Saturday, November 11, 2023

 

இணையக்கால கவியரங்கம்                                        11/11/2023    


எஸ்ஸார்சி


முயற்சித் திருவினையாக்கும்

 

உழைத்தவர்கள் எல்லோருமே

உச்சத்தைத் தொட்டுவிட மாட்டார்கள்

விடுதலைக்குப் போராடியவர்களில்

எத்தனை பேர் தேச விடுதலையைக்

காணமுடிந்தது

எழுதிக்குவித்தவர்களில்

எத்தனை பேருக்கு அங்கீகாரம்

சாத்தியமானது

அற்புதக்குரலும்

இணையிலா இசைஞானமும் பெற்றவர்கள்

எத்தனை பேர்

மேடை ஏறாமலே முடிந்து போனார்கள்

நிலவுக்குப்பயணம் போன

விஞ்ஞானிகளில்

நீல் ஆம்ஸ்ட்ராங்க் மட்டுமே

நினைக்கப்படுகிறார்

முயற்சிகள் தொடர்கதை

முயலாமல் வாளா நிற்பது

மானுட விழுமியமாகாதே.



Friday, November 10, 2023

கவிதை- பள்ளிக்கூடம்

 


கவிதை-    பள்ளிக்கூடம்                      இணையக்காலகவியரங்கம்  10/11/23


கோவில்கள் இருந்தன கிராமங்களில்

சாவடி இருந்தது 

சத்திரம் இருந்தது

மாடு அடைக்க பட்டி இருந்தது

கக்கூசெல்லாம் யாருக்குத்தெரியும்

ஏரிக்கரைதான் எல்லாத்துக்கும்

பள்ளிக்கூட கட்டிடம் இல்லை

 வாகன மண்டபத்தில்

வகுப்புக்கள் நடக்கும்

வெள்ளியோ சனியோ

மாலை நேரம்

சாணம் போட்டு வகுப்புத்தரையை

மெழுகி முடிப்பர் மாணவர்கள்

குடி தண்ணீருக்குப்பானையொன்று

  வட்டமாய் மடக்கொன்று.

சர்க்கார்  கிணறு அருகிருக்கும்

சேந்தி வருவார் தண்ணீரை

இன்ன கிழமையில் இன்ன வேலை

அட்டைப்பட்டியல்  தொங்கிக்கிடக்கும்

அதுப்படிதான் எல்லாம் நடக்கும்

வீடு வீடாய்ச் சுற்றிச்செல்வோம்

பிள்ளைகளைக்கொண்டு வருவோம்

காமராஜர்  அருளிய  மதிய உணவு 

பள்ளிப்பிள்ளைகள் தானே வந்தனர்

கரும்பலகை அழிக்கக் கோவை இலைகள்

தண்டனைக்கு

நீட்டுக்குச்சி

கட்டாயம் இருக்கும் மேசை மீது.

காதைப்பிடி போடு தோப்புக்கரணம்

விரட்டி எடுப்பர் ஆசான்கள்

கண்ணு ரெண்டு   இருக்கட்டும் 

பாக்கி எதுவும்  போனாலும்

புள்ள மட்டும் நல்லா  படிக்கணும்

  வேண்டிச்சென்றனர் அப்பாக்கள்

ஆசிரியர்கள்  ராப்பட்டினி

அக்கறையோடு பாடம் சொன்னார்

அரி நமோத்து சிந்தம்

 குரு வாழ்க குருவே துணை

சொல்லிச்சொல்லி பாடம்  துவங்கும்

இப்படித்தானே  பள்ளிக்கூடம்

இப்போது சொன்னால் ஒப்புவார்களா.





Wednesday, November 8, 2023

 


கவிதை- காலம்               இணையக்கால கவியரங்கு   6/11/2023


அது அதுவும் அங்கங்கே

நிகழ்ந்து கொண்டேதான்

யார் எங்கு போனால் என்ன

போகாவிட்டால் என்ன

எதற்காகவும் நிற்பதில்லை எதுவும்

புலம்பல்கள் இருக்கலாம்

புகழ்ச்சிகள் இருக்கலாம்

வசைகள் இருக்கலாம்

வம்புகள் இருக்கலாம்

வழிபடல் இருக்கலாம்

யாருக்காகவும் எதுவும்

காத்திருப்பதில்லை

அதன் ராஜபாட்டையில்

தொடர்கிறது காலம்

யாரையும் சட்டைசெய்யாமல்

கதியைக்கூட்டுவதுமில்லை

குறைப்பதுமில்லை காலம்

யாரிட்ட கட்டளையோ

வரம்பு எதுவும் உண்டோ

யார் அறிவார்

யார் புகல்வார்பார் சுழலும் ரகசியத்தை

யாரே பகர வல்லார்.

----------------------


கவிதை- நீவழிப்படுஊம் புணை        நாள்   7/11/2023


தருமங்குடி சிவன் கோவில் அக்கிரகாரத்தில்

எங்களின் ஓட்டு வீடு

தாத்தாவுக்குப் பிறகு

அப்பா இருந்தார்

பிள்ளைகள் நாங்கள்

மாநகரம் வந்தாயிற்று

துளசி பூஜை

விடாமல் நடந்த வீட்டின்

முற்றத்தில் காட்டுப்பூனைகள்

அட்டகாசமாய்க்

குடும்பம் நடத்துகின்றன

நாட்டு ஓடுகளை பிரித்துப் பிரித்து

குரங்குகளின் கும்மாளம்

காஞ்சி சங்கராச்சாரியார் வந்திறங்கி

நெல் குவியலில் சம்மணமிட்டு  அமர்ந்து

ஆசீர்வதித்த நடுக்கூடத்தில்

வவ்வால் புழுக்கைகளின் ஆட்சி

தாத்தா ஜோசியம் சொன்ன

வீட்டுத்திண்ணையில்

சாராயம் குடித்துவிட்டு சீட்டாடும் கிராமத்தார்

வீட்டை விற்க மனம் வரவில்லை

கட்டி அழவும்  முடியவில்லை

வயதுகூடி கிழடு தட்டிப்போகிறது

எங்கள் வாரிசுள் அந்நிய மண்ணில்

எது பற்றியும்  சட்டையே செய்யாமல்.

----------------------------------





Saturday, November 4, 2023

கவிதை- வன்மம் குறையவில்லை

 



 கவிதை-  வன்மம் குறையவில்லை        இணையக்கால கவியரங்கம்   5/11/23

  

புத்தனும் ஏசுவும்

தோற்றுப்போனார்கள்

வாழும் மாந்தரிடை வன்மம் குறையவில்லை

அகிம்சையைத்தூக்கிப்பிடித்த

காந்தியின் தேசமிது

தேசபிதாவைக்காப்பாற்றிக்கொள்ள முடியாமல்

கொன்றுபோட்டோமே நாம்.

அறிவினான் ஆகுவதுண்டோ

பிறிதின் நோய்  தந்நோய் போல்

போற்றாக்கடை சொன்ன வள்ளுவமும்

வாடிய பயிரைக்கண்போதெல்லாம்

வாடினேன் வழங்கிய வள்ளலாரும்

ஹமசிடமும் இஸ்ரேலிடமும்

நின்று பேசிடத்தான் முடியுமா ?

அறிவுக்குருடர்கள் 

கேள்விச்செவிடர்கள் முன்னே

ஆயிரம் ஆயிரமாய்

மாண்டு போவது பெண்களும் குழந்தைகளும்.

ஐக்கிய நாடுகள் சபையொன்றுண்டு

அறிவீரோ

மார்கழியில் பஜனை செய்வார்களாம்...




கவிதை- செயற்கை அறிவு

 


கவிதை- செயற்கை அறிவு    

                                                                                    இணையக்கால கவியரங்கு   4/11/23

 செயற்கை  அறிவு எங்கெங்கும்

செயலாற்றத்தொடங்கி விட்டதாம்

கற்ற அனைத்து ஊறும் அறிவு

மனிதர்க்குத் தெரிந்த குறள்

இயந்திரங்கள் செயற்கை அறிவோடு

செயல்கள் பல ஆற்றக்

காத்துக்கொண்டிருக்கின்றன

கவிதை எழுதுமாம்

மொழிபெயர்ப்பு செய்யுமாம்

புனைகதை படைக்குமாம்

பிரச்சனை சொன்னால்

விடை கொடுக்குமாம்

கனிப்பொறியோடு 

ரோபோ ஒன்று பிணையக்

கிடைக்குமாம் செயற்கை அறிவு

மக்களிடை புரட்சி செய்யத்தான்

கைகட்டி நிற்கிறது அது

சிந்திக்க ஒரு இயந்திரம்

வந்த பின்

மனிதன்  உச்சமாய் செய்ய   எதுவுமில்லை

மனிதன் சிந்திப்பதை நிறுத்தினால்

செத்துப்போவேனே.




Friday, November 3, 2023

கவிதை -அரசியல்


கவிதை  -அரசியல்                 இணையக்கால கவியரங்கு   3/11/2023

 

எங்கும் அரசியல்

எதிலும் அரசியல்

கட்சியில் சேர்ந்தால்

கணம் கணம் அரசியல்

சங்கத்தில் சேர்

பொறுப்புக்களைத்

தீர்மானிக்கும் அரசியல்

இலக்கிய அரங்கமா

அசடுக்குப்புரியாதா நுண்ணரசியல்.

அழகாய்ச்சொல்வார்கள்

அரசியல் கலவாமல்

எழுதுங்கள் கவிதை

அதுவுமே அரசியல்.

மலரை மகளிரை

தாயைத்தனயனை

வானைக்கடலை

மலையை அருவியை 

காகத்தைக் கொக்கைப்பார்

கெஞ்சு கொஞ்சு

எழுது கவிதை

யார் செத்தாலென்ன

யார் பிழைத்தாலென்ன.


Thursday, November 2, 2023

கவிதை- நன்றி சொல்லிமுடியுமா.

 


 கவிதை -நன்றி சொல்லி முடியுமா       2/11/23 இணையக்காலக்கவியரங்கம்


செய்த உதவிக்கு

நன்றி என்று எழுதுகிறோம்

நன்றி நன்றி என்று

உரக்கச்சொல்கிறோம்

உதவி சிறிதெனினும்

நன்றி மறத்தல் நன்றன்று

பொய்யாமொழி அல்லவா.

பொழியும் மழைக்கும்

காக்கும் கதிரோனுக்கும்

உயிர் வளி  அருளும்

விருட்சங்களுக்கும்

சோறு போடும் உழவனுக்கும்

தம்மை உருக்கி நம்மை ஈனும்

தாய்மார்களுக்கும்

நன்றி சொல்லி முடியுமா

நெஞ்சிருக்கும்வரை

நினைவில் வைத்துப் போற்றலாம்

ஈடாகாது அப்படியும் 

அவர்களிடம் நாம் பெற்ற கடன்.

பெற்றதாயொடு எண்ணக்கடவுளும் இல்லைதானே.