விடாது கருப்பு
அவன் அம்மாவும்
அவனும் தருமங்குடியிலிருந்து தஞ்சாவூருக்குப்
புறப்பட்டார்கள். தஞ்சாவூர் விலாசமிட்ட தந்தியொன்று
சற்று முன் வந்திருந்தது. தஞ்சாவூர் மானம்பூச்சாவடியில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா
இருந்தாள். அவள்தான் தவறிப்போயிருக்கிறாள். அவர்கள் இருவரும் தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தருமங்குடி பேருந்து
நிறுத்தத்திற்கு பொடி நடையாய் வந்தார்கள்.
பேருந்து பிடிப்பதற்காய் நின்றார்கள். தருமங்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு நேர் பேருந்து இல்லை. கும்பகோணத்திற்கு உண்டு. ஆக அவர்கள் கும்பகோணம்
செல்லும் பேருந்து பிடித்தார்கள். சேத்தியாத்தோப்பு
மீன்சுருட்டி அணைக்கரை சோழபுரம் திருப்பனந்தாள் எனப் பெரிய ஊர்களில் அந்தப் பேருந்து
நின்று நின்று சென்றது.கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து இறங்கிய அவர்கள் தயாராய் நின்றுகொண்டிருந்த தஞ்சாவூர் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு எத்தனையோ பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக காத்துக்கொண்டிருந்தன.
அம்மாவும் அவனும் தஞ்சாவூர் பழைய பஸ்டேண்டில் இறங்கிக்கொண்டார்கள்.
இராஜா மிராசுதார் மருத்துவ மனை வாயிலில் ஒரே கூட்டமாக இருந்தது. கும்பகோணம் தஞ்சை சாலையில்
ஒரு பேருந்து விபத்து. அதன் விளைவுதான் இது.
குழந்தைகள் பள்ளி செல்லும் நேரம்.
‘என்ன கஷ்டமோ யார் யாருக்கு என்ன நஷ்டமோ, பகவானே’ அம்மா
சொல்லிக்கொண்டாள். ஒரு சாவுக்குப்போகும் அவனுக்கு இந்த விபத்துச்செய்தி மனக்கலக்கத்தைக் கொடுத்தது.
இருவரும் வளைந்து வளைந்து செல்லும் ஒரு சாலையில்
நடந்தார்கள்.
‘கையில ஒன்னும் வாங்கிண்டு போவேணாம்’
‘சாவுக்குன்னா போறம்’
வாய்க்கால் ஒன்று பெரியதாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் பச்சை
நிறத்தில் காவேரித் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது.
சில குப்பைகள் அங்கங்கே மிதந்து இந்த மனிதன்
மட்டும் தன் குணத்தை லேசில் மாற்றிக்கொள்ள
மாட்டான் என்பதை அறிவித்துக்கொண்டே நகர்ந்தன. தமிழ் நாட்டிலேயே பெரிய திரையரங்கு என்று
பேசப்படும் ஒரு பெரிய கட்டிடம் ஒன்று இடது
புறத்தில் ராடசதனாய்ப்படுத்துக் கிடந்தது.
’ சினிமா கொட்டாய்க்குத்தான் மதிப்பு இல்லாம போச்சு’
‘அப்பிடித்தான்
இது ஆரம்பிச்சிது, இப்ப மனுஷனுக்கே மதிப்பில்லாம போயாச்சு’
இருவரும் டி வியின்
சமூக ஆக்கிரமிப்பு பற்றித்தான் சொல்லிக்கொண்டார்கள். இரண்டு கிலோமீட்டர் நடந்திருப்போம்.
‘ஆட்டோ வச்சிண்டு வந்திருக்கலாம்’
‘நடக்க முடிஞ்சா நடக்கலாம் ஒடம்புக்கு நல்லது’
அவன் அம்மா பதில் பேசாமல் நடந்தாள்
‘ ஒன் வயசு ஒன்ன பேசச் சொல்றது’
மானம்பூச்சாவடி வந்தது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையினர்
தண்ணீர் செல்லும் வாய்க்காலை தடுத்து பிரித்து வழி மாற்றி எது ஏதோ செய்து வைத்திருக்கிறார்கள்.செளராஷ்டிர மக்கள்
வாழும் பகுதி மானம்பூச்சாவடி. வீதியில் அங்கங்கே
பட்டுத்தறி போட்டுக்கொண்டிருந்தார்கள். சில பட்டுப்புடவை கடைகள் திறந்திருந்தன. அந்தந்த
கடை வாயிலிலும் ஓரிருவர் நின்றுகொண்டிருந்தனர். வியாபாரம் சுமாராய் நடந்துகொண்டிருந்தது.
பட்டுக்கடைகளில் உரிமையாளர் பெயர் ஐயர், ஐயர் என்று போட்டிருந்தார்கள்.‘ஐயர்னு
போட்டுருக்கே உரிமையாளர் பேரு எல்லாம்’
‘ஐயர்னு பட்டபெயர் செளராஷ்ட்ரால எல்லாருக்கும் உண்டு. சிதம்பரம்
மேல வீதியில ஜிய்யரே அய்யர்னு ஜவுளிக்கடை அவர் செளராஷ்டிராதான்.’
’ செதம்பரத்துல இது ரொம்ப
விசேஷம். சீனுவாச அய்யங்கார் மளிகை, ரத்தினசாமி செட்டியார் நகைக்கடை, வீரப்ப முதலியார் பட்டு ஸ்டோர், , சுந்தரம் அய்யர் காபிப்பொடி, நச்சு ஐயர் கிளப், வாண்டையார் மேன்ஷன், ரெங்கசாமி பிள்ளை டாக்டர்,
வெங்கடேசம்பிள்ளை டாக்டர், செட்டியார் ஹை ஸ்கூல், தாமோதர முதலியார் பெட்ரோல் பங்க்,
மணி அய்யர் ரைஸ்மில், கோமுட்டி செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார்
சத்திரம், ராதாகிருஷ்ணம்பிள்ளை நாதஸ்வரம் இப்பிடி எல்லாமே
சிதம்பரத்துல அந்த அந்த பட்டப்பெயரோடதான்
எவ்வளவோ பாத்துருக்கேன்’
‘ரொம்ப ரொம்ப அடுக்கறப்பா
நீ’ அம்மா சொன்னாள்.
அக்கா வீடிருக்கும் மானம்பூச்சாவடி மானோஜி பஜனை மடம் தெரு வந்தது. அங்குதான் இறந்துபோன அக்காவின் வீடு இருந்தது. செளராஷ்டிர சமூகம் வாடகை
ஏதும் இல்லாமல் ‘ நீ குடியிருந்துகோ’
என்று கொடுத்த வீடு. அக்கா வீட்டு வாயிலில்
லலிதா சங்கீத வித்யாலயம் என்கிற பெயர்ப்பலகை இருந்தது. அக்காவின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்.பாலமுருகதாஸ்
தான் அக்காவின் கணவர். காலைநேரம் எல்லாம் அவர்
செளராஷ்ட்ர புரோகிதம் பார்ப்பார். மாலையில் மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக்கொடுப்பார். அவர் பன்னிரு கை இறவனை எப்போதும் பாடும் பித்துக்குளி
முருகதாசின் சிஷ்யர்.
அக்கா வீட்டு
வாயிலில் ஷாமியானா பந்தல் போட்டிருந்தார்கள். இரண்டு பெஞ்சுகள் போடப்பட்டு அதனில் செளராஷ்ட்ர
ஜனங்கள் சிலர் பவ்யமாய் அமர்ந்திருந்தார்கள். வீட்டின் உள்ளே முன் கட்டில் ஒன்றுவிட்ட
அக்காவின் சடலம் கிடத்தப்பட்டு இருந்தது. சவத்தைச் சுற்றி எரும்பு மருந்து கொண்டு கோடு கோடாய்ப் போட்டிருந்தார்கள்.
அக்காவின் இரண்டு
பெண் குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்டது.
வெளியூரிலிருந்த அவர்கள் எல்லாரும்
வந்தும் விட்டார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அக்காவின் பையன் சுவர் ஓரமாய் அமர்ந்து தேம்பித்தேம்பி அழுதுகொண்டே இருந்தான். அவர்கள் எல்லோரிடமும் அம்மா சென்றாள். அணைத்து அணைத்துப் பேசினாள். தன்னால் இயன்ற சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அக்காவின் கணவர் ஒரு கட்டை நாற்காலியில் தலையைத் தொங்கவிட்ட படி அமர்ந்திருந்தார்.
உறவுக்காரர்களும் அக்கம் பக்கம் தெரிந்த நண்பர்களும் குழுமியிருந்தார்கள். வாயிலில்
ஆசந்தி கட்டுபவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டிருந்தனர். சாவு வீட்டுக்கான அமைதி
தவழ்ந்தது. புரோகிதர் தன் வேலையை ஆரம்பித்தார். விசும்பி எழும்பும் அழுகையை அசமடக்கிய அக்கா பையன் ஸ்நானம் முடித்து தலையில் நீர் சொட்ட
சொட்ட இடுப்பில் வேட்டியோடு புரோகிதர் முன் வந்து நின்றான்.
‘தெக்க பாத்து சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிகோ’ புரோகிதர் அவனுக்குச்சொன்னார்.
சவத்தின் கண்கள் மூடியிருந்தன. ‘அதுக்குள்ள என்னம்மா நோக்கு
அவசரம் நாங்க பெரியவங்க இங்க கல்லாட்டம் கெடக்கிறோமே’ அம்மா ஓங்கிக்கத்தினாள். அக்காவுக்கு சுகர் பிரச்சனை
இருந்தது. ஆனால் அது இவ்வளவு சீக்கிரத்தில்
ஒரு முடிவைக் கொணர்ந்துவிடும் என்று யாரும்
எதிர் பார்க்கவில்லை.’ அவ தன் காரியத்தை முடிச்சினூட்டா, என்னதான் சந்தில வுட்டுட்டு
போயாச்சு’ அக்கா வீட்டுக்காரர் புலம்பிக்கொண்டேயிருந்தார்.
அம்மாவை அழைத்த புரோகிதர்’ மஞ்சள் சாந்து
தடவறது சாங்கியம் எல்லாம் ஆச்சா’
அம்மா புரோகிதருக்கு ’ஆச்சு ஆச்சு’ பதில் சொன்னார்.
கணவனை இழந்த கைம்பெண்
சாவில் பசுஞ் சாணியும், சுமங்கலிகள் சாவில்
மஞ்சள் சாந்தும், சவத்தின் பிறப்பு உறுப்பில்
பெண்கள் தடவி முடிப்பார்கள். சுமங்கலிக்கு , மடி வெற்றிலைத் தாம்பூலம் கட்டப்படும்.
கோடிகட்டிய சவம் பின்னரே இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை எத்தனையோ சாவில் அவன் பார்த்துத்தான் இருக்கிறான்.
’ புருஷாள் காட்டுக்கு
வராதவா , ஸ்த்ரீகள் மொத்தமா எல்லாரும் இங்கயே
வாய்க் கரிசி போட்டுறுங்கோ’’
புரோகிதர் ஓங்கிக் குரல் கொடுத்தார். அவனும் அவன் அம்மாவும்
அக்கா சவத்தின் ஈ மொய்க்கும் வாயில் வாய்க்கரிசி போட்டு முடித்தனர். பேரக்குழந்தைகள்
நெய்ப்பந்தம் பிடித்து தாய் வழி பாட்டிக்கு சொர்க்க
வழிகாட்டினர். மூன்று நெய்ப்பந்தங்களில் ஒன்று பெண் குழந்தை பிடித்துக்கொண்டிருந்தது.
‘பேரன்கள் மட்டும்தான், பேத்திகள் நெய்ப்பந்தம் பிடிக்கறது அவ்வளவா சிலாக்கியமில்லை’ புரோகிதர் சத்தமாகச்சொன்னார்.
‘காலம் மாறிண்டுருக்கு ஓய் ’ சொன்னார் அருகிலிருந்த தாடிக்கார பெரியவர்.
‘ மாமி புண்ய ஆத்மா
பூவோடு பொட்டோட போயிருக்கா, அதுலயும் ஏகாதசி மரணம் துவாதசி தகனம்னு நேர்ந்துருக்கு. எல்லார்க்கும் கெடைக்காது . இந்த மாமியோட
ரெண்டு கண்ணையும் தானமா குடுத்துருக்கா. அது யாருக்கோ வெளிச்சம் தெரியப்போறது. டாக்டர்
வந்தார் சவத்து ரெண்டு கண்ணையும் நோண்டி கண்ணாடி பொட்டில எடுத்துண்டு போனார். போய்ச்சேந்த
மாமிக்கு பெரிய மனசு. சவத்து கண்ல பச்ச
நூலால தையல் போட்டுருக்கு பாத்தேளா. நன்னா பாத்துகணும்.
நாமும் நாளைக்கி நல்ல காரியங்கள் செய்ய சித்தமாகணும்’ புரோகிதர் முடித்துக்கொண்டார்.
‘எந்த காட்டுக்கு போறம்’ வெட்டியான் கேள்வி வைத்தான்
மானம்பூச்சாவடி பெரிய மனிதர் இருவர் யோசனை சொன்னார்கள். ‘பொது சுடுகாட்டுக்கு போனா பணம்
ஜாஸ்தியா கட்டணும். அய்யா நம்ம சனத்துக்கு புரோகிதரு. அவுரு சம்சாரம் காலமாகியிருக்கு. செளராஷ்ட்ர ஜனம்
வக்கிற காட்டுலயே அம்மா சவத்த வச்சிடுவம்.
கட்டணமும் கம்மியா ஆவும்’
‘ரைட் செளராஷ்ட்ர காஷ்டத்துக்கு கெளம்பறம். நாலு கிலோமீட்டருக்கு
தூரம் வரும். நடந்து போகமுடியாது. வர்ரவா வண்டில
ஆட்டோல வந்து சேருங்கோ. சவம் வண்டில வந்துடும். கொள்ளி போடறவன் சவம் கூடவே வந்துடணும்’ என்றார் புரோகிதர்.
’ஆத்த தீர்க்கமாஅலம்பி
விடுங்கோ. துணி மணிகள் பாத்திரங்கள் இன்னும்
இத்யாதிகள மொத்தமா நனைக்கணும். பொண்டுகள் ஸ்நானம்
பண்ண ஆரபிக்கலாம். ஆத்து மொட்ட மாடில ஏறி பாருங்கோ, வடக்க இருக்கற
வாய்க்காங்கர சுடுகாட்டுலேந்து பொக
கருப்பா மேல வந்துதுன்னா சரி, அத மொதல்ல பாத்துகணும்,
அப்பறம்தான் அவா அவா ஆகாரம் பண்ணிக்கலாம்கறது விதி’சொல்லிய புரோகிதர்
டூ வீலரில் ஏறி உட்கார்ந்தார்.சவ ஊர்வலம் நகர்ந்தது.
வீட்டு நடுவாய் ராட்டினக்கிணறு. அதனில் குளிக்க ஜனங்கள்
முண்டி அடித்துக்கொண்டிருந்தனர்.அவன் அந்த நெறிக்கும் கூட்டத்தைப் பார்த்தான் . அவன்
அம்மாவைப் பார்த்தான்.
‘கஷ்டம்தான்’ என்றாள் அம்மா.
மூன்றாவது வீடு ராயர் வீடு. அந்த மாமி எங்களைப்பார்த்தாள்.
என்ன நினைத்தாளோ.
‘ ஒரே ஒரு கிணறு
மனுஷா ஜாஸ்தி இங்க என்னத்துக்கு கஷ்டம்,
எங்க ஆத்துக்கு வாங்கோ அங்கயும் ராட்டின கெணறு இருக்கு ஸ்நானம் பண்ணிக்கலாம் ’ எத்தனைப்
பவ்யமாய்ச் சொன்னாள்.
அம்மா அவனைப்பார்த்தாள். அவன் அம்மாவைப்பார்த்தான். இருவரும்
ராயர் மாமி பின்னே சென்றார்கள். கோபிசந்தனம் இட்டுக்கொண்ட ராயர் மாமா குளித்து முடித்துவிட்டு திண்ணையில் ஜபம் செய்துகொண்டிருந்தார். கண்களை
மூடி மூடித்திறந்தார். ஜபம் செய்துகொண்டிருந்தவர்’ ஸ்நானம் பண்ணணுமா நீங்க’ என்றார்.
‘ஆமாம்’
‘தோட்டத்துபக்கமா
போங்கோ கட்ட செவத்த ஒட்டி போனா, ராட்டின கெணறு இருக்கு வாளி இருக்கு பேஷா ஸ்நானம் பண்ணிக்கலாம்’,
ஜபத்தைத் தொடர்ந்தார்.
அம்மா முதலில் இரும்பு வாளியை எடுத்துக் கிணற்றுக்குள்ளாக விட்டு
விட்டு மீதி கயிற்றைக்கையில் வைத்துக்கொண்டார். ராட்டினம் சுழன்றது. உள்ளே போன வாளி தண்ணீர் மொண்டது. அம்மா வாளியை மேலே இழுத்தார். தண்ணீர் நிறைந்த வாளி மேலே வந்துகொண்டிருந்தது. அம்மா கையில் வாளி
இன்னும் வரவில்லை. ஒரு முழக் கயிறு பாக்கி
இருக்கலாம், கயிறு படக் என அறுந்தது. தொபக்கடீர் என தண்ணீர் நிறைந்த வாளி கிணற்றுக்குள் வீழ்ந்தது. பின் மறைந்து போயிற்று. கிணற்று நீர் ‘நா என்ன பண்ணுவேன்’
என்று அவனுக்குச் சொன்ன மாதிரி இருந்தது.
ராயர் மாமியும் இன்னும் குளிக்கவேண்டும். அதற்குள்ளாக வாளி
கிணற்றுக்குள் வீழ்ந்துவிட்டது. அம்மா முகம் அஷ்ட கோணலாகியது.
‘மாமி தப்பு நடந்துட்து’
‘கயத்த நீ ஜாக்கிரதையா
விடணும் வாளிய இழுக்கணும். நம்ம ஆத்திரத்த
கயத்து மேல காமிக்கறதா. இப்ப என்ன பண்றது. நானும் இன்னும் தலையில
தண்ணி ஊத்திகல. நீங்க ரெண்டுபேரும் அப்படியேதான் நிக்கறேள் குத்து கல்லாட்டம்’ மரியாதை வெகுவாய்க் குறைந்து போனது.
‘ நீ செத்த கெணத்துல எறங்கி வாளிய எடுத்து குடுத்துடுப்பா.
எங்காத்துக்காரருக்கு இந்த விஷயம் தெரியப்டாது.
தெரிஞ்சா என்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவார்’ என்றாள் மாமி.
அவன் கிணற்றை எட்டிப்பார்த்தான். தண்ணீர் ஆழத்தில் இருந்தது. அவன் முகமும் தெரிந்தது. பார்த்துக்கொண்டான்.
‘பழக்கமில்லாத கெணறு நீ எறங்காதே’ அம்மா அவன எச்சரித்தாள்.
‘ வாளிய கெணத்துலயும் போடுவ, கெணத்துல குதிச்சி எடுக்கறவனையும் தடுப்ப என்ன பொம்மனாட்டி நீ’
என்றாள் மாமி.
‘இவ்வளவு நாழி என்ன பண்றேள் கெணத்தடில’ என்று வேகமாய்ச் சொல்லிக்கொண்டே ராயர் கிணற்றடிக்கு வந்துகொண்டிருந்தார்.
‘ஏன் என்ன ஆச்சு’
அவன், அவன் அம்மா
எதுவும் பேசவில்லை.
‘ எழவு வீடு கூட்டமா இருந்துது. குளிக்க ஸ்ரமப் பட்டா . பாவப்பட்டேன். குளிச்சுட்டு போகட்டும்
னு நாந்தான் நம்மாத்துக்கு கூட்டினு வந்தேன். நா இப்ப சந்தில நிக்கறேன். வாளி கயறு கெணத்துல போட்டுட்டு தோ நிக்கறா
பெரிய மனுஷி’
‘யார நீ குத்தம்
சொல்லுவ’ ராயர் சொன்னார்.
‘இந்த புள்ளயாண்டான்
கெணத்துல எறங்கி வாளிய எடுக்கப்போனான் அதுக்கும் கூடாதுங்கறா இந்த அம்மா’
‘யாரும் புது ஊருக்கு
வந்து கெணத்துல எறங்கப்டாது. அப்பிடி எறங்கறவனுக்கு ஒண்ணு ஆயிட்டா யார் பதில்
சொல்றது. அது வேண்டவே வேண்டாம்’ ராயர் அதிர்ந்து பேசினார். அவன் அம்மாவுக்கு நிம்மதியாக இருந்தது.
‘ சாவு ஆத்துல கழுவி விட்டுட்டா. எல போட்டு சாப்பாடு ஆரம்பிச்சுட்டா.
காஷ்டத்துக்கு போனவா திரும்பி வந்தாச்சு. நீங்க ரெண்டுபேரும் சாவு விழுப்பு. அந்த ஆத்துக்கு ஸ்நானம் பண்ணாம போப்படாது’‘கண்டிப்பாகச்சொன்ன
ராயர்,
‘ பத்து நிமிஷம்
எல்லாரும் வெயிட் பண்ணுங்கோ’ என்றார். அவனை மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டார். இருவரும் அருகில் உள்ள
மளிகைக்கடைக்குச்சென்று தேவையான அளவு ‘கயிறு
மட்டும் வாங்கி வந்தனர். அவன்தான் கயிறுக்குக்
காசுகொடுத்தான். ராயர் தன் வீட்டில் நுழைந்து வேறு ஒரு தோண்டி எடுத்து வந்தார். தோண்டியின் கழுத்தில்
கயிற்றைக்கட்டி கிண்ற்றில் இறக்கி மூவருக்கும்
தலா ஒரு குடம் தலையில் ஊற்றினார். எல்லோரும்
குளித்தாயிற்று.
‘கெணறு குதிக்கறவன்
வருவான் வந்தா அவன வச்சி வாளி எடுத்துகறேன்.
அதுவரைக்கும் இந்த கயிறு மட்டும் இங்கயே இருக்கட்டும்’
‘கெணறு குதிக்கறவனுக்கு கூலி’ என்றான் அவன்.
‘அதான் நீ கயறு வாங்கிகுடுத்து இருக்கே. என் கெணத்துக் கயறு பழசு. அதான்
அறுந்து போச்சு. இப்ப அந்தக்காசு எனக்கு மிச்சம் அத கெணறு
குதிக்கறவனண்ட குடுத்துடுவேன். நீங்க சாப்பிட
போங்கோ அதுவும் ஆயிடப்போறது’ என்றார் ராயர்.புதுக்கயறு அவன் வாங்கிக்கொடுத்ததும் ,அது
கொண்டு தண்ணீர் சேந்திக்குளித்துமுடித்ததும்
ராயர் மாமிக்கு திருப்தியாகிப் போனது. அவனும் அவன் அம்மாவும் சாவு வீட்டிற்குச்சென்றனர்.
‘கிணறு புதுசா வெட்டி குளிச்சேளா’ என்றார் அத்திம்பேர்.
‘ ராயர் மாமி ,ரொம்ப நல்ல மனுஷி கொஞ்சம் பேசிண்டே இருந்தோமா நேரம் போனதே
தெரியல’ அம்மா பொய்யயை பொறுத்தமாகச்சொன்னாள். சாவு வீட்டில் காமா சோறு சாப்பிட்ட இருவரும்
சொல்லிக்கொள்ளாமலே தருமங்குடிக்குத் திரும்பினர். சாவுக்குப்போனால் சொல்லிக்கொள்ளாமல்தானே வரவேண்டும்.
---------------------------------
No comments:
Post a Comment