பாவண்ணனை அறிவோம்.
எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின் நடமாடும் சாட்சியாய் நமக்கு முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால்
,அவர் எழுத்தாளர் பாவண்ணன்.
அவரின் இயற்பெயர் பாஸ்கரன். தமிழ் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில்
1958 அக்டோபர் 20 அன்று ஒரு மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்.பலராமன் சகுந்தலா இவர்கள் பாவண்ணனின் பெற்றோர்.
இன்று தமிழ் தெரிந்த எல்லோராலும்
பேசப்படுகின்ற ஒரு உயர்ந்த இலக்கியப்படைப்பாளியாய் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராய் விளங்குபவர்.
வளவனூர் என்னும் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஓர் ஊரில் பிறந்தார். தொடக்கப்படிப்பை வளவனூர் கோவிந்தையர் பள்ளி, பிறகு அரசு உயர்
நிலைப்பள்ளி எனப் பயின்று பட்டப்படிப்பைப்
புதுச்சேரியிலுள்ள தாகூர்க் கலைக்கல்லூரியில் தொடர்ந்தார். புதுச்சேரியில் பேராசிரியர் ம . லெ.
தங்கப்பா சமூக அக்கறையை பாவண்ணனுக்கு ஏற்படுத்திய பெருந்தகை.
பாவண்ணன் வளவனூரில் திருக்குறள் கழகம் என்னும் ஒரு
இலக்கிய அமைப்போடு மிக அணுக்கமாய் இருந்தவர். வளவனூர் சான்றோர்கள் ராஜாராமன் அ. ப. சு என்கிற கடலூர் சங்கு சிற்றிதழ் ஆசிரியர் வளவதுரையன், சுந்தரமூர்த்தி
துரைக்கண்ணு தொலைபேசித்துறை மோகன் பேராசிரியர் நாகராஜன் என்று நீளும் தோழமை வலுவோடு
இலக்கியப்புரிதலை ஆழப்படுத்திக்கொண்டவர்.
. தொலைபேசி
இயக்குனராக புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் பணி தொடங்கி பின்னர் ஹைதராபாத் சென்று
பொறியாளர் பயிற்சி முடித்து கர்நாடக மாநில தொலைபேசித்துறையில் பல் வேறு இடங்களில் பணியாற்றி
முதல் நிலை அதிகாரியாக பெங்களூரூ மாநகரில்
நிறைவாகப் பணி ஓய்வு பெற்றவர்.
கன்னடமொழியை
நிறைவாகக்கற்று கர்நாடக மக்களோடு நெருங்கிப்பழகி அவர்கள் பண்பாட்டை அறிந்து தெளிந்து
நல்ல இலக்கிய நூல்களை கன்னடத்திலிருந்து தமிழ் மொழிக்கு கொண்டு தருபவர்.
தமிழ் இலக்கிய
ப்படைப்புத்தளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட
முத்தான நூல்களைத்தந்து படைப்பிலக்கியவாதியாய் முத்திரை பதித்தவர். 1982 ல் தீபம் இதழில் பாவண்ணனின் முதல் சிறுகதை
‘பழுது’ வெளியானது.
இவரது படைப்பாக்கங்களைச்சற்றே
கவனிப்போம். சிறுகதைத்தொகுதிகள் 21, நாவல் 3, குறு நாவல் 2, கட்டுரை நூல் 26, குழந்தைப்பாடல்கள்
7, கவிதை நூல் 3, மொழிபெயர்ப்பில் கன்னடத்திலிருந்து
தமிழுக்கு 24 நூல்கள், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 5, என இவை தொடர்ந்து கொண்டிருக்கிற
எழுத்துச் சாகசம்.
பாவண்ணனின்
நேர்காணல் ஒன்றை பவுத்த அய்யனார் இந்திய அமெரிக்க வாசகர் வட்டத்திற்காகக் செய்தார். 26.05.2018ல் சென்னையில் நிகழ்ந்த ‘ பாவண்ணனைப்பாராட்டுவோம் ’
அமர்விற்காகவே அது. ஒரு சிறு புத்தக வெளியீடாக
அந்த நேர்காணல் வந்திருக்கிறது. அதனில் முதல் வினாவிற்கு விடைசொல்லும் பாவண்ணன்,
‘வறுமை மட்டும்
துயரமல்ல. மன வறுமை கூட ஒருவிதத்தில் துயரம்தான்.அன்பின்மை ஒரு துயரம். கருணை இல்லாமல்
இருப்பதுவும் ஒருவகையில் துயரம்தான்’ என்று குறிப்பிடுவார்.
நோபல் பரிசு
இலக்கியத்திற்காகப்பெற்ற மாகவி ரவீந்திர நாத்
தாகூர் தனது கீதாஞ்சலி என்னும் கவிதை நூலில், - கவிதை எண் 36’
‘ This
is my prayer to thee my Lord-strike
Strike
at the root of penury in my heart.
Give me
strength lightly to bear my joys and sorrows
Give me
strength to make my love fruitful in service
Give me
strength never to disown the poor or
Bend my
knees before the insolent might.
இப்படி அடுக்கிக்கொண்டே
போவார். Penury in my heart என்று மாகவி
தாகூர் சொல்வதும் பாவண்ணன் நேர்காணலில் குறிப்பிடும் அந்த’ மன வறுமை’ யும் ஒன்றாய்த்தானே
நம் நினைவுக்கு வருகிறது.
எளிய மக்களோடு
தொடர்ந்து வாழ்தல், அவர்களின் துயரங்களில் தீர்மானமாய்ப் பங்கு பெறுதல் இவை மன வலிமையின்
நற்கொடைகள். ’இறைவா எனக்கு வலிமை கொடு. ’ஏழை மக்களோடு உறவை எப்போதும் பேணுதலும், மூர்க்க
மனம் கொண்ட செல்வந்தர்களின் முன்னால் மண்டியிடாத
நேர்மையும் என்னுள்ளே தொடரவேண்டும். என் இறைவா அதற்கே எனக்கு வலிமை தா’ என்கிறார் தாகூர்.
மாகவிபாரதி
சொல்லுவார்,’ வல்லமை தாராயோ, இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கே’
சித்தர் திருமூலர்,
’படமாடக்கோயில்
பகவற்கொன்றீயில்
நடமாடக்கோயில்
நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக்கோவில்
நம்பர்க்கொன்றீயில்
படமாடக்கோயில் பகவதற்கது ஆமே’ என்பார்.
வீதியில்
பசியோடு நடந்து செல்கின்ற ஒரு ஏழைக்கு உணவளிப்பது என்பது சிலைகளில் சித்திரத்தில்
இருக்கின்ற இறைக்கு உணவளிப்பது, சித்திரத்திலும் சிலையிலும் இருக்கின்ற இறைக்குப்படைக்கும்
உணவு பசியோடு நடந்து செல்லும் ஏழை மனிதனைச்சென்றடைவதில்லை.
திண்ணை.காம்
இணைய இதழில் 100 வாரங்கள் தொடர்ந்து எழுதிய
இலக்கியக்கட்டுரை நூலான ‘எனக்குப்பிடித்தச்சிறுகதைகள்’ பாவண்ணனின் ஒரு வெற்றிப்படைப்பு
என்று குறிப்பிடலாம். சிறுகதை ஜாம்பாவான்களின் சிறுகதை ஒன்றைத்தேர்வு செய்து தனக்கு
நேர்ந்த அனுபவத்தோடு அதை உரசிக் கட்டுரையாகத்தந்து
இருப்பார் பாவண்ணன்.
எடுத்துக்காட்டுக்கு
கி. ராஜ நாராயணனின் ‘கன்னிமை’ சிறுகதை.
பாவண்ணன்
இக்கட்டுரையில் ஒரு தமக்கையின் சிறப்புக்கள் பல பேசுவார். ஒரு சகோதரியின் அன்பினையும்
அரவணைப்பினையும் தாயின் அன்புக்கு நிகராக ஒப்பிடுவார். அக்கா என்பவள் மிகப்பெரிய பொக்கிஷம்
என்பார். கணேஷ் என்னும் நண்பன் ஒருவனின் அக்கா பாவண்ணனிடம் அன்பு காட்டுகிறார். முறுக்கும்
தே நீரும் கொண்டு தருகிறார். இனியன பேசுகிறார்.. நல்ல பல அரிய கருத்துக்களை அறிமுகம்
செய்கிறார். உடன் பந்து விளையாடுகிறார். இனிய பாட்டுப் பாடுகிறார். கதை கேட்கிறார்..
ஒரு ஐந்தாண்டுகளுக்குப்பின்னர்
அதே அக்காவை, அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தைக்கும்
தாயாகிச் சந்திக்கின்ற போது அந்த அக்காவின்
போக்கு விசித்திரமாக இருந்தது. பழைய அக்காவிடம் இருந்த ஏதோ ஒன்று இந்த அக்காவிடம் காணாமல்
போயிருந்தது. இதற்கு விடை கி. ரா வின் கன்னிமை
கதையில் பாவண்ணனுக்குக்கிட்டுகிறது.
கி. ரா வின்
நாச்சியாரம்மா கன்னியாக இருந்த நாட்களில் அவரோடு ஒட்டியிருந்த அரிய மனித நேய நற்குணங்கள் திருமணத்திற்குப்பிறகு விடை பெற்றுச்சென்று
விடுகின்றன. பழைய நாச்சியாரிடமிருந்த ஏதோ ஒன்று
திரும்ப வராதா என்று அவளை மணந்துகொண்டவன்
ஏங்குகிறான். இங்கு கி.ரா சொல்கிறார், கன்னிமை என்பது ஒரு செல்வம்.கண்ணுக்குத்தெரியாத
அந்த சுரங்கத்தின் வழியாக பெண்களின் மனம் அந்த ச்செல்வத்தை அடைகிறது. கன்னிமைப்பருவத்தில்
ஒரு பெண் நற்குணச்செல்வங்கள் சேர்க்கிறாள்.
உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் கன்னிமையின் அன்பில் திளைத்தவனாக, அதற்குக்காலமெல்லாம் ஏங்குபவனாக வாழ்ந்து முடிக்கிறான்.
இப்படி நூறு
ஆகச்சிறந்த உலகச்சிறுகதைகளைத்தேர்ந்து தன் அனுபவத்தோடு உரசி உரசி அற்புதமான இலக்கியப்படைப்பாக பாவண்ணன் கொண்டு தருகிறார் ‘ எனக்குப்பிடித்த கதைகள்’
என்கிற இந்த அரிய புத்தகம் இலக்கிய
ப்பிரியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.
இந்தியத்தொன்மங்கள்
மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராய் விளங்குகிறார் பாவண்ணன். கடலூர் எஸ். ஜெயஸ்ரீயும்
கே. பி நாகராஜனும் மிகையின் தூரிகை என்னும் பெயரில் ஒரு தொகுப்பை அன்மையில் கொண்டு
வந்திருக்கிறார்கள். சந்தியா நடராஜன் தான் அதனை வெளியிட்டு இருக்கிறார். ’பாவண்ணனின்
வர்னனைகள் அழகா வார்த்தைகள் அழகா என்று பிரித்தறியமுடியாத பரவசம் இந்தக்கதைகளை வாசிக்கும் போது எழுகிறது’ என்று தன் முன்னுரையில் சரியாகவே ஜெயஸ்ரீ குறிப்பிடுகிறார்.
பிராம்ணனுமல்லாத
க்ஷத்ரியனுமல்லாத ஒருவன் கல்வி கற்கவே முடியாதா? என்கிற கர்ணனின் கேள்வி ரணம் என்னும்
சிறு கதையில் எழுப்பப்படுகிறது. பாற்கடலை க்கடையும்
சமயும் அசுரர்களின் உழைப்பைச்சுரண்டிய தேவர்கள்
அசுரர்களை எப்படியெல்லாம் வஞ்சித்தார்கள் என்று ராகு போர்க்களம் என்னும் படைப்பில் பேசுவது நம்மை ஆழவே
சிந்திக்க வைக்கிறது. ஏழு லட்சம் வரிகள் என்னும் கதையில் குணாட்யர் தன் குருதியில் தோய்த்து எழுதிய காவியம் ஒடுக்கப்பட்டவர்களின் பைசாச மொழியில் எழுதப்பட்டதற்காக
த்தீக்கிரையாக்கப்படுகிறது. அரசன் அந்தக்கவியத்தை ஏற்க மறுக்கிறான். எத்தனை க்கூர்மையான வரலாற்று
விஷயங்கள் இவண் பாவண்ணனால் வாசகனை ச்சென்றடைகிறது என்பதை எண்ணிப்பார்க்கலாம்.
பாவண்ணன்
படைத்த ‘ பாய் மரக்கப்பல்’ என்னும் புதினம் பேசப்பட்ட புதினமாகும். ஒரு விவசாயியின் கண்களால் இந்தச்சமூகத்தை அளக்கின்ற சாதுர்யத்தை
பாவன்ணன் வாசகர்களுக்கு இங்கே நிறுவிக்காட்டுகிறார். ‘வெறும் நிலத்துக்காகவே தம் வாழ்
நாட்களை ஒப்படைத்துக்கொண்ட விவசாயிகள் அவர்கள் .பயிரிடுவதைத்தவிற வேறு எந்த ஞானமும்
இல்லாதவர்கள். தன் செல்வத்தைத்தானே அறியாத அஞ்ஞானிகள்’
ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த எழுத்தாளன் பாவண்ணனனை
வாசகர்கள் இங்கே சந்திக்க வாய்க்கிறது.
சிதறல்கள் என்னும் புதினம் புதுச்சேரி ஆலைத்தொழிலாளர்கள்
சூழ் நிலையை மய்யமாக்கி எழுதப்பட்டது. எழுத்தாளர் அகிலன் மறைவையொட்டி ஒருபோட்டிக்காக
எழுதப்பட்ட நாவல். அகிலன் திருமகனார் கண்ணன் அறிவித்த போட்டி. போட்டியில் தேர்வாகாத
இந்தப்புதினம் இரண்டாண்டுகளுக்குப்பின்னர் அகிலன்கண்ணன் முன்கையெடுக்க வெளிவந்தது . இந்தச்
செய்தியை நியூ செஞ்சுரி புக் அவுஸ் வெளியிட்ட பதிப்பில் மறக்காமல் பாவண்ணன் குறிப்பிடுகிறார். பாண்டிச்சேரியில் 1982-84 கால
அளவில் இரண்டாண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மூன்று ஆலைகளில் பணியாற்றிய ஆறாயிரம்
தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்ட கொடும் துயரைச்சித்தரிக்கின்ற புதினம் இது. கோவை
ஞானியின் அழுத்தமான ஆழமான புதினம் பற்றிய முன் உரை நம்மைக்கூடவே சிந்திக்க வைக்கிறது. ’முதலாளியம்
உன்னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறதோ அதனை மட்டும் தா , பின்னர் குடும்பத்தோடு நீ முடங்கு. அதுதானடா உன் வாழ்க்கை. வானம் கடல்
மலைகள் இயற்கை அழகு இதன் மீதெல்லாம் உனக்கென்னடா அபிலாஷை. உன்
உடல் உறுப்புக்கள் உழைக்க மட்டுமே நினைவில் வை.’ கோவை ஞானி ஈவிரக்கமற்ற முதலாளித்துவ மனசாட்சியை இவண் உடைத்துத்தான் காட்டுகிறார்.
பாவண்ணனின்
இப்புதின நடையில் கவித்துவம் மிளிர்வதாய் கோவை ஞானி குறிப்பிடுகிறார்.
சமுதாய ப்பிரச்சனைகளை
மய்யப்படுத்தி கனமான கட்டுரைகள் அனேகம் எழுதியிருக்கிறார் பாவண்ணன். இதுவரை கட்டுரை
நூல்கள் 25 வெளிவந்துள்ளன.
பாவண்ணனின் துங்கபத்திரை என்னும் தலைப்பிட்ட கட்டுரைத்தொகுப்பை எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்டு
இருக்கிறது. புதியபார்வை இதழில் தொடராக வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு இது. துங்கபத்திரை என்னும் தலைப்பிட்ட கட்டுரையில் ஆவேசம்கொண்டு ஓடும் அந்த நதியின் நீர் எத்தனை
வேகம் கொண்டது என்பதனை ஒரு காமிராக்காரனைப்போல் அழகாகச்சொல்கிறார் பாவண்ணன். இயற்கை
அன்னை மீது மாறாக்காதல் கொண்ட எழுத்தாளரவர். துங்க பத்திரைநீரின் பிரவாகம் நம்பமுடியாததாகவே
இருக்கும். சுழித்துச்செல்லும் நீரோட்டம்,
கற்பனைக்கெட்டா வேகம், அது முரட்டுக்காளைபோல், கட்டுப்பாடில்லா வாகனம் போல்,பித்தேறிய
குதிரையைப்போல் என்கிறார்.
அணைக்கட்டினைத்தொட்ட
அந்நதி நீர், பிடிபட்ட யானையையே ஒக்கும். பிளிறல்,குமுறல்,கதறல், வனமிருகங்களின் ஒலிக்கலவையாய் அனுபவமாகும். பூசாரியின்
ஆணைக்கு அடி பணிய மறுக்கும் கெட்ட ஆவியாய் நதி நீர் பார்ப்போரை உணரவைக்கும் ஆடைகளைக்களைந்து விட்டு ஊளையிட்டு
வீதியில் ஓடும் மனிதனாக, திக்குத்தெரியாத காட்டில் அபயக்குரல்
எழுப்பும் குழந்தையாக, ஆயிரம் கைகளிலும் ஆயுதங்களை ஏந்திப் பலி வாங்க வெறியோடு
அலையும் முரட்டுத்தெய்வமாய்த்தோன்றும்.
தினமணியில்
வெளிவந்த கட்டுரைகளை ஒரு தொகுப்பாக’ எட்டுத்திசையெங்கும் தேடி’ என்ற தலைப்பிட்டு, தஞ்சாவூர்
அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 35 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.
தொண்டர்களும்
தலைமையும் என்னும் கட்டுரையில் ஒரு கனமான வினா தொடுக்கிறார் பாவண்ணன்.’ நாலு சீட்டுக்கும்
மூன்று சீட்டுக்கும் பேரம் நடத்துகிற தலைமையைக்கண்டு நாம் சிரிக்கத்தேவையில்லை. நம்மைப்பார்த்தே
நாம் சிரித்துக்கொள்ளவேண்டும். அவர்கள் பேரம் நடத்துவது தொண்டர்களாகிய நமக்காகத்தான் என்றுதானே சொல்கிறார்கள்? அதை ‘இல்லை’
என்று மறுக்க எந்த இயக்கத்திலிருந்து எந்தத்தொண்டன்
முன் வருவான்?’
அதிகாரத்தின்
கனிகள்- என்னும் கட்டுரையில் ‘ அரசு அமைப்பில் உச்சத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து அதிகாரத்தின்
ருசியை அனுபவிக்கத்துடித்தபடி இருக்கிறார்கள். அந்த ருசிக்குக்குந்தகம் ஏற்படாதபடி
காவல் துறை அதிகாரம் பார்த்துக்கொள்கிறது.’ என்று பேசும் பாவண்ணன் அரசியலில் தான் எந்தத்திசைவழி
என்பதை நமக்குச்சூசகமாகச்சொல்லிவிடுகிறார்.
நல்ல கவிஞராக
பாவண்ணன் மிளிர்வதை அவரின் கவிதைதொகுப்புக்கள் பேசுகின்றன. கரு நாடக மண்ணில் பாவண்ணன் சில
வித்தியாசமான அனுபவங்களையும் சந்தித்தும் இருக்கலாமோ
என்னவோ.
கண்ணாடி
– என்கிற பாவண்ணனின் கவிதை இப்படி..
‘ எந்தெந்த
நெஞ்சில் நெருப்பிருக்குமோ
எந்தெந்த
கைகளில் வன்மம் வழியுமோ
பதறிச்சோர்வடைகிறது
மனம்
பீறிடும்
அச்ச ஊற்றில்
தடுமாறிப்புரண்டோடி
கரையொதுங்கும்
எண்ணச்சடலங்கள்
காற்றில்
கரையாத கூச்சலால்
கால் நடுங்கும்
வெளியே செல்ல
இன்னொரு மொழி
புழங்கும் ஊரில்
வாழத்தந்த
விலை பெரிது.
அணிலின் விளையாட்டு
மனித மரணம் இரண்டையும் ஒப்பு நோக்கும் பாவண்ணன்
‘ நடந்து
செல்லும் மானுடக்கூட்டத்தின்
பாதங்களுக்குக்கீழே
நிழல் போல்
ஒட்டிக்கிடக்கிறது மரணம்’ என்று முடிக்கிறார்.
‘ இன்னும்
நீட்டிக்கும் வாய்ப்புக்காக
உன்னுடன்
சொல்லிப்பகிர்ந்துகொள்ள
நினைவுகளை சீய்க்கிறது மனக்காகம்’ இப்படி மனக்காகம் சீய்க்கிற விஷயங்கள் என்றைக்கும் எத்தனையோ உண்டுதானே.
மூன்றுஅற்புதக்
கவிதைத்தொகுப்புக்களை த்தந்திருக்கிறார் பாவண்னன்.
கரு நாடக மண்ணில் தொலைபேசித்துறையில் பொறுப்பாகப் பணியாற்றி மா நிலத்திலேயே மிகச்சிறந்த அதிகாரி என்கிற சேதி சொல்லும் ’ சஞ்சார் ஸ்ரீ’ விருதையும் பெற்ற சாதனையாளர் அவர்.
மொழிபெயர்ப்புத்
தளத்திலோ எழுத்தாளர் பாவண்ணன் ஈடில்லா பணியைச்சாதித்து நிற்பவர்..
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை
கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார் பாவண்ணன். பைரப்பா எழுதிய
’பருவம்’ என்கிற பெரிய நாவலை த்தமிழில் மொழியாக்கம் செய்து சாகித்ய அகாதெமி விருதை 2005ல் பெற்றார்..
க்ரீஷ் கர்
நாட் எழுதிய ’தல தெண்டா’ என்கிற நாவலை ’பலி பீடம்’ என்கிற தலைப்பிட்டு அழகு தமிழில் கொண்டுதந்தார். க்ரீஷ் கர்நாட்டின் நாக மண்டலத்தையும் தமிழாக்கம் செய்தார். பலிபீடம் நாடகத்தில் மஞ்சணக்ரமித்தன் இப்படிப்பேசுவான்.
‘பொதுமக்கள்,
யோசிக்கிற உரிமை அவுங்களுக்கு எதுக்கு மத ஒழுக்கம் குல ஒழுக்கம், ஜாதி ஒழுக்கப்படி
யோசிச்சி முடிவெடுக்க நாம இருக்கும்போது அவுங்களுக்கு அந்த கஷ்டம் வேணாம். ஆட்சி செய்ய மகாராஜா யோசிச்சி முடிவு சொல்ல நாம்.
இன்னும் என்ன வேணும். ராஜாவே மக்களுக்கு முதல் கடவுள்’
ஹரளய்யா என்னும்
பாத்திரத்தின் சொல்லாடல் இது.
‘’ குடி வேணாம்
மாமிசம் வேணாம்னு ஒதுக்கிட்டோம் ஆனா சக்கிலி சக்கிலிதானேன்னு சொறாங்க அவுங்க’
எத்தனைத்துயரத்தை
அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சுமந்து வாழ்கின்றனர் என்பதை நாடகாசிரியர் கர்நாட் சொல்லிப்போகிறார். பாவண்ணனின்
மொழிபெயர்ப்பு அத்தனைக்கச்சிதமாய் இந்த படைப்பில் வெளிப்பட்டிருப்பதை வாசகன் நிறைவாக
உணர்கிறான்.
‘ சொந்தம்
பந்தம் மாமன் மச்சான் எல்லா உறவு மொறைகளையும் விடாம காப்பாத்தி வரவதாங்க அவுங்க. நிஜமாகவே
ஜாதியை விட்டுடுன்னு அவங்ககிட்ட சொன்னா அந்த நிமிஷமே மூச்சு நின்னுடும் அவுங்களுக்கு’ இப்படிப்பேசும் பலிபீடம்
புரையோடிப்போன ஒரு சமூக பிரச்சனையை
மய்யமாக எடுத்துப்பேசும் நாடகம்.
சாந்தி நாத தேசாய் படைத்த ‘ஓம் நமோ’ புதினத்தை தமிழாக்கம்
செய்தமைக்காக ’ நல்லி திசை எட்டும்’ மொழியாக்க
விருது பெற்றாரவர். அரவிந்த மாளகத்தி எழுதிய ‘ கவர்மென் ட் பிராமணன்’ என்கிற நூலை தமிழாக்கம்
செய்தார் பாவண்ணன். நெடிய வாழை இலையின் நுனி ப்பகுதி இலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உணவருந்தக்கூடாது என்கிற பழக்கம்
எப்படியப்பா இங்கே வந்தது என்று வினாவுகிறார் மாளகத்தி.
எஸ். எல்.
பைரப்பா எழுதிய பருவம் என்னும் மாபெரும் புதினம்
பெண்களின் பெருமை பேசும் காவியம். பஞ்ச பாண்டவர்களின் தாயார்
குந்தி யின் ஆளுமை ஒளிர் விடும் படைப்பு. கிருஷ்ணை என்னும் பாஞ்சாலியை உயர்த்திப்பிடிக்கிறது புதினம். இந்தப்புதினத்தில் பைரப்பா இப்படிப்பேசுவார். அதனை அழகுதமிழில் தருவார்
பாவண்ணன்
.’ சூதாடிகளும்,குடிகாரர்களும்
விபச்சாரிகளும் தேச எல்லைகளையெல்லாம் மீறி
எந்த இடமாக இருந்தாலும் தம்மையொத்தவர்களைக்கண்டு நொடியில் நட்பாகிவிடுவார்கள் என்று
சொல்லப்படுகிற வாய் வழக்கு சத்தியமானது’ எத்தனை
யதார்த்தம் பைரப்பாவின் செய்தி. மனித சமுதாயத்தின் பல்வேறு முகங்கள்,உணர்வுகள்,உறவுகள்,
முரண்கள் பற்றிய பிரக்ஞை இந்த நாவலை எழுதி முடிக்கும் வரை இருந்ததாய் படைப்பாளி பைரப்பா
குறிப்பிடுகிறார்.
சாந்தி நாத
தேசாயின் ‘ ஓம் நமோ’ என்னும் புதினம் பாவண்ணனால் மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டது.
நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது பெற்ற படைப்பு இது. மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் தனது முன்னுரையில்
இப்படிப் பேசுகிறார்.
‘சாரத்தை
இழந்த சக்கையாக மதம் மாறிவிட்டது என்பதை மிக நெருக்கடியான
ஒரு தருணத்தில்
அவள்( ஆன் எனும் கதா பாத்திரம்) மனம் கண்டடைகிறது.
மதம் வெறும் சடங்குகளாகக் குறுகிவிட்டது. அதனாலேயே
அது மனிதர்களை வெறுக்கிறது. மனிதர்களை அழிக்கிறது. மனிதர்களை வேரற்றவர்களாக ஆக்குகிறது.அனைத்தும்
தெரிந்த நிலையிலும் கூடச் சாரமற்ற இந்தச்சக்கையை மனிதன் ஏன் சுமந்துகொண்டிருக்கிறான்
என்பதுதான் நாவலை வாசித்து முடித்த பிறகு நமக்குள் எழும் கேள்வி’
பாவண்ணன்
இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னட படைப்புக்கள் வழி தமிழ் இலக்கிய ப் படைப்பாளிகளுக்கு
கூடுதல் ஒளி பாய்ச்சுகிறார் என்றே கூறலாம்.
சிறுகதைத் தொகுப்புக்கள் 20 தந்துள்ள பாவண்ணன் தரமான சிறுகதைகளை த்தமிழ்படைப்புலகில்
தனதாக்கிய சாதனையாளர். பாவண்ணனின் முள் என்னும்
சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்து நாளிதழில் வெளிவந்ததைத்தான் முதன்முதலில்
வாசித்து மகிழ்ச்சி அடைந்தவன் நான். தொடர்ந்து
கணையாழியில் சிறுகதை தந்தவர் பாவண்ணன். பாவண்ணனின் ‘கண்காணிப்புக்கோபுரம்’ என்னும்
பாவண்ணனின் சிறுகதைத்தொகுப்பினை எடுத்துக்கொண்டு சற்றே ஆராய்வோம். ஒன்பது கதைகளைக்கொண்ட தொகுப்பு இது. சந்தியா பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தை சிறுகதையாளர் அமரர் கு.அழகிரிசாமி க்கு ச்சமர்ப்பித்து
இருக்கிறார் பாவண்ணன்.
முதல் சிறுகதை
கண்காணிப்புக்கோபுரம். வருகிறான் அஜய் சிங்கா
என்னும் துப்பாக்கிக்காரன். ராணுவத்தில் பணியாற்றுகிறான்.
மேல் அதிகாரியின் காலணியைத்துடைக்க மறுத்ததற்காகத் தண்டனையாய் இந்தக்குன்றுப்பகுதிக்குப்பணி மாற்றலில்
வந்தவன். ஊர் உலகையெல்லாம் கண்காணிக்க துப்பாக்கிக்கையை கையில் கொடுத்து பிடித்து க்கொண்டு நிற்கச்சொன்னது ராணுவம். ஆனால்-
தான் எப்படி- என்பதைக் கண்காணித்துக்கொள்வது
மட்டும் ரானுவத்திற்குத்தெரியவில்லை.
ஊருக்கெல்லாம் நாட்டாண்மைதான் என்ன செய்வது.
சிப்பாய்
சொல்கிறான்’ மானம் மரியாத கோபம் ரோஷம் எல்லாத்தையும் காத்துல பறக்க உட்டாதான் ராணுவத்துல
சிப்பாயா வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது’. எத்தனை வேதனை பாருங்கள்.
அந்த சிப்பாயை
ஆர்டர்லியாக ஒரு ராணுவ அதிகாரி வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அந்த வீட்டில் கழிவறையைமுதல்கொண்டு
சுத்தம் செய்கிறான். அதிகாரியின் மனைவி அணியும்
ஆடைகளைத்துவைத்து உலர்த்துகிறான்.அவர்கள் வீட்டு நாய் அவனை முறைக்க அவன் அம்மையாரின்
சுடிதாரை கீழே போட்டுவிடுகிறான். அது மண்ணில்
வீழ்ந்து விடுகிறது. கீழே கிடந்த ஒரு கம்பியை
எடுத்து அந்த எஜமானி ப்பெண்மணி அவனை நையப்புடைக்கிறாள்.மருத்துவமனைக்குச் சென்று தையல்
போட்டு காயம் ஆற்றுகிறான்.
‘ராணுவம்னா
டிசிப்ளின்னு வெளியில இருக்கறவங்களுக்கு, தோணும்.உண்மையில
அது ஒரு பெரிய அடக்குமுறை, சர்வாதிகாரம் ஆனா
எதுவுமே கண்னுக்குத்தெரியாது’ என்கிறான் அழுதுகொண்டே அந்த சிப்பாய்.
‘serve
with honour’ என்னும் வாசகம் காதில் சன்னமாய் ஒலித்துக்கொண்டே இருப்பதை எண்ணி எண்ணிப்பார்க்கிறான் வாசகன்.
இரண்டாவது
சிறுகதை ‘அன்ன பூரணி மெஸ்’. ராஜாராமன் பாலகுரு என்னும் இருவர். மெஸ்ஸில் பணியாற்றும்
ராஜாராமனை பாலகுரு சந்திக்கிறான். மெஸ் முதலாளி பணத்தைக்கொட்டி அரபு நாடு வேலைக்குச்சென்று ஒட்டகம்
மேய்த்து உதை வாங்கி சொந்த ஊர் திரும்பி நல்லதொரு மெஸ் வைத்து ஏழைகளின் பசியாற்றவேண்டும்
என்று உறுதியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
கெட்ட பழக்கங்களுக்கு
அடிமையான பாலகுருவிடமிருந்து ராஜாராமன் கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தீய பழக்கங்களை அறிந்து கொள்கிறான். நல்ல
பழக்கங்கள் விடை பெறுகின்றன. ராஜாராமன் பாதை விலகி ஒரு நாள் நடுஇரவு பாலகுருவின் உடுப்பை அணிந்து, அவன் பர்சை
எடுத்துக்கொண்டு அவன் சூட்கேசோடு ஓடிப்போய்
விடுகிறான். எதுவுமே அறியாத மெஸ் முதலாளி ராஜாராமன் திரும்பிவரும் வரை அவன் பார்த்த
மெஸ்வேலையை பாலகுருவை பார்க்க வேண்டுகிறார். ராஜாராமன் திரும்ப வரவேயில்லை. பாலகுரு
நல்ல உழைப்பாளியாக ஒரு நல்ல மனிதனாக த்தன்னை
மாற்றிக்கொள்கிறான். வாழ்க்கை யார் யாரை, எப்படி எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது பாருங்கள்
என்பதே படைப்பாளி நமக்குச் சொல்லும் செய்தி.
மூன்றாவதுகதை.
சொர்க்கவாசல். ஒருதம்பதியர் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவிலுக்குச்சென்று சொர்க்கவாசல் காணத் தயாராகின்றனர். அதே வீதியில் ஒரு முதாட்டி வைகுண்ட
ஏகாதசியன்று இறந்துபோகிறார். தெரு அடைத்துப்பந்தல். கார் போக முடியாது. நாற்காலிகள்
பரப்பிக்கிடக்கின்றன. சவம் எடுத்தபின் கோவிலுக்குச்செல்லலாம் எனத் தம்பதியர் தீர்மானிக்கின்றனர்.
அப்போது வேறு ஒரு கதை விரிந்து வருகிறது. கதைசொல்லி, குப்பாண்டி
என்னும் இடுகாட்டுத்தொழிலாளி பற்றிய நீண்ட கதையைச் சொல்லி முடிக்கிறார். படிப்பறிவு
இல்லாத ஒரு சுடுகாட்டுத்தொழிலாளி. சுடுகாட்டிற்கு
அருகே ஒரு திரையரங்கு. கீற்றுக்கொட்டகை. வைகுண்ட ஏகாதசி அன்று’ மூன்று ஷோ ஒரு டிக்கட்’
ஏக அமர்க்களப்படும். கதை சொல்லி நண்பர்களோடு குப்பாண்டியை அடிக்கடி சந்தித்து
ப்பேசுவார். சினிமா பாட்டுக்கள் பல, குப்பாண்டி அற்புதமாகப்பாடுவார்.
ஒரு சவத்தை
எரித்து முடிக்கக் கறாராக ரூபாய் நூறு. ஓர்
முறை நூற்றுக்கு இருபது ரூபாய்
குறைய சண்டைக்கு நிற்கிறார். ‘ எனக்கு மட்டும் ஏன் குறைக்கிறீங்க’ என்று குப்பாண்டி
வாதிடுகிறார்.
ஒரு நாள்
திரையரங்கு தீப்பிடித்து எரிகிறது. சினிமா பார்க்க வந்தவர்கள் 137 பேர் கருகி ச்சாம்பலாகி
சவங்களாயினர். அத்தனை சவங்களையும் குப்பாண்டி எரித்து முடிக்கிறார். பம்பரமாய்ச்சுழன்று
சுழன்று வேலை பார்க்கிறார். அந்த ஊர் கணக்குபிள்ளை குப்பாண்டிக்கு க் கூலி கொடுக்க
ப்பொது மக்களிடம் ஒரு பத்தாயிரம் வசூலித்து மூட்டையாய்க்கட்டி குப்பாண்டியிடம் ஒப்படைக்கிறார்.
‘கொறவோ நெறவோ
மனசு நோவாம நீ வாங்கிக்கனாதான் எங்களுக்கு நிம்மதி’
இப்படிச்சொன்ன
கணக்குப்பிள்ளையிடம் குப்பாண்டி,
‘என்னிய என்ன
கூலிக்கு வேல செய்ற ஆளுன்னு மட்டும் நெனச்சிட்டியா சாமி? நான் என்ன மனசாட்சி இல்லாத
ஆளா? செத்தவங்கள்ளாம் ஒனக்கு அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி,பேரன் பேத்தி மொறன்னா எனக்கும்
அந்த மொறைதான் சாமி. நான் எதயும் காசிக்காக செய்யல.’ என்று கதறி அந்தக் காசு மூட்டையை பெற்றுக்கொள்ள மறுக்கிறார்.
‘காசி பணம்
ஒன்னும் வேணாம். போயிடு’ சொல்லிக்கதறி அழுகிறார் குப்பாண்டி.
எளிய குப்பாண்டிதான்
மனித மனசாட்சியின் உருவம். குப்பாண்டிக்காகத்தான் கதிரவன் தினம் தினம் எழுகிறான். வான் மழை பொழிகிறது. வாசகன் ஒர் ஒரு முடிவுக்கு வருகிறான்.
அற்புதமான
காட்சியை இப்படிக்கண்முன்னே நிறுத்திய பாவண்ணன்
நம் மனத்தில் பூரணமாய் நிறைந்து விடுகிறார்.
தனது ஓயா
இலக்கிய ப்பணியால் தமிழ்மொழிக்கு தகுவளம் சேர்க்கும் எழுத்தாளர் பாவண்ணன் அன்பின் உரு, தோழமைத்திரு.
-------------------------------------------------------------
No comments:
Post a Comment