Sunday, August 31, 2025

கலையும் காலமும் -விட்டல்ராவ்

 

’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்                                            

கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள’ கலையும் காலமும்’ என்னும் நூல்  ஓர் கலைச்சுரங்கம். ஆசிரியர் விட்டல் ராவ். இப்படைப்பை நாடறிந்த   எழுத்தாளர்  திரு. பாவண்ணன் அவர்கட்குச் சமர்ப்பித்துள்ளார். பாவண்ணனை சக எழுத்துப்பயணி, அன்பு சகோதரர் என்று  விளிக்கிறார் விட்டல் ராவ். நன்பர்களோடு பேசும்போது  தான் பெங்களூரில் வசித்து வருவதற்கு திரு. பாவண்ணனே காரணம்  என்று  சர்வ சாதாரணமாகக் குறிப்பிடுவார். இந்நூலுக்குப் பதிப்புரை தந்துள்ள அருமை நண்பர் மு. வேலாயுதம் இப்படிப் பதிவு செய்கிறார், ‘கலை இலக்கியம் இரண்டுமே மானுட சமூகத்தை மேன்மையை நோக்கி   அழைத்துச்செல்வதை தமது முக்கிய இலக்காகக் கொண்டவை. அந்த வகையில் ‘கலையும் காலமும்’என்ற விட்டல் ராவின் இந்நூல் கலையைச்சொல்கிறது. காலத்தைச்சொல்கிறது.அமைதியைச்சொல்கிறது.நிறைவைத்தருகிறது’.

விட்டல் ராவ் தன்னுடைய என்னுரையில்  அடிப்படையில் தான்  ஒரு ஓவியன் என்பதைக்குறிப்பிடுகிறார். அவர் சிற்பங்கள்,சிற்ப வடிவக் கட்டுமானங்கள் என்பவற்றில் மனத்தைப்பறிகொடுத்திருக்கிறார். கோயில்கள் கட்டிடங்கள் என்பவற்றைக்காண அனேக பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். ’ மண்ணில் தோன்றி மண்ணுக்கே திரும்பும் சகல உயிரினங்களில், மகத்தான மனிதன் ஆற்றிய பெருஞ்சாதனைகளில் முக்கியமானது, அவன் தன்னை வெளிப்படுத்தியிருக்கும், வெளிப்படுத்திக்கொண்டே வரும் கலைக்கரியங்கள்’ என்கிறார்.  தொடர்ந்து  இக்கட்டுரைகளை  வெளியிட்ட பேசும் புதிய சக்தியின்  திரு. ஜெயகாந்தன் அவர்கட்கு தனது நன்றியைச் சமர்ப்பிக்கிறார்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்,

‘என் மனம் கவர்ந்த நண்பர்களில் விட்டல் ராவ் ஓர் அபூர்வப் பறவை.தனது சிறகுகளைப் பல்வேறு திசைகளில் புகைப்படம், ஓவியம், புனைவிலக்கியம் என்று விரித்துப்பறந்த 82 வயது பறவை. இவரது சிறகுகள் தொடர்ந்து பறப்பதில் சோர்வறியாதவை’ என்று குறிப்பிடுகிறார்.

கலையும் காலமும்  நூல் 28  கட்டுரைகளைக் கொண்டது. மண் கல் மரம் சிற்பம் ஓவியம் கட்டிடம் என்கிற வரிசையில்  கட்டுரைகளை நாம் இங்கே வாசிக்கலாம். சுடுமண் பற்றிப்பேசுவன முதல் இரண்டு கட்டுரைகள்.களிமண்ணாலான கலைப்படைப்பை ஏழை மனிதனின் கலை என்று சொல்கிறார்கள். அசையும் மற்றும்  அசையாத் சொத்துக்களை அதிகமாகக்கொண்ட செல்வந்தர்களின் ஆட்சியின் கீழுள்ள திருக்கோவில்களில்  தங்கம் வெள்ளி வெங்கல சிலைகளை கருங்கற் சிற்பங்களைக்காண முடியும். ஊரின் நடுநாயகமாய் அவை  குடிகொண்டிருக்கும். ஏழைகளின் சாமிகள் சுடுமண்ணாலானவை.ஊர் கோடியில் மட்டுமே அவை காணப்படும்.சுடுமண்ணாலான ‘முனியப்பன்,ஐயனார் சிலைகள்  சுடுமண் குதிரைகள் முதலான கிராம பாதுகாப்புத் தெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடல், கள் சாராயம் சுருட்டு முதலியன படைத்தல்  வ ழக்கமாயின. அதற்கென நியமிக்கப்பட்ட  பூசாரிகள் அந்த அந்த காரியங்களைச் செய்தார்கள். தாரை, தப்பட்டை,எக்காளம்,பம்பை ஆகியன  இத்தெய்வங்களுக்கு இசைக்கருவிகள் ஆயின. பிராமணர்கள் இக்கோயிலகளுக்கு வருவதில்லை. அச்சமே காரணம் என்கிறார் விட்டல் ராவ்.

கற்சிற்பங்கள்,ஓவியங்கள், கல், சுதைச் சிற்பங்களாலான கோபுரங்கள் ஆகமம் என்றான  பெரிய கோவில்கள்  உயர்ஜாதிக்கோயில்கள் என்றே பார்க்கப்பட்டன. அவை பிராமண பூசாரிகள் வசமாயின.

மேட்டூர் அணைக்கட்டுக்குக் கீழே உள்ள பரந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ‘ அணைக்கட்டு முனியப்பன் சுடுமண் சிலையை,   சேலம் நாலு ரோடு முனியப்பன்  சுடுமண் சிலையை, ஏழைகளின் சாமிகளுக்குச் சான்றாய்க் காட்டுகிறார் ஆசிரியர்.

எழுத்தாளர் சா. கந்தசாமி எழுதிய ‘நிழல்’ என்னும் சிறுகதையில் தெய்வம்  முனிக்குப்படையலும் பூசையும் நடைபெறும். முனிக்கு ஒரு பாடல் ஒன்றையும் சா.கந்தசாமி அக்கதையில் வழங்குகிறார்.

‘அண்ட சராசரம் காக்கும் ஆதிமுனியே

வால்முனியே அப்பனே

ஆதி முனியே எங்க அப்பனே

ஐயாவே எங்கள் குல நாயகரே

எலந்த மரம் விட்டு இறங்கி வரவேணும்

ஒதியமரம்விட்டு ஓடி வரவேணும்

பனைமரம் விட்டு பாய்ந்து வரவேணும்

இலுப்பைமரம் விட்டு இங்க வரவேணும்

இப்ப வரவேணும் இங்க வரவேணும்

காத்திருக்கும் பிள்ளைகளைக் காக்க வரவேணும்’

மூன்றாவது கட்டுரை ’கல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  மணற்கல்லில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் மிகமிகப்பெரியது காஞ்சி கைலாசநாதர் கோயில்.  நூல் ஆசிரியர் இந்தக்கோயிலை நான்குமுறை பார்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டக் கோயில் இது. கோயில் மதிற்சுவரில் பெரிய  யானைச் சிற்பம்  காணப்படும். பல்லவர் செய்வித்த கோயில்களில் சிற்பங்கள் தனித்தே இருக்காது. கோயிலே சிற்ப வடிவமாகவே அமைந்திருக்கும் என்கிறார் விட்டல் ராவ். காஞ்சி கைலாசநாதர் கருவறையின் உள்ளே பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம் இருக்கிறது. இதற்கு முன்னால் கருப்புக்கல்லால் ஆன லிங்கம் அமைந்திருக்கிறது. நந்தியின் சிலை  கோயிலுக்கு முன்னால் வெளியே  வெகு தூரம் தள்ளி மணற்கல் மேடையில் காணப்படுகிறது. நந்தி அமர்ந்துள்ள  மேடை மூன்று அடுக்குகளைக் கொண்டது. தரையோடு சேர்ந்துள்ள பகுதியில் சிவ கணச் சிலைகள் ஏராளமுள்ளன.

மேலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சப்த மாதர்கள், ருத்திரர்கள் அஷ்டதிக் பாலகர்கள் என்னும் இந்திரன், யமன்,அக்னி,நிருதி,வாயு, வருணன், சோமன்,ஈசானன் சிலைகளோடு , நரசிம்மனுக்கும் கருடனுக்குமான சண்டைக்காட்சிகளும், மணற்கல்லில் சிற்பங்களாய் படைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட  சிறு கோயில்கள் உள்ளன. சிவன் பார்வதி முருகன்  இணைந்த சோமாஸ்கந்தர் ஓவியங்கள் அதிகமுள்ளன. க்ரீட அலங்காரம், ஆபரணங்கள்,குடை தினுசுகள் அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சை சோழர் ஓவியங்கள் போலவே உள்ளன.

நந்திவர்மன் கட்டிய கோயில் ஒன்று உத்திர மேரூரில் இருக்கிறது. இவ்வூரிலுள்ள  வைகுண்டப்பெருமாள் கோயிலில் கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. மற்றுமொரு கோயில் சுந்தர வரதப்பெருமாள் கோயில். இது 1200  ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இக்கோயிலில், ஆஞ்சனேயர்,கருடாழ்வார்,நின்ற கோலத்தில் சுந்தரவரதர் ஆகியோர் இருக்கிறார்கள்.  நின்றான், அமர்ந்தான், கிடந்தான், என்ற மூன்று நிலைகளிலும் அத்திமரத்தால் செய்யப்பட்ட  மூலவர்கள்  இருக்கிறார்கள். உத்திர்மேரூர் சுந்தரவரதப்பெருமாள் கோவிலின் மாதிரியில்தான் சென்னை அஷ்டலக்‌ஷுமி கோயில் கட்டப்பட்டுள்ளதாக விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.

’மரம்’ என்னும் தலைப்பில் இரண்டு கட்டுரைகள்  வந்துள்ளன. மரப்பாச்சிகள் நல்ல செம்மரத்தில் செய்யப்படுபவை. அவை ஒரு அடி உயரமிருக்கும். சிலை செதுக்கும்போது  உடை ஆபரண தினுசுகளையும் செதுக்கியிருப்பார்கள். பெண் பொம்மைகளின் காதும் மூக்கும் குத்தப்பட்டிருக்கும். இதற்கென்றே கிடைக்கும் போலி நகை நட்டுக்களை அதனில் மாட்டி வைப்பார்கள். நார்பட்டில் புடவை, ரவிக்கை,வேட்டி, வஸ்திரம், மரப்பாச்சிகளுக்கு அணிவித்து இருப்பார்கள். மரப்பாச்சி பொம்மைகளுக்குத் திருமணம் உண்டு.  திருமண விருந்தும் ஏற்பாடாகும். நவராத்திரியின் கடைசியில்  ஒருநாள் பொம்மையைத் தூங்கவும் வைப்பார்கள். பிறகு அவை அனைத்தும் பரணைக்கு வந்து விடும்.

பழங்குடி மக்களின் கைவினைப்பொருட்கள் காட்சியகம்  ஒன்று மைசூர் மானசகங்கோத்திரியிலுள்ளது. 1968ல் தொடங்கப்பட்டது. 6500 அரிய  கலைப்பொருட்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சுண்டு விரலில் பாதி அளவு தொடங்கி  ஆளுயர மரப்பாச்சி வரை இங்கே நாம் பார்க்கமுடியும். ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சியை  மரச்சிற்பமாக  செதுக்கியிருத்தலைக் கண்டு பிரமித்துப்போகலாம் நாம்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதி ’சித்திரச்சாலை’ என்னும் பொம்மைக்கூடத்தைப்பற்றியும் விளக்குகிறார் விட்டல் ராவ். பொது மக்கள் இதனைச் சொர்க்க நரக பொம்மைச்சத்திரம் என்றழைப்பதாகவும் தெரிகிறது. சித்திரையில் நடைபெறு அறுபத்து மூவர் விழாவின் போது பொது மக்கள் இதனை கண்டு களிக்கிறார்கள். வியாசர் பாடி விநாயக முதலியாருக்குச் சொந்தமானது இச்சத்திரம். ஆற்காட் நவாபின் அரண்மனை கட்டட காண்ட்ராட்டராக இருந்தவர் இந்த முதலியார்.

தமிழ்நாட்டுக்கோயில்களில் சிதம்பரம், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் இங்கெல்லாம் மரத்தாலான  கோயில்கள் காணப்படுகின்றன.கேரளத்தில் பத்மநாப அரண்மனை அருங்காட்சியகத்தில்  துர்கை சிற்பம் சிறப்பானதாகும். குறிப்பிடப்படவேண்டிய மற்றொன்று பைரவரின் சிற்பம். கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து  பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன. அவற்றை ஒட்டி சிங்கங்கள். முழுச்சிற்பத்தையும் இருபத்திநான்கு நாகங்கள்  பின்னிச் சுழன்று காவல் புரிகின்றன. கேரள மரச்சிற்பியின் அரிய திறமையை உலகுக்குப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷம் இது.

நாம் தேர்த்திருவிழா பல ஊர்களில் பார்த்திருப்போம். மரச்சிற்பங்களின் மொத்த வெளிப்பாடும் தேர் சிற்பங்களில்தான் குடிகொண்டுள்ளன. தேர் செய்வதற்கு ஏற்ற மரங்கள் கோங்கு, அல்லது சால் ,செம்மரம், ஆப்பிள் மரம், சரகம்  முதலியன. புளியமரங்களையும் தேரின் சக்கரம் பீடங்கள் செய்ய  பயன்படுத்துகிறார்கள்.  பிரம்மன்,விஷ்ணு,சிவன்,கார்த்திகேயன்,விநாயகர், அம்மன், இலக்குமி, சரஸ்வதி என உருவங்கள் தேர்களில் கொலுவிருக்கும். தேர்  அமைப்பு எண்கோண வடிவ பீடத்தில், அடுக்கு அடுக்காக ஒன்றன் மேல் அமைந்திருக்கும். நாகஸ்வரம் வாசிப்பவர்கள் தேர் மீது அமர்ந்து வாசிப்பார்கள். தேரை நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இழுத்துச் செல்வார்கள். தேர் இழுக்கும் போது வாசிக்கும் ராகம்,

‘தித்தி தித்தீ தின தியாகராஜா

தித் தினத தித்தீன தித்தி தித்தி…’

கோயிலில் ஒரு தேர் நிலையை அடைவது வரை அழகாகச்சொல்கிறார் விட்டல் ராவ்.

கிறிஸ்துவக்கோயிலிலும்  தேர் செய்யப்பட்டு  இறைவனின்  வீதி உலாவிற்குப் பயன்படுத்தப்படுவது குறித்து இக்கட்டுரையில் வருகிறது. திருச்சி டால்மியாபுரம் அருகே வடுகம்பட்டியில்  வீரமாமுனிவரால் அமைக்கப்பட்ட தேர் குறித்து  விபரங்கள் தரப்பட்டுள்ளன. இத்தேரில்  இயேசுநாதரின் வாழ்க்கைக் காட்சிகள் மரச்சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கல் என்னும் தலைப்பில்  முதல் மூன்று  கட்டுரைகள் மணற்கல்லினால் செதுக்கப்பட்ட சிலைகளைப்பற்றிப் பேசுகின்றன. முதல் கட்டுரையில் காஞ்சீபுரம்  தான்தோன்றீசுவரர் மணற்சிற்பங்கள் குறித்து நிறைய செய்திகள்  தரப்பட்டுள்ளன. இக்கோயிலின் வெளிச்சுற்றுச்சுவரில் தனித்தனியாக ஏழு மணற்கல் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை காபாலிகர்களின் உருவங்களைத்தாங்கி நிற்கின்றன. இந்தியாவிலேயே காபாலிகர்கள் சிற்பம்  காணப்படுவது  இந்தக்கோயிலில்தான்.  காபாலியோடு காபாலினியும்  ஜோடியாகவே காணப்படுகிறார்கள். மாட்டுக்கொம்பில் மதுவை நிரப்பிக்குடித்தபடி நடனமாடுகிறார்கள்.

முக்தீஸ்வரர் கோயிலில் அனேக மண்ற்கல் சிற்பங்கள் பார்க்கலாம். இராவண கர்வ பங்கம் என்னும் புடைப்புச்சிற்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. முக்தீஸ்வரர் கோயிலின் வெளிச்சுவர்களில் ஈசன் நடராஜ வடிவங்கள்  இரண்டு இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வைகுண்டப்பெருமாள் கோயில் பல்லவப்பேரரசு சாளுக்கிய மன்னனை  வெற்றிகொண்டதற்குச்  சின்னமாகக் கட்டப்பட்டது. இக்கோயில் காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டேண்டுக்கும் இடையே அமைந்துள்ளது. வைகுண்டப்பெருமாள் கோயிலிலும் ஏனைய பல்லவ காஞ்சிபுரத்துக்கோயில் போல  அதிட்டானம் கருங்கல்லால் ஆனது. மற்றவை மணற்கற்களால்ஆக்கப்பட்டுள்ளன. இகோயிலில் செதுக்கப்பட்டுள்ள குதிரைச்சிற்பங்கள் நம்மைப்பார்ப்பது போன்றே  வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

 கட்டுரைகள் ’ கல்’-   நான்கும் ஐந்தும்  கற்சிற்பங்களைப் பற்றிப் பேசுகின்றன. செஞ்சிக்கோட்டையில் உள்ள  வெங்கட ரமணர் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், ஸ்ரீரெங்கம் அரங்கன் கோயில், சங்ககிரி வரதராஜப்பெருமாள் கோயில் தஞ்சைப்பெருவுடையார்கோயில் ஆகியன  சிறப்புமிக்க கற்கோயில்களாகும்.

அடுத்த  ’கல்’கட்டுரை ஐயங்கார் குளம், திருப்பனங்காடு மற்றும் கூழம்பந்தல் ஆகிய இடங்களில் உள்ள கற்சிலைகளைப்பற்றி விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஐயங்கார் குளத்தில் உள்ள கோயிலுக்கு சஞ்சீவராயர் கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையோடு பறந்து செல்கையில்  ஒரு துண்டு இந்தக் கோயில் உள்ள இடத்தில் வீழ்ந்துவிட்டதாம் ஆகவே தான் இது சஞ்சீவராயர் கோயில் ஆனது என்கிறார்கள். ஐயங்கார் குளத்திலிருந்து  இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது  திருப்பனங்காடு. பெயருக்கு ஏற்றார்போல் இவ்வூரில் பனைமரங்கள் அதிகமாகக்காணலாம். கூழம்பந்தல் என்னும் ஊர் பற்றி விவரணை தொடர்கிறது. இங்குள்ள கோயிலின் பெயர் கங்கைகொண்ட சோழீச்வரம். இக்கோயிலுக்குச் சுற்றுச்சுவர் கிடையாது. தென்திசை  நுழைவாயிலில் பிரம்மாண்ட இரு துவார பாலகர் சிலைகள் கம்பீரமாய் நிற்கின்றன. சற்று தூர நின்று பாருங்கள், இக்கோயில்,  சக்கரங்கள் இணைக்காத  பெரும் கல் ரதம்  போன்ற வடிவமைப்பைக் கொண்டது. கி.பி 1012-1044ல்  கட்டிமுடிக்கப்பட்டதாகும் கோயிலுக்கு முன் பக்கத்தில் இருபது பருத்த தூண்களைக்கொண்ட பெரிய நடன மண்டபம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து இருபத்து நான்கு  தேவரடியார்களை அழைத்து வந்து  இந்த மண்டபத்தில் நடன  நிகழ்ச்சி நடைபெற்றதாக அறியப்படுகிறது.

அடுத்த கட்டுரை  புத்த ஜைன காஞ்சி.

1927ல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த வரலாற்றுப் பேர்டாசிரியர் துப்ரேல் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் பல பளிங்கிலான புத்த மதச்சின்னங்கள்  கொண்ட  தூண்களைக் கண்டிருக்கிறார். இதை டாக்டர் மீனாட்சி என்கிற வரலாற்றாளர் வழிமொழிந்திருக்கிறார் என்பதனை அறிகிறோம். திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரில் சமணக்குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. சந்திர பிரபா தீர்த்தங்கரர் திருக்கோயில்  இங்கு வெகு சிறப்பாக இருந்திருக்கிறது.

கட்டுரைகள் 12 ம் 13ம்  மகாபலிபுரம் பற்றிப்பேசுகின்றன.  இது கல்லிலே கலை வண்ணம் கண்ட தலம். மகாபலிபுரத்திலுள்ள ராய கோபுரங்கள் இரண்டுமே முற்றுப்பெறாதவை. ஒன்று அர்ஜுன தபஸ் சிற்பத்திற்குப்பின்னால் இருப்பது மற்றொன்று  தலசயனப்பெருமாள் கோயிலுக்கு முன்பாக நிற்பது. இவை இரண்டும் விஜயநகரப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்டவை. அலங்காரத்தூண்களும் யாளி மீது நிற்கும் ஆளுயர மங்கயாக நிற்கும் கங்கைச்சிலையும் மிக முக்கியமானவை. 18 ஆம் நூற்றாண்டில் கடல் வழி தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் மஹாபலிபுரத்தை  ஏழு கோபுரங்கள் அல்லது ஏழு கோயில்கள் என்றே குறிப்பிட்டு  அழைக்கின்றனர். இக்கோயில்களைக் கடல் கொண்டுபோய் இருக்கலாம். 2004 டிசம்பரில் வந்த சுனாமி இயற்கைப்பேரழிவுக்குப்பின் வெகு மாற்றங்கள் கடற்கரைக் கோவில்களில் பார்க்க முடிந்திருக்கிறது.  வங்கக்கடல் அப்போது  வெகு தூரம் உள்  வாங்கியதால் பல கட்டிட இடிபாடுகளைக்  கடற்கரை மக்கள் பார்த்ததாகச்சொல்வதையும் விட்டல் ராவ் பதிவு செய்திருக்கிறார்.

மகாபலிபுரத்தில் உள்ள  பஞ்ச பாண்டவர் ரதச்சிற்பங்களைப்பற்றிக்குறிப்பிடும்போது தர்மராஜா ரதத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்கிறார் ஆசிரியர். பொதுவாக பொதுமக்களை ரதத்தின் மேல் ஏறிப்பார்க்க அனுமதிப்பதில்லை. சிறப்பாகத்தான் அனுமதி பெற்று ஆசிரியர் சென்றிருக்கிறார். தர்மராஜ ரதத்தின் மேற் பகுதியில் இரண்டு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் சோமாஸ்கந்தரின் சித்தரிப்பு, குழந்தை வடிவத்தில் முருகன்.  முருகனைப்பார்த்தபடி சிவனும் பார்வதியும் இருக்கிறார்கள். இடது புறமும் வலது புறமும் பிரம்மாவும் விஷணுவும் இருக்கிறார்கள். புடைப்புச்சிற்பங்களுக்கு மேலே ’ஸ்ரீநரசிம்மா ’என்கிற   கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. அர்ஜுனன் பாசுபதம் பெறும் காட்சிச் சிற்பம் மிகச்சிறப்பானது. திருபுராந்தகச்சித்தரிப்புச் சிற்பம் காண்போர்  மனதைக் கொள்ளை கொள்வது. முண்டாசு கட்டிக்கொண்டு எளிய தோற்றத்தில்  ஒரு சிவன் சிற்பம். காதில் குண்டலங்களோடு கையில் கழியொன்றை வைத்துக்கொண்டு அடியாரைப்பார்க்கும் ஈசன்,  இப்படிச் சிற்பங்கள் பலவற்றைக்காணலாம். இரண்டாவது தளத்தில் கதையை ஊன்றிய துவாரபாலகர்கள், அடுத்து பக்தர் வடிவில் பல்லவ மன்னன் தொடர்ந்து, அரச குடும்பம், கையில் மண்டையோடு வைத்திருக்கும்  கபாலீசுரர் சிற்பம் என அற்புதச்சிலைகளைக்காணலாம்.

அடுத்து வரும் கட்டுரை சாளுக்கியர்களின் இரு கோயிற்கலை மரபு என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. பாதமி  என்பது சாளுக்கியர்களின் தலைநகரம். வாதாபி என்பதுவே கால ஓட்டத்தில்  பாதமி ஆயிற்று. சாளுக்கிய அரசர்களில் புகழ்பெற்றவன் இரண்டாம் புலிகேசி. பதாமி குகைக்கோயில்கள் சிவப்பு நிற மணற்கற்களாலானவை. இவர்களின் கட்டடக்கலை மரபு இரண்டு விதமானவை ஒன்று வடஇ ந்தியமரபு அது ‘நாகரமரபு ’ மற்றொன்று  தென்னிந்தியாவினது’ திராவிட மரபு’. இவ்விடத்தில் விட்டல் ராவ் ஒரு சிறிய விமர்சனத்தை சினத்தோடு சுட்டிச்செல்கிறார். நமது வெகு பழங்காலச்சொல்லான  ’திராவிடம்’ என்கிற பதத்தை ஏதோ ஒரு  ஆங்கிலேயன் வந்துதான் இங்கு ஆரம்பித்து  வைத்தான் என்று யாரேனும் சொல்வார்களானால் அவர்களுக்கு வரலாற்று அறிவு போதாது என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார். ஹியூவன் சாங்  என்னும்   சீன யாத்ரீகன்  தான் சாளுக்கிய நாட்டுக்கு வருகை புரிந்ததைத் தன்னுடைய குறிப்புக்களில்  சொல்லியிருப்பதையும்  வாசகனுக்குச் சொல்கிறார் விட்டல் ராவ்.

இரண்டாம் புலிகேசி மக்லேந்திரவர்மனைத்தோற்கடித்துப்  பல்லவச்சிற்பிகளையும்  கலைஞர்களையும் பதாமிக்கு கூட்டிச்சென்று திராவிடப்பாணி கோயில் கட்டுமானங்களையும் குகைக்கோயில்களையும் கட்டுவித்தான்.பதாமி மலையில் நான்கு குகைக்கோயில்கள் உள்ளன. பல்லவ பாணியில் அமைக்கப்பட்ட  சிவனும் திருமாலும் ஒன்றாகிய ஹரிஹரன் சிலை இங்கே பிரசித்தி பெற்றது. பட்டதகல் கோயிலில் அமைந்திருக்கும் லஜ்ஜாகெளரி என்னும்  சிற்பம் பெண்குறியைக் காட்டியபடி  அமைந்திருக்கும். சில இடங்களில் ஆண்குறியோடு கூடியதாகவும்  லஜ்ஜாகெளரி சிலை காணப்படும். விஜயநகரப்பேரரசு காலத்தில் நிறைய பாலியல் உணர்த்தும்  சிற்பங்கள் கோயில்களில் தேர்களில் இடம்பெற்றன. இவை தமிழகத்துக்கும்விரிவடைந்தன. பட்டதகல் என்னும் ஊரின் பெயர்,  சாளுக்கிய மன்னர்கள்  இந்த ஊருக்கு வந்து மட்டுமே  ஒரு  பெரிய கல் மீது அமர்ந்து  அரச முடிசூட்டுக்கொள்வதை பழக்கமாகக்கொண்டதால் வந்தது என்பதையும் ஆசிரியர் தவறாமல்  குறிப்பிடுகிறார்.

பதினைந்தாவது கட்டுரை எலிஃபண்டா குகைச் சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன. எலிஃபண்டா தீவு மும்பை கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலுள்ள அபல்லோ பந்தரிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எலிஃபண்டா தீவின் புராதனப்பெயர் ‘கராபுரி’. இத் தீவின் முனையில் யானைச்சிற்பம் ஒன்று நின்றதால் இத்தீவு எலிஃபண்டா தீவு என அழைக்கப்பட்டது. அந்த யானையோ வெடிவைத்துத் தகற்கப்பட்டு விட்டது. இங்கு முத்தலை சிவனின் சிற்பம் புகழ் பெற்றது. அது  புகழ்பெற்ற தீன் மூர்த்தி சிலை என்றழைக்கப்படுகிறது. துர்கைக்கான கோயில் ஒன்றும்  சிவனுக்கான கோயில் ஒன்றும் இங்கே இருப்பதைக்காண முடியும். சிவன் பார்வதி திருக்கல்யாணக்காட்சியைச் சிற்பமாக வடித்திருப்பதையும் இங்கே பார்க்கலாம்.

அடுத்து மூன்று கட்டுரைகள் சுவர் ஓவியங்கள் பற்றிப்பேசுகின்றன. கேரளாவில் வயநாட்டிலிருந்து  40 கிலோமீட்டர் பயணித்தால் எடக்கல் மலைக்குகையை அடையலாம். இங்குள்ள மலையும் குகையும் மத்திய தொல் பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பவை. இங்கே  கூர்மையான கருவியைக்கொண்டே ஓவியங்கள் ஒத்த கீறல்களை ஆவணமாக  செய்துவைத்துள்ளதைக் காணமுடியும். மத்தியப்பிரதேசத்தில் பிம்பெட்கா  மலைக்குகைகளில் பண்டைகால ஓவியங்கள் காணப்படுகின்றன. மகாராஷ்ட்ரக் காடுகளில் உள்ளவை அஜந்தா குகை ஓவியங்கள். இவை அனைத்துமே புத்தமதம் தொடர்பானவை. அஜந்தா ஓவியம் என்றாலே நினைவுக்கு வருவது ‘அப்சரஸ்’ என்னும் தெய்வீக மங்கையின் ஓவியம். இது குகை எண் 17 ல் உள்ளது. மூக்கு உதடு இவைகளைத் தூக்கிக்காட்டும் விதத்திலேயே இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. தஞ்சைப்பெருவுடையார் கோயில்  ஓவியங்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரிய்ர் எஸ் .கே கோவிந்தசாமி என்பவரால் வெளி உலகுக்குக் கொணரப்பட்டவை.  பெருவுடையார் கோயில் பிரதட்சிணப்பாதையில் 15 அறைகள் உள்ளன. இவைகளின் உள்ளே  சோழர்கால ஓவியங்களும் நாயக்கர் கால ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியின் சித்தரிப்பு, சுந்தரர் வெள்ளையானைமீதமர்ந்து கைலாயம் பயணித்தல், சிதம்பர நடராஜரை சோழ அரசர் வணங்குதல், கல்யாண சுந்தரராய் சிவபெருமான், இராவணன் கயிலையைத் தூக்க முயற்சிக்கும் காட்சி, திருபுராந்தகர் சினத்தோடு இருக்கும் காட்சி என்று தஞ்சை ஓவியங்கள் பெரும் புகழ் வாய்ந்தவை.

19 வது கட்டுரை திருபுவனச்சிற்பங்கள் என்னும் கட்டுரை. விட்டல் ராவின் இனிய நண்பர் தேனுகா,  நூல் ஆசிரியரை சுவாமிமலைப்பகுதியில் 12 நாட்கள் தங்க வைத்துக் கும்பகோணம் நகரைச்சுற்றியுள்ள சிற்பக்கலைத்தலங்களைப் பார்வையிட்டு வர உதவியிருக்கிறார். தஞ்சைப்பெருவுடையார் கோயில்,கங்கைகொண்டசோழபுரக்கோயில்,தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், மற்றும் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் என்கிற பிரதான கோயில் சிற்பங்கள் குறித்து இக்கட்டுரை இனிதே ஆய்கிறது. கம்பஹரேஸ்வரர் கோயில் இராமாயணச் சிற்பங்கள் குறித்து  விரிவான ஆய்வு இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது.

5 அரசகுலங்களும் 3 சிற்பக்கோயில்களும் என்னும் அடுத்த கட்டுரையில் சோழ அரசர்கள் கர்னாடக மண்ணில் எடுப்பித்த சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன. பெங்களூருக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் நந்திமலைக்கு அடியிலுள்ள நந்தி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சைவக்கோயில் சோழ அரசர்களால் கட்டப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோயில், போக நந்தீஸ்வரர் கோயில், யோக நந்தீஸ்வரர் கோயில் என்று மூன்று சிறப்புப் பெற்ற கோயில்கள் உள்ளன. கோலாரை அடுத்த முலபாகில்  மத்வர்களுக்கான மடம் உள்ளது. இங்கிருந்து சற்றுத் தொலைவில் குருடு மலை உள்ளது. கூடு மலையே பின்னர் குருடு மலை என வழங்கலாயிற்று. சோழ மன்னனால் கட்டப்பட்ட  சோமேசுரர் ஆலயம் இம்மலையில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இத்திருக்கோயில்.

ஹொய்சாளர்களின் நுண் நுணுக்கச் சிற்பங்கள் என்னும் அடுத்த கட்டுரை ஹாவேரி என்னும் ஊருக்கு நூலாசிரியர் தம் துணைவியாரோடு தேனிலவுலவுக்குச் சென்றதில் ஆரம்பிக்கிறது.  நூலாசிரியரின் தமக்கை  அவ்வூரில் குப்பி வீரண்ணாவின் நாடகக்கம்பெனிமுகாமிட்டிருந்ததில்  பங்கெடுத்துக்கொண்டிருந்தார். ஹொய்சாளர்கள் அமைத்த  சித்தலிங்கேஸ்வரர் கோயில்  இங்கே உள்ளது. ஹொய்சாளர்கள் சிற்பத்திற்கு ’சோப் ஸ்டோன்ஸ்’ என்னும் சற்று மிருதுவான கருங்கல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 435 சிற்பக்கோயில்களை ஹொய்சாளர்கள் அமைத்திருக்கிறார்கள். சுமார் 150 கோயில்களில் கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. சிற்பிகளின் பெயர்கள் குறித்த விபரங்கள் ஹொய்சாளர்களின் கல்வெட்டுக்களிலிருந்து பெறமுடிவது ஒரு அரிய விஷயமாகும். பிராகிருத மொழியில் ‘வோஜா’ என்றால் உபாத்யாயர். அதுவே ஆச்சாரி என்று மற்ற மொழிகளுக்கு வந்ததையும் ஆசிரியர் சொல்கிறார்.’சரஸ்வதி கன தாசர்கள்’ என்றும் அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜன் கர்னாடகதேசத்துக்கு  அடைக்கலமாக வந்து இங்கிருந்த ஹொய்சாள மன்னரை ஜைன மதத்திலிருந்து வைணவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார். விஷ்ணுவர்த்தன் என்கிற பெயரை ராமானுஜரே அவருக்கு வைத்தவர். ஹொய்சாளர் சிற்பக்கோயில்கள்  கர்நாடகத்தில்  ஹாசன் மாவட்டத்தில் அனேகம் உள்ளன.ஹளே பீடு, பேளூர் ஆகிய இடங்களில் புகழ் பெற்ற கோயில்கள்  காணப்படுகின்றன. பத்ராவதியில் லட்சுமி நரசிம்மர் கோயில்   சிகரங்கள் கொண்ட அழகான கோயிலாகும்.

அடுத்து மூன்று கட்டுரைகள் விஜயநகரக் கலை  குறித்துப்பேசுகின்றன. இன்றைய ஹம்பியே அந்த நாளைய விஜயநகரம். பெர்ஷியத்தூதுவர் அப்துர் ரஜ்ஜாக்  இந்நகர் பற்றிச் சொல்லும்போது,’இந்த இடத்தைப்போல் இன்னொன்றைக்கண்கள் பர்த்ததில்லை, இதற்கிணையான இன்னொரு இடத்தை உலகில் இருப்பதாய் என் செவிகள் கேட்டதுமில்லை’ என்று குறிப்பிடுகிறார். இன்றைய ஹம்பி என்பது கோயில்கள் அரண்மனைகள் மாளிகைகள்  குளங்கள் இவைகளின் மிச்ச சொச்சங்களே ஆகும். விஜயநகரப்பேரரசில் முக்கியமானவர்  கிருஷ்ணதேவ ராயர். ஆமுக்த மால்யதா என்னும் தெலுங்கு இலக்கிய நூலை எழுதியவர்.

 ஹம்பியில் நுழைந்ததுமே  நாம் காண்பது ஜைன பசதி என்னும் கலைக்கோயில். இது சிற்ப ரூபக்கோயில்..அடுத்து நாம் காண்பது பீமனின் நுழைவாயில். தொடர்வது விருபாட்சர் கோயில். சேதப்படுத்தப்படாத அழகுக்கோயில் இது. விருபாட்சர் கோயிலில் தலைவாசலில்  காண்பது  நிர்வாணக்கோலத்தில் நிற்கும்  பெண்ணின் சுதையுருவம்.   தன் பெண் குறியை  அகலத்திறந்து காட்டும் ஒரு வித, தாந்திரிகக் காட்சியாக  அதனை நாம் காணலாம். ஹம்பி யாத்திரையைக் கோடைகாலத்தில்  நாம் மேற்கொள்ளக்கூடாது. நவம்பர் டிசம்பர் ஜனவரியில் மேற்கொள்வது சவுகரியமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.

விஜய விட்டலர் கோயிலின்  ’கருங்கல் ரதம்’ குறித்து நல்ல விவரணையைத் தருகிறார். நாம் ஐம்பது ரூபாய் பச்சை நோட்டில் காணும்  கருங்கல் ரதம் நம் நினைவுக்கு வரலாம். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணன் கோயிலும், ஹசாரா ராமர் கோயிலும் சிற்பக்கலையழகு கொண்டவை. கிருஷ்ணன் கோயில் மகாமண்டபத்துத்  தூண்களில்  விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. குதிரைத்தலையுடன் கூடிய  கல்கி உருவம் அற்புதமானது. அர்த்த மண்டபத்தில் காதல் சிற்பங்கள் சிறப்பானவை. அடுத்து சொல்லப்படுவது ’தாமரை மஹால்’ என்னும் ஹம்பியின் பெருமைபேசும் அற்புதக் கட்டிடம். துங்கபத்திரை நதியிலிருந்து ஹம்பிக்கு உயரமான கால்வாய் வழியாகத்தண்ணீர் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனைப்பார்த்த  டோமிங்கோ பேயஸ்  என்னும் போர்ச்சுகீசிய பயணி ஹம்பியை  ரோம் நகரத்துக்கு ஒப்பாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தாக உக்கிர நரசிம்மர் சிலை. 6.7 மீட்டர் உயரமானது. நரசிம்மருக்கு  ஏழுதலை கொண்ட  நாகம் குடை பிடிக்கிறது. தொடைமீது இலக்குமியை இவர் கொண்டிருப்பதால்  இவரை யோகநரசிம்மர் என்பதே  சரி என்கிறார்கள். இசுலாமிய படையெடுப்பால் கண்டதுண்டமானது நரசிம்மர் சிலை. 600 துண்டுகளாகச் சிதறிய சிலையை  கர்நாடக அரசின் தொல்லியல்துறையே  நாகராஜ ராவ் என்பவரின் தலைமையில்  முயன்று மீண்டும்  நிலை நிறுத்தியிருக்கிறது. அடுத்து லேபாக்‌ஷி  என்னும் ஊர். அயோத்தி   இராமன்  ’சடாயு’ என்னும்  கழுகைப் பார்த்து’ பறவையே எழுந்திரு’  என்றாராம்,அதுவே ‘லே பட்சி’ லேபாக்‌ஷியாய் ஆகியிருக்கிறது.

ராட்சஸ தங்கடி எனும் ஊரில் இசுலாமியப்படைகள் ஹம்பிக்கான போரை இறுதியாய் நடத்தின. அவை வென்றன. ஹம்பி சூறையாடப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்டது.உடைக்கப்பட்டது. தீயிடப்பட்டது. அழிக்கப்பட்டது.  அந்தக்கால’ யுத்த தர்மம்” அதுவே என்கிறார் ஆசிரியர்.

இசுலாமியக்கலை என்னும் இரண்டு கட்டுரைகள் தொடர்ந்து வருகின்றன. இசுலாமியக்கலை என்பது முக்கியமாய்ச் சங்கேதக்குறிகள் வாசகங்கள் கொண்டது. உருவங்களையோ  அவற்றின் எவ்வித குறியீடுகளையோ கொண்டதன்று. உருவ வழிபாடு இல்லாத காரணத்தால் இசுலாம் ஓவியம் சிற்பம் குறித்து எதுவும் சொல்வதில்லை. கலையுலகிற்கென்று  இஸ்லாம் செய்திருக்கும் பெருங்காரியம் கட்டடக்கலை. ’காலிகிரஃபி’ என்னும் எழுத்துக்கள் முஸ்லிம்களால்  உயர்வாகக் கருதப்படுகிறது. ஜேட்  என்பது  உயர்தரக்கல் வகை. இதனை ஆபரணங்களில், கத்திகளுக்குக் கைப்பிடியில்,  மூக்குப்பொடி டப்பி செய்வதில், மோதிரம், பூ ஜாடி, லோட்டா குவளை, பேலா, ஹூக்கா செய்வதில் உபயோகமாகிறது. மீனாகாரி எனாமல் என்னும் கலை இஸ்லாமியர்க ளால் பெரிதும்  ஆதரிக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி 1367 ல்  மன்சூரின் பேரன்  ரஃபி  என்பவரால் கட்டப்பட்ட  ஜாமி மசூதி இசுலாமியக் கலைப்பாணிக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐயாயிரம் பேர் ஒரே நேரத்தில் இதனுள்ளே தொழுகை செய்ய முடியும்.`

தக்காணக்கோட்டைகளில் முக்கியமானது கோல்கொண்டா. இதன் இளவரசன்  குலிகுதுப் தன் காதலி பாக்மதியைச் சந்தித்த இடத்தில்தான் ’சார்மினார்’ கட்டப்பட்டுள்ளது.பாக்மதியை  குலிகுதுப்  மணந்தபிறகு அந்த இடம் பாக்நகர் என்று பெயரிடப்பட்டது. பாக்மதியே  பின்னர் ஹைதர் மஹல் ஆனாள். பாக்நகர்  ஹைதராபாத் ஆனது. இந்த வரலாற்றையும் இங்கே சொல்கிறார் விட்டல் ராவ்.

அடுத்துவரும் இரண்டு கட்டுரைகள்  இந்திய ஐரோப்பியக் கலை பற்றிப்பேசுகின்றன.  நவீன ஓவிய சிற்பக்கலையில் ’ரோகோகோ’ என்னும் வகைமை ஃபிரான்சில் தொடங்கிச் சிறிதுகாலம்  நடைபோட்டது. எளிமைமிக்க அழகியலுக்கு ஆதரவு பெருகியது. பீங்கான் தங்கம் வெள்ளி வேலைப்பாடுகளில் ரோகோகோ இணைந்துகொண்டது. இந்தியாவில் தவழும் கிருஷ்ணன், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன்  போன்றவை ரோகோகோ  கலையை  வெளிப்படுத்தின.பிறகு சலவைக்கல்லின் ஆளுமையைக் கலைத்துறையில் காணமுடிந்தது.

காலனிய சிற்பங்களில் கொண்டாடப்பட்டது விக்டோரியா மகா ராணியின் சிலை. பம்பாயில் விக்டோரியா டெர்மினஸ்  அந்த ராணியின் புகழைப் பறைசாற்றியது. சென்னையில் அழகிய உலோகச் சிலை சர் தாமஸ் மன்றோ சிலை. இன்றும் அது  கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கிறது. பெங்களூரில் கப்பன் பூங்காவில் ஏழாம்  எட்வர்டின் சிலையும் விக்டோரியாவின் சிலையும் புகழ் பெற்றவை.1901ல் விக்டோரியா மகாராணி ,காலமானபோது அவருக்கு ஐம்பது சிலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டன. கர்நாடக நவாப்  1768ல் சேப்பாக்கம் அரண்மனையை இந்தோசாராசனிக்  பாணியில் கட்டினார். இது பின்னர் பிரிட்டிஷார் வசமாயிற்று. கல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் இருந்த பெரிய மைதானத்தில்  பிரிட்டிஷ்ராஜின் தாஜ்மஹால் என்றழைக்கப்பட்ட ’விக்டோரியா மெமோரியல் ஹால்’  என்னும் கட்டடம் உருவானது. இதற்கு ராஜஸ்தானிலுள்ள மக்ரானா சலைவைக்கற்கள் தருவிக்கப்பட்டன. எண்பதனாயிரம் டன் சலவைக்கற்கள் இந்த மஹாலுக்காக உபயோகப்படுத்தப்பட்டன. 1921 டிசம்பர் 28ல்  வின்சர் கோமகன் வேல்ஸ் இள்வரசரால் இது திறந்துவைக்கப்பட்டது.  இந்தியாவின் மாபெரும் சலவைக்கல் கட்டுமானம். இதனைக்கட்டி முடிக்கவேண்டும் என்று பெரு முயற்சி செய்த கர்சன் பிரபு , லண்டனுக்குச்சென்றார் ஆனால்  இந்தியாவுக்கு திரும்பவும் வந்து அதனை நேரில்  பார்க்காமலே முடிந்து போனார் என்பது ஒரு  வரலாற்றுச்சோகம். அவரது  அழகுச் சிலை  மட்டும் மியூசியத்தின் வெளிப்பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது.

விட்டல் ராவின்  கலை ஆர்வம் வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. அவருடைய கலைப் பயணங்கள்  திட்டமிடப்பட்டவை. எள்முனைகூட சலிக்காது ஒவ்வொரு சிலையையும் ஓவியத்தையும்  கட்டிடத்தையும் அவர் கழுகுக்கண்கொண்டு பார்த்திருக்கிறார். மனைவி, மகள், உறவினர், நண்பர்கள்  கலைப்பயணத்தில் அவருக்கு  அத்தனை ஒத்தாசையாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே  நம் நன்றிக்குரியவர்கள்.

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

No comments:

Post a Comment