Saturday, March 30, 2024

கதை வாலு போச்சி.

 

 

 கதை   வாலு போச்சி கத்தி வந்தது         

 

 

கோரோஜனை கஸ்தூரி மாசிக்காய்  இவை நாட்டு மருந்து சாமான்கள்.  படிக்கின்ற வாசகர்களில் சிலருக்கேனும்  இந்த விஷயம் தெரிந்தும் இருக்கலாம். அவன்பெரிய மருமகளுக்குப் பிரசவம். அவர் எங்கே இருக்கிறார் என்றால் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸேஞ்லில். அவன் பெரிய பையனுக்கும் மருமகளுக்கும் அங்குதான்மென்பொருள்துறைப்   பணி. மூன்றாண்டுகள் அயல் பணி என்று அவனுக்குச் சொற்கேள்வி. எதையும் அவனிடம் விளக்கமாகச்சொன்னால்தானே அவனுக்குத் தெரியும். இந்தக்காலத்தில் வயதானவர்களிடம் யாரும் அப்படியெல்லாம் பேசுகிறார்களா என்ன, மூத்தோர்களிடம்  ரெடிமேடாய் மூன்று கேள்வி கேட்கிறார்கள்.  அவை சாப்பிட்டாயா,  தூங்கினாயா, மாத்திரை போட்டுக்கொண்டாயா  அத்தோடு சரி. அந்தக்கேள்விகளுக்கும்  பெரியவர்கள் சொல்லும் பதில்கள் எல்லாம்  அவர்கள் காதில்தான் விழுகிறதா,   அது தெரியாது.

அமெரிக்காவுக்குப்பெரிய மகனும்  அவன் மனைவியும் மார்பு முட்டும் நெம்பர் பூட்டு  சூட்கேசை உருட்டிக்கொண்டுமீனம்பாக்கத்திலிருந்து  கிளம்பிப்போனார்கள்.  ஆண்டுகள் ஐந்தானது. கொரானாவுக்கு முற்காலம் அல்லவா அவர்கள் போனது.

ஜாதகப்படி  ஒரு  பேரக் குழந்தை அமெரிக்காவில் பிறக்கவேண்டும் என்று  அவன் ஜனன ஜாதகத்தில் எப்போதோ  முடிவாகி இருக்கிறது. அதனைத் தாம்பரத்திற்கு அருகே  இரும்புலியூர் ரோஜாத்தோட்டம் சங்கர்டு தெலுங்கு  ஜோஸ்யர் அவனிடம் என்றைக்கோ  சொல்லியும் இருக்கிறார்.அதெல்லாம் யாருக்கு நினைவுக்கு வருகிறது.  ஓயாமல் அவன் மட்டும்  சொல்லிக்கொண்டேதான் இருந்தான்.   எதுதான் அவர்களுக்குத் தெரிகிறது.   ஒன்றும் தெரிவது  இல்லை.   இருந்தாலும் எல்லாம் தெரிந்துகொண்ட மாதிரிக்குத்  திரிவார்கள் அவ்வளவே.

பிரசவத்திற்கு ஒத்தாசையாய்  கூட மாட கலந்துகட்டி   இருக்க  கொள்ள  இந்தியாவிலிருந்து  ஒருவரும்  அமெரிக்கா போக முடியவில்லை. கொரானா இறங்கிய காலம். இருந்துமென்ன, அமெரிக்க வீசா வாங்குவது சாமான்யமான சமாச்சாரமாயில்லை. இரண்டாண்டுகள் காத்திருந்தால்தான் வீசா இண்டர்வியூ கிடைக்குமாம். அத்தனக்குப் பெரிய கியூ சீனச்சுவர்போல்  காத்துக்கொண்டு நிற்கிறது. அவன், அவன் மனைவி அவனது சம்பந்தி மாமா மாமி யாரும்தான் அமெரிக்கா போகமுடியாச்சூழல்.. பிரசவத்தை அவன் பெரிய பையன்தான் தெரிந்த  அமெரிக்க  நண்பர்கள்  துணையோடு பார்த்துக்கொள்ளவேண்டும். அடுத்த வீட்டுக்காரன் எப்படிப்போனால் எனக்கென்ன என்று  வேகமாய்ச் சுழலும் அமெரிக்க வாழ்க்கை . யாரையாவது சற்றுப் பல்லைக்கெஞ்சித்தான் காரியம்  முடிக்கவேண்டும். இது தவிர்த்து வேறு மார்க்கமில்லை.

அவன் சம்பந்தி திருநெல்வேலியிலிருந்து இது இதுகளை நாட்டு மருந்துக் கடையில்  வாங்கி எடுத்துக்கொண்டு வாயுவேகா கொரியர் காரனிடம்    கொண்டுபோய் சேர்த்துவிடவேண்டியது   என்கிற படிக்கு  ஒரு  அனுமார் வால் லிஸ்ட் அனுப்பியிருந்தார். அத்தனையும்  நாட்டு மருந்து சாமான்கள்தான். தாம்பரத்திலுள்ள ஒரு நாட்டுமருந்துக்கடைக்கு கட்டைப்பையை தூக்கிகொண்டு போனான். தாம்பரம்  காய்கறி மார்கெட் உள்ளே இரண்டு நாட்டு மருந்துக்கடைகள் இருந்தன. இரண்டும் பக்கத்து பக்கத்துக் கடைகள்.

சம்பந்தி அனுப்பிய லிஸ்ட்டை எடுத்துக்கொடுத்து  சாமான்கள் அத்தனையும் வாங்கிக்கொண்டான். ரூபாய் மூவாயிரத்து முந்நூற்றி முப்பத்து மூன்று  . ரூபாயை இரண்டு முறை எண்ணினான். கடைக்காரனிடம் கொடுத்தான்.  அவன் சொல்வதுதான் கணக்கு.  எந்த பொட்டலத்தில் என்ன வைத்துக்கட்டினானோ யார் கண்டார்கள். நேராக வாயுவேகா கொரியர் காரனிடம் போய் நின்றான்.  அது எங்கோ வேறு ஒரு திக்கில் இருந்தது.மருந்துப்பொட்டலங்கள்  இருந்த பையை நீட்டினான். 

ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொரியர்காரனிடம் ஒப்படைத்தான்.

வாயுவேகா காரன் ஒரு அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டு  அதனில் ஒவ்வொரு பொட்டலமாக அடுக்கினான்.அத்தனையும் பார்த்துப்பார்த்து எடுத்து வைத்தான். மூன்று பொட்டலங்களை  மட்டும் தூரமாய்  ஒதுக்கி வைத்தான்.

‘இதுகளை அனுப்ப வைக்காது’

‘ஏன்’

‘இன்ஸ்ட்ரக்‌ஷன் அப்பிடி.   இதுல பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல’

அவன் ஒதுக்கிய  அந்த மூன்று பொட்டலங்களை எடுத்துப்  பத்திரமாய் வைத்துக்கொண்டான்.

‘வேற எந்த கொரியர்ல  இதுகள அனுப்பலாம்’

‘அது ஆவாது சாரு’

மருந்து அனுப்பியது  வரைக்கும் ஆறாயிரம் ரூபாய்  கொரியர் செலவானது. அதனை எண்ணிக்கொடுத்தான்.

‘இதுக எப்ப  அமெரிக்கா போய் சேரும்’

‘அதிக படசம் பத்து நாள் ஆகும்’

அவன் கொரியர்காரன்  திருப்பிக்கொடுத்த மூன்று பொட்டலங்களை கையில் எடுத்துக்கொண்டான்.

‘இதுல என்ன இருக்கு’

‘ பொட்டலத்த  நீங்க அவுத்து பாருங்களேன்’

அவன் அந்த  மூன்று பொட்டலங்களையும் ஒவ்வொன்றாய் அவிழ்த்துப்பார்த்தான். ஒன்றில் கோரோஜனை ஐந்து பாக்கெட், அடுத்ததில் கஸ்தூரி ஐந்து பாக்கெட், அடுத்தது மாசிக்காய் பவுடர்.  பாக்கெட்டில் போட்டிருக்கும் விலையை எல்லாம் கூட்டிக்கணக்குப் பார்த்தான். எல்லாமும் சேர்ந்து ஐநூறுக்கு வந்தது.  கொரியர்க்காரன்  அனுப்ப முடியாது என்று திருப்பிக்கொடுத்ததை  வீட்டிற்குக் கொண்டு வந்து  அலமாரியில் போட்டான். பையனுக்கு போன் செய்து மருந்து பார்சல்  வாயு வேகா கொரியரில் அனுப்பிய விஷயத்தைச்சொன்னான். மூன்று மருந்துகள்  கொரியரில் அனுப்பமுடியாமல் போனதையும் பையனிடம்  மறக்காமல் சொன்னான்.

அனுப்பிய  மருந்துப் பார்சல் தனக்கு கிடைத்துவிட்டதாய் அவன் பையன் அவனுக்கு ஒரு நாள் போன் போட்டான். கொரியரில் அனுப்பமுடியாமல் போன அந்தக் கோரோஜனை கஸ்தூரி மாசிக்காய் பவுடரை என்ன செய்வது  என்ற யோசனையிலேயே இருந்தான்.

அவன் பக்கத்து வீட்டில் விவரமான  ஒரு மாமி இருந்தாள்.  எப்போதும்  பக்கத்து வீட்டில் அப்படித்தான்.அந்த மாமியிடம் யோசனை கேட்டான். அந்த மாமி  நாலு ஊர் சுற்றி  நாலும் தெரிந்தவள்.

‘’ஒத்தருக்கு பிரசவத்துக்கு வாங்கின மருந்த அடுத்தவங்களுக்கு குடுக்க முடியாது. யாரும் அதெல்லாம் ஒருத்தர் கிட்டேந்து  வாங்கிகவும் மாட்டாங்க.  கடைக்கு போயி  அவுங்க அவுங்களே  வாங்கிகணும்.    பிரசவ மருந்துன்னா அது  வேற. அது அதுக்கும் ஒரு ராசின்னு ஒண்ணு இருக்கணும். அதனால’

‘அப்ப என்ன செய்யிலாம்’

‘வாங்குன கடையில கொண்டுபோய்  குடுங்க. வேற எதான சாமான்  இருந்தா அந்த கடையிலயே நாம  வாங்கிகுலாம். நமக்கும் எம்மானோ தேவைங்க இருக்குதுல்ல’

அவன் அந்த மூன்று பொட்டலங்களையும் எடுத்துக்கொண்டு அதே தாம்பரம் மார்கெட்  மருந்துக்கடைக்குப்போனான்.

‘சார் உங்க கிட்ட பிரசவத்துக்கு மருந்து வாங்கினேன். அத வாயுவேகா  கொரியர்ல அனுப்ப போனேன். அமெரிக்காவுக்குத்தான்.  அந்தக்கொரியர்காரன் கோரோஜனை கஸ்தூரி மாசிக்காய் மூணை மட்டும் அனுப்ப முடியாதுன்னு  சொல்லிட்டான். அதான் அதுவுள உங்ககிட்ட திரும்பவும்  கொண்டாந்து இருக்கன். எனக்கு காசு எதுவும் வேணாம். உங்க கடையில எதனா சாமானுங்க வாங்கிகறன்’

‘கடையில நாங்க மருந்து சாமான  குடுத்துட்டம்னா அதோடு சரி. அத திருப்பி வாங்கிகறது எல்லாம் எப்பவும் கெடையாது’

‘இப்ப இந்த மூணையும்  நான் என்ன செய்வேன்’

‘’எடத்த காலி பண்ணுங்க, பெறவு என்ன’  கடைக்காரன் முகம் ஜிவ்வென்று இருந்தது.

அவன் அந்த  மருந்து சாமான் மூன்றையும் எடுத்துக்கொண்டு   வேண்டா வெறுப்பாக வீட்டுக்குத்திரும்பினான்.

அவன் மனைவிடம் ஆலோசனை கேட்டான்.

‘இந்த மருந்து சாமான நாம யாரு கிட்டயும் குடுத்தா வாங்கிக மாட்டாங்க. ஏன்னா பிரசவ சாமானுங்க இது’

‘என்னதான் செய்யுறது. குப்பவண்டிக்காரன் கிட்ட குடுத்துடலாமா’

‘அது தப்பு. கொழந்த பிரசவ சாமான். அத எல்லாம் குப்பையல போடுறது பாவம்’

’அப்ப கெடக்கட்டும் மூலையிலேயே’

‘யாருக்கேனும்   அந்த மருந்து உபயோகப்படவேண்டாமா ’

ஒரு வாரம் இப்படியே சென்றது. அந்த மூன்று நாட்டு மருந்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு அண்டையூரான புதுப் பெருங்களத்தூருக்குப் போனான்.  காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ஒரு  நாட்டு மருந்துக்கடையைக் கண்டுபிடித்தான்.  கடையைக்கண்டு பிடித்ததில் அத்தனை  மகிழ்ச்சி. கடையில் கூட்டமாக இருந்தது.  அவன் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.

‘சார் என்ன வேணும் சொல்லுங்க’

‘மூணு மருந்து சாமான்க இருக்கு. அத  நீங்க திரும்ப எடுத்துக்கணும்’

‘இங்க வாங்குனதா’

‘இங்க தான்  எங்கயோ வாங்குனாங்க.  ஆனா எந்த கடைன்னுதான் தெரியல’

‘அப்புறம் என்ன பேசுறீங்க. ஆ  நேரா ஒரு கடை தெரிதா.  கடை முன்னால டூ வீலர் ஒண்ணு நிக்குதுல்ல அங்க போய் கேளுங்க’

‘நீங்க எடுத்துகிட்டு எதாவது தரலாமா’

‘எட்ட நவுறுங்க எடத்த காலி பண்ணுங்க’

அவன் நொந்து போய் அந்த டூவீலர் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் மருந்துக்கடைக்குப்போனான்.

‘சார்’

‘’வரும் போதே தெரிதே. தருவி தருவில்ல வரீங்க. என்ன சேதி   மருந்து திருப்பிக்கொடுத்துட்டு வேற மருந்து  வேணும்அதான’

‘ஆமாம் சார்’

‘நானு எதனையும் திருப்பி வாங்கிகறது இல்ல. இது மருந்து பண்டம். நீங்க வீட்டுக்குப்போயி வச்சிருந்து  திரும்பக்கொண்டாறீங்க. அதெல்லாம் எப்பிடி சுத்தமா சரியா இருக்கும். சோதனைங்க  வேணாம்’

‘பாக்கெட் அப்பிடியே  பிரிக்காம இருக்குது’

‘எங்க வாங்கினிங்களோ அங்க குடுங்க’

‘அதான் எங்க வீட்டு பெரியவரு ஒத்தரு வாங்கிட்டு வந்தாரு. எந்தகடைன்னு தெரியுல. பில்லும்  இல்லே’ பொய்தான் சொன்னான்.

‘பில்லு எல்லாம் நாங்க தர்ரது இல்ல’

‘கோரோஜனை கஸ்தூரி மாசிக்கா இருக்கு. ஒரு ஐநூறு ரூபாயுக்கு எல்லாம் வரும்’

ஹஹ்ஹா என்று கடைக்காரர் சிரித்தார்.

‘சும்மா குடுத்தாலும் எனக்கு வேணாம்’

‘இத என்ன செய்ய’

‘என்ன கேட்டா’

‘ எதனா கோவில்ல வச்சிட்டு வருலாமா’

‘ரொம்ப தப்பு,  பச்ச புள்ள காரி  மருந்து  சாமானுவ அலட்சியமா பேசாதிங்க. நாமளும் புள்ளிவள வச்சிருக்கம். யாவகம் இருக்கணும்’

அவனுக்கு  இன்னும் கொஞ்சம் அச்சம் அதிகமானது. யோசித்தான்.

ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தான்.  கடைக்காரரிடம் நீட்டினான். ’ இந்த  ரூவாய வச்சிகுங்க. இந்த மருந்துவுளயும் வச்சிகுங்க.  அய்யா கொஞ்சம் மனசு வக்கிணும்’

‘’இது தான்  மொற. அந்த மருந்த இப்பிடி காட்டுங்க.’

அதை வாங்கிப்பார்த்தார்.  ஐம்பது ரூபாய் நோட்டை கையில் வாங்கினார்  ஆனால்  அதனைக் கடை கல்லாவில்  போடவில்லை.

திரும்பி வந்த மருந்துக்கு ஒரு பையும்  அவன் கொடுத்தகாசுக்கு ஒரு டப்பியும் தனித்தனியே இருந்தன. அது அதனை   அது அதனில்  போட்டார். அவன் அவர் செய்வதையே  உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இது ஏன் இப்பிடி’

‘நீங்க ஒங்க    ஜோலிய  மட்டும் பாருங்க. வந்த வேல முடிஞ்சா எடத்த காலி பண்ணுங்க’

மருந்துக்கடைக்காரர்  அவனிடம்சொன்னார்.

அவன் நிம்மதியாய்த்தான்  வீட்டுக்குத் திரும்பினான். நாம் எடுத்துப்போன அந்த மருந்தைத் தனியாக வைத்தார்  சரி.   நாம் கொடுத்த அந்தக்காசை ஏன் தனியாகப்போட்டார்.   அவன் மண்டைக்குள்  அது குடைந்து கொண்டே இருந்தது.

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment