Tuesday, October 21, 2014

raajamkirushnan maraivu










எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்(90) திங்கள் அன்று (20.10.2014) சென்னையில் போருர் ராமசந்திரா மருத்துவமனையில் காலமானார். அவர் அங்கு தங்கித்தன் இறுதி நாட்களை கழித்திட வாய்ப்பு தந்தது அந்த நிறுவனம். நாம் அந்த நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.
ராஜம் கிருஷ்ணன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிக்குவித்த எழுத்து உழைப்பாளி. .சாகித்ய அகாதெமி,சரஸ்வதி சம்மான்,பாரதிய பாஷா விருது இலக்கியச்சிந்தனை விருது என விருதுகள் அணிவகுத்து அவருக்குப்பெருமை கூட்டின.
தருமமிகு சென்னையில் தான்வாழ்ந்த வீடும் தன் கணவன் கிருஷ்ணன் மறைந்த பிறகு தனக்கு இல்லாமல் போக நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அவர்க்கு எழுத்தாளர் திலகவதி தோழமை கை கொடுத்தார். ஆக திருவான்மியூர் பக்கத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லம் அவர்க்கு அடைக்கலம்தந்தது.
பின்னர் அவர் போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர்கள் பராமரிப்பில் தங்கி இருப்பதாக அண்மையில் காலமான நண்பர் கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி எனக்குச்சொன்னார்.ராஜம் கிருஷ்ணன் மருத்துவ மனையில் படுக்கையிலிருந்துகொண்டு சொன்ன நினைவு சொச்சங்களை தொகுத்து ஒரு நூலாக அது வெளிவந்திருப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். வெளியிட்டவர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையாகப்படித்து இதனை வெளியிட்டிருந்தால் அவருக்கு கூடுதல் பெருமை சேர்த்திருக்கும் சு கி .என்னிடம் இப்படி ப்பகிர்ந்து கொண்டார்.
கலைஞ்ர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சமீபத்தில்தான் ராஜம் கிருஷ்ணன் படைப்புக்களை அரசுடமை ஆக்கி மூன்று லட்சங்கள் அவருக்குத்தந்து தமிழ்ப் புண்ணியம் கட்டிக்கொண்டார். எழுத்துப்படைப்பாளிக்கு பிரக்ஞ்னை உள்ளபோதே கொடுத்து கௌரப்படுத்தியது ஒரு நல்ல விஷயம்.இந்த வகையில் நிதி உதவி பெற்றோர் அது போது கொஞ்சம் எண்ணிக்கையில் அதிகம்.
.தமிழக ஆட்சிக்கட்டிலில் இப்போதுள்ளவர்கள் எப்படி என்ப்து.எல்லாம் நல்ல புத்தகம் வெளியிடுவோர் உங்களுக்குச்சொல்லி இருப்பார்கள்.என்னை மன்னிக்கவும் நான் ராஜம் கிருஷ்ணனுக்கு வருகிறேன்.

ராஜம் கிருஷ்ணனை கடலூர் தொலைபேசிதொழிற்சங்கம் சார்பில் ஒரு மகளிர்தின விழாவுக்கு நாங்கள் அழைத்திருந்தோம்.பெண் எழுத்தாளரை அழைப்பது மகளிர் தினவிழாவில் பேசவைப்பது கடலூர் தொலைபேசி ஊழியர் மரபு. வெண்ணிலா, தமிழரசி, பத்மாவதி விவேகானந்தன்,சைரா பானு என பெண்டிர் அனிவகுத்து கடலூர் வந்திருக்கிறார்கள். சென்னை தொலைபேசித்தோழியர் ஏ டி ருக்மணியும் ராஜம் கிருஷ்ணனோடு கடலூருக்கு வந்திருந்தார்.
கடலூரில் சிரில் பெயரால் ஆண்டுதோறும் தொலைபேசி ஊழியர்கள் தமிழ் விழா ஒன்று சிறப்பாக நடத்துகிறார்கள். தமிழ் நாட்டு தமிழ் அறிஞ்ர்கள் இது விஷயம் அறிவர். புதுவை நூற்கடல் கோபாலைய்யர் தொடங்கி ஈழத்துக்கவி காசி ஆனந்தன்.வரை இங்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.இது நிற்க.
ராஜம் கிருஷ்ணன் (1998) கடலூர் நகரம் வந்து தொலைபேசி ஊழியர்கள் மகளிர் தின நிகழ்வில் பெண்கள் சமூக அரங்கில் எப்படி முன்னணியில் நின்று பணி ஆற்றிவது என்பது பற்றி உருக்கமாகப்ப்பேசினார், தோழியர் ஏ டி ருக்மணி ராஜம் கிருஷ்ணன் பெருமைகளை எல்லாம் சொல்லி நிகழ்ச்சிதொடங்கி வைத்தார்.கடலூர் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் அன்பர்கள் இன்றும் கூட அதனை நிறைவோடு நினைத்துப்பார்ப்பார்கள்.
நிகழ்ச்சி முடிந்து இரவு திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் தோழியர்கள் இருவரையும் வண்டி ஏற்றி அனுப்பிவைத்தோம். ரயில் வருமுன்பு திருப்பாப்புலியூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உலக நடப்புக்கள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்
.பெண்ணை ஆணின் பின் இணைப்பாக.வைப்பதில் மதங்களின் பங்கு ,சாதியும்(!) நாதியும் அற்று பெண் வாழ்வதில்தான் ஆண் இனத்தின் கீழ்மை வெளிச்சம் பெறுவது, பெண்குழந்தையை இரண்டாந்தர பிரஜையாகமட்டுமே இந்தச் சமூகம்.அங்கீகரிப்பது. பெண்களுக்குஇட ஒதுக்கீடு வழங்குவதில் ஆண்கள் அரசியல் நடத்துவது, விதவைப்பெண்கள் காலம் காலமாக பட்ட நெடிய துயரம் இவைபற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார். கூர்மையான நகைச்சுவை,ஆழ்ந்த அறிவு,பளிச்சிடும் தெளிவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருக்க ஊற்றாய்க்கொப்பளிக்கும் இயல்பான ஆர்வம் இவை அவரிடம் தரிசிக்க முடிந்தன..
தன் கணவரின் ஈடில்லா ஒத்துழைப்பு.த்னது படைப்பு சார்ந்த தொடர் பயண அனுபவங்கள். எல்லாம் இடை இடையே பங்கு பெற்றன.

எனது முதல் புதினம் 'மண்ணுக்குள் உயிர்ப்பு' விருத்தாசலம் அரசு பீங்கான் ஆலை, சேஷசாயீ இன்சுலேடர் ஆலை இவை மூடப்பட்டது தொடர்பாக நான் எழுதியது.. அந்த ப்புதினம் 'மண்ணுக்குள் உயிர்ப்பு பற்றி' ராஜம்கிருஷ்ணன் நல்லதொரு விமரிசனமெழுதி அது கணையாழியில் வெளிவந்ததும் எனக்குப்பெருமை.
ராஜம்கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்- உப்பளத்தொழிலாளி துயர் பேசும் அற்புதமான ஒரு படைப்பு. அதில் அவர் சொல்லும் ஒரு விஷயம் அவர் எந்த நிறம், யார் பக்கம் என்பது அறிவிக்கும்.

'அரைக்கஞ்சி அவள் கருணை
பட்டினி அவள் கருணை
அறியாமை மௌட்டிகம் அவள் கருணை
அடுத்தவனை நம்பி அவன் அமுக்கிட்டு மேலேறுறதும்:நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு சாவறதும் அவ கருணைதான்'

எந்தப்பகுதித்தொழிலாளர்களையும் தன் படைப்புக்குள் கொணர்ந்த முற்போக்காளர் அவர். என்றும் தமிழ்மொழியில் உழைப்பாளி இலக்கியம் அவர் நினைவு போற்றும். ராஜம்கிருஷ்ணனை நினைவுக்குக்கொண்டு வரும் ஒரு பெண் எழுத்தாளருக்கு இனி இந்த இலக்கிய உலகம் காத்துக்கிடக்கும்.
--------------------------------------------------------------------------------------------
....

No comments:

Post a Comment