Saturday, March 30, 2024

கதை -அன்புள்ள அப்பா

 

அன்புள்ள  அப்பா                                          

 

குறிஞ்சிப்பாடிதான் அவனுக்குச் சொந்த ஊர்.  அவன்   கடலூர் மஞ்சகுப்பம்  அரசு பெரியார் கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு இளவறிவியல் கணிதம் படித்துக்கொண்டிருந்தான் குறிஞ்சிப்பாடியிலிருந்து மஞ்சகுப்பம் அரசு பெரியார்கல்லூரிக்குத் தினமும்   ரயிலில்  வந்து வந்து  போனான். ரயிலில் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருந்தான்.  கட்டணமோ  அத்தனைக்குக்குறைவு. அந்தக்கட்டணத்தை  யாராலும்  வேறெங்கும் நினைத்துப்பார்க்கவே முடியாது. திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி  சில்வர் பீச் செல்லும்  டவுன் பஸ் பிடித்துக் கல்லூரியில் இறங்கிக்கொள்வான். சமயங்களில் நடந்தேகூட  கல்லூரி சென்றுவிடுவான். ரயில் நிலையத்திலிருந்து   அந்தக்கல்லூரி இரண்டு கிலோமீட்டர் தொலைவு.

அவனுடைய அப்பா எந்தப்  பெரிய உத்யோகத்திலும் இல்லை.   சொல்லிக்கொள்கிற மாதிரி நிலக்கிழாரும்  இல்லை. குறிஞ்சிப்பாடியில் ஒரே  ஒரு அறை கொண்ட  வாடகை வீடு. அதனில்தான்  குடும்பம் நடந்துகொண்டிருந்தது. அவன் தந்தைக்கு என்ன உத்யோகம் அதையும் சொல்லிவிடுகிறேன். அவர்  உள்ளூரில் வீட்டுக்கு வீடு  சென்று ஊசி போடுகிற டாக்டர். டாக்டர் என்றால்  எம் பி பி எஸ் டாக்டர் இல்லை. ஓமியோபதி டாக்டருக்குப்படித்தார். படித்ததற்கு  அடையாளமாய் ஒரு சான்றிதழ் வாங்கி சட்டம் போட்டு வீட்டுச் சுவரில் மாட்டி இருக்கிறார். அந்த ஓமியோபதி மருத்துவக் கல்வி நிறுவனம் அந்தக்காலத்தில் கடலூரை அடுத்த நெல்லிக்குப்பத்தில்  ஓகோ என்று ஓடிக்கொண்டு இருந்தது.

கடலூரில் இரண்டே  இரண்டு கல்லூரிகள் தாம் அப்போது, ஒன்று  பெரியார் அரசு கலைக்கல்லூரி அது வங்காள விரிகுடாக்கடல் கடற்கரையில் இருந்தது. மஞ்சகுப்பம் பீச்  காலேஜ் என்று  அதனை எல்லோரும்  செல்லமாய்ச் சொல்வார்கள். மற்றொன்று  கந்தசாமி நாயுடு மளிர் கலைக்கல்லூரி அது செம்மண்டலத்தில் நெல்லிக்குப்பம்  சாலையில் இருந்தது.  அதனை பச்சையப்பமுதலியார் டிரஸ்ட் நடத்துகிறது. முதலியாரும் நாயுடுகாரும் ஒரு காலத்தில்  அத்தனை இணக்கமாய் இருந்திருப்பார்களோ. அன்றைக்குக்  கடலூர்  நகரில் இருந்த  கல்லூரிகள்  இவையே.

 அவனுக்கு அண்ணன் ஒருவன். அவனும் அதே அரசுக் கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். அவன் படித்து வந்தது  பி. ஏ தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு. அந்தக்  கல்லூரியில் வேறு என்ன என்ன வகுப்புக்கள் இருந்தன, அதனையும் சொல்லிவிடுகிறேன். வரலாறு, தமிழ், கணிதம், தாவர இயல், விலங்கியல், மற்றும் வணிக இயல்  அத்தோடு சரி. அவனுக்கு ஒரு தம்பி அவன் குறிஞ்சிப்பாடி எஸ்.கே வேலாயுத முதலியார் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். ஒன்பதாம் வகுப்பு. அது ஒரு தனியார் பள்ளி.

பள்ளி இறுதி வகுப்பில் அவன்  நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தான். அந்தக்காலத்தில் புகுமுக வகுப்பு பிரியூனிவெர்சிடி கோர்ஸ் என்றிருந்தது. அதனை பி யூ சி என்று சுருக்கமாய்ச் சொல்லுவார்கள். அந்த பியூசி சியிலும் அவன் முதல் வகுப்பு வாங்கித் தேர்வானான். இளவறிவியல் கணிதம்   சேர்ந்தான். ஃபைனல் படித்துக்கொண்டு இருந்தான். மிக நன்றாகவே படித்து வந்தான்.

அவன் கல்லூரிக்குக்குக்  கட்டவேண்டிய டியூஷன் ஃபீஸ்  கட்டணம்  பாக்கியிருந்தது.  அதனைக்கட்டுவதற்குத் தந்தையிடம்  இருநூறு ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு நாள் கல்லூரிக்குப் புறப்பட்டான். அவன் தந்தை அந்த  இருநூறு ரூபாய் சம்பாரிக்க முப்பது  வீட்டின் படிகளில் ஏறியும் இறங்கியும் இருப்பார்தான். ஒரு வீட்டில் ஊசி போட்டால் பத்து ரூபாய் தருவார்கள். சிலர் அய்ந்து ரூபாய்தான் தருவார்கள். அப்போதெல்லாம் இன்றைக்கு மாதிரி    யூஸ் அண்ட் த்ரோ  சிரஞ்ச்  கிடையாது.  அது புழக்கத்திற்கும் வரவில்லை. ஒரு வட்டாவில் வெந்நீர் சுடச்சுட போட்டுக்கொண்டு வந்து அப்பாவிடம்  வைத்து விடுவார்கள். அதனில் ஊசியை சிரஞ்சையை நன்கு முக்கிக்கழுவிப் பின்னர்தான் ஊசி மருந்தை நோயாளிக்குச் செலுத்துவார். சர்க்கரை வியாதிக்காரர்கள் வீதிக்கு இருவர் மூவர் நிச்சயம் இருப்பார்கள். சர்க்கரை வியாதிக்குப் பணக்காரர்களின் வியாதி என்று வேறு ஒரு பெயரும் இருந்தது. இன்றைக்குச் சர்க்கரை நோயின்  நடப்பே வேறு.

அவன் அப்பா பார்க்கும் ஊசி போடும் உத்யோகத்திற்கும் அவர் படித்த அந்த ஓமியோபதி படிப்பிற்கும் சம்பந்தமில்லை. அப்படித்தான் அனேகமாய்  ஊசி டாக்டர்கள் எல்லோரும். இங்க்லீஷ் மருந்து வாங்கிக்கொண்டுபோய் அதனைத்தான் ஜுரத்திற்கும்  தலைவலி உடல்வலிக்கும் வாந்திக்கும் பேதிக்கும் கொடுப்பார்கள்.இந்த உடல் உபாதைகள் மட்டுமே  மனிதர்களுக்கு அடிக்கடி வருபவை. பிற ஏதும் வந்தால் ஜனங்கள் அவர்களாவே முடிவு செய்து கடலூர் பாண்டிச்சேரி என்று பெரிய ஊருக்குப் போய் வருவார்கள். சர்க்கரை நோயுக்குத்தான்  அவன் அப்பா வழக்கமாய்   ஊசி போடுவார். இன்சுலின்  மருந்து மட்டும் அவர்கள் வாங்கி வைத்திருப்பார்கள். கை கால்  தலைவலி வலி ஜுரம்  என்று யாரேனும் கூப்பிட்டால்  ஊசி போடுவார்.முட்டிவலி குதிக்கால் வலிக்காரர்கள் சமூகத்தில் மூன்றில் ஒருபங்குக்கு எப்போதும் இருப்பார்கள் அவர்களுக்கு அவர் எண்ணெய் மருந்து ஒன்று கொடுப்பார்.அதனைத்தடவிக்கொள்ளச்சொல்வார். அவ்வளவே.

ஒரு டாக்டர் என்பவர் சுத்த பத்தமாக இருப்பதும்,  அளவோடு பேசுவதும் கொஞ்சமாய் சிரிப்பதும் எப்போதேனும் கோபப்படுவதும் ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படித்தான் அவன் டாக்டர் அப்பா இருந்தார். பளிச்சென்று துடைத்த   பச்சை  வண்ண ஹெர்க்குலிஸ் சைக்கிள்   ஒன்று  எப்போதும் வைத்திருப்பார். அதனில்தான்  நோயாளி வீட்டுக்குப் போவார் வருவார்.

‘பணத்தை ஜாக்கிரதயா எடுத்துட்டு போயி காலேஜுல கட்டிடு.  அந்த ரசீதுதான்  ரொம்ப  முக்கியம் அத பத்திரமா எடுத்துட்டு வந்து அப்பாகிட்ட காட்டணும்’

‘சரிப்பா’  சொல்லிய அவன் தந்தையிடமிருந்து இரு நூறு ரூபாய் பணத்தைப்பெற்றுக்கொண்டான்.    மறு நாள் மாசி மகம் என்பதால் ரயிலில் ஒரே கூட்டம்.  கடலூரில் கடற்கரையில் மக்கள் மாசிமகத்தன்று கூட்டமாய்க் கூடுவார்கள். அனைவரும்  கடற்கரையில் சந்தோஷமாய்  பொழுதைக் கழிப்பார்கள்.  சிறுவர்கள் மணல் திட்டில் விளையாடுவார்கள். சிலர்  முன்னோர்களுக்கு முட்டி போட்டுத் திதி கொடுப்பார்கள். மறந்ததை மாளயத்தில் கொடு இல்லை மாசி மகத்தில் கொடு என்பது   முதுமொழி.

சுற்றுப்பட்டுக்கோவில்களிலிருந்து  தெய்வங்கள் எல்லாம் சப்பரத்தில் வந்து  வங்காள விரிகுடாக் கடலைப்பார்த்துக்கொண்டு நிற்கும்.  தெய்வங்கள் அமர்ந்த சப்பரங்களை சுற்றிச்சுற்றி  வந்து மக்கள் சாமி கும்பிடுவார்கள், தேங்காய் உடைப்பார்கள் கற்பூரம் ஏற்றுவார்கள். கரும்பு வாழைப்பழம் மணிலாகொட்டை எலந்தைப்பழம் கட்டாயம் வாங்குவார்கள். கடற்கரை மணலில் உட்கார்ந்துகொண்டு தின்று தீர்ப்பார்கள்.

அவன் திருப்பாதிரிப்புலியூரில்   ரயிலை விட்டு இறங்கினான். ரயில் நிலையத்தில் ஒரே கூட்டம். கடலூரில் ஒரு விசேஷம் பேருந்து நிலையமும் அருகிலேயே இருப்பது. கல்லூரிக்குத் தாமதம் ஆகிவிடுமே என யோசனை செய்தான். கல்லூரிக்குச்செல்லும் பேருந்தில் சரியான கூட்டம். எப்போதுமே  கல்லூரிப்பேருந்தில் கூட்டமாகத்தான் இருக்கும். மாசி மகமோ அடுத்த நாள்.  ஆக இன்னும் கூடுதலாய்க்கூட்டம்.  பேருந்துப்பயணம் இன்றைக்கு ஒன்றும் சரியாக வராது என்று நடக்க ஆரம்பித்தான். கெடில நதி மீது  கட்டப்பட்டிருக்கும்  புதிய அண்ணா பாலம் மீது நடந்தான். பிரிட்டீஷார் கட்டிய  பழைய பாலம் ஒன்று அருகிலேயே இருந்தது. அதனை இன்னும் இடிக்காமல் வைத்திருக்கிறார்கள். அதன் நடைபாதைப்பகுதியில்    வழக்கமாய்க்கடை போடுவோர்  வரிசையாய் கடை விரித்திருந்தார்கள். அந்தக்கடைகளை நோட்டமிட்ட படியே அவன் கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பாலத்தின் முடிவில் தந்தை பெரியாரின் சிலையைப் பார்த்துக்கொண்டான். அந்த சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தைப் படிக்காமல் அவன்  கல்லூரிக்குச் சென்றதில்லை. தந்தை பெரியார் மீது  ’சனாதன மத வெறிக்கூட்டம்  பாம்பும் செருப்பும் வீசிய இடம் இது’ என்று அந்தக் கல்வெட்டில் எழுதப்பட்டிருந்தது.

 கடலூரில் மீன் மிக மிக விசேஷம். கடலூர் மீன் உணவு சாப்பிடுவதற்காகவே கடலூர் நகரத்தை விரும்பி வெளியூர்  மக்கள் குடியேறி வாழ்ந்து வந்தார்கள் .மீன் கூடைக்காரிகள் கும்பலாக அவனுக்கு எதிரே  நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருத்தி அவன் அணிந்திருந்த செருப்பை மிதித்து விட்டாள். தவறுதலாகத்தான் அது நிகழ்ந்து விட்டது.  அவன் ஒருகால் செருப்பு அறுந்துபோயிற்று.

‘தம்பி தப்பா எடுத்துக்காத’

சொல்லிய மீன் கூடைக்காரி விர்ரென்று நடந்துபோனாள்.

‘நா  காலேஜுக்கு போவணும்’

‘பாலத்துக்கு அந்தாண்ட  புதுப்பாளையத்துல ஒரு தாத்தா குந்திருக்காரு. அவுருகிட்ட செருப்ப தெச்சிக  போ’ 

அவனுக்கு யோசனை சொன்னாள். இரண்டு செருப்பையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டு சுடும் தார்ச்சாலையில்  நடந்தான். காலைக்கீழே வைக்கமுடியாமல் தரைச் சூடேறி இருந்தது. செருப்பு தைக்கும் தாத்தாவைத் தேடினான். அவரைக்காணமுடியவில்லை. கல்லூரிக்குப்போயாகவேண்டும். நேரம் ஆகிக்கொண்டிருந்தது.  புதுப்பாளையம் மெயின் ரோடின் ஆரம்பத்தில்,  கெடிலம் ஆற்றங்கரையில்   அய்யர் ஒருவரின் ஓமியோபதி ஆஸ்பத்திரி இருந்தது. அந்த அய்யருக்குக் கடலூர் அருகேயுள்ள ராமாபுரம் சொந்த ஊர். அவன் அப்பாவுக்கும் இந்த அய்யர் சிநேகிதர்தான். இருவரும் நெல்லிக்குப்பம் கல்வி நிறுவனத்தில் ஒன்றாக ஓமியோபதி படித்தவர்கள். அவன் அப்பா கடலூருக்கு வந்தால் இந்த அய்யரைப்பார்க்காமல்  வீடு திரும்ப மாட்டார். அவனைக் கல்லூரியில் சேர்த்த அன்று கூட இந்த அய்யரின் ராமலிங்கர் ஆஸ்பத்திரிக்கு  அவன்  அப்பா வந்து பேசிக்கொண்டு இருந்தார்.

’என்ன தம்பி செருப்புக்கு என்னாச்சு’ அய்யர் கேட்டார்.

‘பிஞ்சிடுச்சி டாக்டர், தைக்கணும்  அந்த  செருப்பு தைக்கிற தாத்தாவைக்காணுல. அதான் யோசனையா இருக்கு’

‘ஒண்ணும் யோசனை வேணாம்’

‘என் சைக்கிள்  இருக்கு  டபுள்ஸ் உக்காரு, நா உன்ன காலேஜுல கொண்டு போயி  விட்டுடறேன்’

‘உங்க பொழப்பு கெட்டுடும் சார்’

‘ஒரு அர மணி நேரம் ஆகுமா. உன் பிஞ்ச செருப்ப இங்க அப்படியே  போடு. அத அப்புறம் வந்து  பாத்துகலாம்’ அவனும்   செருப்பை  அங்கயே போட்டுவிட்டு கல்லூரிக்குப்புறப்பட்டான்

அய்யர் சைக்கிளை நகர்த்தினார். அவன் காரியரில் அமர்ந்து கொண்டான். இருவரும் சைக்கிளில் கல்லூரிக்குச்சென்றனர்.

அவன் வகுப்புக்குச்சென்றான். அய்யர் தன்  இராமலிங்கர் ஆஸ்பத்திரிக்குத்திரும்பினார்.

அவன் கல்லூரியில் செருப்பு இல்லாமலே அன்றைய பொழுதைக்கழித்தான். அது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.’என்னடா  இது கால்ல செருப்பு இல்லாம’  மாணவர்கள் எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள். செருப்பு அறுந்து போச்சி என்கிற கதையை எல்லோரிடமும் சொன்னான்.மாலை கல்லூரி முடிந்தது. ரயில்வே ஸ்டேஷன் நோக்கி  நடக்க ஆரம்பித்தான்.  கல்லூரி முடிந்து  திரும்பி வரும்போது அவன் ஒரு நாளும் நகரப் பேருந்து வரவேண்டும் என்று காத்திருந்ததில்லை.

அப்பா கொடுத்த இருநூறு ரூபாய்  அவன் சட்டைப்பையில் அப்படியேதான்  இருந்தது. கல்லூரிக்கு டியூஷன்  கட்டணம் கட்டுவதா இல்லை செருப்பொன்று புதிதாக வாங்குவதா என்கிற யோசனையில் இருந்தான். அப்பா சொன்னது அடிக்கடி நினைவுக்கு வந்தது. ’டியூஷன் ஃபீஸ் கட்டி  விடு, ரசீதோட வீட்டுக்கு  வா’ என்று அப்பா கண்டித்துச்சொல்லியிருக்கிறார். சட்டைப் பையில்  இருநூறு ரூபாய் உள்ளதா என அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டான்.  வசுதேவர் தர்மாம்பாள்  கல்யாண மண்டபம்  வாயிலில் நிலையாக போடப்பட்டிருந்தது ஒரு கீற்றுப்பந்தல்.  அதன் சவுக்கு மரக்கால்களில்  குலைபோட்ட  வாழை மரங்களைக் கட்டிக்கொண்டு,   தலையில் முண்டாசு கட்டிய இருவர் மும்முரமாக இருந்தார்கள். ’ எதுவும் எதற்காகவும் நிற்பதில்லை அது அதுவும் அங்கங்கு  விடாமல் நடந்துகொண்டேதான் இருக்கணும்’. அவன் சொல்லிக்கொண்டான்.

புதுப்பாளையம் இரட்டைபிள்ளையார் கோவில் தாண்டினான். பிள்ளையார் கோவில் வாயில்  கேட் அருகே  குரங்கு ஒன்றிற்கு சட்டை போட்டு விட்டு அதனைக் கயிறில் கட்டிக்கையில்  வைத்துகொண்ட ஒரு பிச்சைக்காரன் ’வாடா ராமா வாடா ராமா, அடிரா ராமா அடிராமா,  அந்தர் பல்டி ’  ஓயாமல் கத்திக்கொண்டே இருந்தான். அவன் குரங்கைப்பார்த்தான். அது அவனைப்பார்த்துச் சிரித்த மாதிரித் தெரிந்தது.

இராமலிங்கர் ஆஸ்பத்திரி வந்தாயிற்று. ஆஸ்பத்திரி பூட்டிக்கிடந்தது.  மூன்று பெண்கள் அங்கே  டாக்டரைப்பார்க்கணும் என்று  உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள்

.’ இந்தமாதிரி  கேசுவுளுக்கு இந்த  அய்யிரு டாக்டர வுட்டா வேற வழி ஏது இந்த ஊர்ல. காசும் கம்மி வேலயும் ஆவுமே’

‘ஆம்பளயாச்சே டாக்டரு’

‘டாக்டருல   ஆம்பள  என்னா பொம்பள என்னா’,

அவர்களின் உரையாடல் சென்று கொண்டிருந்தது.

அய்யரின் சைக்கிளைக்காணோம். அவர் வெளியில் எங்காவது சென்றிருக்கலாம்.  யாரேனும் ஊசி போட அழைத்துப்போய் இருக்கலாம்.தனது அறுந்த செருப்பு எங்கே என்று தேடினான்.

இரண்டு நாய்கள் அவன் செருப்பை வைத்துக்கொண்டு கடித்துக் கடித்து விளையாடிக்கொண்டு இருந்தன. இரண்டு செறுப்புகளும் கந்தலாகி உருக்குலைந்து போயிற்று. நாய்கள் இரண்டும்  அத்தனை சந்தோஷமாய் இருந்தன. இராமலிங்கர் ஆஸ்பத்திரி அய்யர் டாக்டர் இன்னும் வந்தபாடில்லை.

மாலையில் திரும்பும்போது எப்போதும் கெடிலம்  பழைய பாலம்  வழியாகத்தான் ரயில் நிலையம் வருவான். அன்றும் அப்படித்தான் வந்தான். மாலை நேரம் என்பதால்  பழைய பாலத்தில் ஏகத்துக்கு நடைபாதையில் கடை விரித்திருந்தார்கள்.  எதையும் அனாவசியமாக வாங்கியதில்லை அவன். அப்படி வாங்கத்தான் முடியுமா என்ன. காசினை என்ணி எண்ணி செலவு செய்யமட்டுமே தெரிந்தவன்.

மஞ்சகுப்பம் பஸ் ஸ்டேண்ட் பக்கம் இருக்கும் பெரிய ரொட்டிக்கடை.  அதன்  உரிமையாளர்   கடைகளுக்கு அகர்வால் என்றே பெயர் வைத்திருப்பார். தமிழர் கடைக்கு  ஒரு  வட இந்திய சேட்டுப்பெயர். அந்தக்கடைகள்  ஆகா ஓகோ என்று ஓடிக்கொண்டும் இருந்தன.  அந்தக்கடைக்கு நகர் முழுவதும் பத்து கிளைகள் உண்டு. அதன் அருகே ஒரு செருப்புக்கடை. பாட்டா என்று விலாசம் போட்டிருந்தார்கள். எல்லா செருப்புக்கடைகளுமே  பாட்டா என்று ஒரு மூலையிலாவது எழுதிய ஒரு போர்டை வைத்துக்கொள்ளாமல் இல்லை.

தார்ச்சாலையில் நடந்து வந்தவன்   பட்டா   என்று விலாசம்  எழுதிய செருப்புக்கடை ஒன்றினுள் நுழைந்தான். கால்களில் செருப்பு  இல்லாமல் வந்த அவனுக்கு  நாற்காலியில் உட்கார வைத்து மரியாதை செய்தார்கள். ஒவ்வொரு செருப்பாய் எடுத்துப்போட்டார்கள். அவனுக்கு எதுவும் பிடிக்காமல் இருந்தது. அமைதியாக இருந்தான்.

‘புதுசா ஷூ வந்துருக்கு பாருங்க’

ஷூ எல்லாம் நாம் பார்க்கலாமா, வாங்கலாமா, வாங்க முடியுமா என்ற யோசனை அவனை உலுக்கி எடுத்தது.

‘ஷூ வாங்கினா நாளைக்கு ஒரு இண்டர்வியூ வந்தா கூட  உங்களுக்கு யூஸ் ஆகும். அப்ப ஏன்  வேற ஒண்ணு  புதுசா வாங்க ணும்.  அந்த செலவு  எதுக்கு.  ஃபைனல் இயர் தான நீங்க’

‘ஆமாம்’

‘நூற்றி  நாற்பத்து  ஒன்பது ரூபாய்தான். வாங்குனா ரெண்டு வருசம் ஓட்டலாம்’

‘அப்புறம் சாக்ஸ்’

‘அது என்ன ஒரு இருவது ரூபா வரும்’

ஷூ பார்க்கப் பார்க்க அதனை   வாங்கவேண்டும் போல் இருந்தது.  ஷூவையே வாங்கிவிடுவோம் என முடிவு செய்தான்.

சாக்சை  கால்களில் போட்டுக்கொண்டான்.  புது  ஷூவை அணிந்து  கொண்டான்.

‘வெறுங்காலோட கடைக்கு  வந்து  புது  ஷூ வாங்கி போட்டுகிட்டு போற மொத ஆளு நீங்கதான்’

இது என்ன நம்மைக் கிண்டலடிப்பதா அல்லது  நமக்குப் பெருமை சேர்ப்பதா  யோசனை செய்தான். சட்டைப்பையில் இருந்த இருநூறு ரூபாயைக் கொடுத்து பாக்கி வாங்கிக்கொண்டான்.

ஷூ அணிந்த கொண்டது அவனுக்குத் தன் உயரத்தைச் சற்று கூட்டிக்காட்டியது. சாலையில் நடக்கும்போது கூடுதல் உற்சாகமாய் இருந்தது.  எதிரே  நடந்து  வருபவர்களில் எத்தனை பேர் கால்களில் ஷூ போட்டிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே வந்தான். ஒருவர்  கூட ஷூ அணிந்து கொண்டு  தார்ச்சாலையில் நடக்கவில்லை. பள பளக்கும் ப்ளைமவுத்  காரிலிருந்து இறங்கி ஆனந்த பவன் ஹோட்டலுக்குள் நுழையும் இருவர் கால்களிலும்  ஷூ இருந்ததைக் கவனித்தான்.

கல்லூரிப்பேராசிரியர்கள் ஷூ அணிந்துகொண்டு வருவதைப்பார்த்திருக்கிறான். முதுகலை பயிலும் மாணவர்கள் பளிச்சென்று ஷூ அணிந்து கொண்டு வகுப்புக்குச்செல்வதைப் பார்த்துமிருக்கிறான்.  தினம் பயணிக்கும் ரயில் பெட்டியில் பரிசோதனைக்கு வரும் டி டி இ  ஷூ அணிந்து இருப்பதையும் அனேக முறை பார்த்துதானே இருக்கிறான். அவர்கள் கழுத்தில் டையும் கட்டாயம் அணிந்து இருப்பார்கள்.

ஏதோ சாதித்து விட்டதாய்க்கூட அவனுக்குத் தோன்றியது. ரயிலில் ஏறி அவனது சொந்த ஊர்  குறிஞ்சிப்பாடி வந்து இறங்கினான். அவனோடு ரயிலில் வந்த  சில மாணவர்கள் ‘  அய்யாவுக்கு செருப்பு அறுந்ததுபாரு அதுல ஒரு லக் அடிச்சிபோச்சி’ எனத் தமாஷ் பேசிக்கொண்டு வந்தார்கள். அப்படியே  ஷூ அணிந்துகொண்டு வீட்டுக்கு வந்தான். அவன் அப்பா வீட்டில்தான் இருந்தார்.

‘என்னடா ஷூ எல்லாம் அமக்களமா இருக்கு’

அவன்  அப்பாவுக்குப் பதில் பேசாமல் இருந்தான்.  

ஷூவை கழட்டிப் பத்திரமாக வைத்தான். சாக்சை உறுவிக்காய போட்டான்.

கைகால் கழுவிக்கொண்டு வந்தான். கல்லூரி விட்டு வந்தால்  வழக்கமாய்ச் சாப்பிடும்  சாம்பார் சாதம் சாப்பிட்டு முடித்து பெஞ்சொன்றில் உட்கார்ந்தான்.

‘டியூசன் ஃபீஸ் கட்டிட்டயா ‘

‘இல்லப்பா,  காலேஜ் போகும் போது காலையிலேயே,  செருப்பு அறுந்துபோச்சி’

‘செருப்பு அறுந்து போச்சா’’

 செருப்பு தைக்கற  ஆளும்  ஆப்புடல.  இராமலிங்கர் ஆஸ்பத்திரில அதான் உங்க நண்பர்  வச்சிருக்குறாரே அங்க  அறுந்த செருப்ப வுட்டுட்டு  காலேஜுக்கு  போனேன். அவுருதான் என்னை காலேஜுக்கு சைக்கிள்ள  டபுள்ஸ் வச்சி  கூட்டிகினு போனார்’

‘அப்புறம்’

‘சாயந்திரம் திரும்பி வரகுள்ள பாத்தா  வச்ச எடத்துல என்  செருப்ப காணுல.  அய்யிர் டாக்டரும் அங்க இல்ல. எங்கோ வெளில  போயிட்டாரு. என் செருப்ப தேடினேன்.  அத  நாயுவ கடிச்சி கொதறி விளையாடிட்டுது’

‘அப்புறம்’

‘செருப்பு  வாங்குலாம்னு கடைக்குப்போனேன். செருப்பு எதுவும் புடிக்கல. அங்க  புது ஷூ பாத்தேன் புடிச்சி இருந்துது.மேலைக்கு ஒரு இண்டர்வ்யூக்கு போனாலும் உபயோகமா இருக்கும் ஷூவே  வாங்கிகன்னாரு  செருப்பு கடைக்காரரு. அது எனக்கு நல்லதுன்னு பட்டுது’

‘அப்ப டியூசன் ஃபீஸ்’

‘கட்டுல’

‘ஏன்’

‘செருப்பு அறுந்துபோச்சே  நான் என்ன செய்றதப்பா’

‘ஏண்டா நாயே இது எல்லாம் எனக்கு நீ சொல்ற சேதியா. நா  எரநூறு ரூவா சம்பாரிக்க என்ன பாடு படுணும் உனக்கு தெரியாதா. ஊரெல்லாம் பத்து நாளு  மருந்து பெட்டிய தூக்கிகிட்டு சுத்தி வருணும், சொழண்டு வருணும்’

அவன் தம்பி அவனை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டு இருந்தான். அண்ணனைக்  காணவில்லை. அவன் யாரேனும் நண்பர்களைக்காணச்சென்று இருக்கலாம்.

‘மூணு புள்ளய என்னண்ட உட்டுட்டு உன் ஆத்தா சொர்க்கம் பூட்டா அவுளுக்கு  பாம்பு கடிச்சிதுன்னுட்டு.  இப்ப நாதான்  சிரிப்பா சிரிக்குறன்.  பெத்த புள்ளிங்களுக்கு சோறு போட்டு காப்பாத்தி படிக்கவச்சி ஒரு வழிய காட்டணுமேன்னு தவிச்சிப்போய் கிடக்குறேன். . நீ  என்னடான்னா ஷூ வாங்கி கால்ல மாட்டிகிட்டு  வூட்டுக்கு ஜாலியா வர்ர.   நா கேக்குறன்  உனக்கு  வெக்கமா இல்ல.   இப்பிடி எல்லாம்   வதிலு   சொல்றதுக்கு, என்ன மமுதைடா உனக்கு.  ரோசம் மானம்தான்  இருக்குதா,  இதவிட மொழம் கவுத்துல  எங்கனாவுது தொங்கிகலாம்டா,  நீ எல்லாம் ஒரு  புள்ளயா எனக்கு வந்து பொறந்துருக்க’

அவன் அப்பா கத்தி முடித்தார். அவன்  வாங்கிவந்த புது  ஷூ வையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் கண்கள் குளமாகியிருந்தன. அப்பா சொல்வது சரித்தான் என எண்ணினான்.’ என் மூளை ஏன் இப்படி என்னைத் தவறாக வழி நடத்திவிட்டது’  தன்னையே ஒருமுறை நொந்துகொண்டான்.   என்ன இருந்தாலும்  அவன் அப்பா பேசியவை அவன் நெஞ்சுக்குள் கனன்று கொண்டே இருந்தது.

அப்பா ஸ்லிப்பர்  மட்டும் வைத்திருக்கிறார். அண்ணன் அவன் இருவரும் ஸ்லிப்பர்தான். தம்பிக்கு இன்னும் செருப்பு வாங்கவில்லை. உயர்நிலைப்பள்ளி  முடிக்கும் வரை,  அவன் வீட்டில் யாருக்கும் செருப்பு வாங்க மாட்டார்கள்.

‘அப்பா ஏன்  என்னை மொழம் கவுத்துல தொங்கலாம்’ னு சொன்னார். நினைக்க நினைக்க அவனுக்கு  அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அவன்  வாங்கிய ஷூ வைக் கையில் எடுத்துக்கொண்டான். அப்பாவைப்பார்த்தான். ‘இத எங்கனா நண்பர்கள் கிட்ட  குடுத்துட்டு, காசு திரும்ப வாங்கியாந்துடறேன்’. பொய்தான் சொல்லிப்புறப்பட்டான்.

‘ கிழிச்சிடுவாரு இவுரு. எப்பிடியாவது தொலை’ அவன் அப்பா சொன்னார். அவன் தம்பி தன் பாடபுத்தகங்களை எடுத்து ஏதோ வீட்டுப்பாடம்  எழுதிக்கொண்டு இருந்தான்.

தன் தம்பியைப்பார்த்தான். சுவரில் மாட்டித்தொங்கும்  அம்மா படத்தைப்பார்த்துக்கொண்டான்.

வீட்டை விட்டு வெளியே வந்தான். அவன் அப்பா அசையாமல் பெஞ்சின் மீது அமர்ந்திருந்தார்.

அவன் ரயில்வே நிலையம் வந்தான். அருகாமையில்தான் இரயில் நிலையம். அப்போதுதான்  நாகூரிலிருந்து பெங்களூர் செல்லும் வண்டி தூரத்தில்  வருவது தெரிந்தது.’ அப்பா என்னை மன்னிச்சுடு’ ஓங்கிக்கத்தினான். அங்கேயே  அசையாது நின்றான். குறிஞ்சிப்பாடியில்  நிற்காது செல்லும் அந்த   பெங்களூர் ரயில்  அசுரனாய் ஸ்டேஷனைத்தாண்டிக்கொண்டிருந்தது.

ஸ்டேஷன் சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்து தன் நண்பனோடு  பேசிக்கொண்டிருந்த அவன் அண்ணன் ,

‘தம்பீ’ என்று அலறினான்.  சிட்டாய்ப்பறந்து வந்தான்.  தம்பியின்  கரங்களைப்பிடித்து இழுத்து  பிளாட்பார மேடையின் ஓர் ஓரம் வீசி முடித்தான்.

‘எதுக்கு தம்பி  நீ இங்க வந்த?’

ஓங்கிக்கத்தினான்.

‘ கையில என்ன இருக்கு பாத்தியா’

‘ஷூ’

‘ ஆமாம். புது ஷூ . காலேஜுக்கு போவகுள்ள என் செருப்பு அறுந்து போச்சி,  வெறுங்காலோடதான்   நேத்திக்கு பூரா கிளாஸ்ல இருந்தேன். டியூஷன் ஃபீஸ் கட்ட  அப்பா குடுத்த பணத்த  கட்டாம வச்சிருந்தேன்.  காலேஜு விட்டு வரும்போது  செருப்புக்கடைக்கு போனேன்.  புது  ஷூ ஒன்ன  வாங்கிகிட்டு வீட்டுக்கு  வந்தேன். ’டியூஷன் ஃபீஸ் கட்டுன்னுதான்   நா  பணத்த குடுத்தன்.   அத வச்சி  நீ எப்பிடி புது ஷூ வாங்கினே’ன்னு அப்பா  கத்து கத்துன்னு கத்துனாரு. போடா   போ மொழம் கவுத்துல எங்கனயாவது  தொங்கிக’  ன்னுசொல்லிட்டாரு.’ அவனுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு  வந்தது. தேம்பித்தேம்பி சிறு குழந்தையாய் அழுதான்.  அதான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தேன்.’

‘எதுக்கு ஸ்டேஷனுக்கு வந்தே’

‘ எதுக்கு  உசிரோட இருக்கணும்னுட்டுதான்’

‘என்ன முட்டாள் தனம்டா இது’ தன் தம்பியை  அண்ணன்  கட்டி அணைத்துக்கொண்டான்

அண்ணனின் நண்பன் எல்லாவற்றையும் கேட்டுகொண்டே இருந்தான். கலங்கிப்போனான்.  அவன் கண்கள் ஈரமாகியது.

 அவன் கைவசமிருந்த புது ஷூ வைப்பிடிங்கினான். தன் காலில் போட்டுப்பார்த்தான்  அது  அவனுக்குக் கச்சிதமாக இருந்தது. ‘ நானே ஷூ வாங்கணும்னுட்டு இருக்கன். நாளைக்கு   கடலூர் ஒல்ட்  டவுன்  சிப்காட்  பெண்டா ஃபைவ்  கம்பெனியில  எனக்கு ஒரு இண்டர்வியூ., அதுக்கு இந்த ஷூவையே  போட்டுகிட்டு போலாம்னு முடிவுபண்ணிட்டேன்’

‘ ஷூவும் உங்களுக்கு கரெக்டா இருக்கு’  அண்ணன் தன் நண்பனிடம் சொன்னான்.

அண்ணனின் நண்பன் ஷூ மீது போடப்பட்டுள்ள அதன் விலையைப்பார்த்துக்கொண்டான். தன் சட்டைப்பையிலிருந்து நூற்றி ஐம்பது ரூபாயை எடுத்து அவனிடம்  கொடுத்தான்.

அந்த  நண்பனின்  பாதங்களைத்தொட்டான். அவன்  தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

அப்பாவும் தம்பியும்  அவனை எங்கெங்கோ தேடிக்காணாமல்,  என்னதான் கணக்குப்போட்டார்களோ தெரியவில்லை. கடைசியில்  ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து விட்டார்கள்.

‘அப்பா  நா வாங்கின  புது ஷூ வை இப்ப  காசாக்கிட்டேன்’  அண்ணனின் சினேகிதன் ஷூ வை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்ததை அப்பாவிடம்  அழகாய்ச் சொன்னான்.

 அப்பா தன் காலில் போட்டிருந்த ஸ்லிப்பரை கழட்டினார். தன்னையே ஒரு முறை ஓங்கி அடித்துக்கொண்டார்.’ ’தாயத்த புள்ளடா நீ,   உனக்குபோய்  தப்பு பண்ணிட்டேன்டா ’   அழுகுரலில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

‘என்னைதான்  நீ அடிக்கணும்’ அவன் அப்பாவைப்பார்த்துச் சொன்னான்.இருவரும் கட்டி அணைத்துக்கொண்டார்கள்.

அப்பாவையும் தம்பியையும் அண்ணன் பார்த்துக்கொண்டே  அமைதியாக நின்றான்.

 டேய் இத போட்டுகினு நாளைக்கி காலேஜுக்கு போ, இன்னும்  ரெண்டு  நாள்ள நா  புது ஸ்லிப்பெர்   வாங்கித் தர்ரேன்’  அவனுக்கு  அப்பா சமாதானம் சொன்னார்.

அவன் ரயில்முன் பாய்ந்து முடிந்துபோக இருந்த அந்த விஷயத்தை மட்டும்  அண்ணனும் அவனும் அப்பாவிடம் சொல்லப்போவதாக இல்லை.  அந்த அப்பாதான் அதனை எப்படித் தாங்குவார்.

---------------------------------

 

-----------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment