Sunday, May 5, 2024

கதை சமத்துத்தான்

 

 

சமத்துத்தான்                                                   

நல்ல முகூர்த்த  நேரம் பார்த்து காலை ஆறு மணிக்கு யாத்ராதானம் செய்தாயிற்று.  எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும்  கம்மாபுரம் வெங்கட்ராம சாஸ்திரிதான் எங்கள் வீட்டு வாத்தியார். வாத்தியார் என்றால் புரோகிதர்  அவர்தான்  சம்ப்ரதாயப்படி  யாத்ராதானம் செய்விக்க  வந்திருந்தார்.

உங்களுக்குத்தெரியும், நான் தருமங்குடிக்காரன். சென்னை  மாநகரம் என் தருமங்குடி கிராமத்திலிருந்து இருநூறு கிலோமீட்டர் தூரம்  இருக்கலாம். சென்னை மடிப்பாக்கம் ஏரி. ஏரியை வைத்துத்தான்  இப்போதெல்லாம் சென்னையில் இடம் சொல்கிறார்கள் அந்த ஏரியின் மேலண்டை கரையில் உள்ள  கணேஷ் திருமண மஹாலில் என் பையனுக்குத் திருமணம்.  நாங்கள் பிள்ளை வீட்டார். தருமங்குடி என் வீட்டிலிருந்து சாமான் செட்டுக்கள் ஜவுளிகள் எடுத்துப்போகவேண்டும்.   என் பையன் கல்யாணத்தை உத்தேசித்து என் இல்லம் வந்திருக்கிற என் சொந்த பந்தங்களையும் அழைத்துக்கொண்டு சென்னை போகவேண்டும்.  அதிகாலை கிளம்பினால் பன்னிரெண்டு மணிக்குள் கல்யாண மண்டபம்  போய்ச்சேரலாம்.

இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு.  நாளை காலை முகூர்த்தம். மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் அவசியம் வைத்துத்தான் ஆகவேண்டுமா என்று பெண்வீட்டில்  எங்களைக் கேட்டார்கள். நான் கட்டாயம் மாப்பிள்ளை அழைப்பு வேண்டும் என்றேன். பின் எப்போது நாதசுரம் முழங்க  மாலையும் கழுத்துமாய்  நமது பிள்ளையை  கோட்டும் சூட்டுமாய் ஊர்வலம் அழைத்துப்போவது சொல்லுங்கள். எனக்கு ஆசைதான்.

,என் தம்பி குடும்பம்,  என் சகலர் குடும்பங்கள் ,என் மகள்  மாப்பிள்ளை  மகள் வயிற்றுப்பேத்தி, என் மனையாளோடு நான் என்று  இத்தனைபேருக்கும் என்று ஒரு  வான் சொல்லியிருக்கிறேன்.அருகில் சிறு நகரம் சேத்தியாத்தோப்பு. அங்கு ஒரு ஆட்டோக்காரன் எனக்கு சினேகிதம். தருமங்குடியிலிருந்து  சேத்தியாத்தோப்பு போய்வர அந்த ஆட்டோக்காரன்தான் எப்பவும் ஒத்தாசை. அவன் வராவிட்டால் என் காலட்சேபம் எப்படி ஆகும். திருமுதுகுன்றத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தருமங்குடி என்று இறங்கினால் சட்டென்று  ஊர் வந்துவிடாது.  வெள்ளை பைண்ட்  அடித்துக்கொண்டு நிற்கும் கைகாட்டிதான் என் ஊரைக்காட்டிக்கொண்டு  சாலையில் அனாதையாய் நிற்கும். மண் சாலையில்  ஒரு கிலோமீட்டருக்குப்பொடி நடையாய் நடந்தால்தான் தருமங்குடி வரும் . ஆகத்தான் ஆட்டோ கீட்டோ என்று  வசதிகளைப் பார்க்க வேண்டி  இருக்கிறது.  

அந்த ஆட்டோக்காரன் மூலமாக  என் பையன் கல்யாணத்துக்கு சென்னைக்குபோக   ஒரு வாடகை  வானுக்கு சொல்லியிருந்தேன்.  ஆட்டோக்காரனும் நானும்  வான் டிரைவரோடு பேசினோம்.வானுக்கு  வாடகை ஏழாயிரம் ரூபாய் என்று முடித்து, அட்வான்ஸ் பணம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்திருந்தேன்.

கைபேசியை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்துகொண்டு இருந்தேன்.

‘என்னப்பா இன்னும்தான் வர்ரியா’

‘தோ வந்து கிட்டே இருக்கேன்’

‘இருக்கிறது எட்டு கிலோமீட்டரு. இந்த தூரத்த  எம்மாம் நாழியா வருவ. நாம தூரம் போவணும’

‘தோ வந்துட்டேன், இப்பதான் உங்க ஊரு மண்ரோட்டுல  வந்து சொழலறேன்’

‘அப்ப சரி’

நான் எடுத்துப்போகவேண்டிய  சாமான்கள் எல்லாவற்றையும் திண்ணை மீது எடுத்து வைத்தேன். உறவினர்கள் அங்கும் இங்கும் உலாத்திக்கொண்டு இருந்தார்கள். என் தம்பி அடிக்கொரு தரம் வந்து என்னை விஜாரித்துக்கொண்டே இருந்தான்.

வான் ஒருவழியாய் என் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது.

டிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான்.

‘பட்டுனு  ஜாமான ஏத்துங்க’ சத்தமாய்ச்சொன்னான்

நானும் என் தம்பியும் சாமான்களை சட்டுபுட்டென்று வண்டியில் ஏற்றினோம். உறவினர்கள் வண்டியில் ஒவ்வொருவராக ஏறி அமர்ந்துகொண்டனர்.

‘ஒரு தேங்காவுல கல்பூரம் வச்சி அத  ஏத்தியாங்க, ,  வண்டிய ஒரு சுத்து சுத்துங்க அப்படியே தேங்காய் சூரகாயா வுடுங்க’ டிரைவர் சொல்லிக்கொண்டிருந்தான். நானே ஒரு தேங்காயை ரெடியாக வைத்திருந்தேன். அதன் மீது கல்பூரத்தை வைத்து ஏற்றி வானை ஒரு சுற்று சுற்றி வந்தேன். வாசலில் நின்றுகொண்டிருக்கும் வேப்ப மரத்தில் ஒரு  சின்ன கிளை ஒடித்து வண்டியில் சொறுகினேன்.

‘மாப்பிள தம்பி எங்க’  டிரைவர் கேட்டான்.

’வண்டிலதான் இருக்கேன்’ என் பையன் டிரைவருக்குச்சொன்னான். என் பையக்குச்  சென்னையில்தான் ஐ. ட்டி உத்யோகம். சொந்த ஊரிலிருந்து சாமி கும்பிட்டுவிட்டுக் கல்யாணத்துக்குப் புறப்படவேண்டுமே ஆக தருமங்குடி வந்திருந்தான்.

‘மாப்பிள்ளக்கி கழுத்துல மல்லிகப்பூ மாலையாவது இருக்கணும் எப்பிடி  மாப்பிளன்னு தெரியர்து யாரு எவுருன்னுதெரியணும்ல’ டிரைவர் சொன்னான்.

‘மாலைய போட்டதுதான் கழட்டி ஆணில  சட்டமா தொங்கப்போட்டுட்டு வராரு மாப்புள’ என் மனைவி டிரைவருக்குப்பதில் சொன்னாள்.

‘நெத்தில சந்தனம்’

‘அதெல்லாம் இருக்கு.  சந்தனம் குங்குமம் திருநீறு எல்லாம் ஏகத்துக்கு   நெத்தில வச்சி இருக்கு’

வண்டியை   தருமங்குடி மேலத்தெரு விநாயகர் கோவில்  வாயிலில் நிறுத்தசொன்னேன். நல்ல காரியத்திற்குப் போகிறவர்கள் இந்த நாகமணிந்த விநாயகரை வணங்கி சதுர்காய் உடைத்துவிட்டுத்தான் செல்வார்கள். என் தம்பி தேங்காய்  இன்னொன்றைக்கையில் வைத்துக்கொண்டு இருந்தான்.  தருமங்குடியில் மேற்கு பார்த்த விநாயகர் கோவில்.  இப்படிக்கோவில் அமைவது அரிதினும் அரிது.மேற்கு பார்த்தபடிக்கு விநாயகர் கோவிலை எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. சீர்காழி பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே  நான்  எப்போதோ பார்த்திருக்கிறேன். அதுவும்  செல்லி அம்மன்கோவில் ஒன்றினுள் ஒரு பக்கமாய் இருக்கும். தருமங்குடி விநாயகர் கோவில் அளவுக்குப்பெரிதுமில்லை அது.

‘எல்லாம் நவுந்து நின்னுகணும்’ தம்பி சொன்னான். சிதறு தேங்காய் உடைத்தான். எல்லோரும் விநாயகரை வணங்கி முடித்தோம். வண்டி புறப்பட்டது.

‘வண்டில டிவி செட்  இல்லயா’ என் பையன் டிரைவரைக்கேட்டான்.

‘அதெல்லாம் இப்ப யாருங்க பாக்குறா. அது அதும் கையில போன் வச்சிகிட்டு அது அது டேஸ்டுக்கு புரோகிராம் பாக்குது’

‘பாட்டு மட்டும் கேக்குறாப்புல வான்ல செட் பண்ணியிருக்கிங்களா’

‘அதெல்லாம் இல்ல தம்பி’ டிரைவர் பரிதாபமாகப்பதில் சொன்னான்.  வண்டியில்  கருப்பு ஸ்பீக்கர்கள் செத்துக்கிடந்தன

நான் என் பையனைப்பார்த்துக்கொண்டேன்.

வான் நகர ஆரம்பித்தது. ’கோவிந்தா நாராயணா’ என்று சொல்லிக்கொண்டேன்.

‘ரைட் ரைட்’ என்றேன். எனக்கு  ஜானுவாச டிபன் நேரத்துக்குள் சென்னை செல்லவேண்டுமே என்கிற கவலை மட்டுமே இருந்தது.

‘வண்டிய இப்பிடி அமத்துவாளா’ என் மனைவி ஆரம்பித்தாள்.

‘எனக்கு மட்டும் எப்பிடி தெரியும்’

‘சொல்லியிருக்கணும்.  நாங்க கல்யாணத்துக்கு போறம் டி வி செட் கண்டிப்பா  இருக்கணும்னு’

‘அதோடதான் வண்டி வரும்னு நா நெனச்சேன்’

‘ எல்லாத்தையும்  நாம்பளே நெனச்சிகறதா’’

‘சண்ட வேணாம் கல்யாணத்துக்குல்ல நாம போறம்’ என் தம்பி என்னிடம் சொல்லிக்கொண்டான்

வானில் உள்ள சீட் அமைப்பெல்லாம் கண்ணறாவியாக இருந்தது.  எதையும்சட்டை செய்யாமல் என் ஷட்டகர் இருவரும் ஏதோ சொந்தக் கதைகளைப்பேசிக்கொண்டே வந்தனர்.  என் பையனைப் பார்த்துக்கொண்டேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. அவன் முகம் சரியாக இல்லை.

‘நல்லா வான் அமத்தியிருக்கே’ மெதுவாகச்சொன்னான்.

டிரைவர் காதில் அது விழுந்திருக்கவும் வேண்டும்.

‘ அந்த ஆட்டோக்காரரு என் சினேகிதம்.  நானும் அவுரும்  சேத்தியாத்தோப்பு ஆண்டாள் பிரைமரி ஸ்கூல்ல எம்மா நாளா புள்ளிங்கள கொண்டு வுடறம் கூட்டியாறம். அவருதான  கூட இருந்து இது அமத்துனது.  படிக்குற பசங்களுக்கும் லீவு. ஸ்கூலு இல்ல’

‘ஸ்கூலுக்கு ஓடுற வண்டியா’ என் பையன் டிரைவடிடம் கேட்டான்

‘ஸ்கூலுக்கு பசங்கள ஏத்திம்போற வண்டிதான்’

‘பசங்க உங்கள என்ன கேக்கப்போறாங்க’

‘கேக்குட்டுமே’

‘ஸ்கூல பசங்க.  எல்லாரும் ஒரு அரை மணி நேரந்தான்,  ஏறிடுவாங்க  எறங்கிடுவாங்க’

‘அது சரி’

‘ஸ்கூல் பஸ் எடுத்துகிட்டு இப்படி  டூர் போவாங்களா’

டிரைவர் எதுவும் பதில் சொல்லாமல் வண்டியை ஓட்டினான். வண்டி மெதுவாகத்தான் சென்றது.வேகம் கூட்டினால் எஞ்சின் சப்தம்  செவிகளில் நாராசமாய் வர்ஷித்தது.

‘இதுக்கு மேல  வண்டி வேகம் போவாதா’ நான் தான் டிரைவரைக்கேட்டேன். இந்த வேகத்தில்  வான் போனால் எப்போது சென்னைக்குப்போவது என்கிற கவலை எனக்கு.

‘பதனமா போவுணும்ல’ டிரைவர் எனக்குப் பதில் சொன்னான்.

இதற்குமேல் டிரைவரிடம் பேசி ஒன்றும் ஆகாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். என் பையனைப் பார்த்துக்கொண்டேன். அவன் அரைத்தூக்கத்தில் இருந்தான். உறவினர்கள் அவரவர்க்குத் தோன்றியதைப்பேசிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் வந்தார்கள்.

‘ஜானுவாச டிபனுக்குப்  போகணுமே’ என் மனைவியும் சொல்லிக்கொண்டாள்.

 சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு வந்தது.  சென்னை கும்பகோணம் சாலையும், சேலம் சிதம்பரம் சாலையும் சந்திக்கும் இடம். வெள்ளாறு ராஜன் என்கிற கால்வாயில் தண்ணீர் நுரைத்துக்கொண்டு சென்றது. கரிகால் சோழன் கட்டிய வீராணம் ஏரியிலிருந்து வரும் காவேரித் தண்ணீர் வெள்ளாற்றைத்தாண்டிக்கொண்டு இந்தக்கால்வாயில் ஓடுகிறது.  வான் சென்னை சாலையில் திரும்பிக்கொண்டது. வண்டி சற்று வேகம் எடுத்தது. சாலை நன்றாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். வண்டியிலிருந்து  ஆனாலும் அந்தக் கடபுட ஒலி வந்துகொண்டேதான் இருந்தது.  பக்க வாட்டில் இருந்த பல்புகள் உடைந்து காணப்பட்டன.

‘கண்டம் பண்ணவேண்டிய வண்டி’ என்றான் பையன்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. வடலூர் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது.

‘அருட்பிரகாசர் வள்ளலாரை மனதில் நினைத்துக்கொண்டேன்.

‘ அந்த காலத்துல சேஷசாயி இன்சுலேட்டர் ஆலை இங்கதான் இருந்துது’ என்றேன்.

‘அதெல்லாம் எந்தக்காலம்’ டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

பண்ருட்டி தாண்டினோம். பலாப்பழங்கள் சாலையில் முட்டு முட்டாய் குவித்து வைக்கப்பாட்டிருந்தன. சில கடைகளில் முந்திரிப்பருப்பு பாக்கெட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வெள்வரிக்காய்கள், பிஞ்சுகள் சிலர் வைத்துக்கொண்டு விற்றார்கள்.   செங்காயாகக் கொய்யாப்பழங்களும் விற்பனைக்கு இருந்தன.

‘எதாவது வங்குணுமா’

‘ஒண்ணும் வேணாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

’இல்ல வேணும்னா சொல்லுங்க’

‘நாம நேரத்தில் சென்னை போவுணும்’

‘அதான் போயிட்டு இருக்கம்ல’

கோலியனூர் கூட்டுரோடுதாண்டியது. வண்டி சென்னை நெடுஞ்சாலையில் ஏறிக்கொண்டது.

‘இப்புறம் நல்ல ரோடு  டாண் டாண்ணு போக வேண்டியதுதான்’ டிரைவர் சொல்லிக்கொண்டான். வண்டியில் இருந்தவர்களில் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  அவர்களுக்கு என் மனைவி பட்சணங்கள் சிலதுகளை  விநியோகம் செய்தாள். குடிக்கத்தண்ணீர் கொடுத்தாள். வான் விக்கிரவாண்டி தாண்டிச்சென்றுகொண்டிருந்தது.

‘வண்டிய நிப்பாட்டலாமா’ என்றான் தம்பி.

‘எதுக்கு’

‘பாத் ரூம் போறவங்க போவாங்க’

‘ இங்க எதுவும் வேணாம் செத்த பொறுங்க. நானே நிப்பாட்டுறேன்’ டிரைவர் எங்களுக்குச்சொன்னான். திண்டிவனம் தாண்டி, வீடூர் அணை தாண்டி வான் சென்றுகொண்டிருந்தது.

கூட்டேரிப்பட்டு சாலை ஓரத்தில் ஒரு சுமாரான டீக்கடை. அதன் அருகே நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷெட் இருந்தது. வான்கள் அங்கே நான்கைந்துக்கு நின்றுகொண்டிருந்தன. வான் டிரைவர் வண்டியை நிறுத்தினான்.

‘எல்லாம் எறங்கிகுங்க. பாத்ரூம் போறவங்க போவுலாம்.’ என்று சப்தமாகச்சொன்னான். நாங்கள் எல்லோரும் இறங்கிக்கொண்டோம். வான்  டிரைவர்   ஷெட்டில்  இருந்த மெக்கானிக் ஒருவரிடம் கவனமாய்ச் சில விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். இருவரும் ஏதோ குசு குசு எனப் பேசிக்கொண்டனர். என்னையும் இடுக்கில் ஒருமுறை வான் டிரைவர் பார்த்துக்கொண்டான்.

எல்லோரும் வானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.  வண்டியின் டிரைவர்  எங்களிடம் வந்தான்.

‘வண்டி மாத்தியாச்சி . இப்புறம் நீங்க  அதுலதான்  போவுணும்.  நானு இதோட நின்னுகறன். வேற ஒரு வான் இதோ  தயாரா நிக்குது.. அந்த டிரைவர்கிட்ட பேசிட்டன். அதுல வீடியோ இருக்கு. டேப் இருக்குது. சீட்டெல்லாம் பள பளன்னு இருக்கு. புது வண்டி. நீங்களும் கல்யாணத்துக்கு போறீங்க. என்மனசு கேக்குல.   மேற்கொண்டு போவுறதுக்கு அத அமத்தி பேசிவுட்டன்.  குடுத்த  அட்வான்ஸ் போக எனக்கு பாக்கி தரவேண்டிய தொகைய  நீங்க இந்த  வண்டி டிரைவரிண்ட கொடுத்துடணும். அதுதான் சேதி. அது அது  சாமான கையில எடு. எடு. அந்த வான்ல ஏறிக்க ஏறிக்க.’ என்றார் டிரைவர்,

நாங்கள் அந்த  வேறு  வானுக்கு  வேக வேகமாய் மாறினோம். என் பையன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். அது புதிய வான். ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா’ ஒலியும் ஒளியும் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.   வண்டியில் அமரும் சீட்டு பளிச்சென்று  வழ வழப்பாய் இருந்தது. வண்டியின் சப்தமே கம்பீரமாய் இருந்தது.

‘இதுதான் கல்யாணத்துக்கு போற வண்டி’ என் தம்பி என்னிடம் சொல்லி திருப்தி பட்டுக்கொண்டான். எல்லோருக்கும் முகம் மலர்ச்சியாய் இருப்பதை  ஒருமுறை பார்த்துக்கொண்டேன். என் சகலர்கள் அவர்கள் குடும்பம் கூடுதல் மகிழ்ச்சியாக பயணத்தை அனுபவித்தார்கள்.

‘காசு செலவு செய்யறம் அத விதர்ணயா பண்ணணும்’ என்றான் தம்பி.

‘என்ன படம்வேணுமோ அத போட்டுகலாம்’

டிரைவர் எங்களுக்குச்சொல்லிகொண்டிருந்தான். என் பையன் டிரைவரிடம் ஏதோ சொன்னான். உடன் ஒரு இந்தி படம் ஓட ஆரம்பித்தது. என் தம்பி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான். தம்பியின் மனைவி ‘எதாவது தமிழ் படம் போடலாம்ல’ என்று முனகிக்கொண்டிருந்தாள்.சகலர்கள் குடும்பம் எதையும் கண்டு கொள்ளாமல் சென்னை எப்போது வரும் என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

’உங்களுக்கு,  நாங்க மொதல்ல வந்தமே அந்த டிரைவர பழக்கமா’ நான்  தான் டிரைவரிடம் ஆரம்பித்தேன்.

‘அப்பா ஏதோ ஆரம்பிக்கிறார்’ தன் அம்மாவிடம் சொன்னான் என் பிள்ளை.

டிரைவர் எனக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான். வண்டி செங்கல்பட்டு தொட்டுக்கொண்டிருந்தது.

‘நல்லா தெரியுமே அந்த டிரைவர. மீன்சுருட்டி காரரு. வண்டிய சேத்தியாத்தோப்பு ஸ்கூல்ல  ஓட்டுறாரு. வண்டிய  எஃப் சி க்கு அனுப்பணும். அதுக்குதான் கொண்டாந்து உட்ருக்காரு. வழக்கமா இங்கதான் வண்டி வேலய எல்லாம் பாப்பாரு.’

‘நாங்க அந்த வண்டிய அமத்திகிட்டு வந்தம்’

‘அதுல தப்பு  என்ன,  அந்த வண்டில லைட்டு சரியா இருக்காது, சிட்டிக்குள்ள  எல்லாம் போ முடியாது. இதுவரைக்கும் ஓட்டியாந்ததே அவுரு சாமர்த்தியம். இந்த பட்டரைக்கு சும்மா ஓட்டியாறம  உங்கள ஒரு   சவாரியா  இட்டாந்துட்டாரு.  இப்ப அவுருக்கும் காசு.  எனக்கும் காசு. ஒண்ணுக்குள்ள ஒண்ணு  எல்லாம் பொழப்புதான் வவுறு இருக்குது. குடும்பம் இருக்குது’

‘நாங்க கல்யாணத்துக்கு போறம்’

‘எத்தினி மணிக்கு அங்க இருக்கணுமோ அத சொல்லுங்க. நா கொண்டுபோய் விட்டுடுவேன்’

வண்டி நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தாம்பரம் சமீபித்தது.

‘இன்னிம் அரை மணி நேரம். மடிப்பாக்கம் வந்துடும்’ டிரைவர்  என்னிடம் சொன்னான். எல்லோரையும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன். அவரவர்கள் தலை வாரிக்கொண்டார்கள். முகம் துடைத்து பொட்டு வைத்துக்கொண்டார்கள். என் பையன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தி சினிமாவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். வான் சேலையூர் தாண்டிக்கொண்டிருந்தது.

‘வண்டிய எங்கள எறக்கிவிட்டுட்டு என்னா பண்ணுவ’

‘நா சட்டு புட்டுன்னு கெளம்பிடுவன். வேல இருக்கு.  நீங்க வந்திங்களே   மொத  வண்டி. அத எஃப் சீக்கு  ரெடி பண்ணணும். பெயிண்டு, ப்ரசு, லைட்டுங்க ஆணிவ ஸ்குரூங்க, டயர் டியூபுங்க  எஞ்சின் சாமானுவன்னு ஒரு லிஸ்டே வச்சிருக்கேன். எல்லாத்தையும் எங்களுக்கு  வாடிக்கயா சப்ள பண்ற  ஸ்பேர் பாட்ஸ்   கட  ஒண்ணு இருக்கு.  கடப்பேரில. அதுலயே ஜாமானுவ  வாங்கிகுவம். ரவைக்கி எந்நேரம் ஆனாலும் கூட்டேரிபட்டு போய் சேந்துடணும்’

‘பேச்ச நிறுத்துங்க மடிப்பாக்கம் வந்தாச்சி.’ மனைவி எச்சரித்தாள்.

எல்லோரும் ரெடியானோம்.  நான் நெற்றிக்கு சந்தனம் மீண்டும்  வைத்துக்கொண்டேன். அங்கவஸ்திரத்தை சரியாய் போட்டுக்கொண்டேன். இந்தி படம் முடிந்து பையன் முகம் துடைத்துக்கொண்டான். கிச்சென்று டீ சர்ட் போட்டுக்கொண்டு ரெடியானான். சகலர் குடும்பங்கள் பளிச்சென்று மாறியிருந்தது. என் மனைவி முடிந்த அளவுக்கு தன் நெஞ்சை  நிமிர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

‘மண்டபம் வந்தாச்சு’

என் தம்பி அழகாகச்சொன்னான்.

ஆரத்தியோடு மண்டப வாசலில் எங்களை வரவேற்க சம்பந்திமார் குடும்பம் நின்றுகொண்டிருந்தது.’ரா ராமா இண்டி தாக’ வாசித்துக்கொண்டு நாதசுர செட் நின்றது.

டிரைவரிடம் வண்டிக்கு பாக்கி  தொகை மூவாயிரத்து ஐநூறை எண்ணி எண்ணிக் கொடுத்தேன். சம்பந்தி வண்டிக்குள் எட்ட்டிப்பார்த்துவிட்டுச்  சாமான்கள் கொண்டுவந்ததை இறக்கிக்கொண்டு இருந்தார்.

‘எல்லாம் சாமான்களும் விடுதி ஆத்துக்கு வந்துடும். நீங்க  கை வீசிண்டு பேஷா போலாம்’ என்றார்.

நாங்கள் கை வீசிக்கொண்டுதான் நடந்தோம்.

‘வான் சூப்பர், இந்த ஊர்ல இப்பிடி வண்டி கெடைக்குமான்னு சொல்லமுடியாது’ என்றார் சம்பந்தி.

‘எல்லாம் அப்பா ஏற்பாடு’ என்றான் என் பையன்.

டிரைவர் வண்டியை ரிவர்சில் திருப்பி ’வணக்கம்’ சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

‘ காபி  ஒரு வா சாப்டு போலாம்’ சம்பந்தி டிரைவரிடம் சொல்லிக்கொண்டார்.

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத வான் டிரைவர்  அவர் வழியில் போய்க்கொண்டே இருந்தார்.

‘சமத்துத்தான் போங்கோ’

என் மனைவி சொல்லிக்கொண்டாள். என்னைப்பார்த்துதான்.  ’சமத்து என்று அவள் சொல்வது இந்த அசடைப் பார்த்துத்தான்’ நான் என்னுள் சொல்லிக்கொண்டேன்.

------------------------

 

 

 

 

                                                                                                                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நல்ல நேரம் பார்த்து காலை ஆறு மணிக்கு யாத்ராதானம் செய்தாயிற்று. அருகில் கம்மாபுரம் வெங்கட்ராம சாஸ்திரிதான் எங்கள் வீட்டு வாத்தியார். வாத்தியார் என்றால் புரோகிதர்தான் பிறகு வேறென்ன.

No comments:

Post a Comment