கள். அவனுக்கு ஜெயங்கொண்டம் அருகே டி. பழூர் சொந்த ஊர். அந்த ஊருக்கு இனிஷியல்
டி. அது தாதம்பேட்டை,, அருகிலிருக்கும் பெரிய ஊரரைக்குறிக்கும். எனக்குச்சொந்த
ஊர் முதுகுன்றம் சிதம்பரம் செல்லும் சாலையில் இருக்கிற தருமங்குடி. இருவரும்
முதுகுன்றம் அய்யனார் கோயில் தெரு சேக்கிழார்
லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். பேச்சிலர்கள் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு எல்லாம் போய் பெரிய புராணத்து சேக்கிழார் பெயரை வைப்பார்களா
என்ன. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு அப்படித்தான்பெயர் வைத்திருந்தார்கள். முதுகுன்றம் நகரில் அனேக மாமி
மெஸ்கள் உண்டு. கல்பாத்தி மலையாள மாமி
ஒரு மெஸ் வைத்திருந்தார்கள். அந்த மெஸ்ஸில்தான் நாங்கள் ஒன்றாய்ச் சாப்பிடுவோம்.
எப்போதேனும் செம்பட்டையாய்த்தண்ணீர் இரண்டுகரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடும் மணிமுத்தாறு, ஐந்து ராஜ கோபுரங்கள், ஆழத்து விநாயகர் என அருள்பாலிக்கும் பழமலையான் திருக்கோயில், கோர்ட்டுக்கு எல்லாம் போக முடியாத சேவார்த்திகள் பிராது எழுதி சூலத்தில் கட்டினால் சிவில் கேசுகள் மட்டுமே பார்த்துப்பார்த்து நியாயம் வழங்கும் கொளஞ்சியப்பர் கோயில், அப்படியே சேவார்த்திகளின் கிரிமினல் கேசுகள் மட்டுமே விசாரணைக்கு
எடுத்துக்கொண்டு குற்ற தண்டனை வழங்கும்
வேடப்பர் கோயில் என முதுகுன்றத்தைச் சுற்றிச்
சுற்றி வருவதும் உண்டு. பேச்சிலர்கள் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு எல்லாம் போய் பெரிய புராணத்து சேக்கிழார் பெயரை வைப்பார்களா
என்ன. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு அப்படித்தான்பெயர் வைத்திருந்தார்கள்.
கந்தசாமி கணக்கில்
கெட்டிக்காரன். கையெழுத்தும் முத்து முத்தாய் இருக்கும். அப்படி இப்படி என்று எங்கு
எங்கோ பரிட்சை எழுதப்போய் வருவான். வள்ளுவம்
பொய்க்குமா என்ன. முயற்சித் திருவினை ஆக்கியது.
அவனுக்கு கனரா வங்கியில் நல்ல வேலை
கிடைத்தது. முதுகுன்றம்நகரை விட்டு திருச்சிக்குப்போனான். எப்போதேனும் என்னிடம் பேசுவான். கடிதங்கள் சில காலம் எழுதினான்.பின்
நிறுத்திக்கொண்டான். உலகம்தான் கடிதம் எழுதுவதை அறவே நிறுத்திக்கொண்டு விட்டதே.
ஆண்டுகள் ஓடின. ஆகா
இப்படி எல்லாம் காலம் தன்னை சுருக்கிக்கொண்டு ஓட்டமாய் விடும் என்று நான் எண்ணியதில்லை. அவனும் பணி ஓய்வு பெற்று சென்னையில்
ஒரு அபார்மெண்ட் வாங்கிக்கொண்டு செட்டில் ஆனான். நானும் அப்படித்தான் சென்னையில் தங்கிவிட்டேன்.. அவனுக்கு
இரண்டு பையன்கள். எனக்கும் இரண்டு பையன்கள்.
என் பெரிய பையன் கலிஃபோர்னியாவில் அவன் குடும்பத்தோடு
,சின்னவன் ராமமூர்த்திநகர் பெங்களூரில், கிழமாகிவிட்ட நானும் என்னவளும் சென்னைக்கும் பெங்களூருக்கும்
ஷண்டிங்க் அடித்தபடிக்குக் காலம் ஓடிக்கொண்டிருந்தது.
என் நண்பன் கந்தசாமிக்கு இரண்டு பிள்ளைகள் பெரியவனுக்கு
க் கல்யாணம் ஆவதற்கு முன்பாகவே சின்னவன் முந்திக்கொண்டு
விட்டான்.அவன் நல்லவன் தான் அவன் ஜாதகம் அப்படி.
அவன் தான் என்னிடம் சொன்னான். பெரிய பையனுக்கு
ரொம்பநாளாக பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் அமையவில்லை நான் என்னதான்
செய்வது என்பான். இந்தக்காலத்தில் ஆண்பிள்ளைகளில் சற்று சூட்டிகை இருந்தால்தான் கல்யாணம் கில்யாணம் எல்லாம் ஆகும்போல் இருக்கிறது. இல்லாவிட்டால்
ஒண்டிக்கட்டைதான். கடைசிவரைக்கும் அப்படித்தான்.
பார்ப்பவர்கள் எல்லாம் பாவம் என்றுதான் சொல்வார்கள்.
அவன் மொபைலில் என்னை அழைத்தான் என்கிற அந்தப்பல்லவிக்கு மீண்டும் வந்து விடுகிறேன்.
‘நா கந்தசாமி பேசறேன்’
‘சொல்லுப்பா’
‘சவுக்கியமா, எப்பிடி இருக்கே’
‘சவுக்கியம்’
‘என் பெரிய பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்’
பெரியப்பா பையனுக்குக்
கல்யாணம் வைத்திருக்கிறேன் என்றுதான் அவன் சொல்வதாய் என் காதில்
விழுகிறது.
‘நா எங்க வரப்போறன் சொல்லு. கல்யாணம் எங்கே என்றேன்’ பெரியப்பா
பிள்ளை கல்யாணத்துக்கு எல்லாம் நம்மை எதற்கு இந்த
பிஸ்து அழைக்கிறான் என் மனதில் நினைத்துக்கொண்டேன்.
‘திருச்சி ஸ்ரீரெங்கத்தில் ஏ ஆர் மண்டபத்தில்’
அவன் பெரிய பையனுக்குக் கல்யாணம் என்றாலும் போய்வரலாம். பெரியப்பா பையனுக்குக் கல்யாணம் என்று அவன் சொன்னதாய்த்தானே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
‘ மண மக்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்’
‘அப்ப நீ வரல’
‘சாரிப்பா’ முடித்துக்கொண்டேன்.
அவன் போனை வைத்துவிட்டான். நானும் அந்தக்கல்யாணத்தையே மறந்து
போனேன். ஒரு நாள் என் திருச்சி நண்பன் தாயுமானவன்
எனக்குப் போன் செய்தான்.
‘என்னப்பா எப்பிடி இருக்கே’
‘சவுக்கியம்தான் நீ எப்பிடி’
‘’கந்தசாமி பெரிய
பையனுக்குக் கல்யாணம் நடந்துது. உனக்கு ரொம்ப வேண்டியவனாச்சே. நீ குடும்பத்தோட வருவேன்னு
எதிர்பாத்தேன். ஏமாந்துதான் போனேன். நீ வரலேயே
ஏன்? என் கிட்ட அவன்
நீ கல்யாணத்துக்கு வரலேன்னு வருத்தப்பட்டு
சொன்னான்.’
‘என்னது அந்தக்
கல்யாணம் யாருக்குன்னு நீ சொல்ற’
‘கந்தசாமி பெரிய பையனுக்குத்தான்’
‘என் கிட்ட பெரியப்பா பையனுக்குக் கல்யாணம்னு சொன்னான். அதுக்கெல்லாம் நா எங்கப்பா வர்ரதுன்னு டக்குன்னு முடிச்சுனூட்டேன்’
‘சரியாபோச்சி.
சாக்ஷாத் அவன் பெரிய பையனுக்குதான்
கல்யாணம். நானும் என் வைஃபும் போயிட்டு வந்தோம்’
‘ என்னடா இது விஷயம்
இப்பிடி ஆயிபோச்சி’
‘சரி சென்னையில்தான இருக்கே அந்தக் கல்யாணத்த ஒரு நா போய் விசாரிச்சிடு’
‘சரி அப்படியே செய்யறேன்’
நான் போனை வைத்துவிட்டேன். வாட்சாப்பில் கந்தசாமியின் பெரிய
பையன் கல்யாணப்பத்திரிகையையும் தாயுமானவன் எனக்கு அனுப்பியிருக்கிறான். அதனைத் திறந்து
பார்த்தேன். கந்தசாமியின் ஜேஷ்ட குமாரன் திருமணம் என்பது உறுதியானது. எனக்கு என்னமோ
போல் ஆகி விட்டது. நண்பனின் சின்ன பையனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. அவன்
ஒரு பெண்ணைக் காதலித்தான். அவன் ஜாதகம் அப்படி. ஏழில் சுக்கிரன் உச்சம். அண்ணனுக்கு
முன்பே தம்பிக்குத் திருமணம் காதும் காதும்
வைத்த மாதிரி நடந்து முடிந்தது. அந்தத் திருமணத்திற்குக் கந்தசாமி யாரையும் அழைக்கவும் இல்லை. பெரிய பையன்
திருமணத்திற்கு இருக்கும் போது அது அடுத்தவனின்
அவசரக் கல்யாணம். கந்தசாமி என்ன செய்வான். அவனுக்கு மனசே சரியில்லை.
ஆனால் இதுவோ பெரிய
பையனின் கல்யாணம் அவனே பெண் பார்த்துக் கல்யாண
ஏற்பாடு எல்லாம் செய்து முடித்திருக்கிறான். எல்லோரையும் அழைத்து இருக்கிறான். பத்திரிகை
அடித்து எல்லோருக்கும் அனுப்பி இருக்கிறான். பெரிய மண்டபம் பார்த்து ஸ்ரீரெங்கத்தில் கல்யாணம். போகாமல்
இருந்து விட்டோமே. பெரிய தப்பு. பெரிய தப்பு என்று எனக்கு
நானே அனேகதடவை சொல்லிக்கொண்டேன்.
இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு
முன்னர் கந்தசாமிக்குக் கல்யாணம் கும்பகோணத்தில் நடந்தது. நானும் என் மனைவியோடு கல்யாணத்துக்குப்போயிருந்தேன். கா;லையில் கந்தசாமிக்குத் திருமணம். தொடர்ந்தாற்போல் அதே மண்டபத்தில் மணமக்களை வாழ்த்தி ஒரு கூட்டம்.
அந்த மைக் வைத்தகூட்டத்தில் மணமக்களை வாழ்த்திப்பேசினேன். அது இப்போதும் நினைவுக்கு வருகிறது. நண்பன்
கந்தசாமி வீட்டில் நடந்த பெரிய பையனின் கல்யாணத்திற்கு இப்படிப் போகாமல் இருந்துவிட்டோம்.
பெரிய மடத்தனம் என்று சதா மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. நேராக ஒரு நாள் கந்தசாமி
வீட்டிற்குச்சென்று அவன் பையன் கல்யாணத்தைக் கட்டாயம் விசாரித்து வரவேண்டும் என்று யோசனையில் இருந்தேன்.
நேரம்தான் சரிப்பட்டு வராமல் இருந்தது. ஏதோ தள்ளிக்கொண்டே போனது.
ஒருநாள் திடீரென்று கந்தசாமி என்னை மொபைலில் அழைத்தான்.
‘என்னப்பா எப்பிடி இருக்கே’
‘நா நல்லா இருக்கேன் உன் பையன் கல்யாணம் நல்லா ஆச்சா. திருச்சி தாயுமானவன் சொன்னாரு. அவர் கல்யாணத்துக்கு
தன் மனைவியோட நேரா வந்திருந்தாராமே’
‘ஆமாம் வந்திருந்தார். அவருக்கு உடம்பு முடியல்லதான். அவர் ஸ்ரீரெங்கத்துலயேதான இருக்காரு. கல்யாணமும்
அங்கதான. எப்படியோ சமாளிச்சிகிட்டு வந்துட்டாரு. அது சரி நீ பெங்களூர்லேந்து சென்னைக்கு எப்ப வந்த’
‘நான் இப்பதான் வந்தேன்’ சமாளித்துக்கொண்டு பொய் சொன்னேன்.
‘பெங்களூர்லேந்து நீ எங்க ஸ்ரீரெஙம் வரப்போற. அதான் நீ அப்பவே சொல்லிட்டயே’
‘ஒரு நா உன் வீட்டுக்கு
வைஃபோட வரேன் . தப்பா எடுத்துக்காத.
கல்யாணத்துக்கே நா வந்துருக்கணும்’
‘வா. எப்ப வேணுன்னாலும் வா. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்’
கந்தசாமி போனை வைத்துவிட்டான்.
பையன் கல்யாண விஷயமாய் பேசும்போது ‘ நீ எங்கே இருக்கிறாய்
என்றான்.நான் பெருங்களத்தூரில் இருக்கிறேன் என்றேன். அது அவனுக்கு நான் பெங்களூரில் இருப்பதாகக் காதில் விழுந்திருக்கிறது.
அதே மாதிரி அவன் என்
பெரிய பையனுக்குக் கல்யாணம் என்றானே அது பெரியப்பா பையனுக்குக் கல்யாணம் என்றுதான் என் காதில் விழுந்திருக்கிறது.
இவை நிற்க பெரியப்பா
குடும்பத்திற்கும் இதே கந்தசாமிதான் பொறுப்பாய்
இருந்தான் என்பது எனக்கு முன்னமேயே தெரிந்த விஷயம்.
--------------------------------------------------
6. நினைப்பும் பிழைப்பும்
அவனை தந்தையும் தாயும் ஒரு பெண் பார்க்கத்தான் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். இது மணப்பெண் கிடைப்பதே அரிதான காலம். பெண் குழந்தைகள்
ஜனிப்பதுவே அபூர்வம் என்றாகி விட்டது. பிள்ளை
வீட்டார் போன் போட்டால் பெண் வீட்டார் எடுப்பதே அரிது. அப்படியே எடுத்தாலும் பேசும்
பேச்சின் தோரணை வித்யாசமாகவே இருக்கும். பிள்ளை வீட்டார் எப்போதும் அடக்கியே வாசிக்கவேண்டும். இல்லாவிட்டால் பெண் சார்பாய்ப்
பேசுகிறவர்கள் போனை பட்டென்று வைத்துவிடுவார்கள்.மாப்பிள்ளை
வீட்டாற்கு ‘ எங்கள் வீட்டிற்குத் தாங்கள் பெண் பார்க்க வரலாம்’ என்று ஒரு செய்தி வந்துவிட்டால் போதும். அதைவிட மகிழ்ச்சியான தருணம்
வேறு என்ன இருக்கமுடியும். ஆகத்தான்
அப்பா அம்மா அவன் என்று மூவரும் பெண் பார்க்கப் புறப்பட்டார்கள்.
ஒரு நல்ல காரியத்திற்கு
மூன்று பேர் போகக்கூடாது. மூன்று பேர் போகின்ற அந்த காரியம் முட்டை என்பார்களே, ஆகத்தான்
அவன் தாயும் தந்தையும் காரிலிருந்து இறங்கி பெண் வீட்டிற்குள்ளாக முன்பாகவே சென்று விடுவது சிறிது தாமதித்து அவன் அங்கு வந்து சேர்ந்துகொள்வது என்று முடிவு செய்தார்கள். இப்படி ஒரு
திட்டத்தோடுதான் புறப்பட்டார்கள்.
‘ ஒரு காரியம்ன்னா
ஏம்பா மூன்று பேர் போகக்கூடாது. அதில் என்ன பிரச்சனை வந்து விடப்போகிறது’ பையன்
அப்பாவைக் கேட்டான்.
‘அத இப்ப நீ அவசியம்
தெரிஞ்சிகிணமா’
‘சொல்லுலாம்னா சொல்லுங்க’
‘ ராமாயணக் கதையில
அயோத்தி அரண்மனையிலேந்து ஸ்ரீராமர் வனவாசம் போனப்ப அவர் மனைவி
சீதை தம்பி லட்சுமணர்னு ரெண்டு பேரையும் சேத்துகிட்டு மொத்தம் மூணு
போரா போயி எப்பிடி எப்பிடி எல்லாம் அவஸ்தை பட்டாங்க பாத்தியா’
‘போதும் உங்க விளக்கம்
அத சொல்லறதுக்கு இதுவா நேரம், எத எப்ப சொல்றதுன்னு ஒரு யோஜனை வேணும் வயசானா மட்டும்
பத்தாது’ அவன் அம்மா குறுக்கிட்டாள்.
அவன் காரிலேயே அமர்ந்திருந்தான். பெரியவர்கள் இருவரும்
இறங்கி முன் சென்று கொண்டிருந்தார்கள். சற்று தூரத்தில்தான் இருந்தது பெண் வீடு.பெண்
வீட்டு வாசலில் நன்றாக மாக்கோலம் போட்டு வைத்திருந்தார்கள். நான்கு கோபுர கோலத்திற்கு காவி பார்டர் அழகாகக் கொடுத்திருந்தார்கள்.
கோலத்தை பார்த்ததும் மனதிற்கு ஓர் நிறைவு .
‘ தெருக் கோலத்த பாத்தாலே வீட்டு உள்ள எதுவும் என்ன லடசணத்துல போயிகிட்டு இருக்குதுன்னு புரிஞ்சிகிடலாம்’
‘வாய வச்சிகிட்டு சும்மா வரமாட்டிங்களா’
‘தப்பா என்ன சொன்னேன்’
‘போறும் அச்சு பிச்சுன்னு ’ என்றாள் அவன் தாய்.
பெரியவர்கள் இருவரும் வருவதைப்பார்த்த பெண் வீட்டார் ஆர்த்தி
தட்டோடு அவர்களை வரவேற்றார்கள். பன்னீர் சொம்பு கொண்டு தலையில் விசிறினார்கள். சந்தனம்
புஷ்பம் பாரிஸ் சாக்லைட் தட்டு எனக் காண்பிக்கப்பட்டது.
‘தம்பி பின்னாடி வர்ரான்’ அவனின் தாயார் புன்னகையோடு சொன்னாள்.
அவன் தாயும் தந்தையும் கூடத்திலுள்ள சோஃபாவில்
அமர்ந்துகொண்டனர். அவன் அவர்கள் பின்னாலேயே அங்கு வந்து சேர்ந்து கொண்டான். அவனுக்கும் ஆரத்தி எடுப்பது பன்னீர் தெளிப்பது சந்தனம் புஷ்பம் கொடுத்து வரவேற்பது எனத்தொடர்ந்தது. அவனும் வந்து
அவர்களோடு சோஃபாவில் அமர்ந்து கொண்டான். அவன்
தானே பிரதானம்.
பெண் பிள்ளை வீட்டில் பெண்ணின் தாய் தந்தை பெண்ணின் தங்கை
என மூவர் இவர்களோடு அந்த மணப்பெண்ணும் இருந்தாள். ஆக நால்வர்.
‘எல்லாரும் வரணும். ரொம்ப சந்தோஷம். எங்க பொண்ணு உங்க பையன் ப்ரொஃபைல பாத்துட்டு திருப்தியா அவுங்கள வரச்சொல்லுன்னு சொல்லிட்டா.
இதுவரைக்கும் அவ இப்பிடி சொன்னதே இல்லயே. கல்யாண சப்ஜெக்ட ஆரம்பிச்சா ஒதறி ஒதறி மட்டும்தான்
பேசுவா. ஒரு ஆச்சரியம். இந்த குரு பெயர்ச்சி
அவளுக்கு சுபத்தை குடுக்கும்னு ஜோஸ்யர் சொல்லியிருக்கார்.’
பெண்ணின் தந்தை விஷயத்தை ஆரம்பித்து வைத்தார். பெண்ணின் அம்மா மந்த்ராலயம்
ராகவேந்திர ஸ்வாமி படத்திற்கு முன்பாக குத்து விளக்கை ஏற்றிவைத்தார்.விளக்கில்
இரண்டு திரிகள் எரிந்துகொண்டிருந்தன. ஊது வத்தி
புகைந்து சன்னமான சந்தன மணத்தை ஹால் வரைக்கும் கொண்டு சேர்த்தது. பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும்
அவரவர்கள் பூர்வீகம் பற்றி பிரஸ்தாபித்து முடித்தனர். ஆனாலும்
இப்போது இரண்டு குடும்பமும் சென்னையில்தான் செட்டில் ஆகியிருக்கின்றன..
‘ பொண்ண அழச்சிண்டு வரலாம். நல்ல நேரம் முடியறதுக்குள்ளாற
அவா ரெண்டுபேரும் ஒத்தர ஒத்தர் பாத்துகட்டும்.
அது ரொம்ப முக்கியமாச்சே’ என்றார் பையனின் தந்தை.
‘கொழந்த ரெடியாயிண்டு இருக்கா வந்துடுவா’ என்றாள் பெண்ணின்
தாயார்.
ரோஸ் கலரில் நீட்டு நீட்டு
வாழைக்காய் பஜ்ஜியும், ரவா சொஜ்ஜியும்
சிறு சிறு பிளாஸ்டிக் தட்டுக்களில் கொண்டு
வந்தார்கள்.. அவைகளை சோஃபாவிற்கு முன்னாலிருந்த
டீபாயில் வைத்தார்கள்.
‘கை அலம்பிகுங்கோ
ஸ்வீட் சாப்டுங்கோ மொதல்ல. எல்லார்க்கும்
காபிய மாத்திரம் எடுத்துண்டு பொண் கொழந்த வருவா.
அவளே உங்க எல்லாருக்கும் காபியை குடுப்பா. அப்ப நீங்க எல்லாரும் பொண்ண பாத்த மாதிரி இருக்கும் பொண்ணும் உங்க எல்லாரையும் பாத்த மாதிரி இருக்கும்’ என்றார் பெண்ணின் அம்மா.
‘மாதிரி மாதிரின்னு ஏன் சொல்றேள்’ என்றாள் அவனின் தாய்.
அவர்கள் மூவரும் வாஷ் பேசினில் கையை நனைத்துக்கொண்டு, டிபன் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
நனைத்துக்கொண்டு என்பதுதான் சரி. பெண்ணின்
தாயார் வாழைக்காய் பஜ்ஜியும் ரவா சொஜ்ஜியும் இரண்டு முறை பரிமாறினார். தேங்காய் சட்னியும் சின்ன வெங்காய சாம்பாரும் ஏக அமர்க்களமாய் அமைந்து விட்டன.
பையனின் தந்தை தனது ஸ்வீட்டை எடுத்து தனது பையன் தட்டிலேயே
வைத்தார். அவனின் தாயார் அவரின் தட்டிலிருந்த ஸ்வீட்டை
ருசித்துச் சாப்பிட்டார்.’ எனக்கு சுகர்
பிரச்சன இல்லை. ஆனா ஸ்வீட்ட நா தொடல்லே. எங்காத்துக்காரிக்கி
உடம்பெல்லாம் சுகர். ஆனாலும் அவ ஸ்வீட்ட விடாம
சாப்டறா. என்ன பண்றது’ என்றார் பையனின் தந்தை.
‘சுகர் இருக்கத்தான் இருக்கும். வயத்துல பத்து மாசம் சொமந்து பெத்த புள்ளக்கி கல்யாணம் வர்ரதே என்ன பண்ணுவே.
சுவீட்ட ஒதுக்க முடியறதா’ இது அவனின் தாய்.
பளிச்சென்று ஒரு பட்டுப்புடவை. சின்ன அளவு ஜரிகை போட்டது கட்டிக்கொண்டு ஒரு வட்ட வடிவ எவர் சில்வர் தாம்பாளத்தில் பால் டிகாக்ஷன் சுகர்
என மூன்றையும் தனித்தனியே வைத்து சில டம்ப்ளர்கள்
டபராக்கள் உடன் வைத்து எடுத்து வந்த பெண் அதனை டீப்பாயில் வைத்தாள். விளக்கேற்றி வைக்கப்பட்டுள்ள ஸ்வாமி படத்திற்கு
முன்னால் பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம்
செய்து எழுந்தாள்.
‘யாருக்கு எப்பிடி காபி தரணும் சொல்லுங்கோ அப்பிடியே கலந்து தரேன்’ என்றாள் அந்தப்பெண். ஷோபனா பாபுவின் கணீர் செய்தி வாசிப்புக்குரல்.
‘நாங்க டிகாக்க்ஷனை
கலந்து எடுத்துக்கறம். நா எங்காத்துக்காரருக்கு காபிய குடுத்திடறேன். நீ மாப்பிள்ளக்கி எப்பிடி வேணும்னு
கேளு. அப்பிடியே கலந்து குடு போறும்’ என்றாள்
அவனின் தாய்.
‘நீ எப்பிடி காபி
குடிக்கறயோ அப்பிடியே எனக்கு குடு’ பெண்னிடம் சொன்னான் மாப்பிள்ளை.
அவள் தான் குடிப்பது
போலவே சாதாரணமாய் காபியைக்கலந்து ஆற்றினாள். மாப் பிள்ளையின் கையில் டபராவும் டம்ப்ளருமாகக்
கொடுத்தாள் அந்தப்பெண்.
அவன் அவள் முகம் பார்த்து காபி நிறைந்த டபரா டம்ப்ளரை வாங்கிக்கொண்டான்.
‘ ஃபிஃப்ட்டி ஃபிஃப்டி’
‘ஓகே’ அவள்.
இருவரும் காபியைப் பகிர்ந்து கோண்டார்கள்.
’இந்த காலத்துலே
நன்னா படிச்ச பசங்க கை நெறய சம்பளம் வர்ரது
அதுங்க தினுசே வேற’ என்றாள் பையனின் தாய்.
‘கொழந்தக்கி பாட்டும் வரும் நன்னா பாடுவா. காலேஜுல அவதான்
மியூசிக் காம்படிஷன்ல மெடல் வழக்கமா வாங்கறவ’
என்றாள் பெண்ணின் தாய்.
‘கொழந்த சின்னதா ஒரு பாட்டு பாடேன்’ என்றார் அவனின் தந்தை.
அந்தப்பெண் நாற்காலியில்
உட்கார்ந்து கொண் டாள்.’ வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்’
என்னும் சுப்ரமணிய பாரதியின் பாடலை எடுப்பாய்ப் பாடினாள். அந்தக்கூடமே அந்தப்பெண்ணின் இனிய குரலால் கம்பீரம்
கூட்டிக்கொண்டது. பாரதியார் பாடலின் ராகம் ஆனந்த பைரவி அவள் சாரீரத்தால் அது மெருகேறிற்று.
‘சபாஷ், ஃபஸ்ட் கிரேடு தரணும்’ என்றார் அப்பா.
‘நீ எதானு பொண்ணுண்ட தனியா பேசணுமாடா’ என்றாள் அவனுடய தாய்.
அவன் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
‘ கொழந்த நீ எதானு என் புள்ளண்ட பேசணுமா’ பென்ணைப்பார்த்துக்
கேட்டார் அவன் அப்பா. அந்தப்பெண் ணும் அமைதியாகவே இருந்தாள்.
‘எதித்தாப்புல இருக்குற ரூம்ல எடம் நன்னா இருக்கு. சவுகரியமா சேர் போட்டு வச்சிருக்கம். ரெண்டு பேரும்
போங்கோ சித்த பேசிட்டு சாவுகாசமா வாங்கோ’ என்றார் பெண்ணின் தந்தை.
‘இப்ப எல்லாம் காலம் மாறிண்டு இருக்கு அந்தக்காலமா என்ன
’ என்றார் பெண்ணின் தாய்.
பெண்ணும் பிள்ளையும் எழுந்தனர். இருவரும் அந்த அறைக்கு
உள்ளாகச் சென்றனர். அந்தப்பெண்ணே அறைக்கதவைத் தாழிட்டாள். அவன் பயந்துதான் போனான்.
‘ என்ன மொதல்ல நீங்க மன்னிக்கணும். உங்கள பொண்ணு பாக்க வாங்கோன்னு
நா சொன்னதுக்கு முக்கியமான காரணம் இருக்கு.
என் தரப்ப மொதல்ல உங்களண்ட சொல்லிடறேன். நா இந்த வீதியிலயே
ஒத்தரை ரொம்ப நாளா லவ் பண்றேன். அவருக்கு நல்ல கம்பெனியில ஒரு நல்ல உத்யோகம் இன்னிக்கி வரைக்கும் கெடக்கில. நீங்க உங்க கம்பெனில ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்ல நல்ல பொசிஷன்ல இருக்கிங்க. இதோ நா லவ் பண்ற
அந்தப் பயனோட பயோ டேட்டா. இந்தக் கவர யாருக்கும் தெரியாம உங்க பேண்ட் பாக்கெட்ல வச்சிகோங்க. நீங்கதான் அவருக்கு
ஒரு நல்ல உத்யோகம் வாங்கி தரணும். நா அதுக்கப்பறம்தான் அவர கல்யாணம்
பண்ணிக்க முடியும்.இது விஷயம் யாருக்கும் தெரியாம
உங்க மனசோட மட்டும் வச்சிக்கணும். எங்க அம்மா
அப்பாவுக்கும் இன்னும் இது எல்லாம் நா சொல்லல.
மொத்தத்தையும் என் மனசுல போட்டு மூடி வச்சிருக்கேன் வெளியில
எப்படி சொல்லறதுன்னு புழுங்கறேன். உங்கள
என் கூட பொறந்த அண்ணாவா நெனச்சிகறேன். எனக்கு
ஒரு நல்ல வழிய இந்த அண்ணாதான் காமிக்கணும்’
அவனைப்பார்த்துக் கெஞ்சினாள், கதறினாள் அந்தப்பெண்.
அவன் வாய் திறந்து பேசவேயில்லை. அவள் கொடுத்த அந்த பயோ டேட்டா கவரை வாங்கித் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள்
வைத்துக்கொண்டான்.
‘ நல்லா மொகத்த அழுத்தி துடச்சிகிங்க. அப்பறமா வெளில போகலாம்’ என்று மட்டும்
சொன்னாள் அவள். தன்னைச் சரி செய்து கொண்டாள். தாழ்ப்பாளைத் திறந்தாள். இருவரும் அறையை
விட்டு வெளியே வந்தார்கள்.
‘என்ன பேசியாச்சா. பழம்தானே’ என்றாள் அவனின் தாய்.
‘’பழமேதான்’ அவன் தாயுக்குப் பதில் சொன்னான்.
அறைக்குள் தாழ்ப்பாள்
போட்டுக்கொண்டு இருவரும் பேசியது மாத்திரம்
அவன் தந்தைக்கு நெருடலாய் இருந்தது. அந்தப்பெண்
சமையலறைக்குள் சென்று நின்றுகொண்டாள்.
பெண்ணின் தாயும் தந்தையும் ஏதுமறியாத அப்பாவிகளாய்ப் பேசினார்கள்.
‘ரெண்டு பேருக்கும் ஒத்தர ஒத்தர் புடுச்சிருக்கு இனி நாமதான்
பாக்கி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணவேண்டிருக்கு’.
‘’கரெக்டா சொன்னேள்’
என்றாள் பெண்ணின் தாய்.
‘ஒரு நல்ல நாள் பார்க்கணும். கல்யாண மண்டபத்துக்கு அட்வான்ஸ் தந்துடணும்’ பெண்ணின் தந்தை மகிழ்ச்சியோடு சொன்னார்.
‘அப்பா நாம பொறப்படலாம்’
‘ அந்த பொண் கொழந்தய கூப்பிடு. நாம சொல்லிண்டு பொறப்படலாம்’
அவனின் அப்பா அம்மாவிடம் சொன்னார்.
அடுப்பங்கரையில் நுழைந்துகொண்ட பெண் ஹாலுக்கு வந்து நின்றாள்.
‘நாங்க பொறப்படறம். நீ எங்களோட அங்க வந்து இருக்கப்போறபொண்ணு. உங்கிட்ட
சொல்லிண்டு பொறப்படறம்’ என்றார் அவனின் அப்பா.
‘சரிங்க மாமா சரிங்க அத்தை’ என்றாள் பவ்யமாய் அவள். எத்தனை அடக்கம்.
‘ நீ சொல்லிக்கோடா அவளண்ட ஏன் நிக்கற’ என்றாள் தாய்.
‘எல்லாம் ஆச்சும்மா.
நீங்க ரெண்டுபேரும் கெளம்புங்கோ. வாசல்ல ஓலோ கார் வந்து நிக்கறான். நா எப்பவோ
கார் புக் பண்ணியாச்சு’
‘அவ்வளவு என்ன அவசரம்’
‘உங்க எல்லாருக்கும் நாங்க போயிட்டு வரோம்’ அவன் பெண் வீட்டாரிடம்
சொன்னான். அந்தப்பெண் மட்டும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதைக்கவனித்த பையனின்
தாய்,
‘ பொண்ணுக்குத்தான் ரொம்ப அவசரம் போல’ என்று சொல்லி சிரித்துக்கொண்டார்.
அவன் கால் செருப்பை மாட்டிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்து
கொண்டான். அவன் தாயும் தந்தையும் காரில் பின் பக்க சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.
வண்டி புறப்பட்டது. பெண் வீட்டார் அனைவரும் கை அசைத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்.
அந்தப்பெண்ணும்தான்.
‘ஒரே ஒரு கேள்விடா. அந்தப்பொண்ணு ரூம்ல போய் உன்னோட பேசறதுக்கு
முன்னாடி படார்னு கதவ சாத்தி தாழ்ப்பா போட்டாளே அது ஏண்டா’ ஆரம்பித்தார் அவனின் தந்தை.
‘சித்த சும்மா இருக்கேளா நீங்க’
‘இல்லம்மா அப்பா சரியாத்தான் கேக்கறார். அதுல விஷயம் இருக்கு. லேசு பட்ட பொண்ணு இல்ல அவ. அவ என்னண்ட சொல்றா. ‘ நா இந்த
தெருவுலயே ஒத்தர லவ் பண்றேன்.. அவருக்கு நல்ல வேல இல்லாம இருக்கு நீங்க உங்க
கம்பெனில ஹெச் ஆர் டிபார்ட்மெண்டில் நல்ல பொசிஷன்ல இருக்கறீங்க. நீங்க ஒரு ஒத்தாசை பண்ணணும். அவருக்கு உங்க கம்பெனில ஒரு நல்ல வேல போட்டு தரணும். அதுக்கு அப்பறமா அவர நா கல்யாணம்
பண்ணிப்பேன் அண்ணான்னு’ . என்னண்ட கெஞ்சி கேட்டுண்டா
இத யாருண்டயும் சொல்லிடாதிங்கோன்னு’
‘படு பாவி கழுத்த அறுத்துட்டாளேடா அவ’ என்றாள் அவனின் தாய்.
‘ ரூம் கதவ அவ சாத்தின லட்சணத்த பாத்தே நா கண்டு புடிச்சிட்டேன்
ஏதோ பலான விஷயம் இருக்குன்னு’
‘ அந்த பையனோட பயோ டேட்டா என்னண்ட குடுத்து இருக்கா. நா என் பேண்ட் பாக்கெட்ட்ல வச்சிண்டு இருக்கேன்’
‘கிழிச்சி தூர எறிடா அத’
‘இல்லம்மா என்னயே அண்ணாவ நெனச்சிண்டு இந்த பயோ டேட்டாவ குடுத்து இருக்கா.
அவளே சொன்னதுதான்.. நா ஹெச் ஆர் ல இருக்கேன். அவன கட்டாயம் இண்டர்வியூக்கு வான்னு கூப்பிடுவேன். ஒரு நல்ல வேல போட்டு தரத்தான் போறேன்’
‘தப்புடா இது தப்பு’
என்றாள் அவனின் அம்மா.
‘தப்புதான் ஆனா நா அந்த பையன நா பாக்கணும்.
அவன் நல்லவனா இருந்தா என் கம்பெனிலஒரு
வேல போட்டும் தருவேன். அந்த பொண்ணு உண்மையை
என்ன நம்பி சொல்லியிருக்கா. அவ மறச்சி இருந்தா எனக்கு எப்பிடி தெரியும். தான்
லவ் பண்ற பையனுக்கு ஒரு வேல நல்லதா வாங்கித்தரணும். அத என் மூலமா சாதிக்கலாம்னு பாக்கறா.
அவ நல்ல பொண்ணு இல்லாம என்னம்மா’
‘நீ ஒரு பிஸ்துடா உனக்கு எப்ப கன்னிகழியறதுன்னு தெரியலயே .. ஒரு அப்பனா
இருந்து பாக்கணும் இந்த கஷ்டத்தை.. அப்பத்தான் அந்த வலி என்னன்னு தெரியும்’ சொன்ன அப்பாவைப் பார்த்தான்.அவன் தன் தாயைப்பார்த்தான்.
அம்மாவின் கண்கள் ஈரமாகியிருந்தன. அம்மா அதனைத்துடைத்துச் சரி செய்து கொண்டாள்.
‘ஒரு நல்ல வேலயே இல்ல. அவன் ஒரு பொண்ண லவ் பண்ணிண்டு இருக்கான்.
நீயும் இருக்க அசடு’
அவன் தந்தை அவனைப்பார்த்து முணு முணுத்தார்.
அது எங்கே அவன் காதில் விழுந்தது. அவர்கள் மூவரும் பெண்
பார்க்கும் படலம் முடித்து தம் இல்லம் நோக்கி
பேருந்தில் விரைந்தனர்.
-------------------------------------------------------------
7.நியாயமேயில்லை
‘ நான் உன் அப்பா பேசறேன்.’
‘அப்பாவா ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு’
‘அரித்துவார் போயிட்டு வந்தேன்’
‘ஏன் எதுக்கு அரித்துவாருக்கு போன இது என்ன புது சமாச்சாரமா இருக்கு’
‘நானும் உன் அம்மாவும் அரித்துவார், ரிசிகேஸ்னு டூர் போனோம். அரித்துவார்ல
கங்கையில குளிச்சம். . நான் தான் உன்
அம்மாவ கங்கையில தொலச்சிட்டேன். அவ கங்க தண்ணிலயே
போயிட்டா. அங்க என்ன என்ன கஷ்டம் உண்டோ எல்லாமும் பட்டேன். அம்மா
சவத்த கண்டே பிடிக்க முடியல. அங்க இருந்த ஃபயர் சர்வீஸ், அரித்துவார் போலிசுகாரங்கன்னு எவ்வளவோ முயற்சி பண்ணினாங்க முடியல்ல. அவுளுக்கு செய்யவேண்டிய ஈமச் சடங்க ஒரு அய்யர வச்சி அந்த கங்கைக்கரையிலயே சிறப்பா
செஞ்சிட்டேன். நா ஒண்டியா
ஊருக்கு திரும்பிட்டேன்’
‘என்ன ஒளர்ர அம்மாகிட்ட
போன குடு’
‘ அவதான் இல்லையே. ஹரித்துவார்ல ஓடுற கங்கையில போயாச்சு. நானும் இப்ப வீட்டுக்கு வந்து தனி மரமா கெடக்கறேன்.’
‘ஏன் என்ன நடந்துதுன்னு
சொல்லு. எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல. ஆபிஸ்ல முக்கியமா ஒரு ஃபாரின் கால் பேசிகிட்டு இருந்தேன்’ பெற்ற மகளுக்குத்
துக்கம் தொண்டையை அடைத்தது. வார்த்தைகள் எழும்ப
மறுத்தன.
‘ அவ தல்லெழுத்து அவ்வளவுதான். நம்ம ஊர்லேந்து நமக்கு தெரிஞ்சவங்க ஒரு சொகுசு பஸ்ல ரிசிகேஸ் டூர் போனாங்க. அதுல ரெண்டு சீட்டு காலி இருந்துது..
நீங்க எங்களோட வரணும்னு என்னையும் உங்க அம்மாவையும் ரொம்ப பிடிவாதமா சொல்லிட்டாங்க. உன் அம்மாவுக்கும் இப்படி டூர் போக
ஆச. எனக்கும்தான். மொதல்ல யார் நம்மள
டூர் போறோம் வாங்கன்னு கூப்பிடறா சரின்னு கெளம்பிட்டம். ரிசிகேஸ் போய் கங்கையில குளியல் ஆச்சு. அப்பறமா அரித்துவார் வந்தம். கங்கையில குளிச்சிட்டு மலை மேல மானசதேவி கோவிலுக்கு போய் சாமி கும்பிடணும். நாங்க
ரெண்டு பேரும் அரித்துவார் கங்கையில தல முழுகினம். அப்புடியே திரும்பி பாக்கறேன். அவளக்காணல. சுத்தும்
முத்தும் பாத்தன். அவ இல்லே. கங்கையில தண்ணி
விர் விர்ரென்று மனுசாளை கரண்டு மாதிரி இழுக்குது. அய்ஸ் தண்ணி இமயமலையிலேந்துல்ல தரைக்கு பாயுது. ரொம்ப ரொம்ப
ஜில்லுனு இருந்தது. ‘அய்யோ எங்கடா இவ
ஏ மாலினி மாலினின்னு’ அலறினேன். பக்கத்துல குளிச்சிகிட்டு இருந்தவங்க ‘என்ன
என்ன’ன்னு கேட்டாங்க.. என் பொண்டாட்டி கங்க
தண்ணில போயிட்டான்னு கத்தினேன்.
கங்கை கரையில நின்னுகிட்டு இருந்த போலிசு இன்னும் யார்
யாரோ ஆன்னாங்க ஊன்னாங்க அப்பிடி இப்பிடி சுத்தி
சுத்தி வந்தாங்க அவ்வளவுதான். அம்மா போனவ போனவதான்.
எங்கூட டூர் வந்தவங்க எல்லாரும் என்ன எவ்வளவோ
சமாதானம் பண்ணினாங்க. யார் சொல்லி என்ன ஆவுறது.
.’ இனிமே ஒன்னும்
பண்ண முடியாது. கங்கைக்கு ரொம்ப வேகம் இன்னிக்கு. புதுசா வர்ரவங்க இரும்பு சங்கிலிய கெட்டியா
புடிச்சிகிட்டு மட்டும்தான் குளிக்கணும். இல்லன்னா ஒரு பக்கெட் கங்க தண்ணிய
மொண்டுகிட்டு போயி அவுங்க தலையில ஊத்தி இருக்கணும். கரையில
இருக்குற அந்த படிக்கட்டு மேல மட்டும்தான்
அவுங்க உக்காந்து கிட்டு இருக்கணும். தப்பி தவறி தண்ணில கால கீல வக்கக்கூடாது. இனிமேலுக்கு
யாருதான் என்ன செய்ய. கங்க மாதான்னு தரையில் உழுந்து ஒரு நமஸ்காரம் பண்ணுங்க.
இங்க யாராவது புரோகிதர் இருப்பாரு. அவருண்ட சங்கல்ப்பம் பண்ணி பிரார்த்தன சேஞ்சிகுங்க. ஓடுற கங்கைக்கு பூ மால,
பழம்னு ஒரு கூடையில வச்சி கற்பூரத்த
ஏத்திவச்சிடுங்க. இப்புறம் போயிகிட்டே இருங்கன்னு
கூட இருந்தவங்க சொல்லீட்டாங்க. நா அப்படியே
ஒரு புரோகிதர அங்க இங்கன்னு தேடி அவரண்ட நடந்து போனதஎல்லாம் விவரமா சொன்னேன். அங்க அய்யிருவுளுக்கு எல்லா பாஷையும் தெரியுது. ’ இந்த மாதிரி எவ்வளவோ
பேரு கங்கையில உழுந்து கைலாயம் சேந்துருக்காங்க. எல்லாருக்கும் இந்த கொடுப்பன
கெடச்சிடாது. உங்க சம்சாரத்துக்கு கெடச்சிருக்கு. அவுங்கள
அந்த கங்காதேவியேதான் அழச்சிகிட்டு
போயிட்டா அவுங்களுக்கு இனி மறு பிறவியே கெடயாதுன்னு’ சொன்னாரு. அவர் என்ன எல்லாம்
சடங்குன்னு என்னை செய்யச்சொன்னாரோ அத
அப்படியே செஞ்சன்.’ எதுக்கும் இங்க போலிஸ்
அவுட் போஸ்ட் இருக்கு அவாளண்ட நடந்த
சமாசாரத்த கம்ப்ளெயிண்டா எழுதி குடுத்துட்டு ஊருக்கு போங்கோன்னு’ சொன்னார். ஸ்டேஷனுக்கும் அந்த
அய்யரு என் கூடயே வந்தாரு. அதே மாதிரி அந்தப் போலிஸ் ஸ்டேஷன கண்டு பிடிச்சு போனம். நடந்த
விவரம் முழுசா சொல்லி ஒரு கம்ப்ளெயிண்டு எழுதி குடுத்தேன். ஊருக்குத் திரும்பி வந்தேன்.’ ஏதோ பள்ளிக்கூட மாணவன்
வீட்டுப் பாடம் ஒப்பிப்பது போல் சொல்லிமுடித்தார் தந்தை.
மகள் திருமணமாகி
பெங்களூர் சென்றிருந்தாள். ஒரு மூன்று மாதங்கள்
மட்டுமே ஆகியிருந்தது. மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் மென்பொருள் துறையில் பணி.
‘இப்ப நா என்ன செய்யணும் சொல்லுப்பா இது எல்லாம்
என்ன பாவமோ என்ன கொடுமையோ’
‘இதுல நீ என்ன செய்ய இருக்கு. அம்மாவ
மனசுல நெனச்சிகோ, தலைக்கு ஒரு சொம்பு
தண்ணி ஊத்தி குளி. காக்காயுக்கு ஒரு
பிடி சோறு போடு. காக்காயிங்க அங்க இருக்குதா. அது தெரியல. எதுக்கும்
நாலு ஏழைங்களுக்கு ஒரு வேள சாப்பாடு
வாங்கி குடு. வேற என்ன செய்வ’
‘அவுருக்கு சேதி சொல்லனூம்’
‘ஆமாம் மாப்பிள்ளக்கி
சொல்லணும். அவுருக்கு மாமியார் ஆச்சே’
‘அம்மா சவத்துக்கு
கடசியா ஒரு சொம்பு தண்ணி ஊத்தக்கூட
எனக்கு கொடுப்பன இல்லாம போச்சே’ மகள் ஓங்கி அழுதாள். நீட்டமாய் ஒப்பாரிவைக்க
ஆரம்பித்தாள்.
’ ஆபிஸ் வேல பாக்குற.
யாபகத்துல வை. தகிர்யமா இரு நீ. மனச உட்டுடாதே. இங்க நீ கெளம்பியும்
வரவேணாம் நானே உன்ன பாக்க வர்ரேன். கொஞ்சம் பொறுத்துக்க என்ன’
தன் மகளோடு பேசி போனை வைத்தார் தந்தை.
அவர் மகளிடம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் அசல் பொய். அப்படி
எதுவும் நிகழவேயில்லை. பின் என்னதான்
நடந்தது . தந்தை மகளிடம் ஏன் அப்படிச்சொன்னார்.
ஒன்றில்லாமல் ஒன்றில்லை. உங்களுக்கு மட்டும் அந்த விஷயத்தைச்
சொல்லிவிடுகிறேன்
அவரின் மனைவி
இப்போது அவரோடு இல்லை. அவர் வீட்டுக்குப் பத்தாண்டுகளாய்ப் பால் போட்ட
எக்செல் வண்டிப் பால்காரனோடு ஓடிப்போய்விட்டாள். பால்காரனுக்கும் அவரின் மனைவிக்கும்
அந்தக் கள்ள உறவு எத்தனை ஆண்டுகளாய் இருந்ததுவோ.
ஒருநாள் இப்படித்தான்
அது நடந்தது. அன்று
அதிகாலை. அவருக்குத் தூக்கம் கலைந்தது.
படுக்கையை விட்டு எழுந்தார்.அகஸ்மாத்தாக வாயில் கதவருகே நடந்து வந்தார். பால்காரனும் அவர் மனைவியும் கச
முச என்று ஏதோ பேசிக்கொண்டு நெருக்கமாய் இருந்தார்கள்.
எத்தனை மணிக்கு இந்த பால்காரன் வந்தோனோ. என்ன
என்னவெல்லாம் அரங்கேறியதோ. கடவுளுக்குத்தான்தெரியும். ஒன்றுமே அறியாதவர் போல் சில நிமிடங்கள் அங்கேயே
நின்றார். ஒரு வார்த்தை பேசவும் இல்லை.
திரும்ப வந்து பாயில் படுத்துக்கொண்டார்.
மகளுக்கு அருகிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வேலை.எழுத்தர்
வேலைதான். கல்லூரி ஹாஸ்டல் கேண்டீனில் காலையும்
மதியமும் சாப்பிட்டு விடுவாள். இரவு உணவு மட்டுமே வீட்டில் அவளுக்கு. சீவி முடித்து
சிங்காரித்துக்கொண்டு அவள் கல்லூரிக்குக்கிளம்பினாள். அதுவரை அவர் எப்போதும் போல்தான்
இருந்தார். மகள் அவர்கள்
வசிக்கும் தெரு தாண்டியிருக்கலாம். வாயிற்கதவைத் தாழ் போட்டர். அவர் தன் மனைவி
மாலினியை அழைத்தார். அவளும் அவர் அருகே வந்து நின்றார். ஏதுமே அறியாதவளாய் அவள் தன்
முகத்தை வைத்துக்கொண்டாள்.
‘இது என்ன சேதி’
‘எது என்ன சேதி’ அவள் திரும்பக்கேட்டாள்
‘பால்காரனுக்கும் உனக்கும்தான் கேட்கிறேன்’
‘’என்ன பார்த்தீர்கள்’
’அத்தனைக்கேவலம். . குடும்பப்பெண்ணாக இருக்கவேண்டாமா. உனக்குக்
கல்யாண வயதில் பெண் இருக்கிறாள்’
‘அதனாலென்ன’
‘இது சரியா முறையா தருமமா நான் கேட்கிறேன்’
‘இல்லைதான்.’
‘பிறகு’
‘எனக்கு அவனைப்பிடித்து இருக்கிறது அவ்வளவுதான்’
‘பிடித்தால்’
‘ ஒருவரைப் பிடித்துவிட்டால் என்னவோ அதுதான்’
‘ஒருவரைப்பிடிப்பதும் அவரோடு இருப்பதும் ஒன்றா’
‘எனக்கு ஒன்று’
‘எவ்வளவு நாட்களாக இது’
‘அது எதற்கு உங்களுக்கு’
‘நமக்கு கல்யாணத்துக்கு ஒரு பெண் இருக்கிறாள் மீண்டும் சொல்கிறேன்’
‘அதனாலென்ன’
‘பால்காரனோடு பழகுவது
உனக்குப்பிடித்து இருக்கிறது’
‘ஆமாம் பிடித்துத்தான் இருக்கிறது’
‘நாம் இருவரும் மணம் செய்துகொண்ட கணவன் மனைவி, ஞாபகம் இருக்கிறதா. கழுத்தில் நான்
கட்டிய தாலி இருக்கிறதுதானே. தன் மானத்தைத் துறந்து கேட்கிறேன். பீயைத்தின்னோம் வாயைக்கழுவினோம்
என்று இருக்கமுடியாதா’
‘அது எல்லாம் முடிந்த கதை.’
’உன்னோடு இனி பேசிப்பயனில்லை. உன் தலை எழுத்து அவ்வளவுதான்.
நான் எப்படியோ கிடந்து அழிந்து போகிறேன். உன் மகள் கதி என்னாவது’
‘நீங்கள்தான் சொல்லவேண்டும்’
‘இனி அந்த பால்காரன்
தான் உனக்கு எல்லாமா’
‘அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே’
அவர் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்திருந்தார். கண்கள்
குளமாகியிருந்தன. இனிப் பேச எதுவும் இல்லை. திரிந்த பாலும் உடைந்த கண்ணாடியும் எதற்கும்
ஆகாது. எப்படியோ கொஞ்சம் மனதைத்தேற்றிக் கொண்டார்.
அது அத்தனை சிரமமாக இருந்தது. இப்படி எல்லாம்
அவர் மனைவியோடு ஒருநாள் சம்பாஷிப்பார்
எனக் கற்பனை கூட செய்ததில்லையே. யாரிடம் போய் இந்தக்கேவலத்தைச்சொல்வது. அந்தக் கடவுளிடம் மட்டுமே சொல்லக்கூடிய விஷயமல்லவா இது.
‘நான் உனக்கு எந்த துரோகமும் செய்யவில்லையே. என் மனதால் கூட அப்படி நினைத்தது இல்லையே’
‘நீங்கள் சொல்வது சரிதான்’
‘ தெரிந்தே தவறு செய்கிறாய்’
அவள் எதுவும் பேசவில்லை. முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. வருத்தம் எதுவுமே
வெளிப்படவில்லை. அவள் சர்வ சாதாரணமாய் இருந்தாள்.
அவர் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டார். ‘ நம் பெண்ணுக்கு ஒரு வரன் பார்த்து இருக்கிறேன்.
அவர்கள் சரி என்று சொல்லிவிட்டார்கள்’
‘எனக்குத்தெரியும்தான்’
‘மகளுக்குத் திருமணம் முடியும் வரை. நீ பொறுமை காப்பாயா’ அவளிடம்
கெஞ்சிப்பேசினார்.
‘மூன்று மாதங்கள் அவகாசம் தருகிறேன். மகள் திருமணம் முடியட்டும்.
பிறகு நான் உன்னைவிட்டுப் புறப்பட்டுவிடுவேன்’
மரியாதை இறங்கிக் கொண்டது.
‘அதற்குள்ளாக நான்
மகள் திருமணம் முடித்துவிடுவேன்’
‘நான் இங்கிருந்து பயணப்படும் நாள்வரை நடந்துபோன இந்த விஷயம் யாருக்கும் தெரியவே கூடாது.
உன் மகளுக்கும் நீ சொல்லக்கூடாது. எந்தச் சிறு
கலவரமும் நிகழக்கூடாது. உன்னோடு மணமேடையில் அமர்ந்து உன் மகளுக்குத் திருமணம் செய்து
கொடுப்பேன். மணமக்கள் ஊருக்குக் கிளம்பிய
பின் நான் என் பால்காரனோடு போய்விடுவேன். அதற்கு உனக்குச் சம்மதமா’
அவருக்கு நெஞ்சில் இடி இறங்கிக்கொண்டிருந்தது. ‘இப்படி
எல்லாம் கூடவா நிகழும். மனிதர்கள் இப்படியும் கூட மாறிவிடுவார்களா’ வினாக்கள் அவரைத்
துளைத்துக்கொண்டே இருந்தன. கூடத்தில் மாட்டியிருந்த திருச்செந்தூர் முருகன் படத்தைப் பார்த்துக்கொண்டார். முருகனின் புன்னகையில் மாற்றம் எதுவும் இல்லை.
‘சரி’ என்றார்
மெதுவாக.
‘சத்தியம் செய்து கொடு’
அக்கினி சாட்சியாக நிகழ்ந்துமுடிந்த திருமணப் பந்தமே கேலிக்கூத்தாகி
நிற்கிறது. அவர் அவளுக்கு கை மேல் அடித்தார்.’ அப்படியே செய்கிறேன்’, சத்தியம் செய்து கொடுத்தார்.
‘நாம் கணவன் மனைவியாக மகளுக்குப் பெற்றோராக மூன்று மாதங்கள்
தொடருவோம். அதற்குள் மகள் திருமணம் முடியவேண்டும். அதுவரை எல்லா நிகழ்ச்சிகளிலும் நானும் உங்களோடு ஒத்துழைக்கிறேன்’
அவளும் அவருக்கு கை மேல் அடித்து
சத்தியம் செய்தாள். சற்று மரியாதையாய்ப்
பேசினாள்.
அவர் அந்த பெங்களூரில் பார்த்த
வரனுக்கே தன் பெண்ணைத்திருமணம் செய்து
கொடுத்தார். அவர் மனைவியும் தான் சொன்னபடி அவருக்குக் கச்சிதமாக நடந்துகொண்டாள். பெற்ற மகளுக்குத்திருமணம் சிறப்பாய்
முடிகிறது. தம்பதியர் பெங்களூருவுக்குப் புதுக் காரில் புறப்படுகின்றனர்.
மறு நாளே அவர் மனைவி அவருக்கு நிரந்தரமாய் ஒரு ’ டாட்டா’
சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். அவள் எங்கு போனாளோ யாருக்குத்தெரியும். அவருக்கு
இனி அவள் நிரந்தரமாய் இல்லை. அவளோடு வாழ்ந்து முடித்த வாழ்க்கைக்காக உள்ளூரில் ஓடும் மஹிமாலையன் ஆற்றில் அவர் ஒரு முழுக்குப் போட்டு முடித்தார். அந்தப் பால்காரன்
என்ன செய்தான் ஏது செய்தான் என்பது நமக்குத்
தேவையே இல்லை. இயற்கைத்தாய் அவளை வீழ்த்தி
விட்டது மட்டுமே உண்மை.
---------------------------------------
8. நம் நிழல் நம்மோடு
எங்கள் குடும்பம் அப்போதும் அதே தருமங்குடியில்தான்
இருந்தது. அக்காக்கள் இருவர் மணம் முடித்து அவரவர்கள் கணவன் வீடு சென்றாயிற்று.எப்போதேனும்
பிறந்தகம் என்று எட்டிப் பார்க்க வருவார்கள் மற்றபடி அவர்களிடமிருந்து கடிதம் மாதத்தில் ஒன்றோ இரண்டோ வரும். சின்ன அக்கா திருமணத்திற்கு இன்னும் காத்துக்கொண்டிருந்தாள்.
அம்மா அன்றாடம் தபால்காரனைப் பார்த்துவிட்டுத்தான்
ஸ்நானத்திற்குப்போவாள். அப்படி அம்மா செய்வதில் ஒரு சூட்சுமம் அடங்கியிருந்தது. எங்கிருந்தேனும்
சாவுக்கடிதம் நம் வீட்டுக்கு வந்தும் விடலாம். அம்மாதான் இப்படிச் சொன்னாள்’ போதுமே இப்பூலோக வாழ்க்கை’ என்று விடை பெற்றுப் போன அந்த
உயிருக்கும் சேர்த்து அன்றைக்கே ஒரு முழுக்குப் போட வசதியாயிருக்குமே. சில சமயங்களில் தந்தி கூட சாதா தபாலோடு சேர்ந்தே வருவதுண்டு. தந்தி வருகிறது என்றால் சாவுத்தந்திதான்
வேறு எந்தச் செய்தியும் தந்தி என்கிற பெயர்
வைத்துக்கொண்டு வீட்டுக்கு வராது. தந்தி என்று சொன்னால் இன்று யாருக்கும் ஏதேனும் விளங்குமா
என்ன? சரி சரி, கதைக்கு வந்துவிடுவோம். ஆகத்
தபால் காரனை அன்றன்று பார்த்துக்கொள்வாள் அம்மா.
நித்யபடி சமையல் வேலையைத் தன் சவுகரியப்படி
தொடருவாள்.
அம்மா கர்நாடக
சங்கீதம் நன்றாகப்பாடுவாள். அம்மாவின் அப்பா குடும்பம் ஒரு காலத்தில் சிதம்பரம் நகரில் இருந்தது. குருவையன் அக்கிரகாரத்தெருவில்தான் தாத்தா பாட்டியின்
ஜாகை. அம்மா சின்ன பாப்பாவாய் அங்கு கற்றுக்கொண்டதுதான்
துளி சங்கீதம். அதுவும் முழுமையாகக் கற்றுக்கொள்ள விதி எங்கே அம்மாவை விட்டது. அந்த
அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு முகத்தில் ஒரு
நாள் பரு ஒன்று வந்ததாம். அதைத் தெரிந்தோ தெரியாமலோ பாட்டி கிள்ளி விட்டாளாம். அதனால் வந்தது ஒரு விஷ
ஜுரம். அந்த ஜுரம்தான் பாட்டியைக்கொண்டு சென்றதாம் அம்மா சொன்ன செய்திதான். அப்பா வழி தாத்தா பாட்டியையும் கூடத்தான்
நாங்கள் பார்த்ததில்லை. குடும்பத்துப் பெரியவர்கள்
எல்லோருக்கும் என்னதான் அப்படி ஒரு அவசரமோ, போய்ச்சேர்ந்தார்கள்.
ஒரு பெண் குழந்தைக்குப் பெற்ற தாய்
போய்விட்டால் அவ்வளவுதான். ஒரு கை முறிந்து விட்டமாதிரியே எஞ்சிய வாழ்க்கை அனுபவமாகும். அந்தப்பெரிய ஊருக்குப் பாட்டி போய்ச்சேர்ந்தாள். அம்மாவுக்குச் சங்கீதம் பயில்வது இற்றுக்கொண்டது.
திருமணமாகித் தருமங்குடிக்கு வந்திருக்கிறாள். எங்களுக்குத்தெரிந்த நாளாய் நாங்கள்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே.
தினம் மதிய வேளையில் கம்பீரமாய்ப் பாட்டுப் பாடுவாள். எல்லாம் கீர்த்தனைப்பாட்டுக்கள்
தாம். தெலுங்கு கீர்த்தனைகள்தான் அதிகம். எனக்கும்
கூடப் பாட்டு சொல்லிக்கொடுத்தாள். நானும்
பாடினேன், பாடித்தான் பார்த்தேன். என்
குரலில் அத்தனை சவுந்தர்யம் இல்லை. ஆக நான்
பாடுவது நின்று போனது.
கல்யாணத்திற்கு
வீட்டில் இருந்த சின்னக்காவுக்கு கேபிஎஸ் அம்மாவின் குரல். ’ நினைத்தபோது
நீ வரவேண்டும்! நீல எழில் மயில் மேல் அமர்
வேலா! என்று உச்ச ஸ்தாயியில் சின்ன அக்கா பாடுவதைத்
தருமங்குடி ஊரே கேட்டு சபாஷ் சொல்லும். தியாகராஜ கீரத்தனைகள் அம்மாவுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த அக்காவுக்கும்
அத்துப்படி. முத்துசுவாமி தீட்சிதரின் ‘பஞ்சாக்ஷ பீட ரூபினி மாம்பாஹி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி’
போன்று சில உருப்படிகளைச் சின்னக்கா அம்மாவிடம் கற்றுக்கொண்டாள்.
இருவரும் அவ்வப்போது சேர்ந்து பாடுவார்கள். உறவினர்களின் திருமணத்தில் காசியாத்திரையின்
போது அருணாச்சலக்கவியின் ‘ராமனுக்கு மன்னன்
முடி தரித்தாலே நன்மையுண்டு ஒருக்காலே’ சக்கை போடு போட்டு பார்த்திருக்கிறேன்.’தருமங்குடி மாமி வந்துருக்கா
அவாள பாடச்சொல்லுங்கோளேன்’ இப்படி
பந்துக்கள் எல்லோரும் சொல்வார்கள்.
அம்மா அப்பாவிடம் சொன்னாள். எத்தனை நாட்களாக இந்த யோசனை
அம்மாவின் மனத்தில் கருக்கொண்டிருந்ததோ தெரியவில்லை.
‘திருவையாறு தியாகய்யர்வாள் ஆராதன உற்சவம் வர்ரது. பஞ்ச ரத்ன கீர்த்தன எல்லாரும் கோஷ்டியா பாடுவா. எம் எஸ் அம்மாலேந்து
எல்லாரும் வருவா. நா எப்பவோ திருவையாறு உற்சவத்துக்கு போயிருக்கேன்.
இப்ப எல்லாம் திருவையாறு போறது சாத்தியம் இல்லே. நாம ஆத்துல உக்காந்துண்டே ரேடியோ வச்சிண்டா அந்த காவேரிக்கரயில
ஆராதனைக்காராள் பாடற பாட்ட கேக்கலாம். அங்கேந்து அத ரேடியோல
ஒலி பரப்பு செய்யறாளாமே’
‘ஆமாம். அது ரேடியோ இருந்தா கேக்கலாம். மொதல்ல நம்மாத்துல கரண்டு ஏது. கரண்டு இருந்தான்னா ரேடியோ.
அதுவும் ரேடியோ எல்லாம் நம்மால வாங்கத்தான்
முடியுமா என்ன’
இப்படி சம்பாஷணை நடந்துகொண்டிருந்தபோதுதான் வடலூரிருந்து
கோபால் சித்தப்பா பங்கஜம் சித்தி இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
‘என்ன சம்பாஷணை
அக்கா இங்க மும்முரமா போயிண்டுருக்கு’
என்றாள் சித்தி.
‘டீ பங்கஜம் திருவையாறு உற்சவ வர்ரதே. அங்க தியாக பிரம்மம் தியாகராஜர் ஆராதனை நடக்கும் புஷ்ய பகுள பஞ்சமி அன்னைக்கு பஞ்ச ரத்ன கீர்த்தன எல்லாம் பிரமாதமா பாடுவா. நாம
ஒரு ரேடியோ வாங்கினா காதாலே கேக்கலாமேன்னு அவர் கிட்ட சொல்லிண்டு
இருந்தேன்.’
’அத்திம்பேர் என்ன
சொன்னார்’
‘சட்டில இருந்தான்னா ஆப்பையில வர்ரத்துக்கு. நம்மாத்துல ஆத்துல கரண்டு எங்க இருக்கு. சிமிழி
காடா வெளக்கு அரிக்கேன் லாந்தர் பெட்ரூம் லைட்டுன்னுதான
காலட்சேபம் ஓடிண்டு இருக்குன்னார்’
‘அதுவும் சரிதான்’ என்றாள் பங்கஜம் சித்தி.
சித்தப்பா குறுக்கிட்டார். ‘ஏனாம் இப்ப டிரான்சிஸ்டர்னு ஒன்னு புதுசா
வந்துருக்கே. கரண்டே வேண்டாம். நாலு பேட்ரி செல்லு வாங்கி அதுக்குள்ளே போட்டுட்டா, ஆறுமாசம் கூட அது பாட்டுக்கு பாடிண்டு
இருக்குமே’
‘ஆமாம் நானும் அதச்சொல்ல மறந்து போனேன்’ என்று ஆமோதித்தாள்
சித்தி.
‘தோ பாருங்கோ, ஒரு முந்நூறு ரூவா ரெடி பண்னுங்கோ டிரான்சிஸ்டர்
ஆத்துக்கு வந்துடும், பாட்டு கேக்கலாம். நியூஸ் கேக்கலாம். எல்லாம் கேக்கலாம். பெரிய
பரிய பாட்டுக்காரா பாடற கச்சேரி கேக்கலாம் எவ்வளவோ விஷயங்கள் அதுல இருக்கு. டிரான்சிஸ்டர்னா சும்மா இல்ல. ஒன்னு வாங்கிடாலாமா’
‘எப்பிடி வாங்குவ நீ மெட்ராஸ் போயி வாங்கிண்டு வருவியா’
என்றார் அப்பா.
‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஒரு லெட்டர் எழுதி போட்டா போறும்.
டில்லி விலாசம் என்னண்ட இருக்கு. அதுக்கு டில்லி செட்டுன்னு பேரு. அங்கேந்து விபிபில அனுப்புவான்.
நாம பணத்த தபால் காரன் கிட்ட கொடுத்துட்டு அந்தப் பார்சல வாங்கிகணும்’
‘அந்த செட் பாடல்லேன்னா
என்ன பண்ணுவே’
‘பாடும். வடலூர்ல
நாலு மனுஷா வாங்கி இருக்கா. இப்பவும் பாடிண்டு
இருக்கு’
‘பார்சல் உள்ள எதான குப்பய வச்சி பதவிசா
கட்டி ஒட்டி அனுப்பிச்சிட்டான்னா நாம
என்ன பண்றது’
‘அப்பிடி எல்லாம் ஆகாது’
‘நா கேள்வி பட்டேன்
இந்த சேதி.’
‘எந்த சேதி அதச் சொல்லுங்கோ’
‘மூட்ட பூச்சின்னு ஒண்ணு வந்து ஒலகமே அமக்களப்பட்டது தெரியுமோ.’ ஊர் ஊர்’ னு முடியற ஒரு
நூறு ஊர் பேர பேப்பர்ல எழுதி மூணு பேருக்கு அத தனித்தனியா தபால்ல
அனுப்பிச்சிட்டா டாண்ணு அது மொத்தமாவே காணாம போயிடும், இல்லேன்னா ஆத்து
நெலப்படில ‘மூட்டைப்பூச்சி அத்துப்போச்சி’
ன்னு சுண்ணாம்பால எழுதி வைக்கணும்,
அதுவே போறும் அத்தனையும் அத்துப்போயிடும்னு எல்லாரும் சேந்து சொல்லிண்டு திரிஞ்சமே, அதோட இன்னொண்ணும்
நான் கேழ்விப்பட்டேன். மூட்டைபூச்சிய ஒழிக்கறதுக்கு மெஷின் ஒண்ணு புதுசா இருக்குன்னு டில்லிலேந்து விளம்பரம் வந்துதாம். அத உடனே எனக்கு
அனுப்பி வைன்னு கடுதாசி எழுதி போட்டானாம்
பிரகஸ்பதி ஒத்தன். நீ இப்ப
சொன்ன மாதிரிக்கு அவன் விலாசத்துக்கு ஒரு விபிபி பார்சல்ல
வந்துதாம் . எவ்வளவோ ரூவாய தபால்காரன்கிட்ட
கொடுத்துட்டு அந்த பார்சல வாங்கி பிரிச்சி
பாத்தானாம். அதுக்குள்ளே ஒரு வட்டமா
ஒரு கல்லும் சின்ன சுத்தியும் இருந்துதாம். மொதல்ல மூட்ட பூச்சிய புடிச்சி அந்த கல்லுக்கு மய்யாமா
வச்சிடணும். அந்த சுத்தியல் இருக்கே அதால ஒரு தட்டு தட்டினா மூட்ட பூச்சி காலியாயிடும். இது செய்முறை
விளக்கம்னு ஒரு சீட்டுல எழுதி அனுப்பியிருந்தானாம்’
இப்படி எல்லாம் எவ்வளவோ ஏமாத்தல் சங்கதிகள் கேள்விப்படறமே.’ அப்பா சொல்லிக்கொண்டு
சற்று சிரிக்கவும் செய்தார்.
இருவரும் இப்படியாய்ப் பேசிக்கொள்வதை
வீட்டில் உள்ள எல்லோருக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
’அது எல்லாம் பாட்டி
கதன்னா’ .
‘நா யோஜன பண்ணிட்டு
உனக்கு எதுவா இருந்தாலும் சொல்லி அனுப்பறேன்’
அப்பா முடித்துக்கொண்டார்.
அம்மா குறுக்கிட்டாள்.’ அந்த புஷ்ய பகுள பஞ்சமி இண்ணைக்கு பதினைஞ்சா நாள் வர்ரது. இன்னும் பதினஞ்சே
நாள்தான் இருக்கு, அதுக்குள்ள டிரான்சிஸ்டரோ இல்ல அது என்னமோ
ஒண்ணு ஆத்துக்கு வரணும்’
அப்பா பதில் எதுவும் பேசாமல் இருந்தார்.
சின்னக்கா அப்பாவிடம்
திடீரென்று பவ்யமாய்ப் பேசினாள்,’ எண்ணைக்கு
இருந்தாலும் நா வேற ஒரு ஆத்துக்கு போறவதான். இருந்தாலும்
அந்த ரேடியோவ நம்மாத்துல வச்சி அதுல
நாலு கச்சேரி பாட்ட என்
காதால கேக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா’
அப்பா சின்னக்காவைப் பார்த்துக்கொண்டார். அப்பாவுக்கு மனம்
இறங்கிக்கொண்டு விட்டது என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. ’ ஒரு தகப்பனுக்கு பெத்த பொண்ணவிட
வேற என்ன பெரிசு வேண்டிருக்கு’ அதுவும்
சரித்தான்’ அப்பா முணுமுணுத்தார்.
‘நீ டில்லிக்காரனுக்கு லெட்டெர் போட்டுடு. அத இண்ணைக்கே போட்டுடு. நா காசு ஏற்பாடு பண்றேன்’
சித்தப்பாவிடம் அப்பா சொன்னார். அப்பா லேசில் ஒரு காரியத்தை ஒப்புக்கொள்ளவே மாட்டார்.
ஆனால் ஒப்புக்கொண்டு விட்டால் அதனை நடத்தி முடிக்காமல் விடவும் மாட்டார்.
நான் சின்னக்காவைப்பார்த்துக்கொண்டேன். அவள் ஜாடையாய் அம்மாவைப்பார்த்தாள்.
அவ்வளவுதான். சித்தப்பா சித்தி இருவரும் காபி
டிபன் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினர்.
‘ஏதோ அக்காவ பாக்கணும்னா, நா அவள கூட்டிண்டு வந்தேன். வந்தாச்சு அக்காவை பாத்தாச்சு
கெளம்ப வேண்டியதுதான்’
‘அத்திம்பேர எல்லாம் யாரு பாக்க வரா’ அப்பா சொல்லிக்கொண்டார்.
சித்தப்பாவும்
சிரித்துக்கொண்டார். சித்தப்பாவும் சித்தியும் ஊருக்குக்கிளம்பினார்கள். அப்பா
முந்நூறு ரூபாயுக்கு என்ன செய்வது என்ற யோஜனையில் தீவிரமானார். மேல வெளியில் எங்களுக்குச்சொந்தமாய்
கால் காணி நஞ்செய் நிலம் இருந்தது. அதனைக் குத்தகைக்குப் பயிரிடுபவர் சுருட்டு ஆறுமுகக் கோனார். யார்தான் எதிர்பார்த்தார்கள் அவர் நான்கு மூட்டை நெல்லை ஒரு கட்டை வண்டியில் ஏற்றிக்கொண்டு அப்போதுதான் வீட்டு ஆளோடியில் வந்து நிறுத்தினார். அப்பா ஒரு மூட்டையை
அவிழ்க்கச்சொன்னார். ஒரு பிடி நெல்லை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார். அந்த அவிழ்த்த நெல் மூட்டையைக் கோனார் திரும்பவும் நன்கு
கட்டி வைத்தார்.
‘கோனாரே ஒரு சேதி இந்த நெல்ல காசாக்கி புடணும்’
‘சாமி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே’
‘பகவான் ஒத்தன்
இருக்கான் என்னை கை வுட்டுட மாட்டான்’
‘அப்பிடி என்ன மொடசல் அய்யாவுக்கு’
‘மொடசல்தான்’
‘நெல்லு மூட்டய
இப்ப நா எறக்கவேணாமா’
‘காசு வந்தாதான்
எனக்கு தேவலாம்’
‘சரி அப்ப, நா
அளக்குற நாலு மூட்ட குத்தகை நெல்லு வண்டில இருக்கு.
அத வித்தா நா முக்கால் மூணு. முந்நூறு
ரூவாயுக்கு வரும்’
‘’ ஊரு ஒலகத்துல வழங்குறது எப்பிடியோ அப்பிடி. நமக்குன்னு என்னப் புதுசா இருக்கு’
சுருட்டு ஆறுமுகக்கோனார் வண்டியைத்திருப்பிக்கொண்டு போனார்.
அம்மா வீட்டின் உள்ளிருந்து வாயிலுக்கு வந்தார்.
‘ஏன் நெல்லு வண்டி திரும்பி போறது’
‘நான் தான் நெல்லு வேண்டாம் பணமா குடுன்னு சொன்னன்’
‘என்ன அக்கிரமம். வந்த லெச்சுமிய எறக்கி கூட வக்கவேண்டாம
ஆத்துல’
அப்பா கையில்
எடுத்து வைத்திருந்த ஒரு பிடி நெல்லை அம்மாவிடம்
கொடுத்தார்.’ இந்தா உன் தான்ய லட்சுமி’ அம்மா
அதனைக் கைகளில் வாங்கினார்.
‘எல்லாம் ஒரு காரணமாதான் வண்டிய திருப்பி விட்ருக்கேன் கொஞ்சம் பொறும வேணும் உனக்கு’
சற்று நேரத்திற்கெல்லாம் சுருட்டு ஆறுமுகக்கோனார் மூத்த பையன் வந்தார். அப்பாவிடம்
முந்நூறு ரூபாய் எண்ணிக் கொடுத்தார். ‘ எங்கய்யா
இத உங்க கிட்ட குடுக்க சொன்னாங்க’
‘ரொம்ப சரி’ என்றார் அப்பா. கோனாரின் மூத்த பையன் அவர்
வீட்டுக்குச் சென்றுவிட்டார். இத்தனைச் சுளுவாய்
கோனார் பணம் அனுப்பிவிடுவார் என்று
அப்பா எதிரே பார்க்கவில்லை. அம்மாவிடம் அந்த
நெல் விற்றபணத்தை ஒப்படைத்தார்.’
‘ரேடியோ வாங்கத்தன்
இந்த ஏற்பாடா’
‘ஆமாம்’
அம்மாவுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. ‘ஆகட்டும், உங்களுக்கும்
மனசு வந்துருக்கே’’ சொல்லிய அம்மா பணத்தையும்,
கைப்பிடி நெல்லையும் எடுத்துக்கொண்டுபோய் ஸ்வாமி பிறையில் வைத்தார்.
வீட்டிற்கு ரேடியோ வரப்போகிறது என்கிற குஷியில் நானும்
சின்னக்காவும் இருந்தோம். அம்மா வெளியில் எதுவும்
காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்கள் ஓடின. சித்தப்பா ஒரு நாள் கையில் ரேடியோவோடு
வந்தார். அது சோப்பு பெட்டி சைசுக்கும் இன்னுமொரு
பங்குக்கு இருந்தது. அதனைக்கொண்டுபோய் கூடத்தில்
வைத்தார். வீட்டில் இருந்த எல்லோரும் அதனையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தோம். தெலுங்கு
கன்னடம் இந்தி மொழிகளில் எல்லாம் பாடல்கள் வீச்சென்று வந்தன. பிறகு சிலோன் வானொலி. அது தன் இருப்பை வசீகரமாய்க்
காட்டியது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்
அதன் விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைச் சொல்லிக்கொண்டிருந்தது.
‘ஒண்ணு சிலோன்
இன்னொண்ணு திருச்சி இது ரெண்டும்
நாம கேக்கலாம்’
சித்தப்பா, ஒரு வெள்ளைத் திருகு சக்கரத்தைத் திருப்பி திருச்சியும்
சிலோனும் எங்கு இருக்கின்றன என்பதைக்காட்டினார். பென்சிலால் இரண்டு புள்ளிகள் வைத்துக்கொடுத்தார்.
டிரான்சிஸ்டரில் நான்கு எவரெடி பாட்டரிகள் எங்கே உட்கார்ந்திருக்கின்றன அவற்றை எப்படிக் கழற்றிப் போடவேண்டும் என்பதை எங்களுக்கு
செய்துகாட்டினார். பாட்டரியில் தலைப்புறம் எது கால் புறம் எது, அதனை எப்படி ஒன்றோடொன்று சரியாகப் பொறுத்துவது
என்பதனையும் சரியாகத் தெரிந்து கொண்டோம்.
எங்கள் வீட்டு முற்றத்தில் கொசுவலை போல் கம்பி வலையை நீட்டு வாகில் கட்டி அதனிலிருந்து ஒரு
வயரை இழுத்து வந்து டிரான்சிஸ்டரின் பின்னேயுள்ள ஒரு ஓட்டையில் செருகிவிட்டார். ‘இதுக்கு
ஏரியல்னு பேர் இது வழியாதான் காத்துல கலந்து இருக்குற ஒலி அலை
எல்லாம் ரேடியோக்குள்ள வருது தெரியர்தா,
ரேடியோலேந்து எப்பிடி கிளியரா இப்ப பாட்டு
கேக்கறது பாருங்கோ’ என்றார். கொரகொரப்பு குறைந்தது ஒலி நன்றாகக் கேட்கமுடிந்தது.
டிரான்சிஸ்டருக்கு அப்பா குங்குமப் பொட்டு மூன்று இடங்களில்
வைத்தார். சுவாமி படத்தைப்பார்த்து ஒரு கும்பிடு போட்டார். அம்மா நெல் மூட்டைகள் விற்றுக்
கோனார் கொடுத்த அந்தப்பணத்தை எடுத்துவந்து
அப்பாவிடம் கொடுத்தார். அவர் அதனைஅப்படியே
சித்தப்பாவிடம் சேர்த்தார்.
‘முந்நூறு ரூவா இருக்கு பாத்துகுங்கோ’
சித்தப்பா பணத்தை எண்ணிப்பார்க்காமல் தன் சட்டைப்பையில்
வைத்துக்கொண்டார்.
‘ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்,’
‘அதெல்லாம் உங்களண்ட வேண்டாம்’
‘எனக்கு இப்பிடி ஒத்தாச செய்யறவா யார் இருக்கா’ அம்மா சொல்லிக்கொண்டாள்.
அம்மா சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு
பனை விசிறி மட்டை கொண்டு வந்து கொடுத்தார்.
‘ஏனோ இப்பிடி புழுங்கறது மழை கிழை வருமோ’ என்றார் சித்தப்பா.
‘கரண்டு இழுத்துடுங்கோ ஆத்துக்கு, ஒண்ணும் பெரிய செலவு இல்ல. ஒரு சீலிங் ஃபேன் கூடத்துல
போட்டுட்டா அதுவே போறும் இந்த விசிறி மட்ட
வச்சிண்டு விசிறிக்கற வேல இருக்காது’ என்றார் மீண்டும்.
‘இப்பக்கி என்னால
முடியாது. என் பையன்க வேலைக்கு போயி சம்பாரிச்சிதான் அந்த மாதிரி யோஜனையெல்லாம். ஒரு சேதி என் பெரிய பையனுக்கு கொழந்தையில ஒரு விஷ ஜொரம் வந்துது. பழனிமலை முருகனுக்கு நாங்க வேண்டிண்டம். எப்பிடித் தெரியுமோ, ’ பழனி முருகா அவன் உடம்ப தேவலை ஆக்கு,
அவன் பெரியவனாகி அவனே சம்பாரிச்சி உன் சந்நதிக்கு எங்களையும் கூட்டிண்டு
வருவான். உன் சந்நதி உண்டியல்ல அவன் தன் ரெண்டு கையாலயும் காசு நிறைய
நிறைய போடுவான்னு’ என்றாள் அம்மா.
‘ரொம்ப சமத்தா வேண்டிண்டு இருக்கேள்’ என்றார் சித்தப்பா.
‘இன்னும் ரெண்டு நாள்தான் பாக்கி இருக்கு தியாகைய்யர் ஆராதனைக்கு.
ரேடியோ ஆத்துக்கு வந்தாச்சு. பஞ்சரத்ன கீர்த்தன இந்த வருஷம் நம்ப ஆத்துலயே கேட்டுடலாம். இதுகள் எல்லாம் ஒங்க ஒத்தாச’
‘ பகவான் செயல்’ சித்தப்பா முடித்துக்கொண்டார். காபி சாப்பிட்டு
விட்டு வடலூருக்குப்புறப்பட்டார். நானும் சின்னக்காவும் இரண்டு தினங்கள் டிரான்சிஸ்டரை
விடாமல் கேட்ட வண்ணம் இருந்தோம். ஒரு புது உலகமே எங்களுக்கு வசப்பட்ட மாதிரி அனுபவமாகியது.
சிலோன் வானொலிதான் எப்பவும், அந்த அப்துல்
அமீது அண்ணாவின் குரல் எங்களைச் சிறைப்படுத்தி
வைத்திருந்தது. தியாகைய்யர் ஆராதனை நாளன்று அம்மாவுக்கு மட்டுமேதான் டிரான்சிஸ்டர்
முழு ஆளுகையும் என்று எல்லோரும் முடிவு செய்தோம். அம்மாவும் அந்த புஷ்ய பகுள பஞ்சமியன்று
காலையிலேயே ஸ்நானம் முடித்துத் தயாரானாள்.
நான் தான் டிரான்சிஸ்டரை எடுத்து ஆன் செய்தேன். வீட்டில்
அப்பா அம்மா சின்னக்கா எல்லோரும் பஞ்சரத்ன கீர்த்தனை கேட்க ரெடியானார்கள்.
‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ என்ற வீணை ஒலி மட்டுமே இறங்குமுகமாய்க் கேட்டது. ‘ஜகதா நந்த காரகா ஜய ஜானகீ
ப்ராண நாயகான்னு, நாட்டை ராகம்னா மொதல்ல வரணும்’
அதிர்ந்து சொன்னாள் அம்மா.
‘இதென்ன அபஸ்வரமா கேக்கறது’ என்றார் அப்பா. டிரான்சிஸ்டரை
ஆஃப் செய்துவிட்டு மீண்டும் போட்டேன். ‘நமது பாரதப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்
உஸ்பெகிஸ்தானிலுள்ள டாஷ்கண்ட்டில் காலமானார்.ஆக
முன்னம் அறிவிக்கப்பட்ட படி எந்த ஒரு இசை நிகழ்ச்சியும் இந்நிலையத்திலிருந்து ஒலி பரப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று தொடங்கி மூன்று தினங்களுக்கு இத்தேசம் நிறைத்
துக்கம் அனுஷ்டிக்கிறது.’ என்கிற அறிவிப்பினை ஒருவர் துக்கத்தோடு
தன் கட்டைக்குரலில் வாசித்தார்.
‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ மீண்டும் வீணை முகாரி வாசித்துக்கொண்டிருந்தது.
அம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். அம்மா தோட்டத்துப் பக்கமாய்
போய் நின்று கொண்டிருந்தாள். நான் வருத்தத்தோடு அம்மா அருகில் போய் நின்றேன். ‘எங்க
சுத்தி எங்க வந்தாலும் நம்ப நெழல் மட்டும்
நம்பள விட்டுட்டு எங்கயும் போய்டாது’
சொல்லிய அம்மா விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாராயணம்
செய்ய ஆரம்பித்தாள்.
‘ திருவையாறு ஆராதன
கச்சேரிதானே அத அடுத்த வருஷம் கேட்டுக்கறோம்’
என்றார் அப்பா. பாம்பு பஞ்சாங்கத்தை கையில்
எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போனார்.
மூன்று தினங்கள் தொடர்ந்து ஆகாசவாணி
அழுதது. நானும் அக்காவும் ரேடியோவோடு சேர்ந்து அழுதோம். அந்த வருஷமே சின்னக்காவுக்குத் திருமணம் ஏற்பாடாகியது. அம்மா
இருந்துதான் சின்னக்கா கல்யாணத்துக்கு வேண்டியது அத்தனையும் செய்தாள். அடுத்த ஆண்டு புஷ்ய பகுள பஞ்சமி யன்று திருவையாறு ஆராதனை நாள் வந்தது.
ஆனால் என் அம்மாதான் இல்லை.
----------------------------------------------------
‘
‘
9. தீராக்கடன்
நான் தஞ்சாவூர்க்காரன் எங்களுக்கு. காவேரி ஆறும் ஏர்க்கலப்பையும்தான் வழிபடு தெய்வங்கள். காலம் எப்படி அய்யா சும்மா இருக்கும் அது வயலில் உழுவதற்கும் நாற்று நடுவதற்கும் விளைந்த மகசூலை
வீடு கொண்டு சேர்ப்பதற்கும் இன்னும் என்ன என்ன
பணி உண்டோ அத்தனைக்கும் எந்திரங்களை
வரிசை வரிசையாய்க் கொண்டு சேர்த்தது. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் காவிரிக்கரை நகரெங்கும் உதயமாயின.
விளைவாய் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பிள்ளைகள் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மக்கள் சமூகத்தின்
உச்சியில் கோலோச்சுவதைப்பார்க்கிறோம்..
நான் நாகப்பட்டினத்தில் தனியார்ப் பொறியியல் கல்லூரியில் படித்தேன்.வேலை தேடினேன்.கொங்குப்பகுதியில்
ஒரு வேலை கிடத்தது. என் பெற்றோர்கள் உடன் வந்தார்கள். கோவையில் மருதமலைக்குச்செல்லும் சாலையில் கல்வீரம்பாளையம்அருகே நாககணபதி
புது நகரில் வாடகைக்குக் குடிவந்தோம்.
ஐ டிதுறையில் அப்போதுதான் ஒரு துவக்கப்பணி
நிலையில் சேர்ந்தேன்.இன்னும் கணிப்பொறி பற்றி எவ்வளவோ விஸ்தாரமாய்ப் படிக்கலாம். அன்றாடம் விரிந்து வளரும் தொழில் நுணுக்க விஷயங்கள்
நிறையவே தெரிந்து கொள்ளலாம். கல்யாணம் காட்சி
என்பதெல்லாம் இன்னும் ஒரு ஐந்தாண்டு செல்லவேண்டும் என்று நானே முடிவு செய்துகொண்டேன்.
அம்மாதான் சொன்னாள்.
‘வாடகைக்கு இந்த
வீட்டில் இருப்பதற்குப்பதிலாக ஒரு வீடோ அபார்ட்மெண்டோ வாங்கிவிட்டால் என்ன. மாதாமாதம் வாடகையாய்த் தரும் பணம் வீட்டுக்கடனுக்குபோய்ச்சேரட்டுமே’
அதுவும் சரி என்று எனக்கும் பட்டது. அப்பா தன் கருத்தாய்
வேறு எதுவும் சொல்லவில்லை.’ மகனே உன்
சமத்து’ அத்தோடு நிறுத்திக்கொண்டார்.
ஒரு தனியார் வங்கியில் வீடு கட்டக் கடன் வாங்கினேன். ஆயிரத்து ஐநூறு சதுர அடிக்கு மனை.
அதனில் ஆயிரத்து இருநூறு சதுர அடிக்கு வீடு என்று பிளான் போட்டு வீடு கட்ட ஏற்பாடாகியது.
எனக்கு எண்பது லட்சத்திற்கு வங்கிக்காரன் கடன் கொடுத்தான்.
வங்கிக்காரன் வீட்டு மனை வீடு கட்டும்
அக்ரிமெண்ட் இவைகளுக்கான ஒரிஜினல் பத்திரங்கள்
எல்லாவற்றையும் தன் வசம் வைத்துக்கொண்டான்.
எண்பது லட்சம் கடன் வாங்கினால் வட்டியாய் இன்னுமொரு எண்பது லட்சம் சேர்த்து ஒரு கோடி அறுபது
லட்சம் அவனுக்கு என்னிடமிடமிருந்து திரும்பப்போய்ச்சேரணும்
அப்புறம்தான் அந்த ஒரிஜினல் பத்திரங்கள் என் வீட்டு அலமாரிக்கு வரும். அது மட்டும்
போதுமா மேற்படி நபர் வீடு கட்ட வாங்கிய முழு
வங்கிக்கடனை வட்டியோடு திரும்பக் கட்டிவிட்டார். இவருக்கும் எங்கள் நிர்வாகத்துக்கும்
எந்தவித தாவாவும் இந்த வீடு விஷயமாய் இல்லை
என்பதை உறுதிசெய்து ஸ்டாம்ப் பேப்பரில், வங்கி மேலாளர் கையெழுத்தை சீலோடு வாங்கிப் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.
வங்கிக்கடன் பாரப்பா
இவ்வளவு என்று போட்டு, அழகாய் ஒரு
வீடு படம் போட்டு பெரிய சாவியை வீட்டுக்காரர் கையில் கொடுப்பதாய் அவரும் வாயெல்லாம்
திறந்துகொண்டு பல்லைக்காட்டிச் சிரிப்பதாய்
விளம்பரம் போட்டிருப்பார்கள். ஒரு கல்யாண நிகழ்வில் ஊஞ்சல் மற்றும் காசியாத்திரை வைபவத்தில் ’பாலாலே கால் அலம்பி பட்டாலே
துடைத்து’ என்று ஒரு பட்டுப்புடவையோடு ராக்கோடி
வைத்துக்கொண்ட மாமி பாட மாப்பிள்ளையை மண்டபத்துள்ளே கூட்டிப்போகும் சமாச்சாரம்தான்
அது. பிறகு அவனுக்கு விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது.
டொரொண்டோவில் ஒரு ப்ரொஜெக்ட் அதனை அந்தக் கனடா நாட்டிற்கே
போய் ஒரு ஐந்து ஆண்டுகள் தங்கி பணி முடித்துத்தரவேண்டும். இங்கு நான் வாங்குகிற மாத
ஊதியம் மட்டும் இல்லாமல் அதுபோல்
இன்னொரு ஊதியம் எனக்குண்டு என்றார்கள் அலுவலகத்தில்.
‘ வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் நீ, அதிலிருந்து
எப்படி வெளியே வருவாய். நல்ல வாய்ப்பு உன்னைத்தேடிக்கொண்டு வந்திருக்கிறது விட்டு விடாதே’ என்றார்கள் என் அலுவலகத்தில் சகப்பணியாளர்கள்.. இந்த ஆஃபர் தனக்கே
வேண்டும் என்று பழனியில் பால் காவடி தூக்குபவர்களும் திருப்பதியில் மொட்டை போடுபவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
அம்மாவிடம் சொன்னேன். ‘நாங்க எங்கள பாத்துக்கறம். நீ கனடா
போய் வேல செய் . நீ வங்கியில வாங்கின வீட்டுக்கடனும் சீக்கிரமாக அடைஞ்சிடும். அது தானே
முக்கியம். அப்புறம் கல்யாணம் காட்சின்னு வந்துதுன்னா உனக்கு பண மொடசல் இல்லாம இருக்கும்’ அம்மா என்னிடம் சொன்னாள்.
பில்டர் ஒரு ஆறு மாதத்திற்குள்ளாக வீடு கட்டிக்கொடுத்தார். காசுதானே பேசுகிறது. வீட்டுக்கு மருதவேல் என்று பெயர் வைத்தோம். அப்பாதான்
மருதமலையானை வெற்றிவேல் முருகனை நாம் நினைத்துக்கொண்டே
இருக்கவேண்டும் என்றார். புது வீட்டில் பால் காய்ச்சினோம். பெரிய ஆடம்பரம் எல்லாம் இல்லை. இருபது பேருக்கு
மேல் யாரும் வரவில்லை. புதுமனைப்புகு விழா என்று பத்திரிகை எல்லாம் அடிக்கவில்லை. போனில்
அப்படி இப்படி அழைத்தது தான்.
நான் கனடா புறப்படத்தயாரானேன். அம்மா அப்பாவுக்கு வாடகையில்லாத சொந்த வீடு. அருகிலேயே
வங்கி. அப்பா ஏ டி எம் கார்டும் வைத்துக்கொண்டுதான்
இருக்கிறார். தேவையான பால் தயிர் வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.மளிகை
ஜாமானும் அப்படியே. ஒரு இரண்டு கிலோமீட்டர் போனால் ஒரு தனியார் மருத்துவமனை. வாடிக்கையாய்
வரும் ஆட்டோக்காரன் இருக்கிறான். எங்கள் தெருவுக்கு பின் தெருவிலே ஒரு சிவன் கோவில். நவக்கிரகம் ஆஞ்சனேயர் சந்நிதியும்
உண்டு. மூத்தவர்களுக்கு வேறு என்ன வேண்டும்.
நான் பெற்றொரிடம் விடைபெற்றுக்கொண்டுப் புறப்பட்டேன். டொரொண்டோ
போய்ச்சேர்ந்தேன். கோயம்புத்தூரிலிருந்து பெங்களுர் பெங்களூரிலிருந்து பாரிஸ், பாரிஸிலிருந்து
டொரொண்டோ. கனடாவில் தரையிறங்கினேன்.கொல்லுகின்ற
குளிர். தலைக்கு மூடி போட்ட உல்லன் கோட்டும் காலுக்கும் கையுக்கும் உல்லன் உறையும் இல்லாமல் காலம் தள்ளவே முடியாது.
இடுப்பில் ஒரு சிட்டைத்துண்டு கட்டிக்கொண்டு
மட்டுமே தமிழ் நாட்டை அழகாய்ச் சுற்றி வரலாம்.அதெல்லாம் உலகின் வேறு எந்த பகுதியிலும்
எண்ணிப்பார்க்க முடியாதுதான். ஏன் இந்தியாவின் தலைநகர் டில்லியில்தான் அப்படி சாத்தியப்படுமா சொல்லுங்கள்.
டொரொண்டோவில் தனியார் கணினிக்கம்பெனியில் வேலைக்குச்சேர்ந்தேன்.
தமிழ் நாட்டுக்காரர்கள் எத்தனையோ பேர் அந்த நிறுவனத்தில் பணியில் இருந்தார்கள். இந்தியாக்காரர்கள்
எண்ணிக்கையும் ஏராளமாகத்தன் இருந்தது. வேலை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் இந்தியர்களாக இருக்கலாம். நம்மூர் மளிகை ஜாமான்கள் காய்கறிகள்
எல்லாம் கிடைத்தன. நான் பிறந்த காவிரிக்கரை ஜனங்கள் ஏகப்பட்டபேர் வேறு வேறு பணியில்
இருந்தார்கள். மயிலாடுதுறைக்காரர்க:ள் இல்லாத ஊர்தான் ஏது, எல்லா ஊரிலும் காணப்பட்டார்கள்.
ஒரு வாடகை வீட்டில்
நண்பர்கள் இருவரோடு சேர்ந்துகொண்டேன். எத்தனையோ சவுகரியங்கள் எனக்கும் பரஸ்பரமாய்
அவர்களுக்கும்தான். மொபைலில் அம்மாவோடு பேசினேன். எப்போதும் அம்மாவோடு அப்பாவும்தான்
சேர்ந்துகொள்வார். உலகத்தில் விலை குறைந்தது தொலைபேசி சேவைதான். சர்வமும் விலை ஏறிக்கொண்டிருக்க கனடாவிலிருந்து வாட்சாப் வழி நாள் முச்சூடும் பேசினாலும்
ஒரு பைசா கிடையாது. பேசுபவர்களை நாம் பார்க்க அவர்களும் நம்மைப்பார்க்க எத்தனையோ வசதி. அறிவியல் சாதித்தவைகளில் கண் எதிரே
காட்சியாகிறது இந்த வாட்சாப் மொபைல் சேவை.
’ மொபைல் போனை வைத்துகொள் நீ பேசு பேசாமல்
இரு எனக்குக் கட்டவேண்டியது இத்தனை நாட்களுக்கு
இத்தனை ரூபாய் அத்தோடு சரி’. ரொம்பவும் சரி.
நான் கனடா வந்து ஒரு ஆண்டு முடியப்போகிறது. நான் வீடு கட்ட வாங்கிய கடன் முக்காலுக்குக் குறைந்து போனது. இன்னும் கொஞ்சம்தான்
பாக்கி. நான் இங்கு ஒண்டிக்காரன். நண்பர்கள் ஒன்றாகக்கூடி சமைத்துக்கொண்டு சாப்பிடுகிறோம்.
வெளியில் சாப்பிடவும் முடியாது. விலையோ விலை.
சோறு சகிக்கவும் சகிக்காது. எருமை மாட்டுக்கறிதான் இங்கு பிரபலம். வெள்ளைக்காரர்கள் எத்தனைப் பிரியமாய்ச்
சாப்பிடுகிறார்கள் அதனை.
எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. வீட்டுக்கடன்
முழுவதும் அடைந்துவிட்டால் இன்னும் கையில்
காசு கொஞ்சம் சேர்க்கலாம் . கல்யாணத்திற்குப் பயன் படும் என்று கணக்குப்போட்டேன். இயற்கைக்கு
இத்தனை சூது ஆகாது. சீனாவின் ஊஹான் நகரில் புறப்பட்ட கம்பீர கொரானா வைரஸ் உலகத்தையே வலம் வரத் தொடங்கியது.
லடசம் லட்சமாய் மக்கள் இறக்க ஆரம்பித்தார்கள். பணக்காரர்கள் ஏழைகள் படித்தவர்கள் படிக்காத
பாமரர்கள் யாரையும் கொரானா விட்டு வைக்கவில்லை. இரவு படுத்தால் அன்றன்று விடியற்கா;லை எழுந்து ’ நாம் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறோம்’
என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த அவலட்சணத்தில் இருந்தது
இப்பூவுலகின் நிலமை. போக்குவரத்து ஆங்காங்கே
ஸ்தம்பித்துப்போயிற்று. பார்க்குமிடமெல்லாம்
வான்கோழிகள் தோகைவிரித்தாடின. விமான நிலையம் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டேண்ட்
இங்கெல்லாம் பசுமாடுகள் ஆடுகள் படுத்துறங்கின.
விஞ்ஞானிகள் இரவு பகலாய் ஆய்வகத்தில் உழைத்தார்கள்.
கொரானாவுக்கு த் தடுப்பூசி கண்டுபிடித்து கை கொடுத்தார்கள். முண்டிஅடித்துக்கொண்டு உலகத்து ஜனங்களே தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.
ஒன்று இரண்டு மீண்டும் பூஸ்டர் என அதனில் ரகங்கள் வேறு. தமிழ்நாட்டில்
கோயம்புத்தூரில் கொரானா கோரமாய்த் தலை விரித்து ஆடியது.
நான் கனடாவில் தவியாய் தவித்துக்கொண்டு இருந்தேன். கோயம்புத்தூரிலிருந்து
அம்மா பேசினாள்.
‘எப்படி இருக்கடா’
‘நல்லா இருக்கேன் நீங்க எப்பிடி இருக்கிங்க’
‘’இருக்கோம்’
‘என்னம்ம என்னமோ மாதிரி பேசற’
‘ரொம்ப பயம்மா இருக்குடா’
‘ சொல்வது சரிதான் பயப்படவே கூடாது நீங்கள்’
நான் கனடாவில்
கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அது பற்றி அம்மா அப்பாவை விசாரித்தேன். அப்பா ஒரு ஊசி போட்டுக்கொண்டதாகவும்
அம்மா அதுகூட போட்டுக்கொள்ளவில்லை என்றும் சொன்னார்கள். அம்மாவுக்கு சர்க்கரை நோய்
இருந்தது. அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அந்த மாத்திரை சாப்பிடுவது இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏதேனும் பிரச்சனை உண்டாக்குமா
என்கிற சந்தேகம் அம்மாவுக்கு வந்துவிட்டது.
ஒருநாள் கோவை ஒரு
தனியார் மருத்துவ மனையிலிருந்து எனக்கு மெசேஜ்
வந்தது. அம்மாவும் அப்பாவும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருப்பதாகத்தான்.
என் பெற்றோர்களுக்குப் போன் போட்டேன். யாரும் பதில் சொல்லவில்லை. நான் உடனே மருத்துவ
மனைக்குப் போன் போட்டேன். அவர்கள் எனக்குப்
பதில் சொன்னார்கள். என் பெற்றோர் இருவருமே கொள்ளைநோயுக்கு சிகிச்சை பெற்று வருவதாயும் அவர்களின் நிலமை சரியாக இல்லை என்றும் சொன்னார்கள்.
இனி என்ன செய்வது.
உலகெங்கும் விமான சேவை மிகவும் அரிதாக இருந்தது.
விமானக்கட்டணம் சாதாரண காலம்போல் பத்து மடங்குக்கு உயர்த்தியிருந்தார்கள். பெற்றோர்களைப்
பார்த்துக்கொள்ள யாரை நான் அனுப்ப முடியும்.
இந்த நோய் எப்படிப்பட்டது. மருத்துவ மனையில்
நோயாளியையே ஒரங்கட்டி வைத்து அல்லவா சிகிச்சை செய்கிறார்கள். யாரிடமும் பேசி
ஒன்றும் செய்வதற்கில்லை. ’கடவுளே இதெல்லாம் என்னக்கொடுமை. இப்படி ஒன்று வரும். மனித குலத்தை
சின்னா பின்னமாக்கிவிடும் என்று யாரும் நினைக்கவுமில்லையே’.
நான் அலுவலகத்தில் விடுப்பு சொன்னேன். இந்தியாவுக்குப்பயணமானேன். பகீதரப் பிரயத்தனமாய் டிக்கட் கிடைத்தது. லண்டன் ஹீத்ரூ விமானநிலையம்
வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தேன். மீனம் பாக்கத்தில் இறங்கி மருத்துவ மனைக்குப்
போன் போட்டேன். அவர்கள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிற ஒரே பதிலைத்தான் பெற முடிந்தது. சென்னை விமான நிலையத்தில்
மருத்துவர்கள் என்னைப் பரிசோதித்தார்கள். கொரானா
தொற்று இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு மட்டுமே என்னை வெளியே அனுப்பினார்கள்.
பன்னாட்டு முனையத்திலிருந்து உள்நாட்டு முனையத்துக்கு ஓடோடி வந்தேன். கோவைக்கு ஒரு விமானம் பிடித்துப்
புறப்பட்டேன். சென்னையிலிருந்துஒரு டாக்சி
வைத்துக்கொண்டாவது கோவை சென்று விடவேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். கோவைக்கு அன்று
விமான சேவை இருந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு மணி நேர விமானப்பயணம்.
இல்லாவிட்டால் குறைந்தது பத்து மணி நேரமாவது காரில் பயணிக்க வேண்டும். கோவை செல்லும் விமானத்தில் அமர்ந்திருக்கிறேன். மனம் திக் திக்
என்று அடித்துக்கொண்டது.கண்களிலிருந்து அவ்வப்போது கண்ணீர் வராமலில்லை. வந்து என்ன
செய்வது. அழுவதற்குத்தான் எனக்கு நேரம் ஏது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கோவை சென்றாக வேண்டும் அது மட்டுமே
என் திட்டமாக இருந்தது. சூலூர் விமான நிலையத்தில்
போய் இறங்கினேன். அந்தத் கோவை தனியார் மருத்துவ
மனை நோக்கி டாக்சியில் விரைந்தேன்.
மருத்துவ மனை டாக்டர்களை அணுகினேன். அம்மாவையும் அப்பாவையும்
பார்க்கவேண்டுமே. அவர்கள் எந்த கதியில் இருக்கிறார்களோ என்கிற பெருங்கவலை. நான் பார்க்கும் கோயம்புத்தூர் நகரம் நான் விட்டுச்சென்ற அந்த கோயம்புத்தூர் நகரமாகவேயில்லை. ஒரு அடர்ந்த சோகத்தைப் போர்த்திக்கொண்டுக்
கிடந்தது. மருத்துவ மனையில் எனக்கு பிரத்யேக
கொரானா சூட் ஒன்று கொடுத்தார்கள். விமானத்தில்
ஏறும்போதுமே கொரானா சூட் அணிந்து கொண்டுதான் புறப்பட்டேன்.
அம்மாவுக்கு கொரானா சூட் போட்டு பெட்டில் படுக்க வைத்திருந்தார்கள். ‘அம்மா அம்மா’
இரண்டுமுறை ஓங்கி அழைத்தேன். மருத்துவர்கள் அம்மாவத் தொட்டுப்பார்க்கவே அனுமதிக்கவில்லை.
அம்மாவுக்குப் ‘பிரக்ஞை தவறிவிட்டதாய்ச்சொன்னார்கள். தேறுவது
கடினம் இன்னும் சில மணி நேரம் உயிருடன் இருப்பார்கள் என்பதை மட்டுமே எனக்குச்சொன்னார்கள்.
என் அப்பாவைத்தேடினேன். அவர் ஆண்கள் பகுதியில்
ஒரு கட்டிலில் படுத்திறந்தார். அப்பா கண்களைத் திறந்து திறந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.
நான் ‘அப்பா அப்பா ‘ என்று அலறினேன். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருந்தது. என்னைப்பார்த்தார்.
புன்னகை செய்தார். அவரால் பேசவே முடியவில்லை.
அருகிருந்த மருத்துவர் என்னிடம் சொன்னார். ’என் தந்தையும் இன்னும் சில மணி நேரம் மட்டுமே இருப்பார்’
என்று.
ஒரு ஆம்புலன்ஸ் வைத்து ஏற்பாடு செய்தேன். அம்மாவுடன் பெட்டில் ஒரு ஹேண்ட் பேக் இருந்ததுவாய்ச் சொன்னார்கள்.
என்னுடைய மருத்துவக் காப்பீட்டிலேதான் இருவருக்கும்
சிகிச்சை நடந்திருக்கிறது. அம்மாவின் பையில்
என்னுடைய வீட்டு சாவி பத்திரமாக இருந்தது. ஆம்புலன்சில் இருவரையும் தூக்கிப்போட்டுக்கொண்டு
கல்வீரம்பாளையம் என் இல்லம் நோக்கிப்புறப்பட்டேன்.
மருதமலை முருகன் கோவில் காட்சியாகிக்கொண்டிருந்தது. ‘முருகா இது என்ன நியாயம்’ என்று
ஓங்கிக்கத்தினேன். ஆம்புலன்சின் டிரைவர் பயந்து போய் விட்டார்.
என் வீட்டுக்கதவைத்திறந்தேன். அம்மா அப்பாவை இறக்கி வீட்டுக்குள்
கட்டிலிலும் பெஞ்சிலும் படுக்க வைத்தேன். மருத்துவ மனை ஊழியர்கள் எனக்குப் பேருதவி
செய்தார்கள். அம்மா கண் விழித்தாள் ஒரு முறைதான். என்னைப்பார்த்தும் இருக்கலாம். நானும்
பூச்சாண்டி உடையில்தானே இருக்கிறேன். அடையாளம் தெரிந்ததுவோ என்னவோ. அம்மா பூவோடும்
பொட்டோடும் நிரந்தரமாய் விடைபெற்றுக்கொண்டாள். அப்பா என்னை ஒரு முறை பார்த்தார்.
ஏதோ சொல்ல சொல்ல முயற்சிக்கிறார். அவருக்கு நான் வந்திருப்பது புரிந்திருக்கவேண்டும்.
ஆனால் வார்த்தைகள் மட்டும் எழும்பவில்லை. கண்கள்
என்னையே பார்த்தன. விழிக:ள் குத்திட்டு நின்றன.
ஆம்புலன்ஸ் வீதியில் நின்றுகொண்டிருந்தது. கொரானா சாவு.
யாரும் வரமாட்டார்கள். ஆம்புலன்சிலேயே யூரியா சாக்குகள் கட்டுக் கட்டாயிருந்தன. இரண்டு
சாக்குகளில் என் பெற்றோர் திணிட்க்கப்பட்டார்கள். வீட்டைப்பூட்டிக்கொண்டு நான் அவர்களோடு
புறப்பட்டேன். இடுகாடு நோக்கிப்புறப்பட்டது அதே
ஆம்புலன்ஸ். வண்டியிலிருந்து சைரன் ஒலி தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. கல்வீரம்பாளையம்
இடுகாட்டில் பணியாற்றும் ஊழியர்கள்.கொஞ்சமாய் கோடித்துணி தந்தார்கள். வாய்க்கரிசி கொடுத்து
என்னைப் போடச்சொன்னார்கள். அம்மாவுக்கும் அப்பாவும் வாய்க்கரிசி போட்டு ஒரு நெட்டை
மரமாய் நின்றேன். கற்பூரம் கொடுத்து கொள்ளி வைக்கச்சொன்னார்கள். அவ்வளவே. ஒரு அரை மணி நேரம் இடுகாட்டுக் கொட்டகையிலேயே
சம்மணமிட்டு உட்கார்ந்து கோண்டேன். ‘ஓ’ என்று அழுதேன். முடிந்த மட்டும் அழுதேன். இரண்டு
டப்பாக்களில் அஸ்தி கொண்டு வந்து பவ்யமாய்க்
கொடுத்தார்கள். இனி நீங்க போகலாம் என்றார்கள் இடு காட்டு ஊழியர்கள். அவர்கள் கைகளைப்பிடித்து
நன்றி சொன்னேன்.
‘சவுகரியப்படும்போது இத காவேரில கரைச்சிடுங்க. ‘ என்றனர்
என்னிடம். ஒரு நாள் பவானி முக்கூடல் சென்றேன். அம்மா அப்பாவின் இவ்வுல இருப்புப் பாக்கியை இயற்கைத்தாயிடம் ஒப்படைத்தேன். என் அன்புத்தாய்க் காவிரியிடம் பிரியா விடைபெற்றுக்கொண்டேன்.
’அவ்வளவுதானா என்
அம்மா அவ்வளவுதானா என் அப்பா’ என்றது மனம்.
எனக்குக் கொரானா வர வாய்ப்பில்லை நான் தான் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவனாயிற்றே சொல்லிற்று பாழும் மனம்.
வங்கியில் வாங்கிய வீட்டுக்கடன் முழுவதுமாக அடைத்துவிட்டேன். மருதவேல் வீட்டுச்சாவி கையில் இருக்கிறது. அம்மா
அப்பாவின் அறுபது கல்யாண போட்டோவுக்கு ஒரு தண்ட மாலை வாங்கி சாத்திவிட்டு தரை வீழ்ந்து வணங்கி
எழுந்தேன். கனடாவுக்குப் புறப்பட்டுப்போயாக வேண்டும். எனக்குக் கிடைத்த அய்யர் வைத்து கருமச் சடங்கு முடித்தேன்.
இருவரும் ஒன்றாக மறைந்தது கூட தாம் பெற்ற பிள்ளைக்கு ஒரு சவுகரியம் செய்யவேண்டும் என்கிற திட்டமாக இருக்குமோ
என்கிறது உள்மனம்.
தீராக்கடன் ஒன்று இப்போது முளைத்கிருப்பதாய் உறுத்தல்
இருந்துகொண்டேயிருக்கிறது.
அம்மா அப்பா படத்தைப்பார்த்துக்கொண்டேன். நான் கனடா புறப்படுகிறேன். ’போய் வா’ என்று அவர்கள் மகிழ்ச்சியாய் ஆசீர்வாதம்தான் செய்கிறார்கள் இன்னும்
எனக்கு.
‘
10.சொல்
அவனுக்குத் தருமங்குடி
பிறந்த ஊர்.அவன் பட்ட வகுப்பில் அண்ணாமலையில் சேர்ந்திருந்தான். தருமங்குடி ஒரு குக்கிராமம் சிதம்பரத்திலிருந்து பதினாறு மைல் தொலைவில் இருந்தது. பேருந்துகள் இத்தனைப் பெரிய எண்ணிக்கையில் அன்று எங்கே ஓடியது. நகரப்பேருந்துகள்
கிராமங்களுக்குள் புகுந்து செல்வதெல்லாம் பரிச்சயமாகாத
காலம்.நித்தம் நித்தம் அண்ணாமலை நகர் கல்லூரிக்குப்
படிக்கச்சென்றுவிட்டு ஒரு மாணவன் தருமங்குடிக்கு திரும்புவது எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது.ஆக பெரியம்மா வீட்டில் அவன் தங்கிக் கல்லூரிக்குச் சென்று வரலாம் என்று
ஏற்பாடாகியது.
அவன் பெரியம்மா சிதம்பரம் நகரில் பாப்பாரத்தெரு என்று பெயர் விளங்கிய கீழப் புதுத் தெருவில்தான் குடியிருந்தார். பெரியம்மா
அவன் அம்மாவுக்கு உடன் பிறந்த அக்காதான். அம்மா
சொந்தம் என்பதால் சங்கடங்கள் குறைவு. அப்பாவுக்கு உறவு என்றால் அவர்கள் வீட்டில் இருந்து தங்கிப்படிப்பது எல்லாம் சவுகரியப்படுமா என்ன.
அந்த பெரியப்பாவுக்கு அண்ணாமலை யூனிவெர்சிடியில் லைப்ரரி
கிளார்க் வேலை. கிளார்க் வேலைக்குக் கிடைக்கும்
மாச சம்பளத்தில் ஒரு குடும்பம் பட்டினியில்லாமல்
காலந்தள்ளிவிடலாம். வேறு எந்த அரண்மனையைக்கட்டிக்கொள்ளவோ ஆனையைப் பிடித்துவிடவோ முடியாது. பெரியம்மாவோ ஒண்டு குடித்தன வாடகை வீட்டில்தான்
குடியிருந்தாள்.ஒண்டுக்குடித்தனம் என்றால்
வீட்டுக்குள் வீடு. தோட்டத்துப்பக்கமாய் ஒரு தாழ்வாரத்தில் பாதியை மரப்பலகை
வைத்து அடைத்து பெரியம்மாவுக்குக் கொடுத்திருந்தார்கள்.
அந்த வீடு முழுமைக்கும் வரி வரியாய் நாட்டோடு. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தாய்ச்சுவர் மட்டுமே சொந்தம். வீட்டு முற்றத்தின் மய்யத்தில் சிமெண்ட் சதுரத்தொட்டி யில் துளசிமாடம். முற்றத்தில் நின்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தால் இரும்புக்கம்பிகள் குறுக்கும்
நெடுக்குமாய்ப் பச்சை வண்ணத்தில் படல் மாதிரிக்கு பின்னிப் போட்டிருப்பார்கள். காகமோ
குரங்கோ திருடனோ வீட்டுக்குள் எளிதில் நுழையமுடியாது.
பெரியம்மா வீட்டிற்கு
மாத வாடகை பதினைந்து ரூபாய். கரண்ட் சார்ஜ் மாதத்திற்கு ஐந்து ரூபாய். ஆக மாதம் இருபது
ரூபாய். அவன் புதியதாய் பெரியம்மா வீட்டிற்கு கல்லூரிப் படிப்புக்கென்று வந்த பிறகு,
வீட்டு உரிமையாளர் மாமி மாத வாடகை ஐந்து
ரூபாய் கூட்டித் தரவேண்டும் என்று பெரியம்மாவுக்கு உத்தரவு போட்டார்கள்.பெரியம்மா வீட்டில் மூன்று
பேர் அவர்கள் இருவர் தம்பி ஒருவன். தம்பி
மேல ரதவீதி ஆறுமுக நாவலர் பள்ளியில்
பயின்று கொண்டிருந்தான்.பெரியம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை. அவள் மூத்தவள் அவளைக் கும்பகோணத்திற்கு
அருகே ஒரு பள்ளிக்கூட வாத்யாருக்குத் திருமணம் முடித்து அனுப்பி வைத்தாயிற்று. அன்று வாத்யார்
உத்யோகம் ராப்பட்டினிக்காரன் உத்யோகம்
என்று பொதுவாய் வியாக்கியானம் சொல்வார்கள். அத்தி பூத்தாற்போல் எப்போதோ ஓர் முறை அந்த அக்கா குழந்தைகளோடு சிதம்பரம் அம்மா வீட்டிற்கு வருவாள்.
மேற்படிப்புக்காக அவனின் சிதம்பரம் வருகை. பெரியம்மாவுக்குச் சங்கடம் ஏதும் இதில்
வந்துவிடக்கூடாது எனத் தீர்மானித்தான். வீட்டுக்காரமாமி வாடகை ஐந்து ரூபாய் ஏற்றிக்கேட்டதைப்
பெரியம்மா அவனிடம் வருத்தத்தோடு சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘நான் வீட்டுக்கார மாமியிடம் பேசிப்பார்க்கிறேன்’ என்றான்
அவன்.
‘அது சரியா வருமாடா’ இழுத்தபடியாய் பேசினாள் பெரியம்மா.
‘ஒரு முயற்சிதான்’
பெரியம்மா சம்மதம் சொன்னார். வீட்டுக்கார மாமி கூடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து
கல்கி படித்துக்கொண்டிருந்தாள். கல்கி படிப்பது மட்டுமே தவம் என்றிருந்த பொற்காலம். தயக்கமில்லாமல் அவன் வீட்டுக்கார மாமியிடம் நேராகவே
சென்றான். பேசினான்.
‘மாமி ஒரு சமாச்சாரம்.
உங்க கிட்ட பேசணுமே’
‘என்னப்பா நீ பேசப்போற’
‘பெரியம்மாவுக்கு மாதவாடகை அஞ்சி ரூவா ஏத்தறதா சொன்னீங்களாம்’
‘ஆமாம் அதற்கென்ன’
‘நா ஒரு வார்த்த பேசிக்கறேன். அதக்கேளுங்க. அப்பறம் வாடகைய
ஏத்தறதுபத்தி முடிவு பண்ணலாம்’
‘இதென்னப்பா புது
பழக்கமா இருக்கு. நா வீட்டுக்குச் சொந்தக்காரி எனக்குத்தெரியாதா வாடகையை எப்ப ஏத்தணும்
எவ்வளவு ஏத்தணும்னு’
‘அந்தமாதிரிக்கு நா சொல்லலவே இல்லயே மாமி’ ஸ்திதியில் சற்று
இறங்கிக்கொண்டான்.
‘நீ என்னதான் சொல்ல வரே அத சொல்லு’
’நா இங்க படிக்க வர்றேன்னு எங்க பெரியம்மாவுக்கு வீட்டு
வாடகைய ஏத்திடாதிங்க. அது அவுங்களுக்கு கஷ்டம். எனக்கும் கஷ்டம். நா இந்த வீட்டுல இருக்குற கக்கூச உபயோகப்படுத்திக்க
மாட்டன்’. பச்சை வண்ணத்தில் இரும்பு முறமும், கரண்டியும் வைத்துச்சுரண்டி எடுக்கும்
கக்கூஸ் இருந்த ஒரு காலம்.
அவன் தொடர்ந்து கொண்டான். ’எங்கயாவது தூரமா ரயில் ரோட்டு
பக்கமா போயிட்டு வந்துடுவேன். கிராமத்துல எங்க வீட்டுல கரண்டு லைட்டு இல்ல. சிமிழி
விளக்கு வச்சிண்டுதான் இதுவரைக்கும் படிச்சன். இங்கயும் நான் சிமிழி விளக்கு வாங்கி
வச்சி படிச்சிகறேன். உங்க வீட்டு பின்னாடி இருக்கற ராட்டின கெணத்துல பச்சத்தண்ணி ரெண்டு
வாளி இழுத்து குளிச்சிப்பேன். துணி தோச்சிப்பேன்
அவ்வளவே.நா உங்க வீட்டு ரேழில செருப்பு எல்லாம் கழட்டி வைப்பாளே அங்க ஒரு கோர பாய போட்டு படுத்துகறேன்.’
வீட்டுக்கார மாமி எதுவுமே பேசாமல் இருந்தாள். வீட்டுக்கார
மாமிக்கு ஒரு பேத்தி இருந்தாள். அவள் தெருக்கோடியில்
இருந்த தனியார் ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் மூன்றாவது
வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவள் டியூஷன்
படிப்பதற்கு என்று இரண்டு தெரு தள்ளி ஒரு ஓய்வுபெற்ற பள்ளிக்கூட வாத்தியார்
வீட்டுக்குத் தினம் தினம் நடந்தே சென்று வருவாள்.
அவளுக்குத் தந்தை இல்லை. தாய் மட்டுமே. கணவனை இழந்த அந்த மருமகள் தனது பெண் குழந்தையோடு தனது மாமியார்
வீட்டில் இருந்தாள்.
அவன் வீட்டுக்கார மாமியிடம் மீண்டும் ஏதோ
பேச ஆரம்பித்தான். அந்த மாமி ஒன்றும் திருப்தி பட்டுக்கொண்ட மாதிரி அவனுக்குத்
தெரியவில்லையே. ஒரு யோசனை தோன்றியது அவனுக்கு,
இந்தப் பெண் குழந்தைக்கு நாமே டியூஷன் சொல்லிக்கொடுத்தால் என்ன. அந்தப்பெண் குழந்தை
ஏன் தினமும் இரண்டு தெரு தள்ளி ஒரு டியூஷன் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று வரவேண்டும். இதுவே சரி
அவன் பேச்சை ஆம்பித்தான் மாமியிடம்,
‘மாமி ஒங்க பேத்திக்கு நா தெனம் சாயங்காலம் டியூஷன் எடுக்கறேன்.
அந்த பொண்ணு எதுக்கு ரெண்டு தாண்டிண்டு போகணும் வரணும். நான் தான் வீட்டிலேயே இருக்கேன்.
இங்கயே பாடம் சொல்லிக்கொடுத்துடுவேன்’
‘அவளுக்குத்தான்
டியூஷனுக்கு அந்த ராயர் சார் இருக்காரே’
‘இனி அங்க போகவேண்டாம் நானே பாடம் சொல்லி தர்ரேன்’
‘அதுக்கு எம்மாட்டுபெண் ஒத்துக்கணுமே’
‘கேளுங்கோ கேளுங்கோ’
‘டீ மாட்டுபொண்ணே இந்த புள்ளயாண்டான் என்ன சொல்றான் கேட்டியோ’ பட்டென்று மருமகளுக்கு வினா வைத்தாள்.
‘ நானும் கேட்டேன்.
அவர் சொல்றதும் நன்னாத்தானே இருக்கு’
அவனுக்கு உயிர் வந்தமாதிரிக்கு இருந்தது.
வீட்டுக்காரமாமி பேத்தியை அழைத்தாள். ‘ டீ பொண்ணே நீ இந்த
தம்பிண்ட டியூஷன் படிச்சிகறயா’
அந்தப்பெண்குழந்தை என்னையே முறைத்துப்பார்த்தது.
‘தம்பிண்டன்னு சொல்ற’
‘தப்புதான். அண்ணாண்டன்னு வச்சிக்கலாம் நீ சொல்லு’ என்றாள் மாமி.
‘நா உனக்கு பாடம் சொல்லித்தரேனே’ அவனே நேராகக் கேட்டுவிட்டான்.
அந்தப்பெண் குழந்தை தலையை ஆட்டி சம்மதம் சொன்னது. அவனுக்கு
லாட்டரியில் லட்சம் பரிசு விழுந்த மாதிரிக்கு
உணர்ந்தான்.
‘ நான் நேராகவே வந்துவிடுகிறேன். நான் உங்கள் பேத்திக்கு டியூஷன் எடுப்பதற்கு நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்.
கொடுத்தாலும் நான் வாங்கிக்கொள்ளமாட்டேன்’
’ ஏனாம்’
‘வேண்டாம் எனக்கு’ அழுத்தமாய்ச் சொன்னான்.
‘அந்த ராயர் டியூஷன் எடுக்கிறார். அவருக்கு சேதி சொல்லவேண்டும்’
என்றாள் மாமி.
‘சொல்லுங்கள். பெண் குழந்தை. ரெண்டு தெரு தாண்டித்தாண்டி ஏன் சென்று வரவேண்டும். நான் வீட்டில் ரேழித்திண்ணையிலேயே
டியூஷன் சொல்லிக்கொடுத்துவிடுவேன்’
பெண் குழந்தையின் அம்மா சம்மதம் சொன்னாள். வீட்டுக்கார
மாமி வாடகை ஏற்றியது எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போனது.பெரியம்மாவுக்கோ ரொம்பவும் சந்தோஷம்.
அவன் அந்தப்பெண் குழந்தைக்கு டியூஷன் சொல்லிக்க்டுக்க
ஆரம்பித்தான்.
வீட்டுக்கார மாமி
வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்க, வீடு கூட்டி
மெழுக கன்னியம்மாள் என்கிற ஒரு ஆயா இருந்தார்கள். அவரை கடைத்தெருவில் பார்த்த ராயர்
சார் ‘ஏம்மா அந்த பொண்ணு டியூஷனுக்கு வரல. உனக்கு எதாவது சேதி தெரியுமா, ஊருக்கு எங்காவது போயிட்டுதா’ என்ற கேள்வியை
வைத்தார்.
‘சார் அது அந்த காலேஜு படிக்கிற தருமங்குடி பையன் புதுசா
வந்திருக்கானே அவன் கிட்ட, வீட்டுலயே டியூஷன் சொல்லிகுது. அதான் உங்ககிட்ட
வருல’
‘எனக்கு யாரும் சேதி சொல்லுலயே’
‘பாத்தா சொல்லுவாங்க அய்யா’
‘டியூஷனுக்கு ஆள மாத்துனா அது எனக்கு தெரியணுமில்ல’
‘ஆமாம்’
‘உன்கிட்ட என்ன பேச்சு. நா அவுங்க கிட்ட பேசிக்கறேன்’
ராயர் ஆயாவிடம்
சம்பாஷணையை முடித்துக்கொண்டார். மறுநாள் மாலை அவன் அந்தப்பெண்ணுக்கு அதே ரேழித்திண்ணையில் டியூஷன் நடத்திக்கொண்டிருந்தான். ராயர் சார் வேக
வேகமாக மாமி வீட்டின் உள்ளே வந்தார்.
‘என்ன சசி டியூஷன்
வாத்தியார மாத்திட்டயா. எனக்கு சொல்லவேண்டாமா. தெனம் சாயங்காலம் நீ வருவேன்னு மெனக்கிட்டு ஒக்காந்துண்டு இருக்கேன்’
அந்தப்பெண்குழந்தை எதுவுமே பேசவில்லை.
அவன் எழுந்து அவருக்கு
வணக்கம் சொன்னான். ‘ம்ம் இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல’ ராயர் சொல்லிக்கொண்டே வீட்டின் கூடத்துக்குப் போனார்.
‘நம்ப வேலய நாம
பாப்போம்’ அவன் அந்தப்பெண் குழந்தையிடம் சொன்னான். அவளுக்குப் பெருக்கல் கணக்கு சொல்லிக்கொடுத்துக்
கொண்டிருந்தான்.வாய்ப்பாடு மனனம் செய்யவேண்டும் என்றான். வாய்ப்பாட்டை மேலிருந்து கீழும்
கீழிருந்து மேலும் சொல்லவேண்டுமென்றான்.
‘மாமி மாமி’
ராயர் சார் மாமியை அழைத்துக்கொண்டே
இருந்தார்.
‘வாங்கோ ராயர் சார்’
‘ கொழந்த சசி
டியூஷன் படிக்க ஏன் என்னண்ட வல்லேன்னு கேட்கணும். அதுக்குத்தான் வந்தேன்.
உங்க ஆத்து வேலைக்காரி கன்னியம்மாவை எதேச்சயா கடைத்தெருவில் பார்த்தேன். அவள்தான் சொன்னாள். ’சசிக்கு இப்ப டியூஷன் வாத்தியார் மாத்தி இருக்காங்கன்னு.’ எனக்கு
விஷயமே தெரியாது. என் கிட்ட ஒரு வார்த்த நீங்க
சொல்லணுமா வேண்டாமா’
‘சொல்லணும். ஆனா முடியல. உங்கள நேரா பாத்து விஷயத்தைச் சொல்லலாம்னு இருந்தேன்’ மாமி சமாளித்துப்
பேசிக்கொண்டிருந்தாள்.
‘இது சரியில்ல. கொழந்த எங்கிட்டதான் வந்து டியூஷன்
படிக்கணும்’
‘அவ ஏன் அலையணும். அவளுக்கு வீட்டுலயே சொல்லித்தர ஆள் கெடச்சிருக்கு’
‘மாமி இப்ப என்னத்துக்கு புதுசா ஒரு அஸாமி. ‘ஒரு பத்துரூபாதான் எனக்கு
டியூஷனுக்கு மாச சம்பளன்னு தர்ரீங்க அதுக்கு இவ்வளவு கணக்கா.நாந்தான் சசிக்கு டியூஷன் சொல்லித்தருவேன்’
‘டுயூஷன் வாத்தியார மாத்திதான் பாப்போமேன்னு ஒரு யோஜனை’
என்றாள் வீட்டுக்கார மாமி. சற்றும் அசரவேயில்லை. மாமி வேறு எதுவும் சொல்லவுமில்லை.
அவர்கள் பேசிக்கொள்வதைத் தன் காதில் வாங்கிக்கொள்ளாது அவன் அந்தப்பெண்குழந்தைக்குப்
பாடம் நடத்திக்கொண்டே இருந்தான். அப்படியும் நடக்கின்ற காரியமா அது.
‘இந்த காலத்து பசங்களே சரியில்ல’
‘யார சொல்றீங்க ராயர் சாரு’ இது மாமி
‘காலேஜ் படிக்கிற பசங்கள சொல்றேன்’
‘இப்ப எதுக்கு அந்த பேச்சு’
‘இப்பதான் பேசணும்’ அழுத்தமாக சொன்னார் ராயர்.
‘நீங்க என்ன சொல்ல வறேள்’
‘எங்க தெரு. கமலீசுரன் கோவில் தெரு. அதே தெருவுல ஒரு பையன்
அண்ணாமல காலேஜ்ல எம் காம் படிச்சிண்டு இருந்தான்.
அவனும் ஒரு பொண்ணுக்கு டியூஷன் சொல்லிக்குடுக்கறேன்னு ஆரம்பிச்சான். படிப்பு முடிஞ்சுது.
ஊரவிட்டு கிளம்பினான். தான் டியூஷன் சொல்லிக்குடுத்த அந்தப் பொண்ணயும் கூட்டிண்டு போயிட்டான். பொண்ணோட
அப்பா அம்மா பந்துக்கள் எல்லாம் கதறி பாத்தா. ஒண்ணும் கத ஆகல. எனக்கு அவர புடிச்சிருக்கு.
நா அவரோட போறேன்னு சொன்னா. ரெண்டு கை எடுத்து
கும்பிட்டுட்டு அந்தப்பொண் கொழந்த போயே போயிட்டா.
நா சொல்ல வந்தது இதுதான்’
‘அப்பறம்’
‘அப்பறம் என்ன விழுப்புரம்தான்’
‘பொண் கொழந்தேன்னா ஜாக்கிரதயா இருக்கணும்’
‘இப்ப என்ன சொல்ல வறேள்’
‘நா என்ன சொல்லணுமோ
அத சொல்லியாச்சு. அப்பறம் உங்க சவுகரியம்.
அவா அவாளுக்குத் தலை எழுத்துன்னு ஒண்ணு இருக்கு.. நா வறேன்.’ ராயர்சார் தன் வீட்டுக்குப்புறப்பட்டார்.
இந்த சம்பாஷணை
முழுவதுமாக அவன் காதில் வாங்கிக்கொண்டான். இது எல்லாம் புரிந்துகொள்ளும் ஸ்த்திதியில் அந்த பெண் குழந்தை இல்லை. அவனுக்கோ நன்றாகவே புரிந்தது. நெஞ்சு படக் படக் அடித்துக்கொண்டது.
கல்லூரியில் படித்த நான்காண்டுகள் அந்தப் பெண்குழந்தைக்கு
டியூஷன் சொல்லிக்கொடுத்தான். நல்ல டியூஷன்
வாத்தியார் என்ற பெயர் வாங்கினான். தன் பட்டப்படிப்பை
முடித்துக்கொண்டு தருமங்குடிக்குத் திரும்பினான்.
வேலையைத் தேடி ஊர் ஊராய் நாயாய் பேயாய் அலைந்தான். அவன் கிராமம்
தருமங்குடி அருகே வடலூர் சேஷசாயி கம்பெனியிலியே ப்ரொடெக்ஷன் சூப்பர்வைசர் வேலையும் கிடைத்தது.
முந்நூறு ரூபாய்தான் மாத சம்பளம். ’இதுவே போதுண்டா
உனக்கு’ அவன் மனம் சொன்னது.
ராயர் வீட்டுக்கார மாமியிடம் சொன்ன அந்த
சொல் மட்டும் அவனை விடாமல் பயமுறுத்திக்கொண்டே இருந்தது. ராயர் சாரைத்தான் அவன் எங்கே மறப்பது. வீட்டு உரிமையாளர் மாமி அவன் அங்கு படிக்கும்வரை பெரியம்மாவுக்கு மாத வாடகை
ஏற்றாமல்தான் இருந்தாள். அதனில் பெரியம்மாவுக்கோ அலாதியாய்
ஒரு திருப்தி. அவன் தான் மிகவும் எச்சரிக்கையோடு
இருந்தவன். தினம் தினம் மாலை வேளையில் தில்லக்காளிகோவிலுக்குச்சென்றான்.
காளியைச் சுற்றி வந்தான். தரைமீது வீழ்ந்து
வணங்கினான்.அந்தத்தில்லைக்காளிதான் தன்னைக் காத்து ஊருக்கு நல்ல பெயரோடு அனுப்பி வைத்ததாய் அவனே அவ்வப்போது
நினைத்துக்கொள்வான். அது அப்படித்தான் இருக்கட்டுமே.
-----------------
‘
11.சந்திராஷ்டமம்
என் மனைவிக்கு
முட்டிக்கால் வலி. கொடியை நாட்டிக்கொண்டு அந்த முட்டிக்கால் வலி வந்து ஆண்டுகள் பலவாயிற்று. எத்தனையோ களிம்புகள் தைலங்கள் எண்ணெய்கள்,
மருந்துகள் மாத்திரைகள், காலுக்கு உறை
எனும் தகரத்துணிகள் என்று அத்தனை ராஜ உபசாரங்களும் செய்தாயிற்று. கிலியுற்ற
அந்த மனிதர்களை யூடியூப் என்னும்
பேய் பிடித்து ஆட்டுகிறதே வேறு என்னதான்
செய்வது. முட்டிக்கால் வலி எப்படித் தீரும் என்றுதான் தெரியவில்லை.
ஒரேதான் வழி உண்டு. கால் மூட்டு அறுவை
சிகிச்சை செய்யலாம். எலும்பு நோய்க்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் எவ்வளவு
பவ்யமாய் ஆலோசனை சொல்கிறார்கள்.
இதில் மட்டும்
இல்லை எதிலும் எனக்கு அரை மனசுதான். ஒருக்கால் அவளுக்கு உடன் இருந்து ஒப்பேற்றும் அந்த நொண்டிக்காலும் போய்விட்டால் என்ன செய்வது.
ஓடுகிறவரை இப்படியே ஓடட்டும் என்று விட்டு விட்டேன்.
இதற்கிடையில் கலிபோர்னியாவில்
இருக்கும் என் பெரிய பையன் எனக்கும் என் மனைவிக்கும் விமான டிக்கட் வாங்கி அனுப்பிவிட்டான். எதிர்பார்த்ததுதான்.
மனப்பத்தாயத்தில் கிடந்த அமெரிக்க பயணத்தை மூன்றாண்டுகள்
கொரானா என்னும் ராட்சசன் வந்து தள்ளிப்போட்டது. வயதோ ஆகிக்கொண்டே போகிறது. சரி விடு அந்தக் கழுதையை
என்று ஒரு வழியாய் வெளிநாட்டுப் பயணத்தை நாங்கள்
மறந்துவிட்டுதான் இருந்தோம். ஆனால் கதே பசிஃபிக்
விமான டிக்கட் ஈ மெயிலில் வந்து விட்டதே. என் மனைவிக்குக் கால்கள்
எப்படி வலிக்கிறதோ என்னிடம் அதிகம்
வலி மகாத்மியம் சொல்வதைக் குறைத்துக் கொண்டு விட்டாள்.
அப்படியே கால்களைச் செங்குத்தாய் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் சென்னையிலிருந்து
லாஸேஞ்சலிஸ் இருபது மணிநேர எலிப்பொறி விமான
இருக்கைப் பயணத்திற்கு சவுகரியப்படுமா என்றால் படவே படாது.
இது பச்சைக்குழந்தைக்கும் தெரிந்த செய்தி. என் பையனுக்குத் தெரியாதா என்ன? தெரிந்துதான் இருந்தது.. ஆக லெக் ரூம் வசதி கொண்ட
விமான சீட்டு வாங்கி அனுப்பியிருந்தான்.அதன்படி பயணிக்கு கால்கள் வைத்துக்கொள்ள சற்றே இடம் கிடைக்குமாம்.
ஒரு சாணிலிருந்து ஒண்ணரை சாண் அகலத்திற்கு
அந்த இடம் வரலாம். வெளிநாட்டு விமான
பயணத்திற்கு மாத்திரம் விவரம் சரியாய்ச் சொல்பவர்கள் கண்ணில் அகப்படவே மாட்டார்கள்.
சாதாரணமாய் எகானமி வகுப்பு டிக்கட்டிற்கும்
அந்த லெக் ரூம் வசதி கொண்ட எகானமி வகுப்பு சீட்டிற்கும்
வித்தியாசம் உண்டு. அந்த வகையில் எங்கள் இருவருக்கும் ஐம்பத்து ஒன்பதாயிரம்
அதிகம் கொடுத்து விமான சீட்டு வாங்கியிருப்பதாய் பையன் சொன்னான்.
பயணநாளன்று முன்னதாகவே புறப்பட்டு சென்னை விமான நிலையம்
வந்தாயிற்று. சீட் அலாட்மெண்ட் எது என உறுதிசெய்து
போர்டிங் பாஸ் வாங்கவேண்டும். கதே பசிஃபிக் என்னும் பெயர் தொங்கும் விமானப் பயண சேவை நிறுவன கவண்டரைத் தேடினோம். அவர்களிடம் நாம் வாங்கியிருக்கிற விமான டிக்கட் காபியைக் காண்பிக்கவேண்டும். அந்த கவண்டரைத் தேடிக் கண்டு பிடிக்கவே ஒருவர் உதவ வேண்டியிருந்தது. மெகாபோனில் சொல்லப்படுகின்ற அறிவிப்புக்கும் டிஸ்பிளே யில்
தெரியும் எண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரியவில்லை. நாங்கள் இப்படியும் அப்படியும்
அல்லாடுவதைப் பார்த்து எங்களுக்கு உதவுவதற்கென்று
ஒரு நபர் குறுக்கிட்டார். அப்படி எத்தனையோ பேர் வழிகள். என்னையும் என் மனைவியையும் வீல் சேரில் அமர்த்தி அழைத்துக்கொண்டு போன அந்த நபர்
ஒரு கண்ணாடிக் கதவைத் திறந்தார். வீல் சேரை
நகர்த்திக்கொண்டே பத்து தப்படி நடந்திருப்பார். அந்த ’’கதே பசிஃபிக்’ கவுண்டர்
வந்துவிட்டது. விமான டிக்கட் பிரிண்ட் அவுட்டை
எங்களிடமிருந்து வாங்கிக் கவுண்டரில்
நீட்டினார். அத்தோடு அந்த நபரின் வேலை முடிந்து போனது. ஐநூறு ரூபாய் தனக்குக் கூலியாக வேண்டும் என்றார். நான் தான் அவருக்கு ஐநூறு ரூபாய்
எடுத்துக் கொடுத்தேன். அவர் அங்கிருந்து அகன்றதும் வேறு இரண்டு நபர்கள் எங்கள் வீல் சேரைத் தொட்டுக்கொண்டு நின்றனர்.
கவுண்டரில் இருந்தவர் எங்களை அழைத்தார். ‘ நீங்கள் இருவரும்
சீனியர் சிடிசென்கள். அவசரகால திறப்புக்கதவு அருகே சீட் அலாட் ஆகி டிக்கட் கொடுத்து இருக்கிறார்கள். இது தவறு. சீனியர்
சிடிசென்கள் அதிலும் வீல் சேர் வசதிப்பயணிகள்.
நீங்கள் வேறு இருக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.’ என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘தவறாக இருக்கை கொடுத்து இருக்கிறார்கள்
என்றால், உங்கள் விமான நிறுவனம்தானே அதனைக் கொடுத்திருக்கிறது. நீங்களே சரி செய்யுங்கள்’
என்றேன்.
‘இருக்கை எண் மறிவிடும்’
‘எது சரியோ அப்படிச்செய்யுங்கள்’ நான் பதில் சொன்னேன்.
லாஸேஞ்சலிசில் இருக்கும் பையனுக்குப் போன் செய்தேன். மொபைல் வாட்ஸ் ஆப்பில்தான்.என் பையனிடம் விமான நிறுவன கவுண்டரில் அவர் சொன்னதைச்சொன்னேன்.
பையன் மொபைலை கவுண்டரில்
உள்ள நபரிடம் கொடுக்கச்சொன்னான். நானும் அப்படியே செய்தேன்.
‘ எகானமி ஃப்லெக்சிப்ல் என்று எங்கள் பெற்றோர்களுக்கு சீட் அலாட் ஆகியது. வயதான
பெற்றோர்கள். லெக் ரூம் வசதி சற்று வேண்டும்.
ஆகத்தான் ரூபாய் ஐம்பத்தொன்பதாயிரம் எக்ஸ்ட்ரா
கட்டியிருக்கிறேன். நீங்கள் இப்போது
சீட் மாற்றுகிறேன் என்றால் அந்த லெக் ரூம் வசதி வேண்டுமே’ என்று குரல் கூட்டிப் பேசினான்.
‘இதோ பாருங்கள். வீல்சேர் பயணித்து வரும் நபர்கள் விமானத்தின் எமர்ஜென்சி கதவு அருகே அமரக்கூடாது. அது விதி. ஆக வேறு இடம்தான்
வேறு இருக்கை எண்தான். அவர்களிடம் சொன்னேன்.அவர்களும்
ஒத்துக்கொண்டு விட்டார்கள்’
‘அவர்கள் விபரம் தெரியாதவர்கள்.ஒத்துக்கொண்டு விட்டார்கள். அவர்கள் கால்களை வசதியாய் வைத்துக்கொள்ள நான் இத்தனை ஆயிரம் அதிகம் கொடுத்திருக்கும் விஷயம்
தெரியாதவர்கள்’
‘வீல் சேர் வசதி
உபயோகிப்போர் விமானத்தின் எமர்ஜென்சி
கதவருகே அமரக்கூடாது அந்த விதியை நான் கடைபிடித்தாக வேண்டும். மற்றபடி ரூபாய் அதிகம்
கொடுத்த சமாச்சாரத்திற்கு விமான கம்பெனிக்கு எழுதிக்கேட்டுக்கொள்ளுங்கள்’
முடித்துக்கொண்டார் கவுண்டர் பொறுப்பாளர்.
அமெரிக்காவில் இருக்கும் பையனும் போனை வைத்துவிட்டான்.
நாங்கள் கொண்டு வந்த மூன்று பெரிய பெட்டிகளையும்
கதே பசிஃபிக் கவுண்டரில் ஒப்படைத்து
விட்டுக்க் கிளம்பினோம். பயந்து பயந்து முக்கால் பாகம் நிரப்பப்பட்ட எங்களின்
சூட் கேஸ்கள் எடை போடப்பட்ட்ன. விரைத்துக்கொண்டு
நிற்கும் ஸ்டிக்கர்கள் அவைகளில் ஒட்டப்பட்டன.
‘லாஸ் ஏஞ்சலிஸ்
ஏர் போர்ட்ல எடுத்துகலாம் போங்க’ கவுண்டர்
பொறுப்பாளர் எங்களுக்குச்சொன்னார்.
நானும் என் மனைவியும்
போர்டு பாஸ்கள் வாங்கிக்கொண்டு இம்மிக்ரேஷன் அதிகாரியைப் பார்க்க வீல் சேரில் புறப்பட்டோம்.
அவ்வதிகாரி கடமைக்கு இரண்டு கேள்வி கேட்டார். பதில் சொன்னோம். பாஸ் போர்ட் புத்தகத்தில் சீல்
போட்டார், ’போயிட்டே இரு போ’ என்றார். வீல்
சேர் தள்ளும் அந்த ஆட்கள் இருவரும் எங்களோடு
இருந்தார்கள். பிறகு செக்யூரிடி செக் கவுண்டருக்குப் போனோம். அங்கே எங்கள் கைப் பையில்
உள்ள சாமான்கள், மேல் சட்டை பேண்ட், பாக்கெட்கள், பாஸ்போர்ட் போர்டிங்க் பாஸ் எல்லாம் ஆய்வு செய்து அனுப்பி வைத்தார்கள். வீல்
சேர் தள்ளுவோர் எங்களை தள்ளிக்கொண்டு போய்
விமான கேட் அருகே விட்டார்கள்.
‘’காசு ‘ என்றார்கள்.
இரண்டு பேருக்கும் தலா ரூபாய் நூறு கொடுத்தேன்.
‘நீங்களே வச்சிகுங்க’ சொல்லிப்போனார்கள். ‘இதெல்லாம் ஒரு
பணம்’ நான் மொழி பெயர்த்துக்கொண்டேன்.
விமான கேட் அருகே நிற்கும் கதே பசிஃபிக் அதிகாரியிடம் விமான
சீட் மாற்றிப்போட்டது குறித்து விசாரித்தேன். வீல் சேர் வசதியில் பயணிப்போர் எமர்ஜென்சி
கதவருகே அமரக்கூடாது இது விதி என்று சொல்லி
என்னை அனுப்பி வைத்தார்கள்.
இரவு ஒரு மணி.
வீல் சேர் தள்ளும் பையன்கள் அதே இருவர் வந்தார்கள். இரண்டு மணிக்கு எங்கள் விமானப்புறப்பாடு. விமான கேட் அருகே நின்ற
அதிகாரியைப் பார்த்தோம். போர்டிங் பாஸ் பாஸ்
போர்ட் காட்டி விட்டுப் புறப்பட்டோம். விமானக்கதவு வரை வீல் சேர் தள்ளிக்கொண்டு வந்த இருவரிடம்
‘மீண்டும் தலா
நூறு ரூபாய் என்று எடுத்துக்கொடுத்தேன்.
‘ இத நீங்களே வச்சிகுங்க’ அதே பதிலைச் சொல்லி விட்டுப்புறப்பட்டார்கள்.
ஆறு மணி நேர விர் விர் பயணம். ஹாங்காங்க் ஏர்போர்ட் வந்தது. இங்கு கனெக்டிங்க் விமானம் மாற வேண்டும். அதுவும் கதே
பசிஃபிக் நிறுவன விமானம் தான். ஹாங்காங்க்
ஏர்போர்ட்டில் செக்யூரிடி செக் முடித்து
லாஸேஞ்சலிஸ்க்குப் புறப்படும் விமானத்துக்கு வந்தோம். இங்கு வீல் சேர்
உருட்டியவர்கள் சீனாக்காரர்கள் . அவர்கள் யாரும் எங்களிடம் காசு கேட்க வில்லை. நான் டாலர் நோட்டுகள் சில தயாராய்
வைத்திருந்தேன். கேட்டால் கொடுக்கலாம் என்று இருந்தேன். அவர்கள்தான் கேட்கவில்லையே.
விமான அதிகாரிகள் இருவர் வந்து எங்களை விசாரித்து ‘ உங்களுக்கு
இருக்கை மாற்றியிருக்கிறோம். இது கொஞ்சம் வசதியாய் இருக்கும் அமர்ந்து பயணியுங்கள்’ என்றனர். போர்டிங் பாஸ் முன்பு
கொடுத்ததை வாங்கிக்கொண்டு புதியதாய்த் தந்தார்கள். லாஸ் ஏஞ்சலிஸ் பயணம் இது பதிநான்கு
மணி நேரப்பயணம். இப்போது அலாட் ஆன சீட்டுக்களோ ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த அடுத்த வரிசையில்
இருந்தன. கால்கள் வைத்துக்கொள்ளச் சற்று இடம் கிடைத்தது. கடவுளின் ஆசீர்வாதம்.
‘சீட் மாத்திடணும் நாம பக்கத்துல பக்கத்துல உக்காரணும் இல்லன்னா ரொம்ப
சிரமம்’ என்றாள் மனைவி. நான் விமானப்பணிப்பெண்ணிடம் விபரம் சொன்னேன். அவர் எங்களுக்கு
அடுத்த அடுத்த சீட் இருக்கிறமாதிரி யாரோ ஒரு
சப்பை மூக்கு மஞ்சள் வண்ணப் பெண் மணியிடம்
பேசி வாங்கித்தந்தார்.. நாங்களும் அப்படியே அடுத்த அடுத்த சீட்டுக்களில் ஒரே வரிசையில் அமர்ந்து
கொண்டோம். லாஸேஞ்சலிஸ் விர் விர் பயணம் நீல நிற வெள்ளை நுரை பசிஃபிக் சமுத்திரத்தின்
மீது தொடர்ந்தது.
உணவு கொடுக்கும்
பணிப்பெண் எனக்கு உனவு கொடுத்துப்போனாள். என் மனைவிக்குக் கொடுக்கவில்லை.
அதுவும் வரட்டுமே என்று காத்திருந்தாள். அது
வந்தது. எனக்கு வந்த பிளேட்டில் என் மனைவிக்கு
வந்த உணவு போலில்லை. உணவாய் வந்த எதற்கும்
எங்களுக்குப் பெயர் தெரியாதுதான்.
‘இது பாக்கட் வேற மாதிரி
இருக்கு’
‘என் பேரு போட்டு ஒரு ஸ்லிப் என் பாக்கெட் மேல ஒட்டி இருக்கு’
‘என் பிளேட்டுல
இருக்குற பாக்கெட்ல என் பேரு போட்ட
ஸ்லிப் எல்லாம் ஒட்டி இல்ல’
விமானபணிப்பெண்ணை அழைத்து விபரம் கேட்டேன். ‘இரு வருக்கும்
ஒரே மாதிரிதானே உணவு இருக்க வேண்டும்’ என்றேன்.
‘என் பிளேட்டில்
பெயர் இருந்தது. அவர் பிளேட்டில் அவர் பெயர் இல்லை’ என் மனைவி சொன்னாள்.
‘சீட் சேஞ்ச் பண்ணிகிட்டிங்களா’
‘ஆமாம்’
அப்ப உங்க பிளேட் அந்த நபர் கிட்ட போயிருக்கும்’
நான் சீட் மாற்றிக்கொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவர்
தன் உணவை முடித்து விட்டு ரெஸ்ட் ரூமுக்கு
விரைந்து போனார்.
விமானப் பணிப்பெண் சிரித்துக்கொண்டார். ’சீட் உங்களுக்குள்ளாக
மாற்றிக்கொண்டீர்கள். இந்த விபரம் விமான கேடெரெர் வரைக்கும் சென்று இருக்காது’
‘’ எனக்கு வந்த உணவு அந்தப்பெண்மணிக்குப்போனது. அவர் சாப்பிட்டாயிற்று.
நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன். இப்போது என்ன செய்வது’
‘உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அசைவ உணவுதான்’
;அய்யோ’ என்றேன். ‘பணிப்பெண்ணிடம் என் மனைவி ‘ இது அசைவம். எங்களுக்கு வேண்டாம்’ என்றாள்.
‘வெஜ் மட்டுமேவேண்டும்’
என்றேன் நான்.
உங்களுக்கு வந்த வெஜ் உணவை அந்தப்பெண் சாப்பிட்டு விட்டாள். உங்களுக்கு நான்வெஜ்ஜே வழங்கப்பட்டுள்ளது’
‘நான் அசைவம் தொட
மாட்டேன்.’
விமான பணிப்பெண் புன்னகை செய்தாள். எங்கள் இடம் விட்டு நகர்ந்தாள்.
‘என் மனைவிக்கு வந்த சைவ உணவை ஆளுக்கு ஒரு வாய் எடுத்துக்கொண்டு இரவு உணவு
முடித்தோம்.
சீட் மாற்றிக்கொண்ட அந்தப்பெண்ணிடம் விமான பணிப்பெண் நடந்து போன விஷயத்தை எடுத்துச்சொன்னாள்.
‘ என் பெயர் போட்டு வரும் அந்தச் சைவ உணவை அவள் என்னிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்றாள்.’
எனக்கு வழங்கப்படும்
உணவை அந்தப்பெண்ணிடம் தரச்சொல்லி என்னிடம் உத்திரவாய்ச் சொல்லிப்போனாள்.
அதற்குப்பிறகு
சப்பை மூக்குக்காரி இரண்டு பெரிய ஆப்பிளையும்
ஒரு ரஸ்க் பாக்கெட்டையும் என்னிடம் கொடுத்தாள்.
‘ஃபார் யூ ப்ளீஸ்’
‘ப்லெண்டி’ என்றேன்..
நான் வெஜ் சாப்பாடு பாக்கெட்டை அவளிடம் நீட்டினேன்.
‘சாரி ‘ என்றாள்.
அருகிருந்த விமானபணிப்பெண் அதனை லபக்கென்று வாங்கிக்கொண்டாள். ’தாங்க் யூ’ இரண்டு
முறை சொன்னாள்.
‘நல்ல காலம் பாக்கெட்டை பிரித்து சாப்பிடாமல் இருந்தீர்களே’
சொல்லிய மனைவிக்கு
‘ எனக்கு இன்று
சந்திராஷ்டமம் அதான் இப்படி எல்லாம்’ பதில்
சொன்னேன்.
லாஸேஞ்சலிஸ் ஏர்போர்ட் வந்தது. விமானத்தை விட்டு இறங்கினோம். வீல் சேர்
வைத்துக்கொண்டு தயாராக நின்ற இரண்டு கருப்புப்
பெண்மணிகள் எங்களை அழைத்துக்கொண்டு போனார்கள்.
என் மொபைலில் வைஃபை வசதி கிடைக்கவில்லை. இளித்துக்கொண்டு நின்றது.
இம்மைக்ரேஷன் ஃபார்மாலிடிஸ் முடித்தோம். லக்கேஜ் யார்டு
க்கு வந்து கன்வேயரில் ஓடிக்கொண்டு இருந்த
மூன்று சூட் கேஸ்களையும் எடுத்துக்கொண்டு
புறப்பட்டோம். தூண்கள் அடர்ந்து காணப்படும்
ஏர்போர்ட் வெளி கேட் டுக்கு வந்தோம். சுற்றும்
முற்றும் நோட்டம் விட்டுப் பார்த்துக்கொண்டே
வந்தேன்.
என் பெரியபையனும் மருமகளும் பேரக்குழந்தையொடு எங்களுக்காகக்
காத்திருந்தார்கள்.
‘யோர் பீபல் ஷூர்’
ஆம் என்றேன். வீல்
சேர் தள்ளி வந்த கருப்புப் பெண்கள் எங்களுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டார்கள். .காசு எதுவும்
எதிர் பார்க்கவும் இல்லை நாங்களும் கொடுக்கவில்லை. நாங்கள் எங்கள் பையன் காரை நோக்கி நடந்து சென்றோம்.
வழி மறித்துக்கொண்டு எந்த டாக்சி டிரைவரும் சென்னை ஏர்போர்ட் மாதிரி வம்பு பண்ணவில்லை. கூட குறைய சொல்லவில்லை.
நான் நடந்தது மட்டுமே சொன்னேன்.
------------------------------------------
’
12.களவும் ஒரு
கலை
தினம் மாலை நான்கரை மணி ஆனால் என் பேரன் சைக்கிளை எடுத்துக்கொள்வான்.
வீதியில் இறங்கி இந்த முனைக்கும் அந்த முனைக்கும்
ஒரு பத்து தடவையாவது போய்விட்டுத்தான் திரும்பவும் வீட்டுக்குள்
வருவான். அதற்குக் கட்டாயம் என்னைக் கூப்பிடுவான். தெருவில்
சும்மாதான் நான் நின்று கொண்டிருக்க வேண்டும். அதுவே
அவனுக்கு நிறைவு. வேறு வேலை என்னதான் இந்த தாத்தாவிற்கும் இருக்கிறது.
ஆக நான் போய்த் தெருவில் கொடிமரம் போல்
நின்றுகொள்வேன்.
சென்ற நவம்பர் மூன்றாம்தேதிதான் என் பேரனுக்குப் பத்தாவது பிறந்த நாள். என் பையன் தன் பிள்ளைக்குப் புது ஹெர்க்குலிஸ் வயலெட்
வண்ணத்தில் பள பள என்று பத்தாயிரம்
ரூபாயுக்கு வாங்கிக்கொடுத்து இருக்கிறான். சைக்கிள் வாங்கி ஒரு மூன்று மாதம் ஆகியிருக்கலாம்..முதல்
தளத்தில் என் பையனின் வீடு. கீழ் தளத்தில்தான் இரு சக்கர வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கும்.
‘வா தாத்தா சைக்கிள் ஓட்டப் போகலாம்’
‘சரி’ என்றேன். இருவரும் கீழ் தளம் வந்தோம். கீழ் தளம்
வந்த பேரன் சுற்றும் முற்றும் பார்த்தான். திரு திரு என்று விழித்தான்.
‘தாத்தா என் சைக்கிளை காணோம்’
‘சைக்கிளைக் காணோமா’
‘ஆமாம் தாத்தா நேற்று வைத்த இடத்தில் சைக்கிள் இல்லை’
‘அப்புறம்’
கண்கள் கலங்க ஆரம்பித்தது. என் பையனும் மருமகளும் அவரவர்கள்
அலுவலகத்திலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்கள் வந்து சேர இன்னும் இரண்டு
மணி நேரம் ஆகலாம். மணி நான்கரைதானே ஆகிறது. நானும் என்பேரனும் வீதியில் எங்கேனும் அவன்
சைக்கிள் நிற்கிறதா எனப் பார்த்தோம். அப்படிக்கூட நிற்குமா என்ன?
கீழ் தளத்தில்
ஒரு மலையாளி நாயர் குடியிருந்தார்கள். அந்த அம்மாவிடம் சேதி சொன்னோம்.
‘யான் சம்ப் மோட்டார்
போட்டென். அந்த சுவிட்ச் போடு அருகே ஒங்கள்
பேரன் சைக்கிள் இருந்தது. அதனை ஓரம் பண்ணிட்டுத்தான்
மோட்டார் போட்டென். எனக்கு நன்றாகவே நினைவு இருக்கிறது. அப்போ மணி பதினொன்று இருக்கும். அது வரை அந்த சைக்கிள்
அங்கு தான் நின்று கொண்டிருந்தது, பெறவு என்னவானதோ. காலமே கெட்டுக்கிடக்கிறது.
யாரையும் நம்பமுடியவில்லை’ அவ்வளவுதான் பேசினார்
அந்த அம்மா. இதுவே அதிகம் என்று எனக்குத் தோன்றியது.
‘பக்கத்துத் தெருவில் நிறைய பையன்கள் சைக்கிள் ஓட்டுபவர்கள்
இருக்கிறார்கள். அங்கே சென்று பார்க்கலாம் தாத்தா’
‘சரி வா போகலாம்’ என்றேன். இருவரும் பக்கத்துத்தெருவில்
நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களை யெல்லாம் ஒவ்வொன்றாகப் ப்பர்த்துக் கொண்டே வந்தோம்.
எதுவும் என் பேரன் சைக்கிள் போலில்லை. அப்படியே இருந்தாலும் கேட்டு விடத்தான் முடியுமா.
பேரன் சிறு பையன் அவனுக்குச் சைக்கிள் தொலைந்த துயரம். நாமும் எதாவது செய்தாகவேண்டுமே. இன்னும் அருகில் ஒரு
கடைத்தெரு. அதனில் முடிந்தவரைக்கும் போனோம். வீதியில் போகும் சைக்கிளை எல்லாம் ஒவ்வொன்றாக
வேடிக்கைப் பார்த்தோம். அவரவர்கள் சைக்கிளில் வேக வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
எங்கள் குடியிருப்பு அருகில் லோடஸ் கல்யாண மண்டபம் இருந்தது. அதனுள்ளாக சென்று அங்கிருந்த
செக்யூரிட்டியிடம் ஒரு பாட்டம் சைக்கிள் தொலைந்த சேதி சொல்லி முடித்தோம்.
‘இங்கு சி சி டி வி கேமரா கூட இருக்கிறது பார்க்கலாம்.
உங்கள் வீதி இதனில் கவர் ஆகாது. ஆக இது ஒன்றும்
வேலைக்கு ஆகாது. ’ என்று கையை விரித்தார் அந்த
மண்டபக்காரர். அருகில் ஒரு அடையாறு ஆனந்த பவன் மும்முரமாய் இயங்கிக்கொண்டு இருந்தது. அதன் வாயிலில் பதவிசாய் ஒரு சி
சி டி வி கேமரா உட்கார்ந்திருந்தது. அது எங்கள் வீதியை நோக்கிக்கொண்டே இருந்தது. அதற்குள்ளாக சைக்கிள் தொலைந்த சமாச்சாரம் கேள்விப்பட்ட எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர், என் பையனின்
ஆத்ம நண்பர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவருடைய பையனும் என் பேரனோடு அன்றாடம் சைக்கிளில் ரவுண்ட் அடிப்பவன்தான். என்
பையனின் நண்பர் என்னைப்பார்த்தது,
‘நேத்தி நானும் பாத்தேன். உங்க பேரன் சைக்கிளை விட்டுக்கொண்டிருந்தான். அது காலையில் வீட்டில் இருந்தும்
இருக்கிறது. அதற்குப் பிறகுதான் யாரோ
ரவுட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள். அடையாறு ஆனந்த பவன் சி சி டி வி கேமரா ஃபுட்டேஜ் ல் நிச்சயம் இந்த சமாச்சாரம் கவர் ஆகியிருக்கும்
வாங்க எதுக்கும் கேட்டுப்பார்க்கலாம். என்னதான்
நடந்தது, யார் அப்படி செய்தது
தெரியவேண்டுமே’ என்றார்.
அருகிலுள்ள அந்த
அடையாறு ஆனந்த பவனுக்கு என் பையனுடைய நண்பரும் நானும் போனோம். சைக்கிளைத் தொலைத்துவிட்ட என் பேரனும் எங்களுடன் கூடவே வந்தான். கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் சைக்கிள்
திருடு போனது பற்றிச்சொன்னோம்
. ’ சி சி டி வி கேமரா வில் பார்த்துச்சொல்லுங்கள். நீங்கள்
தான் எங்களுக்கு ஒரு ஒத்தாசை செய்யவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டோம். அவர் மானேஜர் ஒருவரைக்
காட்டி அவரைப் போய்ப் பாருங்கள் என்றார். அந்த
மானேஜரிடம் சென்றோம். திரும்பவும் சைக்கிள்
திருடு போன கதையை ஆரம்பித்துச் சொன்னோம்.’ சி சி டி வி கேமரா பார்த்து என்ன நடந்தது
எப்படி நடந்தது என்கிற விபரம் தெரிந்தால் தேவலை. உதவி செய்யுங்கள்’ என்றோம். அவர் காஷியர்
மேசை அருகே வந்தார்.
‘ களவு போனது இன்றுதான் சரி, அது
சுமாராக எத்தனை மணிக்கு அது நடந்திருக்கலாம்?’
மானேஜர் கேட்டார்.
‘ஒரு பதினோரு மணிக்கு மேல்தான் திருட்டு நடந்திருக்கவேண்டும். ஏனெனில் கீழ் தளத்தில் குடியிருக்கும் மலையாள அம்மா சம்ப் மோட்டார் போட்டிருக்கிறார். அவர் அந்த
சைக்கிளை காலை பதினோறு மணிக்குப் பார்த்திருக்கிறார்’ நான் தான் சொன்னேன்.
பதினோறு மணியிலிருந்து வீதியில் நடந்தது என்ன என்பதை கணிப்பொறித்திரைக் காட்டிக்கொண்டே இருந்தது. என் பையனின் நண்பரும்
நானும் கூர்ந்து கணினித்திரையைப் பார்த்துக்கொண்டே இருந்தோம். எனக்கு ப்ரீ கே ஜி பயிலும் சின்ன பேரன் பேரன் ஒருவன் இருக்கிறான். எப்போதும் அவனைக் காலை ஒன்பதரை மணிக்கு நான் பள்ளியில்
விட்டு விட்டு வருவேன். இன்று சரியாக பன்னிரெண்டரை மணிக்கு அவனை அழைத்துவரப் பள்ளிக்குச்சென்றேன். சரியா பன்னிரெண்டு நாற்பதுக்கு
நானும் என் பேரனும் பள்ளிளியிலிருந்து
திரும்பி வந்தோம். இவை எல்லாவற்றையும் கணினித்திரைக் காட்டியது. பன்னிரெண்டு
இருபதுக்கு ஒருஆள் டிவிஸ் எக்செலில் எங்கள்
வீதிக்குள் நுழைகிறான். அவனே பன்னிரெண்டு ஐம்பதுக்கு திரும்பிப் போகிறான். அவன்
வண்டியின் பின் பக்கம் என் பேரனின் சைக்கிளை வைத்துக் கட்டி எடுத்துச்செல்வதைத் திரையில்
பார்த்து விட்டோம். அதனையே மீண்டும் மீண்டும்
போட்டுப் பார்த்தோம். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர். முழுக்கை சட்டை பேண்ட் அணிந்து எக்செல் வண்டியை
ஓட்டிக்கொண்டு போவதைப் பார்த்தோம்.
என் பையனின் நண்பர் தன் மொபைலுக்கு அந்த ஃபூடேஜ்
பிட்டை கேட்டு வாங்கிக்கொண்டார். அவரே
என் மொபைலுக்கும் அதனை ஃபார்வேடும் செய்தார்.
அதற்குள்ளாக என் பையனும் மருமகளும் வீட்டுக்கு வந்து விட்டார்கள்.
இருவருக்கும் சைக்கிள் திருடு போன விபரம் சொன்னோம். அடையாறு ஆனந்த பவன் சி சி டி வி
கேமரா ஃபூடேஜ் என் பையன் மொபைலுக்கு அனுப்பப்பட்டது.
என் பையனும் மருமகளும் உடனே எங்கள் வீதியிலிருந்த
பத்து வீடுகளுக்கும் சென்றார்கள். சைக்கிள்
தொலைந்த செய்தியைச் சொல்லி சி சி டி வி கவரேஜைக் காண்பித்து ’ விபரம் ஏதும் தெரியுமா’ என்று
கேட்டார்கள். தெருக் கோடியில் ஒரு வீட்டில் சி சி டி வி கேமரா பொறுத்தப்பட்டிருந்தது.
அந்த வீட்டுப்பெண் மணி ஒரு வழக்கறிஞர். என் பையனும் மருமகளும் அந்த வக்கீலிடம் சைக்கிள் திருடு போன விஷயம் சொல்லி சி சி டி வி
கேமரா ஃபூடேஜைக் காண்பித்திருக்கிறார்கள்.
‘ இந்த ஆளு என்
வீட்டுக்கு வந்தார். ஒரு ஆர்ஃபனேஜுக்கு நிதி வசூல் செய்ய மாதா மாதம் வருபவர்தான். நானும்
மாதம் இவ்வளவு என்று அந்த ஆர்ஃபனேஜுக்குத் தருவேன். என் வருவாயில் ஒரு சதவீதம் அன்பளிப்பு என அவரிடம் வழங்கி ரசீது வாங்கிக் கொள்வேன். என் வீட்டு
வாயிலிலும் சி சி டி வி கேமரா பொறுத்தியிருக்கிறேன். அது என்ன விபரம் காட்டுகிறது பார்ப்போம்’
என்று சொல்லிய அந்த வழக்கறிஞர் சி சி
டி வி கேமரா பதிவை மதியம் பன்னிரெண்டு மணியிலிருந்து
ஓடவிட்டுக்காண்பித்தார். டிவிஎஸ் எக்செலில் வரும் நபர் அந்த வக்கீல் வீட்டு வாயிலில்
இறங்கியதிலிருந்து, பேசிக்கொண்டிருந்தது ஆர்ஃபனேஜுக்குப் பணம் பெற்றுக்கொண்டு ரசீது
கொடுத்தது திரும்பவும் தன் எக்செல் வண்டியைக்
கிளப்பிக்கொண்டு புறப்பட்டது வரைக்கும் பதிவானதை எல்லோரும் பார்த்தோம்.
‘நா நாலு வருஷமா மாதம் தவறாம அந்த ’தவம் செய்’ ஆர்ஃபனேஜுக்கு பணம் குடுத்து இருக்கேன். ரசீது வாங்கியிருக்கேன். நானு ஒரு வழக்கறிஞர் வேற. ரொம்ப அவமானமா இருக்கு சார்’ அந்தப்பெண்மணி சொல்லிக்கொண்டார்.ஆர்ஃபனேஜ்
ஏஜண்ட் தொலைபேசி எண்ணையும் என் பையனிடம் கொடுத்தார்.
என் பையன் அந்த வக்கீல் சொன்ன விபரத்தையெல்லாம்
அப்படியே தன் நண்பரிடம் சொல்லி முடித்தான். என் பையனின் நண்பர்
அந்த மொபைல் போனுக்குக் கால் போட்டார்.
‘ யார் பேசுறது
தவம் செய் ஆர்ஃபனேஜ் ஏஜண்ட் தானே’
‘ஆமாம் நீங்க யாரு’
‘எம் வி நகர் பதினைந்தாவது கிராஸ்லேந்து பேசுறோம் இந்தத் தெருவுல ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள்
புதுசு காணும். ஜூனியர்ங்க ஓட்டுறது. நீங்க எதாவது அந்த சைக்கிளை பாத்திங்களா’
‘சார் என்ன பேசுறீங்க நான் இப்ப திருப்பத்தூர்ல இருக்கேன். என்கிட்ட எதுக்கு
பேசுறீங்க’
‘மதியம் ஒரு மணிக்குதானே இந்தத் தெருவுக்கு வந்து இருக்கீங்க’
‘ வந்தேன்.’
‘வீதியில் கடைசியில் இருக்கும் லேடி லாயர்கிட்ட டொனேஷன்
வாங்கி கிட்டு ரசீது கொடுத்து இருக்கீங்க’
‘ஆமாம்’
’ திரும்பி போகும் போது உங்க வண்டில அந்த புது சைக்கிள கட்டி எடுத்துகிட்டு
போயிருக்கிங்க அந்த விஷயத்தை அதே வீதி முனையில்
இருக்குற அடையார் ஆனந்த பவன் சி சி டி வி ஃபூடேஜ் அழகா காட்டுது ஒங்களுக்கு அத அனுப்பறேன் மொதல்ல அத பாருங்க. பாத்துட்டு பேசுங்க’
என் பையனின் நண்பர் சி சி டிவி கவரேஜை அந்த ஆர்ஃபனேஜ் ஏஜண்ட் மொபைலுக்கு அனுப்பி வைத்தார்.
இரண்டு நிமிடம்தான் ஆகியிருக்கும்’
‘சார் நான் நேரா வரேன் சார். அந்த புது சைக்களோடயே வரேன் சார். ஒரு ஹாஃப்னவர்ல நான் அங்க இருப்பேன் சார். போலிஸ் கம்ப்ளெயிண்ட் அது இது
எதுவும் வேணாம் சார் தோ வரேன் சார்’
‘ திருடிகிட்டு போன அந்தப் புது சைக்கிள் வண்டியோட இந்த எடத்துக்கு நீங்க வருணும். ஒங்களுக்கு அரை மணிதான் டைம் தெரிதா’
‘சார் தோ பொறப்பட்டு வறேன். அந்த சைக்கிளோடயே வரேன். என் டூவிலர்லேயே வரேன்.’
சொல்லிய அந்த ஆர்ஃபனேஜ் ஏஜண்ட் சொன்னபடி அரைமணி நேறத்துக்கு எல்லாம் எம் வி நகர் பதினைந்தாவது கிராசுக்கு அதே டூவீலரில் வந்தார். அவர் பின் பக்கம் என் பேரனின்
புது சைக்கிள் கட்டித்தானிருந்தது. முன் பக்கத்தில் ஒரு சிறுவன் கோணி குறுக்கிக்கொண்டு
அமர்ந்திருந்தான்.
என் பையன் என் மருமகள் என் பையனின் நண்பர் அந்த பெண் வழக்கறிஞர்
எல்லோரும் அவனின் டூ வீலர் வருகைக்காக வீதியில் காத்திருந்தோம்.
‘சார் தப்பு நடந்து போச்சு. என்ன மன்னிச்சுடுங்க. எல்லாம்
இந்த பையனாலாதான்.’ தன் வண்டியில் முன்னால் அமர்ந்து வந்த சிறுவனைக்காட்டினார்.’ சைக்கிள்
வேணும் சைக்கிள் வேணும்னு இவன் தொல்லை தாங்க முடியல தெனம் ஒரே பொலம்பல் அழுகை. என்னால ஒரு பழைய சைக்கிள்
கூட வாங்கி தர முடியல. ரொம்பவும் கஷ்டப்படுறேன்.
ஒரு சைக்கிள அதுவும் புதுசா பள பளன்னு பாத்த
ஒண்ணே என் பையன் ஞாபகம் வந்து போச்சி என் புத்தியும் பீய திங்க போயிடுச்சி என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க’ இரண்டு
கைகளாலும் கும்பிட்டார்.
‘உங்கள மன்னிக்கறது இருக்கட்டும். இனிமே இந்த தெருவுக்குள்ள
நீங்க அடி எடுத்து வச்சிடாதீங்க. இண்ணையோட இந்த வீதிக்கு வர்ரத மறந்துடுங்க. ரொம்ப ரொம்பக் கேவலங்க இது’ என்றார் அந்தப்பெண்
வழக்கறிஞர்.
அவரைப்பார்த்ததும்
தன் முகத்தை கைகளால்
மூடிக்கொண்டான் அந்த சைக்கிள் திருடன்.
ஆர்ஃபனேஜ் ஏஜண்டின்
பையன் சிறுவன் தேம்பி த்தேம்பி அழ ஆரம்பித்தான்.
‘ஏண்டா அழுவுற தம்பி’
நான் தான் அந்தச்சிறுவனைக்கேட்டேன்.
‘எனக்கு சைக்கிள் வேணும்.’ ஓங்கிக்கத்தினான்.
அதற்குள்ளாக என் பேரன் தன் திருடு போன சைக்கிள் திரும்பவும் வந்திருப்பது கண்டு சந்தோஷமானான். சைக்கிளைப் பிடித்துக்கொண்டு
துள்ளிக்குதித்தான். சைக்கிளை எடுத்துக்கொண்டு பெடல் செய்ய ஆரம்பித்தான். அதனைப்பார்த்த
சைக்கிள் திருடிக்கொண்டு போனவனின் பையன் கூடுதலாய்த்தேம்பித்
தேம்பி அழ ஆரம்பித்தான்.
‘என் புள்ள ஆசையா
கேட்டான். என்னால வாங்கித் தர முடியல்ல. தாயில்லா புள்ளை யவன். அவன் அம்மா கொரானால போய்ச்சேந்துட்டா. அது வருஷம் ரெண்டாச்சி. நா தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன். என்ன எல்லோரும் மன்னிச்சிடுங்க’
சொல்லிய அவன் நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் வீழ்ந்தான். ’ உழுடா நாயே கீழ உழுந்து
கும்புடு’ சிறுவனை விரட்டினான். அந்தச்சிறுவனும் தன் தந்தையின் பக்கத்திலேயே தரையில் வீழ்ந்து கும்பிட்டுப் பின் எழுந்துகொண்டான். எனக்கு
அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
‘ சைக்கிள் நீ எனக்கு வாங்கியாறலியா’ தன் தந்தையைப் பார்த்துக்கேட்டான்.
‘இல்லை’ என்றான் அந்தத் தகப்பன்.
‘அந்த சைக்கிள் அந்த அண்ணனுதா’
‘ஆமாம்’
‘ ஒரே ஒரு ரவுண்ட் மட்டும் நா சுத்தி வர
அந்த சைக்கிளக் கேளு’ என்றான். அவன் தந்தை அவனுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
நான் தான் என்பேரனிடம் சொன்னேன்.’ அந்தத் தம்பிக்கு சைக்கிள் குடுடா ஒரு ரவுண்ட் போயிட்டு திரும்பக் குடுத்திடுவான்’ என்றேன்.
‘பேஷா எடுத்துகிட்டும். நாலு ரவுண்ட் சுத்தி வரட்டும்’
. என் பேரன் சைக்கிளை அந்தச்சிறுவனிடம் கொடுத்தான்.
‘போய் சுற்றி வா’ என்றான். அந்தச் சிறுவன் அந்தப் புது
சைக்கிளை எடுத்துக்கொண்டு வேக வேகமாக மிதித்தான். நான்கு ரவுண்ட் அந்த வீதியிலேயே அடித்தான். சைக்கிளைத் திரும்பவும் என் பேரனிடம்
கொடுத்தான். ‘ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணே வண்டி சூப்பரா போவுது’ என்றான்.
‘ சரி இனி நாம நம்ம வேலய பாப்போம்’ என் பையனின் நண்பன் தன்
வீட்டுக்கிளம்பினான்.’’ நீங்க இங்க வரல்லன்னா பேரன் சைக்கிள்
இன்னிக்கு திரும்பக் கிடைச்சிருக்காது, உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி’
நான் அவருக்குச் சொன்னேன். என் பேரனும்
நானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கள்
வீட்டுக்குக் கிளம்பினோம்..
‘மதியம் சாப்பிட்டிங்களா ரெண்டு பேரும்’ என் பையன் அவர்களிடம் கேட்டான்.
‘ இன்னும் இல்லைங்க சார்’ என்றான் சைக்கிள் திருடியவனின் பையன்.
தந்தைக்கும் மகனுக்கும் அடையாறு ஆனந்தபவனில் டிபன் வாங்கிக்கொடுத்து
அனுப்பி வைத்தான் என் பையன்.
’ அப்பா நீ ஓட்டுறயே இந்த எக்செல் வண்டி நீயே வாங்குனதா’
‘நீ கேப்படா ஏன்
கேக்கமாட்ட’
இருவரும் பேசிக்கொண்டார்கள். தந்தையும் மகனும் டிவிஎஸ் எக்செலில் ஏறிக்கொண்டு போனார்கள். சிறுவன் சட்டமாய்த்தான் பின்னே அமர்ந்திருந்தான்.
‘
‘
13.ப்ராப்தம்
கடப்பா நகரத்து
யோகி வேமனா பல்கலைக்கழகத்தில் எல் எல்
பி நான்காவது செமஸ்டர் பரீட்சைஎழுதிவிட்டு
வெளியில் வந்தேன். ஊர் பெயர் கடப்பா. அது பற்றி ஒரே ஒரு
சமாச்சாரம். சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும் போல் இருக்கிறதே. சாதாரணமாக
கடப்பா என்றால் கருப்பாக இருக்கும் கருங்கல்,
அடுப்பு மேடைக்கு உபயோகப்படுவது என்பதுவே நாம் அறிந்து வைத்திருப்பது. இங்கு ஆந்திரர்கள்
இந்த ஊரைக் கடப்பா என்று அழைக்க மாட்டார்கள்.
‘கடப ‘ என்கின்றனர். கடப என்றால் வாயில்படி.
திருப்பதி ஏழுமலையானைக்காணச் செல்லும்
பக்தர்களுக்கு வாயில்படியாக அமைந்த
ஊர் என்கிற பொருளில் ‘கடப’ என்றழைக்கின்றனர்.
அது நிற்க.
மொபைலை ஸ்விட்ச்
ஆஃப் செய்துத் தேர்வு ஹாலுக்குவெளியே அதற்கென இருக்கும் வாட்ச்
மென்னிடம் பத்திரமாய் வைத்துவிட்டுப்போனேன். அவன் கொடுத்த டோக்கனை அவனிடமே திரும்பவும் கொடுத்து என் மொபைலை
வாங்கினேன். மொபைலை ஆன் செய்தேன். மிஸ்ஸுடு காலில் எதுவும் முக்கியமாய் இல்லை. ’இப்போதுதான் யாரோ அழைக்கிறார்கள். ஆமாம்
சென்னையிலிருந்து என் மருமகள் பேசுகிறாள்.
‘மாமா, எக்சாம் நல்லா
முடிந்ததா’ இந்த வயசுல பரீட்சை இதெல்லாம் உங்களுக்கு வேணுமா என்பதுபோல்
இருந்தது.
‘முடிந்தது’
‘ ஹாலை விட்டு வெளியில வந்தாச்சா’ மருமகளின் பேச்சே ஒரு தோரணையாக இருந்தது. எதிர் முனையில் ஏதோ சிக்கல் என்பது மட்டும் உறுதியானது.
‘ஏன்’
‘ நான் சொல்றதை கேட்டுட்டு பயந்துடாதிங்க கொஞ்சம்
மனச திடப்படுத்திகுங்க. உங்க திருவல்லிக்கேணி சாரதா அக்கா காலமாயிட்டா’
‘எப்ப எப்ப ’ என் கண்கள் பனித்தன துக்கம்
தொண்டையை அடைத்தது. குரல் குளறியது..’ அய்யோ என் அக்கா’ ஓங்கிக்கத்திவிட்டேன்.
’ தைர்யமாதான் இருக்கணும் மாமா என்ன
செய்யறது. இப்பதான். சேதி வந்தது. நீங்க எக்சாம் முடிச்சிருப்பிங்க. அதான் உங்களுக்கு நேரத்த
பாத்து பாத்து கரெக்டா போன் செஞ்சேன்’. முக்கியமா ஒரு சேதி சவத்த நாளைக்கி
காலைல ஒன்பது மணிக்கு எடுத்துடுவாங்களாம்.
சரியாக பத்து மணிக்கு பாடி மைலாப்பூர்
எலக்டிரிகல் க்ரிமடோரியத்துல இருக்கணுமாம்’
‘அப்பிடியா நான் தான் ராத்திரி ஒன்பது மணிக்குள்ள சென்னை வந்துடுவன் அப்பறம்
என்ன’
‘ பிறந்த வீட்டு கோடி நாம போடணும். ஜவுளிக்கட மூடுறதுக்குள்ள வந்தாதான் புது
புடவை வாங்க முடியும். மாலையும் வாங்கணும். காலம்பற கடை தொறக்குறதுக்குள்ளாற சவம் எடுத்துடுவாங்கல்ல’
‘மும்பையிலேந்து வர்ர ட்ரைன்லதான் ஏறி வருவேன், அது ஒன்பது மணிக்குத்தான் செண்ட்ரலுக்கே
வரும்‘ நீங்க எல்லாம்’
‘நா கொழந்த எம் புருஷன் மாமியார்
எல்லாரும் எழவு வீட்டுக்கு வந்துட்டம்’
‘அப்பசரி’ என்றேன்.
மருமகள் அக்காவை சவம் சவம் என்று சொன்னதே கேட்க முடியாமல்
நொந்து போயிருந்தேன். அக்கா வீட்டை எழவு வீடு என்றாவது சொல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனாலும் அது எழவு வீடுதான். யாரில்லை என்றார்கள்.
‘எம் பையன் கிட்ட சொல்லி
கோடிதுணி வாங்கிடலாமே’
‘நா அதான் நெனச்சேன். மாமியார்
நீங்க வந்துதான் அத எல்லாம் வாங்கணும்னு சொல்றாங்க. என்ன சம்பிரதாயமோ சடங்கோ நான் என்னத்தைக் கண்டேன்
மாமா’
‘என் வயிஃப் சொல்லிட்டா சரித்தான்.’ என்றைக்கு
அவள் சொல்வதற்கு நான் மாற்றிப்பேசியிருக்கிறேன்.
மனதிற்குள்ளாகச் சொல்லிக்கொண்டேன்.
’ நானே வர்ரேன். புடவை மாலை
வாங்கிகிட்டு திருவல்லிக்கேணி அக்கா வீட்டுக்கே வந்துடறன்’
யோகி வேமனா பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கடப்பா நகரம்
பத்து கிலோமீட்டருக்குள் இருக்கலாம். புலிவந்த்தலு செல்லும் சாலையில் இருக்கிறது அந்த வேமனாபுரம். அதுதான் பல்கலைக்கழகப் பேருந்து நிறுத்தம். அங்கிருந்து தேர்வு மய்யத்திற்கு ஒரு நூறு அடி நடக்கவேண்டும். அவ்வளவே.
தேர்வு நேரம் முடிவதற்குள்ளாக ஒரு ஐம்பது ஆட்டோக்கள் வரிசையாக வந்தன. தேர்வர்களை ஏற்றிச்செல்ல த் தயாராக நின்றுகொண்டிருந்தன.
ஒரு ஆட்டோ பிடித்து ஏறி அமர்ந்து கொண்டேன்.
கடப்பா ரயில்வே ஸ்டேஷன் ரோடில் விஷ்ணு
பிரசாத் சைவ உணவகம் என்னும் நிறுத்தத்தில் இறங்கினேன். ஒரு அரை மணிக்குள் ளாக ஹோட்டலுக்கே ஆட்டோ வந்து சேர்ந்துவிட்டது. அசுரவேகத்தில்அல்லவா ஆட்டோக்காரன்
வண்டியை ஓட்டினான்.
நேற்றுமுன் தினம்தான் நாங்கள் எல்லோரும் திருவல்லிக்கேணி
சென்று சாரதா அக்காவைப்பார்த்து வந்தோம். அக்கா உடம்பு முடியாமல்தான் இருந்தார்கள்.
அக்காவுக்குப் புற்று நோய் மண்டைக்குள்ளாக
இருப்பதாய்ச் சொன்னார்கள். கதிர் சிகிச்சை
வைத்தியம் செய்வதும் மிகவும் சிரமம் என்று
அக்கா வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஆனால் இத்தனை சீக்கிரமாய் அக்கா விடை பெற்றுக்கொண்டு விடுவார்கள் என்று யாரும்
நினைக்க வேயில்லை. என் மனைவி மகன் மருமகள் பேரக்குழந்தையொடுதான் போனோம். அக்கா
என் பேரன் பரத்தோடு சிரித்துப்பேசினாள். பரத்தின் தலை தொட்டு ஆசீர்வாதம் சொன்னாள். கட்டிலில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்.
உடம்பு பலகீனமாய்த்தான் இருந்தது.
என் அக்கா வீட்டுக்காரர்
அருகிலேயே இருந்தார். அவர் முகம் மிகச் சோர்வாய்க்காணப்பட்டது.
ஒருவருக்குத்தன் மனைவியின் உடல்நிலை சரியில்லை என்பதைவிட வேறு என்ன கஷ்டம்
வந்துவிடப்போகிறது. மனைவி இருக்கின்ற வரைதான்
ஒரு கணவனுக்கு மரியாதை, கவுரவம் எல்லாம். அதற்குப்பிறகு ஒரு குவளை வெந்நீர்
வேண்டும் என்றாலும் யாரையாவது கெஞ்சித்தான் ஆகவேண்டும். ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும்
நாம் சாப்பிட்டோமா இல்லையா என்பது குறித்துக் கவலை கொள்பவள் முதலில் பெற்ற தாய் பிறகு தாரந்தான். தாயுக்குப்பின் தாரம்
என்பது அந்தவகையில் மிகச்சரித்தான். மனைவியோடு அடிக்கடி சண்டை வரும் திட்டுவாள் எல்லாம்தான். ‘என் தலை
எழுத்து ஒரு பித்தை முண்டத்தைக்கட்டிக்கொண்டு
காலம் பூரா மாரடித்தேன்’ என்பாள். ஆனாலும் தன் புருஷன் வயிற்றுக்குச் சாப்பிட
வேண்டும் என்று நினைப்பவளும் அவள்தான்.
‘தம்பி பேரன் வந்திருக்கான் முதல் முதலா நம் வீட்டுக்கு. என்னாலதான் கொழந்தய தூக்கி வச்சி கொஞ்ச வாய்க்கல.
படுத்து இருக்கன். ஒரு ஐநூறு ரூவா எடுத்து
கொழந்த கைல குடுங்க. சும்மா மச மசன்னு பாத்துகிட்டே நின்னா என்னா அருத்தம்’
‘உனக்கு உடம்பு
சரியில்ல. அத்திம்பேர் ஆடிப்போய் இருக்கார். இப்படிபேசலாமா அக்கா’
‘அட போடா ராமு, இவர் எப்பவும் இப்பிடித்தான் இண்ணக்கிதான்
இவர் சேதி எனக்கு தெரியுமா. ஒரு மொழம் மல்லிகப்பூ
பொண்டாட்டிக்கு வாங்கக் கூட ஆயிரம்
யோஜனை பண்ணுவார், இப்ப எனக்கு கொள்ளையான்னா வந்துட்து இனிமே என்னா இருக்கு சொல்லு’
அத்திம்பேர் எதுவும் பதில் பேசவில்லை. ஐநூறு ரூபாய் நோட்டை
எடுத்து வந்தார். அக்கா கையில் கொடுத்து அதனையே
வாங்கி என் பேரனுக்குக் கொடுத்தார். மனத்திரையில் பளிச்சென்று இந்த முடிந்து
போய்விட்ட் நிகழ்வு கனமாக ஓடிக்கொண்டிருந்தது. என் கண்கள் ஈரமாகிக்கொண்டே இருந்தது. என்ன இருந்தாலும்
உடன் பிறப்பு ஆயிற்றே. தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்கிறார்களே அது சும்மா
இல்லை. என்ன என்னமோ மனம் நினைத்துக்கொண்டது.
அந்த அக்காவோடு தருமங்குடி கிராமத்தில்
விளையாடியது அக்கா கையால் தருமங்குடி கிணற்றடியில்
உப்புமா சாப்பிட்டது. நாய்க்குட்டியைக்காட்டிக் காட்டி குழந்தை எனக்குச் சோறு ஊட்டி,
என்னைக் கிணற்றுக்குள் தவறவிட்டது, அடுத்த
வீட்டு கல்யாண குருக்கள் மாமா கிணற்றில் குதித்து
என்னை வெளியில் எடுத்துப்போட்டது என் சட்டைத்துணியை
அக்கா நீலக்கலர் பவர் லைட் சோப் போட்டு துவைத்துக்கொடுத்தது வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்தது எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது.
விஷ்ணு பிரசாத் உண்வகத்தில் எப்போதும் ‘மஜ்ஜிய புலுசு’
என்னும் மோர்க்குழம்பு பிரமாதமாய்ப் போடுவார்கள். அதனை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்துகொண்டேன்.
ஒன்றும் பிடிக்கவில்லையே. நேற்று இரவு ப்ளெசண்ட் கஸ்ட் அவுஸ் விடுதியில் வந்து தங்கினேன். இரவு முழுவதும் தேர்வுக்குப் படித்தாயிற்று. தேர்வு முடிந்தது. கெஸ்ட் அவுசுக்குச் சென்று அறையைக்காலிசெய்து கொண்டு
கடப்பா ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டேன். சாலையில் ஆட்டோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக
கூவிக்கூவி அழைத்து மக்களை ஏற்றிக்கொண்டு சென்றன. ஒரு ஆட்டோவில் அமர்ந்து கடப்பா ரயில்
நிலையம் வந்து சேர்ந்தேன். மும்பை யிலிருந்து வரும் ரயில் சரியான நேரத்துக்கு வந்து
விட்டது. ஸ்லீப்பர் கிளாஸ் இருக்கை. என் பெட்டியில் ஏறினேன். டாப் பெர்த்தில் காலை நீட்டிப்படுத்துக்கொண்டேன்.
பெட்டி முழுவதும் இந்திக்காரர்களும் தமிழர்களும்
வள வள என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். திருப்பதி ரயில்
நிலையத்தில் வண்டி நிற்க டீ ஒரு கப் வாங்கிக்
குடித்தேன்.
சென்னை செண்ட்ரல் நிலையத்துக்குச்சரியாக ஒன்பது மணிக்குச்
சற்று முன்னதாகவே வண்டி வந்துவிட்டது. மனம்
அக்காவைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. செண்ட்ரல் ஸ்டேஷனை விட்டு வெளியில்
வந்தேன். ஒரு ஆட்டோக்காரனைப்பிடித்தேன்.திருவல்லிக்கேணி சிடி செண்டர் போகவேண்டும் என்றேன்.
இருநூறு ரூபாய் என்று ஆரம்பித்து நூற்றி ஐம்பது ரூபாயுக்குப்படிந்தான்.
‘சீக்கிரமா போவணும்’
‘ட்ராஃபிக் பாத்திங்கள்ள நா என்ன பண்ண’
அண்ணா சாலையிலுள்ள ஒரு மால் வாயிலில் வண்டியை நிறுத்தினான்.’
எறங்கு’ என்றான் ஆட்டோக்காரன்.
‘என்னா இது மவுண்ட்ரோடுல்ல’
‘பின்ன எங்க போவுணும்’
‘திருவல்லிக்கேணி சிடி செண்டர்ல நா சொன்னது’
‘அப்ப எரநூறு குடு’
‘சரி தரேன் வண்டிய
எடு, போ, எனக்கு என் பிரச்சனை உன்கிட்ட பேசிகிட்டு இருக்க நேரமில்ல’
ஆட்டோக்காரனிடம் மேற்கொண்டு பேசப்பிடிக்கவில்லை.
என் பையன் எனக்குப் போன் போட்டான்.
‘வந்தாச்சா’
‘வந்துட்ருக்கன்’
‘அய்ஸ் அவுஸ் போலிஸ் ஸ்டேஷன் கிட்ட நா நிக்குறன்’
‘சரி நா சிடி செண்டர் வந்து வரலாம்னு பாத்தன்’ என் பையனிடம்
பேசிக்கொண்டு இருந்தேன்.
‘இப்ப நீ எங்கதான் போவுணும்’ ஆட்டோக்காரன் குறுக்கிட்டான்.
‘இப்ப அய்ஸ் அவுஸ் போலிஸ் ஸ்டேஷன் கிட்ட போவுணும்’
‘அப்பிடி சொல்லு’
‘ சிடி செண்டர்
பெரிய மாலு அந்த லேண்ட் மார்க் தெரியுமே
உனக்குன்னு சொன்னேன்’
‘அய்ஸ் அவுஸ் போலீஸ்ஸ்டேசன் தான் பெரிய லேண்மார்க்கு அதவுட
என்ன’
‘சரி பின்ன அங்கயே போ’
வண்டியை வேகமாய் ஓட்டினான். பத்து நிமிடத்தில் அய்ஸ் அவுஸ்
போலிஸ் ஸ்டேஷன் முன்பாக வண்டியை நிறுத்தினான்.
‘நம்ம கிட்ட தெளிவா பேசுனும்’ நெஞ்சை நிமிர்த்திப் பேசினான்.
நாம் இருநூறு ரூபாய் எடுத்து நீட்டினேன்.
சிரித்துக்கொண்டான்.’ குவார்ட்டர்க்கு தேத்திட்டேன் ’சொல்லிக்கொண்டான்.
ஏற்கனவே மட்டும் அங்கு என்ன வாழ்ந்தது.
என் பையன் ‘வா வா வா’
என்று என்னை அழைத்துக்கொண்டு ஜவுளிக்கடை ஒன்றிர்க்கு விரைந்தான்.
‘கடை மூடப்போறன் ஜல்தி ஜல்தி’ ஜவுளிக்கடைக்காரன் உஷார் படுத்தினான். சிவப்பு நிறத்தில் புடவையொன்று
வாங்கினேன். என்னிடம் சுத்தமாய் பணம் இல்லை. ஏதோ சில்லறை இருந்தது.
என் பையன் தன் சட்டைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் எடுத்தான்.
ஜவுளிக் கடைக்காரரிடம் கொடுத்தான்.
‘கோடித்துணிதானே’ கடைக்காரன் கேட்டான்.
‘ஆமாம்’
‘ஆம்பள வந்து புடவ வாங்கறத பாத்தா தெரியாதா’
‘மால வாங்குணும்’
‘அந்த பூக்கட எல்லாம் ராத்திரி பதினோறு மணி வரைக்கும்கூட
தொறந்திருக்கும்’ ஜவுளிக்கடைக்காரன் எங்களுக்குச்சொன்னான்.
‘அப்பா அன்னிக்கி
அதான் முந்தாநா நாம அத்தய பாக்க போனோம்ல. அன்னிக்கி
திருவல்லிக்கேணி அத்த என் பையனுக்கு
ஆசீர்வாதமா குடுத்த ஐநூறு ரூவா’
‘அதயா இதுக்கு
குடுத்த’
‘ஆமாம்’
என் பையனுக்கு பதில் எதுவும் நான் சொல்லவில்லை. சொல்லி ஒன்றும் ஆகப்போவதுமில்லை.
பூக்கடை வாயிலில் நின்று இருநூறு ரூபாயுக்கு ஒரு மாலை வாங்கிக்கொண்டோம்.
கோடிப்புடவை சவத்திற்கு மாலை இரண்டையும் தூக்கிக்கொண்டு
என் பையன் நடந்தான். அவ்வை சண்முகம் சாலையில்
பாலாஜி மெடிகல் அருகே வள்ளலார் ஃபிளாட்ஸ்ல் சொந்த அக்காவின் வீடு.
அக்கா வீட்டு வாயிலில் ஷாமியானா. நடுவில் ஒரு பெரிய குண்டு
பல்ப் எரிர்ந்தது. அக்காவை பெஞ்சொன்றில் கிடத்தி இருந்தார்கள். கால் கட்டை விரல்கள்
பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன. கைகளும்தான். நெற்றியில் பெரிய பொட்டு . சிரித்த முகமாய் அக்கா
படுத்துக்கொண்டிருந்தாள். கண்கள் தானமாகக்கொடுத்து இருந்தது முகத்தில் பச்சை நூல் தையல் தெரிந்தது.
அத்திம்பேர் ஒரு நாற்காலியில் அமர்ந்து தலையில் கை வைத்துக்கொண்டு
‘சாரதா நீ என்ன அனுப்பி வச்சிட்டு போயிருக்கலாமேடி முந்தினூட்டயே’ என்றார். அவரைப்பார்க்கபார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.
காது கேடகாத என் சதாசிவம் அண்ணா,
பள்ளிக்கூட வாத்யார்தான் சொன்னார்.’ அக்காவுக்கு ரொம்ப குடுத்து வச்சிருக்கு. ஏகாதசில
மரணம், நாளக்கி துவாதசில தகனம். துளசி பூஜ
விடாம பண்ணினா. அக்கா பூவோட பொட்டோட போயிட்டாடா
தம்பி’ என்னைக்கட்டிக்கொண்டார்.
அத்திம்பேர் எங்களையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் கண்கள் குளமாகியிருந்தது.
-----------------------------------------
14. கண்ணைக்கெடுத்த தெய்வம்
ஈச்சங்காடு கோதண்டராமர் கோவிலில்
எனக்கு அர்ச்சகர் வேலை. ’ நீ வைஷ்ணவனேயில்லை.பெறகு
ஒரு பெருமாள் கோவில்ல உனக்கு என்னப்பா வேலை’ யாரும் கேட்கத்தான் செய்வார்கள். அப்படியெல்லாம் கிழக்கு
மேற்கு பார்த்து அந்தந்த வேலைக்கும் அந்தந்த
ஆட்களை அமர்த்திய அந்தக்காலம் விடைபெற்றுக்கொண்டுவிட்டது. கிராமப்பகுதிகளில் கோவில் பூஜைக்கும் புரோகிதத்திற்கும் அய்யன்மார்கள்
எங்கே கிடைக்கிறார்கள். சடங்கும் சம்பிரதாயமும் சுருங்கிக் காமா சோமா என்றுதான் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மகள் காமு
என்கிற காமாட்சியை சென்னை அம்பத்தூரிலேதான் கல்யாணம் செய்து கொடுத்தேன். மாப்பிள்ளை ஒரு ஃபேப்ரிகேஷன் கம்பெனியல்
சூபர்வைசராய் வேலை பார்த்தார். மெக்கானிகல்
டிப்ளமோ படித்திருந்தார். அந்தக்கம்பெனியில்
அவருக்கு வேலை கிடைத்ததே பெரிய சமாஜாரந்தான். அந்த ஃபேக்டரியில் மெயின் கேட் திறந்ததும் ஒரு விநாயகர் கோவில். அந்தக்கோவிலுக்குப் பூஜை செய்ய
நிரந்தரமாய்ப் பூசாரியில்லை. என் மாப்பிள்ளைதான் அந்த பூஜையைச் செய்யவேண்டும். பின்னரே
மாப்பிள்ளை தன் குருக்கள் வேஷத்தைக்கலைத்துக்கொண்டு
தொழிற்சாலையின் உள்ளே செல்வார். அவருக்கு அங்கே வேறு வேலை ஒதுக்கப்பட்டிருக்கும். விநாயகர் கோவில் பூஜைக்கு என்று அவருக்கு தனியாகச்
சம்பளம் ஏதும் கிடையாது. எப்படி இருந்தால்
என்ன பார்க்கின்ற எல்லாமும் அந்த வேலை நேரத்திற்குள்ளேயே
தான் அடக்கம்.
நானும் என் மனையாளும் இந்த ஈச்சங்காடு குக்கிராமத்தில்
தான் குப்பை கொட்டிக்கொண்டிருந்தோம். இன்னும்
எத்தனை நாட்களுக்கு இது இப்படியே போகும் சொல்லமுடியாது. தற்காலம் இது சாத்தியப்படுகிறது உடல் ஒத்துழைக்கிறது. எப்படியிருந்தால் என்ன கட்டிக்கொடுத்த பெண் வீட்டிற்குத்தான் கடைசியாய் சென்றாக வேண்டும். அது தான் எங்கள் கணக்கு.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில்தான் எங்கள் இருவரது அந்திம
வாழ்க்கை அதில் மட்டும் உறுதியாக இருந்தோம்.
ஈச்சங்காட்டில்தான் எங்களுக்கு என்ன இருக்கிறது. கோவில்
தருமகர்த்தா நாங்கள் குடியிருக்க ஒரு ரயில் ஓடு ஓட்டு வீட்டைக்கொடுத்து இருக்கிறார். ஸ்வாமிக்கு
நிவேதனமாய் வைக்கப்படும் திருத்தளிகைதான் எங்கள் இருவருக்கும் ஆகாரம். இண்டு
இடுக்கில் ஈச்சங்காடு கிராமத்தில் புரோகித
வேலை ஒன்றிரெண்டு அவ்வப்போது வரும். சிலர் குழந்தை பிறந்த புண்யகாவசனம் என்று அழைத்துப்போவார்கள். தாயாருக்குத்
திதி வீட்டுக்கு வாருங்கள் என்றழைப்பார்கள். கல்யாணம் கருமாதி என
ஏதேனும் சுப அசுப காரியங்களுக்குமே போய் வருவேன். ஜீவனத்திற்குக் கஷ்டம் என்பதில்லை. என் பெண்ணை விருத்தாசலம்
கொளஞ்சியப்பர் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படிக்க
வைத்தேன். குருவின் சாதகப்பார்வை அவளுக்குத்
திருமணம் கை கூடியது. சென்னை அம்பத்தூருக்கு அவளை அனுப்பி வைத்தேன். ஒரு பேரன் பிறந்திருக்கிறான். அந்தக்கடவுள்
கோதண்டராமர் யாரையும் கை விட்டு விடவில்லை.
என்ன இருந்தாலும்
மூட்டைக்கட்டிக்கொண்டு இந்த ஈச்சங்காட்டை விட்டுப் புறப்படவேண்டியவர்கள்தான் அது மட்டும்
நிச்சயம். இந்த கிராமந்தான் எத்தனைப்பட்டிக்காடாய் இருந்தது. ஈச்ச மரங்களின் காடுதானே. வெள்ளாறு ஊரின் வடக்குப்புறமாக ஓடுகிறது
ஆற்றில் ஒரே மணல் மணல்தான். எப்போதேனும்
செம்பட்டைத் தண்ணீர் வெள்ளமாய் கோபித்துக்கொண்டு ஓடி வரும். மற்றபடி காலத்துக்கும் வறண்டே கிடக்கும்.
இந்த பூமியில்
சுண்ணாம்புக்கல் இருப்பது கண்டு பிடித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து இங்கு ஜோடியாய்
சிமெண்டு தயாரிக்கும் ஆலைகள் வந்தன.
வானைத்தொட்டுக்கொண்ட வெள்ளைப்புகை கக்கும் அசுரக்குழாய்கள் வெளியை ஆக்கிரமித்தன.
இரண்டுமே தனியார் ஆலைகள்தான். தெய்வமே என்று
கிடந்த ரயில்வே நிலையம் விஸ்தாரமாகியது. தயாராகும் சிமெண்ட் மூட்டைகள் தேசம் முச்சூடும் பயணித்துச்
சென்றாகவேண்டுமே. நூற்றுக்கணக்கில் லாரிகள் .
வால் நீண்ட எட்டு சக்கர பதினாறு சக்கர ராட்சத லாரிகள் திணறித்திணறி, இந்த ஊர் ஆலைக்கு வந்து வந்து போகின்றன. எத்தனையோ
வண்ணத்தில் அசுரக்குருவி சைசில் கியா கார்கள் தொழிற்சாலைக்குள் தேவுடு காக்கின்றன. லாரி
ஷெட் கள் டீக்கடைகள் டண் டண் என்று ஓசை எழுப்பித்
தயாராகும் ரொட்டிக்கடைகள், பலானது விற்கும் பொட்டிக்கடைகள் அடக்க ஒடுக்கமாய்ச் சில சைவ உணவகங்கள் என ஊர் சமீபமாய்ப்
பெருத்துத்தான்போனது.
கோதண்டராமருக்கு சேவார்த்திகள் கூடிப்போனார்கள். குடியிருப்புகள்
ஆயிரமாயிரம் கட்டப்பட்டன. பெரிய பெரிய பள்ளிக்கூடங்கள் எல்லாம் ஈச்சங்காட்டிற்கு வந்து விட்டன. முழுக்கை சட்டையோடு கழுத்தில்
டை கட்டிக்கொண்ட ஆசிரியர்கள் பள்ளியில் அமர்த்தப்பட்டார்கள். மஞ்சள் வண்ண மின்சார விளக்குகளின் ஆட்சியை வீதியெங்கும்
உணரமுடிந்தது.
என் மனைவி கூட அவ்வப்போது புலம்புவாள்.’ சித்த அவசரப்பட்டுட்டம். ஈச்சங்காட்டுக்கு சிமெண்ட் ஆலை வரும் அங்கங்கேந்தும்
இங்க ஜனங்க வருவாங்க. இந்த ஊரே மாறிப்போயிடும்னு தெரியாமப்போச்சு. இல்லன்னா நம்ப பொண்ணுக்கு இந்த சிமெண்ட்
ஆலையிலயே ஒரு நல்ல வரனைப்பாத்து கட்டி வச்சிருக்கலாம்.
நாமளும் இந்த கோதண்டராமர வுட்டுட்டு பரதேசம்
போகவேண்டாம்’
நாம் நினைக்கிறமாதிரியெல்லாமா நம் வாழ்க்கை அமைகிறது. காலம் நமக்குப்புரியாத மர்ம
முடிச்சுக்களை அவ்வப்போது அவிழ்த்து அவிழ்த்துவிடுகிறதே. நீங்களும் நானும் என்ன செய்ய.
‘ நடப்பதை நீ வேடிக்கை மட்டுமே பாரப்பா’ என்கிறதே இயற்கை.
யார் எதிர் பார்த்தார்கள் வந்தது
உலகம் தழுவிய கொரோனாக் காலம். அம்பத்தூரில்
இருக்கும் என் பெண்ணிற்கு ஒரு பையன் இருந்தான். அப்படிச்சொல்வது தவறு. எனக்கு
ஒரு பேரன், அவனுக்கு இரண்டு வயதிருக்கலாம். ஒரு நாள்
மாலை பேரனுக்கு நல்ல ஜுரம். பார்மசியில்
எந்த மருந்தும் வாங்கத்தான் முடியுமா. வீட்டில் மீதமாய்க்கிடந்த பாரசிடமால்
சொல்யூஷன் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள், அது ஜுரத்தைக் கேட்டால்தானே. பேரனை என் மாப்பிள்ளை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு
அருகே இருக்கும் தனியார் மருத்துவ மனைக்குச் சென்றிருக்கிறார். குழந்தையை மருத்துவர் பரிசோதனை செய்து கொண்டே இருந்தார். மாப்பிள்ளை அந்த நேரம் பார்த்துத் தலை சுற்றிக் கீழே சாய்ந்திருக்கிறார். டாக்டர்
அதிர்ந்து போய் என் மாப்பிள்ளையை நிமிர்த்தி உட்காரவைத்தார். இரத்தத்தில் ஆக்சிஜன் எவ்வளவுக்கு இருக்கிறது என்று ஆக்சோ மீட்டர் வைத்துப்பார்த்திருக்கிறார். அது காட்டிய விடை அந்த டாக்டருக்குத் திருப்தியாகவே இல்லை.
மருத்துவ மனை வாயிலிலேயே செவிலியர்கள் உள்ளே சிகிச்சைக்கு வருகின்ற ஒவ்வொருவரையும் நன்றாக பரிசோதித்துத்தான் அனுப்புகிறார்கள். பின் எப்படி இவர் உள்ளே வந்தார்.
மருத்துவருக்கு விளங்காமல் இருந்தது. இதனில்
இனி பேசுவதற்கும் என்ன இருக்கிறது.
மயங்கிக்கிடந்த
என் மாப்பிள்ளையே தட்டுத்தடுமாறி டாக்டரிடம் தனது மொபைலைக் கொடுத்து விட்டுக் கண்களை
மூடிக்கொண்டார். ஜுரத்தில் இருக்கிற என் பேரன்
திரு திரு என்று விழித்துக்கொண்டு டாக்டர்
முன்னே பரப்பிரம்மமாய் அமர்ந்திருக்கிறான். டாக்டர் என் மாப்பிள்ளையின் மொபைலில் என்
பெண்ணின் தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டிபிடித்து
விட்டார். அதுவும் அதனில் சேமிக்கப்பட்டிருந்ததே அதுவே பெரிய
அதிர்ஷ்டந்தான். என் பெண்ணுக்குப் போன் போட்டு,
, ‘ டாக்டர் பேசுகிறேன்.
நீங்க காமாட்சிதானே பேசறது.
உங்க குழந்தையும் கணவனும் இந்த மருத்துவ மனையில் இருக்காங்க . நீங்க சட்டுனு
மருத்துவமனைக்கு புறப்பட்டு வரணும்.
உங்க கணவரின் ஆதார் கார்டு காப்பியோடு வரணும். அது முக்கியம்’ இவ்வளவே சொல்லியிருக்கிறார்.
’ கணவரின் ஆதார் கார்டு நகல் டாக்டர் கேட்டிருக்கிறார். எதற்காக அது? காமு குழம்பிப்போனாள். எப்படியோ அதனைத்தேடி எடுத்துக்கொண்டாள்.
மாஸ்க் போட்டுக்கொண்ட டிரைவர்
ஓட்டும் ஆட்டோ ஒன்றைத் தேடிக்கண்டுபிடித்து அந்த மருத்துவமனக்கு உடன் விரைந்திருக்கிறாள்.
வாயிலில் தயாராக நின்றிருந்த செவிலியர் அவளை
டாக்டரிடம் கூட்டிப்போனார். அந்த மருத்துவமனையில் என் மாப்பிள்ளையோ டாக்டர் அருகிலிருந்த பெஞ்சில் சவமாக நீட்டப்பட்டுக்
கிடந்தார். பச்சை ஸ்க்ரீன் ஒன்று சவத்தைச்சுற்றி நின்றது. என் பேரன் கோதண்டம் சுற்றும் முற்றும் பேந்த பேந்த விழித்துக்கொண்டு
அதே நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்.
‘நான் உங்கள் குழந்தையைப்
பரிசோதித்துக்கொண்டு இருந்தேன். அவனுக்கு கடுமையான
ஜுரம். ஊசி போட்டிருக்கிறேன். குழந்தை சரியாகி விடுவான். குழந்தை அருகே அமர்ந்திருந்த
உங்கள் கணவர்தான் அப்படியே சாய்ந்துவிட்டார்.
அவருக்குக் கொரானா. கொள்ளை நோய் இருந்திருக்கிறது.
அந்த நோய் அவருக்குத்தெரியாமலேயே இருந்திருக்கிறது.
அதுவே அவரைப் பலியும் கொண்டு விட்டது. அவ்வளவுதான்.
’
பெஞ்சில் கிடத்தப்பட்டுக்கிடக்கும் என் மாப்பிள்ளையின் அவளுக்குச் சவத்தைக்காட்டினார்.
காமு தரையில் விழுந்து விழுந்து புலம்பி அழுதிருக்கிறாள். ’ கொடுமடா இது என் தலையில இடி விழுந்துட்துடா தெய்வமே’
‘அழக்கூடாது. அழவேக்கூடாது. மீண்டும் சொல்கிறேன். படித்தவர்கள்தானே நீங்கள்.இதையும்
தாண்டிச்செல்லுங்கள். டாக்டர்கள் செவிலியர்கள் இன்னும் எத்தனையோ ஊழியர்கள் இங்கே இரவு பகலாய்ப் பணியாற்றுகிறோம்’ சற்றுக் கடிந்தே சொல்லியிருக்கிறார் டாக்டர். சூழல் அப்படி. டாக்டர் அப்படித்தான் சொல்லவும் முடியும். அங்கே
டாக்டரைப்பார்க்க நோயாளிகள் காத்துக்கிடந்தார்கள். மருத்துவப் பணி மலையாக பாக்கி
இருந்தது.
என் பேரனைத் தூக்கிய காமு அவனை அவள்
மடியில் வைத்துக்கொண்டாள். ஜுரம் சற்றுக்குறைந்திருந்தது. தான் எடுத்து வந்த தனது கணவனின் ஆதார் கார்டு நகலை மருத்துவரிடம் ஒப்படைத்தார். அதனை வாங்கிக்கொண்ட டாக்டர்,
காமுவிடம்,
’ நீங்க கொழந்தயை தூக்கிகிட்டு வீட்டுக்குப்போங்க. உங்க
கணவர் டெத் சர்டிபிகேட் மற்றதெல்லாம் நா ஏற்பாடு
செய்யறேன். உங்க கணவர் டெட்பாடிய அதற்கான பாலிதீன் பையில போட்டு தனியா ஒரு எடத்துல வச்சிடுவம்.
நாளைக்கி அதுக்கு மொறப்படி டிஸ்போசல் எல்லாம் நடக்கும். நீங்க இனி இங்க வரவேணாம். நீங்க போயிகிட்டே இருங்க. உங்கள பாத்துகுங்க. உங்க கொழந்தய
பத்திரமா பாத்துகுங்க. இப்பக்கி இதுதான் விதி. சட்டம், நல்லது. இதுல யாருக்கும் இனி பேசிக்க ஒண்ணும் இல்ல’ முடித்துக்கொண்டார்.
மாஸ்க் போட்ட மருத்துவர் சொல்லியதைக் காதில் வாங்கிய என் பெண்
எனக்குப் போன் செய்தாள். மருத்துவ
மனையில் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள். நான் கதி கலங்கிப்போனேன். என் மனைவி சுவரில் மோதிக்கொண்டு அழுதாள். ஊர் எங்கும்
கொள்ளை நோயின் ஆட்சி. முற்றாய்ப் பேருந்து வசதியில்லை. ரயில் வசதியில்லை.
உன்னைப்பிடி என்னைப்பிடி என்று முயற்சித்தோம். முட்டி மோதி ஈ பாஸ் வாங்கிக்கொண்டோம். தனிக்காரில் சென்னைக்குப்
போனோம். பெண்ணைப் பேரனை ஈச்சங்காடு அழைத்து
வந்தோம். அங்கே சுவரில் மாட்டியிருந்த மாப்பிள்ளையின் போட்டோ ஒன்றோடுதான் ஈச்சங்காடு திரும்பினோம். இனி மாப்பிள்ளையை எங்கே பார்ப்பது. அவரின் சடலத்தைக் கூட பார்க்க
முடியாத பாவிகள் நாங்கள். இயற்கைத்தாயின் கோர
விளையாட்டு. கொள்ளை நோயின் கொடுக்குப்பிடியில் அல்லவா இப்பூமியே சுழன்றது.
எங்கெங்கோ லட்சம் லட்சமாய் மக்கள் மடிந்து
போனார்கள். நாமும் இந்த மக்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தானே.
என் மாப்பிள்ளையின் தந்தையும் தாயும், அவர்கள் மகள் வீட்டில் இருந்தார்கள். கொரானாக் கொள்ளை நோய் கொஞ்சி விளையாடிய கோயம்புத்தூரில்தான் வாக்கப்பட்டு இருந்தாள்
சம்பந்தியின் பெண். எப்பவோ மகள் வீடு
போனவர்கள் அந்த சம்பந்திமார்கள். ஒரே நாளில்
இருவரும் கொரானாவில் போய்ச்சேர்ந்ததாய்த் தகவல் மட்டுமே என் பெண்ணுக்கு வந்தது.
நாங்கள் எங்கள் பேரப்பிள்ளையோடு வெள்ளாற்று ஊற்றுக்கிணறொன்றில் தலைமுழுகி முடித்தோம். தலையைத்
தொங்க போட்டபடி ஆற்று மணலில் நடந்தோம். அவ்வளவே.
இதோ இந்த சிமெண்ட்
ஆலைத் தனியார் பள்ளியில் காமாட்சிக்கு ஒரு
வாத்தியார் உத்யோகம் கொடுத்திருக்கிறார்கள். அவள் படித்த படிப்பு மட்டுமே அவளுக்குத் துணை. என் பேரனை அந்தக் குழந்தை கோதண்டராமனை என் மனைவிதான் பார்த்துக்கொள்கிறாள்.
நான் கோதண்டராமர் சந்நிதிக்கு தளிகைத்தூக்கோடு தள்ளாடி
மட்டுமே நடக்கிறேன். ’இனி உன்னோடு தானப்பா
என் சொச்ச வாழ்க்கை’ சொல்லிக் கனக்கிறது மனம்.
எங்கோ உயரத்தில்,
சிமெண்ட் ஆலை கக்கிய வெள்ளைப்புகை கண்ணில்
படுகிறது. ‘கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக்கொடுத்ததே’ அவை நீல
வானில் எழுதிச்செல்கின்றன
-----------------------------------
15. எல்லாமே புரியணுமா?
என் பையன் தனி
வீடு ஒன்றை சென்னைப்புறநகர் பழைய பெருங்களத்தூரில் வாங்கியிருந்தான். அப்படி அவன் வீடு வாங்கியதில்
வங்கிக்கடனுக்கு மாதம் ஐம்பது ஆயிரம் ரூபாய் ஈ எம் ஐ வந்தது. அவன் குடும்பம் மனைவி ஒரு
பெண் குழந்தை அவர்கள் மூவரும் என்னோடுதான்
இருந்தார்கள். அவன் வாங்கிய வீட்டை வாடகைக்கு
விட்டிருந்தான். அதில் மாத வாடகையாய் மாதம்
பத்தாயிரம் ரூபாய் வந்தது.
வங்கிக்கு கட்டுகின்ற ஈ எம் ஐ யுக்கும் வாங்கிய வீட்டை வாடகைக்கு
விட்டு அதில் வரும் மாத வருவாயுக்கும் ஏணி
வைத்தாலும் எட்டாது. வீடு வாங்கும் ஒவ்வொருவரும் வங்கியில் கடன் கிடைத்தால் போதும்
என்று குல சாமியை வேண்டிக்கொள்கிறார்கள். கடன்
கொடுத்த வங்கிக்கு திருப்பிக்கட்டப்போகும் அந்த வட்டியை அவர்கள் கணக்குப்போட்டுப்பார்த்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிடும். வீட்டுக்கடன்
முடிவதற்கும் அதை வாங்கிய ஆசாமிக்கு சஷ்டியப்த பூர்த்தி வருவதற்கும் சரியாக இருக்கும்.
கண்புரை இரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை எல்லாம்
தொட்டு தொட்டுப் பார்த்துக்கொண்டு கண் சிமிட்ட ஆரம்பித்து விடும். பிறகு எல்லாமே இறங்கு முகம்தான். ஒருவருக்கு அறுபது வயதானால் வேலை செய்யும் ஆபிசில் மரியாதை இருக்காது. எழுபது வயதானால் சுற்றத்தார்
மதிக்கமாட்டார்கள். எண்பதைத்தொட்டால் நம்மை நமக்கே
பிடிக்காதாம். சொல்கிறார்கள். பட்டால்தான் எதுவுமே தெரிகிறது.
இந்த வங்கிக்கடன் எப்போது அடைவது. இன்னும் ஒரு இருபது ஆண்டுகளுக்கு
அந்தக்கடனை இழுத்துக்கொண்டா போவது. எப்போது கடனிலிருந்து மீள்வது பையன் யோசித்தான்.
அவன் பார்ப்பது பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு
ஐ டி கம்பெனி உத்யோகம். அவ்வப்போது வரும்
குடும்ப கஷ்டத்திற்கு எல்லாம் நாங்கள்
பழனி மலை முருகனுக்குத்தான் வேண்டிக்கொள்வோம்.
அவனும் அந்தப் படிக்கு முருகனுக்குத்தான் வேண்டிக்கொண்டான்.
நேராகவே பழனிமலைக்குப்போனான்.
அந்த முருகனிடம் கோரிக்கையைச் சொல்லிவிட்டு
வந்தான். ஒரு பத்து நாள் ஆகியிருக்கும். அவனுக்குக் ’கலிஃபோர்னியாவுக்குப் போய் வேலை
பார்’ என்று அவன் அலுவலகத்தில் உத்தரவு போட்டுவிட்டார்கள். பாஸ் போர்ட்டும் எச் ஒன் பி விசாவும் தயார். அவன் ஒண்டியாய் கலிஃபோர்னியா சென்று வேலை
பார்த்தால் செலவு அவ்வளவாக இருக்காது, காசு மீறும் என்று யோசித்தான். வீட்டுக்கடன் விரைவில் அடையும்.
வங்கிச் சிறையில் இருக்கும் கிரயப்பத்திரம்
வீட்டுப் பீரோவுக்கு வந்துவிடும் என்கிற கணக்குப்போட்டான்.
அவன் மனையாள்
’நானும்தான் கூடவே வருவேன் ’ என்றாள். ஏற்கனவே
அங்கு போனவர்கள் அவனுக்குச் சொன்னார்கள். ஒரு
ஆள் சம்பாரித்து கலிஃபோர்னியாவில் குப்பை கொட்ட முடியாது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குப்போகவேண்டும்.
இல்லா விட்டால் இராப்பட்டினிதான் என்றார்கள். அவன் மனைவியிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான்.
‘நானும்தான் படிச்சிருக்கேன். அங்கு வந்து ஒரு வேல பார்ப்பேன்’ அவள் குரல் உயர்த்தினாள். ஆகப் பேத்தியோடு
மூவரும்தான் கலிஃபோர்னியாவுக்குப்போனார்கள். பிறகு அங்கு
நடப்பதெல்லாம் அவர்கள் பிழைப்பின் கதை. அதனில்
நான் சொல்வதற்கு எதுவுமில்லை. வீட்டின் வாடகையை
வாங்கி மாதாமாதம் அவன் வங்கிக்கணக்கில் கட்டச்சொல்லியிருக்கிறான். அது
மட்டுமே என் பணியாக இருந்தது.
பையன் வீட்டுக்கு யாரேனும் வாடகைக்கு வருவார்கள். ஆறு மாதம்
இருப்பார்கள். பின்னர் வேறு ஒருவர் வருவார்
சற்றுக் கூடவும் இருப்பார். வாங்கும்
வாடகையில் வீட்டு வரி,, தண்ணீர் வரி கட்டுவது, பிளம்பர் எலக்ட்ரிசியன் கொத்தனார் ஆசாரி
மேஸ்திரி பெயிண்டர் மோட்டார் மெக்கானிக் என அவ்வப்போது செலவு போக மிஞ்சும் பாக்கியை நான் வங்கிக்குச் சென்று கட்டிவிடுவேன். இப்படியாக
காலட்சேபம் நடந்து வருகையில் ஐடி ஊழியன் ஒருவன்
பையன் வீட்டிற்கு வாடகைக்கு வந்தான். பார்ப்பதற்கு பள பள என்று நம்பியார் கணக்காய் இருந்தான். முழுக்கை சட்டை . கருப்புக்கண்ணாடி. ராயல் என்ஃபீல்ட்
வண்டி மின்னிக்கொண்டிருந்தது. வண்டியின் விலை எப்படியும் ஒன்றரை லட்சத்திற்குக் குறையாதுதான்.
‘சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சா’
‘ஏன் அப்பிடி கேக்குறீங்க’
‘இல்ல பேச்சிலருக்கு
நாங்க வீடு குடுக்கறது இல்லே’ நாங்கள்
பேசிக்கொண்டோம். கையில் ஒரு சூட் கேஸ் வைத்திருந்தான். அதனை அவசர அவசர மாகத் திறந்தான்.
அதனுள் திருமணப்பத்திரிகை கத்தையாக இருந்தது. ’இதுதான் என் கல்யாணப்பத்திரிகை. இண்ணையிலேந்து
சரியா இன்னும் ஒரு மாசம் இருக்குது என் கல்யாணத்துக்கு’ என்றான். அதற்குமேல் பேசுவதற்கு
என்ன இருக்கிறது. ஆகக் கல்யாணம் அவனுக்கு ஆகத்தான்
போகிறது. ஆக நிம்மதி. அந்த ஐ டி ஊழியனுக்கே பையன் வீட்டை
வாடகைக்கு விட்டேன்.
வாடகைக்கு வீட்டை விட்டதிலிருந்து அவன் ரோதனை சொல்லிமுடியாது.
மாத வாடகையைப் பத்து நாள் கழித்துத்தான் தருவான்.
நான் நாலுதடவை அவனுக்குப் போன் போடுவேன். மெசேஜ் அனுப்புவேன். பிறகு ஜீ. பே வரும். ’சார் ஃபேன் ஓடும்
போதே இறைச்சல் வருகிறது பிளம்பரை அனுப்புங்கள்
என்பான். ’தண்ணீர் மோட்டார் ஓடும் போது கிர்ரிக்
கிர்ரிக் என்று சவுண்ட் வருகிறது’. அதனை வீடியோ
பிடித்து வாட்சாப்பில் அனுப்புவான். மெக்கானிக்
யாரையாவது உடனே அனுப்புங்கள் என்பான். வாயிலில் செல்லும் ’தெருச்சாக்கடைக்கு மூடியிருக்கும் சிமெண்ட் காங்க்ரீட் விரிசலாக இருக்கிறது.
என் டூவீலர் ஏற்றி மேலே வைக்கவேண்டும். அதனை சற்று மாற்றுங்கள்’ என்பான். ’தண்ணீர் டேங்க்கிலிருந்து வரும்போது பழுப்பு நிறமாய் வருகிறது
பாருங்கள் பாருங்கள்’ என்று அலறுவான். டேங்க்கை சுத்தம் செய்ய நான் ஆள் பிடித்து அனுப்பவேண்டும். ஒரு நாள் ’தோட்டத்துப்
பக்கமாய் இருக்கும் கதவில் ஏதோ ஒரு காளான் வந்து கொண்டே இருக்கிறது. அதனைத் தினமும்
பிய்த்து பிய்த்து போடுகிறேன். பார்க்கவே அருவருப்பாய் இருக்கிறது. அந்தக் கதவை இப்போதே
மாற்றுங்கள்’ என்றான். அதற்கு ஆசாரிக்கும்
வாள் பட்டறைக்கும் மரவாடிக்கும் அலைந்தேன்.
இன்னொரு நாள்,’வீட்டுக்கு வரும் கரண்ட் பில் ரொம்ப ஜாஸ்தி, அந்த ஈ. பி. மீட்டரில் ஏதோ கோளாறு இருக்கிறது. மின்சார
இலாகாவுக்கு உடனே புகார் எழுதுங்கள்’ என்றான்.தொல்லையோ தொல்லை. தாங்க முடியவில்லை.
தலைவலிக்காரனைக்கொண்டு
வந்து வீட்டில் வாடகைக்கு வைத்து விட்டோமே
எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
ஒரு நாள் நேராக வாடகைக்கு விட்ட வீட்டிற்கே சென்றேன். வீடுதான் எப்படி எல்லாம் இருக்கிறது
என்பதைப்பார்த்து வரலாம் என்று. மொட்டை மாடியில் ஒரு ஆலமரத்தின் சிறு செடி ஒன்று முளைத்துத்
தழைத்து வளர்ந்து கொண்டிருந்தது.
‘இத கொஞ்சம் கட்
பண்ணி எறியலாமில்ல. வீட்டு செவுத்துக்கு கேடு’
என்றேன்.
’பால் மரத்த நா கட் பண்ணக்கூடாது. அது பெரிய தோஷம்’ என்றான் அவன் ஐ டி ஊழியன். நானே அதனைப்பிடுங்கிப்போட்டேன். மொட்டை
மாடியில் ஒரு சிறிய அறை இருந்தது. அந்த அறையின்
கதவு லேசாக சாத்தியிருந்தது. அதனை விலக்கிப்பார்த்தேன்.’ அடடா என்ன இது’ ஒர் ஐந்து
முகக் குத்து விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு மட்டைத்தேங்காய். அதன்
மீது குங்குமமும் சிவப்பும் அப்பிக்கிடந்தது.
மூன்று கடல் சங்குகள். வெள்ளை ரோஸ்
வண்ணத்தில். அவை சைசிலும் பெரியவையாக இருந்தன.
அவைகளில் துளசித் தண்ணீர் நிரம்பி யிருந்தது. அறையின் சுவரில் பத்து ஃபிரேம் போட்ட சித்தர் படங்கள் ஆணியில் தொங்கிகொண்டு இருந்தன. தாடி மீசை கோவணம் கையில் மணி மாலை என்று
எல்லா சாமியாரும் காட்சியானார்கள். தாயத்து
கட்டிய கருப்புக்கயறு ஒன்று மேலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது. எனக்குக் கை
கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இதை யெல்லாம் பார்த்ததில் குடியிருப்பவன் ஒரு மந்திர வாதியாய்
இருப்பானோ என்கிற அய்யமும் முளைத்தது. நான் அந்த அறையைப்பார்த்தது அவனுக்குத் தெரியாது. குடியிருப்பவனைத்தேடி னேன்.
அவன் வாயிலில் ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்தான். அவன் மனைவி, சினிமா நடிகை போல் அவனுடன் இருந்தாள். அவன் அவளோடு கொஞ்சி கொஞ்சிப்
பேசிக்கொண்டு இருந்ததைப்பார்த்தேன்.
’ சார் என் மிசஸ் ‘ என்றான். அவள் ‘;நமஸ்காரம்’ என்றாள்.
நான் அவளை ஒரு முறை நன்றாகப்பார்த்துக்கொண்டேன். அழகாகத்தான் இருந்தாள். அவளுக்கும்
ஐ டியில்தான் உத்யோகம்.
‘சார் மட்டும்தான்
இப்ப இங்க இருக்காரு. அப்ப அப்ப இங்க
எட்டிப்பாப்பாரு அவ்வவளவுதான். மத்தபடி எங்க
குடும்பம் இங்க இல்ல. வேற வீடு பாத்து அங்கதான்
நாங்க குடியிருக்கறம்.’’ என்றாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மிக நெருக்கமான நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்டேன். ‘ இதானே, நீ விடு நான் பார்த்துக்கொள்கிறேன்’
என்றார். அவரேதான் ஒரு நாள் என் பையன் வீட்டுக்குப்போனார். ’மோட்டார் ஓடும் போது ஏதோ சத்தம் வருகிறதாமே அதனைப்
பார்த்து விட்டுப் போகிறேன் என்றார்.
மோட்டார் ஃப்யூசை கையோடு எடுத்துக்கொண்டார். ‘ இந்த போர்ல தண்ண சுத்தமா இல்ல. அதான் மோட்டார் கர்ரு கர்ருன்னு இழுக்குது. புதுசா வேற
ஒரு போர் போட்டதான் தண்ணி.வரும்’
குடியிருப்பவனிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டார்.
குடியிருப்பவன் எனக்குப் போன் செய்து ‘ சார் போர்ல தண்ணி இல்ல. புதுசா போர் போடுணும்னு மெக்கானிக் சொல்றாரு’ என்று
ஆரம்பித்தான். ‘ அவர் இந்த சேதிய என்கிட்ட
சொல்லிட்டாரு, அமெரிக்காவுல இருக்குற பையன கிட்ட இதச் சொன்னேன். இன்னும் மூணு மாசத்துல இந்தியா வந்துடறேன். அங்க
வந்து எதுவானாலும் நான் பாத்துகுறேன்னு சொல்லிட்டான்.
நீங்க வேற வீட்ட பாத்துகுகுங்க’ என்றேன்.
மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். வீட்டுச்சாவியைக்கொண்டு
வந்து கொடுத்தான்.வீட்டுக்குக்கொடுத்திருந்த அட்வான்சை வாங்கிக்கொண்டான். அந்த தாடிவைத்த பத்து சித்தர் படங்கள், சங்குகள் மணிமாலை கருப்புக்கயறு
எல்லாம் அவன் எங்கு கொண்டு வைத்திருப்பான்.
அவன் மனைவியும் அவைகளை எல்லாம்பார்த்திருப்பாளா என்கிற கவலை இல்லாமலில்லை. பையன் வீட்டு இரும்புக் கேட்டில் மீண்டும் ‘ டு லெட் போர்டு’ மாட்டி வைத்திருக்கிறேன்.
நல்ல மனுஷாள் யாரும் வாடகைக்குக் கேட்டால் எனக்கு மறக்காமல் போன் போடுங்கள்.
--------------------------------------------------------------------
16.
சங்கு
சுட்டாலும்.
வானிலை
அறிக்கை தயாரிப்போர் லேசு பட்டவர்களா, சென்னைக்கு ரெட் அலெர்ட்
சொல்லியிருந்தார்கள்.நான் குடியிருக்கும் வீட்டுக்குப்பக்கத்தில்
ஒரு நூறு அடி தூரம் நடந்தால் அடையாறு வந்துவிடும். மழை
ஆரம்பித்து விடாது இரண்டு
நாட்கள் பெய்யலாம் அது தாக்குப்பிடிக்கும்.
அப்புறம் ஜிவ் ஜிவ்வென்று அடையாற்றில் மழை நீர்
வரத்து ஏறுமுகம் காணும். அது நிரம்பி வழிந்தால் தண்ணீர்
எங்கள் தெருவுக்குத்தான் முதலில் நாணிக்கொண்டும் கோணிக்கொண்டும்
எட்டிப்பார்க்கும். பார்ப்பதற்கு இந்தப்பூனையும் பால்
குடிக்குமா என்பதுவாய்த் தெரியும்.நேரம் ஆக ஆக அதன் அசுரத்தனம் கூடிவிடும். ஆற்று
நீர் தெரு முழுதும் நிரம்பும். கோலம் போடும் தரை காணாமல் போகும்.
அப்போது தொடங்கி வீட்டில் இருப்போர்க்கு இரத்த அழுத்தம் கொஞ்சம்
கொஞ்சமாய் உயர ஆரம்பிக்கும்.
மின்சார
இலாகா மனிதர்கள் டப்பென்று விநியோகத்தை
நிறுத்தி, ஒரு வக்கிர அமைதிக்கு வீடு
திரும்பி விட்டால் மனம் பிறாண்ட ஆரம்பித்துவிடும். தெருவில்
பிரவாகிக்கும் மழை நீர். முதலில் அது வீட்டு
வாயிற்படியைத்தொடும். தெருக்கூட்ட வைத்திருக்கும் விளக்கமாறும் தண்ணீர் தெளித்துக்
கோலம் போட வைத்திருக்கும் பிளாஸ்டி வாளியும் மிதக்கும். புதுத் தண்ணீர் ஆடி ஆடி வந்து வீடு
சொந்தம் கொண்டாடிய பொருட்களை அச்சுறுத்தும். புழங்கும் செருப்புக்கள்
தலைகீழாய் மிதக்கத்தொடங்கும்.
கன
மழை என்ற அறிவிப்பு வந்தவுடனேயே வீட்டிலுள்ள பல சாமான்கள் மேல் தளத்தில் உள்ள
லம்பர் ரூமுக்கு இடம் மாறியிருக்கும். அப்படி லம்பர் ரூம் எதுவும்
இல்லை என்றால், கீழ் வீட்டு லாஃப்டிலேயே அவை
திணிக்கப்பட்டுவிடும். முக்கியமான தஸ்தாஜுகள் பண
விவகார அயிட்டங்கள் ரேஷன் கார்டு இத்யாதிகள் ஒரு ஹேண் ட் பேக்குக்கு
இடம் பெயறும். இரண்டு செட் துணிமணியோடு ஒரு சூட்கேஸ் பயணத்திற்கு ரெடியாகும். வெள்ள
நீர் புகுந்து வீணாகாமல் இருக்க டூவீலர்கள் கார்கள் எங்கேனும்
தூரமாய் மேட்டுப்பகுதியில் நிறுத்திவைக்கப்படும்.
வீட்டைப்பூட்டிவிட்டுக் கிளம்பி
முட்டிக்கால் தண்ணீரில் மேடான ரோட்டுப்பகுதிக்கு, ஹேண்பேக்கும் சூட்
கேசுமாய் அவரவர்கள் வந்துவிடவேண்டியதுதான்.
அப்படித்தான்
சகல பணிக்கைகளும் செய்துவிட்டு, என் மனைவியைக் கூட்டிக்கொண்டு
தியாகராயநகர் அண்ணன் வீட்டுக்கு ஒரு ஓலோ கார் பிடித்து
வந்தேன். பனகல் பார்க் சுற்றிலும் சாலையில் மழை நீர்
இரண்டடிக்கு இருந்தது. நாங்கள் பயணித்த ஓலோ கார் ’டொங்க் டொங்க்
’என்று பள்ளத்தில் இறங்கி திணறித் திணறி எழுந்தது.
‘இந்தத்
தும்பத்துக்கு நம்ப பெருங்களத்தூர் தேவலாமே’
‘நம்ப
வீட்ட தொட்டுகிட்டு அடையாறு. ஒருக்கால்
செம்பரம்பாக்கம் ஏரியையும் தொறந்து விட்டா
என்ன ஆவுறது அத யோசனை பண்ணில்ல இங்க கெளம்பி
வந்தம். ’ அவளும் நானும் பேசிக்கொண்டோம்.
மாம்பலம் ஸ்டேஷனை
ஒட்டிய ராமேஸ்வரம் தெருவில் ஒரு பழைய அபார்ட்மெண்ட். அதனில் கீழ்
தளம் மேல் தளம் அவ்வளவே. அங்குதான் அண்ணன் குடும்பம்
ஒரு ஃபிளாட்டில் குடியிருந்தது. வாடகை வீடுதான்.
‘வாடா
வா இந்த மழையில நீ அங்க என்ன செய்வ எப்பிடி
ஓட்டுவ, திரு திருன்னு முழிச்சிகிட்டு கெடப்பயேன்னு யோசனை
பண்ணினேன். பொண்டாட்டிய கூட்டிகினு நீ என்
வீட்டுக்கு வந்த வரைக்கும் சரி. கஞ்சியோ கூழோ ஒண்ணா குந்தி குடிக்கலாம்’
அண்ணிக்கும் மிகுந்த
சந்தோஷம்.
‘இந்த
மழை காத்து இல்லன்னாலும் நீங்க ரெண்டுபேரும் இந்த பக்கம் எட்டியா
பாப்பீங்க’ சொல்லி எங்களை அண்ணி அன்போடு வரவேற்றாள்.
அண்ணன்
வீடு ஒர் அறை வீடு. அந்த அறையில் பெரிய லாஃப்ட். அதனில் ஒரு பெரிய சூட் கேஸ்
படுத்துக்கிடந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணி எங்கள்
இருவருக்கும் ஒரு கப் காபி கொடுத்தாள். பதமான சூடும் மணமும் காபிக்கு அழகு.
அண்ணி கொடுத்த காபி நன்றாகவே இருந்தது. எப்போதும் அப்படித்தான்
இருக்கும்.
‘என்ன
அண்ண அது ஒரு பெரிய சூட் கேஸ் லாஃப்ட்ல
உக்காந்து இருக்கு’
‘அது
அஞ்சி வருஷமா அங்கதான கெடக்கு. இப்பதான் நீ
பாக்குற கேக்குற’
‘நா
வீட்டு முன் ஹால்ல இருக்குற சோபாவுல குந்தி பேசிமுடிச்சி கெளம்பிடுவேன். ரூம்
உள்ள எல்லாம் வந்து பரணையில நீ என்ன
வச்சிருக்கன்னு எங்க பாத்தன்’
‘அதுவும்
சரிதான்’
‘வெளிநாடு
போறவன் தான் இப்பிடி பெரிய சூட் கேசு வச்சிருப்பான்’
‘ரொம்ப
சரி.. அது அமெரிக்கா மாமி சூட் கேசு’
‘
இருக்கட்டும் அது ஏன் அஞ்சி வருஷமா ஒன் வீட்டு பரணையில
குடியிருக்கு’
‘கேள்வி
சரிதான். நானும் அதுக்கு பதில் சொல்லணும்’
‘யாரு
அந்த அமெரிக்கா மாமி அது என்ன சமாச்சாரம்’
‘
இதே டி. நகர்ல பக்கத்துல மங்கேஷ் தெருவுல ஒரு மாமி இருந்தாங்க.
அவுங்களுக்கு ஒரே பையன். நல்லா படிச்சான். நல்ல உத்யோகம்
கிடச்சிது.அவன் அமெரிக்காவுல கலிபோர்னியா ஸ்டேட்ல இருக்கான். ஆனா ஒரு
வெள்ளக்காரிய காதலிச்சான் கட்டிகிட்டான். இந்த கலப்பு கல்யாணத்துக்கு
முந்திதான் இந்த மாமி அமெரிக்காவுக்குப் போயி
வந்துது. அப்ப அந்த அய்யாவும் நல்லாதான் இருந்தாரு. அப்பறம்
அய்யா காலமாயிட்டாரு. நா ஒனக்கு ரெண்டு மூணு மே சட்டவ
குடுத்தேன். யாவகம் இருக்கா. அமெரிக்கா மாமி குடுத்துதுதான் ’நீ
போட்டுக்கன்னு’ . அது ஏழெட்டு வருஷம் கூட இருக்குமே. நீ மறந்து
போயிருப்ப’
‘ஆமாம்
இப்பதான் நெனப்பு வருது எனக்கு. நீ
குடுத்தது எல்லாமே சின்னதும்
பெரிசுமா கட்டம் போட்ட சட்டைங்க. கருப்பு வெள்ளயா
கோடு குறுக்க போட்டு
இருக்கும். அந்த சட்டைய நா போட்டுகிட்டு
ஆபிசு கூட போனேன். எங்க ஆபிசுல அத பாத்துட்டு ஆச்சரிய பட்டாங்க.
’இதெல்லாம் ஏது. அய்யா பிளைனா போடுவீரு இப்ப என்னா கட்டம் கட்டமா இருக்கு’ன்னு
கேட்டாங்க. அண்ணன் எடுத்து, குடுத்து அனுப்பினதுன்னு சொன்னன்’
‘நா
எடுக்கறன் குடுக்கறன். அதெல்லாம் நம்மால ஆவுற கத இல்ல. விரலுக்கு தக்கனதான
வீக்கம். இந்த அமெரிக்கா மாமிதான் அமெரிக்காவுல இருக்குற அது புள்ள
போட்ட சட்டையெல்லாம் என் கிட்ட குடுத்து நீ போட்டுக்கன்னு சொன்னாங்க.
என் பொழப்பு எப்பிடி. அந்த சட்டைங்க எனக்கு சரிப்பட்டு
வருமா. அத நா ஒனக்கு அனுப்பி வச்சன்’
‘அப்பிடியா
சேதி. இது இப்பதான் எனக்கு தெரியும்’
‘மாமிக்கு
வயசு ஆயிடுச்சி. இனி மேலுக்கு மாமி தனியா
இருக்கவேணாம்னுட்டு மாமி யோட பையன் ஹைதராபாத்துல
ஒரு முதியோர் இல்லம் பாத்தாரு. அதுல அம்மாவ சேத்துக்க
ஏற்பாடு செஞ்சிட்டாரு. அங்கேந்தும் ஒரு ஆளு சென்னைக்கு வந்தாரு. மாமிய
ஹதராபாத்துக்கு அழச்சிகிட்டு போறதுக்கு. ஒரு அஞ்சி வருஷம் அந்த
மாமிக்கு இங்க வேண்டியது நான்
தான் பாத்து பாத்து செஞ்சன்.எனக்கும் அப்ப அப்ப செலவுக்கு பணம் குடுப்பாங்க.
மருந்து மாத்திர வாங்கி குடுப்பன். கடைத்தெருவுக்கு போனா கூட மாட போயி
வருவன்,பேங்குக்கு போவுணும்பாங்க. துணைக்கு போவென் வருவேன். ஒரு
ஒத்தாசைதான் வேற என்னா’
‘அப்புறம்
என்னாச்சி’
‘ஹைதராபாத்
முதியோர் இல்லத்துல அந்த மாமியே காலமாயிட்டாலும் அவுங்க
சவத்த எடுத்துபோட்டு அடக்கம் பண்றவரைக்கும் ஆவுற
செலவுக்கு அந்த மாமி மவன் காசு கட்டி
முடிச்சிட்டாரு. மாமி மூச்சு இருக்குறவரைக்கும்
சாப்பாட்டுக்கு மருந்து மாத்திரைக்கு துணிமணிக்கு
காசு அமெரிக்காவிலேந்து வந்துடும் பிறகென்ன.
இனிமேலுக்குதான் போயி எந்த ராட்சியத்த புடிக்க
போறாங்க அமெரிக்கா மாமி. எல்லாம் அவ்வளவுதான். அந்த ஹைதராபாத்
ஆளும் வந்தான். மாமிய இட்டுகினு போவ. ரெண்டு
பேருக்கும் ரயில்ல டிக்கட் புக் பண்ணிட்டாங்க.. என்னய
வீட்டுக்கு வரச்சொன்னாங்க. என் கிட்ட எல்லா
சேதியும் வெவரமா சொன்னாங்க.
இதுல நாதான் சொல்ல என்ன
இருக்கு. அவுங்க வூட்டுக்கு நா போயிருந்தனா மாமி
அவுங்குளுக்கு வேண்டியத துணிய மணிய, யாரு கண்டா எது
எதுவோ ஒரு பெட்டில போட்டு பூட்டினாங்க. என்னண்ட
குடுத்தாங்க.’ நீ நாளக்கி பொட்டிய எடுத்துகிட்டு வெடிய
காலம்பற ஏழு மணிக்கு எல்லாம் செண்ட்ரலுக்கு வந்துடு.
என்ன ரயிலு ஏத்து ‘ன்னு சொன்னாங்க. நானும் சரின்னேன்.
.’
என்னமோ நெனச்சி புள்ளய வளத்தேன். படிக்க வச்சேன். ஆளாக்குனேன். இப்ப இந்த கதிக்கு
ஆளு ஆயிட்டேன். காசு அனுப்பறான். அத சொல்லுணும். இல்லன்னுட்டா
அதுக்குதான் என்ன பண்ண முடியும் நாண்டு கிட்டுதான் சாவுணும்னாங்க.
பாவம். கண்லேந்து தார தார யா தண்ணி வந்துது.
அவ்வளவுதான். நா பொட்டிய தூக்கிகிட்டு வூட்டுக்கு வந்துட்டன். ‘ நாளைக்கு
நா செண்ட்ரலுக்கு உங்க பொட்டியோட வந்துடறேன்னு
சொல்லிட்டுதான் வந்தேன்.’
‘பொட்டி
பூட்டி யிருந்ததுதானே’
’
பொட்டிக்கு ரைட்டா நம்பர் பூட்டு போட்டிருந்தாங்க.
அது வெஷயம் தெரிஞ்சவங்கதான் தொறக்க முடியும்.
எல்லாராலயும் ஆவாது’
‘ஏன்
அண்ணே நீ ஒரு தரம் ‘யார் மேல தப்பு’ன்னு கதய குடுத்து
அனுப்பி அத சின்ன திரைப் படமா ஒரு மாமி எடுக்ககபோறாங்க.
அந்த கதைக்கு வசனம் ஒண்ணு எழுதி குடுன்னு கேட்டயே அது இந்த அம்மாதானா’
‘அவுங்களேதான்.’ அன்ணன்
சிரித்துக்கொண்டார்.
‘இந்த
சின்ன படத்தை எடுக்க கேமரா மென் தங்கர் பச்சான்
உதவுவாறான்னு நீ என்ன கேட்ட.. நானும் தங்கர் பச்சான் கிட்ட
போன்ல பேசுனேன் பத்திரகோட்டை தங்கர் பச்சான்
எனக்கு செனேகிதமாச்சே. அவுரு அப்ப பம்பாயில இருந்தாரு.
காதல் கோட்டைன்னு ஒரு தமிழ் படத்த இந்தில எடுத்தாங்க .’
‘நீ
கூடம்தான் சொன்ன அந்த தங்கர் பச்சான் பேசுனாரு, ’ வயசான
காலத்துல இந்த சின்ன சினிமா படம் எடுக்கற சோலி எல்லாம் அந்த
கெழவிக்கு தேவையான்னுட்டு’ அதே அம்மாதான்’
‘அப்பிடி
சொல்லு’
‘மேல
இருக்குற பொட்டி கதைக்கு வர்ரேன். மறுநா வெடிஞ்சிது. நா
பல்லு வெளக்கி காபி சாப்பிட்டேன். செண்ட்ரல் ஸ்டேசனுக்கு
போயாவுணுமே. மாமி என்னண்ட குடுத்த சூட்கேச எடுத்துகினு கெளம்புனேன். வீட்டு
வாசப்படி தாண்டுனேன். அப்புறம் ஒரு இருபது படி
கீழயும் எறங்குணும். இப்ப நீ ஏறி வந்தியே அதே படிவ தான். மொத
படில காலு வச்சன். எதோ வழக்கிடுச்சி. என் கையிலு பாரமான பொட்டி. பட
படன்னுது. தடுமாறிட்டேன். இருபது படியும் வுழுந்து வுழுந்து
பொரண்டு தரைக்கு வந்து கெடக்குறன். மாமி சூட்கேசு ஒரு பக்கம்
கெடக்குது, நா ஒரு பக்கம் கெடக்குறேன். பேச்சில்ல மூச்சில்ல. அக்கம் பக்கத்துல
இருந்தவங்க நா வுழுந்து கெடக்குறத பாத்துட்டு தண்ணி தெளிச்சி
எழுப்பி இருக்காங்க. ஒரு மணி நேரத்துக்கு எனக்கு நெகா இல்ல. உங்க
அண்ணிக்கி சேதிசொல்லி யிருக்காங்க. அண்ணியும் வூட்ட வுட்டு வந்து’
என்னடா இது தும்பம்னு’ என்கிட்டயே குந்தி இருந்தது.
நா விலுக்குன்னு எழுஞ்சிகிட்டன். ஏன் உழுந்தன் எப்படி உழுந்தங்கிறது
ஒண்ணும் வெளங்குல. மாமி குடுத்த சூட் கேஸ் என்னயே பாக்குது என்
முன்னாடி கெடக்குது. என்ன செய்வே. எங்க செண்ட்ரலுக்கு நா
போவுறது. இது என்னடா கஸ்டம். ரயிலுக்கு
போன அம்மா என்ன கதி ஆச்சோன்னு ஒரே கொழப்பமா போச்சி.
இனி நா போயி அந்த ரயில பாக்க முடியாது. அந்த
அம்மா இந்த பொட்டி யில்லாமலே ரயிலு ஏறியிருக்கும்னு முடிவு
செஞ்சென். நானே எழுஞ்சி மெதுவா ஒரு ஒரு படியா ஏறி மேல என்
வூட்டுக்கு போயிட்டன். அமெரிக்க மாமி பொட்டிய என் கூட இருந்தவங்க
கொண்ணாந்து வூட்டுல வச்சிட்டாங்க. பூட்டுன பொட்டி அப்பிடியே
கெடக்குது. நீ என்ன செய்வே. அந்த அம்மா அவ்வளவுதான் ஹைதராபாத் போயி
ருக்கும். பொட்டிய எடுத்து இதோ ஒசக்க இந்த
பரணையில வச்சன் அத்தோடு சரி.அந்த மாமிகிட்டேந்து இன்னக்கி வரைக்கும் எந்த சேதியும்
வருல.நா இந்த பொட்டிய எடுத்துகினு ஹைதராபாத் போயி யார எங்க தேடறதுன்னுட்டு
வுட்டுட்டன். பூட்டுன பொட்டி அஞ்சி வருஷமா அப்பிடியே
பரணையில கெடக்குது’
‘பொட்டில எதனா
காசி பவுனு நக நட்டுன்னு எதனா இருந்துச்சின்னா’
‘சரியா
போச்சி போ. அது உள்ளாற இருக்குறது எதுவும் நம்புளது இல்லே. அந்த
பொட்டிக்கு சாவியும் நம்பகிட்ட இல்ல’
‘நம்பர்
பூட்டுன்னு சொன்னியே’
‘ தப்புதான்,
அந்த ரகசிய நெம்பரு எனக்கு தெரியாதுன்னு வச்சிகயென்’
‘நா
இப்ப பொட்டிய எறக்குறன். உசுமான் ரோடுல எவனாவது பூட்டுக்கரன் கிட்ட பொட்டிய
கொண்டுபோறன். பொட்டிய தொறந்து என்னா இருக்குதுன்னுதான்
நாம பாத்துடுவமே’
‘என்ன
ரூவா நோட்டு எதனா கத்த கத்தயா வச்சிருப்பங்களா அந்த அம்மா’
‘இல்ல
என்னன்னு தெரிஞ்சிகிடலாம்’
அந்த
அம்மா கட்டிகிற நாலு பழம்பொடவங்க , இருக்கும். ஒரு
சமக்காளம் போர்வ ஒருதுண்டு இருக்கும். சில்வர் டவரா செட்டு
ஒரு தட்டு கொவளைன்னு எதனா இருக்கும். வேற ஒண்ணும்
இருக்காது’
‘அப்ப
என்னதான் ஆவுறது அந்த பொட்டி’
‘ ஒரு
சேதி சொல்ல வுட்டுட்டன். என் மோபைல் போன்ல
மாமிகிட்டேந்து எனக்கு ரெண்டு மிஸ்டு காலு இருந்திச்சு. நா
வுழுந்து எந்திரிச்சி
கொஞ்சம் உடம்பு தேவலாம்னுட்டு என் போன பாத்தேன்.
அந்த அமெரிக்கா மாமிக்கு போன் போட்டேன். தொட்ர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்னு
பதில் வந்துது. வுடுல அப்பறமும் போன் போட்டேன் ஸ்விட்ச் ஆஃப் னு சேதி
வந்துது. அத்தோட சரி. இண்ணைக்கு வரைக்கும் ஒரு சேதியும் இல்ல. நா என்ன செய்யறது.
வருஷம் அஞ்சாச்சி. இனிமேதான் சேதி வருமோ இல்ல அந்த அம்மா நல்லா இருக்குதோ இல்ல,
காலமே ஆயிட்டுதோ இல்ல , திடீர்னு ஒரு நாள் வந்து எம்பொட்டிய குடுன்னு
கேக்குமோ, அந்த அம்மா மவன் கிட்டயும் இந்த சேதி
போயிருக்கும் அவுரு ஒருநா வந்து எங்க அம்மா பொட்டி உங்க கிட்ட குடுத்துதுதாமே அத
என்கிட்ட குடுன்னு கேப்பாரோ’
‘ரொம்ப
டீப்பா போற அண்ணே’
‘போயிதான
ஆவுணும். மொதல்ல அது என் பொட்டி இல்ல. அது நம்பர்
பூட்டாலே பூட்டி இருக்கு. அத தொறக்குற துக்கு
அந்த ரகசிய நம்பரும் நமக்கு அந்த அம்மா சொல்லுல.
அப்பறம் அந்த பொட்டி மேல நமக்கு என்ன உரிமை
இருக்கு. பொட்டிய சும்மா வச்சிருக்கலாம். அவ்வளவுதான். வேற
எதுவும் செய்ய முடியாது’
‘நா
எதுவோ சுளுவா நெனச்சேன். இந்த நம்பர் பூட்ட பூட்டு ரிப்பேர்காரன்கிட்ட
காட்டி தொறந்துடலாம். அதுல எதாவது காசு பணம் இருந்துதுன்னா அண்ணன்
குடும்ப செலவுக்கு ஆவுமேன்னு’
‘தம்பி
அது தப்புல்ல. நமக்கு ஆயிரம் கஸ்டம் இருக்குலாம். அந்த அம்மா இத
நீ செண்ட்ரல் ஸ்டேசனுக்கு எனக்காக எடுத்துகினு வந்து
குடுன்னு சொன்னாங்க. என் நேரம் எனக்கு போக முடியாம ஆயிடுச்சி. யாரு எதிர்பார்த்தா
இப்படி எல்லாம் நடக்கும்னுட்டு. அதுதான் அப்பிடி ஆச்சின்னா
பெறகு அந்த அம்மா கிட்ட போன்லயும் பேச முடியல்ல.
அவுங்களும் என்கிட்ட இதுவரைக்கும் பேசுலயே. நா
என்ன செய்ய’
‘சரி
அந்த பொட்டி இப்ப என்னதான் ஆவுறது’
‘நீதான்
சொல்லேன் என்ன செய்யிலாம்னு’
‘நாந்தான்
சொன்னேன். நீ என் ரோசனைய பொறட்டி போட்டுட்டயே’
‘அது
நம்புளுது இல்ல. அந்த பூட்டயும் நாம அவுங்க அனுமதி இல்லாம்
தொறக்கறதுன்னா எனக்கு சம்மதமில்ல. அதுவுள்ள எந்த ஆஸ்தியிருந்தாலும் அது
நம்பளது ஆவுமா’
‘ஆவாது’ நான் அரை
மனதோடு பதில் சொன்னேன்.
‘
ஒரு சேதி உனக்கும் தெரிஞ்சி
இருக்கும். கேரளாவுல அந்த திருவனந்தபுரம்
பத்மநாப சாமி கோவில்ல இன்னும் ரெண்டு ரகசிய ரூம்பு தொறக்காம கெடக்கு
தாமே. அதுக்கு யாருதான் என்ன செய்ய. இருக்கு.அந்த மாதிரி இந்த பொட்டியும் அங்கனே
பரணையிலேயே கெடந்துபோவுது. ஆவுறது ஆவுட்டும் வுடுவியா. என்
மூச்சி நின்னே போனாலும் அந்த பொட்டிய நா
தொறக்க சம்மதிக்க மாட்டேன். அந்த அம்மா என்கிட்ட
சொன்ன வார்த்ததான் எனக்கு முக்கியம்’
நான்
அண்ணனை ஒரு முறை நன்றாக பார்த்துக்கொண்டேன்.a தருமங்குடி
கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துபோனது.
வயது எழுபத்தி மூன்று. இன்று வரை அவருக்கு எந்த மாத
வருமானமும் நிரந்தரமாயில்லை. குடியிருக்க சொந்தமாய் ஒரு வீட்டில்லை.
தினமும் வயிற்றுப்பிழைப்புக்கு இந்த சென்னை மாநகரத்தை அனேகமாய்
நடந்து நடந்துதான் சுற்றி வருகிறார். அப்படியே சுற்றி
வந்தாலும் இத்தனை வைராக்கியம் இவர் நெஞ்சுக்குள் எப்படி குடிகொண்டு
இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தேன்.
எனக்குப்
பெருமையாகக்கூட இருந்தது. எல்லாமிருந்தும் என்ன? எனக்கு
இன்னும் சின்ன புத்திதான். என் மனம் ஒரு ஓரமாய் சொல்லிக்கொண்டே
இருந்தது.
‘அண்ணன்
தம்பி ரெண்டு பேருக்கும் இன்னும் என்னதான் பேச பாக்கியிருக்குமோ. டிபன்
சாப்பிடலாம் எழுந்திரிங்க. நேரம்
ஆவுதில்ல. வந்தவுங்க எப்ப சாப்டாங்களோ
என்னவோ’ சொல்லிய அண்ணி அன்போடு எங்களை சாப்பிட அழைத்தாள்.
இந்த மாதிரி ஒரு அண்ணி எல்லாம் அமைவதற்கு நம்
மக்கள் எங்குதான் போவார்களோ இனி என்கிறது மனம்.
----------------------------------------------------------------
No comments:
Post a Comment