Saturday, March 30, 2024

சிகா- புதினம்

 

பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’                 

 

. நாமா நம் வாழ்க்கையை நடத்திக்கொள்கிறோம் இல்லவே இல்லை . நமக்கு  எதுவும் பிறர் தந்திட வாராது.  நவக் கிரகங்களே மனிதர்களை ஆட்சிசெய்கிறார்களாம்.இந்தக் கிரகங்கள் தர மட்டுமே  நன்மையோ தீமையோ வரும் என்கிறார்கள்.

  எனக்குச்சொந்த ஊர் தருமங்குடி.     அப்பாவுக்கு  உள்ளூர்  சிவன்கோவிலில்  அதிகப்படி வேலை. அண்மையில் நடந்தது சனிப்பெயர்ச்சி. ஒன்பது கிரகங்கள் அவைகட்குப்  பன்னிரெண்டு வீடுகள். இந்தக்கிரகங்களே   பன்னிரெண்டு வீடுகளில்  இப்படியும்  அப்படியும்  வந்து அமர்கிறார்கள்.  நன்றும்  தீதும்  நமக்கு அள்ளித் தந்து வினைபுரிகிறார்கள்.

நவக்கிரகங்களில் ஈஸ்வரப்பட்டம் பெற்ற  சனியின் பெயர்ச்சி மட்டும் கூடுதல் கவனம் பெறுகிறது. சமீபமாய் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குச் சனி பகவான் குடிபெயர்ந்தார். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சனி வாசம் செய்வதாய்க் கணக்கு.   இந்துமதத்தில்  சைவப்பிரிவினருக்கே இந்த நவக்கிரக  வழிபாடு  சனிப்பெயர்ச்சி, இன்னும் பாக்கி இருக்கும்   மற்ற கிரகங்களின் பெயர்ச்சி  எல்லாம். வைணவக்கோவில்களில் நவக்கிரக சந்நிதி  ஏது.   

புரோகிதர் அப்பாவிடம் பேச ஆரம்பித்தார்.

‘ இது என்ன கையில என்னமோ பத்து கித்து எல்லாம்  போட்டு வச்சிருக்கு,  கைக்கு என்ன ஆச்சு’

‘சனிப்பேர்ச்சி அன்னிக்கிதான்  கையி  இப்பிடி ஆனது.  தோ பாருங்கோ இதுக்கு மேல தூக்க வரல. சரியான வலி.  உங்க  பையன் சந்துருக்கு இது சமாச்சாரம்  தெரியுமே’

‘ அப்பா  நான் அன்னைக்கே உங்கிட்ட  சொன்னேன்’ சந்துரு குறுக்கே பாய்ந்து பதில் சொன்னான்.

‘ நீ எங்கடா சொன்னே’

‘ நீ  தெவச குறிப்பு எழிதிண்டு இருந்தே, நா சொன்னேன்   நீ மறந்து போயாச்சு’

இன்னார் வீட்டில்  இன்ன தேதியில் இன்னாருக்குத் திவசம் வருகிறது என்று ஒரு குறிப்புத் தயாரிப்பதுவே திவசக்குறிப்பு.

‘ அழுத்தி சொல்லணும் ஏனோ தானோன்னு சொல்றதா.  எதுவும் அடுத்தவன் காதுல அது விழுணும். இல்லாட்டா எதுக்கு சொல்றது.’ என்றார் புரோகிதர்.

 சரியாத்தான் அவன்  சொன்னான் எனக்கும் தெரியும்’ புரோகிதர் மனைவி தன் பிள்ளைக்காகப்பரிந்துகொண்டு பதில் சொன்னார். எல்லா அம்மாவும் இதைத்தானே செய்கிறார்கள்.

‘ நீ யாவது எனக்கு சித்த காதுல விழும்படியா சொல்லியிருக்கலாம்’

‘ அத விடுங்கோ இப்ப என்ன அதுக்கு’

‘ அதெப்பிடி விடறது இந்த மாதிரிதான் எல்லா காரியமும் பண்ணுவா’

அப்பா மீண்டும் ஆரம்பித்தார்.

‘ சட்டுன்னு   நான்   இங்க  வந்த   விஷயத்துக்கு வந்துடறேன். உங்க புள்ள சந்துருவ  எனக்கு கூட மாட  கோவில் பூஜையில சித்த  ஒத்தாசையா இருன்னு  கொஞ்ச நாளைக்கு அனுப்பி வச்சேள்னா  சவுகரியம். அதுக்குன்னு  சும்மா வுட்டுட மாட்டேன் அதுக்கு சம்பளம்னு எதாவது போட்டும் குடுத்துடறேன்’

‘ நீர் என்ன பேசறீர் எம் புள்ளய கோவில் பூஜைக்கு ஒத்தாசையா அனுப்பறதா, தெரிஞ்சிதான்  பேசறீரா. நாங்க புரோகிதா.  பிராம்ணாள்ள ஸ்மார்த்தா, கோவில் சாமிய எல்லாம்  நாங்க தொடமுடியாது. கர்ப்ப கிரகத்துக்குள்ள  எந்தப் பிராம்ணனும் போ முடியாது. போகவும் கூடாது. சிவாச்சாரியா அதான் அதுக்குன்னு  நியமனம் ஆனவாதான் போகணும். நாங்க சுவாமிக்கு  அபிஷேகம்ன்னா   ஜலம் எடுத்து தரலாம் சந்தனகட்டை வச்சிண்டு  வட்டக் கல்லுல  பதமா அரைக்கலாம்.  தீபாராதனை சமயம்   அடுக்கு வெளக்கு ஏத்தித்தரலாம் நிவேத்யத்துக்கு சாதம் பிசையலாம்.  ஈயம் பூசின பித்தள தாம்பாளத்துல நிவேத்யங்கள பரப்பி  தல்ல தூக்கிண்டு  சந்நிதிக்கு சந்நிதி  கோணிண்டு நிக்கலாம்.  சுவாமிக்கு கிட்ட போமுடியாது.  நிவேத்யம்  எல்லாம் பண்ண முடியாது. தீவாராதன காட்டமுடியாது. தருமகர்த்தா புள்ளக்கி தெரிஞ்சிதுன்னா நா  பஞ்சாங்க பைய எடுத்துண்டு ஊர காலிபண்ணி ஆகணும்.  நம்ம ரெண்டு பேருமே தொலஞ்சம்’

சந்துருவும் அவன் அம்மாவும் புரோகிதர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தனர்.

சந்துருவின் அப்பா தொடர்ந்தார்.

‘ நீர்  எம்பையன  அனுப்பி வையின்னு சொல்றது சரியா.  அது வேலைக்கு ஆகுமா.  கிராமத்து ஜனங்கள் ஆத்துல கல்யாணம் காதுகுத்தி தெவசம்  இல்ல கருமாதின்னு பண்ணிவக்க  நீர்  வர்ரதுண்டா,   நீர்  அந்த   காரியத்த செஞ்சி  வச்சாலும்  உம்ம ஜனம்  ஏத்துப்பாளா. நாந்தான ஓய்  போயிண்டு இருக்கேன். அது மாதிரிதான். ஊருக்கு நாம அய்யர்ன்னு. ஒண்ணா தெரிவம்  ஆனா நாம   ரெண்டு பேரும் வேற வேற. ஒரு சவுண்டி பிராம்ணன நம்ம ஆத்துகுள்ள எண்ணைக்காவது விட்டுருக்கமா.  அவனுக்கு பேர் மட்டும்தான் பிராம்ணன் ஆத்துல ஒரு சாவு விழுந்தா அவன் வந்தாதான் பொணத்த அசமடக்கி பாக்கி காரியங்கள் ஆகும்’ கொஞ்சம் யோசித்தார். மீண்டும் அவரே தொடர்ந்தார்.

’அடுத்த ஊரு இருக்கு. வளையமாதேவின்னு. அங்க கோபாலய்யங்கார் ஆத்து உள்ள நீர் போனதுண்டா. புளியஞ்சாதம் குடுத்தா  அவாத்து திண்ணையில  உக்காந்து சாப்பிடலாம். அவ்வளவுதான்.  நாம  இந்த ஊருக்கு வந்து எத்தனயோ வருஷம் ஆச்சி. எண்ணைக்கானு ஒரு நா  அந்த அய்யங்கார் மாமா நம்ம ஆத்துல தீர்த்தம் ஒரு டம்ப்ளர் வாங்கி  சாப்டு இருப்பாரா சொல்லும். ஜலம்னு கேட்டா  உமக்கு  எனக்கும் அவா ஆத்துல வெள்ளி டம்ப்ளர்ல தீர்த்தம் கொடுப்பா. அது எதுக்குன்னு. நமக்குத்தெரியாதா. வெள்ளிக்கும் தீட்டு இல்ல. பட்டுக்கும் தீட்டு இல்ல.  நாவிதன்.  ஒரு மருத்துவனா நம்மள பாக்கறச்சே பட்டுத்துண்டு அவனண்ட  குடுக்கறம். அத  நம்ம கை மேல போட்டுட்டுதான் நம்ம நாடிய  பாக்கறான். . அய்யங்கார் ஆத்து மாமி நம்மாத்து உள்ள எட்டி பாத்து இருப்பாளா. இல்ல நம்ம ஆத்து  பொம்மனாட்டி அவ ஆத்துகுள்ள அடுப்பங்கரைக்கு எல்லாம் போயிட முடியுமா.  ரேழிய தாண்ட வைக்குமா, எந்த பாத்திரத்தையானு  அங்க தொட்டுட முடியுமா. எல்லாம் அது அது, அது அதுதான். உள்ளுக்குள்ள  மொத்து படறது நமக்குத்தான் தெரியும்.’

சந்துருவின் அப்பா சொல்லி முடித்தார்.

‘ தருமகர்த்தா புள்ள கிட் ட போயித்தான்  இதுக்கு முடிவு’ அப்பா சொல்லி நிறுத்தினார்.

‘ ஒரு சமாச்சாரம். உமக்கு தெரியாததா நா சொல்லணுமா. நீரு உங்க அப்பா அம்மா ஸ்ரார்தத்தை வருஷா வருஷம்  பண்றீர். அதுக்கு  சாஸ்திரி செதம்பரத்திலேந்து வறார். பண்ணி வக்கறார். எங்காத்து ஸ்ரார்தம் வர்ரது., அது அதுக்கு வாத்தியார் வேற. அவருக்கும் ஊரு செதம்பரம்தான்.  ஆனா அவர் வேற இவர் வேற. எங்காத்து ஸ்ரார்தத்துக்கு நீர் பிராம்ணனா வந்து சாப்பிட முடியுமா. இல்ல நாந்தான் உங்காத்து ஸ்ரார்தத்துக்கு பிராம்ணனா வந்து பிராம்ணார்த்த எலயில உக்காந்துட  சாப்புட முடியுமா. நமக்குள்ள  ஆயிரம் கோணல் இருக்கே’

இருவரும் சிறிது நேரம் மவுனம் காத்தனர்.  சந்துருவின் அம்மா இருவர் பேசுவதையும் ஆமோதித்துக்கொண்டு அங்கேயே நின்றார்.

‘ பேஷா  கோவில் தர்மகர்த்தாபுள்ளகிட்ட இந்த  சேதிய சொல்லிடும். பாக்கிய  அவர் பாத்துப்பார்’’ புரோகிதர் என்  அப்பாவுக்கு  சேதி  சொல்லி  நிறுத்தினார். சந்துரு  என் அப்பாவுக்குத் தன்னால் ஒத்தாசையாக இருக்கமுடியவில்லையே  என்று வருத்தப்பட்டான்.

‘ நா ஒத்தாசையா இருக்கேனே புள்ளக்கி தெரியவா போறது’

‘ ஏண்டா முந்திரிக்கொட்டை. தண்ணில குசு வுட்டா தெரியாம போயிடுமா. தருமகர்த்தான்னா லேசுபட்ட சமாச்சாரம்  இல்லே. அவுருக்கு ஆயிரம் கண்ணு இருக்கு. மாட்டினூட்டம்னா   ஊர்ல  எல்லாரும் கக்க பிக்கேன்னு கைகொட்டி சிரிப்பா.  அவா வேற என்னதான்  செய்வா. நீ சித்த  வாய மூடிண்டு இருடா சந்துரு’

தன் பிள்ளைக்குப் புரோகிதர் எச்சரிக்கை செய்தார்.

அப்பா தன் தலையைத் தொங்கபோட்டபடி வீட்டுக்குத் திரும்பினார்.

‘ நா சொல்றது உமக்கு   இப்ப  தப்பா தோணும். ஆனா அதுதான் சரி. தரும கர்த்தா  புள்ளக்கி  இந்த சேதி தெரியட்டும் அவர் பாத்துப்பார்.   கோவில் மணியம் பண்றவாளுக்கு இதுக்கு இன்னது பண்ணணும்னு எல்லாம் தெரியாமலா இருக்கும்’

புரோகிதர் சொல்லிவிட்டு அவர் வேலைய  பார்க்கத்தொடங்கினார்.

 அப்பா கையில் வந்த வலிப் பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய   அடுத்த நாள் சிதம்பரம் போனார்.  சிதம்பரம்தான் அருகில் உள்ள பெருநகரம். கடலூர் மாவட்டத்தின் பெரிய மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையும் அங்கேதான் உள்ளது.

கானாடுகாத்தான்  ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் வகையறாக்கள்  இங்கு கல்வி நிறுவனங்களை நிறுவினர். அன்னம்பாலிக்கும் ஆயிரம் ஏக்கர் நஞ்செய் நிலங்கள் சரசுவதிதேவிக்கு அறிவுப்பயிர் வளர்க்க கல்விக்கூடங்களாக மாற்றித்தரப்பட்டன.  இது வரலாற்றாளர் கல்லிடைக்குறிச்சி அய்யாவய்யர்  நீலகண்ட சாஸ்திரி ஆசானாய் இருந்து பெருமை கூட்டிய கல்விக்கூடம். சரித்திரத்தில்  மீனாட்சி கல்லூரியாகத் தொடங்கி  அது அண்ணாமலைப்பல்கலைக்கழகமாக வளர்ந்தது.   ஞானப்புலத்தின் பேரமைப்பாகத்திகழ்ந்த  ஒன்றைத்,   தமிழும் இசையும்  மூச்சாக எண்ணிய புண்ணியவான்களின்   வழி வழி வந்தவர்கள்  காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள். துணிச்சலும் நம்பிக்கையுமே  என்று  ஏட்டில் எழுதி  எழுதிப்பார்த்துவிட்டால்  வந்துவிடுமா என்ன. அதனைச்செயல்படுத்துவதில்தான் மானுட வெற்றி இருக்கிறது.

  நான் அப்பாவோடு கூட  சிதம்பரம் முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்குப் போனேன். 

தருமங்குடிக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் இருக்கும்  கிராமம் கத்தாழை அங்கிருந்து சிதம்பரத்திற்கு டவுன் பஸ் விட்டிருக்கிறார்கள். அதனில் ஏறித்தான் சிதம்பரம்  போய்  அப்பாவின் கையைக் காட்டி, மருத்துவக்கல்லூரி புறநோய்ப்பிரிவில் ஆலோசனை கேட்டு வந்தோம்.அந்த  டவுன் பஸ்சில் போனதற்கு டிக்கட்டுக்குக்  கட்டணம்  குறையும் என்பதுமட்டுமே காரணமில்லை நெருக்கியடிக்கும் கூட்டம் எதுவும்  இல்லாமல் பேருந்தில்  ஏறலாம் இறங்கலாம். வலது கையை வலியோடு சுமக்கும் அப்பாவை அல்லவா உடன் அழைத்துப்போகிறோம்.

சிதம்பரம் பேருந்து நிலையம் இறங்கினோம். இருவரும் போக்கு ஆட்டோ பிடித்தோம். ஆட்டோக்காரர்கள் ‘ஓ. பி, ஓ. பி, வா வா ‘ எனக்கூவிக்கூவி  அழைத்தனர். புறநோயாளிப்பிரிவைத்தான் அப்படி ஓ. பி என்று சுருக்கி  மக்கள்  செல்லமாக அழைத்தனர்.தூரத்தில் மகாத்மா கந்தியின் சிலை தெரிந்தது.சிலை நின்ற நிலையில் இருந்தது.  அதுவும் சிமெண்ட் ரூஃபுக்கு  கீழாகத்தான் அதுவரைக்கும் சரி. சிலையின் கீழாக இரண்டு கிழட்டு பசு மாடுகள்படுத்துக்கிடந்தன.

 அண்ணாமலை நகர் அமைந்த  மருத்துவக்கல்லூரி புற நோயாளிகள் பிரிவில் அப்பாவுக்கு   ஓ. பி  சீட்டு வாங்கியாயிற்று. எலும்பு   டாக்டரிடம்  அப்பா கையைக்காட்டினார். வழக்கமான பரிசோதனைகள் முடிந்தன. தோள்பட்டை உள்ளாகத்  தசை  முறுக்கிக்கொண்டு விட்டதாய்ச்சொன்னார்கள்.  வலது கை கொண்டு சனிப்பெயர்ச்சிக்குத் தேங்காய் உடைத்து உடைத்துமே இப்படி ஆகியிருக்கலாம். எத்தனையோ சனிப்பெயர்ச்சியை அப்பா பார்த்துத்தான் இருக்கிறார். தேங்காய்கள் எத்தனையோ  உடைத்து உடைத்துத்தான்காலம் ஓடுகிறது. ஆனால் இந்தமுறைதான் இப்படி விபரீதம் ஆனது.  தோள்பட்டையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் கை சரியாக ஆறு மாதங்கள்கூட ஆகலாம்  அங்கிருந்த  எலும்பு மருத்துவர் சொன்னார். அப்பா  அந்த டாக்டர் முன்பாகவே கண்கள் குளமாகி  அமர்ந்திருந்தார்..

‘ கை சரியானால் கூட  மீண்டும்  சகட்டுமேனிக்குத் தேங்காய் உடைப்பது மாதிரி கடின வேலைகள்  எல்லாம்  கூடாது. சற்றுப் பார்த்து  பார்த்தேதான் கடினமான வேலைகள் எல்லாம் செய்யவேண்டிவரும்.  வலது கை தோள்பட்டைத் தசை மிக பலவீனமாகியிருக்கிறது. அதனை மட்டும் நினைவில் வையுங்கள்’ எச்சரிக்கை செய்து  டாக்டர்  எங்களை அனுப்பினார். வலிக்குறைய மாத்திரைகள் தந்தார். ’ தோள்பட்டை அறுவை சிகிச்சையை உடனே செய்தாகவெண்டும் அதுதான் மிக முக்கியம்’  என்றார் டாக்டர். மனம் கனத்தது. அப்பாவும் நானும் தருமங்குடித்  திரும்பினோம்.

‘தருமகர்த்தா புள்ளய பார்த்து நடந்தது என்னன்னு சொல்லுங்கோ’

அம்மாதான்  அப்பாவுக்கு உத்தரவு போட்டாள்.

தருமைநாதன் கோவில் தருமகர்த்தா விநாயகம் பிள்ளையைப் போய் அப்பா பார்த்தார்.  இந்த விபரம் தேவையில்லாததுதான் இருந்தாலும் சொல்கிறேன்.பிள்ளையின் நிறமோ அட்டைக் கருப்பு.    வெள்ளையாய் ஒன்றும் உண்டு.  அது தலை முடி, வெள்ளை வெளேர் என்று நரைத்திருக்கும். பிள்ளையின் குரலில் எப்போதும் ஒரு விரட்டல் தொனி.  தருமங்குடி  இரட்டைசாரி வெள்ளாளத்தெருக்  கோடியில் இருந்தது அவர் வீடு.  கிழக்கு நோக்கிய வாயில். இரண்டு திண்ணைகள் பக்கத்திற்கொன்றாய், வாயிலில் எப்போதும் இருவர் நின்றுகொண்டு பிள்ளைக்குப் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பிள்ளை பெஞ்சொன்றில் அமர்ந்திருப்பார்.மேல் சட்டை  எப்போதுமே போட்டுக்கொள்ளமாட்டார். துண்டு ஒன்று மடி மீது குழந்தைபோல் தவித்துக் கிடக்கும். கண்ணுக்கு கண்ணாடி அணிவதில்லை. வேண்டாமே.  அவர் கண்களோ கழுகுக்கண்கள்.  பிள்ளைக் குளித்துவிட்டால்  குழைத்துப்பூசிய திருநீறு உடலெங்கும் பட்டை  பட்டையாய்க் காட்சி தரும்.

‘வாரும் குருக்களைய்யா’

‘வரேங்க ஒங்ககிட்ட ஒரு சேதி சொல்லணும்னு வந்தேன்’

‘விஷயம் இல்லாம வரமாட்டீரு’

சனிப்பெயர்ச்சியிலிருந்து   தனது வலது கை சரிவர  வேலை செய்ய வராமல் இருப்பது குறித்து ச்சொல்லிவிட்டுத்  தர்மகர்த்தா முன்பாக அப்பா  அசையாமல்  நின்றுகொண்டிருந்தார்.

‘ நீரு பாக்குறது கோவில் வேல.  வலது கைதான் உம் பூசைத் தொழிலுக்குப் பிரதானம்.  அந்த  சோத்து கை சரியா இருந்தாதான்  சந்நிதில  வேல. இல்லன்னா போயிகிட்டே இருக்கலாம். சனிப்பெயற்சி  முடிஞ்சி  அஞ்சி நாளு ஆவுது  இதுவரைக்கும்  நடந்த பூசை எல்லாம்  எப்பிடி ஆச்சி?’

‘ என் பொண்ணு கூட மாட இருந்து எனக்கு  ஒத்தாசை செஞ்சா’

‘அது எப்பிடி  ஒரு பொண்ணு கர்ப்ப கிரகத்துக்குள்ள   வரலாமா, அது  தப்பில்லையா  உம்ம பொண்ணுன்னு  இல்ல,  யாரு எந்த ராசா  பொண்ணா தான் இருந்தா என்னா?    நானு   இதுவரைக்கும்    அந்த கர்ப்பகிரகத்துக்குள்    நுழஞ்சதுண்டா?  இது விஷயம் என்கிட்டே  அண்ணைக்கே   அப்பவே  சொன்னீரா நீரு’

 ‘ஆபத்துக்கு பாவம் இல்லேன்னு சொல்லுவா. நான் தான் அங்க  கூடயே நிக்கறேன் அப்பறம்’’

‘ ஓகோ அப்பிடி போவுதா கதை,  கோவில் பூசைக்கு குருக்களா  உம்ம நேமிச்சி வச்சிருக்குது.  அது ஒரு தொழிலு. அவ்வளவுதான். நீரே  விவகாரம் எல்லாத்தையும் முடிவு பண்ணிகிறதுக்கு,  நீம்புரு  தருமங்குடி ஊருக்குப்  பெரிய  நாட்டுமையா என்ன’

‘எனக்கு  ஒத்தாசைக்கு  வேற ஆம்பள கொழந்த எதுவும் இல்ல. ஒரே பொண்ணுதானே அதான்’

சொல்லிய அப்பா எதுவும் பேசாமல் அங்கேயே அவர்முன் நின்றுகொண்டிருந்தார்.

‘இப்புறம் ஏன் நின்னுகிட்டு.   செவன்கோயில் பூசய ஒப்பேத்துன அந்தக் கதை நம்ப ரெண்டபேரோட  நிக்கட்டும். ஊர்ல  எந்த நாயுக்கும் இது  தெரியவேண்டாம்  குருக்களே  நீரு ரைட்டா போவுலாம். வேற வேலய எதனா இருந்தா பேஷா  பாக்குலாம்’

‘கோவிலு பூசை’

‘எந்தக்கோவிலு’

‘தருமைநாதன் கோவிலுதாங்க புள்ள’

‘அதுக்கு  இன்னொரு ஆளு  தேடறது பாக்குறது எல்லாம் என் வேல. அது உம்மவேல இல்ல’

‘கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா. நா எங்க போவேன்  நா கட்டிகினு வந்த எம் பொண்டாட்டி இருக்கா.    என் கழுத்த புடிச்சி திருகிப்போடுற மாதிரிக்கு   தர்மகர்த்தா  அய்யா   செய்யலாமா’

இரண்டு கைகளையும் கட்டிக்கொண்ட அப்பா பிள்ளையிடம் கெஞ்சிப்பார்த்தார்.

‘ நா  இப்ப  உமக்கு  பொண்டாட்டி புள்ள  இல்லன்னு சொன்னனா,  நீர் பாட்டுக்கு நீட்டி  பேசுறீரு’

‘எனக்கு  எஜமானர்   நீங்க   என்ன இங்கிருந்து  விரட்டி விடற மாதிரி  பேசுனா நா என்ன பண்ணுவேன், எங்க போவேன்’

‘இதுக்கெல்லாம் நா பதில் சொல்லமுடியாது’

‘ நீரு குடியிருக்குற  அந்த வீடு  செவன்கோவிலுது.,  தருமைநாதரு  பூசைக்கு அடுத்த ஆளு வந்தா, அவுருக்கு குடியிருக்க   வீடு வேணும்,  அந்த  வீட மொதல்ல காலி பண்ணிடணும்’

ஒன்றும் பேசமுடியாமல் அப்பா நின்றுகொண்டிருந்தார். கண்கள் ஈரமாகியிருந்தன.

‘அய்சா பைசா, உம்ம  கணக்க இப்பவே  தீத்துடணும் தோ  நா வரேன்’

 சத்தமாய்ச் சொன்ன தருமகர்த்தா  விநாயகம்பிள்ளை வீட்டின் உள்ளாகச் சென்றார். நீண்ட நேரம்   வாயிலுக்குத் திரும்பவேயில்லை. அப்பா கையைப்பிசைந்தபடித்  தெருவிலேயே  நின்றுகொண்டிருந்தார். 

நியூஸ் பேப்பரில்  எதோ வைத்துச்சுருட்டிக் கையில் எடுத்துக்கொண்டு பிள்ளை வாயிலுக்கு வந்தார். அவரின் முகம் கடு கடு என்றிருந்தது.

‘ கணக்க இப்பவே  முடிச்சிக்கறம். இண்ணக்கி வரைக்கும் செஞ்ச  பூசைக்கு   உமக்கு சம்பளம் குடுத்தாச்சி,  இந்தாரும்  ரூவா ஒரு ரெண்டாயிரம் இத்தோட கணக்கு சரி’

‘ தோள்பட்டயில் ஒரு ஆப்ரேஷன் செய்யணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு’

‘அதானே பாத்தன்   ஆரம்பிச்சிட்டீரா. நீரு செதம்பரம் ஓ பில தான கைய  பாக்குறீரு   அது மெடிகல் காலேஜ்தான.  பசங்க டாக்டருக்கு  அங்கதான் பழகிகுவானுக. நம்ம செலவு பெரிசா இருக்காது. காசிய கெனமா கொட்டி  குடுத்துதான அங்க  புள்ளிவளும் படிக்குது..    ராசா முத்தையா  செட்டியார் மெடிகல் காலேஜ்ல  வைத்திய செலவு  கம்மிதான்..  அங்க  ஆசுபத்திரி செலவுன்னு   ஒண்ணும்  பெரிசா ஆயிடாது.. போய்ப்பாரும்’

‘என் கை  மொதல்ல எனக்கு  சரியாவுணும் அப்புறம்தான்  வேற எதனா வேல தேடணும்.’ அப்பா தனது வயிற்றை வாயைத்தொட்டுக்காட்டினார்.

‘அது உம்ம பாடு’

‘ நா எங்க போவேன் புள்ளே’

‘ ரெண்டாயிரத்த எடுத்துக. எடத்த காலி பண்ணு.  ஒரு சேதி இப்ப உமக்கு  பெரண்டு வந்திருக்குற சனி பாத சனியா’

‘’இல்ல.  எனக்கு உடல் சனி .   ராசி   கும்பம். என் வீட்டுக்காரிக்கு  ராசி தனுசு அவளுக்குத்தான் இப்ப  பாதசனி வந்திருக்கு’

  நீர் என்ன பண்ணுவீர்.  உம்ம சம்சாரத்துக்கு  பாத சனி அதான் உம்ம குடும்பத்த இந்த  ஊர விட்டு  பேத்துடுச்சி’ என்றார் பிள்ளை.

‘எனக்கு இதுகள்ள எல்லாம் ஈடுபாடு அவ்வளவா இல்லே’ அப்பா பிள்ளையிடம் சொன்னார்.

  ஒரு  குருக்களு   அய்யிரு,  நீரே இப்பிடி  பேசுனா எப்பிடி ஆவுறது.  ஊரு காட்டுல மழை மாரி எப்பிடி பெய்யும்.  தேங்கா உடச்சீரு. கல்பூரம் காட்டுனீரு. சனீஸ்வரன்  சன்னிதில சனி பெயர்ச்சி அன்னிக்கு  சனமும் வந்துது  வருமானம் வந்துது   அத பாத்து மொத்தமா எடுத்துகிட்டீரு. ஆனா அதுல  நம்பிக்கை மட்டும்  இல்லேன்னா எப்பிடி ஆவுறது’

‘அது என் பொழப்பு   எனக்குக் குடும்பம்  இருக்கு.  வயிறு  ஒண்ணு இருக்கே’

‘ நானு என்னமோன்னு நெனச்சேன்.   தேவுலாம். ரைட்டா பேசுறீரு ஓய்  பொழச்சிகுவீரு ’ சிரித்துக்கொண்டார் பிள்ளை.

ஒரு கூலித்தொழிலாளிக்கு வேலை கிடையாது  குடியிருக்கும் வீட்டையும் காலிசெய் என்று நோக அடித்துப்பேசிவிட்டு சனிப்பெயர்ச்சிபற்றி எல்லாம்  அவரிடமே விபரம் கேட்டு பின் வியாக்கியானமும் பேச முடிகிறது. ஆகத்தான் இவர்கள்  படியளக்கும் எஜமானர்கள். அப்பா முணுமுணுத்துக்கொண்டே வீதியில் இறங்கி நடந்தார்.

‘என்னா அய்யிரு ஏதோ  பெனாத்துறீரு’

‘’என் கை  வலி   வேற ஒண்ணும் இல்லே’  அப்பா சமாளித்தார்.

‘ அதான் நீரே  சொன்னீரே உமக்கு உடல் சனின்னு அதான் உம்மை படுத்துது’ தருமகர்த்தா பிள்ளை சனிக்கிரகத்தை மறந்தாரில்லை.  

அப்பா பிள்ளை வீட்டைவிட்டுக் கிளம்பினார்.  வீட்டுக்கு வந்தார்..  பிள்ளை கையில் கொடுத்த ரூபாய் ரெண்டாயிரம் அப்பாவிடம் பத்திரமாக  இருந்தது. அப்பா தயங்கித் தயங்கி நின்றார்.

அம்மாவிடமும்  என்னிடமும், அப்பா தருமகர்த்தா பிள்ளை வீட்டில் நடந்த விஷயங்கள் மொத்தமும், சொன்னார். பிள்ளை  ரெண்டாயிரம் சம்பளபாக்கி கொடுத்தது மட்டும் சொல்லவில்லை. ஏனோ சொல்லவில்லை. அப்பா மறந்துதான் போனாரென்றால் அதுவும் சரியாக இருக்காது.

‘ நாம இப்பவே கெளம்பிடணும். இங்கிருந்து என்ன செய்யப்போறம்.. கோவில் பூஜை . அதுக்கு  ஒரு ஆளு நா பாத்துகறன் நீர் கெளம்பும்ன்னு  தருமகர்த்தா புள்ள சொன்னதே பெரிசு.   பூஜைக்கு வேற ஆள ஏற்பாடு பண்ணி குடுத்துட்டுதான் நீ  இங்கிருந்து போகமுடியும்னு அவர் சொன்னா நாம என்ன பண்ணறது’ அம்மா வித்யாசமாய்  அந்த விஷயத்தைப்பார்த்தாள்

‘இப்ப நாம எங்க போறது’ அப்பா கேட்டாள்.

‘செதம்பரம் தான போகணும் அங்கதான உங்க கையிக்கும் வைத்தியம் பாக்கணும்’

‘’ ஓட்ட   சாமான  மொத்தமா மூட்டயா  கட்டிண்டு யார் ஆத்துக்கு போறது’

’சாமானாம்  ஓட்டயாம் பேசறதப்பார்’ அம்மா முணுமுணுத்தாள்.

அப்பா அதனை லட்சியம் செய்யவில்லை.

‘திருவக்குளம் போவம். அங்க உங்க தம்பி இருக்கார் இல்லயா’

‘ இருக்கான். அவன் இது என்னடா பெரிய சொம ஒண்ணு வந்துட்துன்னு நெனப்பான்’

‘சொமன்னா சொமதான் இல்லேனா இல்லதான். தம்பி ஆம்படையா நல்லவ. அவள உத்தேசம் பண்ணி அங்க போறம். பொம்மனாட்டி மட்டும்  நல்லவளா இருந்தா ஒரு ஆம்பள  ஆயிரம் சாதிக்கலாம்’

‘அப்ப என் தம்பி கெட்டவனா’

‘நா அப்பிடி சொல்லல. ஒரு   குடும்பத்துல பொம்மனாட்டி எப்பிடி இருக்காளோ அதவச்சிதான்  எந்த  கணக்கயும்   போடமுடியும்.’

‘ எல்லாருமே பிறத்தியாருக்குத்தான் வாத்தியார். சரி அத வுட்டுடு’ அப்பா முடித்துக்கொண்டார். அப்பாவின் மனதிற்குள் ஒரு நிறைவு.

‘ ஒரு சத்த வண்டிக்கு ஏற்பாடு பண்ணணும்.  திருவக்குளம் இங்கேந்து ஒரு இருவது மைலு இருக்கும்’

அப்பாவே   தொடர்ந்து  அம்மாவிடம் சொல்லிக்கொண்டார்.

‘கொழந்த கிட்ட ஒண்ணும் கேக்கவேண்டாமா’

’கொழந்த’ என்று என்னைத்தான் சொன்னார் அப்பா.

நான் அவர்கள்  பேசிக்கொண்டதைக்கேட்டுக்கொண்டு மட்டுமே இருந்தேன். நான் திருமண வயதில் இருப்பது  அவர்களுக்கு  உள்ளாக  யோசனை.

‘பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்துட்டு தருமங்குடியை விட்டு பொறப்பட்டா மனசுக்கு பாரமில்லாம இருக்கும். ஆனா இந்த ஊர் தருமாம்பாள் அப்பிடி ஆசிர்வாதம் பண்ணலயே எனக்கு’

‘ கடவுள் எப்பிடி  ஒரு வழிய காமிக்கிறாரோ அப்பிடித்தான். யாருக்கு என்ன தெரியர்து’

அம்மா  சமாதானமாய்ச் சொல்லி முடித்தாள்.

 பக்கத்து வீட்டு உள்ளூர் புரோகிதருக்கு சதா எதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். அந்தப்புரோகிதர் பையன் சந்துரு. அவன்  முதுகுன்றம் நகரத்து கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.   புரோகிதர்  அப்பாவோடு சந்துரு ஒத்தாசைக்குப்போவதும் உண்டு. தருமைநாதன்கோவில் வேலையில்  என் அப்பாவுக்கும்  சந்துரு துணையாக வருவான் போவான்.   சுவாமி அபிஷேகதுக்குக் கோவில் கிணற்றில்  குடம் குடமாய்த்தண்ணீர் சேந்துவான்.  பஞ்சலோக விக்கிரகங்களைப் புளி கொண்டு தேய்ப்பான்.  விக்கிரகத்தைப் பளிச்சென்று ஆக்குவான். அலங்கார தீபாராதனை சுத்தம் செய்வான். கல்பூரம்  ஏற்றிக்கொடுப்பான். கோவிலில் சுவாமி அம்பாள் கணபதி  சுப்ரமண்யருக்கு சஹஸ்ரநாமம் படிப்பான்.  ஓங்கி  ஓங்கி ராகமாய்ப்படிப்பான்.  சமஸ்கிருத ஸ்லோகங்கள்  ஆனால்  அவைகளைத் தமிழில் அச்சிட்டிருப்பார்கள். உச்சரிப்பில் பிழைகள் வரத்தான் செய்யும். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த  எல்லாப்பிழைகளையும்  ரட்சித்துக் காப்பவன்தானே இறைவன்.

சிவன் கோவில்களிலெல்லாம் ஸ்மார்த்தப்  பிராமணர்கள்  சுவாமியைத்தொடக்கூடாது. என் அப்பாவோ ஜாதியில்  குருக்கள்.  ஆச்சாரிய அபிஷேகம் ஆனவர். சிவாச்சாரியர். அவர் தான் எல்லா சுவாமிக்கும்   அபிஷேகம் செய்வார். பத்திரம் புஷ்பம்  எடுத்து அர்ச்சனை செய்வார்.  சந்துரு  அருகிருப்பது பெரிய ஒத்தாசை. சனிப்பெயர்ச்சியன்றும்   அவன் தான் அப்பாவுக்கு கூட மாட உதவியாய்  இருந்தான். அவன்  இருந்தும் என்ன அப்பாவுக்கு கை  இப்படி ஆயிற்றே.

‘ மாமா   இந்த  ஊரைவிட்டுட்டு வேற ஊருக்கு   குடும்பத்தோட  பொறப்பட போறிங்களா’ அவனுக்கு  எங்கள்  குடும்ப விஷயம் தெரிந்தே இருந்தது. ’யார்தான் சொன்னார்களோ.’

‘ஆமாண்டா சந்துரு’   அடுத்தாத்து சந்துருவுக்கு அப்பா பதில் சொன்னார். சந்துருவிடம்  எப்போதும் அப்பா பிரியமாக இருப்பார்.

‘சாப்படற கையிலன்னா எனக்கு  பிரச்சனை வந்துருக்கு. என்னால சுவாமி  பூஜை காரியம் பண்ணவைக்காது ஆக நா இங்க இருந்து என்ன பிரயோசனம். இந்தக் கோவில் பூஜைக்கு வேற ஆளதான் ஏற்பாடு செய்யறார் தருமகர்த்தா வேற குருக்களும் இங்க  பூஜைக்கு வரார்‘

‘நீங்க எங்க போப்போறீள்’

‘ நாங்க செதம்பரம் போறோம். திருவக்குளத்துல என் தம்பி இருக்கான். அவன் ஆத்துல தங்கிண்டு கையை மெடிகல் காலேஜ் ஓ.பி ல காமிச்சி சரி பண்ணிகணும்.  தோள் பட்டையில சின்னதா  ஒரு ஆப்ரேஷன் இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்கா .   எனக்கு இந்தக்கை சரியாறதுக்கு  இன்னும் எவ்வளவுகாலம் ஆகுமோ’  சொல்லிய அப்பா ஒருமுறை தனது வலது கையை தடவி விட்டுக்கொண்டார்.

‘கை சரியானதும்  இங்கயே வந்துடலாம்’

‘அது எப்பிடி சந்துரு,  இங்கதான்  எனக்குப்பதிலா பூசைக்கு  மாத்தாள் வந்துடறாரே’

சந்துரு விழித்தான்.

‘டேய் அந்த பக்கிரி கோனார் இருக்காருதெரியுமோ, மாரியம்மன் கோவில் தென்னண்ட. உனக்குத்தெரியும்டா. அவர்  இருந்தா வரச்சொல்லு. அவர்தான் வண்டி மாடு வச்சிண்டு இருக்கார்.  அவருக்கு  வண்டி சத்தம் கொடுத்துடணும்.   அந்த பக்கிரி கோனார் கிட்ட  நான்  வரச்சொன்னேன் சொல்லு’’

‘ அது நீட்டா இருக்குற  கட்டவண்டியாச்சே கூண்டு இருக்காது’

  ஆத்து ஜாமான்.  மூட்டைகட்டி  அத  வண்டில  ஏத்திட்டா போறும் . திருவக்குளம்  கோவில் மேல மட விளாகம் குருக்கள் ஆத்துல எறக்கிட சொல்லிடலாம்’

‘மூட்டை எல்லாம் கட்டியாச்சா’

‘மாமி  பாக்கிங்க் வேல முடிச்சி வச்சிட்டா. எல்லாம் ரெடி. அங்க  இருக்கறது எவ்வளவோ அவ்வளவுதான

‘ நீங்க’

‘ நாங்க மூணு பேரும் கத்தாழை லேந்து செதம்பரம் போற  டவுன் பஸ்ல ஏறி போயிடுவோம்’

அப்பா பதில் சொன்னார்.

சந்துரு எங்கள் வீட்டினுள் நுழைந்து’ நிஜமாகவே மூட்டை எல்லாம் கட்டிக்கொண்டு  இருக்கிறார்களா என்று பார்த்தான். பார்த்ததும்  அவன் முகம் சிறுத்துப்போனது’

‘என்னடா இது’ சொல்லிக்கொண்டான்.

சிவன்கோவில் அருகே பெரிய நந்தவனம் இருந்தது. அதனில் சுமாராக இருபது தென்னை மரங்கள் காய்த்துக்கொண்டிருந்தன. பூஜைக்குப் பூச்செடிகள் வகை வகையாய் வளர்க்கப்பட்டு  இருந்தன. அடுக்குச் செம்பருத்திச் செடியும்  மஞ்சள் வண்ணத்தில் கொத்து கொத்தாய்ப்பூக்கும் தங்கப்பட்டிச்செடியும் காடு போல் வளர்ந்திருந்தன. நந்தவனத்துக்கு  நட்ட நடுவில் ஏற்றக்கிணறு இருந்தது.  கிணற்றோரம் அந்த  இரண்டு துளைகள் இடப்பட்ட கருங்கல் கம்பம் ஒன்று சற்று சாய்ந்து நிற்கும்.  பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச அது வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. தென்னை மரங்கள்  அனைத்தும் ஏற்றத்தண்ணீர் கொண்டுதான் உயிர் வாழ்கின்றன. காய்கள் குலை குலையாகக்காய்த்து தென்னை மரங்கள் திமிறிக்கொண்டு நிற்கின்றன. யாழ்ப்பாண ஜாதி தென்னைகள் செப்புக் குடம் என தேங்காய்களைத்தாங்கி நிற்பவையும் உண்டு. ரங்கூன் மல்லிகைச்செடிகள் சிவப்பு சிவப்பாய் மலர்க்கொத்துக்களைத் தாங்கி நின்றன. தருமைநாதனுக்கு  வில்வ பத்திரங்கள் விசேஷம் என்பதால் உயரமாய் வளர்ந்த  வில்வ மரங்கள் நான்கு இருந்தன. கொய்யா விளா என்று பழ மரங்கள் காய்த்தன.அடுக்கு மல்லிச்செடிகள் செம்பருத்தி மரங்களுக்குக்கீழாக அடர்ந்து வளர்ந்து பூத்துக்கொண்டிருந்தன. நந்தியாவெட்டை அடுக்கு ஒத்தை என்று இரு இனங்களும் ஓயாமல் பூத்தன.

சந்துரு  அன்று ஒருநாள்  அந்த தருமைநாதன் நந்தவனத்தில் இலுப்பக்கொட்டை பொறுக்கப்போனான்.  சிறுவர்கள் இலுப்பக்கொட்டைகள் பொறுக்குவது தருமங்குடியில்  வழக்கம்தான்.  வேப்பங்கொட்டைகளையும் பொறுக்குவார்கள். அவைகளக்  காசு கொடுத்து வாங்கிச்செல்ல  கட்டைவண்டியில் அல்லது சைக்கிளில்  வியாபாரிகள் வீதியில் வருவார்கள் சிறுவர்கள் தாம் பொறுக்கிய கொட்டைகளை  அவர்களிடம் காசாக்கிக்கொள்வார்கள். பெரிய தொகை ஒன்றும் வந்துவிடாது. ஏதோ கை செலவுக்கு ஏதேனும் கிடைக்கும். அவ்வளவே.

தருமங்குடியில் பெரிய இலுப்பத்தோப்புகள் இரண்டு இருந்தன. அவைகளில் இலுப்பைமரங்கள் ராட்சசனாய் வளர்ந்திருந்தன. அவை வழங்கும் இலுப்பைக்கொட்டைகள் மரச்செக்கில் இட்டு  ஆடிப் பெறும் எண்ணெய் தருமை நாதன் சந்நிதியில் விளக்கெரிக்க உபயோகமாகும். மின்சாரம் உலகை ஆளாக்காலம் ஒன்று இருந்தது. அப்படிக்கற்பனைசெய்துப் பார்க்கவும் அச்சமாகத்தான் இருக்கிறது. அனேகமாய் எல்லா வீடுகளிலும் உரலும் அம்மியும் ஆட்டுக்கல்லும் கொலுவிருந்த காலமுண்டு. சீ மெண்ணெய்  லாந்தரும் பெட் ரூம் விளக்கும் சிமிழி விளக்கும்தான் இரவு நேரங்களில் உற்றதுணை. விசேஷம் என்றால் பெட்ரொமாக்ஸ் விளக்குகள் உறுமி உறுமி எரிந்து    சபை அதிகாரம் செலுத்தும்.  விழாக்காலங்களில் அதனைத்தலைச் சுமக்க வண்ணார்கள் சும்மாடுகோலிப்  பழகியிருந்தார்கள்.

இலுப்பமரங்களில் காய்க்கும் பழங்களைத்தின்னப் பறவைகள் இரவில் எங்கிருந்தோ வரும். வவ்வால்கள் ஓயாமல் அலையும். அவை இலுப்ப மரத்து ப்பழங்களைத்தின்னும்.  எச்சமாகிய கொட்டைகளைத் தென்னமரத்துக்கீழாகப் பாய் விரித்தாற்போல் எச்சமிடும்.

சந்துரு அப்படி இலுப்பைக்கொட்டைகளைப்பொறுக்கிக்கொண்டிருக்கும்போதே  முற்றிய ஒரு தேங்காய் கீழே விழுந்தது. அதனை நாம் வீட்டுக்கு எடுத்துப்போகலாம் என்று யோசித்தான். சந்துரு என்று இல்லை தெருவில் போகிறவர்கள் யார் பார்த்திருந்தால்  என்ன அதனை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.  சந்துரு  கீழே விழுந்த தேங்காயைப்பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த நேரம் பார்த்து என் அப்பா  சுவாமிக்கு  பூ பறிக்கலாம் என்று பூக்குடலையோடு நந்தவனத்துக்குள் நுழைந்தார்.

‘மாமா தேங்கா ஒண்ணு கீழே விழுந்து இருக்கு’

‘நீ எதுக்கு இங்க வந்த’

‘இலுப்பக்கொட்ட பொறுக்கலாம்னுதான்’

‘ஆச்சா ‘

‘ அப்ப கெளம்பு’

‘தேங்காய் கெடக்கே’

‘அது உன் வேல இல்லே  நீ  கெட்ட பேரு சம்பாரிச்சிக்காதே. விநாயகம் புள்ள பாத்துட்டா உங்கப்பாகிட்ட புகார் பண்ணுவார் விஷயம் விபரீதம் ஆகும். ’இது எத்தினி நாளா நடக்குது. பையன கண்டிக்கறது இல்லயா.  ஊரா காலி மாடு மாதிரி திரிய விடறதான்னு’ ஆரம்பிச்சிடுவார். உனக்கு எத்தினி தேங்கா வேணும் நா தரேண்டா. இது வேண்டாம்’

சொல்லி சந்துருவை என் அப்பா நெறிப்படுத்தியிருக்கார்.

‘ந்ன்னா படி வீட்டுக்கு வீட்டு   கூடய தூக்கிண்டு  நின்னு அரிசி வாழக்கா வாங்கிண்டு வர்ர புரோகிதம் அப்பாவோட போகட்டும்  நீ நன்னா படிச்சிகோ  வேற எதனா ஒரு தொழிலதான் பாக்கணும் மறந்துடாதே’

சந்துரு  என் அப்பாவை எப்போதும் நினைத்துக்கொள்வான்.

நான் தருமங்குடியில் படித்தேன்.  ஐந்தாம் வகுப்புப் படித்து  நின்றுபோனேன்.  ஆறாம்வகுப்பென்றால் வெளியூர்தான் செல்லவேண்டும். தருமங்குடியில்  ஐந்தோடு சரி. அப்பா அம்மா இருவரும் எனக்குப்படிப்பு போதுமென்றார்கள்.

சந்துரு பக்கிரிக்கோனாரைப்போய்ப்பார்த்தான்.

‘எனக்கும் புள்ளகிட்டேந்து  குருக்களய்யா   பொறப்படுற சேதி வந்துது. வண்டி  மாட்டுக்கு தண்ணி காட்டுணும். ஒரு பன்ன வைக்கல்  மாடுவுளுக்கு வண்டில  வச்சிகிணும். தோ  பின்னாலேயே வர்ரேன்னு சொல்லு அய்யாண்ட’

சந்துரு தலையை ஆட்டினான். தன் வீடு வந்தான்.

தர்மகர்த்தா  விநாயகம் பிள்ளை குருக்கள் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.

‘ குருக்களே, இங்க வாரும்’

‘சொல்லுங்க புள்ள’

‘கோவில் பாத்திரங்க எடுத்து ஓரம் பண்ணியாச்சா. அதுகளை  எண்ணியாச்சா எல்லாம் சரியா இருக்குதா. வெங்கலபானை மைசூர் போகிணி  எண்ண சட்டி    எண்ணெ தூக்குங்க அடுக்கு தாம்பாளங்க   அண்டா  தவலை கரண்டிவ சாரணி  சட்டி சருவம் தேங்கா துருவி அருவாமண அஞ்சலிபொட்டி பித்தளதூக்குங்க அதுல ஈயம் பூசுனது அலுமினிய செருவங்க குண்டானுங்க  எல்லாம் கரெக்டா இருக்குணும். நாளைக்கு வேற  குருக்களு  வருவாரு அவுரு கிட்ட நா ஒப்படைக்கணும் எல்லாத்துலயும் பேருவெட்டியிருக்கும்’

’ தருமைநாதன்னு பேரு போட்டது எல்லாம் எடுத்து வச்சிருக்கன். என்னுது பாலு காச்சுற ஏனம்,, இன்னும் செலது இருக்கு, நாலு டவரா செட் டு  சாப்புடுற தட்டுவ கிண்ணம் அடுக்குவ  சில்வர்ல மற்றபடிக்கு துணி மணி ஜமக்காளம் போர்வங்க இருக்கு. அதெல்லாம் தனியா வச்சிருக்கன்’

‘இதெல்லாம் எப்பிடி போவுறது’

‘பக்கிரி வண்டிய வரசொல்லி இருக்கன்.  ஜாமான வண்டில ஏத்திட்டா நாங்க மூணு பேரும்  பஸ்லயே போயிடுவம்’

‘பக்கிரிக்கு நானும் சேதி சொல்லியிருக்கன்,   பொண்ணு இருக்கு கட்டி  குடுத்தாவுணும். அது ஒரு வேல இருக்கு’ ஆரம்பித்த தர்மகர்த்தா பிள்ளை அங்கிருந்த  என்னை ஒரு முறை பார்த்துக்கொண்டார்.

‘மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்’ அவரே சொல்லிக்கொண்டார்.

‘’ ஏ பாப்பா இங்க வா’ என்னைத்தான் பிள்ளைக்கூப்பிட்டார்.

நான் பிள்ளை அருகில் சென்றேன்.

‘என்னா படிச்சிருக்க’

‘அஞ்சாம் வகுப்பு’                                          

‘ உள்ளூர் படிப்போட சரி’

‘ தப்பில்லாம படிப்பியா எழுதுவயா’

‘ அவ அம்மாவும்  கொழந்தைக்கு  சொல்லிகுடுத்து இருக்கா. நல்லா படிக்கும் எழுதும்’ அப்பா பிள்ளைக்குப்பதில் சொன்னார்.

‘ஒரு கணக்கு போடுறன் வெட சொல்லுணும்’

நான் தலையை ஆட்டினேன்.

‘ஒரு புளியா மரத்துல நூறு காக்கா குந்தி இருந்துது. கொறவன் டொய்ன்னு துப்பாக்கியால சுட்டான். ஒரு காக்கா  தரையில சுருண்டு வுழுந்துது. பாக்கி எத்தினி காக்கா  இப்ப  புளிய மரத்தில குந்தி இருக்கும்’

‘’எல்லா காக்கையும் பறந்து போயிருக்கும்’

‘தேவுலாம் ரோசனை பண்ணுற’

அம்மா  அடுப்பங்கரை உள்ளேயிருந்து வெளி வந்தார்.

‘வாங்க புள்ள நமஸ்காரம்’

‘ ஊருக்கு கெளம்புறீங்க.’

‘வேற என்னா செய்யிறது’

‘கையை சரி பண்ணி ஆகணும் இல்லயா’

‘பீச கை கோளாறுன்னாலும் ஏதாவது ஒப்பேத்தலாம்’

‘சொல்றது சரிதான்’

‘நாளைக்கு வேற குருக்களு வராரு. ஒரு ஆளு அனுப்பி  சேதி சொல்லிபோட்டன். கண்டிப்பா  பூசைக்கு வந்துடறன்னு வதில் வந்துபோச்சி.  கூடலையாத்துரு இருக்கே  வெள்ளாத்துக்கும்  தென்னண்டகரையில அந்த ஊர்லேந்துதான்.  இப்பிடியே தெக்கு வெளியில  வயலாட்டி போனா தருமங்குடி தாண்டுனும்,. பெறவு தட்டானோடை. மேலுக்கு ஆலம்பாடி போய்  அப்பிடியே வெள்ளாறு அந்த ஆத்த  தாண்டுனா கூடலையாத்தூரு‘ சாமிக்கு பூசய பண்ணியாகணும்.  அத தள்ளி  வக்கமுடியுமா  இல்ல  நெறுத்த முடியுமா’

‘நா மாசிமகத்துக்குக் கூடலையாத்தூரு போயிருக்கன்.  அந்த ஊரு எனக்கு தெரியும். அந்த குருக்களயும் தெரியும். அவுரு காஞ்சிபுரத்து வகையறா. நாங்க திருக்கழுகுன்றம் வகையறா. ஆனா   பூஜய நெறுத்தறது அப்படி இப்பிடின்னு பெரியவங்க  நீங்க  உங்க வாயால சொல்லறதும் தப்பாச்சே. அந்தப்பாவம் வேறயா நமக்கு.  தோ  கோவிலு பாத்திரங்க  எல்லாம் பாத்தீங்களா கழுவி  செட்டா எடுத்துவச்சி இருக்கன்  சிவ சொத்து குல நாசம்பா’

பிள்ளை ஒரு முறை தன் கண்களை இடுக்கிக்கொண்டார்.

‘பொம்பளங்க  வார்த்த  தடிச்சி பேசக்கூடாது’

‘தப்பு தப்பு. வாயில வந்துபோச்சி’ அம்மா சமாளித்தாள். மீண்டும் தொடர்ந்தாள்.

‘ ஆமாம் பாத்திரங்கள்  செட்டா இருக்குது. பாத்தன். ஒண்ணும் நல்லா இல்ல. ஏகத்துக்கு  ஒடுக்கும் கிடுக்குமா கெடக்கு. ஈயம் போனதும்  அனேகம் இருக்கு ஓட்டயாயும்  செலதிருக்கு. சில்வர் ஏனமா செலத மாத்திடலாம்’

‘சாமிக்கு சில்வர் ஏனம் பொழங்குறது இல்ல’ பிள்ளை பதில் சொன்னார்.

‘ஒரு காலத்துல இலுப்ப எண்ணெய்ல எரியுற விளக்குதான் கோவில்ல  எல்லாம் வச்சம். இப்ப கரண்டு லைட்டு போட்டுறக்கம்’ அம்மா பிள்ளைக்குப் பதில் சொன்னாள்.

‘ நீங்க சொல்றதும் சரிதான். ஆனா மூலஸ்தானத்துல மட்டும் கரண்டு வெளக்கு கெடயாது.  குருக்களய்யாவைத்தவிர ஆரும்  கர்ப்பகெரகத்துள்ள போகவைக்காதுல்ல’ பிள்ளை சட்டமாய்ச்சொன்னார்.

அம்மாவும் நானும் கட்டிவைத்த  எங்களது மூட்டை முடிச்சுகளை ஒவ்வொன்றாக வாயில் திண்ணையில் கொண்டுபோய் வைத்துக்கொண்டிருந்தோம்.

‘அப்பா நீ வராதே நானே பாத்துகறன், உன் கையில பிரச்சனையை  வச்சிண்டு நீ எதுக்கு  மூட்டய எல்லாம் தூக்கரேன்னு வர’

‘ சாப்புடற கையால  நா எதயும் செய்யல’

பக்கிரி கட்டைவண்டியை  ஓட்டிக்கொண்டு வந்தான். வீட்டுவாயிலில் நிறுத்தினான்.  வண்டி மாடுகளை  பூட்டவிழ்த்து  அவிழ்த்துவிட்டான். மாடுகள் தரை மீது படர்ந்திருந்த அருகன் புற்களைக்கடித்து சுற்றும் முற்றும் பார்த்தன. மாடுகளில் ஒன்று ஆஜானுபாகுவாய் இருந்தது.

‘மாடுவ ஒண்ணுக்கொண்ணு எகன மொகனயா இருக்கு’

‘பாத்தா அப்பிடி தெரியும். ஆனா நொகத்தடியில பூட்டுனா ஒண்ணும் தெரியாது. அதுவ பாட்டுகு கொழந்த புள்ளய போவும்’ பிள்ளைக்குப் பக்கிரி விளக்கம் சொன்னான்.

‘எல்லாம் ரெடியாயிடுச்சா’

பக்கிரி ஓங்கிக்குரல்கொடுத்தார்.

‘கட்டி  வச்சிருக்குற மூட்டைவுளை ஒவ்வொண்ணா வண்டில அசமடக்கு’  தருமகர்த்தா பிள்ளை பக்கிரிக்குச்சொன்னார்.

‘புள்ள செய்யுறது ஒண்ணும் நெயாயம் இல்ல’

‘ என்ன பக்கிரி சொல்லுற’

‘ஒரு மனுசனுக்கு கையில ஏதோ பிரச்சனைன்னு அவர  இந்த ஊர வுட்டே கெளப்பிட்டிங்க’

‘தப்புதான். வேற என்னா செய்யுவ’

‘மனசுல ரவ ஈரம் இருக்குணும்’

‘சுதிமதி இல்லாம பேசாத பக்கிரி. கோவிலு  படைக்கிற அய்யிருக்கு  சோத்து கை  விளங்குலன்னா சாமி காரியம் எப்பிடி ஆவும். அப்ப  நீ என்ன செய்யுவ. வேற ஆளுதான பாக்குணும்.  அதான்.  இதுல  வேற மாத்து யோசனை எல்லாம்  என்ன இருக்கு’

‘பத்து நாளைக்கி வேற  ஒரு அய்யிரு பாக்க சொல்லுலாம், அண்டையூருல இருக்குற அய்யிர வந்து செத்த இதயும் பாருன்னு சொல்லுலாம்.’

‘ தெரிஞ்சி பேசுறயா நீ. அவுருக்கு கையில ஆப்ரேஷன் பண்ணுணம்னு செதம்பரம் ஓபில டாக்டரு  சொல்லுறாரு.  என்ன செய்யுவ. கூடலையாத்தூரு குருக்களு நாளைக்கு நம்ம கோவிலு  பூசைக்கு வர்ராரு. அவுரு வந்தாருன்னா. அவுருக்கு குடும்பம் இருக்கு. அவுரு சாமிக்கு  சோறு எங்க பொங்குவாரு எங்க மொடங்கிகுவாரு’

பக்கிரி  தருமகர்த்தா பிள்ளை சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தான்.

‘ஒரு ஆம்புள புள்ள பொறந்து இருந்தா அது ராசாவாட்டம்  குருக்களு அய்யிருக்கு இப்ப கைக்கு  ஒத்தாசையா இருக்கும். அதுதான் குடுத்து வக்கல’

பக்கிரி சொல்லிக்கொண்டான்.

‘ நம்ப கையில என்னா இருக்கு’  என்றார் பிள்ளை.

அம்மா சில துணிப்பைகளில் ஏதோத்திணித்து வைத்திருந்தாள். சில பைகளில் காதுகள் இற்றுக்கொண்டு இருந்தன.ஜமுக்காளம்  போர்வை  கோரைப்பாய் தலையணை என சிலதுகளைக்கட்டி வைத்திருந்தாள்.

‘எல்லாம் ஏத்தியாச்சி’ பக்கிரி சொன்னான்.

  வழியில தூரல் கீரல் வந்தா என்னா பண்ணுவ ஊரியா சாக்கு ஒர சாக்கு இருக்குதா இல்ல படுதா கிடுதா வச்சிருக்கியா’

‘ஒரசாக்கு தச்சி வச்சிருக்கன். அது கெடக்கு வண்டில  மழை வருதா என்ன  வருட்டும் அப்ப பாத்துகலாம்’.

பிள்ளை கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னான் பக்கிரி.

‘எங்க எறக்குணும்’

‘திருவக்குளம் போவுணும்னு சேதி. அங்க கோவிலண்ட போனா  வெடம் தெரியுது அங்க அந்த செவங்கோவில்ல மணி அடிக்கிற அய்யிருன்னு  கேட்டா சொல்லபோறங்க’ சொல்லிவிட்டு புன்னகைத்தான் பக்கிரி.

‘எல்லாம் நல்லா வெவரமா பேசுற,  கோவில்ல  மணி அடிக்கிற அய்யிருன்னு சொல்லாதே பூச பண்ணுற அய்யிருன்னு கேளு’  பிள்ளை சொல்லிக்கொண்டார். அவருக்கே சிரிப்பும் வந்தது.

பிள்ளை அப்பாவுக்கு ’ அங்க  போயினா வெவரமா இருங்க, ஆண்டவன் இருக்கான்’ சொல்லி  வழி அனுப்பினார்.

‘ஓண்ணும் புரியலங்க புள்ள’

‘கைய பதனமா பாத்துகணும்னு சொன்னன்’

பிள்ளை  அப்பாவுக்கு விளக்கம் சொன்னார்.

அப்பா தருமைநாதன் கோவிலை நோக்கி ஒரு கும்பிடு போட்டு’ அப்பா தருமைநாதா அம்மா தருமாம்பா நாங்க செதம்பரத்துக்குக் கெளம்பறம்.  நீங்கதான்  இனிமேலுக்கும்   எங்கள பத்திரமா  பாத்துகணும்’

 அம்மாவும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். அப்பா கையில் ஒரு துணிப்பை வைத்துக்கொண்டிருந்தார்.

‘ கை ஜாக்குரதை இன்னும் கொற காலம் இருக்கு’ பிள்ளை  அம்மாவிடமும் எச்சரிக்கையாய்ச்சொன்னார்.

‘ பக்கிரி,  வண்டி சத்தம் எவ்வளவு பேசிருக்க’

‘ புள்ள  நானு    குருக்கள் அய்யாகிட்டபோயி  வண்டி சத்தம்  பேசுறதா,  அய்யா குடுக்கறத  நா வாங்கிகுவன்’

‘அவுருகிட்ட எதுவும் வாங்கிகாதே ஆவுற வண்டி சத்தத்த  நா குடுத்துடறன்’

பிள்ளை பக்கிரியிடம் சொன்னார்.

‘ ஊரைவிட்டு அய்யிர . கெளப்பிடுவிங்க  அதுக்கு வண்டி சத்தமும் குடுப்பிங்க’

‘தருமைநாதன்ல என்ன  குடுக்க சொல்றான்’

‘இதுல எதுக்கு   அந்த தருமைநாதரு எல்லாம்  வம்புக்கு  இழுக்கிறீங்க புள்ள’ பக்கிரி வெடுக்கென்று பதில் தந்தான்.

அப்பா பக்கிரியை அழைத்தார்..

‘ பக்கிரி  செதம்பரம் போயி திருவக்குளம் போயிடணும். அந்த பாசுபதேஸ்வரரு கோவிலு பூஜை என் தம்பிதான் பாக்குறான்  பேரு கந்தசாமி குருக்களு. அவன் வீடு கோவிலுக்கு  மேற்கால வீதி.  மையமான வூடு. கெழக்க பாத்தாபுல இருக்கும்.வீடு வாசல்ல ஒரு வேப்ப மரம் உசந்து நிக்குது. அதான் அடையாளம். யாபகம் இருக்கட்டும்’

‘மரத்த யாரும்  வெட்டியிருந்தா இல்ல மரமே உழுந்து இருந்தா’ பக்கிரி  சிரித்துக்கொண்டே சொன்னான்.

‘ வாயில வெரல வச்சா கடிச்சிடுவ நீ’

அப்பா சிரித்துக்கொண்டார்.

‘நீங்க மூணு பேரும் இன்னும் செத்த நாழிக்கெல்லாம் செதம்பரம் பூடுவீங்க. அங்க திருவக்குளத்து உங்க தம்பி வூட்டுக்கு  எனக்கு மின்னாடியே போயிடலாம் நீங்க தயாரா இருங்க .  வண்டி ஜாமான எறக்குணும். அப்புறம் நா  வண்டிய கெளப்பிகினு  தருமங்குடிக்கு வருணும்’

‘பதனமா போய்வாங்க, அப்ப அப்ப தருமங்குடிக்கும்  அய்யா  நீங்க வந்தும் போவுணும் நெனப்பு இருக்கட்டும்’

எங்களைப்பார்த்துக்கூறிய  தருமகர்த்தா  பிள்ளை குருக்கள் வீட்டுச் சாவியையும் கோவில் சாவியையும் வாங்கிக்கொண்டு தன் வீடு நோக்கிப்புறப்பட்டார்.

 வீட்டு வாயிலில்  ஆகாயம் தொட்டு நின்று இருந்த  அரச மரத்தையும் அதன் கீழ் இருக்கும் பிள்ளையாரையும் எட்டு போட்ட மாதிரிக்கு இருக்கும்  நாகர் சிலையையும் அப்பா  ஒரு சுற்று சுற்றி வந்தார். நானும் அம்மாவும் அப்பாவையே பார்த்துக்கொண்டு நின்றோம்.

‘எல்லாம் மனசுதான்’ அப்பா சொல்லிக்கொண்டார்.

அரச மரத்தோடு இணைந்து இருந்த  அந்த வேப்பமரத்திலிருந்து ஒரு இணக்கு வேப்பிலை பறித்து பக்கிரி கட்டை வண்டியில்  செறுகிவிட்டார்.

எதிரே இருந்த கருமை மாரியம்மனைப்பார்த்துக்கொண்டார்.

‘நாம பொறப்படலாம்’

பக்கிரி   வண்டி மாடுகளை ஒவ்வொன்றாய் அழைத்துவந்து வண்டியிடம் நிறுத்தினான்.  வண்டியின் நுகத்தடியைப் பூட்டாங்கயிற்றைச் சரிசெய்தான்.

 

 

 நானும் அப்பா அம்மாவோடு நடந்துகொண்டிருந்தேன்.

‘ நாம அந்த கத்தாழை செதம்பரம் டவுன் பஸ் பிடித்தாக வேண்டும்’

எதிரே வாகடம் காசி வந்துகொண்டிருந்தார். காசி தருமங்குடி கிராமத்தில் மாட்டு வைத்தியர்.  வாகடம் படித்தவர். அப்பாவுக்கு காசியை  ரொம்பவும் பிடிக்கும். இருவரும் நேரம் போவதே தெரியாமல்  வீட்டுத்திண்ணையில் பழங்கதை ஊர்க்கதை பேசிக்கொண்டே இருப்பார்கள்.

‘ சாமி கெளம்பிடிச்சி போல’

‘ஆமாம் காசி அப்புறம் என்னா செய்யுறது’

  ஒவ்வொரு அஸாமிக்கும்  குடிக்க தண்ணியும் குந்த நெழலும்  எந்த எந்த ஊர்ல எவ்வளவு நாளைக்குன்னு  மேல இருக்குற அவனுல்ல  ஒரு கணக்கு வச்சிருக்கான். நீனும் நானும் என்ன செய்ய இருக்கு’

வாகடம் காசி சொல்லிக்கொண்டே எங்களோடு நடந்தார்.

‘பக்கிரி கோனார்  சத்த வண்டில ஜாமானுவ வருது நாங்க பஸ்ல மொதல்ல போறம்’

‘ போறது எவ்விடம்’

‘ திருவக்குளம் செதம்பரத்துக்கு கெழக்கால இருக்கு’

‘அங்க இருக்குறது யாரு’

‘தம்பி என் தம்பிதான்’

‘ எப்பவோ ஒருமொற  பாத்து இருக்கன்’

நாங்கள் மேலத்தெரு வழியாக நடந்து கொண்டிருந்தோம்.  மேற்குப் பார்த்து இருந்த நாகமணிந்த விநாயகர் கோவில் முன்பாக அப்பா நின்றார்,’ புள்ளயார பாத்துகோ’ என்றார்.

விநாயகர் கோவில் மதில் சுவரில் பதிந்து வைக்கப்பட்டுள்ள  பித்தளைக்குட உண்டியலில் அப்பா ஒரு பத்து ரூபாய் நோட்டை  நுழைத்து பத்திரமாகப்போட்டார். மேல் மூடியை ஒரு தட்டு தட்டினார்.

’அப்பா கோவில் உண்டியலில் காசு போட்டு நான் பார்த்ததே இல்லை. அப்பா கூட  இப்படி காசெல்லாம் போடுவாரா’ என்னை நானே என்னக்கேட்டுக்கொண்டேன்.  பத்து ரூபாய்  பிள்ளையாருக்குப்போட்ட அப்பா ஏதோ சொல்லிக்கொண்டார்.பத்து ரூபாய் போட்டது அதிகம் என இருக்கலாம்.

‘எல்லாம்   இந்த நாகமணிந்த புள்ளயார்தான் எனக்கு’

வாகடம் காசி என் அம்மாவைப்பார்த்தார்.

‘புள்ளயார் ஒன்ன   ஊர வுட்டு கெளப்பிட்டாருல்ல நெயாயமா’ அவரே வினா வைத்தார்.’

’ அய்யிரூட்டம்மா   பொட்ட புள்ள பத்திரம்.   நாம வயித்துல நெருப்பு கட்டி கிட்டு வச்சிருக்கணும். கட்டிகுடுக்குற வயிசு  புள்ள சாக்குறத  தெரிதா. ரவ வெல்லத்த காட்டி  எந்த நாயாவது இட்டுகினு பூடுவான்.  பெறவு அந்த  புள்ள சந்தில நிக்கும். அய்யோன்னா வருமா அப்பான்னா வருமா’

 அம்மாவுக்குச் சொன்னான்.

நானும் காசியை ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.

‘புத்தியா இருந்துகணும்  பாப்பா கண்ட நாயுவ  கிட்ட வரும் வாலாட்டும்  மோந்து மோந்து  பாக்கும்  நாம பதனமா இல்லன்னா மோசம் போயிடுவோம். நம்ம பத்ரம் நம்ம கையில இருக்கோணும்’

   பத்திரமா  இருக்கேன்’  நான் வாகடம் காசிக்குப்பதில் சொன்னேன்.

‘சோத்துல நாயுவ வா வக்கும் அந்த  நாயுக்கு என்ன நஷ்டம்’

வாகடம்  காசி சொல்வதைக்கேட்டபிறகு நிறைய விஷயங்களை  அனுபவத்தில் அவர் பார்த்திருக்கலாம் என்று நினைத்தேன்.

காசி என்ன சொல்ல வருகிறார் என்பது ஏதோ புரிந்தது. அம்மா என்னை ஒரு முறை உற்றுப்பார்த்தாள்.

‘ அய்யா  அந்த  தருமகர்த்தா புள்ள  எதுவும் காசு குடுத்தாரா’

’ நா  பூச செஞ்சது வரையில்  என் சம்பளக் கணக்கு பாத்தாரு இண்ண வரைக்கும் சம்பளம் வந்துடிச்சி’

‘எம்மாம்’

 ரெண்டாயிரம்’

‘அது போவுது இதாவது கையில வந்துதே’

அம்மா அப்பாவைப்பார்த்தாள்.

அப்பா சட்டை ப்பையை ஒரு முறைத்தொட்டுப்பார்த்துக்கொண்டார்.

‘உன்கிட்ட  மொதல்லயே சொல்லியிருக்கணும். மறந்தே போனேன்.’

‘எப்பிடி மறக்கும்’

‘அவர் வீட்டக்காலி பண்ணு. நீ  வேற எடம் பாத்துகன்னு’ சொன்னார். அதுல நா ஆடிப்போயிட்டேன்’

‘தம்பிக்கு நாம  கஷ்டம் தரப்போறமே.  கையில இருக்கட்டும்னு யோஜனையோ’

நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள் அம்மா.

‘ரொம்ப யோஜன பண்ற நீ. அந்த அளவுக்கு  எல்லாம்  கோவில்ல  மணியடிக்கிற நேக்கு எட்டுமா என்ன. ஏதோ மன சங்கடம் மறந்துட்டேன் என்ன  விட்டுடுப்பா ரொம்ப படுத்தாதே’

அப்பா சொல்லிக்கொண்டார். அப்பாவைப்பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.  இந்தக்காசும் பணமும் மனிதர்களை எப்படி எப்படி  எல்லாமோ யோசிக்க வைத்துவிடுகிறது.

‘ எல்லாருக்கும் அப்பிடித்தான் இருக்கும்  இப்ப அது கையில பத்திரமா இருக்குதானே’

‘இருக்கு இருக்கு .’

‘தம்பி ஏதும் கேட்டா கொடுக்கணும். அவன் கேக்க மாட்டான் எனக்குத்தெரியும்’

‘நாம அங்க தங்கறம் அவுங்களுக்கும் நம்மால செலவு இருக்கு. நாமளும் கொடுக்கணும் நம்மால முடிஞ்சத கொடுக்கணும்’

வாகடம் அப்பா பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தார்.

 ’உங்க கையி சீராவுணும் மொதல்ல. ரவ  காசு  எப்பவும் கையிலயும்  இருக்கோணும்.  எதயும் நெதானமா  யோசிச்சி செய்யுங்க சாமி ’

வாகடம் இருவரையும் பார்த்துச்சொன்னார்.

பட்டினத்தான் வாய்க்கால் சிமெண்ட் மதகில்  தருமங்குடி நாவிதன் நாகலிங்கம் உட்கார்ந்திருந்தார்.

‘சாமி கெளம்பிட்டாரு போல’

‘ சாமி நம்ம ஊரவிட்டே போவுது’

நாகலிங்கத்துக்கு வாகடம் பதில் சொன்னார்.

‘ சோத்து கை  அய்யாவுக்கு  இன்னும்  சரியா வல்லியா’

‘ அது ஏன் கேக்குற  நாகு.  சின்ன ஆபரேஷன் பண்ணணுமாம் கையில. அதுக்குத்தான்  குடும்பம் செதம்பரம் போவுது’

‘ நம்ம ஊரு கோவிலு பூச’

‘கூளாத்தூர் அய்யிரு இந்த அய்யிருக்கு  பர்த்தியா  வரார்னு கேழ்வி’ வாகடம்  கேள்விக்கு விடை சொன்னார்.

‘ நானு போயி வர்ரேன்  நாகு பாத்துக’

    நானு என்னாத்த பாக்குறது.  என்னால கோவில்ல  சாமிக்கு  பூசயா பண்ண வைக்கும்’

‘அடி செருப்பால  வா வார்த்த  கோணலா   வருது.  நீ  வார்த்தய  மொத சுருக்குணும்’

வாகடம் நாகலிங்கத்திற்குச் சொன்னார்.

‘சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னன் எனக்கு தெரியாதா’  நாகலிங்கம் முடித்துக்கோண்டார்.

‘இப்புறம்  நம்ம குருக்களு  அய்யிர எப்பம் பாக்குறதோ’ சொல்லிக்கொண்டே தருமங்குடி மேலவெளி நோக்கி நாகலிங்கம் நடக்கத்தொடங்கினார்.  நாகலிங்கத்தின் வெள்ளாடுகள் சில  தூரத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. அதுகளைப்பார்த்துக் கொண்டுதான் நாகலிங்கம் மதகின் மீது அமர்ந்துகொண்டிருக்கலாம்.

’கத்தாழை பஸ் வர்ர நேரமா’

‘ஆமாம் காசி அதுலதான் நாங்க போறம்’

‘எதுல நாலு காசு மீறும்னு பாத்தாதான் குடும்பம்’

‘காலுக்கு செருப்பு வாங்கிப்போட முடியாம மேலுக்கு ஒரு சட்டதுணி வாங்கிக முடியாம கஞ்சி குடிச்சா போதும்னு  ஆயிரம் ஆயிரமாய்  சனம்  பூமில கெடக்கு.  எந்நேரமும்   ஏரோப்ளேன்லயே பறக்குற சனமும்,  மண்ணயே  தங்காலால  மெறிச்சிபாக்காத சனமும்  இதே பூமில ஏகத்துக்கு   இருக்குது.’ என்றார் அப்பா.

‘நானு காலுக்கு செருப்பு போடுறது இல்ல’

‘ வாங்க முடியல அது சொல்லு’

வாகடம் காசி ’ஹஹ்ஹா’ என்று சிரித்துக்கொண்டார்.

தருமங்குடி கிராம சுடலையைத்தாண்டி நால்வரும் நடந்துகொண்டிருந்தனர்.

தருமங்குடி கிராமப் பேருந்து நிறுத்தத்தில் நான்கைந்து பேர்  பயணத்திற்குத்தயாராக நின்றுகொண்டிருந்தனர்.

‘கத்தாழை பஸ் வந்துதா’

வாகடம் அவர்களை விசாரித்தார்.

‘ கத்தாழை பஸ் கத்தாழைக்கு போயிருக்கு. அனேகமா வர்ர நேரம். வந்துபுடும். நாங்களும்  அதுக்குதான்  வெயிட் பண்றம்’  அவர்கள் பதில் சொன்னார்கள்.

தருமங்குடிக்கு  வடக்கே உள்ள ஆராபுரி ஏரியின் முதல் மடை வாய்க்கால் சாலையை கீழாகக்கடந்து  தண்ணீர்  தருமங்குடிப் பக்கமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

‘அந்த மதுவுல குந்துங்க’ என்றார் வாகடம்.

நானும் என் அம்மாவும் சிமெண்ட்  மதகுக்கட்டையில் அமர்ந்துகொண்டோம்.

‘ஆ வண்டி வர்ரது’

‘ஆமாம் பக்கிரி கட்ட  வண்டிதான் வருது’

‘பக்கத்து வூட்டு  பஞ்சாங்க அய்யிரு  மொவன் கூட வண்டில குந்தியிருக்கு’

‘ ஆமாம் சந்துரு இருக்கான்’

‘இவன் எதுக்கு வர்ரான், அவன் அப்பாவுக்கு  சேதி தெரியுமா’

அம்மா எழுந்து அப்பாவிடம் சென்றாள்.

‘ஆமாம் சந்துரு எதுக்கு வர்ரான்’

‘ அதான் எனக்கும் யோசனையா இருக்கு’

‘ரோடு வரைக்கும் வரானா என்னமோ’

பக்கிரிதான் ஓட்டிவந்த  வண்டியை நிறுத்தினார்.

‘வேற சேதி எதனா’

‘ நீ வண்டிய ஓட்டிகினு போ அதான்  சேதி ‘   ஏ சந்துரு நீ எறங்கிடு, உங்க அப்பா உன்ன தேடுவார்’

‘ அப்பா கிட்ட சொல்லிட்டேன்.’

‘ வண்டியில  போயிட்டு  அதுலயே திரும்பி வரயா’

‘சாமி அந்த  சின்ன அய்யிரு வருட்டும் நானுதான் கேட்டேன் வர்ரியான்னு. வரேன்னு சொல்லிச்சு. எனக்கு பேச்சுத்துணைக்கு ஆளு வேணும் இப்ப இதுல  என்ன ஆயிபோச்சி,  எங்கூட வரப்போவுது நானே தம்பியை திரும்ப இட்டாந்துடுவேன்’

‘இது என்ன வம்பு அந்த மாமி ஏதும் சொல்வாங்க’

‘ யாரும் ஒண்ணும் சொல்லமாட்டங்க நானேதான் வரேன். அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டன்’

‘ஓட்டு ஓட்டு வண்டி போவுட்டும் எதுக்கு நிப்பாட்டி கிட்டு பேசிகிட்டு,  பக்கிரி வண்டிமாட்ட  முடுக்கு’  வாகடம் சொன்னார்.

‘அதுவும் சரிதான்’ சொல்லிய பக்கிரி வண்டியைச் சற்று  அதிர்ந்து ஓட்டத்தொடங்கினார்.

அப்பா தன் சட்டைப்பையிலிருந்து இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுத்தார். சனிப்பெயர்த்தி வருமானம் இன்னும் கொஞ்சம் பாக்கியிருந்தது.

ஒன்றை பக்கிரியிடம் கொடுத்தார்.’ வழியில சாப்புட கொள்ள இது  இருக்கட்டும்’

பக்கிரி சந்தோஷமாய் வாங்கிக்கொண்டார்.

‘ சந்துருவை கவனிச்சிக பக்கிரி’

‘ இருக்கட்டும் அய்யா நானு பாத்துகறேன்’

வண்டி சிதம்பரம் சாலையில் செல்ல ஆரம்பித்தது

மற்றொரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து’ இத வச்சிக காசி’ என்றார் அப்பா.

‘எனக்கு எதுக்கு சாமி இம்மாம் பெரிய தொக,  நீ வச்சிக ஒனக்கு செலவிருக்கு, ஒரு பத்து ரூவா கொடு அது வெள்ளம்’

அப்பா  அந்த ஐம்பது ரூபாயை பத்திரமாக  வைத்துவிட்டு ஒரு  பத்து ரூபாய் நோட்டை   எடுத்து  காசியிடம்  கொடுத்தார்.

‘இது போதும்  இதுதான்  ரைட்டு’  சந்தோஷத்தில் காசிக்குப்பல் அத்தனையும் வெளியில் வந்தது. வெற்றிலை போட்டக்காவிச் சிவப்பும் வெள்ளையுமாய் பற்கள்  அத்தனையும் தெரிந்தன.

‘’  அய்யாவ மறந்துடாத காசி’ என்றாள் அம்மா.

சிதம்பரம் பஸ் ஏறுவதற்குத் தயாராக இருந்தவர்கள்  சட்டென்று பைகளைத்தூக்கிகொண்டு  ரெடியானார்கள்.

‘ வண்டி வருது’ என்று யாரோ குரல் கொடுத்தார்.

‘ எல்லாம்  பதனமா போய் வாங்க. நானு செதம்பரம் வந்தா அப்பிடியே ஒரு எட்டு திருவக்குளம் வருவன். அய்யாவ பாப்பாவ பாக்குணும்னுதான்’

‘ கண்டிப்பா’  அம்மா சொன்னாள்.

வாகடம் காசி,  அப்பாவை கையை பிடித்து  மெதுவாகப் பேருந்தில் ஏற்றிவிட்டார். 

அம்மாவும் நானும் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டோம். அப்பா எங்களுக்கு முன் சீட்டில் உடகார்ந்துகொண்டார்.

‘ ரைட் ரைட்’

நடத்துனர் ஆணையிட வண்டி  சிதம்பரம் தார்ச்சாலையில்  நகர ஆரம்பித்தது.

வாகடம் காசியை திரும்பிப்பார்த்தேன். வண்டியின் பின்பக்கக்  கண்ணாடி வழியாகத்தான்.  தூரத்தில்  சிறிய உருவாகத்தெரிந்தார். பின் மறைந்து போனார்.

பஸ் செவிட்டு மதுகு என்று செல்லமாய்  அழைக்கப்படும் அந்த சிமெண்ட் மதகைத்தாண்டி வளையமாதேவியைத்தொட்டுக்கொண்டிருந்தது. பருத்த தூங்கு மூஞ்சி மரங்கள் மதகின் இருபுறமும் இருந்தன. அவைகளில் கருடக் கழுகுகள் இரண்டு மூன்று சிறகு விரித்து விரித்து எழுவதும் அமர்வதுமாக இருந்தன. பேருந்து வேகமெடுத்தது.

’உங்க தம்பி என்ன சொல்வாரோன்னு  ஒரு  ஓரத்தில அச்சம் இருக்கு

‘இருக்கும் இருக்கட்டும்’

நான் அப்பா என்ன சொல்லவருகிறார் என்பதைக்கவனித்தேன்.

‘இப்பிடி பேசினா எப்பிடி’

‘ தோ பாரு எனக்கு கையில ஆப்ரேஷன் ஆகணும். அதுவும் செதம்பரம் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியில ஆகணும். பக்கத்துல திருவக்குளம்.  திருவக்குளத்துல இருக்குற அவனுக்குத்தெரியாம இது எப்பிடி  நடக்கும். அவன் கிட்ட ஒத்தாசை கேக்காம நாம வேற என்னதான் பண்ணமுடியும்’

‘அவர் என்ன சொல்வாரோன்னு’

  நீதான் தம்பி ஆத்துகாரி ரொம்ப ரொம்ப  நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்தே அதையும் பார்க்கணும்தானே’

அப்பா அடித்துச்சொன்னார்.

‘சீட்ட வாங்கிகிட்டு பேசுலாம்’ கண்டக்டர் குரல் உயர்த்திப்பேசினார்.

‘ மறந்தே போனேன்  மூணு செதம்பரம்’

டிக்கட் வாங்கும் வேலை முடிந்தது.

‘ சீட்டு பத்திரம் நா எப்ப வேனும்னாலும் கேப்பன்’ கண்டக்டர் உத்திரவு போட்டுவிட்டு ஒருமுறை சிரித்துக்கொண்டார்.

வளையமாதேவி பெருமாள் கோவிலின் கோபுரம் தெரிந்ததை பார்த்து ஒருமுறை அப்பா  பெருமாளே என்று கும்பிட்டுக்கொண்டார்.

‘ எல்லாத்துக்கும் நீதாண்டா நாராயணா’

தனது சரணாகதியை ஒங்கிச்சொன்னார்.

பேருந்து எறும்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தது. எறும்பூர் ஏரியில் பனைமரங்கள் அடர்ந்து  வரிசையாக நின்றுகொண்டிருந்தன. பனைமரங்களுக்குக்கீழாக ஆடுகளும் மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. மாடு ஆடு மேய்ப்போர் தலையில் முண்டாசு கட்டியிருந்தனர். முண்டாசு வெயிலுக்கு இதம் தருவதாக இருக்கலாம்.

ஏரி முழுவதும் ஆக்கிரமித்து  விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆயிரம் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டால்   ஒரு ஏரியில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அரசியல்வாதிகளுக்குத்தான் அதன் உள்விஷயங்கள் அத்துப்படியாகும். எறும்பூர் ஏரியின்  கிழக்குக் கரை மட்டுமே சற்று ஜீவனோடு இருந்தது. மற்ற கரைகள் சிறுத்துப்போய் இருந்தன.

சாலையில் பெண் குழந்தைகள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பள்ளிக்குச்சென்றுகொண்டிருந்தார்கள். நம்மால் பள்ளிக்கூடம் சென்று தொடர்ந்து படிக்கமுடியாமல் போனதே என்று எனக்கு  மனம் சங்கடப்பட்டது. தருமங்குடி பள்ளியில்தான் படித்தேன்..  அத்தோடுசரி.  பிறகு அப்பாதான் என்னை வேறு பள்ளிக்கு அனுப்பவில்லை.

‘ குருக்களாத்து பொண் குழந்தைன்னா  சுவாமி நிவேத்யத்துக்கு  பொங்கல் சுண்டல் கலவ சாதம் பண்ணத்தெரிஞ்சாபோறும்’

அம்மா எனக்குச்சொன்னது. அம்மாவின் அம்மா  அவர்களுக்குச்சொல்லியிருப்பார்கள். அதையே என்னிடம்  அம்மாவும் சொல்லியிருப்பார்..

’தோ பாரும்மா சைக்கிளு ஓட்டிண்டு பசங்க ஸ்கூலுக்கு போறாங்க’

‘ஆமாம் நன்னாதான் இருக்கு’

‘ நீதான் என்ன ஸ்கூலுக்கு அனுப்பல’

‘ஆச்சி பத்துவருஷம் ஸ்கூல விட்டு நின்னு. இப்ப பேசறே’

அப்பா நானும் அம்மாவும் பேசுவதைப்பார்த்துக்கொண்டேயிருந்தார்.

‘ நாம போப்போறமே திருவக்குளம் அதுக்கு இப்ப அண்ணாமலை நகர்னு  பேரு. பெரிய பெரிய காலேஜ் இருக்கு. அங்க பாத்தேன்னா எத்தனை கொழந்தைகள் என்னன்ன படிக்கறதுன்னு தெரியும். ஆயிரம் ஆயிரமா பசங்க படிக்கற எடம் அது. நாம  ஆஸ்பத்திரில ஓ பி ன்னு  சொல்ற எடத்துல கை வைத்தியம் பண்ணிக்க போறமே அங்கயும்  பசங்க டாக்டருக்கு படிக்கறா எவ்வளவோ பேரு.’

நான்  அப்பா பேசுவதைக்கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

‘குறுக்கு ரோடு   குறுக்கு ரோடு சட்டுன்னு எறங்கு’ கண்டக்டர் பயணிகளுக்குக் கட்டளைதந்தார்.

‘இதுதான் குறுக்கு ரோடு. நேரா போனா  செதம்பரம். பீச்ச கை பக்கம்  போனா மெட்ராஸ்.  சாப்பிடற கை பக்கம்  போனா கும்பகோணம்’

‘முதுகு பக்கம் முதுகுன்றம்’  நான் அப்பாவோடு சேர்ந்துகொண்டேன்.

‘ஒரு எம் ஜி ஆர் சிலை குறுக்கு ரோட்டின் மையமாக நின்றுகொண்டிருந்தது.

‘எம் ஜி ஆர் செலயப்பாரு’

’பாத்தேன்’ என்று அம்மாவுக்குப்பதில் சொன்னேன். கரும்பு சுமை ஏற்றிக்கொண்ட லாரிகளும் டிரைலர் பூட்டிய டிராக்டர்களும் வரிசையாக சென்றுகொண்டிருந்தன. சேத்தியாதோப்பு அருகே ஒரு சர்க்கரை ஆலை நிறுவியிருக்கிறார்கள். அந்த ஆலையை நோக்கித்தான் கரும்புச் சுமைகள் அணிவகுத்துச்செல்கின்றன.

புவனகிரி இன்னும் பத்து கிலோமீட்டர் இருக்கலாம். சிதம்பரம் செல்லும் சாலையிது. சாலையின் இரு புறமும் வயல்களில் நெல்லும் கரும்பும் பயிர் செய்துள்ளார்கள்.

‘ வீராணத்து தண்ணி,  அதான் அந்த காவேரி ஜலம் சேத்தியாதோப்பு வெள்ளாற்று அணைக்கு வரும்.  பெறகு  வெள்ளாறு ராஜன்னு ஒரு பெரிய வாய்க்கால் வழியா இந்தப்பகுதிவர்ரது. அதான் வெள்ளாமை இங்க  இப்படி ஜோரா இருக்கு’

அப்பா என்னிடம் சொல்லிக்கொண்டார்.

‘இது நம்மூருக்கு எல்லாம் வராதா’

‘அது எப்பிடி வரும் நம்மூர் இங்கேருந்து  மேற்கென்னா இருக்கு. அது மேடு  இங்க இது  பள்ளம். தண்ணி மேட்லேந்து பள்ளத்துக்குதானே வரும்’

‘ நமக்கு’

‘ மணிமுத்தாறுதான். அதுல காவேரி மாதிரி ஜலம் வருமா. வராது. நம்மூர் பட்டினத்தான் வாய்க்கால் தண்ணி மணிமுத்தாறு தண்ணிதான். நீ முதுகுன்றத்துல அந்த ஆத்து பாலம் பாத்து இருப்பே’

‘ பாத்து இருக்கேன். ஆனா இப்ப வெள்ளாறுன்னு சொன்னயே அது’

‘அந்த வெள்ளாத்துலதான்  இந்த மணிமுத்தாறு கூடலையாற்றூர்ங்கற ஊர்ல  போய்  ஒண்ணா விழறது. அப்புறம்  ஏகத்துக்கும் வெள்ளாறுதான். அதுலதான் சேத்தியாதோப்புல வெள்ளக்காரன் அணைகட்டி இருக்கான். அந்த அணைக்கி வீராணம்  ஏரி காவேரி  தண்ணி வர்ரது. இந்த சுத்துபட்டுக்கு எல்லாம் தண்ணி இப்பிடிதான் வர்ரது’

‘அந்த கூடலையாத்தூர்லேந்துதான் புது குருக்கள் தருமங்குடிக்கு  வரார் அப்படித்தானே’

அம்மா குறுக்கே பாய்ந்து தனக்குத்தெரிந்த செய்தியைச்சொன்னார்.‘

‘அந்த வயிற்றெரிச்சல எதுக்கு இப்ப பேசணும். புள்ள கூப்பிடறார்.  புது குருக்கள்  பூஜைக்கு வரார். அவராவது வராறே. அதுவரைக்கும் சந்தோஷப்படு. ‘அப்பா சொல்லிக்கொண்டே வந்தார்.

தார் சாலையின் இருபுறங்களிலும் வானாளவ நின்று கொண்டிருந்த புளியமரங்களை எல்லாம் வெட்டியிருந்தார்கள். சாலை வெறிச்சென்று கிடந்தது. நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தேன். இடை இடையே திருவேட்களம் சித்தப்பா சித்தி நினைவு வந்துபோனது. அங்கு வாழ்க்கை எப்படி எப்படி அமையுமோ என்கிற குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.

ஆகாயத்தைப் பார்ப்பது முடியாது. பேருந்துக்குள் அல்லாவா நாங்கள் மூவரும் அமர்ந்து கொண்டிருக்கிறோம்.. ஆகாய விமானம் ஒன்று விர்ரென்று பறந்து  தெற்குத் திசையில் சென்றது. அதன் இரைச்சல் அதிகமாகவே கேட்டது.

‘அப்பா ஏரோப்ளேன்’

‘ ஹெலிகாப்டெர்னா . இன்னும்  தாழ்ந்து  பறக்கலாம்’

‘ நாம ஏரோப்ளேன எப்ப பாக்கறது’

‘’அப்ப அப்ப ஆகாசத்துல பாக்கறமே’

‘இல்லப்பா  அத தொட்டு பாக்கணும்’

 ஏறி ‘உக்காந்துண்டு ஊருக்கு போலாம். எந்த ஊருக்கு போறது’

அப்பா சிரித்துக்கொண்டார்.

‘கப்பல் பாத்து இருக்கயா’

‘படகு பாத்து இருக்கேன் கப்பல் பாத்தது இல்லே’

‘எங்க பாத்தே’

‘ சினிமால பாத்து இருக்கன்’

‘ரயிலு’

‘அதிலயும் ஏறி பாத்தது இல்ல’

‘ இனிமே பாக்கலாம்’

‘எப்பிடி’

‘ அதான் செதம்பரம் போறம் அங்க  ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. ரயிலு வரும் போகும்’

‘அப்ப சரி’

வண்டி புவனகிரியைத் தாண்டிக்கொண்டிருந்தது. பேருந்து அனேகமாக காலியாகி இருந்தது.

‘தோ பாரு வெள்ளாறு. நாம பாலத்துமேல போறம். இப்பிடியே நேரா போனா கடலு வரும்’

‘ இது கடல்ல சேந்துடும்’

‘ அவ்வளவுதான்’

‘அப்பறம்’

‘திரும்பவும் சூரியன் உஷ்ணத்துல  கடல் தண்ணி ஆவியாகும். மேல மேகமா போகும். மழையா பேயும். ஊருக்கு எல்லாம் தண்ணி ,  ஆத்துல வாய்க்கால்ல ஏரில வரும். தண்ணி மீந்துதுன்னா ஆத்துலயே ஓடி  பழயபடி கடலுக்கே போயிடும்’

‘ரவுண்டு அடிக்கறது தண்ணி’

‘எல்லாமே  ரவுண்டு அடிக்கறது.  அப்பிடித்தான் நெறயவே  நீ தெரிஞ்சிக்கணும்’

‘ஸ்கூலுக்குதான் போகாம நிறுத்திட்டயே’

‘ நன்னா கேளுடி’ அம்மா சத்தமாக சொன்னாள். நான் பள்ளிக்கூடம் போகவேண்டுமென்று அம்மாவுக்கு விருப்பம் இருந்திருக்கிறது. ஆண்டுகள் பல ஆயிற்று.  அன்று அம்மாவுக்கு விருப்பம் இருந்ததா இல்லையா என்பது மறந்துகூட போயிருப்பேன்.

‘புள்ள சொன்னார்,  அதான் தருமகர்த்தா புள்ள சொன்னார். பொட்ட புள்ள என்னா செய்யப்போவுது. புளி சோறு தயிறு சோறு   பெசைய கத்துகிடட்டும். வேற என்னா மானத்தயா புடிக்கப்போவுதுன்னு’  என்று அப்பா சொல்ல

அம்மா என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

‘ நீ என்னா படிச்சே ‘

‘ நா எட்டாவது முடிக்கலே. வந்துட்டேன். அதுவே பெரிசு தெரியுமோ’ அப்பா சொன்னார்.

‘ நா மூணு கிளாஸ் தான் படிச்சேன். யார் யாரெல்லாம் பக்கத்து பக்கத்துல வந்து ஈசிண்டு ஈசிண்டு உக்காந்துகறா. படிச்சி கிழிச்சது போறும்னு  என்னை என் அம்மா அதான் உன் பாட்டி நிறுத்திட்டா. அத்தோடு சரி.கோவிலுக்கு  சாதங்கள் பிசைவேன். சுண்டல்  செய்வேன்  பட்சணம் அது இதுன்னு பண்ணுவேன்.’

‘ நன்னா பாடுவா. உங்க அம்மா’ அப்பா இடுக்கில் சொன்னார்.

‘அப்பிடியா’

அம்மா சிரித்துக்கொண்டார். பதில் ஏதும் சொல்லவில்லை. அம்மாவிடம் தனியாக ஒருமுறை இது விஷயம் விபரமாய்க் கேட்கவேண்டுமென்று முடிவு செய்துகொண்டேன். இந்த மாதிரிக்கு எத்தனையோ முறை முடிவு செய்ததுண்டு. விபரம் கேட்டுக்கொண்டோமா என்றால் இல்லை.

‘கஞ்சித்தொட்டி எறங்கு’ கண்டக்டர் கத்திக்கொண்டிருந்தார்.

‘அது என்னப்பா கஞ்சித்தொட்டி’

தாது வருஷ பஞ்சம்னு பெரியவா சொல்லுவா. அது  எல்லாம் என் தாத்தா காலம். பஞ்சமோ பஞ்சம் ஜனங்க பட்டினியில அங்கங்க மடிஞ்சி போறா அப்ப ஏழை ஜனங்களுக்கு கஞ்சி தயார் பண்ணி  ஒவ்வொரு வீதியில ஒரு தொட்டிகட்டி அதுல தினம் தினம்  ரொப்பி வப்பாளாம். பசிச்ச ஜனம் அத  மொண்டு சாப்பிட்டு தன் உயிர காப்பாத்திண்டதாம் அது இருந்த எடம் இது . கஞ்சித்தொட்டி. அதனால கஞ்சித்தொட்டி ஸ்டாப்பிங்க்னு சொல்றது’

‘இப்பதான் இந்த கதயே எனக்கு தெரியும்’ அம்மா சொல்லிக்கொண்டாள்.

‘அடுப்பங்கர மணியம் பாத்தா அவ்வளவுதான்’

‘ கலெக்டர் ஆபிஸ்னா  நீங்க தெனம்   போயி வர்ரேளு’

அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டனர்.

பேருந்து கீழ சன்னதி நிறுத்தத்தில் நின்றது.

‘ கோவிலுக்கு போறவங்க எறங்கிக தேர் முட்டி இத வுட்டா பஸ்ஸ்டேண்டுதான்’

கண்டக்டர் எச்சரிக்கை செய்தார்.

‘படித்துறை சந்து’ என்றார் ஒரு பெரியவர்.

‘ தேர் முட்டிய வுட்டா பஸ்ஸ்டேண்டுலதான் நிக்கும் படித்துறை சந்துன்னா அப்பிடியே  பஸ் ஸ்டாண்டுலேந்து மேற்கால  நாலு தப்பிடி நடக்குலாம். உடம்புக்கும் நல்லது பெரியவரே’

கண்டக்டர் அவருக்குச் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.

வண்டி நடராஜா தியேட்டர் தாண்டியது. எதிரே உள்ள மணிக்கூண்டில் கடிகாரம் நேரம் காட்டிக்கொண்டிருந்தது.

‘ மணி ஒண்ணரை’ அப்பா சொல்லிக்கொண்டார்.

பேருந்து நிலைத்துக்குள் நுழைந்து  டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் வந்து நின்றது. நானும் அம்மாவும் அப்பாவைத்தொடர்ந்து வண்டியிலிருந்து இறங்கினோம்.

பேருந்து நிலையத்தில் மூத்திர நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.  கொடுமை. வீச்சத்தின் நெடியைத் தாங்கவா முடிகிறது.

‘ காசு வாங்காம ஒண்ணுக்கு போற எடம் பக்கத்துல இருக்கணும்  அதான் நெடி இந்த காட்டு காட்டுது’

‘ காசு குடுத்துட்டு போறது  அந்த பக்கமா இருக்கு, ஏன் போவணுமா’

‘ நானு  போயிட்டு வரணும், நீ யும் வா’ அம்மா என்னை அழைத்தாள்.

அம்மாவும் நானும் சென்று வந்தோம்.

‘என்னடி தலைக்கு ரெண்டு ரூவாங்கறான்  நீ எதனா போயிக்க  அம்மா, எனக்கு ரெண்டு ரூவா தான்றான்’    என்னிடம் சொன்ன அம்மாவுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் நான்  நடந்தேன்.

அப்பா அந்த ஓ சி கக்கூஸ்   பக்கம் சென்று விட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

‘இனி என்ன பண்றது’

‘ நடந்து போமுடியாது. ரெண்டு கிலோமீட்டர் இங்கேந்து இருக்கும்’

‘ நீ சொல்றது சரி’

 நான் வாய் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.

‘ அவா ஆத்துக்கு எதானு வாங்கிண்டு  போககணுமே’

அப்பா ரெண்டு ஆப்பிள் பழம் ஒரு முழம் பூ வாங்கிக்கொண்டார். ஆட்டோக்காரன் யாராவது இருக்கானா’ சொல்லிக்கொண்டே நோட்டம் விட்டார்.

அப்போதுதான் ’அண்ணாமலை நகர்’  என்று போடு எழுதிக்கொண்டு ஒரு டவுன் பஸ் பேருந்து நிலையத்தைச்சுற்றி வந்துகொண்டிருந்தது.

‘ பஸ் வந்துட்து.’

 அம்மா சத்தம் போட்டாள்.

நாங்கள் மூவரும் அந்த நகரப்பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். பேருந்தில் அவ்வளவாகக்கூட்டம் இல்லை.  பேருந்தில் அமரும் இருக்கைகள் தம் மேல்சட்டைகளைக்கிழித்துக்கொண்டு காட்சி தந்தன.  இருக்கையின்  இரும்புக்கால்கள் நெளிந்து வளைந்து தெரிந்தன.

வண்டி சற்று நேரத்துக்கு அங்கேயே நின்று கொண்டிருந்தது. டிரைவரும் கண்டக்டரும் டீ சாப்பிட்டு விட்டு  கார சாரமாய் சத்தம் போட்டுக்கொண்டே வண்டியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அனேகமாய்த்  தமிழ் நாட்டு நடப்பு அரசியலாகத்தான் இருக்கும்.

பாசி மணி நரிப்பல் விற்கும் நரிக்குறத்திகள் ‘எம்மா எம்மா’ என்று நச்சரித்துக்கொண்டு இருந்தனர்.

‘ நரிப்பல் எதற்கு’ அம்மாவைக்கேட்டன்’

‘தோசம்  தொலையும் அதுஸ்டம் பெருவும் நோய் நொடி அண்டாது காத்து கருப்பு எட்ட பொயிடும் வாங்குனா தெரியும் வச்சிகு அஞ்சி ரூவாதான்’ என்றாள்  என்னிடம் நரிக்குறத்தி.

‘ நீ பேசாம இரு பதில் சொல்லாதே பேச்சு குடுத்தே மாட்டிப்ப’ அம்மா எனக்கு ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தாள்.

நரிக்குறத்தி என்னப்பார்த்து புன்னகை செய்தாள்.

  எம் பண்டம் எதயும் வாங்க ஆளு இருக்கு இல்லாமலா’ அவளே பொதுவாய்ச் சொல்லிக்கொண்டாள்.

‘வாயில வருது பாத்தியா வார்த்த’  சத்தம் போட்ட

கண்டக்டர் ‘எறங்கு  சனியனே எறங்கு’ அதட்டிக்கொண்டிருந்தார்.

‘சனியன்றன் ஆர பாத்து’ என்றாள் குறத்தி.

‘வண்டி உள்ள உனக்கு என்னா வேல. எதா இருந்தாலும்  வெளிய வச்சிக’

 நரிக்குறத்தியிடம் சொன்னார்.

‘ உன்னயும்  தெரியும் உங்க தாத்தாரையும்தெரியும் ஒப்பமுட்டு வண்டியா’’ கண்டக்டரைப்பார்த்து நரிக்குறத்தி சொல்லிக்கொண்டாள்.

அப்பா டிக்கட் வாங்கி முடித்தார்.

வண்டி பாலமான் தாண்டியது.  பேருந்து நிலையத்தச்சுற்றி க்கொண்டு போகும் ஒரு கால்வாய் இருந்தது. அதனைப் பாலமான் என்று மக்கள் அழைத்தனர்.பிறகு பெரிய கட்டிடம் தெரிந்தது.  அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கட்டிடம். ஒரு காலத்தில் மாநில அளைவில் முதல் மதிப்பெண் வாங்கிய பிள்ளை படித்த பள்ளிக்கூடம் என்று பெருமையோடு சிதம்பர வாசிகள் பேசிக்கொள்வார்கள்.

பாலமான் தாண்டும் போது அப்பா மூக்கைப்பிடித்துக்கொண்டார்.

பேருந்து நிலையம் அளவுக்கு பாலமான் கரையில்  மூத்திர வீச்சம் இல்லை. சற்று குறைவுதான். தண்ணீர் குழம்பலாய் சீராகச்சென்றுகொண்டிருந்தது. வீராணம் ஏரியிலிருந்து வரும் நீர் கடலை நோக்கிச்செல்வதாக இருக்கலாம். அருகில்தான் கீழைக்கடல்  அந்த வங்காளவிரிகுடா.  இங்கிருந்து ஒரு ஏழு எட்டு கிலோமீட்டர் இருக்கலாம் அந்த குழம்பிய நீரிலும் மக்கள் துணிகளைத்துவைத்துக்கொண்டு இருந்தார்கள்.  பாத்திரங்களைத்துலக்கிக்கொண்டிருந்தார்கள்.அவரவர்கள் படும் கஷ்டங்கள் எத்தனையோ.

‘ இப்பிடியே போனா ரயில்வே ஸ்டேசன் வரும்.  வண்டி  ரயில் தண்டவாளத்த தாண்டினு போகும்.  மெட்ராஸ் லேந்து திருச்சி போற  பாதை. இத மைன் லைன்னு சொல்லுவா.   இப்பத்தான் இங்க  பாலம் கட்டியிருக்கா. பஸ்  பாலத்து மேல போயிடும். அந்த காலத்துல ரயில் போனா கேட் கதவ  அடச்சி  போட்டிருப்பா. நாம வெயிட் பண்ணணும். அந்த ஜோலி இப்ப  இல்லே’

அம்மாவும் நானும்  அப்பா சொல்வதையே கவனித்துக்கொண்டு வந்தோம்.

 பெரிய பெரிய கட்டிடங்களாகத்தெரிந்தன.

  தபால்  வழியா பாடத்த வரவழிச்சி பசங்க அவுங்க அவுங்க இருக்குற எடத்துலயே இருந்துண்டு படிக்கறதுக்கு  காலேஜ் தோ இருக்கு.  எதிர்ல இது தான்  முத்தையா  பாலிடெக்னிக்குன்னு சொல்லுவா.  பாலிடெக்னிக் படிச்சா  சின்ன எஞ்சினியர்.  அந்தாண்ட நெடுக்க இருக்கறது பெரிய பெரிய இஞ்சினீரியர் காலேஜ். நன்னா பாத்துகோ’

’நா பாத்து இருக்கன்’

அம்மா சொல்லிக்கொண்டாள்.

இராஜேந்திரன் சிலை வந்தது. பேருந்து திரும்பிக்கொண்டது. வண்டி நின்றது. சிலர் இறங்கிக்கொண்டனர்.

‘இது தான் ராஜேந்திரன் சிலை. இந்தி  பாஷயை  படிக்கணும்னு கட்டாயமா டில்லி சர்க்கார் தமிழ் நாட்டு பள்ளிக்கூடத்துல   கொண்டுவந்தா.. தமிழ்நாடுன்னு பேரே நம்ம ஸ்டேட்டுக்கு  அப்பறம்தான் வந்துது. முன்னாடி  எல்லாம் இது சென்னை மாகாணம்தான். இந்தி எதிர்ப்புன்னு பெரிய போராட்டம் இந்த ஊர்லயும் நடந்தது. அத கலைக்கறதுக்கு  துப்பாக்கி சூடு.செதம்பரத்துக்கு   பக்கத்துல இருக்கற    பரங்கிப்பேட்டை நகரத்திலேந்து படிக்க வந்த காலேஜ் பையன்.  பேரு ராஜேந்திரன் குண்டடிபட்டு  இறந்து போனான். அவன்  ஞாபகார்த்தமாதான்  செல  இங்க வச்சியிருக்கா’

‘யாரு செல வச்சா’

‘ இங்க படிச்ச பையன்கள்தான். வேறு யாரு வைக்கமுடியும்’

அப்பா தன் கட்டுப்போட்ட கையை  ஒருமுறை தடவி விட்டுக்கொண்டார்.

‘ஏன் கை வலியா’

‘ ஒரு சின்ன வலி எப்பவும் இருக்கு’

‘தூக்கம்’

‘ வலியயும் மீறி தூங்கிடுவன்’

அப்பா சொல்லிக்கொண்டார்.

‘ எல்லாம் கிரகசாரம்’ அம்மா சமாதானம் சொன்னாள்.

‘அது என்ன கிரக சாரம்’

‘ ஒவ்வொரு கிரகமும் நம்ம வாழ்க்கையில அதன் வேலய செஞ்சிடுமே அதான்’

‘நவக்கிரகம்னு ஒன்பது  இருக்கே அதுகள் பண்ற சேஷ்டை தானே’

‘ ஆமாம் அதேதான்’

பேருந்து செல்லும் சாலைக்கு இரு புறமும் இரண்டு குளங்கள் இருந்தன. அவை தண்ணீரை நிரப்பி வைத்துக்கொண்டு இருந்தன.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகக்கட்டிடம் தெரிந்தது. அதன் மீது நேரம்  காட்டும் கடிகாரம் கொலுவிருந்தது. எதிரே பெரிய நூலகம் அதன் முன்னால் அண்ணாமலைச்செட்டியாரின் சிலை கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. பூங்காக்களில்   அழகுச்செடிகள் அடர்த்தியாக இருந்தன.

‘பூமா கோவில்’ கண்டக்டர் கத்தினார்.

‘இது முஸ்லிம் பெரியவா  ஒருத்தர் அடக்கமான எடம் பாத்துகோ’ அந்த நிறுத்தத்தில் மாணவர்கள் அனேகம்பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.  ஜரிகை போட்ட பச்சை பட்டுத்துணி நீளவாட்டில் போர்த்திய  சமாதி ஒன்றை  சிறிய சிமெண்ட் மேடை ஒன்றில் பார்க்கமுடிந்தது.

பெரிய பெரிய கட்டிடங்கள் இரு புறமும் தெரிந்தன

‘ ஏதோ விளாம்பழ வாசன’ அம்மா சொன்னாள்.

‘ அதெல்லாம் ஒண்ணும் இல்லே. லாப் இங்க நெறய இருக்கு. அதுல ஏதானு ஆராய்ச்சி நடக்கும். அதோட நெடி இது. இங்க இருக்கறவாளுக்கு பழகி இருக்கும்’

அப்பா அம்மாவுக்கு விளக்கம் சொன்னார்.

‘தோ பாரு ம்யூசிக் காலேஜ். பாட்டு கத்துகறா பசங்க’

‘ போஸ்ட் ஆபீஸ் இது தான் கடைசி ஸ்டாப்பிங். எல்லாரும் எறங்கிகலாம்’ கண்டக்டர் முழக்கமிட்டார்.

நாங்கள் மூவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்;

‘இது தான் போஸ்ட் ஆபிசு பாத்துகோ’

நான் தபால் பெட்டியைப்பார்த்துக்கொண்டேன். புதிதாக சிவப்பு வண்ணம் அடித்திருந்தார்கள். யாரோ ஒரு பெண்மணி அதனுள்ளாகக் கடிதங்கள் சிலவற்றைப்போட்டுக்கொண்டே இருந்தாள்.

அனைத்துமே எனக்கு புதிய விஷயமாக இருந்தது.

 அப்பா முன்பாக நடந்து கொண்டிருந்தார்.

‘ வீட்டு வாசல்ல பாரு சித்தி நிக்கறா’

அதற்குள்ளாக சித்தி நாங்கள் வருவதைப்பார்த்து விட்டாள்.

‘ அண்ணா யாரு வரா பாருங்கோ’

சித்தி தன் கணவரை அழைத்துக்கொண்டிருந்தாள்.

அவரும்  வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு வந்து விட்டார்.

‘ இது என்ன கையில கட்டு பெரிசா’

‘ இது தாண்டா சமாச்சாரம் அதனலதான் உன்னண்ட  வந்துருக்கம்’

அப்பா பதில் சொல்லி முடித்தார்.

 சித்தப்பா வீட்டின் முன்பாக ஒரு ரேழி. அது தாண்டி தாழ்வாரம் கூடம் என இருந்தது.

கூடத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அப்பா உட்கார்ந்து கொண்டார்.

‘ஏன் என்ன ஆச்சு’

‘ இது இப்ப சனிப்பேத்தி வந்துது இல்லயா அண்ணிக்கு ராத்திரி கையில வலி. தோள் பட்ட வலி.  சோத்து கையிலதான்.. தருமங்குடில கை வைத்தியம் பண்ணினேன். ஒண்ணும் சரியாகல. இங்க செதம்பரம் வந்து ஓபில காமிச்சம் எக்ஸ்ரே எடுத்தா. சத பெரண்டு போச்சு. சின்ன ஆப்ரேஷன் பண்ணித்தான் சரி பண்ணணும்னு டாக்டர் சொல்லிட்டார். அதான் பொறப்பட்டு வந்துறக்கம்’

சித்தி அப்பாவின் கையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ கோவில் பூஜ’

‘ நா  எங்க பண்றது. சோத்து கையிலன்னா பிரச்சனை’

‘அப்பறம்’

‘ அப்புறம் என்ன விழுப்புரம்தான்.  நா  தரும கர்த்தா  புள்ளய பாத்தன் அவர் என்னப்பார்த்தார்.  நீ  தருமங்குடிய விட்டு  கெளம்பிடு. நா வேற ஆள வச்சி பூஜய பாத்துகறன் முடிவா சொல்லிட்டார்’

‘ துணிமணிபாத்திரங்கள் செலது எல்லாம் ஒரு  கட்ட வண்டில வர்ரது. நாங்க மொதல்ல பஸ் புடிச்சி   இங்க வந்துட்டம்’

‘ என்ன என்னமோ நடக்கறது இது எல்லாம் யாருக்கு தெரியும்.  நீ வரப்போறேன்னு யார் கண்டா.’

‘இப்ப வலி இருக்கா என்ன’

‘லேசா ஒரு வலி இருக்கு’

‘ நாட்டு வைத்யம் பாத்தாச்சா’

‘ எல்லாம் ஆச்சு. ஒண்ணு கெடக்க ஒன்ணு ஆனா என்ன பண்ணுவே’

அப்பா சொல்லிக்கொண்டார்.

‘அதுவும் சோத்து கை’ சித்தி சொல்லிக்கொண்டாள்.

‘எல்லாரும் தீர்த்தம் சாப்பிடுங்கோ. நா காபி கலக்கட்டா’

சித்தி கேட்டாள்.

‘காபி கல. மொதல்ல சாப்பிடட்டும்  சித்த சாதம் அடுப்புல  வை. யாரும் இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டா’ சித்தப்பா சொல்லிக்கொண்டார்.

‘ஒரு ரசம் போதும் ‘ அம்மா சித்தியிடம் யோசனை  சொன்னாள்.

‘ நன்னா இருக்கு. சாம்பார்  நெறய இருக்கு. செத்த  சாதம் வடிச்சா போறும். இந்த காபி சாப்பிடுங்கோ’  எங்களுக்கு காபியை கொண்டு வந்து விநியோகித்தாள் சித்தி.

‘கட்ட வண்டி எப்ப வரும்’

‘வெளக்கு வைக்க வந்துடும்’

சித்தப்பாவுக்கு அப்பா பதில் சொன்னார்.

‘ எங்க  உன் பையன்  சாமி எங்க  அரவத்தையே காணல’

‘வந்துடுவான் கிரிக்கெட் வெளயாட பசங்களோட போயிருக்கான்’

‘என்ன படிக்கறான்’

‘ஆறு’

‘எப்பிடி படிக்கறான்’

‘ நன்னா படிக்கறான்’

‘உனக்கு ஒத்தாசைக்கு வருவனா’

‘வருவான் கூட மாட நிப்பான். சமத்து’

‘படிச்சிப்பானா இல்ல நம்பள மாதிரி மணியும் சொம்புமா நிப்பனா ‘

’பேசறது  பவிஷா  பேசணும். அசடு கணக்கா பேசறதா’

அம்மா குறுக்கே பாய்ந்தாள்.

‘ அண்ணா கேக்கறார். தப்பில்ல.’

‘ பேசறம்னா  எதயும் அணச்சி பேசணும். விகல்பமா பேசறது சரியா’

சித்தப்பா சிரித்துக்கொண்டார்.

சித்தி சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தார்.

‘சாபிடலாம் கை கால் அலம்பிகோங்கோ’

சித்தப்பா வீட்டுத்தோட்டத்தில் சிறிய தோட்டம் இருந்தது. அதனில் ஒரு கறிவேப்பிலை மரமும் சில வாழைச்செடிகளும் இருந்தன. இடுக்கில் துளசிச்செடிகளும் ஓமவல்லி செடியும் இருந்தன.

‘ எப்பிடி அண்ணா சாப்புடுவ.’

‘ பீச்ச கையாலதான். சிரமம்தான் ஸ்பூன் வச்சிண்டு சாப்பிட்டு  பாத்தன் ஒண்ணும்  சரியா வரல. முழு வயறு எங்க சாப்படறது. ஏதோ சாப்பிட்டம்னு பேரு பண்ணிகறதுதான்’

நான்கு இலைகள் போட்டுப்பரிமாறினாள் சித்தி. ஒரு சாம்பார் ஒரு பொறியல் மோர்தான். ஊருகாயெல்லாம் இல்லை. சித்தப்பாவும் எங்களோடு சாப்பிட்டார்.

அப்பா சாப்பிடுவதை வேடிக்கையாகப்பார்த்தார் சித்தப்பா. லேசாக புன்னகைத்தார்.

‘ரொம்ப சிரமம்தான். இடது கையால செய்யறதுதான் ஏதோ செய்யலாம். எல்லாத்தையும் செய்ய முடியுமா’

‘ஏதோ அவஸ்தை படணும்னு இருக்கு படறேன்’

‘சித்த எலய எடுத்துட்டு எச்சலிடு’ சித்தி எனக்குச்சொன்னாள்.

நான் இலைகளை எடுத்துத்தோட்டத்துப்பக்கமாய்ப்போட்டு எச்சலிட்டேன். சுருணையால் துடைத்தேன்.

‘பொண் குழந்தைகள்னா அம்மாவுக்கு ஒத்தாசை’ சித்தி சொன்னாள்.

‘பையன்னா அப்பாவுக்கு ஒத்தாசை. நேக்கு ஒரு பையன் இருந்தா தருமங்குடிய விட்டு நான்  ஏன் கெளம்பப்போறேன்.  பூஜய  அப்பிடி இப்பிடின்னு ஒப்பேத்திபுடுவேன்  எனக்கு பொண்ணுதான் அந்த  தருமாம்பா குடுத்தா’

அம்மா சொல்லிக்கொண்டாள்.

‘யார் யாருக்கு பிராப்தம் எப்பிடியோ அப்பிடிதான்’ சித்தி முடித்து வைத்தாள்.

‘ ஏன் நீ சாபிடலயா’

‘சாமி வந்துடுவான் அவுனும் நானும் சேந்து  சாப்பிட்டுடுவம்’

சித்தப்பாவின் பையன் சாமிநாதன் வீட்டி உள்ளே வந்து கொண்டிருந்தான்.

‘ யாரு யாரோ வந்துருக்கா’

‘ பாரு பாரு யாருன்னு’

‘பெரியப்பா  பெரியம்மா அக்கா எல்லாருமா எனக்கு தெரியவே தெரியாதே. நீங்க எல்லாம்  வரப்பொறேள்னு. யாரும் சொல்லவே இல்லயே’

‘எங்களுக்கும்  இவா வரான்னு  தெரியாதுடா’ சித்தப்பா சாமியிடம் சொன்னார்.

‘இது என்ன பெரியப்பா  கையில  கட்டு ’

‘சனிப்பேத்தி அண்ணிக்கி  பகவான் சன்னிதில தேங்கா ஒடச்சேன்.  வேல ஜாஸ்திதான் .அன்ணிக்கி ராத்திரிதான் வலி தோள் பட்டையில. ஏதோ பத்து ஒத்தடம் பச்சலன்னு கை வைத்யம் பாத்தம். ஒண்ணும் சரியா வரல. செதம்பரம் ஓபில வந்து காமிச்சம். டாக்டர் பாத்தார். பாத்துட்டு சின்ன ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டார். அதான் வந்துருக்கன்’

‘செதம்பரம் ஒபி க்கு வந்தப்ப இங்க வரலயே’

‘ வரலடா. வர முடியல. அங்க தருமகர்த்தா புள்ளக்கி  இந்த சேதி சொல்லணும். பூஜைக்கி மாத்து  குருக்கள ஏற்பாடு பண்ணணும் அது ஒரு பொறுப்பு இருக்கே. சாமி பூஜைன்னா மனசாட்சியோட பண்ணணும் இல்லயா’

‘ அப்பறம்’

‘ இப்ப வேற ஒரு குருக்கள  பூஜைக்கி ஏற்பாடு பண்ணியிருக்கா. நா கெளம்பி வந்துட்டன்.  என் கை சரியாகணும்.’

‘ கை சரியாயிடுத்துன்னா’ சாமி கேட்டான்.

’சாமி  நீ கை காலு  அலம்பு சாப்பிடற வேலய பாரு. கொழந்தன்னா கொழந்த  மாதிரி பேசணும்’ அவன் அம்மா அவனை அதட்டிச்சொன்னாள். அவன் முகம் நிறம் மாறிப்போனது.

‘ கொழந்த சரியாத்தான் கேக்கறான் தப்பு என்ன இருக்கு. விடு’  சித்திக்கு அம்மா சமாதானமாய்ச்சொன்னள். சாமி என் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தான்.

அப்பாவும் சித்தப்பாவும் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். சித்தியும் சாமியும் சாப்பிடத்தொடங்கினர். நானும் அம்மாவும் வீட்டு கூடச் சுவரில் வரிசையாய் மாட்டியிருக்கும் போட்டோக்களைப்பார்த்துக்கொண்டிருந்தோம். சித்தப்பா சித்தி கல்யாணபோட்டோ, அப்பாவும் சித்தப்பாவும்  சிறு வயதில் சேர்ந்து எடுத்துக்கொண்டது, தம்பி  சாமிநாதன் குழந்தை போட்டோ, ஏதோ  ஒரு ஊர் கோவிலில் கும்பாபிஷேகம் சித்தப்பா தலையில்  தலைப்பாகை. அதன் மீது அலங்கரிக்கப்பட்ட கலசத்தோடு நிற்கிறார். இப்படி வரிசையாய். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேன்.

சித்தப்பாவின் வீடு  நாட்டோடு போடப்பட்ட வீடு. கூடத்தில் இரண்டு தூண்களும் மேலே துயிலங்களும் இருந்தன. மின்சார விசிறி மேலே  துயிலத்திலிருந்து  தொங்கிக்கொண்டிருந்தது. ஓம குண்டங்களில் நெய் இத்யாதிகள் வார்க்க  பூரண ஆகுதி இட என்று நீட்டு கட்டைகள் துயிலத்தின் மேல் உள்ள பரணில் கிடந்தன. காய்ந்து போன தர்ப்பைக்கட்டுகள், சமுத்துகள் என்று சிலவும் கட்டுக்கட்டாக  இருந்தன.

‘ஏண்டா வண்டிக்காரன் எப்ப வருவான் யாரு கூட  வரா?’

‘ பக்கிரிகோனார் தான் வண்டிய ஓட்டிண்டு வரார்.  அது அவர் சொந்த வண்டி.   தருமங்குடி  என் ஆத்துக்கு பக்கத்தாத்து புரோகிதர் பையன் சந்துரு கூட வரான்’

 ’மொட்ட தலயா இருக்குமே  அந்த கோனார் பக்கிரிதானே’

‘ஆமாம் இந்த பக்கம் இருக்கற   கிள்ளையிலதான் அவர் பொண்ணு கட்டினார்.

‘அவரேதான்’

 ’அந்த சந்துரு படிக்கறனா இல்லை தர்ப கட்ட உத்யோகம்தானா’

  இல்லடா. நன்னாவே படிக்கறான்.   தர்ப கட்டய தூக்க மாட்டான்’

முதுகுன்றம் காலேஜில படிக்கறான்.  தெனமும் பேட்டு பேட்டு வந்துடுவான். என்னவோ படிக்கறான்’

‘ அப்புறம்  அவன் வண்டில வரான்னு சொல்ற’

‘ காலேஜ் இப்ப லீவு உட்ருக்கா’ நான் சித்தப்பா கேள்விக்குப் பதில் சொன்னேன்.

‘என்னடி படிக்கறான்’

‘ பிகாம்’

‘பேஷ் இப்படித்தான் இருக்கணும். நீ தான் படிக்காம நின்னுட்ட’

‘ உங்க அண்ணா நிறுத்திட்டார்’

‘அப்ப படிக்கணும்னு ஆசை இருக்கு’

‘ ஆமாம் சித்தப்பா. அதுவும் இந்த ஊருக்கு வந்து இந்த  காலேஜ் பெரிய  பெரிய  கட்டிடம் ,  படிக்கற பசங்க எல்லாரையும் பாத்தப்பறம் மனசு என்னமோ பண்றது’

‘என்ன பண்றது’

‘படிக்கணும்னு தோண்றது’

‘அண்ணா பாத்துக்கோ கொழந்த என்ன சொல்றதுன்னு’

அப்பா சிரித்துக்கொண்டார்.’ தருமங்குடி ஆத்துக்கு பக்கத்துல  பள்ளிக்கூடம். அஞ்சி கிளாஸ் இருக்குன்னு  இவள படிக்கவச்சன். இதுக்கு மேல படிக்கணும்னா எங்கயானு தூரமா போகணும். பொண் கொழந்த இத  சேதாரம் இல்லாம காப்பாத்தணுமே. ஒத்தன் கையில புடிச்சி குடுக்கணுமே பெரிய கடமைன்னா அது’

‘அது சரிதான் அண்ணா’

‘ நீனும் சரிங்கறபாத்தியா’

‘ சரிதான். ஆனா காலம் மாறிண்டு இருக்கு. அத அனுசரிக்கணும். நீ உன் கையிக்கு கை வைத்தியம் பச்சலன்னு பாத்து முடிச்சுட்ட   இங்க  இப்ப ஓ பி க்கு வந்து வைத்தியம் பண்ணிக்கணும்னு உனக்கு  ஏன் தோண்றது?’

‘ நேக்கு பயம்டா. மொதல் போயிட்டா என்ன பண்ணுவே’

‘மொதல் போகாதுன்னு நம்பிக்க வக்கணும்’ சித்தப்பா என்னைப்பார்த்தார்.

‘ எம்பேருல அது தப்புதான்’

நான் அப்பாவைப்பார்த்துக்கொண்டேன்.

‘டீ இவளே  இங்க வா’

நான் சித்தப்பாவை நோக்கித்திரும்பினேன். சித்தப்பா ஏதோ  கேட்க விரும்புகிறார்.

  உனக்கு படிக்கணும்னு ஆசை இருக்கா’

‘ நெறய இருக்கு’ நான் பதில் சொன்னேன்.

‘அப்ப சரி  எதுக்கும் கேட்டுகறேன்’

 

                                                                         2

பக்கிரியும் சந்துருவும் வண்டியில் பேசிக்கொண்டே வந்தார்கள். பக்கிரியை சந்துருவுக்கு நன்றாகவே தெரியும். வாடகைக்கு வண்டி என்றால் தருமங்குடியில்  எல்லோரும் பக்கிரியைத்தான் தேடுவார்கள். வண்டிக்கார  பக்கிரிக்கு ஐம்பது வயது இருக்கலாம். இடுப்பில் எப்போதும்  கைலி கட்டியிருப்பார். மேலுக்கு ஒரு கை வச்ச வெள்ளை பனியன் ஒன்று. பக்கிரியின் பனியன் பழுப்பேறிக்கிடக்கும்.  அவரின் தலை  முடி எப்போதும் பொடிபொடிப்பாய் ட்ரிம் செய்த மாதிரிக்குத்தோற்றமளிக்கும். ஒரு இஞ்சு உயரம்  வளர்ந்த வெள்ளை முடிகள். அவை தலை முழுவதும் நிறைத்துக்கொண்டு அடர்ந்து  நிற்கும். நெற்றியில் திரு நீறு அள்ளிப்பூசியிருப்பார்.’ முருகா’ என்று வாய்விட்டு சொல்லித்தான் திரு நீற்றை நெற்றியில் இட்டுக்கொள்வார். கோனார்தான்.

‘காலேசு போவுலய’

‘’லீவு வுட்டிருக்காங்க பக்கிரி’

வண்டி ஓட்டும் முப்பது வயது பெரியவரை பெயர் சொல்லி அழைக்கமுடிகிறது அக்கிரகாரத்து சந்துருவால். கேடுகெட்ட சாதிக்கட்டுமானம்தான் கிராமத்தில்  இன்றும் என்றும் பிரதானம். தருமங்குடி  கிராமம் மட்டும் விதி விலக்கா என்ன?

‘ நாமளும் உருட்டிகிட்டு  உருட்டிகிட்டு மஞ்சக்கொல்லை வந்துப்டம்’

‘இன்னும் எவ்வளவு தூரம்’

‘ ஏன் நீ படிச்ச பையன் என்ன கேக்குலாமா. ரோட்டுல மண்ட மண்டயா எழுதி போட்டுருக்கான். அத பாரு. எனக்கு சொல்லுணும் நீ’

 சந்துரு சாலையில் வைக்கப்பட்டுள்ள பலகைகளை நோட்டம் விட்டான்.

  செதம்பரம் இன்னும் பதினஞ்சி கிலோமீட்டருன்னு எழுதி போட்டு இருக்கான்’

‘ அப்ப சரி  இன்னும் மூணு மணி நேரம் ஆவும் நாம போய் சேர’

மஞ்சக்கொல்லை பெரிய கிராமம் வழியில் இருந்ததை சந்துரு பார்த்துக்கொண்டான். சாலையை ஒட்டினாற்போல் ஒரு ஆழமான கால்வாய். அதனில் காவிரித்தண்ணீர். அதுவே வழி நெடுகிலும் இருந்த வயல் வெளிகளுக்கு ஆதாரமாக இருந்தது.

‘பாம்புக்கடியா பயப்படாதே’ என்று எழுதிய விளம்பரம் ஒன்று சாலையோரம்  மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. சந்துரு அதனைப்படித்துக்கொண்டான்.

‘ பக்கிரி இங்க’ பாம்புக்கடியா பயப்படாதே’ எழுதியிருக்காங்க.’

‘ இந்த மஞ்சக்கொல்லை ஊர்ல ஒருத்தரு  பாம்புக்கடிக்கு பச்சல  தர்ராரு. கழுத்துக்கு போட்டுக்க ஒரு மால. வெள்ளயா ரவ  துணிய கிழிச்சி முறுக்கு முறுக்கி சுத்தி தருவாரு. அதுதான் மால. மூணு நாளுக்கு  பச்சல மருந்து சாப்புடுணும். உப்பு ஒறப்பு கிட்ட வரக்கூடாது. பாயி படுக்கைன்னு போவக்கூடாது. நீ அறியா புள்ள  உனக்கு வேணாமிந்த சேதி.  பிறவு தலய முழுவிட்டு மாலய கழட்டி தூரப்போட்டுடலாம். வெகு சனம்  இங்க வருதுன்னு கேழ்வி’

‘இது எல்லாம் சரியா வருமா பக்கிரி’

‘ ஆருகண்டா ஊரு காட்டுல கெடக்குறவன் விஷக்கடின்னா வைத்தியம் பண்ணிக எங்க போவான். அது அதுக்கு காசு வேணும் விவரம் வேணும். நானே எம்மானோ தரம் இங்க மால போட  வெஷக்கடி ஆசாமிவுள  ஏத்திகிட்டு வண்டி ஓட்டியாந்து இருக்கன். இவன் செத்து போனானே. ஞாவகம் இருக்கா. பழினின்னு  அமிர்தலிங்கம் மவன். செறு பய  சின்ன இலுப்ப தோப்பு போற வழில அந்த வாளுக்காரன் வைத்திவூட்டுக்கு அங்காண்ட  வூட்டுக்காரன். வண்டிய ஓட்டியாறன் ஓட்டியாறன் பயலுக்கு நல்லது இல்ல விரியனோ மாடு மேய்க்க குள்ள கடிச்சிபிச்சி.  உங்க வூட்டுக்கு பின்னால  செந்நாவளி வயல்ல கோவில் மாநியத்துல தான் மாடு மேச்சிகிட்டு இருந்தான்.  எதோ கடிச்சிது. இன்னதுன்னு தெரியல. வாயிலேந்து வெள்ளய நீலமா  நொறயா தள்ளி புடுல. வண்டியிலயே  குந்தி செத்து போனான். வண்டிய திருப்பிகினு தருமங்குடிக்கே வந்துட்டம் அப்புறம் அடக்கமாச்சின்னு வச்சிக’

‘ இந்த வண்டிலயா பக்கிரி’

‘ ஆமாம் . பின்ன எந்த வண்டி? ஏன்  இந்த வண்டிதான்’

‘ பயமா கூட இருக்கு’                                    

‘ என்னா தம்பி ஆத்தா வவுத்துல நாம பத்து மாசம் கவுந்து கெடக்குறம் குந்தி கெடக்குறம். ஆத்தா ஒரு நா  செத்துடுது. நாம கூட போயிடறமா. அது அது அயிசு முடிஞ்சா அதுக்கு  இங்க என்ன வேல.  குருக்களு அய்யிரு வூட்டு ஜாமான  வண்டில ஏத்தி அவுர  நம்ப வூர வுட்டே கெளப்புவம்னு ஆரு கண்டா. யாருதான் ஆவுட்டும் அந்த காக்கா மேல குந்தி ஊர சுத்துற சாமி  சனீஸ்பரரு வுடுறாரா என்ன புடிச்சிடுறாறுல்ல’

‘ அந்த சாமிக்கும் சனீசுரன் புடிக்குமா’

‘ஹஹ்ஹா தேவுலாம். இல்லாம இருக்குமா. சிவபெருமான் வெஷத்த குடிச்ச கத தெரியுமா பாலுகடல கடஞ்சாங்க. அமிருதம் வேணுமின்னு. அப்ப வாசுகின்னு ஒரு பாம்பு  அதுதான்  மத்துக்கு கவுறு. மவேந்திர மலயதான் மத்தா நிறுத்துனாங்க.. தேவாளும் அசுராளும் பக்கத்துக்கு ஒண்ணா  பாலுகடல கடஞ்சிகிட்டு கடஞ்சுகிட்டு  நின்னா   பாம்பு வாசுகி  வெஷத்த கக்கிடிச்சி. அதுக்கு  என்னா செய்வ. ஆளு தேளு  அந்தத் தேவாளு எல்லாம் கெடந்து  முழிக்குது. சிவபெருமான் வெஷத்த வாயில போட்டு முழுங்குனாரு. அத பாத்த பார்வதி  குய்யோ முறயோன்னுட்டு தம் புருசன் தொண்டய கெட்டினா புடிச்சி அமுக்கினா. வெஷம்  உள்ள போவுல.  நமக்கு கூடம் தொண்டயில உண்டயா கட்டியா ரவ போது  இருக்கே அதுதான். அதனாலதான்’

பக்கிரி தன் தொண்டையைத்தொட்டுக்காட்டினான்.  சந்துரும் தன் தொண்டையைத்தொட்டுப்பார்த்துக்கொண்டான்.

‘வெள்ளக்காரன் துபாயி பாயி  சீனாக்காரன் சப்பான்காரன்  எல்லாருக்குமே தொண்டயில உண்டயா இருக்குது பக்கிரி’

‘உனக்கென்ன கிருதா கத சொன்னா கேட்டுகிணும். குறுக்கு சாலு ஓட்டப்பிடாது’

பக்கிரி பாம்பு பற்றிப் பேசுவது  சந்துருவுக்கு அச்சமாகக்கூட இருந்தது. சந்துரு தன் அம்மாவை நினைத்துக்கொண்டான்.   சந்துருவின்  அம்மா பாம்பென்று  தன் வாயால் சொல்லமாட்டாள். நீட்டு ஒண்ணு வந்துது பாத்தேன் என்பாள். பாம்புக்கு காதில் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம்.

’என் அம்மாவும் என்  அப்பாவும்  கூட இறந்துதான்  போவார்களா’ எண்ணினான். கண்கள் ஈரமாகி விட்டன. சமாளித்துக்கொண்டான். பேச்சின் திசையை மாற்றினான்.

‘இப்ப வெஷக்கடிக்கு  நல்ல மருந்து  எல்லாம் ஆராய்ச்சி பண்ணி ஆசுபத்திரிக்கு  வந்துருக்கு. பாம்பு விஷத்திலேந்து அதுக்கு முறிக்கிற மருந்து தயாராவுதுன்னு படிச்சன்’

 அர்ரீ இது என்னா ‘மாடுவ ரொம்ப  இழுக்குது வாய்க்கா தண்ணிய எம்பி எம்பி  பாக்குது மழங்குது என்ன சேதின்னு புரியில’

‘ மாடுவுளுக்கு தாகமோ  தண்ணி காட்டுணுமோ’

‘ஆமாம். ஆமாம் தம்பி  நீ சொல்லுறது. மாடுவுளுக்கு தண்ணி தாவம்தான்’

பக்கிரி வண்டியை ஓரமாக ஓட்டி ஒரு இடத்தில் நிறுத்தினான். அவ்விடத்தே ஆடு மாடுகள் நீர் அருந்த வசதியாக வாய்க்கால் தண்ணீர் ஒரு பக்கமாக சலசலத்து  ஓடிக்கொண்டிருந்தது. சந்துரு வண்டியை விட்டுக் கிழ் இறங்கி அங்கும் இங்கும் நடந்தான். சாலையிலுள்ள தார் கரேர் என்று மின்னிக்கொண்டிருந்தது. கருப்பு நிறம் மின்னுமா என்ன? ஆங்காங்கே தார் சாலையில் பள்ளம் பள்ளமாகவும் இருந்தது. சாலையின் மீது மாடுகளின் சாணம் காய்ந்து கிடந்தது.

தருமங்குடியில் மாடுகளின் சாணம் பொறுக்க போட்டி போட்டுக்கொண்டு ஓடுவார்கள். மாடுகளின் பின்னே செல்லும் அவர்கள்  சாணத்தின் உரிமைக்காக கூச்சலிட்டுக்கொள்வார்கள். ‘ பெரிய பசு போடுது, மயில காள போடுது, சுருட்ட பசு போடுது, பெரிய கெடா போடுது, சின்னகெடேறி போடுதுஎன்று சாணமிட்ட மாடு எது என்று அடையாளப்படுத்துவார்கள். யார் முதலில் மாடு வால் தூக்கிச்சாணமிடுவதைப் பார்த்துக் குரல் கொடுத்தார்களோ அவர்களே அந்த சாணத்திற்கு  உரிமை உடையவர்கள். இதனிலும் கூட ’நான் தான் மொதல்ல கூவினேன் நீ  அப்புறம்தான் கூவினாய்’என்று  பாத்தியதைச்சண்டையிட்டுக்கொள்வார்கள். சந்துரு இதனை நினைத்துச்சிரித்துக்கொண்டான்.

‘மாடுவ தண்ணி குடிச்சிட்டுது.  ஆச்சி. வண்டிய பூட்டுறன்’

பக்கிரி சந்துருவுக்குச்சேதி சொன்னார்.

சந்துரு வாய்க்கால் கரை ஓரம் இருந்த பச்சைப்புற்களைக் கைகளால் பிடுங்கிக்கொணர்ந்தான். மாடுகளுக்குப்பிரித்துக்கொடுத்தான்.  மாடுகள் புற்களுக்கு ஆலாய்ப்பறந்தன.

‘ மாட்டு முழியப்பாரு, என்னா சந்தோஷம் அதுவுளுக்கு’

சந்துரு வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். வண்டி நகர ஆரம்பித்தது.

‘ செத்த பூட்ட அவுத்துட்டாப்போதும். எங்க மொடங்குலாம்னு பாக்குது’

மாடுகளோடு பேசிக்கொண்டார் பக்கிரி.

‘ நாணலு பாரு  தம்பி செழுமயா வாய்க்கால் கர முச்சூடும்’

‘ அப்பா கூட தருப்ப வேணும்பாரு’

‘ நம்ப ஊர்ல இல்லாத நாணலா. பட்டினத்தான் வாய்க்கா கரையில எம்மானோ கெடக்கு பாத்துகலாம்’

‘ ஆ அர்ரீ தே, வந்தாச்சி பொவனகிரி இன்னும் ரவதான்’ மாடுகளுக்குச்செய்தி சொன்னார் பக்கிரி.

‘ அதுவுளுக்கு நீ சொல்லுறது வெளங்குமா பக்கிரி’

‘இது என்னா கேழ்வி   நாம பேசுறது  அதுவுளுக்கு வெளங்காமலா. செலது செலது  வெளங்கும்’ சிரித்துக்கொண்டார் பக்கிரி.

வெள்ளாற்றுப் பாலத்தின் முன்பாக வண்டியை நிறுத்தினார்.

‘ ஒரு டீ காபி சாப்பிடுவம்’

‘ சரி பக்கிரி’ சந்துரு பதில் சொன்னான்.

‘சொம்மாதான வந்த காசு எதனா இருக்குதா’

‘ ஏன் கிட்ட ஏது நா சும்மாதான் வந்தன்’

‘ நா வச்சிருக்கென். வா போவும்’

‘ எங்க கடை இருக்குது’

‘ ஆ இருக்குதே தொப்பையிரு கெளப்பு. அய்யிரு கல்லாவுல குந்தியிருப்பாரு’

இருவரும் கல்லாவில் குந்தியிருந்தவரைப்பார்த்துக்கொண்டனர். அவர் ஒரு இளைஞராய் இருந்தார். அவர் தலைக்கு நேராக ஒரு பெரியவரின் உருவப்படம் மாட்டியிருந்தது.

‘ அய்யா காலமாயிட்டாரு போல’

‘ அது வருஷம் ரெண்டாச்சி. அவுரு பேரன் நா கடய பாத்துகறன்’

‘ அப்ப சரிதான்’

பக்கிரி அந்த கல்லாவில் அமர்ந்திருந்த இளைஞருக்குப்பதில் சொல்லி முடித்தார்.

‘ எம்மா நாளு இந்த கடயில  நா சாப்புட்டு இருக்கன்  பெரிய  அய்யா கையால எனக்கு  சோறு போட்டு இருப்பாரு.  சோறு முட்டாக்கி வச்சிகிடுவன். முட்லூருல வெளஞ்ச ரவ ரவ கத்திரிக்கா  அந்த  சாம்பாரு ஊத்துவாரு. தேவாமுருதமாவது ஒண்ணாவது அது   கிட்ட கிட்ட நிக்குமா.  இண்ணக்கி நேத்தி கதாயா. ஆச்சி எனக்கும் எழுவது தாண்டி போச்சி பாரு. நேத்திக்குதான் பொறந்து  ரவ துணிய கிழிச்சி கோவணத்த கட்டுன மாதிரி இருக்கு. சர்ர்க்குன்னு புர்க்குன்னு  ஓடுதுப்பா காலம்’

பக்கிரி சொல்லிக்கொண்டே இருந்தார்.

‘ என்னா வேணும்   பெரியவருக்கு’ சர்வர் கேள்வி வைத்தார்.

‘ரெண்டு பச்சி ஒரு காபி.   அப்பிடிஅப்பிடி அது  ரெண்டு செட்டா வருட்டும்’ சந்துருவையும் தன்னையும் காட்டிக்கொண்டார் பக்கிரி.

சர்வர் பஜ்ஜி நான்கு நான்கு வைத்து  ரெண்டு தட்டுக்களைக்கொண்டு வந்தார்.

‘ நா ரெண்டு பச்சி சொன்னன்’

‘ ஒரு பஜ்ஜின்னா அது ரெண்டு பஜ்ஜி. ரெண்டு பஜ்ஜின்னா அது நாலு பஜ்ஜி’

‘ தேவுலாம்டா பொவனகிரி  ஓட்டல் கணக்கு’

இருவரும் பஜ்ஜியைச்சாப்பிட்டுக்காபி குடித்தனர்.

‘சாம்பார் ரவ ஊத்து. இந்த கடைக்கி எதுக்கு வர்ரது. சாம்பாரு ருசிய நக்கிப்பாக்குணுமே’ சர்வரிடம் சொன்னார் பக்கிரி. சர்வர் புன்னகையோடு சாம்பாரை ஊற்றினார்.

‘தொண்ட வரைக்கும் ருசி’

‘அரீ இவுரு புதுசா கண்டுட்டாரு’  சர்வருக்குப்பதில் சொன்னார். பக்கிரி சாப்பிட்ட  டிபனுக்குக்காசு கொடுத்தார். கல்லாவில் இருந்தவர் ‘ரைட் ரைட்’என்றார்.

‘பஸ் கண்ரேடர் கணக்கா சொல்லுறீரு’

என்றார்.   பக்கிரி  லேசாக  சிரித்துக்கொண்டார்.

‘ டீ அய்யிருவ  போடுறது இல்லே. அவுக எப்பவும்  காபிதான் சாப்புடுவாங்க’ பக்கிரி சந்துருவுக்குச்சொன்னார்.

வண்டியை கிளப்பிக்கொண்டு இருவரும் கீரப்பாளையம் தாண்டி வந்துகொண்டிருந்தனர்.

‘ ஆ பாரு நடராசா கோவிலு கோவிரம் தெரிதா’

‘ தெரிது கோபுரம்  மூணு இருக்கு’

‘ இல்ல தம்பி கோவிரம்  நாலு இருக்கு.  ஒண்ணு ஒண்ணுல மறஞ்சிகிட்டு இருக்கும் அதான் மூணுன்ற’

சந்துரு கோபுரத்தையே பார்த்துக்கொண்டு வந்தான்.

‘ நடராசா நல்ல வழிய காட்டுப்பா’ பக்கிரி கோபுரத்தைப்பார்த்துச்சொல்லிக்கொண்டார்.

‘நடராசருக்கு தமிழ்ல பேசுனா புரியுமா பக்கிரி’

‘பித்தான்னு  கூப்பிட்ட   நீ,   என்ன  பித்தான்னே பாடுன்னு அப்பர்சாமி கிட்ட சொன்னது யாரு, உலகெலாம்னு சேக்கிழாருக்கு அடியெடுத்துக்குடுத்து பாடுப்பா பெரியபுராணம்னு சொன்னது யாரு’

‘இதுக எல்லாம் எங்க தெரிஞ்சிகிட்ட பக்கிரி’

’ஹஹ்ஹா’ பக்கிரி சிரித்துக்கொண்டார்.

‘ நா வெளிய காட்டிகிறது இல்ல. நானும் இந்த பாட்டுவ படிச்சவந்தான் அது எனக்கு  ஒரு வாழ்ப்பு. பொட்டவெளி வாத்யாருன்னு ஒரு சிண்டு வச்ச திண்ண பள்ளிகொட வாத்தியாரு தருங்குடில இருந்தாரு.  அவுரு  எனக்கு சொன்ன கதைங்க  ஏராளம். அறுவு  சமுத்திரம்னு சொன்னா அவுரு. ஆருக்கு முழுசா தெரியும் அவர. பல பெரிய மனுசங்கள நாம எங்க  முழுசா புரிஞ்சிகிட்டம். அப்பிடிதான் அந்த வடலூரார். அய்யா  வள்ளல் ராமலிங்கரும்’

வண்டி மாடுகள் கூட   பக்கிரி சொல்லும் சேதிகளைக்கேட்டு நடப்பதாகவே சந்துரு நினைத்துக்கொண்டான்.

வண்டி தெற்கு பக்கமாக திரும்பி சென்றுகொண்டிருந்தது.

‘ இதுதான் போன் ஆபிசு ஆ பாத்தியா கோவிரம் இரும்புல கட்டிகினு உசக்க போயிருக்கான். அது வழியா சேதி   போவும். எங்க போவுணுமோ அங்க போயி நாம பேசுறது  அந்த மனுஷாளுக்கு கேக்கும்.  இது எல்லாம் இப்ப இப்ப வந்துருக்கு’

‘இது எல்லாம் அப்பயே கண்டு புடிச்சி இருந்தா ராமாயணமும் இல்ல பாரதமும் இல்ல என்னா சொல்லுற பக்கிரி’

‘அது கதை    காதால கேக்குணும்’’

‘ அது கதன்ற’

‘ பின்ன என்ன கததான். அந்த  அயோத்தி எங்க கெடக்கு. எலங்க எங்க கெடக்கு.

அது  எல்லாம்  அந்த காலத்துல  ஆவுற கதையா. மனுசன் நடந்துபோயி நடந்து போயி ஆவுற சமாச்சாரமா’

‘ அப்ப அவுகள சாமின்னு சொல்லுறம்’’

‘ சொன்னா அது தப்பா. நல்ல சேதி  நல்ல பயக்கம் நம்ம  சனங்களுக்கு வருணும்னுதான்  பெரியவங்க சொல்லி  வச்சியிருக்காங்க’

சந்துரு பக்கிரி சொல்வதைக் கவனமாகக்கேட்டுக்கொண்டே வந்தான்.

’ கஞ்சி தொட்டி வந்துட்டம். இன்னிமேலுக்கு  ரவதான் இருக்கு’

வடக்கு ரத வீதியில் வண்டி சென்றுகொண்டிருந்தது. வடக்கு கோபுர வாயிலிலும் கிழக்கு கோபுர வாயிலிலும் பக்கிரி ’ஆண்டவரே நடராசா’ என்று சொல்லி  கைகளை மேல் உயர்த்திக்கும்பிட்டார்.

 இந்த நகரில் குதிரை வண்டி கூட இருக்கிறதா என்ன குதிரை வண்டி யொன்று சவாரி ஏற்றிக்கொண்டு தேர்முட்டியிலிருந்து புறப்பட்டது. ஆட்டோக்கள் ஊரை ஆக்கிரமித்த பிறகு குதிரை வண்டிகள் அருகிப்போயின.

‘இது தான் கீழ சன்னதி, இந்த கோபுரத்த பாத்துகினயா சந்துரு’

பக்கிரி கேட்டார். சந்துரு முன்னமேயே கோபுரத்தைப்பார்த்து முடித்துவிட்டிருந்தான்.

‘ கோவிலு  உள்ளாற போயி சாமி கும்பிட்டு இருக்கியா பக்கிரி?’

‘ நா எம்மானோ தரம் போயி வந்து இருக்கன்’

‘ நா இன்னும் போனது இல்ல. கெடக்கு வுடு மேலைக்கு பாத்துகலாம்’

‘ அர்ர்ர்ரீ  ரீ  இது என்ன அசந்து போவுது மாடுவ’

பக்கிரி மாடுகளைப்பார்த்து சொல்லிக்கொண்டார். மாடுகள் தம் தலையை ஆட்டிக்கொண்டு நடந்தன.

ஒரு மாடு தன் காலை  அவ்வப்போது இழுத்து இழுத்து காட்டியது.  காலில் ஏதேனும் அடியும் பட்டு இருக்கலாம்.  மாட்டின் குளம்புகளில் கட்டப்பட்டுள்ள லாடமும் ஏதேனும் பிரச்சனை தரலாம். லாடம் சரியில்லை என்றால் அதுவும் மாட்டிற்கு பெரிய இம்சை.

‘லாடம் கட்டுற  அஸ்ஸாமிய பாக்குணும். பீச கைபுறம்  பூட்டுன மாடு, காலு தாங்குது.  இன்னும் அது ஒரு வேல கெடக்கு’ பக்கிரி சொல்லிக்கொண்டார்.

சிதம்பரம் பேருந்து நிலையம் தாண்டி வண்டி சென்றுகொண்டிருந்தது.

‘ ஆ பாரு கீழத்தெரு மாரியாயி கோவிலு. கும்பிட்டுக. ரெம்ப சக்தியான ஆத்தா. இந்த பக்கத்து சனம் சொல்லிகும். வருஷா வருஷம் இங்க சித்திரையில செடலு விழா நடக்கும். புஷ்ப பல்லக்குன்னு அப்பிடி அழகா சோடிப்பாங்க. செல வருஷம் முத்து பல்லாக்கு சோடிப்பாங்க. நா ரெண்டையும் பாத்து இருக்கன். எம் மாமியா வூட்டு குல சாமி இதுதான். என் வீட்டுக்காரி இருந்தப்ப நாங்க கெனமா வந்து இருக்கம் போயி இருக்கம்’

பாலமான் கடந்து வண்டி போயிக்கொண்டு இருந்தது.  இங்கு ரயில் வே கேட் இருந்ததுதான்.இப்போது இல்லை. தண்டவாளத்தைக்கடக்க  மேம்பாலம் கட்டிவேலை முடிந்து பேருந்துகள் மற்றும் இதர வண்டிகள் செளகரிமாய் அதன் மீது விரைந்துகொண்டிருந்தன.

‘ இருட்டி போச்சி’ என்றான் சந்துரு.

‘ அது அது   அதுங்க வேலய பாக்குதுல்ல. நாம வெட்டி கத பேசினாலும்  இல்ல வேல  வெட்டின்னு பாத்தாலும் காலம்  அது வேலய வுடுதா. சொழண்டு சொழண்டு வந்துகிட்டுதான இருக்குதுவ பலதும்  இந்த ஆகாசத்துல. இண்ணைக்கி நேத்தி சமாச்சாரமா. ஆரு கண்டா எவுரு கண்டா இந்த மொத்த  வெவரம்’

அண்ணாமலைப்பல்கலைக்கழக கட்டிடங்களை சந்துரு பார்த்துக்கொண்டே வந்தான். வானை அளந்தபடிக்கு கட்டிட உயரங்கள் இருந்தன.

‘கரண்டு வெளக்குவ ரோட்டு முச்சூடும்  அழவா எரியுது’ பக்கிரி சொல்ல

சந்துரு அவைகளையும் பார்த்துக்கொண்டான்.

சாஸ்திரி ஹாலில் கடிகாரம் ரீங்காரம் எழுப்பியது. ஏழு முறை அடித்து நேரத்தை அறிவித்தது.

‘ மணி நாதமா அழவா செட்  பண்ணி  வச்சியிருக்குறானுவ.  கண் முன்னாடி எம்மானோதான்  ஆவுது போவுது. ஒலகம் கம்முனு கெடக்குலயே. ரவ பீய கெடச்சிதுன்னு துன்னுட்டு மூலையில மொடங்கிகிட்டு யாரும் இல்ல. இருக்கவுமாட்டாங்க. அது அதும் கர்ணம் போட்டு போட்டுதான்  வேல பாக்குது’

‘வந்துட்டம் வந்துட்டம் திருவக்கொளம் வந்துட்டம், கோவிலுக்கு மேலண்ட வீதி. வேப்பமரம்தான் அடையாளம்’ பக்கிரி சொல்லிக்கொண்டார்.

‘ வண்டி வந்தாச்சி வண்டி வந்தாச்சி’ சாமினாதன் கத்தினான்.

 நான் வாயிலில் வந்து எட்டிப்பார்த்தேன்.

சந்துரு  வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.

அப்பாவும் சித்தப்பாவும் வண்டியிடம் சென்று கொண்டிருந்தார்கள். இரண்டு மூட்டைகளே இருந்தன. ஒன்று பாத்திரம் மற்றொன்று துணிமணி. பாய் தலையணைகள் ஜமக்காளம் சில தட்டுமுட்டு சாமான்கள் அவ்வளவே. அப்பாவும் சித்தப்பாவும் பக்கிரியிடம் குசலம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். பக்கிரி மாடுகளை வண்டியிலிருந்து பூட்டவிழ்த்து விட்டான். புது இடம் என்பதால் சுற்றும் முற்றும்  அவை சற்று விழித்து விழித்துப்பார்த்தன.

‘ என்ன  சின்ன அய்யரு செளக்கியமா இருக்க்குறீரா’

‘இருக்கன் பக்கிரி’

‘என்ன தருமங்குடி பக்கம்  எட்டிப்பார்க்குறது  இல்ல’

‘ஒண்ணும் ஜோலி இல்ல அதான்.  ஊர்ல எல்லாம் எப்பிடி. தருமகர்த்தா புள்ள எப்பிடி இருக்காரு. பஞ்சாங்க அய்யிரு எப்பிடி?’

‘எல்லாரும் ஆண்டவன் புண்ணியத்துல சவுகரியம். அந்த அய்யிரு மொவன் சந்துரு எங்கூட வண்டில  வந்துருக்காரு பாக்குல’

‘சந்துரு இங்க வா’ பக்கிரி அழைத்தார்.             

‘ நீதான் பக்கத்தாத்து சந்துருவா’

‘ஆமாம் மாமா’

‘என்ன பண்றே’

‘ முதுகுன்றத்துல படிக்கிறேன். இப்ப லீவு. பி. காம்’

‘ இது எந்த வருஷம்’

‘செகண்ட் இயர்’

‘தம்பி நல்லா படிக்கிது. பொழச்சிக்கும்.அப்பனாட்டம் பஞ்சாங்கத்த தூக்கிகிட்டு ஊரு சுத்தி  சுத்தி வராது அது கண்டிப்பா சொல்லுவன்’

நான் சித்தப்பாவும் பக்கிரியும் பேசிக்கொண்டிருப்பதைக்கவனித்தேன். அப்பாவும் மூட்டைகளை சாமான்களை வீட்டின் திண்ணையில் அசமடக்கினர்.

அம்மா சந்துருவுக்கும் பக்கிரிக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். பக்கிரி திண்ணையில் அமர்ந்துகொண்டான். வண்டி மாடுகளைப்பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘மாட்ட வேப்ப மரத்துல கட்டிபுடலாம் பக்கிரி’

‘ இல்ல அய்யா செத்த கால் ஆறட்டும்னு பாக்குறன். ரொம்ப தொல வந்துருக்கு’

சித்தி பக்கிரியை வந்து பார்த்தாள்.

‘அம்மாவுக்கு என்ன தெரியுதா’

‘ நல்லா தெரியும் தருமங்குடி வந்தா உங்கள பாக்காம வரமாட்டம்ல’

‘எங்க வர்ரீங்க.  ஊர்ல எல்லாரும் சவுகரியம்.  நம்ப அய்யிருதான் கையில பிரச்சனைன்னு கெளம்பி வந்துட்டாரு. கவனிச்சு பாத்துகுங்க. அவருக்கும் நீங்கதான். உங்களுக்கும் அவுருதான்’

‘பாத்துகறம் பக்கிரி’ சித்தி சொன்னாள்

சாமிநாதனும் சந்துருவும்  பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘ ஏண்டா சந்துரு இங்க வா ‘ சித்தி அவனை அழைத்தாள்.

‘வரேன் மாமி’ சந்துரு வந்துகொண்டிருந்தான்.

‘அப்பா அம்மா எப்பிடி இருக்கா சவுக்கியம்தானே’

‘ எல்லாரும் சவுக்கியம் மாமி.’

‘ நீ என்ன பண்றே’

‘ பிகாம் முதுகுன்றத்துல படிக்குறன்’

‘ ரொம்ப நல்லது. காபி சாப்பிட்டயா நீ’

‘ ஆச்சு’ சந்துரு சித்திக்குப்பதில் சொன்னான்.

 

                                                            3

நன்கு இருட்டிவிட்டது. தெருவில் மின் விளக்குகள் பிரகாசமாய் எரிந்து ஒளி தந்தன.

‘சாயரட்சைக்கு கெளம்பணும், சாமிக்கு  நிவேத்யம் எதானு’ சித்தப்பா சித்தியைப்பார்த்து கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘ ஏண்டா அந்த பிராம்ண புள்ள என்ன ஆனான்’

‘யாரும் இல்ல. எல்லாம் நாந்தான்.’

‘விசேஷம்னா என்ன பண்ணுவ’

‘ அவளும் நானும் கெடந்து திண்டாடுவம். அப்பிடிதான். யாரும் கோவிலுக்கு மடப்பளி  வேலேன்னு வர்ரவா நிரந்தரமா அந்த வேலய பாக்குறதுங்கறது  இல்லாம  போயிட்து. இப்பிடி  வெகு காலம் ஆச்சு. ஹோட்டல் சப்ளயர் வேலக்கி போறான்.  ஆனா இங்க வரமாட்டேன்னு சொல்றானுக’

‘அங்க அங்கயும் அப்பிடிதான்’

‘அதுலயும் இந்த கல்யாண சமையலுக்கு கேட்டரிங்க் ஒண்ணு ஆரம்பிச்சா பாரு அது வந்தபிறகு பிராம்ண புள்ள எங்க  மடப்பளிக்கு கெடக்கிறான் சொல்லு’ சித்தப்பா கைகால் அலம்பி விபூதி இட்டுக்கொண்டார்.

பாசுபதேசுரர் கோவில் ஆலய மணி  இரண்டு முறை அடித்தது.

‘ மெய்க்காவல் கோவிலுக்கு வந்துட்டான். சந்நிதில வெளக்கு போட்டாச்சு. சாயரட்சைக்கு  கோவில்ல எல்லாம் ரெடின்னு எனக்கு சேதி’ என்றார் சித்தப்பா.

சாமிநாதனும் சித்தப்பாவோடு கோவிலுக்குக் கிளம்பிப்போனான்.

‘சந்துரு நீ கோவிலுக்கு  போயிட்டு வர்ரியா’

‘ போயிட்டு  வரேன்’ என் அப்பாவுக்குப்பதில் சொன்னான்.

‘ நா  கோவிலுக்கு வல்ல சாமி. செத்த கட்டய  கீழ போடுணும். அப்பதான் ஒடம்பு சரிப்பட்டுவரும். நானு இந்த கோவில பல முறை பாத்து இருக்கன்’

‘ஆமாம் நீ பக்கத்தூரு  கிள்ளையிலதான் பொண்ணு கட்டின ஆசாமி’

பக்கிரி சிரித்துக்கொண்டார்.

‘ சாமி என்னுமா  இதகூடம் நெனப்பு வச்சிருக்கு’

‘இது என்ன கம்ப சூத்திரமா’ சித்தப்பா சொல்லி சிரித்துக்கொண்டார். என்னை சித்தப்பா அழைக்கவில்லை.கோவிலுக்கு இவள் வந்து என்ன செய்யப் போகிறாள். இப்படி நினைத்துமிருக்கலாம். நான் அப்பாவைப்பார்த்துக்கொண்டேன்.

‘ ஏன் என்ன’

’ நம்ப கோவிலுக்கு போலாமா’

‘ரைட்டா போலாம்’ அப்பா எனக்குப்பதில் சொன்னார்.

அம்மா என்னப்பார்த்துக்கொண்டார்.

‘சித்திகிட்ட சொல்லிட்டு நானும் வரேன். சாமிநாதனோட  நாம   மூணு பேருமா போகலாம்’

‘என்ன எல்லாரும் கோவிலுக்கு கெளம்பணுமா’

‘ஆமாம் சித்தி’ நான் பதில் சொன்னேன். அப்பாவைத்தேடினேன். பக்கிரி ஓட்டிகொண்டு வந்த வண்டியின் மாடுகளிடம் நின்றுகொண்டிருந்தார். இப்போது மாடுகள் தரையில் படுத்துக்கிடந்தன. கண்களை மூடி மூடித்திறந்தன.அவை இட்ட பச்சை சாணத்தை அப்பா வழித்து ஓரம் பண்ணிக்கொண்டு இருந்தார்.தரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேப்பம்பழங்கள் சிதறிக்கிடந்தன. வேம்பு பழுக்கும் காலம்.

‘ வாங்கோ பெரியம்மா, அக்கா, நம்ப போலாம்’

‘ ஏன் நான் வர்ரதில்லையா’ அப்பா சேர்ந்துகொண்டார்.

‘ வாங்கோ நீங்க இல்லாமயா. கை வலிக்கப்போறது பெரியப்பா’

‘ அப்பிடி ஒண்ணும் பெரிய வலி இல்லேடா சாமி. வேல செய்யறத்துக்கு ஒத்துழைக்கல்லே அதுதான் பெரிய இமுசை.  சோத்து கைய மேல சரியா தூக்க முடியலே அதுக்குத்தானே நங்க  இங்க வந்துருக்கம் சொல்லு’

‘டீ,    சித்த ஒரு மக்ல ஜலம் கொஞ்சம் விபூதி கொண்டுவா’ அம்மாவிடம் அப்பா சொல்ல  அம்மா என்னைப்பார்த்தாள்.

சாமிநாதன்  சட்டென்று வீட்டிற்குள்ளாக ஓடி தண்ணீர் ஒரு பக்கெட்டும் விபூதிசம்படமும் கொண்டுவந்தான்.

அப்பா தன் கை கால்களை அலம்பிக்கொள்ள அவனே  தண்ணீர் ஊற்றினான்.

‘கை சரியா ஒத்துழைக்கல பாத்தியா’ அப்பா சொல்லிக்கொண்டார்.

அப்பா இடது கையாலேயே விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டார்.

‘ கையிங்கறது பெரிய சமாச்சாரம். அது சரியா வல்லேன்னா பெரிய அவஸ்த. ஒவ்வொண்னும் அப்பிடித்தான். அது அதும் முக்கியம்தான்’

நான் அம்மா அப்பா சாமி நால்வரும் திருவேட்களம் திருக்கோவிலை நோக்கிப்புறப்பட்டோம்.

கோவிலில் சாய ரட்சை மணி அடித்துக்கொண்டிருந்தது.

‘ செத்த வேகமா போகணும், நாம  கோவிலுக்கு வர்ரோம்னு தம்பிக்கும் தெரியாது. சட்டு புட்டுன்னு பூஜய  முடிச்சிட்டு  வந்துடப்போறான்’ அப்பா எச்சரிக்கை செய்தார். வீதியில் கல்லூரி மாணவர்கள் அங்கும் இங்கும் என உலாவிக்கொண்டிருந்தார்கள். பசுமாடுகள் சில சாலையில் நின்று அசைபோட்ட வண்ணமிருந்தன. கோவிலின் சுற்று மதில் நல்ல உயரம். முற்றிலும் கருங்கல்லால் எழும்பியிருந்தது. அதன் மீது நந்தி சிலைகள் அங்கொன்றும் இங்கொன்றும் அமர்ந்த நிலையில் இருந்தன. கோவிலுக்கு முன்பாக பெரிய அரச மரம். வானைத்தொட்டு நின்றுகொண்டிருந்தது.  இரண்டு ஜோடி ஆணும் பெண்ணும் கல்லூரி மாணவர்கள் சிமெண்ட் பலகையில் அமர்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.  இன்னது பேசுகிறார்கள் என்பதுதான்  யாராலும் அறியமுடியாதது.

கீழைவாயில் கோபுரம் சிறியது. மூன்று நிலைகள் அதனில் இருந்தன.  கோவிலுக்கு ஒரே ஒரு கோபுரம்தான்.

அம்மா கோவில் திருப்படியைத்தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு நடந்தாள்:. கருங்கற்படிக்கட்டுகள். நெடிதுயர்ந்த கருங்கல் வாயில். அதற்கேற்றார்போன்று மரக்கதவு. அதனில் இங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆடும் மணி தொங்கிக்கொண்டிருந்தது. கதவெங்கும் விரிந்த தாமரை  மலராய்ப் பித்தளைப்பூண்கள் பதியப்பட்டு இருந்தது.

சந்துரு நாங்கள் வருவதைப்பார்த்து எங்களிடம் வந்து நின்றுகொண்டான்.

‘ வாங்கோ சுவாமிக்கு தீவாராதனை ஆப்போறது’ சித்தப்பா குரல் கொடுத்தார்.

அம்மா பிள்ளையாரைப்  பார்த்து ஒரு குட்டு தலையில் குட்டிக்கொண்டார். சிவன் சன்னதியில் அம்மா அப்பா சந்துரு என வரிசையாக நின்றுகொண்டோம். சாமி தன் அப்பாவிடம் போய் கருவரை அருகே நின்றுகொண்டான். சாமி கும்பிட வந்தவர்கள் ஒரு ஐந்து பேருக்கு அங்கே சந்நிதியில்  நின்று கொண்டிருந்தனர்.

கோவிலின் மெய்க்காவல் இங்கும் அங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்தான்.

தேவாரம் பாடும் ஓதுவார் ’ சிவா திருச்சிற்றம்பலம்’ என்று ஆரம்பித்தார்.

‘பொன்னார் மேனியனே

 புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல்

 மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே

மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னை அல்லால்

 ஆரை நினைக்கேனே’

 நான் தேவாரம் பாடும் ஓதுவாரையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

 

‘ சாமிய  பாரு அங்கே’ அம்மா எனக்குச்சொன்னாள்.

நான் சிவலிங்கத்தைக் கருவரையில் பார்த்து வணங்கினேன். 

  ‘ சாமி பாசுபத நாதர்  பஞ்சபாண்டவாள்ள அர்ஜுனனுக்கு பாசுபதா அஸ்திரம் அருளிய ஸ்தலம்’ சித்தப்பா ஒப்பித்தார். நானும் கேட்டுக்கொண்டேன்.

கற்பூர ஆரத்தியை சேவார்த்திகளுக்குக் காண்பித்துக்கொண்டே சென்றார். அதனைத்தொட்டுக்கும்பிட்டுக்கொண்டோம்.

அம்மன் கோவிலில் சித்தப்பா ‘ சத்குணாம்பா  நல்ல நாயகின்னு அம்பாள் பேரு’ சொல்லிக்கொண்டே தீபாராதனைக்காட்டினார்.

கோவில் பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி வந்தோம். அப்பா ஏது  ஏதோ தோத்திரப்பாடல்களை முணு முணுத்துக்கொண்டே  வந்தார்.

எல்லோருக்கும் விபூதியும் குங்குமமும்  வழங்கிய சித்தப்பா மெய்க்காவலோடு உரையாடிக்கொண்டு இருந்தார்.

ஓதுவார் ராஜகோபால்பிள்ளை சித்தப்பாவிடம் வந்து நின்றுகொண்டார்.

‘என்ன விசேஷம் எதாவது’

‘ஒரு சேதி. நா கோவில்ல வந்து தேவாரம் பாடறேன். எனக்கு ஓதுவார்னு பேராச்சி. எனக்கும் வயசாவுது. ஒரு ஜீவன் என்  தேவார பாட்ட கத்துக வல்ல. என் பொண்ணு. ஒரே பொண்ணு. வெளிநாட்டுல இருக்கா. உங்களுக்கும் தெரிஞ்சி இருக்கும். அவ கெளம்பி வந்துடு. இனிமேலுக்கு அங்க இருந்தா சரியாவராதுன்னு கண்டிஷனா சொல்லிட்டா. நா யார்கிட்டயும்  இந்த சேதிய சொல்லுல. பாசுபதேசுரர்கிட்ட சொல்லிட்டேன். உங்ககிட்ட சொல்றன். இனிமே நீங்க பாத்துகணும்’.

‘தர்மகர்த்தாண்ட சொல்லணுமே’ என்றார் ஓதுவார்.

‘எதுக்கு. நா கோவில்ல பாடுறன். தம்பிடிகாசு யார்கிட்டயும் வாங்குனதில்ல. அர காசு கை நீட்டி  நா வாங்கியிருந்தா பதில் சொல்லணும். கோவிலுக்கு வந்தா நீங்க குடுக்கற திருநீறு அதோட சரி. நா யார்கிட்ட சொல்லுணும் வுடுங்க’

‘புறப்படுறிங்க’

‘ஆமாம். இண்ணைக்கு நாளைக்கு கெளம்பிடுவன். எல்லாம் ரெடியா இருக்கு’

‘போற எடத்துலயும் நம்ம கோவில் உண்டா’

‘அது போயிதான் பாக்கணும்’

‘எங்க சிங்கப்பூர்தானே’

‘சரியா சொல்லிட்டிங்க உங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சன்.

‘நீங்க ஒருவெச சொல்லியிருக்கிங்க நல்லா ஞாபகம் இருக்கே’

‘அங்கயும் கோவிலுங்க இருக்குன்னாங்க போனா தெரியும்’

‘ ரொம்ப சந்தோஷம் உத்தரவு வாங்கிகறேன்’ என்றார்  ராஜகோபால் ஓதுவார்.

‘இவரு என் மூத்தாரு. கொஞ்சம்  ஒடம்பு அசவுகரியம்னு என்னண்ட வந்துருக்காரு’

என் அப்பாவை ஓதுவாருக்குக்காண்பித்தார் சித்தப்பா.

அப்பா ஓதுவாருக்கு  நமஸ்காரம் சொல்லிக்கொண்டார்.

‘பிரார்த்தன பண்ணிகுங்க அய்யா  கை சரியா பூடும்’ மெய்க்காவல் என் அப்பாவுக்கு ஓங்கிச்சொன்னார்.

‘அதான் வேறென்ன கை சரியாகணும்னுதான் ஸ்வாமி கிட்ட வேண்டிண்டேன்’

கோவிலுக்கு முன்பாக இருந்த திருக்குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது. கோபுர வாயில் முன்பாக ஒரு பெரிய அரசமரம் தழைத்துக்கொண்டு நின்றது. இப்போது சிமெண்ட் பெஞ்சின் மீது  பேசிக்கொண்டிருந்த ஆண்பெண்  மாணவர் ஜோடிகளைக்காணவில்லை.

‘இது எவ்வளவு காலமாச்சோ’ அரசமரத்தைப்பார்த்து அம்மா சொன்னாள்.

‘ யார் கண்டா  எந்த காலத்துல யாரு வச்சாளோ’ அம்மாவுக்கு அப்பா பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

சந்துரு சாமிநாதனோடு பேசிக்கொண்டே வந்தான். நான் அம்மா கையைப்பிடித்துக்கொண்டு நட்ந்தேன். அப்பா  எப்போதும்போல் தன் கையை அடிக்கடி தடவி விட்டுக்கொண்டார்.

 

                                                           4

‘ நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போணும்’

‘கண்டிப்பா ஓ பி ல காமிச்சிட்டு யோசனை கேக்கணும்’

அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டார்கள்.

பக்கிரி வண்டியிடம் நின்று மாடுகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘பக்கிரி உன் சேதி என்ன’

‘ நானு தருமங்குடி பொறப்படணும். ராவிக்கு ஒரு உண்ட சாப்டன்னா என் வண்டிலயே மொடங்கிகுவன். பல பலன்னு வெடியறுதுக்குள்ள பொறப்படுவன். அதான் சேதி’

‘வண்டி சத்தம்’

‘அதான் தருமகர்த்தா புள்ள தர்ரேன்னு  சொல்லியிருக்காரு. போயி வாங்கிகணும்’

‘ நானும் எதாவது தருணும்ல நெயாயமா இது’

‘ அதெல்லா ஒண்ணும்  எனக்கு வேணாம் நீங்க கைய பாருங்க சாமி. அது மொதல்ல  சரியாவுட்டும்’

இரவு மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

எல்லோருக்கும் இரவு உணவு தயார் செய்துகொண்டிருந்தாள் சித்தி. அம்மாவும் உடன் இருந்தாள். நானும் அவர்களோடு இருந்தேன். சந்துருவோடு  சித்தப்பா பேசிக்கொண்டே இருந்தார்.

‘டீ அவன் காலேஜில படிக்கறான்றே. கட்டவண்டில  ஏறிண்டு இங்க வந்துருக்கான்’

‘இல்ல சித்தி அவன் நமக்கு ஒத்தாச பண்ணணும்னுதான் வந்துருக்கான்’

‘காலேஜ் பையன் ரஃபும் ராங்கியுமா இருக்குங்களே’

‘சந்துரு அப்படி இல்லே’

‘அவன் அம்மா அப்பா எதானு சொல்லுவாளா இவன் இப்பிடி இங்க வந்துருக்கானேன்னு கேக்கறேன்’

‘அவன் எது செஞ்சாலும் ரைட்டுன்னுதான் சொல்லுவா’

‘அவனும் தப்பு ஒண்ணும் பண்ணிடலேயே’

‘’அப்பாக்கு கையில பிரச்சன. சந்துருவும் கோவிலுக்கு வந்து அப்பாக்கு கூட மாட ஒத்தாசையா இருந்தான். ஆனா கோவில் தருமகர்த்தா புள்ள விட மாட்டேங்கறார். குருக்கள தவிற யாரும்  ஸ்வாமிய தொடக்கூடாதுன்றார் பிராம்ணனா இருந்தாலும் வெளிலதான் நிக்கணும் கர்ப்ப கிரகத்துக்குள்ள நுழையவேக்கூடாதுன்னு சட்டமா பேசறார்’

‘புள்ள சொல்றது சரிதான்’

சித்தி சொல்லிக்கொண்டாள்.

‘எல்லாருக்கும் டிபனுக்கு  எல போட்டுருக்கன்’

சித்தி அரிசி உப்புமா கிளறி வைத்திருந்தாள். தேங்காய் சட்னியும் தயாராகி இருந்தது.

‘தேங்கா மூடி இல்லாம சமையல் குருக்கள்:ஆத்துல எது’

தேங்காய்ச் சட்டினியைப்பார்த்து அம்மா சொல்லிக்கொண்டாள்.

‘அந்த பக்கிரிக்கும் எலய சேத்து போட்டுடு’ சித்தப்பா ஓங்கிச்சொன்னார்.

’சந்துரு பக்கிரிய சாப்பிட கூப்பிடு’

‘சரி மாமா’ சொல்லிய சந்துரு பக்கிரியை அழைத்து வந்தான்.

‘ நானு வண்டில குந்திகினு கூட வாயில போட்டுகுவென்’

‘இல்ல பக்கிரி நம்பூட்டுல நாம எல்லாரும் ஓண்ணுதான்’

‘ நீங்க சொல்லுலாம், உங்களுக்குக் கூட  மொதலாளின்னு ஒருத்தரு படியளக்குறாருல்ல’

‘ நீ தருமங்குடி சேதிய சொல்லுற’ சித்தப்பா பக்கிரிக்குப்பதில் சொன்னார்.

கூடத்தில் தாழ்வாரத்தில் இலைகளை போட்டு உப்புமாவும் சட்டினியும் பரிமாறினார்கள். மோர் ஒரு சட்டியில் வந்தது. அதனையும் பரிமாறினார்கள்.

பக்கிரி சாப்பிட்டு முடித்து இலையை மடக்கினார்.

‘ எலய நாங்க ஒண்ணா எடுத்துகுவம்’

‘ இல்ல அம்மா அது மொற இல்லில்ல’

‘ எல்லாம் மொறதான் நீங்க கைய கழுவுங்க மித்தத்துல’ என்றாள் சித்தி.

‘எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர். பக்கிரி வண்டியை நோக்கி நடந்தார்.

‘ நாளக்கி  கருக்கலோட  கெளம்பிடுவன். எல்லாருக்கும் சொல்லிகிறன். நானு ஊருக்கு போயி வறேன்’

பக்கிரி வாய் நிறைய சொல்லிக்கொண்டார்.

‘ அய்யா கைய கவனிச்சி பாருங்க அது முக்கியம்’

‘ சரி பக்கிரி ரொம்ப சந்தோஷம். நீங்க வந்தது பெரிய ஒத்தாசை’

அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சொன்னார்கள்.

‘ சந்துரு அய்யா  நீனு  திண்ணயில படுத்துகு. நானு கருக்கல்ல  இட்டுகினு போவுணுமே’ பக்கிரி சொல்லிக்கொண்டார்.

‘ ஆகட்டும்’ அப்பா சொன்னார்.

‘ நீங்க பொம்மனாட்டி சாப்பிடுங்கோ’ சித்தப்பா சத்தமாய்ச்சொன்னார்.

சித்தப்பா எப்போதும் சற்று சத்தமாய்த்தான் பேசுகிறார். அது ஏனென்று தெரியவில்லை. கோவில் மெய்க்காவலிடம் சத்தம் போட்டு போட்டு வேலை வாங்குபவராயிருக்கலாம். நானே எனக்கு விடையும் சொல்லிக்கொண்டேன்.

வெங்கல பானையில்  மீதமிருந்த உப்புமாவை நாங்கள் மூவரும் பகிர்ந்து கொண்டோம்.

‘மத்தியான சாதம் வெறுஞ்சாதம் கூட இருக்கு. மோர் இருக்கு. வேணுங்கறவா போட்டுகலாம்’

சித்தி சட்டமாய்ச்சொன்னாள்.

அம்மா மோர் சாதம் பிசைந்து ஆளுக்கு ஒரு இரண்டு கரண்டி போட்டாள்.

‘ நாளைக்கு காலம்பறே மெடிகல் காலேஜ் ஓ பி க்கு போகணும்’

நான் அம்மாவிடம் சொல்லிக்கொண்டேன்.

‘அதுக்குதான வந்துருக்கேள்’ சித்தி சொல்லி சன்னமாய்ச் சிரித்துக்கொண்டாள்.

அவரவர்கள் அங்கங்கு படுத்துக்கொண்டார்கள். சாமிநாதன் அவனுடைய அப்பாவோடு படுத்துக்கொண்டான்.

‘மாமி நா ஊருக்கு கெளம்பறேன். பக்கிரி எப்ப வண்டிய பூட்டறாறோ அப்ப அவரோடவே பொறப்படுவேன்’

‘’ நல்லா படி அம்மாவ அப்பாவ கேட்டேன்னு சொல்லு’ சித்தி சொன்னாள்.

‘ நா போயிட்டுவறேன் மாமி . மாமா உங்களண்டயும் சொல்லிக்கறன். கையை சரிபண்ணிகோங்கோ, டாக்டர் என்ன சொல்றாரோ அத கவனமா செய்யுங்கோ.’

‘ நான் போயிட்டுவறேன்’ என்னிடம் சொன்னான்.

‘ நன்னா படி. அது முக்கியம்’ நான் அவனுக்குச்சொன்னேன்.

சித்தப்பா சந்துருவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘அப்பாவுக்கு ஒத்தாசன்னு கூட மாட புரோகிதம் போறியா’

‘அப்பா கூப்பிட்டா  கூட போவேன் வருவேன்’

‘அத  மெயினா நெனச்சி படிக்காம வுட்டுடாதே நன்னா படி. எதானு ஒரு உத்யோகம் கெடக்காம போயிடாது’

‘ சரி மாமா படிக்கறேன்’

வாயிலில்  இருந்த  பெரிய திண்ணையில் சந்துரு படுத்துக்கொண்டான். அவனுக்கு ஒரு பாயும் தலையணையும் திண்ணையில் இருந்தது.

பக்கிரி சிறிய திண்ணையில் ஒரு துண்டை விரித்து படுத்துக்கொண்டான். வவ்வால்கள் இந்தப்புறமும் அந்தப்புறமும் பறந்து கொண்டேயிருந்தன நாய்கள் மூலைக்கொன்றாய் குரைத்துக்கொண்டு இருந்தன. அருகிலிருந்த மரத்தில் சில பறவைகள் அமர்ந்து சன்னமாய் கூவிக்கொண்டு இருந்தன. பக்கிரியின் வண்டி மாடுகள் எதையோ அசைபோட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் கண்கள் பள பள என்று மின்னிக்கொண்டு இருந்தன. பக்கிரி அடிக்கொருதரம் மாடுகளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.

‘செத்த கண்ணு மூடுவன் மூத்திரம் வந்துபுடும் எழுஞ்சி போயிட்டு வருவன் இதே பொழப்புதான்’ பக்கிரி சொல்லிக்கொண்டார். ‘  நாம ஒறங்குறம் இந்த மாட்ட இல்ல வண்டிய எவனாவது தள்ளிகினு போயிட்டா என்னா செய்வ’ . பக்கிரி சொல்லிக்கொண்டார்.

சந்துரு,  பக்கிரி தனக்குத் தானே பேசிக்கொள்வதை கவனித்தான்.

‘ ஏன் தம்பி தூங்குல’ சந்துருவைக்கேட்டான்.

‘கொசு புடுங்குது பக்கிரி  பாக்குல’

‘பாக்காம என்னா அதுவ பசி அது நம்மள கொண்டு பசி ஆறலாம்னு பாக்குது’

‘இதுக்கு ஒண்ணும் வழி இல்லயா பக்கிரி’

‘பொக போடலாம், கொசு வத்தின்னு ஒண்ணு இருக்கும் அத கொளுத்தி வக்கிலாம் இப்ப அதுக்கு எங்க போவ வூட்டு உள்ளாரயும் இப்பிடிதான் புடுங்குமா எப்பிடி தூங்குவாங்க’,

‘ ஒரு ஃபேன் இருக்கு’

‘ காத்தாடி இருக்குதா’

‘ ஆமாம் பக்கிரி’

‘அப்ப தேவுலாம்’

‘ஒரு காத்தாடி அது என்னா செஞ்சிட போவுது’

‘ இம்மாம் கொசு அவுங்கள  புடுங்காது’

‘கொசுவள படைச்சி அதுவ மனுஷாளு ரத்தத்தை குடிச்சாதான்  உசுரோட இருக்கும்னா இது என்ன திட்டம்’

‘ ஆருக்கு தெரியும்.  ஒலகத்துல  சீவுனவ     ஒண்ண ஒண்ணு  துன்னு துன்னுதான் பசி ஆத்திகிணும்.  மரம் மட்டைவ செடி சேம்புவ தேவுலாம் அதுவ சாப்பாட்ட அதுவ ஏற்பாடு பண்ணிகிது. எந்த உசுரையும் அழிக்கறது இல்ல’

சந்துரு உறங்கிப்போனான். அதிகாலை  மணி நாலு இருக்கலாம்.

‘மொத சாவ  கூவிடிச்சி,  சந்துரு எழுந்திரிச்சிக. வண்டிய பூட்ட போறன்’

சந்துரு எழுந்து சுதாரித்துக்கொண்டான். மாடுகள் வண்டியில் பூட்டப்பட்டன.

‘ ஏறி குந்து’

சந்துரு வண்டியில் மய்யமாய் அமர்ந்து கொண்டான்.

வண்டியின் சக்கரங்கள் உருள ஆரம்பித்தன.

‘ அர்ரீ நடங்கடா  என்ன இது  அன்ன நடை.  இல்ல  மழலா ரோடு எப்பிடி மழ மழன்னு கெடக்கு  அதுக்கு தக்கன போவுணும்ல’ பக்கிரி மாடுகளோடு பேசினார். மாடுகள் தலையாட்டிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தன.

‘ சந்துரு  தூக்கம் வந்தா அப்பிடியே படுத்துக்கு’

‘தூக்கம் வருல பக்கிரி’ சந்துரு பல்கலைக்கழக கட்டிடங்களைப்பார்த்துக்கொண்டே கவனமாய்ப்பார்த்துக்கொண்டே வந்தான்.

’உன் காலேஜ் எப்பிடி இருக்கும் பெரிசா சிறுசா’

‘ சிறுசுதான்  இது  ரொம்ப பெரிய காலேஜ்’

சாஸ்திரி ஹாலில் கோபுரக்கடிகாரம் நான்கு முறை மணி அடித்து ஓய்ந்தது.

‘ என்னா  நாதங்கறன்’ பக்கிரி சொல்லிக்கொண்டார். வண்டியின் சக்கரங்கள் உருண்டுகொண்டே சென்றன.  தருமங்குடி இன்னும் வெகுதூரம்தான்.

 

 

 

 

                                                                5

 பொழுதுவிடிந்தது. அப்பா மருத்துவ மனைக்குச்செல்வதற்கான சீட்டுக்கள் எல்லாவற்றையும் ஒரு முறை பார்த்துக்கொண்டார்,

‘என்னத்தை பாக்கற நீ  இங்க்லீஷ் படிச்சவாளுக்கே டாக்டர் என்ன சொல்றார்னு புரியாது. பார்மசில  மருந்து எடுத்து குடுக்குறவன் டாக்டர் என்ன  மருந்து எழுதிருக்கார்னு படிப்பான்’

சித்தப்பா அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘இங்க்லீசு எங்க படிச்சம்’

‘பொண்ணயாவது நீ படிக்க வச்சிருக்கணும்’

‘குருக்களாத்துல பொண்ணு பொறந்தா எங்க படிக்கறது’

‘ நீ  பொண்ண படிக்க வக்கலேன்னு சொல்லு’

‘இங்க காலேஜ்ல பாரு எவ்வளவு பொண் கொழந்தைகள் படிக்கறான்னு’

படிப்பைத்தொடராமல் விட்டது எனக்குச் சுள்ளென்று உரைத்தது.

‘ டீ   தமிழ் நன்னா படிப்ப எழுதுவ’

‘ஆமாம் சித்தப்பா தமிழ் எழுதுவேன் படிப்பேன்’

‘அதயாவது காப்பாத்தி வை’

சித்தப்பா எனக்குச்சொன்னார்.

அம்மா குளித்து முடித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.

அடுப்படியில் சித்தி காலை சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்தாள்.

அப்பா குளியல் அறைக்குச்சென்று தயார் ஆனார்.  நான் அப்பாவோடு உடன் ஒத்தாசைக்கு இருந்தேன். அம்மா அப்பா நான் மூவருமே  அவசர அவசர்மாய்ச் சிற்றுண்டி எடுத்துக்கொண்டோம். சாமிநாதன் பள்ளிக்கூடம் கிளம்பிக்கொண்டிருந்தான்.

ராணி சீதை ஆச்சி பள்ளியில் சாமிநாதன் படித்துக்கொண்டிருந்தான். பாசுபதேசுரர் கோவிலின் வடக்குப்பகுதியில் அந்த பள்ளி இருந்தது. அங்கு பன்னிரெண்டாம் வகுப்புவரை பள்ளி நடைபெற்றுவந்தது. சாமிநாதன் அந்தப்பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தான். ஆறாம் வகுப்பு.

‘ நான் கோவிலுக்கு போறன் எனக்கு கொஞ்சம் வேல இருக்கு’ சித்தப்பா கிளம்பிக்கொண்டிருந்தார்.

‘ பக்கத்துல போஸ்டாபீஸ் இருக்கு. அது வாசல்ல வண்டிக்காரன் ஆட்டோக்காரன் யாராவது  இருப்பான் கூட்டுகணும்’

சித்தப்பா எங்களுக்குத் தகவல் சொன்னார்.

‘ஸ்வாமிய பிரார்த்தன பண்ணிண்டு கெளம்புங்கோ’ சித்தி ஸ்வாமி பிறை முன் விளக்கேற்றி இருந்தாள். நாங்கள் மூவரும் சுவாமி மலை முருகன் படம் முன்பாக கண்களை மூடிச்சற்று பிரார்த்தனை செய்தோம்.

‘ நீ நமஸ்காரம் பண்ணிகோ’ நமஸ்காரம் பண்ணிய அம்மா என்னிடம்  சொன்னாள்.

‘பொயிட்டு வரம்’

‘பத்ரம், பத்ரம்  அங்க  டாக்டர் என்ன சொல்றார்னு கவனிச்சி கேளுங்கோ என்ன’

எச்சரிக்கையாய்ச் சித்தி சொல்லி அனுப்பினாள்.

போஸ்டாபீஸ் வாயிலில் நாங்கள் ஒரு குதிரை வண்டியைப் பிடித்தோம்.’நான் இப்போதுதான் குதிரை வண்டியில் முதன் முதலாக ஏறியிருக்கிறேன்’

‘ இது ஒரு வண்டிதான்  இங்க ஓடிட்டு இருக்கு. ஆட்டோகாரன்க வந்தாங்க எங்க தொழிலு போச்சி.. நா ஏதோ இந்தக்குதிரையை வுட மனசில்லாம  வச்சிகிட்டு ஓட்டுறன். இந்த குதிரை வண்டி ஓட்டுற சமாச்சாரம்  எல்லாம் என்னோட சரி.’

வண்டிக்காரன் தன் விஷயம் சொன்னான்.

‘ அப்ப இந்த குதிரைங்க எல்லாம்  என்ன ஆவும்’ நான் கேட்டேன்.

‘ ஏர் ஓட்டுற டிராக்டர் வந்த பிறவு உழுற மாடுவ என்னாச்சி’

வண்டிக்காரன் எனக்கு எதிர்க் கேள்வி வைத்தான்

‘ அப்பிடி அப்பிடியே  தள்ளிகிட்டே போவேண்டியதுதான்’ அப்பா தன் பங்குக்குச்சொன்னார். ஒரு வழியாக  ஓ பி வந்தாயிற்று.

 மருத்துவ மனையில் நல்ல கூட்டம்.

எங்களை கை கால் எலும்பு  அறுவை சிகிச்சை டாக்டரிடம் போகச்சொல்லி  சீட்டு தந்தார்கள்.

அப்பா ஒரு குழந்தையைப்போல் தன் கையை பத்திரமாக தாங்கிப்பிடித்துக்கொண்டு வந்தார்.

அப்பா கொண்டு வந்த சீட்டு இத்யாதிகளைப்பார்த்த மருத்துவர்  அன்று மாலையே வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை என்றார்.

‘ நாளைக்கு வீட்டுக்குப்போயிடலாம். இரவு மட்டும் அவ்ர் இங்க இருக்கட்டும்’ மருத்துவர் சொன்னார்.

‘ சலுகைக்கட்டணம்தான் அதுவும் மருந்து இத்யாதிகளுக்குத்தான் என்று  மருத்துவ மனையில்  ரூபாய் ஐயாயிரம் கட்டச்சொன்னார்கள்.

‘ இப்ப என்ன பண்றது’

‘’எதானு பண்ணித்தான் ஆகணும்’

‘என்கிட்ட புள்ள குடுத்த ரெண்டாயிரம் இருக்கு மேல மூவாயிரம் வேணும்’

‘ நா சித்தப்பாவை சித்தியைக் கேட்டுப்பார்க்கிறேன்’நான் பெற்றோர்களுக்குச்சொன்னேன்.

‘ அவன் கிட்ட இருக்குமா’  அப்பா கேட்டார்.

‘ கேட்டாதான் தெரியும் நா போயி  சித்தப்பாவை கேட்டுட்டுவறேன்  நா நடந்தே போயிட்டு வரன் சட்டுனு வந்துடறன்.  நீங்க   இங்க ஆகவேண்டிய காரியத்தை பாருங்கோ’ சொல்லிவிட்டுப்  புறப்பட்டேன்.

நீளமாய்த் தார்சாலை போட்டிருந்தார்கள். விசாரித்துக்கொண்டே நடந்து வந்தேன். நிர்வாக அலுவலக மணிக்கூண்டு கடந்தாயிற்று. அப்படியே நடந்து அண்ணாமலை நகர் அஞ்சலகம் வந்தேன். கோவில் மதில் சுவர் தெரிந்தது.

வீட்டு வாயிலில் சித்தி நின்றுகொண்டு துணிமணிகளை உலர்த்திக்கொண்டிருந்தார். நான்  வீடு வந்து சேர்ந்தேன்.

‘ என்ன ஆச்சு’ சித்தி கேட்டாள்.

‘ ஆஸ்பத்திரியில  ரூபாய் ஐயாயிரம் வைத்ய செலவுக்கு கட்ட சொல்றா’

‘இது என்னடி விபரீதம்  இந்த ஆஸ்பத்திரில வைத்யத்துக்கு  காசு ஒண்ணும் கேக்கமாட்டான்னுதான் எல்லாரும் பேசிக்கறா.’

‘இருக்கலாம் சித்தி, ஆப்ரேஷன் செலவுக்கு   எவ்வளவோ ஆகலாம். நம்பள ஏதோ ஒரு செலவுக்கு ஐயாயிரம் கட்ட சொல்றா அந்த விபரம் இன்னதுன்னு தெரியல்’

‘ அப்பா அம்மா கையில ஒண்ணுமே இல்லயா’

‘தர்மகத்தா புள்ள தருமங்குடிய விட்டு பொறப்படற நேரத்துல அப்பாகிட்ட  ரெண்டாயிரம்  ரூபா குடுத்தார். அது இருக்கு.  ஆஸ்பத்திரில  ஐயாயிரம் கட்டணும்னு சொன்னா   இன்னும் மூவாயிரம் வேணுமே’

‘மூவாயிரத்துக்கு எங்கபோறது இப்ப’

சித்தப்பா பாசுபதேசுரர்  கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அவருக்கு என்னை வீட்டு வாயிலில் பார்த்தது ஏதோ ஒரு அச்சத்தைத் தந்திருக்கவேண்டும்.

‘என்ன ஆச்சு’

‘ சித்தப்பா கையில ரெண்டாயிரம் இருக்கு   இன்னும்  ஒரு மூவாயிரம் ரூபா  வேணும். ஆஸ்பத்திரில ஐயாயிரம்  கேக்கறா.  நீங்கதான் ஏற்பாடு பண்ணி தரணும்’

சித்தப்பா கால்களில் விழுந்தேன். ‘எழுந்திரு மொதல்ல’ சத்தம் போட்டார்.          

‘ எனக்கு வேற வழிதெரியல சித்தப்பா’

‘ தருமகர்த்தா புள்ள எதாவது குடுத்தாரா’

‘ குடுத்தார். ரெண்டாயிரம்.  அதுவே   சம்பள பாக்கிதான்’

‘அப்பாகிட்ட  வைத்ய செலவுக்குன்னு எதுவும் குடுக்கல’

‘இல்ல’

‘ ஏனாம்’

நான் பேசாமல் இருந்தேன்.

‘உன்ன கேட்டு என்ன பண்றது’

என்னைப்பார்த்து சொன்ன சித்தப்பா, ‘ டீ இங்க வா’

சித்தியை அழைத்தார்.

சித்தி சித்தப்பா அருகே வந்து நின்றார்.

‘ போட்டுண்டு இருக்குற வலையல் ரெண்டையும் கழட்டு’

‘அக்கா கூட ரெண்டு வளையல் போட்டுண்டுதான் வந்துருக்கா’

‘ அது  சிதம்பரம்  கவரிங்  பித்தளை  நகை சித்தி’   நான் சித்திக்குப்பதில் சொன்னேன்.

சித்தி தனது கை வலையல்கள் இரண்டையும் கழற்றி சித்தப்பாவிடம் ஒப்படைத்தார்.

‘கை முண்டமா இருக்கு லப்பர் வளையல்  நாலு வாங்கிண்டு வாங்கோ’

‘ஆகட்டும்’

‘ இந்த வளையல எப்பக்கி மூக்கறது’

’இப்பதான் போறது  கொலுல இருக்க. அதுக்குள்ளாற மூக்கறது பத்தி பேசற. நா மூட்டு தரேன். கோவில்ல மலைக்கு போற  ஐயப்ப ஸ்வாமிகள் மால போட்டுக்க வருவா.  காசு வரும் அப்ப வளையல டாண் மூட்டுடலாம்’

‘ஆகட்டும்’

சித்தி சொல்லிவிட்டு  விர்ரென்று உள்ளே போனாள்.

‘ கொழந்தே நீ இங்கயே சித்த நில்லு. நா சேட்டுகடை பக்கத்துல இருக்கு. வளையல  அங்க கொண்டுபோய் வச்சி ரூபா வாங்கிண்டு வறேன்’

‘ நானும் வரேன் சித்தப்பா’

‘பேஷா வா நீ வந்தா எனக்கு ஒண்ணும் இல்ல. நா என்ன தலயில தூக்கிண்டா போப்போறேன் சொல்லு’

‘சித்தி கோவமாய் ஆத்துக்குள்ள  போனது சங்கடமா இருக்கு சித்தப்பா’

‘ இந்த மாதிரிக்கு ஆயிரம் வரும். விடும்மா  இது எல்லாம் பாக்காதே’

போஸ்டாபீஸ் அருகேயே சேட் ஒருவரின் அடகு வட்டிக்கடை இருந்தது. சித்தப்பா வளையலை சேட்டிடம் கொண்டுபோய்க் கொடுத்தார். சேட் வளையலை உரைகல்லில்  உரசிப்பார்த்தார். கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்த தராசில் எடை போட்டார்.

‘எவ்வளவு வேணும்’

‘ சேட் ரூபா மூவாயிரம் வேணும்’

‘அஞ்சாயிரம் வரைக்கும் தருவேன் வேணுமா சாமிக்கு’

‘ வேண்டாம் மூணு போதும்’

‘ இதுல கையெழுத்து போடுங்க’ ஒரு நோட்டை நீட்டினார்.

சித்தப்பா கையெழுத்துப்போட்டு முடித்தார்.

‘ பாப்பாகிட்ட பணத்த குடுங்க சேட்டு’

‘ இந்தா அம்மா வாங்கிக’

நான் பணத்தை  சேட்டிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.

‘சேட்டு,   இந்த  பாப்பா என் அண்ணன் பொண்ணுதான்’’

நான் அந்த சேட்டை மீண்டும்  ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.

நகை அடகு வைத்த ரசீதை சித்தப்பா பத்திரமாக வாங்கி வைத்துக்கொண்டார்.

‘ நீ போ ஆக வேண்டியதைப்பார்’ என்னிடம் சித்தப்பா சொல்லிமுடித்தார். நான் நடந்தே மருத்துவக்கல்லூரி  கை கால் அறுவைசிகிச்சைப்பகுதிக்கு வந்துசேர்ந்தேன். அம்மா என்னையே எதிர்பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். சித்தப்பா கொடுத்த பணத்தை அம்மாவிடம் கொடுத்தேன்.

‘’பரவாயில்லையே காசோடதான் திரும்பி இருக்க’

‘ சித்தப்பா சித்தியின் கை வளையலை சேட்டு கடையில் அடகுவைத்து இந்த பணத்தை  நமக்கு ஏற்பாடு செய்தார்.’

‘ நமக்கு நல்ல நேரம்தான்’

‘ ஏம்மா அடகு வச்சி வாங்க நம்மகிட்ட நகையே இல்லை’

‘இல்ல. அவ்வளவுதான் இதுல என்னசொல்லுவே’

அப்பாவை அறுவை சிகிச்சை அரங்கினுள் அழைத்துச்சென்றுவிட்டதாக அம்மா சொன்னாள். நான் அம்மாவிடம் இருந்த பணத்தையும்  சித்தப்பா நகை வைத்து வாங்கிக்கொடுத்த பணத்தையும் எடுத்துக்கொண்டுபோய் கேஷ் கவுண்டரில் கட்டிவிட்டு ரசீது பெற்றுவந்தேன்.

மருத்துவ மனையின் நெடி வீசிக்கொண்டிருந்தது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் வந்தவர்கள் அவர்களோடு திண்டாடிக்கொண்டிருந்தார்கள். மனதிற்கு வருத்தமாக இருந்தது. நம்மைப்போல இன்னும் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எத்தனை நிஜமானது என்று எண்ணிப்பார்த்தேன்.

அம்மா அறுவை சிகிச்சை அரங்கு வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அம்மாவைப் பார்க்கப்பரிதாபமாக இருந்தது.

நானும் அம்மாவின் அருகில் வந்து நின்று கொண்டேன்.

‘என்னடி மூன்று மணி நேரம் ஆகியிருக்கும்’

‘ ஆமாம் அம்மா இன்னும் நமக்கு  ஒரு சேதியும் வரவில்லை.

எங்களைப்போலவே இன்னும் நான்கைந்து பேருக்கு அங்கே  சோகமாய் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உடன் பிறந்தவரோ இல்லை வேண்டியவர்கள் யாருக்கோ சிகிச்சை உள்ளே நடந்துகொண்டிருக்கலாம். நோயாளிகள் படும் அவஸ்தை ஒருவிதம் என்றால்  அவர்களோடு உடன் வருபவர்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. அவர்கள் இயற்கை அழைப்புக்கும் தாகமெடுத்தால்  குடிக்க ஒரு குவளை தண்ணீருக்கும் பசிக்கும் போது  கொஞ்சம் உணவுக்கும்  கால்கடுத்தபின்  சாய்ந்து உட்காருவதற்கும் சற்று  உடம்பைக்கிடத்தி உறங்குவதற்கும் எங்கே வாய்ப்பு கிட்டுகிறது. செவிலியர்கள்  வாடு பாய்கள் வாட்ச்மென்கள் விரட்டலுக்குப் பயந்து பயந்துதான் மருத்துவமனயில் வாழ்க்கை. அதுவும் மருத்துவர்கள் எதிரே வந்துவிட்டால் அவர்களின்  விரட்டல் பலமாகவே இருக்கும்.

அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து ஒரு செவிலியர் வந்து எங்களிடம் சேதி சொன்னார்.

‘அய்யாவுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சிது. மயக்கம் சரியா தெளிய இன்னும் மூன்றுமணி நேரம் கூட ஆகும். ஜூஸ் எதாவது வாங்கி வச்சிகுங்க. கண்ணு முழிச்சதும் குடுக்கணும்’

‘சரிங்க சிஸ்டர்’ அம்மா சொன்னாள்.

‘’ வீட்டுக்கு போறது எப்ப’

‘ அதெல்லாம்  டாக்டர் சொல்வாரு, அய்யா கண்ணு முழிக்கட்டும். ஜூஸ் சாப்பிடட்டும். டாக்டர்  அவரை செக்  அப் பண்ணிட்டு உங்களுக்கு சேதி சொல்லுவாரு. அதுபடி செஞ்சிகலாம்’

நர்ஸ் வேகமாக தன் அறைக்குச்சென்றுவிட்டாள்.

நான் ஜூஸ் வாங்கிவரக் கிளம்பினேன்.

‘ அதுக்குள்ள என்ன அவசரம்’

‘இல்லம்மா வாங்கி வச்சிகலாம்’

‘கடைய மூடிகிட்டு போயிட்டாலும் என்ன செய்வ. ஜூஸ் கெடைக்கணுமே. நம்மளமாதிரி இன்னும் எத்தினி பேரு ஜூஸ்னு அலையறாங்களோ’

‘ நீ சொல்றதும் சரிதான் போயிட்டுவா’

‘அத எப்பிடி வாங்கிண்டு வருவ’

‘ அது அங்க கடைக்கு போனாதான் தெரியும் அவன் எப்பிடி தருவானோ பிளாஸ்டிக் பாட்டில்ல டப்பால இருக்கும் இல்லன்னா பிளாஸ்டிக் பையிலகூட கட்டிதருவான்’ பதில் சொன்னேன்.

‘ பிளாஸ்டிக் பையில கட்டாத சாமானே இல்லயே சாம்பாரும் சட்னியும் ரசமும் மோரும் என்ன டீ காஃபி கூட பிளாஸ்டிக் பையில கட்டிதான் தரா நான் பாத்துருக்கன்’

 

 

நான் கேண்டீன் இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

வழியில் ஸ்டச்சரில் போட்டு யாரையோ நான்கு சக்கர வண்டியில் அழைத்துக்கொண்டு போனார்கள். அருகே ஒரு ஆணும் பெண்ணும் அழுது புலம்பிக்கொண்டு சென்றார்கள். ஸ்டெச்சரில் படுத்திருப்பவரின்  முகம் மூடியிருந்தது. அனேகமாக அது ஒரு சடலமாகக்கூட  இருக்கலாம். மனதிற்கு அச்சமாகவும் இருந்தது. எல்லோருக்கும் இந்த கதி ஒரு நாள் நிச்சயம் உண்டு என்கிற உண்மையோ சுள்ளென்றது.

கேண்டீன் வாயிலில் நல்ல கூட்டம். எது எது கிடைக்கும் என்கிற போர்டைப் பார்க்கமுடியவில்லை. நேராக காஷியரிடம் சென்று,

‘ஜூஸ் வேண்டுமென்றேன்’

‘ஆப்பிள் ஆரஞ்ச் சாத்துக்குடி லெமன் எது வேண்டும்?’

‘ஆப்பிள் ஜூஸ்’

‘முப்பது ரூபாய் கொடுத்து ஒரு ஆப்பிள் ஜூஸ்  பாக்கெட்டில் வாங்கிக்கொண்டேன். ஜூஸ் போட்டு தருவதற்கே தனியாக ஒரு நபர் பணியிலிருந்தார்.

‘அய்ஸ் போடணுமா ஜீனி போடணுமா’ இந்த கேள்வியை அந்த நபர்  ஒருவர் விடாது எல்லோரிடமும் கேட்டுக்கொண்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவும் இல்லை. அப்பாவுக்கு சர்க்கரை போட்டுத்தான் வீட்டில் காபி தருகிறோம். அறுவை சிகிச்சையின் போது குருதியை சோதித்துவிட்டுத்தான் வேலை ஆரம்பித்து இருப்பர்கள். டாக்டரோ நர்ஸோ அப்படி ஒன்றும்  எங்களுக்குச்சொல்லவும் இல்லை.

கேண்டீனில் பார்சல் வாங்குபவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தங்கியிருக்கும் உட்புற நோயாளிகள் அவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் என்கிற இந்த இரு பிரிவினர்களுக்கான உணவுதான் பொட்டலமாக கட்டப்பட்டுக்கொண்டே இருந்தது.

கேண்டீன் வாயிலில் இப்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. நாய்கள் இரண்டு ஒன்றையொன்று துரத்தி துரத்தி விளையாடிக்கொண்டே இருந்தது. கையில் ஆப்பிள் ஜூஸோடு நான் நடந்து கொண்டிருந்தேன். காஷுவாலிட்டி வார்டு அருகே ஒரே கூட்டம். ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று சிவப்பு ஒளியை உமிழ்ந்துகொண்டு அங்கே நின்றது.

எனக்கு எதிரே வந்த இருவர் பேசிக்கொண்டே போனார்கள். நானும் கூர்ந்து கவனித்தேன்.  ஊர் சிவபுரம். அது  அருகே எங்கேனும் இருக்கலாம். கணவன் மனைவிக்குள் தகறாறு. கைகலப்பில் முடிந்ததாம். மனைவி அவளுக்கு வந்த ஆத்திரத்தில்  குழவிக்கல்லைத்தூக்கி  அவன் மணடையில் போட்டிருக்கிறாள்.  அவனோ அருகேயிருந்த  கத்தியை எடுத்து அவள் மீது  வீசியிருக்கிறான். அவளின் வயிறு கிழிந்து குருதி கொட்டியதாம். அவனுக்கும் மண்டையில் காயம். அவன்  மயங்கி வீழ்ந்துவிட்டான் தெருக்காரர்கள் போலீசுக்குச்சொல்லியிருக்கிறார்கள்.. இருவரையும் போலிஸ்காரர்கள்  ஆம்புலன்சில் மருத்துவ மனைக்குக்கூட்டி வந்திருக்கிறார்கள்.  இந்த தம்பதியர்க்கு மூன்று வயதில் ஒரு  பெண் குழந்தை. கன்னா பின்ன என்று  அழும்  அக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு  இவர்கள் வாழ்ந்த  வீட்டின் அண்டை வீட்டுக்காரர்  காஷுவாலிடி வாடு முன்பாக சமாதானம் செய்துகொண்டே இருந்தாராம்.

‘என்னடா வாழ்க்கை இது நினைத்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். பிண்வறைப்பகுதியின் வாயிலில் ஒரு சவத்தை  வேன் ஒன்றில் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். பாம்புக்கடித்து இறந்த ஒருவரின் சடலம் அது.  அங்கே ஒரு யுவதி பாம்புக்கடித்த விபரம் மொத்தமாய்ச்சொல்லிக்கொண்டே போனாள். நான் அவளைக் கேட்டேனா என்ன?, அவள் பாட்டுக்கு விடாமல்  சொல்லிக்கொண்டே போனாள். நான் பதில் ஏதும் சொல்லவும் இல்லை.

அறுவை சிகிச்சைப்பகுதி வந்தாயிற்று. அம்மாவோடு ஒரு டாக்டர் பேசிக்கொண்டிருந்தார். நான் அவசர அவசர்மாக ஓடி அவர்களோடு நின்று கொண்டேன்,

‘ ஜூஸ் கொண்டு கொடு போ’ டாக்டர் என்னிடம் சொன்னார்.

‘பேஷண்டுக்கு  சட்டுனு எதாவது சாப்பிடணும்னு தோணும்’ டாக்டர் அம்மாவிடம் சொல்லிக்கொண்டார்.

நான் அப்பாவுக்கு ஜூஸ் கொண்டு கொடுத்தேன். அவர் பச்சை வண்ண போர்வைக்குள்ளாக காலை நீட்டி படுத்துக்கொண்டு இருந்தார்.

‘ எப்பிடி இருக்கே’

‘ தோ நீ தான் பாக்கறயே’ அப்பா பதில் சொன்னார். குரலில் மாற்றம் தெரிந்தது. குரலில் கம்பீரம் இல்லை. பலகீனம் கொப்பளித்தது. வலது கையில் பேண்டேஜ் போட்டிருந்தார்கள். கையை அசைக்க முடியாதபடிக்கு இருந்தது.

ஜூசை குடித்து முடித்தார்.

‘ கையில வலி எப்பிடி இருக்கு’

‘ எனக்கு ஒண்ணும் தெரியல’

மருத்துவமன ஜபர்தஸ்த்துகள் ஓய்ந்தன.

’ஆட்டோ பிடித்துகொண்டு வந்து அப்பாவை  வீட்டுக்கு அழைத்துப்போகலாம்’.  மருத்துவ மனையில் சொல்லிவிட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து வந்து திரும்பவும் டாக்டரிடம் கையை  காட்டுங்கள்  என்றார்கள். மருந்து மாத்திரை எழுதிக்கொடுத்தார்கள். அப்பாவிற்கு வைத்யம் செய்த டாக்டர்’ கொஞ்ச நாட்களுக்கு பளு ஏதும் தூக்கவேண்டாம்’ என்று அப்பாவிற்கு அறிவுரை தந்தார்.

நான் அம்மாவிடம் சொல்லிவிட்டு ஒரு ஆட்டோக்காரனை அழைத்துவந்தேன். ஆட்டோக்கள் நிற்குமிடத்திற்கும் அம்மா அப்பா இருக்குமிடத்திற்கும் வெகு தொலைவு இருக்கவே செய்தது. நாம் போய் சொன்னால் மட்டுமே மருத்துவமனையின் காவலர் ஆட்டோவை உள்ளே அனுமதிப்பார்.

‘திருவக்குளம் குருக்களய்யா வீட்டுக்கு போவுணும். எவ்வளவு கேப்ப’

‘ஆயிரம் ரூவா’ ஆட்டோக்காரன் சொன்னான்.

‘அது போதுமா’ என்றேன்.

ஹஹ்ஹா என்று சிரித்தான்.’ கோவில்ல மணி அடிக்குற அய்யிரு  வூட்டுக்குதான நீங்க  குடுத்தத குடுங்க’

அப்பாவை மெதுவாக ஆட்டோவில் ஏறி உட்காரவைத்தாயிற்று. நானும் அம்மாவும் ஏறிக்கொண்டோம். பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் கல்லூருக்கட்டிடங்கள் லாபுகள் இசைக்கல்லூரி என ஒவ்வொன்றாய்ப்பார்த்துக்கொண்டே வந்தேன். அம்மா அப்பாவையே பார்த்துக்கொண்டு வந்தாள். அப்பா கண்களை மூடி மூடி திறந்தார்.

‘ என்ன பண்ணி இருக்கா உங்களுக்கு’

‘ ஆருக்கு தெரியும் நாந்தான் மயக்கத்துல இருந்தேன்’

‘கையில கட்டு மட்டும்தான் தெரியர்து’

‘எனக்கும் அதான் தெரியர்து’

‘வலி ஒண்ணும் இல்லயே’

‘கிலி  மட்டும் இருக்கு’

‘ அது எண்ணைக்கும் போகாது. ஒண்ணு மாத்தி ஒண்ணு வரும்’ அம்மா சொன்னாள்.

அஞ்சலகம் வாயிலில் கல்லூரி மாணவர்கள் ஏகத்துக்கு நின்றுகொண்டிருந்தனர்.  அவர்களில் பெண்களும் இருந்தார்கள். இந்த இரவு நேரத்தில் எங்குபோய் திரும்பி வருகிறார்களோ தெரியவில்லை.

 

‘படிப்பின்னா லேசு பட்டதா’ அப்பா சொன்னார்.

‘எனக்கும் படிக்கணும்னு ஆசை இருக்கு’

‘எப்பவும் இதே பாட்டுதான் உனக்கு,  தப்பில்ல. படிக்கலாம் எப்பவேண்ணா படிக்கலாம்’

‘எப்பிடிப்பா அது’

‘பளளிக்கூடம் நிறைவா போகாம பெரிய படிப்பாளி ஆனவா அறிவாளியா ஆனவா  அனேகம் பேர் இருக்கா’

‘ சாமி  வூடு வந்துபோச்சி. வூட்ட  போயி கனமா பேசுங்க’

ஆட்டோக்காரன் எங்களைப்பார்த்துத்தான் சொன்னான். நாங்கள் மூவரும் இறங்கி  சித்தப்பா வீட்டினுள்ளாக நடந்து கொண்டிருந்தோம்.

சித்தப்பா எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்

’ஏன்  ஆஸ்பத்திரிகாரன் ஆம்புலன்ஸ்  வச்சி  ஆப்ரேஷன் பண்ணின  பேஷண்ட அனுப்ப மாட்டானா’

சத்தம் போட்டார் சித்தப்பா.

‘அப்பாவை வீட்டுக்கு கூட்டிண்டு போகலாம்னான்.  அதான் ஒரு ஆட்டோ புடிச்சிண்டு அதுல  வந்தம்’

‘ கையிலதான கட்டு  கால்தான்  நடக்க முடியுமேன்னு விட்டுறுப்பான்’

சித்தப்பாவே சமாதானம் சொல்லிக்கொண்டார்.

. ஆட்டோக்காரன் நின்று கொண்டிருந்தான். நான் அப்பாவைத்திண்ணையில் உட்காரவைத்துவிட்டு ஆட்டோக்காரனுக்கு காசு தர வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்தேன்.

‘ இது என் கணக்கு. நீ போகலாம்’ சித்தப்பா ஆட்டோக்காரனிடம்  சொல்ல அவன்  சிரித்துக்கொண்டே வண்டியை கிளப்பிக்கொண்டு போனான்.

‘சித்தப்பா நான் கொடுத்துடறேன்  இருக்கட்டும் அப்புறம்  பாத்துப்போம்’ எனக்கு சித்தப்பா சமாதானம் சொன்னார். சித்தி எல்லோருக்கும்  குடிக்கத்தண்ணீர் கொடுத்தார்.

‘ தோ எல்லார்க்கும்  ஒரு வா காபி ரெடியா இருக்கு’ சித்தப்பா சொன்னார்.

‘இப்ப என்னத்துக்கு காபி ராத்திரி நேரம்’ அம்மா சொன்னாள்.

‘ துளி வாயில சூடா விட்டுகொங்கோ ஒரு தெம்புக்குத்தான்’

அம்மாவுக்கு சித்தப்பா பதில் சொன்னார். நாங்கள் மூவரும் காபி எடுத்துக்கொண்டோம். அப்பா திண்ணையில் அமர்ந்திருந்தார். நானும் அம்மாவும் தோட்டத்துப் பக்கமாய் போய் இயற்கை அழைப்புக்குப்பதில் சொல்லி கைகால் அலம்பிக்கொண்டு கூடத்தில் அமர்ந்து சித்தியோடு பேசிக்கொண்டிருந்தோம்.

சித்தி எங்கள் இருவருக்கும் சாமி பிறையிலிருந்து குங்குமம் கொண்டுவந்து கொடுத்தாள்.

‘சாயங்காலமா இருந்தாலும் பரவாயில்ல ராத்திரி ஆயிடுத்து’

‘ இருக்கட்டும் அம்பாள் துணை இருக்கணும் அதான்’ சித்தி சமாதானம் சொன்னாள்.

அப்பாவோடு சித்தப்பா வாயில் திண்ணையில் ஆஸ்பத்திரி சமாச்சாரங்களை பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

                                                            6

                            

‘ நைட்டுக்கு என்ன பண்றது’

‘ எதோ ஒண்ணு’ அம்மா பதில் சொன்னாள்.

‘ அந்த எதோ ஒண்ணுதான் என்ன’ சித்தி தொடர்ந்தாள்.

‘ மீண்டும்  உப்மா ‘ நான் விடை சொன்னேன். அவசரத்திற்கு உப்மா தான் எப்பவும் கைகொடுக்கிறது.

‘சமத்துடி நீ’ சித்தி எனக்கு சபாஷ் சொன்னாள்.

‘எங்க தம்பி’

‘ வருவான் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கான் ’பெரியப்பா வரணுமேன்னு சொல்லிண்டேதான் இருந்தான் சாமி’  சித்தி கனிவாகச்சொன்னாள். அம்மா சற்று உடம்பை க்கீழே போட்டு உருட்டிக்கொண்டாள். உடல் வலி. மருத்துவ மனையில் நின்றது அலைந்தது என எவ்வளவோ மனிதர்களுக்கு    இருக்கவே செய்கிறது. சித்தி அடுப்படிக்குச்சென்றாள்.

‘டீ இங்க  இந்த சின்ன வெங்காயம் நறுக்கி தா’ எனக்குத்தான் சித்தி சொல்லிக்கொண்டிருந்தாள்.

‘ கொஞ்சம் பாரு பாரு  சித்தி பாவம் ஒண்டியா தடமாடிண்டு இருப்பா  எனக்கும் கால் ரெண்டும் கொடயறது ’ அம்மா என்னிடம்  சொல்லிக்கொண்டிருந்தாள். அடுப்பங்கரைக்குச்சென்றேன். அரிவாள் மணையை சின்ன வெங்காயம் சிலதை சித்தி எனக்காக தயாராக வைத்திருந்தாள்.

‘ரெண்டு டம்ப்ளர் அரிசி திரிக்கணும் உப்புமா நொய் தீந்துபோச்சி’ சொல்லிக்கொண்டே மிக்சியை  போட்டாள்.

‘ எங்காத்துல மிக்சியெல்லாம் இல்ல கரண்டு விளக்கு இருக்கு’

நான் சித்திக்குச்சொன்னேன்.

சித்தி லேசாகச்சிரித்தாள்.

‘என்ன சித்தி நா எதானு தப்பாவா சொன்னேன்’

‘ அதுக்கு இல்லடி இப்ப எங்க இருக்கு உனக்கு வீடு’

‘ ஆமாம் சாமான் செட்டு எல்லாம்  மூட்ட கட்டி எடுத்துண்டு வந்தாச்சி, தருமங்குடில அப்பாக்கு வேலயும் இல்ல’ 

அடிமனம் சுள்ளென்றது எனக்கு.

‘அப்பாக்கு கை  சரியாகணும்,  ஒரு கோவில் பூஜ வேற எங்கானு கெடக்கணும்’

‘அது சரி நா இல்லேங்கல’

 அரிசி நொய் உப்புமா தயாரானது. சாமி வீடு திரும்பி விட்டான்.

‘சித்தப்பா வந்தாச்சா, கை எப்பிடி இருக்கு சித்தப்பா’

‘கட்டு பெரிசா போட்டு இருக்கான்.  திரும்பவும் போகணும். டாக்டர் என்ன சொல்றானோ’

‘ எல்லாம் சரியாயிடும் சித்தப்பா  நீங்க கவல படாதீங்கோ. நாம என்ன செய்யணுமோ அத விடாம செஞ்சிண்டு இருக்கணும் அவ்வளவுதான்’

‘தத்துவமான்னா பேசற’

‘ ஸ்கூல்ல சொல்லிதராளே அப்பிடி’

‘ பரவாயில்லடா நல்ல வாத்தியார்கள்தான் இருக்கா’

‘சாமீ’   சித்தி கூப்பிட்டாள். ‘ எல்லாருக்கும் எல போடு’

‘எல்லாருக்கும்னா’

‘அவா மூனு பேருக்கும்தான் எல. நமக்கு தட்டு இருக்கே’

சாமி மூன்று பெரிய இலைகளை எடுத்துப்போட்டான்.

‘ உப்மாடா மத்தியானத்துக்கு போடற  பெரிய எல வேண்டாம் டிபன் எல போடு ’ சித்தி சாமிக்கு கட்டளை தந்தாள். சாமி இலையை சின்ன சின்ன இலையாக மாற்றிப்போட்டான்.

திண்ணையிலிருந்த அப்பாவும் சித்தப்பாவும் உள்ளே வந்தனர். அப்பா மாத்திரைகளை எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டார்.

‘ஆகாரத்துக்கு முன் பின் கதை சொல்லியிருப்பனே’ சித்தப்பா கேட்டார்.

’பொட்டலத்துக்கு மேல எழுதி இருக்கான்’

‘ நன்னா பாத்துக்கோ அப்பறம் கக்கற பிக்கறன்னு ஆயிடப்போறது’

‘ டீ  சித்த பாரு’ அம்மா எனக்குச்சொல்லி முடித்தாள். மாத்திரைகளைச் சரியாகவே அப்பா எடுத்து வைத்திருந்தார்.

‘சாப்பாடு பத்தி டாக்டர் எதானு சொன்னானா’

‘அப்படி ஒண்ணுமில்ல’ அப்பா சித்தப்பாவுக்குச்சொன்னார்.

ஒருவழியாக இரவு உணவு முத்தாகிவிட்டது. அப்பா வாயில் திண்ணையில் படுத்துக்கொண்டார். கொசுக்கடி அதிகம்தான். கொசு வத்திச்சுருள் ஒன்றை ஏற்றி ஓரமாக வைத்திருந்தார்கள். அனேகமாக பாதி இரவில் அது அணைந்தும்விடும். அம்மா நான் சாமி எல்லோரும் கூடத்தில் படுத்துக்கொண்டோம். சித்தப்பா அறையினுள் கட்டிலில் படுத்துக்கொண்டார்.

நான் உறங்கிப்போனேன். சித்தி இன்னும் அடுப்பங்கறையில் பாத்திரங்கள் துலக்கி சுத்தம் செய்த படிக்கு இருந்தார்.

’ காலம்பற பாத்துகலாம் வாம்மா’ அம்மா சித்திக்குச்சொல்லிக்கொண்டு இருந்தாள்.

‘ சாமி சமாச்சாரம் ஆச்சே  ஆசாமிக்குமட்டுமா இங்க சமையல்’ சித்தி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

 கோவில்ல ‘பரிசாரகன் போடலாம்’

‘ இவா குடுக்கற சம்பளத்துக்கு பரிசாரகன் யார் வருவான் வந்தா அவந்தான் கஷ்டப்படுவான்  பிராமணன்அவனவன் ஹோட்டல்; வேலைக்கு போறான் இல்லன்னா புரோகிதர சுத்திண்டு அலையறான் அதுல இன்னும் காசு வரும்.’

‘ ‘ ஹோட்டல்ல எந்த  பிராமணா இப்ப வேல பாக்கறாளா’

‘ அதுவும் போயாச்சு’

‘ பரிசாரகன் சம்பளத்தையும் நமக்கு  சேத்து தந்துடலாம்’

‘ சரியா போச்சு. நம்ம சம்பளமே நமக்கு வராது. நாம் கொடி புடிச்சிண்டு கோஷம் போடறதுக்குதான்  ஆகுமா’ சித்தி சொன்னாள்.

 எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே நான் உறங்கிப்போனேன்.

                                                                            7

                                                                  

மறுநாள் காலை என்றும்போல் விடிந்தது. சாமியைப்பள்ளிக்கு அனுப்புதல் முதல் வேலை. அவனுக்கு மட்டுமென ஏதோ டிபன் தயாரானது. சாமிநாதன் பள்ளிக்கூடம் சென்றான். சித்தப்பா கோவிலுக்குச்சென்றுவிட்டார். சித்தி சமையல் கட்டில் ஏதோ  வேலை செய்துகொண்டு இருந்தாள். அப்பா தன் கையைப் பார்த்துக்கொண்டே வாயில் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

‘டீ அப்பாக்கு இந்த டிபன் கொண்டு போய் கொடு, அவருக்கு மருந்து மாத்திரை சாப்பிடணும்’ சித்தி என்னிடம் சொன்னாள்.

நான் அப்பாவை வீட்டினுள்ளே கூப்பிட்டேன். டிபன் எடுத்து வைத்தேன். அப்பா இடது கையாலேயே சாப்பிட்டு முடித்தார். மாத்திரையையும் எடுத்துக்கொண்டார்.

‘அம்மா இப்பிடியே கொஞ்சம் வெளில போயிட்டு வரலாமா’

‘ போயிட்டு வரலாம்’

‘சித்திகிட்ட கேக்கணும் இல்லயா’

‘ஆமாம் சொல்லிட்டு போகணும்’

சித்தி அடுப்பங்கரையைவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்தார்.

‘ இன்னிக்கி தேங்கா சாதம் கலக்கணும். கோவில் சுவாமிக்கு பிரசாதம் போடணும். யாரோ நிவேத்யத்துக்கு கொடுத்து இருக்கா’

இரண்டு தேங்காய்களை எடுத்துவந்து கூடத்தில் வைத்தார்.

‘இத சித்த துருவிகொடுத்தா தேவலை’

நான் இரண்டு தேங்காய்களையும் உடைக்கப்புறப்பட்டேன்.

‘தோட்டத்தில் தேங்கா உடைக்கிற கல்லு கெடக்கு’

‘ தேங்கா தண்ணி புடிக்கலாமா’

‘சாமிக்கு நிவேத்யம் இல்லயா  என்ன கேள்வி இது. நம்பாத்துல நீ பாக்கல’

‘எதோ கேட்டுட்டன் யோஜனை இல்லாம’ நான் பதில் சொன்னேன்.

நான் தேங்காய்களை உடைத்து வந்தேன். துருவு மணை எடுத்து வந்தேன்.

அம்மா இரண்டு மூடிகளையும் நான் இரண்டு மூடிகளையும்துருவினோம்.

‘ ஆச்சா ‘ சித்தி கேட்டாள்.

‘தேங்காய் துருவல்களை சித்தி எடுத்தொண்டு போனாள். வாணாவில் போட்டு வதக்கி முடித்தாள்.

‘ஆச்சு சாதம் பிசையணும்’

‘ அம்மாவும் நானும் இப்பிடி கொஞ்சம் வெளில போயிட்டு வரமே’

‘’ போயிட்டு வாங்க. சமையல் ரெடி. சட்டுனு வந்துடுங்கோ. நாம சாபிடணும்’

நானும் அம்மாவும் சித்தப்பா வீட்டைவிட்டு வெளியில் வந்தோம்.

‘ காலேஜ் எல்லாம் எப்பிடி இருக்கு. ஜனங்க என்ன பண்றான்னு பாத்துட்டு வர்ரோம்’

நான் அப்பாவிடம் சொன்னேன்.

‘பத்ரமா வந்து சேருங்கோ’ அப்பா சொன்னார்.

‘ ஒண்ணும் சாப்பிடாம போறேள்’

அப்பாவே மீண்டும்.

‘காபி சாப்பிட்டம் தோ வந்துடுவம் இனிமேதான் ஸ்நானம் நேரா சாப்பாடு எல்லாம்’

‘சரி சட்டு புட்டுனு வாங்கோ’

நானும் அம்மாவும் தெருவில் நடந்துகொண்டிருந்தோம். சித்தப்பா வீடு இருக்கும் அந்த மேல வீதியில் நான்கைந்து வேப்பமரங்கள். பச்சைப்பசேல் என்று இருந்தன. அவைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் காகங்கள் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தன. வேப்பங்காய்கள் கொத்து கொத்தாய் தொங்கிக்கொண்டிருந்தன. அவைகளின் நெடி நன்றாகத்தெரிந்தது. நான் அவைகளைப்பார்த்துக்கொண்டே நடந்தேன். இடது பக்கமாய்த் திரும்பினால் பாசுதேஸ்வரர் கோவிலுக்குப்போகலாம். சித்தப்பா அங்கேதான் கோவிலுனுள்ளே இருப்பார்.

‘ ஸ்நானம் ஆகல கோவில் பக்கம் போவேண்டாம்’

அம்மா எனக்குச்சொன்னாள். நான் அஞ்சலகத்தைப்பார்த்துகொண்டே நடந்தேன். அலுவலகம் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காக்கி யூனிஃபாரம் போட்ட சில சிப்பந்திகள்  பார்சல் மூட்டைகளைத் தள்ளிக்கொண்டும்  தபால்களைப்பிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அஞ்சலக வாயிலில் சிவப்பு வண்ணமடித்த தபால் பெட்டி தொங்கிக்கொண்டிருந்தது.

கடிதங்கள் என்று அதன்  தொங்கும்  திறப்பு மீது  எழுதியிருந்தது. ஓரிருவர் தபால்களை அதனுள்ளாகப் போட்டுவிட்டு சென்றனர். தபால்  பெட்டியின் உள்ளே சென்று விட்டதா என்பதை உறுதி செய்துகொண்டே சிலர் இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

இடது புறமாய் கல்வி இயல் என்று எழுதிய பலகை ஒரு  பெரியகட்டிடத்தின் முன்பாகக்காட்சியளித்தது. விருந்தினர் மாளிகை என்றெழுதிய சுவர் விளம்பரம் ஒரு பெரிய கட்டிடம் ஒன்றிற்கு வழிகாட்டியது.

‘ நீ யானு தமிழ் படிக்கறே எனக்கு அதுவே தகறாறு’

‘’ உன் காலம் வேற. இப்ப அப்பிடி இல்ல. காலம் மாறிண்டே இருக்கு  ஆண் பொண் எல்லாரும் படிக்கறா நன்னா படிக்கறா’

‘ சாதம் பொங்கணும் புள்ளய பெத்துக்கணும் பொம்மனாட்டின்ன அவ்வளவுதான்னு ஒரு காலம் இருந்துதே’

‘ரொம்பக்கொடுமைம்மா’

நானும் அம்மாவும் நடந்துகொண்டிருந்தோம். இசைக்கல்லூரி வாயிலில் வயலின் இசை சன்னமாய் வந்துகொண்டிருந்தது.

கல்லூரியின்  வாயில்படிக்கு இரு மருங்கிலும் இரண்டு சிலைகள்  மாடத்தில் கண்ணாடிப் பேழைக்குள் இருந்தன.

சாலையில் இருந்து கீழே எழுதிய எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை.

‘ உனக்கு பாட்டு வருமே.’

‘ என் அம்மா தனக்குதெரிஞ்ச பத்து பாட்ட எனக்கு சொல்லிக்கொடுத்தா’ அது அம்மாவுக்கு அவ அம்மா சொல்லிக்கொடுத்தது’

‘ பாட்ட எழுதுவியா’

‘ எங்க எழுதுறது எல்லாம் மனசுல எழுதிண்டதுதான்’

‘உங்க அம்மா’

‘ என் அம்மாவுக்கும் பாட்டு தெரியும் பொட்ட நெட்டுருதான்’

‘அது என்ன புதுசா சொல்ற’

‘ஒண்ணும் இல்லேடி குருட்டுப்பாடம்தான்னு சொல்றேன்’

‘ நீ எனக்கு சொல்லித்தரல’

‘தரணும் தரணும்தான்’ அதுக்குள்ள ஆயிரம் பிடுங்கல் ஏதோ வேல’

அம்மா சன்னமாய் சிரித்தாள்.

அடுத்த கட்டிடத்திலிருந்து ரசாயனப்பொருட்களின் நெடி வந்து கொண்டே இருந்தது. ஆராய்ச்சி மாணவர்கள் எதேனும் அமிலங்களை வைத்துப்பரிசோதனைகள் செய்துகொண்டிருக்கலாம். எதிரே  இடது புறம் விலங்குளின் உடற்கூறு பற்றிய படங்கள் சுவரில் பெரிய அளவில் எழுதப்பட்டு இருந்தன.

நான் அப்படியே பார்த்துக்கொண்டே போனேன். பூமா கோவில் வந்தது. அங்கு இசுலாமியர்கள் சிலர் இங்கும் அங்கும் நின்றார்கள். இசுலாமியப்பெரியவர் யாரோ அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அதன் வாயிலில் பேருந்து நிறுத்தம் இருந்தது. ஒன்றிரெண்டு ஆட்டோக்கள் நின்றுகொண்டிருந்தன.

‘அதோ பார் மணிக்கூண்டு. கடியாரம் உச்சியில் வைத்திருக்கிறார்கள். நான்கு பக்கமும் அது நேரம் காட்டிக்கொண்டிருந்தது. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அது ஒரு பிரத்யேக இசையொலி எழுப்பிக்கொண்டிருந்தது.

 எதிரே நூலகக்கட்டிடம் கம்பீரமாகக்காட்சியளித்தது.  நூலகத்திற்கும் நிர்வாக அலுவலகத்திற்கும் நடுவே அண்ணாமலைச்செட்டியார் சிலை வைக்கப்பட்டிருந்தது.

‘இதுதான் செட்டியார் சிலை பாத்துக்கோ அம்மா’

‘ பாத்தேன் தலையில முண்டாசு கட்டிண்டு இருக்கார்’

நூலகத்திற்கு படிக்கச்செல்லும் மாணவர்கள் சென்றுகொண்டே இருந்தார்கள். சிலர் கையில் புத்தகங்களோடு திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ் ஆங்கிலம் சமசுகிருதம் என்று எழுதியிருந்த கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டே  நடந்தேன்.

‘ எல்லா படிப்பும் இங்கு இருக்குபோல’

‘எஞ்சினியரிங்க் படிப்பு  ரயிலடிண்ட இருக்கு.  ஆஸ்பிடல்  பக்கத்துல மெடிகல் காலேஜ் இருக்கு, இன்னும் பாசுபதேசுரர் கோவிலுக்கு கீழண்ட போன விவசாய படிப்பெல்லாம் சொல்லித்தரா’

‘ எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க ஆனா’

‘ என்ன ஆனா’

‘ உன் பொண்ணு படிக்கணும்னு உனக்கு தோணல’

‘ நா என்ன பண்றது சொல்லு. வெறுங்கையால ஒருத்தர்  மொழம் போட முடியுமா’

‘ நாம தருமங்குடில இருந்துண்டு ஒண்ணும் பண்ண முடியாதுதான்’

‘ அப்ப்றம் என்ன உனக்குத்தெரியாத சமாச்சாரம் இருக்கா என்ன?’

‘ சரி அம்மா ஆத்துக்கு திருமிடுவோம்.

மாணவர்கள் ஆண்களும் பெண்களும் கைகளில் புத்தகங்களோடு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். கல்லூரி ஆசிரியர்கள் கோட் சூட்டில் அங்கங்கு தெரிந்தார்கள். சில அறைகளில் பாடங்கள் நடந்துகொண்டே இருந்தன. சில மாணவர்கள் தங்களுக்குப்பிடித்த பெண் மாணவிகளோடு மரத்தின் நிழலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். வயசும் பருவமும் அவர்களை நெறிப்படுத்திக்கொண்டிருந்தது. அதை மீறி அவர்களால் வர முடியாமல் இருக்கலாம்தான்.

இருவரும் வந்தவழியே வந்து அஞ்சலகம் தாண்டி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். சித்தப்பா கோவில் பூஜை முடித்து வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அப்பா திண்ணையில் அமர்ந்து தமிழ் நாளிதழ் ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார்.

 

 

                                                                   8

 

‘ போயி எவ்வளவு நேரம் ஆச்சி இப்பதான் வரேள்’

‘’ ஒன்ணும்பண்ணலே இப்பிடி போனம் அப்பிடி வந்தம்’

‘ நீங்க என்ன பண்றது அங்க படிக்கிறவாளுக்கு அங்க வேல இருக்கும்’

‘ என்ன படிக்காம பண்ணிட்ட நீ’

நான் அப்பாவைப்பார்த்து நேராகக் கேட்டே விட்டேன்.

‘தப்புதான் நான் என்ன பண்றது என் சூழ் நில அப்பிடி. இனி அதப்பேசாதே விடு’

அப்பா குற்ற உணர்வோடு அதைக்குறிப்பிட்டார்.

சித்தி எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினாள். எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு முடித்தோம்.

‘சாமி வரல’ சித்தப்பா கேட்டார்.

‘ வரணும் வர நேரம்தான்’

‘சாதம் கட்டிண்டு போமாட்டானா’

‘ ஸ்கூல் பக்கம்தான். நாம் மேற்கால இருக்கோம் ஸ்கூல் வடக்கால இருக்கு’

‘எதுக்கு’

‘ கோவில வச்சிதான் சொல்றேன்’ சித்தப்பா அப்பாவுக்குச்சொன்னார்.

சாமி வேக வேகமாக வீட்டினுள் நுழைந்தான்.

‘என்னடா லேட்டு’

‘லாஸ்ட் பீரிய்ட் சார்  நடத்திண்டே போயிட்டார்’

‘யாரு’

‘தமிழ் அய்யாதான்’

’மொதல்ல சாப்பிடட்டும்  நீங்க அப்புறம் பேசிக்கலாம்’

சித்தி சித்தப்பாவுக்குக் குறுக்கே பாய்ந்தாள்.

தட்டை அலம்பி வைத்துக்கொண்டான் சாமி.

‘ நான் சாதம் போடறேன்’ நான் சித்தியிடம் சொன்னேன்.

‘பேஷா போடேன் நான் தெனமும்  அவனுக்கு  சாதம் போடறேன். இண்ணைக்கு  சித்த ஒரு மாற்றலா இருக்கட்டுமே’

நான் சாமிக்கு ப்பரிமாறி முடித்தேன்.

‘ நீ தட்ட வச்சிட்டு போ நா அலம்பிக்கறேன்’

‘இல்லக்கா நீங்க எச்சலிடுங்கோ அது போதும் அம்மா சித்தி எல்லாரும் படுத்துனுட்டா’

‘சமத்துடா நீ’

மெய்யாலும் சாமி சமத்தாகவே இருந்தான். எனக்கு அவனை ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு தம்பி தங்கை என்று யாருமில்லையே.

‘வரேன் அக்கா ‘ சொல்லிய சாமி ஸ்கூலுக்குக்கிளம்பி விட்டான்.

அப்பாவும் சித்தப்பாவும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கென்று ஏதோ ஒரு தலைப்பு கிடைத்து விடுகிறது.

தமிழ் நாளிதழ் ஏதேனும் ஒன்று சித்தப்பா வாங்கி விடுகிறார். அப்பா அதனை ஒரு வரிவிடாமல் வாசித்து விடுகிறார்.

‘ காவேரித்தண்ணிக்கு  இங்க எவ்வளவு சண்டை. எத்தனை கேசு எத்தனை ஆபிசர்ங்க. கோடி கோடியா  ருவா செலவு ஆறது.  வருஷா வருஷம்  கொள்ளிடம் ஆத்து வழியா  ஓடி  கிழக்க கடல்ல எவ்வளவு   காவேரி தண்ணி வேஸ்டா போய்ச்சேரறது.  கணக்கு பாக்குறாளா. அதுக்கு எதானு வீராணம் ஏரி மாதிரி பெரிய ஏரி    ஒண்ண திருச்சியண்ட இல்ல  பக்கத்துல கட்டப்பிடாதா’

‘பெரிய யோஜன எல்லாம் பண்ற அன்ணா நீ’

அப்பா சிரித்துக்கொண்டார்.

‘ ஆத்துல சுவத்துல ஒட்டிண்டு இருக்குற ஒட்டடைய  அடிக்கணும் பாக்கறன் நாலு நாளா முடியல’

‘ நாம என்ன சட்டசபைக்கா போமுடியும். கட்சித்தலைவர்னா அங்க எதனா பேசி பாக்கலாம். கோவில்ல மணி அடிக்கறவா எல்லாம்  சட்டசபைக்கு போமுடியுமா’

‘இப்ப கோவில்ல  எல்லா ஜாதிக்காராளும் அர்ச்சகர் ஆலாம்னு ஆயிட்து இல்லயா’

  அது ஆயிட்து அவ்வளவுதான். சரியா பழக்கத்துக்கு வரல’

‘தமிழ்ல அர்ச்சன பண்லாம்னு ஆயிட்து’

‘பொம்மனாட்டிகள் இன்னும் அர்ச்சகர் ஆகல’

‘ பொண்டுகள் ஓதுவார் ஆயிருக்கா’

‘எதோ நடந்துண்டே இருக்கு’ அப்பா சுவாரசியம் இல்லாமல் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

‘ இந்த பாசுபதேசுரர் கோவில்ல நான் நிவேத்யத்துக்கு சாதம் பொங்கி ஆத்துலேந்து எடுத்துண்டு போறேன். ஆனா குருக்கள் ஒத்தன மட்டும்  பிராம்ண புள்ளயா போடமாட்டாளாம். இல்லன்னா ஒன்ன பிராம்ண புள்ளன்னு கோவில்ல போடச்சொல்வேனே. இங்க இருக்கறவா ஒத்துக்க மாட்டாளே’

‘ தருமங்குடில மட்டும் என்ன பக்கத்தாத்து பிராம்ண புள்ள தெலுங்கா  அவன் தருமை நாதன்  கோவில்ல  அர்த்தமண்டபத்தோட நிக்கணும். கர்ப்பகிரகத்துக்குள்ள வரப்பிடாதுன்னு  தரும கர்த்தா புள்ள சொல்றார் தானே’

‘ நம்மள பிராம்ணாள்ள  சேத்துகறது இல்லே.  அப்பிராம்ணாளோடயும் நாம சேரமுடியாது.’

‘அது எல்லாம் பெரிய சமாஜாரம் பொணந்தூக்கி வயத்த கழுவுகிற சவுண்டிபிராம்ணா கூட ஃபார்வேடு கிளாஸ்தான் அது எல்லாம் எங்க போய்ப் பேசுவே’

நான் அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதக்கேட்டுக்கொண்டே இருந்தேன். நமக்குத் தெரிந்துகொள்ள இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருப்பதையும் எண்ணி எண்ணி மலைப்பாக இருந்தது.

அம்மாவும் சித்தியும் உறங்கிப்போனார்கள்.

 

                                                                                  9

எப்படியாவது நான் படிக்கவேண்டும். படித்து விஷயங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.உத்யோகம் ஒன்று பெற்று விடுவதற்காக மட்டும் படிப்பது என்பதில்லை. படிக்கவேண்டும் என்பதற்காக நான் படிக்கவேண்டும். மனம் முழுக்க இதுவே நிறைந்து இருந்தது.

அப்பாவின் யோசனை. யாரேனும் இன்னொரு இளைஞன் கோவில் பூசை செய்கிறேன் என்று வந்தால் போதும் அவனுக்கு என்னைக்கட்டிக்கொடுத்துவிடுவதற்குத் தயாராக இருக்கிறார்.

சாமிநாதன்  ஆறம் வகுப்பு புத்தகங்களையெல்லாம் புரட்டிக்கொண்டு இருந்தேன். தமிழ் புத்தகம் இருந்தது. ஆங்கிலம் அறிவியல் என புத்தகங்கள் இருந்தன. சில புத்தகங்களை அவன் பள்ளிக்கு எடுத்துச்சென்றிருப்பான். அவன் எழுதிய நோட்டுக்களை எல்லாம் பார்த்தேன். எனக்கு  படிக்க முடிந்தது. அதுவே மகிழ்ச்சியாக இருந்தது.

சாமிநாதன்   வந்ததும் அவனிடம் கேட்டு ஒரு ரஃப்  நோட்டு வாங்கி தமிழ் எழுதிப்பார்க்கவேண்டும் நான் முடிவு செய்து விட்டேன். நான் படிக்கவேண்டும் என் ஆழ்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

ஆங்கிலம் எனக்கு சுத்தமாகத்தெரியாது என்றுதான் சொல்லவேண்டும். தருமங்குடிப் பள்ளியில்  ஆங்கிலப் எழுத்துக்கள் சொல்லிக்கொடுத்தார்கள். அரை குறையாக ஞாபகம் இருக்கிறது.  சில வார்த்தைகள் கற்றுக்கொண்டேன். அவ்வள்வே. அதோடு எல்லாம் போயிற்று. அண்ணாமலைநகர் வந்து பார்த்தபோது உலகம்  வேறுமாதிரியாய்த்தெரிகிறது. எத்தனப்பெண்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். கல்லூரியில் ஆசிரியராகப்பணியாற்றுகிறார்கள். ஆராய்ச்சி செய்கிறார்கள். எப்படியாவது படித்தாகவேண்டும்.

அப்பா கையை  டாக்டரிடம் கொண்டுபோய் காட்டவேண்டும். இனி பிரச்சனை இல்லை என்று டாகடர் சொல்லவேண்டும் . அதுவே என் பிரார்த்தனை  நாட்கள ஓடிவிட்டன நாளைக்கு அப்பாவை  கூட்டிக்கொண்டு  டாக்டரைப் பார்த்துவிட்டு வரவேண்டும்.  கையில் போடப்பட்டுள்ள கட்டு நாளை அவிழ்த்துப்பார்த்துவிட்டு என்ன சொல்கிறாறோ என்கிற கவலை இருந்து கொண்டே இருந்தது. அப்பாவுக்கும் வேறு ஒரு வேலை தேடியாக வேண்டும். இதற்கிடையே நான் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம். என்னதான் நடக்கவிருக்கிறதோ.  இப்போதைக்கு எதுவும் தெளிவாகச் சொல்வதற்கில்லை. அவ்வளவே.

மறு நாள் காலைகிலேயே அப்பா டாக்டர் சீட்டுக்களையெல்லாம் எடுத்துவைத்துகொண்டார்.

‘என்ன அன்ணா அதுக்குள்ள டாக்டர பாக்கணுமா’

‘மூணு நாளு கழிச்சி வரச்சொன்னார். ஆச்சு மூணு நாள் முடிஞ்சிபோச்சே’’

‘ கை எப்பிடி இருக்கு’

‘ எனக்கு ஒண்ணும் தெரியல. வலி இல்ல’

‘வலி இல்லன்னா அப்புறம் என்ன கஷ்டம்’

‘ டாக்டர் என்ன சொல்றாரோ’

’போயி காமிச்சுட்டு வா அப்பதான் தெரியும்’

அம்மா ரெடியாகி இருந்தார்.  நாங்கள் மூவரும் டிபன் சாப்பிட்டாயிற்று.

‘ நடந்தே போயிடலாம்’

‘ வேண்டாம் ஆட்டோக்காரன் வருவான் இரு’

ஆட்டோக்காரனுக்கு நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்.

‘இன்னும் அவன காணல’

‘இப்ப  காலை  டிபன் சாப்பிட வந்தான் சாப்பிட்டு முடிச்சி இப்பிடியேதான் போவான். அவன் சாப்பிடபோறத பாத்தேன் அவனண்ட  சொல்லியிருக்கேன் சித்த பொறும வேணும்’

ஆட்டோக்காரன் சித்தப்பா வீட்டு வாயிலில் வந்து நின்றான்.

‘ ஏறுங்க அய்யா’

நாங்கள் மூவரும் ஏறி அமர்ந்தோம்.

‘அவாலண்ட காசு வாங்காதே நம்ம கணக்கு இது’ சித்தப்பா ஆட்டோக்காரனுக்குச்சொன்னார்.

சித்தி வாயிற்படியருகில் வந்து நின்றுகொண்டார்.

‘ நன்னா டாக்டர் கிட்ட கேட்டுகுங்கோ அப்புறம் அவர தேடிண்டு போமுடியாது’

சித்தி எனக்கு யோசனை சொன்னாள்.

வண்டி புறப்பட்டது.

ஆட்டோ வேகமாகச்சென்றது. சட்டென்று மருத்துவமனையை அடைந்து அப்பா சீட்டில் பதிவு செய்துகொண்டேன்.

ஓ பி யில் கை கால்கள் பிரிவுக்குச் சென்று காத்திருந்தோம். கூட்டம் இன்று அவ்வளவாக இல்லை.

அப்பாவின் கை கட்டு அகற்றப்பட்டது. அது அகற்றிய கம்பவுண்டருக்கு அப்பா ஐம்பது ரூபாய் தரச்சொன்னார்.

நான் ஐம்பது ரூபாயை எடுத்துக்கொடுத்தேன்.

‘இல்ல நீங்க வச்சிகுங்க. சாமி கோவிலு படைக்கிறவங்கதானே’

‘ ஆமாம்’ பதில் சொன்னார் அப்பா.

‘’’ காசி வேனாம் நீங்க நல்லாயிட்டா அது போதும்’ கம்பவுண்டர் சொன்னார்.

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எண்ணிப்பார்த்தேன்.

டாகடரிடம் அப்பா கையை காண்பித்தார். ஜாஸ்தி வெயிட் எதுவும் தூக்காதிங்க அவ்வளவுதான். ஒரு மாத்திரை எழுதி தர்ரன் . வலி இருந்தா போடுங்க இல்லன்னா வேனான். ஒரு ஆயின் மெண்ட் எழுதி இருக்கன். அத அப்ப அப்ப போட்டுகுங்க. ஒண்ணும் ப்ராப்ளெம் இல்ல. ஆனா ஒரு ஆறு மாசம் அந்தக்கையால  வெயிட் ஜாஸ்தி தூக்கவேணாம். அது பத்திரம்’

நானும் அம்மாவும் டாக்டருக்கு நன்றி சொன்னோம்.

‘ இது ஒரு கொழந்த தானா உங்களுக்கு’

‘ ஆமாம்’ அப்பா சொன்னார்.

‘படிக்க வக்கிலயா’

‘ இல்ல கட்டிகுடுத்துடலாம்னு பாக்கறேன்.’

‘ பொண்ணு  படிக்கலாம் அப்பறம் கட்டிகுடுக்கத்தான் போறிங்க ஆணு பொண்ணு யாருக்கும் . படிப்பு ரொம்ப முக்கியம் இனிமே படிப்பு இல்லாம ஒண்ணும் செய்ய வைக்காது’டாக்டர் எங்கள் மூவருக்கும் சொல்லி முடித்தார்.

நாங்கள் டாகடரிடம்  விடைபெற்றுக்கொண்டோம்.

‘ அவருக்கு சொல்லணும்னு தோணுது சொல்றார்’

அப்பா சொல்லிக்கொண்டே நடந்தார்.

‘ நீ மருந்து மாத்திரை வாங்கிண்டு வா’

நான் பார்மசி நோக்கிச்சென்றுகொண்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்கள்.

‘ ஆட்டோ பிடிச்சிண்டு வந்துடு’

அம்மா எனக்குச்சொன்னாள்.

ஆட்டோக்காரனைத்தேடினேன். ஒருவனையும் காணவில்லை. குதிரை வண்டிக்காரன் நின்று கொண்டிருந்தான். அதுவும் ஒரே ஒரு குதிரைவண்டிதான்.

‘ வண்டி வேணுமா’

‘ ஆமாம்’ என்றேன்.

‘ஆட்டோக்காரங்களுக்குள்ள செத்த நாழிக்கி முன்னாடி தகறாறு. ஆளுங்கட்சி எதிர்க்கட்சின்னு  முட்டிகிட்டாங்க. இப்பக்கி வர மாட்டாங்க. எங்க போவுணும்’

’ திருவக்குளம் கோவிலண்ட’

‘ நானு வர்ரன்’

‘ வண்டில ஏறிகுந்திக அம்மா’

‘ நானு போயிகிட்டே இருக்கன் நீ வந்துகினு இரு அது போதும்’

நான் அம்மா அப்பா நிற்கும் மரத்தடிக்குப்போய்ச்சேர்ந்தேன். குதிரை வண்டி என் பின்னாலேயே வந்தது.

‘ வண்டில ஏறி வரப்பிடாதா’ அம்மா கேட்டாள்.

‘குருக்களய்யிரு வூட்டுக்கா’

‘ ஆமாம் என் தம்பிதான் இங்க குருக்களு’

  நல்ல மனுஷாள்தான் வண்டில ஏறுங்க’

அப்பா அம்மா இருவரும் வண்டியில் ஏறினர்.

‘எல்லாம் எடுத்துனூட்டமா ஒண்ணும் வச்சிடலேயே’

‘ எல்லாம் எடுத்தூனூட்டம் போலாம்’ நான் வண்டியில் ஏறிக்கொண்டு குறுக்குக் கம்பியை எடுத்து அதன் வளையத்தில் போட்டேன்’

‘ எனக்கு குதிரை வண்டிய வுட்டா வேற வேல தெரியாது.’

‘ ஆட்டோ  ஒண்ணு வாங்கிகலாம்ல’

‘என்ன சாமி இனிமே அத கத்துகினு என்னாவுறது சொல்லு. நாம காலத்த இப்பிடியே ஓட்டிகிட்டு போயிடவேண்டியத்தான்’

‘ இங்க எத்தினி குதிரை வண்டி  இருக்கு’

‘ஒண்ணே ஒண்ணுதான்’

‘ மொத ஒரு நாளு குதுர வண்டில போனோம். அப்பயும் அந்த ஆசாமி இது ஒரு வண்டிதான் இருக்குன்னாரு’

‘ தேவுலாமே. இது ஒரு வண்டிதான் என் மச்சான் அண்ணிக்கி ஓட்டியாந்து இருப்பான். ஓட்டுற ஆசாமிதான்  மாறி இருக்கு இப்ப’

‘ இப்பிடி கூட இருக்குமோ’

‘ ஆமாம் சாமி’

‘ அர்ரி அர்ரி என்ன அன்ன நட நடக்குற ஓடு ராசாத்தி  ஓடு’ குதிரைக்குச்சொல்லிக்கொண்டிருந்தார் வண்டிக்காரர்.

‘குதிரை பொண்ணா’

‘’பொட்டக்குதிரை தான்’

அப்பாவுக்கு வண்டிக்காரன் பதில் சொன்னான். குதிரை சிட்டாய்ப்பறந்தது.

‘ குருக்களய்யா வூடு வந்தாச்சி’

 நாங்கள் மூவரும் இறங்கிக்கொண்டோம்.

சித்தப்பா ‘ நம்ம கணக்கில வையி’ வண்டிக்காரனிடம் சொல்லிமுடித்தார்.

‘ நீங்க போங்க அய்யா இது எங்க அய்யாவுக்கும் எனக்கும் உள்ள சமாச்சாரம்’

வண்டிக்காரன் அப்பாவிடம் சொன்னான்.

சாமி மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தான்.

‘கை எப்பிடி பரவாயில்லையா பெரியப்பாவுக்கு’ என்னைக்கேட்டான்.

‘’ தேவலாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்னு சொல்லி இருக்கா. ஒரு ஆறு மாசம் அப்பிடி இருக்கணும். அப்பறம் எல்லாம் சரியாயிடும்னு சொல்றா’

சாமிநாதன் அப்பாவை ஒருமுறை பார்த்துக்கொண்டான்.

‘நான் பள்ளிக்கூடம் போயிட்டுவரேன்’ அவன் கிளம்பினான்.

‘நன்னா படிடா குழந்தே’ அப்பா  சாமிக்குச்ச்சொன்னார்.

’அவன் சமத்துன்னா’ அத்ற்குள்ளாக அம்மா சாமிக்கு பரிந்துகொண்டு வந்தாள்.

‘சேதி என்ன  டாக்டர் என்ன சொன்னார்’

‘’ இல்லடா கையில ஒண்னும் பிரச்சனை இல்ல. ஆனா ஒரு  ஆறு மாசம் ரொம்ப வெயிட்டா எதுவும் தூக்க வேண்டாம்னு சொல்லியிருக்கா. மற்றபடி கையில ஒண்ணும் பிரச்சனை இல்லேன்னு சொல்லிட்டா’

  எக்ஸ்ரே எடுத்து பாத்தாளா’

‘ ஆமாம் எக்ஸ்ரே பாத்துட்டுதான் டாக்டர் சொன்னார்’ அப்பா சித்தப்பாவுக்குச்சொன்னார்.

’ எல்லாரும்  கை கால அலம்பிகோங்கோ  சாப்பிடலாம் மணி ஆறது’ சித்தி எல்லோருக்கும் சொன்னாள். சித்தியைப்போல் ஒரு நல்ல மனுஷியைப் பார்ப்பது அரிதுதான். கரிசனம் என்பது சித்தியின் கூடப்பிறந்த ஒன்றாக இருந்தது. சித்தியைப்பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

 ’தலைக்கு வந்தது தலைப்பாகயோட போச்சு’ சித்தப்பா அப்பாவின் கையைப்பற்றிச்சொன்னார்,

அப்பா இந்த வேளை துவங்கித் தனது வலது கையாலேயே சாப்பிட்டார்.

‘இப்ப இந்த கையால சாப்பிடறது கூட ஏதோ புதுசா தெரியர்து’

;எல்லாம்  பழகணும் அவ்வளவுதான் சம்மணம் போட்டு உக்கார்ரதே வெள்ளக்காரனுக்குத்தெரியாது. வெறுங்கையால சாப்பிடவே ஜப்பான் காரனுக்கு தெரியாது. எப்பவும் ரெண்டு குச்சிய வச்சிப்பான்’

சித்தப்பா அவருக்குத் தெரிந்ததைச்சொன்னார்.

மதியம் சாப்பிட்டுவிட்டு  எல்லோரும் ஓய்வு எடுத்துக்கொண்டனர்.

அம்மா கொஞ்சம் நிம்மதியாகக்காணப்பட்டாள்.

‘தருமங்குடிக்கு இனி போமுடியாது’

சித்தி அம்மாவிடம் சொல்லிக்கொண்டாள்.

’அந்த தருமகர்த்தா புள்ள நம்மள எப்ப கழிச்சிகட்டலாம்னு பாத்துண்டு இருந்துருக்கார்னு இப்ப நெனக்கிறேன். இல்லேன்னா கணக்க முடிச்சி அனுப்புவாரா’

‘ அவருக்கு என்ன கணக்கோ’

‘எதானு இருக்கும் இல்லாமலா இப்படி பண்ணுவார்’

‘உங்க ஆத்துக்காரருக்கு  தர்மகர்த்தா செஞ்ச தப்பு எதனா தெரிஞ்சி இருக்கும்.  நேரா பாத்தும் இருக்கலாம். இவன் எதுக்கு இங்க இருக்கணும். எங்கயானு தொலையட்டும்.  அதுவே நிம்மதின்னு நெனச்சி இருக்கலாம்’

  எங்க ஆத்துகார் என்னண்ட  எதயும் வாய திறக்கமாட்டார்’

‘ஆம்படையான் பொண்டாட்டிக்குள்ள ஒத்தருக்கு ஒத்தர் தெரியாம என்ன சேதி வேண்டிருக்கு’

‘வேண்டிருக்குதான்’ அம்மா சொன்னாள்.

‘ என்ன ஏம் பேரு அடிபடறது’ அப்பா அவர்களிடம் வந்து நின்றுகொண்டார்.

‘இல்ல தருமங்குடில தருமகர்த்தா புள்ள டக்குன்னு உங்க கணக்கு வழக்கு முடிச்சி அனுப்பிவச்சிட்டாரே அது ஏன்னு’ சித்தி ஆரம்பித்தாள்.

‘ கோவில் குருக்களுக்கு தெரியாம ஒண்ணும் எங்கயும் நடந்திடாது. எனக்கு சிலதுகள் தெரியும் அது என் ஆத்துக்காரிகிட்டகூட சொன்னதில்ல. அத எதுக்கு  நாம பேசிண்டு’

‘ஆக எதோ இருக்கு’ சித்தி அழுத்திச்சொன்னாள்.

’ இருக்கு இல்லாமலா இவன் ஊரை விட்டு போயிட்டா நமக்கு நல்லதுன்னு அவர் நினச்சி இருக்கலாம் இத பத்தி எல்லாம் பேசிக்க முடியுமா, பேசிக்கலாமா விடுங்கோ ஆனது ஆச்சு போச்சு அது எல்லாம் தெரிஞ்சிண்டு நமக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்ல’

‘இப்ப வேற ஜோலி பாத்தாகணும் இல்லயா’

‘பாத்துதான் ஆகணும்’ அப்பா அழுத்தமாய்ச்சொன்னார்.

அத்தோடு இந்தப் பேச்சு முடிந்து போனது.

அவரவர்கள் கலைந்து போயினர்.

சாமிநாதன் பள்ளி விட்டு வீடு திரும்பினான்.

சித்தி எல்லோருக்கும் காபி தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பா வாசல் திண்ணைக்குப்போய் உட்கார்ந்துகொண்டார்.

வீதியில் கோழிகள் கும்பலாய் சுற்றி வருவதும் சண்டையிட்டுக்கொள்வதுமாய் இருந்தன.

‘ சாமி இந்த கோழி எல்லாம் யாரதுப்பா’

  தெருக் கோடில  ஒத்தர் கோழி வளர்க்காறார் அதுகள் தெருவ சுத்தி சுத்தி வரும்’

 எல்லோரும் காபி சாப்பிட்டு முடித்தோம்.  சித்தப்பா சாய ரட்சை பூஜைக்குக்கோவிலுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்.

 

                                                            10

 

’நானும் வர்ரன் ‘ அப்பா சித்தப்பாவிடம் சொல்லிக்கொண்டு அவரோடேயே கோவிலுக்குப் புறப்பட்டார்.

‘அப்பா கோவிலுக்கு போறார்’

‘ போகட்டுமே நல்லதுதான் அண்ணா தம்பி எதானு பேசிப்பா அவாளுக்குள்ள பேசிக்கறதுக்கு எதானு இருக்கும்’

‘எனக்கும் காதுல விழறது என்ன ரகசியம் இருக்கு எங்களுக்குள்ள. என்ன ராஜ்ஜியத்தை ஆளறமா என்ன கோவில் பூஜைய விட்டா என்ன தெரியும்’

‘சும்மா சொன்னேன்’ அம்மா சமாளித்தாள்.

‘’ஒடன் பொறப்புன்னா இது கூட இல்லாம இருக்குமா’

சித்தி தன் பங்குக்குச்சொன்னாள்

சாமிநாதன்  நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டான். சுவாமி படத்துக்கு நமஸ்காரம் செய்தான்.

‘இவனாவது இவன் அப்பா மாதிரி இல்லாம எதானு ஒரு  உத்யோகத்துக்கு போணும். பகவான் நல்லவழி காட்டணும்’

‘கோவில்ல பூஜ பண்றது நல்லவழி இல்லயா’ நான்தான் சித்தியைக்கேட்டேன்.

‘ நல்ல வழிதான் ஆனா  கவர்மெண்ட்     உத்யோகம் மாதிரி ஆகாது. நல்ல சம்பளம் கவுரவம்  கோவில்ல இருக்குற தர்மகர்த்தா மாதிரி யாரும்  மேல  இருந்துண்டு கெடுபிடி பண்ணமாட்டா. இந்த கோவில்  உத்யோகத்துல  ஒரு நாள் லீவு உண்டா என்ன. ரிடையரானா பணம் எதானு மொத்தமா தருவாளா ஒண்ணும் இல்லயே’

‘தர்மகர்த்தான்னா எல்லாருமே இப்படித்தான் இருப்பாளா’

‘ அனேகமா இப்படித்தான் நல்ல தர்மகர்த்தான்னு யாரையும் இதுவரைக்கும்  நான் கேள்விப்பட்டதில்லே’ சித்தி எனக்குச்சொன்னாள்.

‘ந்ல்ல மனுஷாளா மனிதாபிமானம் உள்ளவாளா தர்மகர்த்தால யாரும் இருக்க்மாட்டாளா என்ன’

‘ இல்லடி, அப்படி   நல்ல மனுஷாளா இருக்கறவா தர்மகர்த்தாவா வரமுடியாதோ என்னவோ’

‘ எல்லாம் பகவான் செயல்னா இதுவும் தானோ’ நான் தான் கேட்டேன்.

அம்மா சிரித்துக்கொண்டார்.

சகோதரர்கள் இருவரும் கோவிலுக்குச்சென்றார்கள். அப்பாவுக்கு சித்தப்பா கோவிலை எல்லாம் சுற்றிக்காண்பித்தார்.  சாயரட்சை பூஜையை முடித்துக்கொண்டார்கள்.. கோவிலைப்பூட்டிப்பெறுக்குவதற்கும் பூப்பறிப்பதற்கும் தீபாராதனை சமயம்  விளக்கு ஏற்றுவதற்கும் ஒரு மெய்க்காவல் இருந்தார். அவரின் பெயர் சுப்பிரமணியன். சுப்புணி என்றுதான் அவரை  ஊரில் எல்லோரும் அழைத்துக்கொண்டிருந்தனர். அவர் தான்  தினமும்  கோவில் ஆராய்ச்சிமணியை அடிப்பவர். கோவிலைப்பூட்டிச் சாவியை அவரே சித்தப்பாவிடம் அன்றாடம் ஒப்படைப்பார்.

‘என்ன சாமி கையி தேவலாமுங்களா’

‘ தேவலாம் ஆனா ஜாக்கிரதையாய்   இருந்துக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்குறாரு ரொம்ப வெயிட்டு தூக்கக்கூடாது’

‘பதனமா பாத்துகுங்க’

‘கரண்டு விளக்கு எல்லாம் நிறுத்தியாச்சா’

‘ கோபுர உச்சி  வெளக்கும்  பெரிய வாசல் வெளக்கும் எரியும் பாக்கிய எல்லாம் நிறுத்திட்டன்’

‘’பெரிய கதவ  சாத்திப் பூட்டு’

மெய்க்காவல் சுப்புணி கோபுர வாயிலின் பெரிய கதவைப்பூட்டினான். சாவியை  ஒப்படைத்தான்.

‘ எல்லாத்தையும் ஓரளவுக்கு பாத்துனூட்ட நீ’

’ பாத்துனூட்ட்டேன்.   ஏண்டா  இன்னும் இந்த கோவில்  தர்கர்த்தாவ பாக்கணும் அவரையும்  நீ தெரிஞ்சிக்கணும்’

‘ நேரா அந்த தர்மர்த்தா  ஆத்துக்கு போவம். அவரயும்  உனக்கு தெரியணும்.  அது முக்கியம்  அக்ரி காலேஜ் கிட்ட அவர் வீடு’

‘’அவரயும் பாத்துடுவம்டா’

இருவரும் நிவேத்ய தூக்கோடும் கோவில் சாவியோடும் தர்மகர்த்தா வீடு நோக்கி நடந்தனர்.

விவசாயக்கல்லூரி  இருக்கும் தெருவில் நாய்கள் கூட்டமாக இருந்தன. ஆனால் ஏனோ ஒன்றையொன்று விரட்டிகொண்டு  சண்டையில் இறங்காமல் சமத்தாக இருந்தன.  ஆச்சரியந்தான்.

‘அதோ கார் சேப்பு  நெறத்துல  நிக்கறதே அந்த வீடுதான்’

‘’சரிடா தோ வந்துட்டமே’

இருவரும் தர்மகர்த்தா வீட்டு வாயிலில் நின்றார்கள்.

தர்மகர்த்தா வீட்டின் உள்ளிருந்து வாசலுக்கு வந்துகொண்டிருந்தார்.

‘ யாரு குருக்களய்யாவா என்ன இவ்வளவுதூரம்’ தர்மகர்த்தாவே ஆரம்பித்தார்.

‘சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன்’

‘இது யாரு  எப்பவோ நா பாத்துமிருக்கேன்’

‘ என் அண்ணா தருமங்குடில இருந்தாரு. இப்ப அங்க இல்ல. என்னோட தான் இருக்கார். வந்து பத்து நாளு இருக்கும்’

‘ஏன் அங்க தருமங்குடில   அய்யா பண்ற  கோவில் பூஜை என்ன ஆச்சு’

‘ போன சனிப்பேத்திலேந்து  கையில என்னமோ சதை பெறண்டுபோயி  தொந்தரவு நம்மூர் ஓ பில  பாத்துது.  கையில சின்ன ஆப்ரேஷன் பண்ணியிருக்காங்க.  கட்டு போட்டாங்க. கட்டு அவுத்தாச்சி. இப்ப தேவலாம். ஆறு மாசம் வெயிட் எதுவும் தூக்ககூடாதுன்னு ஆஸ்பத்திரில  சொல்லியிருக்காங்க’

‘இது எப்பிடி வந்துது’

‘ சனிபேத்தியில தேங்கா ஏகத்துக்கு  ஒடச்சிதான் இப்படி ஆகியிருக்கணும் ஒலகத்துல எல்லா சாமி  சந்நிதியிலயும்  எவ்வளவோ தேங்கா ஒடைக்கிலயா. நம்ம நேரம்’

‘இனிமேலுக்கு  தருமங்குடி போலாமில்லே’

‘’போக முடியாதுங்க. அங்க பூஜைக்கு  கூடலையாத்தூர் குருக்களய்யா ஒத்தர  சேத்துட்டாங்க. கையிலிருந்த  சாமான் செட்ட ஒரு வண்டில  அள்ளி போட்டுகிட்டு என் வீட்டுக்குதான் அண்ணன்  குடும்பத்தோட வந்துட்டாரு’

‘புள்ளிங்க’

‘ஒரே பொண்ணு.  அண்ணன் சம்சாரம்  அண்ணியிருக்காங்க’

‘ சரி குடும்பம் ஒண்ணும் பெரிசு இல்ல  அதுவரைக்கும் தேவலாம் தருமங்குடி போயி திரும்ப வேல குடுங்கன்னு  தர்மகத்தாகிட்ட கேட்டு பாக்கலாம்ல’

‘ அந்த தர்மகர்த்தா புள்ள  அண்ணன் சம்பள கணக்க முடிச்சி  கெளப்பி விட்டுட்டாரு’

‘ அப்ப அங்க போறது இனிமேலுக்கு  சரியா வராது’ என்றார்  தர்மகர்த்தா.

‘இங்க இருக்கட்டும்  அண்ணன் நானும் எதாவது  கோவில் பூசை இந்த பக்கத்துல  காலியிருக்கான்னு பாக்குறன்   அபிஷேகத்துக்கு  தோண்டி தண்ணியெல்லாம் தூக்க வைக்காது. தேங்கா ஒடைக்கறது கூட பாத்துதான் செய்யிணும்’

‘’ஒரு ஆறு மாசம் இப்பிடி இருக்கணூமா  அப்புறம் கையி  நல்லபடி ஆயிடும்ல’

‘ஆயிடுங்க’

‘அந்த அம்மா  பொறந்த வூடு எப்பிடி வசதியா’

‘அதெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவாது. ரொம்ப கஷ்ட  ஜீ வனம். நம்ப எதாவது குடுத்தா வாங்கிப்பாங்க’

‘குருக்களு  அய்யிரு குடும்பத்துல வெகு ஜனம் இப்படித்தான்   ரொம்ப  ரொம்ப கந்தலாதான் இருக்கு. அந்தக் கடவுள் தன் கூட  எப்பவும்  இருக்குற ஆசாமிவுள பாக்குறதே இல்ல’

அண்ணன் தம்பி இருவரும் தர்மகர்த்தா சொன்னதை  ஆமாம்   ஆமாம் என்று  ஆமோதித்தார்கள்.

’ சரி போயிட்டுவாங்க சொன்ன சேதி நினப்புல வச்ச்கிறேன். நானும் எதாவது கோவிலு  ஆசாமிங்க  பூஜைக்கு ஆளு தேடுறாங்களான்னு  பாக்குறேன்’

‘ நாங்க வர்ரம்’ சகோதரர்கள் தர்மகர்த்தா  விடமிருந்து விடை பெற்றுக்கொண்டார்கள்.

’ஒரு சமாச்சரம் அத உங்க கிட்டயே கேட்டுடலாம்னு’

‘ கேளும் கேளும் முடியும்னா முடியும்னு சொல்லப்போறன்’

‘ ரொம்ப நாளா  பாசுபதேசுரர்  கோவில்ல பரிசாரகர் இல்லாம கஷ்டமா இருக்கு’

‘ ஏன் எனக்குதெரியாதா எங்க போவுறது பிராம்ண புள்ளக்கி, அவனவன் ஓட்டல் வேல பாக்குறான், இல்லன்னா கேட்டரிங்க் போறான். ஒரு சமையல் கோஷ்டி அங்கங்க மொளச்சி போச்சி யாரு  எந்த அய்யிரு இப்ப கோவிலு வேலக்கி எல்லாம் வரேங்கறாங்க’

‘ அந்த வேலயும் சேந்துதான நா  பாக்குறன் கொஞ்சம் சம்பளத்த கூட்டி தரலாமுன்னுதான்’

‘ அப்புறம் அதுக்குன்னு ஒரு ஆளு வந்தப்புறம் என்ன செய்வ’

  கூட்டி குடுத்தத அப்ப கொறச்சிடுங்க‘

‘ போவுற ஊருக்கு வழி சொல்லமாட்டிங்க  அய்யா நீங்க’

‘ எங்க அண்ணன் வேல இல்லாம இருக்காரு அவர பரிசாரகரா வச்சிகிட்டு ஒரு சம்பளம் போட்டு குடுத்தீங்கன்னா கூட நல்லதுதான்’’

  சுத்தி சுத்தி வெஷயத்துக்கு வந்துட்டிங்க. எப்பிடி எப்பிடி இந்த யோசனை உங்களுக்கு வருது. குருக்களய்யிரு வேற  பரிசாரகம் பாக்குற  அய்யிரு வேறதான. இண்ணிக்கு உங்களுக்கு தேவன்னா எதாவது சேஞ்சிக்கறதா அது அதுக்கு காலம் காலமா ஒரு  மொறன்னு இருக்குல்ல. நாலு பேரு கேட்டா நா பதிலு சொல்லுணும்;

‘அப்ப நாங்க வர்ரம் மனசுல இருந்துது கேட்டுட்டேன்;

‘ உங்க அண்ணன்  கோவிலு குருக்களுதான் உம்மவிட மூத்தவரு அவுருக்கு எல்லாம் தெரியும் அவரயே கேட்டுபாரும்’

அப்பா அமைதியாக நின்றார். அவ்வளவுதான்.

இருவரும் தர்மகர்த்தா வீட்டிலிருந்து புறப்பட்டார்கள்,பொழுது நன்கு இருட்டியிருந்தது. தெரு  மின் விளக்குகள் கம்பத்தில் எரிந்துகொண்டுதான் இருந்தன.  எரிந்துமென்ன அவை தம் இருப்பிடத்தை  சுற்றி மட்டுமே வெளிச்சம் காட்டின.

வடக்கிலிருந்து ஊதல் காற்று வீசிக்கொண்டே இருந்தது.

‘அண்ணா நாம மேல ஒரு துண்டோட வேலக்கி  போவேண்டிருக்கு’

‘இல்லடா,  ஒவ்வொரு  உத்யோகத்துக்கும்  ஒவ்வொரு வேஷம்னு இருக்கு’

‘’ ஊட்டில இருக்குற குருக்களு என்ன பண்ணுவான்’

‘’ கோட்டு போட்டுப்பான் குளுறு தாங்க முடியலன்னா அதுக்கு ஏத்தமாதிரி உடுப்ப மாத்திக்கணும் இல்லயா’

‘ லண்டன்ல அமெரிக்கால கனடால எல்லாம் கோவில் வந்தாச்சு அங்க இருக்குற  குருக்களு என்ன பண்ணுவாரு

‘ ஒரு இந்துன்னா கடல் தாண்டப்பிடாதுன்னு ஒரு காலத்துல சொல்லுவா’

‘ ராமர் சீதை அனுமார் எல்லாம் கடல் தாண்டி போயிருக்காளே’

‘சீதா போனாள். ராவணன்   அப்படியே   தூக்கிண்டு  ஆகாசமார்க்கமா லங்கைக்கு  போனான். அனுமார் பறந்து  லங்கைக்கு  போனார். ராமர்  ராம சேதுன்னு ஒரு பாலம் கட்டி அது வழியாத்தான்   லங்கைக்கு போனார்.’

‘எதயும் ரொம்ப நோண்டாதே அது விபரீதமா போயிடும் விட்டுடு’

‘ சரி அண்ணா’

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

‘என்ன இவ்வளவு நேரம்

’ சித்தி பட்டென்று கேள்வி கேட்டாள்.

‘தர்மகர்த்தாவ  பாத்துட்டு வந்தம்’

‘எதுக்கு’

‘சும்மாதான் எதுக்கும் அவருக்கு இங்க நடக்கறதுன்னு தெரியணும்தானே’ சித்தப்பா விளக்கம் சொன்னார்.

‘எல்லாம் சரிதான் மெய்க்காவல் சுப்புணி இப்படியே போனான். அவன் போயி வெகு நேரமாச்சு. உங்கள காணுமேன்னு விஜாரம்’

‘எங்களையும் தேடறான்னா சந்தோஷம்தான்’

‘நாங்க தேடணுமா இல்லையா’

‘சமத்தா பேசறே’ சித்தியைப்பார்த்து சித்தப்பா சொல்லி சிரித்துக்கொண்டார்.

 

 

                                                                     11

 

‘டீ எல்லார்க்கும் எல போடு ஆச்சின்னு ரா பந்தி முடிப்போம்’

என்னைப்பார்த்துத்தான் சித்தி கட்டளைதந்தாள்.

’தோச சுட்டு அடிக்கி வச்சிட்டயா’

‘ஏன் வேல ஆகணும் இல்லயா’

‘ தோச கல்ல தேச்சாச்சா கழுவியாச்சா’ சித்தப்பா கேட்டார்.

‘தலைக்கு நாலு  தோசை எடுத்து வை சாம்பார் சுட வச்சது இருக்கு எடுத்துகோ’

சாமிநாதனுக்கு மட்டும் இரண்டு தோசை தட்டில் வைத்தேன். மற்றவர்களுக்கு நாலு நாலு. கணக்காய் தோசை வார்த்திருந்தாள் சித்தி.

அம்மா சுவாமி படத்தின் முன்பாக ஸ்தோத்திர மாலா புத்தகத்திலிருந்து ஏதோ வாசித்துக்கொண்டு இருந்தார்.

‘ வாசிப்பியா என்ன’

‘ வாசிப்பேன் டி’ அம்மா எனக்கு பதில் சொன்னாள்.

‘பக்கத்தில விஷயம் தெரிஞ்சவா இருக்கப்பிடாது இருந்தா குரல் வெளில வராது உங்க அம்மாவுக்கு’

அப்பா அம்மாவை ஏகடியமாய்ப்பேசிக்கொண்டிருந்தார்.

இரவு உணவு முடித்து அவரவர்கள் படுக்கைக்குச்சென்றார்கள்.

சித்தப்பா வீட்டில் காலை ஐந்தரை மணிக்கு போது விடியத்தொடங்கும். சித்தி தான் முதலில் எழுந்து வாயில் பெருக்கித் தண்ணீர் தெளித்து ஒரு சின்ன மாக்கோலம் போடுவாள். நானும் சித்தியோடு எழுந்து விடுவேன். பிறகு ஒவ்வொருவராய் எழுந்து பல் துலக்கி முடிப்பார்கள்.

சூடான காபி முகத்தில்தான் விழிப்பது என்பது வாடிக்கையாகி எத்தனையோ காலம் ஆகிவிட்டது. காபி குடிப்பதில்தான் வேலை துவங்கும் பின் அன்றைய நாள்  நீண்டு கொண்டு போகும்.

காலை ஐந்து மணிக்கே  வாயிற்கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.

‘யாரது’ என்று சொல்லிக்கொண்டே சித்தி வாயில் கதவைத்திறந்தாள்.

‘வாச திண்ணையில அப்பா இருக்கார்’ அம்மா சொல்லிக்கொண்டாள்.

வாயிலில் பெட்டியோடு ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

‘ யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்’

சித்தி கேள்வி கேட்டு நிறுத்தினாள்.

‘ நானும் இந்த ஊர்தான்  குருக்களய்யா வீடுதானே இது’

‘ ஆமாம்’

சித்தப்பா அதற்குள் எழுந்து வாய் கொப்பளித்துவிட்டு வாயிலுக்கு வந்தார்.

‘ யார் வந்திருக்கா’

‘ நீங்களே பாருங்கோ நேக்கு தெரியல’

‘ தருமகர்த்தா பையன்’

‘’தர்மகர்த்தா புள்ள வேணுதானே நீங்க  மெட்ராஸ்  போர்ட்லதான் உங்களுக்கு வேல எனக்கு  கொழந்தைய்லேந்து உங்கள தெரியுமே ‘ என்ன சேதி வெடிய காத்தாலயே எங்கயாவது பயணமா’

‘ இல்லங்க நா சென்னையில் இருந்து வரேன். நேத்து பூக்கடை பக்கம் போயிட்டு கந்தகோட்டம் முருகர தரிசிக்கலாம்னு போனேன்’

‘ சரி மேல சொல்லுங்கோ’

சித்தப்பா பதட்டமானார்.

‘உங்க மாமனார பாத்தேன்.’

‘ அவர உங்களுக்கு பழக்கமா’

‘ நா முருகன சேவிக்க போறவன் செவ்வா கெழம தவறாம கந்தகோட்டத்துல என்ன பாக்கலாம். அப்பிடியே அந்த குருக்களய்யாவோட பழக்கமாயிட்டுது. அவுரு சொல்லித்தான் தெரியும் இந்த ஊர்  குருக்களய்யா வீட்டு  அம்மா அவுரு பொண்ணுன்னு.  அவுங்க . இங்க வாக்கப்பட்டிருக்காங்கற  அந்த சேதியும்பெறவு, அப்பாவ கேட்டேன் அவரும்  அது  அப்படித்தான் சொன்னாரு’

‘ அது சரி  என்ன சொன்னார்  எல்லாம் சவுக்கியம்தானே’

’ உங்க மாமியாருக்கு உடம்பு முடியல்லேன்னு சொன்னார்’

‘என்னவாம் சுகர் பிரெஷர் எதுவுமே இல்லயே அவுங்களுக்கு நல்லா இருப்பாங்களே’ சித்தி  பதட்டத்தோடு கேட்டாள்.

  நா நேத்து ராத்திரி  எக்மோர்  வந்து ட்ரெயின புடிச்சி அண்ணாமலை நகருக்கு  பொறப்படறேன்னு அவுருகிட்ட  சொன்னேன்.  ஒரு  நிமிஷம் இருங்கன்னு சொன்னார்.   ஒரு பேனாவ ஒரு பேப்பர எடுத்தாரு. எதோ எழுதினாரு அவரு மனைவிக்கு உடம்பு சொகம் இல்லேன்னும் என்னண்ட சொன்னாரு.   அவுரு கைப்பட எழுதின லெட்டர் குடுத்தாரு.இந்த  லட்டர என் மாப்பிள்ள பொண்ணுகிட்ட சேத்துடுங்கன்னு சொன்னாரு. என் வீட்டுக்கு போற வழிலதானேஅய்யா குருக்களயா வீடு. நா கொண்டுபோய் குடுத்துடறேன்னு  சொல்லி அத வாங்கிட்டு வந்தன்..  இந்தாங்க அந்த லட்டர் அத பாருங்க’

ஒரு கடிதத்தை சித்தப்பாவிடம் ஒப்படைத்தார் வேணு.

சித்தி கடிதத்தை வாங்கினாள்.

படித்தாள்

சிரஞ்சீவி மாப்பிள்ளைக்கும் செள காமுவுக்கும் ஆசிகள். அங்கு  பேரன் சாமி நீங்கள் எல்லோரும் சவுகரியமாக இருப்பீர்களென நினைக்கிறேன். இங்கு என் பாரியாளுக்கு உடம்பு முடியவில்லை. இன்னது என்று சொல்லத்தெரியவில்லை. சுருண்டு சுருண்டு படுத்துவிடுகிறாள். பழைய மாதிரிக்கு இல்லை.கோவில் பூஜை, லீவு போடவும் முடியவில்லை.  அப்படியே  லீவே போட்டாலும் ஆஸ்பத்திரிக்கு அலைய கொள்ள என்னால் முடியாது போலத்தான் இருக்கிறது. உடன் நீங்கள் புறப்பட்டு வரவேண்டியது. எனக்கு உங்களை விட்டால் கந்தகோட்டத்து தெய்வம்தான் துணை. உடன் வரவும்  பேரன் சாமியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடவும். இங்கு ஏதேனும் பள்ளியில் பேரனை சேர்ப்போமா? ஒன்றும் புரியவில்லை. அவள் படுத்திருப்பதுதான் எனக்கு சங்கடமாக இருக்கிறது

ஆசீர்வாதம்

வேதவனேசன்.

கடிதத்தைப்படித்த சித்தி அதை தன் கணவரிடம் கொடுத்தார். அவர் ஒரு முறை பார்த்துக்கொண்டார்.

சித்தியின் முகம் மாறிவிட்டிருந்தது. கண்கள் ஈரமாகியிருந்தன. அவரின் மனத் தவிப்பும் பதைப்பும் அறியமுடிந்தது.

‘ நேரமே சரியில்லை. என் மாமியார் உடம்புன்னு படுத்துண்டதே இல்லை. இப்பத்தான் இப்பிடி தகவல் வந்துருக்கு’

‘இந்த மனுஷன் தர்மகர்த்தா மொதலியாரு  பையனா’

‘ ஆமாண்ணா அவர் பையன் தான் அதுல என்ன சந்தேகம்’

‘ வந்த ஆளு சரியான நபர்தானா,   நம்பலாமான்னு ஒரு யோஜனை’

‘ சே சே அதெல்லாம் தப்பு அவர் தர்மகர்த்தா புள்ளே எனக்கு சந்தேகம் இல்ல. லெட்டரு மாமாதான்  எழுதியிர்ருக்கார்’

அம்மாவும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

அம்மா காபி போடுவதற்கு அடுப்படியைத்தயார் செய்தாள். நானும் அம்மாவும் அடுப்படியில் இருந்தோம்.

சித்தப்பா பால் வாங்கிக்கொண்டுவந்து அடுப்படியில்  என்னிடம் கொடுத்தார்.

‘ஏன்னா  கொழந்த சாமிக்கு ஸ்கூல் இருக்கு. அவன் இங்கயே  இருக்கட்டும். நாம ரெண்டுபேரும் மெட்ராஸ் போயி அப்பா அம்மாவ பாத்துட்டு வருவோம் உங்க தம்பி கோவில பாத்துகட்டும் ஒத்தாசைக்கு சாமி இல்லாட்டி உங்க அண்ணா பொண்ணு யாரானு  போகட்டும் அவர் நிவேத்யம் பண்ணினா போறும் பாக்கி வேலய இவா பாக்கட்டும். நாம பொறப்படுவோம்’

சித்தப்பா பதிலே சொல்லவில்லை.

அப்பா சித்தப்பா அருகே வந்தார்.

‘ நீ மெட்ராஸ் போயிட்டுவாடா. நா பாத்துகறேன். சாமி இருக்கான். அவன  கூட மாட  வச்சிகறேன். எம்பொண்ணு இல்ல என் பொண்டாட்டிய கோவிலுக்கு பூஜைக்கு போம்போது  கூட்டிண்டு போறன். சுப்புணி மெய்க்காவல் இருக்கான். பாத்துகறேன் நீ பொறப்படு’

சித்தப்பாவுக்கு இப்போதுதான் முகம் சற்று திருப்தியாகத்தெரிந்தது.

சித்தி பேக் ஒன்றைத்தயார் படுத்திக்கொண்டாள் சில துணிமணிகளை அதனில் திணித்துக்கொண்டார்.

‘சாமி இங்க’

சித்தி அழைத்தார்.

சாமி வந்து அவன் தாயாரிடம் நின்றான்.

‘ உன்னையும் கூட்டிண்டு வரச்சொல்லி தாத்தா எழுதியிருக்கார். அது ஏன்னு புரியல. இந்த வருஷம்  உனக்கு  முழு பரீட்சை ஆகணும் அது முக்கியம். பெரியப்பா பெரியம்மா அக்கா இருக்கா நீ  அவாளோட சமத்தா  இரு. நாங்க மெட்ராஸ் போயி தாத்தா பாட்டிய பாத்துட்டு வந்துடறம்’  சித்தி பேசினாள்.

அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. முகம் மட்டும் வாடிப்போனது. நான் அவன் அருகில் சென்று ’என்னடா சாமி நீ என்ன சொல்றே’ என்று கேட்டென்.

‘ போயிட்டு வரட்டும். நாம இங்க இருப்பம்’ பதில் சொன்னான்.

அடுப்படியில் அம்மா அதற்குள்ளாக எல்லோருக்குமாக

 டிபனுக்குத்தயார் செய்து கொண்டு இருந்தாள்.

ஒரு ஐநூறு ரூபாயை சித்தப்பா கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தார்..

‘இது எதுக்கு’

‘ இது கூட இல்லாம என்ன பண்றது நன்னா இருக்கு’

 மறு வார்த்தை பேசாமல் அப்பா பணத்தை எடுத்து வைத்துக்கொண்டார்.

‘வெறுங்கையால மொழம் போட முடியாது அண்ணா’

‘கோவில்ல எதானு வருமே’

‘ வரும் வராம இருக்கும் கோவில் வருமானம் எப்பயும் வாச்சான் பொழச்சான் நம்ப முடியாது’ சித்தப்ப சொன்னார்.

சித்தப்பாவும் சித்தியும் காலை டிபனை முடித்துக்கொண்டு சென்னைக்குப்புறப்பட்டார்கள். சாமி  பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான்.                                                      

‘’மடியா கோவிலுக்கு ஒரு ஒழக்கு அரிசி பொங்கி எடுத்துண்டு போகணும். உன் பொண்ண ஜலத்த அங்கங்க  ஒரு தோண்டில  கொண்டுவரச்சொல்லு. நீ சொம்பால நாலு சொம்பு மொண்டு ஊத்து. வேற எதுவும் பண்ணவேண்டாம். சுப்புணி பால் சுவாமி அபிஷேகத்துக்கு கொண்டு வருவான். நாலு மொழம் மால கொண்டு வருவான். நந்தவனத்துல பறிச்சிருப்பான். நந்தியாவெட்டை செம்பருத்தி தங்கப்பட்டிதான் இருக்கும். அரச்சனைக்கு வில்வமும் பறிச்சிண்டு வருவான்.  நித்யபடி  மஹா நிவேத்யந்தான் அதாம் வெறுஞ்சாதத்துக்கு ஒரு பெரிய பேரு வச்சிருக்காளே’அதான். தர்ம்கர்த்தா  வந்தா சொல்லு. நா மெட்ராஸ் போயிருக்கேன்னு. இந்த கரண்டு பில்லுகாரன் வருவான். அவன் அட்டையில குறிச்சிண்டு போவான். சுப்புணி அத கட்டிடுவான்.  தர்மகர்த்தா கோவில்   இந்த ஆம் ரெண்டு பில்லையும் கட்ட காசு  சுப்புணி கிட்ட குடுத்துடுவார். அவ்வளவுதான். எம் பையன கூட மாட வச்சிகோ. அவனுக்கு ஸ்கூல் இருக்கும் அதயும் பாத்துக்ணும்’ சித்தப்பா முடித்துக்கொண்டார்.

சித்தப்பாவும் சித்தியும் சிதம்பரம்  கிளம்பிப்போனார்கள்.

‘ரயிலா பஸ்ஸா’

‘ இல்லண்ணா  மொதல்ல  சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போறது. எதானு உடனே  ரயிலு வரும்னா பாக்கறேன். இல்லேன்னா பஸ் ஸ்டேண்டுதான் போகணும் அங்க போயி  பஸ்தான்’

‘ எது சவுகரியமோ செய்’

‘ஆத்து சாவியும் கோவில் சாவியும் சாமி பிறையில இருக்கு அத பாத்துகோ. பத்ரமா இருங்கோ’

சித்தி அம்மாவுக்கு சொன்னாள்,

‘ நீ கவல படாம போ  நாங்க பாத்துகறம். நீ அம்மாவ பாத்துட்டு   டாக்ட ர் கிட்ட உன் அம்மாவ    காமிச்சி  சரி பண்ணிட்டு வரணும். அது ரொம்ப முக்கியம் அத  கவனமா பார்’ அம்மா சித்திக்குச்சொன்னாள்.

‘ஏய் சாமி சாயந்திரம் காலம்பற  பொஸ்தகத்த வச்சிண்டு படிக்கிறானான்னு கவனி. அவன் எங்காயானு சகா சேத்துண்டு ஊர சுத்தப்போறான் கொளம் வாய்க்கால்னு குதியாளம் போடப்போறான்’

 அப்பிடிபட்டவன் இல்ல  அத ஞாபகம் வச்சிகோ’

‘இருந்தாலும் நா சொல்லணும் இல்லயா’

‘ தர்மகர்த்தா   இண்ணைக்கே பாரு. நா ஊருக்குப்போனத சொல்லு. நேரம் இல்ல மாமியார்க்கு உடம்பு சரியில்லன்னு சேதி வந்துது.  கெளம்பிட்டார். என்ன  உங்கள் கிட்ட நேரா  போய் சேதி சொல்லிடணும்னு சொன்னார்னு சொல்லு.  அவர் பையன் தான்  காலம்பற  எனக்கு  மாமா எழுதின லட்டர் கொண்டு வந்து குடுத்தான். இருந்தாலும் நம்ப மரியாதைக்கு நாம அவரண்ட  சொல்லணும் அதுதுக்கு கதவு தாப்பான்னு இருக்கே’

‘ அப்பவே  இத நெனச்சேன். நீ ஞாபகப்படுத்திட்டெ’

‘ நேத்து போயி  நாம அவர வீட்டுல  பாத்துட்டு வந்ததும் ஒரு நல்லதுக்குதான் போல’

சித்தப்பா சொன்னார்.

  ஒலகத்துல  என்ன என்னமோ நடக்கறது நாம ஒரு துரும்பு மாதிரி’

அண்ணாமலநகர் போஸ்டாபீஸ் அருகில் சிதம்பரம் செல்லும்  நகரப்பேருந்து வந்து திரும்பியது. அதனைப்பார்த்ததும் இருவரும் சற்று வேகம் கூட்டி நடந்தார்கள்.

‘ பஸ் ரெடியா நிக்கறது  போங்கோ’

அப்பா உரக்கச்சொல்லிக்கொண்டிருந்தார்

நகரப்பேருந்தில் ஏறி சித்தப்பாவும் சித்தியும் அமர்ந்துகொண்டார்கள். நிறுத்தத்தில் நின்றிருந்த ஓரிருவர் வண்டிக்குள் ஏறினர். கண்டக்டரும் டிரைவரும் அருகிலுள்ள தேநீர்கடைக்குச்சென்று நின்றுகொண்டார்கள்.

‘எப்பவும் பத்து நிமிஷம் வண்டிய போட்டுடுவான், அப்பறமாதான் கெளப்புவான்’

‘வரட்டும் வரட்டும் அவன் அவனுக்கு ஒரு கணக்கு இருக்குமே’

‘கோவில பூஜைய என் அண்ணா பாத்துகணுமே’

‘நன்னா பாத்துப்பார்’

‘கை வேற சரியில்ல’

‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எல்லாம் சரியாயிடும்’

’சாமி படிக்கணும் ஊரு சுத்தாம இருக்கணும். யாராவது தருதலைகள் அனோட சாகவாசத்துக்கு வராம இருக்கணும்’

‘உங்க அண்ணா பொண்ணு மகா கெட்டிக்காரி. அவ பாத்துப்பா. தம்பின்னு அவந்தானே அவளுக்கு. வேற சொல்லிக்கரதுக்கு யாரும் இல்லயே’

இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

வண்டிக்கு வந்துதான் வூட்டு பஞ்சாயம் எல்லாம் மொத்தமா  வச்சிகறாங்க’ ஒரு முதியவர் புலம்பிக்கொண்டே இருந்தார்.

‘நீ ஒன் வேலய பாரு, நாங்க எதனா பேசிக்கறம்’

சித்தப்பா முதியவரைப்பார்த்து சற்று வேகமாகச்சொன்னார்.

‘நா ஒன்ன  எதாவது சொன்னனா பொதுவா சொன்னன்.

 அப்படியே ரோசப்பட்டு பேசுறீரு’

‘நீங்க  சித்த வாயமூடிண்டு வரலாம்’

சித்தி சித்தப்பாவைநோக்கிச்சொல்லிக்கொண்டிருந்தார்.

‘தப்பா யார் பேசறா’

‘வாய மூடிண்டு வாங்கோ’

‘இந்தப்பதனம் எப்பவும் இருக்குணும்’ அந்த முதியவர் சித்தப்பாவை நோக்கிச்சொல்லிக்கொண்டார்.

கண்டக்டரும் டிரைவரும் வண்டியை நோக்கி வந்தார்கள். டிரைவர் தன் தனி வாயில் வழியாக  ஏறி டிரைவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார். வண்டியில் பாதிக்குமேல் காலியாகக்கிடந்தது.

‘இண்ணைக்கு என்ன கூட்டமே காணும் என்னாச்சு’ சொல்லிய கண்டக்டர். ‘ சீட்டு வாங்கிக சில்லறையா குடு பட்டுனு  பைசா எடு’ என்று குரல் கொடுத்தார்.

‘ பெரிசு எங்க போ வுது’ கண்டக்டர் முதியவரை நோக்கிக்கத்தினார்.

‘ சிறுசு  நான் கிள்ளைக்கு போவுணும்’’ முதியவர் பதில் சொன்னார்.

ஹஹ்ஹா என்று சிரித்தார் கண்டக்டர்.

‘ வண்டியவுட்டு எறங்கு இது செதம்பரம் போவுது’

‘ஏன் செதம்பரம் சீட்டு குடு. அங்கய போனா ஆயிரம் வண்டி  இருக்கு கெள்ளக்கி’ முதியவர் கண்டக்டருக்குப்பதில் சொன்னார்.

‘வாலிபத்துல  வயசுல எப்பிடி இருந்துருக்கும் இது’

கண்டக்டர் முணுமுணுத்தார்.

சித்தப்பாவும் சித்தியும் சிதம்பரம்  டிக்கட் வாங்கிக்கொண்டார்கள்.பேருந்து பிடித்துச் சென்னை செல்வதாய் தீர்மானித்தார்கள்.

‘பெரியவரும் வண்டிலதான் வரார்’

‘வரட்டுமே’

‘வாய மூடறேளா’ சித்தி பற்களைக்கடித்துக்கொண்டார்.

‘இன்னும் சீட்டு யாரு இன்னும் சீட்டு யாரு வாங்குணும்’ எச்சரிக்கை சொல்லிக்கொண்டே போனார் கண்டக்டர். பஸ் கண்டக்டர்களின் குரல் எப்போதும் நன்றாகவே இருக்கிறது. குரலைவைத்துக் கண்டக்டர்களைத்தேர்வு செய்வதில்லை. டிரைவர்களின் குரல் கரடுமுறடாய்த்தான்.

‘இந்த வண்டில பத்துபேரு இருப்பாளா’

‘அவ்வளவுதான் இருப்பா’

‘ஒரு சீட்டு ரெண்டு ரூவா பத்து பேருக்கும் இருவது ரூவா. இந்த வண்டிய எடுத்துண்டு அங்கேந்து இங்க வர்ரதுக்கு  இந்த இருவது ரூவா  வருமானம் எந்த மூலைக்கு நீயே யோசன பண்ணிப்பார்’

‘வண்டில நிக்க எடம் இல்லாம தொத்திண்டு கால கைய எல்லாம் ரணமாக்கிண்டு போறவாளுக்கு அதே காசு. அப்ப  நஷ்டப்பட்ட காசு வண்டிக்காரனுக்கு  திரும்ப வந்துடும்.  கூட்டம் அதிகமானா ரயில்ல கக்கூசுலதொங்கிண்டு பிரயாணம் பண்ணலாம். ஆனா டிக்கட் சரியா  வாங்கியிருக்கணும். அதெல்லாம் சட்டம்’

சிதம்பரம் பேருந்து நிலையம். அண்ணாமலைநகர் பேருந்து உறுமிக்கொண்டே  அது வழக்கமாகநிறுத்தப்படும் கட்டைக்கு வந்து சேர்ந்தது. பேருந்தின் வாயில்களில் இங்கொருவர் அங்கொருவர் நின்றுகொண்டு ’சீட்டு கைல எடு காட்டிட்டு போ’ கத்திக்கொண்டே இருந்தனர்.

சித்தப்பா வாங்கிய டிக்கட்டை எங்கோ தொலைத்துவிட்டு சட்டைப்பயைத்துழாவிக்கொண்டே இருந்தார்.

‘எங்க சீட்டு’

‘வாங்கினேன். சத்யமா வாங்கினேன்’

‘சீட்டகாமி’

விரட்டிக்கொண்டே இருந்தார்.  செக்கர் ஒருவர்.

‘கண்டக்டர் சொல்லுலாம்ல’ என்றாள் சித்தி.

கண்டக்டர் எதுவும் பேசாமல் ஆகாயம் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

‘சீட்ட பத்ரமா வச்ச்சிகறது ஆர் பொறுப்பு’

கண்டக்டர் சன்னமாய்த்தான் சொல்லிக்கொண்டு வேறு பக்கமாய் திரும்பிக்கொண்டார்.

‘நாங்களே மெட்ராஸ் போவுணும். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆர காசு கேக்கறதுன்னு முழுக்கறம்’ சித்தி ஓப்பாரி வைத்தாள்

‘ நாங்க காசு உங்களுக்கு குடுக்கணுமா தேவுலாம் இது என்ன கருப்பூர் பஞ்சாயமா இருக்கு’ செக்கர் சொல்லிக்கொண்டார்.

கண்டக்டர் செக்கரை அழைத்தார். ’அண்ணாமலைநகர் சிவன்கோவில் படைக்கிற அய்யிரு. அவர வுடு ரொம்ப முடுக்காதே’

செக்கர் சிரித்துக்கொண்டார்.

‘சாமி இண்ணைக்கு மாப்பு நாளைக்கு தோப்பு போய் வா’ சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு இடத்தக்காலிசெய்தார்.

சித்தப்பாவும் சித்தியும் நிம்மதியானார்கள்.

‘பாசுபதேசுரர் கைவிடல’ என்றார் சித்தப்பா.

‘ சீட்ட வாங்கினா என்னண்ட குடுங்க தெரிதா’ என்றாள் சித்தி.

‘இனிமே வாங்கறது பெரிய சீட்டு இன்னும் ஜாகிறதயா இருக்கணும்’

சென்னை என்று எழுதிக்கொண்டு இரண்டு பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன.

சித்தி ஒரு பேருந்தில் ஏறுவதற்கு முனைப்பாக இருந்தாள்.

பேருந்தில் அமர்ந்திருந்தவர் ஒருவர்’ டோக்கன் வாங்கிகிட்டா ஏறு இல்லன்னா ஏறாதே’ என்று கர்ஜனை செய்தார்.

‘என்ன அவசரம் நிதானமா ஏது என்னன்னு கேட்டுட்டு ஏறணும்’ சித்தப்பா சித்தியைக்கடிந்துகொண்டார்.

‘பவுஷுதான்’

சித்தி கெக்கே காட்டினாள்.

சித்தப்பா டோக்கன் கொடுக்கும் கவுண்டரைத்தேடி அந்தக்கியூவில் நின்றுகொண்டார்.

க்யூ நீண்டதாக இருந்தது.

சித்தி பொட்டிக்கடை வாயிலில் நின்றுகொண்டிருந்தாள். சித்தப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘சோடா கலர்’  கூவி  கூவி விற்கும் சிறுவர்கள் இங்கும் அங்கும் உலாத்திக்கொண்டு இருந்தார்கள். சித்திக்கு ஒரு சோடா வாங்கிக்குடித்தால் தேவலை என்று தோணிற்று.

‘ இன்னும் இது ஒண்ணுதான் பாக்கி’ சித்தியே சொல்லிக்கொண்டாள். இரண்டு டோக்கன்களை வாங்கிய சித்தப்பா ’வா வா வா’ என்று கூவி அழைத்தார். சித்திக்குக்காதில் விழவில்லை.

‘செவுட்டு முண்டத்த கட்டிண்டு அழவேண்டிருக்கு’ புலம்பினார் சித்தப்பா.

‘என்ன பெனாத்தல்’

காதுல விழல பொழச்சம்’ சித்தப்பாவே சொல்லிக்கொண்டார்.

‘ வண்டி நிக்கறது வா வா. டோக்கன் வாங்கியாச்சு. வண்டி நெம்பரு சீட்டு நெம்பரு எழுதி டோக்கன் குடுத்துருக்கா’

சித்தப்பாவும் சித்தியும் சரியாக  டோக்கனில் குறிப்பிடப்பட்ட அதே

 வண்டியில் அந்த  அந்த சீட்டில் அமர்ந்துகொண்டார்கள்.

‘கண்டக்டர்கிட்ட சீட்டு வேற வாங்கணுமா’

‘ஆமாம் இது டோக்கன். டிக்கட் வண்டில வர கண்டக்டர்கிட்ட வாங்கணும்’

‘டோக்கன் எதுக்கு’

‘இத  சீட்ட ரிசர்வ் பண்ணிகறதுக்குன்னு வச்சிருக்கான் அவ்வளவுதான். அது அது அவா அவாளுக்குத்தான் தெரியும். சொல்றதசெஞ்சிட்டு போயிண்டே இரூக்கணும்’

‘முடியணுமே’

‘நடந்த காலுக்கு சீதேவி  நடக்காத காலுக்கு மூதேவி’

இருவரும் நிம்மதியானார்கள். அனேகமாய் வண்டி நிறைந்தும் விட்டது. கண்டக்டர் சீட்டு போட்டு கொடுத்துக்கொண்டு இருந்தார்.

‘ரைட் ரைட்’ கண்டக்டரின் ஆணை.

வண்டியின் சக்கரங்கள் உருள ஆரம்பித்தது.

‘டோக்கன் வாங்காத ஆசாமி வண்டில இருக்கக்கூடாது. எறங்கிக’

ஒரு சீட்டில் அமர்ந்திருந்த மூவர் எழுந்து நின்றனர்.

‘டோக்கன் வாங்கலன்னா எறங்கிக’

‘ காசு குடுத்துடறம்’

‘எறங்கப்பா’

‘ஆரு டோக்கன் கையில இருக்குற மூணு ஆள வா வா சென்னை சென்னை’

ஒரு நாலு பேருக்கு தொபதொப என்று பேருந்தை நோக்கி ஓடிவந்தனர்.

‘மூணு சீட்டுதான் வருணும்’

‘இல்ல நாங்க நாலுஆளு. ஒரு குடும்பமா போறம்’

‘இந்த சேதி எனக்கு எதுக்கு’

‘மூணு ஆளு வருணும் வா வா சென்னை போறது டோக்கன் வாங்குன ஆசாமி’

ஒருவரும் வந்து வண்டிய்ல் ஏறவில்லை.

கண்டக்டர் இந்தவண்டிக்கு அடுத்து புறப்படும் வண்டியில் ஏறி ’ ஒரு  மூணு  சென்னை சீட்டு  எறங்கிக . மொத புறப்படுறவண்டில ஏறு வா வா. டோக்கன் இருக்கணும் அது முக்கியம்’

மூவர் இறங்கினர். வண்டி மாறி அமர்ந்துகொண்டனர்.

‘ரைட் ரைட்’ நீண்ட விசில் கொடுத்தார் கண்டக்டர்.

சித்திக்கு கண்கள் தூங்கத்தயாராயின.

‘செதம்பரம் தாண்டி தூங்கலாம் அதுக்குள்ளயே’

‘ நேத்து சரியா தூக்கம் இல்ல’

‘ஏன்’

‘என்னன்னு தெரியல’

பேருந்து சிதம்பரம் தாண்டி புவனகிரியைத்தொட்டுக்கொண்டு சென்றது.

‘சீட்டு எங்க எறங்குது’

‘மேல்மருவத்தூர்வரக்கும் போவுலாம். அங்கேந்துதான் எறங்குது’  கண்டக்டர் டிரைவருக்குப்பதில் சொன்னார்.

‘வெள்ளாத்துல தண்ணியே இல்ல’

‘மழ நெறய பேஞ்சா  தண்ணி வரும் இல்லன்ன அங்க அங்க குட்டை குட்டயா தண்ணி நிக்கும்’

‘எனக்கு அம்மா ஞாபகமே வந்து வந்து போகுது’

‘அப்பிடித்தான்’

‘அம்மாக்கு முடியல அப்பா பாத்துகறார். அப்பாக்கும் முடியலன்னா’

‘இப்பிடி எல்லாம் யோசனை போப்பிடாது’

‘நாமதான் பாக்கணும்னு சொல்றது’

‘இத சொல்லணுமா தெரியாதா’

சித்தி கொஞ்சம் தெளிவானமாதிரிக்கு இருந்தாள்.

‘டிக்கட் எதுவரைக்கும் வாங்கியிருக்கு’

‘கோயம்பேடு வரைக்கும்தான்’

‘அங்கேந்து’

‘பாரீஸ் கானர்’’

’அப்ப சரி’

வண்டி கடலூரை நெருங்கிக்கொண்டிருந்தது. ரசாயன ஆலைகளின் புகை நெடி மூக்கைத்துளைத்தது. ஆலைகளின் எதிரே மக்கள் வாழ்விடங்கள் வரிசையாக இருந்தன. பேருந்தில் இருந்தவர்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

‘இங்க ஜனங்க எப்பிடி குடியிருப்பா’

‘நெலத்த கம்பெனிக்காரண்ட கெரயம் குடுத்தா  சாக்குல பணம் தருவான். நீ வேலக்கி போனா  உனக்கும்  கம்பெனிகாரன் சம்பளம் தருவான்.   அந்த கம்பெனிகாரன் ஆலையிலேந்து  புகைய விட்டா என்னா அது பாட்டுக்கு  ஆகாசத்துல போயிட்டுபோறது. பக்கத்துல கடல் இருக்கு. அங்கயும் ரசாயனங்க கழிவா போகும். மீன்கள் என்ன கத்தபோறதா’

‘உடம்புக்கு எதாவது வந்தா’

‘அவனே பெரிய பெரிய ஆஸ்பத்திரியும் கட்டி வச்சிருப்பான் அதுல  கையில இருக்கற காசு குடுத்துட்டு வைத்தியம் பண்ணிக்கறதுதான்’

‘மணிஅடிக்கற உத்யோகம்னாலும்  உங்களுக்கு நாலும் தெரிஞ்சிருக்கு உங்க அண்ணாக்கு நீங்க பரவாயில்ல’

‘ எனக்கு  சர்டிபிகே தர. நா  இருக்கற எடம் அப்பிடி. அண்ணாமலைநகர்னா’

 பேருந்து கடலூர் அண்ணா பாலம்  தாண்டியது.

‘இது கெடிலம்’

‘தெரியுமே.  வங்காள விரிகுடா  தண்ணிதான் எப்பவும் இதுல எதுத்துண்டு நிக்கும்’

’தண்ணி கருப்பா இருக்கு பாரு.  ஊரு சாக்கடஎல்லாம் இதுலதான் வுழும்’

மஞ்சகுப்பம் தாண்டியது. தென்பெண்ணை ஆற்றைப்பார்த்துக்கொண்டே சித்தியும் சித்தப்பாவும் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள்.

‘ தென் பெண்ணக்கு இது புது பாலம்’

‘பழசு தோ தெரியர்து’

‘அதுவும் நன்னா இருக்கு. வெள்ளக்காரன் கட்டினதா இருக்கும். ஆனா குறுகலா இருக்கும்.  அதுல சில கடைகள் வந்துருக்கு. பிளாஸ்டிக் சாமான், ரெடிமேட் துணிக்கடை, மீன்கடை,   விசேஷத்துக்கு வாசிக்கிற பேண்ட்  வாத்யம் இசைக்குழு இப்படின்னு. இந்த பாலம்  நல்ல அகலம் பாரு’

பேருந்து புதுச்சேரி திண்டிவனம் என்று சென்றுகொண்டேயிருந்தது. ஓரிருவர் அங்கங்கு ஏறினர். யாரும் இறங்கவில்லை. மேல்மருவத்தூர் நெருங்கிக்கொண்டிருந்தது.

‘மருவத்தூர் மருவத்தூர்  எறங்குறவங்க ரெடியாவுலாம்’ கண்டக்டர் எச்சரிக்கை செய்தார். நான்கு பேருக்கு மூட்டை முடிச்சுக்களுடன் பேருந்தின் வாயிற்படி அருகே சென்றுகொண்டிருந்தார்கள். எல்லோருமே செவ்வாடை அணிந்திருந்தார்கள். பெண்கள்.பெண்களுக்கு தெய்வ வழிபாட்டில் முன்னுரிமை கொடுத்த தலம் மேல்மருவத்தூர் அல்லவா.

‘ஒருவர் சில்லறை பாக்கி’ சொல்லி கண்டக்டரிடம் சீட்டை நீட்டினார்.

கண்டக்டர் சீட்டை வாங்கி ப்பார்த்துவிட்டு பாக்கியைத்தந்தார்.

வண்டி ஓரமாய் நின்றது.

‘வண்டி பத்து நிமிஷம் நிற்கும். அதுக்கு இதுக்கு போறவங்க சட்டு புட்டுன்னு வந்துடுங்க’ கண்டக்டர் சத்தமாய்ச்சொன்னார்.

வெள்ளரிப்பிஞ்சு நுங்கு விற்பனை முழுவதும் நடபெற்றுக்கொண்டிருந்தது. ‘அய்ஸ் வாட்டர்’ விற்பவர்கள் ’சோடா கலர்’ விற்பவர்கள் மும்முரமாக இயங்கினர்.

சித்தியும் சித்தப்பாவும் இறங்கி சற்று உலாத்தினர். இயற்கை அழைப்புக்கு விடை கண்டுகொண்டார்கள். எதிரே ஒரு பெரிய உணவகம்.  வாயிலில் பேருந்துகள் அனேகம் இருந்தன.

தான் டிக்கட் வாங்கிக்கொண்டு  பயணியாய் வந்த பேருந்தை டாய்லெட் போய்வருவதற்குள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று முதியவர் கூச்சலிட்டுக்கொண்டு இருந்தார். அவரின் சோகமான முகம்.  அங்கிருந்த எல்லோருமே அவரை ஒருமுறை பார்த்துக்கொண்டார்கள்.

‘ பெரியவரு பைசா வச்சிருப்பாரா’

‘அதெல்லாம் நாம போய் கேக்கவாமுடியும்’ சித்தப்பா சித்திக்குப்பதில் சொன்னார்.

பேருந்தைச்சுற்றி   ‘ நுங்கு’ ‘நுங்கு ‘  எனக்கூவிக்கூவி விற்கும் பெண்ணை அழைத்து  இருவரும்  இரண்டு  இரண்டு  நுங்கு வாங்கி சாப்பிட்டனர்.

’நாலு நுங்கு பத்துரூபாய். விலை ஒன்றும் அதிகம் இல்லை’

‘ நுங்கு நன்னா இருக்கு’

‘இந்த ஊர்ல பனை மரம் அதிகம்’

டிரைவரும் கண்டக்டரும் வண்டியில் ஏறினர்.

‘எல்லாரும் வந்தாச்சா ரைட் ரைட்’ என்றார்.

அவரவர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பவர்களை சரிபார்த்துக்கொண்டார்கள். வண்டி அசுர வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. மதுராந்தகம் ஏரி தண்ணீர் வற்றிச்சுருங்கிக்கிடந்ததைப் பார்த்துக்கொண்டார்கள்.

‘இந்த பக்கம் ஏரி காத்த ராமர் கோவில். வெள்ளம் வந்தப்ப ஏரி உடயற மாதிரி ஆயிட்து. மதுராந்தகம் ஊரே காலியாயிடும்.  அப்ப இந்த பகவான் காப்பாத்தி குடுத்துருக்கார்’

‘ நான்  சாமிய பாத்து இருக்கன்’

‘நான் பாத்தது இல்ல’ சித்தப்பா சொன்னார்.

இப்போதெல்லாம் வண்டிகள் குறுக்கே இருக்கும்  ஊருக்குள் நுழைந்து செல்வதில்லை. எல்லா ஊரையும் ஓரங்கட்டியே  என்வழி தனிவழி என்று பைபாசில் செல்கின்றன.

‘பாலாறு எப்பிடி காஞ்சி கெடக்கு பாத்தியா’

‘அங்கங்க அணை கட்டி கட்டிட்டா தண்ணி ஆத்துல எப்பிடி வரும்’

‘அவ அவாளுக்கு தண்ணி வேணுமில்லயா’

‘இவன் அவன சொல்லுவான். அவன் இவன சொல்லுவான் யார் இதுல ஒழுங்கு’

‘பக்கத்தாத்து சண்ட அடுத்த ஊர் சண்ட  இதுகள் லோகசகஜம்’

‘மணல் லாரிய வரிசையா நிறுத்தி மணல் அள்ளறது தெரியர்தா’

‘ஒருபக்கம் ஆறு போச்சி மணல் போச்சிம்பா  கத்துவா  இன்னுமொரு பக்கமணல் கொள்ளபோயிண்டு இருக்கும்’

இருவரும் பேச்சை நிறுத்தினார்கள்.  குழந்தைச்சவமொன்றைத்தூளியில் தூக்கிக்கொண்டு இருவர் ஆற்றங்கரையில் நடந்துகொண்டிருந்தார்கள். ஒருவர் தோளில் மண்வெட்டியை வைத்துக்கொண்டும்  மற்றொருவர் தோண்டியை வைத்துக்கொண்டும் இருந்தனர்.

‘யாரா இருந்தாலும் சாவுங்கறது கொடும’

‘அதுல தூளில கொழந்தய பொணமா போட்டு எடுத்துண்டு போறத என்ன சொல்ல’

‘ஈசல் பத்து நிமிஷம் ஆடம் போடறது நாம செத்து கூட ஆட்டம் போடறம்’

‘இதுக்கெல்லாம் வெட கெடக்குமா இப்பிடியே போயிடும்தானா’

‘நம்ம சக்திக்கு நாம பேசணும் இதெல்லாம் நம்ம யோஜனையில வரமுடியுமா’

  பைபாசில் செங்கல்பட்டு தாண்டி தாம்பரம் டவுனுக்குள் போகாமலே சென்றது. ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள் தெரிந்தன. அவைகளின் அழகு பார்க்க பார்க்கக்கூடிக்கொண்டேபோனது.  சில இடங்களில் சிலுவை நடப்பட்டு காட்சி தெரிந்தது. சில  பாறைளில் நாமம் கல்லில் செதுக்கப்பாட்டிருந்ததைக்காண முடிந்தது.  புறவழிச்சாலையில்  ஊர்ந்து ஊர்ந்துகோயம்பேடு பேருந்து நிலையம் வந்தாயிற்று.

பூக்கடை பேருந்து நிலையம் செல்லும்  அரசுப்பேருந்தில் ஏறினார்கள். பூக்கடை பேருந்து நிலையத்தில் இறங்கிய இருவரும் பூ பழம் வாங்கிமுடித்தனர்.

‘வெறுங்கையோடு யாரு ஆத்துக்கும் போப்பிடாது’

‘அது தெரியும்’

‘பின்ன நா சொன்னதான் வாங்கணுமா தனக்கா தெரியாதா’

‘உன் ஊர் வந்துட்துன்னு குரல் உயர்த்திப்பேசற’

‘இல்லன்னா நேக்கு பயமா என்ன’

ஆட்டோக்காரர்கள் ‘அய்யரு எங்கபோவுது’ என்று நச்சரித்தார்கள்.

‘நடந்து போலாமா’

‘ஆகுறகதையில்ல’ சித்தி சொன்னாள்.

சாலைமுழுவதும் கடைகாரர்களின் ஆக்கிரமிப்பு கீழே கிடக்கும். தார்ச்சாலையை எங்கே கண்ணால் பார்ப்பது. மக்கள் ஊர்ந்துகொண்டே இருந்தார்கள். கார்களும் பேருந்துகளும் மோட்டார்சைக்கிள்களும் ஆட்டோக்களும் நகர்ந்துகொண்டேதான் இருந்தன. உயர்நீதிமன்றம் அருகில் இருப்பதால் கருப்பு கோட் போட்டுக்கொண்ட ஆசாமிகள் நிறயவே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தார்கள்.

‘ஒரு சைக்கிள் விட்டுக்கொண்டு போகிறவர்களையே காணோம்’

‘அய்யாவுக்கே சைக்கிள் இல்ல’

‘எனக்கு எதுக்கு. ஆத்துவாசல்ல கோவில்’

‘எல்லா குருக்களுக்கும் ஆத்துவாசல்ல சந்நிதிதான் நீங்க  பார்த்ததுபோதும் வேடிக்கை’

ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டு கந்த கோட்டம் கோவில் அருகேயுள்ள கந்தகோட்டத்து அர்ச்சகர் காலனிக்கு வந்து சேர்ந்தார்கள். சித்தப்பாவின் மாமனார்வீடு.

‘வாங்கோ வாங்கோ’ வீட்டு வாசலில் வேதவனேசகுருக்கள் சித்தியின் அப்பா நின்றுகொண்டிருந்தார்.

சித்தியும் சித்தப்பாவும் வீட்டினுள் நுழைந்து  ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள்

‘எந்தங்கம்  காமு  வந்தாச்சா’ சித்தியின் தாயார் வாய்விட்டு  தன் பெண்ணை வரவேற்றார்.

சித்தியும் சித்தப்பாவும் அவர்கள் உடல் நிலை பற்றி பவ்யமாய் விசாரித்தார்கள்.

‘எனக்கு நடக்க சிரமம் அவ்வளவுதான்’

‘வேறென்ன பெரிய  கஷ்டம் வேணும் மனுஷாளுக்கு’ சித்தப்பா மாமியாரைப்பார்த்துச்சொன்னார். மாமனார்  சித்தப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘இது யாரும்மா’

இளைஞன் ஒருவன் எதிரே அமர்ந்திருப்பதைப்பார்த்த சித்தி கேட்டாள்.

‘இவர் நம்மளவர்.  குருக்கள்தான். அப்பாவோட கோவிலுக்கு  கூட மாட போயிண்டு ஒத்தாசையா இருக்கார். மைலாப்பூர்காரர். பிரம்மச்சாரி. இப்பக்கி நம்மளோட இருக்கறவர். நமக்கு ஒத்தாசை அவர்தான். கோவில்னு இல்ல வீடு ஆசுபத்திரி எங்க போனாலும் அவர் அப்பாக்கு கூடயே  வேணும். அவர்தான் இன்னொரு கை அப்பாக்கு’

‘பேரு’

‘கபாலி’ அவரே ஓங்கிச்சொன்னார்.

சித்தப்பாவும் சித்தியும் அந்த இளைஞனைப்பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

சித்தி தனது தந்தையைப்பார்த்தாள்.

‘அவன்தான் எனக்கு ஒத்தாசை. கந்தகோட்டத்துக் கடவுள்  கண்ண தொறந்து பார்த்துட்டு  கபாலிய  என்னண்ட அனுப்பி வச்சிருக்கார்னு சொல்லணும்’

அந்தக்கபாலி அமைதியாகத்தன் வேலை எதுவோ அதனைப்பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச்சுற்றி திருநீற்றுப் பொட்டலங்களாகக்கிடந்தன.  கபாலி அவற்றை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார்.

‘ அண்ணாமலை நகர்ல  உம்ம பூஜைக்கு மாத்து ஆளு’

சித்தப்பாவின் மாமானார் கேட்டார்.

‘எங்கண்ணா தருமங்குடிலேந்து வந்துருக்கார்’

‘அது எப்பிடி. அந்த ஊர் சிவன்கோவில் பூஜை’

‘அவருக்கு உடம்பு முடியல. கையில கொஞ்சம் ப்ராப்ளம்.  சனிப்பேத்தி அண்ணிக்கு தேங்கா ஒடச்சி ஒடச்சி கையில ஏதோ சதை பெரண்டு ஒரு பெசகு ஆயிட்து. தருமங்குடி பூஜய பண்ணமுடியல.  அண்ணாமலைநகர் என் ஆத்துக்கு வந்துட்டார். அண்ணாமலை நகர்லயே கைவைத்யமும் பாத்துது. இப்ப பரவாயில்ல. எம் பூஜய அவரண்ட வுட்டுட்டுதான் நான் இங்க கெளம்பி வந்துருக்கன்.’

‘தருமங்குடி பூஜக்கி அங்க  என்ன பண்ணினா’

‘கூடலையாத்துர்லேந்து  வந்துருக்கார் ஒரு சிவாச்சாரியர். யாரோ பாலுகுருக்கள்னு  ஒத்தர் இருந்தாராம் அவரோட பேரன் தருமங்குடி பூஜய ஒத்துண்டுருக்கார்’

‘ரொம்ப சரி.   ஒரு ஆசாமி பூஜைக்கு கெடக்கறதே அபூர்வமா இருக்கு. சாமிய பட்டினி போட்டுடப்பிடாது.  உங்க தருமங்குடி அண்ணா  மன்னி,  அந்த  பொண்ணு பேரு  என்ன வேதாவா’

  என் அண்ணா பொண்ணு  பேரு மாமாவுக்கு  நன்னா ஞாபகத்துல இருக்கு. அண்ணா குடும்பம் எல்லாரும் இப்ப என் ஆத்துலதான் இருக்கா’’

‘அதான் சேதி ஆப்டதும்  படார்னு கெளம்பி வந்துட்டேள். இல்லேன்னா பூஜைக்கு மாத்தாள்பாத்துவச்சிட்டுன்னா வரணும்’

‘ என் பேரன் கொழந்த சாமிநாதன்’

‘அவனுக்கு ஸ்கூல் இருக்கே. பரீட்சை வர்ரது. அவன் மேல மேல  படிக்கணும். நன்னா படிக்கறான். மணி அடிக்கற உத்யோகத்துக்கு எல்லாம் வரமாட்டான்’

‘ரொம்ப சரி,   குழந்தைகள் நன்னா படிச்ச உத்யோகம் இல்லன்னா பூஜையோ புரோகிதமோ’ என்றார் சித்தப்பாவின் மாமனார்.

‘இங்க அவ்வளவுதான் மரியாத. எங்க பச்சயா இருக்கோ அங்கதான பசுமாடு வாய வைக்கும்’

‘நீங்க சொல்றது சரிதான் மாப்ள. சரி விஷயத்துக்கு வாங்கோ..  என் பேரக் கொழந்த சாமி எப்பிடி இருக்கான் அவன் ஞாபகமாவே இருக்கு. பாத்து எவ்வளவு நாள் ஆறது’ சித்தியின் அம்மா சொல்லிக்கொண்டாள்

சித்தி தன் அம்மாவின் மாத்திரை மருந்துகளைப்பார்த்தாள்.டாக்டர் சீட்டுகளை எக்ஸ்ரே ஸ்கேன்கள் லாப் ரிபோர்ட் இத்யாதிகளை ஒவ்வொன்றாய்ப்பார்த்தார் அவை பக்கம் பக்கமாய் இருந்தன. ஒரு புத்தகம் போல் ரிபோர்ட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

‘கபாலிதான் என் புள்ளயா என்னோட இருந்தான். அவன் இங்க எனக்கு இல்லேன்னா ரொம்ப சிரமம்.தவிச்சிபோயிருப்பேன்’ சித்தியின் அப்பா மெல்லியகுரலில் அழுத்தம் திருத்தமாய்ச்சொன்னார்.

‘பகவான் கை விட்டுடல’ சித்தியின் அம்மா ஆமோதித்தார்.

சித்தி சிறிது நேரம் அமைதியானார்.

பேச்சின்  தடத்தை மாற்றினார் சித்தி.

‘இதுகள தமிழ்ல எழுதினா கொஞ்சமானு புரியும்’

‘என்ன சொன்ன’

‘டாக்டர் தமிழ்ல எழுதினா என்ன எழுதிருக்கார்னு கொஞ்சமானு புரியும் எல்லாம் இங்கிலீஷ்ல கிறுக்கி இருக்கு. இல்லன்னா டைப் அடிச்சிருக்கா’

‘நாமகூட சொல்ற  மந்திரத்த தமிழ்ல சொன்னா நன்னாதான் இருக்கும். கோவிலுக்கு வர்ர சேவார்த்திகளுக்கு நாம் என்ன சொல்றன்னு புரியும்’

‘அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்னுதான் உங்களுக்கு தெரியாதே’

‘போறும் விடு’ சித்தியின் தாயார் சத்தம்போட்டார்.

‘தேஞ்சி போன காலு முட்டிய  ஆப்ரேஷன் பண்ணி  எடுத்துட்டு வேற ஒண்ணு வைக்கணுமாம். அது செயற்கையா வப்பாளாம்’

சித்தியின் அப்பா மேலும் சொன்னார்.

‘உங்கம்மா  ஆப்ரேஷன் வேண்டான்னு அடம் பிடிக்கறா’

‘இவ்வளவுதான் சேதி’  சித்தி தன் தந்தயைப்பார்த்து அழுத்தமாகச்சொன்னார்.

‘மாமி ஒத்துண்டாதான் எதுவும்’ சித்தப்பா முடித்துவைத்தார்.

‘அப்பண்ணா காமு  நீ இங்கதான் அம்மாவோட  இருக்கணும். எனக்கு வேற யார் இருக்கா சொல்லு’

சித்தியின் தந்தை அழதாகுறையாகச்சொன்னார்.

‘கவலபடாதிங்கோ பாப்பம். கந்தகோட்டத்துக்   கடவுள்  கந்தன் கைவிட வுட்டுடமாட்டான்’

சித்தப்பா சமாதானம் சொன்னார்.

கபாலி அங்கு நடப்பது அனைத்தையும் கவனித்துக்கொண்டேயிருந்தார்.

மாலைநேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

‘கபாலி கோவிலுக்கு பொறப்படலாமா’

‘ரெடி மாமா’

கபாலி பட்டென்று பதில் சொன்னார். சித்தப்பா, மாமா, கபாலி மூவரும் கோவிலுக்குப்போவதாய் முடிவாகியது.

‘நீ அம்மாவ பாத்துகோ’

‘ நா பாத்த முருகன்தான்’ சித்தி பதில் சொன்னாள்.

மூவரும் கைகால்களை சுத்தி செய்துகொண்டனர். பட்டை பட்டையாய்  உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டனர்.

‘மொத்தம் பதனாறு பட்டை கணக்கு’

சித்தப்பாவின் மாமனார் அழுத்தம் திருத்தமாய்ச்சொன்னார்.

‘நெத்தில இருக்கணும்’ என்றார் சித்தப்பா.

கபாலி என்  சித்தப்பா தாத்தா  மூவரும் கோவிலுக்குப்புறப்பட்டார்கள். அருகில்தானே சந்நிதி.

‘’கபா நீ சந்நிதில இரு’

‘இண்ணைக்கி எந்த சந்நிதி நமக்கு’

‘இண்ணைக்கு ராமலிங்கர் சந்நிதி’

‘சரி மாமா நா பாத்துகறேன்’

சித்தப்பவும் அவருடைய மாமனாரும் கோவிலின் திருக்குளக்கரையில் ஓர் ஓரமாக அமர்ந்துகொண்டார்கள்.

‘நீர்  மருமகன் மாப்பள உம்மண்ட சிலதுகள் சொல்லனும்’

‘சொல்லுங்கோ மாமா. நா கேட்டுக்கணும்’

திருக்குளத்தில் பாதிக்குத்தண்ணீர் இருந்தது. நிறைய மீன்கள் துள்ளிக்குதித்து விளையாடின. ஓரிருவர் படியில் இறங்கி குளத்து நீரைத்தலையில் தெளித்து வணங்கிச்சென்றார்கள். சிலர் மீன்களுக்கு பொரி வாங்கி வந்து போட்டுக்கொண்டு இருந்தார்கள். சேவார்த்திகளில் அனேகம் குளத்தை கர்ஷிக்காமலேயே  சந்நிதிக்குள் சென்றுகொண்டிருந்தார்கள்.

‘கபாலிய பத்தி சொல்லணும். அவன் மைலாப்பூர்ல எனக்கு வாடிக்கயா சாமிக்கு சாத்து  மால கட்டி தர்ரவகிட்ட இருந்தவன். என்னண்ட  ஆரம்பத்திலேந்து பிரியமா இருந்தான். கோவிலுக்கு வருவான் போவான். மால எல்லாம்எடுத்துண்டு வருவான். நீட்டா விபூதி இட்டுப்பான்.  நா சொல்றத பாத்து  கொஞ்சம் கொஞ்சமா மந்திரங்கள் கத்துண்டான். எட்டு கிளாஸ் படிச்சிம் இருக்கான். பொஸ்தகம் பாத்து சஹஸ்ரநாமம் வாசிப்பான். அவனே குடுமி மாறி  ஒண்ணு வச்சிண்டான். துண்ட இடுப்புல கட்டிண்டான். சுத்து தேவதைக்கு எல்லாம்  அபிஷேகம் பண்ணினான். அலங்காரம் பண்றேன்னு வந்தான். சட்டுனு  பிரதான சந்நிதிக்கும் வந்தான்.  சந்தனகாப்பு பண்ணினான்.இண்ணைக்கு கபாலி  அவன் ஒரு பெரிய  சிவாச்சாரியர்னு எல்லாரும் சொல்லிண்டு இருக்கா. குரல் வெங்கலம். மந்திரம் சொன்னா அது சுத்தம், ஸ்பஷ்டம். தருமவரம் ஆகம பாடசாலயில படிச்சவன் இவன்கிட்ட நிக்கமுடியாது அப்பிடி’

‘சரி மாமா, பூ மால கட்டி தர்ரவகிட்டேந்துன்னா அவன்  வந்துருக்கான் நீங்க சொல்றேள்’

‘ஆமாம்’

‘ அவனுக்கு  அம்மா அப்பா’

சித்தப்பா இரண்டு கைகளையும் ஆகாயம் நோக்கிக்காண்பித்தார்.

‘ நீங்க கேக்கலயா’

‘இல்ல’

‘ஏன் மாமா’

‘அது கேட்டு என்ன ஆகணும். அவன்    நம்ம தொழில்ல  டாப்பா இருக்கான். எனக்கு ஒத்தாசையா இருக்கான். அவன் அப்பா யாரா இருந்தா நமக்கென்ன’

‘அம்மா அந்த பூக்காரியா’

சித்தப்பா இர்ண்டுகைகளையும் மீண்டும் ஆகாயம் நோக்கிக்காண்பித்தார்.

‘அவனுக்கு பூணல் யார்போட்டா’

மாமா பதில் எதுவும் சொல்லவில்லை.

‘மணையில தம்பதிகள் ஏறி உக்காந்து பூணல் போடுணும். பிரம்மோபதேசம் பட்டு வஸ்திரத்த போர்த்திண்டு அப்படித்தானே பண்ணணும்’

‘யார் இல்லேன்னா’

‘பின்ன பூணல் எப்பிடி போட்டுண்டான்’

‘ அதுல என்னத்துக்கு கொஞ்சம்   பாக்கி வச்சிண்டு. அதையும் சொல்லிடணும். ரொம்ப வருஷமாச்சி இது எல்லாம் நடந்து. ஒருநா அண்ணக்கி அதான் ஆவணி அவிட்டம். மைலாப்பூர் திருக்குளத்துக்கு மேலண்ட கரையில பூணல் மாத்தறதுக்கு பிராம்ணா மொத்தமா  வந்துருக்கா.  மைலாப்பூர் பூக்காரி  கபாலி அழச்சிண்டு போயி ’அய்யிரு வூட்டு புள்ளதான் இவனுக்கு ஒரு பூணல் போடுங்கன்னு’ சொல்லி முழுசா நூறு ரூபா கொடுத்துருக்கா. யாரோ ஒரு புரோகிதர் அந்த நூரு ரூபாய வங்கிண்டு ‘யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்’னு   சொல்லி கபாலிக்கு  பூணல் மாட்டிவிட்ருக்கான். என்கிட்ட வரும்போதே பூணலோடதான் வந்தான். அப்படியே போயிண்ட்ருக்கு. இதுக்கு எல்லாம்  என்ன ஆபிஸ்ல எதாவது உத்தரவு போடுவாளா’

‘கள்ளப்பூணல்தான் அது’

‘இப்ப எல்லாம் நாந்தான்  மந்திரம் சொல்லி கபாலிக்கு பூணல் போட்டு விடறேன். அவன் முத்துக்குமாரசாமி கோவில்ல  நூறு பேருக்கு பூணல் போட்டு விடறான் ஆவணி அவிட்டம்னா அவனசுத்திண்டு  குருக்கள் எல்லாம் நிக்கறா. நேம  நிஷ்ட எல்லாம் அவனுக்கு  சட்டு சட்டுன்னு வந்துட்து.   இருந்துட்டுபோகட்டும். மனுஷன ஒரு  பூணல்  என்ன பண்ணிடும்.  மொதல்ல மனசுன்னா  அவனுக்கு நன்னா இருக்கணும்’

’ உங்களுக்கு பக்குவம் வந்தாச்சு  நா  இன்னும் ரொம்ப தூரம் போவேண்டிருக்கு.  இனிமே எதுவும் நா உங்கள  கேக்கல’

‘நீர் அவனண்ட பூர்வோத்ரம்  எதுவும் கேக்கவேண்டாம்’

’ நல்ல பதியம் போட்டு செடி ஒண்னு வந்துருக்கு அது மட்டும் தெரியர்து. நீங்களே  எதுவும் கேக்கல.  இதுகள  நான் ஏன் கேக்கப்போறன்’

‘அதெல்லாம்  கேட்கவே வேண்டாமே . என் ஆத்துக்காரிக்குக்கூட   இந்த விஷயம் எதுவும் மூச் விடல்ல.  அவளுக்கும் தெரியாது. நா எதுவுமே சொல்லல.  இத சொல்லி ஆப்போறது என்ன. அவ எப்பிடி எடுத்துப்பாளோ, கபாலி மைலாப்பூர் குருக்களாத்து பையன்  எனக்கு  கோவில் ஒத்தாசைக்கு வந்துருக்கான் அதுதான் சொன்னேன். இப்ப அவுளுக்கும் அவன்தான் ரொம்ப ஒதவி. கபாலி இல்லாம  என் ஆத்துல ஒரு காரியம் நகராது’

‘. கபாலி நல்ல பையன் அது போறும்’ என்றார் சித்தப்பா.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக திருக்குளத்து நீரையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

‘ நீங்க  இந்த தகவலே சொல்லலேயே’

‘நேரா பேசணும் இது தனியா பேசிக்கணும்  எம்பொண்ணுக்கும் இதுகள் தெரியப்படாதுன்னு என்  யோசனை. அதனாலதான்’  குரல் கொஞ்சம் தாழ்த்தி மாமா சித்தப்பாவிடம் சொன்னார்.

‘இது கபாலி குரல் மாதிரி இருக்கே’

‘ஆமாம் அவனேதான். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்னு  பாடி பூஜைய ராமலிங்கர் சந்நிதில எப்பவும் பூஜய முடிப்பான். அவன் அந்த பாட்ட பாடினாதான் ஜனங்க கேட்டுட்டு  கோவில விட்டு பொறப்படும்’

‘ஓதுவார்னா பாடுவா தேவாரம் இதுகள் எல்லாம்’

‘சுந்தரமூர்த்தி நாயனார் தெரியுமோ.  அப்பர் சம்பந்தர்  சுதரர்னு இந்த  மூவர்  பாடினது  மொத்தமா தேவாரம்.   இதுல சுந்தரர்  ஒரு  குருக்கள்தானே,  அப்படின்னு எனக்கே கபாலி சட்டமா சொல்வான்’

‘விஷயாதி  நாம ஜாக்குறதயா இருக்கணும்’

‘ அப்படி  சொல்லப்படாது, கபாலி   நல்ல பையன். அவ்வளவுதான்’

சித்தப்பாவும்  அவர் மாமனாரும் குளக்கரையைவிட்டு எழுந்து நின்றனர்.

‘கபாலிதான் வர்ரதா’

‘அவனேதான்’ சித்தப்பா சொன்னார்.

தேங்காய் மூடிகள் பிரசாதங்கள் எனக்கையில் எடுத்துக்கொண்டு கபாலி அவர்கள் இருவரிடமும் வந்து நின்றுகொண்டா.

‘ஆச்சா’

‘ஆச்சு பொறப்படலாம்’

மூவரும் அரச்சகர் கோர்ட்டர்ஸ் நோக்கிப்புறப்பட்டனர்.

‘தேவாரம் ஜோர்.  கேட்டேன் நன்னா இருக்கு  உன் குரல்’

‘அது அருட்பா. வள்ளலார் பாடினது’

‘அதுவும் தேவாரம்தான் எனக்கு’ சித்தப்பா சமாளித்தார்.

‘கபாலி தேவாரமும் பாடுவான் திருவாசகமும் பாடுவான்’

‘எப்பிடி கத்துண்டீர்’

‘ சாமி முன்னால நின்னு  ஒதுவார் பாடறா. நா கேக்கறேன். இண்ணைக்கு நேத்தா இது’

மூவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். சந்நிதி வீதி முழுவதும் இரவு டிபன் கடை விரித்து வியாபாரம் ஜோராக நடந்துகொண்டிருந்தது. இட்டலியும் தோசையும் தட்டுதட்டாய் போணியாகிக்கொண்டிருந்தன.

வாழைப்பழ வியாபாரிகள் தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்துகொண்டு இருந்தனர். பூக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன. பிறர் கடைகளை  அடைக்கத்தொடங்கினர்.

‘கோவில் நட சாத்தினா அத்தோடு அண்ணக்கி கடைகள் சரி ’

மாமா சித்தப்பாவிடம் சொல்லிகொண்டே போனார். கபாலி அவர்களோடு நடந்து வந்துகொண்டே இருந்தான்.

 

 

 

 

                                                                     12

’மெய்க்காவல் சுப்புணி எதிரே வந்துகொண்டிருந்தான். கையில் பீடி ஒன்று புகைந்து கொண்டிருந்தது.

‘இந்த பழக்கம் வேறயா’

அப்பா சொன்னது அவன் காதில் விழுந்துமிருக்கலாம்.

‘அவன் எதானு பண்ணிண்டு போறான். நீங்க உங்க வேலய பாருங்கோ. நாமளே அண்டறதுக்கு வேற  இடம் ஏதும்  இல்லாம இந்த ஊருக்கு வந்துருக்கம். இதுல என்ன சட்டமா  பேச்சு வேண்டிருக்கு. சுப்பிணி வச்சிண்டுன்னா  கோவில்ல சொச்ச நாளு தள்ளணும்

அம்மா எச்சரிக்கை செய்தாள்.

பீடியை கீழே விட்டெறிந்த சுப்பிணி ‘ வாங்க அய்யா என்ன இங்க நிக்கறீங்க’

‘தம்பி மெட்ராஸ் போயிருக்கான்.  நான்தான் பஸ் ஏத்தி தம்பியை  அனுப்சேன்.’

‘குருக்களய்யா  ஊர்ல இல்ல கெளம்பிட்டார்’

‘மெட்ராஸ்க்கு போயிருக்கார். அவுரு மாமியாளுக்கு உடம்பு சொகம் இல்லயாம்’

‘ சேதி வந்துதா’

;  சென்னையில வேல பாக்குறாரே   தர்மகர்த்தா பையன் துறைமுகத்துலதான்னு நெனக்கிறேன்.  அவர் மூலம் சேதி வந்துது. ஒரு லெட்டர் கொண்டாந்து கொடுத்தாரு.  தம்பிக்கு அவுரு மாமனாரு எழுதின லட்டருதான்’

‘ ஆமாம் அந்த தருமகர்த்தா வூட்டு  தம்பி மெட்ராஸ்லதான் வேல பாக்குது’

‘’தர்மகர்த்தாண்ட தகவல் சொல்லுணும்’

‘ அத மொத செய்யுங்க அய்யா அவுரும் ஒரு மாதிரியான மனுஷன்’

‘இப்பவே போயி சொல்லிட்டு வாங்க. இதெல்லாம் சட்டுன்னு முடிக்கணும் கோவிலு பூசை யாரு செய்வா’

‘ நான் தான்’

‘கையி என்னாச்சு’

  கை தேவலாம் பெறவு என்ன செய்ய கூட மாட  உங்க  குருக்களு  அய்யிரு அதான் என் தம்பி   மொவன் சாமிய இல்ல எம் பொண்ண வச்சிக்கவேண்டியதுதான்’

‘ இந்த இக்கட்டுல  தர்மகர்த்தாகிட்ட போயி சேதி சொல்லாம  எதுவும்  செய்ய வைக்காது’

‘ நீ சொல்றது சரி’

‘ பூசை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போயி வாங்க’

‘ நீ சொல்றது சரிதான்’

‘ இங்க வற்றீளா’

அம்மா அப்பாவை அழைத்தாள்.

‘மொதல்ல  ஸ்நானம் ஆகட்டும்.  கோவிலுக்கு போய் பூஜைய முடிங்கோ’

‘தர்மகர்த்தாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன் அப்புறம் பூஜ பண்ணிக்கலாம்’

‘பூஜய முடிச்சிட்டு போனா’

‘ அது வேண்டாம் அவர் கிட்ட சொல்லிட்டு பூஜைய ஆரம்பிக்கலாம். கோணா மாணான்னு ஆரம்பிச்சி எதுலயாவது மாட்டினூடப்போறம்’

‘அப்பா தருமகர்த்தா கிட்ட சொல்லிட்டு வந்துடுங்கோ. சித்தப்பா அவரண்ட சொல்லாம  ஊருக்குப் பொறப்பட்டு போனதயே தப்பா பேசுவார் இல்லையா மெய்க்காவல் சுப்புணி சொன்னதிலயும்  ஒரு நியாயம் இருக்குதான்’

நான் அப்பாவிடம் சொன்னேன்.

‘சாமி பள்ளிக்கூடம் கெளம்பறதுக்கு முன்னாடி அவன வச்சிண்டு பூஜைய முடிச்சிகணும். அதுதான்சரி.’

‘சாயரட்சைக்கு அவன கூட்டிண்டு போங்கோ’

‘ சரியா சொன்ன’

அப்பா ஸ்நானம் முடித்து விபூதி பட்டையிட்டுக்கொண்டார்.

‘நா  தர்மகர்த்தா ஆத்துக்கு போயிட்டு வறேன். நீங்க ரெண்டு பேரும் பத்ரமா இருங்கோ. ஊரு உங்களுக்கு புதுசா இருக்கும். அக்கம் பக்கம் மனுஷா எப்பிடியோ யாருக்கு தெரியும்’

‘ நாங்க கதவ சாத்திண்டு இருப்போம்’

‘ நா வரேன்’

‘ விபூதி பையி கையில இருக்கா’

‘அது எதுக்கு’

‘’தர்மகர்த்தாவ பாக்க போறேள். அவர் கொஞ்சம் திருநீறு குடுங்கன்னா. கோவில்ல இருக்குன்னு சொல்வேளா’

‘ நன்னா வக்கீல் கணக்க பேசற’

விபூதி பையை எடுத்துக்கொண்டார். அதனை மடியில் செறுகிக்கொண்டார்.

‘தம்பியோட  விபூதி பைதான் வாசனையா இருக்கு.  பழனி சித்தனாதன் விபூதியா இருக்கணும்’ அப்பாவே சொல்லிக்கொண்டார்.

‘தருமங்குடில பசு மாட்டு சாணி  உருண்டை காய வச்சி நெல்லு உமியகொட்டி அதுல நெருப்பு கொட்டி பொகைய விடுவம். விபூதி கெஅச்சிடும். அத பானையில எடுத்து பத்ரமா வச்சி இருப்போம்’

‘’இங்க  நடராஜா கோவில் மேல சன்னதில இல்ல கீழ சன்னதில  தேங்கா பழம் வெத்தல தட்டு வச்சிண்டு சுவாமிக்கு  அர்ச்சனை தட்டு விக்குறவன்கிட்ட  விபூதிபாக்கெட் கெடைக்கும் அததான் எல்லாரும்  வாங்கிப்பா’

அப்பா தர்மகர்த்தா வீட்டுக்கு கிளம்பினார்.  அப்பாவுக்கு இனம் புரியாத கவலை ஒன்று தொற்றிக்கொண்டது. அதனை அவர் முகமே காட்டியது.

அங்க வஸ்திரத்தை போற்றிக்கொண்டு அப்பா விவசாயக்கல்லூரி சாலையில் நடந்தார்.

எதிரே பசு மாடுகள் மேய்ச்சலுக்குக்கூட்டமாகக்கிளம்பி வந்து கொண்டிருந்தன.

நல்லசகுனம்தான் பசுமாடுகள் மந்தையாக எதிர்படுவது அவர் மகிழ்ச்சியாகப்பார்த்தார்.

மாடுகளைத் தொடர்ந்து மாட்டுக்காரன் கையில் நீண்ட கழியோடு வந்து கொண்டிருந்தான். மாடுகள் ஒன்றையொன்று மீறிக்கொண்டு நடை போட்டன.

சில மாடுகள் சாணி போட்டுக்கொண்டே நடந்து சென்றன. சாணிகளை அங்கங்கே அள்ளிக்கூடையில் போட்டுக்கொண்டே ஒரு மூதாட்டி மாடுகளைப்பின் தொடர்ந்தாள்.

ஒரு சிறுமி ஒருத்தியும் சாணிக்கூடை   வைத்துக்கொண்டு ‘கிடேறி போடுது’ என்று வேகமாகக்கத்தினாள். அவள் ஒரு கிடேறி சாணம்  போடுவதைப்பார்த்து’ விட்டு அது தனக்கே சொந்தம் வேற யாரும் அதனைச்சொந்தம் கொண்டாடமுடியாது என்பதை உறுதிசெய்தாள். இதைப்பார்த்த மூதாட்டி ‘மயில காள போடுது’  என்று தனது சாணி உரிமையை நிலை நாட்டினாள். இப்படியாக மாடுகள் போய்க்கொண்டே இருந்தன.

 அப்பா தர்மகர்த்தா வீட்டை அடைந்தார். கேட்டைத்திறந்து கொண்டு உள்ளே போனார் தர்மகர்த்தாவின் பிள்ளை வேணு வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தார்.

‘ தர்மகர்த்தா அய்யாவை பார்க்கணும்’

‘ அய்யா ஊர்ல இல்ல. மயிலாடுதுறை வரைக்கும் போயிருக்காரு. அங்கே கொஞ்சம் நடவு இருக்கு. அத பாத்துட்டு வரலாம்னு போயிருக்காரு’

‘’ தம்பி ஊருக்குப்போனதை அய்யாண்ட சொல்லணும்னு வந்தன். நாந்தான் பாசுபதேசுரர்  பூஜைய பாத்துகணும். அவுன் வர்ரவரைக்கும்’

‘நா  ஊர்லேந்து  வந்த உடனேயே  இந்த சமாச்சாரம்  அப்பாண்ட சொல்லிட்டேன்.   நீங்க  கூட இங்க வந்துட்டு போனீங்கன்னு சொன்னாரு’

‘ அய்யாவுக்கு சேதி தெரியும்னா சரித்தான் நா வர்ரேன்’

‘ நீங்க பாசுபதேசுரர் கோவில்  பூஜைய செய்யுங்க  அது முக்கியம் அது ரொம்ப முக்கியம்’

‘அது எப்பிடி நமக்கு பிரக்ஞை இருக்குறவரைக்கும்  நமக்கு கை காலு சுவாதீனமா நாம சொல்லுறத கேட்டுகிட்டு   இருக்குறவரைக்கும் கோவில்  பூஜய உடறது எப்பிடி’

‘அது நினைப்புல  இருந்தா சரி. பாக்கி எதுன்னாலும் பெறகு பேசிக்கலாம் போய் வாங்க’

‘ எனக்கு கையில  சதையில ப்ராப்ளெம். ஒரு  சின்ன ஆப்ரேஷன் நடந்துச்சி. நம்மூர்       ஓ பி லதான். அந்த சோத்து  கையால  ஜாஸ்தி வெயிட் தூக்க முடியாது கூட மாட ஒத்தாசைக்கு  தம்பி பையன் சாமி  இருக்கான். எம்பொண்ணு இருக்கா’

‘அதெல்லாம் ஒங்க பாடு நீங்க பாத்துகுங்க’

‘ நா வர்ரேன்’

 

                                                                         13

அப்பா  தர்மகர்த்தா  மகனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். விபூதி பையைத்தொட்டுப்பார்த்துக்கொண்டார். அது மடியில் பத்திரமாக இருந்தது. முதலாளி இருந்தால் விபூதி கேட்டிருப்பாரோ என்னவோ.

அம்மா நிவேதனத்திற்கு சாதம் பொங்கி தயாராக வைத்திருந்தாள். அப்பா நிவேதன   பித்தளைத் தூக்கைக் கழுவி எடுத்துக்கொண்டு வந்தார். அம்மா நிவேதனத்திற்கு சாதம் தூக்கில் எடுத்து வைத்து மூடிக்கொடுத்தார்.

’ நா  நிவேதன தூக்கை எடுத்துண்டு வரேன்’

‘ நீ  ஸ்நானம் பண்ணியாச்சா’

‘ ஆச்சு அப்பா’

‘ அப்ப தூக்க எடுத்துக்கோ’

‘ சுப்புணி மெய்க்காவல் வரணமே’ அனுப்பிடு’

‘ நீ கோவில்  சாவிய எடுத்த்கோ சுப்புணி கோவிலுக்கு வந்துடுவான்’

‘டீ சுப்புணி வந்தா  கோவிலுக்கு அனுப்பிடு’

‘ சரி’ அம்மா அப்பாவுக்குப்பதில் தந்தாள்.

நான்  கோவில் சாவியையும் நிவேதனதூக்கையும் எடுத்துக்கொண்டேன். அப்பாவும் நானும் பேசிக்கொண்டே கோவிலுக்குப்புறப்பட்டோம்

சுப்புணி வேகு வேகு என்று நடந்து வந்துகொண்டிருந்தார்.

‘ அய்யா கெளம்பிட்டாபுலயா’

‘ சுப்புணி நா கெளம்பிட்டேன்’ சுப்பிணி கட கட என்று நடந்து எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்.

‘.தோ நா வந்துட்டேன். பூ மால தொடுத்தாச்சி. எடுத்தாறேன்.  வில்வம் பறிச்சி எடுத்தாறேன். விளக்குவ கோவில்ல  எல்லா சன்னதியில நா ஏத்திபுடுவன்’

‘ பாப்பா கூட வருது போல’

‘ அவிஷேகத்துக்கு தண்ணி மொண்டு தரேன்னு சொல்லிச்சு. எனக்கும் கையி இன்னும் சரியா வருனும்ல கொஞ்ச நாளு ஆவும்.’

‘ குருக்களய்யா மொவன் பள்ளிகூடல் போயிருக்கும்’

‘’ சுப்புணி ஒரு நல்ல சமாச்சாரம்  அந்த பைய  கவனமா படிக்குறான். அது ஒரு சந்தோஷம். வீட்டுல சும்மா இருந்தா என்னோட வந்துடுவான். அவனும் பள்ளிக்கூடம் போயிருக்கான்’

‘ நானு பாப்பாவோட இருக்குறன் நீங்க ஒண்ணும் கவல படாதிங்க’

சுப்புணி தன்னுடைய ஒத்துழைப்பை உறுதி செய்தான்.

நாங்கள் மூவரும் கோவிலுள் நுழந்தோம். கிணற்றில் தண்ணீர் சேந்தி  நான் அப்பாவுக்கு கொடுத்தேன். அப்பா சொம்பாலே தண்ணீர் எடுத்து  சுவாமிக்கு அபிஷேகம் முடித்தார்.

சுப்புணி அவன் பணியைச்சரியாகச்செய்தான். சேவார்த்திகள் நான்கைந்து பேருக்கு கோவிலை வலம் வந்து அப்பாவிடம் விபூதி வாங்கிக்கொண்டார்கள்.

சேவார்த்திகளில் ஒரு பெரியவர் ’அய்யா புதுசா இருக்காரு’ என்று கேள்வி வைத்தார். 

‘ உங்க குருக்களய்யா மெட்ராஸ் போயிருக்காரு’

‘ வர்ரவரைக்கும்  நீங்க தான் பூச’

‘ஆமாம்’       

‘ அந்த அய்யா ஒங்களுக்கு ஒறவா’

‘’ அவன் என் தம்பி இந்த பாப்பா எம்பொண்ணு’

‘அதான் மொக சாட தெரிஞ்சிது நீங்க அந்த அய்யாவுக்கு ஒறமொற இருக்கணும்னு நெனச்சன்’’

‘அது சரிதான்’ அப்பா பெரியவருக்கு பதில் சொன்னார்.

‘எனக்கு மூத்தவர் தருமங்குடில இருக்கார்ன்னு சொல்லுவாரு அய்யிரு’

‘அது நாந்தான்’

‘ அப்பிடி போடு. தருமங்குடி ஆசாமியா நீங்க’

‘ ஆமாங்க’

‘ நா பொன்ணு  கட்டுனது தருமங்குடிலதான் வெள்ளாழத்தெருவுல  ருத்திராடசம் கட்டிகிட்டு கட்டு குடுமி  வச்சிட்டு  இருந்தாரே வைத்தியநாதம் புள்ள அவரு சின்ன மொவள நா கட்டுனன். நா தமிழ் வாத்தியாரா இருந்தன். சென்னையிலதான். ரிடேர் ஆயி. சொந்த ஊருக்கே வந்த்ப்புட்டன்’

‘ ரொம்ப நல்லது. உங்க சம்சாரத்துக்கு என்ன தெரியும். நாங்க ரெண்டு பேரும் தருமங்குடிதான. உங்கள எனக்கு மறந்து போச்சி. ஆனா மெட்ராஸ்ல திருவள்ளூர் கிட்ட  நீங்க  தமிழ் வாத்தியாரு வேல பாக்குறீங்கன்னு சேதி தெரியும்’

‘ விபூதி வாங்கிங்க’ அப்பா விபூதியை தன் மடிப்பையிலிருந்து எடுத்துக்கொடுத்தார்.

‘எனக்கும் ரவ’ சுப்புணி கை நீட்டினான்.

‘நல்ல மணம்’ பெரியவர் சொல்லிக்கொண்டார்.

கோவிலில் விபூதி மடக்கு வெண்கல  உலோகத்தில் இருந்தது. அதனுள் விபூதி நிறைத்துக்கொண்டிருந்தது. சுப்புணி அதை நிரப்பி நிரப்பி வைப்பவன். அப்பா முக்கிய மானவர்களுக்கு  தரவே தன் மடியில் இருக்கும் விபூதிப்பையை வெளியில் எடுப்பார்.

‘சிதம்பரத்துல தீட்சிதர்ங்க விபூதி வச்சிருப்பாங்க பாத்திருக்கயா சுப்புணி’

‘ நல்லா பாத்துருக்கன்.   சருகா இருக்குற  பொரச இலையில விபூதிய வச்சி வச்சியும்  குடுப்பாங்க. பன்னீர் அத்தரு ஜவ்வாதுன்னு விபூதிலேந்து  மணம் வரும்’

‘கரெக்டா சொல்லுற’

‘ தெனம் பாக்குற கதைதானே’

‘ வேல முடிஞ்சிது சன்னதியெல்லாம் பூட்டு. சாயரட்சை வருவம். அப்ப சாமிய கூட்டிகினு வரணும்’

‘சாமிநாதனை கூட்டிகிணு  வரணும்னுன்னு சொல்லுங்க. அதான் சரி’

‘ ஆமாம் சுப்புணி,  கோவிலுக்கு சாமிய கூட்டிடுகிணு வரணும்னு சொன்னா அது தப்பாதான் தெரியும். சாமின்னா நா சாமிநாதனதான் சொல்றேன்’

அப்பா சிரித்துக்கொண்டார்.

 

‘எல்லாம் கரெக்டா முடிஞ்சிது. பெரிய கதவ பூட்டுணும். பாப்பா பொறப்படலாமா’

என்னைப்பார்த்து சுப்புணி இப்படிக் கேட்டுவிட்டு கோவிலின் பிரதான கதவை இழுத்து சாத்தினார்.பூட்டினார்.

நான் நிவேதன தூக்கைக்கையில் எடுத்துக்கொண்டேன். மூவரும் கோவிலை விட்டுப்புறப்பட்டோம்.

பாசுபதேஸ்வரர் கோவிலில் காலை சந்தி முடிந்தது. இனி சாயரட்சை என்னும் மாலை பூஜைதான்.

சுப்புணி தன் ஜாகை நோக்கிப்புறப்பட்டான்.

‘ஏம்பா இந்த மெய்க்காவல் சுப்பிணி குடும்பம் எப்பிடி’

‘எனக்கும் ஒண்ணும் சரியாத்தெரியல. நானும் அதெல்லாம் கேட்டுத்தெரிஞ்சிகல. அவனையே கேட்டுட்டா போச்சி’

‘சரிப்பா’ சொல்லிய நான் படியேறி வீட்டுக்குள்ளாக சென்றுகொண்டிருந்தேன்.

அம்மா தோட்டத்தில் கறிவேப்பிலை பறித்துக்கொண்டு இருந்தாள்.

நான் நேராக தோட்டத்திற்குச்சென்றேன்.

‘ வாடி   கோவில் வேல ஆச்சா’

‘ ஆச்சு, அம்மா  நீ என்ன பண்றே’

‘நா என்ன பண்றேன். நீந்தான் பாக்கறயே.

அம்மா மடி நிறைய கறிவேப்பிலை இணக்குகள் வைத்திருந்தாள். தேவைக்கு அதிகமாகவே பறித்து வைத்திருந்தாள்.

‘ இவ்ளோ கறிவேப்பில என்ன பண்றது’

‘கூட்டு பண்லாம்னு யோசனை’

தோட்டம் சிறிய தோட்டம்தான். நான்கைந்து வாழை மரங்கள் இருந்தன. துளசிச்செடிகள் சிலவோடு ஓமவல்லிச்செடியும் இருந்தது. மல்லிகைச்செடி ஒன்று வெறும்  பச்சை இலைகளை மட்டும் வைத்துக்கொண்டு தவம் செய்கிற மாதிரிக்கு இருந்தது.  காலுக்குக்கீழாக பிரண்டைக்கொடியும் இருந்தது.

‘ முறுங்கை மரம் இருக்கு பாத்தியா’

‘சுவர் ஓரமாய் முறுங்கை மரம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இரண்டு மூன்று காய்கள் வாட்ட சாட்டமாய்க்காய்த்திருந்தன.

‘அலகு இருந்தா காய்  பறிக்கலாம்’

  அலக இங்கதான் எங்கயாவது வச்சிருப்பா சித்தி நல்லா பாக்கணும்’

நான் அம்மாவுக்குப்பதில் தந்தேன்.

அதற்குள்ளாக அம்மா சுரடு எங்கே என்று தேடினாள். அப்பாவும் தோட்டத்திற்கே வந்து,

‘இங்க என்ன நடக்கறது’ கேள்வி வைத்தார்.

‘முறுங்கை பறிக்கலாம்னு பாக்கறம்’

‘ ரொம்ப உயரத்துல இருக்கா’

‘ஆமாம்’. காய்களை அப்பாவுக்குக்காட்டினேன்.

‘’அலகு இருந்தாதான் காய் பறிக்கிற கத ஆகும்.  முருங்க மரம்னா அதுல மீசை வச்சிண்டு சொண பூச்சி இருக்கும் ஜாக்கிரத’ சொல்லியஅவரும் அலகு எங்கே இருக்கிறது எனத் தேட ஆரம்பித்தார். அது கிடைத்தால்தானே.

‘ஆத்துல சொரடு இல்லயோ என்னமோ’

அம்மா சொல்லிக்கொண்டாள்.

‘சாமி ஸ்கூலுக்கு போயிருக்கான் அவன் வந்துடுவான். அதுக்குள்ள என்னவானு பண்ணி வை’

அப்பா அம்மாவுக்குக்கண்டிப்பாகச்சொன்னாள்.

‘சாதம் இருக்கு, பருப்பு தொகையல் இருக்கு. டாங்கர் பச்சடி பண்ணிருக்கேன்’

‘ சுட்ட அப்பளம் ரெண்டு இருக்கட்டும்’ அம்மாவுக்கு  அப்பா யோசனை சொன்னார்.

அம்மா அடுப்படிக்குப்போனார். நான் கூடத்தில் அமர்ந்து சாமி அலமாரியில் என்ன என்ன உள்ளது என அலசிக்கொண்டு இருந்தேன்.

அப்பா பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு தனது வலது கையை தடவித்தடவிப்பார்த்துக்கொண்டே இருந்தார். கையை மடக்கி மடக்கி பார்த்துக்கொண்டார்.

‘கை எதானு வலிக்கிறதா’

‘பகவான் புண்யத்துல வலி இல்லே’

அப்பா எனக்குச்சொன்னார்.

‘பழையபடியும் தருமங்குடி போலாமா. தருமகர்த்தா புள்ளய பாக்கலாமான்னு யோஜன பண்றேன்’

‘ அது சரியா வருமா, அவர் உன் கணக்க முடிச்சின்னா அனுப்பி வச்சார்.  உன் வேலக்கி வேற ஆள போட்டாச்சி. நீ  என்ன ஆன உன் கைக்கு  என்ன ஆச்சின்னு அவருக்கு கவல அக்கற இருக்கா என்ன’

‘பெரிய மனுஷன்’

‘ நா ஒத்துகலப்பா’

‘ இங்க எத்தினி நாளைக்கி ஓட்டமுடியும் நமக்குன்னு ஒரு வேல இருக்கணும் தனியா ஒரு ஜாகை இருக்கணும் இல்லயா. எலி வளைன்னாலும் தனிவளம்பா’

‘நீ சொல்றது சரிதான். நாலு எடத்துல நாலு பேருகிட்ட சொல்லி வக்கணும். அப்பதான் ஒரு வழி கெடைக்கும்’

‘ சொல்லிதான் வச்சிருக்கேன். ஒண்ணும் தெரியலயே’

‘எங்க யாருகிட்ட நீ சொல்லியிருக்க. சித்தப்பா வரட்டும். இப்பக்கி அவர் பூஜைய ஒத்துண்டு இருக்க. அவர் வந்தவிட்டுதான்  நீ கை வீசி வேல தேடணும்’

சாமி மதிய உணவிற்காக வீடு திரும்பினான். நான் அவன்ம் வழக்கமாய் சாப்பிடும் தட்டை அலம்பி அவனுக்கு வைத்தேன். அம்மா பரிமாறினாள்.

‘ரொம்ப ஜோரா இருக்கு பச்சடி இந்த பச்சடிக்கு பேரு என்ன’ சாமி  கேட்டான்.

 ‘ டாங்கர் பச்சடி  ஒங்க அம்மா பண்ணுவாதானே’

‘ இது என்ன பேரு  புதுசா இருக்கு.  எங்க  அம்மா  இத பண்ணினதே இல்ல.’

சாமி சமத்தாக சாப்பிட்டு முடித்து கை அலம்பிக்கொண்டு அப்பாவோடு அமர்ந்துகொண்டான்.

‘நீங்க சாப்பிடலயா’

‘நாங்க எல்லாரும் இனிமேதான் சாப்பிடணும்’

சாமி புத்தகம் ஒன்றைக்கையில் எடுத்துக்கொண்டு புரட்டினான். மொண மொண என்று படித்தான். எனக்கு எதுவுமே விளங்காமல்தான்.

நாங்கள் மூவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்.

‘ இண்ணைக்கு சாம்பார் ரசம் எதுவும் இல்ல’ அம்மா சொல்லிக்கொண்டாள்.

‘ஒண்ணும் தப்பில்ல இருக்கறது அமிருதம்’

அப்பா சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். சாமி மதியம் ஸ்கூலுக்குக்கிளம்பினான்.

‘ நான் போயிட்டு வரேன்’ சொல்லி நடையைக்கட்டினான்.

அவன் புத்தகங்கள் வீட்டில் வைத்துவிட்டுப்போனதை எல்லாம் இப்படியும் அப்படியும் புறட்டிக்கொண்டே இருந்தேன்.

‘ எப்பயும் எதாவது புஸ்தகம்தான்’

‘ ஆமாம் அம்மா எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு’

‘ தருமங்குடிலயே  நாம  இருந்திருந்தா’

‘ இப்ப எங்க இருக்கம் அதுதான பேச்சு’

நான் அம்மாவுக்குப்பதில் சொன்னேன்.

அப்பா நாங்கள் பேசிக்கொள்வதைக்கவனித்துக்கொண்டே இருந்தார். மவுனமாக சிரித்துக்கொண்டார்.

‘ என்னப்பா சிரிக்கற மாதிரி இருக்கு’

’ அப்படி ஒண்ணும்  இல்லே. நா ஒனக்கு வரன் பாக்கணும்னு இருக்கேன்’

அதான் என் மனசுக்குள்ளே ஓடிண்டே இருக்கு.

அம்மா இப்போது லேசாக சிரிப்பது மாதிரி தெரிந்தது.

‘ இப்ப நீ எதுக்கு சிரிக்கற’

‘ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது பாத்து சிரிப்புதான் வர்றது’

‘ அது எப்பிடி சொல்லு’

‘ நிக்க நிழலு இல்ல. பாக்க ஒரு தொழிலோ உத்யோகமோ இல்ல. ஓசில ஓடிண்டு இருக்கு பொழப்பு. இதுல  என் கல்யாணம்பத்தி  பெரிசா கனா வேற உங்களுக்கு’

‘ பாக்கலாம்’

நான் அம்மாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அம்மா எப்போதும் விஷயங்களைச் சரியாகவே எடைபோடுகிறார்.

தெருவில் ‘ சார் போஸ்ட்’ என்று ஒரு குரல் கேட்டது.

நான் தெருபக்கமாய் எட்டிப்பார்த்தேன். சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு தபால்காரர் நின்றுகொண்டிருந்தார்.

‘ வீட்டு நெம்பர் சரி. ஆனா பேரு புதுசா இருக்கு’

‘ஆமாம் சார் அவரு எங்க சித்தப்பா சென்னை போயிருக்காரு. இப்பக்கி நாங்கதான் இருக்கோம்’

‘அவரு உங்க சித்தப்பாவா அவருதான் தபால் போட்டு இருக்காருபோல. அவுரு கையெழுத்து நா பாத்து இருக்கேன்’

நான் தபாலை வாங்கிக்கொண்டேன்.

‘யாரு தபால் போட்டுருக்கா’

‘ சித்தப்பாதான் போட்டுருக்கார்’

‘பிரி  படி’

நான் கடிதத்தைப்படிக்க ஆரம்பித்தேன்.

அம்மாவும் அப்பாவும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘மஹாஸ்ரீ அண்ணா அவர்களுக்கு தம்பி அனேக நமஸ்காரம்.  இங்கு என் மாமியாருக்கு  இடது கால் முட்டி யில்  எலும்பு தேய்ந்து போனதால். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான்  செய்யவேண்டும் என்கிறார்கள் ஒரு டெஸ்ட் பாக்கி இல்லை எல்லாம் பார்த்தாயிற்று.  சிக்கிச்சைக்கு  ஏகப்பட்டது செலவாகும் என்கிறார்கள். கந்தகோட்டம் கோவிலில் என் மாமானாருக்கு முறை பூஜை இருக்கிறது. அதற்கு நான்தான் சென்றுவருகிறேன். மாமா மாமியாருக்கு ஒத்தாசையாய் ஆத்தில் இருக்கிறார்.  என் ஆத்துக்காரிதான் சமையல். பத்து பாத்திரம் தேக்கறது எல்லாம் அவளுக்கும் சிரமம்தான்.

அங்கு உங்கள் க்‌ஷேம லாபங்கள் எப்படி உள்ளது. என் பையன் சாமியை  கவனமாக படிக்கச்சொல்லவும்.  நாலாம் கிளாஸ் படிக்கும் அவன் விளையாட்டாக இருந்துவிடுவான். அவன் படிக்கிறானா என்பதைக் கவனமாகப்பாருங்கள்.

கோவில் தருமகர்த்தா கோவிலுக்கு வந்தாரா உங்களை  ஏதும் கேள்வி கேட்டாரா? அவரை அனுசரித்துப்போகவேண்டும். அது முக்கியம்  அப்படிப்போனால் ஒன்றும் பிரச்சனை வராது. நான் எப்போது சென்னையிவிட்டு ஊருக்குப்புறப்பட்டுவருவேன் என்று சொல்லமுடியாமல் இருக்கிறது .  நான் அவ்விடம் வந்தபிறகு நீங்கள்  வேறு  ஒரு கோவிலில் வேலை  எதுவும் தேடலாம். அதுவரை பொறுமையாக இருக்கவும். இங்குள்ள சூழ்நிலை அப்படி’.  கடவுள் ஒரு உங்களுக்கும்   நல்ல வழி காட்டுவார்.  செள.மன்னிக்கு நமஸ்காரம். பெண் குழந்தைக்கு ஆசிகள். பிறபின்.

இப்படிக்கு

உங்கள் தம்பி. நான் கடிதத்தைப்படித்து முடித்தேன்.     

 

                                                                          14

 

‘என்னடி இது உன் சித்தப்பா சித்தி எப்ப  இங்க வர்ரது. நாமளும் வேற ஒரு வேல தேடிக்க வேண்டாமா’

‘அவன்தான்   கடுதாசில  எழுதியிருக்கானே. அவன்  இங்க வர்ரவரைக்கும் நான் இந்த பாசுபதேசுரர் கோவில் பூஜையதான் பாத்துகணும்’

‘ அப்பா சரியாத்தான் சொல்றார்’ நான் அம்மாவிடம் சொன்னேன்.

அப்பா திண்னையில் ஓய்வு எடுத்துக்கொண்டார். அம்மா கூடத்தில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.

‘உனக்கு கண்ண சொக்கறது’

‘இல்லடி கொஞ்சம் அசதியாஇருக்கு’

நான் அம்மாவையே பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன்.

வாயிலில் யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டது. யாராய் இருப்பார்கள் யோசித்தேன். ஊர் புதிது. யாரையும் எனக்கு பரிச்சயம் இல்லை.

‘சிவாச்சாரியார் இருக்காரா’

‘யாரது’

‘ நான் உள்ளூர் புரோகிதர். சுந்தரேசன், நீங்க யாரு.’

‘ இந்த ஊர் குருக்கள்  அதான் பாசுபதேசுரர் கோவில் குருக்கள் அவரோட சொந்த அண்ணா’

‘உங்களுக்கு எந்த ஊர்’

‘’இப்பக்கி எந்த ஊரும் இல்ல. இதுதான் என் சேதி’

‘ஏன் என்ன சமாச்சாரம் தெரிஞ்சிக்கலாமோ’

‘திண்ணையில உக்கார்ந்துகுங்கோ நிக்கறேளே’

‘இல்ல நா அவசரமா வந்தேன். குண்டு மொதலி ஆத்துல திவசம். சிவன் கட்டளை விஷ்ணு கட்டளைன்னு ரெண்டு இலை போடுவா. பெருமாள் கோவில் பூஜ பண்ற அய்யங்கார் ஸ்வாமிக்கும் சிவன் கோவில் குருக்களுக்கும் ஒவ்வொரு கட்டளை குடுத்துடுவா, இந்த குருக்கள்கிட்ட சித்த ஞாபகபடுத்திட்டு போலாம்னு வந்தேன். குருக்கள் எங்கே’

‘அவன் என் தம்பி. மெட்ராஸ் போயிருக்கான். அவன் மாமியாருக்கு சித்த உடம்பு நன்னா இல்லன்னு சேதி வந்துது. அவனும் அவன் ஆம்படையாளும் பொறப்பட்டு போயிருக்கா’

‘இப்ப் எப்பிடி இருக்கார்’

‘ கால் முட்டி எலும்பு தேஞ்சி போயிட்தாம். நடக்க புடிக்க ரொம்ப ஸ்ரமம்னு கேழ்வி’

‘ கந்த கோட்டம் பூஜ இருக்குமே’

  ஒத்தாசைக்குத்தான் என் தம்பி போயிருக்கான்’

சாமி பள்ளிக்கூடம் விட்டு வந்துகொண்டிருந்தான். அவன் புரோகிதர் தன் வீட்டு வாயிலில் வந்து இருப்பதைப் பார்த்துக்கொண்டான்.

‘வாடா மாங்குடி முண்டா’ என்றார் குருக்கள்.             

‘ இது என்ன பேரு புதுசா இருக்கு’ அப்பா குறுக்கிட்டார்.

‘’ செல்லமா கூப்பிடுவேன். சும்மா என்ன அப்ப  தோண்றதோ அதான் அவனுக்கு பேருன்னு ஆயிடும். மறுநாள் பாத்தேன்னா வேற பேர் வச்சி கூப்பிடுவேன். எல்லாம் ஒரு ஆச பிரியம் வேறென்ன’

‘ வாங்கோ மாமா’ என்றான் சாமி.

‘ வரேண்டா சாமிநாதா’ என்றார் புரோகிதர்.

‘அப்பா எங்கேடா’

‘தாத்தா பாட்டிய பாக்க போயிருக்கார்’

‘அம்மா’

‘அம்மாவும்தான்’

நானும் அம்மாவும் வாசல் படி அருகே நின்று கொண்டு இருந்தோம்.

‘ இவ என் ஆம்படையா. அது என் பொண்ணு’

‘ ரொம்ப சந்தோஷம் க்‌ஷேமமா இருங்கோ’ என்றார் புரோகிதர்.

‘ எண்ணைக்கு திவசம் எப்பிடி வரணும்னு சொல்லலேயே’

‘ குண்டு முதலி ஆத்துல நாளக்கி திவசம் ஒரு ஒன்பது மணிக்கு வந்துடணும் விபூதி பிரசாதம் கையில் இருக்கணும்’

‘ பூஜய முடிச்சுட்டு வந்துடறேன்’

‘அப்பிடிதான் வரணும்’

‘எனக்கு குண்டு மொதலியார் வீடு இருக்கிற எடம் தெரியாது’

  உமக்கு தெரிய நியாயம் இல்லெ  ஊருக்கு நீர் புதுசாச்சே’

‘’ஆமாம்  சிவன் கோவில் தெரியும் அந்த  கோவில் தர்மகர்த்தா ஆம் தெரியும். வேற ஒண்ணும் தெரியாது’

‘அப்படி போடுன்னே கோவில் தர்மகர்த்தா வீடு தெரியும்னா அது  போறும். அவர் வீட்டுக்கு மூணாவது வீடு வாசல்ல நீல நிறத்துல  ஒரு கார் நிக்கும்’

‘ கார் எங்கானு போயிட்டா’

‘என்ன சுவாமி பேசறீர். அது அந்த குண்டு மொதலியார் கார். அது வாசல்ல நிக்கணும் நின்னாதான் அவர் ஆத்துள்ள இருக்கார்னு அர்த்தம்’ நாந்தான் கோவில் தர்மகர்த்தா வீட்டுக்கு மூணாவது வீடுன்னேன் அது போறாதா’

‘சரி நா வந்துடறேன்’

‘ரொம்ப சந்தோஷம் மறந்துடப்போறீர்’

‘ நா பாத்துகறேன்’ அம்மா புரோகிதருக்கு பதில் சொன்னாள்.

‘ கல்யாணத்துக்கு பொண்ணு இருக்கா போல’

‘ சுவாமி  குடும்ப ஜீவனமே இன்னும் நிலைக்கல. எங்க  நா கல்யாணத்த பத்தி யோஜன பண்றது’

‘ ஓய் அப்பிடி சொல்லாதீரும் வேள வந்தா எதுவும் நிக்காது தெரியுமோ’

சொல்லிய புரோகிதர் இடத்தைவிட்டு நகர்ந்து போனார்.

‘அவர் ஜாகை எங்கன்னு கேட்டு இருக்கலாம்’

‘ஆமாண்டி அந்த யோஜன எனக்கு வரல’

‘இதெல்லாம் கேட்டு  நாம வச்சிகணும் ஒரு அவசரம் அக்கரைக்கு வேண்டிருக்குமே’ அம்மா முடித்துக்கொண்டாள்.

சாமி பள்ளியில் அவனுக்குக்கொடுத்த வீட்டுப்பாடங்களை எழுதிக்கொண்டிருந்தான். தினம் அவன் வாடிக்கையாய் செய்வதுதான்.

‘அப்பா உன் கை வலி எல்லாம் எப்பிடி இருக்கு’

‘ அது மறந்தே போனேன். நீ தான் ஞாபகப்படுத்தறே’

‘வலி இல்லன்னா விடு. பெரிய வேலயா எதுவும் பண்ணவேண்டாம். அப்பிடி இருந்தா சரிதான்’

‘நீ பெரியவ சொல்லிட்ட அப்பறம் என்ன போ’

அப்பா எனக்கு பதில் சொன்னார். அம்மா அடுப்படியில் காரியமாக இருந்தார். ஏதாவது ஒரு வேலை அடுப்படியில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆச்சு இனி அடுப்படியில ஒரு காரியம் பாக்கி இல்லேன்னு  என்றைக்கும் சொல்லவே வாய்ப்பதில்லை.

‘ உங்க தம்பி ஊருக்கு போயி எவ்வளவு நாள் ஆச்சி’

அம்மா அப்பாவிடம் கேள்வி வைத்தார்.

‘ ஏன் எதுக்கு கேக்கறே’

‘மாசம் பொறந்தா நமக்கு  சம்பளம் தர்மகர்த்தா கொடுப்பரா’

‘அதெல்லாம் தம்பி சொல்லவும் இல்ல. நா கேக்கவும் இல்ல. அவன் போயிட்டு திரும்பிடலாம்னு  போனவன்’

‘ மளிகை ஜாமான் வாங்கணும் எல்லாம் தீந்துண்டே இருக்கு. பால்காரி இன்னும் எனக்கு காசு குடுன்னு கேக்க ஆரம்பிக்கல’

‘அவன் வந்துடுவான் பாத்துபோம்னு இருக்கா போல’

‘எவ்வளவு நாளக்கி இது ஓடும்’

‘நானும்  அதே யோசனையில இருக்கன்’

‘இருந்தா சரி’

‘இன்னது பண்ணணும்னு அவனும் சொல்லிட்டுபோல’

’நீங்க ஒரு லெட்டர் எழுதி போடுங்கோ’

‘அதான் நானும்

செய்யணுனும்னு இருக்கேன்’

நான் அடுப்படிக்குச்சென்று காய்ச்சிய பாலில் டிகாக்‌ஷன் சேர்த்து காபி கலந்துகொண்டு வந்தேன்.

‘ அக்கா எனக்கு’ என்றான் சாமி.

‘உனக்குதாண்டா மொதல்ல. நீ படிக்கற பையன் ஆச்சே’

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காபி கொடுத்தேன்.

‘ நீ எடுத்துக்கலயா’

‘எனக்கும்தான்’

எல்லோரும் காபி சாப்பிட்டு முடித்தோம்.

அப்பா கைகால் அலம்பிக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டார். சாயரட்சைக்குக்கிளம்பத்தயாரானார்.

‘நிவேத்யம் ரெடி பண்ணி அனுப்பு’

‘சரி சாமிநாதன் கிட்ட குடுத்தனுப்பறேன்.

அம்மா பதில் சொன்னாள்.

‘சுப்பிணி வந்திருப்பனோ’ அம்மாவே அப்பாவைக்கேட்டாள்.

‘வராம என்ன வந்திருப்பான். லைட்டு  சுவிட்ச்

போடணும் விளக்குகளை சரிபண்ணணும். வேல இருக்கே’

‘டேய் நிவேத்யம் எடுத்துனு வந்துடு’

‘ சரி பெரியப்பா வந்துடறேன்’

அப்பா மெதுவாக கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்பா பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுதான் பூஜைக்குப்புறப்படுவார். அப்பாவிடமிருந்து விபூதியின் மணம் ஜம்மென்று  வந்துகொண்டிருந்தது.

‘சாமி நம்ப எப்ப கோவிலுக்கு பொறப்படறம்’

‘சித்த நாழி ஆகட்டும் போலாம்’

‘இன்னும் ஹோம் ஒர்க் முடியல’

‘மேத்ஸ் சில கணக்கு போடணும். டக்குனு போட்டுட்டு வந்துடுவேன்’

அக்கா தம்பி இருவரும் பேசிக்கொண்டனர்.

‘நைட்டுக்கு என்னடா பண்லாம்’

அம்மா சாமியிடம் யோசனை கேட்டார்.

‘அப்பாகிட்ட கேட்டு இருக்கலாமே’

‘ நீயே சொல்லுடா’ அவன் பெரியம்மா தொடர்ந்தார்.

‘பெரியப்பாக்கு என்ன புடிக்குமோ அது செய்யுங்கோ’

‘அவருக்கு இது புடிக்கும் இது புடிக்காதுன்னு இல்ல எது வேணா செய்யலாம்’

‘ உங்க சொல்றது நெஜமா அக்கா’

‘நெஜம்தாண்டா சாமி’

‘ பூரி பண்ணுங்கோ பெரிம்மா’

‘சபாஷ் நன்னா சொல்ற’

‘’எனக்கும் பூரி வேணும்மா’ நானும் என்பங்குக்கு அம்மாவிட ம்சொன்னேன்.

‘’சரி அதுவே பண்ணிடறேன்’

‘எதனா வாங்கிண்டு வரணுமா  தேவயானது எல்லாம் இருக்கா பெரிம்மா’

‘அம்மா அடுப்படிக்குச்சென்றாள். எதை எதையோ திறந்து பார்த்துக்கொண்டாள்.

‘கோதுமை மாவு இருக்கு. உருள கிழங்கு இருக்கு வெங்காயம் இருக்கு பச்சமொளகாய் இல்ல.’

‘அம்மா எண்ணெய் போறுமான்னு பாரு’

  இருக்கற எண்ணெய்ல பூரி பண்ணிடலாம். அப்பறம் செலவுக்கு எண்ணெய் வாங்கியாகணும்’

‘தோட்டத்துல பச்சமொளகா செடி இருக்கு பெரிம்மா. பாத்தேளா’

‘இல்லயே’

‘நா பறிச்சிண்டு வறேன்.  ஒரு செடிதான் இருக்கு  அந்த  செடில  நிச்சயம் நாலு அஞ்சி மொளகானு இருக்கும்’

‘கோவிலுக்கு போணுமே’

‘வெங்காயத்த நறுக்கிடு நீ. சாமி பச்சமொளகா பறிச்சிண்டு வரட்டும்’

‘சரிம்மா’ நான் வெங்காயம் நறுக்கும் வேலைக்குச்சென்றேன்.

சாமி தோட்டம்பக்கம் போனான். கை நிறைய பச்சை மிளகாயோடு திரும்பி வந்தான்.

அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

‘நாங்க கோவிலுக்கு கெளம்பணும்’

‘இருடா சாமி தோ நா வந்துடறேன்’

‘ கோவிலுக்கு போயிட்டு வாங்கோ. நா பூரி  கெழங்கு பண்ற  வேலய எல்லாம்  முடிச்சி வச்சிடறேன்’

அம்மா குழவி பலகையோடு அமர்ந்து பூரி செய்ய ஆரம்பித்தாள்.

‘ உருள கெழங்கு வெந்து இருக்கும். அதன் தோலி உறிக்கணும்’

‘அத நா பாத்துகறேன் என்ன பிரமாதம்’ அம்மா சொன்னாள்.

சாமி பட்டை பட்டையா விபூதி இட்டுக்கொண்டான். சட்டையை நிஜாரை அவிழ்த்துவிட்டு பெரிய துண்டொன்றை இடுப்பில் கட்டிக்கொண்டான்.

‘இந்த மஹா நிவேத்யம் மறக்காம  எடுத்துனுபோகணும். அப்பா எதிர் பார்த்துண்டு இருப்பார்’ அம்மா எனக்குச்சொன்னாள்.

நானும் சாமியும் நிவேதனத்தூக்கோடு கோவிலுக்கு நடந்துகொண்டிருந்தோம். தெருவில் பள்ளிப்பிள்ளைகள் சில்லி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  கண்ணை மூடிக்கொண்டு ஒரு சிறுமி ‘இச்சா இனியா கல்லா மண்ணா காயா பழமா ‘ என்று சொல்லிக்குதித்து குதித்து விலையாடிக்கொண்டிருந்தாள்.

‘இந்த ஆட்டம் உனக்கு தெரியுமா’

‘தெரியுண்டா சாமி’

‘நம்பளும் விளையாடுவோம்’

‘ இப்ப இல்லே அப்பறமா’

வீதியில் மின்சாரவிளக்குகள் எரியத்தொடங்கின. தெருவில் இருந்த டைலரிங் கடைகாரர்கள் மும்முரமாய்த்தைத்துக்கொண்டு இருந்தார்கள்.

நகரப்பேருந்தொன்று சிதம்பரத்திலிருந்து அண்ணாமலைநகர் வந்து நின்றுகொண்டிருந்தது. சிலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.

எருமைமாடுகள் சில எங்கோ  புல் மேய்ந்துவிட்டு தம் எஜமானர் வீட்டுக்குச்சென்றுகொண்டிருந்தன. எருமைகளின் உடல் சேறு பூசிக்கொண்டு காட்சி தந்தது.

‘கரெக்டா தன் தன்  வீட்டுக்கு மாடு போய்டுமா’

‘ சின்ன குருவி கூட தன்’ வீட்டுக்கு கரெக்டா போயிடும்’

எருமைகள் மெதுவாக அசைந்து அசைந்து நடந்தன.

சுப்புணி எதிரே வந்துகொண்டிருந்தார்.

‘அய்யா தருமகர்த்தா வூடுவரைக்கும் போயிருக்கார். வந்துடுவார்’

‘என்ன சேதி’ நான் தான் சுப்புணியை விஜாரித்தேன்.

’சம்பளம் குடுப்பாரு. நானும் போவுணும். என்னையும்வரசொன்னாரு’

‘போய் வாங்க’ சாமி சொன்னான்.

‘அதுக்குத்தான் வெளியில வந்து பாக்குறன். நீங்க ரெண்டு பேரும் கோவில் வாச படியிலே குந்தியிருங்க. நா போயி வந்துடறன்’

நானும் சாமியும் கோவில் வாசலில் நின்று கொண்டிருந்தோம். சாமி ஜில்லி விளையாடுவதற்கு மணலில் கோடு கிழித்துக்கொண்டிருந்தான்.

’ஜில்லி வச்சிருக்கியா’

‘ஜில்லியாலதான் கோடு போட்டேன்’ எனக்கு பதில் தந்தான்.

கோவில் வாயிலில் இருந்த மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் பிரகாசமாய் எரியவில்லை. அந்த குழல் விளக்கைச்சுற்றிலும் பூச்சிகளின் பட்டாளம் சுற்றிச் சுற்றி வந்தது. பறக்கும் அப்பூச்சிகள் தாம் கீழே விழும்வரை அந்த மின்விளக்கையே சுற்றிக்கொண்டே இருந்தன. பூச்சிகள் விழ விழ மேலும் கூடுதலாக அவை அங்கு வந்துகொண்டிருந்தன. ஜிவ் என்று ஒரு ஓசை  விடாமல் அந்த குழாய் மின் விளக்கிலிருந்து வருவது தொடர்ந்துகொண்டிருந்தது.

சேவார்த்திகள் ஓரிருவர் கோவில்பக்கம் வந்துபோனார்கள்.

‘கதவு தொறக்குலயா’ கேள்வி வைத்தார்கள்.

‘தோ வந்துடுவாங்க’ ஒரு பெண்மணிக்கு நான் பதில் சொன்னேன்.

‘எங்க போயிருக்காங்க’

‘கோவில் தர்மகத்தா வீட்டுக்கு’

‘ இந்த நேரத்துல போயிருக்காங்க’

‘ அவுரு இப்பதான் வரச்சொல்லி இருக்காரு’

‘இந்த நேரத்துல அவுரு வரசொல்லுலாமா’

நான் பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக இருந்தேன்.

‘ செறு புள்ளங்க அவங்கள்ட்ட போயி என்னாத்த கேக்குறது ’ அந்தப்பெண்மணியே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

அதற்குள்ளாக சுப்புணி வேக வேகமாக கோவில் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

‘தோ வந்துட்டேன்’

சுப்புணி ஓங்கி குரல்கொடுத்தார். தூரத்தில் அப்பாவும் வருவது தெரிந்தது.

  நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சிங்களா’

‘இப்பதான் வந்தாங்க’ சாமி சுப்புணிக்கு பதில் சொன்னான். கையிலிருந்த ஜில்லியை ஓரமாக வைத்துவிட்டு என்னோடு வந்து நின்றுகொண்டான்.

‘குருக்களையா மொவந்தான’

‘ஆமாம். அவரேதான்’ அந்தப்பெண்மணிக்கு சுப்புணி பதில் சொன்னார்.

அப்பா வேக வேக மாக கோவிலுள் நுழைந்து கிணற்றடிக்குச்சென்றார்.

‘ நீ தண்ணி சேந்தி  எடுக்காத. நான்  சேந்தி தரேன்’

‘பரவாயில்ல  இப்ப என் கை’

‘ அப்பா கொஞ்ச நாளைக்கு இதெல்லாம்  வேண்டாம்’

அப்பா நான் சேந்திக்கொடுத்த தண்ணீரில் கை கால் முகம் சுத்தம் செய்துகொண்டார். விபூதி இட்டுக்கொண்டார்.

சாமி நிவேதனத்தூக்கினை பிள்ளையார் சன்னிதியில் கோண்டு போய் வைத்தான்.

சுப்புணி திருவிளக்குகளை ஆங்காங்கு ஏற்றிக்கொண்டு இருந்தார்.

‘எல்லா லைட்டும் போட்டாச்சா’

அப்பா சுப்புணியிடம் கேட்டுக்கொண்டார்.

‘ எல்லாம் போட்டுட்டேன்’

‘கோபுரத்துல எரியல’ சாமி ஓங்கிக்கத்தினான்.

சுப்புணி அந்த சுவிட்சை மீண்டும் ஒருமுறை போட்டார். அது எரியவில்லை.

‘ ஏதோ கோளாறு அந்த கோபுர லைட்டு எரியல’

‘ சரி பாப்பம்’

வந்திருந்த பெண்மணி  அம்மன் சன்னிதியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். நெற்றி நிறைய விபூதி இருந்தது.

‘அந்த அம்மா யாரு’

அப்பா மெல்லியகுரலில் சுப்புணியை விஜாரித்தார்.

’காலேஜில பெரிய ப்ரொபசர். தமிழ் டிபாட்மெண்டு’

‘ சரித்தான்’

அப்பா அந்த பேராசிரியரைப்பார்த்துக்கொண்டார். நானும் அந்த ப்பெண்மணியைப்பார்த்துக்கொண்டேன். சில புத்தகங்கள் அவர் கைவசம் இருந்தன. அவற்றைப்புரட்டிக்கொண்டே இருந்தார்.

அப்பாவும் சாமியும் ஒவ்வொரு சன்னிதியாக பூஜையை முடித்துக்கொண்டு வந்தனர். சுப்புணி ஆராய்ச்சி மணியை இழுத்து இழுத்து அடித்துக்கொண்டிருந்தார். பெரிய ஆராய்ச்சிமணி. அதன் கனம் சுப்புணியை அவ்வப்போது அசைத்துத்தான் பார்த்தது.

‘தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா

மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.’

பேராசிரியர் பெரிய குரல் எடுத்து பாடிக்கொண்டிருந்தார்.

அப்பா பைரவரிடம் வந்து  பூஜையை முடித்துக்கொண்டார்.

அந்தப்பேராசிரியை பைய எழுந்து சிவன் சன்னிதிக்கு வந்தார்.

‘ நா இங்க தமிழ் டிபார்ட்மெண்ட்ல இருக்கேன். அய்யா புதுசா இருக்கு’

‘ நான் இங்க இருந்த அய்யாவோட அண்ணன். தருமங்குடிலேந்து இங்க வந்துருக்கன். தம்பி அவன் மாமியாருக்கு உடம்பு சொகம் இல்லேன்னு மெட்ராஸ் போயிருக்கான். அவன் சம்சாரமும்  கூட போயிருக்கு. நாந்தான் இப்ப பூஜய பாத்துகறேன்’

‘ ரொம்ப சந்தோஷம், இந்த பையன் எனக்கு தெரியும். அந்த பொண்ணு’

‘ என் பெண்ணுதான்’

‘ படிச்சுதா’

‘அஞ்சாம் வகுப்புதான்’

‘ஏன்’

‘ தருமங்குடில அதுக்குமேல கிளாஸ் இல்ல. வெளியூர் போகணும் பொம்பளபுள்ள. அத காப்பாத்தி ஆவணும். அத்தோட படிப்ப  நிறுத்திட்டேன்.  கட்டிகுடுக்குற வயசு. மேஜரும்  ஆயிடுச்சி’

அப்பா விபூதி குங்குமம் கொடுத்து முடித்தார்.

‘எனக்கு படிக்கணும்னு ஆசை . ஆனா என்னால  முடியல’ நான் வெடுக்கென்று பதில் சொன்னேன்.

‘பெரியவங்க பேசறம்ல. குறுக்க என்னா பேச்சு’

அப்பா என்னை கடிந்துகொண்டார்.

‘’ ஒண்ணும் தப்பு இல்ல. விடுங்க. பாப்பாவுக்கு படிக்கணும்னு ஆசை இருக்கு. அதான் சொல்லுது. நாம  பாப்பாவை படிக்க வக்கில நாமதான் தப்பு பண்ணியிருக்கம்.’

‘என் சூழ்நிலை’ அப்பா பதில் சொன்னார்.

‘இனிமேலுக்கு  இங்க கோவில் பூஜை நீங்களா, இல்ல ‘

‘ தம்பி சென்னை  போயிருக்கான். வந்துடறேன்னு. அவன்  வரணும். எனக்கும் இப்பக்கி எந்த உத்யோகமும் இல்ல’

‘அடடா’

‘’எனக்கு  வலது கையில ஒரு வலி வந்துது. ட்ரீட்மெண்டுக்கு இங்க மெடிகல் காலேஜ் ஓபிக்கு  வந்தம். என் பூஜையோ அங்க தருமங்குடில. அந்த தருமங்குடி  தருமகர்த்தா  ஒன் கணக்க முடிச்சிக. நா வேற குருக்கள போட்டுகறேன்னு கறாரா சொல்லிட்டாரு. நா தம்பி வீட்டுக்கு வந்தன். என் சம்சாரம் இங்கதான் இருக்கு. சாமி என் தம்பி பையன் இங்கதான் படிக்கிறான்’

‘கையி என்னாச்சு’

‘ அந்த ட்ரீட்மெண்ட் முடிஞ்சிது. இப்ப  கை தேவலாம்.  என் தம்பி வரணும். நானும் வேற வேல தேடணும்’

‘எனக்கு ஒரு யோசனை இருக்கு.  அத எதுக்கு இப்ப சொல்லிகிட்டு அத பெறகு சொல்லுறன்’ பேராசிரியை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

‘ கொஞ்சம் மனசு வையுங்க. இல்லாதவங்க’ சுப்புணி அந்த பெண்மணியிடம் தன் பங்குக்குச்சொன்னார். சன்னிதிகளை ஒவ்வொன்றாக பூட்டிக்கொண்டு வர புறப்பட்டார்.

‘பகவான் ஒரு வழி காட்டணும்.’  அப்பா பேராசிரியையிடம்  சொல்லிக்கொண்டார்.

சாமி நிவேதனதூக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். சுப்புணி பெரியகதவை இழுத்துப்பூட்டினார்.

‘ கோபுர வெளக்கு  மேல எரியுல அத ஆள இட்டாந்து  பாக்குணும்’ சுப்புணி சொல்லிக்கொண்டார். நானும் அப்பாவும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம்.

 

                                                                                              14

 

‘அவன் சாமி  எங்க’

‘ அவன் வீட்டுக்கே போயிருப்பான்’ நான் அப்பாவுக்குப் பதில் சொன்னேன்.  இருவரும் வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தோம்.

‘டீ இங்க வரியா’

அம்மா அப்பாவிடம் வந்து நின்றுகொண்டாள்.

‘நா சாயந்திரம் தருமகர்த்தாவ பாக்கபோனேன்.அவர்தான் என்ன  வரச்சொன்னார்.  மாச சம்பளம் ரூவா மூவாயிரம் அத  குடுத்தார். நிவேதனத்துக்கு நித்யம் அரைபடி பச்சரிசி ஆக  மாசத்துக்கு பதினைஞ்சி படி. அத  நா உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவேன்னு தருமகர்த்தா சொன்னார்’

அப்பா அம்மாவிடம் பணத்தைக்கொடுத்தார்.

‘சுவாமி படத்தண்ட வை. அப்பறம் எடுத்துக்கலாம்’

‘நாம இத செலவுக்கு எடுத்துக்கலாமா. உங்க தம்பி எதானு சொல்லுவாரா’

‘ செலவு இருக்குன்னா எடுத்துகறதுதான் வேற நமக்கு வழி ஏது’

‘நீ என்ன சொல்ற’

என்னிடம் அப்பா கேட்டார்.

‘சொல்றது சரித்தான்’ நான் அப்பா சொல்வதை ஆமோதித்தேன். சாமிநாதன் பள்ளிக்கூடபையை எடுத்து வைத்துக்கொண்டு ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தான்.

‘எனக்கு வொர்க் இருக்கு’

‘நீ உன் வேலய பாருடா’

அப்பா சாமிக்குச்சொல்லிக்கொண்டார்.

‘அப்பா ப்ரொபசர் அம்மா ஒத்தர் வந்திருந்தாங்களே.’

‘ஆமாண்டீ. ஒரு காலேஜ் வாத்தியார் மேடம்தான் வந்திருந்தாங்க. அபிராமி அந்தாதி அம்மன் சன்னிதில பாடினாங்க’

‘அது என்ன புது சேதி’

‘நம்மள பத்தி எல்லாம் அனுசரணையா விசாரிச்சாங்க. அவங்கள பாத்தா நல்ல முனுஷாளா தெரியர்து. ஒம்பொண்னு ஏன்  மேல படிக்காம போனான்னு  ஆதங்கமா கேட்டாங்க’

‘பரவாயில்ல. நல்ல சமாச்சாரமா இருக்கு. அவுங்க பேரு என்னவாம்’

‘அத அவுங்களும் சொல்லல. நானும் கேக்கல’

‘ அது முக்கியமாச்சே’

‘சுப்புணிக்கு அவுங்கள தெரியும். அவர கேட்டா  அவுங்க விவரம் சொல்லுவார்’

‘அப்ப சரி. நமக்கு யாராவது தெரிஞ்ச மனுஷாளா சித்த ஒத்தாச பண்றவாளா இருந்தா ரொம்ப நல்லதுதான்’

‘அப்பிடிதான் எனக்கும் தெரியர்து. போகப்போகதான் விஷயம் தெரியும்’

‘ஏண்டா சாமி உனக்கு அந்த அம்மாவ தெரியுமோ’

‘எந்த அம்மாவ’

‘ அம்மன் கோவில்ல இன்னக்கி சாயந்திரம்  பாட்டு பாடினாளே’

‘ஆமாம் தமிழ்ப்ரொபசர். அவுங்க வீடு எனக்கு தெரியும். நம்ம  போஸ்டாபீசுக்கு அடுத்தாப்புல நாலாவது வீடுதான்.  அவுங்க   பேரு எல்லாம்  தெரியாது. எங்க அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவங்கதான். அடிக்கடி அவாள கோவில்ல பாத்து இருக்கேன். புஸ்தகத்த வச்சிண்டு படிச்சிண்டே இருப்பாங்க’

‘இது போறும் பாத்துகலாம்’ அம்மா சொன்னாள்’. எனக்கு மனதில் குறு குறு என்று இருந்தது. எதாவது ஒரு வழி  அவர் மூலமாக நமக்கு பிறக்காதா’ என்று ஆர்வமாகத்தான் இருந்தேன். நான் படிக்காமல் போனதற்காக வருத்தப்பட்ட ஒரு மனிதரை இப்போதுதான் முதன் முதலாக பார்த்து இருக்கிறேன். அதுதான் காரணம்.

                                                                             15

 

 

 

மறுநாள் எப்போதும்போல் விடிந்தது.அண்ணாமலைநகரில்  அந்த ஊருக்கென்று இருக்கும்  பிரத்யேக ஆரவாரம். ஆங்கங்கு இளைஞர்களின்  கூடுகை. மாணவர்களின் ஆரவாரம். அமர்க்களங்கள். கும்மாளங்கள். சிறு சிறு முஸ்தீபுகள். கல்லூரிக்குச்சென்று படிக்கின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் புழக்கம். விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்களின் கூடுதலான எண்ணிக்கை. அவர்களின் நடைப்பயிற்சி, சைக்கிள் உலா, தேர்வுக்குச்சில மாணவர்களின் அலாதி  வாசிப்புகள் என்று இன்னும் எத்தனையோ.

அப்பா இன்று கொஞ்சம் காலையிலேயே  கோவில் பூசையைமுடித்துவிடலாம் எனத்திட்டம் போட்டார். குண்டு முதலியார் வீட்டில் திவசம். கட்டளை எடுத்துப்போக புரோகிதர் அப்பாவை வரச்சொல்லியிருக்கிறார்.

‘ நா ஒன்பது மணிக்கு குண்டு முதலியார் ஆத்துக்கு போணும்’

‘ அந்த புரோகிதர் சொன்ன சேதிதானே’

‘ஆமாண்டி அதுதான் நமக்கு எதாவது வருமானம் வேணுமே’

‘நா நிவேதனம் ரெடி பண்ணிடறேன்’

‘ நானும் ஸ்நானம் முடிச்சிடணும்’

‘சுப்புணிக்கு சேதி தெரியுமா’

அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டார்கள். வாயிலில் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

‘சுப்புணி வந்துருக்கேன்’

‘ ஆயிசு நூறுடா’ என்றார் அப்பா.

சாமி தனது பாடபுத்தகங்களை வைத்துக்கொண்டு  கட கட என்று ஏதோ மனப்பாடம் செய்துகொண்டு இருந்தான்.

’பச்சைமாமலைபோல் மேனி

 பவளவாய்கமலச்செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம்

 கொழுந்தே என்னும்

 இச்சுவைதவிறயான் போய்

 இந்திரலோகமாளும்

அச்சுவைபெறினும்

வேண்டேன் அரங்கமா

நகருளானே’

’சாமி ஆழ்வார் பாசுரம் படிக்கறயா’

‘ஆமாம் பெரியப்பா தொண்டரடிப்பொடியாழ்வார் பாடினது’

‘இது என்ன சொல்றதுடா’

‘ ஸ்ரீரெங்கத்து சுவாமி  ரெங்கநாதர் பெருமையைச்சொல்றார்’

‘பேஷ் நன்னா படிக்கறே’  அப்பா சிரித்துக்கொண்டார். வாயில் கதவருகே சென்ற அப்பா வாயில் கதவை நன்கு அகலமாகத் திறந்தார்.

தலையில் ஒரு சிப்பத்தோடு நின்றுகொண்டிருந்தார் சுப்புணி.

‘ தருமகர்த்தா மாச அரிசி குடுத்து இருக்காரு. பதினஞ்சி மகாணி குடுத்துட்டாரு. எப்பவும் குடுக்கறதுதான் நா போயி  எடுத்துட்டு வந்தன்’

அம்மா அடுப்பங்கரையிலிருந்து கூடத்துக்கு வந்தார்.

‘ அரிசி அளக்கணுமா’

‘நல்லக்கதை எம் மின்னாலதான படி போட்டு  அளந்தாங்க’

சுப்புணி அம்மாவுக்குப்பதில் சொன்னார்.

‘எல்லாம் சரியாத்தான் இருக்கும்’

அப்பா அதனை முடித்துவைத்தார்.

‘ பதினஞ்சி மாகாணி இல்ல அரிசி  செத்த குறையுதுன்னா. போயி கேக்க முடியுமா சாமி’

‘சுப்புணி  விடுங்க. நானே நொண்டி அடிச்சிகிட்டு இருக்கன். குடும்பமும் எதோ ஓடிகிட்டு இருக்கு.  தருமகர்த்தா சம்பளம் நேத்து ரூவா மூவாயிரம் குடுத்தாரு. நாம கேட்டா  அத குடுத்தாரு.  உங்க தம்பி வரட்டும்னு சொல்லிருந்தா நாம  என்ன பண்ணிருப்பம்’

‘அது கெடக்கு வுடுங்க. இண்ணிக்கி காலையிலேயே பூசையா’

‘ஆமாம் சுப்புணி. குண்டு மொதலியாரு வீட்டுல திவசம். புரோகிதர்  என்ன ஒன்பதுமணிக்கு வரச்சொல்லியிருக்காரு. குருக்களுக்கு ஒரு கட்டளை உண்டாம். போயி அத வாங்கியாறணும்’

‘அங்க போயி வந்தபெறகு பூசைய பாக்குலாம்’

‘அது சரியா இருக்காது சுப்புணி’

‘ஏன்’

‘வெளிய போயி வந்தபெறகு திரும்பவும் ஸ்நானம் பண்னினாத்தான் சரியா இருக்கும். கோவில் பூசையாச்சே. மனசு ஒத்துக்காது. அதுக்குத்தான் நம்ப டூட்டிய முடிச்சுட்டம்னா நாம சாவுகாசமாகூட வரலாம் அரீ புரீ ன்னு வரவேணாம்’

‘அய்யா சொல்றது சரிதான்’

‘நிவேத்யம் ரெடி. பூஜைக்கு பொறப்படலாம்’ அம்மா ஓங்கிக்குரல் கொடுத்தார்.

அப்பா இது கேட்டு  சன்னமாய் சிரித்துக்கொண்டார். சுப்புணியும் அதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டார்.

’ அப்ப சரி.  நா கோயிலுக்கு போறன் ஆவ வேண்டித பாக்குறன். நா இப்ப வந்ததும் நல்லதா போச்சு’

‘அப்பிடி சொல்லு’

‘குண்டு மொதலியாரு வூடு தெரியுமா சாமி’

‘’ தருமகர்த்தா வூட்டுக்கு மூணாவது வூடுன்னு புரோகிதர் சொன்னாரே’

‘அப்ப சரி’

‘நீனும் வரயா சுப்புணி’

‘என்ன வரசொல்லுலயே’

‘யாரு’

‘ புரோகித அய்யாவும் சொல்லுல. குண்டு மொதலியாரும் சொல்லுல’

‘இங்க பழக்கம் எப்பிடி’

‘இப்பிடித்தான். ஆனா  செலர் மதியம்   சாப்பிட வந்துடு சுப்புணி.  தெவசம் இண்ணிக்கி எங்க வூட்டம்பாங்க. நானும் போவன். சாப்புடுவன்’

‘சரி சரி  நீ பொறப்படு நானும் வர்ரன்’

சுப்புணி அங்கிருந்து கிளம்பினார்.

‘ அரிசி  கொண்டாந்த  சிப்பத்த பத்திரமா எடுத்துவையுங்க, மொதலியார் யாவபமா  கேப்பாரு. என்னண்ட கண்டிச்சி  சொன்னாரு’

‘அவுங்க கருத்து கருத்துதான்’

‘அதான் அவுங்க மொதலாளி. நாம தொழிலாளி’ என்றார் வேகவேகமாக வேப்பமரத்தைத்தாண்டிப் போய்க்கொண்டே இருந்தார். அப்பா சுப்புணிக்குப்பின்னாடியே கோவிலுக்குப்புறப்பட்டார். பூஜையை கட கட என முடிந்தது.

‘இப்பெல்லாம் கோவில் வேலய நீங்க ஒண்டியாவே பாத்துகிறிங்க. கூட மாட யாரும் வேணாம் போல’

‘ஆமாம் சுப்புணி இப்ப  என் கை  கொஞ்சம் தேவலாம்னு சொல்லணும் போவப் போவ எல்லாம் சரியா போயிடும்’

‘ உங்க தம்பிகிட்டேந்து சேதி எதுவும் இல்லயா’

‘ஒண்ணும் காணும். அவன் இப்பக்கி வரமாதிரி தெரியல’

‘’போறவரைக்கும் போவுட்டும்  எப்பிடி பாத்தாலும் உங்களுக்கும் வேற கோவிலு பாக்குணும்ல’

‘ரைட்டா. இது எத்தினி நாளைக்கு ஓடும்னு தெரியல சுப்புணி’

அப்பா வீட்டுக்குத்திரும்பினர். சுப்புணியும்  தன் வீட்டுப்புறப்பட்டார்.

 

                                                           16

 

அப்பா கட கட என்று  முதலியார் வீட்டுக்குப் புறப்பட்டார். கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்துவிட்டு சற்று வெள்ளையாய் இருக்கும் வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டார். பஞ்ச கச்சம் சரியாக கட்டியிட்ருக்கிறோமா என்று மேலும் கீழும் சுற்றும் முற்றும்  தன்னையே பார்த்துக்கொண்டார்.

‘விபூதி எடுத்த்கணும்’ அம்மா நினைவு படுத்தினாள்.

‘குருக்கள்னு ஒருத்தர்  எங்க போனாலும் விபூதி  சஞ்சி கைவசம் கட்டாயம் இருக்கணும். நேக்குத்தெரியாதா’

‘ஞாபகப்படுத்தினேன்’

‘ பையி  ஒண்ணு எடுத்துண்டு போகணுமா இல்ல கூடை எதனா எடுத்துண்டு போகட்டுமா’

‘ஒரு கூடைய எடுத்துண்டு போங்கோ கூட ஒரு பை இருக்கட்டுமே’

‘எதுக்கு ரெண்டு’

‘ அதுல என்ன தப்பு. பை வேணும்னா எடுத்துகறது உபயோகம் ஆனா இருக்கட்டும்  இல்லன்னா திரும்பி எடுத்துண்டு வந்துடலாமே’

அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டார்கள்.

’நானும் கூட வரட்டா’ நான்தான்  அப்பாவிடம் கேட்டேன்.

‘ நீ எதுக்கு’

‘ஒனக்கு ஒத்தாசையா இருக்கும் அதுக்குதான்’

‘என்ன ஒத்தாசை இருக்கும்’

‘கூடய நீ தூக்கவேண்டாம் நா தூக்கிண்டு வருவேன்’

‘என் கை சரியாயிட்து இல்லயா’

‘வெயிட் தூக்கவேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்கார்தானே’

‘எழுதியே குடுத்துஇருக்கார்’

’அப்பன்னா நானும் வரேன்’          

‘உங்க அம்மாவ கேளு’

’அவ எதுக்குன்னா’

‘வரேங்கறா  அப்பறம்’’

‘அவ  வரேன்னு சொல்லுவா அதுக்குன்னு கூட்டிண்டு போமுடியுமா’

‘நானும் போயிட்டு வரேனே’ நான்தான்  அந்த யோசனையைச்சொன்னேன்.

‘இல்ல. அது சரியா வராது. சாமிய  வேணா  தெவசகாரா ஆத்துக்கு கூட்டினு போலாம்’

‘அவன் ஸ்கூலுக்கு போயிருக்கான் என்ன பண்ணுவே அத  மெய்க்காவல் சுப்புணி எடுத்துண்டு வரட்டும்’

‘அவன் போயாச்சு. நானே அவனை  கேட்டேன். நா வரலேன்னு போயிட்டான்’

நானும் அப்பாவுடன் புறப்பட்டேன்.அப்பா வேக வேகமாய் நடந்தார். என்னால் அவர் அளவுக்கு விரைவாக நடக்கமுடியவில்லை. அப்பா என்னைப்பார்த்து புன்னகை செய்தார்.

‘நானும் உங்க வேகத்துக்கு நடக்கணும்னு பாக்கறேன்’

‘ இல்லம்மா அது அதும் பழக்கம். நீ எங்க நடக்கற’

‘அதுக்கு அவசியம் இல்லாமபபோயாச்சு’

நான் அப்பாவுக்குப்பதில் சொன்னேன்.

‘இண்ணைக்கு எங்க போறம்’

‘இப்பக்கி  குண்டு முதலியார் ஆத்துக்கு போறம்’

‘அவர் வீடு தெரியுமோ’

‘ எனக்கு தெரியாது ஆனா புரோகிதர் எப்பிடி போகணும்னு சொல்லியிருக்கார்’

நாங்கள் இருவரும் பாசுபதேசுரர் கோவிலைத்தாண்டிக்கொண்டு இருந்தோம். எதிரே கல்லூரி மாணவர்கள் கும்பல் கும்பலாக வந்துகொண்டிருந்தார்கள். அவரர்வர்களும் ஏதோ பேசிக்கொண்டே வந்தார்கள்.

‘’இவாள் எல்லாம் அக்ரி காலேஜ் பையன்க’

‘அக்ரி காலேஜ்னா’

‘ விவசாயத்த எப்பிடி சரியா பண்றதுன்னு சொல்லிக்கொடுப்பா’

’பொண் குழந்தைகள் இதுல  படிப்பாளா’

‘ஏன் படிக்காம, படிக்கறா’

‘ஆமாம் இந்த பையன்கள்ள பொண் கொழந்தைளும் இருக்கா’

அக்ரி காலேஜ் செல்லும் சாலை ஒழுங்காகவே இல்லை. ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தது. சாலையில் சில இடங்களில் நாய்கள் சண்டையிட்டுக்கொண்டு இருந்தன. இந்த பகுதிக்குப்புதியதாக வந்த நாயொன்றை இந்தப்பகுதி நாய்கள் விரட்டியடித்துக்கொண்டு இருந்தன.  புதியதாக வந்த அந்த நாய் கெஞ்சிக்கூத்தாடிப்பார்த்தது. ஒன்றும் கதை ஆகவில்லை. அது வந்தவழியே சோகமாய் குலைத்துக்கொண்டு நகர்ந்தது. விரட்டிய நாய்கள் தாம் சாதனை ஒன்றை நிகழ்த்திவிட்டதாய் ஆகாயம் பார்த்துபின் கலைந்துபோயின.

’இது தான் கோவில் தருமகர்த்தா வீடு’

‘நான் இந்த பக்கம் இப்பதான் வருகிறேன்’

தருமகர்த்தா தன் வீட்டு வாயிலில் நின்றுகொண்டு வீதியில் போவோர் வருவோரைக்கண்காணித்துக்கொண்டு இருந்தார்’

‘நலமா இருக்கிங்களா’

‘நமஸ்காரம் குருக்களே’

‘குண்டு மொதலியார் வீட்டுல தெவசம்னு புரோகிதர் சொன்னார். அதான் போயிண்டு இருக்கேன்’

‘அது சரி . இது யாரு பாப்பா’

‘எம்பொண்ணுதான்’

‘சொன்னாங்க ஆனா இப்பதான் பாக்குறன்’

‘ஒத்தாசைக்கு என்னோடு வந்தா’

‘பொண்கொழந்தய கூட்டிண்டு  தானம் வாங்கற வீட்டுக்கு வரலாமா குருக்களே’

‘வரக்கூடாதுதான்’

‘அப்புறம்’

‘அவளே நா கூட வரேன்னு சொன்னா’

‘எதுக்கு’

‘எனக்கு ஒரு  கையி சரியில்ல. வெயிட்டா தூக்க முடியாதுன்னுதான் அவ வந்தா’

‘இதுவே தப்பு. ஆமாம் கோவில்ல எப்பிடி  நீர் பூஜைய பாக்குறீர்’

‘சாமி எந்தம்பி பையன் எனக்கு  ஒத்தாசை பண்றான் இல்லேன்னா  கொஞ்சம் கஷ்டம்’

‘அப்பிடி சொல்லும். உம்  பொண்ணு கோவிலுக்கு வருவாளா’

‘போவேனே’ நானே பதில் சொன்னேன்.

‘நீ என்ன செய்வே கோவில்ல’

‘எந்தம்பியோட நானும் கொவிலுக்கு  போவேன் என்னால முடிஞ்சத செய்வேன்’

‘பொண்கள் நிவேதனத்த எல்லாம் தூக்கிட்டு  சுவாமி சந்நிதியில நிக்கக்கூடாது’

‘நான் அப்பிடி  நிக்கறது இல்ல’ நான் பதில் சொன்னேன்.

 சுவாமிக்கு ‘நிவேதனம் ஆனத வேணும்னா  தூக்கிகிட்டு வீட்டுக்கு வரலாம்’

‘நான் அததான் செய்வேன்’

‘வீட்டுல நிவேதன அன்னத்தை யார் தயார் பண்றாங்க பாப்பா’

‘அப்பாதான்.  எங்க அம்மா ஒத்தாசை எதனா  அப்பாவுக்கு செய்வாங்க’

 ’உங்க  அப்பாதான் அதச் செய்யணும்.’

‘இது இண்ணைக்கு நேத்து சமாச்சாரமா காலம் காலமா நடக்கறதுதானே’

‘சரியா பேசுறீர் குருக்களே’

அப்பா தன் விபூதிபையை  கையில் எடுத்து  கொஞ்சம் விபூதியை தருமகர்த்தாவுக்குக்கையில் போட்டார்.

‘பாசுபதேசுவரஸ்வாமி பிரசாதம்’ அப்பா சொல்லிக்கொண்டார்.

‘சிவாய நம’  ஓங்கிச் சொல்லிய தருமகர்த்தா தனது நெற்றியில் விபூதியை இட்டுக்கொண்டார்.

’நாங்க  மொதலியார் வீட்டுக்கு போயிட்டு வர்ரோம்’

‘ஆகட்டும்’

நானும் அப்பாவும் தருமகர்த்தா வீட்டிற்கு மூன்றாவது வீடான குண்டு முதலியார் வீட்டுக்குச்சென்றோம். அந்த நீல நிறக்கார் வாயிலில் நின்று கொண்டிருந்தது.

வீட்டு வாயில்  மாடத்தில்  திருவிளக்கு பசுஞ்சாண உருண்டையின் மீது  எரிந்துகொண்டிருந்தது. உள்ளே ஸ்ரார்தம் நடந்து கொண்டிருந்தது. புரோகிதர் சொல்லும் மந்திரங்கள் தெளிவாகக்கேட்க முடிந்தது.

வட கலை நாமம் தரித்த அந்தணர் ஒருவர் ஒரு ஓரமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அவரின் வேட்டி அங்க வஸ்திரத்தில்  ஜரிகை மிகுந்து பகட்டாக இருந்தது. அவரின்  கட்டுக்குடுமி அவர்  நீராடி  உடன் வந்திருப்பதை அறிவித்துக்கொண்டிருந்தது.

‘வாரும் ஸ்வாமி’

‘நமஸ்காரம்’ என்றார் அப்பா.

‘ உம் தம்பி இன்னும் வரலையா’

‘இல்லை. மாமனார் உடம்பு சொகமில்லேன்னு போனான்’

‘இது உம்ம கொழந்தயா’ என்னைப்பார்த்துத்தான் கேட்டார்.

‘ஆமாம்’

‘அப்பா பதில் சொன்னார்.

புரோகிதர் பஞ்சாங்கம் படித்துக்கொண்டிருந்தார். திவசதினத்தன்று திவசம் முடிந்து பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்தான். அன்றைய தின நட்சத்திர திதி யோக பலாபலன்களைச்சொல்லி வர இருக்கும் தினச் சிறப்புக்கள் பற்றியும் புரோகிதர் சொல்லி முடித்தார்.

துளசி குங்கும பிரசாதத்தை அய்யங்கார் ஸ்வாமிகள் முதலியார் குடும்பத்திற்கு வழங்கினார். அப்பா விபூதி பிரசாதத்தை அவர்களுக்குக்கொடுத்து முடித்தார்.

புரோகிதர்  குண்டு முதலியார்  கொடுத்த தான சாமான்களை எல்லாம் தான் கொண்டுவந்திருந்த கூடையில் அடுக்கிக்கொண்டு இருந்தார்.

‘ஆகட்டும் பெருமாளே  உங்க விஷ்ணு கட்டளை எடுங்கோ’’   அய்யங்கார் ஸ்வாமி தன்னுடைய கட்டளை அருகே சென்று அதனைப் அசமடக்கி  பங்கீடு செய்தார்.

‘வாரும் சிவாச்சாரியார்’

அப்பா தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கட்டளை அருகே சென்று அமர்ந்தார். நானும் கூடவே சென்றேன்.

‘பாப்பா நீ தூரமா இரு  அப்பா  அத எடுத்துகிட்டு வரட்டும்’ குண்டு முதலியார் எனக்குச்சொன்னார்.

நான் தூரமாக நின்றுகொண்டிருந்தேன்.

வாயிலில் கார் ஒன்று வந்து நின்றது. காரிலிருந்து ஒரு பெண்மணி இறங்கிக்கொண்டிருந்தார். அவர் மட்டும்தான் தனியாக வந்திருந்தார். நான் முன்னமேயே பார்த்திருந்த பெண்மணிதான்.

‘வணக்கம் அம்மா’

‘யாரு குருக்களய்யா வீட்டு பொண்ணுதானே அம்மா நீ’

‘ஆமாங்க’ அவருக்குப்பதில் சொன்னேன். அவர் தமிழ் புரொபசர் என்று கோவிலில் பார்த்த அன்றைக்குச்சொல்லியிருந்தார்கள். தேவார திருவாசகங்கலையெல்லாம் கோவில்  சந்நிதியில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அப்போது என்னையும் விசாரித்துவிட்டுப்போனார்.

அப்பா தனக்கு கொடுக்கப்பட்ட  தானக்  கட்டளையை  நாங்கள்  கொண்டுவந்த கூடையில்  எடுத்துக்கொண்டு என்னருகே வந்தார். குண்டு முதலியார் அவரின் இல்லாள் இருவரும் பெஞ்சொன்றில் அமர்ந்துகொண்டிருந்தனர். பொருத்தமான தம்பதியராக இருவரும் தெரிந்தனர். இருவரின் முகங்களும் நிறைந்து மலர்ந்துகாணப்பட்டது.

‘வா பாப்பா வா’ ஏகோபித்து இருவரும்   அந்தப்பெண்மணியை அழைத்தார்கள்.

‘தெவசம் முடிஞ்சிதா’

‘’எல்லாம் நல்லபடியா ஆச்சு’ முதலியார் பதில் சொன்னார். இவர்களின் பெண்ணாகவே அவர் இருக்கக்கூடும். என் தீர்மானம் சரியாகவே இருந்தது.

‘ ஆசிர்வாதம் அம்மா’   அப்பா சொன்னார்.

‘நமஸ்காரம் நான் அண்ணைக்கு உங்கள  கோவிலில் பார்த்தேனே’ ஞாபகம் இருக்குங்களா, இவுங்க என் அப்பா அம்மா,  இண்ணைக்கு என் பாட்டிக்குதான் திவசம் அதான் எட்டிப்பார்த்துவிட்டுபோலாம்னு வந்தேன்’

முதலியார் தொடர்ந்துகொண்டார். ‘ பாப்பா தமிழ்ப் ப்ரொபசரா உத்யோகத்துல  இருக்கா. என் ஒரே பொண்ணு’

அந்தப்பெண்மணி புன்னகை செய்தார்.

பேராசிரியையின் பெயரை அவர் தந்தையும் குறிப்பிடவில்லை. அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா குடும்பம் உண்டா என்ற சங்கதியெல்லாம் தெரியவில்லை. இவை அவரவர்கள் சொன்னால்தான் சரியாகவும் இருக்கும். எது எப்படி இருந்தால்தான்  என்ன  இதனில் எல்லாம்  நாம் என்ன செய்ய இருக்கிறது. யோசித்தேன். ஆமாம் இந்த முதலியார் பெயரும் கூட நமக்குத்தெரியாதுதான். அப்பாவுக்கும் மட்டுமென்ன தெரிந்திருக்கவா போகிறது. குண்டு முதலியார் என்பதில் குண்டு எனபது பெயராக இருக்க வாய்ப்பில்லை. செல்லமாக யாரேனும் அவரை  குண்டு குண்டு  என்று முதலில் அழைத்து இருக்கலாம். அதுவே பின்னாளில் சாசுவத பெயராக மாறிவிட்டிருக்கலாம்..

அப்பா கூடையில் தானக்கட்டளை சாமான்களை அழகாக அடுக்கிவைத்தார்.அரிசி கறிகாய் தானசாமான்கள் பருப்பு எண்ணெய்  நவதான்யங்கள் எல்லாம் தனித்தனி தொன்னைகளில் கொலுவிருந்தன. கூடையை நான் எடுத்துக்கொண்டேன்.

‘நடந்துதானே போகணும்’ பேராசிரியை எங்களைப்பார்த்துக்கேட்டார்.

‘ஆமாம்’ பதில் சொன்னேன்.

திவசம் நடத்திவைத்த புரோகிதர் தனது  சாமான் மூட்டைகளோடு முதலியார் வீட்டைவிட்டுக்கிளம்பினார்.  விஷ்ணு கட்டளை எடுத்துக்கொண்ட அய்யங்கார் சுவாமியைக்காணோம் அவர்  முன்னமேயே சென்றிருக்கலாம். அப்பாவும் நானும்  அந்தப்பேராசிரியைப்பார்த்ததனால் இன்னும்  கிளம்பாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம்.

‘என்ன கெளம்பலியா’

‘கெளம்பவேண்டியதுதான்’ அப்பா பதில் சொன்னார்.

‘பூஜை  இனிமேதானா’

‘ முடிச்சிட்டுதான் பொறப்பட்டு வந்தேன்’

‘அப்ப ஒண்ணும் அவசரமில்ல. மெதுவா வரலாம்’

‘அய்யாவுக்கு வேற எங்காவது போகணுமா’

முதலியார் புரோகிதரிடம் விசாரித்து முடித்தார்.

‘இன்னும் ஒரு சின்ன காரியம் இருக்கு, போகணும்’

‘அது என்ன காரியம்’

‘’பொண்னு வயசுக்கு வந்ததுக்கு ஒரு  சுத்தி புண்யகாவசனம் இருக்கு. என்ன எதிர்பார்த்துண்டு இருப்பா. நா சட்டுனு போகவேண்டிருக்கு’

‘ ஆக வேண்டிய கதை இருக்குன்னா அதுதான் முக்கியம். கெளம்புங்க போகவேண்டிய இடம்  உள்ளூரா இல்ல வெளியூரா’

‘அண்ணாமலை நகருக்கு மேற்கே  மாரியப்பநகர்லதான்’

‘அப்பண்ணா தேவலாம்’

புரோகிதர் முதலியார் வீட்டைவிட்டுக்கிளம்பினார்.

‘ அய்யிர் சைக்கிள்ள வந்தாரா’

‘ சைக்கிள்  வண்டிதான்  அது இல்லாம நா வெளில கெளம்பறதே இல்லிங்கோய்’ வேகமாய்ப்பதில் சொன்னார் புரோகிதர்.

நானும் அப்பாவும் ஒரு பெஞ்சொன்றில் அமர்ந்துகொண்டோம்.

பேராசிரியை அடுப்பங்கரையிலிருந்து இரண்டு காபியோடு வெளியில் வந்தார். எங்களை நோக்கித்தான் வந்தார்.

‘இந்த அய்யிருக்கு மட்டும் காபி உபசாரம்’ முதலியார் சிரித்துக்கொண்டே சொன்னார்.

‘அப்பா அய்யங்கார் ஸ்வாமி நம் வீட்டுல பச்ச தண்ணிகூட சாப்பிடமாட்டார்.புரோகிதர் அய்யாவுக்கு இன்னும் வேற வேல  இருக்கு போகணும். குருக்களய்யா பூசைய முடிச்சிட்டுத்தான் வந்திருப்பாரு. ஒண்ணும் வேல இருக்காது.’  பேராசிரியை சொல்லிக்கொண்டார்.

‘அய்யா உங்களுக்கு காபியில சக்கரை போடலாமா’

‘பேஷா’

‘ரெண்டுலயும் அர சக்கரை போட்டுருக்கன்’

‘ரொம்ப சரி’ என்றார் அப்பா.

நாங்கள் இருவரும் காபி சாப்பிட்டோம்.

‘அப்ப நாங்க உத்திரவு வாங்கிகிறோம்’

‘ உன் பெயர் என்னம்மா’ என்னைத்தான் பேராசிரியை கேட்டார்.

‘வேதா’  நான் என் பெயரைச்சொன்னேன்.

‘எதுவரைக்கும் படிச்சிருக்கே’

‘அஞ்சாவது’

‘இன்னும் படிக்கணும் ஆசை இருக்கா’

‘ஆமாம்’

‘ நல்ல சேதி.  ஒருத்தருக்கு  படிக்கணும்னு ஆசை  எப்பவும் இருக்கறது ஆரோக்யமான சமாச்சாரம். அப்ப நீ என் வீட்டுக்கு வா. என் வீடு போஸ்டாபீஸ் பக்கம்தான். யார கேட்டாலும் சொல்வாங்க. எப்ப வருவ’

‘உங்களுக்கு எப்ப நேரம் இருக்குமோ’

அப்பா என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார். முதலியாரும் அவரின் துணைவியாரும் காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு சாப்பிட இலைகளை நறுக்கி சரிசெய்துகொண்டு இருந்தார்கள்.

‘பாப்பாவுக்கு கல்யாண வயசு. எங்கயாவது ஒரு பையன நமக்குத்தக்கன  பாத்து கட்டிக்குடுத்துடலாம்னு முடிவோட இருக்கேன்’

‘அது சரிதான். ஆனா அது படிக்கறேன்னு சொல்லுதே’

‘அது சொல்லும்’

‘அதுதான சொல்லணும்’ பேராசிரியை சட்டமாய்ச்சொன்னார். நான் அப்பாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவரும்  உற்று என்னையேபார்த்தார்.

‘ நீ இண்ணைக்கு சாயந்திரமே வா. படிக்கறேன்னு சொல்ற. அதனால உன்ன வா ன்னு சொல்றேன்.’

‘எத்தனை மணிக்கு வரலாம்’

‘ஏழு மணிக்கு வாயேன். அப்பதான் நான் கொஞ்சம் ஓய்வாவும் இருப்பேன்’

நானும் அப்பாவும் கிளம்பத்தயாரானோம்.

‘நான் போயிட்டு வரேன் ‘ அப்பா சொன்னார்.

முதலியார் ஆகட்டும் ‘சந்தோஷம் போயிட்டு வாங்க’  என்றார். எங்களிடம் பேராசிரியை பேசியதெல்லாம் முதலியாருக்குத்தெரிய நியாயமில்லை. பேராசிரியை வாயில் வரை வந்தார்.

நான் அப்பாவின் கூடையத்தூக்கிக்கொண்டேன்.

‘தூக்க ம்டியுதா’

‘முடியாம என்னங்க’  நான் பதில் சொன்னேன். இருவரும்  குண்டு முதலியார் வீட்டு வாயில் படிக்கட்டுக்களை விட்டிறங்கி நடக்க ஆரம்பித்தோம். வீதியில் பேராசிரியரின் கார் நின்றுகொண்டிருந்தது. காரின் டிரைவர் அருகில் உலாவிக்கொண்டிருந்தார்.

’ இதுதான் அம்மா கார்’

‘’நானும் பாத்துகறேன். நம்பள பத்தி விஜாரிக்கிற மனுஷா இருக்காங்கறதே  நமக்கு ஒரு தெம்பு’ அப்பா சொல்லிக்கொண்டார். காரின் டிரைவர் எங்களையே பார்த்துக்கொண்டார். தெரு வெறிச்சோடிக்கிடந்தது. விவசாயக்கல்லூரியின் வகுப்பு நடைபெரும் நேரமாக இருக்கலாம். கல்லூரி வகுப்பு  தொடங்கும் நேரமும் மாலை வகுப்பு முடிந்து கல்லூரி விடும் நேரத்திலும் கூட்டமாக மாணவர்களைத்தெருவில்  காணவாய்க்கும்.

கோவில் தருமகர்த்தாவீட்டின் வாயிலில் யாரும் இல்லை. கதவு தாழிடப்பட்டு இருந்தது.  கூடையை நான் சுமக்க அப்பா என்னோடு பேசிக்கொண்டே வந்தார்.

‘கனமா இருக்கா’

‘அப்பிடி ஒண்ணும் இல்ல’

அண்ணாமலைநகர் போஸ்ட்மென் தனது சைக்கிளில் அழுத்தி அழுத்தி மிதித்து  அவ்வப்போது சைக்கிளை விட்டு இறங்கினார். கடிதங்களை  அங்கங்கு  விநியோகித்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் வீட்டிற்கு வந்து கைகால்களை அலம்பிக்கொண்டு மதியம் சாப்பிட்டுமுடித்தோம்.

‘சாமி  மதியம் சாப்பிட வந்தானா’

‘சாப்பிட்டு போயாச்சி’

அம்மா எனக்குப் பதில் தந்தார்.

‘டீ ஒரு சமாச்சாரம் தெரியுமோ’

‘என்னன்னு சொன்னாதான தெரியும்’

நான் அம்மாவும் அப்பாவும் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘ஒரு நா ஒரு ப்ரொபசர் கோவிலுக்கு வந்தா. தேவாரம் திருவாசகம் எல்லாம் பாடினான்னு சொன்னேனே ஞாபகம் இருக்காடி நோக்கு’

‘சொன்னேள் ஆனா ஞாபகம் இல்லே’

’ என்னடி பொறுப்பா ஞாபகம் இருக்கும்னு நெனச்சேன். இல்லேங்கற’

‘இப்ப சொல்லுங்கோ என்னன்னு’

‘அந்த மேடம்தான் ப்ரொபசர். தமிழ் டிபார்ட்மெண்டு. போஸ்டாபீசு வீதியில்  அவாளுக்கு வீடு இருக்குன்னு.  நம்ம சாமி கூட சொன்னானே’

‘நா சரியா காதுல வாங்கிகாம போயிட்டேன்போல. அத விடுங்க. சமாச்சாரம் என்னன்னு சொல்லுங்கோ’

‘ நா சொல்றம்மா. அந்த அம்மா என்ன சாயந்திரம் வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கா. நா போலாம்னு இருக்கன்.’

‘ அந்த அம்மா யாருன்னு கேட்டா,  இன்னைக்கு தெவசம்னு கட்டளை எடுக்க  போனேனே அந்த குண்டு முதலியாரோட ஒரே பொண்ணு. இன்னைக்கு அந்த அம்மாவுக்கும் தாத்தாவோட  தெவசம் இல்லயா  அந்த ஆத்துக்கு வந்திருந்தா. நம்ம பொண்ண  தன் .வீட்டுக்கு வரச்சொன்னா. என்ன சேதின்னு தெரியல.’

‘நல்ல சமாச்சாரமாதான் இருக்கும்.  அவ போகட்டும். நமக்கு நாலு மனுஷா தயவு வேணும் இல்லயா. நம்ம கொழந்தயும் படிக்கணும் படிக்கணும்னு சொல்லிண்டே இருப்பாளே’

எனக்கு உற்சாகமாக இருந்தது. நம் மீதும் கரிசனம் கொள்ள ஒரு  நல்ல மனிதர் இருக்கிறார் என்பது புதிய வலுவைத்தந்தது. எப்போது அந்தப் பேராசிரியர் வீட்டுக்குச்செல்லப்போகிறோம் என்கிற சிந்தையிலேயே மூழ்கி இருந்தேன்.

‘ சாமிக்குத்தான் அவா வீடு தெரியும்.  போஸ்டாபீசுக்கு   நாலாவது வீடோ என்னமோ சொன்னான். ஸ்கூல் விட்டு அவன் இப்ப  வந்துடுவான். அவனயும்  துணைக்கி கூட்டிண்டு போ. அவனும் வரட்டும். அந்த அம்மா என்ன சொல்றான்னு பாப்போம்’

அப்பா எனக்குச்சொன்னார்.

‘சரி அப்பா அப்படியே’ 

அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். எனக்கும் சற்று திருப்தியாகவே இருந்தது.

நான் பள்ளியைவிட்டு நின்று பத்தாண்டுகள் கூட ஆகியிருக்கும். ஆனால் படிக்கவேண்டும் என்கிற ஆர்வம்மட்டும் அணையாமல் இன்னும் என்னுள் உயிர்ப்போடு இருப்பதை உணர்கிறேன்.

பேராசிரியை நம்மை என்ன என்ன கேட்பாரோ என்று மனம் குறுகுறுத்தது. சாமி வீட்டில் வைத்துவிட்டுப்போகும் புத்தகங்களையும் நோட்டுக்களையும் அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்ப்பேன்.  தமிழ் எழுத்துக்கள் மறக்காமல்  இருக்கிறதா என்று என்னையே  சோதித்துக்கொள்வேன். அப்படித்தான் இப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அம்மா எனக்கும் அப்பாவுக்கும் காபி தயார்பண்ணிக்கொண்டு இருந்தாள். அடுப்பங்கரையில் பாத்திரங்கள் உருட்டும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

சாமி பள்ளிவிட்டு வீட்டுக்குள்ளாக நுழைந்தான். புத்தகப்பையை ஓரங்கட்டிவிட்டு கைகால்களை அலம்பிக்கொண்டான்.

‘ஏண்டா காபி சாப்பிடறயா’

‘குடு பெரியம்மா’

நாங்கள் எல்லோரும் காபி சாப்பிட்டு முடித்தோம்.

‘சாமி உனக்கு ஒரு சேதி’

‘என்னக்கா’

‘ என்ன தமிழ் ப்ரொபசர் வீட்டுக்கு வரச்சொன்னாங்க’

‘எப்பிடி’

‘அண்ணிக்கி கூட கோவில்ல பாத்தமே’

‘ஆமாம். அவங்களேதான்’

‘எப்பிடி சேதி வந்துது’

‘ இண்ணிக்கி குண்டு முதலி ஆத்து தெவசத்துக்கு அப்பா போனார். என்னையும் கூட்டிண்டு போனார்’

‘எதுக்கு உன்னையும்’

‘ கூடய தூக்கிண்டு வரணுமே’

‘ஓ அதுக்காக போனயா’

‘அந்த முதலியாரோட  பொண்ணுதான் அந்த  பேராசிரியை’

அம்மா   சாமிக்கு காபி கொண்டுவந்து கொடுத்தார். சாமி அதனை அதனைக்கையில்   வாங்கிக்கொண்டு ‘ பெரியம்மா சூடே இல்லயே’ என்றான்.

‘டீ  அந்தக்காபிய சித்த சூடு பண்ணிக்குடேன்’

‘இங்க தாடா’ நான் காபியை வாங்கிக்கொண்டு அடுப்படிக்குப்போனேன். காபியை சற்று சூடேற்றிக்கொண்டு வந்தேன். சாமியிடம் அதனைக்கொடுத்து சாப்பிடச்சொன்னேன்.

‘ எப்ப போறம்’

‘ ஒரு ஏழு மணிக்கு வரச்சொல்லியிருக்கா’

‘மணி என்ன ஆறது, அஞ்சரை. கூடத்துச்சுவரில் ஒரு சுவர்க்கடிகாரம் ஆணியில் மாட்டி தொங்கிக்கொண்டிருந்தது. எனக்கும் கொஞ்சம் ஹோம்வொர்க் இருக்கு அத பண்ணி முடிச்சுடறேன்’ சாமி தனது புத்தக மூட்டையை எடுத்து விரித்து வைத்துக்கொண்டான்.

அப்பா சாயரட்சைக்குக்குத்தயாராகிக்கொண்டிருந்தார். கைகால்களை சுத்தி பண்ணிக்கொண்டார். நெற்றியில் பட்டை பட்டையாய் விபூதியைக்குழைத்து இட்டுக்கொண்டார்.

‘டீ     நைவேத்யம் தயாராகட்டும்’ அம்மாவுக்குக்கட்டளை தந்தார்.

‘தோ நேக்கு பதினஞ்சி நிமிஷம் போறும்.  ரெடி ஆயாச்சி   மகா நைவேத்யம்தானே’

அப்பாவுக்குப்பதில் சொன்னார்.  மகாநைவேத்யம் எனபது வெறும் சாதம்தான். பேர்தான் மகான்னு அடைமொழியோடு.

‘சாமி,   நாம  ரெண்டு பேரும் கோவிலுக்கு போவோமா’

‘ரைட்டா ‘

‘’ப்ரொபசர் ஆத்துக்கு போணுமே’

‘ அதுக்குள்ள நாங்க வந்துடுவோம். நீ ரெடியா இரு’

‘சரிடா’

‘ மெய்க்காவல் சுப்புணி கோவிலுக்கு  வந்திருப்பானோ’

‘’வராம இருப்பனோ  எப்பிடி கோவில் லைட் அங்கங்க எரியறது  நா பாக்கறேன். எனக்கு தெரியறது.  சன்னதில  இருக்குற திருவிளக்குக்கு  எல்லாம் எண்ணெ போட்டுண்டு இருப்பான் திரிகள மாத்துவான்.’அப்பா அம்மாவுக்குப்பதில் சொன்னார். இருவரும் கோவிலுக்குக்கிளம்பினார்கள்.

‘நல்ல பாவடயா தாவணியா கட்டிண்டு போ’

‘ அத பாத்து தான்  ஒத்தருக்கு  எதாவது  செய்யனும்னா

செய்வாளா’ நான் தான் அம்மாவைக்கேட்டேன்.

‘’முடிஞ்சவரைக்கும் நன்னா போகணும்’

‘என்னத்துக்கு வர சொல்லியிருப்பா உனக்கு எதாவது தோணறதா அம்மா’

‘ஏன் நீ என்ன படிச்சீருக்கேன்னு  அவா அப்பப்ப கேட்டதா சொன்னயே’

‘ஆமாம் அது சரிதான்’

‘அந்த அம்மா காலேஜ்ல பெரிய வாத்தியாரா இருக்கா. பெரிய உத்யோகம்.  அவா குடும்ப சமாச்சாரம் இன்னதுன்னு தெரியல’

‘குண்டு முதலியார் ஆத்துக்கு போயிருக்கே. அவர் பொண்ணுதான் அவான்னு தெரிஞ்சிண்டு வந்துருக்க’

‘ அவ்வளவுதான்’

‘பாப்போம் என்ன சொல்றான்னு’

‘எதாவது எடுத்துண்டு போகணுமா’

‘அவா ஆத்துக்கு போறச்சே எதானு எடுத்துண்டு போணுமான்னு கேக்கறே’

‘எத  நீ  எடுத்துண்டு போவே.  எடுத்துண்டு போக  நாம  என்ன வச்சிருக்கம்.  அவாளோ பெரிய எடம்.  நீ  போ  ஒண்ணும்  வேண்டாம்’

‘சரிம்மா’ நான் பதில் சொன்னேன்.

அம்மா எனக்கத்  தலைவாரி விட்டாள். தோட்டத்தில் பூத்த மல்லிகைப்பூக்கள் சிலது பறித்துவந்து வாழை நாரில் தொடுத்தாள். அதனை என் சடையில் வைத்தாள்.

‘இத்தனை நாளும் இத நீ செய்யலயே அம்மா’ என் தலையில்  பூ வைத்த அம்மாவைக்கேட்டேன். அம்மா முகம் சட்டென்று இருளாகியது. நாம்  அம்மாவைக் கேட்டது தவறென்று உணர்ந்துகொண்டேன்.

‘நெத்திக்கி இட்டுண்டயா’

‘ஆச்சு’

அப்பாவும் சாமிநாதனும் பூஜை முடித்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டனர்.

‘ போனதும் தெரியல  வந்ததும் தெரியல’

‘ஏன்  கோவிலுக்கு போனம் பூஜ நைவேத்யம் கல்பூரம் ஆச்சி  இன்னைக்கு யாரும் சேவார்த்திகள் வரல.   இவ  ப்ரொபசர் ஆத்துக்கு போகணுமே. சாமி அதுலயே ஞாபகமா இருந்தான்’ அப்பா பதில் சொன்னார்.

‘நீங்க பொறப்படலாம்’

அம்மா எனக்கும் சாமிக்கும் சேதி சொன்னாள்.

‘சாமி வெளக்கு ஏத்தியிருக்கா. ஒரு நமஸ்காரத்த பண்ணிக்கோ. பொறப்படு’

அப்பா அதிர்ந்து சொன்னார்.

நான் திருவிளக்கு முன்பாக தரை  வீழ்ந்து வணங்கினேன்.

‘பொம்மனாட்டி எப்பிடி நமஸ்காரம் பண்ணணும் தெரியும்தானே’

‘ தெரியும் அப்பிடித்தான் பண்ணினேன்’

‘தெரிஞ்சா சரி’  அப்பா சொன்னார்.

நானும் சாமியும் கிளம்பினோம்.

‘ நோக்கு செருப்பு இல்லதானே’

‘ ஆமாண்டா’

‘ எனக்கும் வேண்டாம் விடு’

‘ உனக்கு இருக்கு நீ போட்டுக்கோ’

‘வேண்டாம்’

அப்பா அம்மா எனக்கு யாருக்கும் காலுக்குச் செருப்பு இல்லைதான். அது வாங்கும் நிலையிலும் குடும்பம் இல்லையே.

இருவரும் புறப்பட்டோம்.

‘போஸ்டாபீசு பக்கம்தானே’

‘ ஆமாம் வா போகலாம்’

போஸ்டாபீஸ் வாயில் கேட் கதவு மூடிக்கிடந்தது. உள்ளே எதோ ஓரிருவர் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள் நான்கைந்து பேருக்கு நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் சிரிப்பொலி விகாரமாய்த்தெரிந்தது.

’என்னதான் அப்படிப்பேசுவார்களோ’

‘கவலைஇல்லாதகாலம்’ நான் பதில் சொன்னேன்.

‘அதெப்படி’

‘அப்பா அம்மா செலவுக்கு பணம் தருகிறார்கள். இவர்கள் படித்து முடித்து வேலை வெட்டி என்று போனால்தான் பணத்தின் அருமை புரியப்போகிறது’

’அதென்ன வேலை வெட்டி’

‘வேலைதான்,  வெட்டி சும்மா சொன்னது’

தமிழ்ப்பேராசிரியையின் வீடு வந்தாயிற்று.வாயிலில் பெரிய இரும்புகேட். அதன் அருகே ஒரு சிறியகேட் ஒன்று. சிறிய கேட்டைத்திறந்துகொண்டு நாங்கள் உள் சென்றோம்.

‘யாரு’

பேராசிரியையின் குரலேதான்.

‘நாங்கதான் வந்திருக்கோம். குருக்கள் வீட்டிலிருந்து’ நான் பதில் சொன்னேன்.

பேராசிரியை வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தார்.

வீட்டின் முன் நின்ற கதவு திறந்துகொண்டது.

‘வாங்க உள்ள வாங்க’

வரவேற்பு அறைமாதிரிக்கு ஒரு ஹால். அதன் உள்ளே நான்கைந்து நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.

‘உட்காருங்க’

நாங்கள் இருவரும் நாற்காலியில் அமர்ந்துகொண்டோம்.

‘இந்தபையன்’

‘சித்தப்பா பையன்.  பேரு சாமிநாதன். ஆறாம் கிளாஸ் படிக்குறான். வடக்குதெரு  பள்ளிக்கூடத்தில.  இவன் அப்பா அதான் எங்க  சித்தப்பாதான் இந்த ஊர்கோவில் பூஜை. சித்தப்பா சித்தி ரெண்டு பேருமே சென்னைக்கு போயிருக்காங்க. சித்தியோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சேதி வந்து  போனாங்க. ரொம்ப நாளாச்சி. இப்பக்கி எங்கப்பாதான் உள்ளூர் கோவில்ல   பூஜை.’

‘உங்க சொந்த  ஊர்’

‘தருமங்குடிதான்  மொதல்ல எங்க ஊர். ஆனா இப்ப இல்ல. அப்பாக்கு கையில ஒரு பிரச்சனை.  ஆஸ்பத்திரில அதக்காமிச்சி வைத்தியம் பண்ணிக்கத்தான் இங்க வந்தம்’

’அந்த ஊருக்கே திரும்ப போயிடுவீங்களா’

‘அதான் இல்ல. கோவில் வீட்டுல குடியிருக்கோம். பூஜை பண்ணினா அந்த வீடு. பூஜையில்லன்னா வீடில்லை.  சொந்தமா வயல் காடு எதுவும் கிடையாது. அந்த வெவசாய  வேல எல்லாம் அப்பாவுக்கு தெரியாது. இப்ப தருமங்குடில வேற குருக்கள பூஜைக்கு போட்டுட்டாங்க. நாங்க வீட்டைகாலி பண்ணிட்டு  அங்கேந்து இங்க வந்திட்டம். சித்தப்பா சென்னை போயிருக்கார். வந்துட்டார்னா  எங்கப்பா வேற கோவில் பூஜை எதாவது கெடைக்குமான்னு பாக்குணும்’ நான் பேராசிரியையிடம்  சொல்வதையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

’என்ன சாப்பிடுறிங்க ரெண்டு பேரும்’

‘எதுவும் வேணாம்’ நான் பதில் சொன்னேன்.

‘ நா இப்ப ரெண்டுபேருக்கும் ஒரு  ஒரு வெள்ளை பேப்பர் தருவேன்.  என்கிட்ட இருந்து  ஒரு பென்சிலோ பேனோவோ எடுத்துக்கலாம்.   உங்களுக்கு தெரிஞ்ச  ஏதாவது  ஒரு தமிழ்ப்பாட்ட பத்துவரிக்கு எழுதி என்னண்ட கொடுக்கணும்’

எனக்குத்தூக்கிவாரிப்போட்டது. நான் என்று எழுதினேன் என்று எனக்கு நினைவில் இல்லை. என்னால் இப்போது எழுத முடியுமா. அச்சமாக இருந்தது. சாமி பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டான்.

‘நான் எழுதுகிறேன்’

‘எழுது தம்பி’

‘எத வேணும்னாலும் எழுதலாமா’ சாமி கேட்டான்.

‘எத வேணும்னாலும் எழுதுங்க’

சாமி வேக வேகமாக எழுதினான். அவன் என்ன எழுதுகிறான் என்றும் எனக்குத்தெரியவில்லை. நான் என்ன எழுதுவேன் எனக்கு என்ன நினைவில் இருக்கிறது.

‘ஏன் பாப்பா சும்மா உக்காந்துகிட்டு இருக்க. எழுது’

‘எதுவுமே நினைவில் இல்லை’

‘சாமி கிட்ட எதாவது பாட்ட சொல்லுவதானே அத எழுது’

‘அவ்வையார் பாட்ட சொல்வேன்’

‘என்ன பாட்டு’

‘பாலும் தெளிதேனும்’

‘அதயே எழுது’

‘எழுத முடியுமான்னு தெரியில’

‘எழுது எழுதினாதான் எழுதமுடியுமான்னு தெரிஞ்சிக்கலாம்’

நான் பேப்பரை பேனாவை எடுத்துக்கொண்டேன். சாமி தான் எழுதிய பேப்பரை பேராசிரியையிடம் கொடுத்துவிட்டான்.

நான் எழுத ஆரம்பித்தேன்.

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்

துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

சங்கத்தமிழ் மூன்றும் தா.’

எழுதிவிட்டேன். பேராசிரியையிடம் கொடுத்தேன். நாங்கள் கொடுத்த  பேப்பர்களை பத்திரமாக எடுத்துவைத்துக்கொண்டார் பேராசிரியர்.

‘பேப்பர் எங்கிட்ட இருக்கட்டும் நா பாக்கறேன்’

‘சாமி நீ என்ன எழுதினே’

‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு

 அங்கு துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்றது  வெள்ளைப்பசு

உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு

பாலை நன்றாய்க்குடிக்குது கன்றுக்குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு

மடி முட்டிக்குடிக்குது கன்றுகுட்டி.’

‘ நா கூட இந்தப்பாட்டை படிச்சிருக்கேன். ஆனா ஞாபகத்துக்கு வரல’

பேராசிரியை வீடு பெரியதாக இருந்தது. கீழ் மேல் என இரண்டு தளங்கள் இருந்தன. கீழ் வீட்டின் கூடத்திலிருந்து மேல் வீட்டிற்கு படிக்கட்டு இருந்ததைப்பார்த்துக்கொண்டேன்.

‘யாருக்கு பாடத்தெரியும்’

‘எனக்கு பாடத்தெரியும்’ சாமி சொன்னான்.

‘ஏம்மா உனக்கு பாட வராதா’                                                   

‘வரும் ஆனா பயம்’

‘ என்ன பயம்’

நான் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தேன்.

‘தம்பி நீ பாடு’

‘வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள்

வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத்திருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத்துட்பொருளாவாள்’

‘ரொம்ப பிரமாதமா பாடிட்ட தம்பி. யார் சொல்லிக்குடுத்தா பாட்டு’

‘அம்மா’

‘இன்னும் நிறைய பாட்டு தெரியுமா’

‘ஒவ்வொரு சாமிக்கும் ஒரு பாட்டு சொல்லிக்குடுத்து இருக்காங்க’

நான் சாமியையே பார்த்துக்கொண்டேன்.  அவன் பாடியது எனக்கும் பெருமையாகவே  இருந்தது.

‘ இந்த படிக்கட்டு வழியா மேல போங்க அங்க ஒரு ரூம் இருக்கும்’

நானும் சாமியும் அந்த படிக்கட்டுளில் ஏறி மேலே சென்றோம். அங்கு ஒரு பெரிய அறை இருந்தது. பேராசிரியர் கீழேயே இருந்தார். அறை முழுக்க சுவர் அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருந்தன. மய்யமாய் நாற்காலிகள் பெரிய மேசை ஒன்றும் இருந்தது. மேசை மீது வெள்ளைக்காகிதங்கள் பேனா பென்சில்கள் இருந்தன. சில புத்தகங்கள் மேசை மீது அடுக்காக இருந்தன. அறையின்  உயரமான இடத்தில் ஒரு நடராஜர் சிலைஒன்றுவைக்கப்பட்டிருந்தது. அந்தச்சிலை உலோகத்தால் ஆனதாக அழகாகக்காட்சியளித்தது.  நடராஜர் தூக்கிய காலுடன்  சிரித்த முகமாய் காட்சி தந்தார்.

‘சாமி நாம கீழ போலாமா’

‘சரியக்கா’

‘அறைக்கதவை சாத்திடவா’

‘நாம அத  திறக்கல நாம மூடவேண்டாம்’

இருவரும் கீழ் தளத்துக்கு வந்தோம். பேராசிரியை இரண்டு தட்டுக்களில் பிஸ்கட்டும் மிக்சரும் வைத்திருந்தார்.

‘எடுத்துகுங்க’

நாங்கள் தின்பண்டங்களைச் சாப்பிட்டு முடித்தோம்.

‘ நா:ளைக்கு இதே நேரத்துக்கு வா பாப்பா’

‘ வந்துடறேன்’ நான் பதில் சொன்னேன்.

நானும் சாமியும் பேராசிரியை வீட்டை விட்டுப்புறப்பட்டோம். எதற்கு அவர் வரச்சொன்னார் என்பதே  எனக்கு விளங்காமல் இருந்தது. அவர் வீட்டில் தனியாக இருந்தார். உடன் ஒரு வேலைக்காரியைக்கூடக்காணவில்லை. இவருக்குக்குடும்பம் என்ற ஒன்று உண்டா இல்லையா என்று நானே யோசித்துப்பார்த்தேன். அவரை நாம் அதெல்லாம் கேட்கத்தான் முடியுமா அப்படிக்கேட்பது சரியா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

‘என்ன யோசனை’

‘இல்ல இந்த அம்மா தனியாவே இருக்காங்க’

‘ஆமாம் தனியாத்தான் இருக்காங்க’ அதற்குமேல் அவன் ஒன்றும் சொல்லவும் இல்லை. நாங்கள் அஞ்சலகம் தாண்டிக்கொண்டு இருந்தோம். ‘தள்ளுவண்டியில் பஜ்ஜி போண்டா சுடச்சுட தயாரித்து வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அந்த வண்டியைச்சுற்றி கூட்டம். கல்லூரி மாணவர்கள் ஏகத்துக்கு நின்றுகொண்டு தின்பண்டத்தைச்சுவைத்துக்கொண்டு இருந்தார்கள்.

நானும் சாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

‘நாம அந்த பேராசிரியை வீட்டுல சாப்டாச்சி’

‘ஆமாம். இப்ப எதுவும் வேண்டாம்’ எனக்கு சாமி பதில் சொன்னான்

நானும் சாமியும் வீட்டுக்கு நடந்துகொண்டிருந்தோம்.

‘அக்கா எங்கப்பா எங்கம்ம எப்ப வருவா தெரியுமா’ சாமி திடீரெனக்கேட்டான்.. அவன் இதுமாதிரிக்கேட்டு நான் பார்த்தது இல்லை. அவனுக்கு மனதில் ஏதேனும் சங்கடம் இருக்கலாம். அதன் உள்ளாகப்போகவும் எனக்கு மனம் இல்லாமல் இருந்தது.

‘பாட்டிக்கு உடம்பு சரியான வரப்போறா’

‘பாட்டிக்கு உடம்பு எப்ப சரியாகும்’

‘சரியாயிடும் அதுக்குத்தானே உங்கப்பா அம்ம ரெண்டுபேரும் போயிருக்கா’

‘உங்கப்பா இங்க வைத்தியம் பாத்த மாதிரி அந்த பாட்டிக்கும் பாக்கலாம்தானே. அந்த பாட்டிய அழச்சிண்டு இங்கு வரலாம் இல்லயா’

இவன் எப்படி எல்லாமோ அல்லாவா யோசனை செய்கிறான் என நினைத்துக்கொண்டேன். அதனிலும் ஒன்றும் தவறு இல்லை. தனது அப்பாவும் அம்மாவும் உடன் இருக்கவேண்டும் என எல்லாக்குழந்தைகளும் ஆசைப்படும்தானே.

‘’ரொம்ப சரியா சொன்னே’

‘என்ன சொல்ற நீ’

‘ மெட்ராஸ் பாட்டிக்கும் இங்க அழச்சிண்டு வந்து வைத்யம் பண்ணலாம்னு சொல்ற’

‘அதான்’

‘தாத்தாக்கு முருகன் கோவில்ல  பூஜ மொற இருக்கு. அத என் அப்பா பாத்துகறார். உங்க தாத்தாவும் உன் அம்மாவும் பாட்டிய பாத்துகறா’

‘’கோவில்ல பூஜை மொற இருக்குங்கறது மறந்துட்டு பேசிண்டுஇருக்கேன்’

‘அத எப்பிடி மறக்கறது. அதுதான்  நாம சாப்பிடுற சாப்பாடு போட்டுண்டு இருக்கற சட்டை எல்லாத்துக்கும் ஆதாரண்டா’

‘சரியா சொன்னேன்’

‘அதான் ஒருத்தருக்கு  பொழப்புன்னு சொல்லுவா. நீ சின்ன பையன் போக போக உனக்கும் எல்லா கதயும் தெரிய வரும்’

இருவரும் வீட்டை அடைந்தனர். அப்பா அம்மாவோடு பேசிக்கொண்டே இருந்தார். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று  கவனித்தேன். சென்னை சென்று இருக்கும் சித்தப்பாவும் சித்தியும் அங்கு  என்ன என்ன  செய்கிறார்களோ என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்பா கையில் கடிதமொன்றை வைத்துக்கொண்டு இருந்தார்.

‘என்ன பசங்களா போன சேதி என்ன அதச்சொல்லுங்கோ’  அப்பா கேட்டர்ர்.

‘இது என்ன பெரியப்பா கடுதாசி’ என்றான் சாமி.

‘ உங்கப்பா போட்டு இருக்கார். உன்ன படிக்கச்சொல்லி எழுதியிருக்கார்’

‘பாட்டி உடம்பு என்ன ஆச்சி அத சொல்லுங்கோ’

‘பாத்துண்டு இருக்காளாம். இன்னும் எழுந்து நடமாட முடியாம பாட்டி கஷ்டப்படறாளாம்’

‘எப்ப வரேன்னு சொல்லி எழுதியிருக்கா’

‘ அதபத்தி ஒரு சேதியுமில்லே’

சாமியின் முகம் வாடிப்போனதைக்கவனித்தேன். அவனைக்கட்டி அணைத்துக்கொண்டேன்.

‘டீ  ப்ரொபொபசர் அம்மா என்ன சொன்னா அத சொல்லணும் இல்லயா’

‘ ஆளுக்கு ஒரு வெள்ள பேப்பர் கொடுத்தா ரெண்டு பேரும்  அவா அவாளுக்கு தெரிஞ்ச பாட்டு ஒண்ணு எழுதுங்கோன்னு சொன்னா’

‘ரெண்டு பேரும் எழுதினேளா’

‘பேஷா எழுதினோம்’

‘ உன்னையுமா சாமி எழுத சொன்னா’

‘ஆமாம் நானும் எழுதினேன்’

‘ அப்பறம்’

‘ விழுப்புரம்தான் நாளைக்கு வாங்கோன்னு சொல்லிட்டா’

  அவா வீடெல்லாம் சுத்தி பாத்தேளா’

‘வீடு பெரிசா ஒரு  பங்களா. அந்த அம்மா மட்டும்தான் இருக்கா. வேலக்காரி இருக்காளோ இல்லையோ அது தெரியல.  வீட்டுல ஒரு ரூம் நெறய புஸ்தகமா அடுக்கு அடுக்கி கெடந்தது பாத்தோம்’

‘பிஸ்கட்டும் மிகசரும் கொடுத்தா’ சாமி அவன் பங்குக்குச்சொன்னான்.

‘எங்களுக்கு இல்லயா’ என்றார் அப்பா.

சாமி சிரித்துக்கொண்டான்.

‘நாளைக்கு இதே நேரத்துக்கு வரணும்னு சொல்லியிருக்கா’

‘ரெண்டுபேரையுமா’

‘என்ன மட்டும்தான்’ நான் பதில் சொன்னேன்.

சாமியின் முகம் ஒரு மாதிரிக்கு இருந்ததைக்கவனித்தேன்.

‘என்ன வரவேண்டாம்னு சொல்லலயே. பின்ன எதுக்கு பேப்பர் குடுத்து என்ன  எழுதச்சொன்னா’ சாமிகேட்டான்.

‘நீயும் வாடா’ நான் அவனிடம் சொல்லி சமாளித்தேன்.

அப்பாவோடு  மாலையில் அவன் கோவிலுக்குச்சென்று வரவேண்டும்.  அப்பாவால் ஒண்டியாய்   எல்லா வேலயும்  செய்ய முடியுமா? சாமி போனால் கொஞ்சம் ஒத்தாசை அதைத்தான்  நான் மனதில்  நினைத்துக்கொண்டேன்.

சித்தப்பாவும் சித்தியும் அண்ணாமலைநகர் எப்போது திரும்புவார்கள் என்றே தெரியவில்லை. மாதங்கள் பல கடந்தன.

நான் தனியாகவே அடுத்தநாள் மாலை ப்ரொபசர் வீட்டுக்குப்புறப்பட்டேன்.

‘சாமிக்கு தானும் வரவேண்டும் என்று ஆசை இருந்திருக்கும். அவன் வெளியில் காட்டாமல் இருந்தான். அப்பாவும்கோவிலுக்குச்செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்.

‘நான் ப்ரொபசர் ஆத்துக்கு போயிட்டு  வரேன்’நான் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். அம்மாவுக்கு முகம் பிரகாசமாகவேயில்லை.

‘’ஏன் அம்மா ஒரு மாதிரியா இருக்கு உன் முகம்’

‘ஓண்ணும் இல்லேடி’

‘இல்ல எதோ இருக்கு’

‘நீ ஒண்டியா போறயே அவா மனுஷா  எப்பிடியோ அது நெனச்சேன் கவலயா இருக்கு;

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. சாமிக்கு சரியாக விளங்காமல் இருந்திருக்கலாம். அப்பாவுக்கு நன்கு கேட்டிருக்கவேண்டும். அப்பா அம்மாவுக்குப்பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘இதுல பயப்பட ஒண்ணுமே இல்ல’

‘எனக்குத்தான் அப்பிடி தோணறது’

‘படிச்சவா பெரிய உத்யோகம்பாக்கறா. கோவில்ல அடிக்கடி பாத்து இருக்கன். சந்நிதில தேவாரம் பாடிண்டு உட்கார்ந்து இருப்பா. நம்ப கொழந்தய பாத்ததும் இது படிக்கலயேன்னு தோணிருக்கு. நம்ப கஷ்ட ஜீவனமும் தெரிஞ்சி இருக்கு அவாளுக்கு’

‘உங்களுக்கு மனசு தைர்யமா இருந்தா எல்லாம்  சரியாத்தான் இருக்கும்’

அம்மா சொன்னாள்.

‘நா வர்ரேன்’

 நான் வாயிற்படி தாண்டி இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

‘அக்கா என் பேப்பரயும் அதான் நா நேத்து உன்னோட  அவா ஆத்துல எழுதினேனே அந்த பேப்பரயும் பாத்துண்டு வா’

‘ரொம்ப சரி. நிச்சயமா’ நான் சாமிக்குப்பதில் சொன்னேன்.

எதிரே சுப்பிணி கோவிலுக்குப்போய்க்கொண்டு இருந்தான்.

‘பாப்பா எங்கேந்து வரப்போவுது’

‘ ப்ரொபசர் அம்மா  வீட்டுக்கு போயிட்டு இருக்கன்’

‘ரொம்ப சரி. நல்லதே நடக்கட்டும்’

சுப்பிணி எனக்குச்சொன்னான்

சுப்பிணி என்னை ‘எங்க போறீங்க’ என்று கேட்கவில்லை.  அது சகுனத்தடையாகிவிடுமோ என யோசித்திருக்கலாம் அதையே மாற்றி எங்கிருந்து வரப்போறிங்க என்று கேட்டான்.  அவரவர்கள் நம்பிக்கை.

அஞ்சலகம் தாண்டிய ப்ரொபசர் வீடு. அதன் வாயில்கேட்டினைத்திறந்துகொண்டு உள் நுழைந்தேன்.

பேராசிரியை வாயிலில் எனக்காக நின்றுகொண்டிருந்தார். புன்னக செய்தார். நான் நிறைவாக வீடினுள் நுழைந்தேன். மேசையொன்று  வீடின் முன்பாகக்கிடந்தது. அது நேற்று இல்லை. அதற்கு இரு புறமும் நாற்காலிகள். நோட்டு பென்சில் பேனா ரப்பர் எல்லாம் கிடந்தன.

‘பாப்பா நீ தமிழ் நல்லா எழுதற. தப்பு இல்லாம எழுதற. அதுபோதும்’

நான் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தேன்.

‘ஆரம்பத்துல நல்லா படிச்சியிருக்க. அது நல்லா மனசுல நின்னுகிட்டு இருக்கு. அதனால நீ பொழச்சிகிட்ட . நீ எப்பிடி இருக்கன்னு பாத்தேன். அதான்.’

‘என் தம்பி’

‘அவன் தப்பில்லாமல் எழுதியிருக்கான் உன்னவிட அழகா எழுதியிருக்கான். உனக்கு எழுதுற பழக்கம்  விட்டுபோச்சில்ல. போகப்போக  சரியாயிடும்.’

எனக்குக் கேட்க சந்தோஷமாக இருந்தது.

மேசை மீது ஒரு திருக்குறள் புத்தகம் கிடந்தது. மு.வரதராசனார் உரை எழுதியது. பேராசிரியை அதனைக்கையில் எடுத்துக்கொண்டார்.

‘தோ பார் இது திருக்குறள்.  தமிழ்ல இது ரொம்ப முக்கியமான ஒரு புத்தகம். திருவள்ளுவர்னு ஒரு புலவர் எழுதினது. இது எழுதி ரெண்டாயிரம் வருஷம் ஆவுது. இதுல மூணு பிரிவு. அறம் பொருள் இன்பம்னு மூணு பிரிவு  இருக்கு. மொத்தம் 133 அதிகாரம். மொத்தமா 1330 குறள்.  மொதல்ல  கடவுள் வழ்த்துன்னு அதிகாரம். அதுல  பத்து குறள் இருக்கு.  ஒவ்வொரு அதிகாரத்துலயும் பத்து குறள் இருக்கும். மு.வரதராசனார் ஒரு பெரிய அறிஞர் இதுக்கு விளக்கம் எழுதி யிருக்காரு.  எளிமையான  விளக்கம். அதுவும்  அந்த அந்த பக்கத்திலேயும் நாம  அத படிச்சுக்கலாம். அகர முதலன்னு ஆரம்பிக்குது முதல் குறள். பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்னு  இருக்குற அந்தக்குறளோட இந்த அதிகாரம் முடியுது.  கடவுள் வாழ்த்துங்கறதுதான்  இந்த முதல் அதிகாரம்.. நா படிக்குற  குறள் பத்தி ஒனக்கு விளக்கம் சொல்வேன். நீ அத  கவனமா  கேட்டுக்கணும்.  மொதல்ல உனக்கு கஷ்டமாதான் இருக்கும். நீ அஞ்சி வகுப்பு படிச்சி இருக்கே. வயசு இருபது இருக்கும்னு தோணுது.  வாழ்க்கையில நெறய அனுபவம் கெடச்சியிருக்கலாம்னு நெனக்கிறேன். பொறுப்பான பொண்ணா இருக்கே.  பாரு  உனக்கு போகப்போக படிக்கறது ரொம்ப பிடிச்ச விஷயமா மாறிடும்’

எனக்கு கண்ணைக்கட்டிக்காட்டில் விட்டது போல் இருந்தது. இந்தப்பேராசிரியைக்கு என் மீது இத்தனை கரிசனம் வந்ததற்கு அந்தக்கடவுளுக்கு என் மனம் நன்றி சொல்லியது.

‘எனக்கு படிக்கணும்கற ஆச எப்பவும் இருக்கு’

நான் பதில் சொன்னேன்.

‘அதுதான் உன்ன இங்க கொண்டு விட்டுருக்கு. தெரிஞ்சிக்கோ’

என்னைப்பேராசிரியை குறளை ஒவ்வொன்றாகப்படிக்கச்சொன்னார். ரொம்ப தடவி தடவிப்படித்தேன். பிழைகளை திருத்தி திருத்தி என்னப்படி படி என்று ஊக்கப்படுத்தினார் பேராசிரியை. எனக்கு அச்சமாகவும் இருந்தது. படிக்க படிக்க ஆசையாகவும் உணர்ந்தேன். அவரே ஒரு முறை அந்த பத்து குறளையும் அழகாகப்படியும் காட்டினார். அவர் குரல் இனிமையாக இருந்தது. குறளைக்கூட பாடுவார்களா என்ன என் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இது எல்லாம் தெரியவே தெரியாது வேண்டுமானால் தம்பியிடம். சாமியைக்கேட்டுப்பார்க்கலாம்.

‘இண்ணைக்கு இதுபோதும் நாளைக்கு அடுத்தது பாக்கலாம்’

அந்த குறள் புத்தகத்தையும் ஒரு நோட் புக் ஒன்றையும் என்னிடம் கொடுத்தார்.

‘இத வீட்ல படி. எழுது. என்கிட்ட கொண்டு வந்து எழுதினத காட்டு. என்ன’

பேராசிரியை புன்னகை செய்தார். நான் வீட்டுக்குக்கிளம்பினேன். ஒரு புத்தகமும் நோட்டும் எனக்கு யாரேனும் கொடுத்து படிக்கச் சொல்வார்களா என ஏங்கியவள் அல்லவா நான். எனக்குப்பெருமையாகக்கூட இருந்தது. அஞ்சலகம் வாயிலில் யாரையும் காணோம். உள்ளே யாரோ இருவர்  வேலைசெய்துகொண்டு இருந்தனர். இன்னும் வேலை ஏதும் பாக்கி இருக்கும்.  போல. தெருவில் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அப்பாவும் சாமியும் கோவிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

சாமி என்னைப்பர்த்ததும் ஓடி வந்தான்.

‘என்னக்கா சேதி’

‘ நீ அழகா எழுதியிருந்தியாம் அந்த அம்மா சொன்னாங்க’

‘நீ’

‘ ரெண்டு பேருமே தப்பில்லாம எழுதியிருந்தம்னுசொன்னாங்க. அது பெரிய சமாச்சாரம் இல்லயா’

‘இது என்ன நோட்டு புத்தகம்’

’ நீயே பாரு’

அவைகளை அவனிடம் கொடுத்தேன். அவன் அதனைக்கையில் எடுத்துக்கொண்டு,

‘நீ படிக்கற அக்கா. பத்துதேக்கற அக்கா இல்லே’

அவன் சொன்னது எனக்கு தேனாகக்காதில் விழுந்தது. அப்பா எதுவுமே பேசாமல் அமைதியாக எங்களோடு நடந்து வந்தார். அப்பா பேச ஆரம்பித்தார்.

‘பஞ்சமூர்த்திக்கு அஷ்டோத்ரம் நெட்ரு பண்ணினேன். அவ்வளவுதான் என் அப்பா  இது போறுண்டா. பொழச்சிக்கலாம் போ. பயப்படாதேன்னார்.  என் ஊர்  தருமங்குடில பள்ளிக்கூடம் மூணு கிளாஸ் போயிருப்பேன் அவ்வளவுதான்’

‘எங்கப்பா’ சாமி கேட்டான்.

‘அவனும் அப்பிடித்தான். ஆனா உங்கம்மா மெட்ராஸ்காரி. அவன் அடிக்கடி மெட்ராஸ் போவான் வருவான். கத்துனூட்டான் நெறயவே. உன் தாத்தா  மொற கோவிலுக்குப்போவான் வருவான் இல்லயா’

‘இங்கயும் பெரிய கோவில்தான்’ சாமி சொன்னான்.

‘ஆமாண்டா, தருமங்குடி மாதிரி இந்த ஊர் இல்லயே’

அப்பா அவனுக்குப்பதில் சொன்னார். நாங்கள் வீடு வந்து  சேர்ந்தோம்.

‘வீடு வெறுமனே சாத்தியிருந்தது. அம்மா எங்கு சென்றாளோ தெரியவில்லை.

‘இங்கதான் எங்கானு போயிருப்பா’ அப்பா எனக்குச்சொல்லிக்கொண்டிருந்தார்.

‘இவ எங்க போயிட்டா. இது என்ன புது சமாஜாரமா இருக்கு’ அப்பா முணுமுணுத்தார்.

அப்போதுதான் அம்மா வேக வேகமாக வந்துகொண்டிருந்தார். வாயில் படி ஏறினார்.

‘ நீங்க எல்லாருமே வந்தாச்சா’

‘ஆமாம் நீ எங்க போயிட்டு வர’

‘எனக்கு தல வலி. கொடச்சல். தாங்க முடியல. கை வைத்யம் என்னமோ பண்ணிபாத்தேன் ஒண்ணும் சரியாகல. தலவலிக்கு ஒரு மாத்ர வாங்கிண்டு வரலாம்னு கடைக்கு போயிட்டேன். அதுக்குள்ள நீங்க எல்லாருமே வந்துட்டேள்’

‘இப்பிடி கதவ சும்மா சாத்திட்டு போனா என்ன அர்த்தம்’

‘இந்த பூட்டு சாவி எல்லாம் எங்க இருக்குன்னு தெரியாதே. நா எங்க பூட்டறது’

‘அதுக்குன்னு இப்பிடி  வீட்டுக்கதவ தெறந்துபோட்டுட்டு போவியா, கொஞ்சமானு அறிவு இருக்கா உனக்கு’

‘நம்பாத்துல என்ன இருக்கு. யார் வரப்போறா’

அம்மா அப்பாவுக்குச்சொல்லிக்கொண்டார்.

‘இந்த அகம்பாவம் கூடாது உனக்கு. இனிமே இந்த மாதிரி செய்யாதே’ அப்பா வார்த்தையை  முடித்துக்கொண்டார்.

நான் அம்மாவை மாத்திரை சாப்பிடச்சொன்னேன். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். அம்மா தான் வாங்கி வந்த  மாத்திரையை வாயில் போட்டு விழுங்கினார்.

‘சித்த படுத்து எழுந்திரு’ நான் அம்மாவிடம் சொன்னேன்.

சாமி தன் புத்தகப்பையைத்தேடி எடுத்து உட்கார்ந்துகொண்டான். வீட்டுப்பாடங்கள் சிலவற்றை எழுதினான்.

நான் அடுப்பங்கரைப்பக்கம் போனேன். இரவுக்கு ஏதேனும் இருக்கிறதா என்ரு தேடினேன்.

‘தோச மா இருக்கு. ஒண்ணும் பிரச்சன இல்லே’

‘தொட்டுக’

‘சட்டினி அறச்சி வச்சிருக்கேன். ‘

‘கல்ல அடுப்புல போடு. தோ நா வரேன்’

‘ நீ வர வேண்டாம் நா பாத்துகறேன் சும்மா இரு’

நான் இரவு உணவைத்தயார் செய்து எல்லோருக்கும் அவரவர் தட்டில் விநியோகித்துமுடித்தேன்.

‘ரொம்ப  சிரமம்’

‘ என்னம்மா இதுல சிரமம். தெனப்படி நீ  பண்றதுதானே’

நான் சொல்லி க்கொண்டே 

  இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தேன். அப்பா தான் படுக்கும்  பாயை எடுத்துக்கொண்டு உதறி உதறி த்தயார் செய்தார்.

  பாய ஒதற வேல  எல்லாம்  நடு கூடத்துல வச்சிக்கப்பிடாது’ அம்மா அப்பாவிடம் சொன்னாள்.

‘சரி சரி’ என்று அதனை சட்டை செய்யாததுபோல்பதில் சொன்னார் அப்பா.

‘ஊருக்கு சட்டம் தனக்கில்ல.’       

‘அம்மா விடறியா அதை’

‘கண்ணுல தூசி விழும் தும்மல் வரும் தெரியாதா’

‘இப்ப என்ன விழுந்துட்து’

‘போறும் விடும்மா’ நான்தான் சொன்னேன்.

இருவரும் அமைதியாயினர்.

மறுநாள் வழக்கம்போல் விடிந்தது. சாமி தன் பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டுச்சென்றான். அப்பா கோவில் பூஜைக்குச்சென்றார். நானும் அம்மாவும் வீட்டில் இருந்தோம். நான் பேராசிரியை சொல்லிக்கொடுத்த குறள்களை மனப்பாடம் செய்துகொண்டிருந்தேன். அதனை ஒருமுறை  எழுதிப்பார்த்தேன்

‘ரொம்ப அலட்டிகற நீ’

‘ஆமாம் அலட்டிகணும்னுதான் இருக்கேன்’

‘உனக்கு படிப்புல இவ்வளவுக்கு ஆசையிருக்குன்னு தெரியல’

‘தெரிஞ்சி என்ன பண்ணவைக்கும்’

‘அதுவும் சரிதான்’

‘பின்ன பேசி என்னம்மா ஆகும். படிக்கறதுதாம் மனுஷாளுக்கு நிம்மதிய தரும்னு நா நெனக்கிறேனே’

‘நம்ம ஜாதில புருஷா நாலு மந்திரம் கத்துண்டா போறும். சாண் கல்லு இருந்தா மொழம் சோறு உறுதியாயிடும், பொம்மனாட்டிக்கு அதுவும் வேண்டாம்’

‘புளியோதரை ததியோன்னம் பெசய வேண்டாமா’

‘ ஒரு பிராம்ண புள்ள பரிசாரகன்னு கோவில் மடப்பளில  இருந்துட்டா அந்தக்கலவ   சாதம் பெசயற வேலயும் நமக்கு இல்ல’

‘ரொம்ப சரி’

‘ஏன் சரஸ்வதின்னு  ஒரு பொம்பள சாமிய  போய் படிப்புக்குன்னு வச்சிருக்கா’

‘இந்த கேள்வி எல்லாம் என்னண்ட கேக்காதே தெரியர்தா’

‘சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்’

அப்பா கோவில் பூஜை முடித்து வந்தார். சாமி மதியம் சாப்பிட வந்து போனான். அப்பாவும் அம்மாவும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நான் அதனைக்கூர்ந்து கேட்டுக்கோண்டு இருந்தேன்.

‘நம்ம பொழப்பு இப்பிடியே போகறதா, இல்ல இதுல எதாவது மாத்தம் ஏதும் வருமா’

‘எனக்கும் கொழப்பமா இருக்கு. தம்பி  ஊருக்குப் போனவன் அப்பிடியே அங்கயே தங்கிட்டான். அவன் ஆம்படியா அவனோடயே இருக்கா. அந்த பெரியம்மாக்கு ஒடம்பு  ஒண்ணும் குணம் ஆன மாதிரிக்கு தெரியல. இப்ப என்ன செய்யப்போறம். இதே விசாரமா இருக்கு’

‘ஒண்ணு ஒங்க தம்பி இங்க வரணும் இல்ல நாம அங்க போகணும் அப்பதான் இந்த பிரச்சனைக்கு எதுனா ஒரு வழி புரியும்’

‘ நீ சரியா சொல்லிட்ட. பாப்பம்’

நான் பேராசிரியை வீட்டுக்கு பாடம் கற்றுக்கொள்ளச்செல்வது பற்றி அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அது  அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாய் இருக்காதுதான். நம் ஆசைக்கு அல்லவா நாம் போகிறோம் நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்’

‘டீ உனக்கு செதம்பரம் தீட்சதாள் தெரியுமோ. நடராஜா கோவில்ல அவாதான் எப்பவும்  பூஜை. இந்த தீட்சதாள் சமூகம்  உலகத்துல வேற எங்கயும்  கெடயாது. நடராஜ தாண்டவம் ஆடிண்டு கைலாயத்திலேந்து  பூலோகம் வந்தப்ப அவரோட  பூலோகம் வந்துட்டாளாம்.   எண்ணிக்கையில அது மொத்தமா  மூவாயிரம். தீட்சதாளுக்கு  தில்லை மூவாயிரவர்னு பேரு.’

‘ அந்தக்கதயெல்லாம் எப்பவோ  நா தெரிஞ்சிண்டதுதான்’

 குழந்தகளுக்கு ‘சிறுசுகள்ளயே அவா கல்யாணம் பண்ணிடுவா. அவாளுக்கு  தீட்சத பொம்மனாட்டி எல்லய தாண்டப்படாது. தில்லை பெண் எல்லை தாண்டாள்னு வசனம் இருக்கு தெரியுமோ’

‘அதுகள்ள படிப்பு பள்ளிக்கூடம் எல்லாம் எப்பிடி’

‘ஹஹ்ஹா’

‘என்ன சிரிப்பு’

பொண் குழந்தக்கு ஏழு வயசுல கல்யாணம். அப்புறம் என்ன படிப்பு கிடிப்பு. அவ்வளவுதான்’

‘ ஆம்பள பசங்க’

’ பையன்க கொணலா கொண்ட போட்டுப்பான்.  அதுக்கு  தீட்சதர் கொண்டன்னு பேரு. தமிழ் அட்சரம் தெரிஞ்சிப்பான். சுலோகம் நெட்ரு பண்ணுவான்.  செறுவயசுலயே கல்யாணம் ஆயிடும். முடிஞ்சரைக்கும் பள்ளிக்கூடமோ  அதுக்குமேலயோ போவான். அப்பறம்  நடராஜா கோவில் மொற வந்துடும். அதோட சரி. இதுக்கு மத்தியிலும் அவாள்ள   ரொம படிச்ச  மேதைகளும் அதிசயமா இருப்பா’

எல்லாவற்றையும் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்;

‘ஏன்பா பொம்மனாட்டி  கோவில்ல பூஜ பண்ணினா என்னவாம்’

‘பேஷ் பேஷ் நன்னா இருக்குடி நீ பேசறது’ அம்மா வெடுக்கென்று பதில் சொன்னாள்.

‘நல்ல கேள்வி. பதில்தான் என்னண்ட இல்ல’ அப்பா சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். நான் மாலை பேராசிரியை வீட்டுக்குப்புறப்பட்டேன். கையில் குறள் புத்தகமும் நோட்டும் இருந்தது. எப்போதும் கலப்பாயிருக்கும் அஞ்சலகம் முன்பாக யாரையும் காணோம். அஞ்சலகம்  வாயில் கேட்டில் இன்று விடுமுறை  என்று எழுதிய ஒரு பலகை தொங்கிக்கொண்டிருந்தது. எதற்கு விடுமுறை என்பது மட்டும் தெரியவில்லை. ஏதேனும் வட இந்திய விழாவாகக்கூட இருக்கலாம். அல்லது  பெருந்தலைவர்கள் யாரேனும்  பிறந்த தினமாக இருக்கலாம்.

பேராசிரியை வீட்டு முன்னால் ஒரு பெயர்ப்பலகை இருக்கிறது. அது இப்போதுதான் கண்ணில் பட்டது அதனை  நான்  கவனிக்கிறேன். பேராசிரியர். சிவகாமி. தமிழ்த்துறை அண்ணாமலைப்பல்கலைக்கழகம்  என்று கொட்டை எழுத்துக்களில்  எழுதியிருந்தது. பேராசிரியை பெயரே இப்போதுதான் எனக்குத்தெரிய வருகிறது. யாரும் எனக்கு  சொன்னால்தானே தெரியும். யாரும் அவர் பெயரைச் சொல்லவும் இல்லையே. ப்ரொபசர் இது ஆங்கிலத்தில் தமிழில் பேராசிரியர் பேராசிரியை எல்லாம் சரி. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் நாம் நினைத்துக்கொண்டேன்.

‘வேதா உள்ளவா’ பேராசிரியர் என்னைதான் அழைத்துக்கொண்டிருந்தார்.

’மரியாதைக்குறியவர்களை பாத்தா வணக்கம்னு சொல்ல பழகிகோ என்ன’

‘வணக்கம் அம்மா’

‘ இது சரி இப்பிடித்தான்’

. நான் நேற்றே நெனச்சேன், ஆனா எப்பிடி தொடங்குறதுன்னு தெரியல’

‘ அதுல தப்பு இல்ல. இனி ஒவ்வொண்ணா நீ தெரிஞ்சிக்கணும்’

‘ தெரிஞ்சிப்பேன்’

‘ வா உக்கார் இண்ணைக்கு  திருக்குறள்ள இரண்டாவது அதிகாரம் படிக்கறம்’

பேராசிரியை வான் சிறப்பு என்னும் அதிகாரத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.  அது மழையின் மகத்துவம் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம் சொன்னார். கடவுள் வாழ்த்தை அடுத்து வான்சிறப்பு அதிகாரம்  வைக்கப்பட்டுள்ளதன் பொறுத்தப்பாடு பற்றிச்சொல்லிக்கொண்டே போனார்.அவர் குறள் படிப்பதும் அதற்கு விளக்கம் உரைப்பதும் கேட்க கேட்க மகிழ்ச்சியும் நிறைவுமாக உணர ஆரம்பித்தேன்.

துப்பார்க்குத்துப்பாய துப்பாக்கித்துப்பார்க்குத்

துப்பாயதூவும் மழை.

மனிதர்கள் உண்பதற்கு ஏற்ற  உணவுப்பொருள்களை விளைவிப்பது மழை. அம்மழையே அவர்கள்  குடிப்பதற்கான உணவாகவும் ஆகிறது.  உணவுப்பொருட்களுக்கு ஆதாரமாகித் தானே உணவாகவும் அமைகிறது.  அது மழை நீர்.  அற்புதமாகச்சொல்லிக்கொண்டே போனார் பேராசிரியை. வான் சிறப்பில் பத்துகுறளுக்கான விளக்கத்தையும் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

‘இந்த பத்துகுறளையும்  பாத்து பாத்து இந்த நோட்புக்ல  எழுது.’

‘ சரிங்க அம்மா’

வான்சிறப்பு அதிகாரத்திலுள்ள பத்துகுறளையும் ஒன்றன் பின் ஒன்றாஅக நோட்புக்கில் எழுதினேன். பேராசிரியையிடம் கான்பித்தேன்.

‘ ரொம்ப சரி’ என்றார்.

பேராசிரியையோடு  வேறு யாரையும்  வீட்டில்  வைத்துப்பார்க்கவே முடியவில்லை. இவர் திருமணமானவரா இல்லையா என்பதுகூட எனக்குத்தெரியாமல் இருந்தது.  இது விஷயம் நாம் அவரை எப்படிக்கேட்பது. அது முறை இல்லை நானே சொல்லிக்கொண்டேன்.

சுவரில் எவர் ஒருவர் நிழற்படமும் மாட்டப்படவில்லை. அப்படியாவது யாரையும் பார்த்துவிடலாமென முயற்சிசெய்தேன். பேராசிரியை அதற்கெல்லாம் இடமே தரவில்லை.

பேராசிரியைக்கு தினமணி நாளிதழ் வாடிக்கையாய் வருகிறது.

‘இத படி’

நான் எதனைப்படிப்பது திணறிக்கொண்டு யோசனையில் இருந்தேன்.

‘எத வேணுன்னாலும் படி’

நான் படிக்க ஆரம்பித்தேன். பண்ருட்டி அருகே 35 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலி என்று ஆரம்பித்துப்படிக்கத்தொடங்கினேன்.

‘அவ்வளவுதான் போதும்’

தினமணி நாளிதழை மேசையின் மீது வைத்தேன்.

‘வேதா  நீ பேப்பர எடுத்துகோ. படி.  அரை மணி நேரம் அதப்பாரு. அப்பறமா எனக்கு சொல்லு. நீ என்ன என்ன தெரிஞ்சிகிட்டன்னு’

பேராசிரியர் வெளியே கிளம்பினார்.

‘அம்மா வெளில கெளம்புறிங்களா’

‘ஆமாம் கோவிலுக்குப்போறன்.  பாசுபதேசுரர் கோவிலுக்குத்தான். உங்க அப்பாதான அங்க பூசை’

‘ஆமாம்’

‘என்ன யோசணை’

‘நீங்க போறதுக்குள்ள கோவில்ல  பூஜ முடியாம இருக்கணுமே’

‘அதப்பத்தி உனக்கென்ன கவலை. முதல் ஆராய்ச்சி மணி கேட்டுதுன்னா. நா கெளம்பிடுவேன். அஞ்சி நிமிஷத்துல சந்நிதில இருப்பன். இது எனக்கு பழக்கம்’

‘எங்கப்பாவுக்கு நீங்க வர்ரது தெரியாது’

‘ஏன் தெரியணும்’

‘கொஞ்சம் வெயிட் பண்ணுவாங்க.’

‘எனக்காக அப்பிடி எல்லாம் ஒருத்தர் வெயிட் பண்ணக்கூடாதுன்னு நெனக்கிறேன். நா வர்ரேன். நீ கதவ தாப்பா போட்டுகோ. யார் வந்தாலும் அம்மா வந்தபிறகு வாங்கன்னு சொல்லு’

பேராசிரியை செறுப்பைமாட்டிக்கொண்டு கோவிலுக்குக்கிளம்பினார். கதவை உள் பக்கமாக தாளிட்டுக்கொண்டு பேப்பரைப்படிக்க ஆரம்பித்தேன்.

இன்று வெள்ளிக்கிழமையும் இல்லை. பிரதோஷமும் இல்லை. சங்கட ஹர சதுர்த்தியும் இல்லை. சஷ்டியுமில்லை. பவுர்ணமியும் இல்லை. என்ன விஷயமோ தெரியாமல் இருக்கிறது. பேராசிரியை கோவிலுக்குப்போவது எதனைக்கணக்கில் வைத்தோ எனக்குப்பிடிபடவில்லை. அவர்களாக சொன்னால் நன்றாக இருக்கும். நாம் எப்படி இதனையெல்லாம் கேட்கவாமுடியும்.

தினமணி நாளிதழை எடுத்துக்கொண்டு புறட்டினேன். ஒரு பத்து விஷயங்கள் எனக்கு வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து பத்துபேர் பலி கடலூர் அருகே பரிதாபம்,காஷ்மீரில் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தோடு மோதல்.சென்னையில் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருக்கலாம். தமிழ் நாட்டு நதிகள் இணைக்கப்படவேண்டும். காவிரிப்படுகையில்  எண்ணெய் வளம். தமிநாட்டில் மின்வெட்டு கணிசமாக இருக்கவாய்ப்பு.  ரயில்வேயில் தனியார்களின் கை இனி  ஓங்கும். சமையல்  காஸ் சிலிண்டர்களின் விலை உயரக்கூடும். வட நாட்டவர்களின்  ஆதிக்கத்தில் சென்னை ஹோட்டல் தொழில். சென்னைப் பள்ளி ஆசிரியை கொலை. மாணவனின் வெறிச்செயல். இந்த செய்திகளை எல்லாம் பென்சிலால் அடிக்கோடு போட்டு வைத்திருந்தேன். என்ணியும் பார்த்தேன். பத்து செய்திகள். மீண்டும் ஒரு முறை எல்லா செய்தியையும் படித்து பார்த்துக்கொண்டேன். பேராசிரியை வந்தால்  இவைகளச்சொல்லவேண்டியதுதான். நான் தயார். பாசுபதேசுரர் ஆலயமணி நன்றாகக்கேட்கிறது. இந்நேரம் பூஜை தீப ஆராதனை நடைபெறலாம்.வீட்டில் உட்கார்ந்திருக்க சற்று அச்சமாகவும் இருந்தது. யாரேனும் வந்து கதவைத்தட்டினால் அழைப்பு மணி அடித்தால் என்ன செய்வது.  கதவைத் திறக்கவேண்டாம் என்று நமக்குச்சொல்லிவிட்டுத்தான் பேராசிரியர் சென்றிருக்கிறார்கள். யாரும் வரவில்லையே.

இந்நேரம் பேராசிரியை வீடு திரும்பிக்கொண்டிருக்கலாம். வாயிலில் செறுப்பு சத்தம் கேட்கிறது. அழைப்பு மணியை அடித்தார்கள்.

‘யாரது’

‘நான் தான் கதவைத்திற’ பேராசிரியையின் குரலேதான். நான் கதவைத்திறந்தேன்.

அப்பாவும் பேராசிரியையும் வாயிலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

‘உள்ள வாங்க’

அப்பாவை பேராசிரியை அழைத்தார்.

எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அப்பா வருவார் என்று நான் நினைத்துக்கூடப்பார்க்கவில்லை.

அப்பா வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

‘வேதா என்ன செய்திகளை நீ படிச்சே சொல்லு’

பேராசிரியை என்னைக்கேட்டார். நான் அடிக்கோடு போட்டு வைத்திருந்த பத்து செய்திகளை ஒவ்வொன்றாகப்படித்தேன். அப்பா ஆச்சரியமாக என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார்.

‘ சரியா படிச்சிருக்கே.  நல்லா செஞ்சிருக்க’’ பேராசிரியை என்னைப்பார்த்துச்சொன்னார். அப்பாவிடம்  திரும்பினார்..

‘இப்படியே கொஞ்சநாள் பயிற்சி கொடுத்தா ஒண்ணும் பிரச்சனையே இல்லை. உங்க பொண்ண   மேற்கொண்டு  விஷயங்கள்  எல்லாம் தெரிஞ்சிக்க  வச்சுடலாம்’  பளிச்சென்று பேசினார்.

அப்பா  இன்னும்  பேந்த பேந்த விழித்துக்கொண்டுதான் இருந்தார்.

‘’

அப்பாவுக்கு முகம் பிரகாசமாயிற்று.

’இது உங்கள்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். பாப்பாக்கு  படிக்க ஆசை இருக்கு.  அது படிக்கணும்.  படிக்கும்.   விடாம என்னண்ட வந்தா போதும்.  மத்தத     நா பாத்துகறேன். நீங்க பாப்பவுக்கு படிக்கறதுல  ஒத்தாசையா இருக்கணும்.  எப்பவும் துணையா இருக்கணும் அவ்வளவுதான்’

‘ நா இங்கயே இருப்பனா இல்ல வேற எங்கனா இதே  வேலக்கி  இல்ல வேற  எதனா ஒரு வேலக்கி போயிடுவேனா தெரியல. எதுவுமே நெலயில்லாம இருக்கு எதுவும் சொல்ற மாதிரியும் இல்ல’

அப்பா சொல்லிக்கொண்டார்.

‘ இந்த ஒரு கொழந்ததான உங்களுக்கு,   அப்புறமென்ன.  பாப்பம்.  நாம நல்லதே நெனப்போம்’ பேராசிரியை முடித்துக்கொண்டார். நானும் அப்பாவும் வீட்டுக்குக்கிளம்பினோம்.

‘உனக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம்னு இப்பத்தான் தெரிஞ்சிண்டேன்’

‘இப்பவானு தெரிஞ்சிதே’

‘கோவில்ல ப்ரொபசர் என்னபண்ணினா தெரியுமோ’

‘அத நீதான் சொல்லணும்’

‘ நாந்தான் சொல்லணும்’

‘தேவாரம் எதுவும் பாடி இருப்பா’

‘அதான் இல்ல’

‘தென்ன விளக்கமாத்த எடுத்துண்டு’

‘இதென்ன விபரீதமா’

‘ஒண்ணும் விபரீதமில்ல. சுத்தமா  கோவில்  பிரகாரத்த பெருக்கி குப்பய அள்ளி ஓரமா இருக்கற குழில போட்டா. கைகால் அலம்பிண்டு விபூதி வாங்கிண்டா.  கெளம்பிட்டா.’

சுப்புணி என்ன செய்தார். அவர் அலட்டிக்கொள்ளவேயில்லை.

‘இது என்னடா விபரீதம்’

‘சுப்பிணிய விளக்கமாத்த  நீ வாங்கி கூட்டேன்னு சொன்னேன்’

‘அவுங்க மாசம் ஒரு வெட்டு கோவில் பிரகாரத்த கூட்டுவாங்க. இண்ணைக்கு ஒண்ணும் புதுசு இல்ல’ எனக்குப்பதில் சொல்லிவிட்டு அவன் வேலையைத்தான் அவன் பார்த்தான்.

‘இதெல்லாம் நான் செய்யறேன் நீங்க செய்யவேண்டாம்’

அவர்களிடம் பணிவாகச்சொன்னேன். எனக்கு என்னமோ போல் இருந்தது.

‘இதுல ஒண்ணும் இல்ல. ஆண்டவன் புழங்குற எடம். கோவில்  இது சுத்தமா இருக்குணும் அவ்வளவுதான். சின்னவங்க பெரியவங்க இதுல எல்லாமா இருக்கு.  அவுங்க அவுங்க குணத்துலதான் இருக்கு’

எனக்குச்சொன்னார் ப்ரொபசர். நான் வாயே திறக்கல. அப்படியே நின்னேன். அந்த அம்மாவைப் புரிந்துகொள்ளறதுன்னா  அது  முடியாமல் இருக்கு. அவுங்க படிப்பென்ன உத்யோகம் என்ன நினைச்சி  நினச்சி பார்த்தேன்’ அப்பா என்னிடம் சொல்லி சொல்லி சமாதானம் செய்துகொண்டார்.

‘கோவில் நடை சாத்தறது பூட்டறது எல்லாம் யார் நீ அம்மாவோட வந்துட்ட’

அப்பாவிடம்கேட்டேன்.

‘சுப்புணிகிட்ட சொல்லிட்டேன். எல்லாம் சரியா செய்வான். சாவிய ஆத்துல அம்மாண்ட குடுத்துடுன்னு சொல்லிட்டு நா அம்மாவோட வந்தேன். எனக்கு அப்படித்தோணித்தே’

எனக்கு மனம் சமாதானம் ஆகியது. சாமி இரவு உணவு முடித்து புத்தகங்கள் எதனையோ வைத்து நோட்டு ஒன்றோடு சரிபார்த்துக்கொண்டு இருந்தான்.

நான் அப்பா அம்மாவோடு இரவு உணவு முடித்துப்படுத்துக்கொண்டேன்.

அப்பாவும் அம்மாவும் பேராசிரியர் கோவிலுக்குவந்து கூட்டிச்சுத்தம் செய்தது பற்றி ஏதோ பேசிக்கொண்டே இருந்தனர்.  அப்பா பேராசிரியர் வீட்டுக்குத்தான் போய் வந்ததைச்சொல்லிக்கொண்டார்.

‘சுப்புணி  கோவில் சாவிய என்னிடம்  குடுத்துவிட்டு  நீங்க அந்த அம்மாவோட போன அந்தவிஷயம் என்னிடம்  சொல்லிவிட்டுத்தான்போனார்.’ அம்மா சொல்லிக்கொண்டாள்.

சாமியும் நானும் அவர்கள் பேசுவதையே கவனித்துக்கொண்டு இருந்தோம். நான்  அப்படியே  அயர்ந்து தூங்கிப்போனேன்.

 

 

மறுநாள் காலை. ஆறுமணி இருக்கும் படுக்கையைவிட்டு எழுந்திரிக்கும் சமயம் பார்த்தால் வீட்டில் சித்தப்பா  சென்னையிலிருந்து வந்திருக்கிறார். அவரோடு வேறு ஒரு  நபர் வந்திருக்கிறார். சிறுவயது. குடுமி வைத்துகொண்டமாதிரியும் இருக்கிறது குடுமி வைத்துக்கொள்ளாதமாதிரியும் தெரிகிறது. அவரும்  ஒரு குருக்களாகத்தான் இருக்க வேண்டும். திருமணம் ஆனமாதிரிக்குத்தெரியவில்லை. முகத்தில்  இன்னும் அந்த குழந்தைத்தனம் பார்க்கமுடிகிறது. சித்தப்பாவும்  முழுக்கை சட்டைபோட்டிருக்கிறார். அந்தப்பையனும் முழுக்கை சட்டைதான்.

‘வாங்கோ சித்தப்பா’

‘பாரு என் ஆத்துல இருக்கே என்ன கூப்பிடறே’

;ஆரு ஆத்துல இருந்தா என்ன சித்தப்பா நீங்க வரேள் வாங்கன்னு சொல்லணுமா வேண்டாமா’

‘ என்னடி  சமத்து பொண்ணு எப்பிடி இருக்கே’

‘நல்லா இருக்கேன்’.

’எப்பிடி  உனக்கு பொழுது போயிண்டிருக்கு’

‘நல்லா போறது. நீங்க எப்ப வந்தேள்’

‘ஒரு அஞ்சி மணி இருக்கும். நா வரும்போது’

‘பாட்டி உடம்பு எப்பிடி இருக்கா. சித்தி சவுக்கியமா இருக்காங்களா’

‘பாட்டி உடம்பு அப்படியேதான் இருக்கு. வைத்தியம் பாக்கறம். ஒண்ணும் முன்னேற்றமா இல்ல. பகவான் கந்த கோட்டத்து முருகன் கண்ண தொறக்கணும்’

சாமி படுக்கையை உதறி இப்போதுதான் எழுந்தான்.

‘அப்பா’ என்று  ஒரு சத்தம் போட்டான்.தனது தந்தையை வந்து கட்டிப்பிடித்துக்கொண்டான்.

‘எப்ப வந்த நீ. இந்த ஊரே மறந்து போச்சா என்ன தெரியறதா’

‘ எப்பிடிடா  இதெல்லாம்  எனக்கு  மறக்கும் நீ இங்கதான  நம்மாத்துல இருக்க’

‘அம்மா  உன்னோட வந்துருக்காளா’

‘வல்லடா.  அவ பாட்டியோட இருக்கணுமே. அதான் வரல’

‘அம்மா வருவான்னு நெனச்சேன்’

‘அவ எங்க வர்ரது சொல்லு’

‘எனக்கு அம்மாவ பாக்கணும்னு அம்மா ஞாபகமாக  இருக்கு’

‘ உனக்கு லீவு இருக்கா சொல்லு. நா இப்பவே  கூட்டிண்டு போறன்’

‘நெஜமா’

‘நெஜமா’

‘நா பாத்து சொல்றன். என்ன கூட்டிண்டு போகணும் என்ன’

சித்தப்பாவோடு கூட வந்த நபரையே சாமி பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘இவன்தான் சாமிநாதன் சாமின்னு கூப்பிடறது. என் புள்ள’

‘சொல்லணுமா பாத்தாலே தெரியர்து. உங்க மொக  ஜாட’

‘இவனுக்கு எங்கம்மா மொக ஜாட,’ சித்தப்பா சொல்லிக்கொண்டார்.

‘இந்த பொண்ணு என் அண்ணன் பொண்ணு இப்பத்தான் இங்க வந்துருக்கா. இது நாள்வரை தருமங்குடின்னு பக்கத்துல ஒரு கிராமம். இவாள் எல்லாம் அங்கிருந்தா’  சித்தப்பா சொல்லிக்கொண்டார்.

நானும் வந்திருக்கும் புதிய மனிதரை ஒருமுறைபார்த்துக்கொண்டேன். மாநிறமாகைருந்தார்.  தலைமுடி கிராப்பும் இல்லை குடுமியும் இல்லை.ரெண்டுங்கெட்டானாய் . காதில் கடுக்கன்

‘இது யாரு’ சாமிகேட்டான்.

‘இவர் நமக்கு ரொம்ப வேண்டியவர்.சென்னையிலதான் இருக்கார்.’

‘சென்னையிலதான்னா’

‘தாத்தா மொற  கோவில்ல அப்பப்ப பூஜைக்கு இவரும்  வருவார். தாத்தாக்கு முடியலன்னா இவரை கட்டாயம்  கூட்டிண்டு போவார்’

‘இவரும் குருக்கள்தான்’

‘ஆமாம்’

‘பேரு’

‘கபாலி’

‘கூப்பிடறது’

‘கபாலிதான்’

‘அப்ப கபாலி மாமான்னு கூபிடலாம்’

அந்தக்கபாலி சிரித்துக்கொண்டார்.

அம்மா எல்லோருக்கும் காபி கலந்துகொண்டு கொடுத்தார். சித்தப்பாவும் கபாலி மாமாவும் காபி சாப்பிட்டனர்.

‘எப்பிடி இருக்கா மாமியார்’

‘ ஏதோ போயிண்டிருக்கு’

‘டாக்டர் என்ன சொல்றார்’

‘முட்டில தேய்மானம். நடக்க சிரமம்.’

‘எதோ வைத்தியம் எல்லாம் வந்திருக்குன்னு சொல்றா’

‘ எந்த ஆராய்ச்சி  வந்துதான்  என்ன, நமக்கு  ஒடம்புல தெம்பு இருக்கணும். மனசுல  தகிர்யம் இருக்கணும்  செய்றதுக்கு மனுஷா இருக்கணும்   காசு கையில நெறய நெறய இருக்கணும்’

‘சரியா சொன்னேள்’

‘அப்பா எங்கம்மா’

‘ அப்பா மார்கெட்டுக்கு போயிருக்க.’

‘அப்படின்னா’

‘செதம்பரம் போயிருக்கா. அங்கதான் மார்கெட் இருக்கு’

‘அது எதுக்கு’

‘கறிகாய் இலை பழம் பூ எல்லாம் அங்கதான் சித்த மலிவா கெடக்கும். பச்சையாவும் இருக்கும்  அதான் காலம் காத்தாலயே போயிட்டு வர்ரேன்னு போயிட்டார்’

‘இதுவரைக்கும் அங்க எல்லாம்  போகல’

‘ தேவ இல்லாம இருந்துது.  அதான் போகல.  இண்ணைக்கு சித்தப்பா வந்திருக்கார் அதான்.

சாமி தனது தந்தையோடு பேசிக்கொண்டே இருந்தான். தனது புத்தகங்களை நோட்டுக்களையெல்லாம் எடுத்து ஒவ்வொன்றாய்க்காட்டினான். அவன் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் சொன்னான்.

அவன் தந்தை அவன்சொவதை எல்லாம் கவனமாகக்கேட்டுக்கொண்டார்.

‘இத எல்லாம் அம்மாகிட்டயும் சொல்லுப்பா’

‘ கண்டிப்பா சொல்வேன்’

‘இண்ணைக்கு ஸ்கூல் உண்டா’

‘இண்ணைக்கு எனக்கு லீவு. சனிக்கிழமை. எதானு ஒரு சனிக்கிழமை லீவும்பா’

நான் அம்மாவோடு பேசிக்கொண்டே  சமையல்  அறையில் எதாவது வேலைபாக்கியிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன்.

‘காய் என்ன வாங்கிண்டு வர்ரார்னு பாக்கணும்’

‘அப்பா இப்ப வந்துடுவாரா, கோவில் நைவேத்யம் ரெடியா’

‘மகாநிவேத்யம் ரெடிதான்’

‘அப்பா வந்துட்டார்னு நெனக்கிறேன்.’

அப்பா பை நிறைய எதோ வாங்கிகொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்தார்.

‘டீ இதுல என்ன இருக்கு பாரு’

அம்மா பையை என்னிடம் கொடுத்தார். சமையல் அறையில் இருந்த முறம் ஒன்றில் அனைத்தையும் கொட்டிப்பார்த்தேன். கத்தரிக்காய் வெண்டைக்காய் பரங்கிக்காய் சுண்டைக்காய் பச்சமிளகாய்  மாங்காய் தக்காளி கறிவேப்பிலை என எல்லாம் பச்சைப்பசேல் என்று இருந்தது. மார்கெட் சென்று காய்கறி வாங்கிவருவதன் காரணம் தெரிந்தது.

‘பரங்கியும் கத்தரியும் எடுத்துகறேன் ஒண்ணு சாம்பார் ஒண்ணு பொறியல்’

‘ சின்ன மாங்காய நறுக்கிகோ சமையல் நிமிஷத்துல ஆயிடும். அப்பா பூஜைக்கு போயிட்டு வந்தா எல போட்டு பரிமாறலாம்’

‘சரிம்மா’ அடுப்படி காரியத்தை நானும் அம்மாவும் பார்த்துக்கொண்டோம்.

அப்பா ஸ்நானம் செய்வதற்காகத்தோட்டத்துப்பக்கம் போனார். அங்கிருந்த வாழைமரத்திலிருந்து ஒரு இலையைப்பறித்து அதனை நான்கு பேர் சாப்பிடும்படிக்குப்பங்கீடு செய்தார்.

மடி வேட்டியைக்கட்டிக்கொண்டு புறப்பட்டார். நேற்றியில் விபூதி பளிச்சென்று இருந்தது. சித்தப்பாவும் கபாலி குருக்களும் தோட்டத்துப்பக்கம் சென்றனர். கிணற்றில் நீர் சேந்தி குளித்து முடித்தனர்.

இருவருக்கும் புது வேஷ்டி துண்டு அப்பா எடுத்துவந்து கொடுத்தார்.

  புதுசு இது எதுக்கு’

‘ இல்லடா கோவிலுக்கு வருவ. மடியா இருக்கவேண்டாமா.  புது வேஷ்டி. ஜலம் தெளிச்சி குடுத்துருக்கேன்.  புதுச  மடியாக்கிட்டேன். ஈரமாக்கி ஒலத்தி கட்டிண்டா சரியா இருக்கும். அதுக்கு எல்லாம்  நேரமில்லே. கபாலியும் உன்னோட வருவார். கோவிலுக்கு பாஷாண்டி மாதிரி போமுடியுமா. தப்பில்லையா. ஸ்வாமி தரிசனம் பண்ணாத்துக்கு கோவிலுக்கு எதுக்கு போணும் வரணு’

‘ கண்டிப்பா நானும் வரேன் கோவில பாத்து எவ்வளவு நாள் ஆச்சு’

‘ வா போகலாம், அவரும் வராரா’

‘பேஷா.  கபாலி  நம்ம கோவில  பாக்கவேண்டாமா’

மூவரும் நியம நிஷ்டையாய் திரு நீறு அணிந்துகொண்டு  பாசுபதேசுரர் கோவிலை நோக்கிப்புறப்பட்டனர்.

‘அண்ணா தம்பி அவாளுக்குள்ள பேசிக்க விஷயம்  எதானு நெறய இருக்கும்’

அம்மா என்னிடம் மெதுவாகச்சொன்னாள்.

சாமியை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். அவன் எதோ தன் வேலையில் மும்முரமாக இருந்தான்.

‘சுப்புணி எப்படி இருக்கான்’

‘நன்னா’ அப்பா பதில் சொன்னார்.

சொல்லி வாய்மூடவில்லை. சுப்புணி எதிரே வந்து கொண்டிருந்தார்.

‘ வாங்க அய்யா’

‘என்ன சுப்புணி எப்படி இருக்கே’

‘ நல்லா இருக்கன் . உங்களுக்குதான் ஊரு மறந்து போச்சுது’

‘ மறக்குமா சுப்புணி’

சுப்புணி சன்னமாய் சிரித்தான்.

‘புதுசா ஒரு அய்யா வந்திருக்காரு’

‘ இவுரு கபாலி. எங்களாட்டம்  குருக்கள்தான். நா கூட்டிகிட்டுவந்தன். சென்னையில என் மாமானாரோட பூசைக்கு கூட மாட  வருவாரு போவாரு. செறு பையன். இன்னும் கல்யாணம் ஆகல’

‘ அப்ப ரைட்டு’

‘என்ன நீ சொல்ற’

  என் கணக்கு ரைட்டுன்றன்’

‘ என்ன உன் கணக்கு’

‘ என்னுமோ ஒரு  கணக்கு. முட்டாப்பய கணக்கு’

‘ என்னண்ணா ஒனக்கு எதா புரியர்தா’

‘ நா என்னத்த கண்டேன்’

‘ சாமிக்கு உங்க சூடிக்க வராது’ சுப்பிணி சொல்லிக்கொண்டான்.

அப்பா கோவில்  அபிஷேகம் அலங்காரம் பூஜை எல்லாவற்றையும் முடித்தார். கபாலி அப்பா கூடவே பூஜைக்கு ஒத்தாசையாய் இருந்தார். ஒவ்வொரு சந்நிதியிலும் ஒரு ஸ்லோகம் ஒரு தேவாரம் வாய்விட்டு சொன்னார். அப்பாவுக்கு ஒரே ஆச்சரியம் இப்படிக்கூடவா ஒரு குருக்கள் இருப்பார்.

‘கபாலி ரொம்ப தெரிஞ்ச மனுஷனா இருக்கார்’

‘ எல்லாம் என் மாமானார் வளர்ப்பு’ கோவிலுக்கு சேவார்த்திகள் ஓரிருவர் வந்து உடன் புறப்பட்டுச்சென்றார்கள்.

கபாலி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்.

சுப்புணியை அழைத்த சித்தப்பா,

‘ கோவிலபூட்டி சாவிய எடுத்துகோ. புது அய்யா வந்துருக்காருல்ல அவர இங்க அங்கனு அழச்சிகிட்டு போயி அத இத காட்டு.  அப்பறமா வீட்டுக்கு  இட்டுகிணு வந்துடு. நானும் அண்ணனும்  அரச மரத்தடியில ரவ குந்தி பேசிட்டு  வீட்டுக்கு வரம்’

‘ரொம்ப சரி’

கபாலி சிரித்துக்கொண்டே சுப்பிணியோடு புறப்பட்டான். கோவில் நடை சாத்தியாயிற்று, சாவியை அப்பாவிடம் கொடுத்தான் சுப்புணி.

‘ நாம அந்த காலேஜு இந்த  காலேஜு லைப்ரரினுட்டு ஒரு ரவுண்ட் வருவம்’

‘’ ஒரு சுத்து சுத்திட்டு வீட்டுக்கு வந்துடுங்க’ என்றார் அப்பா.

 இருவரும் சிமெண்ட் பலகையில் அமர்ந்துகொண்டார்கள்.

‘அதுக்குள்ள சுர்ருனு சூடு ஏறுது’

‘சிமெண்ட் பலகன்னா சூடு டக்குன்னு ஏறும்’

‘ சரிடா கந்தசாமி  விஷயத்துக்குவா. உன் சமாசாரம் சொல்லு. வீட்டுல இப்பிடி பேசமுடியாது’ தம்பியைப்பார்த்து சொன்னார் அண்ணா.

‘ அண்ணா நா சொல்றத கேட்டுக்கோ. நா  எம் பொழப்ப மெட்ராஸ்ல ஓட்டிண்டு இருக்கன். அங்க என் மாமனார் வீடு. மாமி படுத்த படுக்கை. மாமா படுத்துக்கல. அவராலயும் முடியல. நாதான் அவர்  கோவில் மொறய பாத்துண்டு வரன். நீ  பாட்டுக்கு இங்க இரு. நா எப்ப வருவேன்னு  ஒன்னண்ட சொல்றது. இப்பக்கி சொல்றமாதிரி இல்லேன்னு வச்சிகோ. அது உனக்கும் சவுகரியம்னுதான் தோண்ர்றது’

‘ரைட்டா சொல்லிட்ட. என் பொழப்புக்கு வேற வேல தேடணுமேங்கற கவல இப்பக்கி இல்ல. அது பகவான் செயல் அவன் செய்ற ஒத்தாசை’

‘இந்த கபாலிதான் என் மாமாவுக்கு கூட மாட போயி வந்துண்டு இருக்கான். எல்லா நேம நிஷ்டயும் அத்துப்படி. பஞ்சமூர்த்தக்கு  பூஜை பண்றது கரகண்டவன். வேதம் எல்லாம் அவனே படிச்சியும் இருக்கான். ஆகமம் பூரா கரச்சி குடிச்சி இருக்கான் இவன் இல்லாம மெட்ராஸ்ல அந்த சுத்துபட்டுல  ஒரு யாகம் இல்ல. கும்பாபிஷேகம் இல்ல.’

‘இவன் யாருன்னு சொல்லு’

‘கபாலி’

‘கபாலி பேருன்னா. அவன் தான் யாரு’

‘ என் மாமாண்ட இருக்கான். அவ்வளவுதான்’

‘அவன் அம்மா அப்பா உறவு வளந்தது படிச்சது எதுவும் சொல்லல’

‘எதுவும் இல்ல’

‘உன் மாமா என்ன சொல்றார்’

‘அவன்  என்ன தெரிஞ்சி வச்சிண்டு இருக்கான். எப்பிடி தன்ன நடத்திக்கறான்னு பாரு அதோடு விடு’

‘அதுக்கு மேல’

‘பகவான்னு என் மாமா சொல்வார்.’

‘’இப்ப சுத்தி வளச்சி என்ன சொல்ல வர நீ’

‘நம்ம வேதாவுக்கு இந்த பையன  பாக்கலாமா என்ன’

 அப்பாவுக்கு பகீர் என்றது. இத்தனை எளிதாக இந்தக்கேள்வி  அவர் முன்அவிழ்ந்துகொண்டுவிடும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லையே.

‘ பையனுக்கு பூணல் போட்டாச்சா’

‘ நீ பாக்கலயா’

‘பாத்தேன் போட்டுண்டு இருக்கான் யார் போட்டா அது’

‘ என் மாமானார்தான் ஏற்பாடுன்னு அவரே சொன்னார்’ சித்தப்பா பொய்தான் சொன்னார். மெய்யாக பூக்காரிதான் மைலாப்பூர் திருக்குளக்கரையில் கபாலிக்கு   புரோகிதரை வைத்து கள்ளப் பூணல் போட்டிருக்கிறாள்.

‘அப்ப பையன் யாரு’ அப்பா மீண்டும் கேள்வி வைத்தார்.

‘ உங்கிட்ட சொல்லிடறேன். மைலாப்பூர்ல சந்நிதில  ஒரு பூக்காரிண்ட வழக்கமா என் மாமனார் மால எல்லாம் சுவாமிக்கு வாங்குவார். அந்த கடைல பூ தொடுத்துண்டு இருந்த பையன் இந்த கபாலி. இவனுக்கு கோவில் பூஜை மந்திரங்கள் கேட்டு கேட்டு எல்லாம் அத்துபடி ஆயிடுத்து.

 ‘சாமி இவன ஒரு ஆளாக்கிடு.  உனக்கு ஒரு புண்யமா போவும். இவன்  ஆதிமூலம் எது ? என்னன்னு  கேக்காத. எல்லாம்அது அது அது தான்.’ பூக்காரி என் மாமனாரிடம் சொல்லியிருக்கிறாள்.

‘உனக்கும் இந்த குழந்தைக்கும் என்ன ஒறவு’ என் மாமனார்  பூக்காரியிடம் கேட்டிருக்கிறார்.

‘அது வேணாம் சாமி. என்ன வுட்டுடு. உனக்கு ஆம்பள புள்ள இல்ல. நீ கத்து இருக்குற வித்தயும் வீணாவாது. இது  நல்ல வெத..  யாரு எவுருன்னு என்ன கேட்டுடாதே.  கேட்டாலும் அதுல ஒண்ணும் தப்பு இல்ல. நீ  கேக்கவேண்டியதுதான். ஆனா நா சொல்லமாட்டன்.   எந்நேரமும் பூசையிலதான் இந்த புள்ளக்கி யோசன.     பூ கட்டும்.  தண்டமாலயும் கொண்டமாலயும் கட்டும் ஆனாலும்    கோவிலு அய்யிருவுளயே என்னா  என்னா செய்யிறாங்கன்னு ஆராயும் .  அதும் புத்தி. ஈசுபரன்  நெத்தில எழுதி போட்டுருக்கான் அப்பிடி.   நீ  வளத்து ஆளாக்குன்னு உன்ன  நா கையெடுத்து கும்புடறன். இதுக்கு மேல கேக்காத’ என்றாளாம் பூக்காரி.

அவன்தான் கபாலி. அவனுக்கு மந்திரங்கள் ஆகம பிரயோகங்கள் முறையாகச்சொல்லிச்சொல்லி  பூக்காரியிடம் இருந்த பையனை இப்போது தன் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார்.

‘உன் மாமியாருக்கு தெரியுமோ’

‘ தெரியாது’

உன் ஆம்படையாளுக்கு’

‘தெரியாது’

‘ஏண்டா’

‘கபாலிக்காவது அவன் வரலாறு தெரியுமா’

 பூக்காரி  அவன இந்த மாமாண்ட அனுப்பி வச்சிருக்கான்னு தெரியும். இந்த நிமிஷம் வரைக்கும்  கபாலி ‘என் மாமானார் ஒருவரைத்தான் அம்மா அப்பா எல்லாமாக நினைத்துக்கொண்டு இருக்கிறான்’

‘தல சுத்தறதுடா’

‘ஒண்ணும் தல சுத்தறதுக்கு இல்ல. கபாலி நல்ல பையன்  வித்த இருக்கு அவனண்ட. என் மாமானார்  ஆளாக்கின புள்ள’

‘பூக்காரி சமாச்சாரம்’

‘அத பேசினா அந்தக்கபாலி  குருக்களா பொழக்கறது எப்பிடி’

‘ சரியாத்தான் சொல்ற நீ’

‘ சந்தியாவந்தனம் மாத்யானம் பண்றான். பரிஷேசனம் பண்ணாம சாப்புட மாட்டான்’’

‘உபநயனம் எல்லாம் ஆயிடுத்துன்னு  மொதல்லயே சொன்னேனே’

’ஆயிட்துங்கற’

‘அப்பிடி அப்பிடித்தான்’

‘ தேவேன்னு வந்தா அது அதும் ஆயிடும் எப்பிடின்னு கேள்வியெல்லாம் கேக்காது’

‘இப்பதான் வேதா நாலு எழுத்து கத்துகணும்,  தான் படிக்கணும்னு ஸ்திரமா யோசனையில இருக்கா. ப்ரொபசர் ஆத்துக்கு போயிண்டு இருக்கா. அதுக்கு அபாவம் வந்துடாம இருக்கணும்’

‘உங்களுக்கு கொஞ்சம் சவுகரிமாச்சேன்னு யோசனை. என் ஆம்படையாளுக்கும் எதுவும் நா சொல்லல. நாம் ரெண்டுபேரும்தான் இப்ப பேசிக்கறம். நீ என்ன சொல்றன்னு தெரிஞ்சிண்டு அப்பறம்தான் எதுவுமே’

‘நாம பேசினது பேசினதா இருக்கட்டும். இப்பக்கி யார் கிட்டயும் எதுவும் சொல்லவேண்டாம். பகவான் என்ன வழி காட்டறான்னு பாப்பம். ஆனா எதயும் மூச். வெளில சொல்லாதே.  யாருக்கும் எதுவும் தெரியவேண்டாம் . நானும் யார் கிட்டயும்  சொல்லமாட்டேன்’

‘ஏண்டா உன் மாமனார் எதையானு மறச்சி இருக்கப்போறார். ஒருக்கால் அவரே’

‘சிவ சிவா நீ எப்பிடியெல்லாமோ யோஜிக்கற’

‘பொம்மனாட்டி விஷயத்துல மாத்திரம்  யார் சொல்றதயும் நம்பக்கூடாது. அந்த பகவானே உடம்புல பாதிய பொண்டாட்டி பார்வதிக்கு கொடுத்தார். ஆனா கங்கைன்னு ஒருத்திய மறச்சி வச்சிண்டு இருக்கறார்தானே’

‘ரொம்ப யோஜன பண்ணினா அது தப்பு’

 எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

‘மெய்ப்பொருள் காண்பது அறிவுன்னு படிச்சி இருக்கோம்தானே’ என்றார் அப்பா.

அண்ணாவும் தம்பியும் வீடு நோக்கிப்புறப்பட்டார்கள். கபாலியும் சுப்புணியும் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

சுப்புணி இப்போது எழுந்து நின்றுகொண்டான்.

’ஆமாம் உன்னப்பத்தி நா ஒண்ணுமே கேக்கல’

அப்பாதான் சுப்புணியிடம் ஆரம்பித்தார்.

‘ நா இங்க வந்து எவ்வளவோ நாள் ஆச்சி. என் கதய பாத்துகறேன். ஆனா நீ உன் காலட்சேபம் பத்தி ஒண்ணுமே கேட்டுக்கல’

‘அதுல கேக்கறதுக்கு என்ன இருக்கு. நீ யே கட்டுப்பார்’

 சித்தப்பா சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார்.

‘நானே சொல்லுணும்னு நெனச்சதுண்டு. உங்க கதயும் கஷ்டத்துலதான இருக்குது இதுல நம்ம கஷ்டத்தயும் எதுக்கு சொல்லிகிட்டுன்னு வுட்டுட்டன்’

’நாம் எல்லாரும் கஷ்டப்படுறவங்கதான். சவுகரியமா இருக்குறவங்க நம்மளோட வரமாட்டாங்க. அவுங்க வேற ஜனம்’

‘நா ஒண்டியா சோறு ஆக்கி சாப்பிட்டுட்டு இருக்கன். பொண்டாட்டி புள்ளன்னு இருந்துது. ஆனா இப்ப இல்ல. தோத்துட்டு நிக்குறன்.’

‘ஏன் என்ன ஆச்சு’

‘ வருஷம் ஓடியே போச்சி.  ஒரு நா சோறு ஏண்டி கொழ கொழன்னு இருக்கு. பாத்து பொங்கப்படாதான்னு கேட்டன். கேட்டிருக்கவேண்டாம். அதுதான் சாக்குன்னு சண்டய ஆரம்பிச்சா, நா என் வாய மூடிகிட்டன். அண்ணைக்கு ராவுலதான்   கோரப்பாயில ஒறங்கிட்டு கெடந்த  கைபுள்ள, ஒண்ணர வயசு இருக்கும். பொட்ட புள்ள  அதயும் தூக்கிகிட்டு போயே சேந்துட்டா.’

‘இது என்னா புது சேதியா இருக்கு’

‘ஆமாம் அய்யா. இந்த ஊரு ஒலகம் பூரா தேடுனன். ஆப்பிடுல. அந்த புள்ளயையும் தூக்கிகிட்டு போனவதான், இனிமேலுக்கா வரப்போறா. ஆச்சி இருவது வருஷம். எந்த ஊரு எந்த பட்ணம் போனாளோ. என்ன ஆனாளோ. பாசுபதேசுரர் சாமியண்ட நா அழுவாத நாளு இல்ல. அவுரு எங்க என்ன கண்ணு தொறந்து பாத்தாரு. கெடக்கட்டும் இந்த நாயின்னு வுட்டுட்டாரு. நா அவுரு சந்நிதில  அன்னாடம் வெளக்கு போடுறன். அவுருதான் என்ன இருட்டுல தடுமாறு நீன்னு வுட்டுட்டாரு’

 ராவுல கெளம்பி ‘போனது உனக்கு தெரியாதா’

‘தெரிஞ்சா வுடுவனா கைல கால்ல   வுழுந்தாவுது நிப்பாட்டிருப்பேனே’

‘கை புள்ளயோட போயிட்டாளோ’

’ அதான் சொன்னனே‘புள்ளய இட்டுகினு போயிட்டா. பச்ச புள்ள நா வச்சிகிட்டு என்னா பண்ணுவேன். தூக்கிகிட்டு போனவல்ரைக்கும் சரி. ஆனா என்  பாழும் மனம் கெடந்து அடிச்சிகிது. புள்ளய பாத்தாதேவுலாம்னு இருக்கும். எங்க போயி எத யாருகிட்ட   சொல்லுவ. வருஷம் பல ஓடிபோச்சி. கதய பேசுனா  காறி என்  மூஞ்சில  துப்புவான்.. இனிமேலுக்கு போன ராச்சியம் எதுவும்  திரும்பி வராது. எழுதுன எழுத்து. மாத்துற கதயில்ல.  நம்ப சாமர்த்தியத்துலயும் எதுவும் இல்ல. நாமதான் எல்லாம் சாதிச்சுடறமாதிரிக்கு தோணும். அகம்பாவம்.  அது பொய்யி.‘ஆனா ஒரு சேதி. ரெண்டு வெள்ளாடு வளத்து கிட்டு இருந்தன். சேத்தியாதோப்பு சந்தயில புடிச்சது.. பதமா வளந்துதுங்க.  கருக்கல்ல பாத்தா அதுவுள காணுல. ரெண்டு ஆட்டுக்குட்டியுமே காணுல. அவதான் கையில புடிச்சிகினு போயிட்டாளான்னு ஒரு சேதியும் தெரியில. கைபுள்ளய வச்சிகிட்டு ஆடுவுள எப்பிடி ஓட்டிகினு போயிருப்பான்னு ஒரு யோசனை. ஆடுவ கட்டியிருந்த கயிறுவ அப்படியே  மொளயில கெடக்கு. ஆட அடுத்த ஆளு தொட்டு வாங்கும்போது அவன்  சொந்தக் கயறு போட்டுட்டுதான் ஓட்டிகிட்டு போவான். இத  பலான வெஷயம் தெரிஞ்சவன் செஞ்சி இருக்கணும். பெத்த  புள்ளயே பூட்டுது. அவளே என்ன  வுட்டுட்டு  பூட்டா. அந்தக் கவுறு இருந்தா என்ன இல்லன்னா என்ன’

‘வேற ஏதனா தொடர்பு கிடர்பு இருந்துருக்குமா. ராவுல ஒரு பொம்பள கெளம்புதுன்னா எப்பிடி  ஆம்பள தொண இல்லாம. இது ஆவுற கதயில்ல. ஆட்டுகுட்டிவுளயும் காணும்ன்றயே’

‘ஆமாம் சாமி’

‘’அதுக்கு  சொந்த பந்தம் சாதி சனம் ஏதும்’

‘அந்த கழுத  கத  கோணக்கத. கோவில்ல எந்நாட்டம்  வேல செய்யிற நாயிக்கு’ எந்த பொட்டாச்சி கழுத்து நீட்டுவா. எம்மாம் நாளுன்னு பாத்தன். எந்த  பய  வருவான் எனக்கு  பொண்ணு குடுக்குவான்.  ஒரு தரம் கூளாத்தூர் மகத்துக்கு போயிருந்தன். வழக்கமா போவுறதுதான்  ஒரு பொட்டபுள்ள தண்ணிதொறயில  தருவி தருவி நின்னா. அவள  நீ  எதுக்கு  இப்புடி நிக்குறன்னு கேட்டேன் ஏதோ ஆசதான் அடிமனசுல…. .’ நீதான் என்ன  பாக்குற மழங்குற. வா கழுத என் கூடன்னா நா  ஒன் கூடயே பூனையாட்டம்  வரப்போற நாயி ‘ன்னு சொன்னா. ராட்டரில வுழுந்துபோச்சி  நமக்குன்னு  சாடுமாறிய  ஊருக்கு இட்டாந்தன். நானே அவள  பாசுபதேசுரர் சந்நிதில வச்சி தாலி கட்டுனன். கொங்குமம்  நெத்தில வச்சி இட்டுகினு வூட்டுக்கு போனன்.   ஒங்க தம்பிக்கு  ஆன கத முச்சூடும்  தெரியும்.’

சுப்புணி கண்கள் கலங்கியிருந்தன.

‘மனம் நோவுது சாமி’

‘நானும் எதயோ கிண்டி வுட்டுட்டன் போல’

‘உள்ளார இருக்குதுல்ல  அக்கினி’

‘போதும் சுப்புணி. கொறயும் பெறவு பேசிக்கலாம்’

எல்லாவற்றையும் கபாலி கேட்டுக்கொண்டே இருந்தான். ஆனால்  அவன் வாயே திறக்கவில்லை.

‘நா வறேன்’

சுப்புணி புறப்பட்டான்.

சித்தப்பா திண்ணைக்கு வந்தார். அப்பாவைப்பார்த்தார். கபாலியைப்பார்த்தார்.

‘சுப்புணி எங்க குடியிருக்கான்’

‘மால கட்டறவனுக்கு துளி வீடு இருக்கு. ஒரு ரூம் இருக்கும்  ஓடு போட்டது.  மெய்க்காவல் வீடு. அதுலதான் இருக்கான்’

‘அதுலேந்துதான் அவன் பொண்டாட்டி கெளம்பிபோனாளா’

‘ ஆமாம். அதுலேந்துதான்’

‘அவ அவ்வளவுதான். அதுல நாம என்ன பண்றதுக்கு இருக்கு. பொம்பள நெனச்சா குடும்பம். இல்லன்னா இல்ல.  ஆம்பள அவன் தேசத்துக்கு ராஜாவா கூட இருக்கலாம். ஆனா பொம்பள மனசு வச்சாதான் எல்லாம்.’

என் அம்மா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே கூடத்தில்  நின்றுகொண்டிருந்தாள்:.

‘நன்னா வக்கணையா பேசறேள்’

‘நடப்ப சொன்னேன்’

‘மன்னி அண்ணாவ விட்டுடுங்கோ’ சித்தப்பா அப்பாவுக்காகப்பரிந்து பேசினார்.

‘எல்லாரும் சாப்பிடலாம். எல போட்டுருக்கு’

நான் தீர்த்தம் எடுத்துவைத்தேன். இலை சுத்தி செய்தேன். அம்மா பரிமாற ஆரம்பித்தாள்.

சாமி மதியம் சாப்பிட பள்ளியிலிருந்து அப்போதுதான் வந்தான்.

‘நீயும் சாப்பிடு சாமி’

அம்மா சொன்னாள். அவன் வழக்கமாய் சாப்பிடும் தட்டு எடுத்துவந்து அமர்ந்துகொண்டான். நானும் அம்மாவுக்கு கூட மாட இருந்தேன்.

‘சமையல் பிரமாதம்’

சித்தப்பா சொல்லிக்கொண்டார்.

‘நேக்கு ஒண்ணும் தெரியல’

‘எனக்கு தெரியர்து’ சித்தப்பா கபாலியைப்பார்த்தார். கபாலி  புன்னகை செய்தார். அவ்வளவே’

‘சமையல் புடிச்சிருக்கா’ அம்மா கேட்டாள் கபாலியைத்தான்.

‘ரொம்ப நன்னா இருக்கு’  கபாலி பதில் சொன்னார்.

நானும் அம்மாவும் சாப்பிட்டு முடித்தோம். நான் பேராசிரியர் வீட்டுக்கு மாலை போகவேண்டும். அந்த நோட்டு புத்தகங்களை எடுத்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

சித்தப்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘என்ன படிப்பா. ப்ரொபசர் ஆத்துக்கு போறயாம் வரயாம். அந்த குண்டு மொதலியார் பொண்ணு அவ.’

‘ஆமாம் தெனம் போறேன். கத்துகறேன். எனக்கு படிக்கணும்னு ஆசை’ நான் சித்தப்பாவுக்கு சொன்னேன்.

‘அந்த ப்ரொபசர பத்தி ஒண்ணுமே தெரியல’

அம்மா சித்தப்பாவிடம் சொன்னாள்.

‘இதுல தெரியர்துக்கு என்ன இருக்கு. புருஷன் அவரும் ப்ரொபசர்தான். ஆனா இப்ப இங்க இல்ல. வெளி நாட்டுல உத்யோகம் பண்றார். கொழந்த ஒண்ணும் இருக்கறாப்புல தெரியல. அவர் போயி ரொம்ப நாளாச்சி. பெரிய எடம். யார எத கேக்கறது. அவா நம்மகிட்ட சொல்வாளா. அரச பிரசலா நா தெரிஞ்சிண்டது. மத்தபடி நல்ல மனுஷி. சுவாமி பக்தி ரொமப. நம்ப கோவில்ல தேவாரம் திருவாசகம் நன்னா பாடுவா. தமிழ் படிச்சவளாச்சே. சிரத்தை ஜாஸ்தி. ந்ம்ப கொழந்த  வேதா மேல அவளுக்கு என்னவோ பிரியம். அது  அம்பாள் அனுக்கிரகம்’

‘இது போறும்’

அம்மா சொன்னாள். அவர் சொல்லுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘ஒன் கிட்ட எதனா சொன்னாளா’ சித்தப்பா கேட்டார்.

‘படி படி அவளவுதான் சொல்லுவா’

‘’அதுவும் சரிதான்’ சித்தப்பா அப்பாவைப்பார்த்துக்கொண்டார்.

‘’கபாலி எங்க’

‘அவர் திண்ணையில இருக்கார்’

அப்பா சித்தப்பாவுக்குப்பதில் சொன்னார்.

சாமிநாதன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பினான்.

‘அதுக்குள்ள ஸ்கூல் விட்டாச்சா’

‘ஆமாம்பா இண்ணைக்கு சித்த மின்னாடி ஒரு பீரியட்  முன்னாடியே விட்டுட்டா’

‘ஏன்’

‘ஸ்கூல் வாத்தியாரெல்லாம் ஒரு கல்யாண ரிசப்ஷன்ன்னு சிதம்பரம் போறாளாம்’

‘ஸ்டாஃப் குழந்தைக்கா இருக்கும்’

‘குழந்தைக்கா கல்யாணம் பண்ணுவா என்ன அப்பா நீ’

‘பெத்தவாளுக்கு கொழந்த  கொழந்ததான் எப்பவும்’

எல்லோரும் காபி சாப்பிட்டாயிற்று. அம்மா பத்து பாத்திரங்களைத்தேய்த்துக்கொண்டு இருந்தாள்.             நான் ப்ரொபசர் வீட்டுக்குக்கிளம்பினேன். நோட்டு புத்தகங்களை டுத்துக்கொண்டேன்.சித்தப்பா நான் என்ன செய்கிறேன் என்று கவனித்துக்கொண்டே இருந்தார்.

‘நானும் ப்ரொபசர் ஆத்துக்கு வரேன்’

‘வாங்கோ உங்களுக்கு தெரிஞ்சவாதானே’

‘ஆமாம் அந்த அம்மாவோட பெற்றோர்களோட எனக்கு பழக்கம். குண்டுமுதலியார். உனக்குத்தெரியுமோ’

‘அவர் ஆத்துல ச்ரார்தம் நானும் அப்பாவோட போயிருந்தேன்’

‘அப்பிடியா  தானக்கட்டளை எடுக்க போனேளா’

‘ஆமாம்’

‘ரொம்ப சரி’

நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு கிளம்பினார். மடியில் விபூதிப்பை இருக்கிறதா என உறுதி செய்துகொண்டார்.

‘அப்பா எங்கே’ தேடினேன்.

திண்ணையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அப்பா. நானும் சித்தப்பாவும் ப்ரொபசர் வீட்டுக்கு நடந்தோம். தூரம் ஒன்றுமில்லை. ப்ரொபசர் வீட்டு முன்பாக பழைய பேப்பர் வாங்குபவன் மூன்று சக்கர சைக்கிளை நிறுத்திவிட்டு பழைய பேப்பர்களை எடைபோட்டுக்கோண்டிருந்தான்.

’எவ்வளவு பேப்பர் கொண்ணாந்தாலும் அஞ்சி கிலோதான் வருமா’

‘கண்ணுக்கு நேரா தராசு பாத்துகுங்க’

‘நானும் பாக்குறன் பழைய பேப்பர் போட்டு ஒரு அறுபது ரூபாயுக்கு மேல வந்துடும்னு ஆனா வர்ரதில்ல’

‘என்னா இருக்குதோ அதான். உங்கள ஏமாத்தி நா மெத்த வூடு  கட்டப்போறன் ஒரு நாள் முச்சூடும் சுத்தி வந்தா ஒரு அம்பது ரூவா கெடக்கும். இண்ணைக்கி  வவுத்துபாட்டுக்கு ஆவும்’

பேப்பர்காரன் கொடுத்த காசைவங்கிக்கொண்டு பேராசிரியர் எங்களைப்பார்த்தார்.

‘வாம்மா வா  அய்யாவும் வரார் போல’

சித்தப்பா புன்னகை செய்தார்.

‘சவுக்கியம்தானே’

‘ரொம்ப சவுக்கியம்.  நீங்க சென்னையிலேந்து  எப்ப வந்திங்க  உங்க மாமியார்  இப்ப எப்பிடி இருக்காங்க. உங்க வீட்டுல மாமியும் வந்துருக்காங்களா’

‘மாமியார்தான் இன்னும் சவுகரியம் இல்லாமதான் இருக்காங்க.  மூட்டு வலிதான். நடக்க  ஸ்ரமம். என் சம்சாரம் அவுங்களோடதான் இருக்கா.  சென்னை போயியும் ரொம்ப நாளாச்சி    அண்ணாமலைநகர் எப்பிடி இருக்கு  இங்க அண்ணா எப்பிடி இருக்கார்னு பாத்துட்டு போலாம்னு வந்தன்’

‘உங்க பையன் இருக்கான்’

‘அதுதான் முக்கியம் அத விட்டுட்டு வேற  எதோ எல்லாம் சொல்றன்’

முன் ஹாலில் நானும் சித்தப்பாவும் அமர்ந்துகொண்டோம்.

சித்தப்பா விபூதி பையை எடுத்துக்கொண்டார். கந்தகோட்டக்குமரன் பிரசாதம் என்றார்.

‘ஆறிருதடந்தோள் வாழ்க

 அருமுகம் வாழ்க வெற்பைக்

கூறு செய் தனிவேல் வாழ்க

குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞை வாழ்க

யானதன் அணங்கும் வாழ்க

மாறில்லா வள்ளி வாழ்க

வாழ்க சீர் அடியாரெல்லாம்.’

சொல்லிய சித்தப்பா விபூதியை எடுத்து க்கொடுத்தார்.பேராசிரியை விபூதியை வனக்கத்தோடு வாங்கி’ முருகா ’என்று சொல்லி நெற்றியில் இட்டுக்கொண்டார்.

‘கந்தபுராணம் அருளிய கச்சியப்ப சிவாச்சாரியார் பாட்டு. சிறப்பு ரொம்ப சிறப்பு’

‘ என் அண்ணன் பொண்ணு எப்பிடி இருக்கா, அத தெரிஞ்சிண்டு போலாம்னுதான் வந்தன்’

‘தமிழ்ல  ஒரு குறையுமில்ல. தமிழ் அவளுக்கு நல்லா வருது’

‘உங்க அன்புதான் இதுல பிரதானம்’

‘படிக்கணும்னு ஆசைஇருக்கு. அதுதான் எனக்கு  அவளிண்ட ரொம்ப பிடிச்ச விஷயம். மனுஷங்க படிக்கணும். மூச்சடங்குறவரைக்கும் படிக்கணும்னு  அந்த பெரியவங்க சொல்லியிருக்காங்க. திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்’

‘சொல்லுங்களேன் கொஞ்சம் விவரமா’

சித்தப்பா என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

’பாடை ஏறினும் கைவிடேல் இது தெரியும் எல்லாருக்கும்.   இந்தக் குறளும் அததான் சொல்லுது

யாதானும் நாடாமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாதவாறு

படிக்கப்படிக்க உலகமே உன்னைக்கொண்டாடும்.  ஆக இறக்கும்வரை நீ படித்துக்கொண்டே இரு.’

‘பாத்துகுகுங்க கொழந்தையை’

‘அது நல்லா வரும் வரணும்’

‘நா சென்னைக்குப்போயிடுவேன். இங்க திரும்பவும்  எப்ப வரேன்னு சொல்லமுடியல. ‘

‘எல்லாம் நல்லாவே போகும்.  யாருக்கும்  கவல வேண்டாம்’

‘எனக்கு ஒரு பையன் ஆறாம் கிளாஸ் படிக்கிறான்’

‘இங்க வந்தான்  நான் பாத்தேன்’

‘அப்பிடியா’

‘ஆமாம் வேதா கூட்டினு வந்தா. பேரு ஏதோ சொன்னான்’

‘சாமிநாதன் சாமின்னு கூப்பிடறது’

‘அவனும் நல்லா படிப்பான். நானே பாத்தேன்’

‘நீங்க கோவிலுக்கு வருவீங்க சந்நிதில பாடுவீங்க. உங்க பெற்றோர்கள எனக்கு ந்ல்லா  தெரியும். உங்க சார தெரியாது’

‘எனக்கே இன்னும் தெரிஞ்சிக்க முடியல’

பேராசிரியர் இரண்டு பிஸ்கட் ஒரு வாழைப்பழம் தட்டில் எடுத்து டீபாயில் வைத்து சித்தப்பாவை எடுத்துக்கொள்ளச்சொன்னார்.

சித்தப்பா விடைபெற்றுக்கொண்டார்.

பேராசிரியை நிறைவாக சித்தப்பாவை அனுப்பிவைத்தார்.

பாரதியார் கவிதைகள் என்னும் நூல் ஒன்று பேராசிரியரின் கையில் இருந்தது. அந்தப்புத்தகத்திலிருந்து ஒரு பாடலை எடுத்துக்கொண்டார்.. முன்னதாக கவிஞர்பற்றி  சிறிய விளக்கமும் தந்தார்.

சுப்ரமணியபாரதியார்னு ஒரு பெரிய கவிஞர் இருந்தார்.  தூத்துகுடி கிட்ட  எட்டயபுரம் அவர் ஊர்.  இந்த தேசத்தின் மீது அளவேயில்லாத  பற்றுகொண்டவர்.  ஒரு காலத்தில் இந்த நாடு வெள்ளைக்காரன்கிட்ட அடிமை நாடா இருந்தது.  நமது தலைவர்கள் ஒற்றுமையாய் இருந்து  ரொம்ப கஷ்டப்பட்டு  சுதந்திரம் வாங்கினாங்க. பாரதியாரும் அந்தப்போராட்டத்துல கலந்துகிட்டு போராடினார். ஜெயிலுக்கு போயிருக்கார். அவரோட அழகான  பாட்டு. நான் பாடறேன். கேளு.

’யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மை எல்லாம் காளி! தெய்வ லீலை அன்றோ

பூதம் அய்ந்தும் ஆனாய் காளி !பொறிகள் அய்ந்தும் ஆனாய்

போதமாகி நின்றாய் காளி! பொறியை விஞ்சி நின்றாய்

இன்பமாகிவிட்டாய் காளி!! என்னுள்ளே புகுந்தாய்

பின்பு நின்னையல்லால் காளி! பிறிது நானும் உண்டோ?

அன்பளித்துவிட்டாய் காளி! ஆண்மை தந்து விட்டாய்

துன்பம் நீக்கி விட்டாய் காளி! தொல்லை போக்கிவிட்டாய்.’

அற்புதமானபாடல். நான்  மயங்கிபோனேன். என்ன வெண்கலக்குரல். அதனில் குழைந்தோடும் இனிமை. எத்தனை முகபாவம். எதிரில் காளித்தாய் நிற்கிறாள் என்றே எண்ணினேன்.

‘இத  திரும்ப  திரும்ப படி, மனப்பாடம் செய்’

‘சரிங்க அம்மா’

பாரதியார் கவிதைப்புத்தகத்தை என்னிடம் கொடுத்து ‘ நீ இத வச்சிகோ’ என்றார் பேராசிரியர்.

‘நோட்புக் எடு . இந்த பாட்ட ஒருமுறை எழுதிப்பார். மொதல்ல பாத்து எழுது’

பேராசிரியை சொன்னபடி நான் பாட்டை ஒரு முறை படித்துப்பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. நோட்புக் திறந்து பாட்டை  ஒரு முறை எழுதிப்பார்த்தேன். பேராசிரியையிடம் நோட்டைக்கான்பித்தேன்.

‘நல்லா எழுதி இருக்கே’

நான் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன். அஞ்சலகம் முன்பாக இருந்த சிமெண்ட் பெஞ்சொன்றில் சித்தப்பா அமர்ந்திருந்தார். என்னைப்பார்த்ததும் எழுந்து வந்தார்.

  பாரதியார் பாட்டு ப்ரொபசர் பாடினது  தெருவுல ஓரமா நின்னு கேட்டுட்டுதான் இங்க வந்து ஒக்காந்தேன்.  ரொம்ப நன்னா பாடினார். இப்பிடி அம்ஞ்சது  உனக்கு ஒரு கொடுப்பினைன்னு சொல்லுணும். ப்ரொபசர கிட்ட உன்ன கொண்டு சேர்த்த பகவான நெனச்சிகிறேன்.’

நான் பதில் எதுவும் சொல்லாமல் சித்தப்பாவோடு நடந்தேன்.

இப்படி அனுசரணையுள்ள ஒரு சித்தப்பா இருப்பதுதெரியாமல்தான் இத்தனை நாளும் தருமங்குடியில் இருந்திருக்கிறோம் நினைத்துக்கொண்டேன்.

வேர்க்கடலை வறுத்த விற்பவனின் நான்கு சக்கரவண்டி அஞ்சலகம் முன்பாக நின்றுகொண்டிருந்தது. அவன் வைத்திருக்கும் ஸ்டவ்விலிருந்து ஒரே இறைச்சல். அவன் வேர்க்கடலையை சர்ரக் புர்ரக் என்று வருத்திக்கொண்டிருந்தான். வறுக்கம் கரண்டியால் வாணலியில்  ஓங்கி அடித்தான். டண் டண் டண் என்கிற ஓசை நாராசமாய் எல்லோருடைய காதிலும் விழுந்து இம்சித்தது. காலி பேப்பர் பொட்டலங்கள் ரெடிமேடாய்ச்செய்து நீட்டாக அடுக்காக வைத்திருந்தான். மாணவர்கள் வேர்க்கடலைப்பொட்டலங்களை போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினார்கள்.

‘மள்ளாட்ட வேணுமா’

‘வேண்டாம் சித்தப்பா’

‘நீ சும்மா இரு’

வேர்க்கடலை வறுத்து விற்பவனிடம் ஏதோ பேசினார்.அவனும் பவ்யமாய் பதில் சொன்னான். அனேகமாக  இந்தச்சரக்கு எந்த ஊர்லேந்து வந்தது என்று கேட்டிருக்கலாம். அனேகமாய் அதைத்தான் எல்லோரும்கேட்கிறார்கள்.

சித்தப்பா நான்கு மணிலாக்கொட்டைப்பொட்டலங்களை வாங்கி கையில் பத்திரமாக வைத்துக்கொண்டார். எங்களைப்பார்த்ததும் சாமி ஓடோடி வந்தான்.

‘அப்பா மள்ளாட்ட வாங்கினாயா’

‘ஆமாம் நீ ஓண்ண எடுத்துகோ’

‘உனக்கொண்ணு’ என்னிடம் கொடுத்தார்.

‘இன்னும் ரெண்டு’

‘ஒண்ணு கபாலிக்கு இன்னொண்ணு உங்க அம்மாவுக்கு’

‘உனக்கும் பெரியப்பாவுக்கும்’

‘ நீங்க ஆளுக்கு ஒண்ணு கொடுத்தா எங்களுக்கு அதுவே போரும்’

சாமிக்கு சித்தப்பா பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு உணவு தயார் ஆனது. அம்மா ரெடியாய்ச்செய்து வைத்திருந்தாள். அம்மாவுக்குத்தான் மிகவும்சிரமம்.

‘என்னடா ப்ரொபசர் என்ன சொல்றா’     அப்பா கேட்டார்.

‘நன்னா சொல்றா. உம்பொண்ணு  நன்னா படிப்பா. நிறய கத்துப்பா. ஆர்வம் நிறையவே இருக்குன்னு சொன்னா’

‘அதாவது சொன்னாளே’

‘ஏன் அப்படி சொல்றே’

‘பள்ளிக்கூடத்தவிட்டு நின்னு எவ்ளோ வருஷம்  ஆச்சு.  எழுத்த மறக்காம  ஞாபகத்துல வச்சிருக்கணுமே’

‘அந்த  ப்ரொபசர் அம்மாவுக்கு திருப்திதான் அது போதும். அவ படிக்கட்டும்’ சித்தப்பா சொல்லி முடித்தார்.

பேராசிரியை சொல்லிக்கொடுத்த பாரதியார் பாட்டை பத்துதடவை திரும்ப திரும்ப படித்தேன். கபாலி நான் இந்தபாட்டைப்படிப்பதை கவனித்துக்கொண்டேயிருந்தார். பாட்டு எனக்கு மனப்பாடம் ஆகியது. நிம்மதியானேன். இரவு உணவு முடித்தோம். அனைவரும் படுத்துக்கொண்டோம். சித்தப்பாவும் கபாலியும் திண்ணையில் படுத்துக்கொண்டார்கள்.

 

 அம்மா அதிகாலையில் ஸ்நானம் முடித்து அடுப்பில் நிவேத்யத்திற்கு உலைவைத்திருந்தாள். அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். சாமி தன் வீட்டுப்பாடங்களை ஒழுங்கு பண்ணிக்கொண்டு இருந்தான். கபாலி தோட்டத்துப்பக்கமாய் போய் கிணறு செடிகொடிகளை பார்த்துக்கொண்டிருந்தார். ராட்டினக்கிணற்றில் நீர் சேந்தி இரண்டு வாளி தண்ணீரை தலையில் விட்டுக்கொண்டார்.

‘இண்ணைக்கு கபாலிதான் பாசுபதேசுரர்  பூஜ’ சித்தப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.

‘சரிங்கறயா’ இது அப்பா

‘ஏன் கபாலி  கிணத்தடியில இருக்கார்  ஸ்நானம் ஆயிண்டுருக்கு, நிவேத்யம் தயார். மன்னி தோ  பண்ணிண்டு இருக்கா’

‘நாம ரெண்டு பேரும் இங்கயே இருக்கலாம். சுப்புணி  கபாலிக்கு விவரம் சொல்லுவான். ஒண்ணும்  தப்பு இல்ல அதான் ஒன் யோஜன’

‘ரைட்டா’ சித்தப்பா சொன்னார்.

ஸ்நானம் முடித்த கபாலி விபூதி இட்டுக்கொண்டார். பஞ்சபாத்திரம் சிறிய தாம்பாளம் வாங்கிக்கொண்டார். கிழக்கு பார்த்து  அமர்ந்து  ப்ராத்ஸ்சந்தி முடித்தார்.

’சுப்புணிக்கு சேதி  சொல்லணும் அவன் கோவிலுக்கு வரணும்’

‘சாமி அனுப்பி  சேதி சொல்லலாம்’

சாமியை அனுப்பி சுப்புணியைக்கோவிலுக்கு வரச்சொன்னார்கள். காலையிலேயே பூஜை என்பதும் பூஜைக்கு கபாலி குருக்கள் வருகிறார் என்பதும் சுப்புணிக்குத்தகவல் சொல்லியாயிற்று.

சுப்புணி தன் தலையில் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றிக்கொண்டு பட்டைபட்டையாய் விபூதி இட்டுக்கொண்டு  கோவிலுக்குக்கிளம்பினான். விடியற்காலையிலே

பூக்களைப்பறித்து ஐந்துமுழம் தொடுத்து தயாராக வைத்திருந்தான்.

நிவேத்ய பித்தளைத்தூக்கினை கையில் எடுத்துக்கொண்ட  கபாலி கோவில் சாவியோடு கோவிலுக்குப்புறப்பட்டார்.

‘நா பூஜய முடிச்சுட்டு வரன்’

‘பேஷா’

சித்தப்பாவிடம் சொல்லிகொண்டு கபாலி புறப்பட்டார். சுப்புணி கோவிலில் தயாராகக்காத்துகொண்டு நின்றார்.

‘வாங்க அய்யா’

‘என்ன பண்ணிருக்கே’

‘கூட்டியாச்சி சந்நிதில வெளக்கு ஏத்தியாச்சு. கொடலயில பூ பத்ரம் வச்சிருக்கேன்’

‘மால உண்டா’

‘அஞ்சி மொழம் தொடுப்பேன். நந்தியாவட்ட. ஒத்த நந்தியாவட்டைதான்’

‘பஞ்சமூர்த்திக்கும்’

‘ஆமாம்’

‘சந்தனக்கல்லு எங்க தெனம் அரைக்கணுமா’

‘சந்தன பவுடர்  டப்பில இருக்கு அத கொழப்பிகலாம்’

’ உங்க அய்யா எப்பிடி செய்வாரு’

‘அரைக்கரதும் உண்டு. சந்தன பவுடரை கொழப்பிகறதும் உண்டு.’

கபாலி  மூலஸ்தான ஸ்வாமிகளுக்கு எல்லாம் அபிஷேகம் செய்தார்.  நந்தியாவட்டை பூ மாலை புஷ்பம் கொண்டுஅலங்காரம் செய்தார்.  மறக்காமல் சந்தனப்பொட்டிட்டார். விநாயகரிலிருந்து பூஜையை ஆரம்பித்தார். சுப்புணி ஆராய்ச்சிமணியை பத்துமுறை அடித்து முடித்தான். ஓரிருவர் கோவிலுக்குள் நுழைந்து சுவாமிதரிசனம் செய்தனர்.

ப்ரொபசர் சிவகாமி கோவிலுள் நுழைந்தார்.

கபாலியின் மந்திர ஒலி திருத்தமாய் இருப்பதைக்கவனித்தார். ஒவ்வொரு சந்நிதியாய் நின்று பூஜை எப்படி நடக்கிறது என்பதைப்பார்த்தார். ஒவ்வொரு சந்நிதியிலும் கபாலி ஒரு தேவாரமோ திருவாசகமோ திருப்புகழோ அபிராமி அந்தாதியோ கந்தபுராணமோ பாடிய பிறகே அந்த பூசையை நிறைவு செய்தார். ப்ரொபசருக்கு அந்த முறை மிகவும் பிடித்திருந்தது.

’மண்ணின் நல்லவண்ணம்

வாழலாம் வைகலும்

எண்ணின் நல்லகதிக்கி

யாதுமோர் குறைவிலைக்

கண்ணின் நல்லஃதுறுங்

கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும்

பெருந்தொகை யிருந்ததே’

சொல்லிக்கொண்டே கபாலி சேவார்த்திகளுக்கு விபூதி குங்குமம் கொடுத்துக்கொண்டே போனார்.

‘அய்யா நீங்க புதுசா வந்துருக்கீங்களா’ ப்ரொபசர் கேட்டார்.

‘நான் சென்னை.  பூக்கடை. இந்தக்கோயில் குருக்களய்யா அங்க அவர் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். நா அவர் மாமா வீட்டுலதான் தங்கி இருக்கன். அங்க கந்தகோட்டம் குமரன் கோவில் பூஜைக்கு போய் வருவேன்.’

‘நீங்க பண்ற பூஜை  புது விதமா இருக்கு’

‘ உங்க மனசுக்கு புடிச்சிருக்கா’

‘புடிச்சிருக்கு அதனாலதான்  பேசறேன்’

‘பூஜ மந்திரம் சொல்றிங்க  சரி ஆனா  தமிழ்ல தெய்வப்பாடல்கள் எப்பிடி கத்துகிட்டிங்க’

‘தினம்  முத்துகுமாரசாமி  சந்நிதியில யாராவது ஒரு  சைவப்பெரியவர் வருவார். மனச அசச்சி போடுற மாதிரி ஒரு  தெய்வீகப்பாட்டை பாடிட்டு போய்டுவார். அது எனக்கு மனசுல அப்படியே நிறஞ்சிடும். அதத்தேடி புடிச்சி படிச்சிடுவேன். . பயிற்சி செய்வேன்.  பாடுவேன். தெய்வத்துக்கு முன்னாடி எல்லாருக்கும் புரிய்ற பாஷையில   பிரார்த்தனை இருக்கணும்னு ஆசைப்படுவேன். அதான்’

‘உங்கள மாதிரியே எல்லோரும் கோவில்ல பூஜ செஞ்சா நல்லா இருக்கும்’

‘விஷயங்கள் புரிஞ்சிக்காமதான் நூத்துக்கு தொண்ணூறுபேர் கோவில்ல மந்திரங்கள சொல்லிட்டு இருக்காங்க’

‘சமஸ்கிருத மந்திரத்த தமிழ் எழுத்துல அச்சடிச்சி படிச்சா அது சரியா இருக்குமா. அதுக்கு தமிழ் பாஷையிலயே அருச்சனை செய்துடலாம்.தானே’

‘என்ன சொல்றோம்னு  சொல்றவங்களுக்கே தெரியலன்னா அது நேர்மையான விஷயமா’

‘ உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா’

‘ தெரியும். நா சொல்ற  எல்லா சமஸ்கிருத மந்திரத்துக்கும்  பொருள் என்னன்னு கண்டிப்பா தெரியும்’

‘ சமஸ்கிருத மந்திரத்த அந்த  சமஸ்கிருத லிபியிலதான் படிக்கணும். இல்லன்னா தமிழ்ல அருச்சனை செய்.  தமிழ் எழுத்துல எழுதியிருக்கிறதபடி’

‘ மை நேம் இஸ் கபாலி அப்படின்னு  தமிழ் எழுத்துல எழுதி படிச்சா அது இங்கிலிஷ்  பாஷை ஆயிடுமா’

‘ஆகாது.  நீ என்ன  சொல்றன்னு  உனக்கு தெரியணும்.  நல்லா தெரிஞ்சா அந்த வடமொழியில  மந்திரம்  சொல்லு. இல்லன்னா  தமிழ்ல இருக்குற தேவாரத்த திருவாசகத்த படி அத தெய்வத்துகிட்ட சொல்லு. அதுதான் சரி’

‘செய்றத சரியா செய்றமான்னு உக்காந்து பேச விவாதிக்க எங்க ஒரு அமைப்பு தலைமை  திட்டம் எதுவுமே இல்லயே. அவன் அவன் எதுவோ உளறுனாலும் அது இங்க மந்திரமாயிடுது.  யாரு என்ன கேக்கமுடியும். இங்க  தவறுகள்  வனமா மண்டி கெடக்கு’

சுப்புணி ‘வுட்டா  ரெண்டு பேரும் பேசிகிட்டே போவாங்க போல’ என்று  குசு குசு என்று முணறினான்.

‘ நீங்க எத்தினி நாளுக்கு இங்க தங்குவீங்க’

‘இல்ல இண்ணைக்கே சென்னை பொறப்படுவம்’

‘யாரு யாரு’

‘நா இந்த கோவில் குருக்கள் கந்தசாமி ரெண்டு பேரும். ரெண்டு பேரும்தான் சென்னையிலேந்து  நேத்து வந்தம்’

‘நேத்து சாயந்திரம்  குருக்களய்யா கந்தசாமி என் வீட்டுக்கும் வந்திருந்தார். அந்த பொண்ணு வேதா, குருக்கள்வீட்டு பொண்ணு  என்கிட்ட பாடம் படிக்க வந்துருந்தா. அவளோட வந்திருந்தாரு. பேசிகிட்டு இருந்தம்’

‘என்ன பத்தி எதுவும் சொல்லல’

‘இல்லயே. இப்ப இங்க வந்துதான்  உங்கள கொஞ்சமாவது  தெரிஞ்சிகிட்டேன்’

  அவர் அண்ணன்  கோவில் பூசைக்காக  இங்க இருக்கார். அவர் குடும்பம் இருக்குது’

உங்க பேரு  நீங்க இருக்கறது’

‘பேரு கபாலி குருக்கள்.  கந்தகோட்டம் குமரன் சந்நிதி சென்னையில  பூக்கடை பக்கம்தான்’

‘நா  அங்க வந்து இருக்கன். உங்கள இப்பதான் பாக்கறன்’

‘ மகிழ்ச்சி. நா வரேங்க அய்யா’ சொல்லிய ப்ரொபசர் கோவிலிலிருந்து வெளியே வந்தார்.

சுப்புணி  கதவுகளைத் திருக்காப்பிட்டுக்கொண்டிருந்தார். கபாலி நிவேதனப் பித்தளைத்தூக்கு கையோடு வீதியில் நடக்க ஆரம்பித்தார்.

‘அய்யா   இந்தாங்க கோவில் சாவி’

கபாலி சற் று  நின்று சாவியைக்கையில் வாங்கிக்கொண்டார்.

‘அய்யா இண்ணக்கி ஊருக்கு  பொறப்படுது.  நெறய சேதிவ தெரிஞ்சிவச்சிருக்கிங்க. இப்படி யாரும் குருக்களய்யாவுல  நா பாத்துது இல்ல’.

‘ இருப்பாங்க நீ பாத்து இருக்கமாட்ட..  ஆமாம் சுப்புணி’

‘இப்புறம்   அய்யா   இங்க    எப்ப வர்ரது’

’ சுப்புணி நீங்க சென்னைக்கு வருவீங்களா’

‘என்ன ஜோலி   இருக்கு வர்ரத்துக்கு’

கபாலி சிரித்துக்கொண்டார்.

இருவரும்    வீதியில்  பொடி நடை நடந்தனர்.  தாய்ப்பூனை ஒன்று தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வீதி ஓரமாக ஜாக்கிரதையாய்ச் சென்றது.  வீதி நாயொன்று அந்தப்பூனையை கறுவிக்கொண்டே பின் சென்றது. பூனை நாயை சட்டை செய்யவே இல்லை. பூனைக்கு கர்வம் அதிகம்தான்.

கபாலி ப்ரொபசர் அம்மாவைப்பற்றி யோசித்துக்கொண்டே நடந்தார். எல்லாம்  கந்தகோட்டத்து வேதவனேச குருக்கள் போட்ட பிச்சை என்று சொல்லிக்கொண்டார்.

 

அப்பாவும் சித்தப்பாவும் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். தர்மகர்த்தாப்பார்த்து பேசிவிட்டு வந்துவிடவேண்டும். அதுதான் சரியாகவும் இருக்கும்.

‘நீ இண்ணைக்கே கெளம்பறதானே’

‘ஆமாம் நான் போக வேண்டியதுதான்.  தர்மகர்த்தாவ ஒரு எட்டு பாத்துட்டு வந்துட்டா தேவலாம்னு தோணறது’

‘ரொம்ப சரிடா அப்படித்தான் செய்யணும். எதுலயும் ஒரு மொற இருக்கணும்’

‘நாம பொறப்படுவோம்’

‘கபாலியை அழச்சிண்டு போவோமா’

‘பேஷா’

எதிரே கபாலி வந்துகொண்டிருந்தார்.

நிவேதனத்தூக்கைத்திண்ணையில் வைத்துவிட்டு’ கால சந்தி  பூஜை முடிந்தது.’

என்றார்.

‘எதாவது விசேஷம்’

‘கோவில் சிறப்பா இருக்கு. அம்பாள்சந்நிதி ரொம்ப அமர்க்களமா இருக்கு’

‘எங்கயும் இருக்கறதுதான்’

‘யாரனு புது மனுஷா வந்திருந்தாளா’

‘தமிழ் ப்ரொபசர் வந்திருந்தாங்க. பேசினாங்க. ரொம்ப ஆன்மிக விஷயங்கள்ள அக்கறையோடு இருக்காங்க’

‘பேஷ் உமக்கு அதுஷ்டம்னு சொல்லணும்’ என்றார் சித்தப்பா.

‘என்ன சாரீரம். ஒரு தேவாரம் சொன்னா கணீர்னு பகவான் நேரா நிப்பான் போல’

‘பொம்மனாட்டில இப்படி இருக்கறது ரொம்ப அபூர்வம்’

‘ஒரு ப்ரொபசர்,  ஆன்மிகத்துல எவ்வளவு அக்கறயா இருக்காங்கன்னு பாத்தேன்’

‘நேத்து அவுங்க ஆத்துக்கு போயிட்டு வந்தன். கொழந்த தமிழ் கத்துக்க போனாளா அவளோடயே போனேன். அந்த அம்மாவோட பேசிண்டு இருந்தேன். ரொம்ப திருப்தியா இருந்துது’

‘ நீனும் கபாலியும் முன்ன போங்கோ, நா பின்னாடியே வந்துடறன்’

‘ஏன்’

‘நானும் வர்ரதா மாமா’

‘ கபாலி நீ வரணும். தர்மகர்த்தாவ பாக்கறது நல்லதுதான்’

‘அப்ப வறேன்’ கபாலி ஆமோதித்தார்.

‘மூணு பேரா போவேணாம்னு பாக்கறன்’

அப்பா சித்தப்பாவிடம் சொன்னார்.

‘நாங்க ரெண்டு பேரும் மின்ன போறம். நீ பின்னால வா. மூணு முட்டன்னு சொல்லுவா’ சித்தப்பா சொல்லிவிட்டு சிரித்தார்.

‘லோகத்துக்கு சிலத பாக்கணும். நமக்குன்னு இல்லன்னாலும்’

சித்தப்பாவும் கபாலியும் தர்மகர்த்தா வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்

அப்பா திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார். அவர்கள் இந்நேரம் பாதிவழி போயிருக்கலாம் என்பதாய் ஊகித்து அப்பாவும் தர்மகர்த்தா வீடு நோக்கிப்புறப்பட்டார்.

‘ டீ நானும் போயிட்டு வரேன்’ அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

‘ஆகட்டும்’ அம்மா சொன்னாள்.

நானும் அம்மாவும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டோம். இப்படிப்பெண்கள் திண்ணையில் உட்காருவது அரிதுதான்.

‘ இதுகள் இண்ணைக்கு புறப்படறதா’

‘யாரை சொல்ற’

‘உன் சித்தப்பாவையும் அந்த புள்ளயாண்டானையும்தான் சொல்றன்’

‘ அவா கெளபறா’

‘ அந்த பையன எதுக்கு கூட்டிண்டு வந்தார் சித்தப்பா’

‘சும்மா இருக்கட்டுமேன்னு , கூட வரட்டுமேன்னு இருக்கலாம்’

‘நல்ல பையனாதான் தெரியறான்’

நான் எதுவும் பேசாமல் இருந்தேன்.

‘ஏன் ஒண்ணுமே சொல்லமாட்டேங்கற’

‘நான் என்ன சொல்லணும்’

‘ நல்ல பையனா இல்லயா’

’உனக்கு எப்பிடி படறதோ அதுதான் எனக்கும்’

‘அது சரி’ என்றாள் அம்மா. ஒருமுறை சிரித்துக்கொண்டாள்.

’பாப்பம்’

‘எத சொல்ற’

‘பகவான் அபிப்ராயம் என்னவோ’

அம்மா சொல்லிக்கொண்டாள்.

அம்மா என்ன நினைக்கிறாள் என்பது தெரியாமல் இல்லை.

சித்தப்பவும் கபாலியும் தர்மகர்த்தா வீடு வந்து சேர்ந்தார்கள். தர்மகர்த்தா ஒரு நாற்காலி போட்டு வீடு வாசலில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக ஒரு நீள மர பெஞ்சொன்று கிடந்தது. கையில் ஒரு பனை விசிறிமட்டை வைத்திருந்தார். அதனை இப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டே இருந்தார்.

‘வாரும் குருக்களே  நமஸ்காரம்

‘நமஸ்காரம் பெரியவாளுக்கு’

‘ சவுக்கியம் எல்லாம் எப்பிடி’

‘இருக்கோம். சென்னையிலதான் இப்பக்கி. இன்னும் இது எவ்வளவு நாள் போகணுமோ’

‘ உங்க மாமியார் எப்பிடி இருக்காங்க’

‘ஒண்ணும் முன்னேற்றம் இல்ல. அப்பிடியேதான் போயிட்டு இருக்கு’

‘இது யார் பையன் குருக்கள்தானே’

‘ஆமாம் என் மாமானாரிடம்  கூட மாட ஒத்தாசையா  இருக்கார். பேரு கபாலி’

கபாலி நமஸ்காரம் சொல்லிக்கொண்டார்.

‘ ரொம்ப சந்தோஷம்’

‘உங்கள ஒரு தரிசனம் பண்ணிட்டு  ஊருக்கு பொறப்படலாம்னு இருக்கன் ராத்திரிக்கு பொறப்படணும்’

‘ என்ன தரிசனம் பண்றதுக்கு நா  என்ன அவ்வளவு பெரிய ஆளா. எனக்கு  இட்ட கடமை அதை செய்றேன். வேறென்ன’

தன் மடியிலிருந்து விபூதிபையை எடுத்துக்கொண்டார் சித்தப்பா.’ கந்தகோட்ட முருகன் பிரசாதம் வாங்கிகணும்’ என்றார்.

தர்மகர்த்தா பவ்யமாக விபூதியை வாங்கிகொண்டார்.

கபாலி   ’ அஞ்சு முகம்  தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

                  வெஞ்சமரில் அஞ்சல் என் வேல் தோன்றும் –நெஞ்சில்

                   ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

                 முருகா என்று ஓதுவார் முன்’

திருமுருகாற்றுப்படைப்பாடலை அற்புதமாகப்படினார்.

‘யாரு பாடுனது’

‘நக்கீரர்’

‘எதுல’

‘திருமுருகாற்றுப்படையில பாடுனது’

‘சபாஷ். குருக்கள்னா இப்பிடி இருக்கணும்’ என்றார் தர்மகர்த்தா.

சித்தப்பா மகிழ்ந்துபோனார்.

‘ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்னா’

‘ஒரு தடவை நினைக்க முருகனின் இரண்டு திருவடிளும்  காட்சிப்படும்னு நக்கீரர் சொல்றார்.

‘ரொம்ப  திருப்தியா இருக்கு’

அப்பா பைய்ய நடந்து தர்மகர்த்தா வீட்டை அடைந்தார். கபாலியின் கம்பீரமான  தெய்வப்பாடலைக் கேட்டுக்கொண்டேதான் சென்றார். தர்மகர்த்தாவின் கண்கள் ஈரமாகியிருந்தன.

‘தெய்வத்தமிழ்பாட்ட பாடாவதங்க திருக்கோவிலுக்குள்ள குருக்களா வரக்கூடாதுன்னு ஒரு காலம் வரணும். பாசுபதேசுரர்தான்  அதுக்கு அருள் புரியணும்’

தர்மகர்த்தா ஓங்கிச்சொன்னார்.

சித்தப்பாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

‘கபாலிக்கு பிரச்சனை இல்லை’  சித்தப்பா சொல்லிப் புன்னகைத்தார்.

‘கற்றோர்க்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு’ தர்மகர்த்தா சொல்லிக்கொண்டார்.

‘கபாலிதான் இண்ணைக்கு கால சந்தி பூஜை பாசுபதேசுரர்க்கு’

‘ரொம்ப திருப்தி’

‘கபாலிக்கும் கொடுப்பினை சுவாமிக்கும் கொடுப்பினை’

சித்தப்பா சொல்லிமுடித்தார்.

‘ நா இண்ணைக்கு சாயந்திரம் சென்னை  பொறப்படுறேன். திரும்ப வரணும். எப்ப வறேன்னு தெரியல அண்ணா கோவில் பூஜயை பாத்துகறார்.’

‘நானும்  சம்பளம் டாண்ணு அனுப்பிடறேன்’

அப்பா ஆமோதித்தமாதிரி  சிரித்துக்கொண்டார்.

‘கபாலி குருக்களய்யாவை இங்கயேகூட  நீங்க  விடலாம்’

‘ நா எதுக்கும்  மாமாண்ட பர்மிஷன் வாங்கணும். இப்பக்கி ஒரு நட வரட்டுமேன்னு கூட்டிட்டு வந்தேன்’

‘கல்யாணம் இன்னும் ஆகலில்ல. தம்பிக்கு.  கல்யாணம் ஆகி  ஆசார்ய அபிஷேகம் ஆகணும். அப்புறமாதான் பெரிய சந்நிதி எல்லாம் பாக்க சிவாச்சாரியர்னு  முறையா  சரியா இருக்கும்.   கல்யாண வயசுதான. பொண்ணு பாக்கலாம். உங்க மாமாண்ட சொல்லுங்க’

‘சொல்றன்’

‘இது உங்க கோவில். உங்க மொற பூஜை.  அது நெனப்புல இருக்கணும். தருமங்குடிலேந்து அண்ணன் வந்தாரு. ஓடிகிட்டு இருக்கு. அவுருக்கு கையில கோளாறு வரலன்னா இங்க வரப்போறது இல்ல. எல்லாம் அவன் யோசனை. நாம என்ன பண்ண வைக்கும்’

‘நாங்க உத்தரவு வாங்கிகறம்’

‘சின்ன குருக்களே. நீர்தான் பெரிய குருக்களா வரணும். தெனம் தெனம்  படியும்.  தெய்வத்  தோத்திரங்கள விடாம படிக்கணும். படிக்கறது எதுவும் வீணா போவாது’

கபாலி வணக்கம் சொன்னார்.

மூவரும் புறப்பட்டனர்.

‘தோ தெரியர்தே அதான் குண்டுமொதலியார் வீடு. அவர் பொண்ணுதான் தமிழ் ப்ரொபசர்’

‘அது தெரியும் நா தெவசத்துக்கு வந்தேன்.  என் பொண்ணு வேதாவும் கூட வந்தா. எனக்கு கை அப்ப வலி இருந்துண்டே இருந்ததுன்னு அவள தொணைக்கு அழச்சிண்டு வந்து இருந்தன். அந்த  ப்ரொபசர் தெவசத்துக்கு வந்துருந்தா அவ அம்மா தெவசமாச்சே. அண்ணைக்கிதான் எம் பொண்ண  என் வீட்டுக்கு வா. தமிழ் சொல்லிதறேன்னு சொன்னா. அதுலேந்துதான் இவளும் போயிண்டு இருக்கா’

கபாலி எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்டார்

மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

மதிய சாப்பாடு முடிந்தது. சாமி மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு கிளம்பினான்.

சித்தப்பா அவனோடு ஸ்கூல்வரை நடந்து சென்று விட்டு வந்தார்.

‘பையன் என்ன சொல்றான்’

‘அம்மாவை பாக்கணும்னு சொன்னான்’

‘அது சரி. க்ளாஸ் வாத்தியாரை பாத்தியா’

‘பாத்து பேசினேன். அவர் பெருமையாதான் சொன்னார். பையன் பேர்ல கொறயே சொல்லல. வருஷம் போவணும் அவ்வளவுதான். பையன் நல்லா வருவான். நீங்களும் கவனிச்சிகணும். உங்க பொறுப்பும் இருக்குதுன்னு சொன்னார். அவர் சொல்றதும் சரி’

‘சாமி கெட்டிக்காரன். என்ன கெட்டிக்காரத்தனம் இருந்தாலும் துளி அதுஷ்டமும் வேணும்ப்பா. பகவான் அத கொற வக்காம பாத்துகணும்’

‘சாமிய சுவாமிகிட்ட விட்டுருக்கன்’

‘நானும் அவனபாத்து நெறய தெரிஞ்சிகறன்’ என்றாள் வேதா.

‘நாங்க கெளம்பணும்.’

‘காபி சாப்டு போகலாம்’

‘காபி சாப்டு போறம். அகாலவேளயில இல்லாம ஆத்துக்கு போகணும்’

கபாலி ஊருக்குத்திரும்புவதற்கு ரெடியானார்.

அம்மாகாபி அடுப்பை பற்றவைத்து அந்தக்கரியங்களைக்கவனித்தார். அப்பா தோட்டத்துப்பக்கமாய்ச்சென்று கறிவேப்பிலைக்கொத்துகள் சிலது கொண்டு வந்து வைத்தார்.

‘இத எடுத்துவச்சுகோ. உன் சேதி என்ன. நீ என்ன பண்றதா உத்தேசம். நா ரெண்டுங்கெட்டானா பொழப்ப  ஓட்டிண்டு இருக்கேன்’

‘அப்படி சொல்லாதே அண்ணா, எல்லாம் சரியா நடக்கறதுன்னு நா சொல்வேன்’.

‘ பொண்ணு நல்லா படிச்சுகோ அந்த ப்ரொபசர் உம்மேல உயிர வச்சிருக்கா. அத மறந்துடாதே’

என்னைப்பார்த்துச்சொன்னார்.

அம்மா எல்லோருக்கும் காபி கொண்டு வந்து வைத்தார்.

‘எல்லாருக்கும் அர சக்கரதான்’

‘ மன்னி அதுதான் சரி. நமக்கு சக்கர நோய் வருதோ இல்லயோ  எடுத்துகற சக்கரய  கொறச்சிகறது  ரொம்ப நல்லது’

அண்ணாவுக்கும் மன்னிக்கும் நமஸ்காரம் செய்துவிட்டுப்புறப்பட்டார் சித்தப்பா.

கபாலியும் கூடவே  தரை விழுந்து  இருவரையும் சேவித்துக்கொண்டான்.

சித்தப்பாவும் கபாலியும் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

‘சாமி பத்ரம்  நீங்க பாத்துகோங்க

மன்னி’ சித்தப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டார். இருவரும் கிளம்பி அண்ணாமலைநகர் அஞ்சலகம் நிறுத்தத்திற்கு வந்தார்கள். அப்பா கூடவே சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோக்காரன் ஒருவன் கிட்டே வந்து’ சிதம்பரம் போறேன். ஏறுங்க’ என்றான்.

‘எவ்வளவு கேப்ப’

‘ சாமி கொடுக்கறது கொடுங்க’ என்றான். சித்தப்பாவும் கபாலியும் ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டார்கள்.

‘பத்ரம் பத்ரம்’

‘நாங்க வரம்’ என்றார் கபாலி. அப்பா நிறைவோடு இருவரையும்  வழி அனுப்பிவைத்துவிட்டு வீடு நோக்கி நடந்தார்.

 நான் மாலையில் பேராசிரியர் வீட்டுக்குக்கிளம்பத்தயாரேனேன். அவர் கொடுத்திருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தைத்திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன். கவிதைகள் அனைத்துமே எனகுப்பிடித்திருந்தன. சில கவிதைகளை மனப்பாடம் செய்தேன். சில கவிதைகளை எழுதிப்பார்த்தேன்.

பேராசிரியர் எனக்கு முன்னமே திருக்குறள் புத்தகம் கொடுத்திருந்தார். அந்த புத்தகத்தையும் அவ்வப்போது எடுத்து படித்துப்பார்த்தேன்.

சாமி பள்ளிக்கூடத்திலிருந்து இன்னும் வரவில்லை.

அம்மா ’சாமி இன்னும் வரவில்லை ஏனோ’ என்றாள்.

‘எதாவது சொல்லிவிட்டுப்போனானா’

‘இல்லடி அவன் எதுவும் சொல்லவில்லை’

அப்பா திண்ணையில் படுத்திருந்தார். ‘நான் ப்ரொபசர் வீட்டுக்குப்போகணும்’ என்றேன் அம்மாவிடம்.

‘சாமி வரவிட்டு நீ’

‘அதுதான் சரி’

கொஞ்ச நேரம் அவன் வருவான் என எதிர்பார்த்தேன். அவன் ஆளையே காணோம். இனி தாமதிக்கக்கூடாது என அம்மாவிடம் சொல்லிவிட்டு சாமியின் பள்ளிக்கூடம் நோக்கிப்புறப்பட்டேன். பள்ளி அருகில்தான் இருந்தது.பள்ளி விட்டு மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியின் வாட்ச்மென் கேட்டில் நின்று கொண்டிருந்தார்.

‘யார பாக்கிரிங்க’

‘ தம்பி சாமிநாதன் ஆறாம்கிளாஸ் படிக்குறான். இன்னும் வரலையேன்னு பாக்குறன்’

‘குருக்களையா மகனா’

‘ஆமாம்’

‘நீங்க யாரு’

‘நான் அவனுக்கு ஒண்ணுவிட்ட அக்கா. சாமி அவன் வீட்டுல தங்கி இருக்கன்’

‘அவுங்க அம்மா அப்பா எங்க’

‘அவுங்க ஊர்ல இல்ல’

‘அவுங்கன்னா எனக்குத்தெரியும். உன்ன தெரியல எனக்கு’

‘நா ஊருக்கு புதுசு’

‘அதான்’

ஆறாம் வகுப்பு எந்த செக்‌ஷன்’

‘அது தெரியாது’

‘ சரி நீங்க இங்கயே நில்லுங்க நா போயி கேட்டுட்டு வந்துசொல்றன்’

‘இல்ல நா போயி கேட்டுகிட்டு வரன்’

‘மொதல்ல நா தெரிஞ்சிகிட்டு வரன். அப்புறமா என்ன செய்யிறதுன்னுபாப்பம்’ சொல்லிய வாட்ச்மென் என்னை கேட்டில் நிற்கவைத்துவிட்டு பள்ளியின் ஸ்டாப் ரூம் அருகே சென்று விஜாரித்தான் எந்த செக்‌ஷன் என்பது தெரியாமல் சிரமமாக இருந்தது. எப்படியோ சாமியின் வகுப்ப ஆசிரியரைக்கண்டுபிடித்து ‘குருக்களய்யர் பையன் சாமி பற்றி விசாரித்தான். சாமியின் வகுப்பு ஆசிரியர் அவன் மதியம் வகுப்புக்கு வரவில்லை என்றார்.

‘சாப்பிடாபோனவன் பள்ளிக்கு  திரும்பலயே’

இது வகுப்பு ஆசிரியரின் பதிலாக இருந்தது. வாட்ச்மென் என்னிடம் வந்து இந்தச்செய்தியை திரும்பச்சொன்னார்.

‘இல்லை பள்ளி வந்தான்’

‘அப்ப நீங்க போய் விசாரிங்க. தோ நிக்குறார். வேட்டி கட்டிகிட்டு, வெள்ளச்சட்டை முழுகைவ்ச்சது போட்டுகிட்டு, அவரேதான் கேளுங்க’

‘இந்த வழியாதான போவுணும்’

‘யாரா இருந்தாலும் இதான் வழி’

‘நா போய் கேக்குறேன்’

நேராக அந்த ஆசிரியரிடம் சென்றேன்.

‘அய்யா சாமி பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வரல’

‘’நீங்க யாரு’

‘நா அவனுக்கு ஒண்ணுவிட்ட அக்கா’

‘குருக்களய்யாவுக்கு என்ன வேணும்’

‘அவருக்கு அண்ணன் பொண்ணு’

‘அப்பா அம்மா வருலயா’

‘இல்ல அவுங்க சென்னையில இருக்காங்க’

‘ சாமி மதியம் பள்ளிக்கு வரல’

‘மதியம் வீட்டுக்கு  சாப்பிட்டு வந்தானே’

‘பள்ளிக்கு வரல’

‘இது புதுசா இருக்கு’

‘வேற எங்க போவான்’

‘அதான் எனக்கும் தெரியல’

‘பசங்க ரெண்டு ஒருத்தர் சிதம்பரம்  போறதாவும் அங்க போயி சினிமாகொட்டாய்க்கு போறதா  பேசிக்கறாங்க அந்த கூட்டத்துல சேர்ந்துடாம இருக்கணும்.  சாமி நல்ல பையன் நல்லா படிப்பான் நல்லா எழுதுவான் என்ன ஆச்சி அவனுக்கு. அவன் பேரண்ட்ஸ் கூட ஊர்ல இல்லன்றீங்க’

எனக்கு மனம் கிடந்து அடித்துக்கொண்டது. இனி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

’ஆறாம் வகுப்பில் படிக்கும் பையன்கள கேட்டா தெரியுமா’

‘இல்லம்மா யாரும் இப்ப இல்ல எல்லாரும் போயாச்சி’

நான் வீட்டுக்கு கட கட என்று நடக்க ஆரம்பித்தேன். மனம் கிடந்து அடித்துக்கொண்டது.

 

 

எதிரே சுப்புணி வந்துகொண்டிருந்தான். சாயரட்சை பூஜைக்கு அவன் கிளம்பியும் இருக்கலாம்.

‘என்ன பாப்பா எங்க வந்த’

‘சாமிய பாக்கவந்தன்’

‘என்ன ஆச்சு’

‘பள்ளிக்கூடம் போனவன் வருல’

‘மதியம் சாப்புட வந்தான’

‘வந்தான் வந்தவன் சாப்பிட்டான்.  நேரா ஸ்கூலுக்கு போறவன். இண்ணைக்கு மதியம் ஸ்கூலுக்கு போகவேயில்ல.  நான்  பள்ளிக்குடம் போயி  அவன் கிளாஸ்டீச்சரைப் பார்த்தேன். அவர்தான் சொன்னார்.  சாமி நல்ல பையன் . நல்லா படிப்பான். இண்ணைக்கு மதியம் சாப்பிடப்போனவன் திரும்பி வரவில்லை. இது விஷயம் புதுசா இருக்கு’

‘பசங்க செட்டு சேத்துகிட்டு போயிருப்பாங்க’

‘அப்படித்தான் அந்த சாரும் சொன்னார்’

‘இருக்கலாம்’

‘அவன் கூட்டாளிங்க யாரும் எனக்கு தெரியல’

‘எனக்கு ஒரு பயல தெரியும். அவன கேக்குலாம்’

‘வாங்க அவன் வீட்டுக்கு போவுலாம்’

‘இல்ல நா போயி கேட்டுட்டு வரன் நீ  வீட்டுக்கு போ பாப்பா’

‘இல்ல நானும் வரேன்’

‘அப்ப வா போவுலாம்’

நான் சுப்புணியோடு நடக்க ஆரம்பித்தேன். சாமியின் பள்ளிக்கூடத்திற்குப்பின்னால் ஒரு தெரு. அந்த தெருவின் கோடியில் ஒரு டீக்கடை. அந்த டீக்கடைக்காரர் பையனோடு சாமியை சுப்புணி பார்த்திருப்பதாகச்சொன்னார்.

டீக்கடை வாயிலில் நான்கு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. டீக்கடைக்காரர்  வெந்நீர் போடும் பாயிலரை கழுவிக்கொண்டிருந்தார்.

‘ஆரு சுப்புணியா’

‘ஆமாம் சுப்புனியேதான்’

‘எங்க இந்த பக்கம். வர மாட்டீரு நீரு’

‘வராம என்ன வர்ரதுதான்’

‘இது யாரு பாப்பா’

‘ந்ம்ப குருக்களு அய்யிரு வீட்டு பொண்ணு’

‘அவுருக்கு பொண்ணு இருக்குதா’

‘இல்ல. இது அந்த குருக்களு அண்ணன் பொண்ணு. விருந்தாடியா வந்துருக்கு நம்ம ஊருக்கு’

‘இப்ப என்ன சேதி அத சொல்லு’

‘குருக்களு அய்யிரு மொவன் சாமி  பள்ளிக்கூடம்  போனவன் வுட்டு வீட்டுக்கு வரல. ஒன் மவனும் அவுனும் செநேகிதம். அதான் கேட்டுகிட்டு போவுலாம்னு வந்தம்’

‘இது ஏது புது இமுசை. எம்மொவன் வந்துட்டானா. இருக்கானா’

‘ஏ காசாம்பு ஏ காசாம்பு’ டீகடைக்காரர் தன் மனைவியை ஓங்கி அழைத்தார்.  அவள் வெள்ளாடுகளை கொட்டகைக்குள் அசமடக்கிக்கட்டிக்கொண்டு இருந்தாள்.

‘ஏன் கத்துற. ஏழு ஊர் கேக்குறமாதிரிக்கு’

‘பைய இருக்கானா’

‘இல்லயே’

‘பள்ளிக்கூடம் வுட்டு வந்தானா’

‘வருல’

‘ நா வூட்ட வந்துருப்பான்னு இருந்தன். நீ அவன் கடையில இருப்பான்னு இருந்த. இப்ப அவன் எங்க போனான்’

‘இது என்னடி துன்பமா இருக்கு. படிக்க போன புள்ள என்ன ஆச்சு’

எனக்குத்தெரிந்துவிட்டது இந்தச்சிறுவனும் வீட்டுக்கு வரவில்லை. ஆக ஒரு செட்டு சேர்த்துக்கொண்டு எங்கோ போயிருக்கிறார்கள்.

‘இப்ப என்ன செய்யிலாம்’

‘பள்ளிக்கொடம் பூட்டிகிட்டு போயிருப்பாங்க ஆர கேக்குறது’

‘இங்க பாரு கோவிலு ஊழியம் சுப்புணி வந்துருக்காரு. அந்த குருக்களய்யரு வூட்டு சனம் வந்துருக்கு. அவுங்க வூட்டு புள்ளயும் காணுலன்னுவந்துருக்காங்க. சுப்புணிதான் நம்ப வூட்டுக்கு இட்டாந்துருக்காரு’

‘அந்த சாமியா. அவன் நம்ம பயலுக்கு பிரண்டுதான். எப்பவாவுது இங்க வருவான்’

‘ஏதோ கூட்டா போயிருக்கானுவ’

‘கெட்ட பழக்கமாச்சே’ என்றார் டீக்கடைக்காரர்.

‘மொத புள்ள வருணும் கெட்ட பழக்கமா இல்லயான்னு பொறவு பாக்குலாம்’

காசாம்பு சொன்னாள்.

‘ டீ போடுறன் சாப்பிடறயா சுப்புணி’ என்றார் டீக்கடைக்காரர்.

‘எல்லாம் வேணாம். இருட்டுது பசங்கள காணுல. அத பாக்குலாம்’

என்றார் சுப்புணி.

‘நேத்தி மாட்டுக்கு பில்ல அறக்க வடக்கு வெளிபோனன். சென ஆடு பட்டினி கெடக்குதுன்னு. பய கூட வந்தான். அங்க   ஒரு விளாமரம் இருந்துது. அத பாத்துகிட்டே இருந்தான். வாசம் வந்துது. வெளாம்பழங்க மரத்துல இருந்துச்சி. அது வேனுமேன்னான். மரத்துல ஏறி பறிக்கலாமான்னான். படவா ராசுகோல் அவ்வளவுதூரத்துக்கு ஆயிட்டுதான்னு சத்தம் போட்டேன். அங்க எங்கனா போயிருக்கலாம்’

‘இல்ல காசாம்பு செனிமாவுக்கு கூடம் போயிருக்கலாம் செதம்பரம் போயிருப்பானுவ. ரஜினி படம் பாட்சா ஓடுதுல்ல. அத எங்கிட்ட கேட்டான். ஆனா காசு வேணுமே. அதுக்கு எங்க போவானுவ’

‘நேத்து சக்கர வாங்கியாந்தயே அர கிலுவ அது எங்க’

‘அது எதுக்கு’

‘வெளாம்பழத்துல வெல்லம் இல்லன்னா சக்கர போட்டு சாப்புட்டா நல்லா இருக்கும்னு சொன்னன். அப்பிடியா கிப்படியான்னானே’

‘சக்கர பொட்டலத்த காணுல. ஆமாம் விளாமரத்த மொதல்ல பாக்குலாம்’

காசாம்பு ஓடினாள். நானும் சுப்புணியும் காசாம்பு பின்னால் நடக்க ஆரம்பித்தோம். வேக வேகமாக நடந்தோம். டீக்கடைக்காரர் அசையாமல் அங்கேயே இருந்தார்.

‘நீங்க விளாமரத்த பாத்துட்டு வாங்க. ரேண்டும் அங்கனதான் போயிருக்கும் என்ன சேதின்னு பாருங்க’

‘சரி ஒரு வடய குடு. பாத்ததும் பசிக்குது’

‘இந்தா அந்த பாப்பளுக்கும் எடுத்துக’

சுப்புணி இரண்டு வடைகளை எடுத்துக்கொண்டார்.

‘எங்கணக்குல எழுதிக’

‘கெடக்கு போய் வா. இவுரு கவுணரு இவுரு கணக்குல எழுதி வக்கிறாங்க’

என்றார் டீக்கடைக்காரர்.

‘பாப்பா உனக்கு ஒண்ணு’

‘வேண்டாம்’

‘ஏன்’

’பழக்கமில்ல’ நான் சொன்னன்.

‘நாம பழக்கப்படுத்திகறதுதான்’

நான் பதில் பேசாமல் நடந்தேன். இரண்டு வடைகளையும் சுப்புணியே தின்று முடித்தான். காசாம்பு பின்னாலேயே தொடர்ந்து கொண்டிருந்தோம்.

வாய்க்கால் வரப்பு என வந்தது. இவைகளை தருமங்குடியில்தான் பாத்து இருக்கிறேன். இப்போதுதான் இங்கே பார்க்கிறேன்.

விளாமரம் சமீபமாய் இருந்தது.

இரண்டு சிறுவர்களையும் விளாமரத்தில் கட்டி வைத்துவிட்டு ஒரு பெரியவர் கையில் ஒரு குச்சியோடு நின்றுகொண்டிருந்தார். இரண்டு சிறுவர்களும் அழுதுகொண்டே இருந்தார்கள். கீழே விளாம்பழங்கள் சில  முட்டாகக்கிடந்தன.

‘இது என்ன கொடுமை’ காசாம்பு  ஓங்கிக்கத்தினாள்.

‘நா என்ன செய்துவுட்டன். அடிச்சனா கொண்டனா.  வெளாம்பழத்த வுடு.இந்த நாயுவ மரத்துல ஏறி கைய கால முறிச்சிகினா ஆரு முடிச்சி அவுக்கறது. இமுஷ படுறது. படிக்கிற புள்ளிவ. ஆச கொண்டு மரத்துல ஏறி புட்டுதுவ. ஆரு தேடிகினு வரான்னு பாத்துகிட்டு கெடக்குறன். ஆ பாரு எம்மாம் பழமும் காயும் பறிச்சி போட்டுருக்கானுவ. நா வரமாட்டன்னு நெனச்சிகிட்டானுவ. நா வூட்ட போயிருந்தன். ஒரு டீத்தண்ணி குடிச்சிட்டு வருலான்னு அதுக்குள்ள இம்மாம் நடந்துபோச்சி’

காசாம்பு இரண்டு பையன்களையும் கயிற்றை அவிழ்த்து மரத்திலிருந்து விடுதலைசெய்தாள்.

‘ஏண்டா   சாமி  உனக்கு இது  என்ன வேல’ என்றேன்.

அவன் எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்துகொண்டான்.

‘ஆ பாரு சக்கர பொட்டலம் கொண்டாந்து இருக்கானுவ. எங்க கெளப்பியாந்துதுன்னு தெரியல’

என்றார் பெரியவர்.

‘என்ன தெரியுதா. ‘

‘ஏன் தெரியாம டீக்கடைகாரரு சம்சாரு.’

‘எலே இங்க வாங்கடா.  அவனவன் பேரு அப்பன் பேரு சொல்லு என்ன கிளாஸ் படிக்கறன்னு சொல்லு’

‘ நா சாமிநாதன் அப்பா கந்தசாமி குருக்கள் ஆறாம் வகுப்பு படிக்குறன்’

‘அய்யிரு கோவிலு படைக்கிற அய்யிரு மொவனா’

‘மரம் ஏற எப்பிடி கத்துகிட்ட’

‘இதுதான் மொதல்ல ஏறுன மரம்’

‘டேய் நீ’

‘எம்பேரு குமாரு அப்பா பேரு முத்துகுமாரு ஆறாம்வகுப்பு பி செக்‌ஷன்’

‘அதென்ன பி பீங்குற’

‘அது  ஏ பி சின்னு மூணு ஆறாம்கிளாஸ் இருக்குது அதுல பி பீன்னு சொல்லாத தாத்தா சரசுவதில்ல படிக்குறசாமி’

’அது எல்லாம் ரொம்ப ரோக்கியருதான்’

இருவரும் அவரவர்கள் பள்ளிக்கூடபையை பத்திரமாக வைத்திருந்தனர். நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். காசாம்பு நன்கு முற்றிய விளாம்பழங்களைத்தனியாக பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டிருந்தால்.

‘எலே  பயலுவளா  ஒருத்தன் காத இன்னொருத்தன் புடி. ரெண்டு காதையும் புடிக்கணும். கைய மாத்தி மாத்தி புடி. ஆச்சா’

இருவரும் அடுத்தவர் காதுகளைப்பிடித்துக்கொண்டனர்.

‘ரைட் போடு தோப்புக்கரணம்’

‘எத்தினி பத்து’

‘பத்துதான’ என்று சிரித்தான் குமார்.

‘ஆனா ஒண்ணு  ‘ உன்னால நா கெட்டன் ’ என்னால நீ கெட்ட’  அப்பிடின்னு கத்தி  கத்தி சொல்லுணும் ஒன் ஆயி அப்பனுக்கு  அது கேக்குறமாதிரிக்கு சொல்லணும்’

‘இது ரொம்ப   ரொம்ப ஈசி எண்ணிக்க பத்து’

சொல்லிய குமார் சாமியின் காதுகளைப்பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான. சாமியும் அதே மாதிரி குமாரை அப்படியே  காபிஅடித்து செய்தான். எனக்கு அழுகையே வந்துவிடும்போல் இருந்தது. இருட்டத்தொடங்கிவிட்டது.

‘சாமி இனி தப்பு செய்யமாட்டன் சொல்லு’

இருவரும் அப்படியே  சொல்லி முடித்தனர்.

‘ஏ டீகடை காரங்களே  நீ ஒண்ணு அந்த பாப்பா ஒண்ணு இந்த பயலுவுளுக்கு ஒவ்வொண்ணு காய எடுத்துக. பாக்கிய அப்பிடியே வையி. காயுவ  கணக்கு சரியா இருக்கோணும். நா எண்ணி வச்சிருக்கேன்.  இதுவ ரட்டாட்டம் இருக்கும். வெர இருக்காது.  எம்பாட்டன் வச்ச மரம். தேனாட்டம். அவ்வளவும் சத்து. இரும்பு சத்து தெரியுமா’

’என்றார் பெரியவர்.

‘நா பில்ல அறுக்க வந்தது தப்பாபோச்சி’

‘’நீம்புரு பில் அறுக்க வந்தீர்ரா’

‘ஆமாம். அப்ப இந்த ராசுகோல்கூட வந்துது. ராங்க் ஆயிடுச்சி.  சென ஆடு கத்துதுன்னு மனங்கேக்குல வந்தன். எப்பிடி எப்பிடி போவுதுபாரு. அந்த வெருவாலி டீ போட்டுகினு வட சுட்டுகினு நிக்குது. இந்த கழுத நாலு எழுத்து படிச்சிகும்னு பாத்தன். இது இப்படி ஈனத்தனம் செஞ்சிபோச்சி’

காசாம்பு சொல்லிக்கொண்டாள்.

சுப்புணி விளாமரத்தை சுற்றி சுற்றிப்பார்த்தார். எதுவும் காய்கள் விழுந்து சிதறி இருக்குமா என்று தேடினார்.

‘கோவிலாருக்கு ஒரு பழங்கொடு. அவுரு சும்மாவா’

காசாம்பு மீதமுள்ள விளாம்பழங்களிருந்து ஒரு பழம் எடுத்து சுப்புணியிடம் கொடுத்தார்.

‘ஒண்ணுன்னா ஒண்ணுதான’

‘இன்னுமொரு காயை எடுத்து பெரியவரைக்கண்ணாக் பார்த்துக்கொண்டே சுப்புணியிடம் கொடுத்தார்.

‘எடுத்துட்ட அப்புறம் என்ன வுடு’

‘எல்லாம் கெளம்பு’ எல்லாம்கெளம்பு’ என்றார் சுப்புணி.

சாமியும் அவனுடைய பையை எடுத்துக்கொண்டு வந்தான். குமாரும் அவனோட பேசிக்கொண்டே வந்தான்.

‘தாத்தா வந்து கொளறிட்டாரு’

குமார் சொல்வதைக்கேட்டுக்கொண்டே நடந்தான் சாமி.

‘பெரியப்பா பெரியம்மாதான் எனக்கு இங்க இருக்காங்க.’

‘இந்த அக்கா’

‘இதுவும்தான்’

‘ஆரும் அடிக்க மாட்டங்கதான’

‘அடிக்கமாட்டங்க’ சொல்லிவிட்டு என்னைப்பார்த்தான். சுப்புணி விளாம்பழங்களை தரையில் தட்டி உடைத்து ருசி பார்த்து நடந்துகொண்டிருந்தார்.

‘எனக்கு இன்று ப்ரொபசர் வீட்டுக்கு போவது தடையானது. அவர் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக்கொண்டுமிருக்கலாம். மனதிற்கு சங்கடமாகத்தான் இருந்தது. இந்தப்பையன் சாமி இப்படிச்செய்துவிடுவான் என்று நான் நினைக்கவேயில்லை. அப்பா கோவிலுக்குச்சென்றும் இருக்கலாம்.

  என் அம்மா சாமியை என்னை நினைத்து துயரப்பட்டுக்கொண்டு இருப்பாள்.

‘கோவிலு வெளக்கு போடுறது  அய்யா வேலயா போயிருக்கும்’

‘சுப்புணி என்ன செய்யமுடியும். சாமிய காணலயே. அவன் இப்ப கெடச்சிட்டான் தேவுலாம். பொழச்சம். இல்லன்னா. நெனக்கவே பயமா இருக்கே. சித்தப்பா புள்ள வேற. அவுங்க அப்பா அம்மா இங்க இல்லயே. சென்னையில இருக்காங்க’

‘செறு புள்ளிவ. அப்பிடி இப்பிடிதான் இருக்கும் நாமதான் பாத்துகுணும். இதுக்கு ஆரு எவுரு என்ன செய்ய இருக்கு’

சுப்பிணி சொல்லிக்கொண்டே விளாம்பழத்தை தின்று முடித்தான்.

காசாம்பு டீக்கடை வந்ததும் குமாரோடு கடைக்குள் நுழைந்தாள். குமாரின் அப்பா கையில் ஒரு குச்சி எடுத்துவந்து குமாரை இழுத்து போட்டு அடி அடி என்று அடித்து முடித்தார்.

குமார் அய்யோ அய்யோ என்று கத்தினான்.

‘அவன் செறு பையன் நாக்கு ருசி விளாம்பழம்னு போயிட்டான். அதுக்குன்னு மாட்ட அடிக்குற மாறிக்கு அடிக்குற’ ஒன் கையில கட்ட மொளைக்க’  என்று கத்தினாள் காசாம்பு.

சாமியின் முகம் அதனைப்பார்த்ததும் நிறம் மாறிப்போனது.

‘நா கோவிலுக்கு போறன் நீங்க வூட்டுக்கு போங்க’ என்றார் சுப்புணி.

நான் விளாம்பழம் ஒன்று கையில் வைத்திருந்தேன். அதையும் சுப்புணிக்குக்கொடுத்துவிடலாமா என்ற யோசனையில் இருந்தேன்.

சாமியைப்பார்த்தேன். அவன் பரிதாபமாக என்னைப்பார்த்தான். ‘அது இருக்கட்டும் அக்கா’ என்றான். என்கண்கள் ஈரமாகிப்போனது.

வீட்டுவாயிலில் அம்மா உட்கார்ந்திருந்தாள். கார்த்தவீரார்ஜுன ச்லோகங்களைச்சொல்லிக்கொண்டிருந்தாள். ஏதேனும் தொலைந்து போனால் அதுதான் அம்மா சொல்லுவாள். இப்போது  சித்தப்பா பையனே தொலைந்து போனான்’ கடவுள்தானே வழிகாட்டவேண்டும். அம்மா பயந்துபோயிருப்பாள்.

‘எங்களைப்பார்த்ததும் அம்மா ஓடோடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள். ‘நீனும் கொழந்த அவனும் கொழந்த ரெண்டு  பேரயும் காணலன்னு கைகாலு நடுங்குறது. அப்பா கண்ல ஜலம் வச்சிண்டார்.  ச்வாமி சந்நிதி தெறக்குணும்னு போயிட்டார்.  மெய்க்காவல் சுப்புணி வேற இல்ல. அவரே வெளக்கு போட்டுண்டு அதயும் பாக்குணும்’

‘படுவா எங்க போன’

‘சாமி பதிலே சொல்லாமல் இருந்தான். கண்கள் கலங்கியிருந்தன.

‘என்ன திட்டாத பெரியம்மா. அடிப்பியா பெரியம்மா’

அம்மா சாமியைக்கட்டிக்கொண்டு ஓ என்று அழ ஆரம்பித்தாள்.

‘நெருப்ப கட்டிண்டு இருக்கன் வயித்துல உங்க அம்மா காமுக்கு நா என்ன பதில் சொல்லுவேன். முழுங்கிட்டயா என் புள்ளயன்னு கேக்கமாட்டளா அவ’ தன் கண்களைத்துடைத்துக்கொண்டாள் அம்மா.

நான் வீட்டூகுள் நுழந்து விலாம்பழத்தை சுவாமி படத்தின் முன்பாக வைத்தேன்.

‘கைகால் அலம்பிகோ காபி சாப்டுடா சாமி’

‘சரி பெரியம்மா’

நான் அதிர்ந்துபோய் பெஞ்சின்மீது உட்கார்ந்திருந்தேன்.

‘நீயும் ப்ரொபசர் ஆத்துக்கு போல’

‘எங்க போறது.  சாமி வரலன்னா. அப்பறம் கை ஓடறதா கால் ஓடறதா என்ன செய்வே’ நான் அம்மாவிடம் சொல்லிக்கொண்டேன்.

சுப்பிணி அப்பாவிடம் நடந்த கதை முழுக்க சொல்லியிருக்கலாம்.

பூஜைமுடித்து அப்பா கோவில் சாவியோடு வீட்டுக்குள் நுழந்து சாமியைக்கட்டிக்கொண்டு அமைதியாய் நின்றார்,

‘படுவா விளா மரம் ஏறினயா’

‘ஆமாம்’

‘இதமாதிரி எல்லாம் செய்யாதடா நானே  இங்க ஓட்ட குடித்தனம் நடத்திண்டு இருக்கன்.  எனக்கு அபாண்டமா கெட்ட பேர் வராம இருக்கணுமே சற்குணாம்பா’

ஸ்வாமி படங்களைப்பார்த்து நமஸ்காரம் செய்து எழுந்துகொண்டார்.

‘சுப்புணி எல்லா கதையும் சொன்னான். விளாம்பழம் ரொம்ப ருஜின்னு அதையும் சொன்னான்.

அப்பா சாமிக்கு நெற்றியில் விபூதி வைத்துவிட்டு ‘முருகா’ என்றார்.

 

‘டீக்கடைக்காரர் பையன் குமார்னு பேர். அவனும் சாமியோட விளாம்பழம் பறிக்கப்போனான். அவன் அம்மா காசாம்பு. சுப்புணிதான் என்னை டீக்கடைக்கு அழைத்துப்போனான். எனக்கு என்ன தெரியும். டீக்கடையில் இரண்டு வடை சாப்பிட்டான் சுப்புணி’

‘விளாம்பழமும் சாப்பிட்டான்’

எனக்கு சிரிப்பு வந்தது. அம்மா அதற்குள் விளாம்பழத்தை உடைத்து வெல்லம்போட்டுப்பிசைந்து  சுவாமி படத்திற்கு முன்பாய்வைத்துப்பிறகு எடுத்துவந்தாள் ‘ஆளுக்கொரு ஸ்பூன் வாய காட்டுங்கோ’  என்றாள்.

‘மொதல்ல சாமிக்கு’

பிறகு எனக்குக்கொடுத்தாள். அப்பாவுக்குக்கொடுத்துவிட்டு தானும் எடுத்துக்கொண்டாள்.

சாமி என்னைப்பார்த்து சிரித்துவிட்டான்.

‘நாம விளாம்பழம் சாப்டு எவ்வளவோ வருஷம் ஆச்சி’

என்றார் அப்பா.

இரவு உணவு என்ன என்பது கவனிக்க அடுப்படிக்குப்போனாள்.

‘அக்கா நீ ப்ரொபசர் ஆத்துக்கு போகலயா’

‘எப்பிடி ஆகும் சொல்லு. உன்ன காணுன்னா எங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல’ அம்மா அதற்குப்பதில் சொன்னாள்.

‘இப்ப ஒண்ணும் கெட்டுப்போயிடல நாளைக்குப்போனாபோச்சி’ என்றேன் நான்.

‘அப்பாதான் கோவில்ல வெளக்கு போட்டுருக்கார் சுப்புணிதான் நம்மோட இருந்தாரே’

‘சாரி பெரியப்பா’

‘போடா படுவா சாரி கீரிங்கற’

‘நான் இனிமே இப்படி போமாட்டேன்’

‘விடுடா பச்ச கொழந்த’

எல்லோரும் இரவு உணவு சாப்பிட்டு படுத்துக்கொண்டோம். நான் பாரதியார் பாடல்களை எடுத்துப்படித்துக்கொண்டிருந்தேன்.

’ஏட்டையும் பெண்கள் தொடுவது

 தீமையென்று எண்ணியிருந்தவர்

மாய்ந்துவிட்டார் வீட்டுக்குள்ளே

பெண்ணை பூட்டிவைப்போமென்ற்

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’

மீண்டும் மீண்டும் படித்தேன். பாரதியைப்பார்க்கவேண்டும்போல் ஆசை எழுந்தது.

‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா

தண்மை இன்பம் நல் புண்ணியஞ்சேர்ந்தன

தாயின் பெயரும் சதி என்ற நாமமும்

அன்பு வாழ்கவென்றமைதியில் ஆடுவோம்

ஆசைக்காதலைக்கைகொட்டி வாழ்த்துவோம்

துன்பம் தீர்வது பெண்மையினாலடா

சூரப்பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப்பாலடா

மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்

கலியழிப்பது பெண்களறமடா

கைகள் கோத்து களித்து நின்றாடுவோம்’

படிக்க படிக்க இன்பம். இன்பம்.  இத்தனை  அன்பு ஆசை மரியாதை பெண்கள் மீது கொண்ட ஒரு மனிதன் இங்கே உலாவினானா என்று நினைத்துக்கொண்டே உறங்கினேன்.

வழக்கம்போல் மறுநாள் விடிந்தது. சாமி பாடங்கள் படித்துமுடித்துப்பள்ளிக்குத் தயாரானான்.  அப்பா கால சந்திக்குப்புறப்படவேண்டும். அம்மா அடுப்படியில் இருந்தாள்.

சாமி பள்ளிக்குக்கிளம்பினான்.

‘சாமி கும்பிட்டயா’ அம்மா சாமிக்குக்குரல் கொடுத்தாள்.

‘ஆச்சு பெரியம்மா’

‘ஜாக்கிரதயா போயிட்டுவா’

சாமி என்னைனப்பார்த்துக்கொண்டே படி இறங்கினான்.

‘ஸ்கூல்ல ஒண்ணும் பிரச்சனை இருக்காதே’ மெதுவாகக்கேட்டான்.

‘நா வரட்டா’

‘வேண்டாம் நா போறேன்’ சாமிக்கு உள்ளுக்குள் அச்சம் இருக்கவேண்டும். அதுதான் முகத்தில் கூட வெளிப்படுகிறது. அப்பா கோவிலுக்குக்கிளம்பினார்.

‘சாமிய பாத்துகணும். ஏமாந்துட்டு நிக்கப்போறம்’

அப்பா சொல்லிவிட்டுப்புறப்பட்டார்.

‘நிவேத்யம்’ அம்மா கத்தினாள்

‘ஓ மறந்து போனேன்.’ அப்பா பித்தளைத்தூக்கினை கையில் எடுத்துக்கொண்டார்.

நானும் அம்மாவும் சாமியைப்பற்றிப்பேசிக்கொண்டே திண்ணையில் உட்கார்ந்திருந்தோம்.

‘நம்ம கொழந்தயவிட பிறத்தியார் கொழந்தயை இன்னும் பத்ரமா பாக்கணும்’

‘சாமி பிறத்தியாரா’

‘அசடு பிறத்தியார்னு வசனத்துல இருக்கு. சொன்னன்’

‘தோ சாமி வரான்’

‘ஏன் சாமி வரான்’

சாமி வீட்டுப்படிக்கட்டு ஏறினான். கோவென்று அழுதான்.

‘என்னடா’

‘பள்ளிக்கூட கேட்டிலேயே நிறுத்திட்டா என்ன’

‘ஏன் பேரண்ட்ஸ் வரணுமாம். லெட்டெர் எழுதித்தரணுமாம். அதான் வந்துட்டன்’

‘யார் சொன்னாளாம்’

‘வாட்ச்மென் சொல்றார், ஹெட்மாஸ்டர் உத்தரவாம்’

‘அவன்’

‘டீக்கடைக்காரன் பையன்’

‘குமாரா’

’ அவனுக்கும் இப்பிடியேதானாம். வாட்ச்மென் சொன்னார். நா கேக்கலயே அவரேதான் சொன்னார். ரெண்டு கழுதயும் வந்தா  ஸ்கூல் உள்ள  விடாதே. அவுங்க காம்பவுண்ட்  உள்ள வரக்கூடாது பேரண்ட்ஸ் கூட்டிகிட்டு வரட்டும் வந்து  அபாலஜி லெட்டர் எழுதித்தரட்டும்’

‘’இப்ப என்ன செய்யறது’

‘நீங்க வரணும்’

நானும் அம்மாவும் சட்டு புட்டென்று கிளம்பினோம். வீட்டுக்கதவை இழுத்துப்பூட்டினோம். சாமியோடு பள்ளிக்குப்புறப்பட்டோம்.

மூவருமாய் நடந்து பள்ளியை அடைந்தோம்.

வாட்ச்மென் எங்களை உள்ளே போக அனுமதித்தார்.

‘நேரா ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போங்க’

‘அதெங்க’

‘ நா காட்டறேன்’ என்றான் சாமி.

மூவரும் ஹெட்மாஸ்டர் அறை வாயிலில் நின்றுகொண்டிருந்தோம்.

‘யெஸ்’

‘ நம்மள க்கூப்படறார்’

‘கம் இன்’

நாங்கள் அறைக்குள் நுழந்தோம்.

‘உக்காருங்க’

 சாமி மட்டும் நின்றுகொண்டிருந்தான்.

‘உம்பேரு’

‘சாமிநாதன்’

‘எந்த வகுப்பு’

‘ஆறு பி’

‘இவுங்க யாரு’

‘எங்க பெரியம்மா  அவுங்க பொண்ணு  எனக்கு அக்கா’

‘அம்மா அப்பா’

‘அவுங்க ஊர்ல இல்ல. சென்னையில இருக்காங்க’

’ஏன்’

‘எங்க பாட்டிக்கு உடம்பு சரிய்ல்லன்னு பாக்க போயிருக்காங்க’

‘சரியாத்தான் பேசுறே.’

மேசைமீது இருந்த ப்ராக்ரெஸ் ரிபோர்ட்டை எடுத்தார். அது ஆறு பி என்று போட்டிருந்தது. அதனை ரெண்டு நிமிடம் பார்த்துக்கொண்டார்.

‘ஏண்டா படிக்குற பையந்தானே. ஏன் புத்தி பீ திங்க போச்சி’

‘விளாம்பழம்’ என்றான் சாமி.

எனக்கும் அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது.

‘இனி சாமிநாதன் ஒழுங்கீனமா எதுவும் செய்யமாட்டான். அப்படி ஏதேனும் செய்தால் நாங்க எங்க  பிள்ளையின் டி சியை  வாங்கிகிட்டு போயி  வேற ஸ்கூல்ல அவன  சேர்க்க சம்மதம்னு எழுதி ரெண்டு பேரும் கையெழுத்து போட்டுகுடுங்க’

‘படவா போ கிளாஸ்க்கு. தோல உரிச்சுடுவன்’

சாமி வணக்கம் சொல்லிவிட்டு தன் வகுப்புக்குச்சென்றான்.

‘நீங்க போவுலாம் கொஞ்சம் கவனமா இருங்க. அவுங்க பேரண்ட்ஸ் வேற இங்க இல்லன்றீங்க’

‘இனி கவனமா பாத்துகறம்’

’ லெட்டர் எழுதி குடுத்துஇருக்கீங்க ஞாபகம் இருக்கட்டும்’

‘சரிங்க சார், ரொம்ப தாங்கஸ் சார்’

‘அதெல்லாம் எதுக்கு போங்க’

நானும் அம்மாவும் கட கட என்று நடந்து கேட்டுக்கு வந்துவிட்டோம். வாட்ச்மென் எங்களைப்பார்த்துவிட்டு அந்த படுவா இன்னும் வருல’ என்றார்.

‘கொழந்தய பத்ரமா பாக்குணும் அது  சாமர்த்தியமா பேசுது. மார்க்கு  ஜோரா வாங்குதுன்னு இருந்துடாதிங்க. மொதலு பூடும் தெரிதா’

நாங்கள் வாட்ச்மென் சொன்னதை ஆமோதித்தோம். இருவரும் வீட்டுக்கு நடந்தோம். அப்பா இந்நேரம் வீட்டுக்கு வந்து வீடு பூட்டியிருப்பதுகண்டு குழம்பிப்போய் நின்றுகொண்டிருப்பார்.

‘வா வா வாம்மா’

நான் முன்பாக நடந்துகொண்டிருந்தேன்.

‘எனக்கு வயசு என்ன உனக்கு வயசென்ன, நீ போ நா வறேன் பின்னாலேயே’ என்றாள் அம்மா.

வீடு வந்துசேர்ந்தோம். அப்பா இன்னும் கோவிலிலிருந்து வீட்டுக்கு வரவில்லை. நிம்மதி. இன்னும்  காலைசந்தி பூஜை முடியவில்லை. சமையல் வேலையை இன்னும் முடிக்கவேண்டும்.

‘நீ சமையல் கட்டுள்ளே வராதே நீ வெளியில இருந்துகோ. ’

அம்மா எப்பவும் என்னிடம் சொல்வதுதான். அந்த மூன்று நாட்கள். கொசுறு ஒருநாள். அது சந்தேகத்துக்கு.  எப்படியும் ஐந்தாவது நாள்தான் தலைக்குக் குளித்துவிட்டு  சமையல் அறையில் நுழைய முடியும்.  பூஜை நிவேத்யம் இதற்கும் அந்த அதற்கும் தொடர்பில்லை. பெண்கள் அந்த நாட்களில் மட்டும் அக்னியைத்தொடக்கூடாது சட்டம். பழகிப்போன ஒன்று. அம்மாவுக்கும் இதேசட்டமுண்டு. அவளும் உட்காரமலா இருக்கிறாள். அப்போதெல்லாம் நான் ஒண்டியாக சமையல் அறை மணியம் பார்ப்பேன். அரிதாக நானும் அம்மாவும் ஓரமாய் உட்கார்ந்து அப்பாவைப்படுத்தி வைப்பதும் எப்பொதேனும் நிகழும். இயற்கைதானே.

‘காய்க்கும்பூக்கும் செடிகளை துளசியை நீ தொட்டுவிடக்கூடாது’

‘ஒவ்வொரு தடவையும் நீ சொல்லவேண்டாம்’

‘செடி காஞ்சி போய்டும்’

‘எனக்கும் தெரியும்’

சாமி மதியம் சாப்பிடவந்துவிடுவான். அதற்குள்ளாக ஒரு குழம்பு பொறியல் செய்தாக வேண்டும்.

‘நாம் ஸ்கூல் போயி ஹெட்மாஸ்டரை பாத்த  கதய எல்லாம்  இப்ப அப்பாகிட்ட சொல்லாதே. பிறகு சொல்லிக்கலாம். என்ன’

‘ நீ சொல்லாம இரு’

‘ரோசத்துக்கு குறவு இல்ல’

‘சாமி இருக்கும் போது இதபத்தி பேசவேண்டாம்’

‘பேசமாட்டேன்’

அப்பா பூஜை முடித்து வீட்டுக்குள் நுழைந்தார். சமையல் ஆகிக்கொண்டிருந்தது.

‘என்ன உக்காந்தாச்சா’

நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

‘பொம்மனாட்டி மாசம் ஒரு நடை உக்காரணும். அப்பதான் புருஷா நெஞ்ச நிமுத்துண்டு நடக்கமுடியும்’ அம்மா சொன்னள்.

‘இதுல நீ வேற வக்கீலாட்டம் பேசற’

’கைகால் சுத்தி பண்ணிகுங்கோ சாப்பிடலாம். சாமி வந்துடுவான். அவளுக்கு வேற சாதம் போடணும். தூரக்காரிக்கு பசி கப கபன்னு எடுக்கும்.’

‘நாம சாப்டுதான அவுளுக்கு போடறது’

‘இந்த பாயிண்ட் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்’

அப்பா சாப்பிட உட்கார்ந்தார். சாமி மதியம் சாப்பிட வீட்டுக்குள் நுழைந்தான். அவன் வாயே திறக்கவில்லை.

‘என்னடா மொகம் நல்லா இல்ல’

‘ஒண்ணும் இல்ல பெரியப்பா’

‘இல்ல எதானு ஸ்கூல்ல உன்னண்ட இண்ணக்கி  கேட்டாளா’

‘கொழந்த சாப்பிடட்டுமே’

‘சாப்பிடு சாப்பிடு. அப்பறம் பேசிக்கலாம்’

சாமி தன் தட்டை எடுத்து வைத்துக்கொண்டான். குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

வீடே நிசப்தமாக இருந்தது.

‘எனக்கு ஸ்கூல் பிடிக்கல பெரியப்பா’

‘ஏய் இது என்ன விபரீதம்’ அம்மா சத்தம் போட்டாள்.

‘விளாம்பழம்திருடி விளாம்பழம் திருடின்னு  கிளாஸ் பசங்க கேலி பேசறாங்க’

‘எல்லாருக்கும் சேதி தெரிஞ்சி போச்சா’

’ இண்ணைக்குபிரேயர்ல என் பெயரையும் அந்த டீக்கடைகார பையன் குமார் பேரையும் சொல்லி இருக்கா’

‘அப்படியா சேதி’

நானும் வேதாவும் ஸ்கூல் போயி ஹெட்மாஸ்டரை பாத்துட்டு வந்தம். மன்னிப்பு லெட்டெர் அதான் அபாலஜி லெட்டெர் எழுதி கொடுத்துட்டு வந்தம். நீங்க பூஜைக்கு போயாச்சு. சாமி ஆத்துக்கு வந்து எங்கள கூப்டான். வாட்ச்மென்  கேட்லேயே நிறுத்திட்டானாம்.  சாமிய உள்ள விடல.  உன்  கூட பேரண்ட்ஸ் வந்தா காம்பவுண்ட் உள்ள வரலாம்னு கண்டிச்சி சொல்லிட்டானாம்’

‘இது என்ன இவ்வளவு ராமாயணம் நடந்துருக்கு’

‘ என்கிட்ட சொல்லல’

‘நீங்க ஒரு வா சாப்பிடணும்.  அதுக்குத்தான் வெயிட் பண்ணினோம்’

‘ நா ஸ்கூல் போல பெரியப்பா’ ஓங்கி அழுதான் சாமி. இப்படித்தான் அனேக பிள்ளைகள் பள்ளிப்படிப்பை நிறுத்தியிருப்பார்கள்.எனக்கு மனம் சங்கடப்பட்டது. நன்றாகப்படிப்பவன் சாமி. அவன் பெற்றோரும் சென்னையில் இருக்கிறார்கள். நமக்கும் கெட்ட பெயர். என்னவெல்லாமோ சிந்தனை ஓட்டம்.

அப்பாவுக்கு கண்கள் குளமாகியிருந்தது.

‘நீதாண்ட நல்லா படிக்கற பையன் அழலாமா. ஸ்கூல் விட்டு நின்னா கோவில்ல  மணிதான் அடிக்கணும்’

‘ஏன் சுப்புணிதான அடிப்பான்’

‘பூஜைபண்ற வேலைக்குதான் போகணும் அத தான் அப்படி சொன்னேன்’

‘போறேன்’

‘படிக்கற பையன் நீ அப்படி போக்கூடாது’

 அப்பண்ணா ‘முட்டாள் பையன்தான் சாமிகிட்ட   பூஜ எல்லாம் பண்ணணுமா சாமிக்கு மந்திரம் சொல்லணுமா’

‘ஜாஸ்தி பேசறே. நீ.’

‘படிப்பு வரலேன்னா மணி அடிக்கணும்னு சொன்னயே பெரியப்பா’

‘நா வரேன் ஸ்கூலுக்கு. ஸ்கூல் வாசல்ல  வாக மரத்து நெழல்ல உக்காந்துண்டு இருக்கன். நீ ஸ்கூல் விட்டு வரும்போது என் கிட்ட அவாள எல்லாம்  காட்டு. யாரு கேலி  பண்ணினான்னு சொல்லு . நா என்ன பண்றேன் பார்’

சாமி எப்படியோ சமாதானம் ஆனான்.

‘நீ ஸ்கூல் விடறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி அங்க வந்து நில்லு அது போறும்’

சாமி லேசாகச்சிரித்தான்.

‘கொழந்த கொழந்ததான்’

சாமி பள்ளிக்கு கிளம்பினான். ‘சாயங்காலம் நீ வந்து அங்க நிக்கணும்’

‘கண்டிப்பா’

அப்பா சற்று கால் நீட்டிப் படுத்துக்கொண்டார்.

‘பகவான் என்ன என்ன திருவிளையாடல் செய்வானோ’ சொல்லிக்கொண்டார்.

மாலையில் அப்பா சாமியின் பள்ளிக்கூடத்திற்குச்செல்லவில்லை. என்னதான் நட்க்கும் நடக்கட்டுமே என்று இருந்துவிட்டார்.

‘கொழந்த எதிர்பார்ப்பான் உங்கள’

‘நா என்ன பண்றதுக்கு இருக்கு. இவன் பண்ணினதுதப்பு. பசங்க கிண்டல் பண்ணுவாங்கதான்.அதுக்கு என்ன பண்ணமுடியும். ஏன் தப்பு பண்ணின. இனிமே பண்ணாத.நா அந்தக்காலத்துல கேலிக்கு ஆளாயிருப்பன் தெரியுமா’

‘அதெல்லாம் எப்பவும் உண்டு’

‘அதென்ன’

‘ஆட்டுக்கும் மாட்டும் கழுத்துல கயறு அறுவு கெட்ட பாப்பானுக்கு வவுத்துல கயறு,  அரியரிசியும் பொரியரிசியும் ஆவாத பண்டம் அத வாங்கிதின்ன பாப்பார முண்டம்,அயிரு தயிரு ஆட்டுகுட்டி மயிரு, அஞ்சி மூணும் எட்டு அய்யர்…….. தட்டு, இப்படி எவ்வளவோ கேலி பாத்துருக்கன் நான்’

‘கோபம் வந்துதா’

‘’பழகிடுச்சி. கோபம் வராது’

சாமி பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். ’சாமி ஏன்  நீ  பள்ளிக்கூடம் வரவில்லை என்றால் என்ன சொல்வது’ அப்பா விழித்துக்கொண்டிருந்தார்.

‘தர்மகர்த்தா உடனே வான்னு சொன்னார் நா போயிட்டேன். கோவில்ல எண்டோமிண்ட்  ஆபிசர் வந்துருந்தார்னு சொல்லிடுவம்’ என்றாள் அம்மா.

சாமி வீட்டுக்குள் நுழையும்போதே ப்ரொகிரஸ் ரிபோட்டோடு வந்தான்.

‘எப்பவும் போல ஃபஸ்ட் ரேங்க் பெரியப்பா’

பெரியப்பாவிடம் அதைக்காட்டிக்கொண்டு இருந்தான். அப்பாவுக்கு ஏக சந்தோஷம். பெரியம்மாவிடம் காட்டினான்.  அம்மா  ‘ நன்னா படிச்சி பெரிய ஆபிசரா வரணும் கொழந்த’ என்று ஆசி சொன்னாள்.

அப்பா ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பது குறித்து அவன் கேட்கவில்லை. வகுப்பு சூழல் மாறியிருக்கலாம்.

எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ப்ரொபசர் வீட்டுக்குக்கிளம்பத் தயாரானேன். பாரதியார் கவிதை புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.

‘காபி சாப்பிட்டுவிட்டு போடி’

‘சரிம்மா’

நான் ப்ரொபசர் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எத்ரே போஸ்ட்மென் வந்தார்.

‘சித்தப்பாவுக்கு ஒரு லெட்டர்’

‘என் கிட்ட குடுங்களேன்’

அது ஒரு இன்லண்ட் லெட்டெர். அதனில் என்ன இருக்கும். யாரிடமிருந்து வந்துள்ளது நாம் பிரிப்பது பார்ப்பது சரியா யோசித்தேன். உள்ளூர் வட்டிக்கடை சேட்டின் விலாசம் பார்த்தேன். சித்தியின் வளையல் அடகு வைத்தது தொடர்பாகத்தான் இருக்கும். வட்டி கட்டு இல்லை இல்லை கடனை வட்டியோடு திருப்பிக்கொடு உனது  நகையை நீ மீட்டுக்கொள் என்று எழுதியிருப்பார்கள்.  அப்பாவின் கையுக்கு வைத்தியம் பார்த்தபோது சித்தப்பாதான் சித்தியின் வளையலை  உள்ளூர் சேட்டிடம்  அடகு வைத்துவிட்டு மூவாயிரம் கடன் வாங்கித் தந்தார். கடித்தத்தைப்பத்திரமாக வைத்துக்கொண்டேன். பாரதியார் கவிதைப்புத்தகத்தின் உள்ளாக அதனைச்சொறுகி வைத்தேன்.

‘சேட்டு இதனை அனுப்பத்தானே செய்வார்’ நானே சொல்லிக்கொண்டேன்.  சித்தப்பாவுக்கு இந்தத்தகவல் சொல்லவேண்டும். அப்பா இதற்கு என்ன  யோசனை சொல்லுவாரோ.

ப்ரொபசர் வீட்டுக்கேட் கதவு பூட்டியிருந்தது. ஊரில் இருக்கிறார்களா அல்லது பக்கத்தில் எங்கேனும் சென்று இருக்கிறார்களா என்பது  யோசனையாக இருந்தது. வீட்டுக்குத்திரும்பிவிடலாம் என்கிற எண்ணமும் வந்தது. கேட்டைப்பிடித்துக்கொண்டுநின்றேன். நேற்றும் இப்படித்தான்.  சாமி மத்தியான  பள்ளிக்கூடம்   கட் அடித்துவிட்டு விளாம்பழம் அடிக்கப்போய்  அவனைத்தேடினோம். அந்தக்கதையால்  இங்கு  வரமுடியாமல்  போனது.

சற்று நேரத்திற்கெல்லாம் கார் ஒன்று ப்ரொபசர் வீட்டு வாயிலில் கார் வந்து நின்றது. பேராசிரியை காரிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்.

‘என்ன வேதா வந்தாச்சா, நேற்று காணோம்’

‘வணக்கம் அம்மா  நேற்று வரமுடியவில்லை. அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியவில்லை’

காரினுள் குண்டு முதலியார் அமர்ந்திருந்தார். எட்டிப்பார்த்தேன்.

‘அப்பா இருக்காங்க . கொஞ்சம் உடம்பு முடியல. அவர அழைச்சிகிட்டு சிதம்பரம் போனேன். டாக்டர் கிட்ட காமிச்சேன்.’

குண்டுமுதலியார் அமைதியாக அமர்ந்திருந்தார்.

‘நமஸ்காரம்’

லேசாக புன்னகை செய்தார்.

‘அப்பாவை வீட்டுல விட்டுடு. அங்க என் அம்மாகிட்ட சேதி சொல்லு. நா வறேன்னு சொல்லு’ டிரைவருக்கு  பேராசிரியை அறிவுரை சொன்னார். வண்டி மெதுவாகப்புறப்பட்டது.

‘அப்பாக்கு என்ன உடம்பு’

‘ஓண்ணுமில்ல நல்லா இருக்காங்க. சும்மா ஒரு செக் அப் பண்ணலாம்னு போனேன். எப்பவும் பண்றதுதான்’

‘வயசு’

‘எண்பது தாண்டியாச்சு’

பேராசிரியை வீட்டின் உள்ளாகச்சென்று முகம் கழுவிக்கொண்டு பளிச்சென்று வந்து உட்கார்ந்தார்.

‘பாரதியார்ல என்ன படிச்சே’

‘ரொம்ப நல்லா இருக்கு. எல்லாமேதான்’

‘நீ என்ன படிச்சே’

‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று

எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்’

‘ரொம்ப நல்ல பாட்டு’

‘அந்த புத்தகத்தை இன்னும் படி. மனப்பாடமா பாட்டுங்க வருதான்னு பாரு’

‘அதான் நா பண்ணிக்கிட்டு இருக்கேன்’

’இண்ணைக்கு ஒரு புத்தகம் வச்சிருக்கேன்’

புத்தகத்தைப்பார்த்தேன். ’பெண்ணின் பெருமை’  அல்லது ‘வாழ்க்கைத்துணை’ என்று எழுதியிருந்தது. அட்டையில் ஒரு பெண்ணின் படமும் ஒரு ஆணின் படமும் இருந்தன. இருவரும் பருவ வயதில் இருந்தனர்.  நூலின் ஆசிரியர் திரு.வி.க. புத்தகத்தின் பின் அட்டையில் அந்தப் பெரியவரின் படம் இருந்தது. அவரின் பெருமை பேசும் பத்து வரிகள் அவர் படத்திற்குக்கீழாக அச்சிடப்பட்டிருந்தன. கடைசி வரிகளைப்படித்துக்கொண்டேன். அவர் சென்று பேசாத ஊரில்லை.ஏறாதமேடையில்லை.சமயம் இலக்கியம் அரசியல் சமுதாயச்சீர்திருத்தம் முதலான எல்லாத்துறையும் அவர்தம் பேச்சுத்தொண்டால் பயன் பெற்றன.

‘ஒரு பெண்ணுக்கு வாழ்க்கைன்னா என்னாங்கறத சொல்லிக்கொடுக்குற புத்தகம். எல்லாமே நமக்குத்தெரிஞ்சதாகூட இருக்கலாம். ஆனா பெரியவங்க சொல்லும்போது அதுல ஒரு அழுத்தம் இருக்கும். நாம ஏமாந்துடக்கூடாதுன்னு நம்மளவிட கவலைப்படறது பெரியங்கதான்’

எனக்குள் பேராசிரியையின் இல்லற வாழ்க்கை எப்படி என்பதை அறிந்துகொள்ள விருப்பம் அதிகமாயிற்று. அவர்கள் சொல்லாதவரை அதை நாம் கேட்பது சரியாகுமா என்று எனக்கு நானே விடையும் சொல்லிக்கொண்டேன்.

‘வேதா உனக்குத்தமிழ்ல எழுத படிக்க எந்த பிரச்சனையும் இல்ல. நல்லாவே செய்வேன்னு நெனக்கிறேன். இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா சிலதுகள நீ தெரிஞ்சிக்கணும். உனக்கு ஆர்வம் இருக்கு. படிக்கறதுக்கு ஆர்வம் இருக்கணும் அதுதான் ரொம்ப முக்கியம். இங்க பக்கத்துல இருக்கு. பல்கலைகழக பெரிய நூலகம். சி பி  ராமசாமி அய்யர் நூலகம். தினம் அங்க போயி ஒரு தமிழ்ப்பெரியவரோட புத்தகத்த எடுத்துப்படி. அதுல நீ என்ன முக்கியம்னு நெனக்கிறயோ அத ஒரு நோட்டுல  குறிச்சி வச்சிக.  தேதி, புத்தகத்து பேரு ஆசிரியர் பேரு யாரு போட்ட புத்தகம் அதான் பதிப்பாளர் யாரு இதுவும் முக்கியம். ஒரு பத்து நாளு நீ அப்படியே  தொடர்ந்து செய்யணும். அந்த குறிப்புக்களை எல்லாம்  எடுத்துகிட்டு அப்புறமா என்னண்ட வா. நா அத பாக்கறேன். மேற்கொண்டு என்ன செய்யணும்னு நா உனக்கு சொல்லுவேன்’

‘என்ன நூலகத்துல  உள்ள அனுமதிப்பாங்களா’

‘ஏன் அனுமதிக்காம என்ன. படிக்கதான நாம போறம். நூலகம்னா பின்ன என்ன?.

‘புத்தகம் எடுத்துகிட்டு வீட்டுக்கு வரலாமா’

‘அது முடியாது. அதுக்கு  அங்க படிக்கற ஸ்டூடண்ட்ஸ  மட்டும்தான் அனுமதிப்பாங்க’

‘தெனம்  அந்த நூலகம் போய்வறேன். நீங்க எப்பிடி சொல்றிங்களோ அப்படியே செய்கிறேன்.’

‘இந்த புத்தகம் பெண்ணின் பெருமை. இதனையும் நீ எடுத்துகிட்டு போ வச்சிக.’

’’பத்து நாள் கழிச்சி நா வந்தன்னா எனக்கு ஏதாவது யோசன சொல்வீங்கலா’’

‘மேல படிக்கணும்னு சொல்லப்போறேன்’

‘எப்பிடி முடியும்’

’ புத்தகத்தை படி என்ன தெரிஞ்சிகிட்டேன்னு எழுது. கவிதய படி என்ன சொல்லுது அந்த கவிதன்னு எழுது. ஒலகத்த பத்தி உன் அறிவ பெருக்கிக. செய்தித்தாள படி. பல்கலைக்கழகம் போயிதான் படிச்சவங்க வர்ராங்கன்னு  சொல்லமுடியாது. பள்ளிக்கூடம் சரியா போகாதவங்க கூட  பெரிய மனுஷனா வந்துருக்காங்க. அவுங்க பேர பெரிய பெரிய  பல்கலைக்கழகத்துக்குக்கூட  இண்ணைக்கி வச்சிருக்காங்க. நாம  நெறய படிக்கறம் தெரிஞ்சிக்கறம். எப்பிடி வாழ்க்கை அமையுதுன்னு பாப்பம்.’

எனக்கு ஆகாயத்தில் பறப்பதுபோன்று இருந்தது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன?.இந்தப்பேராசிரியையின் உதவியை என்னவென்று சொல்வது. என் மனம் சொல்லிக்கொண்டது.

‘ நிறைய நல்ல புத்தகங்களை  படிக்க வேணும்’ நான் மெதுவாகச்சொன்னேன்.

‘நீ ஒண்ணும்   யோசன செய்யாதே.  உனக்கு நா  எப்பவும் ஒத்தாசையா இருப்பேன். நீ படி  .படி  அவ்வளவுதான்’

இரண்டு கைகளையும் குவித்தேன்.’ உங்களுக்குக் கோடி புண்யம்’ என்றேன்.

‘அதெல்லாம் இருக்கட்டும். என்ன ஆகணுமோ அத பாப்போம்’

திரு. வி.க எழுதிய  பெண்ணின் பெருமை புத்தகத்தை எடுத்துக்கொண்டேன்.

‘ஆமாம் நேத்து ஏன் வரல’

‘ நானே சொல்லியிருக்கணும். மறந்துபோனேன். என் தம்பி சாமி நேற்று பள்ளிக்கூடம் போனவன் ஒரு தப்பு பண்ணிட்டான். மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தவன் சாப்பிட்டான். ஆனா  மதியம் பள்ளிக்கூடம் போகல. ஒரு பையனோடு சேந்து விளாம்பழம் அடிக்கப்போயிட்டான்.  ஸ்கூல்விட்டு அவன் வீட்டுக்கு வரலயேன்னு ஸ்கூலுக்கு போனா,  அங்க   இருந்தவங்க அவன் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு கிளாஸ்க்கு வரலன்னாங்க.  அப்புறம் வழியில  நம்ம    சுப்புணிய அதான் கோவில் மெய்க்காவல பாத்தன். சுப்புணிக்கு சேதி சொன்னேன். சாமியோட  ஃப்ரண்ட் வீட்டுல தேடினோம். சாமி  ஃப்ரண்டும்  ஸ்கூலுக்கு மதியம் வரலன்னு தெரிஞ்சிது. அந்தப்பையனோட அம்மாதான் சொன்னாங்க. பள்ளிக்கூடம் விட்டு ரொம்ப நேரமாச்சி  பையன் இன்னும் வரல. ’அவுங்க விளாம்பழம் அடிக்கத்தான் போயிருக்கணும்னு’ .  ஆக ரெண்டுபேருமா விளாங்கா அடிக்கத்தான்  போயிட்டாங்க.   மரத்துகிட்ட  இருந்த காவல்கார பெரியவரு ரெண்டு பேரையும்  அதே விளாமரத்துல  கயித்த வச்சி கட்டிபோட்டு ட்டாரு. அப்புறம் அந்த அம்மா நா சுப்புணி மூணு பெரும்  விளாமரத்தண்ட போனோம்.  அந்தப் பெரியவரு பஞ்சாயத்து வச்சாரு.  பெறகு நானும் அவன வீட்டுக்கு அழச்சிகிட்டு வந்தன். அதுக்குள்ள இருட்டிபோச்சு. நேரம் ஆயிடிச்சி. நா எங்க  படிக்க வர்ரது. அதான் நேத்து வரமுடியாமபோயிடுச்சி.  மன்னிச்சுகுங்க மேடம்’

நான் பேராசிரியரிடம், எங்களை ஹெட்மாஸ்டர் வரச்சொன்னது  நாங்க மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தது என்பதைல்லாம் சொல்லவில்லை.

‘’ பெரிய சேதியா இருக்கு. பசங்கள கவனமா பாக்கணும். இல்லன்னா ஏமாந்து போயிடுவோம்’

நான் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு பேராசிரியை வீட்டுக்கு வரவேண்டாம்.  குறிப்பெடுக்க நூலகம்தான் செல்லவேண்டும்.

வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தேன்.மேற்கொண்டு படிக்கவேண்டும். பேராசிரியை  ஒத்தாசை செய்வதாய்ச் சொல்லியிருக்கிறார்கள். ரொம்பவும் மனதில் திருப்தியாக உணர்ந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நான்கைந்து மாணவர்கள் நடந்துவந்தனர். அவர்கள் கலாட்டா செய்துகொண்டு சத்தம் போட்டுக் கத்திக்கொண்டு வருவதைப்பார்த்தேன். இதுநாள்வரை இப்படி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து நான் பார்த்ததேயில்லை. அவர்களை ஒருமுறைப் பார்த்துக்கொண்டேன்.

‘ நம்மள நோக்குறத பாரு’

‘நோக்கி ஆவுறது எதுவும் இல்ல’

’செத்த இளைப்பாறிக்கலாம்’

‘தேறுமா இது’

‘ஆனா ஆவுது போனா போவுது’

இப்படியே அவர்களின் உரையாடல் சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு அச்சம் வந்து என்னை ஆக்கிரமித்தது. கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

‘இது தேறாது’

அவர்களே பேசிக்கொண்டார்கள். எனக்கு நிம்மதியாகக்கூட இருந்தது.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கை தன் பணியைச்செய்துகொண்டுதானே  இருக்கிறது.

வீட்டு வாயிலில் இருவர்  புதியவர்களாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் முதியவராக இருந்தார். இவர்கள் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே நடந்தேன்.

‘குருக்கள் வீடு இது தானே’

‘ஆமாம்’

‘’அப்ப சரி’

‘’நீங்க யாரைப்பார்க்கணும்’

‘ குருக்கள் வீட்டுக்குத்தான் வந்தம்’

அவர்கள் இருவரும் திண்ணையில் அமர்ந்துகொண்டார்கள். இருவரும் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தார்கள்.நான் வீட்டினுள் நுழைந்து அப்பாவைத்தேடினேன். அப்பாவைக்கணவில்லை. அம்மா மட்டும் அடுப்படியில் ஏதோ காரியமாக இருந்தாள்.

‘அம்மா அப்பா எங்கே’

‘ஏன்’

‘வாசல்லே ரெண்டு பேர் அப்பாவ பாக்கணும்னுட்டு வெயிட் பண்றா’

‘என்னவாம்’

‘எனக்கு என்ன தெரியும்’

அம்மா வாசலுக்கு வந்தாள். அவர்கள் இருவரும் திண்ணையை விட்டு எழுந்து நின்றனர்.

‘வாங்கோ யார பாக்கணும்’

‘குருக்களாம்தானே இது’

‘ஆமாம்’

‘நாங்களும் குருக்கள்தான்.’

‘வாங்கோ உள்ள வாங்கோ’

‘மாமா இருக்காறா’

‘கடைக்கி போயிருக்கார். தோ வந்துடுவார்’

‘தீர்த்தம் சாப்பிடறேளா’

‘டீ வேதா ஜலம் குடிக்கறதுக்கு எடுத்துண்டு வா’

அம்மா எனக்குச்சேதி சொன்னாள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒரு டம்பளரோடு வாசலுக்குப்போனேன்.

‘ஒங்க பொண்ணுதானே’

வந்த இருவரில் பெரியவர் அம்மாவை விசாரித்தார்.

‘எம் பொண்ணுதான்’

‘ஒரே பொண்ணுதானா’

‘ஆமாம்’

அப்பா கடைக்குபோய் ஏதோ சாமான்கள் சிலதை வாங்கிக்கொண்டு வந்தார். புதியதாக வந்திருக்கும் இருவரையும் பார்த்துக்கொண்டார்.

‘வாங்கோ  யாரு என்ன விசேஷம்’

‘ நெய்வேலிலேந்து வறோம். இவன் என் புள்ள வேலுடையான்பட்டு முருகன் கோவில்ல பூஜ பண்றான்.  அது

எம்மொறதான். இவன் ஒரே புள்ள. அதனால அப்படியே இவன இழுத்துவுட்டுட்டன்’

‘ என்ன சமாஜாரம்’

‘எல்லாம் நல்ல சமாஜாரம்தான்’ சொல்லிவிட்டு  நான்கு முழம் மல்லிகைப்பூவை எடுத்துக்கொண்டு’ மாமிய கூப்பிடுங்கோ’ என்றார்.

‘டீ’ அம்மாவை அழைத்தார். எனக்கு குழப்பமாக  இருந்தது.

‘உள்ளே வாங்கோ’

அவர்கள் இருவரும் வீட்டு கூடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். அம்மா ஒரு பித்தளைத்தட்டை எடுத்துக்கொண்டு போய் நாலு முழம் பூவையும் ஒரு சீப்பு மஞ்சள் வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டார்.

‘’ஸ்வாமிகிட்ட வை’

அம்மா தாம்பாளத்தை ஸ்வாமி படத்தின் முன்னே வைத்தார்.

‘இப்ப சொல்லுங்கோ என்ன சேதி வந்தேள்’

‘இவன் என் புள்ள. கல்யாணம் ஆகணும். அம்மா இல்லாதவன் அவ என் தலையில புள்ளய  கட்டிட்டு  நிம்மதியா போய் சேந்துட்டா. உங்காத்துல பொண்ணு இருக்கான்னு கேழ்விப்பட்டேன். அதான் புள்ளயை அழச்சிண்டு வந்துட்டஏன்’

‘யாரு உங்களுக்கு சொன்னது’

அம்மாதான் கேட்டாள். அப்பா திரு திரு என்று விழிக்க ஆரம்பித்தார்.

‘ கூடலையாத்துர்ல எனக்கு உறவு இருக்கா. அவாதான் சேதிசொன்னா. அவாத்து புள்ளதான் இப்ப தருமங்குடில பூஜயாம். அந்த குருக்கள் குடித்தனத்தை காலி பண்ணிண்டு போயாச்சாம். எங்கயோ வேற ஊருக்கு போயிட்டார்னு சேதி’

சொல்லி அனுப்பினவா  வெவரமா உங்க கிட்ட  சமாச்சாரம்  சொல்லல. மொட்ட தாத்தா குட்டையில் விழுந்தார்னு சொல்லி அனுப்பிட்டா.  நாந்தான் தருமங்குடில பூஜபண்ணிண்டு இருந்தன். எனக்கு கையில ஏதோ  சத பெசகிண்டு ஒரு பிரச்சனை. சாப்பிடற கை வேற. பூஜ பண்ண முடியல. அதான் கெளம்பி வந்துட்டன். இது என் தம்பி ஆம். அவன் இப்பக்கி மெட்ராஸ்ல இருக்கான். அவன் மாமியாருக்கு ஒடம்பு முடியலன்னு போயிருக்கான்

‘அப்படி போடுங்கோ. நீங்கதான் அந்த தருமங்குடி குருக்களா. உங்களதான் அவா போய் பாருன்னா.  ஒரு பொண்ணு இருக்கான்னு சேதி சொன்னா’

நான் அடுப்பங்கரையில் இருந்தேன். எனக்குப்புரிந்துவிட்டது. என்னைப்பெண்கேட்டு வந்திருக்கிறார்கள். அம்மாவும் அப்பாவும் கூடத்திலேயே இருந்தனர்.

‘பொண் ஜாதகம் கொடுங்கோ. நா புள்ள ஜாதகம் கொண்டு வந்துருக்கன்’

‘புள்ள ஜாதகம் குடுங்கோ .  மொதல்ல பொண்னு மாப்பிள்ளக்கி  நட்சத்திரம் பொறுத்தம் இருக்கான்னு பாக்கணும்.’

‘பொண்ணு என்ன நட்சத்திரம்’

‘ஆயில்யம்’

‘ மாமியார் இல்லாத எடத்துலதான் வாக்குபடணும். ரொம்ப சரி’

‘பிரதானமா இத எல்லாரும் சொல்லிடறா. மூலம்னா ம்

அம்மா அதற்குள்ளாக இருவருக்கும் காபி கலந்துகொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள்.

‘மொதல்ல காபி சாப்டுங்கோ.’ என்றார் அப்பா.

‘பொண்ண பாத்தாச்சி. எங்களுக்கு திருப்தி’ என்றார் பெரியவர். தன் பையனைப்பார்த்துக்கொண்டார்.

‘என்னப்பா திருப்திதான. பொண்ண பாத்தாச்சிதான’  தன் பிள்ளையைப்பர்த்து சிரித்துக்கொண்டார்.

சாமி அப்போதுதான் எங்கோ பள்ளிப்பையன்களோடு விளையாடிவிட்டு வீட்டுக்குள்ளே வந்தான். புதிதாக வதிருக்கும் இருவரையும் பார்த்துக்கொண்டான்.

‘இவாள்ளாம் யாரு’

என்னிடம் அடுப்பங்கரையில் வந்து கேட்டான். நான் லேசாக சிரித்துக்கொண்டேன்.

‘உன்ன பொண்ணு பாக்க வந்துருக்கா’

இது எப்படி அவ்வளவு சரியாகச்சொல்கிறான் இவன். எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

‘ரெண்டு பேரையும் பாத்தாலே தெரியர்து’ என்றான் சாமி.

‘பையன் உங்க பையனா’

‘எனக்கு ஒரே பொண்ணு’

‘பையன்’

‘அவன் என் தம்பி பையன் சாமிநாதன் சாமின்னு கூப்பிடறது’

‘சாமி இங்க வாப்பா’

சாமி என் அப்பாவை நோக்கிபோயிக்கொண்டு இருந்தான்.

‘நன்னா படிக்கறயா’

‘படிக்கறேன்’

‘என்ன படிக்கறே’

‘ஆறாவது’

‘பேரு’

‘சாமிநாதன்’

‘பூணல்  போட்டு ஆயிட்தா’

‘ஆயிட்து’

‘இண்டு இடுக்குல  கோவில் பூஜைக்கு போறதுண்டா’

சாமி பதில் எதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தான்.

‘பையனுக்கு பூணல் ஆயிட்து. ஏழு வயசுல ஆனது..  கோவிலுக்கு கூட மாட வருவான் ஒத்தாசையா இருப்பான்.பூஜதான பிரதானம்’

அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.

‘அப்பிடித்தான் இருக்கணும். எங்களுக்கு கோவில்ல தங்கிகறதுக்கு கோர்டர்ஸ் குடுத்துருக்கா.  வாடகை கெடயாது. தண்ணி கஷ்டம் இல்ல கொழாய்ல வர்ரது.. தோட்டம் இருக்கு. வாழ தென்ன மா எலுமிச்ச கறிவேப்பில ஒண்ணு பாக்கி இல்ல. பம்ளிமாஸ் மரம்கூட வச்சி இருக்கு. மாச சம்பளம் இருக்கு. தட்டுல வெள்ளி ஞாயிறுன்னா இல்ல விசேஷதினம்னா ஆயிரம்கூட விழும். ஒண்ணும் சிரமம் இல்ல. கோவில்ல ரெண்டு பட்ட சாதம்  நித்யம் உண்டு. விசேஷ நாளானா சொல்லவேண்டாம் தேங்காமூடி பிரசாதங்கள் அது பாட்டுக்கு வரும். வாக்கு படற பொண்ணு குடுத்து வச்சவ’

‘புள்ள ஜாதகம் குடுத்து இருக்கீள். புள்ளயாண்டான் படிப்பு சமாச்சாரம் எல்லாம்எழுதிருக்ககேளா’

‘மூணாவது படிச்சான்

 ’ நின்னுட்டானா’

‘அவ்வளவுதான்’

‘ என் தம்பிய கலந்துண்டு சொல்றேன். அவன் வரட்டும்’

‘பேஷா’

மாப்பிள்ளை பையன் உட்கார்ந்து இருந்தார் எதுவும் பேசவில்லை.

‘பையன் பேரு’

‘எம்பேரு கல்யாணம். புள்ள பேரு குமாரசாமி. குமார்னு கூப்பிடுவோம்’

‘மந்திரங்கள்’

‘தந்திரங்கள் அத்துபடி’

‘பஞ்ச மூர்த்திக்கு மனப்பாடமா அரச்சன வருமா’

பெரியவர் சிரித்துக்கொண்டார்.’ எல்லாத்தயும் ஒப்பேத்திடிவான். பயமில்லே’

‘ஒப்பேத்தேதறதுதானா’

பெரியவர் சிரித்துக்கொண்டார்.

சாமி சமையல் அறைக்கு வந்தான். ‘ அக்கா மூணாவதுதான் படிச்சிருக்காறாம்’

‘நீ என்ன சொல்ற’

‘இவர் எல்லாம் வேண்டாம்’

நான் சிரித்துக்கொண்டேன்.

‘பொண்ணுக்கு பாட்டு தெரியுமோ’ என்றார் பெரியவர்.

‘ஆத்துமட்டும் பாடுவா. அவ அம்மா பத்து பாட்டு சொல்லிகுடுத்துருக்கா. பாடுவா.’

‘அது போறும்’

‘என் மாமியார் நல்லா பாடுவா’

‘அப்ப நாங்க உத்தரவு வாங்கிகறம்’

‘பொண்ண பாத்தாச்சிதானே’

‘ஆச்சி எங்களுக்கு  பூரண சம்மதம். ஜாதகம்  ரெண்டும் ஒத்துவரணும். பகவான் என்ன நெனச்சிண்டு இருக்கானோ’

‘தபால் போடறேன்’

‘மாமி நா வரேன். ஏ சாமிநாதா பொண் கொழந்தே வேதாதானே எல்லார்க்கும் நாங்கபேட்டு வரம். நல்ல சமாஜாரமா பதில் போடுங்கோ. சுபஸ்ய சீக்கிரம். பகவானே’

‘வரேன் மாமா வரேன்  மாமி’ என்றார் மாப்பிள்ளை.

‘கொழந்தகிட்ட சொல்லுங்கோ’

இருவரும் கிளம்பினார்கள். வாசற்படியை விட்டு கீழிறங்கி நடந்துகொண்டிருந்தார்கள்.

‘ அந்த போஸ்டாபீஸ் கிட்டயே பஸ் வருமோல்லியோ’

‘பஸ்சும் வரும் ஆட்டோ இருக்கும்’

இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். வீதியில் நின்றிருந்த நாயொன்று அவர்கள் பின்னே சென்றுகொண்டிருந்தது. நானும் அம்மாவும் வீதிக்கு வந்தோம்.

‘இது நான் எதிரே பார்க்கல’

‘பொண்ணு  வச்சி இருக்கம் கேக்கறா. அது சரிதான்’

‘நாமளே நொண்டி அடிச்சிண்டு இருக்கம்’

நான் தபால்காரர் என்னிடம் கொடுத்த கடிதத்தை அப்பாவிடம் கொடுத்தேன்.

‘இது என்ன சமாச்சாரம்’

’சேட்டு அனுப்பி இருக்கார்’

அப்பா கடிதத்தைப்படித்தார்.

‘என்ன சேட்டு’ அம்மா என்னைக்கேட்டார்.

‘சித்தப்பா சேட்டுக்கடையில சித்தி வளயல அடகு வச்சி நம்ப அப்பா ஆஸ்பத்திரி செலவுக்கு மூவாயிரம் வாங்கிக்குடுத்தார். அதுக்கு இப்ப நோட்டீஸ் விட்டுருக்கான். வட்டி கட்டணும் இல்லன்னா நகய  மூக்கணும்’

‘அவர்தான செய்யணும்’

‘ஆமாம் சித்தப்பாதான் செய்யணும். ஆனா  நக வச்சி கடன் வாங்கினபணத்து செலவு நமக்கானது’

‘வட்டி கட்டிடலாம். மூக்கறதுன்னா கொஞ்சம் சிரமம்’

‘சித்தப்பாகிட்ட சொல்லலாம்’ என்றேன் நான்.

‘அவனுக்குள்ள கஷ்டத்துல இது வேற’

‘மொதல்ல சேட்டு என்ன சொல்றாரோ’ என்றாள் அம்மா.

‘வட்டி கட்டினா வாங்கிப்பார். மூக்கறதுக்கு அவன் வரணும்.நம்மகிட்ட நகைய கொடுப்பாரா என்ன’

‘நா சேட்டுகிட்ட விஜாரிச்சிண்டு வரன்’

‘இண்ணைக்கு என்ன முகூர்த்தம்’

‘நாளைக்குதான்’

‘நா சேட்ட  கேட்டுனு வரட்டா’

‘ நீ என்னத்துக்கு பொண்கொழந்த. கடுதாசிய என்னண்ட கொடு’

அப்பா இன்லண்ட் லட்டரை வாங்கி வைத்துக்கொண்டார்.

சாமி தனது புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருந்தான். அவன் படிப்பதிலிருந்து திருக்குறள் படிக்கிறான் என்பதை அறிய முடிந்தது. நானும் பேராசிரியை இன்று எனக்குக்கொடுத்த பெண்ணின்பெருமை நூலை தேடினேன். எடுத்துக்கொண்டேன்.

‘நீங்க ரெண்டு பேரும் படிங்கோ’

என்று சொல்லிய அம்மா அடுப்படிக்குச்சென்றாள். இரவுக்கு சாப்பிட உணவு ஏதும் தயார் செய்யவேண்டுமே.

‘சித்த போனா பசிக்கும். பசியாவது எடுத்துண்டு இருக்கே. அதுக்கும் பிரச்சனை இல்லாம  காலட்சேபம் போயிண்டு இருந்துதுன்னா சரி’ அப்பா சொல்லிகொண்டார்.

பெரியவர் கொடுத்துப்போன ஜாதக பேப்பரை சாமி பிறையில் வைத்துப்பத்திரப்படுத்தினார் அப்பா.

‘படிக்காத மாப்பிள எல்லாம் வேண்டாம்’

சாமி பெரியப்பாவுக்குச் சொல்லிக்கொண்டான்.

‘நீ அப்பிடி போறயா’

‘மூணாவது படிச்சவர்தான் அக்காவுக்கு மாப்பிளயா வரணுமா’

‘நீ பச்ச கொழந்த நீ ஸ்கூல் பாடத்த  படி.’ அப்பா சாமிக்குச்  சொன்னார். சாமியின் முகம் சுருங்கிப்போனது.

அம்மா இரவு டிபன் ரெடிபண்ணிமுடித்தாள். நாங்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். அவரவர்கள் படுத்துக்கொண்டோம்.

 

மறுநாள் காலை எப்பொழுதும்போல் விடிந்தது. நான் அப்பாவிடம் பேராசிரியை என்னிடம் சொன்ன விஷயத்தைச்ச் சொன்னேன்.

‘நான் ஒரு பத்து நாளைக்கு பேராசிரியர் வீட்டுக்கு போக வேண்டாம். என்னை நூலகத்துக்கு போகச் சொல்லியிருக்கிறாங்க.  புத்தகம் எடுத்து படிக்கச் சொல்லியிருக்காங்க.. அதப்பத்தி  குறிப்பெழுதிகிட்டு வரணும். அந்த குறிப்ப அவுங்க பாப்பாங்க. நா எப்பிடி படிச்சிருக்கேன்னு பாப்பாங்க’

‘உனக்கு அதுஷ்டம் அடிச்சிருக்கு. நீ நெனக்கறது நடக்கும் போல’

அம்மா எங்கள் அருகே வந்து நின்றுகொண்டார்.

‘அப்ப கல்யாணம் கார்த்தி எல்லாம் எப்பபண்ணிகறது’

‘அவ ஆசையை பூர்த்தி பண்ணிக்கட்டும்’

‘நமக்கு ஒரு பொறுப்புன்னு இருக்கே. பெத்த பொண்ணுக்கு ஒரு நல்லவழி காமிச்சி விடணும் இல்லயா. வயசாயிண்டே இருக்குதானே’

‘ஏண்டி நமக்கு  இப்ப பொழப்பே சந்தில இருக்கு’

‘ அதுக்குன்னு என்னவாம்.  அது எப்பவும் இருக்கறதுதான். இதுல என்ன அதிசயம்.ஒரு நல்ல பயனா பாத்து கடனோ ஒடனோ வாங்கி இவ கல்யாணத்த முடிக்கவேண்டாமா. அவதான் கொழந்தயா பேசறான்னா அத கேட்டுண்டு ஒக்காந்து இருக்கணுமா. இன்னக்கிக்கூட பொண்ணு கேட்டு ரெண்டு பேர் அப்பாவும் புள்ளயும் நம்மாத்துக்கு வரலயா. அந்த வரனுக்கு என்ன கொறச்சல். என்ன கேட்டா நா சொல்வேன்  அந்த பையனுக்கு வேதாவ குடுத்துட்டு நிம்மதியா ந்ம்ம கடமய முடிச்சிடலாம்.’

நான் அப்பா  அம்மாவுக்கு என்ன பதில் சொல்கிறார் என்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

’ சாமி ஸ்கூல் போயாச்சா’

‘ஆச்சி ஆச்சி’

‘வெள்ளாழத்தெருவுல ஆச்சியா’

‘வெளயாட்டா பேசாதிங்கோ’

’ அவ என்ன பிரியப்படறாளோ அது ஆகட்டும். இங்க அண்ணாமலநகர் வரப்போறம்னு நாம வருவோம்னு நெனச்சமோ. தம்பி சென்னைக்கு நம்பள விட்டுட்டு போப்போறோம்னு கண்டோமா. இந்த ப்ரொபசர் இவ்வளவு அனுசரணையா நமக்கு ஒரு கொடுப்பனையா வரப்போறான்னு தெரியுமா. வேதாவுக்கு ஒரு நல்ல காலம்னு எனக்கு தோணறது’

அப்பா பேசியது எனக்கு மனதிற்கு இதமாக இருந்தது.

‘ நா லைப்ரரி போயிட்டுவரணும் இண்ணயிலேந்து’

‘ஒண்ணும் வேண்டாம் உன்னவிட்டா  நீட்டா போயிண்டே இருப்ப’

‘ மூடு வாயை’ அப்பா அம்மாவை அதட்டிச்சொன்னாள்.

‘எதுக்கு நா மூடணும்.  உங்க கையில கோளாறு. எங்கயாவது போயிடு நீன்னு  தருமங்குடிய விட்டு  கெளப்பிட்டா. இங்க வந்து ஒண்டிண்டு இருக்கம். இது எத்தனி நாளுக்குன்னு தெரியல. பெத்த பொண்ணு வழியா ஒரு வெளிச்சம் வருமான்னு நா பாக்கறேன். உம் பொண்ணு எனக்கு குடுன்னு நம்ம ஆத்து படியேறி வந்து கேக்கறவாள்கிட்ட நாம நம்ம நெலமய எடுத்து சொல்லலாம். எல்லாத்துக்கும் நல்ல வழி ஒண்ணு பொறக்கும்தானே’

அம்மா பேசியதைக்கேட்க எனக்குப் பரிதாபமாகக்கூட இருந்தது.

‘தருமங்குடில இருந்து இருந்தோம்னா என்ன பண்ணிருப்போம். பொண்ணு கல்யாணத்ததான் பிரதானமா பார்த்துண்டு இருப்போம். வேதாவும் ஒண்ணும் சொல்லப்போறதும் இல்ல. அப்ப அவளுக்கு வெளி ஒலகம் தெரியாது. யாருக்கானு கழுத்த நீட்டுன்னு சொன்னா நீட்டுவா. அவன் அழச்சிண்டு போயிடுவான். அவன் எந்த கோவில்லயாவது மணியடிச்சிண்டு இருப்பான். இப்ப நெலம மாறி இருக்கு. அவளுக்கும் படிக்கணும்னு ஆசை இருக்கு. சூழ்நில தோதுமாதா அமஞ்சி இருக்கு.ஒரு ப்ரொபசர் ஒத்தாச பண்ரேங்கறா. வேற என்ன வே.ணும். நம்ம பொழப்பும்  நாமளும் கொழப்பத்துலதான இருக்கம்.’

‘நொண்டி குதிரைக்கு வழுக்கினது சாக்குன்னு ஆகியிருக்கு’

‘ஆமாம் நொண்டி குதிரைதான். வழுக்கினதும் உண்மை’

அம்மா அப்பாவைப்பார்த்துச் சொல்லிக்கொண்டு இருந்தாள். நான் நூலகத்துக்குக்கிளம்பத்தயார் ஆனேன்.

‘ஒன் இஷ்டம்’

அம்மா என்னைப்பார்த்துச்சொன்னாள். நான் அப்பாவைப்பார்த்துப் புன்னகைத்தேன்.

‘நீ ஒன் ஜோலிய பார்’

‘அந்த லைப்ரரி எங்க இருக்குன்னு தெரியுமா’ அம்மா என்னைத்தான் கேட்டாள்.

‘தெரியும்’ என்றேன்.

‘பத்திரமா போனம் எத படிக்கணுமோ அத  படிச்சம் வந்தம்னு வா’ எச்சரிக்கையாய் அம்மா எனக்குச்சொன்னாள்.

நான் ஒரு நோட்புக்கையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

‘நான் போயிட்டு வறேன்’

அம்மாவையும் அப்பாவையும் பார்த்துச்சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். வானம் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்துவிடுமோ என்கிறமாதிரி மிரட்டிக்கொண்டும் இருந்தது. மாணவர்கள் சாலையில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை முன்பாக அனேக கார்கள் ந்ன்றுகொண்டிருந்தன. இசைக்கல்லூரிவாயிலில் மாணவிகளின் கூட்டமாக இருந்தது. வீணையின் ஒலி சன்னமாகக்கேட்டுக்கொண்டேயிருந்தது. ரசாயனம் பயிலும் மாணவர்களின் ஆய்வுக்கூட நெடி சற்றுக்கூடுதலாக இருந்தது. பூமா கோவில் வாயிலிலிருந்து குறுக்காக நடந்து சி பி ஆர் நூலகம் வாயிலை அடைந்தேன்.பெரிய கட்டிடமாக இருந்தது. வாயில் தூண்கள் பிரமிப்பூட்டுவதாக இருந்தன.

தமிழ்ப் புத்தகங்கள் பகுதி எங்கே இருக்கிறது என்று கேட்டுத்தெரிந்துகொண்டேன். வரிசை வரிசையாக நிற்கும் புத்தகத்தாங்கிகளைப் பார்த்துக்கொண்டேன். தூண்களில் கவிதை கட்டுரை சிறுகதை புதினம் ஆய்வு நூல் என  எழுதிய பலகைகள் தொங்கிக்கொண்டிருந்தன. எதனில் தொடங்கலாம் என்கிற யோசனை. படித்தவுடன் எளிதில் விளங்கிக்கொள்ளும்  விஷயத்திலிருந்து தொடங்கலாம். ஆகக் கட்டுரை நூல்கள் வரிசையில் பார்த்துக்கொண்டே வந்தேன். கட்டுரை நூல்களிலும்  கடினமான நடையுடைய நூல்கள் இல்லாமலா இருக்கத்தான் செய்யும். காந்திஜியின் ‘சத்திய சோதனை’ டக்கென்று கண்ணில் பட்டது. அந்தப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப்பகுதியின் நூலகப்பொறுப்பாளர்

 ’ எடுத்த புக்குக்கு ஒரு எண்ட்ரி ரெஜிஸ்டர்ல போட்டுட்டு படிங்க’ என்றார்.  அந்தப்புத்தகபதிவேட்டைப்புரட்டினேன். பேனா ஒன்று டொயின் நூலால் கட்டப்பட்டு இருந்தது. எழுதுகோல் இல்லாமல்  நூலகம் வருவோர் உபயோகிக்க அது இணைக்கப்பட்டு இருக்கலாம். ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு எண் இருந்தது. நூலகத்தின் பெயர், நூலகத்தில் அதன் பகுதி,  இந்நூல் எது குறித்துப்பேசுகிறது,அது உறையும் ராக்கின் எண். அந்த ராக்கில் அதன் தனிப்பட்ட எண் இவை எல்லாவற்றையும்  கணக்கில் கொண்டு அந்த பிரத்யேக எண் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அந்த எண்ணை எழுதி என் பெயர் எழுதி கையொப்பமிட்டேன். சத்தியசோதனையை வாசிக்க ஆரம்பித்தேன். இது ஓர் மொழிபெயர்ப்பு நூல்.  காந்திஜி குஜராத்தியில் எழுதிய நூலினைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். ஆங்கிலவழி தமிழுக்கு வந்த நூல் இது.

சத்திய சோதனை என்கிற  சுய வரலாற்று நூலை காந்திஜி எழுதியிருக்கிறார் என்பதே இப்பொழுதுதான் எனக்குத்தெரியும்.  தருமங்குடியிலேயே  வாழ்ந்திருந்தால் இந்த சமாச்சாரமெல்லாம் நான் எங்கே போய் தெரிந்துகொள்வது. பெண்களைக் குழந்தை பெற்றுத்தருபவர்களாக சோறு பொங்கிப் போடுபவர்களாக மட்டுமேதான்  சமுதாயம் பார்க்கிறது. அதுவே  முற்றிலும் சரி என்று ஏற்றுக்கொள்பவர்களாகவே என் கண் முன்னே உலாவும் பெண்களும் இருக்கிறார்கள்.

 அப்பாவுக்குக்கை சரியில்லை என்றால் அப்பாவுக்கு ஒத்தாசைக்குக்கூட  நான் கோவிலுக்குப் போகக்கூடாதாம்.தருமங்குடி கிராமத்தில் மட்டுமா இந்தத்தேசம் என்ன  இந்த உலகம் முழுவதிலும் பெண்களைக்கடவுளுக்கு அருகே யார் அனுமதிக்கிறார்கள்.கடவுளில் பெண்கடவுளர்கள் உண்டு. ஆனால் பூசாலிகளில் பெண்களப் பார்க்கமுடியுமா என்ன? என்ன சட்டமோ யார் எந்தக்க்காலத்தில் போட்டுவிட்டுப்போனார்களோ. தருமங்குடி கிராமத்தில் பக்கத்துவீட்டு ஐயர் பையன் சந்துருவும்கூட  கை சரியில்லாத உடம்பு முடியாத என் அப்பாவோடு கோவில் பூஜைக்கு ஒத்தாசைக்குப்போகக்கூடாது. இந்த கறார்ச் சட்ட திட்டமெல்லாம் யார் எழுதிவைத்த நீதியோ.

மேலே காத்தாடி சுற்றிக்கொண்டிருந்தது. மின்சார விளக்குகள் பளிச்சென்று எரிந்துகொண்டிருந்தன. சத்திய சோதனை புத்தகத்தைத்தொட்டு தொட்டு அந்தப் பெரிய மகானோடு பேசுவதாய் நினைத்துக்கொண்டேன்.

தருமங்குடி பள்ளிக்கூடத்திலும் சுதந்திர தின விழா நடக்கும். குடியரசு தின விழா பார்த்திருக்கிறேன். கொடியேற்றுவார்கள்.’ காந்தி என்ற நாதமே சாந்தி நல்கும் வேதமே ‘ பாடியிருக்கிறேன். மிட்டாய் கொடுப்பார்கள். தருமங்குடி  ஊர் பிரெசிடெண்ட் வழக்கமாய் வாங்கித்தரும் புளிப்பும் இனிப்புமாய்  ஆரஞ்சுச் சுளை உருவத்தில் மிட்டாய்கள் விநியோகமாகும். தருமங்குடி கிராமத்தில் ஊரைச்சுற்றி வந்திருக்கிறோம். கையில் கொடி பிடித்துக்கொண்டுதான். பொக்கைவாய் மொட்டைத்தலை மூக்குக்கண்ணாடி இடுப்பில் வேட்டி அதனில் தொங்கிக்கொண்டிருக்கும்  பாக்கெட் வாட்ச் மேலே அங்க வஸ்திரம் இப்படியாய் காந்திஜி போட்டோ பள்ளிக்கூடத்தில் இருக்கும். போட்டோவில் காந்தி நல்ல சிவப்பாய்த்தெரிவார். தலையில் முடி இருக்காது. மீசை நரைத்திருக்கும். பொக்கைவாய். வருடத்திற்கு இரண்டு தினங்கள் அந்த காந்திப்படத்திற்கு  பூ மாலை போடுவார்கள்.  நான் பார்த்திருக்கிறேன்.

சத்தியசோதனை புத்தகத்தைப்புரட்டினேன். அது பழைய நூலாக  இருந்தது. புத்தகத்தின் ஐந்தாவது  பக்கத்திலே காந்தி இப்படி எழுதியிருந்தார்.’

’இப்பக்கங்களில் நான் எழுதப்போவதில் ஒன்று தற்பெருமையோடு கூறப்பட்டது போல் வாசகருக்குத் தோன்றுமாயின் என் சத்தியத்தேட்டத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்றும் எனக்குத்தோன்றும் காட்சிகளும் கானல் நீரைப்போன்றவையே ஒழிய உண்மையானவையல்ல என்றுந்தான் அவர் கொள்ளவேண்டும்.  என்னைப்போன்றவர்கள் நூற்றுக்கணக்கில் அழிந்தாலும் சரி சத்தியம் நிலைக்கட்டும்’

 இதனைப்படித்தபின்னர் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சத்தியத்தைத்தூக்கிப்பிடித்து நின்ற மாமனிதரை  அநியாயமாய் இழந்து விட்டு இந்த தேசமும் நாமும் எப்படி  நிம்மதியாய் வாழ்கிறோம் என்று மனம் உறுத்தியது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் சத்தியசோதனை. சில சில வரிகளைக்குறிப்பாக எடுத்துக்கொண்டேன். பேராசியர் என்னை நோட்டுப்புத்தகத்தோடுதானே நூலகத்திற்கு போகச்சொன்னார். புத்தகத்தின் குறிப்புக்கள் மிக முக்கியம்தான்.

சில வார்த்தைகள் கடினமாக இருந்தன. பொருள் விலங்காமல்தான். தேட்டம் என்பது என்னவோ. சத்தியம் புரிகிறது. தேட்டம் என்றால் தேடுதலாக இருக்கலாம். பேராசிரியரைக்கேட்டு முடிவுக்கு வருவேன்.

சமய அறிவின் உதயம் என்னும் பத்தாவது கட்டுரையைப்படித்தேன். தேசத்தந்தை காந்திஜி இப்படிப் பேசுகிறார்.’ கோயிலில் நான் பெறமுடியாது போனதை எங்கள் குடும்ப வேலைக்காரியான என் செவிலித்தாயிடமிருந்து பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர்.’ சமயம் என்பது வழிபாடு சம்மந்தப்பட்டதாக இருக்கலாம்.

ராம நாமத்தை தனது  உயிர் பிரியும் கடைசி தருணம் வரை திரும்பத்திரும்ப காந்தி சொல்லிவந்திருக்கிறார். எப்பவோ கேள்விப்பட்டது. பள்ளியில் ரகுபதி ராகவ ராஜாராம்  பதீத பாவன் சீதாராம் ஈசுவரர் அல்லா தேரே நாம் சபுகோ ஷண் மதி தே பகவான் கூட்டத்தோடு கூட்டமாய் பாடியதாக நினைவு. காந்திஜியின் ராமபக்திக்குக்காரணம் காரணம் அந்த செவிலித்தாயும் வேலைக்காரியுமான   ரம்பா  அச்சத்தைப்போக்குவதற்கு  ’ ராம நாம  ஜெபம் செய்’ என்று  அடி நாளில் சிறுவன் காந்திக்குச் சொல்லிக்கொடுத்த  யோசனையே.

லண்டனுக்குப்படிக்கப்போக காந்தி முடிவுசெய்கிறார். அவர் பிறந்த சாதியின் சங்கத்தார் கப்பல் பயணத்தை  அனுமதிக்க மறுக்கின்றனர்.இந்துமத ஆச்சாரங்களை வெளிநாட்டில் அனுஷ்டிக்க முடியாது. ஆக காந்தி லண்டன் செல்வதை த்தடுத்து உத்தரவு போடுகின்றனர்.

‘இன்று முதல் இப்பையனை சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டவனாக நடத்தவேண்டும்.இவனுக்கு  யார் உதவிசெய்தாலும் இவனை வழியனுப்ப யார் துறைமுகத்திற்குச் சென்றாலும் அவருக்கு ஒரு ரூபாய் நான்கணா அபராதம் விதிக்கப்படும்.’

‘சாதிக்கூட்டத்தின் கட்டளையை மீறி நடக்கப்போகிறாயா?  சங்கத்தார் கேள்வி வைக்கிறார்கள்.

‘எனக்கு வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் சாதி தலையிடக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்..’ காந்தி  அவர்களுக்குப்பதில் சொல்கிறார்.

ஆனால்  இத்தடைகள்  எல்லாவற்றையும் மீறி  காந்தி லண்டன் புறப்படுகிறார். கோடிக்காண மக்களின் இதயங்களில் ஜீவிக்கப்போகிற ஒரு மனிதர் அல்லவா காந்தி நான் எண்ணிப்பார்த்தேன்.

அன்று சாதித்தலைவர்கள் சொன்னதைக்கேட்டிருந்தால் அவர் இந்த நாட்டின் தேசபிதாவாக உயர்ந்திருப்பாரா நானே ஒரு முறை எண்ணிப்பார்த்தேன்.

வக்கீலுக்குப்படித்து இந்தியா திரும்பிய காந்தி பம்பாயில் தனியே அறை எடுத்துத் தங்குகிறார். வக்கீல் தொழிலில் அனுபவம் பெறலாம் என்பது திட்டம். சமைப்பதற்கு ரவிசங்கர் என்கிற ஒரு பிராமணனை ஏற்பாடு செய்துகொள்கிறார்

‘ரவி சங்கர் உமக்குச்சமையல் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் சந்தியாவந்தன மந்திரம் முதலியன தெரிந்தே இருக்கவேண்டுமே? காந்தி கேட்கிறார்.

‘சந்தியாவந்தனமா? ஐயா கலப்பையே எங்கள் சந்தியாவந்தனம். மண்வெட்டியே எங்கள் அனுஷ்டானம்.அந்த வகையைச்சேர்ந்த பிராமணன் நான். உங்கள் கிருபையைக்கொண்டு நான்  வாழவேண்டியவன். இல்லாவிட்டால் எனக்கு விவசாயம் இருக்கவே இருக்கிறது’  சமையல்காரர் ரவிசங்கர் பதில் சொகிறார்.

ஒன்றுக்கு இரண்டுமுறை படித்தேன். குறிப்பெடுத்துக்கொண்டேன். பிராமணர்களில் விவசாயிகள் என்கிற ஒரு பிரிவு கூட இருக்கிறதா எண்ணிப்பார்த்தேன். இது எனக்கு புதுச் செய்தியாக இருந்தது. ஒரு கலப்பையும் மண்வெட்டியும் தூக்கும் ஒரு பிராமணனை நான் பார்த்ததேயில்லையே. இப்படிக்கூடவா இருக்கும். காந்தி உண்மையைத்தானே எழுதியிருப்பார். யோசனை எங்கெங்கெல்லாமோ  சென்றது. இதனையும் குறிப்பு நோட்டில் எழுதிக்கொண்டேன்.

 தென்னாப்பிரிக்காவில் நடைபாதையில் நடந்ததற்காக  போலிஸ்காரரால்  காந்தி விரட்டப்பட்டு உதைக்கப்படுகிறார். லண்டனில் வக்கீல் படித்த  இந்தியமனிதர் தென்னாப்பிரிக்காவில் சில வீதிகளில் நடக்கத்தடை.

 சரியான டிக்கட் வாங்கியிருந்தும் ரயிலில் முதல் வகுப்பில் பயணிக்கத்தடை.  வெள்ளைக்காரர் காந்தியை கீழே இறக்கிவிடுகிறார்.,

‘’தென்னாப்பிரிக்கா சுயமரியாதையுள்ள இந்தியனுக்கு உகந்த நாடன்று என்பதைக்கண்டேன்’   காந்தியே குறிப்பிடுகிறார்.

உலகம் என் கண்களில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விரிய ஆரம்பித்ததை நிஜமாகவே உணர்ந்தேன். நூலகத்தை ஒருமுறை சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். அடுக்கியிருந்த புத்தகங்கள் எல்லாம் என்னைப்பார்த்து புன்முறுவல் செய்வதாய் ஏனோ தோன்றியது..

தென்னாப்பிரிக்காவில்தான் காந்தி இந்திய விடுதலைப்போராட்டத்தை எப்படி எல்லாம்  நடத்திச்செல்வது என்பதற்கு நல்லதொரு பயிற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு சற்று விளங்கியது. அதற்காக அந்த நாட்டிற்கு  என்றும் நாம் கடமைப்பட்டவர்கள் என்கிற எண்ணமும் எனக்கு சேர்ந்தே தோன்றிவிட்டது.

காந்தி சொல்கிறார்,

’‘பாய்’ அதாவது சகோதரர் என்பதுதான் அச்சொல். நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்துவிடும்வரையில் என்னை ‘பாய்’ என்றே அந்த மக்கள் கூப்பிட்டு  வந்தார்கள். ஒப்பந்தத்தொழிலாளராக இருந்த  இந்தியர்  என்னை  ’பாய்’ அழைத்தபோது அதில் இனிமையானதொரு மணம் கமழ்ந்தது’

படிக்கப்படிக்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனையும் நோட்புக்கில் எழுதிக்கொண்டேன்.   தென்னிந்தியா பற்றி காந்தி எழுதியிருப்பதைப்படிக்க ஆர்வம் கொண்டேன்.    கம்பீர கோட்டும் சூட்டும் என்று தான் போட்டிருந்த உடையைத் தமிழகம் வந்து அதுவும் மதுரையில்தான்  காந்தி களைந்துவிட்டு வேட்டிக்கும் துண்டுக்கும் மாறியிருக்கிறார். இதனைக் கொடி ஏற்றும் நாள் ஒன்றில்  என் பள்ளிக்கூடத்தில் பேசவந்த பெரியவர் எங்களுக்குச் சொல்லியிருந்தார்..

‘தென்னாடு எப்பொழுதுமே எனக்குச்சொந்த வீடு போல் தோன்றும்-தென்னாபிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர்மீதும் தெலுங்கர்மீதும் எனக்கு ஒருவகையான தனிஉரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள் என் நம்பிக்கையை என்றும் பொய்ப்பித்தது இல்லை.’

காந்தியின் இந்த நல்ல சான்றிதழ் எனக்கு நிறைவைத்தந்தது. குறிப்பேட்டில் இதனை அழகாய் எழுதிக்கொண்டேன்.

சத்தியசோதனைப்புத்தகத்தை நான் எடுத்த இடத்தில் வைக்கப்போனேன்.

‘ மேடம்  படிச்சி முடிச்சா  டேபில் மேல வையுங்க, நாங்க எடுத்து வச்சிகுவம்’

அந்தப்பகுதிக்குப்பொறுப்பாளர் உரக்கச்சொன்னார். நான் புத்தகத்தை அதற்கான மேசைமீது வைத்தேன். கையில் நோட்டை எடுத்துக்கொண்டேன்.

நூலகத்தில் என்னை மேடம் என்று அழைத்தார்கள். இப்போதுதான் முதன் முதலாகக்காதால் கேட்கிறேன்.  எத்தனைப்பெருமையாக இருந்தது. நூலகத்தைவிட்டு வெளிவந்தேன். எண்ணிப்பார்க்கிறேன். நான் பெரியவள் ஆனேன். அம்மாதான்  எனக்குச் சொன்னாள். தருமங்குடியில்  ஒருநாள் மாலைநேரம். என்னமோ ஏதோ என்று பயந்து அம்மாவிடம் ஓடி’ அம்மா எனக்கு என்னவோ ஆகிவிட்டது பார்’ கண் கலங்கி அச்சத்தில் நின்றேன். அம்மா என்னைக்கொல்லைப்புறமாய்க் கூட்டிக்கொண்டுபோனாள். அப்படியே  என்னை முழுவதுமாய்ப்பார்த்தார்.

‘இதுக்கு போய் அழுவாளா. நீ பெரிய மனுஷிடி இனிமே’

‘என்னம்மா சொல்ற’

‘ஆமாண்டி இது சந்தோஷப்படற சமாச்சாரம். நா எதிர் பார்த்துண்டுதான் இருந்தேன். எல்லா பொம்மனாட்டிக்கும் வர்ரது. வரணும். இதுதான் நாம பொம்மனாட்டி கொழந்த பெத்துக்கறதுக்கு தயார்னு சேதி சொல்றது.’

‘மாசம் ஒரு தடவ நீ சொம்பயும் தட்டயும் தூக்கிண்டு ஓரமா ஒக்காந்துப்ப. அப்பாவும் நானும் அடுப்பங்கரையில தடமாடுவமே அந்த சமாச்சாரமா’

‘அதுவேதான்’

அம்மா எனக்குப்பழந்துணி கிழித்துக்கட்டி கோவணமாய்க் விட்டாள். நானும் பிறகு பிறகு அந்த கார்யங்கள் எல்லாம் என்ன என்று  தெரிந்துகொண்டேன்’

அன்றைக்கு என்னைப் பெரிய மனுஷி என்றார்கள். அப்பா மகிழ்ந்து போனார். வீட்டோடு விசேஷம் முடிந்துபோனது.

தருமங்குடிக்காரர்கள்  பேசிக்கொண்டார்கள் ‘நான் சமைந்து விட்டேன்’ .

நூலகத்தில் நுழைந்த நான் இன்றுதான் மேடம் ஆகியிருக்கிறேன். எனக்கு நிமிர்ந்து நடக்கவே ஆசையா இருந்தது. இனி அப்படியே  நிமிர்ந்து நடக்கவேண்டும் என்று முடிவோடு வீட்டுக்குத்திரும்பிக்கொண்டிருந்தேன்.

வீட்டு வாயிலில் சாமி நின்றுகொண்டிருந்தான். அவன் சினேகிதர்கள் இருவர் அவனோடு பேசிக்கொண்டே இருந்தனர். இப்போது சாமியின் கூட நிற்கும் பையன்களைப்பார்த்து அச்சமாக இருந்தது.

‘என்ன யோசனை பசங்களா’

‘ஒண்ணும் இல்ல அக்கா.’

‘ஒண்ணும் இல்லாம மூணு பேரும் பேசுவீங்களா’

‘ஓண்ணும் இல்ல. நெஜமா’

நான்  வீட்டுக்குள்ளாகச் சென்றேன். அம்மா ஸ்வாமி முன்பாக அமர்ந்து  கந்த சஷ்டி கவசம்’ படித்துக்கொண்டிருந்தாள். அப்பா கோவிலுக்குச்சென்றிருக்கலாம்.

’சாமி கோவிலுக்கு போகலையா’

‘போகல. அவன் கிளாஸ் பசங்க ரெண்டு பேர் வந்தானுக’

‘ஆமாம் வாசல்ல பாத்தேன்’

இன்னும் என்ன பிளான் போடறுனுகளோ

‘நாம ஜாக்கிரதயாதான் இருக்கணும் சாமிண்ட நானும் ஜாடயா கேட்டேன ஒண்ணும்இல்லேன்னு சொல்றான்’

வர வர எனக்கு பயமா இருக்குடி’

‘என்ன பண்றது. நல்ல பையந்தான். வயசு . செறுவயசு’

அம்மா தெருவுக்குப்போனாள்.

‘சாமி சாமி’

இரண்டு முறை கூப்பிட்டாள்.

‘பசங்களா ஓடுங்க நேரமாச்சு. உங்க அம்மா தேடுவாங்க’

சாமி ஓடிவந்து ‘என்ன பெரியம்மா’ என்றான்.

‘பேசினவரைக்கும் போறும். ஆத்துகுள்ள வாடா. படிக்கற வேலய பாரு. விபூதி இட்டுகோ’

சாமியின் நண்பர்கள் கலைந்து சென்றார்கள். நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டே சென்றார்கள்.

‘சாமி பெரியப்பாவோட கோவிலுக்கு போகல’

‘ஆமாம் என் ஃப்ரெண்ஸ் வந்தாங்களே’

‘சரி சரி ஒம்மேல தப்பு இல்லே’

சாமி கைகால் அலம்பிக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டான்.

‘சந்தி பண்ணுடா’

‘சரி பெரியம்மா சந்தி பண்றேன்’

‘பசங்கள காயத்ரிதான் காப்பாத்துவா’

பஞ்சபாத்திர உத்தரணி எடுத்துக்கொண்டு அவனுக்குத்தெரிந்த அளவில் சந்தியா வந்தனம் செய்தான். காயத்ரி ஜபம் செய்தான். ஸ்வாமி படத்துக்கு நமஸ்காரம் செய்தான். ஸ்லோகங்கள் சிலது சொல்லி முடித்தான். புத்தகப்பையை எடுத்து வைத்துக்கொண்டு வீட்டுப்பாடங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கவனித்தான். அம்மா இரவு உணவு தயார் செய்து கொண்டு இருந்தாள்.

‘சாமி இங்க வா’

‘என்னக்கா’

‘என்ன பசங்கள் திட்டம் போட்டு இருக்கேள்’

‘ஒண்ணும் இல்ல’

‘சொல்லுடா சாமி எங்கிட்ட சொல்லணும்தானே’

‘நீ பெரியப்பாண்ட சொல்லிடுவ’

‘இல்ல சொல்லமாட்டன்.’

‘நெஜமா’

‘நெஜமா’

சாமி சமையலறைப்பக்கம் பார்த்துக்கொண்டான்.

‘ நாங்க சினிமாக்கு போப்போறம்’

‘எங்க’

‘லேனா தியேட்டர்னு இருக்காம்’

‘என்ன படம்’

‘அதெல்லாம் தெரியல’

‘காசு வேணுமே’

‘ஒரு பையன் எடுத்துண்டு வருவான்’

‘நீங்க எத்தினி பேர் போறேள்’

‘அதான் நீ பாத்தியே மூணு பேர்’

‘நானும் வரட்டா’

சாமி சிரித்தான்.’ நீ வருவியா எப்பிடி’

‘வரேன்’

‘லைப்ரரிக்கு போறதா சொல்லிட்டு வருவியா. அப்பண்ணா சரி’

‘எனக்கு காசு வேணுமே’

‘என் ஃப்ரெண்டுகிட்ட சொல்றன். அவன் எடுத்துண்டு வருவான்’

‘எப்ப போறம்’

‘பசங்கள கேட்டுட்டு சொல்றன்’

‘சரிடா சாமி’

சாமியின் முகம் மலர்ந்து இருந்தது. எனக்கும் மகிழ்ச்சிதான். சாமிக்கு இப்படியெல்லாம் ஆசை வருவதில் தவறில்லை. ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.

‘அவன் அப்பா அம்மா இருந்தால் சினிமாவுக்குக்கூட்டிப்போவார்கள்தானே’ நானே எனக்குள் சொல்லிக்கொண்டேன்.அப்பா சாயரட்சை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

‘லைப்ரரி போயிட்டு வந்தாச்சா’

‘ஆச்சு’ பதில்  சொன்னேன்.

‘எப்பிடி இருந்துது’

‘ந்ன்னா இருந்துது. மகாத்மா காந்தியோட சுய சரிதம் படிச்சேன்’

‘சத்ய சோதனைதானே’

‘உனக்கு தெரியுமா’

‘தெரியாம என்ன எப்பவோ படிச்சிருக்கேன். ஆனா எதுவும் ஞாபக இல்லே. என்ன எதுவும் கேட்டுடாதே’

எனக்கு சிரிப்பாக வந்தது. நான் அப்பாவை என்ன கேட்கப்போகிறேன்.

 

இரவு அம்மாவிடம் சொன்னேன். சாமியுடன் வந்திருந்த பையன்கள் சினிமாவுக்குப்போகத்திட்டம் போட்டிருப்பதைச்சொல்லிமுடித்தேன்.

சாமி நல்ல உறக்கத்தில் இருந்தான்.

‘நா முழிச்சிண்டுதான் இருக்கேன்’

அப்பா மெதுவாகச்சொன்னார்.

‘உங்களுக்கு காதுல விழுந்துட்தா’

‘ஆமாண்டி எனக்கு தூக்கம் எங்க வர்ரது. என்னமோ விசாரம். இப்பிடியே  கண்ண மூடி மூடித்தொறந்தன்னா  போது வெடியறதுன்னு அந்தக் கோழி கூவிடும்’

‘வேதா நா சொல்றத கேளு. நாளைக்கே நீ அவன அதே கொட்டாயில அதே சினிமாக்கு கூட்டிண்டு போ. அவன் அந்த பசங்களோட எல்லாம் போவேண்டாம்’

அம்மா சொன்னாள்.

‘இது நல்ல யோஜன’ என்றார் அப்பா.

‘நாம எல்லாருமா  சினிமாக்கு போலாம்’ என்றேன் நான்.

‘அது இப்பக்கி வேண்டாம். கொஞ்சம் நாள் ஆகட்டும். எனக்கு கோவில் வேலன்னு  ஒண்ணு நிரந்தரம் ஆகணும். இந்த கோவில்ல  தொங்கல் பொழப்பு எப்ப முடியும்னு பாக்கறன்’ என்றார் அப்பா.

‘இது எல்லாம்  இப்பக்கி முடியும்னு தோணல. இதுவே உங்களுக்கு  நிரந்தரம் ஆனாலும் ஆயிடும்’

என்றாள் அம்மா.

’என்தம்பி வருவான். நா  இதவிட்டு கெளம்பணும்’

‘நேக்கு அப்பிடி தோணல’ அம்மா அழுத்திச்சொன்னாள்.

‘நாளக்கே  சாமிய  கூட்டிண்டுநீ மட்டும்  சினிமாக்கு போயிட்டுவா. அது போறும்’

‘ வாசல்ல  பசங்க பேசிண்டாளே   சினிமாக்குப்போறேன்னு  பிளான் போட்ட சேதிஎல்லாம் எங்களுக்கு  தெரிஞ்ச மாதிரிக்கி நீ  காட்டிக்காதே’

அம்மா எனக்கு எச்சரிக்கையாகச்சொன்னாள்.

‘ஆம்பள பசங்கட்ட ஜாக்கிரதயா இருக்கணும்’

‘பொண் கொழந்தகள் கிட்ட இன்னும்  செத்த ஜாக்கிரதயா இருக்குணும்’

‘ஏன்’

‘’அது ஏன்னு  நோக்கு தெரியாதா. பொண் கொழந்தேள்  வயசுன்னு ஒரு பிசாசுகிட்ட மாட்டினூட்துன்னா அந்த பிரும்மாவே வந்து புத்தி சொன்னாலும்  நீ போய்ட்டுவா உன் வேல எதாவது இருந்தா பாருன்னு பொறப்டுடுங்கள் ’

அம்மா சிரித்துக்கொண்டாள்.

‘ ஒண்ணு கெட்டிக்காரியா இருப்பா இல்லன்னா ஏமாந்துடுவா பொண்கள்’

‘ஆம்பள பசங்க’

‘ரெண்டுங்கெட்டானா மாட்டிண்டு முழிப்பான்.  எதயும் வச்சிக்கவும் தெரியாது விட்டெறியவும் வாய்க்காது’

அப்பா சொல்லிக்கொண்டார். உறக்கம் வந்தது.  நாங்கள் எல்லோரும் உறங்கிவிட்டோம்.

மறுநாள் சாமிக்கு பள்ளி விடுமுறை.

அப்பா ’சினிமாவுக்குப்போக இது வச்சிகோ  ஏதேனும் பிஸ்கட் வாங்கிச்சாப்பிட அத வச்சிக்கோ  என்று காசு கொடுத்தார். சாமிக்கு இது விஷயம்  எதுவும் தெரியாது.

நான் பெரிய  நூலகம் புறப்படும் சமயம் சாமியை அழைத்து’ என்னோடு வா போலாம்’

என்றேன்.

ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தான்.

‘என்ன லைப்ரரில உள்ள விடுவாளா’

‘ஏன் கொழந்தகள் பிரிவுன்னு இருக்கே’

அவன் என்  அம்மாவிடம் அப்பாவிடம் சொல்லிக்கொண்டு ஆசையாப் புறப்பட்டான்.

நாங்கள் இருவரும் அண்ணாமலைநகர் அஞ்சலகம் முன்பாக நடந்தோம். சிதம்பரம் ‘லேனா தியேட்டர்ல  சரசுவதி சபதம்’ கட்டச்சுவர் ஒன்றில் போஸ்டர் ஒட்டியிருந்தது. நான் அதைப்படித்தேன்.

‘நான்கு காட்சிகள். காலையில 11 மணிக்கும் ஒரு காட்சியாம் பாரு அக்கா’

‘சாமி படம் போல’

‘ஆமாம் அக்கா அதான் பசங்க  எங்கிட்ட சொன்னாங்க போல’

‘போலாமா சினிமாக்கு’

‘ரைட்டா’ சாமி  தலையை ஆட்டினான்.

‘நீ  எல்லாம் சினிமாக்கு போறயா என்ன’

‘ஆமாண்டா வா போலாம்’

தயாராக நின்றுகொண்டிருந்த நகரப்பேருந்தில் ஏறினோம். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கி தியேட்டருக்கு நடந்தோம். தியேட்டர் அருகிலேதான் இருந்தது.

காலைக்காட்சியோடு நான்கு காட்சிகள் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

‘பெரிப்பாக்கு தெரியாம போலாமா’

‘நா சொல்லிடுவேன்’

‘திட்டமாட்டாரா’

‘திட்டுவார்தான்’

‘எனக்கு பயமா இருக்கு. ஆனா சினிமா பாகாணும்னு ஆசையா இருக்கு’

‘பரவால்லே சொல்லிக்கலாம்’

இருவரும் சினிமா பார்த்தோம். தியேட்டர் அழகாக இருந்தது. கல்வியா செல்வமா வீரமா என்கிற பட்டிமன்ற தலைப்பு. கலர்ப்படம். நகைச்சுவைக்காட்சிகளும் இருந்தன. சாமிக்கு ஏக திருப்தி. மகிழ்ச்சியாக இருந்தான்.

காரபூந்தி பொட்டலங்கள் இரண்டு வாங்கி ஆளுக்கொன்றாய்ச்சாப்பிட்டோம். புரச இலையில் பொட்டலம் கட்டியிருந்தார்கள். மணமாக இருந்தது காரபூந்தி.

‘பெரியம்ம ஏன்  நம்மாத்துல செய்யறேதில்ல’

‘’நாம சொல்லணும்’

‘நீ சொல்லு’

‘நா சொல்றேன்’

இருவரும் திரும்பவும் பஸ்பிடித்து அண்ணாமலநகர் திரும்பினோம்.

‘கல்வியா செல்வமா வீரமா

அன்னையா தந்தையா தெய்வமா

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா

இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா’   சாமிக்கு வாய் முணுமுணுத்துக்கொண்டே வந்தது.

‘ரொம்ப இந்த  புடிச்சிருக்கு பாட்டு.’

‘நீ நன்னாவே பாடுவே.  பாட்டு கத்துகோ’

‘எப்பிடி’

’கேட்டு கேட்டு கத்துகணும். அதான் பாட்டு’

‘இப்ப யாரும் கேட்டா என்ன  அக்கா சொல்றது’

‘யாருக் கேக்க மாட்டா’

’எப்பிடி அக்கா சொல்ற’

‘நீ வேணா பாரு’ பதில் சொன்னேன். இருவரும் வீட்டுக்குச்சென்றோம். அம்மா மட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தாள். அப்பாவைக்காணோம். வெளியில் எங்காவது சென்றிருக்கலாம்.

‘என்ன ஆச்சா’

‘ ஆச்சு’

நான் அம்மாவுக்குப்பதில் சொன்னேன்.  சாமி என்னயே பார்த்துக்கொண்டான்.

‘’சமத்தா ரெண்டு பேரும் சாப்டுட்டு வாங்கோ’

‘நாங்க சாப்டுக்கறம். நீ படுத்துக்கோ’

நாம் அம்மாவுக்குச்சொன்னேன்.

இருவரும் தலா ஒரு தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிடப்போனோம்.’

’அப்பா எங்கே’

‘டிரஸ்டியாத்துக்கு போயிருக்கார்’ அம்மா பதில் சொன்னள்.

மறுநாள் சாமி  வழக்கம்போல் பள்ளிக்கூடம் புறப்பட்டான். நான் இப்போதெல்லாம் அப்பாவோடு கோவிலுக்குச்செல்வதில்லை. அப்பாவே எப்படியோ சமாளிக்கக்கற்றுக்கொண்டார். கை அனேகமாக சரியாகி விட்டது. அது பற்றி அவர் பேசுவதும் கிடையாது.

இன்று நூலகத்திற்குச்செல்லவேண்டும். என்ன புத்தகத்தைப் படிக்க இருக்கிறோம் என்பது தெரியவில்லை. அங்குபோய்தான் அதனைத்தேடி எடுக்கவேண்டும். என் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். சினிமாவுக்குப்போய் வந்தது பற்றி அம்மாவும் அப்பாவும் ஒன்றும் கேட்கவில்லை. நானும் ஒன்றும் சொல்லவில்லை. சாமிநாதன் பள்ளிக்குச்சென்ற பிறகாவது அது பற்றிப்பேச்சு வந்திருக்கவேண்டும் வரவில்லை.

நான் சி பி ஆர் நூலகத்திற்கு வந்தேன் . வழக்கமாக எடுத்துவரும் நோட்டுப்புத்தகம் பேனாவோடு வந்தேன். தமிழ் நூல் பகுதியில் தேட புத்தகம் தேட ஆரம்பித்தேன். எல்லாம் கட்டுரைநூல்கள்.’டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூலை எடுத்துக்கொண்டேன். தேசிய வரலாற்று வரிசை என்று தலைப்பிடப்பட்டிருந்தது.மராத்தி மூல ஆசிரியர் வசந்த் மூன். தமிழில் என் ஸ்ரீதரன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நேஷ்னல் புக் டிரஸ்ட்  என்று விலாசம் கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 43 என்று போட்டிருந்தார்கள் 262 பக்கங்கள் இருந்தன. படிப்பதற்கு எடுத்த நூலினை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டேன். ஒரு நாற்காலி பார்த்து அமர்ந்துகொண்டேன்.

மேல் அட்டையில் உள்ள அம்பேத்கர் படத்தை  உற்றுப்பார்த்துவிட்டுப்பின் அட்டையில் கொடுத்துள்ள அவரின்  விபரம் என்ன என்று பார்த்தேன்.

‘இந்திய அரசியல் அமைஇப்புச்சட்டத்தின் சிற்பி. தலித்துக்களின் மாபெரும் தலைவர்.வணக்கத்திற்குரிய தேசத்தலைவர்களில் ஒருவர்.’

தருமங்குடியில் மக்கள் சாதி வாரியாகக் குடியிருப்பதைக்கண்டுள்ளேன். ஊரும் காலனியும் பிரிந்து கிடந்ததைப்பார்த்துள்ளேன். காலனிக்கு நான் சென்றதில்லை. அப்பாவும் அம்மாவும் என் பக்கத்து வீட்டாரும் சென்றதில்லை. போக முடியாதுதான்.  ஆனால் அந்தக் காலனி  மக்கள் ஊர் பக்கம் தினம்தினம்  வருவார்கள். அவர்களுக்கு கூலி  வேலை ஊர்ப்புறங்களில்தான் இருந்தது.

  காலனிப்பகுதி மக்களின் குளம் கோவில் பள்ளி  கடை  தண்ணீர் தொட்டி  மயானம்  அவர்களின் காலைனிப்பகுதியிலியே இருந்தது. அவர்களில் யாரும் ஊர் வீட்டாரின் வீடுகளுக்குள்ளே வருவதில்லை.  வரமுடியாது.  ஊரார்  மீதமான உணவு கொடுத்தால் தெருவில் இருந்து சாப்பிட்டுப்போவார்கள். அவர்களை ஊரார் யாரும் தொட்டுப்பேச மாட்டார்கள். அவர்ளின் தலைவராகத்தான் அம்பேத்கர் இருந்திருப்பார். என் மனத்திரையில் தருமங்குடி பற்றிய நினைவுகள் வந்து வந்து  போயின.

புத்தகத்தின் முதல் அத்யாயத்தை எடுத்துவைத்துக்கொண்டேன். முதல் வரியே எனக்குப்பிடித்துப்போயிற்று.

’பிறவி எடுப்பது மனிதன் கையில் இல்லை. அத்துடன் ஒருவன் பிறந்ததுமே சாதியும் குலமும் மதமும் அவனுடன் ஒட்டிக்கொண்டு விடுகின்றன.’ மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்தேன். சரியாகத்தான் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். எதை மாற்ற முடிகிறது. எதுவும் எளிது கிடையாதுதான்.

ஒரு விஷயம்  என்னைச்சற்றுக்கவனிக்க வைத்தது.

‘அம்பேதகர் என்ற குடும்பப்பெயருடைய  ஓர் அந்தண ஆசிரியர் அப்பெயரைப் பீமராவின் பெயருடன் சேர்த்து  எழுதிவிடும் அளவிற்கு அன்பு செலுத்தியதுடன் அவருக்கு நண்பகல் இடைவேளையில் சாப்பிடுவதற்குச்சப்பாத்தி முதலியவையும் அளித்து வந்தார்’

பீம ராவ் என்கிற பெயர் அம்பேத்கர் ஆன  வரலாறு எனக்குத்தெரிய  மகிழ்ச்சியாக இருந்தது.

கணிதத்தில் ஒரு விதியை கரும்பலகையில்  நிரூபிக்க ஆசிரியர் அம்பேதகருக்குக் கட்டளை தருகிறார். அம்பேத்கர் கரும்பலகை அருகே சென்றபோது உயர் சாதி மாணவர்கள் கரும்பலகை இருந்த  தங்கள் தங்கள் உணவுப்பாத்திரங்கள் அகற்றிக்கொண்டார்கள். இதனைப்படிக்க எனக்கு மனம் கனத்துப்போனது. ஒரு மாணவன் இந்த நிகழ்வை எப்படித்தன் மனதில் அசைப்போட்டுப்பார்த்திருப்பார் என்று எண்ணிப்பார்த்தேன்.

ஸதாராவில் அம்பேத்கருக்கு முடிவெட்ட எந்த நாவிதரும் முன் வரவில்லை. அவரது அக்காவே அம்பேத்கருக்கு முடிவெட்டிவிட்டார். தாழ்த்தப்பட்ட இனத்தோர் அனுபவித்த கொடுமைகள் என்னை வருத்தமுறச்செய்தன.

‘இது என்னுடைய தாய்நாடு என்பதை நினைவில் நிறுத்தச்சொல்கிறீர்கள். நான் மீண்டும் சொல்கிறேன்  இது என்னுடைய தாய் நாடு அல்ல. எந்தத்தீண்டத்தகாதனிடம் துளியாவது சுயமரியாதை உணர்வு உள்ளதோ எவனிடம் மனிதாபமான உணர்வு விழிப்புப்பெற்றுள்ளதோ அவன் ஒரு பொழுதும் இந்த நாட்டை  இது எனது தாய்நாடு என்று சொல்லமாட்டான். இந்த நாட்டில் நாய் பூனைக்குக் கிடைத்துள்ள வாழ்க்கை வசதிகூட அவனுக்குக்கிடைப்பதில்லை’

அம்பேத்கரின் மனம் எப்படித்துயர் உற்று இருக்கும் என்பதை எண்ணிப்பாத்தேன். மனம் கனத்தது. மேல்கொண்டு புத்தகத்தைப்படிப்பதற்கு மனம் செல்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தேன்.

‘ஏதாவது டீ சாப்பிடறீங்களா, வெளியில கேண்டீன் இருக்கு மேடம்.  பி ஜி ஹாஸ்டல் கேட்டுல’

நூலக எழுத்தர் என்னிடம் சொன்னார்.

‘இல்ல வேண்டாம்’

நான் மீண்டும் புத்தகத்தில் விட்ட இடத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்.

‘எனக்கு மனிதர்களைவிடப் புத்தகங்கள் மீதுதான் அதிகமான பிரியம்’ என்று 24-11-1932 ஜனதா பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பதைப்படித்துக்கொண்டேன்.

சில விஷயங்கள் எனக்குப்புரிந்தும் புரியாமலும் இருந்தன. போகப்போக புரியலாம். இன்னும் நிறைய படிக்கவேண்டும் அது மட்டும் உறுதியாகத்தெரிந்தது. சிலவற்றைப்பேராசிரியரைக்கேட்டுவிளங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

அம்பேத்கர் இப்படிச்சொல்கிறார்.

‘மானிட வாழ்க்கையைக்கட்டுப்பாட்டினுள்வைக்க ஏதாவது ஒரு மதம் தேவைப்படத்தான் செய்கிறது.மார்க்சின் கோட்பாடும் ஒரு மதம் போன்றே சுரண்டப்பட்டவர்களுக்கு அமைதி தருவதாக உள்ளது’

‘பேனாவால்  ஆவேசமாக எழுதிவிடுவதன் மூலம் லட்சிய சமூகத்தை நிறுவிவிட முடியாது’

மார்க்ஸ் என்பவர் யார் அவரின் கோட்பாடு என்ன ? இது அவசியம். தெரியவேண்டுமே. தெரிந்தவர்கள்யார்என்பதைத்தெரிந்துகொள்ளவேண்டுமே. இதனைக்குறித்துக்கொண்டேன். படிக்க படிக்க ஆசையாக நிறைவாக உணர்ந்தேன். படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற வெறிகூட எனக்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன் .  இவ்வுணர்வு  கானல் நீராக இருக்க இருக்கக்கூடாது என் மனம் சொல்லிக்கொண்டது. நான் பழைய வேதா இல்லை. எனக்கு நிறைய விஷயங்கள் தெரியத்தொடங்கின. உலகத்தை இப்போதுதான் நான் பார்ப்பதாகத் தோன்றியது.

‘வேதங்கள் கீதை தர்மசாஸ்திரங்கள் சுருதிகள் புராணங்கள் ஆகியவை வைதீக நம்பிக்கைகளின் அத்தாட்சி பெற்ற நூல்களாகக் கருதப்படுகின்றன. இந்துக்களின் சமூகத்தில் பெரும்பான்மையான பகுதியாக உள்ள பெண்கள், சூத்திரர்கள் என நான்காம் வருணத்தவர், அவர்களுக்கும் கீழானவர்கள்( தீண்டத்தகாவர்கள்) ஆகியோர் வீழ்ச்சிக்கு மேற்படி நூல்களில் உள்ள உபதேசங்கள்தான் காரணம் என்று அம்பேத்கர் கருதினார்.

இதைப்படித்தபின்னர் பெண்கள் எவ்வளவு இழிநிலையில் இந்து சமூகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன் சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள .பெண்கள் எல்லோரும் சூத்திரர்கள். ஆக நானும் சூத்திரப்பெண்ணே. நினைத்துப்பார்க்கிறேன். இந்த  சமுதாயம் பெண்களை மொத்தமாக இழிநிலையில் வைத்திருக்க சாஸ்திரங்களைத்துனைக்கு அழைக்கிறது. இவை மொத்தமாய் இறைவன் பெயரால்  பின்னப்பட்ட சதி என்கிற செய்தி எனக்கு எட்டியது. இதனையும் குறிப்பேட்டில் அழகாகக்குறித்துக்கொண்டேன். போதும் இனி இந்த புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள வேறேதும் வேண்டாமே என்கிற சிந்தனை வந்தது. புத்தகத்தை மூடி வைத்தேன். நூலகப்பதிவேட்டில் கையொப்பமிட்டு புத்தகத்தை வைக்கவேண்டிய மேசையில் வைத்தேன். நான் அப்படிச்செய்கிறேனா என்பதைக்கவனித்துக்கொண்டேயிருந்தார் நூலக எழுத்தர். குறிப்பு நோட்டோடு நூலகத்தைவிட்டு வெளியே வந்தேன். நூலகத்தப்பார்க்கும்போது அதுவே கடவுளின் இருப்பிடமாக இருக்க முடியும் என்று மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது.

படித்த விஷயங்களை எல்லாம் அசைபோட்டுக்கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் ஐம்பது பேருக்குக்கூடி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தார்கள்.

‘சாதிச்சண்டை’ என்று சாலையில் போகிறவர்கள் சொல்லிக்கொண்டே நடந்தார்கள்.

‘இல்லாத ஒன்றிர்க்கு எத்தனை சண்டை’ சொல்லிக்கொண்டே நடந்தேன். இரு சக்கர வாகனங்கள் ஏகத்துக்கு சாலை நிறைத்து சென்றுகொண்டிருந்தன. யாரும் அந்த மாணவர்கள் சண்டை பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை.

‘பசங்கன்னா அப்படி இப்பிடிதான்’ குச்சி அய்ஸ் விற்பவன் சொல்லிக்கொண்டே தனது  சைக்கிளை  தள்ளிக்கொண்டே போனான். நான்  என் வீட்டிற்குள் நுழைகிறேன்.

அப்பா பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பஞ்சாங்கத்தைப்புரட்டிக்கொண்டு இருந்தார்.

‘வாடி பொண்ணு’

என்னைத்தான் ஆசையாக அழைத்தார். சாமியைக்காணவில்லை. வீதியிலும் அவனைக்காணவில்லை.

’அம்மா’

‘ ரெண்டு பேரும் கடைக்கு போயிருக்கா’

‘தேவலாம்’

‘போவேண்டியத்தான். சமையலுக்கு எண்ணெய் இல்லேன்னு போயிருக்கா’

‘சாமி போறாதா’

‘ஏன் அவளுக்கும் எங்கானு போகணும்னு இருக்காதா’

‘சரி சரி’

‘இண்ணைக்கு என்ன படிச்சே’

‘ அது சொல்றன். மொதல்ல ஒரு சந்தேகம் நீ தீர்த்து வை என்ன’

‘ஆம்பள பையனுக்கு பூணல் போட்டா அவன் பிராம்ணன் இல்லையா’

‘ஆமாம்’

‘பூணல் போடறவரைக்கும் அவன்’

‘பிராமணன் இல்ல.  பூணல் போட்டாதான்  பிராமணன் ஆவான்’

‘ரொம்ப சரி. அப்ப அவன் என்ன’

‘அவன் பிராம்ணன் இல்ல’

‘இங்கிலீஷ்ல’ நான் –பிராமின்’ இது சரியா’

‘சரிதான். ரொம்ப சரி’

‘பொண் கொழந்த எப்ப பிராம்ணத்தி ஆவா’

‘கல்யாணம் ஆகணும்’

‘கல்யாணம் ஆகாதவரைக்கும்’

‘பிராம்ணத்தி இல்ல’

‘பின்ன யாரு’

‘ நான் –பிராமின்னு வச்சிக்கோ’

‘அதான் அப்பா இண்ணைக்கி நா படிச்சேன். அம்பேத்கர் சொல்லியிருக்கார். பொம்மனாட்டி எல்லாம் மொத்தமா சூத்ரா அப்புறம் சூத்ரான்னு சனங்க ள்ள பாதி பேருக்கு இருக்காளே அவாளும் சூத்ரான்னு. அப்ப நா சூத்ரச்சிதான் இல்லயா. சாமிக்கு பூணல் போட்டாச்சு அவன் பிராமணன் அப்பிடித்தானே’

‘உனக்கு கல்யாணம் ஆனா நீ பிராம்ணத்தி ஆயிடற’

‘அதுவரைக்கும்’

அப்பா சிரித்துக்கொண்டார். ‘ நீ என்ன வக்கீலுக்கு படிக்கறயா என்ன’

நான் பதில் ஏதும் சொல்லவில்லை. அம்பேத்கர் எழுதியிருப்பது சரியென்றே நினைத்துக்கொண்டேன்.

‘ஒண்ணு தெரியுமோ  கோவில்ல பூஜ பண்ற குருக்கள  எல்லாம்  யாரும் பிராம்ணன்னு  சேத்துகறது இல்ல. கோவில்  குருக்களுக்கு மந்திரம் சொல்ற அந்த வாயும்  சாமி மேல புஷ்பம் போடற கையும் பிராம்ணா மாதிரி’

‘உள் கத நெறய’

‘நம்பள ஆதி சைவான்னு சொல்வா’

‘திராவிடா ஆதி திராவிடா மாதிரியா’

‘ரொம்ப பேசற.  வேண்டாம். ரொம்பவும் படிக்காதடா கண்ணா’

நான்  இந்த விஷயம் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். அப்பா முகம் நன்றாகவேயில்லை.

அம்மாவும் சாமியும் வருகிறார்களா என்று தெருவில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

 

 

 

 

சித்திக்கு சென்னை சென்றதிலிருந்து ஒரு குழப்பம் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அம்மா படுத்தே இருக்கிறாள் அது சரி. கால் முட்டியில் எலும்புத் தேய்மானம். அதனைச் சரி செய்யலாம். அறுவை சிகிச்சை செய்து முட்டியை மாற்றினால்தான் உண்டு.  அது ஒரு மார்க்கம்தான். ஆஸ்பத்திரியில் சொல்லியும் அனுப்பி விட்டார்கள் காலுக்கு ஏதேனும் ஒரு தைலத்தை ஒரு களிம்பை இல்லை ஏதேனுமொரு எண்ணெயைத்தடவிக்கொள்ளலாம். முட்டிவலி கொஞ்சம் சமாதானம் ஆகும்.  வலி நிவாரணி மாத்திரைகள் விழுங்கியும் ஓய்வெடுக்கலாம். அவ்வளவே.

ஆனால் வீட்டை நிர்வகிக்க ஒத்தாசைக்கு  ஒரு ஆளில்லாமல்  எதுவும் ஆகாது.

சித்திக்கு அண்ணாமலைநகரில் பெற்ற பிள்ளை சாமிநாதன் இருக்கிறான். உள்ளூர்ப் பள்ளியில் படிக்கிறான். ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்புக்குச்செல்லப் போகிறான். அங்கு தற்சமயம்  தன் கணவரின் தம்பி குடும்பம் உள்ளது.  சென்னைக்குத் தன் மாமானார் மாமியார்  ஒத்தாசைக்குத்தான்  சித்தப்பா தற்காலிகமாகப்போனார். சித்தப்பாவின் மாமனாருக்கும் வயதாகிவிட்டது. துணைக்கு யாரேனும் இருந்தால் நலம். ஒவ்வொரு மனிதருக்கும்  மூப்பு என்று ஒன்று இருக்கவே இருக்கிறது.  ஏனோ அது இளைஞர்களுக்குப் பிடிபடுவதில்லை.  வயோதிகம்   தருவிக்கும் அசெளகரியங்கள் அவர்களுக்குப் புரியமாட்டேன் என்கிறது. அப்படிச் சொன்னால் சரியாக இருக்கலாம்.

’இந்தக் கபாலி எப்படி இங்கு வந்து தன் அப்பாவோடு ஒட்டிக்கொண்டான். அதன் ரகசியம்தான் என்ன’ சித்திக்குப் பிடிபடாமல் வேதனையாய் இருந்தது.  அடிமனதில் அது அரித்துக்கொண்டிருந்தது. சித்தி தன் தாயாருக்கு ஒத்தாசை செய்யும் கபாலியைக்காண்கிறாள்.. சித்தியின் அம்மாவும்  கபாலியிடம் பாசமாகத்தான் பேசுகிறாள். சித்தப்பாவும் கபாலியை விகல்பமாய்ப் பார்க்கவில்லையே. ஆண்மக்களின் சுபாவம் அப்படித்தான். எதையும் திரையை விலக்கி  உண்மையைப் பார்க்கப்பிரியமில்லாதவர்கள். மேம்புல் மேயும் மாடுகள். சித்தி என்ன என்னவோ எண்ணினாள்.

 சித்திக்கு மட்டும்தான் இந்த அஜீரணம். சித்தப்பாவுக்கு இல்லை. என்ன இருந்தாலும் சித்திக்குத் தன்  அப்பாவாயிற்றே.

’அப்பாவிடம்  நேராகவே இது பற்றிக்கேட்டுவிடலாமா இந்தக்கபாலியின் பூர்வோத்திரம் என்னவாக இருக்கும்.’  சித்திக்கு யோசனை அடிக்கடி வரத்தான் செய்கிறது. ஆனால் சித்தியின்  அப்பா இதுபற்றித் தன் மகளிடம் வாய் திறந்து சொல்லி இருக்கலாம்.  அவர் சொல்லவிலையே. இந்தக் கபாலி சமாச்சாரம் சென்னை வந்த பிறகுதான்  சித்திக்கும் சித்தப்பாவுக்கும் கண்ணில் படுகிறது. இது பற்றி அப்பா ஒரு கடிதத்தில் கூட குறிப்பிட்டதுமில்லை.

தன் கணவரோடு இது பற்றி விசாரிக்கலாமா அது சரியா சித்திக்குப் பிரச்சனையின் ஆழம் மண்டையைக் குடைந்தது. ஆனால் கபாலி எத்தனைப் பணிவாக அனுசரணையாக எல்லோரிடமும் நடந்துகொள்கிறான். எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறான்.

 ஒரு சபையில் எத்தனைக் கவுரவம் அவனுக்குக்கிடைக்கிறது என்பதனைச் சித்தி நேராகக்காண்கிறாள். சித்தியின் தந்தையோ  கபாலியை’ மைலாப்பூர் குருக்களாத்து பையன் எனக்கு ஒத்தாசையா வச்சிண்டுருக்கேன்’ என விளக்கம் கொடுத்து மிக எளிமையாய் விஷயத்தை முடித்துவிட்டார்.

அம்மாவிடம் கபாலி பற்றி விபரமாய்க் கேட்கலாம். ஆனால் கபாலியோடு அம்மா எத்தனைப் பாசமாக இருக்கிறாள். பெற்ற மகன் கூட இந்தக்காலத்தில் தாய் தந்தையரோடு இத்தனைக்கு உறவு கொண்டாடுவதில்லையே.ஆகத்தன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் கபாலி பற்றி அறிந்தாக வேண்டும் சித்தி முடிவு செய்தாள்.

அம்மாவுக்கு எது எல்லாம் வேண்டுமோ அதனை அவர் அருகே எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மைலாப்பூர் சென்று வரலாம். அப்பாவைப்பார்த்துக் கொள்ளச்சொல்லிவிட்டு  புறப்படலாம். தன் கணவனைக்கூட்டிக்கொண்டு போவதா அது சரியா இருக்குமா என்கிற யோசனையும் வந்தது. மயிலாப்பூர் செல்வதற்கும் முன்  கபாலி பற்றித் தெரிந்துகொண்டால் தேவலை என்று சித்தி எண்ணினாள்.

கபாலி பற்றி கபாலியிடமே கேட்டுவிட்டால் என்ன என்கிற யோசனை கூட வராமலில்லை. கபாலியைப்பார்க்கின்ற போது எதனையும் மறைக்கின்ற சுபாவம் இருக்கின்றமாதிரி தெரியவே இல்லை. சித்திக்கும் மைலாப்பூரில் குருக்கள் வகையறாவில் யாரையும் தெரிந்த மாதிரி இல்லை. கபாலியோடு சித்தி  இது விஷயம் பேசுவது  யாருக்கும் தெரிந்துவிடவும் கூடாது என்று எண்ணினாள்.

தன் கணவரிடம் மைலாப்பூர் கோவில் வரைக்கும் சென்றுவரலாம் என்கிறயோசனையச் சொன்னாள்.

‘அங்கென்ன விசேஷம்’  வெடுக்கென்று கேட்டார்  சித்தப்பா.

‘கற்பகாம்பாள பாத்துட்டு வரணும்னு வேறென்ன’

‘கபாலிய அழச்சிண்டு போலாம்’

‘ஏன்’

‘என்ன ஏன், அவர் மைலாப்பூர்காரர்’

சித்திக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அது எப்படி தன் கணவர் டக்கென்று கபாலியின் பெயரைச்சொன்னார் என்று.

சித்தியின் அப்பா அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைக்கவனித்தும் இருக்க்வேண்டும்.

‘யாராவது ஒருத்தர் ஆத்துல இருங்கோ’

‘நானும் அததான் நெனச்சேன்’ என்றால் சித்தி.

‘எனக்கு யாராவது கூட இருக்கணும். அவ உங்கம்மா படுத்துண்டு இருக்கா.’ என்றார் சித்தியின் அப்பா.

‘அப்ப ஒண்ணு பண்னு. கபாலிய கூட்டிண்டு நீயே மைலாப்பூர்  போயிட்டுவா. நானும் உங்கப்பாவும் ஆத்துல இருக்கோம்’

‘அதுதான் சரி’ சித்தி சொன்னாள்.

’கபாலி கபாலி’  என்று சித்தியின் அப்பா அவரை அழைத்தார்.

கபாலி ‘மாமா கூப்ட்டேளா’ என்று அருகில் வந்து நின்றார்.

‘எம் பொண்னு மைலாப்பூர் கோவில் பாக்கணும். கற்பகாம்பாள சேவிக்கனும்னு சொல்றா. சித்த அழச்சிண்டு போயிட்டு வந்துடேன். ஒரு ஆட்டோக்காரன பாத்து பேசு. நமக்கு எப்பயும் வர்ரவன் ஆட்டோக்காரன்  ராஜா. அவன் இருந்தா. அவன அழச்சிண்டு போ’

’கடன்காரன்  எப்பவும் காசு ஜாஸ்தியாதான் கேப்பான். முகம் தெரிஞ்சவன்னு பாத்தா அவன் தான் காசு கூட கேக்கறான். ஆனா ரொம்ப  நல்லவன். பத்ரமா அழச்சிண்டு போயி கொண்டு விட்ருவான். மரியாதயா கொறயாம பேசுவான். அதெல்லாம் சரித்தான். சட்டுன்னு போயிட்டு வந்துடு. சாயரட்சை  நம்ம கோவிலுக்கு போகணும் அதுவும் ஞாபகத்துல இருக்கட்டும்’ சித்தியின் அப்பா சொல்லி நிறுத்தினார்.

‘மாமி ரெடியா. நா ஆட்டோகாரன அழச்சிண்டு வரன்.’

‘நா ரெடிதான்’

சித்தி தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

‘ அந்த அம்மா  கர்பகத்துகிட்ட சொல்லுடி காமு என் கஷ்டத்த’

‘அத சொல்லத்தானே நானே போறன்’

சித்தி தன் அம்மாவுக்குப்பதில் சொன்னாள்.

‘வெள்ளில காலு செஞ்சி  காணிக்க போடறேன்  என் அம்மா கால வாசிபண்ணு கற்பகம்னுன்னு அவளண்ட உரிமையாகேளு’’ சித்தியின் அம்மா ஈனக்குரலில் தன் பெண்ணிடம் சொன்னாள்.

மாமனாரும் மாப்பிள்ளையும் கித்தான் சாக்கு ஒன்றை தரையில் விரித்து படுத்துக்கொண்டனர். கித்தான் சாக்கு பட்டுப்பாய் போல் இருந்தது.

‘கல்கத்தா சாக்கு’

‘நைசா இருக்கு’

சித்தி மயிலாப்பூர் செல்லத்தயாராக நின்றுகொண்டிருந்தார். கபாலியோடு செல்வதில் சில சவுகரியங்கள் தென்படலாம் என எண்ணினாள். ஆட்டோக்காரன் ராஜாவோடு கபாலி வீட்டு வாசலில் நின்றுகொண்டான்.

‘மாமி வரலாம்

‘தோ  வந்துட்டேன்’

கபாலியும் சித்தியும் புறப்பட்டனர்.

‘எங்க சாமி போவுணும்’

‘மைலாப்பூர்தான்’

‘மைலாப்பூர்ல எங்க’

‘ கோவிலுக்குதான் போறம்’

‘ரைட்’ என்றான் ஆட்டோக்காரன் ராஜா. சித்தியும் கபாலியும் ஊர்க்கதைகள் பேசிக்கொண்டே வந்தனர்.

‘மைலாப்பூர்தானே நீ அப்பா சொன்னார்’

‘ஆமாம் மாமி’

‘மைலாப்பூர்ல  உன் ஆத்துல யார் இருக்கா’

‘யாரும் இல்ல. எனக்குன்னு கற்பகாம்பாதான் இருக்கா’

‘அப்பா சொன்னார் நீ மைலாப்பூர்னு’

‘அது சரிதான் ஆனா இப்ப  அங்க   எனக்கு யாரும் இல்ல. உங்க அப்பாதான்  அதான் அந்த மாமாதான் எல்லாமே’

கபாலியின் கண்கள் கலங்கியிருந்தன.

‘அப்பா அம்மா உடன் பொறந்தவா உறவுக்காரா’

’ மயிலாப்பூர் திருக்குளம் வடகரையில ஒரு பித்தளபாத்திரக்கடை இருக்கு. அதுக்கு அடுத்தாப்ல ஒரு சின்ன  பூக்கடை இருக்கு. அந்த கடையில  ஒரு அம்மா பூக்கட்டிண்டு இருப்பாங்க. அவங்கதான் எனக்கு எல்லாமா இருந்துது. எட்டாம் கிளாஸ் வரைக்கும் அந்த அம்மாகிட்ட இருந்துதான்  படிச்சேன். அப்பறமா உங்க அப்பா என்ன தன் ஆத்துக்கு கூட்டிண்டு போயி என்ன ஆளாக்கினார். தனக்கு தெரிஞ்சதை எல்லாம்  எனக்கு கத்து குடுத்தார். ஒண்ணு பாக்கியில்ல.  எல்லாம் கத்துண்டேன்’

‘நான் என் பொறந்த ஆம் சென்னைக்கு  வந்து வருஷம் பலது ஆச்சி. இப்ப அம்மாக்கு ஒடம்பு முடியலேன்னு சேதி வந்துது அதனால  வந்தேன்’

’ஏன் இவ்வளவு காலமா வராம இருந்துட்டேள்’

‘வரல. வரமுடியல. வர பிடிக்கல’

‘அப்பா வேற ஒரு தினுசா நடக்க ஆரம்பிச்சார். அது எனக்கு ஏத்துக்க முடியல’ சித்தி உண்மை பேசவில்லையே. பொய்தான் பேசினாள். கபாலி எதாவது புது செய்தி சொல்வானா என்பதற்குத் தூண்டில் போட்டுத்தான் பார்த்தாள். அது பலன் தரவில்லை.

‘அது என்னன்னு தெரிஞ்சிகலாமா’

‘தெரிஞ்சிக்க வேண்டாம். அது உனக்கு ஏன்’

‘மாமாவ  தப்பா அப்பிடி இப்படி யெல்லாம் யாரும் சொல்லமாட்டா. புதுசா நீங்கதான் சொல்றேள்.’

கபாலி உரிமையோடு பேசினான்.

‘அம்பாளுக்கு ஒரு தண்ட மால வாங்கணும்’ சித்தி பேச்சுத்தடத்தை சற்று மாற்றினாள்.

‘நா வாங்கிண்டு வரன்’

ஆட்டோ திருவல்லிக்கேணி கடற்கரையைத்தாண்டி காமராஜ் சாலையில் சென்றுகொண்டிருந்தது. பார்த்தசாரதி கோவில் ஆர்ச் தூரத்தில் தெரிந்தது. மயிலாப்பூரின் மயானம் அதன் கட்டிடங்கள், சவ எரிப்பு  நெடிய புகைக் குழாய் சிட்டி சென்டர்மால்  கல்யாணி மருத்துவமனை நியூ உட்லண்ட் ஹோட்டல் என்று ஒவ்வொன்றாய் கடந்துகொண்டே ராதாகிருஷ்ணன் சாலையில் ஆட்டோ விரைந்தது.

மைலாப்பூர் விவேகானந்தர் கல்லூரி வந்தாயிற்று. லஸ் கார்னர் சமீபித்தது.  சித்தி சமஸ்கிருதக்கல்லூரியைப்பார்த்துக்கொண்டாள். இத்தனை விரைவாக ஆட்டோ ஓட்டுபவனை சித்தி இப்போதுதான் பார்த்தாள்.

‘மால ஒண்ணு வாங்கணும்’

‘நம்ப கடயில வாங்கிகுவம்’ ஆட்டோக்காரன் கபாலிக்குப்பதில் சொன்னான்.

மைலாப்பூர் குளக்கரை வடக்கு சாலையில் ஆட்டோ சென்று ஒரு பொம்மைக்கடைக்குப்பக்கமாய் இருந்த பூக்கடையின் முன்பாக வண்டி நின்றது. பூக்கடைக்கு அடுத்து ஒரு பித்தளைப் பாத்திரக்கடையைப் பார்த்துக்கொண்டாள் சித்தி.

குத்துவிளக்குகள் அழகாகப்பளிச்சென்று காட்சி அளித்தன. அவை தினுசு தினுசாகக்காட்சி தந்தன. அன்னப்பட்சி மயில் உருவங்கள் குத்துவிளக்கோடு பொதிந்து கானப்பட்டன. பூஜைக்கு வேண்டிய  குடம் சொம்பு தாம்பாளம் தட்டு கூடை மணிகள் பலதினசு தூபக்கால்  தீபங்கள்  தீபாராதனைத் தட்டுக்கள் அபிஷேக சல்லடை என்று ஒன்று பாக்கியில்லை. அடுக்கு அடுக்காய் காட்சி தந்து  கண்ணைக்கவர்ந்தன. சித்தி எல்லாவற்றையும் நோட்டம் விட்டாள். பார்க்கப்பார்க்க ஆவலைத் தூண்டுவதாக பாத்திரங்கள் காட்சியாயின.

‘மால ஒரு நூறு ரூபாயுக்கு வாங்கலாமா’

‘மொழம் பூ என்னா வெல விக்குது. நூறு ரூபாயுக்கு எனுமா ஒரு மால வரும்’ என்றான் ஆட்டோக்காரன் ராஜா.

‘நம்ம கடையிலதான வாங்குறம்.’ சித்திக்குக் கபாலி பதில் சொன்னான்.

‘சித்தியும் கபாலியும் பூக்கடை முன்பாக நின்றார்கள். ஆட்டோக்காரன் ராஜா ஆட்டோவில் இருந்தான். கபாலி புஷ்ப மாலை வியாபாரம் என்று எழுதிய சிறிய விளம்பரப்பலகையைக்காண முடிந்தது.

மாலைகள் கட்டப்பட்டு தொங்க விடப்பட்டிருந்தன. ரோஜா மல்லிகை முல்லை மொட்டுக்கள் கூடையில் கோபுரமாய்த்தெரிந்தன. மரிக்கொழுந்து சம்பங்கி கனகாம்பரம் என வரிசையாக இருந்தன. வாழைநார் கத்தரிக்கோல் ஜிகினா என்று மூலைக்கு மூலை கிடந்தன. சந்தனம் வாசனையோடு உருண்டையாய் தாமரை இலைகள் கட்டருகே கொலுவிருந்தது. அதன் அருகே டி எஸ் ஆர் என்று எழுதிக்கொண்ட சீட்டு ஒட்டிய  இரண்டு பாட்டில்கள் நின்றுகொண்டிருந்தன.

‘வா கபாலி சவுக்கியமா’

பூக்கடையில் இருந்த அம்மாதான் அழைத்தாள்.

 அய்யா ‘நல்லா இருக்கிங்களா’

‘நல்லா இருக்கன்’                                  

‘குருக்களய்யிரு எப்பிடி இருக்காரு’

’அந்த அம்மாதான் படுத்துட்டு இருக்காங்க. முட்டிக்காலு வலி. எனக்கு ஒரு மால வேணும்

‘யாருக்கு எம்மாத்திரத்துல’

‘குருக்களைய்யா பொண்ணு  அண்ணாமலநகர்லேந்து வந்திருக்காங்க’

‘யாரு’

‘ நமஸ்காரம் அம்மா  நான் அய்யாவோட பொண்ணு. அண்ணாமலைநகர்ல இருக்கன்.   சிதம்பரம் தெரியுமா  அந்த சிதம்பரத்தண்ட இருக்கன். அம்மாவ பாத்துட்டு போலாம்னு வந்தன்’ என்றாள் சித்தி.

‘மால உங்களுக்குதான’

‘கற்பகாம்பாளுக்கு’  சிரித்துக்கொண்டாள் சித்தி.

‘எதோ உங்களுக்கு புடிச்சதுன்னு பாருங்க  எடுத்துகங்க’

கபாலி ஒரு மாலையைத்தேர்ந்து எடுத்துக்கொண்டான். நியூஸ்பேப்பரில் சுருட்டி அதனை சித்தியிடம் கொடுத்தாள் பூக்கடைக்கார அம்மா.

‘எவ்வளவு’

‘தேவலாம்’

‘ஏன்’

‘நீங்க பாட்டுக்கு போங்கதாயி ’ என்றாள் பூக்கடைக்கார அம்மா.

‘வாங்க போகலாம்’ கபாலி சொல்லிக்கொண்டான்.

‘அம்மா உங்களுக்கு என் அப்பாவ எவ்வளவு நாளாதெரியும்’

‘ரொம்ப நாளா’

‘கபாலி உங்களுக்கு’

‘கபாலிய நாந்தான் வளத்துகிட்டு இருந்தேன். உங்கப்பா என் கடையிலதான் மால பூ  காலம் காலமா வாங்குவாரு’ பூக்கடைக்காரியின் சிரிப்பில் வித்தியாசம் தெரிந்தது. முகம் தன் வண்ணத்தை மாற்றிக்கொண்டது. சித்தி அதனைக்கவனித்துக் கொண்டாள்.

‘கபாலிக்கு அப்பா அம்மா’

‘கற்பகம்பாளுக்குத்தான் தெரியும்’

‘கூட பொறந்ததுங்க சொந்த பந்தம்னு’

‘எல்லாம் கற்பகம்பாதான்’

‘ வளத்தது நீங்கன்னு சொல்றீங்க. அப்ப கொழந்த எங்கேந்து கெடச்சிது’

‘அது இப்ப தெரிஞ்சி என்னா ஆவுணும். வுடுங்க.  உங்களுக்கு அதெல்லாம் வேணாம் உங்க அப்பார இது விஷயம்  கேட்டிங்களா’

‘இல்ல’

‘ ஏன் கேக்குல’

சித்தி அமைதியானாள்

ஆட்டோக்காரன் ராஜா ‘ மால வாங்குனா  வாங்க சட்டு புட்டுன்னு’ என்றான்.

கபாலி சித்தியும் பூக்கார அம்மாவும் பேசுவதைக்கவனித்துக் கொண்டேதான் இருந்தான். அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் அதிசயமில்லை. அவன்  மனதிற்குள் அனுபவிக்கும் விஷயம்தான்.  அது பற்றி அவன் பேசுவதே இல்லை. கவலைப்படுவதுமில்லை.

‘அப்புறமா வறேன்’

சித்தி சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

‘இந்த கேள்வி கேட்டுகிட்டு  உங்க மனசுல   கனமா குப்பய சொமந்துகிட்டு  இங்க  என்கிட்ட வரவேணாம்’ பூக்கடை அம்மா சித்திக்குச்சொன்னாள். கபாலி வாங்கிய மாலையை எடுத்துக்கொண்டு ஆட்டோவுக்கு நடந்தான். பூக்கடையில் மாட்டப்பட்டுள்ள படங்களையெல்லாம் சித்தி ஆராய்ந்தாள்.

‘குருக்களய்யா படம் கபாலியோட அவுரு எடுத்துகிட்டது இருக்கு. பாரு’

கபாலி சின்னைப்பையனாகவும் சித்தியின் அப்பா மிடுக்கோடும் இருக்கும் புகைப்படம் அது.

’நல்லது  மட்டும் செய்யுங்க   இருக்குற எதயும் கெடுத்துடவேணாம். உங்கள நா வணக்கமா கேட்டுகறன்’ பூக்காரக்கடை அம்மா சித்தியிடம் வேண்டிக்கொண்டாள்.

ஆட்டோவரை  பூக்காரம்மா வந்தாள்.

‘சவுரியமா ராஜா’

‘ஏதோ காலம்  ஓடுது ஆயா’

‘கபாலிய பாத்துக ராஜா’

‘அவுருதான் நம்ம எல்லாத்தயும் பாத்துகுணும்’

சித்தி ஆட்டோவில் அமர்ந்து கொண்டாள். கபாலியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. சிரித்த முகத்தோடேயே இருந்தான். சித்திக்கு அந்த கபாலியின் சுபாவம்தான் பிடிபடாமல் இருந்தது.

ஆட்டோ வேகமாகச்சென்று  பெரிய கோபுர வாயிலில் நின்றது. கபாலியும் சித்தியும் இறங்கி நடந்தனர். கபாலிசுரர் கோவில் சிவாச்சரியார்கள் பலரையும் அறிந்தே இருந்தான்.

‘சவுரியமா’ என்று அனேகர் கபாலியை  விசாரித்தனர். கபாலியும் அனைவருக்கும் பதில் சொன்னான்.

‘கந்தகோட்டத்து குமாரசாமி எப்பிடி இருக்கார். மாமா எப்பிடி இருக்கார்’ என்றும் சிலர் கபாலியை விசாரித்தனர்.

‘சிதம்பரம் பக்கம் போனீராமே.’

‘அண்ணாமலைநகர் போய்விட்டு வந்தேன்’

‘வேதவனேச குருக்கள் சொன்னார். உம்ம விஜாரிச்சேன். ஒரு கும்பாபிஷேகம் வர்ரது. அதுக்குத்தான். மந்திரம் கணீர்னு சொல்றதுக்கு உம்மவிட்டா ஆள் ஏது’

தாடி வைத்துக்கொண்ட சிவாச்சாரியார் கபாலிக்கு  வலை போட்டுக்கொண்டிருந்தார்.

‘ஒரு வேண்டுதல். அம்பாள பாத்துட்டு வந்துடறன்’

‘இது யாரு’

‘மாமாவோட பொண்ணு அண்ணாமலைநகர்ல இருக்கா’

‘நமஸ்காரம்’ என்றாள் சித்தி.

‘உங்க ஆத்துக்காரர உட்டுட்டு வந்துட்டேளா. கோவில்ல பொங்கறதுக்கு பிராம்ணபுள்ள உண்டா. இல்ல. உங்காத்துக்காரரே பொங்கிகணுமா’

‘பிராம்ணபுள்ள இல்ல. நாம்ளேதான் பொங்கிகணும்’

‘அப்ப சிரமம்’

‘மாமாவும் சென்னை வந்துருக்கார்’

‘பூஜைக்கு’

‘என் மச்சினார் குடும்பம் இருக்கு. என் புள்ள ஸ்கூல்ல படிக்கறான்’

‘அவருக்கு உள்ளூரே வா. இல்லன்னா கஷ்டமாச்சே’

‘அவர் தருமங்குடில இருந்தார். அவருக்கு உடம்பு கொஞ்சம்  முடியலேன்னு எங்காத்துக்கு குடும்பத்தோட வந்துட்டார். பூஜக்கி பிரச்சன இல்ல’

‘தருமங்குடியா. நெய்வேலியண்ட இருக்கற கிராமமா’

‘அதேதான்’

’இப்ப எங்காத்து மாமிக்கு தங்க புள்ளதான் அங்க   பூஜைக்கு புதுசா சேந்துஇருக்கான்னு சேதி. அவாள்ளாம் கூடலையாத்தூர் பாலுகுருக்கள் பரம்பர’

‘ரைட்டா சொல்லிட்டேள். ‘

தாடிக்காரர் தனது தாடியை உருவிக்கொண்டே சிரித்துக்கொண்டே பேசினார். ஒண்ணுக்குள்ள ஒண்ணு’ சொல்லிக்கொண்டே கபாலி வைத்திருந்த மாலையை கையில் வாங்கிக்கொண்டார்.

‘வினாயகர் பாத்துட்டு கபாலிசுரர பாத்துட்டு கற்பகம்அம்பாள் சன்னதிக்கு வந்துடுங்கோ நா ஒரு கற்பூரம் பண்றேன்’ என்றார் தாடிக்காரர்.

‘பாத்துட்டுன்னா’ கபாலி புன்னகத்தார்.

‘சேவிச்சுட்டு’ என்றார் தாடிக்காரர்.

கபாலியும் சித்தியும் கணபதி தரிசனம் ஸ்வாமி தரிசனம் முடித்துக்கொண்டு சுப்ரமணியரை சேவித்துக்கொண்டு அம்பாள் சன்னதிக்கு வந்தனர்.

கற்பகாம்பாளுக்கு மாலை சேவித்துவிட்டு தாடிக்கார அரச்சகர்.’ அர்ச்சனை யார் பேர்ல’ என்றார்.

‘’அம்மா பேரு கமலாம்பா. நட்சத்திரம் மகம் சிம்மராசி ஆயுர் ஆரோக்கிய அபிவிருத்தியர்த்தனு அர்ச்சன பண்ணுங்கோ’

‘’தேங்கா தட்டு ஒண்ணும் வாங்கிண்டு வரல’

‘தேங்கா பழம் வெத்தல பாக்கு அர்ச்சன சீட்டு எல்லாம் ரெடி. கபாலிக்குன்னா நா எல்லாம் செய்யவேண்டாமா’

என்றார் தாடிக்காரர்.

அர்ச்சனை முடிந்து கற்பூர ஆரத்தி காண்பித்தார்கள். ‘  என் அம்மாவே  உனக்கு வெள்ளில  காலுருவம் பண்ணி காணிக்கயா போடறேன். என் அம்மா கால சரியாக்கிடு’ சித்தி முணுமுணுத்துச்சொன்னாள். அம்பாள் பிரசாதம் வழங்கினார் தாடிக்கார சிவாச்சாரியார்.

‘மாமிண்ட குங்கும பிரசாதம் குடுங்கோ. நன்னா பிரார்த்தன பண்ணிகணும்.  கோவில பிரதக்‌ஷிணமா வாங்கோ அந்த பக்கமா கற்பகம்பா   தவக்கோலம்  மயில் ஸொரூபம் எல்லாம் இருக்கு.  கறக்குற பசுமாடுகள் லக்‌ஷ்மிகரம் கன்னுகுட்டியோட பலது இருக்கு.  அதயும் சேவிச்சுகோங்கோ’

‘கபாலி  நான் சொன்னது கும்பாபிஷேகம் ஞாபகம் இருக்கட்டும்’ என்றார் தாடிக்காரர்.

‘’எப்படி நான் மறப்பேன்’

‘வேதவனேசண்ட நா விஜாரிச்சதா சொல்லு. அவன் அனுப்பினாத்தான் நீயும் வருவே’

கபாலி சிரித்துக்கொண்டான். கபாலியும் சித்தியும் கோவிலுக்கு வெளியில் வந்து ஆட்டோக்காரன் ராஜாவைத் தேடினார்கள். அவன் எங்கே சென்றிருப்பானோ தெரியவில்லை.

‘கொஞ்ச நேரம் பார்ப்போம்’

இருவரும் மண்டபத்தில்நின்றுகொண்டிருந்தார்கள்.  இரண்டு பிச்சைக்கார சாமியார்கள் பெரிய துணிப்பையோடு சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்கள்.  மக்கள் போட்ட சில்லரைகளில் செல்லாதவற்றைப் பிரித்து பிரித்து தனியே வைத்துக்கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் சின்ன சின்ன மூட்டைகள் காசுகளாய் இருந்தன. அவைகளை ஒரு சாக்கு போட்டு மூடி வைத்திருந்தார்கள். அவர்களுக்குக் காசு போடுவதற்காக சிலர் சிரத்தையோடு வந்து  காசு போட்டுப் போனார்கள். அவர்களே திரும்பவும் பிச்சைக்காரர்களைக் கேட்டார்கள்.

‘நீங்க ரெண்டு பேர்தானா இன்னும் யாரும் இல்லயா’

‘இன்னும் பத்து பேருக்கு இருப்பாங்க, வந்துடுவாங்க’ சாமியாரில் ஒருவன் விடை சொன்னான்..

‘எப்ப வருவாங்க’

‘ஆபிசர் உத்யோகமா பாக்குறாங்க வருவாங்க வர்ர நேரம்’

‘பத்துபேருக்கு காசு போடணும்னு வேண்டுதல்’

‘எங்ககிட்ட கொடுங்க நாங்க சொச்சபேருக்கும் குடுத்துடறம்’ என்றனர்  அந்த பிச்சைக்காரர்கள்.

‘எங்க கையால கொடுக்கணும்’

‘உங்க கையாலயே குடுங்க  ஆனா எங்கபேர்ல நம்பிக்கையில்ல’

‘பத்து பேருக்கு தனித்தனியா   காசு தரணும்’

’ புடிவாதத்துக்கு யாரும் ஒண்ணும் செய்ய வக்காது இது ஒங்க பிரச்சன இதுக்கு நாங்க பதில் சொல்லமுடியாது’

பிச்சைக்காரர்களுக்கு காசு போடவந்தவர்கள் திரும்பச்சென்றுவிட்டார்கள்.

‘பிச்ச போடறதுக்குன்னு காச கொண்டாந்துட்டு திரும்பவும் ஊட்டுக்கு எடுத்துகிட்டுபோப்பிடாது யாபகத்துல வையி’ பிச்சைக்காரர்கள் உரக்கச்சொன்னார்கள்.

சித்தியும் கபாலியும் ஆட்டோக்காரனைத்தேடிக்கொண்டு இருந்தார்கள். ஆட்டோக்காரன் ராஜா தூரத்தில் ஆட்டோவோடு வந்துகொண்டிருந்தான்.

‘இவன்  இவ்வலவு நேரம் எங்க போயிட்டான்’ சித்தி சொல்லிக்கொண்டாள்.

‘பாத் ரூம் போனன். அதான்’ சொல்லிக்கொண்டே ராஜா ஆட்டோவை அவர்களருகே கொண்டுவந்து நிறுத்தினான்.

‘சாமி கும்பிட்டாச்சா  நேரா வூட்டுக்குதான் போறம்’

‘ஆமாம்’ என்றான் கபாலி.

ஆட்டோ வந்தவழியே திரும்பவும் விரைந்தது. சித்தி எதுவும் பேசவில்லை. கபாலி உலக விஷயங்கள் தெரிந்தவரைக்கும் ஆட்டோக்காரனுடன் பேசிக்கொண்டே வந்தான். ஆட்டோக்காரன் இடை மறித்து சில விஷயங்களைச்சொன்னான். சித்திக்கு எதுவும் காதில் விழுந்தால்தானே. சித்திக்கு என்ன்வெல்லாமோ யோசனை.

ஆட்டோ சித்தியின் வீடு வந்து சேர்ந்தது.

சித்தியின் அப்பா ‘ராஜா நம்ம ஆடோ கணக்கில் கூட்டி வச்சிகோ பாத்துகலாம்’ என்றார்.

‘சரிங்க சாமி’ சொல்லிய ராஜா வண்டியை நகர்த்திக்கொண்டு போனான்.

‘என் வீட்டூக்காரர் எங்கப்பா’

‘கோவில்லேந்து இன்னும் வரல’

‘அவர்தான் இண்ணக்கி மொறயா’

‘அப்பிடித்தான் வச்சிகோ’

‘போன காரியம் ஆச்சா கபாலி’

‘ஆச்சு மாமா. தாடி வச்சிண்டு இருக்குற சிவாச்சாரியர் ஒங்கள ரொம்ப கேட்டதா சொல்லச்சொன்னார்’

‘அவர்தான் அம்பாள் சந்நிதியில இருந்தார். ரொம்ப ஒத்தாச’ என்றாள் சித்தி.

‘பிரசாதத்த அம்மாவுக்கு குடு. அவ மொதல்ல எடுத்துகிட்டும். ஒன் பிரார்த்தன பெரிசாச்சே’

சித்தி குங்குமத்தை அம்மாவுக்குக்கொடுத்தாள். ‘நன்னா வேண்டிண்டு வந்துருக்கேன்.  அம்பாளுக்கு ஒம் பேர்ல அரச்சனை ஒன் நடசத்திரம் ராசி சொல்லி’

‘கற்பகம்’ சொல்லிய சித்தியின் அம்மா குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொண்டாள்.

சித்தப்பா கோவில் பூஜை முடித்து வீட்டுக்குத்திரும்பினார். சித்தியிடம் வந்து நின்றுகொண்டார். சித்தியின் முகம் விளக்கெண்ணெய் வழிந்துகொண்டிருந்தது. எப்போதும் முகத்தில் இருக்கும் களை மகிழ்ச்சி எதுவும் இல்லை. எதுவோ திருப்தி இல்லாமல் சித்தியை செய்திருக்கிறது என்பதனை சித்தப்பாவால் ஊகிக்க முடிந்தது. ஆனால் கபாலியின் பூர்வோத்திரம் அறிந்துகொள்ளவே தன் மனைவி போயிருக்கிறாள் என்பதெல்லாம் அவரால் ஊகிக்க முடியாமல் இருந்தது.

‘என்ன மயிலாப்பூர் கோவில் பேட்டு வந்தாச்சா’

‘ஆச்சு’

‘என்ன சுணக்கமா இருக்கு பதில்’

‘நீங்க வரல.நான் மட்டும் போயிட்டு வந்தேன். அதான் சுணக்கம்.எங்கம்மாதானே படுத்துண்டு இருக்கா’

‘நான் ஆத்துல இருந்து  படுத்துண்டு தூங்கினேனா இல்ல டி வி பாத்துண்டு இருந்தேனா கோவிலுக்குதானே போயிருந்தேன். அதுவும் உங்க அப்பாதான் யாராவது ஒருத்தர் ஆத்துல இருக்கணும்னு சொன்னார்,.அவர் ஆத்துல இருந்தார். நா அவர் மொறைக்கு பூஜைக்கு போயிட்டு வந்தேன். கபாலி உன்னோட வந்தார். அப்பறம் என்ன’

‘எல்லாம் சரி’ என்றாள் சித்தி.

மயிலாப்பூர் கற்பகாம்பாள் குங்குமம் கொண்டு வந்து’ நெத்தில வச்சிகுங்கோ’ என்றாள். சித்தப்பா நெற்றியில் வைத்துக்கொண்டார்.

‘மோளக்காரன் கணக்கா குங்குமம் வச்சினுட்டேள்’

‘காமு எனக்கில்லையா’ என்றார் சித்தியின் அப்பா. அவரும் குங்குமம் வைத்துக்கொண்டார்.

‘நானும் மோளக்காரந்தானா சொல்லு’

‘அப்பா எப்பவும் சரியா வச்சிண்டு இருப்பேள்’

சித்தப்பா எடுத்து வந்த கோவில் பிரசாதத்தை அனைவருக்கும் பரிமாறி இரவு சாப்பாடு கந்தாயம் முடிந்தது.

‘சாமிக்கு சப்பாத்தி நைவேத்யம் வச்சி வழக்கப்படுத்தணும் ஆகுமா’

என்றார் அப்பா.

‘ஒரு வேள அரிசி சாதம் ரெண்டு வேள டிபன்னு ஆயிடுத்து. அதுவும் கோதும கேழ்வரவு கம்புன்னு சாப்பிடறா ஜனங்க’

‘எல்லாம் மாறித்தான் ஆகணும்’

சித்திக்கு அவரின் தந்தை பதில் சொல்லிக்கொண்டார். எல்லோருமாய் உறங்கப்போனார்கள். சித்தியின் தாயார் மட்டும் ‘ஊம் ஊம்’ என்று முனகிக்கொண்டிருந்தார்.

‘என்ன செய்யட்டும் அம்மா உனக்கு’ சித்தி பேசிக்கொண்டே உறங்க முயற்சி செய்கிறாள்.  ஆனால் உறக்கம் வந்தால்தானே. இந்தக்கபாலி ஒரு புதிராகவே இருக்கிறான். சித்திக்கு எதுவுமே பிடிபடமாட்டேன் என்கிறது. நம் அப்பாவுக்கே கூட கபாலி பிறந்திருப்பானோ. அய்யோ கடவுளே இப்படிக்கூட நினைத்துப்பார்ப்பதா. இது தருமமா என்றது மனம். அந்த பூக்கடைக்காரியும் எதையோ சொல்லாமல் விழுங்குகிறாள். அப்பாவோ எதுவுமே சொல்வதில்லை. அந்தக்கபாலி யாராய் இருந்தால்தான் நமக்கென்ன. இப்போது நம் தாயார் குடும்பத்துக்கு அவன் உபயோகப்படுகிறான். அதோடு விட்டு விடுவோம். அண்ணாமலைநகர் நாம் திரும்ப வேண்டும். சாமிநாதன் படிக்கவேண்டும். நம் கணவரின் அண்ணா குடும்பம் எத்தனை நாள் அண்ணாமலை நகரில் நம் வீட்டில் இருப்பது. அதற்கு என்னதான் முடிவு. இந்தக்கபாலிக்கு மூத்தாரின் பெண் வேதாவைக்கட்டி வைக்கலாம். அதுகூட நல்ல யோசனைதான். அது எல்லாம் நடக்கவேண்டுமே. சித்தி யோசித்துக்கொண்டே படுத்திருந்தாள். தூக்கம் வருகிறமாதிரி இல்லை.  சித்திக்குத் தலை கூடவலித்தது.

’என்னடி புரண்டு புரண்டு படுக்கற உறக்கம் வரலயா’ சித்தியின் அம்மா புலம்பினாள்.

சித்தியின் அப்பா சித்தப்பா கபாலி என எல்லோரும் உறங்கிவிட்டிருந்தனர்.

 

மைலாப்பூர் சென்று வந்ததன் முழுவிபரம் சித்தி மட்டுமே அறிந்தவள். கபாலியின்  முழு விபரம் எங்கே சித்திக்குக் கிடைத்தது. சித்தியின் தந்தையும் பூக்கடைக்காரியும் கபாலியின் எல்லா விபரமும் அறிந்தவர்கள். அது விபரம் மட்டும்தானா இன்னும் கனமான செய்தி ஏதும் அதனுள் பதுங்கி இருக்கிறதா எந்த எதுவும் அவர்கள் சொன்னால்தானே உண்டு.  தன் கணவருக்குக்கூட சித்தி  மைலாப்பூர் போய்வந்த அந்ததன் மெய்யான விபரம் சொல்லவில்லை. விபரம் சொல்பவளாக இருந்தால் அவரையும் கூட்டிக்கொண்டே போயிருப்பாள்தானே. கபாலி மட்டும் சித்தி ஏதோ விஷயம் தேடிக்கொண்டு மைலாப்பூர் வந்து போனாள் என்பதை ஊகித்திருக்க முடியும். கபாலிக்கு எதுவும் பிரச்சனையே இல்லை.  கபாலிக்குச் சூழல்  எல்லாம் சவுகரியமாகவே அமைந்து விட்டிருக்கிரது.

ஒருநாள் சித்தியின் அப்பாவும் கபாலியும் வெளியே போய் இருந்தார்கள். சித்தியின் அன்னை சற்று கண்ணை மூடி உறங்கிக்கொண்டிருந்தாள். சித்தி தன் கணவரை அழைத்துக்கொண்டு ஒரு புறமாக ஒதுங்கினாள்.

‘இதுல ஒண்னும் குறைச்சல் இல்ல’

‘’நீந்தானே என்னை ஓரமா அழச்சிண்டு போற. ஆத்துல அவா ரெண்டு பேரும் இல்லாத நேரம் பாத்து’

‘அதுல  மட்டும்தான் ஆம்பிளைகளுக்கு நெனப்பு. கண்ண கண ன்னு எப்பவும். நெருப்பு  மாதிரி உள்ளாற’ எரிந்து விழுந்தாள்.

‘தப்பு தப்பு’

 ஒரு யோஜனை எனக்கு.  இந்த ‘கபாலிக்கு  உங்க தம்பி பொண்ணு வேதாவை  கட்டி வச்சிட்டா என்ன’

‘டக்குன பெரிய சமாச்சாரம் ஒண்ண அவுத்து சர்வசாதாரணமா விடற. மாப்பிளயும் நம்ப பொறுப்புல இல்ல. அந்த  பொண் கொழந்தயும் நம்ப பொறுப்புல இல்ல. இதுல நாம போய் ஒரு முடிவு பண்ண முடியுமா’

‘ஏன் உங்க  அண்ணா குடும்பத்துக்கு ஒரு வழி காமிச்ச மாதிரி இருக்காதா’

‘இருக்கும்’

‘’என்ன இழுக்கறீள். இங்க என் அம்மாவுக்கு ஒத்தாசைக்கு மனுஷா இல்ல. அது ஒரு பிரச்சனை.  கபாலிய கட்டிண்டு வேதா இந்த ஆத்துக்கு வந்துட்டான்னா. அந்த பிரச்சனை சரியாயிடும். நாம அண்ணாமலைநகர்க்கு திரும்பவும் போயிடலாம். நம்ப கொழந்தகிட்ட நாம இருக்கணும் இல்லயா’

‘சரியாத்தான் இருக்கு நீ சொல்றது’

‘அப்பறம் என்ன’

‘’ அந்த  வேதா பொன்ணு இப்பத்தான்  தமிழ்  ப்ரொபசர் ஆத்துக்கு போய் நாலு எழுத்து கத்துண்டு வர்ரது. சந்தோஷமா இருக்கு.  அவளுக்கு மேல மேல படிக்கணும்னு ஆச.அது கெட்டுப்போய்டும்’

‘இந்த சமாச்சாரம்  என்னண்ட நீங்க சொல்லவே இல்லயே மொடவன் கொம்பு தேனுக்கு ஆசை படறதா’

‘ அந்த பொண்ணு  வேதா மொடமும் இல்ல. படிப்புங்கறது  கொம்பு தேனும் இல்ல.   இது நாள் வரைக்கும் எங்க நம்ப அந்த பொண்ணுக்கு கல்யாணம்    பத்தி  எல்லாம் பேசினம்.’

‘ நேத்து ராத்திரி எனக்கு தூக்கம் வரல. என்  கொழந்த சாமி நெனப்பாவே இருந்துது. நாம இங்கேந்து விடுதல ஆகணும்னா இந்த ஆத்து வேலக்கி என் அம்மாவ பாத்துக்கறதுக்கு   கெட்டா கெட்டியா ஒரு பொம்மனாட்டி வேணும், அதுக்கு ஒரே வழி  வேதாவ  கபாலிக்குக்கட்டி வச்சிடறதுதான்’

‘நாம அங்க போயிட்டா  என் அண்ணா குடும்பம் சந்திக்கு வந்துடும்’

‘அண்ணா குடும்பம் மட்டும் சந்திக்கு  வரப்பிடாது. ஆனா நம்ம குடும்பம் வரலாம்.  திருட்டு எண்ணம் அப்பிடித்தானே’

‘ஏதோ சொல்லிட்டேன் தப்பா. விட்ரு. அண்ணாவுக்கு வேற கோவில் பூஜ பாக்கணும்’

‘அது எப்பவும் இருக்கறதுதான்’

‘ஆமாம்’

‘நீயே உன் ஓர்ப்படிகிட்ட கேட்டுப்பாரு’

‘ஏன் நீங்க உங்க அண்ணாகிட்ட கேக்கலாமே’

‘பொம்மனாட்டி முடிவுதான் முக்கியம். நீங்க ரெண்டு பேரும் இதுல ஒத்து வாங்கோ மொதல்ல’

‘நீங்க  பொறுப்ப எங்க தலயில கட்டறேள்’

‘அதெல்லாம் இல்ல. நீ உன்  ஓர்படிகிட்ட கேக்கறது இருக்கட்டும். அந்தக்கபாலிக்கு என்ன யோஜன இருக்குன்னு நமக்கு தெரியவேண்டாமா’

’ நல்லதே தெரியாதா. நாக்குல சனி ‘புதுசா எதாவது சொல்றேள்’

‘ஒண்ணும் புதுசு இல்லே. வேதா நா படிக்கனும்னு சொல்லிட்டு ப்ரொபசர் ஆத்துக்கு போனமாதிரி இந்த புள்ளயாண்டான் எதாவது சேதி சொன்னன்னா’

‘நீங்க ஒத்தர் போறும் ஊர கெடுக்கறதுக்கு’

‘கபாலிக்கு என்ன யோஜன. உன் அப்பா என்ன பிளான் வச்சிண்டு இருக்கார். கபாலிக்கு பாத்தியப்பட்டவா  இருப்பா. அவா என்ன சொல்வா’

‘நா அப்பாகிட்ட பேசறேன்’

‘அத மொதல்ல செய். பாக்கிய அப்புறமா பாப்பம்’

‘நம்ப ஊருக்கு போகணும். அது ஞாபகம் இருக்கணும்’

‘அது இருக்கு’

‘ஊர்ல அண்ணா  மன்னி  அவா பொண்ணு சவுக்கியமா இருக்கட்டும் நாம டவுன சுத்திண்டு இருக்கலாம்னு யோசனை மொளச்சிட்தோன்னு தோண்றது’

சித்தப்பா மனம் உடைந்துபோனார். சித்தி தன் பேச்சை முடித்துக்கொண்டு தன் படுக்கைக்குப்போனார்.

சித்தப்பாவின் உறக்கம் போனது. அவர் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்.  சித்தி மட்டும் எங்கே தூங்கினாள். வேதாவின் திருமணம் என்பது உடனே நடைபெறுகிற விஷயமா என்ன? அவர்கள் குடும்பம் ஊரைவிட்டு ஊர் வந்து நிரந்தர உத்யோகம் வருமானம் இல்லாமல் அவஸ்தை பட்டுக்கொண்டிருப்பது என்பது உண்மை. அவர்களிடம் போய் உன் பெண்ணுக்குத்திருமணம் செய் என்று சொல்வது சரியாக இருக்குமா  இந்தக்கல்யாணம் நடக்குமா என்கிற  விஷயங்கள்   சித்தியை குடைந்து கொண்டிருந்தது.

 

 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை. சாமிநாதனுக்குப்பள்ளி விடுமுறை. சாமி ஏழாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.காலையில் டிபன் சாப்பிட்டு முடித்தவன் அப்பாவோடு பூஜைக்கு சென்றிருக்கலாம். அவன் அப்படிச்செல்லவில்லை. வழக்கமாய் செல்பவந்தான்.

‘டீ இந்த பையன் எங்கே போன்னான் தெரியுமா’

‘என்னண்ட சொல்லைக்காம எங்க போயிருப்பானோ’

‘இன்னும் சித்தநேரம் பாக்கலாம். வர  இல்லன்னா சாமிய தேடிண்டு அலையவேண்டியதுதான்’

‘அப்பா வந்துடுவார் இப்ப. நானும் அப்பாவும் தேடப்போறோம்’

‘ஒத்தராத்துக்கு நாமளே கஷ்டத்துல  வந்து   இருக்கோம். அவாளுக்கு ஒரு கஷ்டம். அவா வேற ஊருக்கு போயிட்டா.  தோ போயிட்டு வந்துடறேன்னு போயிட்டா. ஆனா அவா  கொழந்தக்கி ஸ்கூல் இங்க  இருக்கு.  அவன கூட்டிண்டு போமுடியல.  நம்மகிட்ட விட்டுட்டு போயிட்டா. பிறத்தியார் கொழந்தய பாத்துகறதுன்னா லேசுபட்ட சமாச்சாரம் இல்ல. வயத்துல நெருப்ப கட்டிண்டுதான் ஆகணும்’

‘நல்ல பையந்தான்’

‘வயசு ஒண்ணு இருக்கே. அது பித்து புடிக்க வச்சிடறதே’

நானும் அம்மாவும் குழம்பிப்போய் வாயில் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். அப்பா கோவில் பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

‘இது சரியில்லடா சாமி, உனக்கு புத்தி பீ திங்க போனதா’

அப்பாவின் குரல் சத்தமாகக்கேட்டது.

‘தோ சாமி வரான்’ அம்மா ஓங்கிய குரலில்  சொன்னள்.

அப்பா சாமியை திட்டிக்கொண்டே வந்துகொண்டிருந்தார். சாமி அழுதுகொண்டே வந்து கொண்டிருந்தான். சுப்புணி சாமியை சமாதானப்படுத்திக்கொண்டே வந்தார்.

‘அய்யா செறு புள்ள வுடுங்க’

‘நீ என்ன பேசற. மொதலு போயிட்டா வருமா’

சாமியின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டு இருந்தது. கால் சட்டை மட்டும் போட்டுக்கொண்டிருந்தான். மேல் சட்டையைக்காணவில்லை. பார்ப்பதற்குப்பரிதாபமாகக்காணப்பட்டான்.

நானும் அம்மாவும் எதிர்கொண்டு ஓடினோம்.

‘ஏன் என்ன ஆச்சு’

‘ இவன் பாசுபதேசுரர் திருக்குளத்துல நாலு வாண்டுப்பசங்களோட சேந்துண்டு நீச்சல் கத்துகறானாம். தண்ணில குதியாளம் போட்டுண்டு நிக்கறான். சுப்புணி கொளத்துல எறங்கி தர தரன்னு கரைக்கு இழுத்துண்டு வந்தான்’

‘ஏண்டா சாமி நீ இப்படி பண்ணலாமா. எனக்கு வயத்த பிசஞ்சிண்டு வர்றதே. என்ன பாவியாக்கிட்டு நிக்க போறயா நீ’  அம்மாவுக்குக்கண்கள் சிவந்துபோய் இருந்தன.

‘கொழந்தய அடிச்சுட்டேளா’

‘நா அடிப்பணா. ஆனா அவன் செஞ்சது அடிக்கலாம்னுதான் தோணித்து’

‘நீங்க அடிக்கலயே’

‘பைத்தியம் அடிப்பனா நான். அவன் சொன்னான் ஸ்கூல் டீச்சர்  கிளாஸ்ல சொன்னாராம் நீச்சல் கத்துகறது ரொம்ப நல்லதுன்னு. அதுக்குத்தான் அவன் கிளாஸ் பசங்க இன்னும் நாலும் சேந்துண்டு திருக்குளத்துக்கு வந்து தண்ணில குதியாளம் போடுதுங்க.  அந்த நாலுல யாரோ ஒத்தனுக்கு நீச்சல் தெரியுமாம். அவன் மத்த பசங்களுக்கு கத்து தரானாம். இதுதான் சேதி’

‘நம்மகிட்ட சொல்லணுமா இல்லயா’

‘அதான் ரெண்டுங்கெட்டாங்கறது.’

நான் சாமியை சமாதானப்படுத்தி அழைத்துகொண்டு வந்தேன்.

‘நீ  சொல்லியிருக்கலாம் இல்லயா சாமி’ என்றேன் நான்.

‘நீ மட்டும்  என்ன   நீச்சல் கத்துக விடுவயா’

எனக்கு சிரிப்பு வந்து விட்டது.

‘விடுவேன்’

‘’பொய்தான் சொல்ற நீ’

‘கொழந்த பயந்து இருப்பான் விடுங்க’ என்றார் சுப்புணி.

‘ஒண்ணு கெடக்க ஓண்ணு ஆனா என்ன பண்ண முடியும் அய்யோன்னா வருமா அப்பான்னா வருமா.’ அம்மா சுப்புணிக்கு சொன்னாள்.

சாமியைப்பார்த்ததில் எனக்கும் அம்மாவுக்கும் மகிழ்ச்சி.

‘நானும் சுப்புணியும் குளத்த கவனிக்காம வந்து இருந்தா என்னா ஆகியிருக்குமோ. குளம்  ரொம்ப ஆழம் வேற.  நல்ல சேறு.  போனது எல்லாம் அர டிக்கட்டுன்னா’

அப்பா சொல்லிமுடித்தார்.

‘இவன கொஞ்சம் கவனமாதான் பாத்துகணும். நல்லா பேசறான் ஆனா எதாவது கோணல் மாணலா செஞ்சிடறான்’

எல்லோரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

‘தலய துவட்டு’

‘உன் சட்ட’

‘அத படித்துறயில வச்சன். பெரியப்பா சத்தம்போட்டதுல அப்பிடியியே ஓடிவந்துட்டேன்.  எனக்கு நீச்ச்சல் சொல்லிகுடுத்துண்டு இருந்த பசங்க ப்யந்து ஓடிட்டா.  நா நாலு வாய் தண்ணி குடிச்சுட்டேன். என்னமோ நல்லகாலம் கர பக்கம் வந்துட்டேன். வேற பக்கம் போயிருந்தா  த்ண்ணில முழுகியிருப்பேன். நா எந்த நெலமயிலே இருந்தேன்னு பெரியப்பாக்கு தெரியல. இண்ணைக்கி போயிட்டம் நாமன்னு தோணித்து’

 அட ‘படவா,  நா இத எல்லாம் கவனிவே இல்லடா. வெத்து  முண்டமா இருந்துட்டேன். பசங்க ஏதோ அடம் பண்றானு விறட்டுணும்னு தோணிச்சே தவிற. இதுல  கொழந்தைகள் பிராண சமாச்சாரம் ஒண்ணு இருக்குங்குற ஞானமே எட்டாம போயிட்து.  அத கவனிக்கணும்னு மண்டைக்கு உறைக்கலயே’

‘எத்தினி பசங்க போனது’ என்றாள் அம்மா.

‘நாலு கழுதைவ’ என்றான் சுப்புணி.

‘பசங்க எல்லாம் கரையேறிடிச்சா’

‘நாலும் வந்துடிச்சி’

‘ஏண்டா எத்தினி பேரு திருக்குளத்துக்குப் போனது’ அம்மா சாமியைக்கேட்டாள். சாமி அழ ஆரம்பித்தான்.

‘அவன எதுவும் கேக்கவேணாம் அதுக்கு  ஆத்தா அப்பனும் ஊர்ல இல்ல. பயந்துடப்போவுது. இருப்ப கரண்டிய  நல்லா பழுக்க போட்டு ரவ மோரு ஊத்தி, சொறேர்னு சத்தம் வரும் அந்த மோர  தம்பிக்கு குடுங்க. பய பயந்து இருந்தாலும் அது முறிஞ்சிடும்’ சுப்புணி.‘ 

’ஏ சுப்புணி சுப்புணி செத்த திருக்குளத்து படித்துற வரைக்கும் போயி பாரு . சாமி சட்ட அங்க வச்சிட்டு அரை டிராயரோட தண்ணில குதிச்சிருக்கான்’

‘என் அதயும் அவுத்து வச்சிட்டு குதியாளம் போடலாம்தான’ சொல்லிய சுப்புணி திருக்குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

என் அம்மாவும் அப்பாவும் ஆடிப்போய்விட்டார்கள். ’இது எதுலயோ போய் முடிஞ்சிதுன்னா  நம்மால பதில் சொல்ல முடியுமா. அனுபவிக்கிற கஷ்டம் போறாத. இந்த தினுசுல வேற பாக்கியா எனக்கு’ என்றாள் அம்மா.

நான் என்னிடம் இருந்த நோட்டுப்புத்தகங்களை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அம்மாவும் அப்பாவும் திண்ணையில் உட்கார்ந்து எதோ சீரியசாகப்பேசிக்கொண்டு இருந்தார்கள். என் காதில் விழாமல் இல்லை. சாமி அவனுக்குக்கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்களை எடுத்து எழுத ஆரம்பித்தான்.

’போறும் போறும், நாம அந்த கொழந்தய பாத்துண்ட லட்சணம். வழிச்சிண்டு சிரிப்பா பாக்கறவா. இங்க தங்க நெழல் குடுத்து சோறு குடுத்து இருக்கா, அவாளுக்கு ஒரு அபாவம் வந்தா,  ஊர்ல பாக்கற ஜனம் நம்ம காறித்துப்புவா, உருப்படாத இதுக எதுக்கும் லாயக்கு இல்லேன்னு சொல்லி கட்ட வெளக்கமாத்தால அடிப்பா’

அப்பா எதுவும் பதில் சொல்லாமல் இருந்தார்.

‘’பள்ளிக்கூடத்த மட்டம் போட்டுட்டு விளாம்பழம்  அடிக்கப்போனான். அதுல ஒரு பஞ்சாயம் ஆச்சு. அத தாண்டி இண்ணைக்கு இந்த நீச்சல் கத்துகறேன்னு ஒரு பெரிய பிரச்சனை. எனக்கு அந்த பையன் அவ அம்மா அப்பாண்ட இருக்கணும்னு தோணறது. ஒண்ணு அவா இங்க  வரணும். இல்லன்னா இந்த புள்ள அவாளண்ட போயிடணும்’

‘என்ன செய்யலாம்னு நெனக்கிறே’

‘’நாம மெட்ராஸ் போயி  இந்த விபரம் அவாளண்ட சொல்லிடணும். இல்லன்னா அது பெரிய தப்பாயிடும்’

‘எப்பிடி செய்யலாம்’

‘நாம எல்லாருமே பொறப்பாட்டு சென்னைக்கு போவம்.’

‘செலவு ஆகும். பூஜைக்கு இங்க என்ன பண்றது. ஆள் வேணுமே’

‘அப்ப நானும் சாமியும்  மட்டும் போறம்’

‘வயசு பொண்ண ஆத்துல தனியா  வச்சிட்டு நா பூஜைக்கு போனா   அது சரியாஇருக்குமா . அவளுக்கும் கஷ்டம்தானெ’

‘அவ  இருந்தா எதானு  சமைப்பா ஒத்தாசையா இருக்கும்’

‘நானே பொங்கிகறேன். எல்லாம் பாத்துகறேன்.  நீங்க மூணு பேருமே சென்னை போங்கோ’

‘போயிட்டு வாங்கோன்னு சொல்லுங்கோ’

 அது சரி. போயிட்டு வாங்கோ ‘சாமிநாதன்  சமாச்சாரமாத்தான் நம்ப போறம்கறது. அவனுக்கு தெரியப்பிடாது’

’அது ரொம்ப முக்கியம்’

‘நாளக்கே கெளம்புங்கோ. சனி ஞாயிறு லீவு இருக்கு.  வேணும்னா கூட ஒரு நாள் லீவு போட்டுக்கலாம்’

‘சாமி இங்க வா’

‘நாளைக்கு  பெரியம்மா மெட்ராஸ் போறாளாம்’

‘என்ன சேதி’

’ உங்க பாட்டிய பாத்துட்டு வரலாம்னு. பாட்டிக்கு காலுல பிரச்சன இருக்குதானே’

‘நானும் போறன். எனக்கும் பாட்டி தாத்தா அப்பா அம்மா எல்லாரையும்  பாக்கணும்போல இருக்கு’

‘அப்ப நாளைக்கு காலையில கெளம்பிடுங்க’

‘சரி பெரியப்பா’

‘ நீ அக்கா பெரியம்மா மூணு பேரும் போறேள்’

‘ நீங்க’

‘’பாசுபதேசுரருக்கு   நிவேத்ய சாதம் தயார்   பண்ணணும். அப்புறம் பூஜ இருக்கே. அதுக்கு ஆளு.

‘ஆமாம் அதுதான முக்கியம்’

‘டீ உன் பொண்ணு ரெண்டு பேரும் துணி மணி எடுத்து வச்சிகுங்கோ’

‘எப்பிடி போலாம்’

‘பஸ்லதான்’

நான்  துணிமணிகள் சிலது எடுத்துக்கொண்டேன். சாமியே சட்டை டிராயர் எடுத்துக்கொடுத்தான். அம்மா  மாற்றுப்புடவை ஜாக்கெட் எடுத்து வைத்துக்கொண்டாள்.

‘பத்ரமா போயிட்டு வரணும். இங்க பஸ்ல ஏறினா  கோயம்பேடு. அங்கேந்து ஒரு டவுன் பஸ் புடிச்சி  பூக்கடை. அங்கேந்து நடந்தும் போலாம். ஆட்டோவிலயும் போலாம். எப்பிடி சவுகரியமோ அப்பிடி செஞ்சிக்கோங்கோ’

‘சாமிக்கு அர டிக்கட்டுதானே’

‘அது வர கண்டக்டர பொறுத்து இருக்கு. பஸ்ல ஒரு அளவு கோடு அர டிக்கட்டுக்குன்னு ஒரு ஓரமா போட்டு வச்சிருப்பா. அதுல நில்லும்பா’

‘அந்த உயரம் வந்துட்டா முழு டிக்கட் இல்லையா’

‘ஆமாம்’

இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்துக்கொண்டோம்.

‘மறக்காமல்   அடகு வச்ச  வளையல்.  மூட்டுடணும்னு சேட்டு நோட்டீசு  அனுப்பியிருக்கறத என் தம்பிகிட்ட காமிங்கோ’ அப்பா சொன்னார்.

‘ மூட்டு எடுத்துணு போயிடுவோம்’

‘என்ன சொல்ற நீ’

‘’அந்த நகய அடகு வச்சது அவன்’

‘செலவு நமக்குன்னா பண்ணினார்’

‘சேட்டு நகய நம்மகிட்ட குடுப்பாரா’

‘பணத்த வட்டியோட கட்டினா’

‘தெரியல’

‘கேட்டு பாருங்கோ’

‘என்னடி  கொழப்பற’

‘கொழப்ப ஒண்ணும் இல்ல’

‘ அந்த நக வச்ச பில்லு தம்பிகிட்ட இருக்கு. அதுவேணும்’

‘போயி கேளுங்கோ அவன் போ குடுக்க முடியாது ஒன் தம்பி வரட்டும்னா திரும்பி வாங்களேன்’

‘உனக்கு ஊருக்கு போக காசு வேணும் நகய மூக்கணும். ரெண்டும் ஆகுமா என்னால’

‘பாருங்கோ பாத்து சொல்லுங்கோ’

நான் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வதைப்பார்த்துக்கொண்டே இருந்தேன்.

சாமி தன் துணிமணிகளை புத்தகங்கள் சிலதுகளை ஞாபகமாக எடுத்துவைத்துக்கொண்டான்.

‘கொழந்த சமத்து’

‘இல்ல அக்கா எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வச்சிருக்கேன்’

அப்பா தனது  கை இருப்பு  எவ்வளவு  இருக்கிறது என்பதைத்தேடி கணக்குப்பார்த்துவிட்டு சேட்டு வீடு நோக்கிப்புறப்பட்டார்.

‘ஆச்சுன்னு வரணும்’

‘இதுல இதுவேற’ அப்பா முறைத்துவிட்டுப்புறப்பட்டார்.

சாமியும் அப்பாவோடு கூட போனான். சேட்டு வீட்டு முன்பாக இருக்கும் கேட்டில் நின்று அப்பா சேட்டை இரண்டு முறை அழைத்தார். ஒன்றும் அரவமில்லை. அழைப்புமணி இருப்பதை கண்டுபிடித்த சாமி அந்த பொத்தானை அமுக்கினான்.

‘யாரு’

‘நான் கோவில் குருக்கள் வந்துருக்கேன்’

‘சிவன்கோவில்குருக்கள்’

‘யாரு கந்தசாமி குருக்கள் அண்ணன் தானே’

‘அவரேதான்’

‘என்ன சேதி’

‘என் தம்பி வச்ச வளையல் மூக்கணும்’

‘ரூவா கொண்டாந்து இருக்கீகளா’

‘ஆமாம்’

‘நகய உங்க தம்பி வச்சிருக்காரு. நீங்க மூக்கறீங்க. இது சரிப்பட்டு வருமா’

‘ என் வீட்டுல  எம் பொண்ணு தம்பி பையன் எல்லாரும் சென்னை போறாங்க. என் தம்பிய அவன் சம்சாரத்த பாக்க போறாங்க’  உங்க கிட்ட அடகுல இருக்குற நகய மூட்டுட்டா குடுத்து அனுப்பிச்சி வுடுவேன்’

‘நல்ல யோசன’

சேட்டு கேட் அருகே வந்தார். அப்பா பத்திரமாகக் கொண்டுவந்த  ஏல நோட்டிசினைக்காட்டினார்.

அதை சேட் வங்கிக்கொண்டார். மேலும் கீழும் பார்த்தார். அசல்  மூனு வட்டி அர ஆக மூணு அர இருக்குதா’

‘பேஷா’

கேட்டைத்திறந்தார். பெஞ்சொன்றில் அமரச்சொன்னார். அப்பாவும் சாமியும் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்கள்.

‘இந்த நோட்டிசுக்கு பின்னாடி ஒரு கையெழுத்து போடுங்க. அடரஸ் எழுதுங்க. நா யாருக்கும் இப்பிடி குடுத்தது இல்ல. பகவான் முன்னாடி சேவ செய்யுறீங்க. தப்பு தண்டா வராதுன்னு நம்பிக்கை.’

‘ஈஸ்வரா’ என்றார் அப்பா.

‘ஏமாத்துற செனம் அதிகம்.  நீங்க  எல்லாம் என்ன பிஸ்கோத்து’

அப்பாமூன்றரை ஆயிரம்  ரூபாய் எண்ணிக்கொடுக்க அதனை  இரு முறை எண்ணிப்  பார்த்துக்கொண்டார்.

‘இருங்க வரன்’

அப்பாவும் சாமியும் பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தனர். உள்ளே என்னவோ உருட்டும் சத்தம் கேட்டது. சேட் திரும்பி வந்தார். ஒரு சுருக்கு பையைத்திறந்து சித்தியின் வளையலை எடுத்து நீட்டினார். அப்பா அதனை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

‘தப்பு தண்டா வரப்பிடாது’

‘அதெல்லாம் எதுக்கு வரப்போவுது’

‘அப்ப கெளம்புங்க’ என்றார்.

சாமியும் அப்பாவும் வீட்டுக்குத்திரும்பினர்.

அப்பா அம்மாவிடம் கொடுத்து ’வளையலைக்கையில் போட்டுக்கோ’

‘அதெல்லாம் எதுக்கு’

‘இல்ல மெட்ராஸ் போனவுடனே கழட்டி  பேப்பர்ல ஒரு பொட்டலம் கட்டி என் தம்பிண்ட குடுத்துடு. அதுவரைக்கும் உன் கையில இருக்கட்டும். அதான் நல்லது. பத்ரமா  அது   அங்க போய்ச்சேரணுமே’

அம்மா சாமி நான் மூவரும் ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டோம்.

‘நேரா ரயில்வே ஸ்டேஷன் போங்கோ. இப்ப ஒரு  எக்ஸ்பிரஸ்  வரும்’

‘ரயில்ல போறமா அய்’ என்றான் சாமி.

நான் இதுவரை ரயிலில் பயணம் போனதே  இல்லை. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் நால்வருமாய் அஞ்சலகம் வரை நடந்து வந்தோம். பேருந்து ஒன்றையும் காணோம். ஒரு போக்கு ஆட்டோக்காரன் வந்தான். அவனை நிறுத்தி  அப்பா விஜாரித்தார்.

‘தலைக்கு பத்து வா வா வா’

நாங்கள் மூவரும் ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம்.

‘பத்ரம்’

‘’நீங்க ஜாக்கிரதயா இருங்கோ என்ன’

‘எப்ப திரும்பறது’

‘அனாவசியமா அங்க என்ன வேல.  மனுஷாள பாத்தம் வந்தம்னு வந்துடுவேன். உங்கள தவிக்கவுட்டுட்டு நேக்குதான்  என்ன வேல அங்க’

‘நா போயிட்டு வரேன் பெரியப்பா’

‘சமத்தா இரூக்கணும் என்ன’

நானும் அப்பாவிடம் சொல்லிக்கொண்டேன். ஆட்டோ புறப்பட்டது. அப்பா கண்ணிலிருந்து பறைந்து போனார். அம்மாவின் முகம் வாடியிருந்தது.

‘என்னம்மா’

‘ஒண்ணுமில்ல கண்ணா’

எனக்கு அம்மா சொன்னாள். ஆட்டோ சிதம்பரம் ரயில் நிலையத்தில் வந்து நின்றது.

நாங்கள் இறங்கினோம். மூன்று டிக்கட் வாங்கிக்கொண்டு பிளாட்பாரத்திற்கு வந்து ஒரு பெஞ்ச் பார்த்து அமர்ந்து கொண்டோம். ஒரு அரை மணி நேரம் ஏதோ கதை பேசி பொழுது போக்கினோம். சாமி பிளாட்பாரத்தில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தான்.

‘என்னடா குஷியா’

‘ ஆமாம் அம்மாவ அப்பாவ பாப்பேன்’

ரயில் வந்தது. ஒரே கூட்டமாக இருந்தது. பொதுப்பெட்டியில் ஏறி க்கொண்டோம். அம்மாவுக்கு உட்கார இடம் கிடைத்தது. நானும் சாமியும் நின்றுகொண்டோம்.

‘எங்க எறங்கறம்’

‘எக்மோர்’

என்றாள் அம்மா.

‘அப்புறம்’

‘ஒரு ஆட்டோ’

‘அப்புறம்’

‘ உன் தாத்தா வீடு’

படுகுஷியாகக்காணப்பட்டான் சாமி. நானும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

பெட்டி நிறைய மக்கள் ஏறிக்கொண்டார்கள். ரயில் வேக வேக மாய் நகரத்தொடங்கியது.

‘லக்கேஜ் டிக்கட் எல்லாம் பத்ரம்’

‘மூணு பையி இருக்கு  பாத்துகோ’

அம்மா டிக்கட்டை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். சாமி ஜன்னல் வழியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டே வந்தான்.

‘கோபுரம் தெரியர்து பார் அக்கா’

‘சிதம்பரம்  நடராஜா கோவில் கோபுரம் அது எல்லாம்’

அம்மா சொன்னாள். நானும் பார்த்துக்கொண்டேன். ரயில் சென்றுகொண்டே இருந்தது. கடலூர் விழுப்புரம் என ஸ்டேஷன்கள் வந்தன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் அதிக நேரம் வண்டி நின்றது. கொய்யாப்பழமும் பலாச்சுளையும் விற்றுக்கொண்டு சிறுவர்களும் பெண்களும் பிளாட்ஃபாரத்தில் அலைந்துகொண்டே இருந்தார்கள்.

அம்மா பலாச்சுளை வாங்கிக்கொடுத்தாள்.

‘நீங்க தின்னுங்கோ பசங்களா’

‘ஏம்மா’

‘எனக்கு புடிக்காது’

‘என்ன பழம்தான்  திம்பே’

‘பாக்கி எல்லா பழமும் திம்பேன்’

‘அப்பண்ணா கொய்யாப்பழம் வாங்கலாம்’

‘உனக்கு வேணுமா’

‘உங்களுக்கு வேணுமா’

கொய்யாப்பழம் விற்கும் பெண் பழங்களைத்தயாராக கையில் வைத்துக்கொண்டு’ இந்தா புடி  போனா வராது புடி புடி’ என்றாள்.

அம்மா கொய்யாப்பழனகளும் வாங்கிக்கொடுத்தாள். நல்ல ருசியான பழங்களாக இருந்தன.

வண்டி நகரத்தொடங்கியது.

‘விழுப்புரத்தில கொய்யா பண்ருட்டில பலா ரொம்ப விசேஷம்’ அம்மா சொன்னாள்.

‘வயிறு நிரஞ்சிப்போச்சு’ சாமி சொல்லிக்கொண்டான். தண்ணீர் பாட்டில்களை விற்றுக்கொண்டு ஒரு சிறுவன் வந்தான்.

அம்மா தண்ணீர் வாங்கிக்கொடுத்தாள்.

‘ஹேவ் ‘ சாமிக்கு ஏப்பம் கூட வந்தது. திண்டிவனம் ஸ்டேஷனில் வண்டி நின்றது.

‘வேர்க்கடலை வறுத்த வேர்க்கடலை , வெள்ளரி வெள்ளரி ‘ என்ரு கூவி கூவி விற்றுக்கொண்டே போனார்கள். சாமி என முகத்தப்பார்த்தான். நான் அம்மாவப்பார்த்தேன்.

ஆளுக்கொரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கினோம். வெள்ளரிப்பிஞ்சுகள் அம்மா பார்த்து பார்த்து வாங்கினாள். நாங்கள் மூவருமே ரயிலில் இடம் கிடைத்து அமர்ந்துகொண்டோம்.

செங்கல்பட்டு வந்தது. ஸ்டேஷனுக்கு அருகாமையில் பெரிய ஏரி. அதில் கட்டுமரத்தில் மீன் பிடிப்பவர்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். மாலை நேரம் மஞ்சள் வெயி அடித்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள் மலைகள் தெரிந்தன. நானும் சாமியும் பார்த்துக்கொண்டோம்.

‘நீ மலையில எப்பவானு ஏறியிருக்கயா’

‘இல்லடா. இப்பதான் மலைய கண்ணால பாக்கறேன்’

‘கடலு பெரிய கொளம் மாதிரி தண்ணி  இருக்குமாம் அலை அடிக்குமாம் கப்பல் போகுமாம்’

‘நானும்  பாத்தது இல்லே’

‘சென்னையில கடலு  பீச்சு எல்லாம் இருக்காம்’

‘அப்ப நாம  பாக்கணும் என்ன’

நாங்கள் பேசிக்கொள்வதை அம்மா கேட்டுக்கொண்டே இருந்தாள்.  லேசாக சிரித்துக்கொண்டாள்.

 நாங்கள் இருந்த பெட்டியில் ஒரு பத்து பேருக்கு இருந்தார்கள்.

‘எல்லாரும் எறங்கியாச்சு’

‘அவா ஊர் வந்தா எறங்கித்தான் ஆகணும்’

கருப்பு கோட் போட்டுக்கொண்ட ரயில்வே அதிகாரி’ டிக்கட் டிக்கட்’ என்றார். அம்மா வாங்கிய ரயில் டிக்கட்டை எடுத்துக்காண்பித்தாள்.

‘தம்பி என்ன படிக்கறே’

‘ ஏழாம் கிளாஸ்’

‘மூணும் முழு டிக்கட்தானே’

‘ ஆமாம்’ அம்மா சொன்னாள்.

டிக்கட்டில் எதோ கிறுக்கிவிட்டு அதனை அம்மாவிடம் கொடுத்தார் அந்த  ரயில் அதிகாரி.

‘சாமி  டிக்கட் வாங்கலன்னா என்ன செய்வா’

‘ஜெயில்ல போடுவா’

‘டிக்கட்  தொலஞ்சி போனா’

‘ஜெயில்தான்’

நான் சாமிக்கு சொன்னேன்.

‘ஒண்ணுக்கு டபுளா சார்ஜ் போடுவா. அத நாம  கட்டலன்னா ஜெயில்’ அம்மா என்னைத்திருத்தினாள்.

தூரத்தில் டிக்கட் பரிசோதனை செய்துகொண்டிருந்த அதிகாரி எங்களைப்பார்த்து புன்னகை செய்தார்.

ரயில் வண்டியில் பிச்சை எடுப்பவர்களும் ஓரிருவர் தென்பட்டார்கள். சாமி அவர்களைப்பார்த்துக்கொண்டான்.

‘ பிச்சைக்காரா டிக்கட்  எல்லாம் எடுப்பாளா’

‘எடுக்க மாட்டா’

‘ அவாள் ஜெயில்ல போட்டுருவாளா’

‘போட மாட்டா’

‘அப்புறம்’

‘ வுட்டுடுவா’

‘ஏன்’

‘ஜெயில்ல போட்டுட்டா  பிச்சைகாராளுக்கு சவுகரியம்தான்.  வேளா வேளைக்கு  சோறு கிடச்சிடும் ஜெயில்ல.  எங்கயும் அலய வேண்டாம்’

‘’எல்லா பிச்சைக்காராளும் இப்பிடி  டிக்கட் எடுக்காம  ரயில்ல ஏறி வந்தா   ஜெயிலுக்கு போயிடலாம் அப்பறம் பிச்ச காராளே  உலகத்துக இருக்க மாட்டா’

அம்மாவுக்கு சாமி பதில் சொன்னான்.

தாம்பரம் வந்தது. நாங்கள் மூன்று பேர் மட்டுமே பெட்டியில் இருந்தோம்.

‘எக்மோர் வந்துடும். இன்னும் அர மணி நேரம்’

வண்டி  வண்டி வேக வேகமாக சென்றுகொண்டிருந்தது.

‘அதோ பார் சங்கிலி தொங்கறது’

‘ அதுக்கு என்ன’

‘அத இழுத்தா வண்டி நின்னுடும்’

‘நா இழுக்கட்டுமா’

‘எதாவது ரொம்ப அவசர்ம்னா சங்கிலிய புடிச்சி  இழுக்கலாம்.  வண்டி நின்னுடும் அனாவசியமா இழுத்தா அவராதம் போட்டுருவா. அத கட்டலேன்னா அஜெயில்ல போட்டுருவா’

‘யார் இழுத்தான்னு எப்பிடி தெரியும்’

‘எந்த பெட்டில இழுத்தான்னு தெரியும் அந்த பெட்டில வந்து ரயில்காரா போலீஸ் எல்லாம் வந்து விஜாரிக்கும்’

சங்கிலிக்குப் பக்கத்தில் எச்சரிக்கை எழுதிப்போட்டிருந்தார்கள். அதனைப்படித்துக்கொண்டேன்.

‘எப்ப எப்ப  சங்கிலிய  இழுக்கலாம்னு எழுதி  அது பக்கத்துல வச்சிடலாம்’ சாமி சொன்னான்.

‘அம்மா சிரித்தாள்.

’எக்மோர் வந்தாச்சு’

நாங்கள் மூவரும் வண்டியை விட்டு இறங்கினோம். பிரம்மாண்டமான ஸ்டேஷனை இப்போதுதான் பார்க்கிறேன். பிரமிப்பாக இருந்தது.

‘மூணு பை சரியா இருக்கா’

‘இருக்கு’ நான் பதில் சொன்னேன். ஒரு ஆட்டோ பிடித்து கந்த கோட்டம் கோவில் என்று சொல்லி உட்கார்ந்துகொண்டோம். நான் வேடிக்கைப்பார்த்துக்கொண்டே வந்தேன்.

‘எவ்ளோ காரு எவ்ளோ பஸ்ஸு’ என்றான் சாமி.. ஆட்டோக்கரனுக்கு அம்மா காசு கொடுத்தாள். ஆட்டோ  கந்தசாமி கோவில் வாசலில் நின்றது.

ஆட்டோவைவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

‘தோ தெரியர்து  பாரு சித்தியோட அம்மா வீடு’ அம்மா சொன்னாள். நாங்கள் மூவரும் கதவைத்திறந்துகொண்டு உள்ளே போனோம்..

சாமி அம்மா அம்மா என்று ஓங்கி அழைத்தான்.

‘யாரு’

‘சாமி வந்துருக்கன்’

‘வாடா இதென்ன அதிசயம். நீ வருவேன்னு நெனக்கவேயில்ல’

‘வாடி  பொண்ணு  வா அக்கா எல்லாரும் வாங்கோ’

பாட்டி எழுந்து உட்கார்ந்து கொண்டாள்:.

‘இப்பதான் வழி தெரிஞ்சிதா’

‘இப்பவானு வந்தமேன்னு சந்தோஷப்படறேன்’

‘பாருடியம்மா படுத்துண்டு கெடக்கேன். இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும். நடக்க முடியல. வலி உயிர் போறது. முட்டில வலி வீக்கம் என்னமோ  உபத்திரவம். ரா தூக்கம் கெடயாது. ராத்திரில  திக்கு திக்குங்கறது. நேக்கு  பயமா இருக்கு. வயசாயிட்து. நன்னா தெரியர்து’

‘காமு தானே பாத்துகறா. அப்புறம் என்ன மாமி உங்களுக்கு’

சாமி அவன் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டான். அவன் அம்மா அவனைத்தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டாள்.

‘பையன் எளச்சிட்டானா’

‘அப்பிடி எல்லாம் இல்ல அக்கா நன்னாதான் நீ பாத்துப்பே நேக்கு தெரியாதா. என்னமோ புள்ள பாசம். உனக்கும் ஒண்னு எனக்குமொண்ணு’

‘நேக்கும் ஒண்ணுதான்’ பாட்டி  குறுக்கே சொன்னாள்.

‘’எங்கே யாரையும் காணும்’

‘எல்லாரும் கோவிலுக்கு போயிருக்கா. வந்துடுவா’

சித்தி அம்மாவுக்கு பதில் சொன்னாள். தண்ணீர் கொண்டு வந்து குடிக்க கொடுத்தாள்.

‘காபி போட்றேன் எல்லாரும் ஒரு வாய் சாப்புடுங்கோ’

அம்மா அடுப்படிக்குப்போய்ப்பார்த்தாள்.

‘வேதா நன்னா வளந்துட்டா’

சித்தி சொல்லிக்கொண்டாள்.

நான் பாட்டியைப்பார்த்துக்கொண்டே இருந்தேன்.  மருந்து மாத்திரைகள் ஒரு பக்கமாக  பிளாஸ்டிக்  டிரேயில் அடுக்கிக்கிடந்தன.

‘என்னடியம்மா எப்பிடி யிருக்கே’

‘நன்னாயிருக்கேன்’

‘படிக்கறயா’

‘இல்ல பாட்டி. அஞ்சாவது படிச்சேன். தருமங்குடியில அத்தோட சரி. ஆத்துலயே இருந்தாச்சி. இப்ப அண்ணாமலை நகர் வந்தாச்சி, படிக்கணும்னு இன்னும் அடி மனசுல நெறய இருக்கு’

‘எல்லாம் பகவான் கண்ண தொறக்கணும். நல்ல புருஷனா கெடச்சி நீ நல்லா இருக்கணும். நா எங்க உங்கல்யாணத்த இருந்து பாக்கப்போறன். என்னால முடியல. மனசுல கொள்ள ஆச இருக்கு. சரீரம் இடம் கொடுக்கணுமே அதுன்னா இடஞ்சல் பண்றது சொல்லு’

பாட்டி என்னிடம் சொல்லிக்கொண்டாள்.

சாமி இன்னும் அவன் அம்மாவோடு ஏதோ பஎசிக்கொண்டே இருந்தான்.

‘ என்ன பாக்க நீ அங்க  வரல ஆனா நா உன்ன பாக்க இங்க  வந்துருக்கன்’

‘’நீ சமத்து நா அசடு’ என்றாள் சித்தி.

வீட்டை சுற்றி சுற்றி பார்த்தேன். மூலைக்கு மூலை தேங்காய்கள் சொம்புகள் தாம்பாளங்கள் கிடந்தன. வாழைப்பழ சீப்புகள் கேட்பாரற்றுக்கிடந்தன.

வீபூதியின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. கந்த கோட்டத்து முருகன் படம் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது. அதற்கு மின்சார விளக்குகள் கலர் கலராய் எரிந்துகொண்டிருந்தன.  சுவாமி படத்துக்கு போடப்பட்டிருந்த மாலை வாடிக்கிடந்தது.

வாயிலில் வெள்ளை வேஷ்டிகள் துண்டுகள் காய்ந்து கொண்டிருந்தன.  அவை நிறையவே இருந்தன.

நானும் சாமியும் சோபாவில் அமர்ந்துகொண்டு இருந்தோம். சாமி தனது தந்தை எப்போது வருவார் என ஆவலாய்ப்பார்த்துக்கொண்டிருந்தான்.

தாத்தா சித்தப்பா கபாலி மூவரும் வேடு நோக்கி நடந்து வந்தனர். கபாலி நிவேதன  பித்தளை வாளிகளை இரண்டு கைகளிலும்  தூக்கிக்கொண்டு வந்தார்.

‘அப்பா’ என்று சாமி தனது தந்தையை ஓடி அணைத்துக்கொண்டான். சித்தப்பா குழந்தையைத்தூக்கி நிறுத்தினார்.

‘எப்படா வந்தே எப்பிடி வந்தே’ நீ’

‘ நா பெரியம்மா அக்கா மூனு பேருமா வந்தம். ரயில்ல வந்தம் எக்மோர்லேந்து  ஆட்டோல வந்தம்’

அம்மா வாசலுக்கு வந்தாள்.

‘மாமா சவுக்கியமா, இவர் கபாலி எப்பிடி இருக்கார், அப்புறம் நீங்க எப்பிடி இருக்கேள்’

‘எல்லாரும் பகவான் புண்யத்துல சவுக்கியம்’

சித்தப்பா அம்மாவுக்குப்பதில் சொன்னார்.

‘க்‌ஷேமமா இருக்கேளா’  கபாலி கேட்டார். ‘உங்காத்து மாமா எப்பிடி இருக்கார்’ கபாலியே கேட்டார்.

‘சவுகரியம்’

‘அவர் வரலையா’

‘பூஜைக்கு  மாத்து ஆள் வேணுமே’

‘தப்பு நான் தப்பா கேட்டுட்டேன்’ கபாலி  சொன்னார்.

‘குருக்களாத்து மனுஷாளுக்கு  ஊர் உலகம் நல்லது கெட்டது  ஒண்ணும் கெடையாது’ அம்மா அலுத்துக்கொண்டாள்.

 அம்மாவிடம் ஒரு  அவசரச்சேதி சொன்னேன்.  ’கையில் போட்டிருக்கும்  வளையல்களைக்கழட்டி ஒரு பொட்டலமாகக்கட்டி முதலிலேயே வைத்துக்கொண்டிருக்கவேண்டும் அதனை மறந்து போயாச்சு. அது சித்தியோட வளையல். அதனை முதலில் செய்’ என்றேன். 

 ’சித்தி  உன் கை வளயல பாத்தாளா ஏதும் கேட்டாளா’

‘அவ இத  பாக்கல. இதுதான் அவளுக்கு யோஜனையா’

‘சிலர் இத எல்லாம் ஞாபகமா பாத்துண்டே இருப்பா’

‘அப்படிக்கு இல்ல சித்தி’ சித்தியைப்பற்றிப்பெருமையாச்சொன்னாள் அம்மா.

‘சாமிய பெத்த அம்மா’

‘கரெக்ட்டா சொன்னே’ சாமிநாதன் மீது எப்பவும் எனக்கு பிரியம் இருந்தது. பையன்களோடு அப்பிடி இப்பிடி சின்ன சின்ன  தப்பு விஷயங்கள் ஒன்றிரெண்டு  செய்திருக்கலாம். அவன்  ஆண் குழந்தை. இது கூட இல்லாமல் இருக்க முடியுமா’.

  பாத் ரூமுக்கு வழி காட்டினேன். அம்மா உள்ளே போய் வளையலைக்கழற்றி ஒரு தாளில் பொட்டலமாகக்கட்டி எடுத்து வந்தாள். இன்னும் ரெண்டு ரெண்டு வளையல்கள் கைகளில் பாக்கியிருந்தன. அவை பித்தளை வளையல்கள். சிதம்பரம் கவரிங். அது என்னவோ சிதம்பர நகரத்தில்தான் கவரிங் நகைகள் சிறப்பாகச்செய்து தருவதாக எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.

‘ நீங்க அடகு வச்ச வளையல் மூட்டாச்சு அத உங்ககிட்ட ஒப்படைக்கணும். உங்க அண்ணா  என்னண்ட சொல்லி அனுப்பினார்.’

’இதுக்கென்ன அவசரம் எனக்கு மறந்தே போச்சு’

‘இல்ல  சேட்டு கிட்டேந்து நோட்டீ ஸ் வந்தது’

‘வரட்டும் நான் வந்து மூக்கமாடேனா, அண்ணாக்கு எதுக்கு கஷ்டம்’

‘அவர் ஆஸ்பத்ரி வைத்ய  செலவுக்குதானே வச்சது’

‘ரொம்ப  சமத்தா பேசறேள் மன்னி’

அதற்குள் சித்தி அந்த இடத்திற்கு வந்துவிட்டாள். சித்தப்பா தன் கை வசம் வாங்கி வைத்திருந்த வளையல்களை சித்தியிடம் ஒப்படைத்தார்.

‘ வலையல   மாமியார் ஆத்துலேந்து மூட்டாச்சா. அதுக்கு  காசு வேணுமே’

‘அவர்தான் காசு சேத்து வச்சிண்டு மூட்டார்.’ சித்திக்குப்பதில் சொன்னாள் அம்மா.

‘சேட்டு குடுக்கமாட்டாறே. ஒத்தர் வச்சது இன்னொருத்தர் மூக்கறதுன்னா’

‘நம்மள தெரியாதா அவருக்கு’ சித்திக்கு சித்தப்பா விளக்கம் தந்தார்.

சித்தி வளையலை வாங்கி கைகளில் போட்டுக்கொண்டார். சித்தி முகம் பிரகாசமாக இருந்தது.

‘உன் கைக்கு அழகா இருக்கு’

‘நீங்க போட்டுடுண்டாலும் இன்னும் அழகா இருப்பேள். அது கெடக்கு இப்ப எல்லாரும் கைகால் அலம்பிண்டு வாங்கோ சாப்பிடலாம்’

சித்தி சொன்னாள். கபாலி கோவிலிலிருந்து  கொண்டு வந்த தூக்குகளைத் திறந்து பார்த்தாள்.

வரிசையா தாமரை இலைகள் நான் எடுத்துப்போட்டேன்.

‘ இது என்ன இலை’

‘தாமரை இலை’

‘கட்டளைக்காரா நாட்டுக்கோட்டை செட்டியார். அவாளுக்கு சொந்தமா கொளம். அதுல வெண் தாமரை இருக்கா. அதுலேந்து பூ எல எல்லாம் நெறய கொண்டு வந்தா’ சித்தப்பா சொல்ல

சாமி அதனைத்திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டான். சரியாகப்போட்டுக்கொண்டான்.

‘பளிச்சினு இருக்கற பக்கம் சாப்புடற பக்கம்’

சாமி சரியாக இலையைப்போட்டுக்கொண்டான்

சித்தியும் அம்மாவும் தவிர எல்லோரும் இலையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

‘இவ்வளவு  கோவில் பிரசாதம் இருக்கு. என்ன பண்ணப்போறம்னு நெனச்சேன்’

என்று ஆரம்பித்தார் சித்தியின் அப்பா.

’பகவான்  கந்தவேள் முருகனுக்குத்தெரியர்து அவன் பாத்துதானே  எல்லாத்தயும்அனுப்பி வச்சிருக்கான்’.

புளி சாதமும் தயிர் சாதமும் சுண்டலும் அனைவர்க்கும் பரிமாறி ஆயிற்று. தூக்குகள் காலியாயின. அம்மாவும் சித்தியும் தோசை வார்த்துக்கொண்டு டிபன் முடித்தனர். பாட்டிக்கு சித்தி  கோதுமை ரவைக்கஞ்சி வைத்துக்கொடுத்தாள்.

சாமியும் அவன் அப்பாவும் தாத்தாவும் சள சள என்று பேசிக்கொண்டே இருந்தனர். சாமிக்கு மகிழ்ச்சி. கபாலி எதுவோ புத்தகம் ஒன்றினை வைத்துப்புரட்டிக்கொண்டு இருந்தார்.

நானும் அம்மாவும் தெருவுக்கு வந்து வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வந்தோம்.

‘சாமி   பள்ளிக்கூடத்து பசங்களோட சேந்து  பிரச்சனையில மாட்டிண்டது எல்லாம்  பொறுமையா சொல்லலாம். அவசரம் வேண்டாம்’

‘சரிம்மா’

‘அவன் சிறு குழந்த. மனசு ஒடஞ்சிடும். பாப்பம் என்ன நடக்கறதுன்னு’

‘எனக்கும் லைப்ரரிக்கு போகணும் படிக்கணும்’

‘இங்க எதனா இருக்காதா என்ன பாப்போம்’

 நானும் அம்மாவும் வீட்டின் உள்ளே வந்தோம்.

‘பொண்ணு வா வா சித்த உக்காரு. உங்க அம்மா எங்க அவளும் இப்பிடி வந்து உக்காரட்டும்’

என்றார் தாத்தா. அதான் சித்தியின் அப்பா. சித்தியும்  சித்தப்பாவும் கூட அமர்ந்து கொண்டனர். சாமி கபாலியோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தான். ஏற்கனவே அண்ணாமலநகரில் கபாலியைப்பார்த்தவந்தானே சாமி.

‘என்ன மாமா சொல்லுங்கோ  நீங்க பெரியவா’

‘ ’நேரா விஷயத்துக்கு வந்துடுவோம்.  வேதாவுக்கு எதானு பையன் பாத்து வச்சிருக்கயா. என்ன உன் உத்தேசம்’ குரல் தாழ்த்தி அழுத்தமாகக்கேட்டார்.

‘எனக்கு என் பொழப்பே சந்தில இருக்கு. நா எப்பிடி அத பத்தியோஜனை பண்றது’

‘அச்சு பிச்சுன்னு பேசாதே. அப்பிடி எல்லாம் ஒண்ணுமில்லே. நீ நன்னாதான் இருக்கே. உனக்கென்ன கொறச்சல்’

’ நீங்க சொல்றேள் என்னதான் இருந்தாலும்’

‘என்ன இருந்தாலும்னு இழுக்கற. ’சாண் கல்ல அலம்பினா மொழம் சோறும்பா’ தெரியுமா குருக்கள்ன்னா அதான்’

சித்தப்பா சிரித்துக்கொண்டார்.

‘அவளையே கேளுங்கோ’

‘கேக்கறேன் கேக்காமலா’

‘ டீ பொண்ணு. சொல்லு  உன் சேதி என்ன உனக்கு கல்யாணத்துக்கு வயசு ஆயிண்டிருக்கு., என்ன யோஜன’

நான் அமைதியாக இருந்தேன்.

‘பேசாம் இருந்தா’

‘மவுனம் சம்மதம்னு எடுத்துகிட்டா’

நான் பேச ஆரம்பித்தேன். ’எனக்கு இன்னும் படிக்கணும். எப்பிடியானு மேல படிக்கணும். வயசு ஆயிட்துதான். அண்ணாமலைநகர் வரலேன்னா நா கல்யாணம் பண்ணிண்டு குடுத்தனம் பண்ணிண்டு இருப்பேனோ என்னமோ’

‘என்னம்மா அதிசயமா பேசறே.. நீ என்ன படிச்சே’

‘தருமங்குடில அஞ்சாவது படிச்சேன்’

‘அப்பறம் ஏன் படிக்கல’

‘அப்பா என்ன வெளியூருக்கு போப்படாது. போறும்  உள்ளூர்ல படிச்சதுன்னு சொல்லிட்டார்’

‘உள்ளூர்ல அஞ்சாவது வகுப்போட சரியா’

‘அதான் பிரச்சனைக்கு ஆரம்பம்’ என்றாள் அம்மா.

‘இப்ப எப்பிடி படிக்கறது சொல்லு’

‘ அண்ணாமலை நகர்ல ஒரு தமிழ் ப்ரொபசர் இருக்கா. சிவகாமின்னு பேரு.போஸ்டாபிசு பக்கம் வீடு’

சித்தப்பா சேர்ந்து கொண்டார். ‘ குண்டு முதலியார்  பெரிய மனுஷர்  அவருக்கு ஒரே பொண்ணு.  பெரிய எடத்துல ஒரு ப்ரொபசரோட  கல்யாணம் எல்லாம் ஆச்சு.  அவர் இப்ப  வெளி நாட்டுல இருக்கார்.  போயி ரொம்ப நாளாச்சு. இவளும் அங்க போகல்ல. அவரும் இங்க வரல்ல. அவா அவா அங்கங்க இருக்கா. கொழந்த குட்டி எதுவும் காணூம்.. இது  எல்லாம் இந்த காலத்துல சகஜமா போயாச்சு. ஆனா அந்த ப்ரொபசர் நல்ல மனுஷி. நம்ப மேல ரொம்ப பிரியம். கோவிலுக்கு வருவா. தியானம் பண்ணுவா. தேவாரம் திருவாசகம் அபிராமி அந்தாதின்னு பிரமாதமா  பாடுவா. அதுலதான் வேதாவுக்கு பழக்கம். அந்த ப்ரொபசர் ஆத்துக்கு போயி போயி பாடம் கத்துண்டு வரா வேதா.  நானும் போனச்சே அந்த ப்ரொபசர ஆத்துல போய் பாத்துட்டு  அவரண்ட பேசிட்டு வந்தன் அவதான் இப்பக்கி வேதாவுக்கு வெளிச்சம்’

‘ப்ரொபசர் புருஷன்  வெளிநாட்டுக்கு போனச்சே இந்த பொண்ணும்  கூடவே போயிருக்கணும். போகல்லே. என்ன பிரச்சனையோ.  அவர்  வெளிநாட்டுல அங்க எதானு கெடச்சி  வேற யாரயாவது சேத்துண்டு இருக்கலாம்’

‘இது நமக்கு தேவையில்லாத சமாச்சாரம் காமு பேசாதே. நா இருக்கேன் நண்டு வளையிலன்னு உன்ன இத பேசச்சொன்னாளா’ சித்தப்பா சத்தம்போட்டார்.

‘சபைய பாத்து பேசணும். அசட்டு பிசட்டுன்னு பேசக்கூடது’ சித்தியின் அப்பா  மெதுவாகத்தன் பெண்ணுக்குச்சொன்னார்.

‘ஆக என்ன சொல்ற வேதா’

‘நா சொல்லியாச்சு தாத்தா’

‘இப்பக்கி கல்யாணம் பேச்சு வேண்டாம் அதானே’

‘ஆமாம் தாத்தா’.

’ விவரமா இருக்கா இந்த காலத்து  கொழந்தேள். நன்னா இருங்கோ. பெரியவா நமக்கு பொறுப்பு கொறயறது. ஆனா நீங்க ஏமாந்துடப்போறேளோன்னு பயமா இருக்கு. சரியாத்தான்  நாம எல்லாத்தயும் செய்யற மாதிரி தோணும். ஆனா ஏமாத்திபிடும்ங்கறது ஞாபகத்துல வச்சிகணும்’ தாத்தா முடித்துக்கொண்டார்.

‘ரொம்ப ஜாஸ்தியா பேசற நீ’ என்றாள் சித்தி.

எனக்குக்கண்கள் கலங்கியிருந்தன.

‘உனக்கு அறிவு இருக்கா. இருந்தா இப்பிடி பேசுவயா. பச்ச கொழந்த.  அவ நம்ப ஆத்துக்கு  இண்ணைக்குதான் மொத மொதல்ல  வந்துருக்கா’

‘வாயில கட்ட வெரல வையுங்கோ கடிக்கறாளான்னு பாப்பம்’

சித்தப்பாவும் சித்தியும் பேசிக்கொண்டனர். சித்தப்பாவைப்பார்க்க பாவமாக இருந்தது. தாத்தா இடத்தைக்காலி செய்து கொண்டு புறப்பட்டார். பாய் தலையணையை எடுத்துக்கொண்டார்.

என் அம்மா என்னையே முறைத்துக்கொண்டு இருந்தார்.

’அவா அவா அங்க அங்க படுக்கலாம். பாய் தலயாணி மொத்தமா ஒரு எடத்துல இருக்கு அவா அவா எடுத்துக்கலாம்’

சித்தி எல்லோருக்கும் சொன்னாள்.

‘நம்ம கையில ஒண்ணும் இல்ல’ அம்மா சொல்ல

‘அத தெரிஞ்சிண்டா  இந்த ஒலகத்துல பிரச்சனையே இல்ல’ சித்தப்பா முடித்து வைத்தார்.

சாமியும் கபாலியும் பேசிக்கொண்டே இருந்தார்கள். சாமி எழுந்தான்.

‘நான் அம்மாகிட்ட படுத்துகறன் மாமா’ சாமி கபாலியிடம் சொல்லிவிட்டு அவன் அம்மாவிடம் வந்து  சமத்தாய்ப்படுத்துக்கொண்டான்.

நானும் அம்மாவும்  கூட ஒரே பாயில் படுத்துக்கொண்டோம்.

எல்லோரும் உறங்கத்தயார். சென்னை கொசுக்கள் தமது வேலையை மும்முறமாய்க்காட்ட ஆரம்பித்தன.

‘ஜன்னல் சாத்திருக்கு. கம்பி  போட்டுருக்கு.  கொசு வத்தி ஏத்தியிருக்கு எல்லாம் இருந்துமென்ன கொசு தன் வேலையை நிறுத்தவில்லை’ சித்தி சொல்லிக்கொண்டே உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை.  தன் அப்பாவிடம்  சாமி கடல் பார்க்கவேண்டும் என்றான். நான் நூலகம் செல்லவேண்டும் என்றேன். இரண்டுக்கும் சரி என்றார் சித்தப்பா.

ஆட்டோக்காரன் ராஜாவை அழைத்து விஷயத்தைச்சொன்னார்.

‘கடல் பார்க்க வேண்டும். லைப்ரரிக்குப் போகவேண்டும். இந்த இரண்டு குழந்தைகளையும் கூட்டிப்போ கூட்டி வா’

சித்தி வெகு வேகமாக வந்தார்.

‘ரெண்டு கொழந்தைகளும் ஊருக்கு புதுசு. இது  கடலுக்கு போறது  கடமைய கழிக்கிற காரியம் இல்ல. பசங்களோட நாம பெரியங்க யாராவது  போகணும்’

ஆட்டோக்காரன் ராஜா புன்னகை செய்தான். ‘ அம்மா சொல்றது சரிதான்’

‘யார அனுப்பறது’

‘நீங்கதான் போகணும்’

‘ நீ போயேன்’

‘பொங்கறது யாரு. சமைய கட்டுல எது எங்கன்னு அவாளுக்கு தெரியுமா’

‘நா பொங்கறேன்’

‘ பொங்கலாம்  கொழந்தைகள் சாப்பிடணும்.  புள்ள வந்துருக்கான்’

‘கபாலிய அனுப்பிடுவம்’

‘அசடா நீங்க வயசு பையன பொண்ண  நாமளே   அனுப்பறதா.’

‘கபாலி பத்தி நோக்கு தெரியாதா’

‘விஷ பரீட்சை வேண்டாம். இதுல வெளயாடறது தப்பு’

‘ஆட்டோல மூணு பேருதான் போவுலாம்’ ராஜா அவன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டான்.

‘நானே போயிட்டு வறேன்’

‘இதுக்கு இவ்வளவு நேரம், கெளம்புங்கோ’

காலை உணவு முடித்தாயிற்று.

‘மதியம் சாப்பாட்டுக்கு வந்துடணும். பீச் மொதல்ல முடியட்டும். லைப்ரரி இண்ணைக்கு சாயந்திரமோ நாளைக்கோ பாத்துகலாம். அண்ணாமலை நகர்ல இல்லாத லைப்ரரியா. இங்க என்ன புதுசா’

‘அக்கா நோட்டு எடுத்துண்டு வந்தயா’

‘வந்துருக்கேன். நீ புக்ஸ் எடுத்துண்டு வந்தயா’

‘ரெடியா எடுத்துண்டு வந்துருக்கன்

நாங்கள் மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டோம்.

ஆட்டோ பூக்கடை பஸ்ஸ்டேண்ட் உய்ர்நீதி மன்றம் என்று சென்று கொண்டிருந்தது.

சித்தப்பா  ‘ தோ பாரு ஹை கோர்ட்’

‘சேப்பா பெரிய பில்டிங்க் தானே’

‘ஆமாண்டா அதே தான் கூர் கூரா உச்சிலே பார் வெள்ள பெயிண்ட் அடிச்சிருக்கான்’

வண்டி வேகமாக சென்றது. பீச் ரோடில் அண்ணா சமாதி முன்பாக  நின்றுகொண்டது.

‘எறங்கிகுங்க’ என்றான் ராஜா’

மூவரும் இறங்கி நடந்தோம். அண்ணா சமாதியைக்காண்பித்தார் சித்தப்பா. ஜோதி ஒன்று அணையாமல் எரிவதைக்காட்டினார்.

‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகின்றது’ நான் படித்தேன்.

‘அடி சக்கை’ என்றார் சித்தப்பா.

‘இது எப்பிடி அணையாம எரியும்’ கேட்ட சாமிக்கு

‘ கேஸ் சிலிண்டர் மாத்தி மாத்தி வைப்பாங்க. அதான்’ என்றார் சித்தப்பா.

‘தோ இருக்கு பார்’   எம்ஜிஆர் சமாதி’  சித்தப்பா காட்டினார்.  எம்ஜி ஆர் சமாதியையும் ஒரு சுற்று சுற்றி  வந்து கடற்கரை நோக்கி மணலில் நடக்க ஆரம்பித்தோம்.

‘தோ பார் கடல் . அலை தூரத்துல கப்பல் இது தான் மரினா பீச்ங்கறது’

‘நா இப்பதான் கடலே பாக்கறேன்’

‘சாமி  மொதல்லயும் பாத்துருக்கான்.  இப்ப அதமறந்து போயிருக்கலாம்’

மணலில் நடப்பது ஆசையாக இருந்தது. ஆங்காங்கே மணலில்  குப்பைகள் திட்டு திட்டாக இருந்தன. குதிரை சவாரிக்கு குதிரைகளை வைத்துக்கொண்டு ஆட்களை அழைத்துக்கொண்டு இருந்தார்கள். போட்டோ எடுத்து உடனே வழங்குபவர்கள் நிறைய ஆட்கள் இருந்தார்கள்.  ’அண்ணா  சிவாஜி ஜெமினி ஜெயலலிதா காமராஜ் ரஜினி   நீங்க யாரோட நின்னு போட்டோ எடுக்கணும் வாங்க வாங்க. ‘ கூவி கூவி அழைத்தனர்.

‘போட்டோ கையிலவே குடுத்துடுவம், பிரேம் போட்டும் தருவம் வா வா வா’

மேளத்தை அடித்துக்கொண்டு இருந்தார்கள். சங்கு சோழி  மாலகள் ஏகத்துக்கு விற்பனை செய்தார்கள். சர்பத் கடைகள் அனேகம் இருந்தன. சூதாட்டக்கடைகள் சிலது இருந்தன. 

ஒண்ணுக்கு டபுளு ஒண்ணுக்கு டபுளு வா வா  ஊசி எடு  டபுக்குன்னு குத்து.  நாடாவ பாத்து குத்து.  செழிச்சா காசு . விஷ்ணு சக்கரம் சொழலும்.  கலரு  கலரு கட்டம். பாத்து  பாத்து குத்து.  ராசா குத்து ராசா ஒண்ணுக்கு டபுளு சும்மா இல்ல. ராசாக்குதான் கெடக்கும்  வா வா’

சித்தப்பா எதனையும் காதில் போட்டுக்கொள்ளாமல் நடந்து கொண்டே இருந்தார்.

‘இப்பிடி எல்லாரும் சித்தப்பா மாதிரி  கண்ண மூடிண்டு போயிட்டா அந்த கடக்காரன்  எல்லாம் பாவம்’

‘ ஆமாண்டா சாமி’ என்றேன் நான்.

எனக்கு சிரிப்பாகக்கூட வந்தது. வளையம் வீசி  எறிபவர்கள்  இரும்புக்குண்டு எறிபவர்கள் என்று விளையாட்டுக்கள் அனேகம் இருந்தன.

சுண்டல் விற்பவர்கள் வேர்க்கடலை விற்பவர்கள் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்கள்.

கடல் வந்தாயிற்று. தண்ணீரைத்தொட்டாயிற்று. சித்தப்பா சாமியைக்கெட்டியாப்பிடித்துக்கொண்டார்.

‘ கடல் நீர் கால் மண்ணை அரித்துச்சென்றது. அலைகள் லேசாக வந்தன. சில உயரமாக வந்தன. சித்தப்பாவின் வேட்டி நனைந்து விட்டது. என் பாவாடை  சாமியின் கால் சட்டை எல்லாம் நனைந்து போனது. சாமி கடலையே முறைத்துக்கொண்டு இருந்தான்.

‘வெயிலாயிடும் மணல்ல நடக்க முடியாது’

 எனக்கும் சாமிக்கும் சித்தப்பா பஞ்சு மிட்டாய் வாங்கிகொடுத்தார். வேர்க்கடலை பொட்டலம் வாங்கிக்கொடுத்தார்.

பலூன் விற்பவர்களும் ஊதாங்குழல் விற்பவர்களும் சாமி அருகே வந்து வந்து நின்றார்கள். சாமி ஆசையோடு பார்த்தான்.

சித்தப்பா எதுவும் வாங்கித்தரவில்லை.

‘அது அஞ்சி கிளாஸ் வரைக்கும்தான் அதெல்லாம் . நீ இப்ப பெரியவனாயிட்டே’

சித்தப்பா சாமியிடம் சொல்லிக்கொண்டார். சாமி கிளிஞ்சல்கள் நான்கைந்து பொறுக்கி எடுத்துக்கொண்டான்.

‘உனக்கு வேண்டாமா’

நான் சிரித்துக்கொண்டேன். வெயில் சற்று அதிகமாகிக்கொண்டிருந்தது. மணல் லேசாகச்சுட ஆரம்பித்தது.

‘இந்த மணல் வச்சி வீடு கட்டுவாளா’

‘இல்ல. இது உப்பு கலந்து இருக்கும். கடல் மணல். இது வச்சி வீடு கட்ட முடியாது. ஆத்து மணல்தான் வீடு கட்டறதுக்கு உபயோகமாகும்’

ஆட்டோக்காரன் ராஜாவைத்தேடினார். சித்தப்பா எங்கே என்று  ஆட்டோ ராஜா தேடிக்கொண்டிருந்தான்.

நாங்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடினோம்.

இளநீர் விற்பவன் சைக்கிளில் காய்களைக்கட்டிக்கொண்டு எங்கள் முன்னே வந்து நின்றான்.

‘அப்பா இளநீர் குடிப்பமா’

‘யார் யாருக்கு இளநீர் வேணும்’

யாரும் பதில் சொல்லவில்லை. எல்லோருக்கும்தான் வேண்டும் என்று முடிவுசெய்து சித்தப்பா நான்கு இளநீர் ஆடர் செய்தார். ஆட்டோ ராஜாவோடு நான்கு பேர். எல்லோரும் இளநீர் குடித்தோம். எனக்குத் தாகமும் இருந்தது. களைப்பாகவும் இருந்தது. இளநீரின் தேங்காய் வழுக்கை எனக்கும் சாமிக்கும் இளநீர்க்காரன் கொடுத்தான். பாக்கி காய்களில் வழுக்கை எதுவும் இல்லை.

‘கடல் பாத்தாச்சு’

‘அப்புறம் எது பாக்கணும்’

சித்தப்பா கேட்டார்.

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நாண்குபேரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டோம். வண்டி கடற்கரையைவிட்டுப் புறப்பட்டது.

காமராஜ் சாலையில் பழைய புத்தகங்களை கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து ஒரு வியாபாரி விற்றுக்கொண்டிருந்தான். எனக்கு புத்தகங்களைப்பார்க்க வேண்டும் என்கிற ஆசை. சித்தப்பாவிடம் சொன்னேன். ஆட்டோக்காரனிடம் சொல்லி வண்டொயை நிறுத்தினார்.

‘பாரு உன் ஆசையை நான்  ஏன் கெடுப்பானே’

நான் புத்தகக்கட்டுகளில் ஏதேனும்  ஒரு புத்தகம் வாங்கலாம் என்று முடிவோடு இருந்தேன்.

‘சும்மா கலைக்காதே உனக்கு என்ன பொத்தகம் வேணும் அது சொல்லு’

‘பெரிய மனுஷங்க எழுதினது’

‘ எழுதினது ஆம்பளய பொம்பளயா தமிழா இங்க்லீஷா’

‘தமிழ்’

’பெரிய மனுஷங்க’

‘அது யாருன்னு தெரியணும் எல்லாரும் பெரிய மனுஷங்கதான். எனக்கு ஒத்தரு உனக்கு ஒத்தரு ரகத்த சொல்லுணும்’

‘மனுஷன் நல்லபடி வாழணும்னுட்டு சில பேரு எழுதியிருப்பாங்க’

‘இந்த வயசுல படிக்கற பொஸ்தகமா அது’

‘எந்த வயசுலயும் படிக்கலாம்’

‘இந்தா இந்த புஸ்தகத்த பாரு தேவுலாமா’

நான் அந்த புத்தகத்தை வாங்கிப்பார்த்தேன்.’ ஜீவா என்றொரு மானுடன்’  புத்தகத்தை எழுதியது பொன்னீலன் என்று போட்டிருந்தார்கள்.

‘நல்ல புத்தகம் படிச்சிபாரு.  பெரிய மனுஷனபத்தி நல்ல மனுஷன் எழுதினது’

‘என்ன விலை’

‘சும்மாகூடம் எடுத்தும்போ என் பேத்தி இண்ணிக்கி எல்லாம் இருந்தா ஒன் வயசு இருக்கும். அது இல்லே’

புத்தக வியாபாரியின் கண்கள் ஈரமாயின.

சித்தப்பா புத்தக வியாபாரியைப்பர்த்துக்கொண்டார். ‘ஏன் என்ன ஆச்சு’

‘ஆத்தாளயும் மொவளையும் கடல்ல தொலச்சிட்டேன்’

‘எப்பிடி’

‘ரெண்டு பேரும் கடலு பாக்க போறேன்னு போனாங்க. போனாங்க போனாங்க வரவே இல்லை. கடலு  என்னா பண்ணிடும்னு  கரை ஓரத்துல நின்னவங்க தொப்புன்னு வுழுந்தாங்க. அலையில மாட்டிகினு ஏமாந்து போயிட்டாங்கா. குய்யோ முறியோன்னு எரைச்சல் என்னடா சத்தம்னு ஓடி பாத்தா. ரெண்டு பேரு ஆத்தாளு மொவளும்னு கடலு கோண்டு பூட்டுதுன்னு சனம் பேசிகிட்டாங்க. அவுங்களுக்கு  இது சேதி எனக்கு என் சீவனுங்க போனது. மொத்தமா கொள்ள போயிட்டுது.பொணமா ரெண்டு பேரும் ஒண்ண ஒண்ண கட்டிகிட்டு சவந்தான கரை ஒதுங்கினது.  பொணத்த கொண்டுட்டு போனாங்க.  பெரிய ஆசுபத்ரியில கூறு  போட்டு பொட்டணமா கட்டி குடுத்தானுவ. சவ்வுதாளு  பொட்டலம் ரெண்டுத்தையும் வாங்குனன். அழுது முடிச்சி அதுவுள பக்கத்துல பக்கத்துல வச்சி மயிலாப்பூர் சொள்ளையில்  கொளுத்தனன்.  நா பாவி சாமி பாவி சாமி. இந்த பொட்ட புள்ளய பாத்ததும் எம்  பெத்தபுள்ள நெனப்பு பொசுக்குன்னு வந்துபோச்சி. தோத்துட்டன் சாமி நா தோத்துட்டனே இனி என்ன செய்வ.’ பழைய புத்தக வியாபாரி அழ ஆரம்பித்தான்.

சித்தப்ப ஒரு நூறு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து ’வச்சிக’ என்றார்.

‘ஆயா ஒன் கையால குடு’

நான் அவனிடம் அந்த நூறு ரூபாயை வாங்கிக்கொடுத்தேன். அவன் தனது கண்களில் ஒற்றிக்கொண்டு அதனை சாமி படம் ஒன்றின் கீழ் வைத்தான்.

‘நேரம் ஆவுது டிராபிக் ஆயிடும்’ ஆட்டோராஜா சத்தம் போட்டார்.

ஜீவா என்றொரு மானுடன் புத்தகத்தைப் பத்திரமாக எடுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினேன்.

‘புத்தக்கடைக்காரரு என்ன சொன்னாரு’ சாமிகேட்டான்.

‘நீ எங்களோடதான இருந்தே’

‘இருந்தேன் ஆனா ஒண்ணும் புரியலேயே அக்கா எனக்கு’

‘சொல்றேன் வீட்டுக்குப்போயி சொல்றேன்’ சாமியை சமாதானப்படுத்தினேன்.

‘என்னமோ புத்தகம் என்னமோ படிக்கற. குருக்களாத்து பொண்ணா  நீ தெரியல எனக்கு’

நான் என்ன பதில் சொல்வது சித்தப்பாவுக்கு என்று யோசித்துக்கொண்டே ஆட்டோவில் பயனம் செய்தேன்.

கடைத்தெருவெல்லாம் தாண்டத்  தாண்டி ஆட்டோ கந்தகோட்டம் நொக்கிச்சென்று கொண்டிருந்தது.

 

 

அப்பா அண்ணாமலநகரில் இப்போதக்குத் தனியாகத்தான் இருந்தார். அவரே நிவேதனம் பொங்கி அவரே பூஜைக்குப்போய் வந்துகொண்டிருந்தார். இப்படியெல்லாம் அவர் கஷ்டப்பட்டதில்லை. ஆனால் பொல்லாத நேரம் வந்தது அவஸ்தையும் தொடர்ந்தது. ஒருநாள் காலை தருமங்குடி போய் வரவேண்டும். எல்லோரையும் பார்த்துவரவேண்டும் என்கிற ஆசை. சுப்புணியிடம் சேதி சொன்னார்.

‘சுப்புணி நானு நாளைக்கி தருமங்குடி போனாலும் போவேன்’

‘இது என்ன புது சேதி’

‘புது சேதிதான் நானு இருந்த ஊர். மனசு கேக்குல. போய் பாத்துட்டு வருவம்னு யோசனை.

‘பூசை’

‘’அதுக்குள்ள வந்துபுடலாம்’

‘எப்பிடி’

‘போவ அர மணி வர அர மணி அங்க நாலு பேர பாக்க கொள்ள பேச ஒரு ரெண்டு மணி. எட்டு மணிக்கு போய் எறங்குனா மதியம் ஒரு மணிக்கு டாண் இங்க வந்துபுடலாம்’

‘’ கால் மணிக்கு ஒரு பஸ்சு போவுதா’

‘ஆமாம் டக்கு டக்குன்னு பஸ் வந்துடும் டவுன் பஸ் இருக்குது’

‘ சாமி எனக்கு ஒரு யோசனை’

‘காலையில பூசைய முடிச்சிடுவம். ஊருக்குப்போயி சாயரட்சைக்கு வந்துடுவம்’

‘நீனும் வர்ரியா சுப்பிணி’

‘நானு இங்க  கெடந்து என்ன வெட்டுறன் கட்டுறன் நானும் கூட வரன்’

‘ நாளக்கு காலையில கெளபுறம். பூஜய முடிச்சைகிட்டு. சாயரட்சைக்கு திரும்பிடுவம்’

சரி அப்ப’

‘மதியம் சாப்பாடு’

‘அங்க எதனா கெடக்கிமா’

‘ஆரு இருக்கா அங்க’

‘நா கெளம்பி வந்த பொறவு ஒரு குருக்களு வந்துருக்காரு. கூடலைத்தூர்காரரு. அவரு வீட்டுக்குப்போன நல்லா இருக்குமா. எப்பிடி எடுத்துகுவாரோ’

‘நல்ல மனுஷாளுன்னா தப்பா எடுத்துக மாட்டாங்க’

‘ஆளு பொறுத்து இருக்கு’

‘’வேற அய்யிருவ’

‘பஞ்சாங்க ஐயிரு ஒத்தரு இருக்காரு. அவுரு மொவன் சந்துரு. அந்த ஐயருவூட்டு அம்மா மீனாக்‌ஷி மாமி இப்பிடி ஒரு குடும்பம். அவுங்க வீட்டுல சாப்புடலாம். அது நல்லா பழக்கமான ஜனங்கதான்’

‘அப்புறம் என்ன இதுல ரோசனை’

‘இன்னும் ஆர பாக்குணும்’

‘வாகடம் காசிய பாக்குணும். பக்கிரி கோனார் அவர ஏனோ கோனார் பக்கிரிம்பாங்க. அவுருதான் சாமான ஏத்திகிட்டு இங்க கொண்டாந்து வுட்டுட்டுப்போனாரு.

‘அது ஏன் கோனார் பாக்கிரிம்பாங்க’

‘பக்கிரி படையாச்சின்னு ஒரு பெரிய மனுஷர் இருந்தாரு.  அவுரு ஊரு நாட்டாமை. ஆளு ஜோரா செக்கச்செவேல்னு இருப்பாரு மாரியாயி கோவிலுக்கு நிர்வாகம். ஊமங்கலம் ஸ்டேசன்  போலீஸ் அதிகாரிங்க வந்தா அவுரு வூட்டுக்குதான் மொதல்ல போயி வருவாங்க. இன்னார பத்தி இன்னதுன்னு அவுரு சொன்னா  அப்பிடியே சரி.  அவர  நாட்டாமை பக்கிரி படையாச்சி ன்னு வழங்குனது ஆனதனாலதான்.’

மறுநாள் காலை. அப்பா ஸ்நானம் முடித்து  நிவேதனம் தயார் செய்தார். சுப்புணி முதல்நாள் பேசிக்கொண்டபடி முன்னதாகவே கோவிலுக்கு வந்துவிட்டார். அப்பா கோவிலுக்குப்போய் பூஜை முடித்துக்கொண்டு  தருமங்குடிக்குப் புறப்பட்டார். சுப்புணி  தருமங்குடி பயணத்திற்குத் தயாராகவே வந்திருந்தார்.

இருவரும் அண்ணாமலைநகர் அஞ்சலகம் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்.

‘டவுன் பஸ் வர்ர நேரம்’

‘ஆ வருது  ஆ வருது’

டவுன் பஸ் வந்து  ஜனங்களை இறக்கிவிட்டது. கண்டக்டர் டபுள் விசில் கொடுத்தார்.

’ சுப்புணி இந்தமாதிரி விசில் குடுத்தா வண்டிய முடுக்கிகிட்டு கெளம்பிட மாட்டாரு டிரைவரு’

‘ கண்டக்டர் வண்டிலேந்து கீழ  எறங்கில்ல நிக்குறாரு. அதெப்பிடி  வண்டிய கெளப்பிகிட்டு போவ’

பஸ் யூ டர்ன் எடுத்து மீண்டும் மேற்கு நோக்கி நின்றது. அப்பாவும் சுப்புணியும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்.

‘சில்லறை இருக்கணும்’ கண்டக்டர் எச்சரித்தார்.

‘ சில்லறைதான் இருக்குது  நோட்டுக்கு எங்க போவுறது. அச்சடிச்சாதான் நோட்டு’ என்றார் அப்பா.

அவர்கள் இருவர்தான் வண்டியில் ஏறியிருந்தார்கள்.

‘டிக்கட்  இன்னும் ஏறினாத்தான் வண்டி எடுப்பானா’

‘இது  பஸ் ஆச்சே. ஆட்டோக்காரன் அப்படி செய்வான். வண்டி ரொம்புனாதான் வண்டிய எடுப்பான். பஸ்சுன்னா அது  அதுக்கு  எடுக்குறதுக்கு டைமிங் இருக்குதுல்ல’

அப்பாவும் சுப்புணியும் பேசிக்கொண்டார்கள். கண்டக்டரும் டிரைவரும் வண்டியில் ஏறினார்கள்.

அப்பாவும் சுப்புணியும் சிதம்பரத்திற்கு  டிக்கட் வாங்கிக்கொண்டார்கள். கண்டக்டர் ஆணையிட வண்டி புறப்பட்டது.

பூமா கோவில் ஸ்டாப்பிங்கில் பத்து பேருக்கு வண்டியில் ஏறினார்கள். அவ்வளவுதான்.  மற்றபடி வண்டி காலியாகத்தான் கிடந்தது.  இருவரும் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார்கள். முதுகுன்றம் செல்லும் பேருந்து எங்கே வழக்கமாய் நிற்கும் என்பதனை கேட்டறிந்து அந்த இடம் நோக்கி நடந்தார்கள். முதுகுன்றம் என்று அது செல்லும் ஊர் பெயர் எழுதிய பேருந்து ஒன்று புறப்படத்தயாராக இருந்தது.

’வண்டி ரெடியா இருக்குது தேவுலாம்’

‘சமயத்துல வண்டியே ஆப்புடாது’

இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். தருமங்குடிக்கு இரண்டு டிக்கட் எடுத்துக்கொண்டார் அப்பா. வண்டி அனேகமாய் நிரம்பிதான் இருந்தது.

’யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா’ என்று  நோட்டம் விட்டார். அப்படித் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

வண்டி சிதம்பரம் தெற்கு வீதியில் நரமுக விநாயகர் கோவில் தாண்டி இருக்கும் ஸ்டாப்பிங்கில் வந்து நின்றது. நான்கைந்து பெண்கள் ஏறினார்கள். ஏகப்பட்ட லக்கேஜ்கள் வைத்துக்கொண்டு ஏறினார்கள்.

‘லாரியா இது இம்மாம் சரக்கு கொண்டாரிங்க’

‘தேவ இருக்குதுல்ல’

‘மூட்டயா வச்சிகிட்டா சனம் எப்பிடி நிக்கறது போறது வர்ரது’

‘எல்லாம் போவுலாம் வருலாம்’ என்றாள் ஒரு மூதாட்டி.

‘மூட்டைக்கி எல்லாம் சேத்து  ஒரு சீட்டு தனியா போடுவேன்’

‘போடுவ  போடுவ  நாங்களும் அதுக்கு  காசு குடுத்துடுவம்’

‘சட்டம் பேச கத்துகிட்டிங்க எல்லாரும்’

‘உங்க கிட்டேந்துதான்’

வண்டி மேல வீதி கஞ்சித்தொட்டி நிறுத்தத்தில் நின்றது. இரண்டு சிறுவர்கள் வண்டியில் ஏறி’ மிராளுர்’ என்றனர்.

‘மிராளூர் எல்லாம் போவாது’

‘எந்த வழி’

‘ஒரத்தூர் சேத்தியாத்தோப்பு வழி’

இருவரும் வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டார்கள். ‘ வண்டில ஏறுறதற்கு முந்தில்ல  இன்ன ஊருக்கு  இது போவுமான்னு கேக்குணும்’

‘ஆ இவுரு வந்துட்டாரு’

‘நல்லதுக்கு காலம் இல்ல’

‘காந்திதாத்தா வந்துருக்காரு’

கண்டக்டர் சிரித்துக்கொண்டார். அப்பாவும் சுப்புணியும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டே வந்தார்கள்.  இந்திராகாந்தி சிலை பாசிமூத்தான் ஓடை என்று வண்டி போய்க்கொண்டே இருந்தது. கீரப்பாளையம் வந்ததும்  நின்றது.

சாலையில் மக்கள் கூட்டமாய் இருந்தது. ஆ ஊ என்று கத்திக்கொண்டு இருந்தார்கள்.

‘வண்டி இதுக்கு மேல போவாது’

ஒருவர் குரல்கொடுத்தார்.

‘ஏன் என்ன ஆச்சி’

‘எங்க தலைவரு புடிச்சி உள்ள வச்சிட்டாங்க. அவுர வெளில வுடுணும். வுட்டாக்க வண்டுவ போவுலாம்’

‘யாரு புடிச்சி உள்ள வச்சாங்களோ’

‘போலிசுலதான் கேக்கணும்’

‘வண்டிய  நடு ரோட்டுல நிறுத்தி போட்டா.  வரவேண்டிய ஆளுவ தானா வருது. நாம பேசிக்கறம்’

மக்கள் பேசிக்கொண்டார்கள்.

இந்தத்தடையை மீறிய சில பஸ்கள் கண்ணாடி உடைந்து காணப்பட்டன. அதனில் பயணித்த இருவர் தலையில் கருங்கல் ஜல்லியால் அடிபட்டு மருத்துவமனக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள்>

போலிசு ஜீப்புகள் இரண்டு சாலையில் நின்றுகொண்டிருந்தன.

‘இது என்ன துன்பம்’

‘சுப்புணி மெதுவா பேசு’

‘ஏன்’

‘ நாம் வூட்டுக்கு நல்லபடியா போய் சேரணும்’

‘அப்படி போவுது சேதி’

டிரைவரும் கண்டக்டரும் சாலையில் இறங்கி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  இந்தப்பகுதிக்கு சனத்தொகை கூடியுள்ள இனத்தாரின் தலைவரைத்தான் உள்ளே வைத்திருக்கிறார்கள்.

‘தருமங்குடி போயிட்டு வரலாம்னு ஆச பட்டேன். அதுக்கு இத்தினி பாடா இருக்கு’

‘இப்ப  மேற்கையும் போமுடியல கிழக்கையும் போமுடியல’

‘போலிஸ் ஜீப் முன் செல்ல பேருந்துகள் வரிசையாக் பின் செல்லும்’ என்று அறிவிப்பு செய்தார்கள்.

போலிஸ் ஜீப்பின் பின்னால் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாய் நின்றுகொண்டன.

‘நாம என்ன செய்யுலாம்’

‘ நாம ஊருக்கே திரும்பிடுவம்’

‘டிக்கட் வாங்கியிருக்கறம்’

‘வந்தவரைக்கும் போவ பாக்கி காசு வாங்குணும்’

அப்பா கண்டக்டரிடம் போய் நின்று கொண்டார். ’நாங்க தருமங்குடிக்கு போவுல. இப்ப்டியே திரும்பிகறம்’

‘ஏன் வண்டி போவுது. போலிஸ் ஜீப் முன்னாடி நிக்குது பாக்குல’

‘இல்ல நாங்க வருல. ‘

‘அது உங்க பிரியம்’

‘கீரப்பாளையம் வல்ரைக்கும் காசு எடுத்துகிட்டு பாக்கிய குடுங்க. நாங்க தருமங்குடி டிக்கட் எடுத்து இருக்கம்’ சுப்புணி கண்டக்டரிடம் மன்றாடினார்.

‘தேவுலாம்டா கத. நாங்க வண்டிய எடுக்குறம் நீங்க குந்துங்க வண்டில’

‘நாங்க போயி ரவிக்கு  திரும்பணும். ஊரு  உள்ர போவ போவ இன்னும் தகறாறு எப்பிடி எப்பிடி இருக்குமோ’

‘நாங்க போவுறம்தானே’

‘ சீட்டு காசு பாக்கிய குடுக்கலாமுல்ல’

‘சீட்டு காசு பாக்கி இல்ல இது. டிக்கட் வாங்கிகிட்டு பாதி வழில நா வல்லேன்னு சொல்லி  கொற காசு திருப்பிகுடுன்னா என்ன சமாச்சாரம்’

அப்பாவும் சுப்புணியும் சாலையில் ஓர் ஓரமாய் நின்றுகொண்டனர். முதுகுன்றம் வண்டி போலிஸ் ஜீப் பின்னே நகர ஆரம்பித்தது. போலிஸ் வான் ஒன்றில் இளைஞர்கள் ஏற்றப்பட்டு இருந்தனர். அது சைரன் அடித்துக்கொண்டு வேகமாய் சீறிக்கொண்டு சிதம்பரம் சாலையில் சென்றது.

மூலைக்கு மூலை மக்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக நின்றுகொண்டிருந்தார்கள்.

‘இது என்ன தும்பம்’

‘ சுப்புணி நாம் கெளம்புன நேரம் சரியில்ல’

‘தருமங்குடி போய்தான் வருவமா’

‘அய்யா  வெளக்கு வச்சா  கோவிலு பூசை ஒண்ணு பாக்கி இருக்கு. யாவகம் இருக்குதா’

‘ஆமாம் இந்த அமக்களத்துல அந்த சேதி மறந்து போனேன்’

‘போயி மாட்டிகினு. வர முடியாம போயிட்டா பூச என்னா ஆவுறது. தருமகர்த்தாவுக்கு வதிலு ஆரு சொல்லுறது’

‘பூச கூட என் தம்பி மொற. சும்மா குறுக்கால வந்தவன்’

சுப்புணி வாயைப்பிளந்துகொண்டு சிரித்தான்.

‘திரும்பி சிதம்பரம் போயிடுவம்’

‘அதுதான் எப்பிடி போவுறது. எங்கயும் எந்த பஸ்சும் போவாது’

‘ஆமாம் இப்ப ஒண்ணும் செய்யமுடியாது’

மக்கள் சிலர் நடந்து போனார்கள். சிலர் சைக்கிளில் போனார்கள். சிலர் டூ வீலரில் பயணித்துக்கொண்டு போனார்கள். அப்பாவும் சுப்புணியும் போலிஸ்காரர்களிடம் போய் விசாரித்தார்கள்.

‘பாப்பம் பாப்பம் இப்ப ஒண்ணும் பேசாத. எட்ட நவுறு. போ போ’ போலிஸ்காரர்கள் விரட்டி அடித்தார்கள். 

‘பசிக்குது டீயாவது குடிப்பமா’

‘எனக்கு டீ கடையில் குடிச்சு  பழக்கம் இல்ல.’

‘ஆவத்துக்கு பாதகம் இல்ல. அய்யா பசி இருக்குதுல்ல. வேற என்னா செய்வ’

‘பிஸ்கட் ஒரு நாலு வாங்கி தின்னுட்டு தண்ணி குடிக்கலாம்’

சரி என்று இருவரும் ஒரு டீக்கடைக்குப்போனார்கள். சுப்புணி’ ஸ்டாங்க் டீ சக்கர தூக்கல்’ என்று முழங்கினான்.

‘என்னா வீராவேசமா சொல்லுற’

‘அய்யா வவுத்த கிள்ளுது எனக்கு. ஒடு டீ குடிச்சா பசி ஆறும்’

அப்பா மாரி பிஸ்கட் பாக்கெட்  ஒன்று வாங்கி சாப்பிட்டார். சுப்புணிக்கும் நாலு பிஸ்கட்டு கொடுத்தார்.

‘இதென்ன சவுக்கு சவுக்குன்னுட்டு’

‘பசிக்கு திங்குறம்’ அப்பா சுப்புணிக்கு இப்போது சொன்னார். டீக்கடையில் இருவரும் குடிதண்ணீர் வாங்கிக்குடித்தார்கள்.

‘சாமிவ நம்ப கடைக்கு வராதே’ என்றார் டீக்கடை பாய்.

அப்பா லேசாகச்சிரித்தார். சுப்புணி பாயிக்கு பதில் சொன்னார்.

‘ முதுகுன்றம் வண்டில வந்தம் அதான் தகறாறுன்னு சொன்னாங்க வண்டிவ போவாதுன்னு சேதி’

‘இப்பக்கி ஒண்ணும் செய்யமுடியாது’

‘என்ன பாயி செய்யுலாம். அய்யா சாயந்திரம் கோவிலுக்கு பூசை இருக்கு போவுணும்’

‘கோவிலு அய்யிரு சமாச்சாரமா’

‘ஆமாம் பாயி’ அப்பா சொன்னார்.

‘போலிஸ் காரங்ககிட்ட பேசுனீங்களா’

‘கிட்ட வராதே எட்ட நவுறுன்னு சத்தம் போடுறாங்க. நெருங்க முடியில.’

‘ரெண்டு ஆளுவுளுக்கு மண்ட ஒடிஞ்சி இருக்குன்னு சேதி. அவாளு என்ன செய்ய முடியும்’

‘நீங்க ஒரு வழி சொல்லுங்க பாயி’ என்றார் சுப்புணி. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. டீக்கடை பெஞ்சில் அப்பா உட்கார்ந்து தினத்தந்தியைப்புறட்டிக்கொண்டு இருந்தார். படித்ததையே மீண்டும் மீண்டும் படித்தார். நேரம் ஆக ஆக அச்சமாகக்கூட இருந்தது. இந்த கோவில் பூஜை தம்பியுடையது. தருமங்குடி பூஜை போயிற்று. அதற்குத்தான் இங்கு வந்தோம். இங்கும் ஏதும் பிரச்சனை ஆகிவிட்டால் என்ன செய்வது. சாமி காரியம் ஆயிற்றே என்கிற பதற்றம் வந்து உலுக்க ஆரம்பித்தது.

‘சுப்புணி நடந்தும் போயிடுவமா’

‘போவுலாம் ஆறு மைலு ரெண்டு மணி நேரம்  நடக்குணும்’

‘என்னா ஊரு’ டீக்கடை பாய் கேட்டார்.

‘அண்ணாமலநகரு போவுணும்’

‘சோந்து போயிடுவீங்க. அங்க போயி பூசை பண்ணணும்னு சொல்றீங்க’

‘’செதம்பரம் போனா ஆட்டோ கீட்டோ இருக்கும்’

‘ஒண்ணும் இல்ல. அது அது அப்பிடி அப்பிடி நிக்குது.  ஆட்டோவும் இல்ல ஒரு கீட்டோவும் இல்ல’

‘என்ன பாய் இப்பிடி சொல்றீங்க’

‘இங்கயே குந்துங்க ஆளுக்கு ரெண்டு உண்ட பண்ணு தாரன் தின்னுட்டு பின்னயும் ஒரு டீ குடிச்சிட்டு. நடந்துட வேண்டியதுதான் இருட்டுறதுக்கு முன்னாடி போய் சேரணுமில்ல. கோவிலு பூசன்னு சொல்றீங்க’

‘பொழப்பு’

‘கரெக்டா பேசுறீரு  அய்யா குருக்களு அய்யிருதான.  கோவிலு பூசைன்னு சொன்னா அது தேவுலாம். பொழப்புன்னு சொன்னா எப்பிடி’

‘ரெண்டும்தான்’

பாய் சிரித்துக்கொண்டார். அந்த நேரம் பார்த்து டீக்கடை வாயிலில் ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்றது. ஒரு இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிலும் இறங்கி டீக்கடைக்குள் நுழைந்தனர்.

‘இங்க என்ன கூட்டம் நவுறு நவுறு இடத்த காலி பண்ணு. அவனவன் மண்ட காயுறான். இங்க என்ன கூட்டம்’

டீக்கடை இரண்டு டீ போட்டு இருவருக்கும் பவ்யமாகக்கொடுத்தார். இருவரும் டீயை உறிஞ்சிக்கொண்டு இருந்தனர்.

‘அய்யாகிட்ட ஒரு விண்ணப்பம்’

‘என்ன பாயி’

‘இங்க ரெண்டு ஆசாமிவ இருக்கு. கோவிலு பூச. அண்ணாமலை நகரு போவுணுமாம். ஒரு ஒதவி செய்யுணும்’

‘ஆரது’

‘நாந்தாங்க கோவிலு குருக்களு. இவுரு க்கு வெளக்கு போட்டு பூ கட்டுறவரு’

இருவரும் வணக்கம் சொன்னார்கள்.

‘நல்லா இருக்கு கத. நான் செதம்பரம் போறன். ரெண்டு பேரையும் கஞ்சித்தொட்டில எறக்கி வுட்டுடறன். ஊருக்குள்ள போலிஸ் வண்டில நீங்க வரக்கூடாது. மேல அய்யா என்ன பாத்தாருன்னா பிரச்சனை ஆயிடும்’

‘ரொம்ப ரொம்ப  தாங்க்ஸ் அய்யாவுக்கு’

‘பாயிக்காக இது செய்யுறன். ஏறுங்க ஜீப்புல ரெண்டு பேரும்’

அப்பா பயந்து பயந்து ஜீப்பில் ஏறினார்.

‘பயப்படாத சாமி ஒண்ணும் சுட்டு துன்னுடமாட்டம்’ என்றார் இன்ஸ்பெக்டர்.

டீக்கடை பாயுக்கு நன்றிசொல்லி இருவரும் போலிஸ் ஜீப்பில் ஏறி பின் சீட்டில் உட்கார்ந்துகொண்டார்கள்.

அப்பாவும் சுப்புணியும் எதுவும் பேசவில்லை. எதாவது பேசி அது எதாவது வம்பாகிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்.

போலிஸ் ஜீப் வேகமாகச்சென்றது. கஞ்சித்தொட்டியில் நின்றது.’ இறங்கிக  இறங்கிக பட்டு பட்டுன்னு’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘நீங்க ஒதவி செய்ய்லன்னா ரொம்ப கஷ்டம்’

‘அய்யா அந்த டீக்கடைக்காரர் நல்ல மனுஷன். அவுருக்காகத்தான் இது செஞ்சன்’

‘எப்பிடியோ எங்களுக்கு ஒரு ஒத்தாசை’

இருவரும் இறங்கி வடக்கு ரத வீதியில் நடக்க ஆரம்பித்தார்கள். நல்ல பசியாக இருந்தது. வடக்கு கோபுர வாசல் வழியாக நடராஜா கோவிலுள் நுழைந்து கோவிந்தராஜப் பெருமாள் கோவில் மடப்பள்ளியை அடைந்தார்கள். ஆளுக்கு ஒரு புளிசாதம் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டார்கள்.

மடப்பள்ளி அய்யங்கார் இருவருக்கும் தலா ஒரு  உளுந்து வடை காசில்லாமல் கொடுத்தார்.  வடை போணிஆகாமல் இருந்திருக்கலாம்.

இருவருக்கும் ஏக மகிழ்ச்சியாக இருந்தது.

‘இப்புறம் ஒண்ணும் பிர்ச்சனை இல்ல அர மணில அண்ணாமலநகர் போயிடலாம்’

இருவரும் கீழ கோபுரம் வழியாக வெளிவந்து கீழ ரத வீதி வழியாக நடக்க ஆரம்பித்தனர்.

‘இப்பதான் கண்ணு பளிச்சினு தெரியுது’

‘நல்ல பசி’

படித்துறை சந்து பஸ்ஸ்டேண்ட் சிதம்பரம் ரயில் நிலையம் இஞ்னீரிங்க் காலேஜ் சீதை ஆச்சி ஹாஸ்டல் ராஜேந்திரன் சிலை  விசி பங்களா சீனுவாச சாஸ்திரிஹால் கெஸ்ட  அண்ணாமலைநகர் அஞ்சலகம் என் வந்து சேர்ந்தார்கள்.

‘பட்னி டூரிஸ்ட் இது’ என்றார் சுப்புணி.

‘விதிச்சது நடக்கறது’

சுப்புணி கோவிலுக்குப்போனார். அப்பா நிவேதனம் பொங்கி சாயரடசைக்குத்தயாராகிக்கொண்டு இருந்தார்.

ஒன்றும் அகாலம் ஆகிவிடவில்லை. பூஜையைச் சரியாக முடித்து விடலாம் என்கிற நிம்மதி. அப்பா பாசுபதேசுரர்  கோவிலுக்குக்கிளம்பினார்.

சுப்புணி கோவிலைத்திறந்து சந்நிதிகளில் விளக்கு சரிசெய்துகொண்டிருந்தார்.  தருமங்குடி பயணம் சென்று பாதியில் திரும்பி வந்ததும் சிதம்பரத்தில் இறங்கி அண்ணாமலைநகர் வரை நடந்தே வந்ததும் அசதியாக இருந்தது. என்ன செய்வது ஆசை ஆசையாகப் புறப்பட்ட பயணம். அப்பாவுக்கும் தருமங்குடி சென்று எல்லோரையும் பார்த்து வரவேண்டுமென்று ஆசை. எல்லாமே நாம் தீர்மானிக்கின்றபடி எங்கே நடக்கிறது. மனதில் எதனையெல்லாமோ நினைத்துக்கொண்டே சுப்புணி கோவில் வேலை செய்துகொண்டிருந்தார்.

‘ஆரு  கோவில்ல’

“ஏன் யாரு கேக்கறது’

‘குரலு புரியல’

‘ஆரு’

சுப்புணி விநாயகர் சந்நிதியிலிருந்து எட்டிப்பார்த்தார். தருமகர்த்தா தான் கோவிலுக்கு வந்திருக்கிறார்.

‘நானு சுப்புணி வரேன்’ சொல்லிக்கொண்டே வாயில் கதவருகே சென்றார். தருமகர்த்தா அரச்சனைத்தட்டு வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

‘அய்யா வர்ரது தெரியாது’

‘ஒங்கிட்ட சொல்லிட்டு நா வரணுமா’

‘அப்பிடி இல்லங்க இருந்தாலும் உஜாரா இருந்துப்பன்’

‘இல்ல எதுக்கு நா வரகுள்ள மாத்ரம் நீ உஜாரா இருக்கணும். என்ன தப்பு ஏதும் செய்யுறயா. எப்பவும் நீனு உஜாரா இருக்கவேண்டியதுதானே’

சுப்புணி சிரித்துக்கொண்டார்.’ நானு சாமார்த்தியமா பேசுறதா நெனச்சிகிடுறேன். அப்புறம்  நா பேசுனது  பல்லிளிச்சிகிட்டு போயிடுது. குருணி குருணிதான். கொட்டி கொட்டி அளந்தாலும் குருணி பதக்கு ஆவாது’

‘குருணி பதக்கு எல்லாம் எந்தக்காலம்’

‘அது முடிஞ்சி போச்சிங்க’

‘அய்யா எங்க இன்னும் வருலயா’

‘தோ வந்துதுடுவாருங்க.  அவரு ஒண்டியாதான இருக்காரு’

‘என் என்ன ஆச்சு’

‘அந்த மாமி அந்த பாப்பா அந்த பையன் மூணு பேருமே மெட்ராசுக்கு போயிருக்காங்க’

‘என்ன சேதி’

‘சும்மா பாத்துட்டுவருலாம்னுதாங்க சொன்னாங்க’

‘என்ன செத்த சும்மா பாக்குறது செமந்துகிட்டு பாக்குறது’

‘சுப்புணி சுப்புணி’ குரல் கொடுத்துக்கொண்டே அப்பா கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

‘யாரு டிரஸ்டியா அய்யா வரணும் வரணும்’

‘நா வர்ரது இருக்கட்டும். அம்மா எல்லாம் ஊருல இல்லயா’

‘போயி பாத்துட்டு வருலாம்னு போயிருக்காங்க’

‘பாப்பாவ வுட்டுட்டு போவுலாம்ல. அந்த பய அவன் ஆயி அப்பனு பாக்குணும்னு போயிருப்பான். உம்ம பொண்ண வுட்டுட்டு போயிருக்கலாம்’

‘ஒண்ணுக்கு ஒண்ணு துணையா இருக்கட்டுமேன்னு அனுப்பினேன்.. வேற ஒண்ணுமில்லங்க’

‘அது சரி. இண்ணைக்கி என்ன நட்சத்திரம் தெரியுமா’

அப்பா விழித்திருக்கிறார்.

‘என்ன யோசனை. இது என்னடா வம்புன்னு பாக்குறீரு. திதி என்ன நட்சத்திரம் என்னன்னு தெரியாம என்ன உத்யோகம் பாக்குறீரு’

அப்போதுதான் சுப்புணி கோவிலில்  மகா மண்டபத்தில் தொங்கவிட்டிடருக்கும் பாம்பு பஞ்சாங்கத்தை எடுத்துக்கொண்டு வந்து காட்டிக்கொண்டு இருந்தார்.

‘இண்ணைக்கி சதயம் நட்சத்திரம் என் ஜன்ம நட்சத்திரம்.’

‘சதபிஷக் நக்‌ஷத்திரம். ராசி கும்பம்’

‘அதெல்லாம் சரி’

‘அர்ச்சனை பண்னிடணும். சுவாமிக்கு. அதுக்குத்தான் வந்தேன்’

‘பண்ணிட்டா போச்சி. அதுக்கு என்னங்க. அய்யாவுக்கு பண்ணிடுவும்’

அப்பா அர்ச்சனைத்தட்டினைத் தன் கையில் வாங்கிக்கொண்டார். தருமகர்த்தா சுவாமி சந்நிதிக்குச்சென்று அமர்ந்துகொண்டார்.

‘சுத்து கோவிலு முடிச்சிடறன் மொதல்ல. சுவாமி அம்பாள் பாக்கி வக்கறன்’

அப்பா எல்லா சுத்துக்கோவில்பூஜைகளை முடித்துக்கொண்டு வந்தார். தருமகர்த்தா அரச்சனைத்தட்டினைக்கையில் எடுத்துக்கொண்டு சுப்புணியிடம் வந்து அய்யா பேரு என்ன என்று காதைக்கடித்தார். சுப்புணி’ முத்தையா முதலியார்’ என்றார். அப்பா சிரித்துக்கொண்டே தருமகர்த்தாவிடம் போனார்.

‘தட்ட தொட்டுங்கோ’

‘சதபிஷக் நட்சத்ரே கும்ப ராசெள ஜாதஸ்ய ஸ்ரீமான் முத்தையா முதலியார் நாமதேயஸ்ய’ என்று ஆரம்பித்தார்.

‘அப்புறம் என்ன அய்யா எல்லாம் தெரிஞ்சிவச்சிருக்கீங்க’

அப்பா அரச்சனை முடித்து பிரசாதம் வழங்கினார். சிவ சிவ சிவ என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டார்.

‘ உங்க தம்பி எப்ப ஊருக்கு திரும்ப  வரார்’

‘அது பத்தி ஒண்ணும் தகவல் இல்ல’

‘நீர் வந்தது தோதா போச்சி’

‘எனக்கும் இது சவுகரியமாத்தான் போயிண்டிருக்கு.  பெரியவா தயவு இருக்கணும்’

‘அவனண்ட சொல்லுங்க. ஓம் நம சிவாய’

‘நா போயி அம்பாள் அர்ச்சனை முடிச்சிட்டு அப்புறம் பைரவர் பூஜை பண்ணணும். பிறகு திருக்காப்பிடணும்’

‘சுப்புணி எல்லாம் பாத்துக. சுத்த பத்தமா இருக்குணும். கோவிலு பளிச்சினு இருக்கணும். தெரிதா’

’ அப்பிடித்தாங்க வச்சிருக்கேன்’

‘தேவுலாம்.  கோவில நல்லா வச்சிக்கணும் அப்பதான் நாம நல்ல இருக்க முடியும்’

தருமகர்த்தா புறப்பட்டார்.

‘நானு கூட வரட்டுங்களா’

 நீ அய்யாவோட இரு. கதவ சாத்தி பூட்டு போட்டு அய்யாவோட வீட்டுக்கு போயிட்டு அப்புறமா  உன் வீட்டுக்கு போ’

தருமகர்த்தா கோவிலிலிருந்து புறப்பட்டார்.

‘அய்யா நாம பொழச்சம். நாம் கீரபாளையத்திலேந்து ஊருக்கு திரும்பி வராம  தருமங்குடி  நேரா போயிருந்தா இண்ணக்கி  தருமகர்த்தாண்ட மாட்டியிருப்பம்’

‘பாசுபதேசுரர் காப்பாத்திருக்கார்’

‘பத்து தட்ரம் சொல்லுங்கோ அய்யா’

‘ஏதோ நல்ல நேரம்’

இருவரும் கோவிலை திருக்காப்பிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்பா வீட்டுத்திரும்பி தயிர்சாதம்  பிசைந்து  அதனைச் சாப்பிட்டுவிட்டு அயர்ந்து தூங்கிப்போனார். தருமங்குடிக்குப்போகமுடியாமல்  ஊர் திரும்பியதும்  வழியில் தான் பட்ட அவஸ்தைகளும் கனவுகளாய் வந்திருக்கலாம்.

 

 

 

கபாலியும் தாத்தாவும் கோவிலுக்குச்சென்றுவிட்டார்கள். வீட்டில் பாட்டி அம்மா சித்தி மூவருந்தான் இருந்தார்கள். பாட்டிக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளை சித்தி வேளா வேளைக்குச்சரியாகக் கொடுத்தாள். பாட்டியின் முன்பாக சித்தியும் அம்மாவும் உட்கார்ந்துகொண்டார்கள்.

‘ஒங்கிட்ட ஒரு சேதி. நாமதான் பேசிக்கணும். யாருக்கும் தெரிய வேண்டாம்’

அம்மா ஆரம்பித்தாள்.

‘சாமிய பத்தின சேதி.’

‘அது என்ன சேதி’

‘கேட்டுகோ நா சொல்றன்’

‘பீடிக பெரிசா இருக்கு’

‘ஒரு நா பள்ளிகூடத்த கட் பண்ணிட்டு வெளாங்க அடிக்க ஓடிட்டான்’

‘யார சொல்ற’

‘நம்ப சாமிதான்’

‘புது சமாச்சரமா இருக்கு’

‘சகவாசம் அப்படி. அவன் என்ன பண்ணுவான்.  மறு நா பள்ளிக்கூடத்துல அவன உள்ள வுடல. நானும் வேதாவும் மன்னாப்பு எழுதிகுடுத்துட்டு சாமிய கிளாசுக்கு அனுப்பினம்’

‘கொழந்தடி அவன்’ என்றாள் பாட்டி.

‘விளாமரத்துக்கு காவல்காரன் மரத்துக்கு கீழயே இவனையும் இன்னொருத்தனையும் கட்டி வச்சிட்டான் . நானும் வேதாவும் தேடிண்டு போயி கண்டு புடிச்சம். கூட்டிண்டு வந்தம். மறு நா ஸ்கூல்ல இந்த கத’

சித்தி தேம்பித் தேம்பி அழாஅரம்பித்தாள்.’ பகவானே எம் புள்ளய ஒன்ன நம்பி வுட்டுட்டு  என் அம்மா கெடக்கறான்னு இங்க வந்தேனே. இப்ப இவ்ளோ சேதி சொல்றாளே’

பாட்டி தன் மகளை சமாதானம் செய்தாள்.’ அசடு . பையன் செறுசு அப்பிடி இப்பிடி இருப்பான் நாமதான் சொல்லணும்’

‘நா இங்க இருக்கனே’

‘நாங்களும் நன்னாதான் பாத்துகறம்’

‘இல்லேங்கல நா’

‘அப்பறம் இன்னும் எதானு சேதி இருக்கா இவ்ளோதானா’

‘ஒரு நா கோவில் திருக்குளத்துல நீச்சல் கத்துகறேன்னு போயிட்டான். கொளத்துல இருந்த புள்ளய அவன் பெரியப்பா சண்ட போட்டு கூட்டிண்டு வந்தா’

‘இது என்ன புதுசு புதுசா சொல்றேள்’

‘டீ அவனுக்கு இப்ப ஏழரை சனி படுத்தறது. பாத சனி வரப்போறதுன்னு நெனக்கறன்’ பாட்டி சொல்லிக்கொண்டாள்.

 ’மொதல‘ பறி கொடுத்துடுவேன்னு நெனக்கிறேன். பயமா இருக்கு. நா என்ன பண்ணுவேன்’

‘ஒரு நா செதம்பரம் சினிமா கொட்டாய்ல சரஸ்வதி சபதம் பாக்கறேன்னு பிளான் போட்ருக்கானுவ பயலுக. வேதாவுக்கு தெரிஞ்சி போச்சு. நான் அவளண்ட சொல்லி அவளே அவன அந்த சினிமாக்கு கூட்டிண்டு போயிட்டு வந்தா’

‘ஹஹ்ஹா’ பாட்டி சிரித்தாள்.

‘ஏன் சிரிக்கறே’

‘கொழந்தேடி சாமி’

‘நன்னா படிக்கறான் . அவன் கிளாசுல ஃபஸ்ட். அது எப்பவும் கொறயல. அதுக்கு என்ன சொல்லுவே நீ’

‘படிப்பு அப்பறம் புள்ள நன்னா வரணும் மொதல்ல. நல்ல புள்ளயா இருக்கணும் படிக்கணும் நன்னா யார் வேண்டாம்கறா’

‘இவ்ளாதானா’

‘ஆமாம் ‘

‘போரும் எம் புள்ள என் கிட்ட இருக்கணும். இல்ல நா அவன்கிட்ட இருக்கணும் இதான் எம் முடிவு’

‘நா ஒங்கிட்ட சொன்னது யாருக்கும் தெரிய வேண்டாம். சாமிக்கும் தெரியவேண்டாம். அவனுக்கே உன்னோட இருக்கணும்னுதான் மனசுல இருக்கும். அத தெரிஞ்சிண்டு அவன  இங்கவே வச்சிகலாம்’

‘நீ சொல்றதுதான் சரி’ சித்தி ஆமோதித்தாள்.

பாட்டி எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

‘என்ன வுட்டுட்டு அவ எப்பிடி போமுடியும். சொல்லு. என்ன யார் பாத்துப்பா. கோவில் மொற இருக்கு. கபாலி ஒத்தாசையிலதான் எல்லாம் ஓடிண்டு இருந்துது இருக்கு. கபாலி  மனசுல என்ன எல்லாம் பிளான் வச்சிண்டு இருப்பானோ தெரியாது. இப்பக்கி இங்க இருக்கான். நல்லவந்தான். ஆனாலும் முழுசா நம்ப  எனக்கு இன்னும் மனசுல வரல. வேதாவ கபாலிக்கு கல்யாணம் பண்ணிடலாம். அவா ரெண்டு பேரும்  இங்கயே இருக்கலாம். காமு அண்ணாமலநகர்ல தன் புருஷன் புள்ளயோட இருக்கலாம். மாப்பிளயோட அண்ணா குடும்பம் இப்பக்கி அண்ணாமலைநகர்ல இருக்கு. அதுக்கு ஒரு வழி காட்டியாகணும்.’

‘வேதா கல்யாணம் இப்பக்கி இல்ல. அவ படிக்கணும்கறா.  ப்ரொபசர் ஆத்துக்கு போயிட்டு வந்தா அது படிச்சதாயிடுமா. காலேஜ் சேந்து படிக்க இனிமே அவளால ஆகுமா. அவளோ அஞ்சாவதுதான் படிச்சிருக்கா.    அவளுக்கு,  தான் இப்ப கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல. அதப்பத்தி இப்ப பேச வேண்டாம். அவளுக்கு இவ்வளவு ஆசை படிக்கணும்னுங்கறதுல இருக்குன்னு அண்ணாமலநகர் வந்துதான் தெரிஞ்சிண்ட. நா என்ன பண்ணுவேன். தருமங்குடி இருந்தா மங்குணி மாதிரி அவுளும் காலத்த ஓட்டி இருப்பா இல்லேங்கல. நம்ம காலத்துக்கும் நம்ம பொண்ண நாம பாத்துப்போம்.  அப்பறம் அவ கொற காலம் என்ன ஆறது. தெரிஞ்சி பேசறாளா இல்ல தெரியாம பேசறாளுன்னு நேக்கு புரியல.’

அம்மா சொன்னாள். அம்மாவுக்கு இரைப்பு வாங்கியது. கொட்டித்தீர்த்துவிட்டாள். எனக்கு அம்மாவைப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

‘ ஒரு முடிவு பண்ணிடுவோம். சாமி இங்க இருக்கான் . இங்கயே படிக்கறான். பாட்டிக்கு ஒத்தாசையா நா  எங்காத்துக்காரர் இங்கயே இருக்கவேண்டியதுதான்.  வேதாவ.  கூட்டிண்டு நீங்க அண்ணாமலைநகர் போங்கோ. சாமி எங்களோடதான் இனிமே.  அவன் எனக்கு ஒரே புள்ள’

‘ரைட்டா சொல்லிட்ட’ பாட்டி சேர்ந்துகொண்டாள்.

மதியம் சாப்பாட்டிற்கு சித்தியும் அம்மாவும் ஏற்பாடு செய்யப்போனார்கள். கபாலியும் சித்தியின் அப்பாவும் கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார்கள். ஆட்டோ ராஜா வண்டியை வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான்.

நானும் சாமியும் இறங்கி வீட்டுக்குள் சென்றோம். சித்தப்பா ஆட்டோக்காரனுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு  எங்கள் பின்னே வீட்டுக்குள் வந்தார்.

‘அம்மா கடல் பாத்தேன்’ சாமி அவன் அம்மாவை ஓடி கட்டிக்கொண்டான்.

‘இன்னும் என்ன என்ன பாத்தே’

‘மரினா பீச் பாத்தோம் பெரிய கடல் பாத்தோம் அண்ணா சமாதி பாத்தோம். குதிர நிறய பாத்தம்  அப்பா  எங்களுக்கு வேர்க்கடலை. இளநீர் எல்லாம் வாங்கித்தந்தார்’

‘ரொம்ப சந்தோஷம். இன்னும் என்ன வேணும் உனக்கு. அப்பாண்ட கேட்டு வாங்கிகோ’

‘சமையல் ஆயிட்தா என்ன சமாச்சாரம்’

‘ஆயிண்டே இருக்கு’ சித்தி தன் கணவருக்குப் பதில் தந்தாள்.

கபாலியும் தாத்தாவும் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டேயிருந்தனர். தரிசனத்துக்கு வந்த சேவார்த்திகள் செய்த சேஷ்டைகள் தமாஷ்கள் சண்டைகள் பற்றி பேச்சு போய்க்கொண்டிருந்தது.

தாத்தா வந்த ஜனங்கள்ள சட்டை பக்தர் சங்கிலி பக்தர் சக்கர பொங்கல் பக்தர் சபல புத்தி பக்தர் என்கிற ரகங்கள் இருந்ததைக்குறிப்பிட்டார். கபாலி ஒவ்வொருவகைக்கும் விளக்கம் என்னவோ என்று கேட்டார்.

‘ தெய்வத்தோட   சந்நிதில  போட்டுண்டு இருக்கற புது சட்டைய போட்டுண்டு இழுத்து இழுத்து உட்டுண்டு ஷோக் காமிக்கறவா சட்டை பக்தர். வந்த பொம்பளங்கள்ள கழுத்துல இருக்கற தங்க செய்னை  சட்டைமேல எடுத்து போட்டுண்டு என சங்கிலிய பாரு பாருன்னு காமிச்சிண்டு நிக்கறவா சங்கிலி பக்தர். எப்ப சர்க்கரை பொங்கல் நமக்குத்தருவான்னு நாக்க தொங்க போட்டுண்டு உக்காந்துண்டு இருக்கறவா சர்க்கரை ப்பொங்கல் பக்தர். பொம்மனாட்டி எங்க பளிச்சினு கண்ணுக்கு தெரியறாளோ அங்க்யே ஆடாம அசியாம நின்னுண்டே இருக்கறவா சபல புத்தி பக்தர்.இவாள எல்லாம் மீறிண்டு பகவானை மெய்யாலும் கும்புடறவாளும் இருக்கத்தான் செய்வா’

கபாலிக்கு ஒரே குஷி. இவ்வளவு சாமார்த்தியமாகக்கூட  மனிதர்கள் பேசத்தான் செய்கிறார்கள்.

பாட்டி தன் பேரனை தன் அருகே அழைத்தாள். ‘என்ன என்ன பார்த்தே’ கேட்டாள்.

‘கடல் பாத்தேன்’

‘எப்பிடி இருந்துது சொல்லு’

‘தண்ணி தண்ணி தண்ணி’

‘ஆனா குடிக்கமுடியாது தெரியுமா’

‘கடல் மீனு அத தான் குடிக்கறது’

‘அதுக்கு உப்பா இருக்காது’

‘அது ஒன்னண்ட சொல்லித்தா’

பாட்டி சிரித்துக்கொண்டாள்.

‘ஏம் பாட்டி ஒன் ஒடம்ப நீ நன்னா வச்சிண்டா எங்கம்மா அண்ணாமலைநகர்க்கு வந்துடுவா. நீ உன்  முட்டி கால சரிப்பண்ணிக்கலாம்தானே’

‘நா என்ன பண்ணமுடியும் தங்கம். வயசு வேற ஆறதே’

‘தாத்தாவுக்கு முட்டிகால் வலிக்குமா’

‘வலிச்சா அவரும் படுத்துனூடுவார்’

சாமி சிரித்துக்கொண்டான்.

‘உனக்கு மெட்ராஸ் புடிச்சிருக்கா’

‘இது மெட்ராஸா இல்ல சென்னையா’

‘இது அந்தகாலத்துல மெட்ராஸ் இப்ப் சென்னை’

‘ரொம்ப புடிச்சிருக்கு’

‘அப்ப இங்கயே இருந்து படிக்கலாம் நீ’

‘ அப்பா அம்மா என்ன சொல்வாளோ தெரியலயே. என் ஸ்கூல் அங்கன்னா இருக்கு’

‘மாத்திண்டா போறது’

‘ நீ எழுந்து நடக்கமாட்ட.. கட்டில்ல படுத்துண்டு இருப்பயா பாட்டி’

’ஏண்டா எனக்கும் உன்ன போல சுத்திவரனும்னு ஆசதான் ஒடம்பு படுத்தறது’

‘பேரன் சாமி  என்ன சொல்றான்’

‘சென்னையிலே இருக்க அவனுக்கு இஷ்டமாம்’ பாட்டி  தாத்தாவிடம் சொன்னாள்.

‘ரொம்ப சந்தோஷம். இங்க ஒரு நல்ல ஸ்கூல்ல சேத்துவிட்ருவன் நான்’

‘அத செய்யுங்கோ மொதல்ல’

‘இங்க என்ன பெரிய  பிளான் எல்லாம் அரங்கேத்தமாறது’

சித்தியும் அம்மாவும் சேர்ந்து கொண்டார்கள்.

‘பேரன இங்க வச்சினூடுவா பாட்டி’

‘ நாங்க புருஷனும் பொண்டாட்டியும் இங்கதான் டேராவா’

‘என் டேரான்னு சொல்ற உங்க அம்மா அப்பா ஆம் இது’

‘எனக்கு ஒரே பொண்ணு நீதான் . நீ என்ன அண்ணாமலநகர் கூட்டிண்டு போலாம்’

பாட்டி சட்ட,மாய்ச்சொன்னாள்.

‘நா முத்துகுமார விட்டுட்டு எங்கயும் வரமாட்டன். எல்லாருக்கும் தெரியும். அவன் பாத்துண்டேதான் எனக்கும் காலம் கழியணும்’

‘அப்ப நானும் வேதாவும் அண்ணாமலைநகர் பொறப்படறம்’

‘அதுக்குள்ளயா’ என்றான் சாமி.

‘நீ இருடா உங்க பாட்டி ஆத்துல நாங்க போறம். உன் பெரியப்பா திண்டாடிண்டு இருப்பார்’

‘எனக்கு ஸ்கூல் இருக்கே’

‘நா உனக்கு இங்க ஒரு நல்ல ஸ்கூல் பாக்கறேன் .சேத்து விடறன் இங்கயே படி என்ன சமத்து’

‘ எனக்கு ஸ்கூல் இங்கயா சென்னையிலயா. அய் ரொம்ப நன்னாயிருக்கு. நானும் அம்மாவோட இருந்துடுவேன். தாத்தக்கு கந்தகோட்டம் கோவில். அம்மாக்கு பாட்டி. அப்பாக்கு அம்மா எனக்கு ஒரு  ஸ்கூல்’

சரியாத்தான் சொல்றேனா பாட்டி’

‘நல்லா கணக்கு போட்டுத்தான் பேசறே’

‘நீ படிப்புல சமத்துன்னு உன் சித்தி  பெரியம்மா சொன்னா. உன் அக்கா சொன்னா. அப்பறம் என்ன கொற எனக்கு. நீ படிச்சி பெரிய உத்யோகத்துக்கு வரணும்’

‘ஏன் நான் கந்தகோட்டம் முருகன பூஜ பண்ணலாம்தானே’

‘பேஷா’

‘அப்பறம் ஏன் உத்யோகம் சொல்ற பாட்டி’

‘ இப்ப உங்க அப்பா வர முடியறதா.  வர முடியல. ஏன் கோவில் உத்யோகம்னா கஷ்டம் லீவு கெடக்காது. சரியான மனுஷாளா பாத்து கோவில் பூஜக்கி வைக்கணும். இல்லன்னா நம்ம பேர் ரிப்பேர் ஆயிடும்’

‘மொதல்ல இந்த காலத்துல பொண்கள் கோவில்ல மணி அடிக்கறவன் சிண்டு வச்சிண்டு  உத்யோகம் பாக்கறவன் அவாளுக்குகு புருஷனா வர வேண்டாம்னு ஒத்த கால்ல நிக்கறதுகள்’ தாத்தா சேர்ந்துகொண்டார்.

‘என்ன முடிவாச்சு சொல்லுங்கோ’

‘ அம்மாவும் பொண்ணும் அண்ணாமலைநகர் போறா. சாமி இங்க இருக்கட்டும்’

‘அவன் படிப்பு’

‘நம்மளோட அவன் இருக்கட்டும். இங்க ஒரு நல்ல ஸ்கூல் பாருங்கோ.  டீசி வேணும்னா உங்க அண்ணா வாங்கி அனுப்பறார். ஸ்கூல்ல கேளுங்கோ. யாராவது ஒரு ரிடயர் ஆன வாத்தியாரண்ட இவன் இன்னது படிச்சான். இன்ன கிளாஸ்க்கு இவன் தகுதின்னு ஒரு சர்டிபிகேட் வாங்கி குடுத்தாகூட இங்க சேத்துடலாம் ஏதோ ஒரு ஸ் கூல்’

‘இது என்ன திடு திப்னு ஒரு முடிவு’

‘திடு திப்பு அதெல்லாம் இருக்கட்டும். இந்த முடிவு சரியான்னு சொல்லுங்கோ’

‘கொழந்த நம்மளோட இருக்கட்டும் அது சரி’

‘அப்புறம் என்னவாம்’

‘அண்ணா வேற உத்யோகம் இப்பக்கி தேட வேண்டாம்’

‘அவ்வளவுதான்’ சித்தி சித்தப்பாவுக்கு சொன்னாள். எனக்கு மனசுக்கு என்னமோ போல் இருந்தது. சாமி எனக்கு ஒத்தாசையா இருந்தான். அவனில்லாமல் அண்ணாமலைநகரில் நான்  தனியாக  இருக்கவேண்டும். நினைக்கவே  எனக்குச் சங்கடமாக இருந்தது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் அந்த தம்பி இப்போது சென்னையில் தங்கிவிட்டால் என்ன செய்வது.

மதிய உணவுக்கு சித்தி எல்லோருக்கும் இலை போட்டாள். புதியதாய் வீட்டிற்கு வந்தவர்களுக்கு இலை. இங்கயே இருப்பவர்களுக்கு தட்டு. சாமிநாதனுக்கு ஒரு தட்டைக்கண்டுபிடித்து சித்தி கொண்டு வந்து’ இந்தா இத வச்சிகோ. இனிமே இதுதான் ஒன் தட்டு’

‘என்  சாப்படற தட்டு அண்ணாமலைநகர்ல இருக்கு’

‘எனக்கும் அப்பாவுக்கும் கூட தட்டு அங்க இல்லையா என்ன’

‘ஆமாம் ஆமாம் அங்க போனா அதுல சாப்பிடலாம்’

நானும் அம்மாவும் அண்ணாமலை நகர் புறப்படத்தயார் ஆனோம்.

‘அவர் கஷ்டப்படுவார். நா போகணும்’ என்றாள் அம்மா. எனக்கும் லைப்ரரி போகவேண்டும் இன்னும் குறிப்புக்கள் எடுக்கவேண்டும் வேலை இருக்கிறது. ப்ரொபசரைப்பார்க்கவேண்டும்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தோம். நான் ஞாபகமாக  கடற்கரையில் வாங்கிய பழைய புத்தகத்தைப்பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டேன். ஊருக்குப்போய் படிக்கலாம். இல்லை ரயிலிலோ பஸ்ஸிலோ படிக்கலாம். ஆனால் குறிப்புக்கள் எடுக்கவேண்டும். ப்ரொபசருக்குக் காட்டவேண்டும். பேராசிரியைப்பார்க்கவேண்டும் போல் இருந்தது.

‘சமத்தா படி. நல்ல பசங்களோட பழகு. ஸ்கூல்ல நல்ல பையன்னு பேரு வாங்கணும்.’ அம்மா சாமிக்கு சொன்னாள்.

‘அப்படியே சித்தி’

‘பெரிய மனுஷனா வரணும்’

‘நா இருந்து எங்க இத எல்லாம் பாக்கறது’ பாட்டி சன்னமாய் சொல்லிக்கொண்டாள். சிலருக்குக்காதில் அரைகுறையாய் விழுந்துமிருக்கலாம் எனக்கு விழுந்தது. பாட்டிக்கு ஆசை இருக்கலாம் நியாயம்தான். என்ன கொடுத்துவைத்திருக்கிறதோ அதுதான் நானும் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

அன்றுமாலையே நானும் அம்மாவும் புறப்பட்டோம். நான் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் நமஸ்காரம் செய்துகொண்டு புறப்பட்டேன்.

பாட்டி சித்தியிடம் ஏதோ மெதுவாகச்சொன்னாள். எனக்குக்காதில்  ஒன்றுமே விழவும் இல்லை. சித்தி பீரோவைத்திறந்து ஒரு புடவை வேஷ்டி துண்டு  எடுத்துக்கொண்டார். அதனைத்தட்டில் வைத்து ஐநூரு ரூவாய் பணமும்  தனியாக வைத்தார்.  தட்டை எடுத்துக்கொண்டு வந்து சித்தி தனது தந்தையிடம் கொடுத்தார்.

‘டீ இத ஆசீர்வாதம் பண்ணு சும்மா தொட்டுக்கோ’ என்று பாட்டியிடம் காட்டினார். ’எங்க இருந்தாலும் க்‌ஷேமமா லட்சுமி கடாட்சத்தோட இருங்கோ தீர்க்காயுசா இருங்கோ’ என்றார்.

‘புடவை வாங்கிகோ பணத்த எடுத்துகோடி பொண்னு’

நாங்கள் இருவரும் எங்களதை எடுத்துக்கொண்டு’ பெரியவர்களுக்கு மீண்டும்  ஒரு முறை பாவனையாய் நமஸ்கரித்தோம்.

‘மொதல்லயே பண்ணிய்யாச்சே’

என்றாள் பாட்டி.

‘கோடி தரம் பண்ணணும் பெரியவாளுக்கு’ என்றாள் அம்மா.

‘நன்னா பேசறேடி. எனக்கும் உங்கிட்ட இருக்கணும்னு ஆசை. பகவான் கால ஒடிச்சி வச்சிருக்கான். ‘நல்ல எடத்துல கல்யாணம் ஆகணும். நல்ல புருஷன் உனக்கு  அமஞ்சி வரணும். அமோகமா இருடி’ என்றாள் பாட்டி.

‘ரெண்டு பேரும் குங்குமம் எடுத்துங்கோ’

‘ஆம்படையா வாய்க்கறதும்  ஆடை வாய்க்கறதும் அவா அவா அதுஷ்டம்’ பாட்டியோடு சேர்ந்துகொண்டாள் அம்மா.

‘நூத்துல ஒரு வார்த்தேடி நீ சொன்னது’ என்றாள் பாட்டி.

‘ஜாக்கிரதயா  இருங்கோ’ சித்தி எங்களுக்குச்சொன்னாள்.

சித்தப்பா ரூபாய் மூவாயிரத்தைக்கொண்டுவந்து ’வளையல் மூட்டத்துக்கு அண்ணாகிட்ட குடுத்துடுங்கோ’ என்றார்.

‘ இது எதுக்கு’

‘வளையல்நாந்தான வச்சேன்’

‘யார் செலவுக்கு’

‘என் அண்ணாவுக்கு. இருக்கட்டும் மன்னி  உங்க கிட்ட இருக்கட்டும். அண்ணா கிட்ட குடுங்கோ. நீங்க ஏன் கஷ்டப்படறேள்’

சித்தப்பா சொன்னார்.

சாமியை அழைத்து அம்மா கன்னத்தில் முத்தமிட்டு’ சமத்து நீ’ என்றார். எனக்குக்கண்கள் ஈரமாகிவிட்டன. சாமி என்னைப்பார்த்துவிட்டு ‘அக்கா’ என்று வந்து கட்டிக்கொண்டான். ‘ இங்க எனக்கு அக்கா இல்ல’

என்றான்.

‘கபாலி அண்ணா இருக்கார்’ நான்  சமாதானமாய்ச்சொன்னேன்.

சாமி சிரித்துக்கொண்டான். ‘சரியாத்தான் எப்பவும் சொல்ற அக்கா நீ’ என்றான். நான் சொன்னது கபாலி காதில் விழுந்துமிருக்கலாம்.

‘நாங்க வரம். தாத்தா பாட்டியிடம், சொல்லிக்கொண்டோம். கபாலியிடம்  ‘அம்மா’ பாத்துகோங்கோ எல்லாரையும். முடியும் போது அண்ணாமலைநகருக்கும் வரலாம் அதுவும் உங்க ஆம்தான்’

நான் ஒரு புன்னகைமட்டும் செய்தேன். களங்கமில்லாமல் கபாலியின் பார்வை. பார்க்கப்பார்க்க இன்னும் பார்க்கவேண்டும் போல் தோன்றியது.

ஆட்டோக்காரன் ராஜா ரெடியாக வந்தான். நான் அம்மா சித்தப்ப மூவரும் எழும்பூர் ரயில் நிலையத்துக்குப்புறப்பட்டோம். சித்தப்பா  சிதம்பரத்திற்கு டிக்கட் வாங்கி எங்களை ரயிலில் ஏற்றி உட்காரவைத்துவிட்டுச்சென்றார்.

‘எப்பிடியும் எட்டு மணிக்கு ஆத்துக்கு போயிடலாம்’ சித்தப்பா சொன்னார்.

‘பத்ரம்’

‘ நாங்க பாத்துகறம் நீங்க போயிட்டு வாங்கோ’

சித்தப்பா என் கைகளைப்பிடித்துக்கொண்டு’ சமத்துடி கொழந்தே  அம்மா அப்பாவ பாத்துகோ உன்னயும் பாத்துகோ. நீந்தான் உன்ன எப்பவும் பத்ரமா பாத்துகணும். நீ நன்னா இருந்தோ நாங்க எல்லாரும் சந்தோஷப்படுவோம். உனக்கு கஷ்டம் எதுவுமே வரப்பிடாது  அதுக்கு அந்த பகவான் அனுக்கிரகம் பண்ணணும்’

தன் கையில் பத்திரமாகக்கொண்டுவந்த சுருட்டிய ரூபாய் நோட்டுக்களை கத்தையாக என்னிடம் கொடுத்தார் சித்தப்பா.

‘இதெல்லாம் எதுக்கு’ என்றாள் அம்மா. பதறிப்போனாள் அம்மா.

‘என் பொண்ணு நா குடுக்கறேன்’ என்றார் சித்தப்பா.

‘ரொம்ப இருக்கும் போல’  அம்மா அடுத்தநொடியே  சஹஜமானாள்.

‘இன்னும் எவ்வளவோ செய்யணும்’  கொழந்தைக்கு.

சித்தப்பாவை என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.

‘ காமுக்கு தெரியுமா’

‘தெரியாது. தெரிஞ்சா சரியா வருமா. மனுஷா எப்பவும் மனுஷாதான். ஒரு நேரம் தெய்வம் மாதிரி தெரிவா, அடுத்த நிமிஷம் கழிசடையா நடந்துப்பா’

என்றார் சித்தப்பா. கையில் சித்தப்பா கொடுத்த பணத்தை  அப்படியே அம்மாவிடம் கொடுத்தேன்.

‘இத தனியா வச்சிகோ’ அம்மாவிடம் சொன்னேன். அம்மா சிரித்தாள்.

’எனக்கு சாமி இல்லாம கை ஒடிஞ்சமாதிரி இருக்கும் சித்தப்பா’

‘ஆமாம் இவ்வளவு நாள் உன்னோடயே இருந்தான்’

‘அவன் நல்ல கொழந்த பத்ரமா பாத்துகுங்கோ சித்தப்பா’

‘சரிம்மா, சரி மன்னி.  அண்ணாக்கு என் நமஸ்காரம் சொல்லுங்கோ.’ சித்தப்பா புறப்பட்டார். அவருக்கும் மனம் கனத்திருக்கவேண்டும்.

‘நீங்களும்  ஊருக்கு வரணும்’ அம்மா சொன்னாள்.

‘நீங்கதான் பாத்தேளே. இப்ப சாமி வேற  எங்களோட சேந்தாச்சி. பாக்கறேன் வறேன்’

எங்களுக்கு சித்தப்பா டாடா சொன்னார். அவரின் முதுகையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் திரும்பி எங்களைப்பார்த்தார். வண்டி அசைய ஆரம்பித்தது. திரும்பவும் நடக்க ஆரம்பித்தார் சித்தப்பா.

ஆட்டோக்காரன் ராஜா சித்தப்பாவைத்தேடிக்கொண்டு இருப்பான்.

நானும் அம்மாவும் இருக்கை கிடைத்து அதனில் அமர்ந்து கொண்டோம். ரயில் எழும்பூரை விட்டுப் புறப்பட்டது.

‘இங்க இருக்கவும் முடியல. இங்கிருந்து போகவும் முடியல’ அம்மா சொல்லிக்கொண்டாள்.

ரயில் ஆடி ஆடி தன் பயணத்தைத்தொடங்கியது.

‘ஏம்மா  சாமிய பத்தி அவன் அம்மாண்ட என்ன சொன்னே’

‘எல்லா சமாஜாரமும்தான். விளாங்கா அடிக்கப்போனது திருக்கொளத்துல நீச்சம் கத்துக போனது, நீ அவன சரஸ்வதி சபதம் சினிமாக்கு அழச்சிண்டு போனது. சித்தி பயந்து போயிட்டா. ஓ அழ ஆரம்பிச்சுட்டா, என் பையன் என் கிட்ட இருக்கணும்னு கத்தினா. நாம நல்லாதான் பாத்துண்டம். என்ன இருந்தாலும் தாய்  தகப்பன் கிட்ட  பெத்த புள்ள  இருக்கற மாதிரி ஆகுமா. நமக்கும் கண்டிக்க பயமா இருக்கு. செறு புள்ளயாச்சே. நல்ல பையன் நல்லா வருவான்.’

‘நம்ப திட்டம் போட்டுடுண்டு வந்து அவன இங்க வுட்டுட்டு போறம்னு அவன் நெனைச்சுக்காம இருக்கணுமே. அப்பிடி நெனச்சுக்காம இருந்தா போறும்’

‘அம்மாண்ட இருக்கணும்னுதான புள்ளகள் இஷ்டப்படும்’

‘நம்ம பொழப்பே தத்துகுத்தா இருக்கே. அந்த புள்ளைக்கு எதுவும் தப்பாயிடப்பிடாது. அது ரொம்ப முக்கியம் இல்லையா. நம்ப பயந்ததும் சரின்னுதான் நெனக்கிறேன். ஆனாலும் எதோ தப்பு பண்ணின மாதிரிக்கு மனசு கெடந்து அடிச்சிகறது’

‘’அப்பிடித்தான் இருக்கும் . போகப்போக சரியாயிடும்.  எந்த எழப்பயும் மனசு ஜீரணிச்சுண்டு எழுந்துனூடும்’

பெட்டியில் ஒரே கூட்டமாக இருந்தது. தாம்பரம் வந்துதான் மக்கள் கூட்டமாய் ஏறினார்கள். ஒவ்வொரு நபருக்கும் இரண்டு மூன்று பைகள் மூட்டைகள்: முடிச்சுகள் இருந்தன.  மொத்தத்தில் அவை அன்பின் அடையாளங்களாகத்தான் இருக்கும். எந்த ஜீவன்களுக்காவது திருப்தி உண்டாகவேண்டுமே அதற்குத்தான் இத்தனை அல்லல்கள் சங்கடங்கள்.

மேல்மருவத்தூர் வந்தது. நானும் அம்மாவும் காபி வாங்கி சாப்பிட்டோம். அவித்த வேர்க்கடலை பொட்டலங்கள் விற்றுக்கொண்டு போனாள் ஒரு பாட்டி. அந்தப்பாட்டியிடம் இரண்டு பொட்டலம் வாங்கினோம்.

‘இன்னும் ரெண்டுதான்  இருக்கு. இதயும் வச்சிகு,குடுத்தது குடு. நா ஓண்ணும் கேக்குல’ என்றாள் பாட்டி.

  அந்த பொட்டலங்களையும் அம்மா வாங்கிக்கொண்டு அதற்குச் சரியான காசு கொடுத்தாள்.

‘ஏன் ரச்சுமி நல்லா இருப்ப மவராசி’ என்று கன்னத்தைத்தொட்டு முத்தமிட்டாள் வேர்க்கடலை விற்கும் பாட்டி. கூடை காலியாகிவிட்டது.’ இனி நாளைக்கித்தா வருணும்’ என்றாள்.

‘இவா டிக்கட் வாங்குவாளா’ நான் அம்மாவிடம் கேட்டேன்.

கிழவி என்னைப்பார்த்துச் சிரித்தாள்.

‘ சாரு ரொம்ப மொறண்டு புடுச்சா நாலு பொட்னம் குடுப்பம் அதான் டிக்கட்’ நக்கலாகச்சிரித்தாள் கிழவி.

’நாங்க என்ன பயணம் போறம். ஒரே பயணம் ஒசக்க போறதுதான். அண்ண அண்ணிக்கி  கள்ள வித்தாதான் பொழப்பு ஓடும். இல்லன்னா பட்டினி கெடக்கறதுதான்’

கிழவி திண்டிவனத்தில் இறங்கிக்கொண்டாள்.

‘ நாங்க வரம்’ என்றாள்.

ரயில் வேகம் கூட்டிக்கொண்டு சென்றது. பனங்கிழங்கு அவித்தது கூடை நிறைய அடுக்கி வைத்துக்கொண்டு ஒரு சிறுவன் விற்றுக்கொண்டு போனான்.

‘இது எப்பிடி இருக்கும்’

‘கல்கண்டு சாப்டுபாரு அக்கா, கூடயும் கேப்ப’ என்றான் கூடைக்காரன். அம்மாவுக்கு அதனை வாங்குவதில் இஷ்டமில்லை. பழக்கமில்லாத ஒன்றைச்சாப்பிட்டு ஏதேனும் அவஸ்தையில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது அம்மாவுக்கு பயம்.

விழுப்புரம் ஜங்ஷன் வந்தது. வண்டியே காலியாகிவிடும் அளவுக்கு மக்கள் இறங்கினார்கள். விழுப்புரத்திற்கும் சென்னைக்கும் அன்றாடம் வந்து போகும் மக்களாக இருக்கலாம். வியாபாரிகள்தான் அனேகம்பேர் இருந்தனர். ரயில் சற்று அதிக நேரம் விழுப்புரத்தில் நின்று போனது. நான் விழுப்புரம் ரயில் நிலையத்தை இறங்கிப்பார்த்தேன். அம்மா அச்சத்தோடு என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பத்து பதினைந்து மீன் கூடைக்காரர்கள் எங்கள் பெட்டியில் வந்து ஏறி அமர்ந்துகொண்டார்கள். இருக்கை காலியாகக்கிடந்தது. யாரும் இருக்கையில் அமரவில்லை. கீழேயே அமர்ந்துகொண்டார்கள்.

‘ஏன் மேலே உட்காராமல் கீழே உட்காருகிறார்கள்’ நான் அம்மாவைக்கேட்டேன்.

‘ நாங்க மேல குந்துர பழக்கமில்ல. தாழதான் குந்துவம். சீட்டு வாங்கிகரம். அதெல்லாம் ரைட்டா. கடலூர் ஒடி போயி சரக்கு போடுவம் . கொண்டாருவம்.

அம்மாவுக்கு மீன் நாற்றம் தாங்கமுடியவில்லை. மூக்கைப்பிடிப்பதற்கும் அச்சமாக இருந்தது. வேறு இடம் தேடிபொய்விடலாம் என்று கூட யோஈசித்தாள்.

‘வீச்சமா இருக்கா’

அம்மா பதில் சொல்லவில்லை.

‘இப்ப எல்லாம் ஐயிரு சனம் கெனமா மீனு வாங்கி திங்குது. நீங்க பாப்பார சனமா அதான்.  நீங்க பழக்கமானா பண்டத்த வுடுவிங்களா. எங்களுக்கு மணக்குது. உங்களுக்கு சொணக்குது போல’

என்றாள் மீன் கூடைக்காரி. வேறு பக்கம் பார்த்து உட்கார்ந்து கொண்டாள். கொய்யாப்பழம் விற்கும் சிறுவன் பெட்டிக்குள் வந்தான். கொய்யாவின் வாசனை மூக்கைத்துளைத்தது.

‘பெண்ணையாத்து கொய்யா விழுப்புரம் கொய்யா’ விற்றுக்கொண்டே போனான். நானும் அம்மாவும் கொய்யாப்பழம் வாங்கினோம். தலா ஒன்றாய் தின்றோம்.

‘அப்பாக்கு ரெண்டு’ என்றாள் அம்மா.

பத்திரமாக பையுக்குள் எடுத்து வைத்துக்கொண்டாள். மீன் வாசனை இப்போது தெரியாமல் இருந்தது. நிம்மதியானாள்.

 ’அந்த கைலாயத்து ‘பரமசிவரு சம்சாரம் பாருவதி எங்க கொலம்.  பழனி  முருகரு சம்சாரம்   வள்ளி  தெரியுமில்ல அவ பொறா திங்குற   கொற சனம்’ மீன் கூடைக்காரி எங்களுக்கு ச்சேதி சொன்னாள்.

அம்மா ’ ஆமாம்’ என்றாள்.

திருப்பாதிரிப்புலியூர் வந்தது. வண்டி நின்றது. மீன் கூடைக்காரர்கள் கடலூர் முது நகரில் இறங்க ஆயத்தமாக நின்று கொண்டார்கள். உடனேயே கடலூர் முது நகர் வந்தது. வண்டியே காலியாகிவிட்டது.  எங்கள் பெட்டியில் நானும் அம்மாவுமே இருந்தோம்.  இருவரும் காலை நீட்டிப்படுத்துக்கொண்டோம். அம்மா சற்று உறங்கியும் போனாள்.

பறங்கிப்பேட்டை கிள்லை என ஸ்டேஷன்கள் வந்தன. வண்டி நிற்கவில்லை. மெதுவாகச்சென்றது. நான் அம்மாவை எழுப்பினேன்.

‘ஊர் வந்தாச்சா’

‘வரப்போறது’

அம்மா முகம் கழுவிகொண்டாள். நாங்கள் இறங்கத்தயார் ஆனோம். வண்டி சிதம்பரம் பிளாட்பாரத்தில்; பைய சென்று கொண்டிருந்தது.

நானும் அம்மாவும் இறங்கினோம். இன்னும் சிலரும் சிதம்பரத்தில் இறங்கினார்கள். மாணவர்கள் அதிகம் இறங்கினர்.

ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தோம்.’ எப்பிடி போறது’ அம்மா யோசித்தாள். ஆட்டோக்கரன் ஒருவன் அருகில் வந்து ‘ ஆட்டோங்களா’

என்றான்.

‘திருவக்குளம் கோவிலு’

‘போஸ்டாபீசு தானே’

‘ஆமாம்’                                                                                

‘உக்காருங்க’

‘எம்மாம் கேக்கற’

‘ஆயிரம் ருவா’

‘’உக்காருங்க அம்மா’

‘நீ சொல்லு’

‘இப்பதான் வந்தன் மொத சவாரி. இத வுட்டுட்டா அப்புறம் போயிகிட்டே இருக்கும். சனம் கெயிட்டிகிட்டே போவும். உக்காருங்க. பொதுவா குடுக்கறது குடுங்க. ந்நிங்க ஊருக்கு புதுசா. இல்லதானே. பெறவு என்ன. எம்மாம் குடுப்பிங்க’

‘அம்பது ரூவா’

‘அறுபதா குடுங்க’

நானும் அம்மாவும் ஏறி அமர்ந்துகொண்டோம். ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்றது. அண்ணாமலைநகர் வந்தது. பல்கலைக்கழகம் வந்தது. நிர்வாக அலுவலகம் சிபிஆர் நூலகம்  பூமா கோவில் அறிவியல் கல்லூரி இசைக்கல்லூரி

விருந்தினர் இல்லம் கல்வித்துறை அஞ்சலகம் வந்தது.

’‘மேலண்ட தெரு வேப்ப மரத்து வூடு’

’’குருக்கள் அய்யிரு வூடு’

‘நீங்க ஒறவா’                                                   

‘ஆமாம்’

‘அந்த அம்மா அந்த பய அந்த அய்யிரு’

‘’அவுங்க சென்னையில இருக்காங்க. எங்க வீட்டுக்காரருக்கு இளையவருதான் அவரு’

‘ ஒரு குடும்பமா. நா இப்பதான் உங்கள பாக்குறன்’

அம்மா அறுபது ரூபாய் கொடுத்தாள். ஆட்டோக்காரன் பத்து ரூபாயைத்திரும்பக்கொடுத்தான்.

‘வேணாம்மா. கோவிலுக்கு சோறு ஆக்குறது அம்மாதான. உங்க அய்யிரு படைக்கிறாரு. நாமளும் நேரா இருக்கோணும்ல’

நானும் அம்மாவும் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தோம். வீடு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

‘உள்ளதான் இருப்பார்’

’‘அப்பா அப்பா’ கதவைத்தட்டினேன். அப்பா பெஞ்சில் உறங்கிக்கொண்டிருக்கவேண்டும் மெதுவாக எழுந்து வந்து ‘யாரு’ என்று கதவைத்திறந்தார்.

‘வாங்கோ அம்மா பொண்ணு எல்லாரும் வாங்கோ’

‘அப்பா’ என்று  நான் அப்பாவைக்கட்டிக்கொண்டேன். அப்பா துரும்பாய் இளைத்து இருந்தார். அம்மாவுக்குக் கண்கள் ஈரமாயின.

‘’தினம் சாப்டறீங்களா இல்லையா’

‘சாப்டாம என்ன’

‘சாப்டறீங்க ஆனா’

‘நீங்க ரெண்டு பேரும்  இல்லன்னே அப்டித்தான்’ அப்பா சொல்லிக்கொண்டார்.

‘புள்ளயாண்டான வுட்டுட்டு வந்துட்டேள்’

‘ஆமாம் என்ன செய்றது’

‘எது சரியோ அது சரி’

எனக்கு சாமிநாதன் இல்லாத வீடு  வெறிச்சென்று இருந்தது. வீட்டிற்குள் செல்வதற்கே வெறுப்பாக உணர்ந்தேன்.

‘பொம்மனாட்டிக்கு இது எல்லாம்தான் வாழ்க்கை. பெத்த அம்மா அப்பா அண்ணா தம்பி தங்கை எல்லாரையும் வுட்டுட்டு யாரோ புதுசா வந்தவனோட  ஒருபைய எடுத்துண்டு மனம் கனக்க கனக்க ஆனா சிரிச்ச மொகத்தோட  போயிண்டே இருக்கணும். இண்ணக்கி நேத்திக்கி இல்ல ஒலகம் தோன்றின நாளா இதுதாண்டி நியதி’ அம்மா எனக்குச்சொன்னாள்.

அம்மா நொந்துபோய் சொல்வதாகவே உணர்ந்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் அனேகமாக இந்த அனுபவம் வாய்க்கவே செய்கிறது.

‘ஊர்ல என்ன சேதி’

‘பாட்டி படுத்துண்டு இருக்கா. நன்னா பேசறா’ நான் சொன்னேன்.

அம்மா தன்னிடம் சித்தப்பா கொடுத்த ரூபாய் மூவாயிரத்தை பொட்டலமாக எடுத்து,’உங்க அண்ணா உங்களண்ட குடுக்க சொன்னார்’

‘இது என்ன’

‘சித்தி வளையல் சித்தப்பா சேட்டுகிட்ட  அடகு வச்சத நீ மூட்டினயே அதுக்கு’

‘என் வைத்ய செலவுக்கு வச்சதுன்னா அது’

‘ஆமாம் அத சொன்னேன். ஒண்ணுக்கு நாலுதடவை சொன்னேன்’

‘நீங்க அண்ணாட்ட குடுங்கோன்னு என் வாய அடச்சிட்டார்’

அப்பா சிரித்தார்.’ மூவாயிரத்து ஐநூறுன்னா ஆச்சி வட்டியும் மொதலுமா’

‘அவருக்கு ஞாபகம் வரல வந்திருந்தா அதயும் சேத்து குடுத்து இருப்பார்’

‘அவன் ஆத்துக்காரி ஒண்ணும் சொல்லயா’

‘அவ இதுல நுழையவே இல்ல’

‘சரி விடு. செலவுக்கு ஆகும்’

‘இல்ல இந்த பணத்த தனியா வச்சி வையுங்க’ அம்மா சொன்னாள்.

‘சரி சாமி சமாஜாரம்’

‘அவனும் அங்க இருக்கேன் படிக்கறேன்னு சொன்னான். அவாளும் சரி ரொம்ப சரின்னுட்டா’

‘என்னண்ட புடவை வேஷ்டி குடுத்தா. வேதாவுக்கு ஐநூறு ரூவா வச்சி குடுத்தா’

‘ரயிலேத்தி விட்டுட்டு என்னண்ட கத்தயா ரூவா கொடுத்தார் சித்தப்பா’ நான் சொன்னேன்.

‘சித்தப்பா மிஞ்சின சொந்தம் ஏதுடி’ என்றார் அப்பா. கண்கள் ஈரமாகி இருந்தது அப்பாவுக்கு.

‘பாச மலர்’ என்றாள் அம்மா.

‘’ சரி விடுங்கோ   இங்க நடந்த அந்த பசங்க சமாஜாரம் சொன்னயா’

‘உங்க தம்பி ஆம்படையாளுண்ட எல்லாத்தையும் சொன்னேன். அந்த பெரிய மாமி கூட இருந்தா. வேற யாருக்கும்  இந்த சேதி தெரியாது’

‘நாம இப்பிடி சொன்னம்னு அந்த பையனுக்கு தெரியப்பிடாது’

‘அதுல ஜாக்கிரதயா இருந்தாச்சு’

‘சாமியும் அம்மா அப்பாட்ட இருக்கணும்னு ஆசன்னான். அவாளும் ஓகேன்னு சொன்னா’

‘ரொம்ப சரி  அங்க பள்ளிக்கூடம்’

‘ஏதோ ஒரு பள்ளிக்கூடத்துல சேர்த்துடலாம். டீசி கீசி வேணுன்னா நா வெவரம் சொல்றன். மற்றபடி இங்க ஒரு பிரைவேட் டியூஷன் வச்சிண்டு படிச்சதா ஒரு சர்டிபிகேட் வாங்கியும் குடுத்து சேக்கலாம். அத பத்தி கவல வேண்டாம் நீங்க வேலய பாருங்கோன்னு பெரியவர் சொன்னார். இங்க  பசங்களோட நடந்த சமாஜாரம் கேட்டுட்டு சாமி அம்மா ஓ ந்னு அழ ஆரம்பிச்சுட்டா. எனக்கே ஏண்டா வாய தொறந்தம் ஆயிட்து. ஆனா சமாளிச்சுனூட்டா. அவ  அம்மா நல்லா வெவரமா யோசன சொன்னா. அது செத்த தெம்பா இருந்துது’

‘இதுகள் பேசும்போது அந்த பையன்  எங்க இருந்தான் வேதா எங்க இருந்தா’

‘சித்தப்பா  என்னையும் சாமியையும் ஆட்டோல கடல் பாக்க அழச்சிண்டு போயிட்டார். அவருக்கும் சேதி தெரியாது’

‘மாமா பெரியவரும் கபாலியும் கோவில் சந்நிதிக்கு வேலன்னு போயாச்சி. ரொம்ப சவுகரியமா இருந்துது. விஷயத்த சொல்லிட்டம்’

‘’எனக்கு மனசு இல்ல. பையன் தங்கம்தான் என்ன செய்வ. எதானு அபாவம் வந்துட்டா ஐய்யோன்னா வருமா அப்பான்னா வருமா’

‘ அவாளால அங்க அவன நன்னா படிக்கவைக்க முடியும். அது ஒண்ணும் பெரிய காரியம் இல்ல. பெரிய டவுனுதானே . அது என்ன தருமங்குடி கிராமமா முழிக்கறதுக்கு’ அம்மா தைர்யமாகப்பேசினாள்.

‘நம்மள நைசா கொண்டு சென்னையில் விட்டுட்டு போயிட்டான்னு நெனப்பனோ’

’ அம்மா அப்பா தாத்தா பாட்டி அந்த கபாலி துணைக்கு இது போறாதா சொல்லுங்கோ. அவனுக்கு நல்லதுதான் பண்ணியிருக்கம்’

‘அந்த திடம் இருந்தா போறும்’ அப்பா சொல்லிகொண்டார்.

‘ரயில்ல வந்தம் உங்க தம்பி டிக்கட் வாங்கி குடுத்து எக்மோர்ல ரயி ஏத்திவிட்டுட்டு உங்க பொண்ணு கைய புடிச்சுண்டு அறிவுரை எல்லாம் சொன்னார். கண்ல ஜலம் வச்சிண்டார்’

‘அப்பா கண்ண பாரேன்’ நாம் அம்மாவிடம் சொன்னேன்.

‘ரத்த பந்தம் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்றது’

‘ஆக வேண்டியது பாருங்கோ. அவ்வளவுதான்’

‘’ஒரு பழைய புத்தகம் கடற்கரயில வாங்கினம். நல்ல புத்தகம் சித்தப்பாதான் வாங்கிக்குடுத்தார்’

‘ நீ உன் வேலய பாருடியம்மா. படி படி படி’ அப்பா எனக்குச்சொன்னார். நூலகத்திற்குச்செல்லும்போது கொண்டு போகும்  குறிப்பு நோட்டினைத்தேடினேன். ஜீவா என்றொரு மானுடன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன். அந்த ஜீவாவின் படம் முன்னட்டையில் அழகாகப்போட்டிருந்தார்கள். காமராஜருக்கு இருக்கும் மீசை.  அதே கருப்பு நிறம். ஆஜானு பாகு உடல். கை கால்கள் நீளம். வேஷ்டி சட்டை. முன் வழுக்கை. மூக்கு மாத்திரம் காமராஜருக்கு வித்தியாசமாக இருக்கும். எதிரே சித்தப்பா காமராஜரின் காலண்டர் ஒன்றை மாட்டித்தான் வைத்திருக்கிறார். அதற்குக்கீழே படிக்காத மேதை என்று எழுதியிருந்தது. ஜீவாவையும் காமராஜரையும் படங்களில் பார்த்துக்கொண்டேன்.

ஆசிரியர் பொன்னீலன் என்று போட்டிருந்தார்கள். பொன்னீலன் யாரோ எனக்கு எங்கே அவரைத்தெரிகிறது. பேராசிரியை அறிந்து வைத்திருப்பார்கள்.  தமிழகத்தின் தென் கோடியில் நாஞ்சில் நாடு. அங்கே பூதப்பாண்டி. அது ஜீவாவின் பிறந்த ஊர். சொரி முத்து மூக்காண்டி இவை அவருக்குப்பெயர்களாகி பின்னர் ஜீவாநந்தம் ஜீவா என்றானார். கதர் ஆடை அவருக்கு இளமையிலேயே பிடித்துவிட்டது. விடுதலைப்போராட்டங்களில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் வ வேசு ஐய்யரின் ஆஸ்ரமத்தில் பிராமணச்சிறுவர்களுக்குத்தனியாக உணவு பரிமாறப்பட்டதை ஜீவா எதிர்த்தார். ஐய்யரோடு முரண் பட்டு காரைக்குடியில் சிராவயலில் காந்தி ஆஸ்ரமத்தைத்ட்தொடங்கினார்.

1927 ல் மகாத்மா காந்தி இலங்கைக்குப்போகும்பொழுது காரைக்குடிக்கு விஜயம் செய்கிறார். காந்திஜியுடன் சுப்ரமண்ய சிவாவும் வந்திருந்தார். ஜீவாவிடம் காந்தி’ உங்களுக்கு சொத்து எவ்வளவு இருக்கிறது?’ என்று கேட்டார். ‘இந்தியாதான் என் சொத்து’ என்றார் ஜீவா. மிகவும் மகிழ்ச்சியடைந்த காந்தி’ இல்லை இல்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து’ என்று மனம் நெகிழ்ந்து கூறினார். இதை இரண்டு முறை படித்துப்பார்த்தேன். ஜீவாவை இந்திய நாட்டின் சொத்து என்று அண்ணல் காந்தியடிகள் தன் வாயாலேயே கூறியிருப்பதை எண்ணி எண்ணி மனம் மகிழ்ந்தேன்.

வர்ணாசிரமக்கொள்கைகளில் ஜீவா காந்தியோடு முரண்படுகிறார். இது பற்றி பேராசியரிடம் விலக்கம் பெற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

குற்றாலத்தில் செட்டிச்சாமியார் மடத்தில் ஒருநாள் கூட்டம் முடிந்து படுக்கச்சென்று இருக்கிறார்.’ அங்கு பொறுப்பில் இருந்தவர்கள்’ உன் ஜாதி என்ன?’ என்று கேட்டிருக்கிரார்கள். பதில் சொல்லாமல் அங்கேயே படுத்துறங்கினார்.  ஜீவாவிடம் காலை எழுந்ததும் மீண்டும் ‘உன் ஜாதி என்ன?’ என்று வினா வைத்திருக்கிறார்கள்.’ நான் மனிதச்சாதி’ என்று  ஜீவா பதில்சொல்ல ‘நீ வெளியே போ’ என்று வெளியேற்றி இருக்கிறார்கள். ஜீவாவின் விசாலமான பார்வைக்கும் உலகம் அவரைப்பார்த்த பார்வைக்கும் வித்தியாசம் மடுவும் மலையுமாக இருப்பதைக்கண்டேன்.

அப்படியே படித்துக்கொண்டே போனேன். புத்தகம் வெகு சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது. இப்படியம் ஒரு தலைவனா! என்று மனம் குதூகலித்தது. ஒரு முறை ஜீவா இப்படிச்சொல்கிறார்.

‘ஆனானப்பட்ட கெளதம புத்தன் ஜாதியை ஒழிக்கமுயன்றான். முட்யவில்லை.ஆழ்வார்களும் நாயன்மார்களும் முயன்றார்கள் முடியவில்லை.நான் ஜாத்யை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ. ரா கத்தியைக்கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக்கொண்டு அல்லது தடிகளைத்தூக்கிக்கொண்டு சமுதாயத்தில் ஆயிரம் ஆயிர்மாண்டுகளாக வேரோடிப்படர்ந்து கிடக்கும் ஜாதீயப் பிரதிபலிப்புக்களை இதோ ஒழித்துக்கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடையு குருட்டு ஆவேசத்தைக்கண்டு நாம் பரிதாபப்படத்தாமுடியும். மற்ரபடி இந்தச்சில்லறை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறிய துரும்பைக்கூட அசைத்துவிடமுடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்’

ஜாதியைப்பற்றி ஜீவா கொண்டுள்ள சிதனைகல் வெகு எதார்த்தமாய் இருப்பதை உனர்ந்துகொண்டேன்.ஒரு நான்கு வரிப்பாடல என்னைக்கட்டிப்போட்டது. நான் திகைத்துப்போனேன்.

’’ காலுக்குச்செருப்பும் இல்லை

கால் வயிற்றுக்கூழும் இல்லை

பாழுக்கு உழைத்தோமடா –என் தோழனே

பசையற்றுப்போனோமடா’

எண்ணி எண்ணி பார்த்தேன் எத்தனைச்சோகம். ஜீவா எல்லாவற்றையும் உணர்ந்து தன் கவிதையைப்படைக்கிறார் என்பதை அறிந்தேன்.

இன்னும் ஒன்று.

‘தமிழ்த்தாத்தா மகாமகோபாத்யாய சாமிநாதய்யரும், அறிவுக்கடல் மறைமலை அடிகளும்,செந்தமிழ்வல்ல ராகவையங்காரும், கவிமாரிப்பொழியும் கந்தசாமிகவிராயரும் ஏனைய பெரும் புலவர்களும் பாரதியின்காலத்தில் பேர் போக வாழத்தான் செய்தார்கள். ஆனால் அவர்களில் எந்தப்புலவர்களும் பாரதியின் காலத்தில் வாழத்தான் செய்தார்கள். ஆனால் அவர்களில் எந்தப்புலவர்களும் இந்த ஜனநாயக சமதர்மத் திசைவழியில் ஓர் அடிகூட எடுத்து வைத்தாரில்லை.’

புத்தகத்தை மூடி வைத்தேன். நூலகம் செல்லவில்லை. வீட்டில் தான் படிக்கிறேன். புத்தகம் என்னோடுதான் எப்போதும் இருக்கும்.. குறிப்புக்கள் போதுமென்று முடிவு செய்தேன்.

மனம் ஜீவா என்பவரைப்பற்றிச் சுழன்று சுழன்று சிந்தித்தது. இப்படியும் ஒரு மனிதரா. மூச்சுக்கு மூச்சு பாரதியின் பெருமை பேசிய இன்னொரு மனிதரை இத்தமிழ் நிலம் காணமுடியாது என்று சொல்லிக்கோண்டேன். ஜீவாவும் பாரதியும் மனம் நிறைந்துபோனார்கள். மனிதப்பிறவி எடுத்ததன் பலன் கிடைத்துவிட்டதாக மனம் துள்ளிக்குதித்தது.

இரவு வெகு நேரம் ஆகியிருக்கலாம்.  அம்மா எனக்கு மூன்று தோசை மிளகாய்ப்பொடி எடுத்து வைத்துவிட்டு உரங்கியேவிட்டார். அப்பாவும் உறங்கிக்கொண்டிருந்தார். நான் இரவு உனவு முடித்துப் படுக்கப்போனேன்.

நாளை பேராசியர் வீட்டுக்குச்சென்று வரலாம் என்று யோசனையோடு இருக்க உறக்கம் என்னை அணைத்தது.

 

என் அப்பா கோவிலில் காலசந்திக்குச் சென்றிருக்கிறார். அம்மா அடுப்படியில் ஏதோ காரியங்கள் செய்துகொண்டே இருந்தார். நான் குளித்துமுடித்தேன். ஸ்வாமி கும்பிட்டாயிற்று.  இதுவரை எடுக்கப்பட்ட குறிப்புக்களை எல்லாம் ஒரு கட்டாகக் கட்டினேன்.

‘அம்மா சாபிடலாமா’

‘கோவில் மணி கேட்டயா’

‘ கேட்டுது. உனக்கு கேக்கலியா’

‘ஸ்வாமிக்கு நிவேதனம் ஆகியிருக்கணும். ஏன்னா அந்த வெங்கலபானையிலேந்து உனக்கு சாதம் எடுக்கணும்’

அப்பா கோவில் பூஜை முடிந்து வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தார்.

‘டீ உன் ப்ரொபசர் கோவிலுக்கு வந்திருந்தார்’

‘என்னப்பா சொன்னார்’

‘பாப்பா என்ன சொல்லுதுன்னு கேட்டார்’

‘சென்னைக்கு போயிட்டு வந்துதுன்னு சொன்னேன்’

‘யாரோடன்னு’ கேட்டார்.

‘அம்மாவோடன்னு’ சொன்னேன்.

‘பாப்பாவ வரச்சொன்னேன்னு சொல்லுங்க’ என்றார்.

‘பாப்பாண்ட சொல்லிடுறேன்’ பதில் சொன்னேன்.

அப்பா என்னிடம்தான் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் திருப்தியாக இருதது. ‘அம்மா சாபிடலாமா’

‘உனக்கும் உன் அப்பாவுக்கும் சாப்பாடு போட்டுடறேன்’

அம்மா இரண்டு தட்டுக்களை எடுத்து வைத்தார். நானும் அப்பாவும் சாப்பிட்டு முடித்தோம். வெண்டைக்காய் சாம்பார். வெண்டைக்காயே பொறியல். ரசம் மோர். நாட்பட்ட ஊறுகாய் ஒன்று துணைக்கு.

‘இந்த ஊறுகாய மாத்திபிடு’

’நானே நெனச்சிண்டுதான் இருக்கேன்’

‘போறும் இத தூக்கி தூர வை. புதுசா  ஊறுகாய் போடு’

‘குப்பையில போடு’ அழுத்திச்சொன்னேன் நான்.

‘ அப்பிடி வெடுக்குனு பேசக்கூடாது. தெரியர்தா. தூக்கி தூர வையின்னாலும் அது தான்’ அப்பா எனக்கு எப்படிப்பேசவேண்டும் என்பதைச்சொல்லிக்காட்டினார்.

‘ இனி சரிபண்ணிகறேன்’

‘உனக்கு நா சொல்லப்பிடாது’

‘ஏன் நீங்க்தான் சொல்லணும்’

‘என்ன என்னமோ படிக்கற நீ’

‘அது வேறப்பா’

‘நா இண்ணைக்கு ப்ரொபசர பாக்க போறன்’

‘அவா தான் உன்ன வரச்சொன்னாளே’

‘நானே போகணும்னு இருக்கேன்’

‘சமத்தா பேட்டுவா’

நான் புத்தகங்கள் என்னிடம் உள்ளவைகளை இதுகாறும் எடுத்த குறிப்புக்களை கையில் எடுத்துக்கொண்டேன்.

‘ஒரு பையில் போட்டு எடுத்துனுபோ’

‘சரிம்மா’

நான் வீட்டைவிட்டுக்கிளம்பினேன். வேர்க்கடலை வறுத்து விற்பவன் டண் டண் என்று ஒலி அழைப்பு  கொடுத்தான்.

‘மேடம் வேர்க்கடலை’

‘வேண்டாம்பா’

சொல்லிய நான் அஞ்சலகம் தாண்டினேன். பேராசிரியை வீடு வந்தாயிற்று. இரும்பு கேட்டைத்திறந்துகொண்டு வீட்டின் உள்ளாகச்சென்றேன். பேராசிரியர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

‘வாம்மா’

‘வணக்கம் மேடம்’

‘வா வா உக்கார்’

‘என்ன பண்ணின நூலகத்துக்கு போனயா. என்ன சேதி’

‘நூலகம் போனேன்’

‘என்ன பண்ணினே’

‘ புத்தகங்கள் எடுத்து மூணு  பெரிய மனுஷங்கள பத்தி  படிச்சேன். ஒண்ணு காந்தி அவரோட ’சத்ய சோதனை’ இன்னொண்ணு ’பாபா சாகேப் அம்பேத்கார்’. இது ரெண்டும் நம்ம லைப்ரரில எடுத்து படிச்சேன். இன்னொண்ணு ‘ ஜீவா என்றொரு மானுடன்’ பொன்னீலன் எழுதினது. குறிப்பெல்லாம் எடுத்து வச்சிருக்கேன் நீங்க பாக்கணும்’

‘சரி வையி நா பாக்கறேன்.’

‘சென்னை போனயாம்’

‘ஆமாம் சென்னையிலதான் அந்த ஜீவா பத்தின புத்தகம் பழைய புத்தகக்கடையில வாங்கினேன்’

‘வேற என்ன சேதி’

‘நா  நெறய படிக்கணும்னு இருக்கேன். சென்னையில ஒரு தாத்தா சொந்த தாத்தா இல்ல.  சித்தியோட அப்பாதான் . என்னை  அவர் கண்டிச்சி கேட்டார். ’ இப்பக்கி எது உனக்கு கல்யாணமா படிப்பான்னு’. நா படிக்கத்தான் போறேன்னு சொல்லிட்டேன்’

‘ரொம்ப நல்ல சேதி’ என்றார் பேராசிரியர்.‘

எனக்கு ஆகாயத்தில் பறப்பதுபோன்று  இருந்தது.

‘நீ என்னப்பத்தி தெரிஞ்சிகணும்’

‘நான் எப்படிக்கேட்பது என்று இருந்துவிட்டேன்’

‘அது சரி. என் பெற்றோரை நீ பார்த்திருப்பாய். அவர்களுக்கு நான் ஒரே பெண். நான் கல்லூரியில் பேராசிரியை. என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். அவரைக்கணவர் என்பதும் சரியா எனக்குச்சொல்லத்தெரியவில்லை. அவர்தான் முதலில் வெளிநாடு சென்றார். என்னைப்பணியை விட்டுவிடவேண்டும் என்றார். வெளிநாட்டுக்கு வரச்சொன்னார். நான் அது இயலாது என்றேன். அத்தோடு சரி. நான் நானாக மட்டுமே இங்கு இருக்கிறேன். அவர் எப்படியெல்லாமோ அங்கு இருக்கிறார். வருடங்கள் ஓடின. காலம் யாருக்கும் காத்திருப்பதில்ல. எனக்கு என் ஆசிரியப்பணி.  பாசுபதேசுரர்  கோவிலுக்குச்சென்று வருவேன். புதிதாக ஒரு விஷயம் உனக்கு.  நான் ஒரு விடுதி நடத்திவருகிறேன். அது கொத்தங்குடியில் உள்ளது. அங்கு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு இருபத்தைந்து பேர்.. அனைவரும் சிதம்பரம் பள்ளியில் படிப்பவர்கள். வசதியில்லாதவர்கள். ஒரு  லேடி அட்டெண்டர் இருக்கிறார்.  அவராலும்  எல்லாவேலைகளையும் இழுத்துப்போட்டு செய்யமுடியவில்லை. கஷ்டப்படுகிறார். ஆயினும் விடுதியை நன்கு பார்த்துக்கொள்கிறார்.கொத்தங்குடியில் எங்கள் தந்தைக்கு ஒரு ரைஸ் மில் இருந்தது. அப்பாவுக்கு வயது ஆகிவிட்டது. அனேகமாக வெளியில் செல்வது குறைந்துபோயிற்று. அந்த மில் கட்டிடத்தில்தான் நான் விடுதி நடத்துகிறேன். வாடகையில்லை. உன்னை அழைத்துப் போய் அந்த விடுதியைக்காட்டி வரவேண்டும். காரை வரச்சொல்லியிருக்கிறேன். நீயும் வா’

‘கண்டிப்பாக வருகிறேன்.’

சற்று நேரத்திற்கெல்லாம் கார் வந்து வாயிலில் நின்றது. நாங்கள் இருவரும் புறப்பட்டோம். கொத்தங்குடி நோக்கிய பயணம். இந்தப்பேராசிரியை வாழ்க்கையைப்பற்றி என்ன கனவு திட்டம் வைத்திருந்தாரோ. வாழ்க்கையில் எதுவும் நாம் விரும்பியபடியா அமைகிறது. நல்லவர் கெட்டவர் என்று வாழ்க்கை மனிதர்களைப் பார்ப்பதில்லை. காலம் அதன் போக்கில் ஒரு நதியெனப் போகிறது. இப்படியாக என் யோசனை சென்றுகொண்டிருந்தது.

கார் கொத்தங்குடி விடுதி வாயிலில் நின்றது.’ வள்ள்லார் விடுதி’ என்ற பெயர்ப்பலகையைப்பார்த்துக்கொண்டேன். வள்ளலாரின் படம் பலகையில் வரையப்பட்டிருந்தது.

‘அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கெல்லாம் நான்  அன்பு செயல் வேண்டும்’  என்கிற வள்ளலாரின் வரிகளை நான் படித்துக்கொண்டேன்.

விடுதி வாயிலில் ஒரு விநாயகர் சிலை இருந்தது. தினம் அதற்குப்பூசைகள் நடைபெறுகிறது என்பதை அறியமுடிந்தது.

‘நமது விடுதிப் பெண்களே  பிள்ளையாருக்கு பூசை செய்து விடுவார்கள்’

பேராசிரியர் என்னிடம் சொன்னார். விடுதியின்  லேடி அட்டெண்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் பேராசிரியர். அவருக்கும் என் வணக்கம் சொன்னேன். அவருக்குச்சொந்த ஊர் சிதம்பரம் என்றார். நடுத்தர வயதிருக்கும். பளிச்சென்று அழகாக இருந்தார்.

’ வேதா நீ இங்க்லீஷ் கத்துகணும். அதுதான் ஒலகம்னு ஆயிடிச்சி.’

‘எழுத்து தெரியும். வாரத்தைகள் தெரியும். ஆனா பயிற்சி பண்ணல’

‘இந்த விடுதியில இங்கிலீஷ் நல்லா தெரிஞ்சவங்க இருக்காங்க. பசங்கதான் அவங்ககிட்ட தெரியாத விஷயத்தை தெரிஞ்சிக்கோ.  இங்க்லீஷ் பேப்பரு வாங்கிப் படி. முயற்சிபண்ணு. முடியலன்னு ஒண்ணும் இல்ல. முயற்சி  தொடரணும்.  நீ தினம் இங்க வரணும்.  இங்க என்ன என்ன செலவு ஆகுதுன்னு கணக்கு பாக்கணும். எது தெரியலன்னாலும் என்ன கேளு. நா சொல்றேன்.’

‘நான் தலையை ஆட்டியபடி இருந்தேன்’

‘என்ன பதிலே காணும்’

‘பிரமிப்பா இருக்கு’

‘இப்பக்கி ஒரு சைக்கிள் வாங்கிகோ. இல்ல  நான் வாங்கித்தறேன்.  மொதல்ல சைக்கிள் கத்துகோ. இந்த விடுதியில சைக்கிள் தெரிஞ்சவங்க இருப்பாங்க. அவங்க கிட்ட ஒரு பத்து நாள் நீ சிரமம் பார்க்காம கத்துக.  தேவைன்னா அப்புறம் டூ வீலர் பழகலாம். எல்லாம் தெரிஞ்சிஇருக்கணும். பொம்பளங்க ஏரோப்ளேன் ஓட்டறகாலம் இது’

மேசை மீதிருந்த நோட்டை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தேன். உள்ளோர் பதிவேடு. வரவு குறிப்பேடு. செலவு குறிப்பேடு. வவுச்சர்கள் பில்கள் கோப்பு. வங்கி சேமிப்புக்கணக்கு. மின்சார  பயனீட்டாளர் அட்டை சில்லறைச்செலவுகள் குறிப்பு  இவை இவை இருந்தன.

‘ஒண்ணும் பயப்படாதே. கவனமா இருக்கணும். அது முக்கியம். ஒவ்வொண்ணையும் ஆழ்ந்து பாரு’

என்று சொல்லிய பேராசிரியர் விடுதியில் இருந்த  அட்டெண்டரோடு தனியாகப்போய் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு சிரித்துக்கொண்டே திரும்பி வந்தார்.

 ’வேதா நீ நாளைக்கு காலையில எட்டு மணிக்கு இங்க வர. வந்ததும் வாசல்ல பாத்துருப்ப புள்ளையார் சாமி  இருக்காரு. அவருக்கு ஒரு விளக்கு ஏத்தற. பிறகு அபிஷேகம் ஒரு பூ இல்ல பத்ரம் ஒரு நிவேதனம்.   ரைஸ் மில்லு ஓடிகிட்டு இருந்தப்ப எங்க அப்பா வச்ச புள்ளயார் இது. அதுக்கு தினம் ஒரு விளக்கு ஏத்தி கும்பிடணும் அப்புறம்தான் எல்லாம்.. விடுதியில யார் யார் இருக்கா. எப்பிடி இருக்காங்கன்னு பார். அட்டெண்டர் ஒன்னோட இருந்து உதவி செய்வாங்க. நோட்ட எல்லாம் பார் படி. எதாவது சந்தேகம் இருந்தா என்கிட்ட கேளு.’

‘இது எனக்கு புது விஷயமா இருக்கு’

‘எல்லாம் அனுபவமானா சரியாகிடும். மொதல்ல பயமா இருக்கும்’

‘அம்மா அப்பா என்ன சொல்வாங்களோன்னு யோஜனையா இருக்கு’

‘ நீ சொல்லு. அவுங்க என்ன சொல்றாங்கன்னு பாரு. ஒனக்கு படிக்கணும்னு ஆசையிருக்கு. நீ படி. இங்க ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல வேல என்னா இருக்கு.  நீ படிக்கலாம்  எழுதணும்னு தோணிச்சின்னா எழுதி எழுதிப் பாக்கலாம். இங்க இருக்கறவங்க எல்லாரும் ரொம்ப கஷ்டப்படறவங்க. இங்க ஜாதி மதம் எதுவும் கிடையாது. மனுஷங்கள மனுஷங்களா பாக்கணும். வள்ளலார் விடுதின்னு  இதுக்கு பேரு படிச்சிருப்ப. வள்ளலாரையும் நீ முழுசா படிக்கணும்.   அருட்பெருஞ்சோதிய தனிப்பெரும்கருணைய வணங்குறது மட்டும் அவரு செய்யல.. வள்ளலார் பசிச்ச மக்களுக்கு சோறு போட்டவர். அன்ன சத்திரம் நடத்துனவர். வடலூர்ல திருக்குறள் வகுப்பு நடத்தி எப்பிடி நாம வாழணும்னு சொல்லிக்குடுத்தவரு.’

எனக்குத் தலையில் புதியதாக  சுமை  ஒன்று ஏற்றிவைத்ததாக உணர்ந்தேன். இப்படிஎல்லாம் வாழ்க்கையை நான் சிந்தித்துப்பார்த்ததே இல்லையே.

‘ என்ன யோசன வேதா. படிக்கறது எதுக்குன்னா செயல் படறதுக்கு. வெறும் படிப்பு  எதுக்கு. ஒரு பசிச்ச வயிறுக்கு  ஒரு கவளம் சோறு குடுக்க நம்மால முடியலன்னா நாம படிச்சி  என்ன தெரிஞ்சிகிட்டம் சொல்லு. படிக்கறது தெரிஞ்சிக்க. தெரிஞ்சிக்கறது செயல் படறதுக்கு. செயல்பாடு ஒண்ணும்  இல்லன்னா அதுக்கு படிக்காமலே இருந்துடலாம்.’

எனக்கு பொட்டில் அறைந்தமாதிரி இருந்தது. இங்க இருக்கற பெண் குழந்தைகள் பேராசிரியரின் ஆதரவில் வாழ்கிறார்கள். பேராசிரியர் இப்படிச் செய்கின்ற நல்ல காரியத்திற்கு நாம் துணையாக இருக்கப்போகிறோம். எனக்கு இப்போதுதான் உலகம் என்ன என்பது  கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது.

பேராசிரியரோடு நான் காரில் புறப்பட்டேன். பேராசிரியர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

அண்ணாமலைநகர் அஞ்சலகம் முன்பாக வண்டியை நிறுத்தி என்னை இறக்கி விட்டு விட்டு பேராசிரியர் தன் வீட்டுக்குச்சென்றார். நான் என் வீடு நோக்கி நடக்கிறேன். அப்பாவும் சுப்புணியும் எனக்கு முன்னே நடந்து போகிறார்கள். சுப்பிணி அரிசி மூட்டையைச் சுமந்து கொண்டு சென்றான். அப்பாவுக்கு தருமகர்த்தா சம்பளம் கொடுத்து அனுப்பியிருப்பார் அதுதான் நான் சொல்லிகொண்டேன்.

வீட்டுக்குள் நுழைந்தேன்.

சுப்புணி அரிசி மூட்டையை இறக்கி வைத்தார். அப்பாடா என்றார். அப்பா அவரிடம் ‘ தண்ணி குடிக்கறதுக்கு வேணுமா?’ என்றார்.

‘குடுங்க’ என்று சொல்லி ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக்குடித்தார்.

‘ என்ன சேதி பாப்பா’

‘நான் அந்த ப்ரொபசர் அம்மாவோட போயிட்டு வரேன்’

‘புதுசா எதாவது சேதியா’

‘சேதி இருக்கு’

‘அது என்ன சேதி’ என்றார் அப்பா. அம்மாவும் சமையல் உள்ளிலிருந்து என்னிடம் வந்து நின்று கொண்டார்.

‘என்ன இண்ணைக்கி மேடம் அவங்க நடத்துற விடுதிக்கு அழச்சிகிட்டு போயி காட்டுனாங்க. கொத்தங்குடில ஒரு ரைஸ்மில்லில் இருந்த இடம் இப்ப வள்ளலார் விடுதின்னு மாறியிருக்கு. அங்க இருபத்தைந்து பெண் பிள்ளைகள் தங்கிப்படிக்கிறார்கள். நா நாளைக்கி காலையில எட்டு மணிக்கு அங்க இருக்கணும். வரவு செலவு கணக்கு எழுதறதுன்னு சில வேலைகள்னு எனக்கு குடுத்து இருக்காங்க. அத செய்யுணும்’

‘உனக்கு தெரியுமா அதெல்லாம்’ என்றார் சுப்புணி.

அப்பா என்னையே முறைத்துப்பார்த்தார். அம்மா சந்தோஷமாகத்தான் இருந்தார்.

‘பொண்கள் இருக்கற இடம்தானே போயிட்டுவா’

‘போயிட்டு வரப்போறேன்’

‘படிக்கறது என்ன ஆச்சு’

‘அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது’

‘ இந்த காலத்தில மந்திரியா இருக்காங்க கலெக்டரா இருக்காங்க என்ன வேல செய்யுல. ஆனா படிச்சி இருக்கணும். நீனு படிக்கலயேன்னு ரோசனை எனக்கு’

‘எனக்கு சொல்லிதரேன்னு சொல்லிட்டாங்க. நா கத்துகணும். நல்லதுதானே. நாலும் தெரிஞ்சிக்கலாம். நாலு பேருக்கு ஒதவுலாம்’

‘நல்லா பேசுற. ஆனா பதனமா போவுணும் வருணும்’

‘அது நம்ப கிட்ட இருக்கு. புட்டில வச்சி பூட்டுனாலும் நாம கோணால சிதிச்சா நம்மள யார் காப்பாத்தமுடியும்’

‘ரைட்டு’

‘சம்பளம்னு எதானு தருவாங்களா’ இது அப்பா.

‘நிச்சயம் தருவாங்க’ இது அம்மா.

‘என் கிட்ட ஒண்ணும் அது பத்தி பேசல. எனக்கு என்ன வேல தெரியும் நா கத்துக வேண்டாமா. அதுக்கு நாந்தான் அவுங்களுக்கு எதாவது தரணும்’

‘குடு’ என்றார் சுப்புணி.

‘என்னத்த குடுக்கறது’ அப்பா சிரித்தார்.

‘என்னமோ நடக்கறது’ அம்மா சொல்லிக்கொண்டார்.

’ அய்யா நா வரேன்’  சுப்புணி நடையைக்கட்டினார்.

‘அப்பா ப்ரொபசர் இங்க்லீஷ் கத்துகனும் .கொஞ்சம் கொஞ்சமா  இங்கிலீஷ் படிச்சிகணும்னு சொல்லிட்டாங்க’

‘அது வேறயா. எது கத்துண்டாலும் தப்பு இல்ல. களவும் கத்து மறன்னு வசனம் தெரியுமோ’ அப்பா சொல்லி புன்னகை செய்தார்.

அம்மா வாயெல்லாம் பல்லாக இருந்தது.

‘உனக்கு எப்பிடியெல்லாமோ வாழ்க்கை போயிண்டுருக்கு’ என்றாள் அம்மா.

‘இன்னொண்ணு. என்ன சைக்கிள் கத்துகணும்னு சொல்லிட்டாங்க. சைக்கிள் வாங்கி தறேன்னு சொன்னாங்க’

‘அப்ப சைக்கிள்ள போகலாம் வரலாம். நான் தான் கத்துகாம போயிட்டேன்’

‘ஏன்’

‘பயந்தான். கீழே விழுந்துடுவோம்னு’

‘ஊர்ல ஒலகத்துல விடலயா’

‘இப்பதான் அந்த கஷ்டம் தெரியர்து. அப்ப புரியல’

‘நீ கத்துகோ நல்லா சைக்கிள் விடு’

‘யார் ஒனக்கு சைக்கிள் சொல்லித்தருவா. நேக்கு தெரியாது’

‘இல்லப்பா. விடுதியில இருக்கறவாளுக்கு தெரியும். அவா சொல்லித்தருவா’

‘மகளே சமத்து’ என்றார் அப்பா.’

‘அது என்ன மகளே சமத்துன்னா’

‘ஒரு பொண்ணு தன் அப்பாகிட்ட வந்து நா ஆம்பள புள்ள பெத்துகபோறேன்னு சொன்னாளாம். அதுக்கு அவ அப்பா சொன்னாராம் ‘ மகளே சமத்து நீ எதுவேணா பெத்துகோ அது  ஒன் இஷ்டம்னு இதுல எனக்கு என்ன பங்கு இருக்கு ஒண்ணுமில்லயேன்னு அப்படி சொன்னாராம். ’

‘நல்லாதான் பேசறே’

நான் சாமிநாதனின் புத்தகங்கள் நோட்டு எல்லாம் எடுத்துக்கலைத்துப்பார்த்தேன் ஆங்கில புத்தகங்களையும் நோட்டுக்கள் சிலதும் எடுத்துக்கொண்டேன். புரட்டிப் புரட்டி பார்த்தேன். எல்லாம் புதிதாக இருந்தது. சாமிநாதன் ஒரு டிக்‌ஷனரி வைத்திருந்தான். ஆங்கில இலக்கணம் புத்தகம் வைத்திருந்தான்.

‘இப்போது சாமி இங்கு இருந்தால் எவ்வளவு ஒத்தாசையா இருக்கும்’ எண்ணிப்பார்த்தேன்.

ஆங்கில எழுத்துக்களை எழுதிப்பழகினேன். நான்கு ஐந்து வகுப்புகளில் ஆங்கிலம் பயின்றுமிருக்கிறேன். அவைகளை நினைவு படுத்திக்கொண்டேன். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்கள் என்பது மிகவும் சவுகரியமாக இருக்கிறது. அது அதற்கும் ஸ்பெல்லிங் என்பதுதான் ஆங்கிலத்தில் ஒரு புது விஷயம். தமிழில் ஸ்பெல்லிங் என்பது கிடையாது. உச்சரிப்பு எப்படியோ அப்படி எழுதிவிடலாம். ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உச்சரிப்புக்கும் பொருத்தம் சரியாக இருக்காது. Know  இதனில் k, w. இவைகளுக்கு என்ன வேலை இப்படி ஆயிரம் இருக்கும். எதச்சொல்ல எதை விட.

மறுநாள் காலை. அதிகாலையில் குளித்துவிட்டுத்தயார் ஆனேன். அம்மா எனக்கு முன்பே எழுந்து எனக்கு டிபன் தயார் செய்தாள். நான்கு இட்டலிகள் சாப்பிட்டு நான்கு இட்டலிகள் டப்பாவில் அடைத்து எடுத்துக்கொண்டேன். தோட்டத்தில் எட்டிப்பார்த்து இரண்டு செம்பருத்தி பூக்கள் எடுத்துக்கொண்டேன்.

‘இது எதுக்கு’

‘அங்க ஒரு புள்ளயார் இருக்கார்’

‘அதுக்கு’

‘ஒரு சொம்பு ஜலம் அபிஷேகம். ஒரு பூ ஒரு பழம் எல்லாம்’

‘நீ பண்ணுவியா’

‘ஆமாம்’

‘குருக்கள் கிருக்கள் யாரும் இல்லயா’

‘இல்ல. அங்க பொம்மநாட்டிகள்தான் செய்யறா’

‘இது என்ன அதிசயம்’

‘ஒரு அதிசயமும் இல்ல’

‘நம்ப அம்மா சமக்கறத்தான் நீ  தெனம் எடுத்துண்டு போயி கோவில்ல சாமிக்கு நிவேத்யம் வைக்கற’

’இப்படி எல்லாம் பேசுவயா’

‘பிராமண புள்ள  மடப்பள்ளியில உண்டு. பிராமண பொண்ணு கிடையாதுதானே’

‘போறும்  கோணலா பேசாதே’

நான் டிபன் டப்பாவை எடுத்துக்கொண்டு செம்பருத்திப்பூவோடு அலுவலகம் கிளம்பினேன்.

‘நடந்து போவியா’

‘ஏன் செதம்பரத்திலேந்து அண்ணாமலைநகர் அக்ரி காலேஜுக்கு நடந்து வராளே பாக்கல’

‘ஆமாம் நானே பாத்து இருக்கேன். பாக்கறேன்’

நான் நடக்க ஆரம்பித்தேன். கொத்தங்குடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வழியில் மாணவர்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். சாஸ்திரி ஹாலில் மணி பார்த்தேன். இன்னும் எட்டு மணி ஆகவில்லை. எட்டுமணிக்கு விடுதியில் இருக்கவேண்டும். வேக வேகமாய் நடந்தேன். எனக்குக் காலில் செறுப்பு கிடையாது. அப்பா அம்மா யாருக்கும்தான். செறுப்பு வாங்கிப்போட காசு ஏது.. இப்படியேதான் சென்னைக்கும் போய் வந்தேன். செருப்பெல்லாம் ஆடம்பரம். அப்படித்தான்.

சாலையின் இருபக்கமும் பக்கத்திற்கு ஒன்றாய் இருக்கும்  இரண்டு குளங்கள். குளக்கரை முழுவதுமாய் தென்னை மரங்கள். பார்த்துக்கொண்டே நடந்தேன். துணைவேந்தர் வீடு தாண்டினேன். வீட்டு வாசலில் கார்கள் ஒன்றையும் காணோம். வழக்கமாய் நான்கு கார்களாவது நிறுத்தப்பட்டிருக்கும். கூர்க்கா மட்டும் இப்படியும் அப்படியும் நடை பழகிக்கொண்டிருந்தார்.

ராஜேந்திரன் சிலையைத்தாண்டினேன். தமிழ் மொழிக்காக தன்னுயிர் ஈந்த பெரிய மனதுக்காரர். அந்த சிலையைப்பார்த்துக்கொண்டே நடந்து வள்ளலார் விடுதியை அடைந்தேன். வாயிலில் அட்டெண்டர் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.  பிள்ளையார் சிலை அருகே பித்தளைக்குடம் ஒன்ரு இருந்தது. கைபம்பில் தண்ணீர் அடித்து எடுத்து வந்தேன்.

‘வா பாப்பா’

‘வணக்கம்’

பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தேன். துண்டு மாற்றினேன். சந்தனம் குழைத்து ஒரு பொட்டிட்டேன். நான் எடுத்துப்போன செம்பருத்தி பூக்களை வைத்தேன். ஆயா ஒரு வாழைப்பழம் தந்தாள். அதனை நிவேதனம் செய்தேன். பாலும் தெளிதேனும் பாட்டு சொல்லி முடித்தேன்.  அட்டெண்டர்  ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை என்கிற வரிகளைச்சொன்னார். என்னையே ஒருமுறை சுற்றிக்கொண்டேன்.

‘போலாம்’

இருவரும் விடுதிக்குள் நுழைந்தோம். ஊள்ளோர் பதிவேடு எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பெயராய் அழைத்தேன்.எல்லோரும் உள்ளேன் அம்மா என்றனர். இருபத்தைந்து பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவரவர்களும் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கிறார்கள். உணவும் இருப்பிடமும் விடுதி கொடுக்கின்றது. ஆயாதான் சமையல் வேலை பார்க்கிறார். குழந்தைகள் இருவர் அட்டெண்டருக்குத்  தினம் தினம் உதவுகின்றனர். விடுதியைச்சுற்றி வந்தேன். சுத்தமாக இருந்தது.

காலை உணவு முடித்து பிள்ளைகள் பள்ளிக்குக்கிளம்பத்தயார் ஆனார்கள். எல்லா பிள்ளைகளும் எனக்கு வணக்கம் சொன்னார்கள்.

‘நான் வார்டன் ஆக வந்திருப்பதாய்’ அவர்களே பேசிக்கொண்டார்கள். வார்டன் என்பதற்கு தமிழில் என்ன என்பதுகூட எனக்குத்தெரியாமல் இருந்தது.

நானும் அட்டெண்டரும் மட்டுமே பாக்கியிருந்தோம். எல்லோரும் ஒருவர் ஒருவராய்க்கிளம்பினார்கள்.

அட்டெண்டரிம் ’தங்கள் பெயர் என்ன’ கேட்டேன்.

’பர்வதவர்தனி.  வர்தனி என்று அழைப்பார்கள்’

‘உங்க பேரு’

‘வேதா’

‘ரொம்ப சுருக்கமா இருக்கு’

‘நான் அண்ணாமலைநகர் ஈஸ்வரன் கோவில் பூஜ பண்ர குருக்கள் பொண்ணு’

‘அவுருக்கு ஒரு ஆம்பளபையந்தான் பாத்து இருக்கன்’

‘ நீங்க கரெக்டா சொல்றீங்க. அது எங்க சித்தப்பாவோட பையன். எங்கப்பாக்கு தம்பி பையன். அவுங்க குடும்பம் இப்பக்கி சென்னையில் இருக்கு’

‘நா எப்பவாவது அந்த கோவிலுக்கு போவன். அப்ப பாத்து இருக்கேன்’

‘நீங்க’

‘நானு இதே ஊர். எம்புருஷனுக்கு நல்ல வேல இல்ல. அப்பிடியே தேடி வச்சாலும் அத சரியா பாக்கமாட்டேன்றார். எனக்கு ஒரு பொண்ணு. அதுவும் இப்ப என்னோட இருக்கு. ஸ்கூலுக்கு போயிருக்கு. நா உங்களுக்கு காட்டறேன். அது நாலாம் கிளாஸ் படிக்குது’

‘இங்க உங்க  வேல எப்பிடி’

‘சமையல்தான். பெரிய பசங்க எனக்கு ஒத்தாசையா இருப்பாங்க. கூடமாட இருப்பாங்க. அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல’

‘உங்களுக்கு சம்பளம் எதானு உண்டா’

‘ரைட்டா அஞ்சி ஆயிரம் மாசம் ஒண்ணுக்கு. அது எம் மாமியார் வீட்டுக்கு கொடுத்துடுவேன். அங்க என் புருஷன் இருக்கார். அதான் என் சேதி’

‘எல்லா விபரமா சொல்லிட்டிங்க’ எனக்கு சைக்கிள் விடத்தெரியும். சைக்கிள்ள கடைத்தெருவுக்கு போய்வருவேன். என் மாமியார் வீட்டுக்கும் போய்வருவேன்’. உங்களுக்கு சைக்கிள் கத்து தரணும். நேத்து  விடுதி அம்மா என்கிட்ட சொல்லிட்டு போனாங்க.’

விடுதி வாயிலில் கார் சப்தம்கேட்டது.

‘அம்மா அம்மா’

எனக்கு பதட்டமாக இருந்தது. பேராசிரியர் காரைவிட்டு இறங்கி பிள்ளையாரை வணங்கி விடுதியினுள் நுழைந்தார்.

நாங்கள் இருவ்ரும் வணக்கம் சொன்னோம்.

’ ஒவ்வொரு வேலயா கத்துகோ’

‘சரிங்க மேடம்’

மேஜை டிராயரைத்திறந்து அதனில் ஐந்தாயிரம் வைத்துப்பூட்டினார் பேராசிரியர். அதன் சாவியை என்னிடம் கொடுத்தார்.

‘வரவு  பதிவேட்டில் இந்த ஐந்தாயிரத்த குறிச்சிடனும்’

‘சரிங்க மேடம்’ எனக்கு அச்சமாக இருந்தது.

காரின் டிரைவர் ஒரு கட்டு புத்தகங்களைக்கொண்டு வந்து எங்கள் முன்னே வைத்தார்.

‘வேதா இந்த புத்தகங்கள் உனக்கு. நீ படிக்கற. குறிப்பு எழுதற. என் கிட்ட குடுக்கற. இந்த புத்தகங்கள் விடுதியில் எப்போதும்  இருக்கட்டும்.. இன்னும் புத்தகங்கள் அனுப்புவேன். எல்லாத்தையும் நீ பாத்துகணு’

‘வர்தனி அட்டெண்டர்  ஒனக்கு எல்லாம் சொல்லித்தருவாங்க. ரெண்டு பேரும் வங்கிக்கு போய் வாங்க. அந்த விவகாரங்களை  கொஞ்சம் தெரிஞ்சி வச்சிகுங்க. அது ரொம்ப முக்கியம்’

‘மதியம் சாப்பாடு’

‘எடுத்துகிட்டு வந்துருக்கன்’

‘அதுதான் சரி’

ஒரு ஆயிரம் ரூபாய் என்னிடம் கொடுத்தார் பேராசிரியர். கைச்செலவுக்கு என்று சொன்னார்.

‘மொதல்ல செறுப்பு ஒண்ணு வாங்கி கால்ல போட்டுக்கணும்’

நான் செறுப்பில்லாமல் இருப்பதைக்கவனித்து இருக்கிறார் பேராசிரியர்.

‘சாயந்திரம் போகும் போது எத்தினி பேர்  வந்துருக்காங்க. யார் வரல ஏன் வரல தெரியணும்.  இங்க  நடக்குற எல்லாத்துக்கும்  ஆயாவும்  நீயும்தான் பொறுப்பு.  பசங்களுக்கு ஒழுக்கம்தான் ரொம்ப முக்கியம். அதுக்கு ஆபத்து வந்துடக்கூடாது. அத பாத்துகுங்க. அப்ப அப்பநான் வருவேன்.  நீ சைக்கிள் கத்துக. நா சைக்கிள் வாங்கித்தறேன். என்ன’

‘அப்படியே செய்கிறேன் மேடம்’ பதில் சொன்னேன்.

பேராசிரியர் விடுதியைவிட்டுக்கிளம்பினார். காரில் ஏறிக்கொண்டார். கார் சிதம்பரம் பாதையில் விரைந்தது.

வர்தனி என்னிடம் தன் சைக்கிளின் சாவியைக்கொடுதார். அதனைத்திறப்பது எப்படி என்பதை விளக்கினார். சைக்கிளை விட்டுக்காண்பித்தார். என்னை சைக்கிளில் ஏற்றி நான்கைந்து முறை விடுதியைச்சுற்றி சுற்றி வந்தார்.

‘இண்ணைக்கு இது போதும்’ என்றார்.

மாணவிகள் விடுதிக்குத்திரும்ப ஆரம்பித்தார்கள். அவர்களின் வருகையைப்பார்த்துக்கொண்டேன். நபர்களின் எண்ணிக்கையை சரிபார்த்தேன்.

முகங்கழுவிய அவர்கள் தேநீர் அருந்திவிட்டு அவரவர் வேலையைக்கவனித்தார்கள்.

‘ வர்தனி என்னிடம் வந்து’ நீங்க செறுப்புகடைக்கு போயிட்டு அப்படியே நேரா  வீட்டுக்கு போங்க நேரம் சரியா இருக்கும்’

ப்ரொபசர் கொடுத்துவிட்டுப்போன புத்தகப்பையை எடுத்துக்கொண்டேன்.

‘புத்தகங்கள் இங்கயே இருக்கட்டும்’

‘ஒரு புத்தகம் எடுத்துக்கொண்டு போகிறேன். நாளைத்திரும்பவும் கொண்டுவந்து விடுகிறேன்’

‘படிச்சி முடிச்சிட்டு கொண்டுவாங்க’  வர்தனி சொன்னார்.

‘ ஒரு புத்தகம் எடுத்துக்கொண்டேன். ‘ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’ என்கிற நாவல். ஆசிரியர் வே. சபாநாயகம் என்று போட்டிருந்தது. இத எடுத்துட்டு போறேன்’

‘சரி’

‘சாவி பத்ரம்’

நான் மேசை டிராயர்  சாவியை எடுத்துக்கொண்டேன்.

‘உங்களுக்கு அவசரமா பணம் தேவைன்னா’

‘எங்கிட்டயும் ஐயாயிரம் குடுத்துருக்காங்க அம்மா. அத நா பத்ரமா வச்சிருக்கேன்’

வர்தனி என்னிடம் விளக்கமாகச்சொன்னார்.

நான் விடுதியைவிட்டுக்கிளம்பி சிதம்பரம் சாலையில் நடந்தேன் பாலமான் வந்தது. அங்குள்ள செறுப்புக்கடையில் ஒரு செறுப்பு  வாங்கி காலில் மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.  விலை நூறு ரூபாய். இதுதான் நாம் போடும் முதல் செறுப்பு.  செறுப்பு அழகாக இருந்தது. அப்பாவுக்கு  செறுப்பு வாங்கிக்கொடுத்துவிட்டு நாம் வாங்கியிருக்கலாம். ஆனால் நாளை விடுதிக்கு வரும்போது  நான் காலில் செறுப்போடு வரவேண்டும். அப்படித்தான் பேராசிரியை எண்ணியிருக்கலாம். அப்பாவுக்கும் செறுப்பு வாங்கவேண்டும். அம்மா  வெளியில் எங்கும் செல்வதில்லை. புது செறுப்பைப்போட்டுக்கொண்டு   தத்தக்கா பித்தக்கா என்று முதலில் நடந்தேன். பிறகு சரியாக நடக்க ஆரம்பித்தேன்.  நானே சற்று உயரம் கூடிப்போனதுவாய் உணர்ந்தேன். பொடி நடையாய் நடந்தேன். அதே தார்ச்சாலையில் நடந்து அண்னாமலைநகர் வந்து சேர்ந்தேன்.

வீட்டு வாசலில் அம்மாவும் அப்பாவும் நின்றுகொண்டிருந்தனர்.

‘உன்னத்தான் எதிர்பார்த்துண்டு இருக்கோம் வா வா’

‘காலுக்கு செறுப்பு பாத்தியா உம் பொண்ணுக்கு’ அப்பா சொன்னார்.

பேராசிரியர் செறுப்போடு வரவேண்டும் என்று கண்டித்துச் சொன்னதையும் ஆயிரம் ரூபாய் கைச்செலவுக்கென என்னிடம் கொடுத்துவிட்டுப்போனதையும் பெற்றோர்களிடம் சொன்னேன். மகிழ்ந்து போனார்கள். நெகிழ்ந்துபோனார்கள்.

விடுதியில் நடந்தவைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னேன்.

‘பேராசிரியை ஏதேனும்  மாதச்சம்பளம் கூட  உனக்கு தரலாம்’

‘எனக்குத்தோணல. நா என்ன படிச்சியிருக்கேன். இப்பதான் எல்லாம் கத்துகறேன்’

‘பாப்பம்’

‘கைகால் சுத்தி பண்ணிகோ. ஸ்வாமிய கும்பிடு’

‘சரிம்மா’

‘பகவான் ஒரு வழிய காமிக்கறான்’

 அம்மா டிபன் செய்யப்போனாள். அலுவலகம் கொண்டுபோன டிபன் டப்பாவை எடுத்து அலம்பப்போட்டேன்.

‘நா அலம்பி வக்கிறேன் விடு’

கொண்டு வந்த நாவல் புத்தகம் ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது எடுத்து பெஞ்சில் வைத்தேன்.

‘பொஸ்தகம் உன்ன தொரத்திண்டு வர்ரது’  என்றார் சிரித்துக்கொண்டே அப்பா. நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.  சாமிநாதனின் ஆங்கில புத்தகங்கள் சிலதையும் எடுத்துப்பார்க்கத் தயாராக வைத்திருந்தேன்.

‘யார  கொண்டு இருக்க நீ தெரியல’

‘ஏன்’

‘படிக்கறத விட மாட்டேங்கற’

‘யாராவது பெரியவா அப்பிடி இருந்துருப்பா’

‘ நானும் அம்மாவும் அப்பிடி இல்ல’

நான் கொண்டு வந்திருந்த நாவலைப்படிக்க ஆரம்பித்தேன். கூடலை ஆற்று இலக்கியம் என்று தலைப்பிட்டு த. பழமலய் என்கிற பேராசிரியர் இந்த நூலைப்பற்றி ஒரு குறிப்பு தருகிறார். ’இந்தப்புதினம் தமிழகத்தொடக்கப்பள்ளி வரலாற்றில் இந்த நூற்றாண்டின் முற்பகல் நிகழ்வுகளைப் பற்றிய அரியதொரு பதிவாகும். இதைத்தமிழ் எழுத்தில் சாதித்திருப்பது தமிழ் எழுத்துக்குப்பெருமை.தமிழர்களுக்குப்பெருமை.’

 திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக் நாவல் விறுவிறுப்பாகச்சென்றது. முதுகுன்றம் அருகே தெற்குவடக்கு புத்தூர்தான் கிராமம்தான் கதைக்களம். திருமண்ம் செய்துகொள்ளாது பிரம்மச்சாரியாய் அந்த கிராமத்தில் வாழ்ந்து அந்த ஊர் பிள்ளைகளின் கல்விக்காகத்தன்னையே அர்ப்பணித்து மறைந்த திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியரின் கதை.

நாவலில் திண்ணைப்

பள்ளியில் ஆசிரியர் வருகைப்பதிவேடு வாசிக்கிறார். எப்படிப்பாருங்கள்.

‘அலமேலு அம்மாள்’

‘பிரஜஞ் ஜார்’

’ஆறுமுக முதலி’

‘பிரஜஞ் சார்’

‘உமாபதி அய்யர்’

‘பிரசன்ட் சார்’

‘கிருஷ்ணமூர்த்தி பூசி’ ( படையாட்சி)

‘பிரசன் சார்’

’துருமெயில் சாம்பான்’

‘பிரச்சஞ் ஜார்’

நான் ஐந்தாம் வகுப்புவரைத்தானே படித்தேன். அப்போது ஜாதிகள் அட்டெண்டென்சில்  மாணவர்கள் பெயருடன் ஒட்டி இருக்கவில்லை. ஆனால் ஆசிரியர் பெயரோடு ஒட்டியிருந்தது.

எனது மூன்றாவது வகுப்ப்ய் ஆசான் பூவராகமூர்த்தி நாயுடு, ஐதாம் வகுப்பு ஆசான் பழனிப்படையாட்சி.

 நான் புத்தகத்தில் படித்தவரை ஒரு அடையாளத்தோடு மூடி வைத்தேன்.

‘சாப்பிட வரலாம்’ அம்மா குரல் கொடுத்தாள்

நானும் அப்பாவும் சாப்பிட அமர்ந்தோம்.

தூக்கம் வருவரை ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது நாவல் படித்துக்கொண்டிருந்தேன். திண்ணைப்பள்ளிக்கூட வாத்தியார் மாணவர்களின் ஒழுங்குக்கும் ஒழுக்கத்திற்கும் எத்தனை அக்கறை எடுத்துக்கொள்கிறார் என்பதை அறிய மனம் நெகிழ்ந்துபோனது. அப்படியே தூங்கிப்போனேன்.

மறுநாள்  வழக்கம்போல் அதிகாலையே எழுந்து அம்மாவுடன் அடுப்படியில் சிறிதுநேரம் இருந்தேன்.பிறகு விடுதிக்குக்கிளம்பினேன். புது செறுப்பு போட்டுக்கொண்டு புறப்பட்டேன். டிபன் டப்பாவை எடுத்துக்கொண்டேன். நடக்க ஆரம்பித்தேன். எதிர்வெயில் இல்லாமல் சவுகரியமாக இருந்தது. பல்கலைக்கழகத்திற்கு சைக்கிளில் வரும் மாணவர்கள் அலுவலர்கள் எல்லோரையும் பார்த்துக்கொண்டேன். நாமும் இப்படித்தான் ஒருநாள் சைக்கிள் விடவேண்டும் என்று தீர்மானித்தேன். விடுதி வந்துசேர்ந்தேன். வர்தனி பிள்ளையாருக்கு ரெடியாக பூக்கள்சில எடுத்துவைத்திருந்தார். ஒரு வாழைப்பழம் த்யாராக இருந்தது. பிள்ளையார் அபிஷேகம் முடித்து பூசைமுடித்து விடுதியினுள் சென்றேன். மாணவிகள் ஒவ்வொருவராய்க்கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.   எத்தனை மாணவிகள் உள்ளனர் என்பதைச்சரிப்பார்த்துக்கொண்டேன்.

மூன்று சக்கர சைக்கிளில் வைத்து மளிகை சாமான்கள் விடுதிக்கு வந்தன. சைக்கிள்காரன் கொடுத்த பில்லோடு கொண்டு வந்த சாமான்களை சரி பார்த்து எடுத்துவைத்தேன்.  பர்வத வர்தனி எனக்கு உடன் இருந்தார்கள்.

‘மளிகை சாமான் பில்லை அம்மாகிட்ட சொல்லிட்டா அவுங்க பணம் கொடுத்துடுவாங்க வர்ர சாமான் சரியா இருக்கான்னு பாத்தா போதும்’ என்றாள் ஆயா.

பில்கள் வைத்துக்கொள்ள ஒரு ஃபைல் இருந்தது. மளிகைசாமான் பில்லை அதனில் கோர்த்துவைத்தேன். செலவுப்பதிவேட்டில் அந்தத்தொகையை தேதி பில் எண் கடையின் பெயர்  இவைகளோடு குறித்துக்கொண்டேன்.

 மூன்று சக்கர சைக்கிள்காரன் கிளம்பிப்போனான். விடுதியில் யாரும் இல்லை.

‘மூன்று சக்கர சைக்கிள் விடுவது கொஞ்சம் ஈசிதானே’

‘ உடம்புல வலு வேணும்.  பெடல் மெதிக்க சிரமமாக இருக்கும்’

நானும் ஆயாவும் பேசிக்கொண்டோம்.

வர்தனியிடம் பெண்கள் ஓட்டும் சைக்கிள் இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு போய்  அட்டெண்டர் எனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்தாள். திணறித்திணறி பெடலை மிதிக்கக்கற்றுக்கொண்டேன்.

‘நேரா பாக்குணும் நேரா பாக்குணும்’ பெடலை மெதிக்கணும் நேரா பாக்கணும்’ திரும்ப திரும்பச்சொன்னார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக சைக்கிள் கற்றுக்கொள்ளப்  பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

‘இண்ணைக்கு இது வரைக்கும்’ என்றார்  வர்தனி.

‘பத்து நாளு ஆகுமா’

‘ சைக்கிள் கத்துகறதுல மூணு விஷயம் இருக்கு.  நேரா பாத்து பெடல மெதிக்கணும் ஏற இறங்க கத்துகணும்’

பயமாகத்தான் இருந்தது.

‘செறு புள்ளயிலேயே கத்துகிட்டு இருக்கணும்’

‘ இது பத்தி நெனப்பு எல்லாம் ஏது’

விடுதிக்கு வந்தோம். தமிழ்த்தினசரி நாளிதழ் ஒன்று விடுதிக்கு வாடிக்கையாக வந்தது. அதனைப்புரட்டிப்படித்தேன்.

ஆயா டீ ஒன்று போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். இருவரும் டீ சாப்பிட்டோம்.

‘எனக்கு வேல கெடக்கு’  வர்தனி சென்று விட்டார்.

நான் பேராசிரியை கொடுத்துவிட்டுப்போன புத்தகப்பையை எடுத்து அதனில் எல்லவெல்லாம் இருக்கிறது என்பதனை ஆராய்ந்து கொண்டிருந்தேன். ’தேரு பிறந்த கதை’ என்னும் சிறுகதை நூல் ஒன்றை எடுத்துக்கொண்டேன். பல சின்னக்கதைகள் அதனில் இருந்தன. புத்தகத்தின் தலைப்பான தேரு பிறந்த கதையை எடுத்துக்கொண்டேன். படிக்க ஆரம்பித்தேன். தாழ்த்தப்பட்டவர்கள் தரிசிப்பதற்காகக் கடவுளைத் தேரில் வீதியுலா செய்திருக்கிறார்கள்.  ஹரிஜனங்களின் ஆலயப்பிரவேசம் நடைபெறாத  இருண்ட காலத்தில்  இவை  ஒரு  யுக்தியாக இருந்திருக்கலாம் என்று  நூல் ஆசிரியர் கருதுகிறார். நூல் ஆசிரியர் பெயர் வளவதுரையன் என்று அச்சிடப்பட்டிருந்தது. கதை முழுவதும் படித்துப்பார்த்தேன். கதை நன்றாகவே இருந்தது.

‘இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் கோயில் கட்டிய சாதாரண மக்களைக்காண அவர்களைத் தேடி வீடு வீடாகக்கடவுள் வரப்போகிறார். கடவுள் நம்மைத்தேடி வருகிறார்! வருகிறார்! வருகிறார்!’ எத்தனைச்சுவாரசியமான கனமான செய்தி. தேர் பிறந்தது பாழாய்ப்போனச்சாதியைக் காப்பாற்றி வைக்கவே என்று கதாசிரியர் சொல்வதில் நேர்மை பளிச்சிட்டதை உணர்ந்தேன்.

சமையல் அறை வேலைகளை முடித்துக்கொண்ட வர்தனி என்னிடம் வந்து அமர்ந்துகொண்டார்.

‘பால்காரன் காலையில் வருவான் அவனிடம் பால் வாங்குவேன். தயிர் உறைய வைக்கவேண்டும். கறிகாய்க்காரன் மாலையில் வருவான்.  ஒருநாள் விட்டு ஒருநாள் மாலையில் வருவான். தண்ணீர் மோட்டார் போடவேண்டும். பாத் ரூம் கழுவும் ஆயா வருவார். மாதம் ஓர் முறை அது நடக்கும். எலக்ட்ரிசியன் பிளம்பர்நாம் தேவைக்கு அழைக்கவேண்டும். கரண்ட் பில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரும் அது கட்டிவரவேண்டும்’

நான்  வர்தனி சொல்வதையே கவனித்துக்கொண்டிருந்தேன்.

‘எனக்கு சில வேலைகள் கொடுங்கள். நானும் செய்வேன் அல்லவா’

‘அம்மா எப்படிச்சொல்கிறார்களோ அப்படிச்செய்வேன்’

நாம் மிரண்டுவிடப்போகிறோம் என்று ஒவ்வொன்றாய்ச்சொல்வார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நான் கொண்டுவந்த மதிய உணவை சாப்பிட்டு முடித்தேன். மீண்டும் தேரு பிறந்த கதைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விட்டதிலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.

பேராசிரியர் தனது கல்லூரிப்பணியில் மும்முரமாக இருக்கவேண்டும். அங்கும் அவர்களுக்கு நிர்வாகப்பணி என்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டல் பணியென்றும், கல்லூரி மாணவர்களுக்கு போதனை வகுப்புக்கள்,  மாணவர்கள் ஐயங்கள்  தீர்த்தல்,  தேர்வு  நடத்தும் பணி, தேர்வுத்தாட்கள் திருத்தும் பணி,  மாணவர்கள் உயர்வகுப்புக்குச்செல்வதை  நிர்ணயித்தல், நேர்முகத்தேர்வுகள் நடத்துவது  உயர் அதிகாரிகளுக்கு தேவையான புள்ளிவிபரங்கள்  அரசுக்கேள்விகளுக்கு விடைகள்என்று தொடர்ந்த பணிகள் இருக்கவே செய்தன. எல்லாவற்றிர்க்கும் தன்னை அவ்வப்போது தயார் செய்து கொள்ளுதல் ஆசிரியர் பணியில் மிக முக்கியமானதுவாயிற்றே.

இவைகளுக்கு இடையே விடுதி நடத்துவது, என்னைப்போன்ற பெண்களுக்கு வழிகாட்டுதல் உதவி செய்தல், பெற்றோர்களைக்கவனித்தல், பாசுபதேசுரர் கோவில் சென்று கடவுளைப்பற்றிப் பாடல்கள் பாடுவது என்று இன்னும் எத்தனையோ.

பேராசிரியருக்குத் தனக்கென்று ஒரு குடும்பம்  மட்டும் சரியாக அமையாதது எனக்கு வருத்தமாகவே இருந்தது.

அட்டெண்டர் கொண்டுவந்த டீயை சாப்பிட்டு முடித்தேன்.

நான் என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இப்படி ஒரு பத்து நாட்கள் சென்றன. நிறைய நாவல்கள் வாசித்து முடித்தேன். சிறுகதைநூல்கள் எத்தனையோ படித்தேன். ப்ரொபசர் கொடுத்த புத்தகங்கள்  அனேகமாய் படித்து முடித்துவிட்டேன்.

வர்தனி எனக்கு நல்ல முறையில் சைக்கிள் கற்றுக்கொடுத்துவிட்டார்கள்..

ஒரு நாள் சைக்கிளை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கே வந்துவிட்டேன். அம்மாவும் அப்பாவும் ஆசாரியப்பட்டுப் போனார்கள்.

‘இது யார் சைக்கிள்’

‘விடுதி இருக்குற வர்தனி  அட்டெண்டர்து. அவுங்கதான் எனக்கு சைக்கிள் சொல்லிக்கொடுத்தாங்க’

‘நல்லா மனுஷா இன்னும் அங்கங்க இருக்கா’ என்றார் அப்பா.

‘ப்ரொபசர் சைக்கிள் வாங்கித்தந்துடுவா’

‘ஆமாம்’

‘நீ சைக்கிள் ஓட்டறத இன்னும் அவுங்க பாக்கலியா’

‘இல்ல’

மறுநாள் காலை பணிக்குச்சென்றேன். விடுதியில் புதிய சைக்கிள் ஒன்று எனக்காகக்காத்துக்கொண்டு இருந்தது.  வர்தனிதான் சொன்னார்கள்.  ’விடுதி அம்மா நீ சைக்கிள  ஓட்டிகிட்டுப்போனதை பாத்துட்டாங்க. அதான் சைக்கிள் வதுடுச்சி. இனி உன்  புது சைக்கிள நீ எடுத்துகிட்டு போலாம்’

சற்று நேரத்திற்கெல்லாம் ப்ரொபசர் விடுதிக்கு வந்தார்.

‘என்ன எப்பிடி இருக்கு வேல’

‘நல்லா இருக்குது. மேடம். சைக்கிள் கத்துகிட்டன்.  வர்தனிதான் உதவி செஞ்சாங்க. நேத்திக்கி என் வீட்டுக்கே சைக்கிள்ள போனேன்.’

‘ நா பாத்தேன் மியூசிக் காலேஜ்  வாசல்ல நா நின்னுகிட்டு இருந்தன். உன்ன பாத்தன்  நீ சைக்கிள் ஓட்டிகிட்டு போனதைப்பாத்தேன்.  அதான் புது சைக்கிள் வந்துச்சி உனக்கு. இனி இதுலேயே போலாம் வரலாம். நீயே வச்சிகோ. நல்லா பாத்துக. பத்ரமா வச்சிக’

பதிவேடுகளையெல்லாம் பார்த்தார். மளிகை பில்கள் வந்திருப்பதக்கவனித்தார்.

‘வேற ஏதும் செய்தியா’

‘’கரண்ட் பில் வந்துருக்கு மேடம்’

அதற்கான பணம் எவ்வளவு எனக்கேட்டு அதனை  அட்டெண்டரிடம் கொடுத்தார்.

‘எப்பிடி எங்க போய் கரண்ட்பில்  கட்டணும். வேதாவுக்கு  சரியா  வழி சொல்லிக்குடுத்து அனுப்பு’  வர்தனியிடம் சொல்லிக்கொண்டார். விடுதியை ஒரு முறை சுற்றிப் பார்த்துக்கொண்டார். பேராசிரியர் தன் வீட்டுக்குக்கிளம்பினார்.

நான் கரண்ட் பில்லை எடுத்துக்கொண்டு  அட்டெண்டர் கொடுத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு புது  சைக்கிளில் புறப்பட்டேன்.

‘லேனா தியேட்டருக்கு எதிசாரில கரண்டு பில் கட்டுற ஆபிசு. லேனா தியேட்டர் தெரியுமா’

‘தெரியும்’ என்றேன்.

 நானும் சாமிநாதனும் சரஸ்வதி சபதம் ப்பார்க்கப்போனது நினைவுக்கு வந்தது. நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு லேனா தியேட்ய்டர் வாசலுக்குப்போனேன். எதிரே கரண்ட் பில் கட்டும் ஆபீசு தேடினேன். கண்டு பிடித்து விட்டேன். நல்ல கூட்டம். வரிசையில் நின்று பணம் கட்டி ரசீது வாங்கிக்கொண்டேன்.

‘டினாமினேஷன் போடணும் போடலியா’

‘நான் பதில் சொல்லாமல் விழித்தேன்.

‘அடுத்த மொற இப்பிடி வரக்கூடாது தெரிதா’ என்றார் அந்த எழுத்தர் ரசீது வாங்கிக்கொண்டு விடுதிக்குத்திரும்பினேன்.

‘டினாமினேஷன் போடலியான்னு கேட்டாங்க’

வர்தனி சிரித்துக்கொண்டார்.

‘மறந்து போனேன்.  நாம பில்லுக்குத்தக்கன  பணம் எந்த எந்த ரூவா நோட்டு எத்தினி எத்தினி வச்சிருக்கம்னு ஒரு கணக்கு போடணும்.  அந்த பில்லு பணத்துக்கு அது சரியா வரணும். அதான். அந்த பில்லுக்கு  பின்னாடி  இத எழுதிகிட்டு போகணும். வழக்கமா செய்யுறதுதான்’

’எனக்கு விளங்கியது. அந்த எழுத்தருக்கு பணம் வாங்கிப்போடுவதில் சவுகரியமாக இருக்கும் என்பதற்கே இந்த நடைமுறை.’

‘கரெக்ட்’

நான் அந்த ரசீதினை செலவுப்பதிவேட்டில் குறித்துக்கொண்டேன், அந்த ரசீதினை அதற்கான ஃபைலில் வைத்து இருக்கினேன்.

அன்று மாலை புது சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுகுப்புறப்பட்டேன். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. மணியை அடித்து அடித்துப்பார்த்தேன்.

மாணவர்கள் ஆசிரியர்கள் இவர்கள் மத்தியில் நான் என் சைக்கிளை  விட்டுக்கொண்டு சென்றுகொண்டிருந்தேன். வீட்டு வாயிலில் சைக்கிளை நிறுத்திவிட்டு சைக்கிள் மணியை நான்கைந்து முறை வேகமாய் அடித்தேன். அம்மா வேக வேகமாய் வாசலுக்கு வந்து’ யாரு’ என்றாள்.

‘வேதா’ என்றேன்.

‘நீதானா புது சைக்கிளா, அதான் ‘

அம்மா சைக்கிளைத்தொட்டு தொட்டு பார்த்தாள்.

‘அப்பா’

‘இண்ணைக்கு பருவம் கொஞ்சம் வேல ஜாஸ்தி.அபிஷேகம் பெரிசு அதான் கோவிலுக்கு கொஞ்சம் முன்னாடியே போயாச்சு’ அம்மா எனக்குப்பதில் சொன்னாள்.

‘ விட்டு காமிடி நா பாக்கறேன்’

நான் சைக்கிளைச் சற்று விட்டுக்காண்பித்தேன். அம்மா பார்த்து மகிழ்ந்துபோனாள்.

விடுதியின் வேலைக்குத்தொடர்ந்து சென்றேன். ஒரு மாதம் நிறைவுற்றது. பேராசிரியர் விடுதிக்கு வந்தார். ஐயாயிரம் ரூபாயை ஒரு கவரில் போட்டு அதற்குப்பின்னடித்து வேதா என்று பெயர் எழுதி என்னிடம் கொடுத்தார்.

‘என்ன மேடம்’

‘சம்பளம் உனக்கு’

நான் மகிழ்வோடு கையில் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். அதனை என்பெற்றோர்களிடம் கொண்டு கொடுத்தேன். அப்பா அதனை முருகன் படத்திற்குக்கீழாகவைத்து, முருகா முருகா முருகா என்று மூன்றுமுறை சொல்லிவிட்டு அம்மாவிடம் கொடு என்றார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நமஸ்காரம் செய்து எழுந்தேன்.

அம்மாவின் முகத்தைக்காண பத்து வயது குறைந்த மாதிரிக்கு அழகு பளிச்சிட்டது. அப்பாவுக்கு இதில் ஒன்றும் பெரிய மாற்றம் தென்படவில்லை. இப்படியாய் என் விடுதிப்பணி தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒரு நாள் நாமே ஒரு சிறுகதை எழுதினால் என்னவென்று தோன்றியது. ஒரு நோட்டை எடுத்துவைத்க்துக்கொண்டு உட்கார்ந்தேன். என் தம்பி சாமி பற்றிய கதை எழுதினேன். வகுப்பைக்கட் செய்துவிட்டு அவன்  விளாம்பழம்  அடிக்கப்போனதுவும்  அங்கே மாட்டிக்கொண்டதுவும் அவனை நான் மீட்டதுவும் படிக்கும் பள்ளியில் அவனை நிர்வாகம் கெடுபிடி செய்ததுவும் மாணவர்கள் கேலிபேசியதுவும்  மறு நாள் அவனுக்கு ப்ரொகிரஸ் கார்டு வந்து அதனில் அவன் முதல்  மாணவனாய் வந்ததுவும்  சூழல் என்கிற ஒரு கதையாக்கினேன்.  அதனை நாளிதழ் ஒன்றுக்கு அனுப்பிவைத்தேன். இது விஷயம் நான் யாருக்கும் சொல்லவில்லை.

ஒரு நாள் தபால்காரர் ‘ சார் போஸ்ட்’ என்று சொல்லி என் பெயர் போட்ட தபாலை அப்பாவிடம் கொடுத்து இருக்கிறார். நான் விடுதியிலிருந்து வீடு திரும்பியதும்’ டீ உனக்கு என்ன தபால் வந்துருக்கு’ என்றார்.

நாளிதழின் வாரமலரில்’ சூழல்’ என்கிற என் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. எனக்கு நகல் அனுப்பியிருந்தார்கள். பிரித்தேன். படித்தேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காண்பித்தேன். அன்று வீடே கொண்டாட்டமாக இருந்தது. எனக்கும் கதை எழுத வரும். ஆக இன்னும் எழுத வேண்டும். முடிவு செய்தேன். படிப்பதும் எழுதுவதும் என் பணியாக மாறியது. பேராசிரியர் நாளிதழ் மலரில் என் கதைப்படித்துவிட்டு’ நீ தேறி விட்டாய் வேதா. நான் நினைத்தது நடந்தே விட்டது. தொடர்க உன் பணி’ என்று மகிழ்வோடு பாராட்டினார்.

தினம் தினம்  சிபிஆர் நூலகத்திற்குச் சென்று வரலானேன். விடுதிப்பணியோடு நூலகம் செல்வதும் என் பணியானது. கதைகள் கட்டுரைகள் புதினங்கள் படித்துப்படித்து எழுத்தின் வளமையைப்புரிந்துகொண்டேன். சொந்தமாய் நானும் எழுதி எழுதிப்பார்த்தேன்.கவிதைகள் நிறைய வாசித்தேன். கவிதைகள் சில எழுதியும் பார்த்தேன். வார இதழ் மாத இதழ்கள் நூலகத்தில் படிக்க வசதியாக இருந்தது. எழுதிய சிறுகதைகள் கட்டுரைகளை இதழ்களுக்கு அனுப்பிவைப்பேன். அனேகமாய் பல பிரசுரம் காணாது. ஒன்று இரண்டு பிரசுரமாகும்.  என் படைப்பு  பிரசுரமாகும் இதழின் பிரதியை எனக்கு அனுப்பிவைப்பார்கள். அவைகளைப்பத்திரமாய்ச் சேமித்து வைப்பேன்.அவைகளைப்பார்த்து ஏதோ சாதித்துவிட்டதாய் நானே நினைத்துக்கொள்வதுண்டு.

ஒருநாள் விடுதியில் நான் இருக்கும்போது பேராசிரியர் வருகை தந்தார்கள். அந்தக்காரில் ஒரு பெரிய டப்பா ஒன்றும்  கூடவே இருந்தது. வண்டியின் டிரைவர் அந்த டப்பாவைக்கொணர்ந்து விடுதியின் மேசை மீது வைத்தான். பேராசிரியர் அதனைப்பிரிக்கச்சொன்னார்கள். அவன் பிரித்தான். அதனுள்ளாக ஒரு கணிப்பொறி இருந்தது. அதன் இணைப்புக்களை பேராசிரியர் மினசார சுவிட்சுகளோடு பொறுத்தினார். கணிப்பொறி இயங்க ஆரம்பித்தது.

‘நீ கணிப்பொறி கத்துகோ வேதா’

நான் அச்சத்தோடு அதனைத்தொட்டுப்பார்த்தேன்.

‘ஒண்ணும்பயப்படாதே. நமது வேலைய சுலபமாகச்செய்ய இது ஒரு சாதனம் வசதி. இதனைப் பயன் படுத்தக்கற்றுக்கொள். விடுதியில் உள்ள மாணவர்கள் உனக்கு உதவுவார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் எந்த மொழியிலும் நீ இதனைக்கையாள முடியும். பேனாவால் பென்சிலால் எழுதுவது என்பது அருகிப்போனது. இதன் வசதி அபாரமானது. போகப்போக இதன் பயனை நீ உணரத்தொடங்குவாய். பிறகு ஒருநாள் இது சர்வ சாதாரண விஷயமாகிவிடும் எப்படித்திறப்பது எப்படி மூடுவது என்பதிலிருந்து நீ தொடங்கு என்றார். எனக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.

தன்னுடைய கைப்பையிலிருந்து மொபைல் போன் ஒன்றை எடுத்து மேசை மீது வைத்தார்.

‘இதனை  நீ வைத்துக்கொள். நீ என்னோடு பேசு. நானும் உன்னோடு அவ்வப்போது  பேசுவேன்’

நான் அச்சத்தோடு அவைகளைப்பார்த்துக்கொண்டு இருந்தேன்.

‘புதுசா ரயில் ஊருக்கு வந்தப்ப  முதன் முதலில்   அதைப்பார்த்த ஜனம் இப்படித்தான் பயந்து நடுங்கியிருக்கிறார்கள். பஸ் விட்ட போதும் இப்படித்தான் மக்கள் அஞ்சியிருக்கிறார்கள். போகப்போக எல்லாம் பழக்கமாகிவிடும். வீட்டுக்கு மின்சாரம் வந்தபோதும் மக்கள் மிரண்டுதான் போயிருக்கிறார்கள். அப்படித்தான் இதுவும்’

எப்படி அந்த மொபைல் போனில் கால் போடுவது வரும் கால்களை எப்படிப்பேசுவது என்பதனை எனக்குச்சொல்லிக்கொடுத்தார் பேராசிரியர்.

எல்லாமே எனக்குப்புதுமையாக இருந்தது. ’போகப்போக அனைத்தையும் நீ கையாளத்தெரிந்துகொள்வாய்’

அட்டெண்டர் வர்தனி அப்போதுதான் சமையல் அறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார்.

‘வணக்கம் அம்மா’

‘வணக்கம்’

‘எதேதோ வந்து இறங்கியிருக்கு’

‘ ஒண்ணும் இல்ல. ஒரு கம்ப்யூட்டர்.  ஒரு தொலைபேசி.  இத  செல்பேசி மொபைல்னும் சொல்லுவாங்க’

‘வேதா இதற்கு ஒரு எண்உண்டு. சிம்கார்ட் என்கிற சிறு அட்டை ஒன்று  இதன் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.. என்னிடம் உள்ள தொலைபேசிக்கும் ஓர் எண் உண்டு அந்த எண்  இதுதான.’

‘இனி மனிதர்களை எண்ணால் கூட அடையாளப்படுத்திவிட முடியும்’

‘ஆமாம் வங்கி தொலைபேசி ரேஷன் கார்ட் மின் அட்டை எல்லாவற்றிர்கும் எண் உள்ளதே அதுவே நமது டையாளமாகிவிடுகிறது. அப்படித்தான்’

‘எண் தான் பிரதானம்’                                                                        

‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப  இவ்விரெண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.’

‘பொருத்தமாகச்சொன்னீர்கள்’ என்றேன் [பேராசிரியையிடம் நான்

‘மொபைல்பொனை எங்கு சென்றாலும் பத்திரமாக எடுத்துச்செல். இதற்கு மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதம் ஒருமுறை பணம் செலுத்தவேண்டும். அப்போதுதான் இது பேசும்.  இந்த மெஷினுக்கும் தினம் தினம் இதற்கு சார்ஜ் எனும் மின்சக்தி ஏற்றவேண்டும். அதற்கான இணைப்புக்கருவி இது. இதனையும் பத்திரமாக வைத்துக்கொள்.   அன்றாடம் மொ320பைலுக்கு ஒரு மணி நேரம் சார்க்ஜ் போடு.  மக்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதுவது என்பது இனி அனேகமாக இல்லாதொழிந்து விடும். எல்லாம் மொபைல் போன் வழி என்றாகிவிடும். உலகத்தின் எந்த மூலையில் உள்ளவர்களோடும் நாம் பேசி விடலாம். நாம் எங்கிருந்தால்தான் என்ன. எத்தனைச்சவுகரியம். அறிவியலின் சாதனை’

‘இது எல்லாம் விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும்தானே’

‘ஆமாம் வேதா. விலை இப்ப ஜாஸ்திதான் எல்லாரும் வாங்கிட முடியாது. ஆனா போகப்போக எல்லாம் விலை குறஞ்சிடும். விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் எல்லாமே அப்படித்தான்’

வர்தனி பேராசிரியரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘வர்தனி உனக்கும் உண்டு. உனக்கும்  செல் போன் வாங்கித்தருவேன்’

‘எனக்கும் எதுவும் தெரியாதுங்க’

‘யாருக்கும் மொதல்ல எதுவுமே தெரியாதுதான். இந்த உலகம் உருண்டன்னு தெரியறதுக்கு எத்த்னி காலம் ஆச்சு தெரியுமா. இந்த உலகம் சூரியன சுத்துது. சூரியன் இருக்குற எடத்துலதான் இருக்குதுன்னு  ஒரு விஞ்ஞானி ஓங்கி சொன்னத்துக்கே அவர கொன்னுபோட்ட உலகம் இது. காலம் எல்லாத்தையும் மாத்தும். மாத்தி இருக்கு’

பேராசிரியர் பதிவேடுகளை எல்லாம் சரியாகப்பார்த்துக்கொண்டார் யாருக்கேனும் ஏதும் குறைகள் உண்டா எனக்கேட்டார்.

நாங்கள் அமைதியாக நின்றோம்.

‘குறை நிறைகள் என்று பெயர் எழுதி ஒரு நோட்டைப்போட்டுவையுங்கள். யாருக்கேனும் ஏதும் சொல்ல விருப்பம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்’

‘சரிங்க மேடம் அப்படியே’

‘நா கெளம்பறேன். எனக்கு வேல நெறய இருக்கு’

பேராசிரியர் விடுதியைவிட்டுக்கிளம்பினார்.

‘தெனம் பேப்பர் படிங்க. ஆங்கில பேப்பர் கூட போடச்சொல்லி இருக்கேன் வேதா நீ எழுத்து கூட்டி படி. தெரியலன்னா கேளு. இங்க பெண்கள் விவரம் தெரிஞ்சவங்க இருப்பாங்க. டிகஷனரி இருக்கும் சோம்பல் எப்பவும் கூடாது. நெறய வேல செய்யணும்னு முடிவு பண்ணினா நெறய வேலய தொடர்ந்துகிட்டேதான் இருக்கணும் அதுக்கு குறுக்கு வழி எதுவும் இல்ல’

காரில் பேராசிரியர் அமர கார்   சர்ரென்று புறப்பட்டது.

நான் கணிப்பொறியையும் செல் போனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தேன். என் உலகம் விரியத்தொடங்கியது. எனது கண்கள் எதனையும் ஆழமாகப்பார்க்கக் கற்றுக்கொண்டன.

பெரிய பெரிய கதாசிரியர்கள் புத்தகங்களைப்படிக்கத்தொடங்கினேன். முதலில் சற்றுத்தயக்கம் இருந்தது. பின் அவை எனக்கு விருப்பப்பாடமாக அமைந்தன. மெளனி சுந்தரராமசாமி  ஜெயகாந்தன் பிச்சமூர்த்தி க.நா சுப்பிரமணியன் ஞானி சுஜாதா கு. அழகர்சாமி புதுமைப்பித்தன்  கி.ரா அசோகமித்திரன் பாவண்ணன் பொன்னீலன் ராஜம் கிருஷ்ணன் ஞானக்கூத்தன் பழமலய்  வே. சபாநாயகம் இமயம் கண்மணிகுணசேகரன் எனப்படிக்க ஆரம்பித்தேன்.

நானும் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என எழுதினேன். புதினங்கள்  எழுத ஆரம்பித்தேன்.  எனக்குத்தெரியாமல் என்னுள் எழுதும் ஆற்றல் ஒன்று மறைந்தே இருந்து இருக்கிறது என்பதை  நான் உணர்ந்தேன். நான் இப்போது பழைய குருக்களாத்து வேதா இல்லை. எழுத்தாளர் வேதா. எனது கதைகள் அதிகமாயின. அவை நூல் வடிவம் பெற்றன. கட்டுரைகள் புத்தகங்களாயின. ஒன்றிரெண்டு புதினங்கள் வெளிவந்தன நாட்கள் விறு விறுஎன்று அத்தனை வேகமாய்ப் போனது.பல இலக்கிய மேடைகளில் என்னை பேச அழைத்தார்கள். நான் சரியாகப்பேசுவதாய்ப் பேசிக்கொண்டார்கள். என்னைக் கெளரவித்தார்கள். விருதுகள் என்னைத்தேடி வரலாயின.

பேராசிரியர் சிவகாமி என்னைப்பற்றி என்னக் கணக்குப்போட்டாரோ அது தெரியாது ஆனால் அவர் மனம் சந்தோஷப்பட்டது.

அப்பாவும் அம்மாவும் எனக்கு  நல்ல வாழ்க்கை என்ற  ஒன்று அமைய வேண்டுமென்று கவலையில் இருந்தார்கள். அதுபற்றிய சிந்தை இல்லாமல் எனது நாட்கள் போய்க்கொண்டு இருந்தன.

 

 

சித்தியின் அம்மா படுத்த படுக்கையாகத்தான் இருந்தாள். சித்தப்பாவும் சித்தியும் சாமிநாதனும் சென்னையில்தான் இருந்துவந்தார்கள். சித்தியின் தந்தை ஒருநாள் கபாலியுடன் உட்கார்ந்து பேசினார்.

‘உனக்கு ஆகமசாஸ்திர சம்பிரதாயங்களில் விஷய ஞானங்கள் எவ்வளவு தெரிய வேண்டுமோ அவ்வளவும்  சொல்லிக்கொடுத்தாயிற்று. எனக்குத்தெரிந்ததையும் தாண்டி நீ கற்றுக்கொண்டு விட்டாய். இனி உனது வாழ்க்கை என்கிற அத்யாயத்தைத்தொடங்க வேண்டும் என்ன சொல்கிறாய்?’

‘எனக்கு வேறு ஒரு திட்டம் இருக்கிறது’

‘அது என்ன கபாலி’

‘நான் சிங்கப்பூர் செல்வதாக இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருக்கிறேன்’

‘என்ன கபாலி சொல்கிறாய் சிங்கப்பூரா’

‘ஆமாம் மாமா. எனக்குள் அப்படி ஒரு ஆசை எப்படியோ முளைத்துவிட்டது. சிங்கப்பூர்  திருமுருகவள்ளல் திருக்கோவில் பூஜைக்கு அழைத்திருக்கிறார்கள். ஒருநாள் அந்த திருக்கோவிலின் தக்கார்  கந்த்கோட்டம் சந்நிதிக்கு வந்தார். நான் பூஜை முறையில் இருந்தேன். ‘ நீங்கள் சிங்கப்பூர் வரவேண்டும். அங்குள்ள முருகன் சந்நிதியில் உங்கள் குரல் ஒலிக்கவேண்டும். அவசியம் வருவீர்களா.’ என்றார்.

‘நிரந்தரமாகவா இல்லை ஏதும் ஆண்டுகள் கணக்கு உண்டா’

‘குறைந்தது இரண்டு ஆண்டுகள்’

‘அப்போ சிங்கப்பூர் செல்வது உறுதியா’

‘ஆமாம் மாமா’

‘மைலாப்பூர் பூக்கார அம்மாவிடம் இது விஷயம் சொன்னேன். மகிழ்ச்சி நீ செல். அதுவே மிகச்சரி.  பொறுத்தமானது வேறு யாருக்கும் தெரியாது’

‘வேறு ஒன்றுமே சொல்லவில்லையா’

‘சொன்னார்கள். அதையும் சொல்கிறேன் என்னைப்பற்றி நீ கவலைப்படாதே. எனக்குச்சுற்றி மனிதர்கள் உண்டு.  என்னிடம் காசு பணம் உண்டு. எனது ஆரோக்கியம் இன்றுவரை நன்றாகவே இருக்கிறது. நீ உன் விருப்பப்படி எங்கு போய்வரவேண்டுமோ வா’

சித்தியின் அப்பா கவலையோடு கபாலியைப்பார்த்தார்.

‘என்னிடம் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லயா கபாலி’

‘சந்தர்ப்பம் வரவில்லை’

‘நிஜமாகத்தானா’

‘ஆமாம் மாமா’

சித்தியின் அப்பா கண் கலங்கினார். மற்றபடி எதுவும் பேசவேயில்லை.  இருவரும் சிறிது நேரம் அமைதியானார்கள்.பின்னர் அவரவர் வேலைக்குச்சென்றார்கள்.  தாத்தாவுக்கு மாத்திரம் மனதுக்குள் புதிய ரணம் ஒன்று உண்டாயிற்று. கபாலி இல்லாமல் தாத்தா சென்னையில் இருப்பாரா அது சாத்தியமா என்கிற அளவுக்குச் சிந்திக்க ஆரம்பித்தார். யாருடனும் இதனைப்பகிர்ந்துகொள்ள அவருக்கு இஷ்டம் இல்லை. பூக்கார அம்மாவும் இதற்குச்சம்மதம் சொல்லியாயிற்று. கபாலிக்கும் சிங்கப்பூர் செல்வதில் விருப்பம் இருப்பது தத்தாவுக்கு உறுதியாகிவிட்டது.

சித்திக்கு இது விஷயம் ஒருநாள் தெரியவந்தது.

‘ மாமி நா சிங்கப்பூர் போயிட்டு வரலாம்னு இருக்கேன்’

‘என்ன கபாலி டூர் எதாவதா’

‘இல்லை மாமி அங்க முருகன் கோவில்ல பூஜை வந்துருக்கு. என்ன கூப்பிடறா’

‘இது என்ன புது சேதி’ சித்தப்பா இந்த விஷயத்தைக்கேட்டுக்கொண்டே அவ்விடம் வந்தார்.

‘நிஜமாவா கபாலி’

‘ஆமாம் மாமா. ஒரு சேவார்த்தி கந்த கோட்டத்தில முருகன சேவிக்க சிங்கப்பூர்லேந்து வந்தார். நா பூஜை அண்ணக்கி. பார்த்தார். ஒரு ரெண்டு வருஷமாவது அய்யா சிங்கப்பூர் வரனும்னு கேட்டுண்டார். அதான் இந்த எற்பாடு’

‘ரொம்ப நாளா இது நடக்கறதா’ பாட்டி இது விஷயம் காதில் வாங்கிப்பேச ஆரம்பித்தாள்

‘எல்லாம் சமீபமாத்தான்’

‘போறது உறுதியாயிட்து’

‘ஆமாம்’

‘மாப்பிள பாத்துகுங்கோ. கபாலிய இனி நாம எந்த கணக்குல வச்சிக்கறது. நீங்க இங்கேந்து அசையமுடியாது. காமு சாமி எல்லாம் இங்கதான். எம் புருஷந்தான் கபாலி இல்லன்னா ஒரு  கை ஒடிஞ்சமாதிரிக்கு பைத்தியமா நிப்பார் கந்தன் குமரன் தான் என் குடும்பத்துக்கு தொண’

‘எப்பவும் எல்லார்க்கும் அவர்தான் தொண’ என்றான் கபாலி.

வெளியில் விளையாடச்சென்றவன் சாமி வீட்டின் உள்ளே வந்தான். ‘இது என்ன எல்லாம் ஒரே கூட்டமா இருக்கு’

‘ஒரு விசேஷம்’

‘என்ன விசேஷம்’

‘கபாலி சிங்கப்பூர் போப்போறார்’

‘அய்யா நானும் சிங்கப்பூர் போவேன்’

‘ரொம்ப சமத்து’ என்றாள் சித்தி.

‘நான் உன்ன கூட்டிண்டு போய் சிங்கப்பூர் எல்லாம் காட்டறேன்’ என்றார் கபாலி.

‘ சிங்கப்பூர் ஏரோப்ளேன்லதான போகணும்’

‘ஆமாம் சாமி. ஏரோப்ளேன்லதான் போகணும். கப்பல்ல போகலாம் . ரொம்ப நாளாகும்’

‘சிங்கப்பூர்ல போயி என்ன மாமா பண்னுவேள்’

‘அங்க ஒரு முருகன் கோவில். இருக்கு. அதுல பூஜ பண்ணப்போறன்’

‘அங்கயும்  முருகன்  கோவில் உண்டா மாமா’

‘உலகம் பூரா நம்ப சாமிங்களோட  கோவில் இருக்கு’

‘நம்ப ஜனம் எங்க போறாளோ அங்க நம்ப சாமியும் போயிடும்’

என்றார் சித்தப்பா.

கபாலி சிலதினங்கள் அந்த அலுவலகம் இந்த அலுவலகம் என்று அலைந்து அலைந்து திரிந்தான். பெரிய சூட் கேஸ் வாங்கி துணிமணிகளை அடுக்கிக்கொண்டான்.  ஊருக்குக்கிளம்பும் நாள் அன்று  கந்தகோட்டம் போய் முருகனை கும்பிட்டு வந்தான்.

‘அப்பா உன் பக்தன் ஒரு  சிங்கப்பூர்காரன்தான்  என்னை  சிஙகப்பூருக்கு வரச்சொல்லியிருக்கான். இது எல்லாம் உன் யோசனை உன் தீர்மானம்தான். நா சிங்கப்பூர் பொறப்பட்றேன்.’

கண்களை மூடிக்கொண்டான். கவிஞர் வாலியின் பாடலைப்பாடினான்.

‘கற்பனை என்றாலும்

 கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ்சுடரே

நிற்பதும் நடப்பதும்

நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும்

நின்செயலாலே

கற்பதெல்லாம் உந்தன்

கனிமொழியாலே

காண்பதெல்லாம்

உந்தன் கண்விழியாலே’

தரைமீது வீழ்ந்து கும்பிட்டான். கோவிலை வலம் வந்தான். வள்ளலார் திரு உருவச்சிலை முன்பாய் நின்று’ ’’அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி’’ மூன்று முறை சொன்னான். வீட்டுக்கு வந்தான். தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி எல்லொருக்கும் நமஸ்காரம் செய்தான் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டான்.

தாத்தாவிடம் நெற்றியைக்கண்பித்துக்கொண்டு நின்றான்.

‘முருகா முருகா முருகா’ என்று தாத்தா விபூதி வைத்துவிட்டார்.

‘காசு ஏதும் தரட்டா’

‘’இந்தக்காசு அங்க செல்லாது’ என்றார் சித்தப்பா.

‘என்னண்ட அந்த ஊர் காசு இருக்கு. அங்க போனா சிங்கப்பூர் ஏர் போர்ட்ல அந்த மனுஷா என்னை வந்து கூட்டிண்டு போய்டுவா. அதுக்கப்பறம் அவா பாத்துப்பா’

‘ரொம்ப சந்தொஷம். மாமா நீங்க பத்ரமா இருக்கணும்.   நீங்க இல்லன்னா நா இல்ல.  எனக்கு அப்பா அம்மா ரெண்டுமே நீங்கதான்.  என் மேல பிரியம் வச்சி சிங்கப்பூர்ல என்ன வாங்கோன்னு கூப்பிடறா. தெண்டாயுதபாணி கூப்பிடறான். நா போறேன். நேக்கு எல்லாத்துக்கும் சொல்லிக்குடுத்து எனக்கு பிச்சை போட்ட குருமூர்த்தி நீங்கதான்.  இன்னும் நா நாலும் தெரிஞ்சிக்கணும். நாலு காசு சம்பாரிக்கணும். நீங்க இப்ப கோவில் ஆத்துல குடி இருக்கேள். வாடகை இல்ல. உங்களுக்குன்னு சொந்தமா ஒரு வீடு இருக்கான்னா அது  இல்ல.  கோவில் குருக்கள்ள எல்லார் கதையும் இப்படித்தான். குருக்களுக்கு   சொத்துன்னு அது மடில இருக்கற விபூதிபைதான். வேற என்னத்தை ஒத்தர் கிட்ட பாக்கமுடியும். குமரன் கொடுக்கறான்  உங்களுக்கு  எல்லாம் பசியில்லாம இருக்கு.  இடுப்புல துணி  சுத்திகறம் அவ்வளவுதான். மேல  மேல நாம படிக்கணும் உலகம் தெரிஞ்சிக்கணும் இந்த சமூகத்தைபத்தி  சின்னதா யோசனை பண்ண நேரம் உண்டா. உருப்படியா  ஒரு நா லீவு உண்டா. அப்பாடான்னு ஒரு ஊருக்கு நிம்மதியா போனதுண்டா. அண்ணாமலைநகர்ல அந்த தருமங்குடி மாமா வல்லான்னா உங்க மாப்ள இங்க  ஒங்களுக்கு ஒத்தாசயா இருக்க முடியுமா சொல்லுங்கோ.  எனக்கு ஆசை இருக்கு. நா திரும்பி வந்து உங்கள சிங்கப்பூர் கூட்டிண்டு போவேன். உங்களுக்கு நா நிச்சயமா உருப்படியா எதானு பண்ணியாகணும்.  தெரியர்தா. அதுக்கு எனக்கு நாலு காசு வேணும். அதுக்குத்தான் நா சிங்கப்பூர் போறேன்’

சித்தப்பாவும்  அவர் மாமனாரும் கபாலியின் வாயையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

‘என்னடி இவன் லெச்சர் பண்றான்’ பாட்டி உள்ளேயிருந்து புலம்பினாள்.

‘இப்படி நா ஒரு நாளும் பேசினது இல்ல. என்ன க்‌ஷமிக்கணும் மாமா’

தாத்தா ‘போடா அசடு’ என்றார்.

‘நேக்கு பெருமையா  நீ இத்தனை பேசறது பாத்து நா ஆறுமுகா பகவானே எனக்கு ஞானஸ்கந்தனன்னா குடுத்துருக்கேன்னு அவனுக்கு நன்றி சொல்லிண்டு இருக்கேன். எனக்கு நீ ஒண்ணும் பண்ணவேண்டாம். உன் வித்தய நீ காப்பாத்திகோ. அது ஒன்ன காப்பாத்திடும். எனக்கு நீ வித்வத்தா இருந்தா அதுதான்  நேக்கு  பரிபூரண சந்தோஷம். மற்றது எதுவும் நேக்கு வேண்டாம். அதுக்குதான்டா  இத்தனை காலம் நா தபஸ் பண்ணிண்டு இருக்கேன்’

தாத்தாவின் பாதங்களைத்தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

‘குமரா’ என்றார் சித்தியின் அப்பா.

சித்திக்கு இந்தக் காட்சிகளைக்காண அச்சமாகக்கூட இருந்தது. தனது தந்தைக்கும் இந்தக்கபாலிக்கும் இத்தனை பிணைப்பா என்று எண்ணிப்பார்த்தாள்.

‘ வேணுங்கறது எடுத்துனூட்டயா கபாலி செக் பண்ணிக்கோ’

‘பாஸ்போர்ட்டும் அந்த ஊர் வீசாவும் இருந்தா போறும்.  ஏரோப்ளேன் டிக்கட் இருக்கணும். வேற ஒண்ணும் எனக்கு வேண்டாம்’

‘எல்லாம் கரெக்ட்டா இருக்கு’

‘இருக்கு மாமா நா வ்ரேன். எல்லார்க்கும் போயிட்டு வறேன்’

குமரன் கோவிலை நோக்கி வணங்கிக்கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்தான் கபாலி.

சாமி எல்லாவற்றையும் பார்த்தான். அவன் அம்மாவையும் பார்த்துக்கொண்டான்.

கபாலியை சூட்கேசோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்ட ராஜா மீனம்பாக்கம் சென்றான்.  வீட்டிலிருந்து யாரும் மீனம்பாக்கம் செல்லவில்லை. அது தேவையும் இல்லை என்றாகி வெகு காலம் ஆகிவிட்டது.

 

வீடு வெறிச்சென்று கிடந்தது. கபாலி இல்லாமல் சாமி மிகவும் வருத்தப்பட்டான். சித்திக்கு விஷயம்  எதுவும் சரியாகப்பிடிபடாமல் பூடகமாக இருப்பதாகவே உணர்ந்தாள். தனது அப்பா  கபாலி சிங்கப்பூர் சென்றதை ஜீரணிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டு இருப்பதை சித்தி அறிந்துகொண்டாள்.  ஒருக்கால் தான் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் கபாலி சிங்கப்பூர் செல்லாமல்  சென்னையிலேயே இருந்திருப்பானோ என்னவோ. நான் வராமல் எப்படி?  அது சாத்தியமே இல்லை. சித்தி தன்னையே கேள்வி கேட்டு விடையும் சொல்லிக்கொண்டாள்.

சித்தப்பாவும் அவர் மாமனாரும் கோவிலுக்குச்சென்று வந்தனர். சித்தப்பாதான் தாத்தா முறையைப்பார்த்துக்கொண்டார். கபாலி சிங்கப்பூர் சென்றதிலிருந்து தாத்தா சரியாக சாப்பிடுவதும் இல்லை. கபாலியை யாரேனும் வெடுக்கென்று பேசியிருப்பார்களோ என்று சந்தேகம் அடிக்கடி அவருக்கு வந்தது. அதனால் அவன் மனம் ரணமாகியிருக்குமோ என்று யோசித்தார்.

ஒருநாள் மதியம் ஆட்டோக்காரன்  ராஜாவை அழைத்தார். மைலாப்பூரில் ஒரு சிநேகிதனைக்காணவேண்டும் என்று புறப்பட்டார். சித்தப்பா கோவிலில் இருந்தார். சித்தியிடமும் தன் மனைவியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

‘ஒண்டியா போறேளா’

‘என் ஆட்டோக்காரன் இருக்கான் அவன் தான் பெரிய துணை’

சித்தியின் அப்பா ஆட்டோவில் ஏறிக்கொண்டு’ மைலாப்பூர் போ’

என்றார்.

‘பூக்கடைக்குத்தான சாமி’

தாத்தா சிரித்துக்கொண்டார். ‘கழுத கெட்டா குட்டிசுவரு’

ஆட்டோ வேக வேகமாக சென்றது.

‘ஏம்பா ராஜா கபாலிய நீ ஏரோப்ளேன்ல ஏத்திட்டு வந்தியே. உன் கிட்ட எதாவது சேதி சொன்னானா’

‘ஏன்கிட்ட ரகசியமா சொல்றாரா, உங்ககிட்ட சொல்லாத  சேதிய’

‘இல்லப்பா டக்குன்னு கெளம்பிட்டான்’

‘டக்குன்னு கெலம்பமுடியாது சாமி’

‘அப்ப பிளான் இருக்குதுங்கற’

‘இல்ல யாராவது எண்ணிக்காவது நோவுறமாதிரிக்கு பேசியிருக்கலாம்’

‘பின்ன உங்கள உட்டுட்டு போற புள்ளயா அது’

‘ஒண்ணும் புரியல’

‘புரியாம எம்மானோ இருக்குது சாமி’

‘உனக்கு ஏதும் சேதி தெரியுமா’

‘தெரியும் ஆனா நா சொல்லுலாமா. நா  கூலிக்கு ஓட்டுற வண்டிக்காரன். பலதும் அறிஞ்சவன். ஆனா  அத சொல்லவைக்காதே’

‘சொல்லுப்பா ராஜா’

‘ஒரு நா கபாலியும் உங்க பொண்ணும் இந்த பூக்கடை அம்மாவ பாக்கவந்தாங்க நா இட்டாந்தேன்’

‘இது என்ன புது சேதி’

‘ஆமாஞ்சாமி. நாந்தான இட்டுகினு வந்தன்’

‘பூகடையில ஒரு மால வாங்கிகிட்டு. கோவிலுக்கு சாமிகும்புட  போச்சி உங்க பொண்ணு. அந்த பூக்கார அம்மாகிட்டயும் பேசுனது. அந்த தம்பிகிட்டயும் பேசுனது.  சேதி இன்னதுன்னு எனக்கு வெளங்குல’

சித்தியின் அப்பாவுக்குக் குழப்பமாக இருந்தது.’ சித்தி ஏன் இங்கு வந்தாள் அவள் புருஷனுக்கு இந்த சேதி ஏதும் தெரியுமா. நாம் அவரிடம் ஒருமுறை கபாலி பற்றிச்சொல்லியிருக்கிறோம்’ மனதில் யோசித்துக்கொண்டே வந்தார்.

ஆட்டோ வேக வேகமாக வந்தது.

மைலாப்பூர் குளக்கரைதாண்டி அந்த பூக்கடை வாசலில் வந்து நின்றது. சித்தியின் அப்பா இறங்கினார்.

பூக்கார அம்மா பூ கட்டிக்கொண்டு இருந்தாள்.

‘எதும் மால வேணுமா இவ்வளவு தூரம் வந்திருக்கு கந்தகோட்டத்து  குருக்களு’

‘கபாலி சிங்கப்பூர் போயிட்டான் தெரியும்ல’

‘எங்கிட்ட சொல்லிகிட்டுதான் போனான்’

‘நீ ஒண்ணும் சொல்லலயா’

‘என்ன சொல்லணும் சாமி நான்’

‘’உனக்கு அதுல சம்மதமா’

‘ஏன் சம்மதம்தான். நீங்க அவன நாலு விஷயம் சொல்லிக்குடுத்து பெரிய மனுஷனாக்கினிங்க. அவனுக்கு வெளிநாட்டுல வா வா ன்னு அழைப்பு வருது. அது உங்களுக்கு பெருமை. எனக்கு சந்தோஷம்.’

‘உனக்கு அவன் ஒண்ணும் செய்யவேணாமா’

‘ஏன் செய்யணும். நா என்ன பாத்துகுவேன். அதுக்கு எனக்கு வழி தெரியும். நா அவனண்டா சொல்லிட்டேன். நீ என்ன பத்தி யோசனை பண்ணாதே. நீ உன் வழில போ. நா என்ன பாத்துகுவேன்’

‘இதுதான் உன் சேதியா’

‘ஆமாம்’

‘எனக்கு அவன் வெளிநாடு போனத ஏத்துக்க முடியல. நா கெடந்து தவிக்கறன்’

‘அது தப்பு சாமி. தப்பு’

பூக்கார அம்மா தனது பூ கட்டும் வேலையை நிறுத்தாமல் செய்துகொண்டே இருந்தாள்.

‘ மால ரெடியான்னு ஆளு இப்ப வந்திடும் நா அத  ரெடி பண்ணணும். வேல கெடக்கு.  இதுல என்ன யோசன இருக்கு . சாமி நீங்க  வேலய பாருங்க’

சர்வ சாதாரணமாக இருந்தாள் பூக்கார அம்மா. மனச்சங்கடத்தை அடக்கிக்கொண்டு சித்தியின் அப்பா ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டார். பூக்கார அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘சாமி போவுலாமா’

தாத்தா பதில் ஏதும் சொல்லவில்லை. ராஜா ஆட்டோவைக்கிளப்பிக்கொண்டு வீட்டுக்குத்திரும்பினான். அவருக்கு மன ஆறுதல் எதுவும் எங்கிருந்தும் கிடைக்காது என்பது உறுதியானது.

‘சினேகிதரைப்பார்த்தாச்சா’

‘பாத்தேன் பேசினேன்’

சித்திக்கு அவர் அப்பா பொய்தான் சொன்னார்.

தாத்தாவின் முகம் பிரகாசம் இல்லாமல்தான் இருந்தது.

தான் பெற்ற பெண்ணே மைலாப்பூர்  பூக்கடைக்குச்சென்றுவந்த சேதியெல்லாம் ஆட்டோக்காரன் தன்னிடம் சொன்னது மனதில் ரணமாகியிருந்தது.

’தான் தவறு எதுவும் செய்யவில்லையே. ஆனால் ஏன் இந்த உலகம் தன்னைச்சரியாக விளங்கிக்கொள்ள மறுக்கிறது’ என்கிற உறுத்தலோடு சித்தியின் அப்பா நடமாடிக்கொண்டிருந்தார்.

 

மறுநாள் காலை சித்தியயின் அப்பா படுக்கையைவிட்டு எழாமல் இருந்தார்.

‘டீ அப்பா இன்னும் எழுந்திரிக்கல’

‘இல்லம்மா’

‘இப்பிடி ஒருநாளும் இருக்க மாட்டார். பாரு நீ’

சாமி தாத்தா பக்கத்தில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தான். அவன் சிறு பிள்ளை தாமதமாகக்கூட எழுவான். அது சஹஜம்தான்.

சித்தி அவருடைய தந்தையை எழுப்பப்போனார். ‘அப்பா அப்பா அப்பா’ கத்தினாள் சித்தி.

‘ஏன் கத்தற’

‘தாத்தாவ எழுப்பறேன்’ சாமிக்கு பதில் சொன்னாள் சித்தி.

சாமி தாத்தாவைப் பிடித்து உலுக்கி எழுப்பினான்.

‘அம்மா தாத்தா உடம்பு ஜில்லுனு இருக்கு’

‘என்னடா சொல்லற’

சித்தி தனது அப்பாவைத்தொட்டுப்பார்த்தார் உடம்பு ஜில்லென்று இருந்தது.

‘அப்பா அப்பா அப்பா’ என்று தலையில் அடித்துக்கொண்டு கத்தினார்.

சித்தப்பா அருகே ஓடிவந்து பார்த்தார். தனது மாமாவைத்தொட்டு தொட்டு பார்த்தார். மேல் துண்டால் தனது வாயை மூடிக்கொண்டார்.

‘போயாச்சுடீ உன் அப்பா போயாச்சு’ சித்தப்பா தனது தலையில் அடித்துக்கொண்டு ‘மாமா மாமா நீ ஏமாத்திட்டு போயிட்டயே என்ன பண்ணுவேன்’

சாமி திரு திரு என்று விழித்தான் .

‘தாத்தா நம்பள விட்டு போயிட்டார்டா’ சித்திஓங்கி அழுதாள். இங்கு நடக்கும் விஷயங்களைக்கவனித்த பாட்டிக்குக்கு தெரிந்துவிட்டது.

‘என்ன விட்டுட்டு போயிட்டயே. நா  பழுத கயறா கெடக்கறேனே. நடக்க முடியலயே.  நீ மாப்பிள மாதிரி இருப்பயே உனக்கு இவ்வளவு அவசரமா. ஒரு டம்பளர் தூத்தம் யாரையும் கேக்காம கண்ண மூடினூட்டயே. அவ்வ்வளோ பாபிகளா நாங்க. முருகா குமரா உனக்கு இதுலஎல்லாம் சம்மதமா. அய்யோ’ அழுதுகொண்டே இருந்தாள்.

சித்தப்பா உள்ளூரில் எல்லோருக்கும் சேதி சொன்னார். வரவேண்டியவர்கள் வந்தார்கள். கபாலிக்கு சேதி சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை. அவனால் உடனே திரும்பவும் முடியாது.  ஆக  தாமதித்து  சேதியை  சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். கந்த கோட்டம் கோவில் பூஜை தாமதமாகிறது. சவம் எடுத்தாகவேண்டும். மைலாப்பூர் பூக்கார அம்மாவுக்கு ஆட்டோக்காரன் ராஜா சேதி சொல்லிவிட்டுவந்தான். அவன் ஆட்டோவிலேயே ஒரு பெரிய மாலை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து அந்த அம்மா வந்தார். தாத்தாவின் சடலத்திற்குச்சாத்திவிட்டு  ஒரு சுற்று சுற்று  வந்தார். கீழே விழுந்து வணங்கினார்.

‘நேத்து  என்னண்ட வந்தயே சாமி எனக்கு விளங்காமபோச்சே, நா முண்டம் நா முண்டம் வெத்து முண்டம்.  நீ  கடவுளு’ இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு அழுதார். சுற்றும் முற்றும் பார்த்தார்.

‘நல்ல வுசுறு போய் சேந்துடுச்சி.’ என்றார் பூக்ல்கார அம்மா.

ஆட்டோக்காரன் ராஜா அவரை அழைத்துக்கொண்டு போய் மைலாப்பூரில் விட்டு விட்டு வந்தான்.  காரியங்கள் முடிந்தன.  மின்சார சுடுகாடு என்பதால் ஒரேநாளில் இரண்டு நாள் காரியமும் முடிந்துபோயிற்று.

நான் அம்மா அப்பாவுடம் பத்தாம் நாள் காரியத்திற்குச்சென்று வந்தோம். பூஜைக்கு பக்கத்து ஊரான  சிவபுரியிலிருந்து ஒரு குருக்களை   இரண்டு நாட்களுக்கு  மட்டும் என்று மெய்க்காவல் சுப்புணி ஏற்பாடு செய்தார்.

எனக்கு சாமிநாதனைப்பார்க்கவும் பேசவும் இந்தப்பயணம் வாய்ப்பாகவும் அமைந்தது. அந்தவகையில் எனக்கு திருப்திதான். நான் விடுதிவேலைக்குப்போவதை சைக்கிள் கற்றுக்கொண்டதை அவனிடம் சொன்னேன். அவன் சந்தோஷப்பட்டான்.

‘படிப்பு என்னவானது பேராசிரியர் எப்படி  இருக்கிறார்கள்’ எல்லாம் கேட்டான்.

‘நீ பெரிய மனுஷை ஆயிட்டே அக்கா’

நான் சிரித்துக்கொண்டேன்’

புது சைக்கிளும் புது செல் போனும் பேராசிரியை எனக்கு வாங்கிக்கொடுத்ததைச்சொன்னேன்.

‘ப்ரொபசர் ரொம்ப ரொம்ப நல்லவங்க’

‘ஆமாண்டா கடவுள் மாதிரி’

‘கடவுள் இப்பிடி செய்வாரா என்ன’

நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

 பேராசிரியர்

மாதம் ஐயாயிரம் சம்பளம் தருவதைச்சொன்னேன்.

என் கைகளைப்பிடித்துக்கொண்டு முத்தமிட்டான்.

‘’போன் பேசுவேன் கம்ப்யூட்டர்ல வேல செய்ய கத்துகறேன். சைக்கிள் விடறேன்’

‘சைக்கிள்ளதான் வேலைக்கு போறயா’

‘ஆமாம்’

‘அப்ப நீ  புது வேதா’ சாமி சிரித்துக்கொண்டான். நாங்கள் பேசுவதை சித்தியும் சித்தப்பாவும் கவனித்துக்கொண்டேயிருந்தார்கள்.

‘முன்னுக்கு வந்துட்டே வேதா’

‘சித்தி அந்த சிவகாமி ப்ரொபசர்தான் தெய்வமா இருந்து உதவறா’

சித்தப்பா நிறைவோடு என்னைப்பார்த்தார்.

‘இன்னும் மேல மேல வரணும் வருவே’ என்றார் சித்தப்பா.

‘கொழந்த சமத்து’ என்றாள் பாட்டி. தன் கணவனைப்பறிகொடுத்த பாட்டி அடிக்கொருதரம் புலம்பினாள்.

‘கபாலி எங்கே’ சாமியைக்கேட்டேன்

‘அவர் சிங்கப்பூர் முருகன் கோவிலுக்கு பூஜைன்னு போயாச்சு’

‘நெஜமாவா’

‘ஆமாம் அக்கா’

சித்தப்பாவும் சித்தியும் சாமி சொல்வதை  ஆமோதித்தனர்.

‘அண்ணாமலைநகர்க்கு நீ வர்ரது’

‘அனேகமா இல்லண்ணா’ சித்தப்பா என் அப்பாவுக்குப்பதில் சொன்னார்.

‘இப்ப அப்பாவும் போயாச்சு’ சித்தி கண்களில் நீர்சொட்டப்பதில் சொன்னார்.

‘பாப்பம் இப்பக்கி எதுவும் சொல்ல முடியாது. மாமா மொறய கோவில்ல நா பாக்கணும். மாமி படுத்துண்டு இருக்கா. கபாலி சிங்கப்பூர் போயாச்சு. இன்னும் என்னத்த நா சொல்றது’

’அப்பா டக்குன்னு இத்துனூட்டார்.’ என்றாள் சித்தி.

‘நா கெடக்கேன் நா கெடக்கேன் பாழும் முண்டயாகி நா கெடக்கேன் எல்லாரும் பாருங்கோ’ என்று சத்தம் போட்டாள் பாட்டி.

‘அம்மா சும்ம இரு. நம்ப கைய்ல எதுவும் இல்ல’ என்று சித்தி சத்தமாகச்சொன்னள்.

‘கபாலிக்கு சேதி சொல்லியாச்சா’

‘இல்லண்ணா. சொல்ல மனசு வரல. அவன் இப்பதான் போயிருக்கான். ஒரு பத்து நாளு ஆகல. அவன்   என் மாமா  செத்துபோனத  தாங்குவானான்னு தெரியல. ’உன்ன நா வந்து சிங்கப்பூர் கூட்டிண்டு போவேன். எனக்கு அம்மா நீ அப்பா நீ’ ன்னு சொல்லிட்டு ஏரோப்ளேன்ல போயிட்டான்’ கோவென்று அழுதார் சித்தப்பா.

சித்தப்பா அழுவது சகிக்கமுடியாமல் இருந்தது. சித்தப்பா அழுது இன்றுதான் நான் பார்க்கிறேன்.

‘அழப்பிடாது அழப்பிடாதுடா’ அப்பா அவருக்குச் சமாதானம் சொன்னார்.

சாமிநாதனை வந்த வுடனேயே  பூக்கடை நிறுத்தம் அருகே ஒரு  தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டிருப்பதாய் சித்தி சொன்னாள். அவன் நன்கு படித்துக்கொண்டிருப்பதாகவும் தனது திருப்தியைச்சொன்னள்.

நானும் எனது பெற்றோரகளும் அண்ணாமலைநகர் திரும்பினோம். நான் எனது விடுதி வேலைக்குச்சென்றுகொண்டிருந்தேன். வேலை சரியாக இருந்தது.  படிக்கவும் எழுதவும் நேரம் கிடைப்பது அரிதாகிப்போனது. நான் கணிப்பொறியில் கதை அடிக்கப்பழகிக்கொண்டேன். எழுத்தாளர் வேதா என்கிற என் பெயரை  எழுத்தாளர் சிகா என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். சிவகாமி எனது அன்பிற்கினிய பேராசிரியரின் பெயர். அதனில் சியையும் காவையும் எடுத்துக்கொண்டேன்.  எனக்கு அதுவே சிகா.

நான் சிகா என்ற பெயரில் கதை எழுதுவதை அறிந்த பேராசிரியர்  சிவகாமி நெகிழ்ந்துபோனார். நிறையவே கதைகள் பிரசுரமாயின.  கணிப்பொறி மிகச்சவுகரியமா இருந்தது. கதைகளைச்சேர்த்து சேர்த்து வைத்தேன். அவை தொகுப்புக்களாக வெளிவந்தன. எங்கிருந்து எல்லோமோ பரிசுகள் என்னைத்தேடிவந்தன. எழுத்தாளர் சிகா என்று எழுத்துலகில் அழைக்கப்பட்டேன்.  பெரிய பெரிய இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் சென்றுவர ஆரம்பித்தேன். என் பெற்றோர் என்னை என் விருப்பத்திற்கு விட்டு நிம்மதியாகவும் இருந்தனர். என் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கைப்பெருகி எனக்கு ஆதரவாக இருந்தது.

சிங்கப்பூரில் ஒரு தமிழ் அமைப்பு. சிங்கைத்தமிழ்ப்பேரவை. அது தமிழ்ச்சிறுகதையில் ஒரு போட்டி வைத்தது. அதனில் வெற்றி பெறுபவர்கள் சிங்கப்பூர் அழைக்கப்படுவார்கள். பரிசாக இந்திய ரூபாய் ஒரு லட்சம் என்று அறிவிப்பு வந்தது. இந்தப்போட்டிக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்புவது என்று தீர்மானித்தேன். ஒருவாரம் யோசனை செய்தேன். ஒரு நல்ல கரு கிடைத்தது. அதனை எழுத ஆரம்பித்தேன். கதை நன்றாக வந்திருந்தது. அதனை சிங்கைத்தமிழ்ப்பேரவைக்கு அனுப்பினேன். அது தேர்வாக வேண்டுமே என்று நான் வேண்டாத தெய்வம் இல்லை. இதற்குஎல்லாம் தெய்வத்தை வேண்டுவதா அது சரியில்லை என்று நானே சொல்லிக்கொள்வேன். மனம் ஒரு குரங்கு என்பதை அப்போதுதான் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்.   சிங்கப்பூர் அனுப்பிய  சிறுகதை போட்டிக்கு முடிவு எப்போது வரும் என்று காத்திக்கிடந்தேன்.

சிங்கப்பூருக்கு அனுப்பிய சிறுகதையின் கரு இதுதான். ‘வள்ளுவர் ஏமாந்தார்’.

திருவள்ளுவரும் வாசுகியும் மகாவிஷ்ணுவிடம் சென்று  ஒரே ஒருமுறை பூவுலகம் சென்று வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வேண்டுகிறார்கள். மகாவிஷ்ணு அப்படியெல்லாம் வேண்டாம் போய்விடுங்கள் என்கிறார். ‘ஸ்வாமி நான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக திருக்குறள் என்னும்நூலை எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன். மக்கள் அதனை எப்படி ஏற்றுக்கொண்டார்கள். எப்படி  எப்படி வாழ்கிறார்கள் என்று பார்க்க  எங்களுக்கு  மிகவும் ஆசை’ என்கின்றனர் இருவரும். 

தேவ கணங்களை அழைத்த மகாவிஷ்ணு வள்ளுவரையும் வாசுகியையும் பூலோகம் அழைத்துச்சென்று அவருக்குச்சம்மந்தமான இடங்களைப்பார்வையிட வைத்து திரும்பவும் பத்திரமாக  வைகுண்டம் வாருங்கள் என்று கட்டளையிடுகிறார்.

தேவகணங்கள் அவர்களைப்பல்லக்கில் சுமந்துகொண்டு தமிழ்நாடு அழைத்து வருகின்றனர். சென்னையில் மைலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் அறுபத்து மூவர் விழா கோலாகலமாய் நடக்கிறது.

‘நம்மை யாரேனும் பார்த்துவிடுவார்களா’ வாசுகி கேட்க வள்ளுவர் மகாவிஷ்ணு அனுமதித்தால் நம்மைப்பார்க்கலாம். மற்றபடி யாருக்கும் நாம் தெரியமாட்டோம் என்றார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஊர்வலத்தில் அறுபத்து நான்காவது நாயன்மாராக திருவள்ளுவ நாயனார் இருப்பதை இருவரும் காண்கின்றனர். தேவ கணங்கள் அவர்களைமைலாப்பூரிலுள்ள  திருவள்ளுவர் கோவிலுக்கு அழைத்துச்செல்கின்றனர். திருவள்ளுவர் தெய்வசாந்நித்யத்தோடு இருப்பதைக்காண்கின்றனர். நுங்கபாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டத்திற்கு அவர்களை இட்டுச்செல்கின்றனர். அக்கலைச்சின்னங்கள் உருவாக்கப்பட்ட போது இருந்த சிரத்தை தற்போது குறைந்துபோய் இருப்பதை இருவரும் காண்கின்றனர். தேவகணங்கள்  அவர்களைக் குமரிமுனைக்கு அழைத்து வருகின்றனர். விண்ணைத்தொடும் வள்ளுவர் சிலை.  இருவரும் அதனைக்கண்டு பிரமித்துப்போகின்றனர். குமரிமுனையில் ஒரு பெட்டிக்கடையில்  தொங்கும் ஒரு தினசரியை வாங்கிப்படிக்கிறார் திருவள்ளுவர்.  ’சுவாமி பிரேமானந்தாவுக்கு  இரட்டை ஆயுள் தண்டனை. கொலை  கொள்ளை  கற்பழிப்பு எனப்பல குற்றங்களைப்புரிந்த போலி சாமியார் கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.’ராம்ஜெத்மலானி என்கிற டில்லித்தலைநகத்து  பிரபல பெரும் படிப்பு வக்கீல் அந்த போலி சாமியாருக்கு ஆதரவாக வழக்காடினார். இலங்கையில் பிறந்த சாமியார் திருச்சியில்  இறைவன் பெயரால் ஆஸ்ரமம் அமைத்து பல பெண்களைக்கற்பழித்துக் கொலைசெய்தார். இச்செய்தியை எப்படியோ அறிந்த கொண்ட  சாமான்யர்களையும் கொன்று புதைத்தார்.  ஆயுள் தண்டனை பெற்ற  போலி சாமியார்  புதுக்கோட்டை நீதிபதி தீர்ப்பின் உரை கேட்டு’ வாய்மையே வெல்லும்’ என்று வெளியே வந்தார்.’

வாசுகி தன் கணவர் செய்தி படிப்பதைக்கேட்டுக்கொண்டே வந்தார்.

‘நான் ஒருத்தன் எழுதி  என்ன செய்யமுடியும்’ என்று ஒங்கிக்கத்தினார்.

தேவகணங்கள் இருவரையும்  வைகுண்டம் அழைத்துவந்தனர்.

மஹாவிஷ்ணு சோகமாய்த்திரும்பிய திருவள்ளுவரைப்பார்த்து’ அதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன். நீர் ஆசைப்பட்டீர். பட்டீர்தானே’

திருவள்ளுவரும் வாசுகியும் தலைகுனிந்து  நின்றனர்.

இதுதான் அச்சிறுகதை. சிங்கப்பூர்தமிழ்ப்பேரவை என்ன முடிவு சொல்லப்போகிறதோ என்று ஆசையாக இருந்தேன்.

ஒருநாள் முடிவும் வந்தது. நான் தான் முதற்பரிசு பெற்றேன். சிங்கப்பூர் செல்வதும் இந்தியப்பணமாக ஒரு லட்சம் கிடைப்பதும் உறுதியானது. அம்மா அப்பா பேராசிரியர் எல்லோரும் மகிழ்ந்துபோயினர். மகிழ்ச்சிப்பிரவாகத்தில் நான் திளைத்தேன்.

நானும் என் அம்மாவும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பா கோவிலுக்குச்சென்றிருந்தார்.

‘நீ சிங்கப்பூர் போப்போற’

‘ஆமாம்’

‘இப்பிடியெல்லாம் நடக்கப்போறதுன்னா ஆர் கண்டா’

‘உனக்கு பயம் இல்லையா  நீ பொண்குழந்தையாச்சே’

‘ஏம்மா ஏரோப்ளேனை பொம்மநாட்டி ஓட்டறா தெரியுமா’

‘ஆமாம் நீ பிளேன்லதான போவே’

‘ஆமாம் டிக்கட் அவாளே எடுத்துகுடுத்துடுவா’

‘இங்க பாஸ்போர்ட் இன்னும் ஒண்ணு இருக்கே அது’

‘அது வீசா எல்லாத்துக்கும்  என்னன்ன  வேல உண்டோ  அந்தந்த வேல நடந்துண்டு இருக்கு.’

‘அப்பாவுக்கு இதெல்லாம் சொல்லிட்டயா’

‘இன்னும் சொல்லல. சொல்றேன்’

அப்பா கோவில்வேலயை முடித்துக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தார். நாங்கள் பேசிக்கொண்டு இருப்பதக்கவனித்தார்.

‘டீ நீ சிங்கப்பூர் போப்போறேன்னு  ஒத்தர் ரெண்டு பேர் விஜாரிச்சா. என்ன சுகா அப்பாதானே நீங்கன்னு கேட்டா’

‘இப்ப நீ சுகா அப்பா ஆயிட்டே’

‘நா உனக்கு பேரு வச்சேன். நீ ஒனக்கு  ஒரு பேரு வச்சினூட்டே’

‘இதெல்லாம் ஒரு நடைமுறை. பேரு மாத்தி வச்சிக்கணும்னு ஒண்ணும் கட்டாயம் இல்ல’

‘நாங்க என்னத்த கண்டம்’

‘நீ ஒண்ணுத்தையும் காணவேண்டாம் அந்த கபாலி சிங்கப்பூர்தானே போய் இருக்கான்’

’ஆமாம் இப்பதான் எனக்கு நெனவு வர்ரது’ என்றாள் அம்மா.

‘கபாலிய நீ போய் பாக்கலாம்’

’நா பாக்க கூடாதுன்னு இல்ல. சந்தர்ப்ப சூழ்நிலை எப்படி அமையுதோ’ பதில் சொன்னேன்.

 ஒருநாள் மாலை நேரம் பேராசிரியர் வீட்டுக்குப்போய் பேசிவிட்டு வரலாம் என்று முடிவு செய்தேன். பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.

பேராசிரியை வீட்டில்தான் இருந்தார்.

‘வா வேதா’

‘வணக்கம்.  இந்த சிறுகதை போட்டி முடிவு. நா முதற்பரிசு வாங்க சிங்கப்பூர் போறது இது பத்தி உங்க கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்’

பேராசிரியர் எழுந்து எனக்கு கை கொடுத்தார். ‘நீ வரணும் அத உன் வாயால சொல்லணும்னு காத்துகிட்டு இருந்தேன். வந்துட்டே. உங்க அம்மா அப்பா என்ன சொன்னாங்க.’

‘அவுங்களுக்கு இது எல்லாம் எப்பிடி சாத்தியமாச்சின்னு யோசிக்கறாங்க. உங்களதான்  எப்பவும் பெருமையா பேசிக்கறாங்க’

‘உங்கிட்ட திறமை இருக்கு. அத வெளில கொண்டுவந்தேன். இன்னும் உங்கிட்ட நிறைய நான் எதிர் பார்க்கறேன். நீ செய்வே எனக்கு நம்பிக்கை இருக்கு’

‘பாஸ்போர்ட் வீசா எல்லாம் எப்பிடி இருக்கு’

‘அது மீனம்பாக்கத்துல ஒரு  வீசா ஏஜென்சிகிட்ட சொல்லியிருக்காங்க. அவுங்க என்னோட தொடர்பு கொள்வாங்க. நா பேசிகிட்டு இருக்கேன்’

‘ரொம்ப சந்தோஷம். செல் போன் உனக்கு நல்ல உபயோகம் ஆகிறது.’

‘ஆமாம் மேடம். செல் போன் கம்ப்யூட்டரும் இல்லாம இனி மனிதர்கள் இயங்க முடியாதுன்னு ஆயிடும்’

‘அதுல எவ்வளவோ சவுகரியம் இருக்கு. இன்னும் எத்தனையோ வரப்போவுது. நீ நெட் வொர்க் கனெக்‌ஷன் கொடுத்து இருக்கயா வேதா’

‘கொடுத்து இருக்கன்  மேடம்’

‘எல்லாம் கத்துகிட்ட’

‘விடுதியில பசங்க இருக்காங்க. அவுங்க எல்லாத்துலயும் அத்துபடி. அவங்களோட ஒக்காந்துகுவேன். அவங்க ஓய்வு நேரத்துல நா கத்துகறது. மொதல்ல ஏதோ ரொம்ப பயமா இருந்துது. பயந்து ஓரம்போயிருந்தா ஒண்ணும் தெரிங்ஜ்சிக்காம போயிருப்பேன். இப்ப எல்லாமே சுலபமாயிடிச்சி. எனக்கே ஆச்சரியம் நானா இப்படி என்று யோசித்துக்கொள்வேன். எல்லாம் நீங்க எனக்கு செஞ்சது. யார் செய்வா எனக்கு. நீங்க  வெறும் சிவகாமி இல்ல அந்தக்கடவுள் அம்பிகை சிவகாமிதான் எனக்கு’

‘இதெல்லாம் வேண்டாம் எனக்கு பிடிக்கறது இல்ல’

‘நா சொல்லலன்னா தப்பாயிடுவேன்’

‘சரி வேதா நா அப்பாவ பாக்க போறேன். அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னார்’

‘சென்னையில எங்க சித்தியோட அப்பா இறந்ததை உங்க கிட்டசொல்லணும்’

‘அதுக்குதான் சென்னை போனயா’

‘ஆமாம். அந்த கபாலி குருக்கள் உங்களுக்கு தெரியும்தானே’

‘ஆமாம் ஒரு நாள் கோவில்ல வச்சி பாத்தேன்’

‘அவ்ர் சிங்கப்பூர் தெண்டாயுதபானி கொவில்ல பூஜைக்கு சேந்துட்டார். இப்ப சென்னையில இல்ல’

‘ஆமாம் விவரமான  மனுஷன். நல்ல கொரல் நல்ல கம்பீரம் நல்ல உழைப்பாளி எதையும் சட்டுனு கத்துகிடுவாரு. எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர.   எனக்கு  அவர் மேல் ரொம்ப  மரியாத. தமிழ் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் எல்லாம் படிச்சி இருக்காரு. நாலும் தெரிஞ்சவங்க இந்த நாட்டுல இருக்க வெளிநாட்டுக்காரங்க விடமாட்டாங்க. அவுங்க நாட்டுக்கு  கூட்டிகிட்டு போய்டுவாங்க.  ஆனா இதுல சர் சி வி ராமன்னு ஒரு விஞ்ஞானி நோபல் பரிசு வாங்கினவரு.  திருச்சிகாரரு. அவுரு நம்ம  மண்ண நேசிச்ச  மிகப்பெரிய விஞ்ஞானி. பெங்களூருலதான் அவ்ர் கடைசிவரைக்கும் ஆராய்ச்சி பண்ணினாரு. அவர் படிச்சது எல்லாமே இந்த இந்தியமண்ணுலதான். உலகப்புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜம். கும்பகோணத்துல படிச்சாரு. கம்ப்யூட்டர் வராத காலத்துல அவரே கம்ப்யூட்டர்மாதிரி கணக்கு போட்டவரு.  இந்தமாதிரி எத்தனையோ பேரும்  வித்தியாசமா இருக்காங்க’

‘எங்க சித்தி சித்தப்பா இனி அண்ணாமலைநகர் வர்ரது சாத்தியமான்னு தெரியல’

‘வரவேமாட்டாங்க. கந்தகோட்டம்  கோவில் பூஜை மொற இருக்கு. அத உங்க சித்தப்பா பாக்கணும். அந்த பாட்டியம்மா இருக்கு. கபாலியும் சிங்கப்பூர் போய்யிட்டாருன்னு சொல்ற. நீ கூட சிங்கப்பூர் போற கபாலிய முடிஞ்சா பாக்கலாம்.’

‘விலாசம் தெரியாது. அவுருக்கு என் சித்தியின் அப்பா இறந்ததும் தெரியாது. சொல்லவேண்டாம்னு சித்தப்பா முடிவு பண்ணிட்டாரு. கபாலிய அந்த தாத்தாதான் ஆளாக்குனது எல்லாம். அவுரு சிங்கப்பூர் போனத அந்த தாத்தாவால தாங்கிக முடியல. அதுலதான் அவர் இறந்துருக்கணும்’

‘இருக்கலாம். மனுஷங்கதான எல்லாரும்’

நான் பேராசிரியரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.

‘மேல மேல வருணும் நீ’ வாழ்த்துக்களைச்சொன்னார் பேராசிரியர்.

‘எல்லாம் உங்க ஆசீர்வாதம்’

நான் வீதியில் இறங்கி  நடக்க ஆரம்பித்தேன்.

‘சைக்கிள்ள வரலாம்ல’

‘விடுதிக்கு போறதுக்கு மட்டும்தான் சைக்கிளு’ சொல்லிய நான் என் வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

அடகுக்கடை சேட் என்னைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டே போனார்.

நான் சிங்கப்பூர் செல்லவிருப்பது அவருக்குத்தெரிந்தும் இருக்கலாம்.  அதுவும் ஒரு பத்திரிகைச்செய்தியாகிவிட்டதே.

 

நான்  சிங்கப்பூர் செல்வதற்குத் தயார் ஆனேன். அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டேன். பேராசிரியடம் சொல்லியாயிற்று. விடுதியில் பர்வத வர்தனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்,

அப்பா என்னை அழைத்துக்கொண்டு தர்மகர்த்தாவிடம் போனார். அவர் வீட்டுக்கே போனோம்.

‘என்ன அய்யா இவ்வளவு தூரம்’

‘ஒங்க கிட்ட ஒரு சேதி சொல்லணும்னு வந்தேன்’

‘பாப்பா கூட்டுகிட்டு வந்திருக்கீரு’

‘அதான் செய்திங்க. பாப்பா சிங்கப்பூர் போகுது.’

‘இது என்ன புது சேதி’

‘பாப்பா கதை எழுதிருக்கு. அதுல தேர்ந்து எடுத்து இருக்காங்க. பாப்பா முதல் பரிசு வாங்கியிருக்கு. சிங்கப்பூர்  போய் பரிசு வாங்கிகிட்டுவரணும்’

‘சிங்கப்பூரா’

‘ஆமாம்’

‘இந்த பாசுபதேசுரர் கோவில்ல தேவாரம் பாடுன ராசகோபால் ஓதுவாரு அங்கதான் போயிருக்காரு. அவுருபொண்ணு அங்க இருந்துச்சி. விலாசம் எனக்கு தெரியாது. ஆனா நல்லா பாடுவாரு. விஷயாதி’

 

‘இது என்ன கேள்விப்படாத சேதியா இருக்கு’

நான் தர்மகர்த்தாவுக்கு மீண்டும் ஒரு முறை வணக்கம் சொன்னேன். முதலில் சொன்னதை எங்கே அவர் கவனித்தார்.

‘ந்ல்லா இரு பாப்பா’ என்றார்.

‘அதான் உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்’

‘நா எதாவது செய்யுணுமா’

‘அய்யாவுக்கு சேதி தெரியணுமேன்னுதான்’

‘ரொம்ப சந்தோஷம். இது என்னா படிச்சது. தருமங்குடில படிச்சதுதானே’

‘ஆமாங்க. பள்ளிக்கூடம் போய் அஞ்சி கிளாஸ் படிச்சது. அப்புறம் நா எங்கயும் படிக்கறதுக்கு அனுப்பல. இங்க இந்த தமிழ்  ப்ரொபசர் கொஞ்சம் வழிகாட்டி வுட்டாங்க. அது இதுன்னு படிச்சிகிட்டா. அவுங்க நடத்துற விடுதிலயும் வார்டன் மாதிரி போயிட்டுவரா. சிலத கத்துகிட்டா. ஏதோ நல்லகாலம் ஒண்ணு அவளுக்கு பொறக்கணும்’

‘’இது எல்லாம் நா என்னத்த கண்டன்’

‘எனக்கும் எல்லாம் புதுசு. என்கிட்ட செலது படிச்சி காட்டுவா’

தர்மகர்த்தா வீட்டின் உள்ளே போனார். உடன் திரும்பி வந்தார். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டினை எடுத்து வந்து’ வாங்கிகம்மா’ என்றார்.

‘அதுக்காக வல்லங்க. சேதி தெரியனும்னுட்டுதான் வந்தன்’

‘நாம ஆசீர்வாதமா இருக்கட்டும் ஏதோ படிக்குது கொள்ளுது அப்புறம் என்ன. பொண்ணுக்கு கல்யாணம் வருதோன்னு பாத்தன். நீரு இந்த சேதி சொல்லுறீரு. அப்புறம் தம்பி என்ன ஆனார்’

‘இப்பகூட தம்பி மாமனாரு தவறிபோனாரு’

‘இது என்னா 

அந்த அம்மாவுக்கு தான் காயலான்னு சேதி. போயிருக்காரு. எனக்கு தெரியும்.’

‘அந்த அம்மா அப்பிடியேதான் இருக்கு. ஒண்ணும் திருப்தி இல்ல. ஆனா அந்த அய்யா பிச்சிகிட்டாரு’

‘அடடா. அப்ப என்ன ஆவுறது இங்க வர்ர கத’

‘நானுதான் பாக்குறேன்.’

‘எதோ கத ஆவுது. பழி வராம கோவிலு பூச ஆவுணும். அத பாத்துகும்’

‘அதெல்லாம் பாத்துகறேன்’

‘ஆமாம் அந்த பய கண்லயே ஆப்புடல’

‘யாரு சாமியா.’

‘ஆமாம்.’

‘அவன் இப்ப சென்னயிலதான் படிக்கிறான். இங்க இல்லயே. அம்மா அப்பாகிட்ட போயிட்டான்.’

‘இது தெரியாது எனக்கு’

‘ சரிங்க நாங்க பொறப்படறம்’

‘எங்க போனாலும் புத்தியா இரு. சாக்குறத. எழுதலாம் கொள்ளலாம் தப்புல்ல. மனுஷாள் பதனமா இருக்கணும்’

நானும் அப்பாவும் தர்மகர்த்தாவிடம் விடை பெற்றுக்கொண்டோம். வீட்டுக்குத்திரும்பினோம்.

புதிய டிரஸ் இரண்டு எடுத்துக்கொண்டேன்.ஒரு  சூட் கேஸ் ஒன்று வாங்கினேன். நானும் அம்மாவும் சிதம்பரம் போய் வந்தோம். அப்படியே நடராஜா கோவிலுக்குப்போனோம். ஸ்வாமியைத்தரிசித்தோம். சிதம்பரம் ரகசியம் பார்த்தோம். பக்கத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜரையும் வணங்கினோம். ஆட்டோ வைத்துக்கொண்டு வீட்டுக்குத்திரும்பினோம்.

 சென்னை விமான நிலையத்துக்கு வரச்சொல்லி எனக்குச்சொல்லியிருந்தார்கள். நான் முன்னமேயே புறப்பட்டேன்.  விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி முன்பாக அங்கு இருக்கவேண்டும் என்றார்கள். நான் என் சூட்கேசோடு புறப்பட்டு சிதம்பரம் வந்தேன். விடுதிக்கும் பேராசிரியருக்கும் நான் புறப்படுவது முன்பாகவே சொல்லிவிட்டேன்.

வீட்டில் ஸ்வாமி படத்திற்கு நமஸ்காரம் செய்தேன். பெற்றொர்களுக்கும் நமஸ்காரம் செய்து புறப்பட்டேன். சுப்புணிக்கு செய்தி தெரிந்து வீட்டு வந்தார். அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ‘யார் யாருக்கு இன்னதுன்னு வரப்போவுதுன்னு யாருக்கு தெரியுது’ என்றார்.

அப்பா என்னை சிதம்பரம் பேருந்து  நிலையம் வரை வந்து வழி அனுப்பினார்.

‘எனக்கு தைர்யம் இருக்கு’ நீ சமாளிச்சி வந்திடுவேன்னு’

‘அப்பா ஒரு சேதி அந்த கபாலி சிங்கப்பூர் போனாறே. அவர் ஏதோ முருகன் கோவில்னு இருக்கார்னு  சொன்னாங்க இல்லயா’

‘ஆமாம் அது மறந்தே போனேன். சித்தி அப்பா இறந்தது கூட அவருக்கு இன்னும் சொல்லலேன்னு செதி. அவர், தெண்டாயுதபாணி கோவில்ல இருக்கார்னு கேள்வி. நாட்டுகோட்டை செட்டியார்தாம் விஜாரிச்சு பார்’

‘பாக்கறேன். எப்படி சந்தர்ப்பம் அமையறதோ அப்படி’

அப்பா என் கையைப்பிடித்துக்கொண்டார். ‘உன்ன கல்யாணம் பண்ணி  உன் மாமியார் ஆத்துக்கு அனுப்பணும்னு கொள்ளயா ஆசை என் மனசுல. ஆனா பகவான் என்ன என்னமோ கணக்கு போடறான்.’

தன் ஈரமான கண்களைத்துடைத்துக்கொண்டார்.

நான் பேருந்தில் அமர்ந்து சென்னை நோக்கிப்பயணமானேன். அப்பா  பொடி நடையாய் அண்ணாமலநகர் திரும்பியிருப்பார். மனம் நிறைந்து ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. ‘இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன’ நான் நினைத்தே பார்க்காத விஷயங்கள்  எனக்கு முன்னே நடப்பதைக்காண்கிறேன். விமான நிலையத்தில் இறங்கினேன்.வெளிநாடு செல்லும் முனையத்திற்கு வரச்சொலியிருந்தார்கள். அங்கு அனுசரிக்க வேண்டிய நடைமுறைகளைச்சரியாகச்செய்து என்னை ஒரு சிங்கப்பூர் ஆசாமி விமானத்திற்குள் உட்காரவைத்தார். எல்லாமே எனக்குப்புதிது. திகில். ஆச்சரியம் என இருந்தது. பிரமித்துப்போய் பயணம் செய்தேன்.

ஒரு நான்கு மணி நேரப்பயணம். என் சட்டையில் ‘சுகா’ என்றெழுதி ஒட்டியிருந்தார்கள். சிங்கப்பூர்  விமான நிலையம் சொர்க்கபுரியாய் என் கண் முன்னே காட்சி தந்தது. என்னை அழைத்துப்போக சிங்கைத்தமிழ்ப் பேரவையிலிருந்த் ஆட்கள் வந்திருந்தார்கள். தமிழில் எழுதிய அந்த அமைப்பின் பதாகையை ஏந்திய ஒரு பெரிய மனிதரோடு ஒரு புழுக்கை மனுஷியாய் நான் கார் ஒன்றில் ஊர்ந்துகொண்டிருந்தேன். வண்டி வேகமாய்ச்செல்வதே எனக்குப்பிடிபடவில்லை. ரப்பர் சாலைகள். வழுக்கிக்கொண்டு செல்லும் சாலை அமைப்பு. சுத்தம் சுத்தம். எங்கும் பளிச்சென்று இருந்தது. என்னை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு கொண்டு  போய் எனக்கான அறையொன்றில் என்னைத்தங்கவைத்தார்கள்.

மாலை இலக்கிய நிகழ்ச்சி. சிங்கைத்தமிழ் இலக்கியப்பேரவை விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சிங்கப்பூர் நகரத்து தமிழ்ப்பேராளர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். மேடையின் பேக் ட்ராப் ஆகத் தமிழ் அன்னையின் உருவம் வரையப்பட்டிருந்தது. ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்கள் அன்னைக்குக்கு இருமருங்கிலும் அணி செய்தன. தமிழ் அன்னை ஒரு கையில் ஜபமாலை வைத்துக்கொண்டு உருட்டுவது போன்று ஓவியம் இருந்தது. முகத்தின் புன்னகை தான் இளமையோடு இருப்பதை உணர்த்திற்று. மக்கள் இனத்தின் முதன் மொழி அல்லவா தமிழ். அதற்கு எத்தனை கம்பீரம் இருந்தாலும் அதுஏற்புடையதே. எதிரே சிங்கப்பூர் தமிழர்கள் அனேகர் அமர்ந்திருந்தார்கள். பெண்களும் தமிழர் பாணியில் சேலை உடுத்தி வந்திருந்தார்கள். நாட்டுக்கோட்டைசேட்டியார் சங்கத்தலைவர் விழாவுக்கும் தலைமைஏற்றார். பிசிறில்லா ஒலி ஒளி அமைப்பு என்னைப்பிரமிக்க வைத்தது. பாரதிதாசனின் பாடலோடு விழா தொடங்கிற்று.

‘’கனியிடை ஏறிய சுவையும்- முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும்பாலும்- தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும்- தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்’

விழாத்தலைவர் சிங்கப்பூர் பெருமையினைத்தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். தமிழ்மக்கள் இப்பெருநகரில்  கணிசமாக வாழ்ந்து வருவதுபற்றிக்குறிப்பிட்டார். இந்நகரிலுள்ள முருகன் கோவில்கள் அம்மன் கோவில்கள் சிறப்பு பற்றிக்குறிப்பிட்டார். தமிழ் அமைப்பூக்கள் ஆற்றிவரும் தொண்டு பற்றிக்குறிப்பிட்டார். நான்குமொழிகள் ஆங்கிலம் தமிழ் சீனம் மலாய் என்பன ஆட்சி மொழியாக இருப்பதைக்குறிப்பிட்டார்.

என்னை விழா மேடையில் அழைத்து எனக்கு கெளரவம் செய்தனர்.  விழா மேடைக்கு  முத்துக்குடை பிடித்து பாண்டு வாத்யம் முழங்க அழைத்துச்சென்று பாராட்டு செய்தார்க:ள்.

விழா அரங்கமே எழுந்து நின்று ‘எழுத்தாளர் சிகா வாழ்க வாழ்க’ என்று முழங்கி நிறுத்தியது. சான்றிதழ் பணமுடிப்பு சால்வை சந்தனமாலை எந்த்தொடர்ந்து கவுரவித்தார்கள். இரண்டு மூன்று  தகுதிநிலை  பெற்ற எழுத்தாளர்களும் அப்படியே சிறப்பு செய்யப்பட்டார்கள்.

சிங்கையின் தமிழ் முரசு நிருபர்கள் படம் பிடித்துக்கொண்டு போனார்கள். சிங்கைத்தொலைக் காட்சிக்காரர்களும் நிகழ்ச்சியைப்படமாக்கினார்கள்.

இன்னும் சிங்கைத்தமிழ் அமைப்புக்காரர்கள் சிலர் மேடை ஏறி தமிழின் வலிமை குறித்துப்பேசினார்கள். பேராசிரியர் சிவகாமியை மனதில் எண்ணியபடியே நான் மேடையில் அமர்ந்திருந்தேன்.

விழா முடிந்து நான் என் அறைக்குச்செல்வதற்கு முன்பாக பார்வையாளர்களை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த மானவிகள் சிலர் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். படம் எடுத்துக்கொண்டார்கள்.

‘யாரிது கபாலி’ என்று சற்று ஓங்கிக்கத்தினேன்.

ஆமாம் கபாலிக்குருக்கள்தான்.

‘வாழ்த்துக்கள் வேதா’

‘நீங்க எப்பிடி இங்க வந்தீங்க’

‘நான் இந்த ஊர்லதான் இருக்கன். நீ  பரிசு வாங்க வரேன்னு தெரியும். இங்க தமிழ் முரசு தினசரியில் உன்னைப்பற்றி எழுதியிருந்தாங்க. வெளியில ஒரு தட்டி.   அதுல தமிழ்ல இங்க்லீஷ்ல வச்சிருக்காங்க. அத படிச்சதுமே நீதான் அது. நீ  சிங்கப்பூருக்கு வரேன்னு தெரியும்’

கபாலி பக்கத்தில் இளம்பெண்  மூக்கு சற்று சப்பையாய் வெள்ளை நிறத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

‘வேதா மீட் மை லைஃப் பார்ட்னர் ஜியா லீ’

நான் அந்த சீனத்துப்பெண்ணுக்கு கை கொடுத்தேன்.

‘தமிழ் தெரியுமா’

‘கொஞ்ச்சம் கொஞ்ச்சம்’ என்று  கொஞ்சுமொழியில் பேசினாள்.

‘கோவில் பூஜை’

‘அது பாட்ல அது. என் மனைவி இங்க ஃபினான்ஸ் கம்பெனியில வேல பாக்கறா. ஒரு நா இந்த பொண்ண கூட்டிண்டு ஒரு தமிழ்ப்பொண்ணு நா வேல செய்யுற  தெண்டாயுதபாணி  கோவிலுக்கு வந்துருக்கா. நா முருகனோட வேல் முன்னாடி நின்னு திருப்புகழ்ல ’முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண  முத்திக்கொரு வித்துக்குருபர என ஒதும் என்று தொடர்ந்து பாடினேன்.  தெண்டாயுதபாணி அந்த முருகன் சந்நிதி. இந்தப்பொண்ணு அங்கயே நின்னுட்டா. நா என்ன வேணும்னு கேட்டேன். சட்டுன்னு’ நீங்கதான் எனக்கு வேணும்னா’. நா சந்நிதியில இருந்தே கடவுள் முருகன பாத்தேன். முருகர் சொன்னார் ’நானும் வள்ளிய காதலிச்சி கல்யாணம் பண்ணிண்டேன் நீயும் பண்ணிக்கோடா’.கபாலி லேசாகச்சிரித்துக்கொண்டார்.

அந்த ஜியாலீ ஒரு புன்னகை செய்தார்.  கபாலி சொல்வதைச் சரி என்றார் அவ்வளவுதான்.

எனக்கு ஒரு பூங்கொத்தை இருவரும் வழங்கினர்.  ’எழுத்தாளருக்கு ‘எங்கள் வாழ்த்துக்கள்’ சீனப்பெண்ணும்  கபாலியொடு சேர்ந்து சொன்னாள்.

‘பூக்கடை  அந்த கந்தகோட்டத்துல எல்லாரும் செளக்கியமா’

‘செளக்கியம்’

‘ஏன் இழுத்தாப்புல சொல்றேள்’

‘இல்ல நா நேரா ஏர்போர்ட்லேந்து இங்க வந்துட்டேன். அங்க  நா போகல’

‘பேராசிரியர்  அம்மா உங்களோட இங்க சிங்கப்பூர்  வந்துருக்கணும். அவுங்கதான எல்லாத்துக்கும் ஆதாரம்’

‘எனக்குமட்டும்தான் ஒரு டிக்கட் அனுப்பிச்சா’

‘ஓகே சரி’

ஒரு பெரியவர் நடந்து என்னை நோக்கி  வருகிறார். கம்பீரமான தோற்றம். நெற்றியில் வெண்ணீறு. குங்குமம். 

‘பாப்பாவ பாத்தாச்சா கபாலி அய்யா’

‘ஆச்சி. உங்களத்தான் எதிர்பாத்தேன். வந்திட்டீங்க’ கபாலி சொன்னார்.

‘நான் ராஜகோபால் பிள்ளை அண்ணாமலைநகர் கோவில் ஓதுவார். என்னைப்பார்த்த  ஞாபகம் இருக்கா’ என்னிடம்தான் பேசுகிறார்.

இவரை எங்கோ பார்த்துத்தான் இருக்கிறேன்.  என் பெற்றோர்களோடு  அண்ணாமலைநகர் வந்த அன்று பாசுபதேசுரர் கோவிலில்தான் என்று நினைக்கிறேன். ஊருக்கு வந்த  முதல் நாள் அது.

‘வாழ்த்துக்கள் பாப்பா’

‘வணக்கம்’ அவரின் பாதங்களை பாவனையாய்த்தொட்டு வணங்கினேன்.

‘மேல மேல வரணும் சின்ன கொடியாட்டம் நீ,  வாய் நிறைய வாழ்த்தினார். ‘ நீங்க இங்க வர்ரிங்கன்னு கபாலி விவரம் எல்லாம் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம். நான்  அண்ணாமலைநகர்ல பாசுபதேசுரர் கோவில்ல  தேவாரம் பாடிகிட்டு இருந்தவந்தான். உங்க சித்தப்பா எனக்கு ரொம்ப பழக்கம். நானு கோவில்ல ஒங்கள எல்லாம் பாத்த அண்ணக்கிதான் நான் சிங்கப்பூருக்குப் பொறப்பட்டேன். கோவில்ல வச்சி உங்க சித்தப்பாகிட்ட சொல்லிபுட்டுதான் வந்தேன்’

‘நா இங்க வருவன். கபாலிய உங்கள எல்லாம்பாப்பேன்னு கனவுலகூட நெனச்சது இல்ல.  நினைக்கவும் முடியாதுல்ல’

‘அதுதாம்மா வாழ்க்கைங்கறது.  நானு இப்ப  கபாலியோட அய்யாவோட தான் முருகன் சந்நிதில சேவை சாதிக்கறேன். ஓம் நம சிவாய. அங்க எல்லாரையும் கேட்டன்னு சொல்லு பாப்பா’

சொல்லிய ஓதுவார் எனக்கும் கபாலிக்கும் அவர் மனைவிக்கும் திருநீறு வழங்கினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திருநீறு வாங்கிக்கொண்டனர். பெரியவரை வணங்கினர். சீனத்துப்பெண்  ஜியாலீயும் திருநீறு இட்டுக்கொண்டார்.

‘நானு கெளம்புறன். வேல இருக்கு, தப்பா எடுத்துக்காத பாப்பா’

‘ரொம்ப சந்தோஷம் உங்கள பாத்தது’ நான் சொல்லிக்கொண்டேன். ராஜகோபால் ஓதுவார் விடைபெற்றுக்கொண்டார்.

‘சித்தப்பா குடும்பம்  இப்ப கந்தகோட்டத்துல இருக்கு. எங்கப்பாதான் அண்ணாமலை நகர்ல பூஜையெல்லாம்’

‘ஆர் இருந்தா என்னா  காலாகாலத்துல  பூஜ ஆவுணும் சாமிக்கு’

ஓதுவார் சொல்லிக்கொண்டே விரைந்தார்.

நாங்கள் மூவரும் அருகிருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குள் சென்றோம். கபாலி என்னமோ ஆர்டர் செய்தார்.  நாங்கள் சிற்றுண்டி எடுத்துக்கொண்டோம். காபி சாப்பிட்டோம்.

‘எனக்கு ஹோட்டலுக்கு போய் ஜாஸ்தி பழக்கமில்லே’

‘எனக்கு தெரியாதா’

கபாலி தன் வீட்டிற்கு என்னை அழைத்தார். நான் நேரமில்லை  ஃப்ளைட் பிடித்தாக வேண்டும்  கண்டிப்பாகச்  சொன்னேன்.

ஜியாலீ என்னைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

‘ இந்தியா வாருங்கள்’

‘கட்டாயம் வருவேன். மூவராக வருவோம்’

’ ஓகோ ‘அப்பிடியா  கங்க்ராட்ஸ்’ என்றேன்.

‘மாமாவ பாக்கணும் பூக்கார அம்மாவ பாக்கணும். ரெண்டு பேரையும் மனசுல நினைச்சிண்டுதான் இங்க காலம் போறது. ஜியாலீ இந்த சீனப்பொண்ணு பகவானா பாத்து எனக்கு அனுப்சது.’

அம்மாவுக்குப்புடவையும் அப்பாவுக்கு ஒரு சுவீட் பாக்ஸும் வாங்கி  இருவரும் என்னிடம் கொடுத்தார்கள். தம்பி சாமிநாதன் தன் தாத்தா வீட்டில் அப்பா அம்மாவோடு சென்னை பூக்கடையில் ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்து படிப்பதை கபாலியிடம் சொன்னேன்.

நான் கபாலியிடம் விடைபெற்றுக்கொண்டு என் அறைக்குச்சென்று ஓய்வு எடுத்தேன். மாலையில் ஒரு கடைத்தெரு விசிட் எதாவது பர்சேஸ் அவ்வளவே. நான் மாலை விமான நிலையம் சென்றாக வேண்டும்

மீண்டும் ஒரு நான்கு மணிநேர வான் வழிப்பயணம். சென்னை வந்தாயிற்று விமான நிலையத்தில் வேலைகள் முடிந்தன.   என் சூட்கேசை உருட்டிக்கொண்டு சாலைக்கு வந்தேன். டாக்சிக்காரர்களின் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. ஆளை விடுங்கப்பா என்று தட்டுத்தடுமாறி  ஜி எஸ் டி சாலைக்கு வந்தேன். விமான நிலையம் வாயிலில் பெரிய தேசியக்கொடி காற்றில்  கம்பீரமாய் ஆடி ஆடி பறந்துகொண்டிருந்தது.

சிதம்பரம் பஸ் வரவேயில்லை.

‘பெருங்களத்தூர் போனால்தான் சிதம்பரம் பஸ் கிடைக்கும். பைபாஸ் வழியாக வந்து பெருங்களத்தூரில் நிறுத்துவான் என்றார்கள்.

மாநகர பஸ் பிடித்து பெருங்களத்தூர் வந்தேன். நிறைய பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றென கூவிக்கொண்டு இருந்தார்கள். ஒரு சிதம்பரம் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். டிக்கட் வாங்கிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு காலை நீட்டினேன். உறக்கம் வந்தும் வராமலும் இருந்தது. வண்டியில் ஏகத்துக்கு சத்தம் இருந்தது. ஒரு வழியாய் சிதம்பரம் வந்தேன். பஸ் ஸ்டேண்டில் ஒரு ஆட்டோ பிடித்து அண்ணாமலைநகருக்குச் சென்றேன்.

அப்பாவும் அம்மாவும் திண்ணையில் ஏதோ பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

‘வந்தாச்சா வேதா வா வா’ என்றார் அப்பா.

‘இப்பதான் உயிர் வந்துது’

அம்மாவைக்கட்டிக்கொண்டேன். அப்பா என் முதுகைத்தட்டிக்கொடுத்தார்.

‘என் செல்லமே ‘ என்றார் அப்பா.

‘ மொதல்ல சாப்பிடு எப்ப சாப்டியோ நீ’

அம்மா தோசை வார்த்துப்போட்டாள். என்ன இருந்தாலும் நம் ஊர் தோசைக்கு நிகர் எதுவும் இல்லை சொல்லிக்கொண்டேன்.

அப்பா சூட்கேசை ஆராய்ந்து கொண்டிருந்தார். சிங்கப்பூரில் எனக்குக்கொடுத்த  ஷீல்ட் சால்வை சான்றிதழ் பணமுடிப்பு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய்ப்  பார்த்தார். அம்மாவும்  பார்க்கவேண்டும் என  பெஞ்சில் வரிசையாக வைத்தார்.

‘இது என்ன புடவை’

‘அதான் பெரிய சமாஜாரம். கபாலி இந்த விழாவுக்கு வந்திருந்தார். நா எதிரே பாக்கல’

‘கபாலியா அங்க வந்திருந்தார். நம்ம கபாலியா’

‘அவரேதான். அவர்தான் புடவ அம்மாவுக்கும். ஸ்வீட் பாக்ஸ்ம் நமக்கும் வாங்கிக்கொடுத்தார்.

‘அடடா என்னவெல்லாமோ நடக்கறது’

‘ இன்னும் இருக்குப்பா. அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சி. சீனாக்காரிதான் பொண்ணு. ‘

‘என்ன ஒளறயா’

‘இல்லப்பா நா ஒளறல. நாந்தான் பாத்தேன் பேசினேன். அவ புள்ளயாண்டு இருக்காப்பா’

‘அய்யய்யோ’ என்றாள் அம்மா.

‘ஏன் அப்படி அபசகுனமா பேசற நீ’ அம்மாவைக்கடிந்து கொண்டார் அப்பா.

அம்மாவும் அப்பாவும்  நான் கொண்டுவந்தவைகளை எல்லாம் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டனர்.

‘அந்த ப்ரொபசர்கிட்ட எல்லாத்தையும் காட்டு’

‘ஆகட்டும் இப்ப ஒண்ணும் அவசரமில்லே’

‘சாவுகாசமா போகட்டும்’

‘அவுளுக்கு தெரியாது நீங்க சொல்லணுமாக்கும்’

‘ஏம்பா உனக்கு’ என்றேன் நான். அப்பாவைப்பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.

‘அப்பாக்கு  யாரும் மனுஷா இல்லன்னு பேசறே’

‘இல்லடி  நீதான் இருக்கயே’

அப்பா நாங்கள் பேசுவதைக் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை.

மறுநாள் காலை எப்பவும் போல் விடுதிக்குப்புறப்பட்டேன். சிங்ங்கப்பூரில் கபாலி வாங்கித்தந்த ஸ்வீட் பாக்கெட்டில் பாதியை கையில் எடுத்துக்கொண்டேன். அங்கு எனக்கு வழங்கிய சான்றிதழையும் பத்திரமாக எடுத்துக்கொண்டேன். மதிய உணவு  எப்போதும் போல் டப்பாவில்.  விடுதி வாசல் விநாயகருக்கு இரண்டு பூக்கள் எடுத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டேன். புது சைக்கிளில்தான் விடுதிக்குச்சென்றேன். விடுதி வாயிலில் பேராசியரும் அட்டெண்டர் வர்தனியும் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். விநாயகருக்குப்பூசை எல்லாம் முடிந்து இருந்தது.

நான் செம்பருத்திப்பூவை மட்டும் விநாயகரின் பாதங்களில் வைத்து ‘ஐந்து கரத்தன ஆனௌ முகத்தனை’ பாட்டைச்சொல்லிக்கொண்டேன்.

‘வாங்க வாங்க எழுத்தாளரே’

என்றனர் இருவரும்.

நான் பேராசிரியரின் கால்களைத்தொட்டு வணங்கி எழுந்தேன்.

‘இதெல்லாம் வேண்டாம் மனசு சரியா இருந்தா போதும்’

நான் சிங்கப்பூர் சென்றது அங்கு நடந்த கூட்டம் பாராட்டு விழா பற்றியெல்லாம் விவரித்துச்சொன்னேன்.  பாராட்டுச்சான்றிதழைக் காண்பித்தேன்.  கபாலி சிங்கப்பூரில் எனக்கு வாங்கிக்கொடுத்த ஸ்வீட் பாக்கட்டில் பாதியை எடுத்துப்போயிருந்தேன். பேராசிரியரிடமும் அட்டெண்டருக்கும் ஸ்வீட் கொடுத்தேன். வர்தனி விடுதியில் இருந்தவர்க்கெல்லாம் ஸ்வீட் கொடுத்து நான் சிங்கப்பூரில் பரிசு பெற்று  வந்ததைச்சொன்னார்..

எல்லோரும் எனக்கு வாழ்த்துச்சொன்னார்கள்.

பேராசிரியர் எனக்கு ஒரு தபால் வந்திருப்பதைக்கொடுத்தார்கள். நான் பிரித்துப்படிக்க ஆரம்பித்தேன்.

‘எழுத்தாமர் சுகாவுக்கு வணக்கம்

நான்  தமிழ் எம் ஏ. எம் ஃபில் முடித்துள்ளேன். சேலம் தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றுகிறேன். தங்கள் படைப்புக்களில் நான் மிகவும் கவனம் செலுத்துபவன்.  ’சுகாவின் எழுத்துலகில் பெண்ணியம்’ என்ற பொருளில் முனைவர் ஆய்வு தொடங்கலாம் என உள்ளேன். தங்கள் அனுமதியும் ஒத்துழைப்பும் வேண்டுகிறேன்.  மெத்தப்பணிவுடன் . வேதாச்சலம். கடிதம் முடிந்திருந்தது.

பேராசிரியரிடம் தபாலைக்கொடுத்தேன். அவர்கள் அந்தக் கடிதத்தைக் கவனத்துடன் படித்தார்கள்.

எனக்கு கை கொடுத்தார்கள். ஆய்வு செய்ய  அனுமதித்து கடிதம் அனுப்பு என்றார்கள்.

எனக்கு கை கால் புரியாமல் மகிழ்ச்சியாக இருந்தது.

‘இது எப்போதும் எங்கும் நிகழ்வதுதான் படைப்பு என்று இருந்தால் ஆய்வும் இருக்கவே செய்யும்’

’இண்ணைக்கே வேலைக்கு வரணுமா நீ’

‘இல்லை மேடம் இங்க வராம நா வீட்டுல எப்பிடி இருக்க முடியும்’ பதில் சொன்னேன்.

வர்தனியிடம் விடுதியில் என்ன என்ன நடந்தது என்பதைக்கேட்டு அறிந்தேன். பேராசிரியர் சிதம்பரம் நகரில் ஒரு வேலை இருப்பதாகக்கிளம்பினார்கள். நான் என் பணியைக்கவனித்தேன்.

சிதம்பரம் நகரில் உள்ள ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளி ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, காமராஜ்  சி பி எஸ் சி பள்ளி  என்று என்னை இலக்கியச்சொற்பொழிவாற்ற தொடர்ந்து அழைத்துக்கொண்டு இருந்தார்கள். கொடுத்த தலைப்புக்கு  கடினமாய் உழைத்துத்தயாரிப்பேன். நானே அதனை பேசிப்பார்ப்பேன். அதனை எழுதி ஒரு கட்டுரை ஆக்குவேன். இப்படி தொடர்ந்துகொண்டிருந்தது.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறயில் புனைகதை மற்றும் கவிதைத்துறையில் இரண்டு பேராசிரியர்களைப் போடுவதாக நிர்வாகக்கவுன்சிலில் முடிவு செய்வ்திருப்பதாக பேராசிரியர் கேள்விப்பட்டு இருக்கிறார். அந்த இருவர் எப்பயிருக்கவேண்டும் எனபதையும் வரையறை தந்து   கவுன்சிலில் எடுக்கப்பட்ட  முடிவில் சொல்லப்பட்டிருந்தது.

மூத்த எழுத்தாளர் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் போடவேண்டும். மரபுக்கவிதைகளில்  சிறந்தவராகவும் புதுக்கவிதைகளில் நல்ல பயிற்சி உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். இருவரில் ஒருவர் பெண்டிராக க்கட்டாயம் இருத்தல்வேண்டும்.  இருவருமே இந்தப்பகுதிக்காரர்களாக இருத்தல் கூடுதல் சிறப்பு.

பேராசிரியர் எனக்குத்தெரியாமலேயே எனது விண்ணப்பத்தை அந்தப்பணிக்காக அனுப்பியுள்ளார். எனக்கு எதுவுமே தெரியாமல்தான் இருந்தது. அவர் தன்னுடைய சிபாரிசுக்கடிதம் இணைத்து விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார்.

கடலூர் வளவதுரையன் தமிழகம் அறிந்த மூத்த எழுத்தாளர். பல நூற்களைப்படைத்தவர். மரபுக்கவிதையில் பெயர்போனவர். இலக்கியசிற்றிதழின் ஆசிரியர். சிறுகதை புதினம் கட்டுரை மரபுக்கவிதை புதுக்கவிதை பட்டிமன்றம் சொற்பொழிவு வைணவ இலக்கியங்களில் சிறப்பு மேதமை எனப்பலச்சிறப்புக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நான் பெண். நான் இந்தப்பகுதிக்காரி. வயதில் இளையவர் சிறுகதை புதினம் இலக்கியப்பேச்சு இவற்றில் நல்ல பயிற்சியும் மேதமையும் உள்ளவராக அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தார்க்குத்தெரிந்திருந்தது. நான் சிங்கப்பூர் சென்று பரிசு பெற்று வந்ததால் பத்திரிகைகளால் வெளிக்கொணரப்பட்டேன். கல்வித்தகுதிக்கு சிறப்பாய்  தளர்வுச்சலுகை தந்து என் பெயரையும்தேர்வுக்கு எடுத்துக்கொண்டுவிட்டார்கள்.

புனைகதை மற்றும்  கவிதைத்துறைகளில் என்னையும் வளவதுரையனையும் கடைசியாகத்தேர்ந்து ஆணை அனுப்பினார்கள். நாங்கள் இருவர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். நான் எழுதிய புத்தகங்களை பெற்றிட்ட சான்றிதழ்களை நேர்காணலில் காண்பித்தேன். நான் அண்ணாமலைநகரில் வசிப்பது எனக்குக்கூடுதல் தகுதியைத்தந்தது.

 நானும்  மூத்த எழுத்தாளர் வளவதுரையன் அய்யாவும் உதவிப்பேராசிரியர்களாக நியமனம் பெற்றோம்.

பேராசிரியரின் முயற்சி இல்லாமல் எனக்கு எதுவுமே சாத்தியமாகியிருக்காது. பல்கலைக்கழகத்தில் நிர்வாகத் தளத்தில் பேராசிரியருக்கு நல்ல மதிப்பு இருந்ததை நான் நேரில் பார்த்து தெரிந்துகொண்டேன்.

உதவிப்பேராசிரியர் ஆணையை பேராசிரியரே வாங்கிக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். அதனைப்பெற்று என் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

‘சாதித்து விட்டீர்கள் மேடம்’

‘ஒண்ணும் இல்ல. வரவேண்டியது வந்துருக்கு’

சர்வசாதாரணமாகச்சொன்னார்.

‘வேதா விடுதி வேலைக்கு வரவேண்டாம். அதனை வேறு யாரேனும் வைத்து நான் பார்த்துக்கொள்கிறேன்.

‘நான்  அதனையும் சேர்ந்து பார்க்கிறேன்’

‘வேண்டாம். வேண்டாம். உன்  உதவிப்பேராசிரியர் பணியில் மிகக்கவனமாக இருக்கவேண்டும். உன்  திறமை மீது நம்பிக்கைவைத்து சிறப்புச்சலுகை தந்து கொடுத்திருக்கும் பணி. நான் உன்னிடமிருந்து நிறையவே எதிபார்க்கிறேனன். நீ  இப்பணியை எப்படிச்செய்கிறாய் என்பதுதான் உன் முன்  இருக்கும் மிகப்பெரிய பணி. எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் கவிஞர்கள் என்னும் பெரிய  குழாத்தை நீ உருவாக்குவாய் என்று நான் மெய்யாய் நம்புகிறேன். என் வாழ்த்துக்கள் உண்டு, என் ஆதரவு  உனக்கு எப்போதும் போல்’

பேராசிரியர் சொல்லிமுடித்தார்.

நியமன உத்தரவோடு என் மிதிவண்டியில் நான் வீடு நோக்கிப்புறப்பட்டேன்.

வீட்டுத்திண்ணையில் அப்பா பஞ்சாங்கம் வைத்துக்கொண்டு ஏதோ பார்த்துக்கொண்டு இருந்தார்.

அம்மா வீட்டின் உள்ளாக இருக்கவேண்டும்

அப்பாவிடம் நியமனக்கடிதத்தைக்கொடுத்து’ பார்’ என்றேன்.

‘படித்துப்பார்’

அப்பா அதனை ஒரு வரி விடாமல் படித்து முடித்தார். ‘சபாஷ் வேதா, நீ எம்பொண். எனக்கு ப்பெருமை தாங்க முடியலடி. கர்வமா இருக்கு வேதா. எனக்கு இது போறுண்டா பாசுபதேசுரா.’ சொல்லி இரண்டு கைகளையும்  தலைக்கு மேலாக எடுத்து சேவித்தார்.

அம்மாவும் திண்ணைக்கு வந்து என் உதவிப்பேராசிரியர் ஆணையைப்பார்த்து’ இப்படியெல்லாம் கூட நடக்குமா. நடந்திருக்கு. பேராசிரியர் சிவகாமி உனக்கு இன்னுமொரு அம்மா. அவங்கதான்  உனக்கு உண்மையானதாய் வேறென்ன சொல்றது’ என்று என்னைக்கட்டித்தூக்கினார்.

மாலை பாசுபதேசுரர் கோவிலில் நான் அம்மா அப்பா மூவரும் சாயரட்சைக்குச்சென்றோம். அம்மா  அம்மன்  சந்நிதியில்  அன்னபூரணாஷ்டகம் சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தாள். நான் அப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்தேன்.

சுப்புணியிடம் நான் ‘உதவிப்பேராசிரியர் பணிநியமனம் பற்றிச்சொன்னேன்.

‘நெசமாவா’

‘ஆமாம் சுப்புணி’

‘நானே என்னைக்கிள்ளிப்பாத்துகறேன் பாப்பா’ சொல்லிய சுப்புணி ’உன் குணத்துக்கு கடவுள் படியளந்து இருக்காரு. சிங்கப்பூரு போய் வந்தியாமே சொல்லவே இல்ல பாப்பா. என்னா சேதி.  இந்த சேதிவ எல்லாம் எனக்கு என்னன்னு வெளங்குல பாப்பா.  அது கெட்டக்கட்டும் .  சிங்கப்பூலேந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்த’

‘ஸ்வீட்டு  வாங்கிட்டு வந்தேன் தறேன் சுப்புணி’

‘இப்ப பெரிய வாத்தியார்  வேல வந்திருக்கே அதுக்கும் சேத்து குடு பாப்பா. நீ சரியா படிக்குல. பெரிய  பெரிய படிப்பு படிக்குல. உனக்கு இங்க எப்பிடி இங்க வேல குடுப்பானுவன்னு நா நெனச்சேன்’

கல்லூரி ஆசிரியர் வேலையைத்தான்  பெரிய வாத்தியார் வேலையென்று சுப்புணி  அழகாகச் சொல்கிறார். அதுவும் சரித்தான் நான் நினைத்துக்கொண்டேன்.

கபாலி வாங்கிக்கொடுத்த சிங்கப்பூர் சேலையை அம்மா எடுத்துக்கொண்டு வந்தாள். ’காலேஜ் வாத்தியார்னா எப்பிடி இருக்கணும் தெரியுமா.’

‘இத கட்டிண்டு போ’

‘காலேஜுக்குதான்’

அப்பாவுக்கு சந்தோஷம் பிடிபடாமல் இருந்தது. அவர் முகத்தில் அந்த  ஒரு மலர்ச்சியை நான் இப்போதுதான் காண்கிறேன்.

முதல்நாள் கல்லூரி வெலைக்குப்போனேன். எனக்கு அவைக்கூச்சம் எதுவும் இல்லை. நான் எந்தப்பயிற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சுற்றுப்பட்டுக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு  நெடிய உரைகள் ஆற்றியுள்ளேன். இலக்கிய அமைப்புக்களில் பேசியுள்ளேன். அவ்வளவே.

சிறுகதை எழுத்தாளர்கள் புதின எழுத்தாளர்கள் அவர்களின் படைப்புக்கள் அதனில் உள்ள சிறப்பான விஷயங்கள்,படைப்பு நுணுக்கங்கள் அதனதன் விமரிசனங்கள் ஆராய்ச்சிகள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாகப்படித்து விஷயங்கள் சேகரித்தேன். நூலகம் எனக்கு மிகவும் கை கொடுத்தது.

முதல்நாள் நான் வளவ துரையன் அய்யாவைச் சந்தித்து வணக்கம் சொன்னேன். அவரின் தேருபிறந்தகதை சிறுகதை நூல் பற்றி அவரோடு விரிவாகப்பேசினேன். அவர் நடத்தும் சங்கு இதழ்களின் சில பிரதிகள். வெவ்வேறு பிரதுகள்தான். அவைகளை வாங்கிக்கொண்டேன். அவர் எடுத்து நடத்தும் கூத்தப்பாக்கம் இலக்கியப்பேரவையில் எனக்கு பேச ஒரு வாய்ப்பு தந்தார். அங்கு நான் ‘தில்லைக்கூத்தனும் தீந்தமிழும்’ என்னும் தலைப்பில் பேசியிருக்கிறேன்.

நாங்கள் இருவரும்  இப்போது   அண்ணாமலைக்கல்வி நிலையத்தில் புதிய உதவிப்பேராசிரியர்கள்.

வளவதுரையன் கடலூரிலிருந்து வந்து வந்து போகிறார்.

பேராசிரியர் சிவகாமி எங்கள் எல்லோருக்கும் உயர் பதவியில் இருப்பவர்.

‘பேராசிரியர் சிவகாமி  இல்லன்னு நா இல்ல. அவுங்கதான் என்ன ஆளாக்குனாங்க. நா மண்ணா இருந்தேன். என்ன மனுஷி ஆக்கியிருக்காங்க’

‘உங்களால முடியும்னு அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அந்தத்தெரிவுதான் ஆசிரியர் பணிக்கு மிக முக்கியம். உவே சாமிநாதாய்யர் எப்பிடி வருவார்னு  மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்குத் தெரிஞ்சிருக்கு. அப்பிடிதான்’

வளவதுரையன் அத்தனை அழகாகப்பேசி என்னை உற்சாப்படுதினார். நாற்பதாண்டுகளாகத் ’தமிழே எனது வாழ்க்கை’ என்று வாழ்கின்ற எளிய பெரியவர். அவரோடு பேசிப்பழக  எனக்கு வாய்த்தது  பேரருளின் கொடை’

 

 உத்விப்பேட்ராசிரியர் பணி.  அயிரம்ஆயிரமாக ஊதியம் கொடுக்கிறார்கள் எனக்கு.  உதவிப்பேராசிரியர்  பல்கலைக்கழக குடியிருப்பில் இல்லம் தந்திருக்கிறார்கள்.

‘அப்பா நாம கோர்ட்டர்ஸ் பொயிடுவோம்’

‘அது வேண்டாம்’

அப்பா தொடர்ந்தார்.

‘எனக்கு என் வேல. என்  வீடு. அது முடியலன்னா உங்கிட்ட வருவேன். என் தம்பி வீட்டையும் கோவில் பூஜையையும் என்னண்ட கொடுத்துட்டு வெளியூர் போயிருக்கான் அவன் வரட்டும்.’

அப்பா பேசுவது எனக்கு அம்மா பேசுவது போல் இருந்தது.

நான் அவ்வப்போது எனக்கு ஒதுக்கப்பட்ட கோர்ட்டர்ஸ் சென்று வருவேன். அப்பா அம்மாவை கூட்டிக்கொண்டு அங்கே போவதுண்டு. அங்கும் இங்கும் என காலம் நகர்ந்துகொண்டிருந்தது.

என் படைப்புக்களை ஆய்வு செய்யும்  சேலம் கல்லூரி ஆசிரியர் வேதாச்சலம் ஒரு நாள் என்னோடு ஒரு பேட்டி என அண்ணாமலைநகர் வந்தார். என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். என் கோர்ட்டர்ஸ் வீட்டில்தான் பேட்டி நிகழ்ந்தது. சில  கேள்விகள் பல் பதில்கள்.

 பேராசிரியர் சிவகாமி இல்லம் என் வீட்டிற்குப்பெயர்  வைத்திருக்கிறேன்.  இங்கு அவருடைய புகைப்படம்  ஒன்று மட்டுமே மாட்டியிருக்கிறேன் . பேட்டியின் குறிப்புக்களை லேப்டாப்பில் பதிவாக்கினார்.  நான் எழுதிய சில புத்தகங்களை  அவருக்குத்தந்தேன்.   எனக்கு வெகு மகிழ்ச்சியாக இருந்தது.

’ஆய்வேடு தயார் ஆனதும் அனுப்பி வைக்கிறேன்’

‘முகவரி தாருங்கள்’

‘சரி’ என்றேன்.

‘உங்கள் குடும்பம்’

‘அப்பா அம்மா அவ்வளவே’

‘எனக்கும்  கூட  அப்பா அம்மா அவ்வளவே’ வேதாச்சலம் பதில் சொன்னார்.

நானும் அவரும் படைப்பாளி ஆய்வு மாணவர் என ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

எனக்கு அவரைப்பிடித்துப்போயிற்று.  அவருக்கும் அப்படித்தான். அவரின் முகம் எனக்குச்  சொல்லிற்று.

‘யாயும் ஞாயும் யாராகியரோ’

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘’

 

 

 

 

 

 

 

 

 

 

‘’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment