Wednesday, November 8, 2023

 


கவிதை- காலம்               இணையக்கால கவியரங்கு   6/11/2023


அது அதுவும் அங்கங்கே

நிகழ்ந்து கொண்டேதான்

யார் எங்கு போனால் என்ன

போகாவிட்டால் என்ன

எதற்காகவும் நிற்பதில்லை எதுவும்

புலம்பல்கள் இருக்கலாம்

புகழ்ச்சிகள் இருக்கலாம்

வசைகள் இருக்கலாம்

வம்புகள் இருக்கலாம்

வழிபடல் இருக்கலாம்

யாருக்காகவும் எதுவும்

காத்திருப்பதில்லை

அதன் ராஜபாட்டையில்

தொடர்கிறது காலம்

யாரையும் சட்டைசெய்யாமல்

கதியைக்கூட்டுவதுமில்லை

குறைப்பதுமில்லை காலம்

யாரிட்ட கட்டளையோ

வரம்பு எதுவும் உண்டோ

யார் அறிவார்

யார் புகல்வார்பார் சுழலும் ரகசியத்தை

யாரே பகர வல்லார்.

----------------------


கவிதை- நீவழிப்படுஊம் புணை        நாள்   7/11/2023


தருமங்குடி சிவன் கோவில் அக்கிரகாரத்தில்

எங்களின் ஓட்டு வீடு

தாத்தாவுக்குப் பிறகு

அப்பா இருந்தார்

பிள்ளைகள் நாங்கள்

மாநகரம் வந்தாயிற்று

துளசி பூஜை

விடாமல் நடந்த வீட்டின்

முற்றத்தில் காட்டுப்பூனைகள்

அட்டகாசமாய்க்

குடும்பம் நடத்துகின்றன

நாட்டு ஓடுகளை பிரித்துப் பிரித்து

குரங்குகளின் கும்மாளம்

காஞ்சி சங்கராச்சாரியார் வந்திறங்கி

நெல் குவியலில் சம்மணமிட்டு  அமர்ந்து

ஆசீர்வதித்த நடுக்கூடத்தில்

வவ்வால் புழுக்கைகளின் ஆட்சி

தாத்தா ஜோசியம் சொன்ன

வீட்டுத்திண்ணையில்

சாராயம் குடித்துவிட்டு சீட்டாடும் கிராமத்தார்

வீட்டை விற்க மனம் வரவில்லை

கட்டி அழவும்  முடியவில்லை

வயதுகூடி கிழடு தட்டிப்போகிறது

எங்கள் வாரிசுள் அந்நிய மண்ணில்

எது பற்றியும்  சட்டையே செய்யாமல்.

----------------------------------





No comments:

Post a Comment