நம் நிழல் நம்மோடு
எங்கள் குடும்பம் அப்போதும் அதே தருமங்குடியில்தான்
இருந்தது. அக்காக்கள் இருவர் மணம் முடித்து அவரவர்கள் கணவன் வீடு சென்றாயிற்று.எப்போதேனும்
பிறந்தகம் என்று எட்டிப் பார்க்க வருவார்கள் மற்றபடி அவர்களிடமிருந்து கடிதம் மாதத்தில் ஒன்றோ இரண்டோ வரும். சின்ன அக்கா திருமணத்திற்கு இன்னும் காத்துக்கொண்டிருந்தாள்.
அம்மா அன்றாடம் தபால்காரனைப் பார்த்துவிட்டுத்தான்
ஸ்நானத்திற்குப்போவாள். அப்படி அம்மா செய்வதில் ஒரு சூட்சுமம் அடங்கியிருந்தது. எங்கிருந்தேனும்
சாவுக்கடிதம் நம் வீட்டுக்கு வந்தும் விடலாம். அம்மாதான் இப்படிச் சொன்னாள்’ போதுமே இப்பூலோக வாழ்க்கை’ என்று விடை பெற்றுப் போன அந்த
உயிருக்கும் சேர்த்து அன்றைக்கே ஒரு முழுக்குப் போட வசதியாயிருக்குமே. சில சமயங்களில் தந்தி கூட சாதா தபாலோடு சேர்ந்தே வருவதுண்டு. தந்தி வருகிறது என்றால் சாவுத்தந்திதான்
வேறு எந்தச் செய்தியும் தந்தி என்கிற பெயர்
வைத்துக்கொண்டு வீட்டுக்கு வராது. தந்தி என்று சொன்னால் இன்று யாருக்கும் ஏதேனும் விளங்குமா
என்ன? சரி சரி, கதைக்கு வந்துவிடுவோம். ஆகத்
தபால் காரனை அன்றன்று பார்த்துக்கொள்வாள் அம்மா. நித்யபடி சமையல் வேலையைத் தன் சவுகரியப்படி தொடருவாள்.
அம்மா கர்நாடக
சங்கீதம் நன்றாகப்பாடுவாள். அம்மாவின் அப்பா குடும்பம் ஒரு காலத்தில் சிதம்பரம் நகரில் இருந்தது. குருவையன் அக்கிரகாரத்தெருவில்தான் தாத்தா பாட்டியின்
ஜாகை. அம்மா சின்ன பாப்பாவாய் அங்கு கற்றுக்கொண்டதுதான்
துளி சங்கீதம். அதுவும் முழுமையாகக் கற்றுக்கொள்ள விதி எங்கே அம்மாவை விட்டது. அந்த
அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு முகத்தில் ஒரு
நாள் பரு ஒன்று வந்ததாம். அதைத் தெரிந்தோ தெரியாமலோ பாட்டி கிள்ளி விட்டாளாம். அதனால் வந்தது ஒரு விஷ ஜுரம். அந்த ஜுரம்தான் பாட்டியைக்கொண்டு சென்றதாம் அம்மா சொன்ன செய்திதான். அப்பா வழி தாத்தா பாட்டியையும் கூடத்தான்
நாங்கள் பார்த்ததில்லை. குடும்பத்துப் பெரியவர்கள்
எல்லோருக்கும் என்னதான் அப்படி ஒரு அவசரமோ, போய்ச்சேர்ந்தார்கள்.
ஒரு பெண் குழந்தைக்குப்
பெற்ற தாய் போய்விட்டால் அவ்வளவுதான். ஒரு கை முறிந்து விட்டமாதிரியே
எஞ்சிய வாழ்க்கை அனுபவமாகும். அந்தப்பெரிய
ஊருக்குப் பாட்டி போய்ச்சேர்ந்தாள். அம்மாவுக்குச் சங்கீதம் பயில்வது இற்றுக்கொண்டது.
திருமணமாகித் தருமங்குடிக்கு வந்திருக்கிறாள்.
எங்களுக்குத்தெரிந்த நாளாய் நாங்கள்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே.
தினம் மதிய வேளையில் கம்பீரமாய்ப் பாட்டுப் பாடுவாள். எல்லாம் கீர்த்தனைப்பாட்டுக்கள்
தாம். தெலுங்கு கீர்த்தனைகள்தான் அதிகம். எனக்கும்
கூடப் பாட்டு சொல்லிக்கொடுத்தாள். நானும் பாடினேன், பாடித்தான் பார்த்தேன். என் குரலில் அத்தனை சவுந்தர்யம் இல்லை. ஆக நான் பாடுவது நின்று போனது.
கல்யாணத்திற்கு
வீட்டில் இருந்த சின்னக்காவுக்கு கேபிஎஸ் அம்மாவின் குரல். ’ நினைத்தபோது
நீ வரவேண்டும்! நீல எழில் மயில் மேல் அமர்
வேலா! என்று உச்ச ஸ்தாயியில் சின்ன அக்கா பாடுவதைத்
தருமங்குடி ஊரே கேட்டு சபாஷ் சொல்லும். தியாகராஜ கீரத்தனைகள் அம்மாவுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த அக்காவுக்கும்
அத்துப்படி. முத்துசுவாமி தீட்சிதரின் ‘பஞ்சாக்ஷ பீட ரூபினி மாம்பாஹி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி’
போன்று சில உருப்படிகளைச் சின்னக்கா அம்மாவிடம் கற்றுக்கொண்டாள்.
இருவரும் அவ்வப்போது சேர்ந்து பாடுவார்கள். உறவினர்களின் திருமணத்தில் காசியாத்திரையின்
போது அருணாச்சலக்கவியின் ‘ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மையுண்டு ஒருக்காலே’ சக்கை போடு போட்டு பார்த்திருக்கிறேன்.’தருமங்குடி மாமி வந்துருக்கா
அவாள பாடச்சொல்லுங்கோளேன்’ இப்படி பந்துக்கள்
எல்லோரும் சொல்வார்கள்.
அம்மா அப்பாவிடம் சொன்னாள். எத்தனை நாட்களாக இந்த யோசனை
அம்மாவின் மனத்தில் கருக்கொண்டிருந்ததோ தெரியவில்லை.
‘திருவையாறு தியாகய்யர்வாள்
ஆராதன உற்சவம் வர்ரது. பஞ்ச ரத்ன கீர்த்தன
எல்லாரும் கோஷ்டியா பாடுவா. எம் எஸ் அம்மாலேந்து
எல்லாரும் வருவா. நா எப்பவோ திருவையாறு உற்சவத்துக்கு
போயிருக்கேன். இப்ப எல்லாம் திருவையாறு போறது சாத்தியம் இல்லே. நாம ஆத்துல
உக்காந்துண்டே ரேடியோ வச்சிண்டா அந்த காவேரிக்கரயில ஆராதனைக்காராள் பாடற பாட்ட கேக்கலாம். அங்கேந்து
அத ரேடியோல ஒலி பரப்பு செய்யறாளாமே’
‘ஆமாம். அது ரேடியோ இருந்தா கேக்கலாம். மொதல்ல நம்மாத்துல கரண்டு ஏது. கரண்டு இருந்தான்னா ரேடியோ.
அதுவும் ரேடியோ எல்லாம் நம்மால வாங்கத்தான்
முடியுமா என்ன’
இப்படி சம்பாஷணை நடந்துகொண்டிருந்தபோதுதான் வடலூரிருந்து
கோபால் சித்தப்பா பங்கஜம் சித்தி இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
‘என்ன சம்பாஷணை அக்கா இங்க
மும்முரமா போயிண்டுருக்கு’ என்றாள் சித்தி.
‘டீ பங்கஜம் திருவையாறு உற்சவ வர்ரதே. அங்க தியாக பிரம்மம் தியாகராஜர் ஆராதனை நடக்கும் புஷ்ய பகுள பஞ்சமி அன்னைக்கு
பஞ்ச ரத்ன கீர்த்தன எல்லாம் பிரமாதமா பாடுவா. நாம ஒரு ரேடியோ
வாங்கினா காதாலே கேக்கலாமேன்னு அவர் கிட்ட
சொல்லிண்டு இருந்தேன்.’
’அத்திம்பேர் என்ன
சொன்னார்’
‘சட்டில இருந்தான்னா ஆப்பையில வர்ரத்துக்கு. நம்மாத்துல ஆத்துல கரண்டு எங்க இருக்கு. சிமிழி காடா
வெளக்கு அரிக்கேன் லாந்தர் பெட்ரூம் லைட்டுன்னுதான
காலட்சேபம் ஓடிண்டு இருக்குன்னார்’
‘அதுவும் சரிதான்’ என்றாள் பங்கஜம் சித்தி.
சித்தப்பா குறுக்கிட்டார். ‘ஏனாம் இப்ப டிரான்சிஸ்டர்னு ஒன்னு புதுசா வந்துருக்கே. கரண்டே வேண்டாம். நாலு பேட்ரி செல்லு
வாங்கி அதுக்குள்ளே போட்டுட்டா, ஆறுமாசம் கூட
அது பாட்டுக்கு பாடிண்டு இருக்குமே’
‘ஆமாம் நானும் அதச்சொல்ல மறந்து போனேன்’ என்று ஆமோதித்தாள்
சித்தி.
‘தோ பாருங்கோ, ஒரு முந்நூறு ரூவா ரெடி பண்னுங்கோ டிரான்சிஸ்டர்
ஆத்துக்கு வந்துடும், பாட்டு கேக்கலாம். நியூஸ் கேக்கலாம். எல்லாம் கேக்கலாம். பெரிய
பரிய பாட்டுக்காரா பாடற கச்சேரி கேக்கலாம் எவ்வளவோ விஷயங்கள் அதுல இருக்கு. டிரான்சிஸ்டர்னா சும்மா இல்ல. ஒன்னு வாங்கிடாலாமா’
‘எப்பிடி வாங்குவ நீ மெட்ராஸ் போயி வாங்கிண்டு வருவியா’
என்றார் அப்பா.
‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஒரு லெட்டர் எழுதி போட்டா போறும்.
டில்லி விலாசம் என்னண்ட இருக்கு. அதுக்கு டில்லி செட்டுன்னு பேரு. அங்கேந்து விபிபில அனுப்புவான். நாம பணத்த தபால் காரன் கிட்ட கொடுத்துட்டு அந்தப்
பார்சல வாங்கிகணும்’
‘அந்த செட் பாடல்லேன்னா
என்ன பண்ணுவே’
‘பாடும். வடலூர்ல
நாலு மனுஷா வாங்கி இருக்கா. இப்பவும் பாடிண்டு
இருக்கு’
‘பார்சல் உள்ள எதான குப்பய வச்சி பதவிசா கட்டி
ஒட்டி அனுப்பிச்சிட்டான்னா நாம என்ன பண்றது’
‘அப்பிடி எல்லாம் ஆகாது’
‘நா கேள்வி பட்டேன் இந்த சேதி.’
‘எந்த சேதி அதச் சொல்லுங்கோ’
‘மூட்ட பூச்சின்னு ஒண்ணு வந்து ஒலகமே அமக்களப்பட்டது தெரியுமோ.’ ஊர் ஊர்’ னு முடியற ஒரு நூறு ஊர் பேர பேப்பர்ல எழுதி மூணு பேருக்கு அத தனித்தனியா
தபால்ல அனுப்பிச்சிட்டா டாண்ணு அது
மொத்தமாவே காணாம போயிடும், இல்லேன்னா ஆத்து நெலப்படில
‘மூட்டைப்பூச்சி அத்துப்போச்சி’ ன்னு
சுண்ணாம்பால எழுதி வைக்கணும், அதுவே போறும் அத்தனையும் அத்துப்போயிடும்னு எல்லாரும் சேந்து சொல்லிண்டு திரிஞ்சமே, அதோட இன்னொண்ணும் நான் கேழ்விப்பட்டேன். மூட்டைபூச்சிய ஒழிக்கறதுக்கு மெஷின் ஒண்ணு புதுசா இருக்குன்னு டில்லிலேந்து விளம்பரம் வந்துதாம். அத உடனே எனக்கு
அனுப்பி வைன்னு கடுதாசி எழுதி போட்டானாம் பிரகஸ்பதி ஒத்தன். நீ இப்ப
சொன்ன மாதிரிக்கு அவன் விலாசத்துக்கு ஒரு விபிபி
பார்சல்ல வந்துதாம் . எவ்வளவோ ரூவாய தபால்காரன்கிட்ட கொடுத்துட்டு அந்த பார்சல வாங்கி
பிரிச்சி பாத்தானாம். அதுக்குள்ளே ஒரு வட்டமா ஒரு கல்லும் சின்ன சுத்தியும் இருந்துதாம். மொதல்ல மூட்ட பூச்சிய புடிச்சி அந்த கல்லுக்கு மய்யாமா
வச்சிடணும். அந்த சுத்தியல் இருக்கே அதால ஒரு தட்டு தட்டினா மூட்ட பூச்சி காலியாயிடும். இது செய்முறை
விளக்கம்னு ஒரு சீட்டுல எழுதி அனுப்பியிருந்தானாம்’
இப்படி எல்லாம் எவ்வளவோ ஏமாத்தல் சங்கதிகள்
கேள்விப்படறமே.’ அப்பா சொல்லிக்கொண்டு
சற்று சிரிக்கவும் செய்தார்.
இருவரும் இப்படியாய்ப் பேசிக்கொள்வதை வீட்டில் உள்ள எல்லோருக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
’அது எல்லாம் பாட்டி
கதன்னா’ .
‘நா யோஜன பண்ணிட்டு உனக்கு எதுவா இருந்தாலும் சொல்லி அனுப்பறேன்’ அப்பா முடித்துக்கொண்டார்.
அம்மா குறுக்கிட்டாள்.’ அந்த புஷ்ய பகுள பஞ்சமி இண்ணைக்கு பதினைஞ்சா நாள் வர்ரது. இன்னும் பதினஞ்சே
நாள்தான் இருக்கு, அதுக்குள்ள டிரான்சிஸ்டரோ இல்ல அது என்னமோ
ஒண்ணு ஆத்துக்கு வரணும்’
அப்பா பதில் எதுவும் பேசாமல் இருந்தார்.
சின்னக்கா அப்பாவிடம்
திடீரென்று பவ்யமாய்ப் பேசினாள்,’ எண்ணைக்கு
இருந்தாலும் நா வேற ஒரு ஆத்துக்கு போறவதான். இருந்தாலும் அந்த ரேடியோவ நம்மாத்துல வச்சி அதுல நாலு கச்சேரி
பாட்ட என் காதால கேக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா’
அப்பா சின்னக்காவைப் பார்த்துக்கொண்டார். அப்பாவுக்கு மனம்
இறங்கிக்கொண்டு விட்டது என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. ’ ஒரு தகப்பனுக்கு பெத்த பொண்ணவிட
வேற என்ன பெரிசு வேண்டிருக்கு’ அதுவும் சரித்தான்’ அப்பா முணுமுணுத்தார்.
‘நீ டில்லிக்காரனுக்கு லெட்டெர் போட்டுடு. அத இண்ணைக்கே போட்டுடு. நா காசு ஏற்பாடு பண்றேன்’
சித்தப்பாவிடம் அப்பா சொன்னார். அப்பா லேசில் ஒரு காரியத்தை ஒப்புக்கொள்ளவே மாட்டார்.
ஆனால் ஒப்புக்கொண்டு விட்டால் அதனை நடத்தி முடிக்காமல் விடவும் மாட்டார்.
நான் சின்னக்காவைப்பார்த்துக்கொண்டேன். அவள் ஜாடையாய் அம்மாவைப்பார்த்தாள்.
அவ்வளவுதான். சித்தப்பா சித்தி இருவரும் காபி
டிபன் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினர்.
‘ஏதோ அக்காவ பாக்கணும்னா, நா அவள கூட்டிண்டு வந்தேன். வந்தாச்சு அக்காவை பாத்தாச்சு
கெளம்ப வேண்டியதுதான்’
‘அத்திம்பேர எல்லாம் யாரு பாக்க வரா’ அப்பா சொல்லிக்கொண்டார்.
சித்தப்பாவும் சிரித்துக்கொண்டார். சித்தப்பாவும் சித்தியும் ஊருக்குக்கிளம்பினார்கள்.
அப்பா முந்நூறு ரூபாயுக்கு என்ன செய்வது என்ற யோஜனையில் தீவிரமானார். மேல வெளியில்
எங்களுக்குச்சொந்தமாய் கால் காணி நஞ்செய் நிலம் இருந்தது. அதனைக் குத்தகைக்குப் பயிரிடுபவர் சுருட்டு
ஆறுமுகக் கோனார். யார்தான் எதிர்பார்த்தார்கள்
அவர் நான்கு மூட்டை நெல்லை ஒரு கட்டை வண்டியில் ஏற்றிக்கொண்டு அப்போதுதான் வீட்டு ஆளோடியில் வந்து நிறுத்தினார். அப்பா ஒரு மூட்டையை
அவிழ்க்கச்சொன்னார். ஒரு பிடி நெல்லை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார். அந்த அவிழ்த்த நெல் மூட்டையைக் கோனார் திரும்பவும் நன்கு
கட்டி வைத்தார்.
‘கோனாரே ஒரு சேதி இந்த நெல்ல காசாக்கி புடணும்’
‘சாமி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே’
‘பகவான் ஒத்தன்
இருக்கான் என்னை கை வுட்டுட மாட்டான்’
‘அப்பிடி என்ன மொடசல் அய்யாவுக்கு’
‘மொடசல்தான்’
‘நெல்லு மூட்டய இப்ப நா எறக்கவேணாமா’
‘காசு வந்தாதான் எனக்கு தேவலாம்’
‘சரி அப்ப, நா அளக்குற நாலு மூட்ட குத்தகை நெல்லு வண்டில இருக்கு.
அத வித்தா நா முக்கால் மூணு. முந்நூறு
ரூவாயுக்கு வரும்’
‘’ ஊரு ஒலகத்துல வழங்குறது எப்பிடியோ அப்பிடி. நமக்குன்னு என்னப் புதுசா இருக்கு’
சுருட்டு ஆறுமுகக்கோனார் வண்டியைத்திருப்பிக்கொண்டு போனார்.
அம்மா வீட்டின் உள்ளிருந்து வாயிலுக்கு வந்தார்.
‘ஏன் நெல்லு வண்டி திரும்பி போறது’
‘நான் தான் நெல்லு வேண்டாம் பணமா குடுன்னு சொன்னன்’
‘என்ன அக்கிரமம். வந்த லெச்சுமிய எறக்கி கூட வக்கவேண்டாம
ஆத்துல’
அப்பா கையில் எடுத்து வைத்திருந்த ஒரு பிடி நெல்லை அம்மாவிடம் கொடுத்தார்.’ இந்தா
உன் தான்ய லட்சுமி’ அம்மா அதனைக் கைகளில் வாங்கினார்.
‘எல்லாம் ஒரு காரணமாதான் வண்டிய திருப்பி விட்ருக்கேன் கொஞ்சம் பொறும வேணும் உனக்கு’
சற்று நேரத்திற்கெல்லாம் சுருட்டு ஆறுமுகக்கோனார் மூத்த பையன் வந்தார். அப்பாவிடம்
முந்நூறு ரூபாய் எண்ணிக் கொடுத்தார். ‘ எங்கய்யா இத உங்க
கிட்ட குடுக்க சொன்னாங்க’
‘ரொம்ப சரி’ என்றார் அப்பா. கோனாரின் மூத்த பையன் அவர்
வீட்டுக்குச் சென்றுவிட்டார். இத்தனைச் சுளுவாய்
கோனார் பணம் அனுப்பிவிடுவார் என்று
அப்பா எதிரே பார்க்கவில்லை. அம்மாவிடம் அந்த
நெல் விற்றபணத்தை ஒப்படைத்தார்.’
‘ரேடியோ வாங்கத்தன் இந்த ஏற்பாடா’
‘ஆமாம்’
அம்மாவுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. ‘ஆகட்டும், உங்களுக்கும்
மனசு வந்துருக்கே’’ சொல்லிய அம்மா பணத்தையும், கைப்பிடி நெல்லையும் எடுத்துக்கொண்டுபோய் ஸ்வாமி
பிறையில் வைத்தார்.
வீட்டிற்கு ரேடியோ வரப்போகிறது என்கிற குஷியில் நானும்
சின்னக்காவும் இருந்தோம். அம்மா வெளியில் எதுவும்
காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்கள் ஓடின. சித்தப்பா ஒரு நாள் கையில் ரேடியோவோடு
வந்தார். அது சோப்பு பெட்டி சைசுக்கும் இன்னுமொரு
பங்குக்கு இருந்தது. அதனைக்கொண்டுபோய் கூடத்தில்
வைத்தார். வீட்டில் இருந்த எல்லோரும் அதனையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தோம். தெலுங்கு
கன்னடம் இந்தி மொழிகளில் எல்லாம் பாடல்கள் வீச்சென்று வந்தன. பிறகு சிலோன் வானொலி. அது தன் இருப்பை வசீகரமாய்க்
காட்டியது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்
அதன் விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைச் சொல்லிக்கொண்டிருந்தது.
‘ஒண்ணு சிலோன் இன்னொண்ணு திருச்சி இது ரெண்டும்
நாம கேக்கலாம்’
சித்தப்பா, ஒரு
வெள்ளைத் திருகு சக்கரத்தைத் திருப்பி திருச்சியும்
சிலோனும் எங்கு இருக்கின்றன என்பதைக்காட்டினார். பென்சிலால் இரண்டு புள்ளிகள் வைத்துக்கொடுத்தார்.
டிரான்சிஸ்டரில் நான்கு எவரெடி பாட்டரிகள் எங்கே உட்கார்ந்திருக்கின்றன அவற்றை எப்படிக் கழற்றிப் போடவேண்டும் என்பதை எங்களுக்கு
செய்துகாட்டினார். பாட்டரியில் தலைப்புறம்
எது கால் புறம் எது, அதனை எப்படி ஒன்றோடொன்று சரியாகப் பொறுத்துவது
என்பதனையும் சரியாகத் தெரிந்து கொண்டோம்.
எங்கள் வீட்டு முற்றத்தில் கொசுவலை போல் கம்பி வலையை நீட்டு வாகில் கட்டி அதனிலிருந்து ஒரு
வயரை இழுத்து வந்து டிரான்சிஸ்டரின் பின்னேயுள்ள ஒரு ஓட்டையில் செருகிவிட்டார். ‘இதுக்கு
ஏரியல்னு பேர் இது வழியாதான் காத்துல கலந்து இருக்குற ஒலி அலை
எல்லாம் ரேடியோக்குள்ள வருது தெரியர்தா,
ரேடியோலேந்து எப்பிடி கிளியரா இப்ப பாட்டு கேக்கறது
பாருங்கோ’ என்றார். கொரகொரப்பு குறைந்தது ஒலி நன்றாகக் கேட்கமுடிந்தது.
டிரான்சிஸ்டருக்கு அப்பா குங்குமப் பொட்டு மூன்று இடங்களில்
வைத்தார். சுவாமி படத்தைப்பார்த்து ஒரு கும்பிடு போட்டார். அம்மா நெல் மூட்டைகள் விற்றுக்
கோனார் கொடுத்த அந்தப்பணத்தை எடுத்துவந்து அப்பாவிடம் கொடுத்தார்.
அவர் அதனைஅப்படியே சித்தப்பாவிடம் சேர்த்தார்.
‘முந்நூறு ரூவா இருக்கு பாத்துகுங்கோ’
சித்தப்பா பணத்தை எண்ணிப்பார்க்காமல் தன் சட்டைப்பையில்
வைத்துக்கொண்டார்.
‘ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்,’
‘அதெல்லாம் உங்களண்ட வேண்டாம்’
‘எனக்கு இப்பிடி ஒத்தாச செய்யறவா யார் இருக்கா’ அம்மா சொல்லிக்கொண்டாள்.
அம்மா சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு
பனை விசிறி மட்டை கொண்டு வந்து கொடுத்தார்.
‘ஏனோ இப்பிடி புழுங்கறது மழை கிழை வருமோ’ என்றார் சித்தப்பா.
‘கரண்டு இழுத்துடுங்கோ ஆத்துக்கு, ஒண்ணும் பெரிய செலவு இல்ல. ஒரு சீலிங் ஃபேன் கூடத்துல
போட்டுட்டா அதுவே போறும் இந்த விசிறி மட்ட வச்சிண்டு விசிறிக்கற வேல இருக்காது’ என்றார் மீண்டும்.
‘இப்பக்கி என்னால
முடியாது. என் பையன்க வேலைக்கு போயி சம்பாரிச்சிதான் அந்த மாதிரி யோஜனையெல்லாம். ஒரு சேதி என் பெரிய பையனுக்கு கொழந்தையில ஒரு விஷ ஜொரம் வந்துது. பழனிமலை முருகனுக்கு நாங்க வேண்டிண்டம். எப்பிடித் தெரியுமோ, ’ பழனி முருகா அவன் உடம்ப தேவலை ஆக்கு,
அவன் பெரியவனாகி அவனே சம்பாரிச்சி உன் சந்நதிக்கு எங்களையும் கூட்டிண்டு
வருவான். உன் சந்நதி உண்டியல்ல அவன் தன்
ரெண்டு கையாலயும் காசு நிறைய
நிறைய போடுவான்னு’ என்றாள் அம்மா.
‘ரொம்ப சமத்தா வேண்டிண்டு இருக்கேள்’ என்றார் சித்தப்பா.
‘இன்னும் ரெண்டு நாள்தான் பாக்கி இருக்கு தியாகைய்யர் ஆராதனைக்கு.
ரேடியோ ஆத்துக்கு வந்தாச்சு. பஞ்சரத்ன கீர்த்தன இந்த வருஷம் நம்ப ஆத்துலயே கேட்டுடலாம். இதுகள் எல்லாம் ஒங்க ஒத்தாச’
‘ பகவான் செயல்’ சித்தப்பா முடித்துக்கொண்டார். காபி சாப்பிட்டு
விட்டு வடலூருக்குப்புறப்பட்டார். நானும் சின்னக்காவும் இரண்டு தினங்கள் டிரான்சிஸ்டரை
விடாமல் கேட்ட வண்ணம் இருந்தோம். ஒரு புது உலகமே எங்களுக்கு வசப்பட்ட மாதிரி அனுபவமாகியது.
சிலோன் வானொலிதான் எப்பவும், அந்த அப்துல்
அமீது அண்ணாவின் குரல் எங்களைச் சிறைப்படுத்தி
வைத்திருந்தது. தியாகைய்யர் ஆராதனை நாளன்று அம்மாவுக்கு மட்டுமேதான் டிரான்சிஸ்டர்
முழு ஆளுகையும் என்று எல்லோரும் முடிவு செய்தோம். அம்மாவும் அந்த புஷ்ய பகுள பஞ்சமியன்று
காலையிலேயே ஸ்நானம் முடித்துத் தயாரானாள்.
நான் தான் டிரான்சிஸ்டரை எடுத்து ஆன் செய்தேன். வீட்டில்
அப்பா அம்மா சின்னக்கா எல்லோரும் பஞ்சரத்ன கீர்த்தனை கேட்க ரெடியானார்கள்.
‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ என்ற வீணை ஒலி மட்டுமே இறங்குமுகமாய்க் கேட்டது. ‘ஜகதா நந்த காரகா ஜய ஜானகீ
ப்ராண நாயகான்னு, நாட்டை ராகம்னா மொதல்ல வரணும்’ அதிர்ந்து சொன்னாள் அம்மா.
‘இதென்ன அபஸ்வரமா கேக்கறது’ என்றார் அப்பா. டிரான்சிஸ்டரை
ஆஃப் செய்துவிட்டு மீண்டும் போட்டேன். ‘நமது பாரதப்பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்
உஸ்பெகிஸ்தானிலுள்ள டாஷ்கண்ட்டில் காலமானார்.ஆக
முன்னம் அறிவிக்கப்பட்ட படி எந்த ஒரு இசை நிகழ்ச்சியும் இந்நிலையத்திலிருந்து ஒலி பரப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று தொடங்கி மூன்று தினங்களுக்கு இத்தேசம் நிறைத்
துக்கம் அனுஷ்டிக்கிறது.’ என்கிற அறிவிப்பினை ஒருவர் துக்கத்தோடு
தன் கட்டைக்குரலில் வாசித்தார்.
‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ மீண்டும் வீணை முகாரி வாசித்துக்கொண்டிருந்தது.
அம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். அம்மா தோட்டத்துப் பக்கமாய்
போய் நின்று கொண்டிருந்தாள். நான் வருத்தத்தோடு அம்மா அருகில் போய் நின்றேன். ‘எங்க
சுத்தி எங்க வந்தாலும் நம்ப நெழல் மட்டும் நம்பள விட்டுட்டு எங்கயும் போய்டாது’ சொல்லிய அம்மா விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ய ஆரம்பித்தாள்.
‘ திருவையாறு ஆராதன கச்சேரிதானே அத அடுத்த
வருஷம் கேட்டுக்கறோம்’ என்றார் அப்பா. பாம்பு
பஞ்சாங்கத்தை கையில் எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போனார்.
மூன்று தினங்கள் தொடர்ந்து ஆகாசவாணி அழுதது. நானும் அக்காவும் ரேடியோவோடு சேர்ந்து அழுதோம்.
அந்த வருஷமே சின்னக்காவுக்குத் திருமணம் ஏற்பாடாகியது.
அம்மா இருந்துதான் சின்னக்கா கல்யாணத்துக்கு
வேண்டியது அத்தனையும் செய்தாள். அடுத்த ஆண்டு புஷ்ய பகுள பஞ்சமி யன்று திருவையாறு ஆராதனை நாள் வந்தது.
ஆனால் என் அம்மாதான் இல்லை.
----------------------------------------------------
‘
No comments:
Post a Comment