தீராக்கடன்
நான் தஞ்சாவூர்க்காரன் எங்களுக்கு. காவேரி ஆறும் ஏர்க்கலப்பையும்தான் வழிபடு தெய்வங்கள். காலம் எப்படி அய்யா சும்மா இருக்கும் அது வயலில் உழுவதற்கும் நாற்று நடுவதற்கும் விளைந்த மகசூலை வீடு கொண்டு சேர்ப்பதற்கும் இன்னும் என்ன என்ன
பணி உண்டோ அத்தனைக்கும் எந்திரங்களை வரிசை வரிசையாய்க் கொண்டு சேர்த்தது. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் காவிரிக்கரை நகரெங்கும் உதயமாயின. விளைவாய்
ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பிள்ளைகள் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மக்கள் சமூகத்தின்
உச்சியில் கோலோச்சுவதைப்பார்க்கிறோம்..
நான் நாகப்பட்டினத்தில் தனியார்ப் பொறியியல் கல்லூரியில் படித்தேன்.வேலை தேடினேன்.கொங்குப்பகுதியில்
ஒரு வேலை கிடத்தது. என் பெற்றோர்கள் உடன் வந்தார்கள். கோவையில் மருதமலைக்குச்செல்லும் சாலையில் கல்வீரம்பாளையம்அருகே
நாககணபதி புது நகரில் வாடகைக்குக் குடிவந்தோம். ஐ டிதுறையில் அப்போதுதான் ஒரு துவக்கப்பணி நிலையில்
சேர்ந்தேன்.இன்னும் கணிப்பொறி பற்றி எவ்வளவோ விஸ்தாரமாய்ப் படிக்கலாம். அன்றாடம் விரிந்து வளரும் தொழில் நுணுக்க விஷயங்கள்
நிறையவே தெரிந்து கொள்ளலாம். கல்யாணம் காட்சி
என்பதெல்லாம் இன்னும் ஒரு ஐந்தாண்டு செல்லவேண்டும் என்று நானே முடிவு செய்துகொண்டேன்.
அம்மாதான் சொன்னாள்.
‘வாடகைக்கு இந்த
வீட்டில் இருப்பதற்குப்பதிலாக ஒரு வீடோ அபார்ட்மெண்டோ வாங்கிவிட்டால் என்ன. மாதாமாதம் வாடகையாய்த் தரும் பணம் வீட்டுக்கடனுக்குபோய்ச்சேரட்டுமே’
அதுவும் சரி என்று எனக்கும் பட்டது. அப்பா தன் கருத்தாய் வேறு எதுவும் சொல்லவில்லை.’ மகனே உன் சமத்து’
அத்தோடு நிறுத்திக்கொண்டார். ஒரு தனியார் வங்கியில் வீடு கட்டக் கடன் வாங்கினேன்.
ஆயிரத்து ஐநூறு சதுர அடிக்கு மனை. அதனில் ஆயிரத்து இருநூறு சதுர அடிக்கு வீடு என்று
பிளான் போட்டு வீடு கட்ட ஏற்பாடாகியது.
எனக்கு எண்பது லட்சத்திற்கு வங்கிக்காரன் கடன் கொடுத்தான். வங்கிக்காரன் வீட்டு மனை வீடு கட்டும் அக்ரிமெண்ட் இவைகளுக்கான ஒரிஜினல் பத்திரங்கள் எல்லாவற்றையும் தன் வசம் வைத்துக்கொண்டான். எண்பது லட்சம் கடன் வாங்கினால் வட்டியாய் இன்னுமொரு எண்பது லட்சம் சேர்த்து ஒரு கோடி அறுபது
லட்சம் அவனுக்கு என்னிடமிடமிருந்து திரும்பப்போய்ச்சேரணும்
அப்புறம்தான் அந்த ஒரிஜினல் பத்திரங்கள் என் வீட்டு அலமாரிக்கு வரும். அது மட்டும்
போதுமா மேற்படி நபர் வீடு கட்ட வாங்கிய முழு
வங்கிக்கடனை வட்டியோடு திரும்பக் கட்டிவிட்டார். இவருக்கும் எங்கள் நிர்வாகத்துக்கும்
எந்தவித தாவாவும் இந்த வீடு விஷயமாய் இல்லை
என்பதை உறுதிசெய்து ஸ்டாம்ப் பேப்பரில், வங்கி மேலாளர் கையெழுத்தை சீலோடு வாங்கிப் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.
வங்கிக்கடன் பாரப்பா இவ்வளவு
என்று போட்டு, அழகாய் ஒரு வீடு படம்
போட்டு பெரிய சாவியை வீட்டுக்காரர் கையில் கொடுப்பதாய் அவரும் வாயெல்லாம் திறந்துகொண்டு
பல்லைக்காட்டிச் சிரிப்பதாய் விளம்பரம் போட்டிருப்பார்கள்.
ஒரு கல்யாண நிகழ்வில் ஊஞ்சல் மற்றும் காசியாத்திரை வைபவத்தில் ’பாலாலே கால் அலம்பி பட்டாலே
துடைத்து’ என்று ஒரு பட்டுப்புடவையோடு ராக்கோடி
வைத்துக்கொண்ட மாமி பாட மாப்பிள்ளையை மண்டபத்துள்ளே கூட்டிப்போகும் சமாச்சாரம்தான்
அது. பிறகு அவனுக்கு விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது.
டொரொண்டோவில் ஒரு ப்ரொஜெக்ட் அதனை அந்தக் கனடா நாட்டிற்கே
போய் ஒரு ஐந்து ஆண்டுகள் தங்கி பணி முடித்துத்தரவேண்டும். இங்கு நான் வாங்குகிற மாத ஊதியம் மட்டும்
இல்லாமல் அதுபோல் இன்னொரு ஊதியம் எனக்குண்டு என்றார்கள் அலுவலகத்தில்.
‘ வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் நீ, அதிலிருந்து
எப்படி வெளியே வருவாய். நல்ல வாய்ப்பு உன்னைத்தேடிக்கொண்டு வந்திருக்கிறது விட்டு விடாதே’ என்றார்கள் என் அலுவலகத்தில் சகப்பணியாளர்கள்.. இந்த ஆஃபர் தனக்கே வேண்டும்
என்று பழனியில் பால் காவடி தூக்குபவர்களும் திருப்பதியில் மொட்டை போடுபவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
அம்மாவிடம் சொன்னேன். ‘நாங்க எங்கள பாத்துக்கறம். நீ கனடா
போய் வேல செய் . நீ வங்கியில வாங்கின வீட்டுக்கடனும் சீக்கிரமாக அடைஞ்சிடும். அது தானே
முக்கியம். அப்புறம் கல்யாணம் காட்சின்னு வந்துதுன்னா உனக்கு பண மொடசல் இல்லாம இருக்கும்’ அம்மா என்னிடம் சொன்னாள்.
பில்டர் ஒரு ஆறு மாதத்திற்குள்ளாக வீடு கட்டிக்கொடுத்தார். காசுதானே பேசுகிறது. வீட்டுக்கு மருதவேல் என்று பெயர் வைத்தோம். அப்பாதான்
மருதமலையானை வெற்றிவேல் முருகனை நாம் நினைத்துக்கொண்டே
இருக்கவேண்டும் என்றார். புது வீட்டில் பால் காய்ச்சினோம். பெரிய ஆடம்பரம் எல்லாம் இல்லை. இருபது பேருக்கு மேல்
யாரும் வரவில்லை. புதுமனைப்புகு விழா என்று பத்திரிகை எல்லாம் அடிக்கவில்லை. போனில்
அப்படி இப்படி அழைத்தது தான்.
நான் கனடா புறப்படத்தயாரானேன். அம்மா அப்பாவுக்கு வாடகையில்லாத சொந்த வீடு. அருகிலேயே
வங்கி. அப்பா ஏ டி எம் கார்டும் வைத்துக்கொண்டுதான்
இருக்கிறார். தேவையான பால் தயிர் வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.மளிகை
ஜாமானும் அப்படியே. ஒரு இரண்டு கிலோமீட்டர் போனால் ஒரு தனியார் மருத்துவமனை. வாடிக்கையாய்
வரும் ஆட்டோக்காரன் இருக்கிறான். எங்கள் தெருவுக்கு பின் தெருவிலே ஒரு சிவன் கோவில். நவக்கிரகம் ஆஞ்சனேயர் சந்நிதியும்
உண்டு. மூத்தவர்களுக்கு வேறு என்ன வேண்டும்.
நான் பெற்றொரிடம் விடைபெற்றுக்கொண்டுப் புறப்பட்டேன். டொரொண்டோ
போய்ச்சேர்ந்தேன். கோயம்புத்தூரிலிருந்து பெங்களுர் பெங்களூரிலிருந்து பாரிஸ், பாரிஸிலிருந்து
டொரொண்டோ. கனடாவில் தரையிறங்கினேன்.கொல்லுகின்ற
குளிர். தலைக்கு மூடி போட்ட உல்லன் கோட்டும் காலுக்கும் கையுக்கும் உல்லன் உறையும் இல்லாமல் காலம் தள்ளவே முடியாது.
இடுப்பில் ஒரு சிட்டைத்துண்டு கட்டிக்கொண்டு
மட்டுமே தமிழ் நாட்டை அழகாய்ச் சுற்றி வரலாம்.அதெல்லாம் உலகின் வேறு எந்த பகுதியிலும்
எண்ணிப்பார்க்க முடியாதுதான். ஏன் இந்தியாவின் தலைநகர் டில்லியில்தான் அப்படி சாத்தியப்படுமா சொல்லுங்கள்.
டொரொண்டோவில் தனியார் கணினிக்கம்பெனியில் வேலைக்குச்சேர்ந்தேன்.
தமிழ் நாட்டுக்காரர்கள் எத்தனையோ பேர் அந்த நிறுவனத்தில் பணியில் இருந்தார்கள். இந்தியாக்காரர்கள்
எண்ணிக்கையும் ஏராளமாகத்தன் இருந்தது. வேலை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் இந்தியர்களாக
இருக்கலாம். நம்மூர் மளிகை ஜாமான்கள் காய்கறிகள்
எல்லாம் கிடைத்தன. நான் பிறந்த காவிரிக்கரை ஜனங்கள் ஏகப்பட்டபேர் வேறு வேறு பணியில்
இருந்தார்கள். மயிலாடுதுறைக்காரர்க:ள் இல்லாத ஊர்தான் ஏது, எல்லா ஊரிலும் காணப்பட்டார்கள்.
ஒரு வாடகை வீட்டில்
நண்பர்கள் இருவரோடு சேர்ந்துகொண்டேன். எத்தனையோ சவுகரியங்கள் எனக்கும் பரஸ்பரமாய்
அவர்களுக்கும்தான். மொபைலில் அம்மாவோடு பேசினேன். எப்போதும் அம்மாவோடு அப்பாவும்தான் சேர்ந்துகொள்வார். உலகத்தில் விலை குறைந்தது தொலைபேசி
சேவைதான். சர்வமும் விலை ஏறிக்கொண்டிருக்க கனடாவிலிருந்து வாட்சாப் வழி நாள் முச்சூடும் பேசினாலும்
ஒரு பைசா கிடையாது. பேசுபவர்களை நாம் பார்க்க அவர்களும் நம்மைப்பார்க்க எத்தனையோ வசதி. அறிவியல் சாதித்தவைகளில் கண் எதிரே
காட்சியாகிறது இந்த வாட்சாப் மொபைல் சேவை.
’ மொபைல் போனை வைத்துகொள் நீ பேசு பேசாமல்
இரு எனக்குக் கட்டவேண்டியது இத்தனை நாட்களுக்கு
இத்தனை ரூபாய் அத்தோடு சரி’. ரொம்பவும் சரி.
நான் கனடா வந்து ஒரு ஆண்டு முடியப்போகிறது. நான் வீடு கட்ட வாங்கிய கடன் முக்காலுக்குக் குறைந்து போனது. இன்னும் கொஞ்சம்தான்
பாக்கி. நான் இங்கு ஒண்டிக்காரன். நண்பர்கள் ஒன்றாகக்கூடி சமைத்துக்கொண்டு சாப்பிடுகிறோம்.
வெளியில் சாப்பிடவும் முடியாது. விலையோ விலை. சோறு சகிக்கவும் சகிக்காது. எருமை மாட்டுக்கறிதான் இங்கு பிரபலம். வெள்ளைக்காரர்கள் எத்தனைப் பிரியமாய்ச்
சாப்பிடுகிறார்கள் அதனை.
எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. வீட்டுக்கடன்
முழுவதும் அடைந்துவிட்டால் இன்னும் கையில்
காசு கொஞ்சம் சேர்க்கலாம் . கல்யாணத்திற்குப் பயன் படும் என்று கணக்குப்போட்டேன். இயற்கைக்கு
இத்தனை சூது ஆகாது. சீனாவின் ஊஹான் நகரில் புறப்பட்ட கம்பீர கொரானா வைரஸ் உலகத்தையே வலம் வரத் தொடங்கியது.
லடசம் லட்சமாய் மக்கள் இறக்க ஆரம்பித்தார்கள். பணக்காரர்கள் ஏழைகள் படித்தவர்கள் படிக்காத
பாமரர்கள் யாரையும் கொரானா விட்டு வைக்கவில்லை. இரவு படுத்தால் அன்றன்று விடியற்கா;லை எழுந்து ’ நாம் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறோம்’
என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த அவலட்சணத்தில் இருந்தது இப்பூவுலகின்
நிலமை. போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பித்துப்போயிற்று. பார்க்குமிடமெல்லாம் வான்கோழிகள் தோகைவிரித்தாடின.
விமான நிலையம் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டேண்ட் இங்கெல்லாம்
பசுமாடுகள் ஆடுகள் படுத்துறங்கின. விஞ்ஞானிகள் இரவு பகலாய் ஆய்வகத்தில் உழைத்தார்கள். கொரானாவுக்கு த் தடுப்பூசி
கண்டுபிடித்து கை கொடுத்தார்கள். முண்டிஅடித்துக்கொண்டு உலகத்து ஜனங்களே தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.
ஒன்று இரண்டு மீண்டும் பூஸ்டர் என அதனில் ரகங்கள் வேறு. தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் கொரானா கோரமாய்த் தலை விரித்து ஆடியது.
நான் கனடாவில் தவியாய் தவித்துக்கொண்டு இருந்தேன். கோயம்புத்தூரிலிருந்து
அம்மா பேசினாள்.
‘எப்படி இருக்கடா’
‘நல்லா இருக்கேன் நீங்க எப்பிடி இருக்கிங்க’
‘’இருக்கோம்’
‘என்னம்ம என்னமோ மாதிரி பேசற’
‘ரொம்ப பயம்மா இருக்குடா’
‘ சொல்வது சரிதான் பயப்படவே கூடாது நீங்கள்’
நான் கனடாவில்
கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அது பற்றி அம்மா அப்பாவை விசாரித்தேன். அப்பா ஒரு ஊசி போட்டுக்கொண்டதாகவும்
அம்மா அதுகூட போட்டுக்கொள்ளவில்லை என்றும் சொன்னார்கள். அம்மாவுக்கு சர்க்கரை நோய்
இருந்தது. அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அந்த மாத்திரை சாப்பிடுவது இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏதேனும் பிரச்சனை உண்டாக்குமா
என்கிற சந்தேகம் அம்மாவுக்கு வந்துவிட்டது.
ஒருநாள் கோவை ஒரு
தனியார் மருத்துவ மனையிலிருந்து எனக்கு மெசேஜ்
வந்தது. அம்மாவும் அப்பாவும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருப்பதாகத்தான்.
என் பெற்றோர்களுக்குப் போன் போட்டேன். யாரும் பதில் சொல்லவில்லை. நான் உடனே மருத்துவ
மனைக்குப் போன் போட்டேன். அவர்கள் எனக்குப்
பதில் சொன்னார்கள். என் பெற்றோர் இருவருமே கொள்ளைநோயுக்கு சிகிச்சை பெற்று வருவதாயும் அவர்களின் நிலமை சரியாக இல்லை என்றும் சொன்னார்கள்.
இனி என்ன செய்வது.
உலகெங்கும் விமான சேவை மிகவும் அரிதாக இருந்தது.
விமானக்கட்டணம் சாதாரண காலம்போல் பத்து மடங்குக்கு உயர்த்தியிருந்தார்கள். பெற்றோர்களைப்
பார்த்துக்கொள்ள யாரை நான் அனுப்ப முடியும்.
இந்த நோய் எப்படிப்பட்டது. மருத்துவ மனையில் நோயாளியையே ஒரங்கட்டி வைத்து அல்லவா சிகிச்சை செய்கிறார்கள்.
யாரிடமும் பேசி ஒன்றும் செய்வதற்கில்லை. ’கடவுளே
இதெல்லாம் என்னக்கொடுமை. இப்படி ஒன்று வரும்.
மனித குலத்தை சின்னா பின்னமாக்கிவிடும் என்று யாரும் நினைக்கவுமில்லையே’.
நான் அலுவலகத்தில் விடுப்பு சொன்னேன். இந்தியாவுக்குப்பயணமானேன். பகீதரப் பிரயத்தனமாய் டிக்கட் கிடைத்தது. லண்டன் ஹீத்ரூ விமானநிலையம்
வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தேன். மீனம் பாக்கத்தில் இறங்கி மருத்துவ மனைக்குப்
போன் போட்டேன். அவர்கள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிற ஒரே பதிலைத்தான் பெற முடிந்தது. சென்னை விமான நிலையத்தில்
மருத்துவர்கள் என்னைப் பரிசோதித்தார்கள். கொரானா தொற்று இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு மட்டுமே என்னை
வெளியே அனுப்பினார்கள். பன்னாட்டு முனையத்திலிருந்து உள்நாட்டு முனையத்துக்கு ஓடோடி வந்தேன். கோவைக்கு ஒரு விமானம் பிடித்துப்
புறப்பட்டேன். சென்னையிலிருந்துஒரு டாக்சி
வைத்துக்கொண்டாவது கோவை சென்று விடவேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். கோவைக்கு அன்று விமான சேவை இருந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு மணி நேர விமானப்பயணம். இல்லாவிட்டால் குறைந்தது பத்து மணி நேரமாவது காரில் பயணிக்க
வேண்டும். கோவை செல்லும் விமானத்தில் அமர்ந்திருக்கிறேன். மனம் திக் திக்
என்று அடித்துக்கொண்டது.கண்களிலிருந்து அவ்வப்போது கண்ணீர் வராமலில்லை. வந்து என்ன
செய்வது. அழுவதற்குத்தான் எனக்கு நேரம் ஏது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கோவை சென்றாக வேண்டும் அது மட்டுமே
என் திட்டமாக இருந்தது. சூலூர் விமான நிலையத்தில்
போய் இறங்கினேன். அந்தத் கோவை தனியார் மருத்துவ
மனை நோக்கி டாக்சியில் விரைந்தேன்.
மருத்துவ மனை டாக்டர்களை அணுகினேன். அம்மாவையும் அப்பாவையும்
பார்க்கவேண்டுமே. அவர்கள் எந்த கதியில் இருக்கிறார்களோ என்கிற பெருங்கவலை. நான் பார்க்கும் கோயம்புத்தூர் நகரம் நான் விட்டுச்சென்ற அந்த கோயம்புத்தூர் நகரமாகவேயில்லை. ஒரு அடர்ந்த சோகத்தைப் போர்த்திக்கொண்டுக்
கிடந்தது. மருத்துவ மனையில் எனக்கு பிரத்யேக
கொரானா சூட் ஒன்று கொடுத்தார்கள். விமானத்தில்
ஏறும்போதுமே கொரானா சூட் அணிந்து கொண்டுதான் புறப்பட்டேன்.
அம்மாவுக்கு கொரானா சூட் போட்டு பெட்டில் படுக்க வைத்திருந்தார்கள். ‘அம்மா அம்மா’
இரண்டுமுறை ஓங்கி அழைத்தேன். மருத்துவர்கள் அம்மாவத் தொட்டுப்பார்க்கவே அனுமதிக்கவில்லை.
அம்மாவுக்குப் ‘பிரக்ஞை தவறிவிட்டதாய்ச்சொன்னார்கள். தேறுவது
கடினம் இன்னும் சில மணி நேரம் உயிருடன் இருப்பார்கள் என்பதை மட்டுமே எனக்குச்சொன்னார்கள்.
என் அப்பாவைத்தேடினேன். அவர் ஆண்கள் பகுதியில்
ஒரு கட்டிலில் படுத்திறந்தார். அப்பா கண்களைத் திறந்து திறந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.
நான் ‘அப்பா அப்பா ‘ என்று அலறினேன். அவர்
கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருந்தது.
என்னைப்பார்த்தார். புன்னகை செய்தார். அவரால் பேசவே முடியவில்லை. அருகிருந்த மருத்துவர் என்னிடம் சொன்னார்.
’என் தந்தையும் இன்னும் சில மணி நேரம் மட்டுமே இருப்பார்’ என்று.
ஒரு ஆம்புலன்ஸ் வைத்து ஏற்பாடு செய்தேன். அம்மாவுடன் பெட்டில் ஒரு ஹேண்ட் பேக் இருந்ததுவாய்ச் சொன்னார்கள்.
என்னுடைய மருத்துவக் காப்பீட்டிலேதான் இருவருக்கும்
சிகிச்சை நடந்திருக்கிறது. அம்மாவின் பையில்
என்னுடைய வீட்டு சாவி பத்திரமாக இருந்தது. ஆம்புலன்சில் இருவரையும் தூக்கிப்போட்டுக்கொண்டு
கல்வீரம்பாளையம் என் இல்லம் நோக்கிப்புறப்பட்டேன்.
மருதமலை முருகன் கோவில் காட்சியாகிக்கொண்டிருந்தது. ‘முருகா இது என்ன நியாயம்’ என்று
ஓங்கிக்கத்தினேன். ஆம்புலன்சின் டிரைவர் பயந்து போய் விட்டார்.
என் வீட்டுக்கதவைத்திறந்தேன். அம்மா அப்பாவை இறக்கி வீட்டுக்குள்
கட்டிலிலும் பெஞ்சிலும் படுக்க வைத்தேன். மருத்துவ மனை ஊழியர்கள் எனக்குப் பேருதவி
செய்தார்கள். அம்மா கண் விழித்தாள் ஒரு முறைதான். என்னைப்பார்த்தும் இருக்கலாம். நானும்
பூச்சாண்டி உடையில்தானே இருக்கிறேன். அடையாளம் தெரிந்ததுவோ என்னவோ. அம்மா பூவோடும்
பொட்டோடும் நிரந்தரமாய் விடைபெற்றுக்கொண்டாள். அப்பா என்னை ஒரு முறை பார்த்தார்.
ஏதோ சொல்ல சொல்ல முயற்சிக்கிறார். அவருக்கு நான் வந்திருப்பது புரிந்திருக்கவேண்டும்.
ஆனால் வார்த்தைகள் மட்டும் எழும்பவில்லை. கண்கள்
என்னையே பார்த்தன. விழிக:ள் குத்திட்டு நின்றன.
ஆம்புலன்ஸ் வீதியில் நின்றுகொண்டிருந்தது. கொரானா சாவு.
யாரும் வரமாட்டார்கள். ஆம்புலன்சிலேயே யூரியா சாக்குகள் கட்டுக் கட்டாயிருந்தன. இரண்டு
சாக்குகளில் என் பெற்றோர் திணிட்க்கப்பட்டார்கள். வீட்டைப்பூட்டிக்கொண்டு நான் அவர்களோடு
புறப்பட்டேன். இடுகாடு நோக்கிப்புறப்பட்டது அதே ஆம்புலன்ஸ். வண்டியிலிருந்து சைரன் ஒலி தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. கல்வீரம்பாளையம்
இடுகாட்டில் பணியாற்றும் ஊழியர்கள்.கொஞ்சமாய் கோடித்துணி தந்தார்கள். வாய்க்கரிசி கொடுத்து
என்னைப் போடச்சொன்னார்கள். அம்மாவுக்கும் அப்பாவும் வாய்க்கரிசி போட்டு ஒரு நெட்டை மரமாய் நின்றேன். கற்பூரம் கொடுத்து கொள்ளி வைக்கச்சொன்னார்கள்.
அவ்வளவே. ஒரு அரை மணி நேரம் இடுகாட்டுக் கொட்டகையிலேயே
சம்மணமிட்டு உட்கார்ந்து கோண்டேன். ‘ஓ’ என்று அழுதேன். முடிந்த மட்டும் அழுதேன். இரண்டு
டப்பாக்களில் அஸ்தி கொண்டு வந்து பவ்யமாய்க்
கொடுத்தார்கள். இனி நீங்க போகலாம் என்றார்கள் இடு காட்டு ஊழியர்கள். அவர்கள் கைகளைப்பிடித்து
நன்றி சொன்னேன்.
‘சவுகரியப்படும்போது இத காவேரில கரைச்சிடுங்க. ‘ என்றனர்
என்னிடம். ஒரு நாள் பவானி முக்கூடல் சென்றேன். அம்மா அப்பாவின் இவ்வுல இருப்புப் பாக்கியை இயற்கைத்தாயிடம் ஒப்படைத்தேன்.
என் அன்புத்தாய்க் காவிரியிடம் பிரியா விடைபெற்றுக்கொண்டேன்.
’அவ்வளவுதானா என்
அம்மா அவ்வளவுதானா என் அப்பா’ என்றது மனம்.
எனக்குக் கொரானா வர வாய்ப்பில்லை நான் தான் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவனாயிற்றே சொல்லிற்று பாழும் மனம்.
வங்கியில் வாங்கிய வீட்டுக்கடன் முழுவதுமாக அடைத்துவிட்டேன். மருதவேல் வீட்டுச்சாவி கையில் இருக்கிறது. அம்மா
அப்பாவின் அறுபது கல்யாண போட்டோவுக்கு ஒரு தண்ட மாலை வாங்கி சாத்திவிட்டு தரை வீழ்ந்து வணங்கி
எழுந்தேன். கனடாவுக்குப் புறப்பட்டுப்போயாக வேண்டும். எனக்குக் கிடைத்த அய்யர் வைத்து கருமச் சடங்கு முடித்தேன்.
இருவரும் ஒன்றாக மறைந்தது கூட தாம் பெற்ற பிள்ளைக்கு ஒரு சவுகரியம் செய்யவேண்டும் என்கிற திட்டமாக இருக்குமோ
என்கிறது உள்மனம்.
தீராக்கடன் ஒன்று இப்போது முளைத்கிருப்பதாய் உறுத்தல் இருந்துகொண்டேயிருக்கிறது.
அம்மா அப்பா படத்தைப்பார்த்துக்கொண்டேன்.
நான் கனடா புறப்படுகிறேன். ’போய் வா’ என்று அவர்கள் மகிழ்ச்சியாய் ஆசீர்வாதம்தான்
செய்கிறார்கள் இன்னும் எனக்கு.
No comments:
Post a Comment