அவரவர் கணக்கு
முதுகுன்றம்
நகரில் எனக்குச்சொந்தமாய் ஒரு வீடு இருக்கிறது.
அதனை வாடகைக்கு விட்டிருக்கிறேன். வாடகை எவ்வளவு என்று கேட்டுவிடாதீர்கள். வாடகையாய் வாங்கும் பணத்திற்கும் வீட்டுக்காக போட்ட முதலுக்கும் எப்பவுமே ஏகப்பொறுத்தம்தான்.
நாற்பது லட்சத்திற்கு சற்று நகர்ப் புறமாய் வாங்கிய வீடு என்றால்
மாதம் எட்டாயிரம் வாடகை வரலாம். வாடகைக்கு
விட்ட வீடு கன்னா பின்ன என்றுதான் ஆகிவிடும். அது
தெரிந்த சமாச்சாரம். ஒரு மாத வடகையாவது
முதல் வைக்கவேண்டும். பிறகுதான் அந்த வீட்டை
அடுத்தவர்க்கு வாடகைக்கு விட முடியும். வீட்டுக்குக்
கட்டவேண்டிய வரி இத்யாதிகள் கழித்துப்பார்த்தால்
பத்து மாத வாடகை கைக்கு மிஞ்சலாம். ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் சராசரியாய் வருமானம்.
.ஆனால் அதே பணத்தை
வங்கியில் வைப்பு நிதியாய் வைத்து வட்டிக்கணக்குப்போட்டால்
ஆண்டுக்கு மூன்று லடசம் வரும். அடுத்தவீட்டூக்காரனோடு
சண்டை சாடி ஏதுமில்லை. வாடகைக்குக்குடி வைத்திருக்கிறோமே அவனிடம் வாடகை
வாங்க மாதாமாதம் மல்லு கட்டி நிற்க வேண்டாம்.
ஆனால் பாழும்மனம் இதற்கு எல்லாம் ஒப்புமா என்ன. வீடு என்பது ஒரு உருவமாய் அசையாச்சொத்தாய்
சமூகத்தில் மரியாதை தருவிப்பதாய் கண்முன்னே கம்பீரமாய்க் காட்சி தருகிறேதே அதற்கு வங்கி வைப்பு நிதி சமாச்சாரம்
எல்லாம் ஈடாகிவிடாது.
என் முதுகுன்றம்
வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் காலமாகிப்போனதாய் மொபைலில் செய்தி வந்தது. அந்த ஊரில்
என் குடும்பம் இருந்தபோது எங்களோடு நன்கு பழகியவர்
அவருக்கு வயதும் ஆயிற்று. ஊருக்குப்போய் சவத்தைப்பார்த்து
ஒரு மஞ்சள் மாலையும் வாங்கிப்போட்டுவிட்டு ஒரு நிமிடம் அமைதி காத்துத் திரும்பிடலாம்
எனக்கிளம்பினேன்
அதிகாலையிலேயே கிளம்பி முதுகுன்றம்போனேன். பேருந்து
நிலையத்தில் சுமாராய் இருந்த பூக்கடையில் நினைத்தபடிக்கு
ஒரு மஞ்சள் மாலை வாங்கினேன். நேராக அந்த இழவு வீட்டுக்குத்தான் போனேன். இறந்து போனவரின்
மனைவியைத்தவிர யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. எப்படித்தெரியும். நான் ஊரைவிட்டுகிளம்பிப்போய்
ஆண்டுகள் பல ஆகிவிட்டனவே. சவத்திற்கு மரியாதை
செலுத்தினேன். வந்த பெரிய வேலை முடிந்து போனது.
நேராக நான்
வாடகைக்கு விட்டிருக்கும் என் வீட்டுக்குப்போனேன்.
என் வீட்டிற்கு அடுத்த வீட்டில்தானே சாவு.
அங்கு வந்தவர்கள் சிலர் நான் வாடகைக்கு விட்டிருக்கும்
வீட்டு வாசலிலும் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து
ஏதோ வள வள என்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
‘வாங்க சாரு’
வாடகைக்குக் குடி வைத்திருக்கும் நபர் என்னை வரவேற்றார். வாடகை சரியாக வந்துகொண்டிருந்தது.
அவர் வாடகை ஏற்ற மட்டும் தான் விட மாட்டார்.
’சார் சார்’ என்று ஏதோ பேசி மறுத்துவிடுவார்.’ தொலையட்டும் போ’ என்று விட்டுவிடுவேன்.
அப்படித்தான் காலம் போய்க்கொண்டிருக்கிறது. வீட்டை ஒரு முறை சுற்றிப்பார்த்தேன். என்
வீடு தனி வீடு. காம்பவுண்டு சுவர் போட்டிருந்தேன். என் வீட்டுக்கு அடுத்த மனைக்காரர்
ஒரு ஏ சி அவுட்டர் பார்ட்டை என் வீட்டுத்தோட்டத்தில் துருத்திக்கொண்டமாதிரிக்கு வைத்திருந்தார்.
அவருக்கு இருக்கும் எல்லை வரை சுகராகச் சுவர்
எழுப்பிவிட்டு ஏசி மெஷின் அவுட்டரை மட்டும் என் வீட்டுத்தோட்டத்தில் இரும்புக் கிராதி போட்டு
நீட்டியிருந்தார். வாடகைக்கு குடியிருப்பவரை அழைத்துக்கேட்டேன்.
‘என்ன இது
‘
‘சார் அப்படித்தான்
வச்சிருக்காரு’
‘ஏன் நீங்க
அவர் கிட்ட அது தப்புன்னு சொல்லுணும்ல’
‘சொன்னேன்.
அவுரு கேக்குல’
‘எனக்கும்
நீங்க சேதி சொல்லுல. உங்கள நம்பிதானே வீட்டை
வாடகைக்கு வுட்டிருக்கேன்’
‘ ஆமாம் சார்.’
‘ஆமாம் சார்னா’
அதற்குள்ளாக
அவரின் மனைவி எட்டிப்பார்த்தார். நேராக என்னிடம் வந்தார்.
‘அவுரு நம் வீட்டு
கூடத்து ஜன்னலுக்கு எதிராவே ஏசி அவுட்டரை வச்சிட ஏற்பாடு பண்ணிட்டாரு. பெறகு
கூடத்துல மனுசாள் ஒக்கார முடியுமா. அங்க வெக்கதான் தாங்குமா. நான் சண்டை போட்டு கூடாதுன்னு சொன்னேன்.
பிறகு தோட்டத்துல அந்த ஏ சி அவுட்டரை ஆங்கிள் போட்டு வச்சிட்டாரு’
‘இவ்வளவு
நடந்திருக்கா’
இருவரும்
அமைதியாயினர்.
‘என்கிட்ட
ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம். அவர்கிட்ட நீங்களே ஒரு தகறாறு பண்ணியிருக்கலாம் நான் எதேச்சயா இந்த
சாவுக்கு வரலன்ன இது எனக்கு எப்பிடி தெரியர்து’
இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
‘எதிர் வீட்டுல
இருக்குற பில்டிங்க் காண்ட்ராக்டர்தான இத செஞ்சது’
‘ஆமாம் அவர்தான
நம் வீட்டுக்கு அடுத்தமனையையும் வாங்கினவரு’
‘நானே போய்
கேக்குறன்’
‘கேளுங்க
சார் அதுதான் சரியா இருக்கும்’
நான் நேராக
எதிர் வீட்டுக்குப்போனேன். அந்த பில்டிங்க் காண்ட்ராக்டர் ஹாலில் அமர்ந்திருந்தார்.
‘சார் நான்
எதிர் வீட்டு ஓனர். என்னை உங்களுக்கு ஞாபகம்
இருக்கா’
‘வாங்க சார்
உங்கள மறக்கமுடியுமா’
‘பக்கத்து
வீட்டு சாவுக்குத்தான் வந்தீங்களா’
‘ஆமாம் அவுரும்
ரொம்ப வேண்டியவரு’
‘வரவேண்டியதுதான்’
‘சார் ஒரு
விஷயம். உங்ககிட்ட ஒரு ரிகொஸ்ட்’
‘சொல்லுங்க
சார்’
‘ என் வீட்டுக்கு அடுத்த மனையில ஷெட் போட்டிருக்கிங்க.
அதுல வச்சிருக்குற ஏ சி அதுக்கு இருக்குற
அவுட்டர் பார்ட்ட என் தோட்டத்து மனையில் ஸ்டீல்
ஆங்கிள் பொதச்சி நீட்டி வச்சிருக்கிங்க.
அது தப்புல்ல’
‘தெரியும்.
தப்புதான்’
‘பிறகு அத
நீங்க எடுத்துடணும்’
‘அது அங்கிருந்து எடுத்துட்டா வேற எங்கயும் வைக்க முடியாதுங்க.
நீங்களே பாருங்க. பாத்து சொல்லுங்க’
‘அது எங்க வைக்கிறதுங்கறது ஒங்க பிரச்சனை’
‘அது எனக்கும்
தெரியும். அந்த ஏசி அவுட்டர் ரவ ஒங்க மனையில
நீட்டிகிட்டுதான் இருந்தா அதுல என்னா போயிடுது’
‘அதெல்லாம்
வேணாம். அத எடுத்துடணும்’
நான் அவர்
வீட்டை விட்டு வெளியே வந்தேன். எதிரே சாவு வீடு. சொந்த பந்தங்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டு இருந்தனர். வாய்க்கரிசிகூடை
எடுத்துக்கொண்டு தப்பட்டை அடித்துக்கொண்டு
கூட்டமாய்த் தெருவில் ஜனம் போய்க்கொண்டிருந்தது. தேர்ப்பாடை ஜோடிக்கப்பட்டு
சாவு வீட்டு வாயிலில் வைத்திருந்தார்கள்.
இந்த நேரம்
சரியானது இல்லை. இப்போது இதே தெருவில் ஒரு
சண்டை. அதுவும் நமக்கும் அந்த எதிர் வீட்டு
காண்ட்ராக்ட்காரருக்கும் என்று ஆரம்பித்தால்
நன்றாகவே இருக்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில்
அவரிடம் பேசிக்கொள்ளலாம் என்ற அதே முடிவோடு அவர் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
தெருவாசிகள் எல்லோரும் சாவு வீட்டு வாயிலில் கூட்டமாகக்கூடி இருந்தார்கள்.
இப்போதைக்குச் செய்வது வீட்டிற்குத்திரும்புவது மட்டும்தான். பேருந்து
நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எதிரே வண்டிக்காரர் வந்துகொண்டிருந்தார்.அவரைப் பார்த்து எத்தனையோ ஆண்டுகள் ஆகின. வண்டிக்காரர்
சைக்கிளில்தான் வந்தார். தாய் தந்தையர் அவருக்கு என்ன பெயர் வைத்தார்களோ நான் அவரை வண்டிக்காரர் என்றே
அழைத்துப்பழகியிருந்தேன். இங்கு வீடு கட்டும் சமயம் அவர் கட்டைவண்டியும் மாடும்
வைத்திருந்தார். அவர் வண்டிதான் எனக்கு செங்கல் சிமெண்ட் மணல் என ஏற்றிக்கொண்டு வரும்
. அவருக்கும் எனக்கும் அப்படி நல்ல பழக்கம். அவர் வீடும் அருகேதான் இருந்தது.ஒரு பெரிய
மாமரம் அதன் நிழலில் அவர் மங்களூர் டைல்ஸ்
போட்ட வீடு. வீட்டு முன்பாக ஒரு கயற்றுக்கட்டில் எப்போதும் கிடக்கும்.
‘வாங்க அய்யா’
‘வரேன்’
‘எழவுக்கு
வந்தீங்களா அவுரு ஒங்க செனேகிதமாச்சே’
‘ஆமாம் வண்டிக்காரரே’
‘கெளம்பிட்டிங்க
போல’
‘ஆமாம். ஒரு
சேதி . என் வீட்டு தோட்டத்து அத்துல ஒரு ஏசி மெஷின் அவுட்டர எதிர் வீட்டுக்காரர் வச்சி அக்கிரும்பு பண்ணி இருக்காரு’
’ஆமாம் அய்யா.
ஒன் வூட்டுல வாடகைக்கு இருக்குறானே ஒரு மனுஷன். அவன் மச்சினி ஒருத்தி வீராணத்துலேந்து வந்துருக்கா. படிச்சவ.அந்த பொண்ணு
அந்த பில்டிங்க் காண்ட்ராக்டர் கிட்ட கெளார்க்கா வேல பாக்குறா. அவதான் அந்த ஷெட்டுல
குந்தி கணக்கு எழுதுறா. அவுளுக்குதான் அந்த
ஏசி மெஷின் வேலயும் செய்யுது.’
‘அப்பிடி
போவுதா கதை’
‘ஆமாம் அய்யா.
அவுங்க எத என்னன்னு சொல்லுவாங்க. ஒன் வூட்டுல குடியிருக்குறவருக்கு மச்சினில்ல
அவுருகிட்ட வேல பாக்குது.’
‘அந்த ஏசி அவுட்டர எடுத்துடணும்னு கண்டிச்சி சொல்லிட்டு வந்துருக்கன்’
‘ஒண்ணும்
ஆவாது. அவுனுவ ஒண்ணுக்குள்ள ஒண்ணு. கூடிக் கூடி பேசிக்குவானுவ. ஒனக்கு இங்கிட்டு கத
எப்பிடி தெரியர்து’
‘அதான் நீ
இப்ப சொல்லிட்ட’
‘வூட்டுல
குடியிருக்குற ஆசாமிய கெளப்புணும். அப்பதான்
சரியா வரும்’
‘ என் வீட்டு
தோட்டத்துல ஒரு ஒட்டு மாமரம் இருக்குதே அந்த மாங்காயுங்க நீ ஏதும் பாக்குறதுண்டா’
‘நாந்தான
வருசா வருசம் மரத்துல ஏறி பறிக்குறன். நல்ல
காய்ப்புல்ல. ஆளா பாதியா எடுத்துகுவம்’
‘யார் யாரு’
‘நானும் உன் வூட்டுல குடியிருக்குற ஆளும்தான்’
‘அவரதான்
இப்பவே வூட்ட வுட்டு கெளப்புணும்னு
சொன்னியே வண்டிக்காரரே’
‘ஆமாங்க என் சின்ன மொவ வாடகைக்கு வூடு பாக்குறா. அவ இன்னும் சொந்த வூடு கட்டுல. வாங்கிப்போட்ட மண்ணு அப்பிடியே கெடக்கு. ஒன் வூட்டுல கொண்டாந்து குடி வச்சிட்டா. எனக்கு
சவுகரியமா இருக்கும்’
‘எது எது
எப்பிடியோ பெறகு பாப்பம்’ சொல்லிய நான் பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன்.
யார் சாவுக்கு
நான் இப்போது போய் வந்தேனோ அவர் தான் என் வீட்டில் இப்போது குடியிருக்குற இந்த ஆசாமியை கொண்டு வந்து வைத்தார்.
இறந்துபோனவருக்கும் என் வீட்டில் குடியிருப்பவனுக்கும்
ஏதோ ஓர் வகையில் லேவாதேவி.
யாரும் சும்மா
இல்லை. அவர் அவர்களுக்கும் ஏதோ ஒரு கணக்கு.
வீட்டுக்கு
வந்ததும் என் மனைவியிடம் சொன்னேன்’ இந்த முதுகுன்றம் வூட்ட வித்துட்டு அதுல வர்ர மொத்த
பணத்தயும் நல்ல பேங்குல
போட்டுட்டா ஒரு துன்பமும் இல்ல. வட்டிபாட்டுக்கு வரும்’
‘வூடா இருக்குற
வரைக்கும் வூடு. அத காசாக்கி நீ பேங்குல போட்டுட்டா அவ்வளவுதான். சொந்தகாரன் வருவான் சாதிக்காரன்
வருவான் செனேகிதன் வருவான் ரெம்ப மொடயா இருக்கு பெரிய மவுளுக்கு கல்யாணம் பத்திரிக அடிச்சிட்டேன் இங்க பாரும்பான், காலேஜுல சின்ன பையன சேக்குனும்பான், சி எம் டி ஏ பிளான் போட்டு கட்டிகினே வந்த வூடு இன்னும்
முடியாம கெடக்கும்பான், வூட்டுக்காரி காயிலால படுத்துருக்காம்பான், ரூவா குடு கச்சிதமா ஒரு சின்ன கட கண்ணி வச்சிகிறனேம்பான், ஊர் சுத்தி பாக்குற
தொழிலுக்கு சுமாரா ஒரு டூ வீலர் ஒண்ணு வாங்குணும்பான், வெல ரெம்ப சல்லுசா வருது ஒரு பழம் வூடு வாங்கிட்டா
தேவுலாம்னு பாக்குறன்பான். பால்மாடு ஒண்ணு பாத்து வச்சி இருக்கன் அத வாங்கிட்டாதான் தேவுலாம்பான்’
‘போதும் நிறுத்து நீயும் உன்
ம்பானும் ’ சொல்லிய அவனுக்கு இப்போது வாடகைக்கு விட்ட முதுகுன்ற வீட்டுப் பிரச்சனை எல்லாம் சுருங்கிப்போனது.
‘எழவுக்கு
போயிட்டு வந்திருக்கிங்க. தோடத்து பாக்கமா போயி
அந்த பாத் ரூம்ல தலய முழுவிட்டு நெத்தில
ரவ துண்ணூரு பூசிகிட்டு பெறவு வூட்டுக்குள்ளாற வாங்க’ அதட்டிச்சொன்னாள்
அவன் வாடகைக்கு விட்டிருக்கும் முதுகுன்ற வீட்டில் நடந்த சொச்சக் கதையை மனையிடம்
சாப்பிட்டுவிட்டுத்தான் சாவுகாசமாய்ச் சொல்லலாம்
என்று இருக்கிறான்
--------------------------------------------
‘
No comments:
Post a Comment