Monday, April 26, 2021

கல்வி சிறந்த தமிழ் நாடு

 

 

 

 

 

கல்வி சிறந்த தமிழ் நாடு 

தொடங்கும்போதே எல் கே ஜி யில்  ஒரு குழந்தையை சேர்த்துவிட  குறைந்தது ரூபாய் இருபது லட்சம்  அப்புறமாய்  ஆண்டு ஒன்றுக்குச்செலவு வெறும் பன்னிரண்டு லட்சம் மட்டுமே.

.இப்படி ப்பணம் கரக்கும்  தனியார் பள்ளிக்கூடங்கள்  சென்னையில்  அனேகம் .. அங்கு போட்டாபோட்டியில்  மேட்டுக்குடி மக்களின் குழந்தைகள்  சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

  நடுத்தம் உள்ள பள்ளிகள் என்றால்  குழந்தையின் சேர்க்கைக்கு மூன்றரை லட்சம்.கொடுக்கவேண்டும்.

 எல்கேஜி அட்மிஷனுக்கு ஒரு லட்சம் ஐம்பதனாயிரம் என்று  மட்டுமே கேட்கும் ஏழைகளின் பால் செந்தண்மை பூண்ட பள்ளிகள். இங்குமுண்டு.

அரசு பள்ளிகள் இயங்கிகொண்டுதான் இருக்கின்றன.அவை சிறுத்து மதிப்பிழந்து தலை எழுத்தே என்று உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு காலம் தள்ளுகின்றன

.மய்ய அரசு நடத்தும் பள்ளிகள் என்பவை வேறு.  நவோதயா பள்ளிகள் இங்கு அனுமதிக்கப்படஇல்லை அவை தன் பாட்டுக்கு .இந்தியை பரப்பிவிட்டால் அப்புறம்  .தமிழர்களை   பேரழிவிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது?.ஆகத்தான் அவைகட்கு இங்கு அனுமதியில்லை.

   மய்ய அர்சின் கேந்திர வித்யாலாயாக்கள் மட்டும் சாதுவாய் ஆங்காங்கே இயங்கிக்கொண்டு இருக்கின்றன.அவைகட்கும் எமக்கும் சம்பந்தம்  ஏதும் இல்லை அவைகளை. ப்பார்க்கும்போதே தமிழர்களுக்கு எப்போதும் ஒரு ஒவ்வாமை.

சமச்சீர்கல்வி தமிழ் மண்ணில் நடைமுறையில் இருக்கிறது என்கிறார்கள் .மெட்ரிகுலேஷன் என்பதும் இல்லாமல் இல்லை.  இது சிபிஎஸ்இ பள்ளி என்கிற பலகையை மட்டும்  மறக்காமல் எல்லா பள்ளி வாயிலிலும் எழுதிவைத்து விடுகிறார்கள்

. இண்டர் நேஷ்னல் சிலபஸ் என்று ஒரு புது ரகம் ஜகஜோதியாய் முளைத்துவிட்டிருக்கிறது.அதற்கான பள்ளிகள். துவங்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளுக்கு இப்போதைக்கு நல்ல மார்கெட் வந்திருக்கிறது.

பல லட்சங்களைக் காலி செய்தால் ஒரு குழந்தையின் பள்ளிப்படிப்பை முடித்துவைக்கலாம். கல்லூரி படிப்பு விவகாரங்கள் அவை பல லட்சங்களை விழுங்கலாம். கல்லூரிகள் அனேகம் அவைகளுள் ஒன்றைத்தேர்வு செய்து ஒரு நல்ல இடத்தில் கெட்டியாக தொத்திக்கொண்டுவிட்டால் பிரச்சனை ஒருவாறு முடிவுக்குவரும்...

அரைகாசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம் என்கிற காலம் முடிந்துபோயிற்று.அரசு வேலை அதற்காக இரவு கண்விழித்து சர்வீஸ் கமிஷன்  தேர்வு அது இது என்று நாக்கை பிடிங்கிக்கொள்ள யாரும் தயாரில்லை  அரசு வேலைக்குப்பென்ஷன்  நிச்சயம்  என்கிற சமாச்சரம் கோவிந்தாவாகி ஆண்டுகள் பல ஓடிவிட்டன. அரசியல்வாதிகள் ஆக்கிரமிக்கும்.கட்சி பீடங்கள்,,சமூக.வலைகள்.சாதிய கொக்கிகள்,மத நெருடல்கள், இவைகளுக்கு மத்தியில்  அரசாங்க உத்தியோகம் பார்த்து பணி மூப்பில் பிரச்சனை ஏதுமில்லாமல்  வீட்டுக்கு வரத்தான் வாய்க்குமா என்கிற கவலை நிரந்தரமாகி இருக்கிறது.

நூற்றுக்கு இருபத்து ஐந்து சதவீதம் இளைஞர்கள் அடித்துபிடித்து மென்பொருள் வலை வளாகம் என்னும் பணியில் சிக்கி நாசமாகி வருகின்றனர். பன்னிரெண்டு மணி நேரம் தினம் தினம் வேலை செய்கிறார்கள்.வாயைப்பொத்திக்கொண்டு வாலை ச்சுருட்டிக்கொண்டு வேலை பார்க்கிறாகள்.தன்னையே விற்றுக்கொண்ட வாழ்க்கை..காசு வருகிறது.சுற்றி நிற்பவர்கள் மரியாதை காட்டுகிறார்கள்.விமானத்தில் பறக்க வாய்ப்பு வந்துவிடுகிறது.அப்புறம் என்ன அதுதான் . கைலாசம் வைகுண்டம் எல்லாம் காணவும் வாய்க்கிறது..

எந்த நிமிடமும் நடுத்தெருவுக்கு வரவாய்ப்புள்ள மென்பொருள் உத்தியோகம்.அது மட்டும்தானே  இப்போதைக்கு சோற்றுக்கு வழி. தன் உடம்பின் சத்து போனபின்னர் கண்கள்குழிவிழும்போது உண்மை. புரியும் எல்லாரும் நம்மை ஏமாற்றித்தான்விட்டிருக்கிறாகள்..

அரசாங்கம் தன் பொறுப்பை கல்வித்துறையில் சுறுக்கிக்கொள்ள மட்டுமே முனைப்பு காட்டுகிறது.தனியார் மய ஆளுகை கல்வித்துறையில் கொடிகட்டி ப்பறக்கிறது.அரைசம்பளம் வாங்கிகொண்டு ரெண்டு பங்குக்கு வேலை செய்யும் ஆசிரியர்கள்.திருக்கூட்டம் தனியார் துறையில் எப்போதும் இருக்கவே இருக்கிறது..பணி முடித்து வீட்டுக்குத்திரும்பும் நாள்வரை பள்ளி முதலாளியின் கால்களை க்கெட்டியாகப் பிடித்துக்கோள்ளும் கலை அறிந்தவர்கள் பாக்கியசாலிகள்.அவர்கள்மெய்யாலுமே ரட்சிக்கப்படுகிறார்கள்.

 

கல்வி வள்ளல்கள்ஆறுமுக நாவலரை ,பச்சையப்பவள்ளலை .அண்ணாமலை செட்டியாரை,அழகப்பவள்ளலை,ஜிடி நாயுடுவை சபாபதிமுதலியாரை,ஐடாஸ்கடரை,காயிதேமில்லத் பற்றி எல்லாம் பேசினால் கேட்பதற்குத்தான் ஆட்கள் எங்கே இருக்கிறார்கள். முதல்வர் காமராசரும், நெ து சுந்தரவடிவேலுவும் மு.வ வும் எப்படியெல்லாம் கல்வி சிறக்க சிந்தித்தார்கள் என்பதைப் பேசத்தான் ஆட்கள் உண்டா என்ன?

லட்சம் லட்சமாய் க்கொட்டி தனியார் நிறுவனத்தில் குழந்தைகளைப் படிக்கவைப்பதும் பைசா செலவு செய்யாமல் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்கவைப்பதுவும் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பிற்கு அடித்தளமாக ஆதாரமாக அமையும். இதன் கதை வேறு அதன் கதை வேறுதான்.

மா நில அளவில் முதல் மாணாக்கனை த்தயார் செய்த அரசாங்க பள்ளிக்கூடங்கள் இருந்த காலம் ஒன்று இருந்தது. கம்பீரமாகப்பாடம் நடத்தி ப்பெருமை சேர்த்த ஜாம்பவான்கள் புழங்கிய அரசாங்கப்பள்ளிகள் எத்தனையோ இருந்தன. அறிஞர்கள் அப்துல் கலாமை, சி என் அண்ணாதுரையை, மயில்சாமி அண்ணாதுரையை நாட்டிற்குத்தந்த அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கத்தான் செய்தன.

இன்று எத்தனையோ பள்ளிகள் எத்தனையோ நடைமுறைகள் எத்தனையோ பாடதிட்டங்கள் எப்படி எப்படியோ வேலை வாய்ப்புக்கள்.

எல்லோரும் ஓர்விலை எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டுமன்னர் என்றெல்லாம் இனி பாடவாய்ப்பே இல்லை.

-------------------------------------------------------------------------

 

 

 

.

 

 

 

 


யயாதி

 

யயாதி வழங்கிய காண்டேகரும் மொழிபெயர்த்த  கா ஸ்ரீ ஸ்ரீ யும் 

மகாபாரதக்கதையில் வரும் பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி.அத்தினாபுரத்துச்சக்கரவர்த்தி நகுஷனின் குமாரன். நகுஷனோ இந்திரனை வெல்லும் ஆற்றல் பெற்றும் அகத்தியமுனியிடம் சாபம் பெற்றவன்.

யதி, யயாதி இருவரும் நகுஷனின் புதல்வர்கள் .யதி அரண்மனையை விட்டு நீங்கி வனத்தை சரண் அடைகிறான். யயாதி அரண்மனையை அலங்கரித்துக்கொண்டே வளர்கிறான்.’நகுஷ ராஜாவின் மக்கள் ஒரு போதும் சுகமாக வாழமாட்டார்கள்’ என்கிற அகத்திய முனிவனின் சாபம் இந்த சகோதரர்களுக்கு தலைக்கு மேலாக அச்சுறுத்திக்கொண்டே நிற்கிறது.

’யயாதி’ என்கிற இந்த நாவல் ஒரு புராண நாவலன்று.புராணக்கதையினை ஆதாரமாகக்கொண்டு காண்டேகர் மராத்தியில் படைத்திட்ட மாபெறும் அற்புதம்.யயாதியை பெண் பித்தனாக நிறுத்தும் மகாபாரதத்தினின்றும் சற்று ஆழமாகச்சிந்தித்து பெருங்கவி காளிதாசனோடு காண்டேகர் ஒத்துப்போகிறார்.

அக்கினியை அந்தணர்களை சாட்சியாய்க்கொண்டு யயாதி தேவயானியை மணக்கிறான்.தேவயானியோ அசுர குரு சுக்ராச்சாரியரின் மகள். தேவயானி யயாதிக்கு வழங்க மறுத்த அந்த அன்பினை தேவயானியின் பணிப்பெண்ணாய் ப்பணிக்கப்பட்ட சர்மிஷ்டை வழங்குகிறாள்.

காளிதாசனின் கூற்றுப்படி தன் சொந்த சுகத்தையும் கடந்து கணவனின் அன்புக்காக நிற்பவளாய் பெண் வெற்றி பெறுகிறாள்.சர்மிஷ்ட்டயை  காண்டேகர் அப்படித்தான் பார்க்கிறார்.கணவனுக்கு மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பிற்குத்தேவையான பரிவு ஈரம் தீவிரம், மேன்மை ஆகிய எதுவும் தேவயானிடமிருந்து யயாதிக்குக்கிட்டவில்லைதான்.

சஞ்சீவினி என்னும் உயிர்ப்பிக்கும் வித்தையை சுக்கிராச்சாரியரிடமிருந்து கற்றுக்கொண்ட கசன் தேவருலகம் செல்கிறான்.துறவி கசன் தேவர்களின் குரு பிரகஸ்பதியின் குமாரன்.ஆங்கிரச முனிவரின் பேரன். மகாபாரதக்கதையிலிருந்து  காண்டேகரின் கசன் வித்தியாசமானவன் .அளவறிந்து வாழ்பவன்.எல்லைகளை மதித்து வெற்றிகொள்பவன்.தேவயானியிடம் கொள்கின்ற முதற்காதலை ஞானத்தால் செரித்து வெற்றி கொள்கிறான். காமவிஷயத்தை ஆத்மபலத்தால் சமாளித்து எழுகிறான்.யயாதி அவனின் சகோதரன் யதி சர்மிஷ்டை சர்மிஷ்டைக்கும் யயாதிக்கும் புதல்வனான புரு ராஜமாதா நகுஷனின் மனைவி அனைவரிடமும் இணையான அன்பினை ப்பொழிகின்ற மனோதர்மத்தை தனதாக்கிக்கொள்கிறான்.

காண்டேகர் கசனின் கடிதத்தை தேவயானி படிப்பதாக எழுதுகிறார். இயற்கைக்கும் இறைவனுக்கும் நடுவிலே மிகச்சிறந்த இணைப்பாகத்திகழ்பவன் மனிதன் என்றும் தாகத்தினால் தவிக்கும் மனிதனின் வேட்கையைத்தணிக்கும்  அந்த ஆறு அவன் சிறிது முன்னால் ஆழத்தில் சென்றால் அவனுடைய உயிரையே பறித்து விடுகிறது என்னும் விஷயத்தைச்சொல்கிறார்.

மனிதன் இரட்டைகளாகவே உலகைப்பார்க்கிறான். நன்மை தீமை, தர்மம் அதர்மம்,உடல் ஆத்மா,ஆண் பெண், என்கிறபடியாய்.இறைவனோ எல்லா இரட்டை நிலைகளையும் கடந்தவன் என்கிறார் காண்டேகர். வடலூர் வள்ளல் ராமலிங்கரின் இறைவன் கல்லார்க்கும் கற்றவர்க்கும்,வல்லார்க்கும் மாட்டார்க்கும்,மதியார்க்கும் மதிப்பவர்க்கும், நரர்களுக்கும் சுரர்களுக்கும் என்கிற இரட்டை நிலைகளைக்கடந்தவன் என்பதை இங்கே நினைவுபடுத்தி சிந்திக்கலாம்.

காண்டேகர் குறிப்பிடுகிறார் ‘இல்லறம் என்பது உயர்ந்த தூய வேள்வி. ஆயிரம் அசுவமேத யாகங்களின் புண்ணியம் இதில் அடங்கிக்கிடக்கிறது. எனினும் இந்த இல்லற வேள்வி அது நிறைவேறவேண்டுமானால் கணவனும் மனைவியும் அதற்குக்கொடுக்கவேண்டிய முதல் அவி தங்கள் தங்கள் அகங்காரத்தை துறப்பதுதான் இந்த அற்புத விஷயத்தை தமிழ் வள்ளுவரின் மங்கலம் என்ப மனை மாட்சியோடு எண்ணிப்பார்க்கலாம்.

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து                 குறள் எண் 48).. என்கிற துறவறத்தை வெல்கின்ற இல்லறத்தையும் ஒப்பிட்டு நோக்கலாம். இந்தப்புனிதத்தில் ஆணுக்கு ஒரு விளக்கமும் பெண்ணுக்கு ஒரு விளக்கமும் தருகிறார் காண்டேகர். ஆண் உருவமற்ற பொருட்களின் பின்னால் ஓடுகிறான்..புகழ், ஆத்மா,,தவம், வீரம் ஆண்டவன்முதலிய விஷயங்கள் அவனை விரைவில் கவர்கின்றன.ஆனால் பெண் இவற்றில் சடக்கென்று மயங்குவதில்லை.அவளை க்காதல், கணவன்,குழந்தை,,தொண்டு,குடும்பம் என்கிற உயிருள்ள பொருள்களே பெரிதும் கவர்கின்றன.

காண்டேகர் ஒரு வரையறை தருகிறார்.’’ பெண் மனத்தை அடக்கித்தியாகம் செய்வாள்.ஆனால் அது உயிருள்ள பொருள்களுக்காக மட்டுமே. உருவமற்ற பொருள்களிடம் ஆணைப்போல் அவள் ஆர்வம் கொள்வதில்லை தன்னிடமுள்ள அனைத்தையும் தந்து வழிபடுவதற்கு அல்லது தன் கண்ணீரை அபிஷேகம் செய்வதற்கு அவளுக்கு மூர்த்தம் வேண்டும். ஆண் இயல்பிலேயே வானத்தை வழிபடுகிறான்.பூமியை வழிபடுவதே பெண்ணுக்கு மிகவும் பிடித்தமானது’

பொறுப்புள்ள வாசகனை, காண்டேகரின் எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. படித்து படித்து, சிந்தித்து சிந்தித்து,ரசித்து ரசித்து புரிதலை ஆழமாய் அகலமாய் க்கொண்டுமட்டுமே இந்த ப்படைப்பினை அணுகமுடிகிறது.

யயாதியின் உயிர் நண்பன் மாதவன் .சர்மிஷ்டையைக்காத்து அப்புறப்படுத்தியதில் இயற்கையின் இடரால் ஆரோக்யம் இழந்து மாய்ந்தவன். நட்புக்காக த்தன் உயிரைத்தியாகம் செய்த உத்தமன்.அவனின் இழப்பில் யயாதி இப்படிப்பேசுகிறான்.

‘மனிதன் என்று நாம் எவனை மதித்துப்போற்றுகிறோமோ ஆண்டவனின் இவ்வுலகத்து ப்பதுமை என்று கூறி எவனுடைய செயல் திறமையை வழிபடுகிறோமோ அந்த மனிதன் எவன் ? உலகம் என்ற விரிவான மரத்திலுள்ள சிறிய இலை அவன்’ இந்தப்பேரண்டத்தைப்பெருவனமாய் இப்பூவுலகத்தினை ஒரு விருட்சமாய் மனித இருப்பை ஒரு இலையாய் ஒப்பீடு செய்கிறார் காண்டேகர் மாகவி.பாரதியின் காலமும் காளிசக்தி என்னும் ஒரு வண்டும் நம் நினைவுக்கு வந்துவிடும்.

சர்மிஷ்டை குமாரன் பிருகுவுக்குக் கசன் தன் தவ வலிமையால் இளமையை மீட்டுத்தருகிறான் புதிய வாழ்வை பெற்றுக்கொண்ட யயாதி இத்தகு அறிவுரை வழங்குகிறான்.’காமம் பொருள் என்னும் இவ்விரு புருடார்த்தங்களை எப்போதும் கடிவாளமிட்டு காக்க வேண்டிய கடமை அறம் என்னும் புருடார்த்தத்திற்கானது. அறம் பொருள் வீடு என்கிற புருடார்த்தங்களில் இன்று  பொருளும் இன்பமும் மலிந்து கிடக்கின்றன.அறம் அதனைக்கட்டுப்படுத்தாது செயலிழந்து ஊனமாகிக்கிடப்பதையும் சுட்டுவது தன் விழைவு என்கிறார். காண்டேகரின் பெரு விருப்பம் அது என்று அறிந்து நாம்  பிரமிக்கிறோம்.

யயாதியைத்தமிழில் தந்த கா.ஸ்ரீ .ஸ்ரீ( கா.ஸ்ரீ. ஸ்ரீ நிவாசார்யார்) மொழிபெயர்ப்பில் உச்சத்தை எட்டியிருக்கிறார்.மூலமா அல்லது மொழிபெயர்ப்பா என்பதனை வாசகன் பிரித்து அறியமுடியாமல் திக்குமுக்கு ஆடுகிறான்.மூலத்தை வென்று நிற்கும் மொழிபெயர்ப்பு என்பது யயாதியில் சித்தித்து இருக்கிறது. நாவலைப்படிக்கும் போதெல்லாம் மேலட்டையைத்திருப்பி திருப்பி மொழிபெயர்ப்புதான் என்று உறுதி செய்துகொள்ள வேண்டியதாகிறது.

தமிழ் வாசகர்களுக்கு காண்டேகரை அறிமுகம் செய்து ஞானசம்பந்தம் ஏற்படுத்திக்கொடுத்தமை கா ஸ்ரீ ஸ்ரீ என்கிற மொழிபெயர்ப்பாளனுக்கு வசப்பட்டிருக்கிறது. தாய்மொழி தமிழ் ஆகி பல இந்திய மொழிகளில் வல்லமை பெற்று நமது தமிழ் பண்பாட்டுக்கு கருத்து வளம் சேர்த்தமை போற்றுதலுக்குறிய தொண்டு என்று வரலாறு அவரின் படைப்பு பற்றி என்றும் பெருமையோடு பேசும்.

--------------------------------------------------------

 

 .


எல்லாம் ஒரு கணக்கு

 

 

எல்லாம் ஒரு கணக்கு            

 

 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இன்றைக்கு ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டு இருக்கிறார். யாரைக்குற்றம் சொல்வது ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கத்தையா இல்லை ராஜ்ய சபா உறுப்பினராக்கப்பட்ட  அந்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் ககாய் அவர்களையா.

 ஒரு அரசாங்கத்தை நிர்வகிக்க ஆயிரம் தில்லுமுல்லுகள் அரங்கேறும். ஆனால் நீதித்துறைக்கென்று குறைந்தபட்ச குணாம்சங்கள்  இருந்தே ஆகவேண்டும். நீதித்துறை சொல்வதை மக்கள் பொறுப்புடன் செவிமடுக்க வேண்டும். நீதித்துறை தனது கண்ணியத்தை இழக்காமல் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்கவேண்டும். ஜன நாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் நாட்டின்  ஆளும்வர்க்கமும் நீதிமன்றமும்  நிர்வாக எந்திரமும் அது அது தனக்கே உரிய பாதையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும். அவைகளின் செயற்பாடுகளுக்கிடையே ஒரு ஒழுங்கமைதி நிலவவேண்டியது கட்டாயம்

சட்டத்தைப்பாதுகாக்கின்ற நீதி அமைப்பிற்கும், சட்டம் இயற்றும்  தகுதியும் ஆற்றலுமுடைய  மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பெரு அமைப்புக்களுக்கும் இடையே அவ்வப்போது எழும் பிணக்குகள் களையப்படவேண்டும் என்கிற  ஆரோக்கியமான நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகச்சொல்லிக்கொள்கின்றனர்.

முன்னமேயே  நீதிபதிகளை  நிர்வகிக்கின்ற கொலிஜியத்திற்கும் மய்ய அரசாங்கத்திற்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. அப்படிப்பிரச்சனைகள் இருப்பதும் கூட சோரமில்லா செயல்பாட்டின் வெளிப்பாடு என்று கொள்ளமுடியும். நீதி பரிபாலன அமைப்பும் நிர்வாக இயந்திரமும்  ஆரோக்கியமான இடைவெளிவிட்டு இயங்கினால் மட்டுமே ஒன்றுக்கொன்று நன்மைசெய்யும். ஒன்றை ஒன்று புரிந்துகொள்ள முயல்கிறேன் என்று தொடங்கிவிட்டால் நீதி நிர்வாகம் மட்டுமே தன்  சுயம் இழந்து நீர்த்துப்போகும் .அரசியல்வாதிகளோடு விவாதித்து அவர்களை  வாதத்தில் வென்று முடிவெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. முடிவாக யார் கையில் தேசிய பொருளாதாரத்தின் சாவி இருக்கிறதோ அவர்கள் மட்டுமே இறுதியாக வெல்ல வாய்க்கும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இன்று நாடு முழுவதும் பெரும் பிரச்சனைக்கு மூலகாரணமான குடியுரிமை திருத்த சட்டம் அதனைத்தொடர்ந்து குடிமக்களின் தேசியப்பதிவேடு, குடியுரிமைப்பதிவேடு என அடுக்கி வரும் சமூக முஸ்தீபுகளுக்கு வித்தாக அமைந்தது நீதிபதி ககாய் அவர்களின் அஸ்ஸாம் மாநிலத்திற்கான உச்ச நீதிமன்ற  வழிகாட்டுதலே ஆகும். அஸ்ஸாம் மா நிலத்தில் 19 லட்சம் மக்களை குடியுரிமைப்பதிவேட்டிலிருந்து விலக்கிவைத்து மாபெரும் பிரச்சனைகளுக்கு அடித்தளமிட்டது அவர் வழங்கிய தீர்ப்பின் வெளிச்சத்திலேயே என்று சொல்லமுடியும்.

சபரிமலைக்கடவுளை எந்த வயதிலும் பெண்கள் சென்று வழிபடலாம் என்கிற ஒரு தீர்ப்பினை எதிர்த்து முளைத்த  ஒரு  வழக்கு நீதிபதி ககாய் அவர்களை த்தலைமை  நீதிபதியாகக்கொண்ட  நீதிபதிகளின் இருக்கை அமர்வுக்கு வந்தபோது அந்த சபரிமலைக்கடவுளைப் பெண்கள் வழிபடும் முடிவினை   நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட வேறு ஒரு இருக்கை அமர்வுக்கு மடை மாற்றி, , மய்ய அரசின் கனிவான கவனத்திற்கு த்தன்னை நகர்த்திக்கொண்டார் என்றும்,ஒரு குற்றச்சாட்டு அவர் மீது சொல்லப்படுகிறது.

தன்கீழ் பணியாற்றும் ஒரு குழுமத்தின் உறுப்பினரான ஒரு பெண் ஊழியரை  நீதிபதி ககாய் தவறான முறையில் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டு எப்படியெல்லாம் கையாளப்பட்டது என்பதனை இந்த நாடே அறியும்.அந்தப்பெண்ணின் கணவர்,  சட்டம் ஒழுங்கினைக் கையாள்பவர்களால் என்ன பாடுபட்டார் என்பதனை அறிந்துதான் வைத்து இருக்கிறோம். அவருக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட விஷயமும், உச்ச நீதி மனற அலுவலகப் பணியிலிருந்து அவர் விரட்டப்பட்ட சமாச்சாரமும் தொடரப்பட்ட சோகங்கள். நீதிபதி ககாய்  பணிஓய்வை அடுத்து  பதவிக்கு வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் அப்பெண்ணுக்கு மறுக்கப்பட்ட பேறுகால விடுப்பும் கிடைத்தது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் பணியும் கிடைத்தது. அவமானப்படுத்தப்பட்ட அப்பெண் ஊழியருக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு  முற்றிலும் துடைத்து எறியப்பட்டது.

, தனக்கு எதிரான வழக்கில் தானே நீதிபதி என்கிற விஷயம்  நீதிபதி ககாய் அவர்களால் புதிய நடைமுறையாக உச்ச நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. வெற்றுக்கற்பனை என  உலகம் அறிந்த கடவுளர் கதைகளில் கூட இந்த சாதாரண அத்துமீறல் அரங்கேறியது இல்லை. வழக்கு உரைக்க  உதவிக்கு ஒரு வக்கீல் வைத்துக்கொள்ளவும் அந்தப்பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யக்கூட அனுமதிக்கப்படவில்லை. இவ்வழக்கு சார் நீதிமன்ற நடவடிக்கைகள்.குறிப்பெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கையின் நகல் எதுவும் அந்தப்பெண்ணுக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் ராம் நாத் கோயாங்கோ சொற்பொழிவு 2018 நிகழ்வில் பங்கேற்று நீதிபதி ககாய் ஆற்றிய உரை நாட்டு மக்களை அவர் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நிற்பவர் எனத்தான் வெளிக்காட்டியது. நியாயத்திற்கும் நேர்கொண்டபார்வைக்கும் தன்னை உதாரணமாகக்கொள்ள வழிகாட்டுவார் எனத்தான் நாடு எதிர்பார்த்தது. விசாரணைக்கைதிகளாக  மட்டுமே சிறையில் வாழும் லட்சக்கணக்கான இளைஞர்களைப்பற்றிய அவரின் புரிதலும் நீதிமன்றங்களின் நிழலைக்கூட தொட்டுப்பார்க்காத எளியமனிதர்களின் சமூக நம்பகத்தன்மைக்கு விசுவாசமாக நீதி அமைப்புக்கள் நிற்றல் என்பது பற்றி அவரின் சிந்தனையும் நம்பிக்கைத்தருவதாக அமைந்தது.

ஜனவரி 2018ல் நீதிபதியாக இருந்த ககாய் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றிய. விமரிசனம் வழங்கியவர். அரசியல் தொடர்புடைய வழக்குகளை நீதிபதிகளுக்கு வழங்குவதில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சார்பு நிலை கடைபிடிக்கப்படுவதாய்  குற்றம் சாட்டியவர் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராகக் கலகக்குரல் தந்த நான்கு நீதிபதிகளில் ஒருவர்.  நீதிபதிகள் குரியென் ஜோசஃப், செலமேஸ்வர் ரஞ்சன்,ககாய் மதன்லோகர். ஆகியோர்  அப்படி எதிர்ப்புக்குரல் தந்த அந்த நால்வர்.

நீதிபதிகளோடு நட்பு பேணுவது என்பது அரசியல்வாதிகட்கு ஏற்புடையது அன்று. நீதிபதிகளுக்கு  அவர்கள் பணியில் ஊறு விளைவிக்கும் அம்சமாகவே அத்தொடர்பு அமைந்துவிடும். அமித் ஷா  தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராக நியமனம் பெற்றது அவ்வப்போது விமரிசனத்திற்கு உள்ளாகவே செய்கிறது. சொராபுதீன் போலி என்கவுண்டர் விசாரணை தொடர்பான நீதிபதி லோயா திடீரென மரணமடைந்த  அந்த சமாச்சாரம்தான் எப்படி என்பதுவும் புதிராக பேசப்படுகிறது.

 நாட்டின் ஜனாதிபதிக்கு  தேச நலன் குறித்து சட்ட ஆலோசனை வழங்கும் நிலையில், உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த ஒருவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி எப்படித் தேவையாகிறது என்கிற விஷயம் மக்களால் கணக்கில் கொள்ளப்படும். இதனையெல்லாம் அறியாதபடிக்கு சில அப்பாவிகள் இப்படிச்செய்துவிட்டார்கள் என்று யாரேனும் சொன்னால் வாய்விட்டு சிரிக்க மட்டுமே வாய்க்கும்.

இவைகளை யெல்லாம் மீறிய கணக்கொன்று ஆளுங்கட்சிக்கு இருக்கவே செய்யும். மேதகு. முன்னாள் குடியரசுத்தலைவர், அப்துல்கலாம், இன்றைய குடியரசுத்தலைவர்  மேதகு ராம் நாத் கோவிந்த், ஆகியோர்  ஏதோ ஒரு கணக்கில் அத்தனை உயர்ந்த பதவிகளுக்குத்தேர்வுபெற்றார்கள். முன்பு திரு. கல்யாண் சிங்க்   உ பி யில் எப்படி முதன்மை  அமைச்சரானார் .இன்று தமிழகத்தில் தேசிய ஆளுங்கட்சியின் மாநிலத்தலமைக்கு  திரு முருகன் தேர்வான விபரம்தான்  எப்படி ? எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படைச்சூத்திரம் இல்லாமல் இல்லை.

------------------------------------------------------------------------------------

 

 

 


 

 

கலியுகன் கோபியின் ’மனக்கண்ணாடி’ ஒரு பார்வை  

’மனக்கண்ணாடி’ கவிஞர் கலியுகன் கோபியின் எட்டாவது கவிதைத்தொகுப்பு.கவிதைகள் வரிசையாய் எண்களிடப்படவில்லை.அவைகள் தலைப்புப்பெயர் இல்லாமலும் வந்திருக்கின்றன.எப்படியும் அவை எண்பதுக்கு மிகும்.எல்லாமே குறுங்கவிதைகள்.பளிச்சென்று செய்தி சொல்லும் புதுக்கவிதைகள். நேராக விஷயத்தை வாசகனுக்கு வெடித்துச்சொல்லும் கவிதைகள்தாம் அத்தனையும்.

முதல் கவிதையே இரு வேறு முரண்கள் பற்றிப்பேசுகிறது. அம்மா வறுமையில் அகப்பட்டு வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டாள். இன்மைதான் அனைத்திலும் கொடியது என்பார் திருவள்ளுவர். மனைவி பெருமையோடு வாழ்க்கையை அனுபவிக்கிறாள். நுகர்வில் நல்லதும் தீயதும் ஒரு கூரையின் கீழ். தாயின் உழைப்புத்தான் மருமகளை வளம்பட வாழவைத்துவிட்டுப்பின் இற்றுக்கொண்டது. கவிஞர் நல்ல தொடக்கத்தை கன சிந்தனையோடு தொடங்குகிறார்.

குழந்தையும் கவிதையும் ஒன்று என்று சொல்கிறது அடுத்தகவிதை .குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதறிவோம்.கவிதையை அதனோடு மூன்றாவதாகச்சேர்த்துக்கொள்ளச்சொல்கிறார் கவிஞர்.

குருடர் பள்ளி முன் ஒரு மேடை.அதனில்கோரிக்கை முழக்கங்கள் எழுப்புகிறார்கள்.’ஒளி படைத்த கண்ணினாய் வா வா’ என்று.கவிஞர் ஒரு சோகமான அனுபவத்தைக்கவிதையாக்கியிருக்கிறார்.

காலம் தந்த தோல்விகள் என்கிற அற்புதமான சொல்லாடலை முயற்சியின் முதல் படி என்று தொடங்கும் கவிதையில் சந்திக்கிறோம்.தோல்விகள் வெற்றிக்கான காத்திருப்பு அன்றி வேறென்ன என்கிற வரி மந்திரம்போல்  வேண்டுமடா சொல் இன்பம் என்பார்களே அப்படி வாசகனுக்கு அனுபவமாகிகிறங்க வைக்கிறது.மனிதன் தானே தன் சமுதாய அமைப்பைக்கெடுத்துக்கொள்ளச் சாதியை வளர்த்து விட்டிருக்கிறான். பாரதி வேதம் நிறைந்த நாடென்பார் கோபியோ சாதிகள் நிறைந்த நாடென மனம் கொப்பளிக்கிறார்.

ஜன நாயக நாட்டில் தேர்தல் வருகின்றது.வேட்பாளர்கள் எறும்பாக உழைக்கின்றனர். நெல் மணியென வாக்கு சேகரிக்கப்படுகிறது.தேர்தல் முடிந்து அவர் வெற்றியாளர் ஆகிறார்.  இப்போது பாருங்கள் அவர் செயல்பாடுகளை. கொள்கைகள் நீர்த்துப்போன அவரின் நடவடிக்கைகளை .சுய நலமே இன்று அவரின் பிரக்ஞை அழகாகச்சொல்கிறார் கவிஞர்.

உப்பு நீராம்

வியர்வையில் குளித்தோம்

உழைப்பைச்சிலுவையாய் சுமந்தோம்’ என்று தொழிலாளியின் துயர் பற்றி யதார்த்தமாக ச்சொல்லிச்செல்கிறார். பெறுகின்ற ஊதியம் காற்றினிலே கரைந்த கற்பூரம் என்கிறார், இருக்கும் அது இல்லாமலே போய்விடும் ஒரு நாள் என்பதனை அற்புதமாகக்கூறுகிறார்.

பறவைகளே தரை இறங்காதீர். இந்த மண் மனிதனின் காலடி பட்டு தூய்மைகெட்டுக்கிடக்கிறது என உள்ளம் உழல்கிறார் கவிஞர். ‘மனக்கண்ணாடியில்’ கலியுகன் கோபி  மெய்யாக சாதனையாளராகிறார்..

’கொத்திச்சென்றுவிடும் கழுகுகள்

கோழிகளுக்குத்தெரிவதில்லை’ என்று பேசும் கவிஞர் அமெரிக்கக்கெடுமதியின் சூழ்ச்சியை சூசகமாக சொல்லித் தான் யார் பக்கம் என்பதை வாசகனுக்கு இயம்பிவிடுகிறார்.

அத்தனைக்கவிதைகளையும் நூலகர் சியாமளா  மொழிபெயர்த்துக்கொடுக்க அவை இதே புத்தகத்தில் கம்பீரமாகக்காட்சி தருகின்றன.  மொழிச்சிக்கல் இல்லாத எளிய நடை மொழிபெயர்ப்புக்கு மெருகு கூட்டுகிறது.மொழிபெயர்ப்பாளர் பாராட்டுக்கு உரியவர்.

‘poverty is the only

Case of hut’  என்பது நச்சென்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Blossoming and withering natures’ rule ?’ என்பது வாசகனைச்சிந்திக்க வைக்கிறது.

------------------------

 

 

 

 

 


கடலூர் தொழிலாளர் கல்வி மய்ய சிந்தனைகள் சில

 

 

கடலூர் தொழிலாளர் கல்வி மய்ய சிந்தனைகள் சில

நல்லதொரு சமுதாய அமைப்புக்காக  தம் உழைப்பைச்செலுத்துகின்ற எண்ணற்றோர் போற்றப்படவேண்டியவர்களாவர்.சுரண்டலற்ற சமுதாயம்  தமது லட்சியமாகக்கொண்டு வாழ்ந்த தலைவர்கள் நமக்கு என்றும் வழிகாடிக்கொண்டிருக்கிறார்கள்.மனித உழைப்பே மனிதனை பிற விலங்குகளின்று வேறுபடுத்தியது.மனித முயற்சி இற்றுப்போயிருந்தால் மனிதன் மரத்தின் மீதே இன்னும் உலவிக்கொண்டு இருந்திருப்பான்.உழைப்பும் ஊக்கமும் அவனை உயர்த்தி இன்று தகவல் பரிமாற்றப்புரட்சி வரை கொண்டு சேர்த்துள்ளது.இந்த உழைப்பினைச்சுரண்டி மனிதகுலம் ஒரு பக்கம் உயர்வதும் மறுபக்கம் ஏதுமற்று நிற்பதும் சகித்துக்கொள்ளமுடியாத ஒன்று. இந்தஞானத்தை ச்செரித்துக்கொள்ளவே நம்மை நாம் தகுதியாக்கிக்கொள்ளவேண்டும்.

நாம் நீர்த்துப்போகாமல் சமுதாயத்திற்காகப்பணியாற்றுவதே நமது வழிகாட்டிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் நேர்மையாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார் நடு நாட்டு அப்பர் பெருமான்.பணி செய்வதும் அப்பணியை நமது அகங்காரத்திற்கு வித்தாகாது காப்பதும் வேண்டியே பணி செய்வதையும் கிடப்பதையும் பற்றிப்பேசுவார்.

சித்தாந்தமும் செயல்பாடும் ஒன்றையொன்று சார்ந்த விஷயங்கள். அவை ஒன்றையொன்று வளப்படுத்தவும் வலுப்படுத்தவும்முடியும்.  மார்க்சிய சித்தாந்தங்கள் மட்டுமே கற்றறிந்து முடங்கிப்போன  விமானப்படை

ஆ.சீனிவாசன்,சித்தாந்தம் தெளியாது  போராட்டச்செயல்பாடுமட்டுமே தொடர்ந்து கொண்டிருந்த புதுவை மஞ்சினி ஆகியோர் வீணாய்ப்போன இரு உதாரணங்கள்.. ஆ.சீனுவாசன் பிஜேபி கட்சிக்குப்போய் சிறுத்துத் தொலைந்துபோனார் புதுவை.மஞ்சினி பாமகவுக்குப்போய் பிறகு காணாமல் போனார்.  கற்பவை கற்றலும் அதன் வழி நிற்றலும் இணையான விஷயங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

உலக அரங்கில் தாராளமயம் பேயாட்டம் ஆடுகிறது.செல்வந்த நாடுகள்பொருளாதார உச்சத்திலும் ஏழை நாடுகள் அதல பாதாளத்திலும் சிக்கித்தவிக்கின்றன.படித்த வர்க்கத்திற்கோ சுய நலன் மட்டுமே பிரதானமாகிக்கிடக்கிறது.

நமது நாட்டில் சமூக யதார்த்தங்கள் புறந்தள்ளப்பட்டு,உள்ளீடற்ற கலாச்சாரம் உள் நுழைய அனுமதி தரப்பட்டுள்ளது.பொதுத்துறை திட்டமிட்டு அழிக்கபடுவது தொடர்கதையாகிறது. சுதேசியும் சுயசார்பும் உலகமயத்தால் விளைந்த  காற்றில் பறந்துபோய்விட்டன. வாழ்வியல் மட்டுமே பிதானமாகிப்போன அரசியல் கபடர்கள் மத வாத சக்திகளோடு கை கோர்த்து நிற்பதைக்கண்கிறோம்.

இந்த மண்ணையும் மக்களையும் நேர்பட விளங்கிக்கொள்ளாது,அடிமனதிலிருந்து நேசிக்காது மார்க்சீயம் நமக்கு சரியாக வசப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாம் திரளாகக்கூடும்போதெல்லாம் ஆளுக்கொரு கை மண் எடுத்து ஒரு சிற்றூரின் குளத்தை ஆழப்படுத்துவோம். ஒரு சிற்றூரின் சாலையி ஒரு முழத்தை சீர் செய்குவோம்.

தாய்மொழி வளர்ச்சிக்குப்பாடுபடுவதும்,சமூக அவலங்களிலிருந்து எளியவர்களை க்காப்பதும்,சாதி சமய இன துவேஷக்கருத்துக்களை புறந்தள்ளக்கற்பதுவும்,இயற்கை ச்சீற்றங்கள் ஓங்கி எழும்போது எளியவர்களொடு துணை நிற்பதும்,பெண்டிரின், சிறாரின் நலன்களுக்கு அரணாக அமைந்து நிற்பதும் இயற்கை ச்செல்வ வளங்கள் கொள்ளை போகாமல் காக்கப்படுவதும் நம் பணித்தளங்ளாகும்.

மக்கள் சக்தி வெற்றி பெற ஒன்று பட்டு நிற்பதும் சிந்திப்பதும் செயல்படுவதும் ஆக்கம் தருவன எனத்தெளிவோம். ஆக அதற்குத்தக நம்மை ஒழுங்கமைத்துக்கொள்வோம்.

கூடுதலாய்ப்பணி ஆற்றுவதே கூடுதலாய்ப்பணி நிறைவுற நம்மைத் தகுதிப்படுத்தும்

----------------------------


மேதினச்செய்தி

 

மேதினச்செய்தி                   

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்  அவன் போற்றுதலுக்குரியவன் இதை ஓங்கி ப்பிரகடனப்படுத்துவதே ’மே தினம்’. அந்த நாள் உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத்திரு நாள். தொழிலாளியின் இன்றியமையாமையை நமக்கு உணர்த்தும் நாள்.

1886 மே முதல் நாள் அமெரிக்கத்தொழிலாளிகள் சிக்காகோ நகரில் ஹே மார்கெட்பகுதியில் பஞ்சாலைத்தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் மட்டுமே  தொழிலாளியின்  உழைப்பதற்கான நேரம் என்பதை.உரக்கக்கூவி ஊர்வலம் சென்ற புரட்சி தினம்.

சிக்காகோ தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தில் தோய்த்து எடுத்த அவர்தம் உடையினை உழைப்பவர் இயக்கச் செங்கொடியாக தூக்கிப்பிடித்து கோஷம் இட்டனர் ஒவ்வொரு செங்கொடியும் தொழிலாளர்களின் தன்மானத்தைத்தூக்கிப்பிடித்துத்தான் பட்டொளி வீசிப்பறக்கிறது என்பதை எண்ண எண்ண  நமக்குக்கர்வம் கூடவேசெய்யும்..உழைப்பவனுக்கே இந்த பூமி சொந்தம்  அதுவே சத்தியம் என்பதை உணரும்போது தொழிலாளி பெருமிதம் கொள்கிறான்.

வரலாற்றில் காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஆகிய முப்பெரும் மாமனிதர்களே உழைப்பாளிகளின் பங்களிப்பினை உலகுக்கு உணர்த்தினர்.அவர்களின் சிந்தனைக்கு முன்னர் தொழிலாளி என்பவன் சமூகத்தில் சபிக்கப்பட்டவனாக பாவப்பட்டவனாக வல்லமை படைத்தவர்களின் கடைக்கண் பார்வையால் வாழ்க்கை நடத்துபவனாக கருதப்பட்டான் வல்லமை உள்ளவன் எளிய.மனிதனை விலைக்கு வாங்கி அவனை அவர்களின் ஏவல்காரனாக வைத்துக்கொள்வதே வரலாற்றில் வழமையாக இருந்தது.

பொதுவுடைமை தத்துவம்  என்னும் வெளிச்சம் மலர்ந்த பின்னரே தொழிலாளர்கள் வர்க்க ஞானம் என்னும் விழிப்புண்ர்வு பெற்றனர்.

ஏதுமற்ற உழைக்கும் கூட்டத்தை, நசுக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தை, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பகுதியை தட்டி எழுப்பும் பெரும்பணியை, தத்தமது கோரிக்கைகளை வெல்வது மட்டுமல்லாமல், தொழிற்சங்க அமைப்புக்கள் செய்யவேண்டிய கடமை விதிக்கப்பட்டே இருக்கின்றது.ஓய்வில்லாத சமூகத் திருப்பணி அது.அப்பணி ஓய்வில்லாது தொடர்ந்து நிகழ்த்தப்பட தொழிலாலர்கள் நாம் மே நாளில் சபதமேற்போம்.போராட்ட உண்ர்வு என்னும் கனல் உயிர்ப்போடு காப்பாற்றப்படவேண்டிபெரு விஷயம்.அதுவே நமது முழுமுதற்கடமையாகிறது

.எந்தஒரு சமூக விடுதலைக்கும் தொழிலாளர்களின் பங்கு என்பது இல்லாமல் அது சாத்தியப்படுவதில்லை.இந்திய விடுதலை ப்போராட்டத்திலும் நமது தொழிலாளர்களின் பங்கு கணிசமானது.பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைத்தொழிலாளர்களும்,மத்யஅரசு ஊழியர்களும்,ரயில்வே அஞ்சல் தொழிலாளர்களும் ராணுவ வீரர்களும்,கப்பல் படை வீரர்களும் என அணிவகுத்துப்போராடி ரத்தம் சிந்திப் பெற்றதுவே நமது விடுதலை

.ஒரு லட்சத்து எண்பதனாயிரம் மனித உயிர்களை பலிகொடுத்துப்பெற்ற சுதந்திரம்  நாடு.விடுதலை பெறுங்காலை நாம் இழந்த மனித உயிர்கள்பல லட்சங்களைத்தாண்டும்.மதக்கலவரம் வித்தாகி விடமான சோகக்கதை அது.

நமது நாடும் நமது இயற்கைச்செல்வங்களும் எல்லோர்க்கும் உரியன. நாம் எல்லோரும் இந்திய மக்கள்.

சாதியின் பேரால் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஆயிரமாயிரம்.சாதிய நஞ்சு நமது மக்களின் குருதியில் கலந்துஆங்காங்கே   கோரதாண்டவமாடுகிறது.எத்தனை சான்றோர்கள் இந்த மண்ணில் என்ன மொழிந்தாலும் அது நம் மக்களை நல்வழிப்படுத்த ப்போதுமானதாகவில்லைஜன நாயகத்தில் .வோட்டு வங்கி அரசியல் என்பது நிதர்சனமானபிறகு சாதிய சமாச்சாரங்கள் கெட்டிப்படுத்தப்பட்டுகாட்சியளிக்கின்றன.

மக்கள்தொகை எண்ணிக்கையில் பாதிக்கு மேலாக.இருக்கும் பெண்களுக்கு முற்றாக விடுதலை கிடைத்தபாடில்லை.33சதவிகிதம் பாராளுமன்றஉறுப்பினர் பங்கிற்கே பெண்களுக்கு இன்றுவரை ஒரு நியாயம் கிடைத்தபாடில்லை.பெண்களின் பாதுகாப்பு என்பது வக்கிரமாகிவரும் சமூக சூழலில் எண்ணிப்பார்க்கவே முடியாத விஷயமாகியிருக்கிறது.

காண்ட்ராக்ட் என்கிற பெயராலே உழைப்புச்சுரண்டல் நாடெங்கும் கும்மாளம் போடுகிறது.அரசாங்கப்பணிகள் காண்ட்ராக்ட் விடப்பட்டு நடைபெறுதல் என்பது நம்மை வேதனைப்படுத்துகிறது.முன்னுதாரண்மாக இருக்கவேண்டிய அரசாங்க நிறுவனங்கள் காண்ட்ராட் என்பதைக்கைக்கொள்வது ஆரோக்கியமான விஷயமாகாது.மக்கள் அரசாங்கம் என்பது எல்லோர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டியது மறந்துபோய் வெகுகாலமாயிற்று.

கல்வி நிறுவனங்கள் வணிகமயமாகி தம் தொழிலை ஜாம் ஜாம் என்று நடத்துகின்றன.எல் கே ஜி சேர்ப்புக்கே மூன்று லட்சம் ரூபாய் கட்டாயம் என்பதுவும் அதற்கே இடம் கிடைப்பது நிச்சயம் இல்லை என்பதுவும் நடைமுறையாகி இருக்கிறது.அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளோடு போட்டி போடும் நிலையில் என்றும் இருந்தது இல்லை.வாய்ப்பு உள்ளவர்கள் நல்ல தரமான கல்வியும் வாய்ப்பற்றவர்கள் பெயரளவுக்கும் கல்வி கற்க வேண்டிய சூழல்.சமூகம் சீராக வளர்ச்சி என்பதை ப்புறந்தள்ளி ஏற்றத்தாழ்வான சமூகம் நம் கண் முன்னே சமைக்கப்படுகிறது.இந்திய அரசியல் நிர்ணய சட்டப்பிதாமகர்கள் மனம் குமைந்துதான் போவார்கள்.

மருத்துவ சேவை என்பதும் வணிகமயமாகி அனுபவமாகிறது.அரசாங்க மருத்துவ மனைகளிலே பற்றாக்குறை. நோயாளர் மக்கள் கூட்டம்அலை மோதுகிறது.சாதாரண மக்களுக்கு அங்கே நிறைவான சேவை கிடைக்கிறதா என்றால் அதுபற்றி விவாதமே வேண்டாம்.பணத்தை மூட்டை கட்டிகொண்டு தனியார் மருத்துவமனக்குப்போக சாத்தியப்படுமானால் நோயாளிக்கு நிவாரணம் கிடைக்கலாம்.

விவசாயிகளின் நிலை பரிதாபமானது.அவன் வயலில் ஆறுமாதங்கள் உழைத்துக்கொண்டு வெளிக்கொண்டுவந்த பண்டங்களுக்கு க்கட்டுப்படியாகும் விலை என்றும் இல்லை.அவன் சிந்தும் கண்ணீரை ப்பார்ப்பதற்கு யாரும் இல்லை.இயற்கையின் சதி ஒருபுறம்மனிதர்களின் சுரண்டல் மறுபுறம்.தற்கொலை செய்துகொள்வதுமட்டுமே விவசாயிக்கு சாத்தியப்படுகிற விஷயமாக இருக்கிறது.

தண்ணீர் காற்று ஆகாயம் கடல் ஆற்றுமணல்என்கிற இயற்கைச்செல்வங்கள் சமூக ப்பார்வையற்றவர்களின் வளைத்துக்குள் சிக்கி சீரழிந்துகொண்டு வருகின்றன.

வங்கிகளுக்கும் சாதாரணமனிதனுக்குமான ஆரோக்கியமான தொடர்பு அறுந்துபோய் வெகுகாலம் ஆயிற்று.வங்கிகள் நமக்காக செயல்படுகின்றன என்பதை சாதாரண மனிதன் நினைத்துப்பார்த்த ஒரு பொற்காலம் இங்கே இருந்ததுண்மை.இன்று நிலமை அப்படி இல்லையே.

கடவுளின் பேரால் சண்டைகள் தொடர்கதையாக அரங்கேறிவருதலைக்கண்கிறோம்.இந்த மண்ணிற்கும் அத்தகைய சண்டைக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை.அறிவும் அன்பும் தெய்வங்களென்பதுவே இந்தமண்ணின் சாரம்.

இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏன் மாணவிகள் போதைப்பழக்கத்திற்கும்  பாட்டாளி மனிதர்கள் குடிப்பழக்கத்திற்கும் அடிமைகள் ஆகி எத்தனையோகாலம் ஆயிற்று.

பாலியல் வன்மங்கள்  கண் முன்னே தொடர்கதை.சிறார் சித்திரவதைப்படுவது நம் கண்களை ஈரமாக்குகின்றன.

இவை எல்லாவற்றையும் சிந்திக்கவேண்டிய பெருங்கடமை ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிச்சயம் இருக்கிறது.

எல்லோரும் ஓர்விலை எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

நாம் பெற்ற தாய் நாட்டு விடுதலை பொருள்பொதிந்த ஒன்றாக அமைய நமது பங்கு என்ன என்பதை ஒவ்வொரு தொழிலாளியும் கட்டாயம் சிந்திக்கவேண்டிய நேரம் இது.

மேதினம் நம்மை வலுவான இயக்கம் காண நெறிப்படுத்தட்டும்

----------------------------------------------------------------

 

 

 


ஏன் இப்படி

 

 

 

ஏன் இப்படி

 

உலகம் அரண்டுபோய் கிடக்கிறது

இப்படியெல்லாம் ஆகுமென்று

யாருக்குத்தெரியும்

நிற்பதும் நடப்பதும் அவன் செயலாலே

காண்பதெல்லாம் உந்தன் கருவிழியாலே

ஆக நடப்பதனைத்தும் அவன் செயல்

கொள்ளலாமா  நாம் அப்படி

கோடிக்கணக்கில் மக்கள் துடிதுடித்து

கொத்துக்கொத்தாய்

மடிந்து போவார்கள்

பரித்ராயண சாதூனாம் வினாசாய சதுஷ்கிருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய

சம்பவாமி யுகே யுகே

எங்கு தேடுவது அந்தக்கண்ணனை.

வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள் இருக்கட்டும்

வரிசை வரிசையாய் அடுக்கப்பட்ட

மனித உடல்கள் அழுகுரல்கள்

இளைப்பாருதல் தருபவனைத்தான்

தேடுகிறோம் காணவில்லை.

சீனாக்காரன் கொரொனா சாவு நாலாயிரம் என்கிறான்

பொய் சொல்லுகிறான் இல்லை

மருந்து  ஒன்று வைத்துக்கொண்டு

உலகுக்கு அது மறைக்கிறான்

இரண்டில் ஒன்று சரியாய் இருக்கும்.

மதுரை சொக்கனுக்குப்படைக்கும்  ஆச்சரியார்களை

வானத்திலிருந்து இறங்கிய தில்லை தீட்சிதர்களை

பூலோக வைகுண்டம் திருப்பதி பட்டாச்சாரிகளை

காப்பாற்றத்தான் யாரும் வரவில்லை.

பூரி ஜகந்நாதனுக்கு தேர் அசைய

உச்ச நீதி மன்றம் குரல் தரவேண்டும்

என்னவெல்லாம் இங்கே அரங்கேறுகிறது.

சபரிமலைக்குப்பெண்கள் போவதெங்கே

பூட்டிக்கொண்டல்லவா

தவம் செய்கிறான் தனிமையில்.

நடைபயணங்கள் பழனிக்குமில்லை

கடலோர மேரி அன்னைக்குமில்லை

யாருக்கும் தெரியவில்லை குழப்பம்

இத்தனைக்கும்     விடை .

----------------------------------

.

 

 


Sunday, April 25, 2021

நல்லனவெல்லாம்தரும்..

 

 

 நல்லனவெல்லாம்தரும்..

 

தற்காலத்தமிழ் இலக்கிய படைப்பாளிகளுக்குள்ளே தனக்கென ஓர் தனியிடத்தைப்பெற்றுள்ளார் பாவண்ணன். தனது இலக்கியப்பங்களிப்பால் தமிழ் நாட்டு வளவனூர் சார்ந்த தனது மண்ணின் மனிதர்களை அனேக இடங்களில் உயிர்ப்போடு உலவவிட்டு சாதனைகளைத் தனதாக்கியுள்ளார்.

 ஆகப்பெரிய அறிவியல் தொழில் நுட்ப சாகசங்களை தான் பணியாற்றியதுறையிலே அனுபவமாய்க்கண்ட பாவண்ணன் கல் உடைக்கும் மண்சுமக்கும் சாதாரண மனிதர்களின் அனுபவங்களைப்படித்து அவதானிப்பதிலே தனிக்கவனம் செலுத்திய யதார்த்த எழுத்தாளர்.

           அனேக தருணங்களில் மனித மனம் ரணமாகி நிற்பதை அப்பட்டமாய் க்காட்டுவன அவரின் எழுத்துக்கள். சமீபமாய் .மனிதர்களின் வளமையும் வாழ்முறையும் அவர்களை ஏற்ற இறக்க சமுதாயத்தட்டுக்களில் அடைத்து, இறுக்கி, விறைப்பாக்கி நிறுத்தியிருப்பதை வேதனையோடு காண்கிறோம்.  தான் வாழும் சமுதாயத்தில் .அன்பு என்னும் சொல் நீர்த்துப்போன,தைப் பாசத்திற்கு ஏங்கித்தவிக்கும் மனித உள்ளங்களை சமூகத்தின் பல் வேறு தளங்களிருந்து சிறுத்துச் செயல்படும் அடிமன அலைகளை த் தனது எழுத்தில் பாவண்ணன் ஓவியமாகத்தீட்டிக்காட்டுகிறார். இலக்கிய சிந்தனை ப்பரிசுபெற்ற ‘முள்’ தொடங்கி  பாவண்ணனின் சிறுகதைகள் வாசகனை அப்படித்தான் சிந்திக்கவைக்கின்றன..

பெண்மையின் பேதமையும் மேன்மையும் பேசும் ‘கல்’ எனும் சிறுகதை வாய்வீச்சாளர்கள் பம்மாத்து செய்ய மேலட்டை மட்டுமே வைத்து நிகழ்த்தப்படும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வை ச்சித்தரிக்கும் ‘வேஷம்’ என்னும் சிறுகதை  பச்சை மரங்களை நேசிக்கும் படைப்பாளியாய் வாசகனுக்குத்தன்னையுணர்த்தும் ’’‘மரங்களின் கதை இவை’ நம் நெஞ்சைவிட்டு அகன்றுவிடுமா என்ன?

அடிப்படையில் ஒரு கவிஞனாய்  பாவண்ணன் இருப்பதை அவருடைய படைப்புக்கள் நமக்குச்சொல்கின்றன. ’‘திரும்பி வராத குருவிகள்’ என்னும் ஒரு கவிதை பாவண்ணனின் மன கன பரிமாணத்தை அறிவிப்பு செய்வதாய் விளங்குகிறது. குருவிகள் ஏனோ தாம் வாழ்ந்த கூட்டிற்குத்திரும்பி வரவில்லை. ஏன் அவை திரும்பவில்லை என்பதற்காய்ப் பல் வேறு வினாக்களை த்தானே வைத்துக்கொள்கிறார் பாவண்ணன். அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. அவை அமர்ந்த தத்தித்தாவிய பேசிக்கொஞ்சிய இடங்களையெல்லாம் வரிசையாகக்கண்டும் அவை இல்லாமையின் வெறுமை அவரைச்சுண்டுகிறது.. இனி அவை வாரா என்கிற முடிவோடு அவை வாழ்ந்து காலியாய் விட்டுச்சென்ற குருவிக்கூட்டைப்பார்த்து ஆறுதல் பெறுகிறார்.  அவரின் கவிமனத்திற்கு அவை விட்டுச்சென்ற காலிக்கூடு சற்று இதம் அளிக்கிறது என்கிறார் பாவண்ணன்.

பாவண்ணன் ஏதோ ஒரு ஆழமான கேள்விஒன்றிற்கு விடை தேடுவதைத்தன் படைப்புக்களில் காணமுடிகிறது.  மானிட வாழ்வுக்கு பொருள் என்ன என்பதை, வாழ்க்கை என்னும் புதிருக்கு அவிழ் முடிச்சு ஏதும் இருக்குமோ என்பதை ஆராயும் மனவெளி அகழ்வாராய்ச்சியில் பாவண்ணனுக்கு இசைவு இருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. மெளனியின் எழுத்துக்களில் உறையும் அடர்வு கூடிய அமைதி. இவரின் எழுத்துக்களிலும் காணவாய்க்ககிறது.

‘தஸ்தாயெவ்ஸ்கி என்னும் ருசிய படைப்பாளி  மனித வாழ்க்கை ஒரு புதிர் அது அவிழ்க்கப்படும் வரை படைப்பாளியின் தேடுதலுக்கு ஓய்வில்லை என்பார்.

ஏதோ ஒரு மின்னல்  சிந்தையில் தென்படுவதும்  நொடியில் அது  தன்னை மறைத்துகொள்வதுவும் இப்பிரபஞ்சப்புதிருக்கான விடையின் ஓர் அணுவோ என்று படைப்பாளி யோசிப்பதுண்டு.

பாவண்ணனின் எழுத்துக்கள் வாசகனை இப்படி அப்படியெல்லாம் சிந்திக்கவைத்து வாசகனோடு கண்ணா மூச்சி விளையாடுகின்றன.

பிற நாட்டுப்பல அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் ஆக்கம் பெறவேண்டும் என்னும் பெருங்கவிஞன் விண்ணப்பத்திற்குச் செவி சாய்ப்பதாக அவரின் மொழிபெயர்ப்புக்கள் விளங்குகின்றன. தமிழ் மண்ணில் சாதியக்கொடுவிஷத்தை அரசியல் ஆதாயத்திற்கு ஆதாரமாக்கி இலகு அரசியல் நடத்தும் கயமை தொடர்ந்துகொண்டிருக்க தலித்திய கன்னட படைப்புக்களைத்தேர்வு செய்து அவைகளைத் தமிழில் கொண்டு தருவதைத்தன் முழுமுதற்கடமையாகக்கொண்டு இயங்கும் படைப்பாளியவர்.

ஆங்கிலக்கவிஞர் கீட்சின் கவிதைவரிகளில்.’Heard melodies are sweet,but those unheard are sweeter’ என்கிற விஷயமாய் பாவண்ணனிடமிருந்து இன்னும் இலக்கிய அற்புதங்கள் தொடர்ந்து பெறப்படவேண்டும். தமிழ் இலக்கிய உலகில் ஆரோக்கியமான  இலக்கியச்சூழல் ஆங்காங்கு இருக்கவேசெய்கின்றன. அவை பாவண்ணனின் படைப்புக்களை எப்போதும் சிரத்தையோடு அலசுகின்றன.                                                    

                        ----------------------------                                            

 

 

 

 


மயக்கமா இல்லை தயக்கமா

 

மயக்கமா இல்லை தயக்கமா

 

பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு விடுதலையை 1947ஆகஸ்டு 15 லே தந்தார்கள்.அல்லது நமது நாட்டு விடுதலையை நாமேபோராடிப் பெற்றோம் ஆனால் இந்திய .காவல் துறைமற்றும் சிறை நிர்வாக ச்சட்டங்களில் மாத்திரம்  சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவித மாற்றமும் இன்னமும் கொண்டுவரப்படவில்லை. அதுஏன்?

.மாறி மாறி நாட்டை  இந்த தேசத்தை ஆள்பவர்களுக்கு இதுபற்றிய அக்கரை வரவேண்டிய நியாயம் எங்கே இருக்கிறது?மாநிலங்களிலே இடது சாரிகள்அல்லது பிறர் அவ்வப்போதுஎங்கேனும் வந்துபோனாலும் இது பற்றி அலட்டிக்கொள்வதால் அவர்களுக்கு ச்சுய லாபம் ஒன்றும் விளைந்துவிடாது.

மாற்றம் கோரி மீறிக்கலகம் செய்பவர்கள் தெறிகிறார்களா இருக்கவே இருக்கிறது ஆயிர்ம் கிடுக்குப்பிடிகள்சட்டங்கள்.ஏதேனும் ஒன்றில் கொக்கி போட்டால் அவர்களின்கதை அவ்வளவுதான்.

இந்த நாட்டு மக்களுக்கு பகவத்கீதை அருளிய கிருஷ்ணன் சிறைக்கூடத்தில் பிறந்தவன்.படைப்புக்கடவுள் நான்முகன் பிரணவ ச்சொல்லுக்கு ப்பொருள் மறந்துபோனதால்  சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்தவன்.இந்த மண்ணின் சீதையை இலங்கை ராவணன் சிறைபிடித்து அசோகவனத்தில் வைக்கவில்லையா? பாண்டவர்களின் பாஞ்சாலி துகிலுரியப்பட்டதும் அந்தச்சகுனியின் சகோதரர்கள் துரியோதனனால் சிறைவைக்கப்பட்டதும் இங்கேதான் நிகழ்ந்தது.இவை வெறும் கதைகள் என்போமா?

நான் அண்ணாமலைப்பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது(1970-1974 ஒரு நாள் மாலை )கீழ ரதவீதியில் நடந்துகொண்டிருந்தேன். ஒரு மணி பர்ஸ் ஒன்று கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்ணுற்றேன்.அது கனமாகத்தான் இருந்தது. அதனைக்காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று ஒப்படைத்தேன்.முதல் கேள்வியே இதனுள் எவ்வளவு இருந்தது நீ எவ்வளவு எடுத்துக்கொண்டாய் என்பதே. ஆடிப்போனேன் நல்லபடியாக .வீட்டுக்குத்திரும்பி வந்தால் போதும் என உண்ர்ந்தேன்.

அதே நகரில் காவல் நிலையத்தில் தகவல் பலகை ஒன்று பளிச்சென்று வைத்திருந்தார்கள். அதனில் அவ்வூரில் அந்தஆண்டு நடந்த குற்றங்களின் வகை. அவைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டியவை என ஒரு பட்டியல் .அதனை சாலையில் நின்று படித்துக்கொண்டிருந்தேன்.அவ்வளவுதான்.ஒரு காவலர் உள்ளே அழைத்தார்.’எலே உள்ள வா நீ நில்லு அப்படியே இங்கிருந்து  பாரு ரோட்டுல போறவன் யாராவது ஒருத்தன் இந்த போர்டை பாக்குறானா இல்லை படிக்குறானா? இல்லையே  நீயேன் படிச்சே அதுக்கு என்ன காரணம்? என்னை விரட்டினார்.  ஏதோ ஆர்வம் ஆக தெரியாமல் படித்துவிட்டேன். பதில் சொன்னேன். துருவித் துருவி என்னை விசாரித்தார். நான் அப்போது வடக்கு வீதி காந்தி அமைதி நிலையத்தோடு தொடர்பு உடையவன் என்பதையும்அவரிடம் சொன்னேன்..’இண்ணையோட இந்த மாதிரி வேலயெல்லாம் வச்சிக்காத ஓடு.’ என்றார் ஓடி வந்துவிட்டேன்.

டாக்டர்.கலீல் சிஸ்டி என்கிற பாகிஸ்தானியர். கராச்சி பல்கலைக்கழகத்து மைக்ரோ பயாலஜி பேராசிரியர் தன் தாயோடு தம்பியையும் சொந்தங்களையும்பார்த்துப்போக ஒருமுறை இந்தியாவில் உள்ள அஜ்மீருக்கு வந்துள்ளார். அவர் வந்த அன்று அவரின் உறவினர் வசித்த தெருவில் அவர் வீட்டுக்குப்பக்கத்துவீட்டில் ஏதோ ஒருகுடும்பச் சண்டை.அதனில் ஒருமனித இறப்பும் நேந்துவிட்டது.. அன்று அஜ்மீருக்கு வந்த பேராசிரியர் சிஸ்டியை  போலிசு விசாரணைக்காக அழைத்துச்சென்றது. விசாரணை க்கைதி என சிறையிலிட்டது.ஆயுள் தண்டனை பெற்றார். பேராசிரியர் ஒரு இருபது ஆண்டுகள் போராடினார்.i p c 302 &307 லே புக் செய்யப்பட பேராசிரியர் ஓயாமல் போராடி உச்ச நீதிமன்றம்வரை சென்றார். அவர் நிரபராதி என்பதை உலகுக்குஉச்ச நீதிமன்றம் அறிவித்தது..அவர் ஒரு பெருங்கவிஞர் என்பது ஒரு சுவாரசியமான விஷயம்.சிறைக்கூடத்தில் இருபது ஆண்டுகள் கவிதைகள் எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் அருகே இரு காவலர்கள் பேசிக்கொண்டு போவதைக்கேட்டேன்.

‘’ நம்ப ஊர்ல கஞ்சா பொழங்குறதா மேல் இடத்துக்கு த்தகவல் போயிருக்கு. ஆக நாம  நாலு கேசு போட்டே போவுணும்னு அவசரமா உத்தரவு.தலமுடியில எண்ண தடவாம காஞ்சிபோயி அழுக்கு சட்டை வேட்டியோட பஸ் ஸ்டாண்டுல சுத்தி சுத்தி வர ஒரு நாலு பசங்கள புடிச்சி அவுனுவ சட்டைபையில கொஞ்சம் பொகையிலய கசக்கி வச்சி.ரெண்டு தட்டி இழுத்துகிட்டு போவேண்டியதுதான்.வேற வழி என்னா இருக்கு’மேலே இருந்து அவுங்களே சொன்ன யோசனை இது.’

அப்போதுதான் பயந்துபோனேன் எத்தனையோ வழிகள் இங்குண்டு .இல்லாதவர்கள் மட்டுமே இங்கு பொல்லாதவர்களாக்கப்படுவார்கள்.

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்.அதற்கும்ஒரு சட்டம் பெரிய நீதிபதியின் உத்தரவு எல்லாம் உண்டுதானே.எல்லாம் தெரிந்த வெள்ளையர்கள்தான் அந்த உத்தமரை நாம் வாழும்காலத்தே கொடுஞ்சிறைக்கு அனுப்பி க்கடமை முடித்தார்கள்.அதே மனிதர் அந்த நாட்டுக்கே அதிபர் ஆனார் உயரிய.நோபல்பரிசும் பெற்றார் என்பதை நமக்கு சரித்திரம் சொல்லும்.

மளையாள எழுத்தாளர் ஆர்.உன்னி ஒரு கதை எழுதியிருப்பார். பாதுஷா என்னும் ஒரு பாதசாரியின் கதை அது .எழுபது வயதுக்கிழவர் காற்று வாங்கி உலாவிவர கடற்கரை ஓரம் கால் நடையாய்ச்சென்றுவருவார்.அததற்காக போலிசால் கடுமையாக தண்டிக்கப்படுகிறார் .காவலர்கள் அவரைத் தெரு நாயென விரட்டி மிரட்டி இம்சிக்கின்றனர்.காரணம் அவர் ஒரு இசுலாமியர்.  அவர்களுக்குறிய தொப்பி அணிந்து இரவு நேரத்தில் உலா போனாரர். அவ்வளவே.

ஆர்டிகிள் 21  இந்திய அரசியல் நிர்ணயசட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை வாழ்வதற்கும் அவனுடைய பூரண விடுதலைக்கும்  உறுதி தருகிறது..ஆனால் நடைமுறையில்அப்படியா? இது எதுவுமற்ற ஒரு ஏழைக்கும் அப்பாவி.மதச்சிறுபான்மையினருக்கும் எந்தவகையில் நேர்மையான ஒரு அரணாகி நிற்கிறது.இதற்கு விடை சொல்லியாகவேண்டும்.யார் சொல்வார்கள்?

நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் புதிதாக ஒரு இனி வழக்கும் பதிவாகாவிட்டாலும்கூட (ஒரு பேச்சுக்குத்தான்) முடிவதற்கு இன்னும் முப்பதாண்டுகள் ஆகலாம் என்று கணக்கு சொல்கிறார்கள்  இந்தக்கொடுமைக்குயார் பொறுப்பேற்பது. நீதிமன்றங்களின் அன்றாடத்தேவைகள் கவனிக்கப்படுவதே இல்லை.ஆள்பற்றாக்குறை. எங்கு நோக்கினும் அது மட்டுமே. விஷயம்இப்படியே போனால் நீதியரசர்கள் வீதிக்கு வந்து போராடும் காலம் ஒன்று வரலாம்

காவல் துறை நவீனமயமாக்கப்படுதல்என்பது இன்னும் வெகு தூரம்சென்றாகவேண்டும்.ஆட்களின் பற்றாக்குறைஇங்கு சொல்லிமாளாது மேற்.பயிற்சியும் அறிவியலில் கூடுதலாய் அறிதலும்தொடர்ந்து நடைபெறவேண்டியுள்ளது.அரசியல் வாதிகள் இடைதரகர்கள் காவல் துறையை வலைபின்னி. அதற்குள்ளாக அல்லவா கிளிச்சிறை என வைத்திருக்கிறார்கள்.

கிரிமினல்கள் நம் நாட்டில் ஒய்யாரமாய் உலாவருவதற்கும் உற்சாகம் பெறுவதற்கும் யார் காரணம்.எம் எல் ஏக்கள் எம்பிக்களின் குற்றங்களை விசாரிக்க  மாநிலத்துக்கு மாநிலம் தனி நீதிமன்றம் என்பது பெருமைக்குறிய செய்தியா?

இந்த காந்தி பிறந்த நாட்டில் 54 நிமிடத்துக்கு ஒரு கற்பழிப்பு.26 நிமிடத்துக்கு ஒரு சண்டை.23 நிமிடத்துக்கு ஒரு ஆட்கடத்தல் 42 நிமிடத்துக்கு ஒரு மணமானபெண் கொல்லப்படுதல்எனத்தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

2008 கணக்குப்படி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் குற்றவாளிகள்எண்ணிக்கை 1,16,675,விசாரணைக்காக மட்டுமே சிறை இருக்கும் நபர்கள் 2,45,244. இரண்டு மடங்குக்கு மேலாகதண்டனை பெற்ற குற்றவாளிகளை விட இங்கே விசாரணைக்கைதிகள்..எத்தனை ஆண்டுகாலம் ஆகும்இப்பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வர,முடிவுக்கு வந்துவிடுமா? கேட்கத்தோன்றுகிறது.

கற்பழிப்பு பற்றிய புலன் விசாரிப்புக்கள்  அபலைப்பெண்ணுக்கு இன்னுமொருவன்கொடுமையாய் அனுபவமாவதைத் தடுத்தாக வேண்டும்.கற்பழிப்பு என்பதுவே ஒரு பெண்ணுக்கு civil death. அவள் இழந்து போனது கடவுளாலேகூட ஈடு செய்யமுடியாத பெருவிஷயம்.இப்படி ஒரு புரிதல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எட்டுமா என்ன?

பெருமுதலாளிகள் அரசியல்வாதிகளைக் கூறுபோட்டுக்கொள்கிறார்கள் அடுத்து யார்பொறுப்புக்கு வரவேண்டும் என்கிற காயை அவர்களே நகர்த்துகிறார்கள்.இந்தியத்தொழிலாளர் இயக்கங்கள்திணறிக்கொண்டு காலட்சேபம் செய்கின்றன.அரசு நிறுவனங்கள் இங்கு நீர்த்துப்போக மட்டுமே நிர்பந்திக்கப்படுகின்றன.

இக்கணம் சிறைச்சாலை காவல்துறை நீதிபரிபாலனம்இவை ஆரோக்கியமாய் வலுப்பெறுதல் பற்றி ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் அவசியம் கவலைப்பட்டாகவேண்டும். இடித்துச்சொல்ல வல்லவர்கள் யாரேனும் தெரிகிறார்களா?.

-------------------------------------------.



 

 

.

 

 

 

 


சிரிலின் கதையுலகம்

 

 

சிரிலின் கதையுலகம்

தமிழகத்தொலைபேசி ஊழியர்கள்  வேறு துறை ஊழியர்களைவிடச் சற்று சமூகப்பார்வை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.எந்த ஒரு சிறு நகரத்திலும் தொழிலாளர் பிரச்சனைகளைக்கூர்மையாகக்கவனித்து அது தீர்க்கப்படுவதற்கு வழிமுறைகளைக்காணும் குழாத்தில் அவர்கள் தவறாமல் காணப்படுகிறார்கள்.

 நெல்சன் மண்டேலா சிறைப்பட்டதற்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும் பிகார் பூகம்பத்திற்கும்,ஒரிசாவின் புயல் சேதத்திற்கும் தஞ்சை டெல்டா விவசாயிகள் காவிரியின் வறட்சியால் சிக்கித்தவித்தபோதும் ஓடோடி வந்து தோழமைக்குரல் கொடுக்கிறார்கள்.பொருளுதவி செய்கிறார்கள்.இந்தப்பார்வை எப்படிச்சாத்தியமாயிற்று எனக்கேள்வி வைக்கலாம்.அதற்கு விடை சொல்லவேண்டுமென்றால் தோழர் சிரில் என்னும் ஒரு வழிகாட்டியை நல்லதலைவனை இலக்கியவாதியை போராளியை கொண்ட கடமை முடிக்கும் தொழிலாளியைத் தவறாமல் குறிப்பிடவேண்டும்.

கடலூர் மாவட்டத்து நிலக்கரி நகராம் நெய்வேலியில் தொலைபேசி இலாகாவில் தோழர் சிரில் மெகானிக்காக பணியாற்றி தொழிற்சங்கவாதியாகவும் இலக்கியவாதியாகவும் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர். 19.05.1974 ல் தனது 46 ஆம் அகவையில் மறைந்த தோழர் சிரில் பற்றி அன்றைய ஜனசக்தி தன்னுடைய 30.05.1974 இதழில் இப்படியாகச்செய்தி வெளியிட்டது. தொழிற்சங்கத்தலைவர் சிரில் மறைதார் எனக்குறிப்பிட்டு அவரது 20 ஆண்டுகால தொழிற்சங்கப்பணியை ப்பாராட்டி புகழ்ந்து எழுதியது. தேசி, வேந்தன், என்னும் புனைபெயரில் சாகாச்சிறுகதைகள் பல எழுதியவர் சிரில் எனவும் குறிப்பிடுகிறது.

சிரிலின் சிறுகதைகள் இரண்டு தொகுப்புக்களாய் வெளிவந்துள்ளன. வேலை கொடு, பாலம் என்பவை அவை. யதார்த்தவாதப்பாணியில் எழுதுவதைத்தன் தடமாய்க்கொண்டு எழுதியவர் சிரில்.அன்றைய சரஸ்வதி, தாமரை,ஆனந்தவிகடன்,கல்கி, தினமனிக்கதிர் ஆகிய பத்திரிகைகள் அவரின் படைப்புகளை வெளியிட்டன.கவிதைகள் எழுதுவதிலும் தன் ஆர்வத்தைச்சிரில் காட்டியிருக்கிறார். தேன்கூடு,என்னும் இலக்கிய இதழுக்கு ஆசிரியராகவும் அவர் விளங்கியிருக்கின்றார் என்பதைக்குறிப்பிடலாம்.

சிறுகதைகள் சிலவற்றை ஆய்வு செய்வதன் வழி அவரின் எழுத்தாளுமையை அவரின் சிந்தனை மையத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். கதைகளில் நடுத்தர வர்க்க கதாபாத்திரங்களை அதிகம் காணமுடிகிறது. கண்டக்டர், ஆசிரியர், நர்ஸ் எனத்தொழிலாளர்களையும் கூலித்தொழிலாளர்கள் ஏதுமற்ற ஏழைகள் எனப்பலபாத்திரங்களையும்  வாசகனுக்குக்கொண்டுதருகிறார்.

‘வேலைகொடு’ என்னும் சிறுகதை இலங்கை சென்ற தொழிலாளி பிழைக்கப்போன இடத்தில் பட்ட கஷ்டமும்,அவன் திரும்ப இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதும் பற்றிப்பேசுகிறது.தாய் மண்ணின் மீது பற்றுள்ளவன் இங்கே இருந்துமட்டும் என்ன பெரிதாய்ப்பெற முடிகிறது என்கிறார் சிரில்.

‘ நிர்வாணம்’ என்னும் சிறுகதை புடவையை ப்பிணத்தின் பெட்டியிலிருந்து-பிணத்தை நிர்வாணமாக்கித்தான் – திருடி துணியே இல்லாமல் அலையும்  ஒரு அபலைக்கு அளிக்கிறகதை.அவள் புதுப்புடவை கட்டி அந்தப்பகுதியிலே நடமாடியதும்,பிணக்குழி திறந்துகிடந்ததும் விஷயத்தை க்காட்டிகொடுத்துவிடுகிறது.அந்தப்பகுதியே கலவரமாகி நிற்கிறது என்பதாகச்சொல்லும் கதை. பாலம் என்னும் கதை 1.06.1958 கல்கியில் வெளியாகியுள்ளது.இதுவே ஒருதொகுப்பின் தலைப்பகவும் ஆகிபோனகதை.. கொள்ளிடம் பாலம் கட்டியபோது அந்தப்பாலம் கட்டும் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாய் வாழ்ந்ததும்,அந்தப்பாலம்,அதன் தூண்கள் எழும்ப எழும்ப அவர்கள் வாழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்ந்து போனதையும் சொல்லும் கதை. அவர்கள்கட்டிய பாலம் திறந்து அது உபயோகத்துக்கு வரும் சமயம் அந்த உழைப்பாளிகள் அதன் அருகே கூடவரமுடியாமல் பிழைப்புக்காக வேறு  ஒரு இடம் தேடிச் செல்லும் கதை. உழைப்பு அங்கீகரிக்கப்படாத சோகம் பேசும் கதை. சிரிலின்  வர்ணனை ஓவியமாக அமைந்துகிடக்க  கதை படிக்கும் வாசகனின் கண்கள் ஈரமாகி நிற்பதைக் காணமுடியும்.

‘ஒரு வேளை சோறு’ என்னும் கதை கல்கியில் வெளிவந்துள்ளது.8.01.1958 தேதியிட்ட இதழில் இதனைக்காணலாம் இது .பசிக்குத்திருடியவனின் கதை. டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை இயக்கத்திற்கு வந்தபின் எங்கு நோக்கினும் சிமெண்ட் பூசும் கலாச்சாரம் தொடங்கிற்று. ஏழை ஒருவனின் வீட்டுக்கூரை டால்மியா சிமெண்ட் மூட்டையின் அட்டை உறைகளால் வேயப்பட்டுள்ளது..அவர்கள் வீட்டு கூரைக்கும் டால்மியா சிமெண்டுக்கும் எப்படியோ ஒரு சம்பந்தம் ஏற்பட்டதில் அவர்களுக்கு ப்பெருமை என்கிறார் சிரில்.

உருவககதைகள் எழுதுவதில் முனைப்புக்காட்டியிருக்கிறார் சிரில். காலம் தாழ்ந்தபின் என்னும் உருவகக்கதை 31.03.1963 ஆனந்தவிகடனில் பிரசுரமாகியுள்ளது.அத்னில் வரும் குளத்து நீர் இப்படிப்பேசுகிறது.

‘’அவர்கள் பேசமட்டுமே தெரிந்த மனிதர்கள் .அவர்களில் சிந்திக்கதெரிந்தவர்கள் பேசத்துணிவதில்லை. பேசத்துணிந்தவர்களுக்கு சிந்திக்கத்தெரிவதில்லை. அதுதான் மனித இயல்பு’’ சிரிலின் தெளிவு இங்கே வெளிப்படுவதைக்காணமுடியும்.

ஆனந்தவிகடன் 21.10.1962 ல் 30 காசு விலையில் வெளிவந்து இருக்கிறது.அதனில் ‘ஓடுகள்’ என்னும் உருவகக்கதை எழுதிடுள்ளார்.கீழ்வரும் உரையாடல் அந்தக்கதையில் அற்புதமாய் அமைந்து நிற்பதை உற்று நோக்க சிரிலின் எழுத்துத்திறனை போற்றலாம். இப்படிச்செல்கிறது’ஓடுகள்’.

மண் ஓடு மண்டை ஓட்டை நோக்கி,”அண்ணா ?’

மண்டை ஓடு: சீ நீயா தம்பி உறவு கொண்டாடுகிறாயா ! வாயை மூடு!

மண் ஓடு: ஒரே இனத்தவர்களாகிய நாம் தம்பி உறவு கொண்டாடுவது குற்றமா ?

மண்டை ஓடு: மண் ஓடும் மண்டை ஓடும் ஒரே இனமா ? நீ என் படைப்பு. நான் கடவுளின் படைப்பு. மனிதன் என் மூலப்பொருள். நீ கேவலம் களிமண்.இப்போது சொல் நீயும் நானும் உறவு கொண்டாடும் ஒரே இனமா ?

அந்த வழியே வந்த ஒரு பிச்சைக்காரன் மண் ஓட்டைக்கையில் எடுத்தான்.அது ஓட்டை உடைசல் இல்லாத உருப்படியான மண் ஓடு என்று தெரிந்ததும் மகிழ்ச்சியோடு அத்துடன் நகர்ந்தான். அவன் அறியாமலேயே அவன் காலால் எத்திவிட்ட மண்டை ஓடு அவனுக்கு முன்னால் சற்று தூரம் உருண்டோடி நின்றது.அவனது இதமான அரவணைப்பில் இருந்த மண் ஓடு இந்த மனிதர்களின் போக்கே புரியாமல் திகைத்து க்கொண்டிருந்தது. இங்கே அற்புதமாகக் கதை சொல்கிறார் சிரில்.சொக்கிப்போகவேண்டும் வாசகன்.எழுத்தின் உச்சம் என இதனை நிறைவாய்ப்பாராட்டலாம்.

’வேலை கொடு’ என்னும் சிறுகதைத்தொகுப்பின் முன்னும் பின்னும் சில செய்திகள் சிரில் பற்றி நாம் அறியக்கிடக்கின்றன. சிரிலின் தோற்றம் 19.11.1924. மறைவு 19.05.1974.. நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனாய் இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்’ என்று எழுதிப்பெருமை பேசுகிறது. தொழிற்சங்கத்தலைவர் ஜெகன் அத்தொகுப்பின் முன்னுரையில்,’’ தோழர் சிரிலின் கண்களிருந்து எந்த சிறு நிகழ்ச்சியும் தப்பியதில்லை’ என்று குறிப்பிடுறார்.எழுத்தாளர் சித்தார்த்தன் (சிவா) சிறுகதைத்திறனாய்வு என்னும் உரைகல்லில் சுடர்விடும் சித்திரங்கள் அவரது சாகா ச்சிறுகதைகள் என்று பேசுகிறார்.

‘சொல்லும் கசக்கும்’ என்னும் தாமரையில் வெளிவந்த கதை சோஷலிசம் பற்றி சில விஷயங்கள் சொல்கிறது. இன்றைய அதிகார வர்க்க அசகாய சூரர்கள் சோஷலிசத்தின் பெயராலேயே தொழிலாளர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தையே கொத்தடிமைகளாக்கிவிடும் திறமைசாலிகள் என்றோ. குமரேசன்  புரிந்துகொள்வதற்கு நியாயமே இல்லை. ஏனென்றால் சோஷலிசம் என்ற சொல்லை யார் சொன்னாலும் நம்பிவிடும் இந்த நாட்டின் லட்சோப லட்சம் அப்பாவிகளில் அவனும் ஒருவன்.. ஒவ்வொரு விஷயத்தையும் கழுகுக்கண்கொண்டு பார்க்கும் பார்வை சிரிலுடையது என்பதை நாம் இங்கே காண்கிறோம்.

‘கங்கை வற்றி விட்ட்து’ என்னும் சிறுகதையில் இளைஞர்கள் வயிற்றுப்பசிக்காக ஏதும் செய்யத்துணிந்த நிலையில் அவர்களைத்தவறான திசைவ்ழியில் செலுத்தி காசு பண்ணுகிறார்கள் கயவர்கள் என்று சொல்கிறார் சிரில். வாழ்ந்து உய்ர வேண்டிய இளைஞர்களைக்கடத்தல் தொழிலுக்குப்பயன்படுத்தி பணம் பெருக்கிக்கொள்ளும் கொடுமையைக்கண்டு மனம் பதைக்கிறார். இளைஞர்களுக்கு பாலியல் உணர்வு த்தூண்டலை மட்டுமே செய்து பணப்பையை நிரப்பிக்கொள்ளும் சமுதாய ஈனப்பிறவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறது மனம் பதைக்கிறார் சிரில்.

இத்தனை அவலங்களைப்பார்த்தபிறகும் இன்னும் கங்கையும் காவிரியும் வற்றவில்லை என்று கதை அளந்து கொண்டு இருக்கிறோம்.அப்படிச்சொல்லி சொல்லியெ இந்த நாட்டு இளைஞர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கவேண்டிய அத்தனை உணர்வுகளையும் வற்றவைத்துவிட்டோம் நாம் பாவிகள்தான்.

மனோகரா பஸ் என்னும் சிறுகதையில் ‘மனிதர்களை வெறும் டிக்கட்டுகள் என்றே ஏற்றி இறக்கும் கண்டக்டர் என்று இலக்கணம் சொல்கிறார் சிரில்.

திருச்சிராப்பள்ளி தந்திப்பொறியியல் துறையைச்சார்ந்த தோழர்களால் ‘தேன் கூடு’ என்னும் இதழ் ஆரம்பிக்கப்படுகிறது. சிரில் அதன் ஆசிரியராகப்பணி ஆற்றுகிறார். புதுவைத்தொலைபேசியிலே பணிசெய்த சிரில் அந்த இதழில் ஒரு துண்டு சீட்டு வைத்து வினியோகிக்கிறார். வாசகர்கள் கவனம் பெறவேண்டும் என்பதே சிரிலின் விழைவு.

‘புதுவை தொலைபேசி அலுவலக இலக்கிய நண்பர்களுக்கு,

நமது தோழர்களால் துவங்கப்பெற்றிருக்கும் இந்த மலரை கண்ணுற்ற பிறகு இலக்கிய ஆர்வமுள்ளோர் அனைவரும் இதில் மனமுவந்து பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இப்படியோர் நல்ல இலக்கிய முயற்சி வெற்றி அளிக்கும்படி  அன்பர்கள்  தேன்கூடு காவலர்களாகவும் தங்களைப்பதிவு செய்துகொண்டு மாதா மாதம் நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இதற்கு சம்மதம் உள்ளோர் தங்கள் பெயருக்கு அடியில் தே.கா என்று குறிப்பிடவும்.ஏனையோர் படித்துவிட்டமைக்கு அறிகுறியாக கையெழுத்திடவும்.

அன்புடன்

பொ.தே.சிரில் (தே.கா.)

கு.செந்தில் (தே.கா.)

ஜீவிராமன் (தே.கா)

அருணா கனகம்

·          காவலர்களுக்கு ஒரு பிரதி கொடுக்கப்படும்

இப்படிச்செல்கிறது சிரிலின் க்றிப்புச்சுற்றறிக்கை.இது சிரிலின் இலக்கிய அடிமன ஆழத்தை ஆர்வத்தை தெளிவாக்குகிறது. காவலர்களுக்கு ஒரு பிரதி இலவசமாக கொடுக்கப்படும் என்று எழுதுவதை த்தவறு என்று அவதானிக்கும் சுயமரியாதைக்காரரான சிரிலைக்கண்டு நெகிழ்ந்து போகிறோம்.

தற்காப்பு –என்னும் கதை எழுதி பாண்டிச்சேரி வானொலிக்கு அனுப்பியிருக்கிறார் சிரில். லூஸ் கிருஷ்ண மூர்த்தி பற்றி இப்படி வருகிறது கதையில்.

‘இது கூட உங்களுக்குப்புரியலையா? ? அது ரொம்ப சிம்பிள் சார் நம்ப சூழ்னிலையிலே இப்படி ஒருவன் உருவாக முடியாது.அப்படி ஒருத்தன் உருவாயிட்டா அவன் லூசாகத்தான் இருக்கணும். இல்லேன்னாலும் நாம் அவனை லூஸ் ன்னுதான் சொல்லணும்.அப்பத்தானே தப்பித்தவறிக்கூட நமக்கே அவனைப்போல இருக்கணும் என்கிற இன்ஸ்பிரேஷன் ஏற்படாமலிருக்கும் ? அவ்வளவு தற்காப்புணர்ச்சி சார் மனுஷனுக்கு என்று சொல்லி விட்டு மூர்த்தி வாய்விட்டு சிரித்தான்.

இன்றைய உலக நடப்பை அங்கதமாய்ச்சொல்லும் அழகு சாத்தியமாயிருக்கிறது சிரிலுக்கு.

‘கடத்தல்’ என்னும் சிறுகதை சிரி காலமான பிறகு தாமரையில் வெளிவந்த அவரின் கடைசசிக்கதை. சிரில் படத்தோடு வெளிவந்திருக்கிறது. தாமரைக்கு நல்ல இலக்கியவாதிகள் என்றும் கடன் பட்டவர்களே.,

தொலைபேசி இலாகாவிலே அன்று பணிபுரிந்த சிரில் ’தனக்கு முன் சேவை,’ நிறைவு’ என்னும் இரண்டு கதைகளை பணியிடம் அதன்  கெடுபிடிகள் இத்யாதிகளோடு இணைத்து எழுதிகிறார். ஒரு ரயிலின் பயணத்தை நிறுத்திவிட்டது பெருமழை. தகவல் அறியும் தொடர்பு  இற்றுக்கொண்டது.   செய்தி தொடர்பு எடுத்துச்செல்லும் அந்த தந்திக்கம்பம் சாய்ந்து கீழே விழுந்துவிட்டது. அப்போதெல்லாம் ரயில்வே தொலைபேசி இலாகாவோடு இணைந்து வேலைசெய்தால்தான் ரயில் வண்டி நகரவே முடியும். இன்று நிலமை அப்படியில்லை. ரயில்வே தனக்கென ஒரு ரைல்டெல் சேவையை  வைத்துக்கொண்டுள்ளது. கதைக்கு வருவோம். ஒரு தொழிலாளி  இரவில் மழையில் நனைந்துகொண்டே பழுது நீக்கி மக்கள் பயணிக்கும் ரயிலை இயங்கவிட்டு விட்டு தன்வீடு திரும்புகிறார். அந்த லைன்மென் பெயர் சின்னசாமி .மறு நாள் அவருக்கு சரியானகாய்ச்சல் வந்துவிடுகிறது. தன் வீட்டருகே உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் தன் உடலைக்காண்பித்து மருந்து மாத்திரை வாங்கிச்சாப்பிடுகிறார். இலாகா அதிகாரிகளோ   வைத்தியம் செய்துகொண்டதற்கு அவர் அனுப்பிய  அந்த மெடிகல் கிளைம் பில்லை ஏற்காமல் திருப்பிவிடுகின்றனர் ஒரு. தனியார் மருத்துவரிடம் எப்படி நீ உன் உடலைக்காண்பிக்கலாம் என்பது அதிகாரிகளின்  அந்த மெடிகல் பில் திருப்பலுக்கான வாதம்.. அரசு விதிகள் எப்படி யதார்த்தத்திற்கு தொடர்பே இல்லாமல்  தொழிலாளர்  நலனுக்கு எதிராக இருக்கிறது என்கிறார் சிரில்.

‘ நிறைவு’ என்னும் கதை தன் குழந்தைக்கு புது  யூனிஃபார்ம் எடுத்து தைக்க முடியாத ஒரு தொழிலாளிக்கு அரசு தனக்குத் தந்த புது புது யூனிஃபார்மோடு பணிக்குச்செல்ல நேர்கிறது.

குழந்தை கேட்கிறது. ‘உனக்கு மட்டும் எப்படி புது த்துணி ?

தொழிலாளி பதில் சொல்கிறான்..’ இது நான் தைக்கலம்மா. அப்பா தைச்சா இப்படியா கை நீளமா காலு குட்டையா தொள ட்தொளன்னு தைச்சுக்குவேன் ?

சிரில் இலாகா தொழிலாளிக்கு வழங்கிய யூனிஃபாரம் எப்படி இருந்தது என்கிற விமரிசனத்தையும் வைத்துவிடுகிறார்.

நல்ல வேலைக்காரன் என்று பெயர் வங்கியவர் சிரில். அனேக தொலைபேசி நிலையங்களை நிர்மாணித்தவர் சிரில். நல்ல தொழிலாளர்களை உருவாக்கியவர் சிரில்., சீர்மிகு தலைவர்களை உருவாக்கி உலவவிட்டவர். தமிழக தொலைபேசிஊழியர்களின்  இதயங்களில் என்றென்றும் வாழ்கின்ற கலங்கரை விளக்கமாய், காட்டில் மேட்டில் பனியில் குளிரில் ,,உடல் வருத்தி உழைத்த  ஆயிரம் ஆயிரம் மஸ்தூர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய மாமனிதராய் எளிமையாய் மட்டுமே வாழ்ந்து விடைபெற்றுக்கொண்ட அன்பின் திருஉரு, ஜெகன் அவர்களை உருவாக்கிய பிரம்மா போற்றுதலுக்குரிய அந்த சிரில்.

விருந்து தன் வீட்டுக்குவந்தபோது ‘இன்னொரு இலை’ இன்னொரு உலை அல்ல என்று தோழமையோடு வாழ்ந்துகாட்டிய்வர் சிரில்.

கவிதை எழுதுவதிலும் தன் ஆளுமையை செலுத்தி இருக்கிறார் சிரில்.’இன்றைய பொங்கல்’ என்னும் கவிதை சுண்டுமுத்து கவிராயர் என்னும் புனை பெயரில் வெளியாகி இருக்கிறது.

‘மாடும் மனிதனுமாய்

பாடுபட்டபின்னரே

காடும் கழனிகளும்

கதிர்மயமாய்க்காட்சி தரும்’

மனித உழைப்பும் மனிதனோடு தோழமை பேணும் அந்த மாட்டின் உழைப்பும் பெருமைகொள்கிறது சிரிலின் கவிதையில்.

இன்றும் தொலைபேசி ஊழியர்கள் நெய்வேலியில் ஆண்டுதோறும் மே 19 அன்று சிரில் நினைவு நாளை பொறுப்போடு கொண்டாடிவருகிறார்கள்.

கடலூர் விழுப்புரம் மாவட்டத்து தொலைபேசி ஊழியர்கள் (NFTE) சிரில் அறக்கட்டளை நிறுவி ஆண்டு தோரும்  தங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்த  சிரில் பெயரால் விழா நடத்துகிறார்கள். தமிழ்ச் சான்றோர் ஒருவரை  அழைத்துகெளரவப்படுத்துகிறார்கள். தொலை பேசி ஊழியர் அதிகாரிகளின் குழந்தைகளில் பத்து பதினொன்று வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற. மாணவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் என ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்குகிறார்கள்.

தொழிற்சங்க வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களுக்கு ‘சிரில் விருது’ தங்க மெடல் ஒரு சவரன் அளித்து கடலூர்  தொலைபேசிமாவட்டசங்கம் சிரிலின் நினைவுக்கு அவ்வப்போது கூடுதல் விழுமம் சேர்க்கிறது. தோழர்கள் ரகுநாதன், ரெங்கநாதன் சிரிலோடு பழகிய  இவ்விரு தோழர்கள். அந்த கெளரவத்தைப்பெற்றார்கள்.

தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்த ,சமுதாய உணர்வு மேம்பட, அநீதி கண்டு போராட சிரிலின் சிந்தனைகள் என்றென்றைக்கும் தேவை.. நல்லன எல்லாம் தர  சித்தமானவையே  அந்தத்தோழர் சிரிலின் எழுத்துக்கள்

----------------------------------------------------

 

.

  .

.