Tuesday, August 26, 2025

பாவண்ணனை அறிவோம்

 

 பாவண்ணனை அறிவோம்.       

 

 எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின்  நடமாடும் சாட்சியாய் நமக்கு  முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர்  எழுத்தாளர்  பாவண்ணன்.  அவரின் இயற்பெயர்  பாஸ்கரன். தமிழ்  மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958 அக்டோபர் 20 அன்று ஒரு மிக  மிக  எளிய குடும்பத்தில் பிறந்தவர்.பலராமன் சகுந்தலா இவர்கள்  பாவண்ணனின் பெற்றோர்.

இன்று  தமிழ் தெரிந்த   எல்லோராலும்  பேசப்படுகின்ற ஒரு  உயர்ந்த இலக்கியப்படைப்பாளியாய்  மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராய் விளங்குபவர்.

 வளவனூர் என்னும்  கிராமமும்  இல்லாத நகரமும் இல்லாத ஓர் ஊரில் பிறந்தார்.  தொடக்கப்படிப்பை  வளவனூர் கோவிந்தையர் பள்ளி, பிறகு  அரசு  உயர் நிலைப்பள்ளி எனப்  பயின்று     பட்டப்படிப்பைப் புதுச்சேரியிலுள்ள தாகூர்க் கலைக்கல்லூரியில்  தொடர்ந்தார். புதுச்சேரியில் பேராசிரியர் ம . லெ. தங்கப்பா சமூக அக்கறையை பாவண்ணனுக்கு ஏற்படுத்திய பெருந்தகை.

 பாவண்ணன் வளவனூரில் திருக்குறள் கழகம் என்னும் ஒரு இலக்கிய அமைப்போடு மிக அணுக்கமாய் இருந்தவர். வளவனூர் சான்றோர்கள் ராஜாராமன்  அ. ப. சு என்கிற  கடலூர் சங்கு சிற்றிதழ் ஆசிரியர் வளவதுரையன், சுந்தரமூர்த்தி துரைக்கண்ணு  தொலைபேசித்துறை மோகன்  பேராசிரியர் நாகராஜன் என்று நீளும் தோழமை வலுவோடு இலக்கியப்புரிதலை  ஆழப்படுத்திக்கொண்டவர்.

. தொலைபேசி இயக்குனராக புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் பணி தொடங்கி பின்னர் ஹைதராபாத் சென்று பொறியாளர் பயிற்சி முடித்து கர்நாடக மாநில தொலைபேசித்துறையில் பல் வேறு இடங்களில் பணியாற்றி முதல் நிலை அதிகாரியாக பெங்களூரூ மாநகரில்  நிறைவாகப் பணி ஓய்வு பெற்றவர்.  

கன்னடமொழியை நிறைவாகக்கற்று கர்நாடக மக்களோடு நெருங்கிப்பழகி அவர்கள் பண்பாட்டை அறிந்து தெளிந்து நல்ல இலக்கிய நூல்களை கன்னடத்திலிருந்து தமிழ் மொழிக்கு கொண்டு தருபவர்.

தமிழ் இலக்கிய ப்படைப்புத்தளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட  முத்தான நூல்களைத்தந்து படைப்பிலக்கியவாதியாய் முத்திரை பதித்தவர்.  1982 ல் தீபம் இதழில் பாவண்ணனின் முதல் சிறுகதை ‘பழுது’ வெளியானது.

இவரது படைப்பாக்கங்களைச்சற்றே கவனிப்போம். சிறுகதைத்தொகுதிகள் 21, நாவல் 3, குறு நாவல் 2, கட்டுரை நூல் 26, குழந்தைப்பாடல்கள் 7, கவிதை நூல் 3,  மொழிபெயர்ப்பில் கன்னடத்திலிருந்து தமிழுக்கு 24 நூல்கள், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 5, என இவை தொடர்ந்து கொண்டிருக்கிற எழுத்துச் சாகசம்.

பாவண்ணனின் நேர்காணல் ஒன்றை பவுத்த அய்யனார் இந்திய அமெரிக்க வாசகர் வட்டத்திற்காகக் செய்தார்.   26.05.2018ல்  சென்னையில் நிகழ்ந்த ‘ பாவண்ணனைப்பாராட்டுவோம் ’ அமர்விற்காகவே அது.  ஒரு சிறு புத்தக வெளியீடாக அந்த நேர்காணல் வந்திருக்கிறது. அதனில் முதல் வினாவிற்கு விடைசொல்லும் பாவண்ணன்,

‘வறுமை மட்டும் துயரமல்ல. மன வறுமை கூட ஒருவிதத்தில் துயரம்தான்.அன்பின்மை ஒரு துயரம். கருணை இல்லாமல் இருப்பதுவும் ஒருவகையில் துயரம்தான்’ என்று குறிப்பிடுவார்.

நோபல் பரிசு இலக்கியத்திற்காகப்பெற்ற  மாகவி ரவீந்திர நாத் தாகூர் தனது கீதாஞ்சலி என்னும் கவிதை நூலில், - கவிதை எண் 36’

‘ This is my prayer to thee my Lord-strike

Strike at the root of penury in my heart.

Give me strength lightly to bear my joys and sorrows

Give me strength to make my love fruitful in service

Give me strength never to disown the poor or

Bend my knees before the insolent might.

இப்படி அடுக்கிக்கொண்டே போவார்.  Penury in my heart  என்று  மாகவி தாகூர் சொல்வதும்  பாவண்ணன் நேர்காணலில்  குறிப்பிடும் அந்த’ மன வறுமை’ யும் ஒன்றாய்த்தானே  நம் நினைவுக்கு வருகிறது.

எளிய மக்களோடு தொடர்ந்து வாழ்தல், அவர்களின் துயரங்களில் தீர்மானமாய்ப் பங்கு பெறுதல் இவை மன வலிமையின் நற்கொடைகள்.  ’இறைவா எனக்கு வலிமை கொடு.  ’ஏழை மக்களோடு உறவை எப்போதும் பேணுதலும், மூர்க்க மனம் கொண்ட செல்வந்தர்களின் முன்னால் மண்டியிடாத  நேர்மையும் என்னுள்ளே தொடரவேண்டும்.    என் இறைவா அதற்கே  எனக்கு வலிமை தா’  என்கிறார் தாகூர்.

மாகவிபாரதி சொல்லுவார்,’ வல்லமை தாராயோ, இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கே’

சித்தர் திருமூலர்,

’படமாடக்கோயில் பகவற்கொன்றீயில்

 நடமாடக்கோயில்   நம்பர்க்கங்கு ஆகா

நடமாடக்கோவில் நம்பர்க்கொன்றீயில்

 படமாடக்கோயில் பகவதற்கது ஆமே’ என்பார்.

வீதியில் பசியோடு  நடந்து செல்கின்ற ஒரு ஏழைக்கு உணவளிப்பது  என்பது சிலைகளில்  சித்திரத்தில்  இருக்கின்ற இறைக்கு உணவளிப்பது, சித்திரத்திலும் சிலையிலும் இருக்கின்ற இறைக்குப்படைக்கும் உணவு  பசியோடு நடந்து செல்லும் ஏழை மனிதனைச்சென்றடைவதில்லை.

திண்ணை.காம் இணைய இதழில் 100  வாரங்கள் தொடர்ந்து எழுதிய இலக்கியக்கட்டுரை நூலான ‘எனக்குப்பிடித்தச்சிறுகதைகள்’ பாவண்ணனின் ஒரு வெற்றிப்படைப்பு என்று குறிப்பிடலாம். சிறுகதை ஜாம்பாவான்களின் சிறுகதை ஒன்றைத்தேர்வு செய்து தனக்கு  நேர்ந்த அனுபவத்தோடு அதை உரசிக் கட்டுரையாகத்தந்து இருப்பார் பாவண்ணன்.

எடுத்துக்காட்டுக்கு கி. ராஜ நாராயணனின் ‘கன்னிமை’  சிறுகதை.

பாவண்ணன் இக்கட்டுரையில் ஒரு தமக்கையின் சிறப்புக்கள் பல பேசுவார். ஒரு சகோதரியின் அன்பினையும் அரவணைப்பினையும் தாயின் அன்புக்கு நிகராக ஒப்பிடுவார். அக்கா என்பவள் மிகப்பெரிய பொக்கிஷம் என்பார். கணேஷ் என்னும் நண்பன் ஒருவனின் அக்கா பாவண்ணனிடம் அன்பு காட்டுகிறார். முறுக்கும் தே நீரும் கொண்டு தருகிறார். இனியன பேசுகிறார்.. நல்ல பல அரிய கருத்துக்களை அறிமுகம் செய்கிறார். உடன் பந்து விளையாடுகிறார். இனிய பாட்டுப் பாடுகிறார்.  கதை கேட்கிறார்..  

ஒரு ஐந்தாண்டுகளுக்குப்பின்னர் அதே அக்காவை,  அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாகிச் சந்திக்கின்ற போது  அந்த அக்காவின் போக்கு விசித்திரமாக இருந்தது.  பழைய  அக்காவிடம் இருந்த ஏதோ ஒன்று இந்த அக்காவிடம் காணாமல் போயிருந்தது. இதற்கு விடை  கி. ரா வின் கன்னிமை கதையில் பாவண்ணனுக்குக்கிட்டுகிறது.

கி. ரா வின் நாச்சியாரம்மா கன்னியாக இருந்த நாட்களில் அவரோடு ஒட்டியிருந்த அரிய மனித  நேய நற்குணங்கள் திருமணத்திற்குப்பிறகு விடை பெற்றுச்சென்று விடுகின்றன. பழைய நாச்சியாரிடமிருந்த ஏதோ ஒன்று  திரும்ப வராதா  என்று அவளை மணந்துகொண்டவன் ஏங்குகிறான். இங்கு கி.ரா சொல்கிறார், கன்னிமை என்பது ஒரு செல்வம்.கண்ணுக்குத்தெரியாத அந்த சுரங்கத்தின் வழியாக பெண்களின் மனம் அந்த ச்செல்வத்தை அடைகிறது. கன்னிமைப்பருவத்தில் ஒரு பெண் நற்குணச்செல்வங்கள்  சேர்க்கிறாள். உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் கன்னிமையின் அன்பில் திளைத்தவனாக, அதற்குக்காலமெல்லாம்  ஏங்குபவனாக வாழ்ந்து முடிக்கிறான்.

இப்படி நூறு ஆகச்சிறந்த உலகச்சிறுகதைகளைத்தேர்ந்து தன் அனுபவத்தோடு உரசி உரசி அற்புதமான  இலக்கியப்படைப்பாக  பாவண்ணன் கொண்டு தருகிறார் ‘ எனக்குப்பிடித்த கதைகள்’ என்கிற  இந்த அரிய புத்தகம்   இலக்கிய ப்பிரியர்கள்  கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.

இந்தியத்தொன்மங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராய் விளங்குகிறார் பாவண்ணன். கடலூர் எஸ். ஜெயஸ்ரீயும் கே. பி நாகராஜனும் மிகையின் தூரிகை என்னும் பெயரில் ஒரு தொகுப்பை அன்மையில் கொண்டு வந்திருக்கிறார்கள். சந்தியா நடராஜன் தான் அதனை வெளியிட்டு இருக்கிறார். ’பாவண்ணனின் வர்னனைகள் அழகா  வார்த்தைகள் அழகா என்று பிரித்தறியமுடியாத  பரவசம் இந்தக்கதைகளை வாசிக்கும் போது எழுகிறது’  என்று தன் முன்னுரையில்  சரியாகவே ஜெயஸ்ரீ குறிப்பிடுகிறார்.

பிராம்ணனுமல்லாத க்‌ஷத்ரியனுமல்லாத ஒருவன் கல்வி கற்கவே முடியாதா? என்கிற கர்ணனின் கேள்வி ரணம் என்னும் சிறு கதையில்  எழுப்பப்படுகிறது. பாற்கடலை க்கடையும் சமயும் அசுரர்களின் உழைப்பைச்சுரண்டிய தேவர்கள்  அசுரர்களை எப்படியெல்லாம் வஞ்சித்தார்கள் என்று ராகு  போர்க்களம் என்னும் படைப்பில் பேசுவது நம்மை ஆழவே சிந்திக்க வைக்கிறது. ஏழு லட்சம் வரிகள் என்னும் கதையில்  குணாட்யர் தன் குருதியில் தோய்த்து  எழுதிய காவியம்  ஒடுக்கப்பட்டவர்களின் பைசாச மொழியில் எழுதப்பட்டதற்காக த்தீக்கிரையாக்கப்படுகிறது. அரசன் அந்தக்கவியத்தை ஏற்க மறுக்கிறான். எத்தனை க்கூர்மையான  வரலாற்று  விஷயங்கள் இவண் பாவண்ணனால் வாசகனை ச்சென்றடைகிறது என்பதை எண்ணிப்பார்க்கலாம்.

பாவண்ணன் படைத்த ‘ பாய் மரக்கப்பல்’ என்னும் புதினம் பேசப்பட்ட புதினமாகும். ஒரு விவசாயியின்  கண்களால் இந்தச்சமூகத்தை அளக்கின்ற சாதுர்யத்தை பாவன்ணன் வாசகர்களுக்கு இங்கே நிறுவிக்காட்டுகிறார். ‘வெறும் நிலத்துக்காகவே தம் வாழ் நாட்களை ஒப்படைத்துக்கொண்ட விவசாயிகள் அவர்கள் .பயிரிடுவதைத்தவிற வேறு எந்த ஞானமும் இல்லாதவர்கள். தன் செல்வத்தைத்தானே அறியாத அஞ்ஞானிகள்’

 ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த எழுத்தாளன் பாவண்ணனனை வாசகர்கள் இங்கே சந்திக்க வாய்க்கிறது.

 சிதறல்கள் என்னும் புதினம் புதுச்சேரி ஆலைத்தொழிலாளர்கள் சூழ் நிலையை மய்யமாக்கி எழுதப்பட்டது. எழுத்தாளர் அகிலன் மறைவையொட்டி ஒருபோட்டிக்காக எழுதப்பட்ட நாவல். அகிலன் திருமகனார் கண்ணன் அறிவித்த போட்டி. போட்டியில் தேர்வாகாத இந்தப்புதினம் இரண்டாண்டுகளுக்குப்பின்னர்   அகிலன்கண்ணன் முன்கையெடுக்க வெளிவந்தது . இந்தச் செய்தியை நியூ செஞ்சுரி புக் அவுஸ் வெளியிட்ட பதிப்பில் மறக்காமல் பாவண்ணன்  குறிப்பிடுகிறார். பாண்டிச்சேரியில் 1982-84 கால அளவில் இரண்டாண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மூன்று ஆலைகளில் பணியாற்றிய ஆறாயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்ட கொடும் துயரைச்சித்தரிக்கின்ற புதினம் இது. கோவை ஞானியின் அழுத்தமான ஆழமான  புதினம் பற்றிய  முன் உரை நம்மைக்கூடவே சிந்திக்க வைக்கிறது. ’முதலாளியம் உன்னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறதோ அதனை மட்டும் தா , பின்னர் குடும்பத்தோடு  நீ முடங்கு. அதுதானடா உன் வாழ்க்கை. வானம் கடல் மலைகள்  இயற்கை  அழகு இதன் மீதெல்லாம் உனக்கென்னடா அபிலாஷை. உன் உடல் உறுப்புக்கள் உழைக்க மட்டுமே நினைவில் வை.’  கோவை ஞானி  ஈவிரக்கமற்ற முதலாளித்துவ மனசாட்சியை  இவண் உடைத்துத்தான் காட்டுகிறார்.

பாவண்ணனின் இப்புதின நடையில் கவித்துவம் மிளிர்வதாய் கோவை ஞானி குறிப்பிடுகிறார்.

சமுதாய ப்பிரச்சனைகளை மய்யப்படுத்தி   கனமான கட்டுரைகள்  அனேகம் எழுதியிருக்கிறார் பாவண்ணன். இதுவரை கட்டுரை நூல்கள் 25 வெளிவந்துள்ளன.

 பாவண்ணனின் துங்கபத்திரை என்னும் தலைப்பிட்ட  கட்டுரைத்தொகுப்பை எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. புதியபார்வை இதழில் தொடராக வெளிவந்த  கட்டுரைகளின் தொகுப்பு இது. துங்கபத்திரை என்னும் தலைப்பிட்ட கட்டுரையில்    ஆவேசம்கொண்டு ஓடும் அந்த நதியின் நீர் எத்தனை வேகம் கொண்டது என்பதனை ஒரு காமிராக்காரனைப்போல் அழகாகச்சொல்கிறார் பாவண்ணன். இயற்கை அன்னை மீது மாறாக்காதல் கொண்ட எழுத்தாளரவர். துங்க பத்திரைநீரின் பிரவாகம்   நம்பமுடியாததாகவே இருக்கும்.  சுழித்துச்செல்லும் நீரோட்டம், கற்பனைக்கெட்டா வேகம், அது முரட்டுக்காளைபோல், கட்டுப்பாடில்லா வாகனம் போல்,பித்தேறிய குதிரையைப்போல்  என்கிறார்.

அணைக்கட்டினைத்தொட்ட அந்நதி  நீர், பிடிபட்ட யானையையே ஒக்கும். பிளிறல்,குமுறல்,கதறல்,  வனமிருகங்களின் ஒலிக்கலவையாய் அனுபவமாகும். பூசாரியின் ஆணைக்கு அடி பணிய மறுக்கும் கெட்ட ஆவியாய் நதி நீர்  பார்ப்போரை உணரவைக்கும் ஆடைகளைக்களைந்து விட்டு  ஊளையிட்டு  வீதியில் ஓடும் மனிதனாக, திக்குத்தெரியாத காட்டில்  அபயக்குரல்  எழுப்பும் குழந்தையாக, ஆயிரம் கைகளிலும் ஆயுதங்களை ஏந்திப் பலி வாங்க வெறியோடு அலையும் முரட்டுத்தெய்வமாய்த்தோன்றும்.

தினமணியில் வெளிவந்த கட்டுரைகளை ஒரு தொகுப்பாக’ எட்டுத்திசையெங்கும் தேடி’ என்ற தலைப்பிட்டு, தஞ்சாவூர் அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 35 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.

தொண்டர்களும் தலைமையும் என்னும் கட்டுரையில் ஒரு கனமான வினா தொடுக்கிறார் பாவண்ணன்.’ நாலு சீட்டுக்கும் மூன்று சீட்டுக்கும் பேரம் நடத்துகிற தலைமையைக்கண்டு நாம் சிரிக்கத்தேவையில்லை. நம்மைப்பார்த்தே நாம் சிரித்துக்கொள்ளவேண்டும். அவர்கள் பேரம் நடத்துவது தொண்டர்களாகிய  நமக்காகத்தான் என்றுதானே சொல்கிறார்கள்? அதை ‘இல்லை’ என்று மறுக்க  எந்த இயக்கத்திலிருந்து எந்தத்தொண்டன் முன் வருவான்?’

அதிகாரத்தின் கனிகள்- என்னும் கட்டுரையில் ‘ அரசு அமைப்பில் உச்சத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து அதிகாரத்தின் ருசியை அனுபவிக்கத்துடித்தபடி இருக்கிறார்கள். அந்த ருசிக்குக்குந்தகம் ஏற்படாதபடி காவல் துறை அதிகாரம் பார்த்துக்கொள்கிறது.’ என்று பேசும் பாவண்ணன் அரசியலில் தான் எந்தத்திசைவழி என்பதை நமக்குச்சூசகமாகச்சொல்லிவிடுகிறார்.

நல்ல கவிஞராக பாவண்ணன் மிளிர்வதை அவரின் கவிதைதொகுப்புக்கள் பேசுகின்றன. கரு நாடக மண்ணில் பாவண்ணன்   சில

 வித்தியாசமான அனுபவங்களையும் சந்தித்தும் இருக்கலாமோ என்னவோ.

கண்ணாடி – என்கிற பாவண்ணனின் கவிதை இப்படி..

‘ எந்தெந்த நெஞ்சில் நெருப்பிருக்குமோ

எந்தெந்த கைகளில் வன்மம் வழியுமோ

பதறிச்சோர்வடைகிறது மனம்

பீறிடும் அச்ச ஊற்றில்

தடுமாறிப்புரண்டோடி

கரையொதுங்கும் எண்ணச்சடலங்கள்

காற்றில் கரையாத கூச்சலால்

கால் நடுங்கும் வெளியே செல்ல

இன்னொரு மொழி புழங்கும் ஊரில்

வாழத்தந்த விலை பெரிது.

அணிலின் விளையாட்டு மனித மரணம் இரண்டையும் ஒப்பு நோக்கும் பாவண்ணன்

‘ நடந்து செல்லும் மானுடக்கூட்டத்தின்

பாதங்களுக்குக்கீழே

நிழல் போல் ஒட்டிக்கிடக்கிறது மரணம்’ என்று முடிக்கிறார்.

‘ இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக

உன்னுடன் சொல்லிப்பகிர்ந்துகொள்ள

 நினைவுகளை சீய்க்கிறது மனக்காகம்’  இப்படி மனக்காகம் சீய்க்கிற விஷயங்கள்  என்றைக்கும் எத்தனையோ உண்டுதானே.

மூன்றுஅற்புதக் கவிதைத்தொகுப்புக்களை த்தந்திருக்கிறார் பாவண்னன்.

 கரு நாடக மண்ணில்  தொலைபேசித்துறையில் பொறுப்பாகப் பணியாற்றி  மா நிலத்திலேயே மிகச்சிறந்த அதிகாரி என்கிற  சேதி சொல்லும் ’ சஞ்சார் ஸ்ரீ’  விருதையும் பெற்ற சாதனையாளர் அவர்.

மொழிபெயர்ப்புத் தளத்திலோ   எழுத்தாளர் பாவண்ணன்  ஈடில்லா பணியைச்சாதித்து நிற்பவர்..

இருபத்தைந்துக்கும்  மேற்பட்ட இலக்கிய  நூல்களை  கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார் பாவண்ணன். பைரப்பா எழுதிய ’பருவம்’ என்கிற பெரிய நாவலை த்தமிழில் மொழியாக்கம் செய்து சாகித்ய அகாதெமி விருதை  2005ல் பெற்றார்..

க்ரீஷ் கர் நாட் எழுதிய ’தல தெண்டா’ என்கிற நாவலை ’பலி பீடம்’ என்கிற தலைப்பிட்டு  அழகு தமிழில்  கொண்டுதந்தார்.  க்ரீஷ் கர்நாட்டின்  நாக மண்டலத்தையும் தமிழாக்கம் செய்தார்.  பலிபீடம் நாடகத்தில் மஞ்சணக்ரமித்தன் இப்படிப்பேசுவான்.

‘பொதுமக்கள், யோசிக்கிற உரிமை அவுங்களுக்கு எதுக்கு மத ஒழுக்கம் குல ஒழுக்கம், ஜாதி ஒழுக்கப்படி யோசிச்சி முடிவெடுக்க நாம இருக்கும்போது அவுங்களுக்கு அந்த கஷ்டம் வேணாம்.  ஆட்சி செய்ய மகாராஜா யோசிச்சி முடிவு சொல்ல நாம். இன்னும் என்ன வேணும். ராஜாவே மக்களுக்கு முதல் கடவுள்’

ஹரளய்யா என்னும் பாத்திரத்தின் சொல்லாடல் இது.

‘’ குடி வேணாம் மாமிசம் வேணாம்னு ஒதுக்கிட்டோம் ஆனா சக்கிலி சக்கிலிதானேன்னு சொறாங்க அவுங்க’

எத்தனைத்துயரத்தை அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சுமந்து வாழ்கின்றனர் என்பதை  நாடகாசிரியர் கர்நாட் சொல்லிப்போகிறார். பாவண்ணனின் மொழிபெயர்ப்பு அத்தனைக்கச்சிதமாய் இந்த படைப்பில் வெளிப்பட்டிருப்பதை வாசகன் நிறைவாக உணர்கிறான்.

‘ சொந்தம் பந்தம் மாமன் மச்சான் எல்லா உறவு மொறைகளையும் விடாம காப்பாத்தி வரவதாங்க அவுங்க. நிஜமாகவே ஜாதியை விட்டுடுன்னு அவங்ககிட்ட சொன்னா அந்த நிமிஷமே மூச்சு  நின்னுடும் அவுங்களுக்கு’ இப்படிப்பேசும்  பலிபீடம்   புரையோடிப்போன  ஒரு சமூக பிரச்சனையை மய்யமாக எடுத்துப்பேசும் நாடகம்.

 சாந்தி நாத தேசாய் படைத்த ‘ஓம் நமோ’ புதினத்தை தமிழாக்கம் செய்தமைக்காக  ’ நல்லி திசை எட்டும்’ மொழியாக்க விருது பெற்றாரவர். அரவிந்த மாளகத்தி எழுதிய ‘ கவர்மென் ட் பிராமணன்’ என்கிற நூலை தமிழாக்கம் செய்தார் பாவண்ணன்.  நெடிய வாழை இலையின்  நுனி ப்பகுதி இலையில்  ஒடுக்கப்பட்ட மக்கள் உணவருந்தக்கூடாது என்கிற பழக்கம் எப்படியப்பா இங்கே வந்தது என்று வினாவுகிறார் மாளகத்தி.

எஸ். எல். பைரப்பா எழுதிய பருவம் என்னும்  மாபெரும் புதினம் பெண்களின் பெருமை பேசும் காவியம்.  பஞ்ச பாண்டவர்களின்  தாயார்  குந்தி யின் ஆளுமை ஒளிர் விடும் படைப்பு.  கிருஷ்ணை என்னும் பாஞ்சாலியை உயர்த்திப்பிடிக்கிறது   புதினம். இந்தப்புதினத்தில்  பைரப்பா இப்படிப்பேசுவார். அதனை அழகுதமிழில் தருவார்  பாவண்ணன்

.’ சூதாடிகளும்,குடிகாரர்களும் விபச்சாரிகளும் தேச எல்லைகளையெல்லாம்  மீறி எந்த இடமாக இருந்தாலும் தம்மையொத்தவர்களைக்கண்டு நொடியில் நட்பாகிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிற  வாய் வழக்கு சத்தியமானது’ எத்தனை யதார்த்தம் பைரப்பாவின் செய்தி. மனித சமுதாயத்தின் பல்வேறு முகங்கள்,உணர்வுகள்,உறவுகள், முரண்கள் பற்றிய பிரக்ஞை இந்த நாவலை எழுதி முடிக்கும் வரை இருந்ததாய் படைப்பாளி பைரப்பா குறிப்பிடுகிறார்.

சாந்தி நாத தேசாயின் ‘ ஓம் நமோ’ என்னும் புதினம் பாவண்ணனால் மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டது.      நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது பெற்ற  படைப்பு இது. மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் தனது முன்னுரையில் இப்படிப் பேசுகிறார்.

‘சாரத்தை இழந்த சக்கையாக மதம் மாறிவிட்டது என்பதை மிக நெருக்கடியான

ஒரு தருணத்தில் அவள்(  ஆன் எனும் கதா பாத்திரம்) மனம் கண்டடைகிறது.  மதம் வெறும் சடங்குகளாகக் குறுகிவிட்டது. அதனாலேயே அது மனிதர்களை வெறுக்கிறது. மனிதர்களை அழிக்கிறது. மனிதர்களை வேரற்றவர்களாக ஆக்குகிறது.அனைத்தும் தெரிந்த நிலையிலும் கூடச் சாரமற்ற இந்தச்சக்கையை மனிதன் ஏன் சுமந்துகொண்டிருக்கிறான் என்பதுதான் நாவலை வாசித்து முடித்த பிறகு நமக்குள் எழும் கேள்வி’

பாவண்ணன் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னட படைப்புக்கள் வழி தமிழ் இலக்கிய ப் படைப்பாளிகளுக்கு கூடுதல் ஒளி பாய்ச்சுகிறார் என்றே கூறலாம்.

 சிறுகதைத் தொகுப்புக்கள் 20  தந்துள்ள பாவண்ணன் தரமான சிறுகதைகளை த்தமிழ்படைப்புலகில் தனதாக்கிய சாதனையாளர்.  பாவண்ணனின் முள் என்னும் சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்து நாளிதழில் வெளிவந்ததைத்தான் முதன்முதலில் வாசித்து மகிழ்ச்சி அடைந்தவன்  நான். தொடர்ந்து கணையாழியில் சிறுகதை தந்தவர் பாவண்ணன். பாவண்ணனின் ‘கண்காணிப்புக்கோபுரம்’ என்னும்  பாவண்ணனின்  சிறுகதைத்தொகுப்பினை  எடுத்துக்கொண்டு சற்றே ஆராய்வோம்.  ஒன்பது கதைகளைக்கொண்ட தொகுப்பு இது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தை சிறுகதையாளர் அமரர் கு.அழகிரிசாமி க்கு ச்சமர்ப்பித்து இருக்கிறார் பாவண்ணன்.

முதல் சிறுகதை கண்காணிப்புக்கோபுரம். வருகிறான்  அஜய் சிங்கா என்னும்  துப்பாக்கிக்காரன். ராணுவத்தில் பணியாற்றுகிறான். மேல் அதிகாரியின் காலணியைத்துடைக்க மறுத்ததற்காகத்  தண்டனையாய் இந்தக்குன்றுப்பகுதிக்குப்பணி மாற்றலில் வந்தவன். ஊர் உலகையெல்லாம் கண்காணிக்க துப்பாக்கிக்கையை கையில் கொடுத்து  பிடித்து க்கொண்டு நிற்கச்சொன்னது ராணுவம். ஆனால்- தான் எப்படி- என்பதைக் கண்காணித்துக்கொள்வது  மட்டும்  ரானுவத்திற்குத்தெரியவில்லை. ஊருக்கெல்லாம் நாட்டாண்மைதான் என்ன செய்வது.

சிப்பாய் சொல்கிறான்’ மானம் மரியாத கோபம் ரோஷம் எல்லாத்தையும் காத்துல பறக்க உட்டாதான் ராணுவத்துல சிப்பாயா வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது’. எத்தனை வேதனை பாருங்கள்.

அந்த சிப்பாயை ஆர்டர்லியாக ஒரு ராணுவ அதிகாரி வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அந்த வீட்டில் கழிவறையைமுதல்கொண்டு சுத்தம் செய்கிறான்.  அதிகாரியின் மனைவி அணியும் ஆடைகளைத்துவைத்து உலர்த்துகிறான்.அவர்கள் வீட்டு நாய் அவனை முறைக்க அவன் அம்மையாரின் சுடிதாரை கீழே போட்டுவிடுகிறான்.  அது மண்ணில் வீழ்ந்து விடுகிறது. கீழே கிடந்த  ஒரு கம்பியை எடுத்து அந்த எஜமானி ப்பெண்மணி அவனை நையப்புடைக்கிறாள்.மருத்துவமனைக்குச் சென்று தையல் போட்டு காயம் ஆற்றுகிறான்.

‘ராணுவம்னா டிசிப்ளின்னு வெளியில இருக்கறவங்களுக்கு,  தோணும்.உண்மையில அது ஒரு பெரிய அடக்குமுறை, சர்வாதிகாரம்  ஆனா எதுவுமே கண்னுக்குத்தெரியாது’ என்கிறான் அழுதுகொண்டே அந்த   சிப்பாய்.

‘serve with honour’  என்னும் வாசகம் காதில்  சன்னமாய் ஒலித்துக்கொண்டே இருப்பதை    எண்ணி எண்ணிப்பார்க்கிறான் வாசகன்.

இரண்டாவது சிறுகதை ‘அன்ன பூரணி மெஸ்’. ராஜாராமன் பாலகுரு என்னும் இருவர். மெஸ்ஸில் பணியாற்றும் ராஜாராமனை பாலகுரு சந்திக்கிறான். மெஸ் முதலாளி  பணத்தைக்கொட்டி அரபு நாடு வேலைக்குச்சென்று ஒட்டகம் மேய்த்து உதை வாங்கி சொந்த ஊர் திரும்பி நல்லதொரு மெஸ் வைத்து ஏழைகளின் பசியாற்றவேண்டும் என்று  உறுதியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான பாலகுருவிடமிருந்து  ராஜாராமன்  கொஞ்சம் கொஞ்சமாக  அந்தத் தீய பழக்கங்களை அறிந்து கொள்கிறான். நல்ல பழக்கங்கள் விடை பெறுகின்றன. ராஜாராமன்  பாதை  விலகி ஒரு நாள்  நடுஇரவு பாலகுருவின் உடுப்பை அணிந்து, அவன் பர்சை எடுத்துக்கொண்டு அவன்  சூட்கேசோடு ஓடிப்போய் விடுகிறான். எதுவுமே அறியாத மெஸ் முதலாளி ராஜாராமன் திரும்பிவரும் வரை அவன் பார்த்த மெஸ்வேலையை பாலகுருவை பார்க்க வேண்டுகிறார். ராஜாராமன் திரும்ப வரவேயில்லை. பாலகுரு நல்ல  உழைப்பாளியாக ஒரு நல்ல மனிதனாக த்தன்னை மாற்றிக்கொள்கிறான். வாழ்க்கை யார் யாரை, எப்படி எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது பாருங்கள் என்பதே படைப்பாளி நமக்குச் சொல்லும் செய்தி.

மூன்றாவதுகதை. சொர்க்கவாசல்.  ஒருதம்பதியர் வைகுண்ட ஏகாதசியன்று  பெருமாள் கோவிலுக்குச்சென்று சொர்க்கவாசல் காணத்  தயாராகின்றனர். அதே வீதியில் ஒரு முதாட்டி வைகுண்ட ஏகாதசியன்று இறந்துபோகிறார். தெரு அடைத்துப்பந்தல். கார் போக முடியாது. நாற்காலிகள் பரப்பிக்கிடக்கின்றன. சவம் எடுத்தபின் கோவிலுக்குச்செல்லலாம் எனத் தம்பதியர் தீர்மானிக்கின்றனர்.

 அப்போது  வேறு ஒரு கதை விரிந்து வருகிறது. கதைசொல்லி, குப்பாண்டி என்னும் இடுகாட்டுத்தொழிலாளி பற்றிய நீண்ட கதையைச் சொல்லி முடிக்கிறார். படிப்பறிவு இல்லாத ஒரு  சுடுகாட்டுத்தொழிலாளி. சுடுகாட்டிற்கு அருகே ஒரு திரையரங்கு. கீற்றுக்கொட்டகை. வைகுண்ட ஏகாதசி அன்று’ மூன்று ஷோ ஒரு டிக்கட்’  ஏக அமர்க்களப்படும்.  கதை சொல்லி நண்பர்களோடு குப்பாண்டியை அடிக்கடி சந்தித்து ப்பேசுவார். சினிமா பாட்டுக்கள் பல, குப்பாண்டி அற்புதமாகப்பாடுவார்.

ஒரு சவத்தை எரித்து முடிக்கக் கறாராக ரூபாய் நூறு.  ஓர் முறை  நூற்றுக்கு  இருபது ரூபாய்  குறைய சண்டைக்கு நிற்கிறார். ‘ எனக்கு மட்டும் ஏன் குறைக்கிறீங்க’ என்று குப்பாண்டி வாதிடுகிறார்.

ஒரு நாள் திரையரங்கு தீப்பிடித்து எரிகிறது. சினிமா பார்க்க வந்தவர்கள் 137 பேர் கருகி ச்சாம்பலாகி சவங்களாயினர். அத்தனை சவங்களையும் குப்பாண்டி எரித்து முடிக்கிறார். பம்பரமாய்ச்சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார். அந்த ஊர் கணக்குபிள்ளை குப்பாண்டிக்கு க் கூலி கொடுக்க ப்பொது மக்களிடம் ஒரு பத்தாயிரம் வசூலித்து மூட்டையாய்க்கட்டி குப்பாண்டியிடம் ஒப்படைக்கிறார்.

‘கொறவோ நெறவோ மனசு நோவாம நீ வாங்கிக்கனாதான் எங்களுக்கு நிம்மதி’

இப்படிச்சொன்ன கணக்குப்பிள்ளையிடம் குப்பாண்டி,

‘என்னிய என்ன கூலிக்கு வேல செய்ற ஆளுன்னு மட்டும் நெனச்சிட்டியா சாமி? நான் என்ன மனசாட்சி இல்லாத ஆளா? செத்தவங்கள்ளாம் ஒனக்கு அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி,பேரன் பேத்தி மொறன்னா எனக்கும் அந்த மொறைதான் சாமி. நான் எதயும் காசிக்காக செய்யல.’ என்று கதறி  அந்தக் காசு மூட்டையை பெற்றுக்கொள்ள மறுக்கிறார்.

‘காசி பணம் ஒன்னும் வேணாம். போயிடு’ சொல்லிக்கதறி அழுகிறார் குப்பாண்டி.

எளிய குப்பாண்டிதான் மனித மனசாட்சியின் உருவம். குப்பாண்டிக்காகத்தான் கதிரவன் தினம் தினம் எழுகிறான்.  வான் மழை பொழிகிறது. வாசகன் ஒர் ஒரு முடிவுக்கு வருகிறான்.

அற்புதமான காட்சியை  இப்படிக்கண்முன்னே நிறுத்திய பாவண்ணன் நம் மனத்தில் பூரணமாய்  நிறைந்து விடுகிறார்.

தனது ஓயா இலக்கிய ப்பணியால் தமிழ்மொழிக்கு  தகுவளம் சேர்க்கும்  எழுத்தாளர் பாவண்ணன் அன்பின் உரு, தோழமைத்திரு.

-------------------------------------------------------------

 

 

தொரகுனா இடுவண்டி - கட்டுரை

 

 

தொறகுனா  இடுவண்டி  சேவா.    

 

ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் தலைப்பில் இசையையும் இலக்கியத்தையும் பிசைந்து ஒரு எழுத்துப் படைப்பைக்கொண்டு வந்துள்ளார் ரவிசுப்ரமணியன். காலச்சுவடு பதிப்பகம் அப்புத்தகத்தை வெளியிட்டுப் பெருமை பெறுகிறது. இசையைத்  ஆழத்தெரிந்து அதன் கலா பரிமாணங்களை முற்றாய் ஓர்ந்து மோகமுள் புதினத்தில் தி.ஜானகிராமன்  ரங்கண்ணாவைக் கொண்டு வந்திருப்பார். மோகமுள் ரங்கண்ணா இசையின் தாளகதியைத் தன் குருதியில் எதிரொலிக்கக் காண்பவர். தம்புராவை மீட்டுவது அவருக்கு  ஆன்ம சம்பாஷணை.சங்கீத ஞானமு பக்தி வினா என்பதற்கு சாட்சியமாய் நிற்கும் இலக்கிய பிம்பம். மோகமுள்  ரங்கண்ணாவைத்தாண்டிய சமாச்சாரத்தை இசைபயில் இலக்கிய மேதமையை இலக்கியப்படைப்பாளிகள்   வேறு யாரும் வாசகர்க்குப் பிரயத்திட்சமாக்கி உலவ விடவில்லை.  இப்படைப்பில் ரவிசுப்ரமணியன் 13 கட்டுரைகளோடு இரண்டு பின்னிணைப்புக்களையும் சேர்த்து 15 கட்டுரைகள் எனக்கொண்டு வந்துள்ளார். ஆசிரியரின் உடன் பிறவாத்தங்கை காமாக்‌ஷி ஸ்வாமிநாதனுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரைகள் பேசும் புதிய சக்தியில் வெளிவந்தவை. அவ்விதழின் ஆசிரியர் ஜெயகாந்தன்  சஹ்ருதயர் ரவிசுப்ரமணியத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கை மிகச்சரியானது என்பதனை வாசகன் வழிமொழிகிறான்.

 என்னுரையில் ரவிசுப்ரமணியம் இசையின் வல்லமை குறித்து   இப்படிப்பேசுகிறார்.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளக்காதல் கொண்ட நோயாளியாய்’ நீங்கள் அதைத் தொடர்கையில், முதலில் ரசிகனாக்கி,  உணரவைத்து பின் விதிர்க்கவைத்து, மகிழ்ச்சி பரப்பி பின் உங்களையே தனக்குப் பிரச்சாரகராகவும் ஆக்கிவிடுகின்ற வல்லமை இசைக்கு உண்டு’

இசைப்பேராசிரியர் திவாகர் சுப்ரமணியம் ‘தொகையறா’ என்னும் தலைப்பிட்டு  இந்நூலுக்கு ஒரு முன்னுரையைத்தந்துள்ளார். மாமேதை பீத்தோவன் இசையால் உலகத்தை மாற்றமுடியும் என்றார். அத்தகைய ஒரு சமுதாய மாற்றத்திற்கு அணிவகுக்கும் படைப்புக்களில் இந்தக்கட்டுரைத்தொகுப்புக்கு இடமுண்டு என்கிறார் திவாகர்.

 அ. முத்துலிங்கத்தின் மார்க்கஹிந்தோளம் என்பது முதல் கட்டுரை. இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் 22.10.22 அன்று  நடந்த அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்த கட்டுரைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் ரவிசுப்ரமணியனால்  வாசிக்கப்பட்டது. இதனில் இசையை அனுபவிக்கத் தெரிந்து எழுத்திலும் கொணர்பவர்கள்  யார் யார் என்கிற ஒரு பட்டியல் தருகிறார். சுவாமிநாத ஆத்ரேயன்,சிதம்பர சுப்ரமணியன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன்,தி. ஜானகிராமன்,எஸ். வைத்தீஸ்வரன், கிருஷாங்கினி,ஆர். ராஜகோபாலன்,ஆனந்த், அபி, பிரம்மராஜன்,நா. விச்வநாதன்,ரெங்கநாயகி, லலிதாராம், சுகா, அருண்மொழிநங்கை. இசைப்பற்றித்தெரியாது ஆனால் இசையை எப்படி அனுபவிப்பது  என்பது தெரியும் இப்படி ஒரு பட்டியலில் அ. முத்துலிங்கத்தை  ரவிசுப்ரமணியன் முன் நிறுத்துகிறார். முத்துலிங்கத்தின் ‘ரி’  என்னும்  ஒரு கதை.  ஒரு தேர்ந்த கலைஞன் எதையெல்லாம் எப்படியெல்லாம் புனைந்து கதைக்குள்  அதனைக்கொண்டு வருகிறான்,  வித்தை காண்பிக்கிறான்,  என்பதற்கு  இக்கதை ஒரு சான்று என்கிறார் ரவிசுப்ரமணியன். அ.முத்துலிங்கத்தின் ராகம் பற்றிய  ஒரு விளக்கம் வாசனைக் கிரங்கச்செய்வதைத் தவறாமல் சுட்டுகிறார்.’

‘இது மார்க்க ஹிந்தோளம். அடிமுடியைக்கண்டுபிடிக்க முடியாதபடிக்கு ஓர் அபூர்வமான ராகம். ஆயுள் முழுக்க சாதகம் செய்தாலும் இந்த ராகத்தில் மறைந்துகிடக்கும் சூட்சுமங்களை ஆழம் காணமுடியாது. எனக்குப் பிடித்தராகம்.’

றொறன்றோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட ஒரு வேண்டுகோள்.அ. முத்துலிங்கம் அதற்கு ரவி சுப்ரமணியத்திடம் இப்படி   ஒரு உதவி கேட்கிறார்.

 ‘ ஒரு நிமிடப்பாடல் எழுதி மெட்டமைத்து பின்னணி இசை அமைத்து  கடைசியில் நிதி கேட்கும் கோரிக்கையாக வாய்ஸ் ஓவர் ஒருவர் தரவேண்டும்’

 ரவி சுப்ரமணியம் ஒத்துக்கொள்கிறார்.பாடல் எழுதி இசை அமைக்கிறார். பாரதிராஜா  வாய்ஸ் ஓவர் குரல் கொடுக்கிறார். வெற்றிகரமாய் அந்தத் திட்டம் உருப்பெறுகிறது. அ.முத்துலிங்கம் இப்படி ஒரு விபரத்தை மட்டும்தான் வெளியில் சொல்கிறார்.  தமிழ் இருக்கை அமைப்பதற்கு  ரவிசுப்ரமணியத்தின்  பாடலும், பாரதிராஜாவின் கோரிக்கையும் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே  தேவைப்படுகின்ற டோலர்கள்  தமிழன்பர்கள்  பலரிடமிருந்து வந்து குவிந்துவிடுகின்றன.  அ.முத்துலிங்கம் எண்ணியாங்கு  தமிழ் இருக்கை நிறுவப்படுகிறது.  இவை அத்தனையும் முத்து முத்தாய் இக்கட்டுரையில் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது.

’ தடமில்லாப் பாதைவழி பயணமேகிய கத்ரி கோபால்நாத்’ என்னும் கட்டுரை அடுத்ததாய் வருகிறது. கத்ரி கோபால்நாத் சிகரம் தொடக்காரணமான ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார் கட்டுரையாளர். இசைமேதை     டி. வி கோபாலகிருஷ்ணன் கோபால் நாத்தை சென்னைக்குக் கூட்டிவந்து மயிலாப்பூர் முருடீஸ் ல் தங்கவைத்து ’இனி நீ என்கிட்டதான் இருக்கவேண்டும்’ என்று சொல்லி தனக்குத்தெரிந்த எல்லா  இசைக்கலை நுணுக்கங்களையும் சொல்லித்தந்திருக்கிறார். தரையில் அமர்ந்து கோபால் நாத் டி வி ஜி முன்பாக பத்துமணிநேரம்கூட அசுர சாதனை செய்தவர் என்பதைப் பகிர்கிறார் ரவிசுப்ரமணியன். கற்கும் நேரத்தில் அவர் காட்டிய அந்த ஈடுபாடான அர்ப்பணிப்புதான் பின்னாளைய அவரது எல்லாப் பரிமளிப்புக்கும் அடித்தளம் என்பதைச் சுட்டுகிறார் கட்டுரையாளர்.

மூன்றாவது கட்டுரையாக வருகிறது தமிழ்+ அன்பு+ பதிப்பகம்=மீரா.  கவிஞர் மீரா பற்றியும் அவரோடு ரவிசுப்ரமணியத்திற்கு இருந்த தோழமை பற்றியும்  அறிந்து நாம் துள்ளிக்குதிக்கலாம். அப்படிச்செல்கிறது அவ்விஷயங்களின் கோர்வை.

‘பின்னாளில் அந்தக்கவிஞரை நான் சந்திப்பேன் என்றோ, என் முதலிரு கவிதைப்புத்தகங்களை அவரது அன்னம் பதிப்பகம் வழியாக அவர் வெளியிடுவார் என்றோ, என்னைத்தம்பியாக ஏற்று என் விடுதியிலேயே எனது விருந்தினராக இரண்டு ஆண்டுகள் தங்கியிருப்பார் என்றோ, எண்பதுகளின் தொடக்கத்தில் நான் வாசித்த அவரது கவிதைகளில் இரண்டு மெட்டமைக்கப்பட்டு 2019 இல் பாடலாய்ப் பதுவாகுமென்றோ அப்போது நான் நினைத்திருக்கவில்லை’

படித்துப் பரவசமாகி நிற்கிறோம்.

மீராவின் ‘ என்னை மீண்டும் இசைக்க வைத்துள்ளாய்’   ‘நீ தாமதிக்காதே’ என்கிற இரண்டு கவிதைகளுக்கும் இசை அமைத்துள்ளார் ரவிசுப்ரமணியன். முதல் கவிதைக்கு ‘தேஷ் ராகத்தைத்தேர்ந்தெடுத்திருக்கிறார். தேஷ் ராகத்தைப்பற்றிய ஆசிரியரின் ஒரு விளக்கம் நம்மை அசைத்துப்பார்க்கிறது. தேஷ் -அது மென்மையான ராகம் உணர்வுகளுக்கு ஏற்றது. தீன பாவத்திற்குப் பொருந்தி வருவது மெலங்க்கலியான அனுபவத்தைக் கொணர்வது என்கிறார். ஒரு படி மேலே செல்கிறார்.’ வெல்லப்பாகை மேலிருந்து ஊற்றினால் மடிந்து மடிந்து   குழைவதுபோல் குழைகிற ஒரு வடநாட்டு ராகம். மனசை உருக்கக்கூடிய ராகம்’  இப்படியாய் அழகு விளக்கம் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது. ’ துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ என்னும் பாரதிதாசனின் பாடலுக்கு தண்டபாணி தேசிகர் மெட்டமைத்துப்பாடியிருப்பார். அது தேஷ் ராகத்தில் பூத்தது என்று சொல்லிச்செல்கிறார்.

இரண்டாவதாக வரும் கவிதைக்கு கானடா ராகத்தைத் தேர்வு செய்துள்ளார் ரவிசுப்ரமணியன். மீராவின் ‘ நீ தாமதிக்காதே’ கவிதையை மெட்டமைத்துப்பாடி அதனை இசை ஆர்வம் உள்ள முந்நூறு நண்பர்களுக்குமேலாகவும்  அனுப்பிவைக்கிறார். எழுத்தாளர் வண்ணதாசன் மட்டுமே இந்தப்பாடலுக்கு இந்த மெட்டு  அமைத்துள்ளீர்கள் என்பதனைச்சரியா கண்டுபிடித்துச்சொல்கிறார். மாதவம்பட்டி சத்யன் மங்கையர் திலகம் படத்தில் பாடிய பாடலின் ராகமது என்கிறார் ஆசிரியர்.

நகுலனின் ஊர்ந்து செல்லும்நினைவு என்கிற கட்டுரை அடுத்ததாக வருகிறது.  இக்கட்டுரையில் வருகிறது இப்படி.  நண்பர் தேனுகா  ஒருமுறை  ‘நல்ல கவிஞனாக வரவேண்டுமா பெரிய கவிஞனாக வரவேண்டுமா என்கிற கேள்வியை  நூலாசிரியரிடம் வைக்கிறார். ‘நான் வைரமுத்து மாதிரி’ பெரிய கவிஞனாக வரவேண்டும் என்கிறார் ரவிசுப்ரமணியன். அந்த சம்பாஷணை  இப்படி நீள்கிறது ,

‘ சுத்தம். அந்தக்கசண்டெல்லாம் வேண்டாம்னுதான உங்கள நான் திருப்பப்பாக்குறேன். அங்கயே போய் போய் நிக்கிறிங்க’

‘ஏன் அவர்ல்லாம் பொயட் இல்லியா சார்?’

‘அத காலமே சொல்லிடும். ஹீ ஈஸ் ய லிரிக் ரைட்டர் அவ்ளோதான்.அத தாண்டி ஒரு மண்ணும் இல்ல’

நகுலனின் கவிதை ஒன்றைப் படிக்கத் தொடங்குகிறார் ரவிசுப்ரமணியன்.

‘ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை

அப்பொழுதுதான்

அவன் கவனித்தான்

ரயிலிலும்யாருமில்லை

என்பதை

ஸ்டேஷன் இருந்தது

என்பதை

‘அது ஸ்டேஷன் இல்லை’

என்று நம்புவதிலிருந்தும்

அவனால் விடுவித்துக்கொள்ள

முடியவில்லை

ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது’

2007 ல் துவங்கி இதுவரை (ஆகஸ்ட் 2021) 85 கவிதைகளுக்கு மேல்   ரவிசுப்ரமணியன் மெட்டமைத்துள்ளார். முதன் முதலில் மெட்டமைத்தது  நகுலனின் கவிதைக்குத்தான். இசையோடு கூடிய பாடலாக அது பதிவாகுதல் மட்டும் கைகூடவில்லை. வருத்தப்படுகிறார் நூலாசிரியர். நகுலனின்  இக்கவிதையோடு இந்தக்கட்டுரை முடிகிறது.

‘இருப்பதற்கென்று

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்’

நகுலன் இல்லாது தமிழ்க்கவிதை வெளிதான்  எப்படிச்சாத்தியம்.

அடுத்து வரும் கட்டுரை  ‘உணர்வுகளின் குரலொலியாய் உலவும்  எஸ். பி.பி. அவரைத் ’தான்மையற்றவர் ’என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். எதனிலும் தான்  தான் என்று தன்னை முன் நிறுத்திக்கொள்ளாதவர்  என்பதால் தான்மையற்றவர் என்கிற புது வார்த்தைப் பிரயோகத்தை நிறுவுகிறார். மெச்சத்தக்க வரிகள் எஸ்.பி.பி யின் பெருமை பேசுகின்றன.

‘ எஸ் பி பி  அவர் இன்று இல்லை.ஆனால் அவர் குரல் நம் சந்ததிகள் வாழும் வரை வாழும்.கேட்டதும் சட்டெனக் கடந்து வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிற ஒரு சராசரிக்குரல் இல்லை அது.நம்முள் ஊடுருவி ஏதோ செய்துவிடுகிற குரல்.அது வெறும் குரல் மட்டுமா…? நூறு சதவிகித அர்ப்பணிப்போடு ,சங்கதிகள்,அஹாரங்கள்,சிட்டா ஸ்வரங்கள்,ப்ருகாக்களென உணர்ச்சிப்பெருக்கோடு, நம்மோடு இருந்த  பல தருணங்களின், குரல்.  ’என் உணர்வு உன் குரலில்’  என்று பல சமயம் நம்மை நெகிழவைத்த குரல். மகிழ்ச்சி, காதல்,துள்ளல்,நையாண்டி,கழிவிரக்கம் பேச்சு,இருமல்,துயரம், காமம், உரையாடலெனப்பலவிதமான பாவங்களோடு என் வாழ்வின் பல சமயங்களில் என்னோடு இருந்தது போலவே  என் பிள்ளைகளோடும்என் பேரப்பிள்ளைகளோடும் இருக்கப்போகிற குரல் அது.  இதுதானே ஒரு கலைஞனின் உண்மையான அசாத்திய வெற்றி. சரியான அர்த்தத்தில் அசல் கலைஞனாக வாழ்ந்தவனுக்கு ஒரு போதும் சாவு இல்லை. அது வெந்ததைத்தின்று விதியின் கூற்றுக்குக் காத்திருந்து மாயும் பிரகிருதிகளுக்கு மட்டுமே’

இவற்றை வாசிக்கின்ற வாசகனுக்கு  பாரதியின் ‘தேடிச்சோறு நிதம் தின்று  பல சின்னஞ்சிறு கதைகள் பேசி’ என்னும் கவிதை வரிகள்  மனதில் நிழலாடவே செய்யும். எஸ். பி.பியின் வருகையை ‘ அரியவை எப்போதாவது நிகழும்’ என்று நெஞ்சம் திறக்கிறார் ரவிசுப்ரமணியன். இவற்றை  எல்லாம் இருந்து கேட்க அவரை   இயற்கை விட்டுவைக்கவில்லையே என்று வாசக மனம் ஏங்குகிறது.

’தமிழிசையே ஆதி இசையென நிறுவும் மம்மது’ என்னும் அடுத்த கட்டுரை வேறு ஒரு புது செய்தியைச்சொல்கிறது.

‘ஸ்ருதி என்று இன்று நாம் அழைக்கும் சொல்லுக்குத்தூய தமிழ் சொற்கள் இருபத்திரெண்டு உள்ளன.ஆனால் அத்தனையும் வீழ்த்தி  ‘ஸ்ருதி’என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளதே! தமிழன் எவ்வளவு ஏமாந்த சோணகிரி’ என்று மம்மது  விசனத்தோடு சொல்லும் போது,  அது குறித்தும் அதன் பின்னுள்ள மொழி அரசியல் குறித்தும் நாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை’  என்கிறார் ரவிசுப்ரமணியன்.

பாடித்திரிந்த பாடினிகள் என்னும் அடுத்து வரும் கட்டுரையில் , தாம்பரம் கிருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர். சு. சதாசிவம் 50 பெண்பாற்புலவர்களைப் பெயர்களோடு கண்டடைந்து நிறுவுகிறார் என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது ‘சங்கப்பெண்பாற்புலவர் வரலாறு’ என்னும்  அவரது நூலில் வருகிறது என்பதை அறிகிறோம்.

நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடுகள்,பற்கள்,தலை இவை எட்டு உடல் உறுப்புகள். எடுத்தல், படுத்தல்,மெலிதல்,கம்பிதம்,குடிலம்,ஒலி, உருட்டு, தாக்கு  இவை எட்டும் முறையே அவற்றின் செயல்பாடுகள். இவை அனைத்தும்  இசைந்து  செயல்படுவதால்’ பண்’’ஆயிற்று, என்கிறார் அடியார்க்குநல்லார். இப்படியொரு காத்திரமான விளக்கம் இந்தக்கட்டுரையில் கிடைக்கிறது. அடியார்க்குநல்லார் தமிழ்ப்பண்கள் மொத்தம்  11991 இருந்தன என்கிறார். அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளின் நிழலே இல்லாத ஒரு காலத்தில் இத்தனை அற்புதங்கள் இம்மண்ணில் சாத்தியமாகி இருக்கிறது.

’காலத்தைத் தன் கலைக்குள் உறையவைத்த கலைஞன் இளையராஜா’  எனும் அடுத்த கட்டுரை ஆசிரியர் இசைஞானியை எப்படிப்புரிந்திருக்கிறார் என்பதனைத் தெரிவிக்கிறது. இளையராஜாவை எல்லோரும் நன்றாகவே அறிவோம் என்றாலும் ரவிசுப்ரமணியத்தின் எழுத்து வழி அறிதல் நம்மை நெகிழச்செய்கிறது. இதற்கு மேலுமா ஒரு கலைஞனை வாழ்த்திவிட முடியும் என்று வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. ஜெயகாந்தன் திராவிட இயக்கத்திற்கு ஒவ்வாதவர். ஆனால் திராவிட இயக்கத்தினரால்  கொண்டாடப்பட்டவர்.  எழுத்துக்கலை அவரைக் கொண்டு போய்  அங்கே  சேர்க்கிறது. இளையராஜா ஆத்திகர்.   கடவுளை மறுத்த ஈ.வெ ரா பெரியார் திரைப்படப் பாடலுக்கு  இசை அமைக்க ஒப்பாதவர். கோடிக்கணக்கான தமிழர்களை இசையால் வசப்படுத்தியவர்.அவர் கருத்தோடு முரண்படும் தமிழர் உண்டு. ஆயின் அவரின் இசையைப் போற்றாத தமிழர் உண்டோ?

அற்ப, லெளகீக லாப நஷ்ட விஷயங்களின் வழியே ,  அதுவும் நமக்குத்தெரிந்த  பாமர அளவீடுகளின் வழியே ஒரு தேர்ந்த கலைஞனை  அளவிடுதல் சரியாகாது என்கிறார் ஆசிரியர்.

ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் கட்டுரை பக்தி இலக்கியங்கள் தமிழிசைக்கு  அளித்த கொடை பற்றிப்பேசுகிறது. உலக அளவிலும் கூட இந்தப் பங்களிப்பை வேறு எந்த மொழியிலும்  காண்பதரிது என்கிறார் கட்டுரையாளர். புதுக்கவிதை யுகம் வந்தது கவிஞர்கள் கவிதை  தந்தார்கள்.இசையின் பிரக்ஞை இல்லாத கவிதைகள் பிறந்தன. கவிதைக்கலைக்கும் இசைக்குமான தொடர்பு விட்டுப்போயிற்று. இரண்டு கலையும் முகிழ்த்தலில் கிடைக்கும் அரும் பயன் வாராது போயிற்று. தமிழ்  மொழி நஷ்டப்பட்டுப்போனது.

மணிக்கொடி எழுத்தாளர்கள் இந்தியவிடுதலைப்போரை மறந்து இலக்கியம் படைத்தார்கள்.  அது ஒப்பவே சமகாலக் கவிஞர்கள் இசையைப் புறந்தள்ளி கவிதை பொழிகிறார்கள். எது இவண்  குறையோ அதனை லாகவமாய்ச் சுட்டுகிறார் ரவிசுப்ரமணியன்.

வள்ளலாரின் வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்              ( மாண்ட்)

பாரதியின்  சின்னஞ்சிறு கிளியே                                                     ( காபி)

பாரதிதாசனின்   துன்பம் நேர்கையில் யாழெடுத்து   நீ                    ( தேஷ்)   இவையும் இவைபோன்ற பிறவும் இசையால் கவிதைக்குச் சேர்ந்த  சம்பத்து என்கிறார் நூலாசிரியர்.

அடுத்துவரும் கட்டுரை ‘மல்லாரி-நாத லயத்தின் வழியே ஒரு வாசமாலை.  கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சந்நிதியிலேயே பிறந்து வளர்ந்தவன் நான் என்கிறார் ஆசிரியர். ’கோயில் என்பது வெறும் மூலஸ்தான விக்ரஹத்தை வணங்கி வழிபடும் ஒரு இடம் மட்டுமேயல்ல, இசை, கதை சொல்லும் கதாகாலட்சேபம்,பிரவச்சனம்,தமிழ்க்கல்வெட்டுகள்,நாட்டியம், ஓவியம் ,சிற்பம்,ஆடு மாடு  பாம்பு பறவைகள் போன்ற உயிரினங்கள், நந்தவனம்,ஸ்தல விருட்சம்,மூலிகைகள்,கேணிகள்,குளங்கள்,பூஜை சின்னங்களின் வகைகள் தீப தூப வகைகள், பூ வாசனாதி திரவிய ஆடை அலங்கார வகைகள்,பாத்திர சமையல்வகைகள்,வான சாஸ்திரம்,கட்டிடக்கலை,ஸப்ததாள படிக்கட்டு, இசைத்தூண்கள் என இப்படி நூறு நூறு கலாச்சார சம்பத்துகள் நிறைந்த புனித இடம்’.  கோயிலுக்கு முன்னும் பின்னும் நிகழும் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சூட்சுமத்தை நமக்குக்கொண்டு தருகிறார் நூலாசிரியர். சிதம்பரம்  நடராஜர் திருக்கோயில்  மல்லாரி வாசிப்பு பற்றி அரியதொரு விளக்கம் இந்தக்கட்டுரையில் காண்கிறோம்.

’… முதல் நாள்     சங்கராபரணம் தொடங்கி,     ரீதி கெளளை, சக்கரவாகம்,ஹம்சபிரமரி, என நான்கு நாட்கள்

ஐந்தாம் நாள்                              ஐந்து தாளத்தில் மல்லாரி

ஆறம் நாள் சண்முகப்பிரியா,  ஏழாம் நாள்  காம்போதி,   எட்டாம் நாள்   ஒடக்கூறு எனும் தனி உருப்படி.

(தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற இந்த உடல் கூற்றின் இரகசியத்தை பிட்சாடனர் உருக்கொண்டு  சிவபெருமான் பாடம் போதித்த  உணர்வே ஒடக்கூறு.  நாதநாமக்கிரியா ராகம் அன்று வாசிக்கப்படும்’

ஒன்பதா நாள் அன்று                தேர் மல்லாரி

பத்தாம் நாள்   முத்துத்தாண்டவர்  அம்பலவன் மீது பாடிய பாடல்கள்.

பதினொன்றாம் நாள்     உசேனி  வாசிக்கப்படும்.  உடன் விழா நிறைவெய்தும் என்று பட்டியல் தருகிறார் ரவி சுப்ரமணியன். கேரளத்து செண்டை மேளம்  இங்கே வரலாம் அது நாகஸ்வரத்தின் இடத்தை ஆக்கிரமித்தல் அழகல்ல என்கிறார் கட்டுரையாளர்.

’பாமரர்  மெட்டிலும் பாடிய பாரதி’  என்னும் அடுத்து வரும் கட்டுரை வாசகனைக் கிறங்கச்செய்துவிடும். பாரதி இசை அறிந்த தமிழ்க்கவிஞன்.’தமிழ்ழ்சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை  மீட்டும் மீ ட்டும் சொல்லுதல் நியாயமில்லை.அதனால் ,நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகத்தான் நேரும்’ என்று பாரதி நெஞ்சம் வருந்திச் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் கட்டுரையாளர். பாரதியாருக்கு தியாகராஜ சுவாமிகள் முத்துசாமி தீட்சிதர்   ஆகியோர் மேல் மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது. தியாகய்யரைப் பாரதி ரஸக்கடல் என்றழக்கிறார். தீட்சிதரின் கீர்த்தனைகள்  கங்கா நதி. கம்பீரமானது என்கிறார் பாரதி.   ஆயினும் பாமரர்க்குப்புரியும்படி தமிழில் பாடவேண்டும் என்பதே பாரதியின் விருப்பமாக எப்போதும் இருந்தது.

‘எந்த ஜில்லாவுக்குப் போ,எந்த கிராமத்துக்குப் போ எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால், திரும்பத்திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களையே வருஷக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்’ என்று சாடுகிறார் பாரதி.

‘பொதுப்பள்ளிக்கூடத்திலே சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மற்ற நாகரீக தேசங்களிலே  சாதாரணமாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி சங்கீதம்’ இப்படிப் பாரதி  முத்தாய்ப்பாய்ச் சொல்வதை  ரவிசுப்ரணியன்  குறிப்பிட்டு  இக்கட்டுரையை முடிக்கிறார்.

தி.ஜானகிராமனின்’ நாத மோக உபாசனை’ என்னும் அடுத்த கட்டுரைக்கு வருவோம்.  தி. ஜா வின் சிருஷ்டியில் ரங்கண்ணா  என்னும்   மோகமுள் கதாபாத்திரம்  இசையும் இலக்கியமுமாய், நாத பிந்துவாய்  வாசகனுக்குத்தெரிகிறார். மோகமுள் நாவல் நெடுகிலும் இசை ஒரு தோன்றாத் துணைவனாய் வாசகர்க்கு  அனுபவமாதலை உணரமுடியும்.

‘பிராண பலம் வேணும் , மனோ பலம்,ஆத்ம பலம், எல்லாம் இருக்கணும். எல்லாத்துக்கும் சரீரம் வேணும். ஆனா இதுக்கு சரீரம் ரொம்ப ரொம்ப வேணும், டாப்பா ரொம்ப வேணும்.பிராண சக்தி கண்ணுக்குத்தெரியாது. அதைத்தான் முரட்டுத்தனமா  வளர்த்தாகணும். ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக்கடுக்கன் வேணும் போலிருக்கும்,வர்ணம் வந்தா மயில்கண் வேஷ்டி, மல்லுச்சட்டை., கீர்த்தனம்  வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும்.’ தி.ஜா வாசகனை அசரவைத்துவிடுவார்.

’மோகமுள்ளில்  புரளும் மொழியின் சரளம் அறுபதுகளில் சுழித்தோடிய காவேரி ஜலம். தன் பெருக்காத மார்பைப்பிடித்து பிடித்து அடிக்கடி ரகசியமாய் வருடிப்பார்க்கிற ருதுவானவளின் கை போல இயல்பாய் வந்து வந்து  செல்லும் காமம். நம்முள்ளிருக்கும் கசடுகளை நோக்கி நீளும் கேள்விகள்  இயற்கையின் ஏகாந்தம் என்று சொல்லித்தீருமோ மோகமுள்’ என்கிறார் கட்டுரையாளர்.

இப்புத்தகத்தின் பின் இணைப்பாக  ரவி சுப்ரமணியனின்  இரண்டு  நேர்காணல் கட்டுரைகள். ஒன்று  சுவாமிநாத ஆத்ரேயனுடன்.   தி.ஜானகிராமன் பற்றி   அவர்   சுழித்தோடும்  காவிரிபோல் பொங்கிப்பொங்கிப்பேசுகிறார்.

‘அவர் (.தி.ஜா)  வந்து சம்பாஷ்ணயையே சங்கீதமாக்கிப்புடுவார் எம்ட்டன் லயத்தையே  சங்கீதமாக மாத்தி –சங்கீதமா, லயமா, பாவமா, வார்த்தையான்னு தெரியாம ஒண்ணுக்கொன்னு,  மலைத்தேனும் பசும்பாலும் குடிக்கும் சூட்டில் கலந்தாற்போல, செய்ஞ்சு பதமா  தர  வித்தை, அவர்கிட்ட குடிகொண்டிருந்தது’

கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா’ என்கிற தலைப்பில் நெய்வேலி சந்தானகோபாலனுடன்  அடுத்த ஒரு நேர்காணல்.  உங்களுக்கு ஒரு சான்று சந்தான கோபாலினின் பதிலிலிருந்து.

‘தியாகராஜ சுவாமிகள்லாம் பொறக்கறதுக்கு மின்னயே தமிழ் நாட்ல் தமிழிசைதான் இருந்திருக்கு. அதைத்தான நம்ம முன்னோர்லாம் பாடிண்டு இருந்துருக்கா? சரபோஜி வந்தப்புறம்தானே தெலுங்கு அவ்ளோ பிராபல்யம் ஆயிருக்கு………  தமிழிசைதான் முதல்ங்கிறதுல , மூத்ததுங்கறதுல  இங்க யாருக்கும் அபிப்ராய பேதமில்லே!

ரவிசுப்ரமணியனின் இந்தப்புத்தகம் தமிழ் படைப்புலகம் ஆழ்ந்து வாசிக்கவேண்டிய ஒன்று. வாசகர்களின் புரிதலை ஆழப்படுத்திட இத்தகைய புத்தகங்களின் வாசிப்பு கட்டாயம் என்பதுவே  என் பணிவான அபிப்ராயம்.

-----------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செவிநுகர்க் கனியது - சிறுகதை

 

 

’செவிநுகர்க் கனியது’  -                                         

 

 

 

பார்க்கடல் துயிலும் பரந்தாமா,    நின்னை  வணங்குகிறோம்.

 ‘யாரது  விளிப்பது  என்னை,  இத்தனை வைகறைப்போதில்’

‘யான் திருவள்ளுவன் என்னோடு என்  இணையாள் வாசுகி’

‘வாரும் வள்ளுவரே  தமிழ்க்கவிஞர்தானே நீர்,  ’துயிலும்’  என்று ஓர் அடைமொழி கொண்டு விளித்தீர் ஏனோ?

‘அரிதுயில் தங்களது,  பாற்கடல் தானே தங்கள் பள்ளி’

‘ஆம்    சரித்தான்  நீர்  தொடரும்’

‘மீண்டும் எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்   யான் தமிழ்க்கவிஞன் உண்மை’.

‘நீவிர் எக்காலமும்  பூலோக  மக்கள் நலம் விரும்பி.  உம்மை யாம் அறிவோம். நீவிர் இருவரும்  இவ்விடம் வந்ததற்குக் காரணம்?

‘நான் திருக்குறள் என்னும் அறநூல்  ஒன்றை  எழுதி வைத்துவிட்டு வந்தேன். பூலோகக் காலகணக்கில் ஈராயிரம் ஆண்டுகள் முடிந்து போயின.’

‘ஆம் காலத்திற்கு  நாம் எல்லோரும் கட்டுப்பட்டவர்கள்.  ஆகவேண்டியது ஆகத்தான் செய்யும்’

‘என் தமிழ்நிலத்து  மக்கள்  யான் எழுதிய  திருக்குறள் புத்தகத்தை வாசித்து விட்டு அதன்படி எப்படி எப்படியெல்லாம்  நெறியோடு வாழ்கிறார்கள். இன்னும்   இந்த ஜடாமுடியனை நினைவில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களா. நான் சொல்லிவிட்டு வந்த  குறள் அறம்  மக்களால் எப்படி கொண்டாடப்படுகின்றது.     இன்றைக்குத் திருக்குறளை  வியாக்கியானம்  எப்படிச்  செய்கிறார்கள். கற்றதைப்  பெற்றதை  வைத்துக்கொண்டு  எப்படித்தம்  வாழ்க்கையை செம்மையாக  நடத்துகிறார்கள் என்பதறிய மிகுந்த ஆவலாக உள்ளேன்.’

‘சரி வள்ளுவரே, வாசுகி உனது செய்தி’

‘எனது கணவர் எங்கு  ஏகினும் அவரோடு இணைந்து செல்வதே   யான் செய் தவம். எனக்கென்று பிரத்யேகமாய் விருப்பம்  எதுவுமில்லை.’

‘ வாசுகி நீ எப்போதும் சொல்வது தான் இது. அவசியம் பூவுலகம் சென்று பார்க்கத்தான் வேண்டுமா’

‘ஆம் இறையே. எம் விருப்பம் அது’

‘அது வேண்டாமே என்று நினைத்தேன். வைகுண்டம் ஏகியபின்னும் உமக்கு பூர்வாசிரம  வாசனை ஏனோ  தொடர்கிறது.பிரமனிடம் இதற்கு யாது காரணம் என்பதைக் கேட்டுத்தான் தெளிய வேண்டும். புண்ணிய பாவ இருப்புக்கணக்குகள் பிரமனின் கணக்கதிகாரி சித்திராகுப்தன் வைத்துக்கொண்டிருக்கிறான். அவனை நான்  எதுவும் கேட்கவும் முடியாது. அவன் எனக்குப்பதில் சொல்லவும் மாட்டான். பணியில் நேர்மையாளனை கடவுளர்கள் கூட  அசைத்துப் பார்க்க முடியாது.’

’ஒரே ஒரு முறை என்னை நீங்கள் தயைகூர்ந்து பூவுலகம் சென்றுவர அனுமதிக்க வேண்டும் தாமோதரா. உன்னைத்தாள் பணிகிறேன்.’

பரந்தாமன் தேவ கணங்களை அழைத்தான். அவர்கள் உடன்  வந்து வாய்பொத்தி திருமால்  கட்டளைக்குக் காத்திருந்தார்கள்.

‘தேவ கணங்களே. ஒரு காரியம் செய்யுங்கள்.’

‘உத்தரவு பேரருளே  உம்மை வணங்குகிறோம்’

‘இதோ பாருங்கள். தமிழ்க்கவிஞர் திருவள்ளுவர். அவரின் துணைவி வாசுகி. இவர்கள் இருவரையும்  பாரத கண்டத்துத் தமிழ்நாடு அழைத்துச்சென்று  இவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலை அவர்களோடு தொடர்பு உடைய ஊர்களை  அங்கு வாழ்கிற  மக்கள்  இவர்கள் நினைவுகளை  இன்று எப்படிப் போற்றுகிறார்கள் என்பதைக் காண்பித்து வாருங்கள். உங்களின் வருகையைப்  பூலோக வாசிகள் யாராலும் காணவே முடியாது. எந்த இன்முகத்தோடு இங்கிருந்து புறப்படுகிறார்களோ அந்த இன்முகத்தின் மாற்று குறையாமல் இவர்களைத்திரும்பவும் வைகுண்டம் அழைத்துவந்து விடவேண்டும். கட்டளை. கணங்களே.’

‘மிக எளிய பணி கொடுத்துள்ளீர்கள்.  அரும்பெருங்கடவுளே. யாம்  உடன் செயலில் இறங்குவோம்.  இக்கணம் விடைபெற்றுக்கொள்கிறோம். உத்தரவு’ தேவகணங்கள் திருவள்ளுவரையும் வாசுகி அம்மையாரையும் ஒரு புஷ்பப்பல்லக்கில் அமரவைத்து பூவுலகம் கொண்டு சென்றனர்.

’இறங்குங்கள் வள்ளுவரே, பார்த்து இறங்குங்கள் மைலாப்பூர் இது’

‘யான் பிறந்த திருப்பதி’

மைலாப்பூரின் மாடவீதிகளில் ஒரே மக்கள் கூட்டம். அறுபத்து மூவர் திருவிழா நிகழ்வு. சைவ நாய்ன்மார்கள் அறுபத்து மூவரோடு திருவள்ளுவ நாயனாரும் அறுபத்து நான்காவது நாயன்மாராய் உலா கொண்டு செல்லப்படுகிறார்.

‘பார்த்தாயா வாசுகி என்ன மரியாதை என்ன மகத்துவம்’

‘பார்த்தேன். கண்கொள்ளாக்காட்சி. மக்கள் உம்மைத் தெய்மாக்கித்தொழுகின்றனர்.  எனக்கு நிறைவு’

‘யான் எழுதிய நூலை என்னருகே காணோமே’

‘மக்கள் திருக்குறளை  அவரவர் மனங்கொண்டு சேர்த்தபின் நூல் எதற்கு’

‘அதுவும் சரிதான்’

குறளை யாரும் ஓதாமல் கூட்டம் நகர்கிறது. வள்ளுவர் அதனை மனக்குறிப்பில் எழுதிக்கொள்கிறார்.

தேவ கணங்கள் வள்ளுவரையும் வாசுகியையும் ‘வாருங்கள் போகலாம்’

என்கின்றனர்.

‘அடுத்த வருவது  திருவள்ளுவர் கோயில்’

இருவரும் பல்லக்கில் அமர்ந்துகொள்ள  அது வான் வழியே பயணிக்கிறது.

‘யாருக்கும் நாம் தெரிய மாட்டோமா’

‘ஆம் யாருடனும் பேசவும் முடியாது. கண்கள் பார்க்கும் .காதுகள்  கேட்கும்  தமிழ் கேட்கும் அவ்வளவே’

திருவள்ளுவர் கோயில் வாயிலில் பல்லக்கு நிற்கிறது. இருவரும் இறங்கிக்கொள்கின்றனர்.

‘உங்களுக்கு ஒரு திருக்கோவில் பாருங்கள்’

’அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் மைலாப்பூர் சென்னை 4’  வள்ளுவரே வாய்விட்டு படித்தார். நம் இருவரது சிலை பார்த்தாயா வாசுகி. எத்தனை மகத்துவம்.  கைலாய நாதன்  கச்சி ஏகாம்பரன்  மைலாப்பூரில் அவன் திருக்கோயிலுக்குள்ளே  நமக்கும் ஒரு சந்நிதி.’

‘’ஜடாமுடியும் தாடியும் உமக்கு இருப்பதைப்பாருங்கள்’

‘ஆமாம் வாசுகி’

‘நீட்டலும் வேண்டா மழித்தலும் வேண்டா என்றீர்கள்தானே’

‘அத்ற்கென்ன அதனை வைத்தா மக்கள் நம்மைப்பார்க்கிறார்கள்’

‘அது இல்லை. ‘

‘ கருவறை வாயிலின் இருபுறமும் தூண்களில் எழுத்தாணி ஓலைச்சுவடி, ஆணும் பெண்ணும் கவனமாய்ப் படிக்கிறார்கள், கீழே பார் வீணை அதற்கும் கீழே  தாமரை மலர் அம்மலர் மீது யான் எழுதிய குறள் கருங்கல்லில் அற்புதமாய் வடித்து இருக்கிறான்  சிற்பக்கலைஞன். .என் சிலை உன் சிலை நமக்கு நிவேதனம் அபிஷேகம்  கல்பூர ஆராதனை எல்லாம்’

‘வீணை இங்கெதற்கு நாதா’

‘வீணை மனித இசைஞானத்தின் வெளிப்பாட்டு உச்சம்.  உள்ளத்தூய்மை மாற்று குறைந்தால்  வீணை வாசிப்பில் அது பிரதிபலிக்கும். பூவுலகில் பிறந்த எவரும்  வீணையை வாசிக்கலாம். மனிதன்  சிருஷ்டித்த  இன மத நிற கலாச்சார பேதங்கள் இசைக்கருவி முன்னே சாம்பலாகி விடுகின்றன. ’

 ‘தாமரை மலர் மீது குறள்’

‘உலகிற்கு ஆதாரம் நீர்.  நீர் வளமை உரைப்பது தாமரை. இயற்கையின் அமைப்பும் உயிர்களின் வாழ்க்கையும்  அறத்தைத்தாங்கி நிற்கின்றன. ஆக  குறளைத் தாங்குகிறது தாமரை.

‘வாருங்கள்  இன்னும் வள்ளுவர் கோட்டம் நாம் பார்க்கவேண்டுமே’

‘ ஏது வள்ளுவர் கோட்டமா’

‘இங்கு அருகிலேதான் உங்களுக்கு ஒரு நினைவுச்சின்னம் கல்லிலே எழுப்பியுள்ளார்கள்’

இருவரும் பல்லக்கில் அமர்ந்து கொள்கிறார்கள். பல்லக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் வாயிலிலே நிற்கிறது. தேவ கணங்கள் அவர்களை வள்ளுவர் கோட்டத்துள்  பைய அழைத்துச்செல்கிறார்கள்.

‘வாசுகி பாரேன் திருக்குறள் கருங்கல்லிலே பொறிக்கப்பட்டுள்ளது.  எத்தகைய சாதனை’

’ஒருவரின்  கவிதைப்படைப்பு கல்லிலே முழுவதுமாய் வடிக்கப்பட்டது இப்புவியுலகில் திருவள்ளுவருக்குத்தான்’ வாயிலில் வைக்கப்பட்டுள்ள பலகையை வாசுகி வாசித்துக்காட்டினார்.

’திருவாருர் தேர், கல்லிலே, அதனுள்ளே உமது அழகு சிலை.’

‘நல்ல காலம் இங்கே பூசை வழிபாடு இல்லை’

இருவரும் ஒரு பெயர் தெரியாத மரத்தின் கீழ் அமர்கின்றனர்.

‘நான் பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதிவிட்டு விடைபெற்றுக்கொண்டேன்.’

‘ இந்நிலத்து அறிவார்ந்த சான்றோர்  இன்றுவரை  திருக்குறளைக்காத்து  அதனைக்காத்து கல்லிலே நிறுவிவிட்டனர். மகிழ்ச்சி’ வாசுகி சொன்னார்.

’தேவகணங்கள் ஆயிற்றா புறப்படலாமா’ என்றனர்.

 ’அத்தனை அவசரமாக நாம் இப்போது எங்கே செல்கிறோம்’

‘குமரிக்கு’

‘அங்கென்ன’

பல்லக்கில் மெதுவாய் அமருங்கள். பார்க்கலாம்’

வான் வழி மலர்ப்பல்லக்கு மேகவழிச்சென்று கன்னியாகுமரி முனையில் திருவள்ளுவர் சிலை அருகே நின்றது. கடற்காற்று வேக வேகமாய் வீசியது. அலைகள் கோபமாய் கரைமோதிக்கொண்டு இருந்தன.

‘பாருங்கள் அற்புதத்தை’ என்றனர் தேவ கணங்கள்.

‘நான்  எனது    திருக்குறளில் எத்தனை அதிகாரம் எழுதினேனோ அத்தனை அடி உயரத்தில் எனக்கு கற்சிலை.  யாரோ ஒரு மனிதனுக்கு எத்தனைப்பெரிய மனம் பார்த்தாயா’

வாசுகி ஒரு பலகையில் எழுதியிருந்ததை வாசித்தார்.’ இப்பூவுலகில் ஒரு கவிஞனுக்கு இத்தனை உயர  மரியாதையை வேறெங்கும் நீங்கள் காணமுடியாது’

வள்ளுவருக்குக்கண்கள் பனித்தன.

இருவரும் கடற்காற்றை வாங்கியபடி அங்கேயே சற்று அமர்ந்தனர்.

செய்தித்தாள் விற்பவன் தோளில் அவைகளை அடுக்கிக்கொண்டு விற்றுக்கொண்டே போனான்.

‘வாசுகி அது ஒன்று வேண்டுமே’

‘ எது அது. செய்தித்தாளா வேண்டும்’ தேவகணங்கள் உடன் ஓடி வந்தனர்.

‘எப்படி வாசிப்பீர்கள்   வாழ்ந்து  ஈராயிரம் ஆண்டுகள் முடிந்தபின்னும் அவ்வெழுத்தை உங்களால்  வாசிக்கத்தான்  இயலுமா’

‘தேவகணங்களே அது   ’செம்மொழி  தமிழ்மொழி’

என்றார் வள்ளுவர்.

தேவ கணங்கள் வள்ளுவருக்கு ஒரு நாளேடு வாங்கி வந்தனர். வள்ளுவர் நாளிதழைக்கையில் வாங்கினார். வாசித்தார்.

ஒரு செய்தியை வாசித்து விட்டு நாளிதழை  தூர  வீசினார்.

‘தேவ கணங்களே புறப்படலாம்’ என்றார் வள்ளுவர்.

பதறிப்போனார் வாசுகிஅம்மை.

‘என்ன படித்தீர்கள் இத்தனைக்கோபம்’

‘நீயும் படி வாசுகி’

‘புதுக்கோட்டை அருகே வேங்கை வாயிலில் தாழ்த்தப்பட்டோர் வாழ்விடத்துக்கு மய்யமாய் அமைந்து நிற்கும்  மேல்நிலை குடி நீர்த்தொட்டியில் மனித மலத்தை வீசிவிட்டு மாயமாகிய பேர்வழியைத் தேடுகிறது  காவல் துறை’

‘மாயமாகிய மனிதனை என்று போடாமல் விட்டார்களே’ என்றார் வள்ளுவர்.

‘நம்  உற்றார் ஊறவு வாழும் பகுதிதான் அது’

‘ ஆம் வாசுகி. காலம் போனது. என் அறநூல் இன்னும் இம்மக்களை அறவழியில் கொண்டு சேர்க்கவில்லையே. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று எழுதினேன். ஈராயிரம் ஆண்டுகளாய் அந்தச்சேதி மக்களைப்போய்ச்சேரவில்லையே. தமிழ்க்குடியா  இன்னுமா இப்படி. வாசுகி என் நெஞ்சு துடிக்கிறதே,  என் செய்வேன் வாசுகி’

கண்கள் பனித்தது கண்ட தேவகணங்கள்’ மலர்ப்பல்லக்கைத்தயார் செய்து இருவரையும் அமரச்செய்தனர். ‘நீவிர் மனம் நொந்தால், உமது கண்கள் ஈரமானால் நாங்கள்  வைகுண்டவாசன் திருமாலுக்குப்பதில் சொல்லியாகவேண்டுமே அய்யனே’ என்றனர் தேவ கணங்கள்.

அடுத்த கணம்  அவ்விருவரோடு வைகுண்டம் தொட்டது மலர்ப்பல்லக்கு.

திருமால்  வைகுண்டதர்பாரில் அமர்ந்து இருந்தார். திருமகளும் உடன் தான் இருந்தார்.

’வாரும் வள்ளுவரே. என்ன முகம் ஒரு வாட்டமாய்’

‘பரந்தாமா. நான் என் மக்களைக்காணச்சென்றேன். ஆனால் ஆனால்..’

‘நான் அறிவேன் வள்ளுவரே. யாம்  உனக்குச்சொல்ல விரும்பினோம். ‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு , சொன்னவர் நீர்.  ஆக  நீர் உமது கண்களால் எதனையும்  பார்த்து வருதல் சரி என்று விட்டு விட்டேன். ஆயினும் நீவிர் சற்றுக்கலங்கித்தான் போயிருக்கிறீர் இல்லையா’

‘ஆம் பேரருளே’ வாசுகிதான் பதிலுரைத்தார். வள்ளுவரால் பேசமுடியவில்லை.

வைகுண்ட வாசிகள் கண் கலங்க வாய்ப்பேது. அது இங்கு நிகழாத விடயம். ஆக தேவ கணங்கள் உடன் உம்மைக்கூட்டி வந்துவிட்டனர் அது வரையிலும்  அவர்கள் தப்பினார்.

தேவகணங்கள் பாற்கடலோனை வணங்கித்துதித்து நின்றனர்.

‘ஒரு செய்திக்கே இப்படியா வள்ளுவரே’

‘வேண்டாம் அருட்கடலே என்னால் இயலவில்லை. மன்னியுங்கள்’ என்றார் வணங்கியபடி வள்ளுவர்.

‘எத்தனை அழகு    எத்தனை இனிமை.  இக்கணம் உமது பேச்சில்  எம் நாயகா  பெருமானே’ என்றார் திருவடி அமர்  திருமகள்.

’தமிழ்க் கேட்டாய் நீ.  செவி நுகர் கனியது அறியாயோ நீ’ ஆகத்தான் அத்தனை இனிமை என் இணையாளே’  கேசவம் விடை சொன்னது.

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tuesday, August 12, 2025

இங்கும் அங்கும் கவிதை நூல்

 

இங்கும் அங்கும்    கவிதை நூல்

 

எஸ்ஸார்சி என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் எஸ்.ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூர்க்காரர். சுந்தரேசன் மீனாட்சி  இணையருக்கு 04/03 1954 அன்று பிறந்தவர். அண்ணாமலை, மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.

இக்கவிதைநூல்  எஸ்ஸார்சியின் 36 வது நூலாகும். மனித நேயம் நிறைந்த மார்க்சியத்தின்பால் ஈடுபாடு  உடையடவர். படைப்பு இலக்கியங்களில் மனித மாண்பு தேடுபவர். குறிஞ்சிவேலனின் திசை எட்டும் மொழிபெயர்ப்பு இதழோடு நெருக்கமாய்ப் பயணிப்பவர். தமிழக அரசு திருப்பூர் இலக்கியச்சங்க விருது  சேலம் தாரையார் விருது என  அனேக விருதுகளைப்பெற்றுள்ளார். இவருடைய படைப்புகள் சில  பல்கலைக்கழகங்களில் பாட நூற்களாக இடம்பெற்றுள்ளன.

‘இங்கும் அங்கும்’  எஸ்ஸார்சியின் ஆறாவது கவிதை நூல்.


Sunday, August 10, 2025

கவிஞர் பி கே பி

 

 கவிஞர் பெரியசாமியின் கவின்மிகு கவிதைப்பயணம்

 

’வாழ்வை வெற்றிகொள்’ என் இனிய நண்பர் கவிஞர் பி.கே. பெரியசாமியின்  இரண்டாவது கவிதைத்தொகுப்பு.  நூற்றுக்கு மேற்பட்ட முத்தான கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைப்பேழை இது .மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் இரண்டிலும் அவருடைய  கவித்திறன் மிளிர்வதை  நெருங்கிய வாசக நண்பர்கள் அறிந்திருக்க முடியும்.

 ’வாழ்வை வெற்றிகொள்’    கவிஞர் இத்தொகுப்பில் படைப்பு முழுவதினையும் புதுக்கவிதையாகத் தந்திருக்கிறார்.  வாழும் சமுதாயத்தின் மீது  கவிஞருக்கு இருக்கும்  ஆரோக்கியமான விமர்சனப் பார்வையை  வாசகன்   இங்கே அனேக தருணங்களில் தரிசிக்க வாய்க்கிறது.

தமிழ் மொழி மீது ஈடில்லாப் பற்று, சாதிக்கொடுமைகளால் மக்கள் படும் அவதி குறித்த  தர்மாவேசம், பெண்டிரை மேல் நிலைக்குக் கொண்டுவருதலில் காட்டும் கூடுதல் அக்கறை, ஒரு  சமூக ஞானியை  அப்பழுக்கற்ற ஒரு நேர்மையாளரை, மனித நேயம் மிக்க  ஒரு சான்றோரைத்தேடிக்கண்டுவிடத்துடிக்கும் இலக்கோடு கவிதைப்பயணத்தைத்தொடருகிறார் கவிஞர்.

’அட என்ன நடக்குது நாட்டுல’- என்னும் முதல் கவிதை ஓசை நயம் மிக்கது. இது சமுதாயத்தில் அன்றாடம் காட்சியாகும் நடப்புக்களை பட்டியலிடுகிறது.

‘தட்டிப்பறிச்சவன் மேட்டுல அத

விட்டுக்கொடுத்தவன் ரோட்டுல’  

சாலையில் பறிதவிப்பவனுக்காகக்குரல் கொடுக்கிறார் கவிஞர். அரசாங்கத்தின் எந்த சேவையையும் ஒரு  எளியோன் பெற்றுவிடுதல் சாத்தியமே இல்லை. ஆயிரம் பிரச்சனைகள் தொடரும் குறுக்கீடுகள். இது பற்றிப்பேசுகிறது ‘அருகதை’ என்னும் கவிதை.

‘கோப்பிலே போட்ட பாதிக்கையெழுத்திற்கும்

போடப்போகும் மீதி கையெழுத்திற்கும்

பேரம் பேசும் அதிகாரிகள்’

அறிவியலின் ஆட்சி இன்று  இணையதளத்தை பாரெங்கும் சாத்தியமாக்கியிருக்கிறது.ஆனால் மனித உறவுகளோ நொறுங்கிப்போய்விட்டன.

கவிஞரின் மனம் கனமாகிறது இப்படி.

’உனது இந்தக்கண்டுபிடிப்பால்

உலகம் மட்டுமா சுருங்கிவிட்டது.

உள்ளமும்தான்.’

நாட்டுவிடுதலைக்காகத் தம் இன்னுயிர் ஈந்த தியாகிகள் அந்தமான் சிறையிலே  செங்குருதி சிந்தினர். செக்கிழுத்தினர். கவிஞர் அந்தமான் பகுதியில் கணிசமான காலம் தொலைபேசித்துறையில் கணக்குஅதிகாரியாய் பணிசெய்துள்ளார் என்பது ஒரு சிறப்புச்செய்தி. கவிதை இப்படி வருகிறது.

’செக்கிலே எண்ணெய் பிழிய நீ ஏவப்பட்டாயா?

இல்லை!

நீயே எண்ணெயாய் பிழியப்பட்டாய்’.      

குழந்தையாய் வாழ்ந்த நாட்கள் மீண்டும் வராதா என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருப்பதுதான். கூட்டாஞ்சோறு கூடி உண்டு களித்த நாட்கள் திரும்பவும்  வராதுதான். கவிஞர் இதனை  ஆழ்மனதில் எண்ணிப்பார்க்கிறார்.

‘அந்த நாள் வருமென்று

ஆவலாய் எதிர்பார்க்கிறேன்

பிள்ளைப்பிராயத்திலே

பெற்றதொரு பெருமகிழ்ச்சி’

என்கிறார் கவிஞர்.  கவிஞரின் தாய்  அண்மையில் மறைந்துபோகிறார். நிறை வயது வாழ்ந்து விடைபெற்றவர்.  ‘தாயே’ என்கிற ஓர் கவிதை எழுதுகிறார். எதிர் நிற்கும் பெற்ற மகனின் உரு அன்னையின் கண்ணுக்குத்தெரியாது போகிறது.

‘என் உருவம் தெரியாதபோதும் என்னை

உண்மையாய் நேசித்த ஒரே ஜீவன்’  என்று பெற்ற தாயுக்குப்பெருமை சேர்க்கிறார்.

கவிதைப்புத்தகத்துக்குத் தலைப்பாக வரும் கவிதை ‘வாழ்வை வெற்றிகொள்’.  வாசகர்  உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்கும் படைப்பாக மலர்ந்திருக்கிறது.நம்பிக்கைதான் வாழ்க்கை.நேர்மறையான எண்ணங்களே மனித வாழ்க்கையின் அடித்தளம்.

‘இன்றைய நூற்றாண்டின்

இணையற்ற மனிதனே

நம்பிக்கை கொண்டிரு

அதுதான்

பூமிப்பாறையைப்

புரட்டிடும் நெம்புகோல்’.

கவிதை வாசகனுக்கு  வெளிச்சம் பாய்ச்சுகிறது. வாழ்க்கைச்சவால்களை எதிர்கொள்ள அழைக்கிறது.படைப்பை படியுங்கள், தீர்க்கமாய் விமரிசியுங்கள் வாசகர்களே!

அழகான கவிதைகள். ஆழமான கருத்துக்கள். படிக்கப்படிக்க ஓர் நிறைவை அனுபவமாக்கும் பெரியசாமியின் கவிதைமலர்கள். தொடர்க கவிஞரே உமது வெற்றிப்பயணம். வாழ்த்துகள்பலவோடு.

----------------------

                                                                                                          

நாய்வால் முன்னுரை

 

வணக்கம்

‘நாய்வால்’ . இது என்னுடைய பன்னிரெண்டாவது  சிறுகதைத்தொகுப்பு.

.ஒரு எழுத்தாளன் சொல்லத் தேர்ந்த ஒரு விஷயத்தை வாசகர்க்கு  நச்சென்று சொல்லிவிட ஏற்ற வடிவம் சிறுகதையே.. ஒரு சிறுகதையை எழுதி முடித்த பிறகு அந்த எழுத்தாளன் அடையும் நிறைவே அதன் வெற்றி.  வாசகர்களால் அல்லது இலக்கிய அமைப்புகளால்  அப்படைப்பு  எப்படிப் பார்க்கப்படுகிறது என்பது அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் அரிய உற்சாகம். அன்றாட வாழ்க்கையில்  ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளும் சாதாரண விஷயமே சிறுகதைக்குக் கருவாய் அமைந்து சிறக்கிறது. சிறுகதையைப் படிக்கின்ற போது வாசகன் எந்தக் குறுக்கீடையும் சந்திக்கக்கூடாது  படைப்பின்  ஆற்றொழுக்கான நடை வாசகனைக் கைப்பிடித்து ஒய்யாரமாய் அழைத்துச் செல்ல செல்லவேண்டும்  என்பதனை  நான் எதிர்பார்க்கிறேன். என் சிறுகதைகள்  அறிந்துகொள்ள வேண்டிய சிறு செய்தி ஒன்றையேனும்  வாசகனுக்குக் கடத்தவேண்டும்,.

 மக்கள் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடும்  விபரம்  போதாச்  சகோதரர்களோடும்  உழன்று துணை நிற்பதையே வாய்த்திட்ட   நற்பேறாகக் கருதுகிறேன். மனிதனை நெஞ்சுயர்த்தி  நடக்க வைத்த  மார்க்சிய நெறியின் வெளிச்சத்தோடு,  நமது  இந்திய மண்ணின் இயல்பான மனிதநேயம், தமிழ் இலக்கியத்தின் ஈடில்லா அற வளம் இவை  எனது படைப்பிற்கு  எப்போதும் ஆதாரமாகிறது.

எனக்கு நேர்ந்த நிகழ்வுகள் என்னோடு உறவில்  நட்பில் இருப்பவர்கள் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் பெரும்பாலும் என் படைப்பில்  சிறுகதையாய்  உருக்கொள்ளும். அவைகளோடு எனது கற்பனையையும் கட்டாயம்  சேர்ந்து மெருகூட்டும். அப்படித்தான் எனது எல்லாச் சிறுகதைப்படைப்புக்களுமே.

எனது சிறுகதைகளை வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த இலக்கிய இதழ்கள் சொல்வனம் தினமணிக்கதிர் சங்கு  நவீன விருட்சம்  குவிகம் தமிழ்ப்பல்லவி திண்ணை சிறகு இலக்கியச்சிறகு பேசும் புதிய சக்தி ஆகியவற்றிர்க்கு நான் மிகுந்த நன்றியுடையேன்.

இச்சிறுகதைத்தொகுப்பைச் சிறப்பாய் வெளியிட்டு உதவியப் பெருமனதுக்காரர் நாற்கரம் பதிப்பகம்  நல்லு. ஆர். லிங்கம் அவர்கட்கு எனது நன்றிகள் பல.

 எனது  உடன்பிறவா சகோதரர்கள்  V. ரகுநாதன்,  K.R  மாத்ருபூதம்   ஆகியோரின் அன்பிற்கு  இப்படைப்பு சமர்ப்பணம்.

                                                                                                                                                   மிகவும் அன்புடன்

                                                                                                                                                      எஸ்ஸார்சி