Friday, June 28, 2024

இணைய கால கவியரங்கம் 21/6/24

 21/6/24   சொல் புதிது


இணயக்கவியரங்கில்

வாசித்த கவிதை 


எஸ்ஸார்சி 



 1 வாழ்க்கை



கல்விக்கூடங்கள் 

சான்றோர்களை உருவாக்கவில்லை 

அறிவாளிகளை உருவாக்கி அனுப்பி வைக்கிறது 

அறிவின் பயனோ

என்ன சம்பாத்யம் உனக்கு 

என்ன சொத்து உனக்கு 

என்பதாய் முடிந்து போகிறது

நிறைய காசுக்கு நிறைய அறிவு

நிறைய அறிவுக்கு நிறைய காசு.

கோல்ட் மெடல் வாங்கியவர்களும்

காலம் முடிவுற்றால்

மயிர் வெளுத்து 

செத்துப்போகிறார்கள்

அவ்வளவே.



2  வினாக்கள் 


வில்லை எடு நாண் பூட்டு

அர்ச்சுனா என்ன தயக்கம்

சொன்ன கண்ணன்

ஒட்டு மொத்த சமுதாய நலனுக்காய்

ஏதும் சொல்லவில்லை.

பூபாளம் குறைப்பதுவா நோக்கம்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக்காட்டு

சொன்னார் சிலுவை யேசு

பாலஸ்தீனர்கள் ஆண்டுக்கணக்காய்

கன்னத்தில் அறை மட்டுமே

வாங்கி  வாங்கி நிற்கிறார்கள் இன்னும்


அவன் விரும்ப அது உனக்கு

அவன் மறுக்க எவன்தான்

அளிப்பான்

என்கிறது இஸ்லாம் 


அன்றாடம் ஆப்கானிஸ்தானில்

அரங்கேறும் அனைத்து அத்துமீறலுக்கும்  

அவலத்துக்கும்

தீர்வு

யார் சொல்வது


விடை தெரியா வினாக்கள் ஏராளம் வரலாற்றில்.


3 தெளிவு



கையடக்க மாய் லேப்டாப்பும்

சொகுசு அலைபேசியும் 

ஆட்சிக்கு வந்த பிறகு

மனித உறவுகள்

கேலிக்குள்ளாயின


கையில் காசும்

உடலில் வலுவும்

குறையாத வரை

மனிதர்க்கு எதுவுமே பிடிபட

மறுக்கிறது


அடுத்தவர் ஆதரவோடு

மட்டுமே வாழ்க்கை

என்கிறபோது

விஷயங்கள் தெளிவாகும்

ஆயின் துரும்பையும்

கிள்ளத்தான்   வாய்க்காது 



4   மானுடப் பிறப்பு


நாம் நினைப்பதுவே

அடுத்தவர் நினைக்கவேண்டும் 

என்றெண்ணுவது போதாமை


நாம் செய்வதுவே அடுத்தவன் செய்யவேண்டும் என்றெண்ணுவது பேதமை


நாம் நினைப்பதுவும் செய்வதுவும் 

இன்னொருவனுக்கு மகிழ்ச்சி தருமானால்

அதுவே உரைகல்

நம் மானுடப்பிறப்புக்கு.


சிறுகதை - கணக்கு

 

 சிறுகதை  -கணக்கு                                                                                  

பெருவரப்பூர் அய்யங்கார் என்றால்தான் எனக்குத்தெரியும். அவருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் என்னவோ இருக்கலாம். யாருக்கும் தெரியாது.  எங்கள்  கிராமம் தருமங்குடிக்கு  அவர் அடிக்கடி  வருவார்.பண்ணையார் வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருவார். பண்ணையார் வீட்டுக் குழந்தைகளில் மூத்த பிள்ளையின் படிப்புக்கு  அவர் கூடுதலாய்ப் பொறுப்பு எடுத்துக்கொண்டவர். பண்ணையார் வீட்டில் அந்த மூத்த பிள்ளைதான் வக்கீலுக்குப் படித்தார்.

பெருவரப்பூர் தருமங்குடியிலிருந்து மூன்று கிலோமீட்டர் இருக்கலாம். ஊரின் தெற்குவெளி வயலில் இறங்கி வரப்பு வரப்பாய் நடக்கவேண்டும். எங்கு பார்த்தாலும்  பச்சைப்பசேல் என்று நஞ்சை நிலங்கள்.  இரண்டு கிராமங்கள் குறுக்கே  வரும். தட்டோன் ஓடை, ஆலம்பாடி என்பவை அவை. பெருவரப்பூர் அய்யங்காருக்குத் தான் பிறந்த பெருவரப்பூரில் யாரும் இல்லை. குழந்தையாய் இருக்கும் போதே   அவர் தாயை இழந்தார். அப்பாவோடு  பாட்டி கூட மாட இருந்து குழந்தையை வளர்த்தார்.தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித்தர தருமங்குடிப் பண்ணையார் பெருவரப்பூர் அய்யங்காரை தருமங்குடிக்கு  அழைத்து வந்தார்.

 ஃபோர்த் ஃபாரம் சிதம்பரம் ராமசாமி செட்டியார் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த பெருவரப்பூர் அய்யங்காருக்கு அப்பா  காலராவில் தவறிப்போனதால் படிப்பு நின்று போனது. ஆங்கிலப் புலமை அய்யங்காருக்கு அபாரம். ஆங்கில எழுத்துக்கள் மணி மணியாய் காட்சி தரும்.  அவர் பேசும் ஆங்கிலத்தில் சொக்கித்தான் அவரைப் பண்ணையார் டியூஷனுக்கு அழைத்து வந்தார்.  கிடைத்த இடுக்கில் அய்யங்கார்  ஜோசியம் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டுவிட்டார். ஜாதகம் கணிப்பதில் நிபுணரானார்.கிரகப்பெயர்ச்சி பலன் அறிய வெள்ளாழத்தெரு ஆச்சிமார்களில் அனேகர் அவரைச் சுற்றிவர ஆரம்பித்தனர்.

பண்ணையாருக்கு மூன்று வேளை உணவு படுக்க இடம், கை செலவுக்குப்பணம் எல்லாம் வேண்டுமே அதனை எல்லாம் பண்ணையார் கவனித்துக்கொண்டார்.தருமங்குடியில் அப்போது பள்ளிக்கூடம் ஏது.  அருகில் சிதம்பரம்தான் பள்ளிக்கூடங்கள் நிறைந்த ஊர். சிதம்பரம் கனகசபை நகரில் பண்ணையாருக்கு ஒரு பெரிய வீடு இருந்தது. குழந்தைகளைப் படிக்க வைக்கவேண்டுமே ஆகக் குடும்பம் சிதம்பரத்தில் இருந்தது.பண்ணையார் சிதம்பரத்துக்கும் தருமங்குடிக்கும் போய் போய் வருவார். டியூஷன் வாத்தியாரான அய்யங்காரும் பிள்ளையோடு தருமங்குடிக்கு வருவார். தருமங்குடிப் பண்ணையாரின் பிள்ளைகள் பள்ளி விடுமுறையில் எல்லாம் கிராமத்தில்தான் இருப்பார்கள். குழந்தை பிறப்பே குறைந்துபோன இந்தக்காலம் போலவா, பண்ணையார் பிள்ளைக்கு ஆண் மக்கள் நால்வர், பெண்குழந்தைகள் இருவர்.எல்லா பிள்ளைகளுக்கும்  தமிழும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்து ’கற்றல்’ என்கிற வண்டியை ஓட விட்டுக்காட்டியது அய்யங்கார்தான்.

தருமங்குடிக்கு வரும்போதெல்லாம் பெருவரப்பூர் அய்யங்கார் எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். மதியம் இரவு என்று இரண்டு வேளை. பண்ணையாரின் வீட்டு ஆச்சி,  அய்யங்கார் சாப்பிட எங்கள் வீட்டிற்கு அரிசியும் தயிரும் அனுப்பி வைப்பார். புரோகிதரான எங்கள் அப்பா காய்கறியும் வாழை இலையும் வீட்டில் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்வார்.

எங்கள் வீட்டுத்திண்ணையில் அய்யங்கார் மதியம்  சாப்பிட்டுவிட்டுத் தூங்குவார். எழுந்து காபி சாப்பிடுவார். காலை வேளை காபி பிள்ளை வீட்டிலேயே முடித்துக் கொள்வார். அம்மா அவரிடம் தன் குழந்தைகளுக்கெல்லாம் ஜாதகம் கணிக்க வேண்டிக்கொள்வார். ஜாதக பலன்களை எழுதி வாங்கிக்கொள்வார். அனேகமாக அய்யங்கார் சொன்னால் ஜாதக பலன்கள் சரியாகவே இருக்கும்.

பண்ணையார் வீட்டு ஆச்சிதான்  ஒரு நாள் அய்யங்கார் வாத்யாரைக் கேட்டிருக்கிறார்.’ இப்படியே போவுறதா காலம்.உங்களுக்கு வயசு  ஆயிகிட்டே போவுது. ஒரு குடும்பம்னு ஆவுறது இல்லையா.  காலா காலத்துல ஒரு பொண்ணு பாருங்க. கல்யாணம் பண்ணிகுங்க. நாளைக்கு உங்களுக்கு வயசு ஆகும். கை காலு சோறும் முடியாம போகும். அப்ப ஒரு சொம்பு வெந்நீர் வச்சி தர ஆளு வேண்டாமா’

‘பார்க்கலாம்ங்க ஆச்சி. அதுக்கு இன்னும் நேரம் வருல’ அய்யங்கார் பதில்.

‘ஊரு உலகத்துக்கே  ஜாதகம் பாக்குறீங்க. உங்க ஜாதகத்த பாத்துகணும்ல’ என்பாள் ஆச்சி.

பதில் ஏதும் சொல்லாமாட்டார். லேசாக சிரித்துக்கொள்வார். அதற்கு என்ன பொருளோ.

பண்ணையார் வீட்டுக்குழந்தைகள் எல்லோரும் படித்தார்கள். வேலைக்குச் சென்றார்கள். கல்யாணம் செய்துகொண்டார்கள். குழந்தை குட்டிகள் பிறந்தன. ஒரு குடும்பம் பல குடும்பங்களாய் மாறிப்போயின. அய்யங்கார்  பிள்ளை வீட்டு எல்லா  வைபவங்களுக்கும் வந்து போனார்.அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கும் கட்டாயம் வருவார். அவருக்குத் தெரியாத விஷயங்கள் உண்டா என்ன. திண்ணையில் அமர்ந்து பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. அய்யங்காருக்குத் தலை நரைக்க ஆரம்பித்தது. நெற்றியில் லேசாக வழுக்கை விழத்தொடங்கியது. அம்மாதான்  மிகவும் கவலைப்படுவார். அய்யங்காருக்கென்று இப்போது இருப்பது பிள்ளை வீடு மட்டுமே. பண்ணையாருக்கும் வயதாகிக்கொண்டே போனது. ஆச்சிக்கும் அடிக்கடி உடம்பு முடியாமல் போனது. அவர்களுக்கே யாராவது ஒத்தாசை செய்தால் தேவலை என்கிற நிலமை வந்தது. யாராயிருந்தாலும் அது இயற்கைதானே.

அய்யங்கார் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்.’ நா இனி இந்த ஊருக்கு அடிக்கடி வர்ரது சிரமம்னு நெனைக்கிறேன். பிள்ளைக்கும் வயசாறது. ஆச்சிக்கும்தான். அவர் குழந்தைகள் தலையெடுத்து அது அது வேற வேற ஊர்னு போயாச்சு. நா இப்ப அவாளுக்கு அனாவசியமா இருக்கலாம். ஆக நா இனி தருமங்குடிக்கு வர்ரது சாத்தியமில்லேன்னு தோண்றது’

‘எங்க போவேள்’

‘பகவானுக்குத்தான் தெரியணும்’

‘இப்பிடி ஒரு பதிலா’

‘ எங்கிட்ட இருக்கற பதிலதான நா சொல்லலாம்’

‘இதுக்குத்தான் ஆச்சி அப்பவே சொன்ன உங்களண்ட’

‘என்ன சொன்னா’

‘ஒரு கல்யாணத்த பண்ணிகுங்கோன்னு’

அய்யங்கார் எப்போதும் சிரிப்பது போல் லேசாக சிரித்துக்கொண்டார். ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லைதான்.

அப்பா இந்த விஷயங்களில் எல்லாம் பட்டுக்கொள்ளவே மாட்டார். அது அம்மா பாடு என்று விட்டு விடுவார். தருமங்குடியில் வயதாகி உடம்பு முடியாமல் போகிறவர்கள் எல்லாம் தினம் தினம் ஒரு முறையாவது எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அம்மா கையால் ஒரு பிடி சாதமாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத்தான் போவார்கள். எத்தனையோ முதியவர்களை அப்படி  நான் பார்த்து இருக்கிறேன். வேலாயுதம் பிள்ளை  தினம் வருவார். முதுகு வளைந்து கூன் விழுந்திருக்கும்.’ரவ வாழ எல கிழிசலு ஒரு உண்ட சோறு ரசம் ஊத்தி குடுங்க’ என்பார். காதில் அரை பவுனுக்குத் தோடு இருக்கும். பேரூர்  வைத்தியநாதம் பிள்ளை வருவார். அவர் என் எல் சி கரிச் சுரங்கத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்தான். ‘ அம்மா விருந்து வருது’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள்  நுழைவார். ஒரு டம்ப்ளர் மோர் மட்டுமே வாங்கி சாப்பிடுவார். இலுப்பைத்தோப்பிலிருந்து  பரதேசிப் படையாச்சி கையில் தடியோடு வருவார்.’ அம்மா இருக்காங்களா, நீராகாரம்  ஒரு ரோட்டா  குடுத்திங்கன்னா தேவலாம்’  என்பார். அப்படியே   வீட்டின் முன் கட்டில் உட்கார்ந்து விடுவார். இடையர் தெருவிலிருந்து ஆறுமுகக் கோனார் வருவார்.’  அய்யிருட்டம்மா ஒரு கரண்டி சாம்பார் ரவ சாதம்’ என்பார்.

தொழூராங்க என்னும் கிழவி வருவார் ’ஒரு தரத்துக்கு வெத்திலை குடு’ என்பார். ஊருக்கே மாடு மேய்க்கும் ராமசாமி வருவார் ‘ராமசாமி வச்சினாடு தொம்லபாக்கு காவாலி’ என்று தெலுங்கு மொழியில் கேட்பார். பூசாலி குப்பன் பாரியாள் தங்காயா’ அய்யரூட்டு அம்மா’ என்று கூடவே இருப்பாள்.ஆதிநாராயண சர்மா பண்ணையார் வீட்டு ரைஸ் மில்லில் கணக்குப்பிள்ளையாய் வேலைசெய்தார். அவர் எங்கள் வீட்டு ஒரு போர்ஷனில் குடியிருந்தார். அந்த குடும்பத்திற்கு அம்மா ஒத்தாசையாகவே இருந்தார். பஞ்சாயத்து போர்டில் கணக்குப்பிள்ளையாய் வேலை செய்த கிருஷ்ணமூர்த்திக்கும், அரிசன நலத்துறைப்பள்ளியில் வேலை பார்த்த லக்‌ஷ்மணன் சாருக்கும் அம்மாதான் மதிய உணவு கொடுப்பார். அவர்கள் சாப்பிட்டதற்கு  அம்மாவிடம் தோராயமாகக் கணக்குப் போட்டுக் காசு  கொடுப்பார்கள்.  இருவரும் சம்பாதிப்பவர்கள். இந்த குக்கிராமத்தில் அவர்களுக்கு இது மிகப் பெரிய ஒத்தாசை. அம்மா அன்னபூரணிதான்.

பெருவரப்பூர் அய்யங்கார் பிறகு பிறகு  ஊர் பக்கம் வருவதேயில்லை. நாங்களும் அவரை மறந்துதான் விட்டோம். ஆண்டுகள் எத்தனையோ உருண்டோடியும் விட்டன. ஒரு நாள் அண்டையூர் வளையமாதேவிக்கு பெருவரப்பூர் அய்யங்கார் வரப்போவதாய் தருமங்குடியில் அங்கங்கு பேசிக்கொண்டார்கள்.அவர் இப்போது திருபெரும்புதூர் மடத்து பெரிய ஸ்வாமிகள் என்றும் பேசிக்கொண்டார்கள். வளையமாதேவியில் ஒரு பெரிய பெருமாள் கோவில் இருக்கிறது. வேதவல்லி சமேத வேதநாராயணப்பெருமாள் திருக்கோவில். அந்தக்கோவிலின் டிரஸ்டி லக்‌ஷ்மிகாந்தம்பிள்ளை திருபெரும்புதூர் சென்றதாயும் அப்போது மடத்து  பெரிய ஸ்வாமிகளைச் சந்தித்தாயும் சொன்னார்கள்.தருமங்குடி பண்ணையார் பற்றி, அவர் குடும்பம் பற்றி யோகக்‌ஷேமம் விஜாரித்ததாகவும் பேசிக்கொண்டார்கள்.

இத்தனை ஆண்டு காலம் அவர் சமஸ்கிருதம் கற்று, வேதங்கள் ,உபநிடதங்கள் ,  சர்வ  தர்ம சாஸ்திரங்கள்,  பாஷ்யங்கள், பதினெட்டு புராணங்கள், கற்று பாண்டித்யமாகியிருக்கிறார் என்றும்  திருபெரும்புதூர் மடத்தில்  தீட்சை பெற்றுக்கொண்டு  அங்கேயே  ஜீயர் ஸ்வாமிகள் ஆகி விட்டார் என்றும் சொன்னார்கள். காலக்கிரமத்தில் அவர் பெரியமடத்துக்கு மகா  ஸ்வாமிகள் ஆகிவிட்டதாகவும்  செய்தி பரவியது. தற்சமயம் வளையமாதேவி வேதநாராயணப்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளியிருப்பதாயும் மக்கள் அவரைக்கண்டு ஆசிபெற்றுச் செல்வதாயும் தருமங்குடி  தெருக்களில் பேசிக்கொண்டார்கள்.

‘பெருவரப்பூர் அய்யங்கார் வளையமாதேவிக்கு வந்துருக்கிறாராம்’ என்றாள் அம்மா.

‘திருபெரும்புதூர் ஜீயர்னு சொல்லு , சுவாமி எழுந்தருளியிருக்கார்னு சொல்லணும்’ என்றார் அப்பா.

நாங்கள் மூவருமே வளையமாதேவிக்குச்சென்று  ஜீயரைப்பார்த்துவருவது என்று முடிவு செய்தோம். காலம் என்ன என்னவோதான் செய்து விடுகிறது. பெருவரப்பூர் அய்யங்கார்  இப்போது வணக்கத்திற்குரிய மகான் ஆகியிருக்கிறார். தருமங்குடி பண்ணையாரும் இல்லை அந்த ஆச்சியும் இல்லை. காலம் அவர்கள் கணக்கை முடித்துக்கொண்டு விட்டது. அவரின் பிள்ளைகள் எங்கெங்கோ உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றுவிட்டார்கள்தான்.

 என் பெற்றோரும் நானும்  வளையமாதேவி பெருமாள் கோவில் செல்வது எனப்புறப்பட்டோம். ஜீயர் ஸ்வாமியைப் பார்த்துவிடுவது,  அவரிடம் பேசமுடிந்தால் பேசுவது, எப்படியும் அவரிடம் ஆசி வாங்கிக்கொண்டு திரும்புவது எனக் கிளம்பினோம்.

எங்கள் வீட்டில் எத்தனையோ முறை சாப்பிட்டவர். எங்கள் வீட்டுத்திண்ணையில் படுத்து உறங்கியவர். அம்மா கையால் எத்தனைதரம் காபி சாப்பிட்டு இருப்பார். ஒரு பெண்ணைப் பாருங்கள்  திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பண்ணையார் வீட்டு ஆச்சி எவ்வளவு முறை அவரிடம் வற்புறுத்தி இருப்பார். என் அம்மா மட்டுமென்ன எத்தனையோ பக்குவமாய் அவரிடம்  திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார். யார் கேட்டாலும் ஒரு புன் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும் அவரிடமிருந்து. மற்றபடி அமைதியாகத்தான் இருப்பார். எதுவும் பதில் பேச மாட்டார்.

வளையமாதேவி பெருமாள் கோவிலில் ஒரு பெரிய ஷாமியானா போடப்பட்டிருந்தது. கோவில் வாயிலில் ஒரு புன்னை மரம் அதனில் ஒரு யானை கட்டப்பட்டிருந்தது. எவ்வளவோ ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தல விருட்சம் அது.  புறாக்கள் இங்கும் அங்கும்  கொள்ளையாய்ப் பறந்து கொண்டிருந்தன. சந்நிதியில் ஒரு கீற்றுக்கொட்டகை. அதன் உள்ளேதான் திருபெரும்புதூர் ஜீயர் இறங்கியிருப்பதாய்ப் பேசிக்கொண்டார்கள். நானும்  என் அப்பாவும் அம்மாவும் அந்தக்கட்டிடம் அருகே சென்றோம். எங்கும் ஒரே அமைதியாக இருந்தது. ஒரு ஐம்பது பேருக்கு ’’நாராயணா கோவிந்தா’ சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கழுத்தில் ஒரு துளசி மாலையோடு காவித்துணி போர்த்திக்கொண்ட ஒரு உடல்  ஒரு சாய்வு நாற்காலியில் அங்கே சாய்ந்த வண்ணம்  வைக்கப்பட்டிருந்தது.

‘இது என்ன விபரீதம்’

‘ஆமாம் அப்பா விபரீதம்தான்’ என்றேன்.

திருபெரும்புதூர் ஜீயர் ஸ்ரீ ஆச்சாரியன் திருவடியை அடைந்தார் என்று சன்னமான குரலில் பேசிக்கொண்டார்கள்.

‘சாயந்திரம் பட்டினப்பிரவேசம் வச்சிருக்கு.  பல்லக்கு ஒரு சகடையில வச்சி நாலு பிரதான வீதிகள்ளயும் சுத்திவரதா ஏற்பாடு. சுவாமி பல்லக்குல கால வச்சி ஏறும்போதே உக்காந்துட்டார். கைத்தாங்கலா அழைச்சிகினு வந்து சாய்வு நாற்காலில உக்கார வச்சம். கண்ண திறந்தார். மூடினார். தீர்த்தம் என்றார். ’நாராயணா நாராயணா’ சொல்லி தீர்த்தம் வாயில் விட்டோம். கண்ணு சொறுகிடுச்சி.  முடிஞ்சி போச்சு. என்ன பண்றது. மனத்த திடப்படுத்திண்டு  பெரிய மடத்துக்கு போன் போட்டு விஷயம் சொன்னோம். அங்கிருந்து   இங்கு வந்த  அதே  கார்லயே,  திருபெரும்புதூர் மடத்துக்குப்   பெரியவா சரீரத்தை அனுப்பிவைக்க சொல்லிட்டாங்க. இதுதான் எங்களுக்கு  ஜீயருக்கு  அடுத்ததா  அங்க  இருக்குறவா போட்ட  உத்தரவு. இன்னும் சித்த நாழில கார் பொறப்படும். வந்தவா  ஜாடா சேவிச்சிகணும்.’ நாராயணா கோவிந்தான்னு’ மூணு தரம் சொல்லி நமஸ்காரம் பண்ணி  சேவிக்கணும். சாஷ்டாங்க நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் புருஷா பொண்டுகள் யதா சவுகரியத்துக்கு பண்ணிக்குங்க. இது ஒரு ஆசீர்வாதம்.  ஆகட்டும்  கார் பொறப்பட இருக்கு’

சொல்லி முடித்தார் வேத நாராயணப்பெருமாள் டிரஸ்டி லக்‌ஷிகாந்தன் பிள்ளை. ‘ நாராயணா கோவிந்தா’ என்று மூன்று முறை சொல்லிக் கீழே விழுந்து எழுந்தார் அக்ரஹாரவாசியான  டிரஸ்டிப் பிள்ளை.

அம்மாவைப்பார்த்துக்கொண்டேன். கண்கள் குளமாகி இருந்தது.

‘’எதோ ஒரு அதிசயம் பாக்கப்போறம் நம்மாத்துல காபி சாப்டார்  டிபன் சாப்டார் நம்மாத்து திண்ணையில படுத்துண்டு தூங்கினார். நம்ம  கொழந்தைகள் ஜாதகம் கணிச்சி குடுத்தவர். அந்த மனுஷன  பாக்கணும் . பேசணும். ஆசிர்வாதம் வாங்கிகணும்னு வந்தோமே. குடுத்து வக்கலயேடா நமக்கு’

அப்பா தரையில் விழுந்து நமஸ்கரித்தார். நானும் தான்.

அம்மா ‘பகவானே இப்பிடி பிராப்தம் இல்லாம பண்ணிட்டயே, சித்த மின்னாடி வந்தா பேசியிருக்கலாம். ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாமே’  சொல்லிக்கொண்டே நமஸ்கரித்தாள்.

‘நாராயணா கோவிந்தா’ மட்டும் சொல்லணும்.

வேகமாகச்சொன்னார் கோவில் டிரஸ்டி.

‘எல்லாரும் வெளில,   இப்பவே வெளில வந்துடுங்கோ’ கட்டளை வந்து கொண்டிருந்தது.

’சரீரத்த கார்ல எடுத்துண்டு இரு நூறு கிலோமீட்டர் போயாகணும். யாத்ராதானம் பண்ணி,  கார நகத்தணும்’ சொல்லிய சிதம்பரம்  மேலப்புதுத்தெரு வாத்யார்  சுயமாச்சாரியார் தனது சடங்குகளை ஆரம்பித்தார்.

‘இதராள் இங்க யாரும் இருக்கப்பிடாது’ என்றார் அவர்.’

’பெருவரப்பூர் அய்யங்கார்   தப்பு தப்பு  திருபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள், ஸ்தூல சரீரத்த  பெஞ்சில   படுக்க  வைக்கமாட்டாளா’ அப்பாவைக்கேட்டேன்.

‘வாய மூடுடா’ என்றார் எரிந்து விழுந்தார் அப்பா.

அம்மாதான்  என்னை சமாதானப்படுத்தி  வெளியில் அழைத்து வந்தார்.

நாங்கள் மூவரும் தருமங்குடி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

‘ஒரு பொண்ணு பாருங்க . கல்யாணம் பண்ணிகோங்க’  பெருவரப்பூர்  அய்யங்காரைப் பார்த்து ஓயாமல் சொன்ன  பண்ணை வீட்டு ஆச்சியை நினைத்துக்கொண்டே அம்மா நடக்க ஆரம்பித்தாள்.

‘ நம்ம போடறது  எல்லாம்  எப்பவும் கணக்காகாது’  அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டார்.

-----------------------------------------------------

 

 

 

 

 

Saturday, May 18, 2024

சிறுகதை- அம்மா ஒரு புதிர்

 

அம்மா ஒரு புதிர்                                        

 

என் அம்மா தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தாள். தங்கை குடும்பம் மன்னார்குடியில் இருந்தது. கும்பகோணத்திலிருந்து தேக்குமரங்கள் ஓங்கிய ஆற்றங்கரைமீது, வளைந்து  வளைந்து போனால் வருமே அதே மன்னார்குடி தான். தனியாகத்தான் அம்மா பேருந்து பிடித்துச் சென்றாள். அம்மாவுக்கும் உடம்பு முடியவில்லை. சர்க்கரை நோய் இரத்த அழுத்தம்  எல்லாமும் அம்மாவைப் படுத்திக்கொண்டுதான் இருந்தது.

ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தாள்.’ நான் மன்னார்குடி போகவேண்டும்’ என்றாள்.

‘என்ன திடீரென்று’

‘என்னமோ தெரியவில்லை. போகவேண்டும் என்று தோன்றகிறது.’ எனக்குப்பதில் சொன்னாள்.  அம்மாவுக்கு ஏதேனும்  கெட்ட கனவு வந்து புறப்பட்டுச்செல்கிறாளோ என்று கூட எனக்கு யோசனை. இப்படி எல்லாம் அம்மா இதற்கு முன் சொன்னதில்லை. ஆனால் இன்று சொல்கிறாளே,

‘சரி புறப்படு’ அனுப்பி வைத்தேன்.

தருமங்குடி எனது ஊர். உள்ளூர்  பேருந்து நிறுத்தத்திலிருந்து  கும்பகோணம் செல்லும் பஸ் பார்த்து அம்மாவை ஏற்றிவிட்டேன். அம்மா கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கி  மன்னார்குடிக்கு பஸ் பிடித்து எப்படியோ தங்கை இருப்பிடம் போய்ச் சேர்ந்தாள். மன்னார்குடி கீழரெண்டாம் தெருவில்தான்  தங்கை குடியிருந்தாள். அம்மா  ஊருக்குப் போய்  ஒரு வாரம் கழிந்தது. மன்னார்குடியிலிருந்து எனக்கு ஒரு  போன் மெசேஜ் வந்தது. தங்கைதான் அனுப்பியிருக்கிறாள்.

‘அம்மா கீழே விழுந்து விட்டாள். காலில் நல்ல அடி. நடக்கமுடியவில்லை.  படுத்த படுக்கையாய் இருக்கிறாள். உடனே வந்து அழைத்துப்போகவும்’

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  தனது பெண்ணைப்பார்க்கவேண்டும் என்று போன அம்மா கீழே விழுந்தாள்.படுத்தும்விட்டாள். இதுவே செய்தி.

தங்கைக்கு சுந்தரகோட்டை மகளிர் கல்லூரியில் எழுத்தர் வேலை. சம்பளம் எல்லாம் ஆகூ ஊகு என்று இருக்காது. ஏதோ  கஞ்சி குடித்துக் காலட்சேபம் செய்யலாம் அவ்வளவே.  தினம் தினம் மதுக்கூர் செல்லும் பேருந்து பிடித்து  ஏறிப்போவாள். மாலையில் வீடு திரும்புவாள். கல்லூரியில் விடுமுறை என்பதெல்லாம்  சாதாரணமாகக் கிடைத்துவிடாது. அப்படிக்கிடைத்தாலும் விடுமுறை எடுத்த நாட்களுக்குச் சம்பளம் தரமாட்டார்கள். இப்படித் திண்டாடும் அவளால் அம்மாவுக்குத்தான்  என்ன செய்துவிட முடியும். ஆக எனக்குக்கிடைத்த அவசரத் தகவலை அனுசரித்து  நான் மன்னார்குடிக்குப்புறப்பட்டேன்.  

  தங்கையின் கணவருக்கு நிரந்தர உத்யோகம் எதுவுமில்லை. எந்த உத்யோகத்தில்  சேர்த்துவிட்டாலும் அவர் மூன்று மாதங்கள் கட்டாயம் பார்ப்பார். அதற்குப்பிறகு   அவருக்கு அங்கு போகப் பிடிக்காது. நவக்கிரகங்கள் உன்னை விட்டேனா பார் என்று தொடர்ந்து  படுத்தினால் ஒருவர்  என்னதான்  செய்ய முடியும். ஆக அவரிடமிருந்து எதையும் எப்போதும் எதிர்ப்பார்க்கவே முடியாது.

என் புத்திக்கு எட்டிய ஒரு மாப்பிள்ளை. அவரைப்பற்றி ஆழமாய் ஏதும் விசாரிக்கவில்லை. படுபாவியாகிய   நான்தான் வீட்டுக்கு  கூட்டி வந்தேன். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற அகம்பாவத்தின் விளைச்சலாய் இருக்கலாம்.  தங்கையோ  ,அவளை விட  நான் என்னமோ நாலும் தெரிந்தவன் என்று என்னை முழுவதுமாய் நம்பினாள். பாசம்.  என் தங்கை  அவனுக்குக் கழுத்தை நீட்டினாள். நான் படித்த முட்டாள் என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். கெட்ட பின் ஞானி. விடுங்கள் அதை.

நான் மன்னார்குடிக்குப் புறப்பட்டேன். அம்மாவை சென்று பார்த்தேன்.என் தங்கை ஒரு வாடகை வீட்டில் தானே குடியிருந்தாள். ஒரே அறைதான் வீடு. வீட்டுக்குள் வீடு. ஒண்டிக்குடித்தனம் அவளால் அங்கு தான்  குடியிருக்கவும் முடியும். வாடகை அதிகம் தரமுடியாதே. அது ஒரு புறம் இருக்க அவளுக்குப்பாதுகாப்புக்கும் ஆள் வேண்டும். தங்கையின் கணவர் அடிக்கடி ஊரில் இருக்கவும் மாட்டார். என் தங்கைக்கு ஒரு பெண்  சமத்துக்குழந்தை. உள்ளூர் பள்ளியில் எட்டாவது படித்துக்கொண்டிருந்தாள்.தங்கைக்கு எவ்வளவோ கஷ்டம் இருந்தும் குழந்தையை ஆங்கில வழியில்  பணம் கட்டிப்படிக்க வைத்தாள். அவள்  பெண்ணும் நன்றாகவே  படித்து வந்தாள். கண்ணைக்கெடுத்த தெய்வம் கோலைக்கொடுத்தது.

 தங்கை என்னைப்பார்த்ததும்’ இப்போதுதான் அண்ணா  எனக்கு உயிரே வந்த மாதிரி இருக்கிறது’ என்றாள். கண்கள் கலங்கியிருந்தன. என் கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டாள்.

‘அம்மா எங்கே’

‘அடுத்த வீட்டில் இருக்கிறாள். அடுத்த வீடு டாக்டர் வீடு’

அவளும் நானும்  அவசரமாய் அடுத்த வீட்டிற்குச் சென்றோம். அம்மா  அடுத்த வீட்டின் திண்ணையில் படுத்துக்கிடந்தாள்.

‘என்னம்மா ஆச்சு’

‘ வாடா, வா பாருடா,  என்ன ஆச்சின்னு என்  காலப்பாரு’

அம்மாவின் வலது காலில் மாவு கட்டு போட்டிருந்தார்கள். அம்மாவின் காலைத் தொட்டுப்பார்த்தேன்.

‘வலி எப்பிடி இருக்கு’

‘வலிச்சிகிட்டேதான் இருக்கு’

‘டாக்டர் மாத்திரை குடுத்துருக்காறாரா’

‘ஆமாம் மாத்திரை குடுத்துருக்கார்’

‘இது எப்பிடி ஆச்சு’

‘அடுப்புல பால் இருந்துது. அது கொதிச்சிப்பொங்கியது. அடுப்ப அணைக்கணுமேன்னு  கொஞ்சம் வேகமா போனேன். தடுக்கி கீழே விழுந்துட்டேன்.  காலுக்கு கீழே எள நீர் மட்டை.  குடிச்சிட்டு போட்டுருக்கா. அத எடுத்து ஓரமாபோடல. நட்ட நடுப்பற கெடந்துருக்கு. போற அவசரத்துல  நா  எளனி மட்டை  மேல கால வச்சிருக்கேன். அவ்வளவுதான் சர்ர்ன்னு வழுக்கிடுச்சி. நா தடால்னு  கீழே விழுந்துட்டேன். அப்பிடியே அசையாம கெடந்தேன். அந்த மனுஷனும் ஆத்துல இல்ல. எப்பவும் மாதிரி எங்கயோ சுத்த போயிட்டார்.’

தங்கை தொடர்ந்தாள்.

‘நா காலேஜ் விட்டு வீட்டுல வந்து  பாக்கறேன். எம்பொண்ணு பக்கத்துல ஒக்காந்துண்டருக்கா. பாட்டி கால தடவி தடவி விட்டுண்டு.  நா எப்ப வருவேன்னு என்னையே எதிர் பாத்துண்டு’

‘ஒன் புருஷன் எங்க போனார்’                                                                                   

‘அவர் வீட்டுல இல்ல. எங்க போனாரோ. பகவானுக்கே வெளிச்சம். ஆனா ராத்திரி பத்து மணிக்கு வந்தார். என்ன பண்றதுன்னு புரியில.  ஆனா உனக்கு  போன் மெசேஜ் குடுத்தோம். நீ காலம்பற வந்துடுவன்னு உன்ன நம்பிதான் உக்காந்துண்டு இருக்கேன். நானும் அவரும் இன்னும் எம்பொண்ணும் சேந்து இண்ணைக்கி காலம்பற இந்த டாக்டர்கிட்ட  அம்மாவ கூட்டிட்டிண்டு வந்தம்.  தூக்கிண்டு வந்தமா இல்ல  இழுத்துண்டு வந்தமா அது தெரியில ஆனா அம்மாவ இங்க கொண்டு வந்துட்டம். டாக்டர் நல்ல மனுஷன். பக்கத்து வீடு. பரோபகாரி’

அம்மா என்னையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.

‘வா, டாக்டரைப்பாத்து பேசிட்டு வந்துடுவம்’

தங்கையும் நானும் வீட்டினுள்ளாகச்சென்று மிக நல்ல மனிதரான அந்த  டாக்டரைப்பார்த்தோம்.

‘வணக்கம் டாக்டர். எங்க அம்மாதான்’

‘பரவாயில்லை. ஒரு மாவு கட்டு போட்டிருக்கேன்.  இது ஒரு ஃபஸ்ட் எய்டு அவ்வளவுதான்.  உடனே ஒரு எலும்பு டாக்டரைப் பார்க்கணும். எக்ஸ்ரே எடுத்துப் பாத்தாதான் எதுவும் சொல்லமுடியும்.  அம்மாவுக்கு ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிதான் ட்ரீட்மெண்ட் தரவேண்டியிருக்கும்’

‘உங்களுக்கு ஃபீஸ் தரணுமே’

‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.  அவ ரொம்ப கஷ்படற பொண்ணு. அந்த மனுஷனுக்கு சமத்து போறாது’

என் தங்கையின் கணவரைத்தான் டாக்டர் தெரிந்துகொண்டு சொல்கிறார். என் தங்கை என்னை ஒரு முறை ஆழமாய்ப் பார்த்தாள்.

‘ஆக வேண்டியதைப் பாருங்க அது ரொம்ப முக்கியம்’ டாக்டர் முடித்துக்கொண்டார்.

அரசு டாக்டராக வேலையில்  இருந்து ஓய்வு பெற்ற டாக்டர். மனிதாபிமானத்தில் ஏதோ ஒரு உதவி செய்திருக்கிறார் அது பெரிது.

‘உன் வீட்டுக்காரர் எங்கே’

‘உன்னை பஸ்டேண்டுல பாத்து அழச்சிண்டு வரேன்னு போனவர்தான்’

‘நா பஸ்டேண்டுல  அவர பாக்கல’

‘அவர் எங்க நின்னு எத வேடிக்க பாத்துண்டு நிக்கறாரோ’

‘கொழந்த ‘ அவள் பெண்ணைத்தான் சொன்னேன்.

‘ஸ்கூல் போயிருக்கா. நா  காலேஜுக்கு லீவு சொல்லிட்டு உக்காந்துண்டு இருக்கேன்’

‘ரொம்ப சரி. நா இப்ப பஸ்டேண்டு போறேன். அங்கதானே டாக்சி ஸ்டேண்டும் இருக்கு. ஒரு டாக்சி பிடிச்சிண்டு அவரயும் கூட்டிண்டு வந்துடறேன்’

‘இப்பதான் எனக்கு கண்ணுல வெளிச்சமே தெரியறமாதிரி இருக்கு’

‘சரி விடு. நா பாத்துகறேன்.’ நான் மன்னார்குடி பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இனி என்ன செய்வது. அம்மாவை  கடலூர் அழைத்துச்சென்று எலும்பு டாக்டரைப்பார்த்து  மேற்கொண்டு சிகிச்சை செய்யவேண்டும். தருமங்குடிக்கு அருகேயிருக்கும் பேரூர் அது.

மன்னார்குடி பேருந்து நிலையம் வந்தேன். தங்கை கணவரைத்தேடினேன். கையில் சிகரெட்டோடு குமுதம் புத்தகத்தைப்படித்துக்கொண்டு ஒரு பெட்டிக்கடை வாயிலில் நீட்டிப் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

‘அத்தான்’  என்ன செய்ய, அப்படித்தான் சகோதரி கணவரை அழைப்பது வழக்கம்.

‘வாங்க   மச்சான்’

‘நா வீட்டுக்கு போயிட்டு வர்ரேன். அம்மாவைப்பார்த்தேன். டாக்டர்கிட்ட பேசினேன். அம்மாவை கடலூர் அழச்சிண்டு போகணும். டாக்சி ஒண்ணு புடிக்கணும்’

‘ ரொம்ப சரி அதுக்குத்தான் உங்களுக்கு போன் மெசேஜ் போட்டேன்’

இருவரும் டாக்சி ஸ்டேண்ட்  பூராவும் தேடினோம். ஒரு டாக்சியைப்பிடித்துக்கொண்டு வீட்டுக்குப்போனோம். அம்மாவை டாக்சியின் பின் சீட்டில்  படுக்கையாய் அமர்த்தி வைத்துக்கொண்டு நானும் உடன்  உட்கார்ந்து கொண்டேன்.

‘நானும்  வரேன்,  இங்க இருந்து என்ன பண்ணப்போறேன். அங்க வந்தாலும் ஒரு  ஒத்தாசை’

தங்கையும் சரி என்றாள். மன்னார்குடியில் இருந்தால் என்ன  கடலூரில் இருந்தால் என்ன தங்கையின் கணவரைப் பொருத்தமட்டில்  எங்கிருந்தாலும் ஒன்றுதான். எந்த ஊரிலும் யாருக்கும் ஒத்தாசையாக இருக்கத்தெரியாத மனிதர். தெரிந்தேதான்  அப்படி இருக்கிறாரோ என்னவோ.

‘ஒம் பொண்ணதான்  பாக்காம பொறப்படறேன்.  எனக்கு அவசரம். சந்தர்ப்பம் அப்பிடி. அவகிட்ட சொல்லு’ என்றேன்.

‘நா சொல்லிக்கறேன். நீங்க பொறப்படுங்க.’ அம்மாவின் புடவை  மருந்து பொடி எண்ணெய் சீசாக்கள் சால்வை இத்யாதிகள் அடைத்துக்கொண்ட ஒரு பழைய பேக்கை  டாக்சியின்  டிக்கியில் வைத்தார்கள்.

அவளும் ஒரு பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு’ காலேஜுக்குப்போகணும். ’  என்றாள்.

 டாக்சியின் முன் சீட்டில் இடுக்கி பிடுக்கி உட்கார்ந்துகொண்டு மன்னார்குடி பேருந்து நிலையம் வந்து இறங்கினாள்.

டாக்சி கடலூருக்குச் சீறிக்கொண்டு சென்றது. வண்டியில் ஒடும்    சினிமா பாட்டைக்கேட்டுக் கொண்டே  தங்கை கணவர்  அரைகுறையாகத் தூங்கினார். நான் தங்கையின் நினைவாகவே இருந்தேன்.    ஒம் பொண்ணாயிருந்தா இப்பிடித்தான்  ஒரு மாப்பிள்ள பாத்து குடுத்து இருப்பிய்யா’ அம்மா என்னை  என்றோ கேட்ட கேள்வி. அதனை நான்   எப்படி  மறப்பது ?

 கடலூர் வந்தாயிற்று.அம்மாவை  மாவட்ட மருத்துவ மனையில்தான் சேர்த்தோம். காலில் எலும்பு மூட்டு நகர்ந்து போனதாய்ச்சொல்லி மணல் மூட்டை ஒன்றைக்கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். அம்மாவுக்கு  ஒரு மாதம் இந்த பீஷ்மப் படுக்கை. எப்படியோ திண்டாடினோம்.  அம்மாவுக்குக் கால் சரியான பாடில்லை. மருந்து மாத்திரை கொடுத்து ’பிசியோதெரபி விடாமல் செய்யுங்கள்’ சொல்லி  ஓட்டை ஆம்புலன்சில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.  அம்மாவால்  தருமங்குடி வீட்டில் நகர்ந்து நகர்ந்து செல்லத்தான் முடிந்தது. எழுந்து நடக்க முடியாமல் திண்டாடினாள். மன்னார்குடிக்கே நான் போயிருக்க வேண்டாம் என்றாள். ஏது ஏதோ புலம்பினாள். அழுதாள். யாரையோ எல்லாம் திட்டிக்கொண்டே இருந்தாள்.

ஒரு சமயம் என் அப்பா உடம்பு  மிகவும் முடியாமல் இருந்தார். சிறு நீர் கழிக்க அடிக்கடி வாயில் கதவைத்திறந்துகொண்டு வீதிக்கு வரவேண்டியதாயிற்று. அவரால் முடியவும் இல்லை. இரவில் ஒரு பிளாஸ்டிக் குவளையை வைத்துக்கொண்டு வீட்டு முற்றத்திலேயே சிறு நீர் கழித்தார். அம்மா அவரை ‘நீங்கள் முற்றத்தில் இப்படி ச்செய்யக்கூடாது வாசலுக்குத்தான் சென்று வரவேண்டும் என கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். அப்பா நொந்து போனார்.’ இப்படி இருக்கிறது என் பிழைப்பு’ என்று எனக்கு ஒரு போஸ்கார்டில்  காகித பென்சிலால் எழுதிப்போட்டிருந்தார். ஊருக்குப் போயிருந்த சமயம் இது விஷயம்  நான் அம்மாவைக் கேட்டேன். அம்மா எனக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. அது என் நினைவுக்கு வந்தது. அது வந்திருக்க வேண்டாம்.

‘என்னடா   நான்   இப்ப  கூடத்துல நகர்ரேன். என்னால நடக்க வக்கல.மித்தத்துலயே  யூரின் போறேன். உங்க அப்பா ஒரு சமயம் உடம்பு முடியாம இருந்தார். ’மித்தத்துல கூடவே கூடாது.  யூரின் போறதுன்னா   வாசலுக்குத்தான் போகணும்னு’  அவர  கட்டாயமா  சொன்னேன். அதுக்குதான் இப்ப  நான் படறேன்னு உனக்கு  மனசுல ஓடறதா.’

‘இல்லை அம்மா’ பொய்தான் சொன்னேன்.

என்  ஆழ்மனதில் என்னவெல்லாம் காட்சியாகியது என்பதை அம்மா எப்படியோ கண்டுபிடித்து விட்டாள் என்று ஆச்சரியத்தோடு அம்மாவைப்பார்த்தேன்.

‘நான் உன் அம்மா’ என்றாள்.

என் அம்மா அப்பாவிடம் ஏன்  அப்படிக்கண்டித்துச்சொன்னாள். அதற்கு ஏதேனும் ஒரு பொருள் இருக்கலாம். எனக்குத்தான் இன்னும் அது பிடிபட மறுக்கிறது.

===================================

 

 

 

 

 

 

 

 

 

கவிதை- 17/5/2024 சொல்புதிது கவிதைவாசிப்புக்கூட்டம்

 

17/5/24 கவிதை வாசிப்பு 

கூட்டத்தில்

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள் 



அனுபவம் 1


கலிபோர்னியா மாநிலம்

ஆர்டிசியா நகரில்

உடுப்பி ஹோட்டலும்

நல்லி சில்க்ஸ் ம்

சென்று பார்க்கலாம்

காசு கனமாக வேண்டும் 

உடுப்பி ஹோட்டலில்

சைவம் மட்டுமே மாற்றமில்லை

வண்ணப் பாட்டிலில்

சாராயம்

வயது வந்தோர்க்கு மட்டுமே 

தின்பதில் மீதமா 

டப்பா தருவார்கள்

சின்னதும்  பெரிசுமாய்

எடுத்துப் போகலாம் வீட்டிற்கு.

அஞ்சப்பர் உண்டு 

அசைவம் உண்டு

அச்சம் வேண்டாம் 

கைரேகை சோசியர் 

யுவராஜ் ரூம் போட்டு விஜயம்

கூட்டம் அதிகம்தான்

சீனா அமெரிக்கா எதிரியாம்

தோற்ற மாயை

பிரதானமாய் அவர்களே

அனைத்திலும்

இரண்டாவதாய் இந்தியர்கள் 

தமிழர்கள் காவடி எடுப்பதும்

தேர் இழுப்பதும்

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் எல்லா முண்டு 

எழுத்தாணி கொண்டெழுதிய திருக்குறளைத் தூக்கிப்பிடித்து 

தமிழ் அமைப்புகள் 

தலை நிமிர்ந்து 

உலாவருகின்றன.


அனுபவம் 2


இந்தியப் பொருட்கள் 

அமெரிக்க கடைகள்

புளி வாங்கப்போனால் 

கொட்டைகள் சகிதம் விற்பனை

உப்புக் கடலைக்கு ஆசைப்பட்டால் தொலும்பு 

முக்காலுக்கு இருக்கும் 

பலாப்பழம் விற்கிறார்கள்

ஆனை விலையில்

வாசனையே இல்லை 

கர்டு கிடையாது கடையில் யோகர்ட்தான் 

யோகர்ட் பிளெயின் 

சொல்லி வாங்கவேண்டும்

தவறவிட்டால் ஏதேனும் 

ஒரு நெடியொடு 

தயிர் போன்றது கிடைக்கும் 

பாலில் பலரகமுண்டு 

குழம்பித்தான் போகணும் 

புதிதாய்ப்போனவர்கள் 

எங்கேயும் மனிதர்கள்.


அனுபவம்   3


பூர்வீகமாய் 

இருந்த இந்தியரை 

ஒழித்தாயிற்று 

எல்லோரும் வந்தேறிகள் 

அமெரிக்காவில் 

ஐநூறு ஆண்டுகள் 

முன்னம் வந்தவர்கள் 

ஆட்சி செய்கிறார்கள் 

உலகத்தையும் சேர்த்து 

உழைத்துக்கொடுக்க 

ஆசிய இந்தியர்கள்

லட்சம் லட்சமாய் வரிசையில் நின்றுகொண்டு.

இந்தியத்திருநாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் 

ஏராளமுண்டு வரலாற்றில் 

இந்தியர்கள் வயிற்றுப்பசிக்கு வந்திறங்கி 

இருபத்து நாலு மணிநேரமும் 

உழைத்துத்தர உறுதியேற்கிறார்கள் நாளும்.


வேடம் கட்டிகள் 


தேர்தல் நேரத்தில் 

எத்தனைப்பொய்கள் 

மேடைதோறும் 

முழங்கப் படுகின்றன

யாருக்கும் வெட்கமில்லை.

ஆகிவிட்ட வயதும் 

கற்ற கல்வியும் 

பெற்ற அனுபவமும் 

சிறுத்துப்போய் நிற்க 

வோட்டுக்காய் வேடம்கட்டி 

எப்படி நடிக்கிறார்கள்

எம் தலைவர்கள்.

வாய்மையே வெல்லும் 

எழுதிவைத்துக்கொண்டு 

வாய்மையை வணிகப்பண்டமாய் 

மதிக்கிறார்கள் 

மக்கள் மதிமயங்கி 

கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.


Monday, May 6, 2024

கவிதை ரகசியம்

 இன்று நிகழ்ந்த இணையக்கவியரங்கில்

வாசித்த கவிதை. 16\2\24 ?




ரகசியம்



என் வீட்டருகே

வீடு கட்டாத மனையொன்றில்

மாமரம் ஒன்று

பருவம் தோறும்

கொள்ளையாய்க்

காய்க்கிறது

மாவடு பறிக்கும் மாமி

மாங்காய்க்குழம்பு

வைக்கும் பெண்டிர்

உப்பு கொண்டு நசிக்கித்தின்னும் சிறுவர்

மாவத்தல் போடும் ஆயாமார்

உச்சாணிக்காய்ப் பழுத்துச் சுவைக்கும்

அணில் குருவி

என எல்லோரும்

நன்றி சொன்னார்கள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு.

அவ்வப்போது வெள்ளநீர்

வருகையால்தான்

வீடு இன்னும்

எழாமல் கிடக்கிறது

வெறும் மனையாய்.



அனுபவம்



கவிதை எழுதுவதை

நிப்பாட்ட வேண்டும்

தொடர்ந்தால் துயரமே

கதை எழுதுவதும்

கட்டுரை புதினம்

புனைவதும் சித்திக்காமல்

மனம் சிக்கிக்கொள்கிறது

கவிதை வரிகளில்.

மொழிபெயர்ப்புக்குப்

போனால் அவ்வளவே

சொந்தக்கற்பனையின்

ஊற்றுக்கண்

அடைத்துக்கொள்கிறது

இறுக்கமாய்.

கவிதைக்காரன் கவிதையோடு மட்டுந்தான்

வாழணுமோ.


சொல்புதிது கவியரங்கு கவிதைகள்

 16/3/24  சொல் புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள்


அணிலைப் பார்த்தேன்

கலிபோர்னியாவில்

முதுகில் வரிக்கோடுகளில்லை

எங்கே என்றேன்

இலங்கைக்கு இராமன்

அணைகட்டுவதற்கு முன்பே

நாங்கள் குடிபெயர்ந்து

விட்டோம் குழுவாயிங்கு

ஆகத்தான் இல்லையது

பதில் சொன்னது.


எல்லோருமே காரில்

போகிறார்கள் அமெரிக்கர்கள்.

நடந்தால் சட்டை போட்டுக்கொண்ட

நாயோடு நடக்கிறார்கள்

ஹாய் என்கிறார்கள்

தேங்க்யூ என்கிறார்கள்

வேறு பேசுவது எல்லாம்

அவர் அவர்கட்கு 

மட்டுமே விளங்கும்

நமக்கில்லை எதுவும்.


இந்தியர்கள் இருபத்து

நாலுமணி நேரமும்

வேலை செய்யத்தயார்

என்பதால் உலகெங்கும்

வரவேற்பு

சொந்த மண்ணில்

எழுவதே இல்லை அது

காசு பார்ப்பார்கள்

கணக்குப் பார்ப்பார்கள்

சட்டம் பேசுவார்கள்.


லாஸ் ஏஞ்சலிஸ் 

சிவா விஷ்ணு கோவில்

உயரத்தில் பெருமாள்

ஏழுமலையான்

தாழ்ந்த நிலப்பரப்பில்

சிவன்

தமிழ்நாட்டு குருக்கள்

அர்ச்சகர்கள்

மடப்பள்ளி எல்லாமும்

லட்டு மட்டும் சுமாராய்

ஒன்றின் விலை ரூபாய் ஐநூறு.

கோவில் கோபுரத்தோடு

போட்டோ ஜோடி ஜோடியாய்

எடுத்துக்கொள்கிறார்கள்

எப்போதுமிருப்பவையோடு

இல்லாது போகிறவர்களின் ஆசை.


சாண்டியாகோ கடற்கரை

பசுபிக் பெருங்கடலின்

அனந்த சயனம்

கழுகுகள் கைக்கெட்டும் தூரத்தில்

அரை நிர்வாணத்தில்

வெள்ளையர்கள்

குறுக்கும் நெடுக்குமாய்

கருப்பர்கள்.

ஆங்காங்கே ஆசியாக்காரர்கள்.

அரேராம அரே கிருஷ்ண

பாடும் கீழ் பாய்ச்சி கட்டிய

வெள்ளையர்கள்.

அல்லேலுயா பாடி ஆடும்

ஆப்ரிக்க கிறித்துவர்கள்

பாருங்கள் பொடி மணலும்

பெருங்கடலும்

மந்தைமந்தையாய் மனிதர்களும்.


ஆரம்பிக்கிறது

பெங்களூரில் தண்ணீர்

பஞ்சம்

காவிரிதான் என் செய்வாள்

சென்னையிலோ வெள்ளம்

நவம்பரில் ஆண்டுக்காண்டு.

அடுத்த மகனோ

அமெரிக்காவில்.

கீலமாய் கிராமத்தில்

அப்பா விட்டுச்சென்ற வீடு.

சரிப்படவில்லை 

எதுவும்

என் செய்வேன் நான்.


கவிதை- அமெரிக்க வாழ்க்கை

 இணையக் கால கவியரங்கம் 24/3/24



அமெரிக்க வாழ்க்கை



சிகரெட் பிடிப்பதும்

சாராயம் அடிப்பதும்

சகஜமாகிய பெண்கள் நடப்பு

பளிச்சென்ற சாலையில்

வலதுபுறமாய்

வாகனங்கள் வரிசை

வாகனங்களில் இடது புறம்

ஓட்டுனர் அமர்ந்து மட்டுமே பயணம்

நாம் மறந்துபோன

மறந்துபோன பவுண்டும்

அவுன்சும் காலனும்

அடியும் இஞ்ச்சும்

அங்கங்கும் அளவைகளாய்

நாய்கள் முன்னே போக

பின் தொடரும் மனிதர்கள்

நாயுக்கும் பூனைக்கும்

டே கேர் உண்டு

எமர்ஜென்சி ஐசியு

எல்லாமும்

பள்ளிப் பிள்ளைகள்

தரம் பார்த்துப்பார்த்து

ஒரே வகுப்பில் 

பள்ளிப் பிரிவினைகளோ ஏராளமாய்

கேனில் பாலை வாங்கி

மாதமொன்றுக்கு

வைத்துக் கொள்கிறார்கள்

அவரவர் சமையல் கட்டில்

மாடுகள் கறந்த பாலில்லை நிச்சயமாய்

கனக்காசு வைத்துக்கொண்டு

கடவுளைப் நேரம் பேசும்

மக்கள் ஊர் முச்சூடும்.