Sunday, September 9, 2018

vellam 5


சென்னையில் வெள்ளம் - 5

ஆட்டோக்காரன் தனக்குத்தெரிந்த வெள்ளச்செய்திகளை சொல்லிக்கொண்டேபோனான்.'அடையாற்று த்தண்ணீ நந்தனம் ரோடுல.மெட் றோவுக்கு வெட்டுன ரோட்டுக் குழியில  பூந்து பொறப்புட்டுடுச்சி.ஆத்துல என்னா என்னாவோ  வூட்டு ஜாமானுவ மொத்தமா அடிச்சிகினு போனது. பத்து பைசா நீ கேட்டா  உனக்கு  குடுப்பானா.எல்லாம் போவுது கடலுக்கு'.

லேசான தூரல்.எந்த பேருந்தையும் சாலையில் காணோம்.எல்லா பேருந்துகளும் ஓரங்கட்டப்பட்டு அசிங்கமாக நின்றுகொண்டிருந்தன.பேருந்துக்காரர்கள் வண்டியை எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தனர்.எந்த சாலை எது வரைக்கும் நல்லபடியாக இருக்கும் என்பதே அனுமானிக்க முடியாமல் இருந்தது.பந்தோபஸ்துக்கு என நின்றுகொண்டிருந்த போலிசுகாரர்கள்'வண்டி போனா ஏறுங்க.எதயும் ஒண்ணும் உறுதியா சொல்ல முடியாது' என்றனர்.மக்கள் ஆங்கங்கே நின்று நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
'எல்லாம் ஏரியையும் ஒடச்சி உட்டுட்டானுவ.பின்ன என்ன செய்வ.செம்பரம் பாக்கத்தை இப்பிடி  தொறந்ததுதான்  பெரிய ஆபத்து' என்று பேசிக்கொண்டனர்.
ஆட்டோக்காரன் அண்ணாசாலையில்  நடு ரோட்டில் ஓட்டிக்கொண்டிருந்தான்.சாலையில்தான் பேருந்துகள் இல்லையே.சைதாப்பேட்டை வந்தது.மக்கள் கூட்டம்கூட்டமாக நின்று அடையாற்றை வேடிக்கை பார்த்தனர்.
'தண்ணீ ரோட்டுல ஆக்ரோஷமா பொறண்டுபோச்சி. இப்ப செத்த  அடங்கிப்போவுது.கர ஓரம் இருந்த சனம் கோ   ன் னு கத்துகிட்டு மூலைக்கு ஒண்ணா ஒடுனது.எந்த கதயை சொல்லுவ' என்றான் ஆட்டோ ஓட்டி
.                                                   சைதாபேட்டை மைன்ரோடெல்லாம் கசா முசா என்று கிடந்தது.ஊரே எதுவோ புதிய கோர  உருவத்தைத்தாங்கிய மாதிரிக்குத்தெரிந்தது.
கலைஞர் மணிவிழா நினைவு வளைவு தாண்டி ஆஜானுபாகு பனகல் மாளிகையோ  எனக்கு மட்டும் ஒன்றுமில்லை என அப்படியே நின்று கொண்டிருந்தது.அடையாற்றில் இன்னும் மழை த்தண்ணீர் கோபமாகத்தான் சீறி நுரைத்துக்கொண்டோடியது. கரையைக்கடந்த  மழை நீர் ஊரை அச்சுறுத்தியது மட்டும் இப்போது  கொஞ்சம் அடங்கிவிட்டிருந்தது. ஆற்றின் கரையோரம் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் குடியிருப்புக்கள் சிதறிக்கிடந்தன.குப்பையைக்கிளறிக்கொண்டு சிலர் இங்கும் அங்கும் நின்று கொண்டிருந்தார்கள். தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக கண்ணில் தென்படும் அந்த இடங்களெல்லாம் வெறிச்சோடி க்  காட்சியாயின. அவை எங்கேனும் பாதுகாப்பான  மேடான இடம் நோக்கிச்சென்றும்  இருக்கலாம். கட்சிக்கொடி மரங்கள் அங்கங்கு தென்பட்டன. அவை கொடியைத்தொலைத்துவிட்டு அம்மணமாக நின்று கொண்டிருந்தன.ஆகாயத்தில் கழுகுகள் ஏகத்துக்கு விர்விரென்று பறந்தன.வட்டமிட்டன.அடையாற்றில் அடித்துவரப்பட்ட குப்பை கூளங்கள் ஆற்றின் கரை ஓரம் மலையெனக்கிடந்தன.சாலையில் பேருந்துகள் இங்கொன்றும் அங்கொன்றும் நிறுத்தப்பட்டு இருந்தன.சில அவை எங்கே செல்கிறது என்பது சொல்லும் பலகையைத்தொலைத்துவிட்டிருந்தன.
மக்கள் நம் கையில் ஒன்றும் இல்லை எது நடக்கணுமோ அது நடக்குது என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பதைப்பார்க்கமுடிந்தது. அனுபவித்த மழை நீர் அச்சம் மக்களை அப்படிப்பேச வைத்தது.ஆட்டோக்காரன் எங்களை கிண்டியில் கொண்டு சேர்த்துவிட்டான்.கிண்டி ரேஸ் கோர்ஸ் முன்பாக ரயில் நிலையம் வெறிச்சொடிக்கிடந்தது.

ரயில் எதுவும் ஓடவில்லை. நின்றிருந்த ரயில் பெட்டிக்குள் சில மனிதர்கள் அடைத்துக்கொண்டு கிடந்தார்கள்.அவர்களை அங்கிருந்து யாரும் விரட்டிவிடவில்லை என்பது மனதிற்கு ஆறுதலான விஷயம் . ரேஸ் கோர்ஸ் சாலையில் நரிக்குறவ்ர்கள் கும்பல் கும்பலாக நின்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.அவர்களுக்கு நடுவாக ஒரு சவம் ஒன்று கிடத்தப்பட்டிருந்தது. அது ஆணின் சடலமோ பெண்ணின் சடலமோ  தெரியவில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் புரியவில்லை.சத்தம் மட்டும் அதிகமாக வந்துகொண்டே இருந்தது
.ரயில் ரோடு ஒட்டி  ஓரமாக வந்த எங்களின் ஆட்டோ   கே வி  கல்யாண மண்டபத்தைத்தாண்டியது  எங்கு எங்கெல்லாமோ சுற்றி பிருந்தாவனம் நகர் மையின் ரோடை ஆட்டோ சென்றடைந்தது.இதுவே பெரிய சாதனையாக நான் உணர ஆரம்பித்தேன்.
'இதுலயே ஆதம்பாக்கம் அந்த  சக்தி நகருக்கு  போயிடலாம்'
என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.ஆட்டோக்காரன்' எனக்கு ஒண்ணுமில்ல.எது வரைக்கும் போமுடியுதோ அதுவரைக்கும் நான் வர்ரேன்.காசு கணக்கு பாக்காதிங்க .போவுற  தூரம்  பாத்து அதுக்குத்தக்கன போட்டுக்குடுக்கணும் ஒரு .மனுஷன் இதுல ஆட்டோ ஓட்டிகிட்டு வர்ரதுதான் பெரிசு. எனக்கும் குடும்பம் புள்ள குட்டிங்க இருக்குது.வவுத்து பொழப்புக்குத்தான் நானு வர்ரன்' சொல்லிக்கொண்டான்.என் மனைவி என்னைப்பார்த்துக்கொண்டாள்.அவன் சொல்வதும் சரிதான் என்கிற விதமாக அவளின் பார்வை இருந்தது.
சாலை எங்கும் மழை நீர்..நண்டுகள் நத்தைகள் அட்டைகள் பாம்புகள் தவளைகள் மரவட்டைகள் என ஊர்ந்துகொண்டே இருந்தன.சில அரைபட்டும் பிளவு பட்டும் நாறிக்கொண்டு கிடந்தன.காக்கைகள் தம் பசிக்கு அவைகளை கொத்திகொண்டே இருந்தன.சாலைகள் மீதெல்லாம் தண்ணீரும் தழை களுமாகக்கிடந்தன.பிருந்தாவன் நகர் மெயின் ரோடில் எந்தக்கடையும் திறந்து இல்லை. மூலைக்கொன்றாக கை பம்புகள் மட்டும் லொபுக் புடுக் என்று குரெலழுப்பிக்கொண்டு தண்ணீர் தந்தன.அந்த ஓலி மட்டும் ஓயவே இல்லை.மழை தூறுவதும் பின்னர் விடுவதும் என அது   இன்னும் நின்றபாடில்லை.தெருக்களில் முழங்கால் மட்டும் தண்ணீர். பள்ளமான தெருக்கள் இன்னும் மோசமாக இருந்தன.வீதி ஓரங்களில் நின்றுகொண்டிருந்த கார்கள் கண்ண றாவியாகக்காட்சி தந்தன.மழைக்  காற்றில் முறிந்து விழுந்த வாழை மரங்களின் காய் பூ தண்டு என சாலையில் பெண்கள் விற்றுகொண்டு போனார்கள்.முருங்கை பப்பாளி கீரை வகைகள் வியாபாரமாயின.
பிருந்தாவன் நகர் மையின் ரோடின் கடைசி பகுதி வந்தாயிற்று. இரண்டு பக்க தெருக்களில் பார்க்கும் தூரம் எல்லாம் தண்ணீர் நின்றுகொண்டிருந்தது.ஏ டி எம் கள் நோயுற்றுக்கிடந்தன.பத்து கடைகளுக்கு ஒரு கடை திறந்து வைத்திருந்தார்கள்.உடனுக்குடன் மூடி க்கொண்டார்கள்.சரக்குகள் எதுவும் வந்தால்தானே வியாபாரம் உயிர்ப்போடு நடக்கும். எதற்கும் வழி இல்லையே.சக்தி நகர். குறிஞ்சி தெரு வாந்தாயிற்று.
இரண்டாம் முறை அண்ணன் வீடு.அண்ணன் வீடு என்றால் அண்ணன் மகன் வீடுதான்.அண்ணன் தருமங்குடி கிராமத்தை விட்டு க்கிளம்பி ஆண்டுகள் சில ஆகிவிட்டன.ஆறு மாதம் ஒரு முறை என தருமங்குடி வீட்டை எட்டிப்பார்ப்பார். எங்கள் அம்மாவின்வீடு. அம்மாதான் எங்களுக்கு அதனை கொடுத்துவிட்டு கண்ணை மூடினார். அம்மா உயில்படி அதில் எங்களுக்குச்சரி   பங்கு. அந்த வீட்டை  ப்ழுதுபார்ப்பதே பெரிய வேலை.வீட்டை யாருக்கும் வாடகைக்கு விட்டுவிடலாம்.ஆனால் நல்ல மனிதர்கள் வேண்டுமே.அதற்கு எங்கே போவது.அதுதானே   இன்றைக்கு மிகவும் சிரமம் .
                                     அண்ணன் எங்கள் எல்லோரையும் அன்பாக வரவேற்றார்.
'நீங்க வந்த முகூர்த்தம் கொஞ்சம் கரண்டு வந்து இருக்கு'
'ரொம்ப சந்தோஷம்.கரண்டு பாத்து அஞ்சி நாளாச்சி.இண்ணைக்கி ஆறாவது நாள்'
'இது எவ்வளவு நாழி இருக்கும்னு சொல்லமுடியாது.அதானால எது முக்கியமோ அத செஞ்சினூடணும்'
'சரி அண்ணே.மொதல்ல செல் போன்  சார்ஜ் போடணும்'
'சார்ஜ் போடலாம்.போன் வேல செய்யணுமே.எங்க பாத்தாலும் தண்ணியாச்சே'
'சார்ஜ் போட்டு வச்சிகுங்க. அப்புறமா பேசறது பேசாதது எல்லாம் பாத்துகலாம்'
அண்ணி  அருகே வந்தாள்.
'மொதல்ல கை கால் அலம்பிகோங்க. சாப்புட வாங்கோ சாப்புடுங்கோ அப்புறம் பாக்கி கதங்க . எப்ப சாப்புட்டுதோ நீங்க'
அண்ணி  சொல்லி நிறுத்தினாள்.அண்ணி  எப்போதும்  அப்படித்தான்.அன்னபூரணி.
'கொஞ்சம் துணிய தொவைக்கணும் மொதல்ல'
என் மருமகள் சன்னமாக ஆரம்பித்தாள்.
'மோட்டார் பொயிண்டிருக்கு. அந்த காரியமும் முக்கியம். ஆதம்பாக்கத்துலதான் கரண்டு மொதல்ல குடுத்து இருக்கான்.இன்னும் தி.நகர்ல எல்லாம் கரண்டு வல்ல'
அண்ணன் சொல்லிக்கொண்டார்.
'பேப்பர் வர்ரதா என்ன'
'பேப்பரா அது பாத்து எவ்வளவு நாளாாச்சி' அன்ணன் பதில் சொன்னார்.
'டிவி இல்லே.ரேடியோங்கறதுமறந்து போச்சே.மொபைல் வேல செய்யாது. தண்ணிக்கு  கை பம்பு  .எதனா ஒரு எண்ணெய் போட்டா  திரியில  எரியும் காமாட்சி வெளக்கு. இதுதான் இப்ப வாழ்க்கே'
'கெணரு எல்லாம் நாசமாயிட்டுது.கை பம்புன்னு ஒண்ணு இருக்கு.அங்கங்க லொடுக்கு புடுக்குன்னு சப்தம் வர்ரதே'
அண்ணா சொல்லிக்கொண்டார்.
ஃபேன் ஓடிக்கொண்டிருக்கிறது.கரண்ட்தான் வாழ்க்கை என்றாகி எவ்வளவுகாலம் ஆகி விட்டது.மின்சாரம் இல்லாட்டா பைத்தியம் பிடித்த மாதிரி ஆயிடுது'
'இண்ணைக்கி இங்க கரண்டு வந்துருக்கு.அங்க பழைய பெருங்கள த்தூர்ல எல்லாம் எப்படி இருக்குமோ?'
'நானும் என்பையனும் போயி பார்க்கணும்.பார்த்தாதான் தெரியும் என்ன எல்லாம் ஆயி இருக்குன்னு'
' பாத்தாதான் தெரியும்.மேற்கொண்டும்  என்ன செய்யணும்னு' அண்ணன் சொல்லிக்கொண்டார்.ஆதம்பாக்கம் அண்ணன்வீட்டிலே மதிய உணவு சாப்பிட்டோம்.சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு பழைய பெருங்களத்தூர் சென்று வீட்டை பார்த்துவரலாம் என்கிற தீர்மானம்.
'காபி சாப்பிடுங்கோ உடனே பொறப்படுங்கோ' என் மனைவி கட்டளை தந்தாள்.
'எப்பிடிப்போவேள்' மன்னி கையில் காபிக்குக் கழுவி வைத்திருந்த டபரா செட்டோடு ஆரம்பித்தாள்.
'நன்னா விஜாரிச்சுக்கணும். மின்சார ரயில் பத்து நாளைக்கு அப்பறம் இண்ணைக்கு சாயந்தரமா பொறப்படும்னு சொல்றா.தாம்பரத்திலேந்து         முடி ச்சூர் போற அந்த ரோடு எப்பிடி இருக்குமோ,நல்ல நாள்ளயே நாழி பாலுக்கு வழி இல்லாத சேதிதான,இப்ப என்ன கிழிச்சுடப்போறது'
'மொதல்ல பொறப்பட்டு போயிபாக்கட்டும்.அந்த ரோடு சரியில்லன்னா புது பெருங்களத்தூர் போயி அங்கே இருந்து ஏரிக்கர ஓரமா போற ரோடுல நடந்தே கூட பழைய பெருங்களத்தூர் போயிடலாம்' என் மனைவி தன் ஓரகத்திக்குப்பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அண்ணன் குடும்ப த்திற்கும் எங்களால் எவ்வளவோ அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் வேறு என்ன செய்வது? அவருடைய மனைவி மகன் மருமகள்,பேத்தி என அவர்களோடு நாங்கள் குழந்தையைச்சேர்த்து ஐந்து பேர்.ஒருவேளைக்குப்பத்து பேருக்கு சமைத்தாகவேண்டும்.இதில் யாருக்கேனும் ஒருவர் இருவருக்கு உடல் அசௌகரியமாகிவிடும்.டாக்டரைக்கண்டுபிடிப்பதே சிரமம். ஆஸ்பத்திரி போய் வருதல் இன்னும் சிரமம்.ஏடிஎம்கள் சவம் என தூங்கிக்கொண்டு கிடந்தன.பணப்புழக்கம் நொண்டிதான்  அடித்துக்கொண்டு இருந்தது.தி.நகர் சின்ன அண்ணன் வீட்டிலோ இன்னும் கொஞ்சம்  தங்கி இருப்பது முடியாத துபோல் ஆகிவிட்டது.வீடு சிறியது.அவரின் மகள் வீட்டில் இருந்தாள்.அதுதான் கொஞ்சம் ஒத்தாசை.
காபி சாப்பிட்ட கையோடு நானும் என் பெரிய பையனும் நேதாஜி நகருக்குப்புறப்பட்டோம்.
சிறிய குடைகள் இரண்டு.டார்ச் விளக்கு குடிப்பதற்குத்தண்ணீர் என்று எடுத்துக்கொண்டோம்.
'வீட்டுசாவி இருக்கா'
'பத்திரமா இருக்கு' பையன் சொன்னான்.முதல் தளத்தில் நாங்கள் இருந்தோம்.கீழ் தரைதளத்தில் என் சின்ன பையனின் குடும்பம். அவனுக்குத்தான்  பெங்களூரில் வேலை.அவன் மனைவி பிரசவத்துக்குப்போயிருக்கிறாள். இது விஷயம் முதலிலேயே நான் குறிப்பிட்டபடிதான்.  அங்கு ப்பேரன் புண்யகாவசனத்திற்கு திருச்சிக்குப்போய் திரும்பும் சமயம்தானே இத்தனை மழையும்.திருச்சியில் நன்றாகத்தான் வெய்யில் அடித்தது.காவிரியில் கருத்துசலசலத்த கருஞ்  சாக்கடையையும் கொள்ளிடத்தில் மணல் மைதானத்தையும் தான் கண்டு வந்தோம்.சென்னையில்தானே இந்தக்கொள்ளை சமாசாரம்  எல்லாம்.
பிருந்தாவன் நகர் மையின் ரோடில் ஒரு ஆட்டோ பார்க்கமுடியவில்லை.ஆதம்பாக்கம் டி ஏ வி பள்ளி இருக்கும் தெருவில் மழை நீர் நிறைத்துக்கொண்டிருந்தது.அந்தப்பள்ளியில்தான் என் அன்ணனின் பேத்தி படித்துக்கொண்டிருந்தாள்.இந்த பேத்தியின் படிப்புக்காகத்தான் என் அண்ணன் நேதாஜி நகரில் என் வீட்டூக்கு அடுத்த வீட்டு ஜாகையைக்காலிசெய்துவிட்டு இந்த ஆதம்பாக்கம் எனும் கொசு க்ஷேத்திரத்திற்கு   வந்து சேர்ந்தார் .இல்லாவிட்டால் இந்த செம்பரம்பாக்க வெள்ள   அவஸ்தையை எல்லாம் இரண்டு குடும்பமும் சேர்ந்து பட்டுக்கொண்டிருக்கும்.அது ஏதோ நல்லகாலம். அண்ணன்  இங்கு  வந்ததால் எங்களுக்கு  ஒதுங்க ஒரு இடம் கிடைத்தது.
பிருந்தாவன் பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் எங்களைப்போல் இருவர் நின்றுகொண்டிருந்தனர்.
'பஸ் வருதா' என்றேன்
'உங்களுக்கு ஏதும் தெரியுமான்னு பாத்தேன்'
பெரியவர் எனக்குப்பதில் சொன்னார்.
'எலக்ட்ரிக் ட்ரைன்  போவும்னு சொன்னாங்களே'
'அங்க போனாதான் நமக்கு அந்த சேதி என்னன்னு புரியும்'
அவர் மீண்டும் எனக்குப்பதில் சொன்னார்.
'இங்க கரண்டு இல்ல.தெருவுல மழைத் தண்ணி.கேபிள் முழுகி கெடக்கு.உங்க பக்கம்'
அவரே மீண்டும் ஆரம்பித்தார்.
'குறிஞ்சி நகர்ல கரண்டு வருது உடனே   போவுதுன்னு சொல்றாங்க'
'உங்களுக்கு எந்த ஊரு'
'முடிச்சூர் ரோடுல பழைய பெருங்களத்தூரு'
'முடிச்சூர்னா கேக்கவே வேண்டாம்.அங்கதான் ரொம்பவும் பிரச்சனை.அப்புறமா அந்த  வேளச்சேரி'
'நீங்க சொல்றது ரொம்ப  சரி' பதில் சொன்னேன்.
அவர்கள் ஒன்றும் அசைவதாக இல்லை. அங்கேயே நின்றுகொண்டு இருந்தனர்.
'பஸ் ஆட்டோ எதாவது வருணும்.நாங்க அததான் பாக்குறம்'
பெரியவர் பதில் சொன்னார்.அவருக்கு அருகில் நின்றிருந்தவர் கண்களில் கருப்புக்கண்ணாடி போட்டிருந்தார்.காட்டராக்ட் ஆப்ரேஷன் செய்துகொண்டிருக்கவேண்டும்.அவர் வாயையே திறக்கவில்லை.கையில் பெரிய  குடை ஒன்று  கட்டை பிடிபோட்டது வைத்திருந்தார்.
மழை எப்போதும் வரலாம் என்றபடிக்கு வானம் இருந்தது.நாங்கள் இருவரும் மவுண்ட் ஸ்டேஷன் நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.தெருக்கள் எல்லாம் ஒரே  நாற்றம்.அங்கங்கே எலிகள் பெருச்சாளிகள் செத்துக்கிடந்தன.பூனைக்குட்டிகள் இறந்து அந்த உடல்களை காக்கைகள் தம் அலகுகளால் கொத்தி க்கொத்தி இழுத்து விகாரப்படுத்தி மனசை இம்சித்தன.காற்று மழையில் முறிந்த வாழைமரங்களின் குலைகள் தார் தாராய் வீதி ஓரத்தில் பரப்பிவைத்து விற்றுக்கொண்டிருந்தாள் ஒரு பெண். காயை பூவை   வாங்குவதற்குத்தான் அங்கே ஆட்கள் யாரும் வரவே   இல்லை.டீக்கடை மூலைக்கொன்று திறந்து வியாபாரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள் விமானங்கள் என தாழப்பறந்து சேதங்களை நோட்டமிட்டன.ஆட்டோகாரர்கள் தமது வண்டிகளை சீர்செய்துவிட்டு யாரேனும் அழைக்கிறார்களா எனத்துழாவிக்கொண்டு நின்றனர்.
'ரயிலு ஓடுனா சனம் வரும்' என்றான் ஒரு ஆட்டோக்காரன்.
'ரயிலு ஓடுதா' என்றேன்.
'இப்பறம் போவும்னு சொல்றாங்க' எனக்கு பதில் சொன்னான் அவன்.
மவுண்ட் ஸ்டேஷன் சமீபமானது.அருகிருந்த ஏ டி எம் கள் ஜீவனற்று  கோரமாய்க் கிடந்தன .அவைகளைச் சுற்றிலும் தெரு நாய்கள் காதல் வயப்பட்டு ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு நின்றன.மன்மதனுக்குத்தான்  ஒய்வேது .அவைகளும் பாவம்  என்னதான் செய்யும் எண்ணிக்கொண்டேன்.மழை நீர் ஏ டி எம் உள்ளாக புகுந்து தரை முழுவதும் சொத சொத என்றிருந்தது.
புக்கிங் கவுண்டர் முன்பாக சொல்ல முடியாத கூட்டம்.முதல் ரயில் அல்லவா வரப்போகிறது.எத்தனயோ நாட்களாக  தண்டவாளங்கள் ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டன.இப்படி ஏதும் நிகழ்ந்தால்தானே தண்டவாளத்திற்கும் ஓய்வு.எண்ணிப்பார்த்தேன்.உலகம் சுழல்வதும் அது சூரியனைச்சுற்றிக்கொண்டு சாய்ந்தபடியே வருவதும் நின்று விட்டால் என்னவாகும். மனிதனின் சிறிய அறிவுக்கு விடை தென்படாத  வினாக்கள்  குறித்து யோசித்துத்தான்  என்ன பிரயோசனம்.
                                                     டிக்கட்  வாங்கஇருவரும் வரிசையில் நின்றோம்.முதலில் ஒரு கவுண்டர்தான் இயங்கிக்கொண்டிருந்தது.திடீரென மற்றொரு கவுண்டரும் திறந்துகொண்டது. டிக்கட் வழங்க ஒரு பெரியவர் ஆயத்தமானார். ரயில் வருவது உறுதிதான்.
'நீ போய் அந்த வரிசையில் நில்லேன்.நான் இங்கு நிற்கிறேன்'
'அதுவும் சரி' என்று பதில் சொல்லிய பையன் அந்த கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டான்.
யார் முதலில் டிக்கட் வாங்கினாலும் அடுத்தவரிடம் உடன் வந்து சொல்லிவிடுதல் மிக முக்கியம் எச்சரிக்கை செய்து கொண்டோம்.தாம்பரம் வரை போகும் ரயிலா இல்லை செங்கல்பட்டு வரை செல்லும் ரயிலா வரப்போகிறதா என்கிற விஷயம் இன்னும் ருசுவாகவில்லை.முன்பாக  நிற்பவரிடம் தயங்கித்தயங்கி கேள்வி வைத்தேன்.
'நீங்க எங்கப்போகணும்'
'நான் பெருங்களத்தூர் போகணும்' அவரின் கேள்விக்குப்பதில் சொன்னேன்.
'நான் சிங்கப்பெருமாள் கோவில் போகணும்' அவர் மீண்டும் சொன்னார்.
'டிக்கட் வாங்கும்போதுதான் அது தெரியும்போல'
'இப்ப சரி' என்று சொல்லி நிறுத்திக்கொண்டார்.நான்தான் டிக்கட் வாங்கபோகிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அதற்குள் என் பையன்'நான் வாங்கிட்டேன் நீ டிக்கட் வாங்காதே' என்று ஓங்கிக்குரல் கொடுத்தான்.
நான் வரிசையைவிட்டு வெளியில் வந்தேன்.எனக்குப்பின்னே நின்றவரின் முகம் சற்றுப்பிரகாசம் கூடியது.மனிதர்களுக்கு எதில் எதிலோ ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.திருப்தி அதிருப்தி என்பவைகளின்  மனக் கோர்ப்புதான் இந்த மானிட வாழ்க்கை.
பரங்கிமலை ரயில் நிலையத்தைத்தான் மவுண்ட் என்கிறார்கள். ஒரு சிலர் சென்ட் தாமஸ் மவுண்ட் என்று முழுப்பெயரையும் சொல்வதுண்டு. இங்கு தண்டவாளத்தைத்தவிர மற்ற இடங்களில் எல்லாம் மழை நீர் ஆக்கிரமித்து   நின்றுகொண்டிருந்தது.
'தண்ணி இன்னும் இருக்குது பாரு' என்றேன்.
'மழத்தண்ணி எங்க போவுணும்னுகற சிந்தை இல்லாமதான்  ஜனங்களுக்கு  சென்னையில வாழ்க்கை.சுயநலம்தான் இங்க  மூச்சுக்காத்துன்னு ஆகிப்போச்சு' என் பையன் தனக்குத்தெரிந்ததைச்சொன்னான்
                                  .' பயணிகளுக்கு ஓர் கனிவான அறிவிப்பு செங்கல்பட்டு வரை செல்லும் தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடையை வந்தடையும் இது எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.'என்னும் அந்த  அறிவிப்பு வந்தது.நடைமேடையில் நல்ல கூட்டம்.எப்படியாவது ஏறித்தான் ஆகவேண்டும்.காவல் பணியாளர்கள் விசில் ஒலி எழுப்பி உஷார் படுத்திக்கொண்டிருந்தார்கள்.நடைமேடையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தத்தமது கைகளில் ஏதோ ஒன்று வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.நிலைய அதிகாரி அறை முன்பாக ரயில் பணியாளர்ஒரு  பெண்தான் கையில் சிவப்புக்கொடியும் பச்சைக்கொடியும் வைத்துக்கொண்டு ரயில் வருவதை நோக்கிக்கொண்டிருந்தார்.ரயில் வருவதற்கான அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது.தூரத்தில் ஒரு ராட்சத மண் புழு ஒன்றின் தலை மாதிரிக்கு ஒன்று தெரிந்தது.ஆம்  ரயில் வண்டி வந்தது.நடை மேடையில் வந்து  நின்றுகொண்டது.மவுண்ட்  நிலையம் இறங்குபவர்கள் கட கட என இறங்கினார்கள்.ஓரிருவர் தட்டுத்தடுமாறி கீழே இறங்கினர்.ஏறுகின்ற கூட்டம் பட் பட் என தன்னை வண்டியில் திணித்துக்கொண்டு இருந்தது.
'இன்னும் இந்த ரயில் பிச்சைக்காரர்கள் தம்தொழிலை ஆரம்பிக்கவில்லை' என்றேன்.
'இன்னும் ரெண்டு நாட்கள் ஆகாதா.'
'சென்னையில் ரயில் பிச்சைக்காரர்கள் ஒரு அழகுதான்.நீட்டாக ஆடை அணிந்து கொண்டு.நல்ல காலணியும் போட்டுக்கொண்டு நடக்கிறார்கள்.நல்ல தமிழில் பேசுகிறார்கள்.இருக்கைகள் காலியாக இருந்தாலும் அமரவே மாட்டார்கள்.அவர்களே பிச்சை போடுபவர்களுக்கு ச்சில்லரை கொடுத்தும் உதவுகிறார்கள்.பாதி பேருக்கு மேல் ஊனமுற்றவர்கள்.கண் தெரியாதவர்கள் சற்று அதிகம்.எல்லோருமே ஒழுக்கமானவர்களாகத்தான் தெரிகிறார்கள்'
' நீ என்ன அவர்களுக்கு சங்கம் வைத்து நடத்துவது போல ப்பேசுகிறாய்'
'இல்லயப்பா ஏதோ தோன்றியது சொன்னேன்'
'திரு நங்கைகள் ரயிலில் காசு கேட்பதை ப்பார்த்து இருக்கிறாயா நீ'
'அவர்கள் வேறு மாதிரி.கை  தட்டுவார்கள் இயற்கைதான் எப்படி எல்லாம் படைத்து வேடிக்கை பார்க்கிறது.அவர்கள் நிலையில் இருந்தால் ஒழிய அந்த கஷ்டத்தை  நாம் உணரத்தான் முடியுமா?'
'ஏன் அப்பா இறைவன் என்று சொல்லாமல் இயற்கை படைத்து விட்டதாய் ச்சொல்கிறாய்'
'புரியாத ஒரு விஷயம்.அது இயற்கையோ.இறைவனோ'
'சில விஷயங்கள் புரியாமல் இருப்பது கூட நமக்கு இயற்கை சாதித்துக்  கொடுத்த  சவுகரியமே ''
வண்டியில் இருப்பவர்கள் எங்கள் இருவரையும் வேடிக்கை ப்பார்க்க ஆரம்பித்தார்கள். ஆக இது விஷயம் பேசுவதை நிறுத்திக்கொண்டோம்.வண்டி தாம்பரத்தை நெருங்கிவிட்டிருந்தது.நல்ல கூட்டம்.உட்கார்ந்துகொண்டு வந்திருந்தால் வழியெல்லாம் எப்படி இருந்தது என்பது பார்த்து இருக்கலாம்.அதுதான் முடியவில்லை.வழக்கம்போல் மூன்றாவது நடைமேடையில் வண்டி நிறுத்தப்பட்டது.பாதி பேருக்கு மேல் இறங்கிக்கொண்டனர்.தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனை நன்கு பார்க்கவும் வாய்த்தது.ஓரிருவர் வண்டியில் ஏறிக்கொண்டனர்.
'உக்காரலாம் எடம் இருக்கே'
'இன்னும் ஒரு ரெண்டு நிமிஷத்தில எறங்கணும்'
எனக்கு பையன் சொன்னான்.பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டு நான் ஒரு இருக்கை பார்த்து அமர்ந்தேன்.தாம்பரத்திலிருந்து ஒன்றும் பிரச்சனை இல்லை.ஆனால் முடிச்சூருக்கு பேருந்து செல்கிறதா என்றுதான் தெரியாமல் இருந்தது.பெருங்களத்தூர் வந்தது.நாங்களும் வண்டியை விட்டு இறங்கினோம்.ரயில் நிலையத்தில் மேம்பாலம் கட்டும் பணி அசுரத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.மனிதர்களின் தேவை விரிவாகிக்கொண்டேதான் போகிறது.மக்கள் எல்லாம் நகரம் நோக்கி குடிபெயரப்  பித்தாகி நிற்கிறார்கள்.எல்லோருக்கும் ஏதேனும் ஒரு தேவை இருந்துகொண்டே இருக்கிறது.நகரம் வந்து என்ன சவுகரியப்படப்போகிறார்கள் என்றால் ஒன்றுமில்லை.நகரத்தில்  ஏதோ ஒரு  வேலையைத்தேடிக்கொள்ள வாய்க்கிறது.'கெட்டும் பட்டணம் சேர்' என்று சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.பெருங்களத்தூரின் ரயில்வே நிலையத்தின் அந்த வடக்கு முனையில் குப்பென  மூத்திர வாடை. இந்த பெருங்களத்தூரை பேருந்து நிலையமாக வேறு மாற்றி இருக்கிறார்களே.கோயம்பேட்டில் ஒரு  பெரிய பேருந்து நிலையம். இந்த பெருங்களத்தூரில் வெறும் சாலை மட்டுமே. ஆனால் ஆயிரம் ஆயிரமாய் மக்கள் இறங்கி ஏறுகிறார்கள்.யாருக்கும் எந்த வசதியும் கிடையாது.எதைப்பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை.யோசிக்க நேரம் மட்டுமிருக்கிறதா என்ன?.அதுவும்தான் இல்லை.
'பாத்து வா கருங்கல்லு ஜல்லிவ கொட்டிக்கிடக்குது. கொஞ்சம் வழுக்குது' என் மகன் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.நானும் தத்தக்கா புத்தக்கா என்று நடந்தேன்.புக்கிங் கவுண்டரில் டிக்கட் வாங்குவோரின் நீண்ட வரிசை..டிக்கட் வாங்கியவர்கள் ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள்.தெருவின் இரண்டு புறமும் இரு சக்கரவாகனம் பாதுகாப்பிற்காக நிறுத்தும் வாடகைக்கடைகள் இருந்தன.வண்டிகள் வரிசை வரிசையாக நின்றுகொண்டிருந்தன.அவை அத்தனையும் பள்ளிக்குழந்தைகள் என சமத்தாக நின்று கொண்டிருந்தன.
'நம்ப வண்டிய இங்கே நிறுத்திவிட்டிருக்கலாம்.தவறிவிட்டோம்'
'எதனை யோசிக்க முடிகிறது.வாழும் இடத்தைவிட்டு உயிர் பிழைக்க வேறு ஒரு இடம்  வந்துவிட்டால் அதுவே   போதும் என்கிற இக்கட்டில் மாட்டிக்கொண்ட மனிதர்களின் கதி எப்போதும்  இப்படித்தான்'
நான் அவனுக்கு ச்சொல்லிக்கொன்டேன்.
'இலங்கைத்தமிழர்களை நினைத்துப்பார்க்கிறேன்.எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு எங்கு எங்கெல்லாமோபோய் நிற்கதியாய் நிற்கிறார்கள்.புலம் பெயர்ந்த இந்தத்தமிழர்களின் சோகங்கள் சொல்லி மாளாது.சொந்த மண்ணைவிட்டு ஓடிவந்த மக்கள் எங்கேயாவது  நிம்மதியாக வாழ்கிறார்களா என்ன?'
ரயில் நிலையம் செல்லும் அந்தத்தெரு முடிந்தது
இந்திரா காந்தியின் வெள்ளைச்சிலைமுன்பாக இருவரும் நின்றுகொண்டிருந்தோம்.இந்திராகாந்தி  சிலையை சற்று  உயரமான பீடத்தில்வைத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள்  கவனிக்கவேண்டும்
'ஆட்டோ ஏதும் கிடைக்குமா'
'பார்ப்போம் இங்கு கிடைக்கலாம் மழை .பாதிப்பு  வெள்ள  பாதிப்பு இல்லாத இடம்தான் இது' சொல்லிய நான் ஆட்டோக்காரர்கள் யாரேனும் உண்டா என்று தேடினேன்.ஒரு ஆட்டோக்காரன் வந்தான்.அதனுள்ளாக இரு இசுலாமியப்பெண்மணிகள் அமர்ந்து இருந்தனர்.
ஆட்டோக்காரன் நிறுத்தினான்.
'எங்க போவுணும்'
'பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் உள்ளார நேதாஜி நகரு போகணும்'
'பார்வதி நகர் போவுலாம். நேதாஜி நகரு  பெறவு பாப்பம். நீங்க  இங்கயே இருங்க நா  வரேன். தெ இந்த சூராத்தம்மன் கோவிலுவரைக்கும் போயி சவாரிய இறக்கிவிட்டு வந்துருவேன்'
'நாங்க வெயிட் பண்றம். நீங்க அவசியம் வரணும்' நான் பதில்சொன்னேன்.
'இங்க எல்லாம் ஒண்ணும் பாதிப்பு இல்ல'
'ஆமாம் அப்பா.இது கொஞ்சம் மேட்டுப்பகுதி.  நேரமாகியது.'
'இன்னுமா அந்த ஆட்டோக்காரன் வர்ரான்'
'அதான் நானும் பாக்கறேன்.இத்தனி நாழிக்கு அவன் வந்து இருக்கலாம்'
'வரல்ல.அவன எதிர்ப்பாக்குறதில ஒண்ணும் பிரயோசனம் இல்ல'
'வேற ஆட்டோக்காரன் யாருமே காணும்'
'அப்பா நாம பொடி நடையா போயிடுவோம்.நமக்கு நேரம் ஆயிடும்.இருட்டுறதுக்குள்ள ஆதம்பாக்கம்  திரும்பிப் போயிடணும்'
' சரிதான் அந்த ஆட்டோக்காரன் வந்தபாடில்லை. அவனுக்கு வேறு ஏதும் கிராக்கி வந்திருக்கலாம்.நாம் காத்து இருப்போமா இல்லை வேறு ஏதும் வண்டி பிடித்து போய்விட்டோமா என்பது அவனுக்கும்தெரிய நியாமில்லை'
ஆட்டோக்காரனை இனி எதிர்பார்க்கவேண்டாம் என நடக்க ஆரம்பித்தோம்.அருகிலிருந்த கழிவு நீர்க்கால்வாய் தண்ணீர் நிறைத்துக்கொண்டு நுரைத்துக்கொண்டு கண்ணில் பட்டது.அழுக்கு தண்ணீர் இன்னமும்   சென்றபாடில்லை.ஏதேனும் அடைப்பு இருக்கலாம். தண்ணீர் செல்வதை தடுத்தும்  இருக்கலாம்.வருமுன் காப்போம் என்பதெல்லாம் வாய்  வார்த்தையோடு சரி.பிரச்சனை வந்தால்தான்  அதன் ஆழம்  தெரிகிறது ஒவ்வொன்றையும் அதனுடைய விபரீதம் என்னவென்பதை அனுபவித்தே தெரிந்துகொள்ள வாய்க்கிறது.
டீக்கடைகள் ஒன்று இரண்டு திறந்து வைத்திருந்தார்கள்.கடையைச்சுற்றி நல்லகூட்டம்.நாங்கள் இருவரும் சீனுவாசப்பெருமாள் கோவில் தாண்டிக்கொண்டிருந்தோம்.பெருங்களத்தூர் ஏரியை ஒட்டிய அந்த சாலையை  நன்கு போட்டிருந்தார்கள்.மழையும் வெள்ளமும் அந்த சாலையை விட்டு வைத்திருந்தது.மக்கள் அந்த சாலையை நன்கு பயன்படுத்தமுடிந்தது.பெருங்களத்தூர் ஏரியின் கிழக்குப்பகுதியும் வடக்குப்பகுதியும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது.ஒரு ஐம்பது வீடுகளாவது ஏரியின் உள்ளே இருப்பதை ப்பார்க்க முடிந்தது. அரசாங்கத்தின் மின்சாரமும் தண்ணீர்க்குழாய்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.இந்த மழை அங்கு வாழ்ந்த மக்களை ஒன்றும் பாதித்துவிடவும் இல்லை.தடி எடுத்தவன் மட்டுமே  தண்டல்காரன் என்பதுதான் இப்போது   நடைமுறை.ஆக  ஆக்கிரமிப்புக்காரர்களின்  எண்ணிக்கை க்கூடிக்கொண்டே போகமுடியும். வீட்டு வாயிலில் ஒரு கொடிக்கம்பம் மிக மிக  முக்கியம்
                                ஏரியின் கரையில் ஒரு புற்றுக்கோயில் இருந்தது.அந்த அம்மன் கோயில் சிலை முன்னால் நிறைய நிறைய  வளையல்கள் அடுக்கு அடுக்காய் தொங்கவிடப்பட்டிருந்தன.மனிதர்களின் வேண்டுதல்கள்.  .நிறைவேற்றப்பட்டதற்கு அவை சாட்சி கூறி க்கொண்டு நின்றன. நாத்திகர்கள்  பார்த்தால் சற்று  வருத்தமும் படலாம்.
'நாய்வ நெறைய இருக்கு பாத்து போ'
நான் என் பையனுக்குச்சொல்லிக்கொண்டு இருந்தேன்.மழை வெள்ள பாதிப்புக்கள் அவைகளுக்கும் இருக்கத்தானே செய்யும்.
'ஏரியிலிருந்து ஜிவ் ஜிவ்வுனு ஊதக்காத்து வீசுது'
'ஏரியை எட்டிப்பார்க்கலாமா'
'அதற்கெல்லாம் இப்போது நேரம் ஏது' நான் பதில் சொன்னேன்.ஊரும் உலகமும் சென்னையை நோக்கிக்கொண்டிருந்தன.சென்னைக்கு என்னவோ ஆகிவிட்டதெனத்தான் மக்கள் பேசிக்கொண்டர்கள்.
பறவைகள் மரத்தில் அமர்ந்தவை அம்மரத்தைச் சுற்றி சுற்றி மீண்டும் அங்கேயே அமர்ந்து தம் சோகத்தைப்பாடிக்கொண்டிருந்தன.ஒரு அசாதரணமான சூழல்.உயிரினங்கள் அனைத்தும் சிக்கிகொண்டு தவிக்கவே செய்தன.
எனக்கு வண்டலூர் மிருகக்காட்சி சாலையின் நினைவு வந்துபோயிற்று.அவை அங்கே என்ன பாடு பட்டுக்கொண்டிருக்குமோ.நோக்கிய இடமெல்லாம் வெறும் தண்ணீர் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
பழைய பெருங்களத்தூருக்கு வடக்காகத்திரும்பும் சாலை ஓரம் ஒரு ஈமச்சடங்கு மண்டபம்.அதனுள்ளாக மக்கள் கூட்டம்,வெள்ள பாதிப்பு அவர்களை அங்கே கொண்டு நிறுத்தி இருக்கிறது. மண்டபத்தின் வாயிலில் ஓரு கிழவி மீன்களைக் கூடையில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தாள்.மீன்கள்   அத்தனை  அம்சமாக இருந்தன. வெள்ளம் அவைகளை மட்டும்  உற்சாகப்படுத்தி இருக்கலாம்
====================







.
'



.
.

No comments:

Post a Comment