சஹ்ருதயர் விட்டல்
ராவ்
என் நண்பர் பாவண்ணனுக்கு
நண்பர். எனக்கும் நண்பர். நண்பர் பாவண்ணன்
தான் என்னை ராமமூர்த்தி நகரிலுள்ள விட்டல்
ராவ் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்துச் சென்றார்.
என் இளையமகன் குடும்பம் பெங்களூரில் இருக்கிறது.
ஆக சென்னையில் வசிக்கும் நான் பெங்களூர் அடிக்கடி
செல்ல வாய்ப்பு. எழுத்தாளர் பாவண்ணன் எங்கள்
பகுதிக்காரர். எழுத்தாளர் பாவண்ணன் படைப்புக்களில்
நான் மிகுந்த ஈர்ப்பு உடையவன். பாவண்ணனின் சொந்த ஊர் வளவனூர். நானும் கடலூர் மாவட்டத்துக்காரன்.
இன்னும் கூடுதலாய்ச்சொல்ல நாங்கள் எல்லோருமே
தொலைபேசி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். விட்டல் ராவ் அவர்களின் வீடு ராமமூர்த்தி நகரில் டி சி பாளையா பிரதான சாலையில் கோஷி மருத்துவ மனைக்கு அருகில் இருக்கிறது.
நன்பர் பாவண்ணனின் அப்போதைய குடியிருப்பு அல்சூரில்
இருந்தது. பேருந்தில் பயணித்து ராமமூர்த்தி நகர் சர்ச் ஸ்டாப்பிங்கில் வந்து இறங்கிய
பாவண்ணனோடு நானும் சேர்ந்துகொண்டேன். இருவரும் நடந்தே விட்டல் ராவ் வீட்டிற்குச்சென்றோம்.
கல்கரே மெயின் ரோடு வழியாகத்தான் விட்டல் ராவ் இல்லத்துக்கு நடந்து சென்றோம்.
அன்றுதான் முதன் முதலாக விட்டல் ராவ் அவர்களை முதலில் பார்க்கிறேன்.
அவர் எழுத்துக்களை வாசித்து வந்தவன்தான். சிரித்த முகம் வெள்ளை நிறத்தில் தலையில் சின்னச்சின்ன
முடிகள். வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருக்கலாம். அவருக்குத்தனி வீடு. சொந்த வீடு. கலைஞானமுள்ள
ஒரு மனிதரின் வீடு என்பதை வீட்டில் நுழைந்ததும் அறிந்துகொண்டேன். அவர் வரைந்த ஓவியங்களும் எடுத்த நிழற்படங்களும் நம்மை வரவேற்கின்றன. விட்டல் ராவின் வீடு ஒரு அரிய நூலகமாகவே திகழ்கிறது.
விட்டல் ராவ் மிகச்சிறந்த
ஓவியர். சினிமாக்கள் பற்றிய அவர் விஷய ஞானம் அபாரமானது.சிற்பங்கள் குகைகள் பற்றிய அவரின்
அறிவு விசாலமானது. சிறுகதைகள் நாவல்கள் என
பிரமிக்கத்தக்க படைப்புக்களைத் தமிழில் தந்தவர்.அவரின்
ஆங்கில அறிவு பாரமானது.தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலம் மற்றும்
அதன் பகுதிகளில் இளமைக்காலத்தில் வசித்துச் சென்னைக்குச் சென்றுள்ளார். ஒரு எக்ஸ்ரே
டெக்னீஷியனாத் தன் பணியைத்துவக்கி சென்னைத் தொலைபேசியில் பல்லாண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.
சென்னையை அணு அணு வாய் அறிந்தவர். அனுபவித்தவர். சென்னைத்தமிழ் விட்டலுக்கு கைவந்த
விஷயம். சென்னையின் புராதனக் கட்டிடக்கலை, ஓவிய சிற்பக்கலைகள் பற்றிய அவரின் தெளிவு
நம்மைக்கிறங்க வைக்கும். அவரோடு உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவரின் வரலாற்று ஈடுபாடு
எவ்வளவு உயிர்ப்பானது என்பதை நாம் அவதானிக்க
முடியும்.
அம்ருதா இலக்கிய இதழில் தொலைபேசி நாட்கள் என்னும் தொடர்ச்
சித்திரத்தை எழுதியவர். பேசும் புதிய சக்தி இதழில் புராதனச் சிற்பங்கள் ஒவியங்கள் குகை
அமைப்புக்கள் குடைவரைக்கோவில்கள் பற்றிய தொடர் ஒன்றை விஸ்தாரமாக வெளியிட்டுக்கொண்டும்
இருக்கிறார். எழுத்தாளர் பாவண்ணனோடு விட்டல் ராவ் உரையாடிக்கொண்டிருப்பது
அருகிருக்கும் நமக்கு அனேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். சுவாரசியமான உரையாடலில் இலக்கியச் சங்கதிகள் அவரிடமிருந்து வந்து வந்து விழுந்துகொண்டே
இருக்கும்.
விட்டல் ராவ்’ வண்ண முகங்கள்’ என்னும் புதினத்தைப்படைத்துள்ளார்.
நாடகக்கம்பெனிகளில் நடிக்கும் மனிதர்கள் படும் இன்ப துன்பங்களை அலசி ஆராயும் நூலாக
இது அமைந்துள்ளது. கன்னட மண்ணின் நாடக உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடுக்கிக்கொண்டே
போகிறார் விட்டல்.
இந்த நாவலுக்கு முன்னுரை தந்த ‘இரா. முருகன், இப்படிப்பேசுகிறார்.
‘கன்னட நாடக அரங்கு பற்றிய இந்த நாவல் எழுதிய விட்டல்ராவின்
சகோதரி பங்கு பெற்றிருந்த வரலாற்றுப்புகழ்
மிகுந்த கன்னட நாடக கம்பெனி குப்பி வீரண்ணா
தியேட்டர்ஸ். அக்காவோடு இருக்க, ஊர் பார்க்க,
நாடகம் பார்க்க, ரசிகர்களை மேடைக்குப்பின்னாலிருந்து பார்க்க,ஆண் பெண் நாடக நடிகர்களோடு
நேசத்தோடு பழக, அவர்களோடு சேர்ந்திருந்து உண்ண உறங்க,சுவாசிக்க விட்டல் ராவுக்குக்
கிடைத்த அனுபவங்களனைத்தின் சாரம் அவருடைய வண்ண முகங்கள் நாவல்.’
விட்டல்ராவ் ஹோசூரில் பிறந்தவர். தாய்மொழி கன்னடம் ஆயினும்
பயின்றமொழி பழகிய மொழி தமிழ். சேலம் பகுதிளில் இளமைக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்.
அவர் எழுதிய’ அன்னாடு காச்சியின் சேலம்’ என்கிற படைப்பு அன்றைய சேலம் நகரைப்பற்றி விரிவாகப்பேசுகிறது. இந்த
அரிய படைப்பை எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார். சா.கந்தசாமி
பற்றி விட்டல் சொல்லும்போது ‘எழுத்துலகத்தில்
என்னுடைய சகபயணியும் குடும்ப நண்பருமான மறைந்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களுக்கு
என் அன்புக்காணிக்கை’ என்று குறிப்பிடுகிறார்.
விட்டல்ராவ் தன்னுடை முன்னுரையில் இப்படிச்சொல்கிறார்.
‘என்னுடைய நாவல்கள் சிலவற்றிலும் சிறுகதைகள் நெடுங்கதைகளிலும்
சேலத்தை, சேலத்தானை, அதன் அன்னாடு காச்சிகளை, அன்னாடுகாச்சித் தனத்தையெல்லாம் வேண்டிய
மட்டும் தேவைப்படும் பொதெல்லாம் சித்தரித்து வந்திருக்கிறேன். சேலம் என் ஊர்,என் மண்.
என்னை ஆளாக்கிய புனித பூமி. அதைப்பற்றி எழுதுவது என் கடமைகளில் ஒன்று.’
விட்டல் ராவின் பார்வை எத்தன கூர்மையானது என்பதனை விளக்க
’ ஓர் அன்னாடு காச்சியின் சேலம்’ வரலாற்று
நூலில் வரும் இந்த எடுத்துக்காட்டு போதுமானது. இப்படிச் சொல்லிச் செல்கிறார் விட்ட;ல்
ராவ்.’ எங்கள் குல தெய்வமான எல்லம்மன் என்றழைக்கப்படும் ரேனுகாதேவி கோயில் பூசாரி எனக்கு
மொட்டையடிக்கும் போது பூணூல் அணிந்திருக்கவில்லை.அவருக்குப்பின்
அந்த திருச்செயலை சுவீகரித்துக்கொண்ட அவர் மகன் அம்மனுக்குப் பூசை காரியத்தின் போது பூணூல் அணிந்திருப்பது வழக்கமாயிற்று’
இதை என் மகளுக்கு அங்கு முடி இறக்கிய போது
நான் கவனித்தேன்.
அர்ச்சகர் என்ற சொல் பூசாரி என்கிற சொல்லினும் உயர்வு பட்டதாக
இந்த சமூகம் கருதத்தொடங்கியதை வேதனையோடு குறிப்பிடுகிறார் விட்டல். இருவரும் ஒரே தொழிலைச்செய்தாலும்
இந்த ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நிலவத்தொடங்கியதைக்
குறிப்பிடுகிறார்.
அன்றைய திரையரங்குகள்
மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு இடங்கள், சிறு மலர் உயர் நிலைப்பள்ளி போன்ற கல்வி நிலையங்கள், சேலத்து வீதி ஒழுங்குகள் கடைத்தெருக்கள் உணவுவிடுதிகள், உணவு
விடுதி சிப்பந்திகள், சிறிய பெரிய திருக்கோயில்கள், சமூகப் பொதுமேடைகள் என்பனபற்றி
இந்நூல் விரிவாகப்பேசுகிறது’ .டி. ஆர் சுந்தரமும் அவரது ஆங்கிலேய மனைவியும் திட்டமிட்டு எல்லா வசதிகளும்
ஒரே இடத்தில் இருக்கும்படியாகத் திரைப்பட ஸ்டுடியோ
ஒன்றைக்கட்ட முடிவு செய்தனர்.இப்படியாக ஒன்பது ஏக்கர் நிலத்தில் ஏற்காடு செல்லும் ரம்மியமும்
அமைதியுமான சூழலில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ 1935ல் உருவானது. மாடர்ன் தியேட்டர்ஸின்
முதல் தயாரிப்பான ‘சதி அகல்யா’ பற்றிப்பேசுகிறார் விட்டல். இப்புத்தகத்தின் இறுதியில் தனது தந்தை மரணமெய்திய செய்தியைப்பதிவு செய்கிறார்.
மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் டபள்யூ எஸ் சுந்தரம் விட்டல் ராவிடம் ’ பிழைப்பது கஷ்டம். இந்த நிலையிலேயே
கூட்டிட்டு போனா குதிரை வண்டி வரும்.செலவு ஜாஸ்தியிருக்காது. இங்கே செத்துப்போயிட்டா
குதிரை வண்டி வரமாட்டான். வந்தாலும் ஏராளமா பணம் கேப்பான்’ மருத்துவர் பளிச்சென்று கூறியதைப்பதிவு செய்கிறார்.
சேலத்தைப்பற்றி ஒரு வரியில்,’சேலம் பிறர் அறியாத மகத்தான
மனிதர்களை நிறையவே கொண்டிருக்கிறது என்கிறார் விட்டல். அந்த மகத்தான மனிதர்களின் வரிசையில்
விட்டல் ராவும் உண்டுதானே.
விட்டல் ராவ் எழுதிய தமிழகக்கோட்டைகள் என்கிற நூல் இங்குள்ள
கோட்டைகளின்வரலாறு கட்டிட அமைப்பு கோட்டைகளின் சிறப்பு அம்சங்கள்அதனோடு தொடர்புடைய
மன்னர்கள் ஆட்சியாளர்கள் அந்தக்கோட்டைகளின் இன்றைய நிலை, குறிப்பிடப்படவேண்டிய சிறப்பான
தகவல்கள் அந்த இடத்தினைப் பார்வையிட ஒருவர் எப்படி அடைவது
என்கிற எல்லா விஷயங்களையும் வாசகர்கள் எளிதில் அறியுமாறு விறுவிறுப்பான நடையில் எழுதியுல்ளார்
விட்டல் ராவ்.
அவர் தொட்டுப்பேசும் கோட்டைகள் ஓமலூர், நாமக்கல்,கிருஷ்ணகிரி,தேன்கனிக்கொட்டை,ஓசூர்,
தர்மபுரி,சந்திரகிரி,தரங்கம்பாடி திருமெய்யம்,வேலூர்,செயிண்ட்ஜார்ஜ் கோட்டை என நீள்கின்றன.
கோட்டைகளைப் பற்றி ராவ் சொல்லுகையில் திப்புசுல்தானின்
சரித்திரமும் கூடவே பயணிக்கிறது. தொடக்க கால யுத்தங்களை பிரெஞ்சுப்படைகளுடன் சமாளித்த திப்புசுல்தான் , ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும்
உடன்படிக்கை ஏற்பட்டதால் சங்கடத்தில் சிக்கிக்கொள்கிறார்.
திப்பு சுல்தானின் தலைப்பாகை கீழேவிழ அவர் போரிடுவதைச் சித்திரமாக வரைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார்.
கட்டிவைத்த கோட்டைகள் எதிரிகளால் வெல்லப்படுவதை
விட சூழ்ச்சிகளால் துரோகங்களால் சதிகளால் வெல்லப்படுவதை அழகாய்ச்சுட்டுகிறார்.
கோட்டைகளை ஆய்கையில்
அவருக்குத்துணையாக வருபவர்கள் வழிகாட்டுபவர்கள்,வரலாற்றுக்கதை
சொல்பவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்களே என்பதை நேர்மையாகப் பதிவு செய்கிறார்விட்டல்.
நிலநடுக்கோடு என்கிற நாவல் அவருடைய சென்னை வாழ்க்கையை சென்னையின்
புராதன கட்டிடக்கலை விஷயங்களை அன்று இயங்கிய திரையரங்குகளை, வாடகை வீடுகளை அன்று உலாவிய சமூக உணர்வுகளை பொது மருத்துவமனை இயங்கிய
விதங்களை அன்று மிச்ச சொச்சமாய் சென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின்
ஒழுகலாறுகளை எழுத்துச் சித்திரமாய்த்தீட்டித் தந்திருக்கிறார் விட்டல்.
சென்னையில் உள்ள தேவாலயங்கள், சென்னையின் பிரதான பழைய புத்தகக்கடையான
மூர் மார்க்கெட்,மரினா கடற்கரை, செயின் ஜார்க் கோட்டை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
அன்று நகரத்தில் ஓடிய ரிக்ஷாக்கள், நகரப்பேருந்துகள் அவை ஏழு பைசாவுக்கு வழங்கிய டிக்கட்டுகள்,
எம்ஜி ஆர் எம் ஆர் ராதாவால் சுடப்பட்ட சமாச்சாரம், பிரதமர் நேரு இறந்தபோது மாநகர கெடுபிடி, பின்னர் நாட்டில் வந்த உணவுப்பஞ்சம்
அதனை சென்னைநகரம் அணுகிய விதம், அவர் காதலித்துத்திருமணம் செய்துகொண்ட சாகசம் நிறைந்த
சென்னை வாழ்க்கை, தொலைபேசித்துறையில் பணியாற்றிய கெடுபிடி அதிகாரிகள், பொறுப்புமிக்க
ஊழியர்கள், சோரமில்லா தொழிற்சங்கத்தலைவர்கள்,
தலைவர்கள் நிகழ்த்திய விறு விறுப்பான கூட்டங்கள், தொலைபேசித்துறையில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தங்கள், இன்னும் எத்தனையோ சுவாரசியமான செய்திகளைச்
சொல்லிக்கொண்டே போகிறார். புத்தகம் வாசகனை கட்டிப்போட்டுவிடுகிறது. விட்டலின் எழுத்து
நடை நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
நிலநடுக்கோடு புதினம் பற்றி பாவண்ணன் இப்படிக்குறிப்பிடுகிறார்,
’வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும்
நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச்சித்திரம்போல் ஒன்றிரெண்டு வரிகளில் தீட்டிவிட்டு, காலமெல்லாம்
ஒளிவுமறைவுப்பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள் மீது வெளிச்சம் விழும்படியாக ஒரு நாவலை எழுதிப்பார்த்திருக்கிறார்
விட்டல் ராவ். தெருக்கள், வீடுகள் கடைகள், திரையரங்குகள்,உணவுவிடுதிகள் குதிரைப்பந்தயம்
என சென்னை வாழ்க்கையைப்பற்றி அவர் அளிக்கும் பல நுண் தகவல்கள் வாசிப்பின் சுவாரசியத்தை
அதிகரிக்கின்றன.அறுபதுகளின் வாழ்க்கை நம் கண் முன்னால் எழுத்தில் ரத்தமும் சதையுமாக
விரிகிறது.,’
தேவ் என்கிற பெயரில் வரும் இந்த நாவலின் கதாநாயகன் விட்டல்
ராவ் அவர்களேதான். தகப்பனை இழந்த தேவு எனும் தேவேந்திர அய்தாளாவின் பேரில் குழந்தை
பாக்கியமற்ற டாக்டர் ஹமீத் தம்பதிகள் வாஞ்சை காட்டி வந்தனர். சேலத்திலிருந்து ஒலவக்கோடு
பாசெஞ்சரில் சென்னை நோக்கி மூன்றாம்வகுப்புப்பெட்டியில் கூட்டத்தோடு கூட்டமாய் வண்டியில்
ஏரும் கதாநாயகன் தேவை வழி அனுப்ப டாக்டர் ஹமீத் சேலம் ரயில்வே சந்திப்புக்கு
வருகிறார் என்று தொடங்குகிறது நாவல். தேவின் நல்ல குணங்களை அவரின் மாமனார் தன்னுடைய
வாழ்வின் இறுதிக்கணங்களில் மட்டுமே தரிசிக்க வாய்க்கிறது.
‘தனக்கு மனிதர்கள்
உண்டு மொழி உண்டு ஊர் உண்டு இனி எல்லாம் உண்டு என்ற தெளிவான நம்பிக்கை மிக்க பிரக்ஞை
தேவுக்குள் எழுந்து பரவியது.’ என்று முடிக்கிறார் விட்டல்.
’மின்னற்பொழுதுகள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பு பேசும் புதியசக்தி
இதழில் வந்த இலக்கியக்கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூலுக்குப் பதிப்புரை எழுதிய ஜெ
.ஜெயகாந்தன், ஓவியர் தேனுகா,எழுத்தாளர் சா.கந்தசாமி
அசோகமித்திரன், மா. அரெங்கநாதன்,தனுஷ்கோடி ,மகரிஷி,பாவண்ணன்,பாவை சந்திரன்,பதிப்பாளர்
கலைஞன் மாசிலாமணி ஆகியோரைப்பற்றி விட்டல் ராவின்
நினைவுகள் அபாரமானவை என்று வியந்து எழுதுகிறார்.
தனுஷ்கோடியின் பன்முக ஆளுமை என்று தலைப்பிட்டு கட்டுரை
எழுதும் விட்டல், ‘ நம்மைச்சுற்றி நமக்கு அருகே
அரைகுறைகளும், அதுவுமில்லாதவையும் தாம் தூமெனக் குதிதெழும்பிச் சுய பீற்றலில் ஜொலிக்கையில்,
குடத்திலிட்ட மணி விளக்காய் அதிகம் தெரியவராமலே இருப்பவர்கள் அனந்தம். அவ்வாறான பன்முகக்
கலை ஆளுமை கொண்ட திரு. ஆற்காடு வரதராசப்பிள்ளை தனுஷ்கோடி வெளியுலகுக்குத்தெரியாமலே
சுடர்விட்டுப்பிரகாசிப்பவர் என்று தொடங்குகிறார்.
தனுஷ்கோடி மூன்று
தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘ஹாசன்’ சகோதரர்கள் தயாரித்த ‘ராஜபார்வை’
டி. ராஜேந்தர் இயக்கிய ‘நெஞ்சில் ஒரு ராகம்’ பிரதாப் போதன் இயக்கிய இந்தியப்பிரதமரின்
பரிசுபெற்ற ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற மிக அரிய விஷயங்களை வாசகர்க்குத் தருகிறார்.
கன்னத்தில் அறைவாங்கி தத் ரூபமாய் நடித்தவர்கள் தமிழ்த்திரையுலகில்
இருவர் என்கிறார் விட்டல். ஒருவர் சகஸ்ரநாமம், ‘மண மகள்’ படத்தில் பத்மினியிடம் அறை
வாங்குவது, மற்றொன்று ‘ராஜ பார்வை’ படத்தில்
எல் வி பிரசாத்திடம் அறை வாங்கும் தனுஷ்கோடி
என்கிறார். சினிமா பற்றிய விட்டலின் தெரிவு இயல்பாய் மிக ஆழமானது.
’எழுத்தில் சித்து மா. அரங்கநாதன்’ என்னும் கட்டுரையில்
விட்டலும் மா. அரங்கநாதனும் திருப்போரூர் பேருந்தில் பயணித்த சுவாரசியமான கதை வருகிறது. அரங்கநாதனிடம் இருப்பது ஐந்து ரூபாய், விட்டலிடம் இருப்பது ஒண்ணரை ரூபாய.
இருவரும் திருப்போரூர் பயணம் போய் திரும்பிய
கதையை நகைச்சுவையோடு சொல்கிறார் விட்டல்.
தனக்கொரு முன் மாதிரியாக எவரையும் சொல்லமுடியாத ஒப்பற்ற கதாசிரியர் மா. அரங்கநாதன்.
அவர் பெயரில் ஒரு அறக்கட்டளைத்தொடங்கி இலக்கிய ஆளுமைகளுக்கு பரிசளிப்பதை மகிழ்ச்சியோடு
குறிப்பிட்டுப் பாராட்டுகிறார் விட்டல்.
புதுமைகளை விரும்பும்
சாவி ,
மனிதத்தன்மை மிக்க கோமல் சுவாமிநாதன், நட்பு போற்றும் பாவை சந்திரன் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை இப்படைப்பில் காணலாம்.
இந்த நூலில் இன்னும் திருவாளர்கள் சா. கந்தசாமி,பாவண்ணன், கலைஞன் மாசிலாமணி,
நர்மதா இராமலிங்கம், தீபம் திருமலை என்னும் பல ஆளுமைகளைச்சிறப்பித்து எழுதுகிறார் விட்டல்.
பாவண்ணன் பற்றிய கட்டுரையில், வெங்கட்சாமினாதன் குறிப்பிட்ட
செய்தியினைப்பதிவு செய்கிறார் விட்டல்.
‘பாவண்ணன் ரொம்ப நல்லவனா தெரியறான்யா,அவ்வளவு நல்லவனாவும்
இருக்கக்கூடாதய்யா’
‘’ இயல்பை மாத்திக்க முடியாது அண்ணா’ விட்டலின் பதில் இது.
நான் ஒரு சமயம் கவிஞர் பழமலயிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
பாவண்ணனின் வளவனூரில்தான். ஏதோ ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குப்போயிருந்தோம்.’ பாவண்ணன் ஈர வன்னியன்,
வீர வன்னியன் இல்லே’ என்று குறிப்பிட்டார் பழமலய். அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல்
போற்றாக்கடைக்கு இயயைந்தவராய் எழுத்தாளர் பாவண்ணனைச்சொல்லலாம். இதுவே வெ. சா வின் பாவண்ணன்
பற்றிய வரையறையிலும் இருப்பதை நாம் காணலாம்.
’காலவெளியில் வண்ண முகங்கள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பை
லாவண்யா சுந்தரராஜன் கொண்டு வந்துள்ளார். அதனில் பாவண்ணன் எம் கோபாலகிருஷ்ணன்,லாவண்யா
சுந்தரராஜன்,குமாரநந்தன், மு. குலசேகரன்,சிவபிரசாத், சாகிப் கிரான்,ரமேஷ் கல்யாண்,திருநாவுக்கரசு,
திருஞானசம்பந்தம் ஆகியோர் விட்டல்ராவின் பன்முக ஆளுமை பற்றி போற்றிப் போற்றி எழுதியிருக்கிறார்கள்.
எளிய மனிதர்களின் ஆன்மாவைத்தேடிய பெரிய எழுத்தாளர் விட்டல்.
உலக சினிமா பற்றிய ஞானம் பெற்றவர், நடமாடும் ஒரு தகவல் களஞ்சியம், மொழியை மிக நுட்பமாகக்
கையாளுபவர், சளைக்காத கலைப்பயணி, நாட்டுப்புற மனிதர்களின் சம்பாஷணையில் ஒளிந்திருக்கும்
அற்புதத்தை தரிசிக்கத்தெரிந்தவர்,ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின் வாழ்வியலை நுட்பமாக
அறிந்தவர், காம்ரேட்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்ட சோகத்தைப் பதிவு செய்தவர், மனித
உறவுகளின் நுட்ப இழைகளை அவதானிக்கத்தெரிந்தவர், தமிழக சமூக வரலாற்றை உள்வாங்கிய படைப்பாளி,
ஏதுமிலிகளின்வழக்கறிஞராய் விட்டலை வாசகர்கள் தரிசிக்க முடிகிறது.
No comments:
Post a Comment