Tuesday, August 26, 2025

ஜம்பம் - கதை

 

 

 

 

ஜம்பம்                                                        

 

 

புத்தம் புதிய சர்ட் பிட்டும் பேண்ட் பிட்டும் என் வீட்டில் ரொம்பநாளாய்க்கிடக்கிறது. யாரோஎனக்கு வைத்துக்கொடுத்ததுதான். நானோ சட்டையும் பேண்டும்  ரெடிமேடில் வாங்கித்தான் உடுத்திக்கொள்கிறேன். ஜட்டி பனியன் தேவைக்குத்  தையல்காரரிடம் அளவு கொடுத்து  தைத்தா போட்டுக்கொள்கிறோம். இல்லையே. எதோ ஒரு சைஸ் ஒவ்வொருவரும்  அதனை ரெடிமேடாகவே  ஜவுளிக்கடையில் வாங்கி வந்து விடுவதில்லையா அப்படித்தான்.

முன்பெல்லாம் தீபாவளி சமயங்களில் ஒரு நல்ல  டைலரைப்  பார்த்துப் பேச நேரமிராது.  அவர்கள் அத்தனைக்குப் பிசி.  ஊருக்கு ஊர் டைலர்களில் ஃபேமஸ் டைலர்கள்  ஓரிருவர் உண்டு. அவர்களிடம்  தைத்துப்போட்டுக்கொண்டால் மட்டுமே பெரிய ஜபர்தஸ்து.  ரெடிமேட்கார்மெண்ட்ஸ்  விற்பனைக்கு வந்த பிறகு  எல்லா டைலர்கள் பிழைப்பும் ஆட்டம் கண்டு விட்டதுதான்.

சதா என்னை அது  உருத்திக்கொண்டே இருந்தது. சிவனே  என்று  மூலையில் கிடந்த  அந்த பேண்ட் பிட்டையும் சர்ட் பிட்டையும் எடுத்துக்கொண்டு ஒரு டைலரிடம் போனேன். அந்தக்கடைக்குப் ‘ பேபி டைலர் ’ என்று பெயர்.  அவர் குழந்தைகள்  சட்டை  தைப்பவரும் இல்லை. அந்த டைலரின் தாயார் பெயர் பேபி. அதுவே கடையின் பெயராயிற்று. அவரைக்கேட்டுத்தான் இது விஷயம்  எனக்குத்தெரிய வந்தது.  பேபி என்று ஆண்களுக்கும் பெயரிடுவதுண்டு உங்களுக்குத் தெரியுமோ, உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால்  சிதம்பரம் மேலப்புதுத்தெருவில் பேபி சாஸ்திரி என்று பிரசித்தமான கனபாடிகள்  இருந்தார் அறிவேன்.

 இந்த பேபி டைலரிடம் துணி தைக்கத்கொடுத்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.

‘சார பாத்து வருஷக்கணக்காச்சு’ டைலர் என்னிடம் பேச்சுக்குக்கொடுத்தார்.

‘எல்லாமே ரெடிமேடா வருதுல்ல’

‘எங்க பொழப்பு கந்த பொழப்பாயிடுச்சுது சார்’

‘பலர்  பொழப்பு அப்பிடித்தான் ஆயிப்போச்சு.  குட ரிப்பேர்க்காரன்,  கிழிச துணி தைக்கிற டைலர்,  பூட்டு ரிப்பேர்க்காரன் டார்ச் லைட் ரிப்பேர் பண்றவன்  சமையல்  பத்திரங்களுக்கு  ஈயம் பூசுறவன் பெட்ரோமாக்ஸ் லைட்காரன்  சைக்கிள் ரிப்பேர்காரன் கடிகார ரிப்பேர் வாட்ச் ரிப்பேர்காரன் என்று  எல்லாரும் மறஞ்சிகிட்டுத்தான் வர்ராங்க. ஒலகம் மாறிகிட்டு வர்ரது’

நான் கொண்டு போன சட்டைத்துணி,பேண்ட் துணி இரண்டையும் வாங்கிப்பார்த்த டைலர் துணி அளவு சரியாக இருக்கிறதா என்பதனை ஒருமுறை  சரிபார்த்துக்கொண்டார்.

‘’சட்டைக்கு முந்நூறு பேண்ட்டுக்கு ஐநூறு எட்டு நூறு  மொத்தமா  தைய கூலி ஆவும்’

‘ரொம்ப ஜாஸ்தி,  இதுக்கு புதுசா ரெடிமேடே எடுத்துடலாம் போல’

‘எடுக்கலாம் ஆனா இந்த தரம் வராது. நா அளவு எடுத்து தக்கிறன்.  தைக்கறதுக்கு  ஒரிஜனல் பம்பாய்  நூல் போட்டு தைக்குறன். துணி கிழியும்  ஆனா  நா போட்ட தையல் அசையாது.  தச்ச துணிய நீங்க வேண்டாம்னு கெடாவுனாதான் உண்டு. அது அதுக்கு தக்கன அது. எல்லாம் ஒண்ணாயிடுமா.  பாக்குற மொத்தமும் குதிரை ஆவாது   பாக்காத எல்லாமும் கழுதையுமில்ல.  அதுஅதுக்குன்னு ஒரு பவிஷு இருக்கு.  பக்குவம் இருக்கு’

‘நா ரெண்டுக்கும்  சேத்து ஐநூறு ரூபா குடுத்துடறேன். கொஞ்சம் எனக்காக  தச்சி கொடுங்க’

‘கிழிஞ்ச துணி தைக்கிறவனா நா. ஹைகோர்ட் வக்கீலு,  அந்த  ஜட்ஜ்க்கு   கவுனு தக்கிறவன். எட்டு நூறுக்கு ஒரு ரூபா கொறச்சி குடுத்தாலும் இந்த ஜோலி எனக்கு வேணாம். நீங்க வேற யாருனா பாருங்க’.  அங்கு  வக்கீல்களின் தைத்த  யூனிஃபார்ம்  எதுவும்  தொங்கிக்கொண்டிருக்கவில்லை.

ஜம்பமாய் முடித்துக்கொண்டார் டைலர்.

‘இப்ப இந்த துணிய தச்சி போட்டுகிட்டு நா சில்லா கலெக்டர்னு    ஆயிடப்போறது இல்ல.  வூட்டுல துணி கெடக்குதே அது வீணா போவுதேன்னு உங்க கிட்ட ரோசன கேக்குலாம்னு வந்தன்’

‘நா இப்ப என்ன சொன்னன். தைய  கூலி இம்மாம் ஆவும்னு சொன்னன்’

‘புடிவாதமா பேசுறீங்க’

‘ஆரு நானா     டைலரின் பேச்சு ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

நான் டைலர் கடையைவிட்டு நகர ஆரம்பித்தேன். டைலர் திரும்பவும் என்னை  அழைப்பார் என நினைத்தேன், அவர் அவர் வேலையைத்தான் பார்க்க ஆரம்பித்தார்.

வீட்டிற்குக் கொண்டு வந்த இரண்டு பிட்டுக்களையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு பக்கமாய் பத்திரமாக வைத்தேன்.அவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்கிற யோசனையில் இறங்கினேன். யோசனை ஒன்றும் லேசில் பிடிபடவில்லை. பின் மண்டை குத்தல் எடுக்க ஆரம்பித்தது.   

தெருவில் குப்பைக்காரன் வரும்  விசில் சப்தம் கேட்டது. சமயத்தில் விசில் சப்தம் மட்டுமே கேட்கும். ஆள் வரமாட்டான். அது ஏதேனும் குழந்தைகள் திருவிழாவில் வாங்கிய ஊதலின் ஒலியாக இருக்கும். விசில்  ஒலி ஒன்றைத்துரத்திக்கொண்டு ஒன்று  கேட்டால் அனேகமாக வந்துவிடுவான். பேண்ட் பிட்டையையும் சர்ட் பிட்டையையும் ஒரு பள பள பிளாஸ்டிக்பையில் போட்டு வைத்திருந்தேன்.

குப்பைக்காரனுக்கு  ஒரு நாள் ஈரக்குப்பை மறுநாள்  உலர் குப்பை என்பதாய்க்கணக்கு. உலர் குப்பை போடும் நாள் என்றால் எனக்கும் மகிழ்ச்சி.  குப்பைக்காரன் விசில் சப்தம் வீட்டருகே நெருங்குகிற மாதிரிக்கு உணர்ந்தேன். ஆமாம் என் வீட்டருகே வந்துவிட்டான். தமிழ் உச்சரிப்பில் வீணாய்ப்போன தெலுங்கு பேசும் ஆந்திரப்பெண் கையில் வெள்ளை சாக்கு வைத்துக்கொண்டு குப்பை வண்டியோடு தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள். அவள் வைத்துக்கொண்டிருக்கும் செல் போன்’ கடலோரம் வாங்கிய காற்று’ ‘குளிராக இருந்தது நேற்று’என்கிற பொன்மனச்செம்மல் எம் .ஜி. ஆர் பாடலைப்பாடிக்கொண்டே இருந்தது.

‘டீ காசு இவ்வு’ குப்பைக்காரி தான் என்னிடம்.

‘ நேற்று குடுத்தேனே’

‘நா நாடிகி டீ  தாவடம் லேதா’

சட்டமாய்த்தான் பேசுகிறாள். டீ குடிக்க ஒரு பத்து ரூபாய் நாணயம் ஒன்று கொடுத்தேன்.

‘வேற  டப்பு  இவ்வு’

‘ஏன் இதற்கு என்ன’

‘மாவாள்ளு ஈ டப்பு   கொனடம் லே’

அவர்கள் சமூகத்தில்  இந்தப் பத்து ரூபாய் நாணயத்தை   வாங்கக்கூடாது என்கிற தடை உண்டாம். வேறு  ஒரு பத்து ரூபாய்  காகிதமாய்க் கொடுத்தேன்.

குப்பை வண்டி டர்ரு புர்ரு என்று ஒலி எழுப்பிக்கொண்டு நின்றது. வண்டியின் டிரைவர்’ ஜல்தி ஜல்தி’ என்று உஷார் படுத்திக்கொண்டு இருந்தான்.

கொட்ட வேண்டிய உலர் குப்பையைக் கொட்டினேன். வீட்டில் தயாராக வைத்திருந்த ரெடி மெட் பிட்டுக்கள்  போட்டுவைத்திருந்த பிளாஸ்டிக் பையைக் கையில் எடுத்துக்கொண்டேன். குப்பைகாரியிடம் ஆரம்பித்தேன்.

‘ஒரு பேண்ட் பிட்டும் சர்ட் பிட்டும் இருக்கு’

‘துணிதான’

‘புதுசு’

‘ எந்த துணியானா என்ன. வெறும்  துணி எடுத்துகினு போயி நா  என்ன பண்ணுறது’

‘நா என்ன செய்யிணும் சொல்லு’

‘தைய கூலி ஆயிரம் ரூவா வரும்’

‘ உனக்கு அதுவும் நானே  தருவேனா’

‘தரவேணாம்  ஒன் துணிய நீயே வச்சிகு’

‘நீ எடுத்துகினு போயேன்’

‘அப்ப துணிவுள   குப்பையோட குப்பையா போடு.  நானு அள்ளிகிட்டு போறேன்’

‘புது துணிய குப்பையில போடுலாமா’

‘அக்கட ஏம்  லொட லொட மாடலு,  வெயி  இல்லுலு  பாக்கி உண்டுந்தி தெலுசா. சூப்பர் வைசர்  தாடிவாடு மொத்துதுடு’

குப்பை வண்டியின் டிரைவர் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தான்.

குப்பை வண்டி நகர்ந்து போனது. என் பிளாஸ்டிக் பையோ என்னோடு இருந்தது. அதனுள்  துணி பிட்கள் அழகாய்க்கொலுவிருந்தன.

இனி என்ன செய்வது. மனைவியிடம் யோசனை கேட்டேன்.

‘நம் வீட்டுக்கு ஜோடியாக யாரேனும் வந்தால் இந்த  துணி பிட்களை வைத்துக்கொடுத்துவிடலாம். அவர்கள் எதாவது செய்துகொள்வார்கள்’

‘இங்க யார் வரா. அதுவும் ஜோடியா’ அவள் எனக்குச்சொன்னாள்.

‘சர்ட் பிட்டை நாலு கர்சிஃப், பேண்ட் பிட்ட  ரெண்டு துணிப்பையாவும் தச்சிட்டு வந்துடறேன்’

மனைவி சிரித்துக்கொண்டாள்>

‘கர்சிஃப்னா அது காட்டன்ல இருக்கணும் மொகம் தொடக்க  ஒதவணும்.  இந்த சர்ட் பிட்   அதுக்கு லாயக் படாது. பேண்ட் பிட்ட  பையா தச்சா,  அரிசி கிரிசி வாங்கியாறலாம், காய்கறி வாங்க இல்ல ரேசன் கடைக்கு எடுத்துகிட்டு போவுலாம்’

‘பையி தைக்கவும்  பையி ஒண்ணுக்கு டைலர்  அம்பது ரூவா கேப்பான்ல’

‘சும்மா தச்சி குடுப்பானா டைலரு. மொதல்ல இதெல்லாம் தைக்க டைலர் இப்ப  கெடப்பானான்னு பாக்குணும்’

‘அப்பிடி போவுதா கத’

‘அன்னாடம் உலகம் மாறிகிட்டே  இருக்குதுல்ல’

’ என்னதான் செய்யுலாம்ங்கற நீ’

அவள் யோசித்தாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

‘நம்ம நகர்ல எஸ் கே பி ஸ்கூல் இருக்குல்ல, அங்க வாசல்ல் ஒரு பெரிய பெட்டி வச்சிருக்காங்க. அதனுள்ள அலமாரி தட்டுங்க  இருக்கும். கண்ணாடிக்கதவு போட்டு மூடி வச்சிருப்பாங்க. நம்மகிட்ட எது தேவ இல்லாம இருக்குதோ அத அதுல கொண்டு வச்சிடலாம்.  ஏழைங்க பாழைங்க  முடியாதவங்க  அந்த பொருளு தேவ பட்டவங்க அத எடுத்துகுவாங்க’

‘இது நல்ல யோசன’

உடனே நான் என் டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். எஸ்கேபி பள்ளி வளாகத்தை நோக்கி வண்டியை ஓட்டினேன். பேண்ட் சர்ட் பிட்களின் பிலாஸ்டிக் பையைப் பத்திரமாக டூவீலர் கொக்கியில் மாட்டிக்கொண்டுதான் புறப்பட்டேன். அந்தப்பள்ளி வளாகம்  சமீபமாய் வந்தது.

வண்டியை நிறுத்தினேன். அந்த இலவச  விநியோகப்பொருட்கள் வைக்கும் பெட்டியை எங்கே இருக்கிறது எனத்தேடினேன். பிரதான வாயிலின் முன்பாக அது நின்றுகொண்டிருந்தது. உங்களுக்கு தேவையற்றதாகக் கருதும், ஆனால் பிறருக்கு உபயோகமாகும் நல்ல பொருட்களை இந்த அலமாரியில் வைத்து முடியாதவர்களுக்கு உதவுங்கள் என்று கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது. இது இவ்வளவு நாள் என் கண்ணில் படவில்லையே. எண்ணிக்கொண்டேன்.

 டூவீலரில் மாட்டிக்கொண்டு வந்த பிளாஸ்டிக் பையைப் பார்க்கிறேன். அது காணவில்லை. வண்டியில் வெறும் கொக்கி மட்டுமே காட்சியானது. எனக்கு சிரிப்பாகவும் வந்தது வருத்தமாகவும் இருந்தது. அந்த பெட்டியை ஒரு முறை முறைத்துப்பார்த்துக்கொண்டேன். யாரும் பேண்டு சர்ட் பிட்கள் அதனுள்ளே வைக்கவும் இல்லை. பிளாஸ்டிக் பையை நம்பக்கூடாது.  அதன் காது பிய்ந்து வழியில் விழுந்திருக்கலாம். அதனை நோட்டம் விட்டபடி  வந்த வழியே டூ வீலரை  மெதுவாக ஓட்டிக்கொண்டு  வீடு திரும்பலானேன்.  பிளாஸ்டிக் பையை வழியில் எங்கும் காணவில்லை. எதிரே  தெரிவது சித்தி விநாயகர் கோவில். வந்ததில், பிக்கில்லை விநாயகருக்கு ஒரு கும்பிடு போட்டுச்செல்லலாம் என்று கோவிலுள்ளாக எட்டிப்பார்த்தேன்.

நான் டூ வீலரில் மாட்டிக்கொண்டு வந்த  அதே பிளாஸ்டிக் பை அந்தக்கோயில் சிவாச்சாரியாரிடம் இருந்தது. அவர்தான் சாலையில் கிடந்த  எனது பிளாஸ்டிக் பையை எடுத்து வந்து  வைத்திருக்கிறார் என்று  முடிவுக்கு வந்தேன். சிவாச்சாரியார் என்னைப்பார்த்ததும் என்ன நினைத்தாரோ தெரியவில்ல. சிறிதுநேரம் யோசனை செய்தார். என்னிடம் பேச ஆரம்பித்தார்,

‘ பையனுக்கு பொறந்த நாள் வர்ரது. சட்ட துணி மணி வாங்கணுமேன்னு யோசனையிலே இருந்தேன். புள்ளயார் என்ன சும்மா  விடல்ல. எனக்கு ஒரு நல்ல  வழி காமிச்சிட்டார். கோவிலுக்கு வரும்போது  அப்படியே நடு  ரோடில இந்த பை கெடந்தது. எந்த மகராஜனோ என் புள்ளக்காக இத  வுட்டுட்டு  போயிருக்கான்.  அத எடுத்துண்டு வந்து  வச்சிட்டு   திரும்பி பாத்தா அய்யாவும்  புள்ளயார் சந்நிதிக்கு  வந்துண்டு இருக்கேள்.  அந்த  கணேசன்னா உங்கள இங்க அனுப்பி வச்சிருக்கான்.  லோகத்துல எதுவும் ஒரு கணக்கோடத்தான் நடக்கறது. இதுக்கு  தையக்கூலியா ஐநூறு கேப்பான்.  நீங்க பெரிய மனசு வச்சி  தையக்கூலிக்கு  கொஞ்சம் தயவு பண்ணணும்’

கொஞ்சமும் நான்  யோசிக்கவேயில்லை.  எனக்கு யாரோ உத்தரவு போட்ட மாதிரி இருந்தது.

சட்டைப்பயிலிருந்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து சிவாச்சாரியாரிடம் கொடுத்து’ வச்சிகுங்க அய்யா’ என்றேன். இப்படி எல்லாம்  செய்பவனா நான் இல்லையே. என்னையே நான்  கிள்ளிக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

எனக்காக ஒரு ஸ்பெஷல் தீபாராதனை விநாயகருக்குக் காண்பித்து எனக்கு விபூதி பிரசாதமும் கொடுத்தார் சிவாச்சரியார்.

நெற்றியில் திருநீறோடு டூ வீலரில் வீட்டுக்குக் கிளம்பினேன். ஐநூறு ரூபாய்  கவுரமாய்   அய்யரிடம் தையல் கூலிக்கு என்று  எடுத்துக் கொடுத்தாயிற்று.  வீட்டில்  அவளிடம்  எதாவது  பொய்யொன்று சொல்லி இதனைச்சமாளிக்கவேண்டுமே என்கிற புதுக்கவலை எனக்கு. விநாயகரை ஒருமுறை பார்த்துக்கொண்டேன்.

----------------------------

 

ட்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment