Sunday, April 25, 2021

-------------------ஒத்துழையாமை இயக்கமும் தேசபிதா காந்திஜியும்----------------------------------

 

ஒத்துழையாமை இயக்கமும் தேசபிதா காந்திஜியும்.-          -

 

தேசம் என்கிற உணர்வினை ஊட்டிய மகத்தான மாமருந்து ஒத்துழையாமை இயக்கம்.இவ்வியக்கமே பரந்த இந்தியத்திரு நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விடுதலைப்போராட்டம் பற்றிய செய்தியைக்கொண்டு சென்றது.இந்திய விடுதலைப்போரின் இயங்கு தளத்தில் அது புதிய குருதியைப்பாய்ச்சியது இந்திய .விடுதலை இயக்கம் மக்கள் இயக்கமாகவே மாறிப்போனது.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் சட்டத்திலும் மனித நேயத்திலும் நம்பிக்கை இழந்த தேசபிதா ஒத்துழையாமை இயக்கம் அன்றி வேறு எதுவுமே இனி நன்மைபயக்காது என முடிவு செய்தார்.

1920 மார்ச்சு 20 அன்று மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிப்பு செய்கிறார்.ஆங்கிலேயர்கள்  நமக்கு அளித்த கெளரவப்பட்டங்களைத்துறந்து திருப்பி அளித்தல்,உள்ளூர் ஆட்சி அமைப்பிலிருந்து விலகுதல்,பிரிட்டீஷாரின் அனைத்து விழாக்களையும் புறக்கணித்தல்,தேசிய கல்வி நிலையங்களை நிறுவி அதனில் நமது பிள்ளைகளை படிக்கவைத்தல்,வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைவிட்டு விலகுதல்,அந்நிய இடங்களில் நமது வீரர்கள் போர்ப்பணி மறுத்தல்,அந்நிய பொருட்களை பகிஷ்கரித்தல் என தேசபிதா கட்டளை தந்தார்.

துருக்கிஅரசர் சுல்தானுக்கு எதிராக பிரிட்டீஷ் அரசின் நடவடிக்கையும் ஜாலியன்வாலா பாக் படுகொலையும் ஒத்துழையமை இயக்கம் என்னும் அறப்போர் தொடுக்கக்களம் அமைத்துத்தந்தன.

ஜெர்மனியோடு சேர்ந்து நின்ற துருக்கி அரசர் சுlல்தானுக்கு ஊறுவிளைவிக்க பிரிட்டீஷ் அரசாங்கம் திட்டம் தீட்டியது.இஸ்லாமிய சமுதாயம் அதனைத்தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாய்க்கருதி வெகுண்டது.இசுலாமியர்களின் புனித இடங்களைகையகப்படுத்தும்கேவலமான யுக்தியைக்கண்டு முஸ்லிம் மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.அவ்வெழுச்சியே கிலாபாத் இயக்கமாக வரலாற்றில்பெயர் பெற்றது

1919 ஏப்ரல் 9 பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் ராம் நவமி விழாக்கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.அதனில் இசுலாமியர்களும் இந்துக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள்.இரு வேறு மதத்தினர் ஒற்றுமையாய் இணைந்து நிற்பது கண்டு ஆத்திரம் கொண்ட பிரிட்டீஷ் அரசு பஞ்சாப் ஆளுநரின் ஆணையின் பேரில் இருபெரும் மதப் பெரியவர்களையும் நகரத்தைவிட்டே அப்புறப்படுத்தி அற்பமகிழ்ச்சி கொண்டது

.1919 ஏப்ரல் பத்தாம் நாள் ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் துணைக்கமிஷ்னர் வீட்டுமுன்பாக முற்றுகை நடத்தியதுஅக்.கூட்டத்தைக்கலைக்க துப்பாக்கிச்சூடு நடந்தது.எண்ணற்றோர் பலியாயினர்.மறைந்த அச்சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தவே ஜாலியன்வாலாபாக்கில் இரங்கல் கூட்டம் ஏற்பாடாகியது.பிரிகேடியர் ஜெனரல் டயர் கூட்டத்தைத்தடுக்க 144 தடை விதித்து மிரட்டல் செய்தார்.

ஏப்ரல் 13 மாலை4.30 மணி.இருபதனாயிரம்மக்கள் பங்கேற்றஅந்த இரங்கல் கூட்டம்  நடைபெற்றுக்கொண்டிருந்தது அன்று .ஜாலியன்வாலாபாக் என்னும் மைதானம் விடுதலை உணர்வுகொண்ட மக்களின் எழுச்சிக்கூடாரமாய் மாறிப்போயிற்று.ஆத்திரம் கொண்ட ஜெனரல் டயர் 45 வீரர்கள் உடன்வர இந்து முசுலிம் மக்கள் இணைந்த மாபெரும் கூட்டத்தினை தனது ஆயுதத்தால் சின்னாபின்னாமாக்குகிறான். தோட்டாக்கள் தீரும்வரை சுட்டு சுட்டு ஓய்கிறான் கொடூரன்ஜெனெரல் டயர் நிகழ்த்திய.ஒரு மணி நேர துப்பாக்கிச்சூட்டில் 380 மனித உயிர்கள் பலியாயின.குதிரைகளின் கால் குளம்புகளின் அடியில் சிக்குண்டு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குருதிகொட்டினர்.தோட்டாக்கள் தீர்ந்தது ஆகவே கலைந்துசெல்கிறோம்கூவிச்சென்றான்.மிருகமாகிப்போன ஜெனரல் டயர்.பிரிட்டீஷ் அரசு 30000 பவுண்டு பரிசளித்து ஜெனரல்டயரை பாராட்டி தன் கெடுமதியை அமபலப்படுத்திக்கொண்டது.இந்திய விடுதலை வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் பிரிட்டீஷாரின் கொடுரத்தை வெளிச்சமிட்டது.

இசுலாமியர்களும் இந்துக்களும் ஒன்றுபடுவதைக்கண்டு திகைத்து நின்றது பிரிட்டீஷ் அரசு விடுதலை வீரர் சித்தரஞ்சன்தாஸ் ஒத்துழையாமை இயக்கம் பற்றிக்குறிப்பிடும்போது ,’புதிய இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாய் தொண்டர்களும் தலைவர்களும் அணிஅணியாய் முழு நேர உழைப்பாளர்களாய் மாறி, இந்திய விடுதலையே தம் லட்சியமெனத்தெளிந்து, அதற்காகவே தம்மை அற்பணித்துக்கொண்டனர்.ஒத்துழையாமை இயக்கம் இந்திய விடுதலை வரலாற்றில் ஓர் புதிய உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்து பெருமை கொண்டது’ என்கிறார்.

1920 செப்டெம்பர் 4 அன்று கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது.தீர்மானத்திற்கு ஆதரவாக 1886 வோட்டுக்களும் எதிராக 884 வோட்டுக்களும் பதிவாகின  அதன் .பின்னர் நாக்பூர் காங்கிரசில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை முன்மொழிய லாலாலஜபதிராய் வழிமொழியத் தீர்மானம் நிறவேறியது.காந்தி அடிகளுக்குக்கிடைத்த இந்த வெற்றி காந்திய சிந்தனைக்குக்கிடைத்த அங்கீகாரமாக நாடு கணக்கில் கொண்டது.1921ல் இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் வரலாற்று ஒரு ஒற்றுமையைக்கண்டார்கள்.ஜாலியன்வாலாபாக் படுகொலையும் கிலாபாத் இயக்கமும் அவர்களை ஒற்றுமைப்படுத்தின.

மோதிலால்,சி ஆர் தாஸ் ஜெயகர்,ராஜேந்திர பிரசாத்,வல்லபாய் படேல் ஆகிய வழக்கறிஞர்கள் தம் தொழிலை விட்டனர்.இசுலாமிய சகோதரர்கள் மவுலானா  அபுல் கலாம் ஆசாத்,டாக்டர் அன்சாரி,அலி சகோதரர்கள்விடுதலை இயக்கத்தில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டனர்.

ஒத்துழையாமை இயக்கம் சரிவர கடைபிடிக்கப்படுமானால் ஒரே ஆண்டில் இந்திய விடுதலை சாத்தியமாகும் என காந்தி அறிவுறுத்தினார். 18 வயது இளைஞர்கள் நேஷ்னல் வாலண்டீர் கோர்’ என்ற அணிவரிசையில் விடுதலைப்படையின் இயங்கு சக்தி ஆயினர்.தேசிய உணர்வு பீறிட்டுக்கிளம்பியது.கதரின் முக்கியத்துவம் உணர்ந்து மக்கள் அதனைப்புனிதமாகக்கொண்டாடினர்.சுய சார்பு என்னும்ஆரோக்கியமான பிரக்ஞை தலை தூக்கி நிற்பதை அறியமுடிந்தது.

இருள் கவிழ்ந்த பிரிட்டீஷ் ஆளுகையின் கீழ் ஒத்துழையாமை இயக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்படவேண்டிய ஒன்றாகியது.கொடுமை செய்பவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பதும், நன்மை செய்பவர்களுடன் ஒத்துழைக்க முன்வருவதும் ஒரே தரத்தன என காந்தி உலகுக்கு அறிவித்தார்.இந்திய விடுதலைப்போராட்டம் அதன் இருப்பு அது பயணம் செய்யும் பாதை குறித்து உலகம் புரியத்தலைப்பட்டது.

தேசிய உண்ர்வு கூடிய இச்சூழலில் ஆங்காங்கே தேசிய கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.தேசிய கல்லூரிகள் பாட்னாவிலும் கல்கத்தாவிலும் திறக்கப்பட்டன.அலிகாரில் தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகமும்,குஜராத் காசி ஆகிய இடங்களில் வித்யா பீடங்களும் நிறுவப்பெற்றன.திலகர் மராட்டிய மண்ணில் மராத்தா வித்யா பீத்,என்னும் கல்விக்கூடத்தை நிறுவினார்.வங்காளத்தில் பெங்கால் நேஷ்னல் யுனிவர்சிடி துவக்கப்பட்டது.

1920 நவம்பரில் சீரமைப்புக்கமிட்டி நாடு முழுவதும் அறிமுகமாகியது இந்தியாவில் .தேர்தல் என்கிற விஷயம் அறிவிக்கப்பட்டது.80 சதவித மக்கள் சீரமைப்புக்கமிட்டியை எதிர்த்துப்புறக்கணித்தனர் தேர்தலுக்குப்போன வோட்டுப்பெட்டிகள் காலியாகத் திரும்பி வந்தன.1921 மார்ச்சு 31ல் விஜயவாடாவில் மத்ய செயற்குழுக்கூட்டம் கூடியது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் ஒரு கோடி தொண்டர்களும் திரட்டப்படவேண்டும் எனத் தீர்மானம் செய்யப்பட்டது. நூல் நூற்பதற்கு என்று 20ஆயிரம் சர்காக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.வெளி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட துணிகள் இந்திய மண்ணில் வாங்குவார் இல்லாமையால் குவிந்துகிடந்தன. சுதேசித்துணிகள் இந்திய சந்தையை ஆக்கிரமித்தன.மது அருந்தக்கூடாதுஎன மக்கள் இயக்கம்கண்டனர்.

1921 ஜூலை 8 ல் நடைபெற்ற கராச்சி மாநாட்டில் முகமதுஅலி அவர்கள் மெய்யான முஸ்லிம்கள் பிரிட்டீஷ் படையைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார்.

கிரிமினல் சட்டங்கள் மட்டுமே இந்தியாவை ஆட்சி செய்தன ராஜேந்திர பிரசாத்,லஜபதி ராய் போன்றோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.1921 செப்டம்பர் முதல் நாள் அலி சகோதரர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்.பிரதேச காங்கிரஸ் அமைப்புக்கள் ஆங்காங்கே சொந்தத்திட்டங்கள் தீட்டி செயல் படுத்தின.

1921 நவம்பர் மத்தியில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். பிரிட்டீஷாருக்கு  யுத்தத்தில் ஆதரவு நல்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்க அவரின் வருகை என அறிவிக்கப்பட்டது.ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகள் மக்கள் மனதில் கனன்றுகொண்டிருக்க வேல்ஸ் இளவரசர் பம்பாய்  மண்ணில் வந்து இறங்குகிறார்.அன்றே பம்பாயில் துப்பாக்கி ச்சூடு.53 மனித உயிர்கள் பலியாகின.400 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.இளவரசருக்கு நாடு முழுவதும் கருப்புக்கொடி காட்டப்பட்டது தெருக்கள் வெறிச்சோடிக்கிடந்தன.இளவரசர் அவமதிக்கப்பட்டதை பிரிட்டீஷ் அரசு சகித்துக்கொள்ளமுடியாமல் திணறியது.எங்கு நோக்கினும் ஹர்த்தால் மட்டுமே.

1921 இறுதியில் மோதிலால்,ஜவஹர்லால்,ஆசாத் முதலியோர் சிறைவைக்கப்பட்டனர்.மகாத்மா காந்திக்கும் வேல்ஸ் இளவரசருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை படுதோல்வி அடைந்தது.

ஜனவரி 22 1922 அன்று வரிகொடா இயக்கம் ஆந்திராவிலுள்ள குண்டூரிலிருந்து துவக்கப்பட்டது.

லார்டு ரீடிங் அவர்களுக்கு மகாத்மா மூன்று நிபந்தனைகளைக்கடிதமாக எழுதி அனுப்பினார். போராட்ட வீரர்களை விடுவித்தல்,பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளித்தல்,அகிம்சைவழி போராட்டத்தை அடக்குமுறையால் எதிர்கொள்வதைத் தவிர்த்தல், என்பன அவை.

லார்டு ரீடிங் அடக்குமுறை மட்டுமே தொடரும் என்றகாட்டமான பதிலை தேசபிதாவுக்கு அனுப்பிவைத்தார் அத்தருணம் இந்திய.மக்களின் ஆத்திரம் எல்லை மீறுதலை அவதானிக்க முடிந்தது.

1922 பிப்ரவரி 2 அன்று சவுரி சவுராவில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. பேரணியாளர்களின் ஆத்திரம் உச்சத்தை எட்டியதால் பேரணிக்குப்போனவர்கள் காவல் நிலையத்தை தீ வைத்துக்கொளுத்தினர்.21 காவலர்கள் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தீயோடு எரிந்து சாம்பலானார்கள்.கோரக்பூர்,பம்பாய்,சென்னை ஆகிய இடங்களிலும் காவல் நிலையங்கள்  எரிந்து சாம்பலாயின..

தேச பிதா  விடுதலைக்குப்போராடும் இந்திய மக்கள் தடம் மாறிப்போவது கண்டு மனம் பதறினார்.’ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெறுவதாக அக்கணமே அறிவிப்பு செய்து அமைதி ஆனார்.

-----------------------------------------------------------------------------------

 

 


No comments:

Post a Comment