தாயுமானவன் -எஸ்ஸார்சி
(சிறுகதை)
அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின் மின்கம்ப விளக்குகள் அனாதையாக எரிந்துகொண்டிருந்தன. வெளிச்சம் வேண்டுமென்று ஆசைப்பட்டு மின்விளக்கு அருகே போய்த் தம்மை முடித்துகொாள்ளும் பறக்கும் சிறு சிறு இறக்கைப் பூச்சிகள் வீதி யெங்கும் மண்டிக்கிடந்தன. ஆகாயத்து அரை நிலா பளிச்சென்று தன் இருப்பைக்காட்டி பூ உலக நடப்பைப் பார்த்து நகைத்துக்கொண்டே நகர்ந்தது. பூமியொடு ஆகாயத்து நிலவுக்குத்தான் தொப்புள் கொடி பந்தமாயிற்றே. எங்கோ ஒரு கிழ நாயொன்று தான் துக்கித்து இருப்பதை ஊரறிய ஊளைட்டு முடித்தது. நாயுக்கும் வருத்தங்கள் பலது இருக்கலாம்.
தலைமுடி முற்றாய்க்கலைந்துபோய் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக்கொள்ள கண்கள் இரண்டும் குளமாகி அவள் எங்கோ ஆகாயத்தை முறைத்துக்கொண்டு நிற்கிறாள். அவன் வீட்டினுள்ளே கோரைப்பாயில் அவனுக்கு இரு பக்கத்திலும் ஒவ்வொரு குழந்தை உறக்கத்திலிருந்தது.. இரண்டில் பெண் குழந்தைதான் பெரியது. வயது ஆறு இருக்கலாம். ஆண் குழந்தையின் வயது இன்னும் இரண்டு குறைவாகத்தான் இருக்கும். இவ்விரு மக்களையும் பெற்றுப்போட்டுவிட்டு அல்பாயிசிலேயே போய்விட்ட அவன் மனைவி விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை நிரப்பவந்தவள்தான் இப்போது வெளியே நடுத்தெருவுக்குப்போய் இதோ நிற்குமவள்.அத்தனை கோபம்.
வீடு முழுதும் மின்விளக்குகள் பளிச்சென்று எரிந்து நிகழ்ந்துபோன ஏதோ அசம்பாவிதம் ஒன்றிற்கு வலுசேர்த்துக்கொண்டுஇருந்தன.வாயிற்கதவு வாழும் வீட்டில் கொள்ளை போனது போலது போல ஆ எனத் திறந்துகொண்டு நிற்கிறது.அவன் கண்கள் சிவந்துபோய்இருந்தன.
அவனுக்குக் குல தெய்வம் உடையார்பாளையம் அருகே யுள்ள ராயம்பரம் என்னும் அந்த குக்கிராமத்துச் செல்லி அம்மன். தன் இரு குழந்தைகளுக்கும் மொட்டைப் போடப் போனபோதுதான் அவன் தன் மனவியைத்தொலைத்து விட்டு வந்தான். கோவிலில் நேர்த்திக்கடன் முடித்துவிட்டு ப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து ஊர் திரும்பும் சமயம் உடையார் பாளையத்தைத் தாண்டி அந்த ப்பேருந்து வந்தது. திடீரென்று அவன் மனைவி தானமர்ந்திருந்த இருக்கையினின்று சாய்ந்துவீழ்வதுகண்டுப் பதறிப்போனான். குழந்தைகள் அவன் மடியில் நம்பிக்கையோடு உறக்கத்தில் இருந்தன. அந்தப் பேருந்திலேயே அவள் பிணமாகிப்போயிருந்தாள்.ஏன் எப்படி இது என யாரைப்போய்க்கேட்பது.அவள் செத்துப்போய்விட்டதாய் அங்கு அவசரமாய்அழைத்துவரப்பட்ட மருத்துவர் சொல்லித்தான் தெரிந்துகொண்டான். பேருந்தில் தூங்கி விழித்தபின்னும் மனித உயிர்த் தொலைப்பின் வலி அறியாப்பிள்ளைகள் குழப்பத்தில் இருந்தார்கள்.
பேரூந்துப்பயணி என்பதாலே உடலை அறுத்து வெள்ளைத்துணி கொண்டு சுற்றி பாலிதீன் பை யொன்றில் ஒரு பொட்டலமாய்த்தந்தார்கள். இத்யாதிகள் எல்லாம் கறாராய் அனுசரிப்பது அரசு மருத்துவ மனையின் தலையாய பணியாயிற்றே. திருமுதுகுன்றத்து மணிமுத்து ஆற்று மடுவிலே அவள் சாம்பலைக்கரைத்து விட்டான். ஆற்றுத் தண்ணீரை ஊற்றுக்கிணறு ஒன்றிலிருந்து வாளியில் மொண்டுமொண்டு தலைமேல் கொட்டிக்கொண்டான். முழுகி எழும் தண்ணீர் மணிமுத்தாற்றில் எப்போதேனும் மட்டுமே வருகிறது. . தன் நெற்றியில் தன் உடலெங்கும்திரு ந்ீறு குழைத்துப் பட்டை பட்டையாய்ப்பூசிக்கொன்டான். அவள் கதை முடிவுக்கு வந்தது.
நண்டும் சிண்டும் என அவன் எதிரே நிற்கும் அந்தக்குழந்தைகளை எப்படி வளர்ப்பது.வீட்டில் பெண் என்பவள் இல்லாவிட்டால் அது ஒருவீடாகுமா.அப்படித்தான் அவனுக்கும் அப்படி வயதாகிவிட்டதா என்ன. மனைவி வேண்டுமென அவன் உடல் விழித்துக்கொண்டு அவனைப் பிறாண்டினால் எங்கே போய்முட்டுவது. ஆக சுற்றி இருந்தோர் எல்லாருமாய்ச்சேர்ந்துதான் அவளைக்கொண்டுவந்து அவனுக்கு ரெண்டாம்தரமாய்க்கட்டிவைத்தார்கள்.
வந்தவள் செறுசு. அவள் சரி என்றாளே.காலம் அவளின் பருவ தாகத்தைக்கூட்டிக்கொண்டும் இருக்கலாம். எது ஒன்று எப்படி த்தொடங்கும் அது எங்கே போய் முடியும் யாருக்கு த்தெரிகிறது.அது எல்லாம் தெரிந்தால் நாம்தான் சும்மா இருந்துவிடுவோமா. ஆட்டுக்கும் வால் அளந்துதானே வைக்கப்படுகிறது என்கிறார்கள்..
இன்னது செய்வது என்று தெரியாமல் விழித்தான். அவளை வீட்டின் உள்ளே வரச்சொல்வதா வேண்டாமா. அவன் ஈகோ துருத்திகொண்டு நின்றது.அவள்தானே தெருவுக்குப்போனாள் .அவளே வரட்டும். நாம் என்ன கூப்பிடுவது. இந்த வீட்டினுள்ளே வராது அவள் அப்படியே எங்கேனும் போய்தான் விடுவாளா. அப்படிஎல்லாம் கூட நடக்குமா. நடக்கட்டுமே அப்படிப்போகிறவளை கூட்டி வைத்துக்கொண்டு நாம் என்ன குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது.என்ன வெல்லாமோ யோசித்தான். திறந்தே கிடக்கிறது வாயிற்கதவு. அவள் இன்னும் தெருவிலே தான் நிற்கிறாள்.
இதுதான் நடந்தது.
இரண்டு குழந்தைகளுக்கு இடையே படுத்திருந்த அவனை அவள் எழுப்பி இருக்கிறாள்.எதற்கு என்றால் அந்த அதற்குத்தான்.அவன் ஏதோ தயங்கினான்,யோசித்தான். திரும்பவும் பாயிலே படுத்துக்கொண்டான்.
'இது சரியில்லை' என்றாள்.
'எது ' அரைத்தூக்கத்தில் கேட்டான்.
'இப்படி ப்படுத்திருப்பது'
' என் குழந்தைகளிடையே நான் படுத்திருக்கிறேன்.தாயில்லாக்குழந்தைகள் உனக்குப் பரிதாபமாக இல்லை'
' நான் யார்'
' என் மனைவி'
'பிறகு'
' பிறகுதான்'
'இப்படியே படுத்திருப்பதற்கு நான் இங்கு எதற்கு'
' சரியில்லை'
' அது நானா அல்லது நீங்களா'
'வேண்டாம் விடு'
' இங்கென்ன வேலை எனக்கு?'
' வேலை இல்லைஎன்றே வைத்துக்கொள்'
அவன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். படுத்திருந்த அவள் எழுந்தாள். பாயைச்சுருட்டினாள்.வாயிற்கதவைத்திறந்தாள், இதோ அவள் போய் நிற்கிறாள்.
நட்ட நடு நிசி. வீதியின் நடுவே.
போய்தான் தொலயட்டுமே ஒரு முறை மனம் சொன்னது.குழப்பம் அதிகமாகியது. அருகே கிடந்த செல்போனைக்கையில் எடுத்தான். நண்பனை அழைத்தான். பேச்சு இப்படித்தான் போனது.
' மாத்ரு அவ இந்த ராத்திரியில கோவிச்சிண்டு போயி நடுத்தெருவுல நிக்கறா'
' இன்னும் நிக்கறாளா பார்' பதறிக்கேட்டான் நண்பன்
' ஆமாம் நிக்கறா'
'மொதல்ல அவள வீட்டு உள்ளாற கூப்பிட்டுண்டு வா. பிறகு பேசு'
' ஏன் '
' சொல்றத செய்'
'என் குழந்தைகள் எங்கிட்ட இருக்கிறது அவளுக்கு இடஞ்சலா இருக்காம்'
' ஒண்ணும் பேசாதே நீ அவள உள்ளாற கூட்டி வந்துட்டு அப்பறம் பேசு'
' எதுக்கு'
நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த அவள் மெல்ல நகர ஆரம்பித்தாள்.
' அவ நகர்ரா'
' சீ போய் அவள கூட்டிண்டு வந்துட்டு அப்பறம் பேசு. நாந்தான் உனக்கு இந்தக்கல்யாணம் பண்ணிவக்கணும் ஒத்த கால்ல நின்னவன். இப்ப சொல்றேன் வாசல்ல போய் நிக்கறவ அவள் கூட கொழந்ததான். அவள யாரோ பெத்து இருக்கா. அதானலதான் அது உனக்கு உரைக்கல. போடா போ அவள கூப்பிடு போ'
நண்பன் போன் பேச்சை முடித்தான்.
அவன் வாசலுக்கு ஓடினான். அவளைத்தேடினான். அவள் அங்கு இல்லை.எங்கே அவள்.இந்த நேரத்தில் அவள் எங்கேதான் போகமுடியும்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். வீடினுள்ளே குழந்தைகள் உறக்கத்தில் இருக்கிறார்கள். வீடு திறந்தே கிடக்கிறது.அவனுக்கு நெஞ்சை அடைத்தது. மயக்கமாய் இருந்தது.
எதிரே நண்பன் மாத்ரு டூவீலரில். அவள் பில்லியனிலிருந்து குதித்தாள்.
'நீ என்ன செய்வாய் என யோசித்தேன். உன் வீடு நோக்கி வண்டியைக்கிளப்பினேன் வரும் வழியில்தான் உன் மனைவி எங்கோ போய்க்கொண்டிருந்தாள். வண்டியில் ஏறு என்றேன். நடுங்கிப்போனாள். என் கால்களை ப்பிடித்துக்கொண்டு கதறினாள். பதறிப்போனேன். என் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். இதோ வந்து உன் முன்னால் நிற்கிறாள்.உன் மகள் இப்படிச்செய்திருந்தால். என்ன செய்திருப்பாயோ அதை மட்ட்ம் செய்'
தன் வண்டியைக்கிளப்பினான்.
'ஒண்ணு நன்னா தெரிஞ்சிகோடா தன் குடும்பத்தைத் தோத்துட்டு அப்பறம் ஒரு மனுஷன் சம்பாரிக்கறது எதுவுமில்லே.'
மாத்ரு புறப்பட்டான்.
அவள் அவன் நின்றுபோன இடம் தொட்டுக்க்கண்களில் ஒத்திக்கொண்டாள். அவனுக்கு க்கண்கள் பனித்தன. அவன் அவள் கைபித்துத்தன் வீடு நோக்கி நடந்தான்.
' மாத்ருன்னா அர்த்தம் அம்மா' 'அவன் அவளிடம் சொல்லிக்கொண்டே போனான்
---------------------------------------------------------------------------------------------------------------------.
.