உங்களோடு
வாசகருக்கு எஸ்ஸார்சியின் வணக்கம்.
’இங்கும் அங்கும்’
என்னுடைய ஆறாவது கவிதைத்தொகுப்பு. கவிதை
என்னும் படைப்பு வடிவமே கலைவடிவங்களின் ஆகப்பெரிய
உச்சம். மனிதப் படைப்பாற்றலில் கவிதைகள் மட்டுமே
மானுட உன்னதத்தைப்பறை சாற்றி நிற்பன. சொற்கள் தக அமைந்து அவை சொல்லும் ஒரு செய்தியால் கவிதை வாசகனைச் சிக்கெனப்பிடிக்கிறது.
கவிதை வரிகள் சிரஞ்சீவியாய்க் காலத்தை வென்று
வாழப்பிறந்தவை.
மொழியாக்கம் வழி
புலம் பெயரும் கவிதைகள் உலக மக்களை ஈர்த்துச் சாதித்து நிற்கின்றன. ஷேக்ஸ்பியர், கீட்ஸ்,
ஷெல்லி, மில்டன், வர்ட்ஸ்வர்த், எமெர்சென், ராபர்ட் ஃப்ராஸ்ட், எமிலி டிகின்சன், இவர்களளைப்போன்ற எண்ணற்ற
படைப்பாளர்களை வாசகர்கள் கவிதை வழி அறிகிறார்கள்.
இத்தகைய கவிப்பெருமக்களின் படைப்புக்களை உள்வாங்குவதில் வாசகர்களுக்கு வேறு எதுவுமே தடையாக இருப்பதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் முகப்பில்’ யாதும் ஊரே யாவரும்
கேளிர்’ எழுதி வைத்துத்தமிழ்க் கணியன் பூங்குன்றனை இவ்வுலகம் எவ்வளவு பெருமைப்படுத்தியிக்கிறது பார்க்கிறோம்.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சொன்ன திருவள்ளுவர் கருத்துத்தளத்தில்
எத்தனை உயர்ந்து நிற்கிறார் என்பது உணர்ந்தவர்கள்தானே நாம்.
‘To be or not to be’ என்னும் ஷேக்ஸ்பியரின் வரியும்,’ Miles to go before I
sleep’ என்னும் ராபர்ட் ஃப்ராஸ்டின் வரியும், ‘Beauty is truth, truth beauty’ என்னும் கீட்ஸ்ன் வரியும் இப்பூவுலகில் மனித குலம் ஜீவித்திருக்கும் நாள் வரை உயிர்ப்புடன் நிற்கும் மாணிக்க வரிகள் அல்லவா, உயிர்களிடத்தில் அன்பு வேணும் சொன்ன பாரதியும், உலகம் உண்ண உண் உடுத்த உடுத்து
கட்டளை தந்த பாரதிதாசனும் கவிதையால் மக்கள்
நெஞ்சத்துள் என்றும் நிலைத்திருப்பவர்கள். மனித குலத்திற்குக் கவிதைகள் விழுமியம் கூட்டுவன.
அவ்வழி யானும் சில
முயன்று பார்க்கிறேன். முயற்சித் திருவினையாக்கும் என்பதே வள்ளுவர் வாக்கு.’ இங்கும் அங்கும்’ படியுங்கள்.
இந்திய மண்ணில் எழுதிய கவிதைகள் இங்கும் என்கிற விஷயமாயும், அமெரிக்க மண்ணில் எழுதியவை
அங்கு என்கிற விஷயமாயும் இப்புத்தகத்தில் விரிகின்றன.
இக்கவிதைகளில் பல நவீன விருட்சத்தில் வெளிவந்தவை. அழகிய
சிங்கர் என் இனிய நண்பர் அவருக்கு என் நன்றிகள். இப்படைப்பு செழுமையாய் வெளிவர உதவிய
குவிகம் பதிப்பகத்தாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கிருபானந்தன் அய்யாவுக்குமே.
அன்புடன்
01/06/2025
எஸ்ஸார்சி
பெருங்களத்தூர் சென்னை 63.
No comments:
Post a Comment