நாய்வால்
அவன் மடிக்கணினி வைத்துக்கொண்டு புதினம் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தான். தான் வாழும்
இச்முதாயத்துக்கு தனக்குச் சரி என்று பட்டதைச் சொல்லத்தான் வேண்டும். ஆகத் தன் எழுத்துக்களை இலக்கியப் படைப்புக்களாக்கினான். பெரிய அங்கீகாரம் ஏதும் அவன் பெற்றுவிட்டதாய்ச் சொல்லமுடியாது. அதற்காக
அவன் சோர்ந்தும் விடவுமில்லை. எழுத்துப்பணியில் உழல்வதுவே அவன் கடமை ஆனது.
அப்படித்தான் மகளிர் முன்னேற்றம் குறித்து ஆழமாய் விவாதிக்கும்
ஒரு புதினம் எழுதிக்கொண்டிருந்தான். நடு நடுவே தனக்கேதேனும் ஈமெயிலில் தகவல் வந்துள்ளதா
என்பதைப் பார்த்துக்கொள்வான். மய்ய மாநில அரசின்
விருது எதுவும் அறிவிப்பு செய்து அவனுக்குக் கடிதம் வந்துவிடப்போகிறதா
என்ன? அனேகமாய் குப்பைக்கடிதங்கள் டெலீட் செய்யவேண்டி ஏகத்துக்குக் காத்துக் கிடக்கும். உருப்படியாக ஏதுமே
வந்ததுமில்லை வரவிலும் இருக்காது.
மடிக்கணினியை அவ்வாறு பார்க்கையில் ஒன்று இரண்டு விளம்பரங்கள்
ஓரமாய் வந்து வந்து கண்ணைச்சிமிட்டிப்பார்க்கும். அவைகளைப் ‘போய்த்தொலையேன்’
என்று டெலீட் செய்வான். அன்று அவனுக்குக் காட்சி அளித்தது இரண்டு இளம்பெண்கள் ஆடையெதுவுமில்லாமல் பிறந்தமேனிக்கு நடனமாடிக்கொண்டிருந்ததுதான். அன்றுவரை இப்படியொரு
காட்சியை அவன் கண்டதில்லை.
முனிவர்கள் தாருகா வனம் ஏகிக் கடுந்தவம் மேற்கொண்டால் அவர்கள் முன்னே தேவ மாதர்கள் நடனம்
புரிந்து கடுந்தவம் கலைகிறதா என்று சோதனை வைப்பார்களாம்.
அந்தப்பரிசோதனையில் தேவ மாதர்கள் வெற்றிபெற்றுவிட்டால்
முனிவர்களின் கடுந்தவம் எல்லாம் கோவிந்தா.
மனிதன் விலங்குதான்.
அவ்வப்போது ஞானம் கடுகு அளவு வந்துவிட்டதாய் அவனுக்கு மனத்திரையில் ஒரு காட்சிதென்படும். அந்தப்பொய்மான்
போடும் ஆட்டம் சற்று மிகையாகவே அனுபவமாகும். உடலில் ஒவ்வொரு உறுப்பும் இயங்கிக்கொண்டு இருக்கையில் அந்த
அது மட்டும் சும்மா இருக்கவேண்டுமா என்ன. இனிப்பு கசப்பு காரம் புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு இவ்வறுசுவையும்
நாக்கில் தெரிகிறதல்லவா பின் பாலியல் உணர்வு
மட்டும் ஒருவருக்கு எப்படி இற்றுக்கொள்ளும்.
இவ்விஷயங்கள் அவனுக்குச் சில பெரியவர்கள் சொல்லியும்
இருக்கிறார்கள்.
ஆண்களுக்கு ஆகின்ற வயதிற்கும் பாலியல் உணர்வுக்கும் தொடர்பேதுமில்லை. அது பாட்டுக்கு அது.
இது பாட்டுக்கு இது என்பதுதான் இயற்கையின் நியதி.
வயதில் மூத்த பேரறிஞர்
பெர்னாட்ஷாவிடம் ஒரு முதியவர் போய் இந்தப் பாலியல் உணர்வு எப்போது தொலையும்
நானும் நிம்மதி ஆவேன் என்று கேள்வி வைத்தாராம்.
அதற்கு பெர்னாட்ஷா ’என்னைவிட
மூத்தவர் ஒருவர் அடுத்த வீதியில் இருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள். நான் அவரைக்கேட்டுத்தெரிந்துகொண்டு உங்களுக்குப்பதில் சொல்கிறேன்’ என்றாராம்.
இரவு மணி பத்துக்கு மேல் ஆனது. வீட்டில் துணைவி மட்டுமே
இருக்கிறாள்.பெற்ற குழந்தைகள் பிழைப்புத் தேடி வேறு ஊர் வேறு நாடுஎன்று எல்லையை
தாண்டித் தாண்டிப்போய்விட்டார்கள்.அவ்வையார்
சொன்ன திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும்
மூதுரையை மாத்திரம் இக்காலத்து
இளைஞர்கள் கர்மசிரத்தையாய்க் கடைப்பிடிக்கிறார்கள்.
வாழ்க்கைச்சக்கரத்தில்
வயோதிகம் எவ்வளவு சீக்கிரம் ஒருவரை ஆக்கிரமிக்கும்
என்பதைக் கணிக்கவே முடியாது. அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் ஆயிற்று. தலை நரைத்தது.
கண் முகம் தோல் சுருங்கிப்போனது. முட்டிவலி நெட்டிக்கொண்டு வந்தது. இயலாமை அன்றாடம்
அனுபவமானது. சர்க்கரையும் இரத்த அழுத்தமும் கொலஸ்ட்ராலும்
உன்னை விட்டேனா பார் என்று ஒன்றன் பின்
ஒன்றாகத் துரத்திக்கொண்டு வந்தன.
பயம் கிஞ்சித்தும்
தவிர்த்து இளம்பெண்கள் நிர்வாணமாய் லேப்டாப் ஸ்க்ரீனில் ஒரு ஓரமாய் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். ‘ இன்னும் என்ன தயக்கம் வந்து பாரு மயக்கம்’ என்று பாடும் அந்த விளம்பரத்தை கிளிக் செய்தான்.
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீ இ நன்றின் பால் உய்ப்பது அறிவு, திருக்குறளை ஆயிரம்
முறை படித்தும் என்ன? உடல் கோணலாய் விழித்துக்கொள்கிறது
அறிவோ சாஸ்வதமாய் தோற்றுத்தான் போகிறது. நமக்கு எதற்கு
இந்த தலைவலி என்று சும்மா இருந்து இருக்கலாம். கிளிக் செய்து
விட்டானே அந்த தாரா பாத்திரம் நிற்குமா என்ன.
தனது சொரூபத்தை ஒவ்வொன்றாகக்காட்டிக்கொள்ள ஆரம்பித்தது. ராம பாணம். எய்து விட்டால் அது சும்மாவும் திரும்பியும் வாராது.
சாராயம் குடித்துக் குண்டி வெடித்துச் செத்தாலும் பரவாயில்லை அது குடிப்பதை
எங்கே நிறுத்துவது. தாயோ தாரமோ யாரை காசுக்கு
விற்றால்தான் என்ன குடித்துவிட்டுத்தான் மறுவேலை. இல்லாவிட்டால் மண்டை வெடித்துச்சிதறி விடும் என்பதுவே
குடிகாரனின் அன்றாட நடப்பு. அப்படித்தான் மானுட காம இச்சையும். ஓயாமல் மூன்று சீட்டு ஆடும் சீட்டாட்டக்காரன்
வீட்டுத்திண்ணையில் வெறிபிடித்து விளையாடிக்கொண்டிருப்பான். போதை மருந்துக்கு
அடிமை ஆன ஆண் பெண் இருவருமே பைத்தியக்காரர்களை விடக்கேவலமாய் தம்மை நடத்திக்கொள்வதைப்
பார்த்திருக்கிறோம். இவை எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகி எத்தனைக் காலமாயிற்று.
அவன் என்னமோ பார்த்துக்கொண்டிருந்தான். அதெல்லாம் தேவையில்லாதவைதான்.
போறாதகாலம் யாரை விட்டுவைக்கிறது. இழ ஊழ் அறிவகற்றும் என்றாரே வள்ளுவப்பெருமான். அதுதான்
நிகழ்ந்துவிட்டது.
திடீர் என்று லேப்டாப்
திரையில் சைபர் கிரைம் துறை புது டில்லி என்று எழுதி ஒரு அறிவிப்பு வந்து நின்றது.
நான்கு சிங்கங்கள் ஸ்தூபியில் தலைக்காட்டி முறைத்தன. திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டுக் கிளை என்றும் போட்டிருந்தார்கள். ’நீ போகக்கூடாத
இடம் தேடிக்கணினியில் சென்றுவிட்டாய்.
ஆகப்பெரும் குற்றம் புரிந்துவிட்டாய். அடுத்த அரைமணியில் எடுத்து
வை ரூபாய் மூன்று லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று
முப்பத்து ஒன்பது. நீ எங்களுக்கு உடன் அதனைச்செலுத்தித்தான்
ஆகவேண்டும் இல்லை என்றால் சிறைவாசம் நிச்சயம் .
உனது டெபிட் கார்ட் அல்லது கிரெடிட்
கார்ட் கையில் எடுத்துக்கொள். குறிப்பிட்டுள்ள
பணத்தை உடனே இந்த எண்ணுக்கு டிஜிடல் பரிமாற்றம்
வழி அனுப்பிவிடு. இவ்வறிவிப்பை அழிக்க நினைக்காதே. அழிக்க முயற்சித்தால் நீ அழிந்துபோவாய். போலீஸ் காரர்கள் உன் வீடு தேடி வருவார்கள். எச்சரிக்கை’
படித்து முடித்தான். அச்சம் மென்னியைப்பிடித்தது.
அவன் திரு திரு என்று விழித்தான். எங்கும் இருளாய்த்தெரிந்தது.
இப்போது என்ன செய்வது. நண்பர்கள் யாரிடமாவது நடந்தவற்றைப்பேசி ஆலோசனைக்கேட்கவாவது
செய்யலாம் என்றால் பாழும்மனம் ஒத்து வரவில்லையே. அவன் நடந்துவிட்ட இத்தனைக்கீழ்மையை எப்படிப் போய் ஒரு நண்பனிடம் கூறமுடியும். அப்படியே சொன்னால் சொன்னவனின் முகத்தில் அவன் காறித்துப்ப மாட்டானா? அவனைப்பற்றி அவன் நண்பன் போட்டிருந்த
பழங்கணக்குச் சித்திரமெல்லாம் நொடியில் பொசுங்கிப்போய்விடாதா.
அதற்குள்ளாக மீண்டும் இன்னுமொரு செய்தி அதே லேப்டாப் ஸ்க்ரீனில் அவனுக்குப்பளிச்சிட்டது. நீ குறைந்தது ரூபாய் முப்பத்தொன்பதாயிரத்து முந்நூற்று முப்பத்து
ஒன்பதை கட்டிவிடு. இதனை நீ இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் செய். தவறி னால் நீ கைது செய்யப்படுவாய். போலீஸ்காரர்கள்
உன் வீட்டுக்கு கைது உத்தரவோடு விரைவார்கள்.
மணி இரவு பதினொன்று.
மறு நாள் ஞாயிற்றுக்கிழமை. இனி சும்மா இருக்க முடியாது. ஏதேனும் விபரீதம் ஆகிவிட்டால்
என்ன செய்வது. கண்கள் ஈரமாகிக்கொண்டு வந்தன. துடைத்துக்கொண்டான். ஒரு முறை பாத் ரூம்
போய்விட்டுத்தான் வந்தான்.
கட்டிக்கொண்டு வந்த மனைவி கட்டிலில் தூங்கினாள். அவளை எழுப்பினான். அவளுக்குத்தலை நரைத்துத்தான் எவ்வளவோ
காலமானது. ‘ பொம்பள அசந்து தூங்குறது தெரியல. ஒங்களுக்கு மனசாட்சி இல்லயா. ஈன புத்திதான
ஆம்புளபுத்தி
. உங்கள சொல்லி தப்பில்லை. உங்க பொறப்பு அப்பிடி.
அது எல்லாம் கெடக்கட்டும் ஏன் என்ன செய்தி’ என்றாள்.
‘லேப்டாப்பில் எப்போதும் போல் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு கன்னா
பின்னா விளம்பரம் பளிச்சிட அதை கிளிக் செய்தேன்.
அதனுள் சென்று துழாவினேன். தவறுதான். யாருக்குத்தெரியப்போகிறது.
நாமும் லேப் டாப்பும் மட்டுமே தான் இருக்கிறோம். லேப்டாப்புக்குதான் உயிர் இல்லை. வெற்று ஜடம்தானே ஆக இது அசிங்கமோ கிசிங்கமோ எதுவானாலும் நம் ஒருவரோடு சரித்தான் என்று எண்ணினேன்.
சைபர் க்ரைம் டிபார்ட்மெண்ட்
காரன் ஸ்க்ரீனில் பளிச்சென்று வந்து ஒரு அறிக்கை கொடுத்தான்.முதலில் மூன்று லட்சத்து
சொச்சம் கேட்டவன் பிறகு முப்பத்து ஒன்பதாயிரத்து
சொச்சம் போதும் கட்டிவிடு என்று கேட்கிறான். என்ன செய்வது?’
மனையாளிடம் சொன்னான்.
’என்ன கேவலம் இதெல்லாம்’
அவள் தலையில் தலையில் அடித்துக்கொண்டாள்.
’ பித்தா பைத்தியமா உங்களுக்கு’ என்று ஆரம்பித்து
பின் தடமிறங்கி ’இது எல்லாம்
இந்த வயசுல உனக்கு வேணுமா? நீயே பட்டுத்தொலை, நீ படு இல்லை நாசமாய் போ’ என்று கத்தினாள். சற்று நேரம் கழித்து
சமாதானமானாள். ‘நண்பர் யாரிடமாவது பேசு யோசனை கேள். அதன்படி செய்’ என்றாள். பிறகு தடித்த
போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். தூங்கிப்போனாள். அவன் விழித்துக்கொண்டே
பாயில் படுத்துத்தான் இருந்தான். மிரள மிரள விழிப்பு. தூக்கம் எங்கே வந்தது. புரண்டு
புரண்டு படுத்தான். அழுகை கூட வந்தது. இந்த வயதில் இப்படி அவன் அசிங்கப்படவா வேண்டும்.
மறுநாள் காலையில்
பத்து மணிக்கு ஒரு இலக்கியக்கூட்டம். போவதா வேண்டாமா என்கிற தீவிர யோசனையில் இருந்தான்.
வருடத்திற்கு ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு
அவனை அழைத்துப்பேசச்சொன்னால் அதுவே பெரிய சமாச்சாரம்.
அப்படி வந்த ஒன்றினையும் விட்டு விடுவதா குரங்கு மனம் ஓயாமல் பிராண்டிக்கொண்டே இருந்தது.
’கம்பராமாயணத்தில் குகன் என்னும் படகோட்டி’ பற்றி அவன் பேசுவதாக ஏற்பாடு. அவன் இருப்பிடத்திற்கு
அருகேதான் அந்த இலக்கிய அரங்கு. கூட்டத்திற்குப்போய் என்ன பேசவேண்டும் என்பதையெல்லாம்
குறிப்பெடுத்துத் தயாராய் லேப்டாப்பில் வைத்திருந்தான்.
எத்தனையோ இலக்கியக்கூட்டங்கள் பேசித்தான் இருக்கிறான். இலக்கியக்கூட்டத்திற்கு எப்போதும் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு போவான். தன்னைவிடத்தெரிந்தவர்கள்
இந்தப்பூமியில் யாருமேயில்லை என்று அபிநயத்தபடி
நடக்கிறானோ என்பதாய் பார்ப்பவர்களுக்குத்தோன்றும்.
லேப்டாப்பை ஒரு ஓரமாய் சயனிக்க வைத்தான். இனி இந்த சனியனே
எனக்கு வேண்டாம் என்று முடிவுக்கு வந்தான்.
இதயம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. இனியும் அவன் இதயம் அடித்துத்தான் பயன் என்ன. சாராயக்கடை வாசலில் குடி
குடியைக்கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டைக்கெடுக்கும் என்று வாசகம் எழுதியிருப்பார்கள்.
அந்த வாசகத்துக்குத்தான் என்ன மரியாதை என்பதை
எல்லோரும் அறிவார்கள். அப்படி எழுதி வைக்கவேண்டும் என்பதுவும் ஒரு சடங்குதானே. சட்டமும் இங்கே சடங்காகத்தான் அமுலாகிறது.
லேப் டாப்பை எப்போதும் கையோடு எடுத்துக்கொண்டு கூட்டங்களுக்குச்செல்பவன்
அன்று வெறுங்கையோடு போனான். நினைவில் வந்ததை
வைத்து கூட்டத்தை ஒப்பேற்றினான். கூட்டத்திற்கு
வந்திருந்தோர் அவன் ஒப்பேற்றலைக்கேட்டு ‘இண்ணைக்கு
அய்யா பேசுன மாதிரி எண்ணைக்கும் பேசுனது இல்ல’ என்று புகழ்ந்துகொண்டே இருந்தார்கள்.
ஒரு ஐநூறு ரூபாய் கவரில் போட்டு அவனுக்கு சன்மானம் தந்தார்கள். ஒரு ஜிகினா சால்வையை வழக்கம்போல் போர்த்தினார்கள்.
அவனுக்கு தன் லேப்
டாப்பின் நினைவு வந்துபோனது. இனி என்ன செய்யப்போகிறோம் அந்த லேப் டாப் உள் இருக்கும் தனது படைப்புக்கள் என்ன ஆவது.
தீவிரமான யோசனையில் இருந்தான். லேப்டாப்பைத்திறந்தால் அந்த சைபர் க்ரைம் அறிவிப்பு
தான் வந்து வந்து அச்சுறுத்துகிறது. இனி என்ன செய்வது. ஒன்றுமே புரியவில்லை. அது சரி
இந்த விஷயம் ஊர் உலகத்திற்குத்தெரிந்தால் நம்மை சல்லிக்காசுக்கு மதிப்பார்களா. வாழ்க்கையில் நொண்டி அடித்து சம்பாதித்து வைத்து இருக்கின்ற கொஞ்ச
நெஞ்ச மரியாதையும் போணியாகிவிடும். கூட்டத்துக்கு
வந்திருந்தவர்கள் யாருடனும் சரியாகப் பேசாமல் அமைதியாய் இருந்தான்.
‘லேப் டாப் கையோட எப்பொதும்
கொண்டு வருவீங்களே என்ன ஆச்சு’
நண்பர்கள் விசாரித்தனர். ‘ அது ஓபனே ஆவுல அதோடு நானும் போராடிப்பாத்தேன். கெடக்கு சனியன்னு
வந்துட்டேன். ’கிருபானந்த வாரியார் காலத்துல, கீரன் காலத்துல எல்லாம் லேப்டாப்பா இருந்துது அவங்க எத்தினி மேடயை பாத்து
இருப்பாங்க. எத்தினி பாகவதம் புராணம் பேசியிருப்பாங்க’ நண்பர்கள் அவனிடம் சொல்லிக்கொண்டார்கள்.
‘அவுக மலை நா அவுக
கால் தூசு’ அவன் சொல்லிக்கொண்டான்.
வீடு நோக்கி நடந்தான். அவன் மனைவி அவன் லேப் டாப்பை எப்படிச்சரிசெய்தாளோ அதனை மடியில் வைத்துக்கொண்டு ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன ஆயிற்று. லேப் டாப் வேலை செய்கிறதா’
‘எல்லாம் சரியாகிவிட்டது பாருங்கள்’
‘என்ன படம் பாக்குற நீ’
‘மொகறகட்ட படமெல்லாம்
நா பாக்குல’
‘பின்ன என்ன பாக்குறே’
‘சரசுவதி சபதம்’ என்றாள்.
அவன் லேப்டாப் சரியாகிவிட்டதைப்பார்த்தான். அதனைத்தொடுவதற்கே
வெடிகுண்டு ஒன்றைத்தொடுவது போன்று பதட்டமாக உணர்ந்தான்.
‘கூட்டம் எப்பிடி பேசுனீங்க’ மரியாதையோடு பேசினாள்.
அவன் ஐநூறு ரூபாய் உள்ளே இருக்கும் கவரை எடுத்து மனைவியிடம் கொடுத்தான்.‘அவளுக்கும் மகிழ்ச்சியாகவே
இருந்தது. ‘லேப் டாப்பை எடுத்துகுங்க’
‘ வேண்டாம் அது எனக்கு. என்னை விடு. நான் லேப்டாப்
இல்லாமல் என் பணியைச்செய்யமாட்டேனா என்ன’ அவன்
பதில் சொன்னான். பாதியில் நிற்கும் புதினம் அதனில் வரும் பாத்திரங்கள் அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்
’ நீ செய்வது சரியில்லை’ என்று அவனை
உலுக்கி எடுத்தன. மனம் ஏற்றுக்கொண்ட ஞான வைராக்கியம் பல் இளித்தது.
மடிக்கணினியை கையில் வாங்கினான். மகளிர் முன்னேற்றம் குறித்த
அந்த புதினத்தை மீண்டும் விட்ட இடத்திலிருந்து
தொடங்கி எழுத ஆரம்பித்தான். போட்டிக்கு
கடைசி நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.
புதினத்தை முடித்து உடன் அனுப்பியாகவேண்டுமே. கடமை உணர்வு அவனை விரட்டிக்கொண்டிருந்தது.
கடமையைச்செய் பலனை என்றும் எதிர்பாராதே, எழுத்தாளர்களுக்காகத்தான் கண்ணன் அன்றே பகவத் கீதையில் சொல்லியிருக்கிறான்.
தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
‘என்னமோ ஒரு கனா
வந்துதாம் அதைப்போய் எப்பிடி வெளியில சொல்றதும்பா அப்பிடியிருக்கு உங்க கத.’ சொல்லிக்கொண்டே
அவள் சமையலறைக்குப்போன
No comments:
Post a Comment