Monday, February 10, 2025

சிறுகதை - உலகம் பலவிதம்

 

 

 

 உலகம் பலவிதம்                                                          

 

அவன் வீடு கட்ட சென்னையில்  இடம் ஒன்று  வாங்கினான். முடிச்சூர் அருகேதான். தாம்பரத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் போங்கள்  அந்த முடிச்சூர் வரும்.   அவனால்  ஒரு அரை  கிரவுண்ட்தான் வாங்க முடிந்தது.  அதுவே பெரிய சாதனையாக உணர்ந்தான்.  அங்கே வீடொன்று  கட்டவேண்டும்.’ வாழப்போகும்   அந்த வீட்டின்    விலாசத்தில் சென்னை மாநகரப் பின் கோடு இருந்தால் போதாதா வேறென்ன  ஒருவருக்கு வேண்டியிருக்கு’. அவன் மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்.அவன்  மனை  வாங்கியதில் ஒரே விசேஷம்.  அது  சி எம் டி ஏ அப்ரூவல் பெற்ற மனை. மனையில்  அவன் சக்திக்கு  ஒரு  கட்டிடம் கட்டுவதைக் காண்ட்ராக்டாக விட்டான். வீட்டு வேலை ஆரம்பிக்க வேண்டும்.  முதலில் பில்டிங் பிளான் அப்ரூவல் வாங்கியாகவேண்டுமே ஆக அதற்கு விண்ணப்பங்கள் தயார் செய்தான். அதனை எடுத்துக்கொண்டு  உள்ளூர் ஆட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று  நீட்டினான். செயல் அதிகாரி  என்கிற  அந்தஸ்த்தில்  இந்த விவகாரங்களையெல்லாம் கவனிப்பதற்காகவே அந்த அலுவலகத்தில் ஒருவர்   நியமிக்கப்பட்டிருந்தார். அவர் முன்பாக  கனமான   ரிஜிஸ்தர்கள் அடுக்கி   வைக்கப்பட்டிருந்தன. அவர்  தன் மேசை மீது பிரித்துவைக்கப்பட்டுள்ள ள்ள கோப்புக்களை நோட்டமிட்டபடி  இருந்தார்.

‘என்ன செய்தி’

‘வீடு கட்டணும். அதற்கு அப்ரூவல் வேணும். விண்ணப்பம் கொண்டு வந்து இருக்கேன்’

அதிகாரிக்குப்பதில் சொன்னான்.

‘ஏரியா பெயர்  என்ன சொன்னீங்க’

‘நேதாஜி நகர்,  பார்வதி நகருக்கு வடக்க’

‘அந்த மடுவங்கரையிலதானே’

அவன் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தான்.

‘ஒரு பார்ட்டி  மெட்ராசுல  டிராபிக் ராமசாமின்னு தெரியுமா. அவுரு நிர்வாகத்து மேல  கேசு போட்டுருக்காறு. இங்க இங்கெல்லாம் வீடு கட்ட அனுமதி கொடுக்கக்கூடாதுன்னு. ‘

‘என்ன சொல்றீங்க’

‘சுப்ரீம் கோர்ட்டுல கேசு இருக்கு.  நீங்க  வாங்கியிருக்குற  அந்த இடத்துல வீடு  கட்ட நாங்க  அப்ரூவல் தரக்கூடாதுன்னு’

‘கிரவுண்ட் அப்ரூவல் ஆயிருக்கே’

‘ இண்ட்விஜூவலா   வாங்கிகிட்டது. அது லே அவுட் அப்ரூவல் இல்ல. தெரியுமா’

அவன் கைகளைப்பிசைந்துகொண்டு நின்றான்.

‘கேசு முடியணும். முடிஞ்சாதான் எதையும் சொல்ல வைக்கும்’

‘இப்ப என்ன செய்யலாம்’

’ கைகாசு போட்டு  வீட்ட கட்டிகிங்க.  பாங்க் லோன் எதுவும் கெடைக்காது அத மட்டும்  சொல்லிடுறன்’

‘லோன் இல்லாம எப்பிடி ஆவுறது ’

‘கைய  வச்சி கர்ணம் போடறதுதான்.எவ்வளவு முடியுமோ அதுவரைக்கும்  செய்யுலாம்ல’

விண்ணப்பத்தைத் திருப்பிக்கொடுத்தார் அதிகாரி.

‘நீங்க சொன்ன அந்த கோர்ட் கேசு  இருக்குற  செய்திய  ஒரு வரி  என் விண்ணப்பத்துல எழுதி குடுத்துடுங்களேன்’

‘அது முடியாதுல்ல. நீங்க விண்ணப்பத்த பதிவுத்தபால்ல அனுப்பிவையுங்க. அது  இந்த ஆபிசுக்கு வரட்டும். அத கன்செண்டடு செக்‌ஷன்ல  எனக்கு புட் அப் செய்வாங்க. நா அத  பாப்பேன் படிப்பேன் பதில் சொல்லுவேன்’

அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

‘வேற எதாவது ஒரு வழி சொல்வீங்களா சார்’

‘நீங்க எங்க வர்ரீங்கன்னு தெரிது. யார் இந்த சீட்டுல இருந்தாலுமே  அது எல்லாம்  இப்ப நடக்குற காரியம் இல்லே. கோர்ட் கேசு இருக்குதுல்ல. அதுல தீர்ப்பு வரணும். அது எப்ப வரும்னு எப்பிடி வரும்னு சொல்லமுடியாதுல்ல’

அவன்   உள்ளூர் ஆட்சி  அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டான். எது எதுவோ யோசனை செய்தான். தெரிந்தவர்கள் உறவினர்கள் எல்லோரிடமும்  கடனோ உடனோ வாங்கினான். கையில் இருந்த காசு பணம் எல்லாவற்றையும்  திரட்டிப்போட்டான்.  வட்டிக்குத்தான்   வீடு கட்டக் கடன்  வாங்கினான். எல்லாம்தான்.

வீடு எப்படியோ கட்டி முடித்தாயிற்று.  வீட்டுக்கடன்  வாங்கியது அங்கங்கே நின்றுகொண்டிருந்தது.  அவன்    வாங்கிய கடனுக்கு   வட்டியாகவே தொடர்ந்து  கட்டிக்கொண்டிருந்தான். காலம் உருண்டோடியது. பஸ் ஸ்டாப்பிங்கிலிருந்து அவன் வீடு கொஞ்சம் தூரம்தான். நடக்கிற தூரமும் இல்லை. ஆட்டோ பிடித்து போகிற தூரமும் இல்லை. டிவிஎஸ் எக்செல் ஒன்று வைத்துக்கொண்டு அங்கைக்கிம் இங்கைக்கும் தடமாடிக்கொண்டு இருந்தான். கடைத்தெருவுக்கும் வீட்டுக்கும்  போய்வர டூ வீலர் இல்லாமல் கதை ஆகாது.  அவன் வீட்டுக்கு வருகைதரும் விருந்தினர்கள் ஆட்டோவோ டாக்சியோ இல்லாமல்  வர முடியாதுதான்.

2015 ல் சென்னையில்   மழையோ மழை. மாமழைதான்  பெய்தது. ’மாமழை போற்றுதும்  மாமழை போற்றுதும்’ எங்கே போற்றுவது, பெரு  வெள்ளம்தானே வந்தது. ஊர் உலகமே சென்னையை இளக்காரமாக வேடிக்கை பார்த்தது. அவன் வீட்டுக்குள்ளாய் செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீர் புகுந்து விளையாடியது. அவன் குடும்பத்தோடு அருகிலிருக்கும் மேற்கு தாம்பரம் நகரம் சென்றான்.  மக்கள் சமூகத்தில்  நடுத்தர வகுப்பாருக்கு ஏற்ற  மாதிரி   சென்னை டு  நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது அருணா நடராஜ் லாட்ஜ்.  அதனில்  ஒரு  அறை எடுத்துத் தங்கினான். அருகில் அடையாறு ஆனந்த பவன் இருந்தது. வேளாவேளைக்கு எதாவது சாப்பிட வசதியாகவே  இருந்தது. ஒரு வாரம் ஓடிப்போயிற்று. நிலைமை  கொஞ்சம் சீரடைந்தது. சென்னை மாநகரமே வெள்ள நீரில் நாறிக்கொண்டு கிடந்தது. சென்னை மாநகரில்  ஐநூறு பேருக்கு மேல் வெள்ள நீரில்  மடிந்து போனார்கள். பொருள் நாசம் சொல்லி முடியாது.  உறவினர்கள் எல்லோரும் ஏற்பட்டுவிட்ட  பொருள் இழப்புக்கு அவனைத்  துக்கம் விசாரித்தார்கள். வீட்டிலிருந்த மின்சார சாதனங்கள் எல்லாம் பல்லை இளித்துக்கொண்டன. வெள்ளம் வடிந்து  வீட்டை சுத்தம் பண்ணவே போதும் போதும் என்றானது. தெருவெங்கும் நீர்பிசுக்கு.  ஒரே வீச்சம்.  சகித்துக்கொள்ளவே  முடியாமல் இருந்தது. தரைதள வாசிகள் எல்லோரும் மொத்தமாய் பாதிக்கப்பட்டார்கள். நிகழ்ந்துவிட்ட சோகத்திலிருந்து  மீளவே வெகு நாட்களானது.

இனி   இந்தப்பகுதியில் குடியிருக்க  தரை தளம் லாய்க்குப்படாது. முதல் தளத்தில் ஒரு சிறிய வீடு கட்டினால் தான் தப்பிப்பிழைக்கலாம். மழை வெள்ளம் வந்தாலும்  வீட்டுப் பொருட்கள் காப்பாற்றப்படும். ஆக முதல் தளத்தில் ஓர் அறை ஹால்கொண்ட வீடொன்று கட்டத் திட்டமிட்டான். கையிலிருந்தது, வைத்து   நண்பர்களிடம் கடன் என்று ஆரம்பித்து  நகை நட்டுக்களை விற்றுக்காசாக்கி மேல் தளத்தில் வீடு என்று சொல்லும்படிக்கு ஒரு வசதி செய்து கொண்டான். தரை தள வீட்டைக்காலி செய்துகொண்டு மேல் வீட்டுக்குப்போனான்.  சும்மாவா கிடப்பது கீழ் வீடு.  தரைதள வீட்டை வாடகைக்கு விட்டான். லட்சம் ரூபாய் மாதம் சம்பாதிப்பவர்களா அங்கு  எல்லாம் வாடகைக்கு வரப்போகிறார்கள். அதுதான் இல்லை. ஊறுகாய் விற்பவர்கள், முதியோர் இல்லத்தில் ஆயா வேலை பார்ப்பவர்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு  ஆட்டோ ஓட்டுபவர்கள் பசு மாட்டை தெருக்காடுகளில் மேய விட்டு  விட்டு காலை மாலை பால்  மட்டுமே கறந்து விற்பவர்கள், மாத  சம்பளத்திற்கு  அடுத்தவர்  இல்லங்களில்   பத்து பாத்திரம் தேய்ப்பவர்கள்  என்றுதான்  மாறி மாறி குடி வந்தார்கள். அவ்வளவே. கீழ் வீடு  பூட்டியிருக்காமல்  யாரேனும் கூட்டியும் பெருக்கியும் வைத்துக்கொண்டால் அதுவே பெரிது என்று அவன் மனைவி ஆறுதலாய்ச்சொன்னாள்.

இனிவெள்ளம்  இந்த நேதாஜி நகருக்கு  வரவே வராது என்றும், முதலில் வந்தது  கூட நூறு ஆண்டுகளில் சென்னையில்  பெய்யாத ஒரு பேய் மழையால் வந்தது என்றும் அங்கங்கு மக்கள் பேசிக்கொண்டார்கள். அது  கேட்க மட்டுமே  ஆறுதலாய்  இருந்தது.  இனி செய்வதற்கு என்ன இருக்கிறது. சட்டியா பானையா மாற்றுவதற்கு.  நமக்கு அவ்வளவுதான் பொசுப்பு என்று  விரக்தியாகத்தான் இருந்து வந்தான். அவன் மட்டுமா அங்கு சொந்த  வீடு கட்டிக்கொண்டு  குடி வந்தான், இன்னும் இருபது பேரும் அப்படித்தானே  வந்திருக்கிறார்கள். வந்த எல்லோருக்கும் அவரவர்கள் ஜாதகத்தில்   கிரக  ராசி  ஒன்றாயும் இருக்கலாம்..  அவ்வளவே.     

ஆமாம்  இந்த நேதாஜி நகரில் குடியிருப்போர் அனைவரும் சேர்ந்து ஒரு  குடியிருப்போர் நலச் சங்கம் ஆரம்பித்தால் என்ன என்று யோசனை செய்தான். இந்த குடியிருப்புப்பகுதியில்  அப்போது வரை இப்படி யாருமே யோசனை செய்து பார்க்கவில்லை. அக்கம் பக்கத்து  வீடுகளில்  குடியிருப்போரிடம் போய் போய் சொல்லிப்பார்த்தான்.  சிலர் வாடகைக்கு  மட்டுமே நேதாஜி நகருக்குக்  குடியிருக்க வந்தவர்கள். அவர்களுக்கு இதில் எல்லாம் அக்கறை என்பது வருமா என்ன?

‘நாங்க என்னா சார் கொஞ்ச நாளைக்கு  வாடகைக்கு இருப்பம். அப்பறம் கெளம்பிடுவம். எங்களுக்கு இதுல என்னா இருக்கு’ என்றுதான்  அவனுக்குப் பதில்  சொன்னார்கள்.

 ஆனால் சொந்த வீடு கட்டிக்கொண்டு குடியிருப்பவர்களோ ‘ நல்ல யோசனை இது’ என்று ஆமோதித்தார்கள். அப்படி ஆமோதித்தவர்களையெல்லாம் வரச்சொல்லி  நேதாஜி நகருக்கு  மய்யமாய் ஒரு கூட்டம் போட்டான்.   கூட்டத்திற்கு வந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாய் யோசனை சொன்னார்கள். வீதியில்  குடிநீர்க் குழாய் இருக்கிறது  தண்ணீர்  சரியாக வருவதில்லை என்றார்கள். தெரு மின் விளக்கு விட்டு விட்டு எரிகின்றது என்றார்கள்.   வீதிச் சாக்கடையில் தண்ணீர்  கருப்பு நிறத்தில் தேங்கிக்கிடக்கிறது என்றார்கள். குப்பை லாரிக்காரன் சரியாக வருவதில்லை என்றார்கள்.  வீதிக்குப் போடப்பட்ட தார்ச் சாலை படுமோசம் ஜல்லிக் கற்களெல்லாம் பெயர்ந்து  காலில் குத்துகிறது என்றார்கள்.  ’என்றார்கள்’ எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறதோ.

மாதம் இருபது ரூபாய்  நலச்சங்க  உறுப்பினர் சந்தா என்று முடிவாகியது. நேதாஜி நகர்  நலச் சங்கத்தைப்பதிவு செய்து விடவேண்டும் என்பதில் கூட்டத்திற்கு வந்தவர்கள் உறுதியாக இருந்தார்கள். சங்க நிர்வாகிகள் பட்டியல் ஒன்றைத்  தயார் செய்தார்கள். அவனைத்தான்  நலச்சங்கத் தலைவராய்த் தேர்வு செய்தார்கள். இதைவிடவும் வேறென்ன வேண்டும் அவனுக்கு.’தலைவரே தலைவரே’ என்பதைக் கேட்க அப்படியே ஜில் ஜில்லென்று இருந்தது.

 நிர்வாகிகள்  பெயர் கொண்ட அறிக்கைத் தயார் ஆனது.  உதவித்தலைவர் செயலாளர் உதவிச்செயலாளர் பொருளாளர் உதவிப்பொருளாளர் செய்ற்குழு உறுப்பினர்கள் இருவர் என நீண்ட நிர்வாகிகள்  பட்டியல்  படிக்கப்பட்டது. நலச்சங்கத்திற்கு  உடனே வங்கிக்கணக்கைத் துவக்கிட வேண்டும். அதுவுமே  பொருளாளர்   மற்றும் தலைவர் பெயரில் கூட்டாக  அதுவும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆரம்பிக்க வேண்டும் என்றார்கள். கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒரு பதிவேட்டில்  அவரவர்  பெயர் எழுதிக் கையொப்பமிட்டார்கள். அவரவர்கள் பிளாட் எண்ணையும்  செல் பேசி எண்ணையும்  விடாமல் குறிப்பிட்டிருந்தார்கள்.

நேதாஜி நகர் நல சங்கத்திற்கு  லெட்டெர் பேடு ,சந்தா ரசீது புத்தகம். உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் என எல்லாவற்றையும்  அச்சகமொன்றில் கொடுப்பது  அழகாய்  அச்சடிப்பது என்று முடிவாகியது.  வீதிப்பெயர்  தாங்கிய  சிமெண்ட் பலகைகள் மஞ்சள் கருப்பு  நிறத்தில்  பளிச்சென்று எழுதப்பட்டு உடன்  வைக்கப்படவேண்டும் என்று ஆலோசனை தந்தார்கள். நன்கொடை தருபவர்கள் நலச் சங்கத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்  அவன் ஓங்கிச்சொன்னான்.

 விடுதலைப்பெருநாள் ஆகஸ்ட் பதினைந்து  குடியரசு தினம் ஜனவரி இருபத்திஆறு ஆகிய இரண்டு நாட்களில் நகர நலச்சங்கம் சார்பாக எல்லோரும் ஓரிடத்தில்  கூடி  கொடியேற்ற வேண்டும்.  கூட்டத்திற்கு வருகை தருவோர்  அனைவருக்கும் இனிப்பு வழங்கவேண்டும்.  தேசியக்கொடியேற்ற  இரும்புக் கம்பம் வேண்டும் அதுவும்    அந்தக்கொடிக்கம்பத்தை அவன் வீட்டு முன்பாகவே   நட்டு விடுவது  என்று முடிவாகியது.  கொடிக்கம்பத்திற்கு காவி நிறம் வெள்ளை பச்சை என வர்ணம் பூசியாகவேண்டும்.  கதர்த்துணியில் தேசியக்கொடியும் அந்தக்கொடியை ஏற்றிக்கம்பத்தில் கட்டநூல் கயறும் வாங்க முடிவானது.  கொடியேற்றத்திற்கு வருபவர்கள்.  சின்ன  சின்ன  பேப்பர் தேசியக்கொடியை குண்டூசி  வைத்து மேலாடையில்  கட்டாயம் குத்திக்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தார்கள்.  உறுப்பினர்கள்     நான் நீ  என போட்டி போட்டுக்கொண்டு  டொனேஷன் கொடுத்தார்கள். குடியிருப்போர்   நலச்சங்கத்திற்கு  பொருளாதார  வலு கூட்டினார்கள். சங்க விளம்பரப்பலகை ஒன்று தயார் செய்யப்பட்டு அதனில் அறிக்கைக:ள் ஒட்டப்பட வேண்டும் என்றும்   அவன் சொன்னான். தலைவர் செயலர் பொருளர் என்று மூவருக்கும் விசிடிங் கார்ட் அடிப்பது  அதோடு மட்டுமா இந்த மூவருக்கும் விலாசத்தோடு ரப்பர் ஸ்டாம்புகள் செய்ய ஆர்டர்கள் கொடுப்பது என்று ஏகோபித்து முடிவு செய்தார்கள்.

தலைவரே  தனது  திருக்கரங்களால், இரண்டு தேசிய நாட்களிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்றும்  ஒத்த கருத்தோடு  முடிவு செய்தார்கள். அவனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. அவன் இதுவரைக்கும் எங்கே  தேசியக்கொடியேற்றினான். பள்ளி நாட்களில் கொடியேற்ற விழா நடக்கும்.  வரிசையாய் நிற்கும் மாணவர்களோடு  தானும் நின்று தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாட்டு மட்டும்பாடி கொடிக்கு வணக்கம் செலுத்தியிருக்கிறான்.

சென்னை அண்ணாசாலையில் நந்தனம் அங்குதான்  நலச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் இருந்தது. அவன் ஊபர் ஆட்டோ  புக் செய்துகொண்டு அதனில்  புறப்பட்டான்.  அனைத்து உறுப்பினர்கள்   கையெழுத்து, நடந்த முடிந்த  சங்கக்கூட்ட நிகழ்வுக்குறிப்பு,  கூட்டத்தில் ஏற்கப்பட்ட   தீர்மானங்கள்  இவைகளோடும்தான் நந்தனம்  வந்திருக்கிறான்.  சங்கப்பண இருப்பும்  அவன்  கையில் இருந்தது.  பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து  நலச்சங்கப்பதிவு பற்றி  விசாரித்தான். அந்த அலுவலகத்தில் அவனிடம் இருந்த ரிகார்டுகளையெல்லாம் வாங்கிக்கொண்டு ஏதோ கொஞ்சம் பணம் மட்டுமே கட்டச்சொன்னார்கள். அதற்கு ரசீது போட்டுத்தந்தார்கள்.அப்படி இப்படி கொஞ்சம்  ரூபாய் செலவானது.  அரசு அலுவலகம்.  அது இது எல்லாம் சகஜம்தானே.  சும்மாதான்  ஆகுமா ஒரு காரியம்.  கொண்டுவந்த ரிகார்டுகளில் அது  நொட்டை இது நொள்ளை என்று  முதலில்  அவனைத்திருப்பித்தான்  அனுப்பினார்கள். சில நாட்கள்  சம்பந்தப்பட்ட எழுத்தர் விடுப்பிலிருப்பார் சில சமயம்  பொறுப்பு அதிகாரிர் காம்ப்பில் சென்று  விடுவார்.  நலச் சங்கப்பதிவு என்பது அவ்வளவு எளிய விஷயமாய் இல்லை. சங்கப் பதிவு பெறாமல் இவன் விடமாட்டான் என்பதறிந்த, பதிவாளர் அலுவலகத்தார் ஒரு வழியாய்  நேதாஜி நகர் நலச்சங்க பதிவு ச் சான்றிதழை அச்சடித்த தாளில் கொடுத்தார்கள்.  பவ்யமாய் அதனை இரண்டு கைகளாலும்   வாங்கிக்கொண்டான். நேதாஜி நகர  நலச்சங்கப்பதிவு என்கிற வேலை முடிந்தது. இனி ஆண்டு தோறும் ஒரு மாநாடு நடத்தவேண்டும். அதற்கு அறிவிப்பு தரவேண்டும். வரவு செலவுக்கணக்குகளை எழுத வேண்டும். சங்கச் சந்தா தராதவர்கள் லிஸ்டைத் தயார்  செய்யவேண்டும். அவர்களை வீட்டில் போய்ப் பார்த்துக்கெஞ்சி  அதனை வசூல் செய்யவேண்டும். உள்ளூரில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பொருளாளரை அழைத்துக்கொண்டு போய் சேமிப்புக்கணக்கைத்துவக்க வேண்டும் எனச் சங்கக்கடமைகள் தொடர்ந்தன.

அச்சகத்தில் அடித்து வந்த லெட்டர் பேடு பத்து  பிரதிகள் அவன் வசம் இருந்தன.  லெட்டர் பேடில் அவன் தலைவர் என்று போடப்பட்டிருந்ததை ஒருமுறை பார்த்து மகிழ்ந்து போனான்.   வாரத்திற்கு ஒரு முறை உள்ளூர்  அலுவலகத்திற்கு,   தலைவர் என்கிற  அந்தஸ்த்தில் கடிதம் எழுதினான். தாம்பரம்  மாநகராட்சி அலுவலகம் சென்று எழுதிய கடிதத்தைக்கொடுத்து வந்தான்.அதன் நகலை கோப்பொன்றில் பத்திரப்படுத்தினான். மின் சார வழங்கு துறைக்கு புகார்க் கடிதம் எழுதினான். அதனைக் கொண்டுபோய் முடிச்சூர்  மின்சாரம்  வழங்கு அலுவலகத்தில் அவனே  கொடுத்து வந்தான்.  ஒவ்வொரு நாள் படப்பை  பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் அலுவலகம் செல்வான் நேதாஜி நகர் அருகே செல்லும் அடையாற்றின் கரையை உயர்த்திச் செப்பனிட வேண்டுகோள் வைப்பான். பழைய  தாம்பரத்தில் குளத்தங்கரை ஸ்டாப்பிங்க் அருகே இந்தப்பகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கிறது. அவரைப்போய்ப் பார்த்து கோரிக்கைகள்  பலவற்றை  பணிவோடு  சமர்பிப்பான். நேதாஜி நகருக்குப் பாதை ஊரைச்சுற்றி வருகிறது. இரண்டு கிலோமீட்டர் அனாவசியமாகச் சுற்றித்தான் நேதாஜி நகருக்குள்  வரவேண்டியிருக்கிறது.  இதற்குப்பதிலாக  அருகிலுள்ள க்ரீன் சீட்டி  புது மனைப்பிரிவிலிருந்து  ஐம்பது அடி அகலத்திற்கு  நூறு அடி நீளத்துக்கு  ஒரு சாலையை அரசாங்கம்  வாங்கிக் கொடுத்தால் போதும். நேதாஜிநகர் வாசிகள்  யாரும்  ஊரைச் சுற்றி வரவே வேண்டாம். அந்தக்கோரிக்கையை  எடுத்துக்கொண்டு சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வான். சட்ட மன்ற உறுப்பினரிடம்  இது குறித்து  விஸ்தாரமாய்ப் பேசுவான்.

சுதந்திர தின விழா இல்லை குடியரசு தின விழா அவ்வப்போது   வரத்தானே செய்யும். அதற்குக் கொடி மரம் சீர் செய்வான். கொடிக்கம்பத்தைச் சுற்றித்  தரையில்  உள்ள  புற் பூண்டுகளை அப்புறப்படுத்துவா ன்.  கொடி ஏற்று விழாவுக்கு அவரவர் வீட்டிற்கு  நேராய்ச்சென்று எல்லோரையும்  புன்னகைத்து அழைப்பான்.    நேதாஜி நகரில் கம்பீரமாய்  தேசியக்கொடியேற்றப்படும்.  அவன் தானே கொடியை  ஏற்றுகிறான். தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் பாடலை  மட்டும் இரண்டு  பாராக்கள் எல்லோரும்  சேர்ந்து பாடுவார்கள்.  தனியாய் மட்டும்  இது யாருக்கும்   பாடவே வராது அவனே சொல்லிக்கொள்வான்.  வந்திருந்த எல்லார்க்கும் இனிப்பு வழங்குவான். கொடியேற்றத்திற்கு ப்  பத்து பேர் மட்டுமே   கூடியிருந்தாலும் அவனுக்குத்தெரிந்த  வீர உரை ஒன்று ஆற்றுவான். வந்திருந்தவர்கள்  தேசிய கீதம் சேர்ந்து  பாடிட  கூட்டத்தை நிறைவு செய்வான்.

அவன் எப்போது வெளியூர் சென்றாலும் விசிடிங் கார்டு அடித்ததை கையோடு எடுத்துக்கொள்வான். நேதாஜி நகர நலச்சங்கத்தலைவர்.  அவன் பொறுப்பாய்ப் பார்க்கும்  அந்த வேலை அவன் பெயருக்குக் கீழே அச்சடிக்கப்பட்டிருக்கிறதே. அதை விட வேறென்ன வேண்டும் அவனுக்கு.

எப்போதும் போல்  மழைக்காலம் வரும் .சென்னைக்குக் குடிநீர்  வழங்கும்   அந்த செம்பரம் பாக்கம்  ஏரி ஆண்டுக்காண்டு  நீர் நிறையும் . வேறென்ன செய்ய.  அதிகாரிகள்  ஷட்டரைத்திறந்து விடுவார்கள். இவனின்  நேதாஜி நகர் குடியிருப்புக்குக்கு அருகே தான் அந்த அடையாறு வளைத்துக்கொண்டு செல்கிறது.  ஒவ்வொருமுறை  ஏரித் திறப்புக்கும் அடையாற்றில் தண்ணீர் முட்டிக்கொண்டு வரும். அடையாறு  தளும்பி நிறையும்.  ஆற்றின்  கரையைத்தாண்டி  வெள்ள நீர் வழியும்.   கரை வழிந்து வரும் நீர்  நேதாஜி நகரை அலசிப்பார்க்கும். சில சமயம் வீதியொடு மரியாதையாய்ச் சென்றுவிடும். சில சமயம் வீட்டினுள் எட்டிப்பார்க்கும்.  சமயத்தில்  தரைதள வாசிகள்  சாபமிடு வார்கள்.  அவர்களை  அது அழவும் வைக்கும்.

எது  நடந்தால்தான்  என்ன அவனுக்கு இப்போதெல்லாம் முன்பு மாதிரி எந்தக் கவலையும் இல்லை.  கைவசம் லெட்டர் பேடு இருக்கிறது. ரப்பர் ஸ்டாம்ப் இருக்கிறது. விளம்பரப்பலகையில்  அவன் தலைவர் என்று போட்டிருக்கிறார்கள்.  சட்டைப்பை நிறைய   அவன்  பெயருக்கு  நேராகத் தலைவர் என்று போட்ட  வழ வழ விசிட்டிங் கார்டு இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை  தேசியக்கொடியை யேற்றுகிறான். அவன்  வீட்டு வாசலில் தலைவர் நேதாஜி நகர் நலச்சங்கம் என்று பெயர்ப்பலகை சட்டமாய்த்  தொங்குகிறது. அவசியம்  நீங்கள் எல்லோரும்  வந்து பார்க்கவேண்டும்தான்.

’ வடகிழக்குப் பருவமழையா  அது  வரும்தான். செம்பரம்பாக்கம்  ஏரியைத் திறப்பான் தான். வீதியில்  அடையாற்றுத்தண்ணீர் வரும்தான்.  ஏன்? அது  வீட்டுக்குள்ளும்  வரும்தான். இதற்கெல்லாம் கவலைப்பட்டால் ஆகுமா, சென்னை மாநகரமே  வங்கக்கடல் மட்டத்தைவிட குறைவுதான்.  மழைக்காலம் என்றால்  சென்னையில் பாதி   வெள்ளத்தில் தான் மிதக்கிறது அது தெரியாதா உனக்கு’ என்கிறான் அவன்.

இப்போதெல்லாம் அவன் மனைவிக்கு என்னவோ  அவனைப் பிடிப்பதில்லை. விடுங்கள் அது தனிக்கதை.

 

------------------------------------------------------------

 

No comments:

Post a Comment