Friday, August 14, 2015

saivam -story
சைவம் -எஸ்ஸார்சிஅவன் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான்.தனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான்.
அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணைத்தான் எழுதி உடன் பி பி என்றும் போட்டிருந்தான்.இது இப்போதைய செல் பெசி ஜனங்களுக்கு விளங்காதுதான். தொலைபேசி சாம்ராஜ்ஜியத்தில் கைபேசி பிறப்பதற்கு முன் என்கிற காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் எப்போதும் பி பி கால் பேசும் இனம் ஒன்று உண்டு.
ஒரு சிலர் போனில் அவன் வாடகைக்கு விடும் வீடு பற்றி விசாரித்தார்கள். அந்த முதுகுன்றத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு யாரும் வரவில்லை.
திடீரென ஒரு நாள் முதுகுன்ற நகரில் அவன் வீட்டுக்குப்பின்புறம் குடியிருப்பவரின் பையன் சமுத்திரகுப்பம் வந்தான். அவன் வேலை பார்க்கும் டெலிபோன் அலுவலகத்துக்கு நேராக வந்து 'வீடு வாடகைக்கு வேண்டும்' என்றான்.'யாருக்கு' என்றான் அவன்.'என் நண்பர் ஒருவருக்கு' வந்தவன் பதில் சொன்னான். வீீடு பூட்டிக்கிடப்பதில் என்ன பிரயோசனம் என்று எண்ணி ' நீங்கள் சொன்னால் சரிதான்' என்றுமுடித்தான்.அட்வான்ஸ் தொகையொன்று கை மாறியது. ஏதோ தொகை. கைவசம் அவன் தயாராக வைத்திருந்த முதுகுன்ற வீட்டுச் சாவியை அவனிடம் ஒப்படைத்தான்.'மாதம் ஆயிரம் வாடகை' சொல்லியாயிற்று. ஆயிரமே பெரியதகைதான். சிறியது வீடு.ஒரு வழியாக முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடுவது என்கிற பிரச்சனை முடிவுக்கு வந்தது.மனம் லேசாக சந்தோஷப்பட்டது.மனைவிக்கு போன் போட்டான்.'வாடகைக்கு வர்ர ஆளு சைவமான்னு கேட்டிங்களா' அவள் கேள்வி வைத்தாள்.'சைவமாதான் இருக்கும். இல்லாகாட்டி நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் நம்மகிட்ட அந்த மனுஷனை வாடகைக்குன்னு கொண்டு வந்து விடுவானா' அவன் சமாளித்தான்.அவள் அமைதி ஆனாள்.
இரண்டு வாரம் சென்றது.அவனும் அவளும் விடுமுறைத்தினதன்று முதுகுன்றம் புறப்பட்டார்கள். அவன் வீட்டையும் வீட்டில் குடியிருப்பவரையும் பார்த்துவரலாம் என்பதாக யோசனை.இருவரும் முதுகுன்ற நகரில் பேருந்தை விட்டு இருந்து இறங்கினார்கள். வாடகைக்கு விட்ட அந்த வீடு திருவள்ளுவர் நகரில் இருந்தது. இருவரும் பைய நடந்தார்கள்.தன் வீட்டு வாசலில் நாற்காலிபோட்டுக்கொண்டு ஒரு ஆள் உறங்கிக்கொண்டிருந்தார்.ஒரு பெண் புழுங்கல் அரிசியை கும்பலாகக்கொட்டி அதனை முறத்தால் கிளறியபடியே இருந்தாள்.
'சார் நாங்கதான் வீட்டு சொந்தக்காரங்க வந்துருக்கம்' அவன் கொஞ்சம் உரத்துக்குரல் தந்தான்.'யாரு வூட்டுக்காரரு' அந்தப்பெரியவர் ஆரம்பித்தார்.
'நீங்க குடியிருக்குற வீட்டுக்கு சொந்தகாரரு'
'அப்படியா எம் மருமொவள கூப்பிடறேன்.இதுல எனக்கு சோலி என்னா இருக்கு'
மருமகள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தாள்.
'யாரு யாரு'
'நாங்கதான் வீட்டுக்கு சொந்தக்காரங்க'
'வாங்க வாங்க சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. வூட்டு உள்ள இருக்குற முனிசிபாலிடி கொழாயில தண்ணி வருல.தெருவுல பூமிவுள்ளாற போற மெயின் கொழாயிக்கு நேரா பள்ளம் எடுக்கணும். ஒரு துண்டு குழாய் போட்டு இழுத்துடணும். நம்ம வூட்டு வாசல்ல ஒரு தொட்டியும் கட்டுணும்'
'இது என்னா புது சேதி' அவன் மனைவி தொடர்ந்தாள். வீட்டு சொந்தக்காரரைப் பார்த்த உடனே இப்படியுமா ஆரம்பித்துவிடுவார்கள் அவனின் அவளுக்கு சங்கடமாக இருந்தது..
'ஒண்ணும் புது சேதி இல்லே. தண்ணி வரவேண்டிய போர்சுல வருல. வர்ர தண்ணியும் வூட்டுக்கு ஏறமாட்டேங்குது.அதான் குழி வெட்டி கொஞ்சம் வேல செயிணும் ஒரு தொட்டி கட்டணும்.அது உள்ள அந்த தண்ணி உழுவுணும். அதுல சின்னதா ஒரு மோட்டார் போட்டு அத வூட்டு உள்ளாற கொண்டாறணும்.வேல இருக்கு'
'இப்பதான நீங்க வந்து பதினைஞ்சி நாளு ஆவுது'
'அதுக்குன்னு தண்ணி இல்லாம என்னா செய்யிறது'
'ரொம்ப செலவு வரும்போல' அவன் அச்சத்தோடு சொன்னான். அவன் மனைவிக்கு எரிச்சலாக வந்தது.அமைதியாகவே இருந்தாள்.
'ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.நேரா பீச்ச கை வாட்டமா தார் ரோட்டே பொனீங்கன்னா ஒரு எண்ணெ மில்லு வரும். வெங்கடேஸ்வரா ஆயில் மில்லுன்னு நெனைக்கிறேன்.பக்கத்துல தனலச்சுமி ரைசு மில்லு அதுக்கு பக்கத்துல சிமெண்டி தொட்டி செய்யுற கடை.அந்த ஓனரு.இந்த வேலய எல்லாம் காண்டிராக்டா எடுத்து செய்யுறாரு.ஒரு எட்டு போங்க பேசுங்க.காசு என்னா ஆவும் அது அது எவ்விடம்னு தெரிஞ்சிகிட்டு வந்துடுங்க'
'அவுரு இந்த தெருவுல இது மாதிரி வேல செஞ்சி இருக்குறாரா?'
அவன் மனைவி ஒரு கேள்வி கேட்டாள்.
;ஓ ரைட்டா இதே தெருவுல மூணு பேரு வூட்டுல இந்த வேல பாத்து இருக்குறாரு.வூட்டுக்கு பதினைஞ்சி ரூவா வாங்குனாருன்னு கேள்வி'
'என்னம்மா சொல்றீங்க ஒரு ஆயிர ரூவா வாடகைக்கு வந்துட்டு இப்ப பதினைஞ்சி ஆயிரம் செலவு சொல்றீங்க'
'வொங்க வூடு நீங்க செய்யுறீங்க.தண்ணி முக்கியமில்ல ஒரு குடுத்தனகார பொம்பள தண்ணி இல்லாம என்ன செய்வா'
'எம் மூஞ்சில அப்பிடி என்னா இருக்கு.எதுக்கு என்னை பாக்குறது.போயி அந்த காண்டராக்டரை பாத்துட்டு வாங்க' செலவு என்று வந்துவிட்டால் இப்படியாக சூடாப்பேசுவது அவளுக்குப்புதிதல்ல.அவன் அறிவான்.
'காசி குடுக்குணுமுல்ல'
'குடுக்குறதுதான் அப்புறம் என்ன செய்யுவே' அவன் மனைவி அதட்டலாய்ச்சொன்னாள். .
அவன் நேறாகப்புறப்பட்டு அந்த சிமென்ட் காங்கிரீட் செய்யும் கடைக்குச்சென்றான்.தொட்டிகள் சின்னதும் பெரியதுமாக அங்கங்கே நின்று கொண்டு இருந்தன.பாத் ரூமுக்குள் வைக்கப்படும் ஜன்னல் ஜாலிகள் அடுக்கப்பட்டுக்கிடந்தன.என்றோ செய்த அண்ணா சிலையொன்று கேட்பாரற்றுக்கிடந்தது.
'சாருக்கு என்ன வேணும்'
அறுபது தாண்டிய ஒருவர் கைலி கட்டிக்கொண்டு மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
'நானு சமுத்திர குப்பத்திலிருந்து வர்ரன் என் வீடு இங்க திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுல இருக்கு. வீட்டுல இருக்குற முனிசிபாலிடி குழாய்ல வர்ர தண்ணி வீட்டுக்குள்ள ஏறமாட்டேங்குது. நீங்க அந்த வேலயா காண்ட்றாக்டா செய்யுறதா சொன்னாங்க அதான் வந்தன்'
'சொல்லுங்க உங்க தெருவுல மூணு வூட்டுல செஞ்சி குடுத்துருக்கன். நீங்க பாருங்க. நம்மகிட்டவேல சுத்தமா இருக்கும்.வூட்டுக்கு பதினஞ்சி ஆயிரம் வாங்க்றன்.சாரு நீங்க எங்க வேல செய்யுறீீங்க'
'நானு சமுத்திரகுப்பத்துல இருக்கன்.கணக்கு அதிகாரியா வேல பாக்குறன்'
'எதுல'
'டெலிபோன்ல'
'தேவுலாம் டெலிபோன் சொன்ன உடனே எனக்கு பழைய நெனப்பு வருது. சிரிப்பாவும் இருக்குது. நீங்க யாரோ எவுரோ. ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னால இதே டவுன்ல டெலிபோன வேல செய்யுற பசங்களோட நானும் தங்கி இருந்தன். நல்லா படிச்ச பசங்க. ரூமு பஸ் ஸ்டேண்டு கிட்ட இருந்துது. காமாட்சி நாயரு தியேட்டரு பக்கத்துல. அந்த பசங்க பேருகூடம் மறந்துபோச்சி.பாலு சாலுன்னு செல்லமா கூப்பிடவும்.அது என்ன பாலுவோ அது என்ன சாலுவோ முழு பேரு எனக்கு நெனப்புல இல்ல'
'அது என்ன சேதி'
'அதாங்க நானு ஒரு நாலு பேருக்கு இட்டுகிணுபோய் டெலிபோனு ஆபிசுல வேல பாக்குற ஒரு ஆள நாலு தட்டு தட்டுனம்.ராத்திரி பன்னெண்டு மணி இருக்கும். டூட்டி முடிச்சிட்டு அந்த ஆளு மணிமுத்தாத்து பாலத்துமேல சைக்கிளு உட்டுகினு வந்தாபுல. சைக்கிள ஹாண்டில்பாரை புடிச்சி நிறுத்துனும் போட்டம் ஒரு போடு அந்த ஆளு நானு டெலிபோன் ஆபிசுகாரன் நான் உங்களை என்னய்யா பண்ணுனேன்னு ஓங்கி கத்துனான் நாங்க வுடுவுமா'
'அப்புறம்'
'அவ்வவுளதான் இண்ணைக்கி பழச நெனச்சி பாக்குறேன் நீங்களும் டெலிபோன் ஆபிசுன்றீங்க'
'எதுக்கு அவர அடிச்சிங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்'
'அதெல்லாம் இப்ப ஞாபகமா இருக்கு. ஆபிசுல ஓயாம குடைச்சலு குடுத்தாராம் அவரு. அந்த ஆள கொஞ்சம் தட்டிவக்கணும்னு சாலுவும் பாலுவும் என் கிட்ட பேசுனாங்க.அவரு பாப்பார சாதின்னும் சொன்னாங்க..அவருக்கு என்னாத்துக்குதான் அம்மாம் கிருதோ'
'யாரு உங்களை அடிக்கச்சொன்னாங்கன்னு சொன்னீங்க'
'அந்த பாலுவும் சாலுவும்தான்.ஆனா அவுங்க அந்த பாலக்கரை ஸ்பாட்டுக்கு வருல. நாந்தான் நாலு பேர இட்டுகினு போயி அந்த அடிக்குற காரியத்தை செஞ்சன்.இண்ணைக்கு நெனச்சாலும் ரவ மனசுக்கு கஸ்டாமாதான் இருக்கு. அப்ப எங்களுக்கு செறு வயசு. அப்புறம் மூலைக்கு ஒருத்தரா அவுங்க அவுங்க பிரிஞ்சி போயிட்டம்'
'கெடக்கு வுடுங்க. நம்ம காரியத்த பாக்குலாம்.அட்வான்சா அய்யாயிரம் தர்ரேன் வச்சிகினு வேலய ஆரம்பிங்க.பாக்கி பத்தும் உங்களுக்கு கரெக்டா வந்துபுடும்'
' உங்க வூடு எதுன்னு சாரு சொன்னிங்க'
திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுன்னு சொன்னேனே. வூட்டு நெம்பர் 9. போஸ்டாபீசு இருக்குற தெருவு'
'ஆமாம் அந்த வூட்டுல இப்பதான் வீராணம் ஏரி மீனுவ விக்குற ஆசாமி குடிவந்தாரு'
'அப்படியா சொல்றீங்க. வீட்டு வாசல்ல கூட ஒரு பெரியவரு இருந்தாரு'
'ஆம் அதே வூடுதான். மீனு காரரு இந்நேரம் வீராணம்.ஏரிக்கரைக்கு போயி இருப்பாரு.சரக்கு புடிச்சாரணுமே'
'வூட்ட வாடகைக்கு நானு வுட்டன் அதான்.வேற ஒண்ணும் எனக்கு தெரியல'
'ஆமாம் சாரு. அந்த வூட்டு பொன்ண ஒரு பையன் காதலிச்சான் அவன் ஒசந்தசாதி. பையன் வூட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகுல.ஆனா பொழங்கின பொண்ண அவன் வுடுலயே. கட்டிகினான். நல்ல பையன்.பட்னமோ பம்பாயோ பூட்டான்'
'யாரு அந்த பையன் சாரு'
'அந்த வூட்டுக்கு பின்னாடி வூட்டுக்காரன் சாரு அவனும் அவன் தகப்பனுக்கு ஒரே பையன் அவுங்க கறீ மீனு திங்குற சாதி இல்ல'
'அது கெடக்கு வுடுங்க நமக்கு எதுக்கு ஊரு கதை. என் வூட்டுல கொழாதண்ணி சுகுறா வர்ராமாதிரி உங்க வேல இருக்குணும். நானு கெளம்புறேன் என்ன'
அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவனுக்குள் இத்தனை நாளாய் அவனை முதுகுன்ற மணிமுத்தாறு பாலத்தில் அடித்தது யாரென்று தெரியாமல் இருந்தது. அலுவலப்பணியின்போது ஏதோ பேசி ப்பேசி அது இழுத்துக்கொண்டு போனது. இப்படி அப்படி என்றாகி அவன் பாலக்கரையில் அடிபடுவதில் முடிந்து போனது. அவன் நெஞ்சறிய யாருக்கும் தவறு ஒன்றையும் செய்துவிடவில்லை. ஆனாலும் யாருக்கோ அவன் மீது தீராக்கோபம். அது மெய்யாக இருக்கலாம் யார் அவனை அடித்தார்கள் என்பதே அவனுக்குத் தெரியாமல் இருந்தது. முதுகுன்ற போலிசில் புகார் கூட செய்தான். அரசாங்க உத்தியோகத்தில் இருந்துகொண்டு யாரைக்கேட்டுக்கொண்டு நீ போலிஸ் ஸ்டேசனுக்குப் போனாய் புகாார் கொடுத்தாய் என்று ஆரம்பித்த அதிகாரிகள் அவனுக்குத் தண்டனை மட்டுமே தந்தார்கள். யார் அவனை அடித்தார்கள் என்பதே விளங்காமல்தான் இக்கணம்வரை இருந்தது.. அவனுக்கு இன்றுதானய்யா அதற்கு ஒரு விடை கிடைத்தது. பாருங்கள் விஷயம் இன்று நடந்ததுபோல் இருக்கிறது. அதற்குள் எத்தனையோ ஆண்டுகள் ஓடியேதான் விட்டன. அவனுக்கு அந்த பாலுவும் சாலுவும் இன்றும் இனிய நண்பர்களே.
. எல்லோருக்கும் வயதுமட்டும் ஆகிவிட்டிருக்கிறது.அவ்வளவுதான். மீண்டும் பொடி நடையாய் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். போஸ்டாபீஸ் தெருவில் அவன் வீட்டுக்கு நேராக பெரிய மீன் கூடை கட்டிய சைக்கிள் நின்றது. வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆள் தெருவுக்கு வந்தார்.
'வாங்க சாரு நீங்க வந்தீங்கன்னு என் வூட்டுக்காரி சொன்னாங்க எனக்கு ரொம்ப. சந்தோஷோம்'
' நீங்க தான் குடியிருக்குறதா' அவனிடம் கேட்டு முடித்தான்.
அவன் மனைவி திடு திடு என்று வாசலுக்கு வந்தாள்.தோட்டத்தில் இருக்கும் மாமரத்து நிழலில் அமர்ந்திருந்தவள்.
'கிளம்புலாமா' என்றாள்.துளசி மாடமும் பாரிஜாத ச்செடியும் தோட்டத்தில் விட்டுவிட்டுப்போனதைக் காணவில்லை.மனம் சற்று அவளுக்குக் கனத்துப்போனது.
'ஏன் ஒரு மாதிரியா'
'ஏனா. நம்ம வூட்டு மொட்ட மாடி பூரா கருவாடு காயுது. எனக்கு இங்க நிக்கமுடியல' அவனிடம் மெதுவாகச் சொன்னாள்.
'சும்மா சொல்லக்கூடதுங்க வுங்க வீடு ராசிதான். எம் பொண்ணுக்கு இந்த வூட்டுக்கு வந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் முடிஞ்சி போச்சி. மாப்பிளதம்பி வீடும் தே இருக்குதே பின் வீடு. பையனும் நல்ல பையன் உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும்.' மீன் கூடை கட்டிய சைக்கிள் வண்டிக்காரர் அவனிடம் சொல்லிக்கொண்டார்.
'கெளம்பலாம் நேரம் ஆவுது' என்றாள் அவள்.
'முனிசிபாலிடி தண்ணி வூட்டு க்குள்ள வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணி அட்வான்சும் நீங்க சொன்ன அதே ஆளுகிட்ட கொடுத்து இருக்கன். சாய்ந்திரமா வேலை ஆரம்பிக்க ஆளுங்க வரும்'
'அதாங்க ரைட்டு. போனமா வேல முடிஞ்சிதான்னு இருக்குணும். உங்களை எனக்கு ரெம்ப புடிச்சிருக்குது சாரு' மீன்காரரின் மனைவி சொல்லி நிறுத்தினாள்.
வீட்டு வாசலில் இருந்த பெரியவர் 'புதுசா வந்த சரக்குல வீராணம் ஏரி வாளைவ இருந்தா குடுத்தனுப்புலாம். சமுத்திரகுப்பத்துலயும் மீனுவ இருக்குதுன்னு சொன்னாலும் ஏரி மீனுவ எண்ணைக்கும் ராசவம்ஷம்' என்றார்.
யாருக்குமே ஏனோ இது காதில் விழவில்லை.பெரியவர் அமைதி ஆனார்..
தன்னை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஊர் பாலக்கரையில் மறித்து அடித்தவர்கள் யாரென்பதை தான் தெரிந்துகொண்டசெய்தியை அது நல்லதோ அல்லது கெட்டதோ அவளுக்குச்சொல்வதா இல்லை வேண்டாமா என்கிற தீவிர யோசனையில் அவன் இருந்தான்.
'நான்தான் வீட்டுக்கு குடி இருக்க வர்ரவங்க சைவமான்னு கேட்டு அத மொதல்ல தெரிஞ்சிகணும் அப்புறமா அந்த அடவான்சை வாங்க்ணும்னு படிச்சி படிச்சி உங்ககிட்ட சொல்லி இருந்தனே' அவள் ஆரம்பித்தாள்..
-----------------------------------------------------------------------
..

Friday, August 7, 2015

bantham- storyபந்தம் -எஸ்ஸார்சி


நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை அகலமாக்கி 'இதோபார் என்னை 'என்கிறமாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த முதுகுன்றத்து கிழக்குப்பகுதியில்தான் இருக்கிறது இந்த எம் ஜி ஆர் நகர். ஒரு நூறு சலைத்தொழிலாளர்க்கு அன்றைய முதல்வர் இனாமாக மனை ப்பட்டாவழங்கியதுதான் இதன் ஆரம்ப வரலாறு.
.நம் நாடே கொஞ்சம் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதுண்மை.முதுகுன்றம் மட்டும் விதிவிலக்கா என்ன.இல்லையென்றால் பேருந்திலும் ரயிலிலும் பிச்சை எடுப்பவர்கள் சட்டமாக பிச்சை கொடு என்று கேட்பதும், அவர்களே நூறு ரூபாய் நோட்டினை சர்வ அலட்சியமாக பார்ப்பதும் பிரத்யட்சமான பின்னே நாம் என்னத்தைச் சொல்வது.
செல் போன் இல்லாத பிச்சைக்காரர்களை எனக்குக் காட்டுங்களேன். பார்ப்போம்.இல்லை அய்யா. .அது எப்படி இதுகள் சாத்தியமா என்று கேட்கா தீர்கள்.நான் காலில் மாட்டிக்கொண்டிருக்கும் செருப்பைவிடவும் அணிந்திருக்கும் சட்டையைவிடவும் என் தோளில் தொங்கும் பேக்கைவிடவும் நான் தெருவில் சந்திக்கும் பிச்சைக்காரர்கள் நன்றாகவே வைத்துக்கொண்டு இருப்பதை நான் பார்த்த பிறகுதான் உங்களுக்குச் செய்தி சொல்கிறேன்.
. எம் ஜி ஆர் நகருக்கு அருகிலேதான் நாங்கள் குடியிருக்கும் திருவள்ளுவர் நகர். அதனில் மூன்றாவது தெருவில் ஒன்பது எண் கொண்டது என் வீடு.நேற்று இரவுதான் என் வீட்டில் பூட்டியிருந்த பீரோவில் இருந்த நகையும் பணமும் திருடுபோனது. முதுகுன்ற கடைதெருவுக்குப் போய் கொஞ்சம் மளிகைசாமான்கள் வாங்கி அந்தக் கொளஞ்சி அப்பனை த்தரிசித்துவிட்டு வீடு திரும்பி வருவதற்குள்ளாக இப்படி எல்லாமா நடக்கும் என்றால் நடந்து விட்டதே. வீடு திரும்பிய நான் வீட்டின் கதவைத்திறக்க சாவி எடுத்தால் வாயில் கத்வு உள் புறமாக தாளிடப்பட்டு இருந்தது. ஏதோ ஞாபகத்தில் வீட்டில் யாரோ நம்மவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் நான் காலிங் பெல்லை வசமாக அமுக்கினேன். வீட்டின் கதவுபடார் எனத் திறந்து கொண்டது. வீட்டின் உள்ளிருந்து ஜட்டி மட்டுமே போட்டிருந்த இரு திருடர்கள் வீச்சென்று எங்களைத்தாண்டிக்குதித்து புயலாகச் சென்று மறைந்தனர். வீட்டின் உள்ளே சென்றேன். என் மனைவி வாசலிலிருந்து திருடன் திருடன் என் அலறினாள்.நான் தினம் சோறு போட்டு ஜீவிக்கும் நாயொன்று தனக்கு எதுவும் தெரியாது என்கிறபடிக்கு வாசலில் படுத்துக்கிடந்தது.அக்கம் பக்கத்துக்காரர்கள் நான்கு பேருக்கு வந்து வாசலில் நின்றனர். காலிங்க் பெல்லை அமுக்கி நான் இமாலயத்தவறு செய்துவிட்டதாகச்சொன்னார்கள். வாயில்கதவை அப்படியே நாதாங்கி போட்டிருந்தால் திருடனை லட்டு மாதிரி பிடித்திருக்கலாம் என்றும் இலவச யோசனை சொன்னார்கள்.பாப்பான் வீட்டு நாயும் அரிவாளும் எதுக்கும் தேறாது என்றுகூடப் பேசிக்கொண்டார்கள்.
மறு நாள் முதுகுன்ற நகரத்துப் போலிசுகாரர்கள் என் வீட்டிற்கு விஜயம் செய்தார்கள். நான் போய்ச்சொல்லிதான் அழைத்து வந்தேன். அவர்கள் வீட்டை ஒரு சுற்று வந்து பிறகு எங்களை விசாரித்தார்கள். என்னையும் என் மனைவியையும்தான். விசாரணையை எப்படி எனக்கேட்டால் அசந்துபோவீர்கள்.என் மனைவி மிகவும் பயந்தே போனாள்.திருடுபோன நகை வைத்திருந்த இரும்பு பீரோவின் சாவிக்கொத்து எங்கே வைப்பீர்கள் அந்த சாவிக்கு டூப்ளிகேட் உண்டா எப்போதும் பீரோ பூட்டி இருக்குமா இரவில் மட்டும் பூட்டுவதா கடைத்தெருவுக்குப்போனால் பூட்டுவீர்களா வெளியூர் போனால்தான் பூட்டுவீர்களா,வேலைக்காரி வைத்துக்கொண்டு வீட்டு வேலை செய்கிறீர்களா இல்லை நீங்களே வீட்டு வேலை செய்துகொள்கிறீர்களா திருடு போன இரண்டு தங்க வளையல்களை எங்கே வாங்கினீர்கள்,அதற்கு ரசீது இருக்கிறதா அவை உங்களுடையது தானா இல்லை இரவல் நகையா. உங்களுக்கு கவரிங் நகை அணியும் பழக்கம் உண்டா இப்படிக் கேள்வி மேல் கேள்விகள். வீட்டில் திருடு போய்விட்டது என்று போலிசில் சொன்னால் அவர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பார்கள் என நான் முதலில் நினைத்ததுண்டு. போகட்டும் விடுங்கள்.. விசாரணை ஒரு வழியாகமுடிந்தது. தடய சாஸ்திரம் பயின்ற விரல் ரேகை வித்துவான்கள் தாம் கொணர்ந்த வெள்ளை நிற பவுடர் ஒன்றை பீரோவின் மேலும் கீழும் இடுக்கிலும் கைப்பிடியிலும் தடவித்தடவி ஒரு நோட்டு புத்தக விஷய்த்தோடு ஒத்து பார்த்தார்கள்.
அப்புறம்தான் அந்த நாய் வருகை.போலிசு இலாகாவின் செல்ல மோப்ப நாயை சமுத்திரகுப்பத்திலிருந்து ஒரு கருப்பு வேனில் அழைத்துக்கொண்டு வந்தனர். அதனை என் வீடெல்லாம் சுற்றி வந்து காண்பித்து பின் ஓட விட்டார்கள். 'ரன்' 'ரன்' என்று ஆங்கிலத்தில்தான் நாயிக்கு க்கட்டளைதந்தார்கள். மோப்ப நாயின் பெயர் 'ரோஸ்'. அதன் உயரம் நம் இடுப்பு வரைக்கும் இருந்தது. அது ஓயாமல் காதுமடல்களை மடக்கி மடக்கி த்திறந்தது கண்கள் ஏதோ செய்தி சொல்வதுபோல இருந்தன.
.அது என்னவோ பாருங்கள் நான் பார்த்தவரையில் நாய்களுக்கு யாரும் தமிழில் பெயர்வைப்பது இல்லை.ஜெனி,ஜூலி,பிரவுனி,ஜில்ஸ்,ஃபெர்ரோ,டார்கி, ரைனி., சைனி,இவை எல்லாம் நாய்களுக்கு வைத்திட்ட திருப்பெயர்கள். ஏனோ தமிழ்ப்பெயர் ஒன்று கூட இல்லை.ஒருக்கால் தமிழில்பயர்வைத்தால் நாயின் மதிப்பு கன்னாபின்னா என்று குறைந்துபோவிட்டால் என்னசெய்வது என்கிற அச்சம் ஒரு இருக்கலாம்.சரியாக வேட்டை கீட்டை பிடிக்காவிட்டாலும்தான் என்ன செய்வது.ராமு மணி அப்பு அம்மு இவைகூட நாய்களின் பெயர்கள்தான் இவை 'ட்ரோதா' என்று கூப்பிட்டால் நாம் விட்டெறியும் எச்சிலையை நக்கி விட்டு வால் மட்டும் ஆட்டி க்காண்பிக்கும் பீ யைத்தின்னும் நாட்டு நாய்கள்.
நேற்று அதான் இப்படித் திருடு போவதற்கு முதல் நாள் என் வீட்டில் ஒரு சமாச்சாரம் நடந்தது. மீண்டும் அதனைச்சொல்ல ஆரம்பிக்கிறேன்.
எம்ஜியார் நகர் மாரியம்மன் கோவில் பூசாரி என் வீட்டிற்கு வந்திருந்தார்.எங்களை சத்தம்போட்டு 'சார்' என அழைத்தார்.
'கோவிலுக்கு திருவிழா வருது மாரியாத்தாளுக்கு என்ன காணிக்கை செலுத்துறீங்களோ செலுத்திடுங்க. நானும் தே இருக்கே அந்த எம் ஜி ஆர் நகர்தான்.அந்த நகருல மெயின் ரோடுல இருக்குற அந்த ஆத்தா கோவில்லதான் நான் பூச செய்யுறேன்'
'வேற எதாவது சேதி இருக்கா' என் மனைவி கேட்டாள்.பூசாரியை நன்கு அறிந்தவள் மாதிரி. எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை..
' நான் இப்ப என்ன கேட்டுட்டன் நீங்க ஏன் மூஞ்சில அடிச்சமாதிரி பேசுறீங்க'
'வேற ஒண்ணும் சேதி இல்லன்னா நீரு போயிகிட்டே இருக்கலாம் பூசாலியாரே'
'இது நல்லா இல்லே'
'எது'
பூசாரி என் வீட்டிலிருந்து இறங்கி விறு விறு என நடந்துகொண்டிருந்தார்.இப்படி என் மனைவி பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.வருத்தமாகவும் இருந்தது.நான் குறுக்கே புகுந்து எதுவும் பேசிவிடலாம்.ஆனால் நாம் ஒன்று நினைத்துக்கொண்டு பேச அது அடுத்தவர்களுக்கு அனேக நேரங்களில் தப்பாகவும் போய்விடுகிறதே.என் அம்மாதான் சொல்வார் நாம் 'தாயே' என்றுதான் அழைத்து இருப்போம் ஆனால் எதிரே இருப்பவர்கள் 'யாரைபார்த்து நாயே என்கிறாய்' என்று சொல்லி பிலி பிலி என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.ஆக நான் மவுனமாகவே இருந்தேன். பிறகு ஆரம்பித்தேன்.
'ஏன் இப்படி பூசாரியிடம் பேசினாய் இது சரியா உன்னிடம் இருந்தால் கொடு இல்லையென்றால் எதற்கும் ஒரு மரியாதை இல்லையா என்ன'
'எனக்குத்தெரியும் நீங்கள் உங்கள் வேலை ப்பாருங்கள்'
'இது சரியா என்கிறேன்'
'நான் அந்த மாரி கோவிலுக்கு சென்ற வெள்ளிக்கிழமை சென்று வந்தேன்.அங்கு இந்த பூசாரியை ப்பார்த்தேன்'
'என்ன பார்த்தாய்'
'அது உங்களுக்கு வேண்டாம் விட்டு விடுங்கள்'
'நீ செய்ததுதான் சரி என்று சாதிக்கிறாயா'
'வீட்டிற்கு வந்த கோவில் பூசாரியிடம் எப்படி ப்பேசுவது என்பது அறியாதவளா நான்'
எனக்கு ஒன்றுமே பிடிபடவில்லை.ஏதோ ஒரு உறுத்தல் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. அன்று இரவேதான் என் வீட்டில் திருடு போனதும் போலிசு காரர்கள் வந்ததும் பின் அந்த விரல் ரேகைக்காரர்களைத், தொடர்ந்து மோப்ப நாய் வந்ததும் என் கண் முன்பாக நடந்துகொண்டிருந்தது.
போலிசுகாரர்கள் கொணர்ந்த சமுத்திரகுப்பத்து மோப்ப நாய் 'ரன்' என்ற கட்டளையைப் பெற்றுக்கொண்டவுடன் மின்னலென ஓடியது.ஓடியது ஓடிக்கொண்டே இருந்தது.. எம் ஜி ஆர் நகர் மாரியம்மன் ஆலயம் வரை ஓடியது. கோவில் பூசாரி அம்மன் சன்னதி முன்பாக நின்று ஏதோ சேவார்த்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.மோப்ப நாயோடு ஒடிய இரண்டு காவலர்கள் அந்த நாய் நிற்க அவர்களும் நின்று கொண்டார்கள்.நான் மெதுவாக என் சைக்கிளை எடுத்துக்கொண்டு மாரியம்மன் கோவில் வாசலில் போய் நின்று கொண்டேன்.
'இதுவரைக்கும் திருடன் நடந்து அல்லது ஓடி வந்து இதற்கு ப்பிறகு ஏதோ ஒரு வெய்கிளில் ஏறி சென்று இருக்கவேண்டும். அதுதான் இப்பத்திக்கு சொல்லமுடியும்' என்றனர் நாயுடன் ஓடிவந்த காவலர்கள். வேறு ஒன்றும் அங்கு நடந்துவிடவில்லை.முதுகுன்ற நகர் எங்கும் சுற்றி என் வீட்டில் திருடிய அந்தத் திருடனை மோப்ப நாய் ரோஸ் கையைக்கவ்வி என் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி விடும் என எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.
திருடு போன தங்கவளையல்கள் இரண்டும் என் அண்ணன் மனைவியுடையவை.அண்ணன் அதனை வங்கியில் வைத்து பணம் வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டிருந்தார்.பிரோவில் இருந்தபணம் பத்தாயிரமும் என் அப்பா கொடுத்தது. நான் பாதுகாப்பாகத்தானே வைத்திருந்தேன். வரவிருக்கும் அவரின் சதா அபிஷேகச்சிலவுக்கு அது என அவர் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அண்ணனுக்கு அவர் மனைவியின் தங்க வளையல்கள். அதுவும் அவை என் வீட்டில் வைத்து திருடுபோனது எனக்கு என்னவோ போல் இருந்தது.நான் ஒன்றும் செய்வதற்கில்லை. என் அண்ணன் 'சரி விடு இதற்கு யார்தான் என்ன செய்வது' என்றார்.அப்பாவின் சதாபிஷேக ச்செலவுக்குத்தான் நான் பத்தாயிரம் கடன் வாங்க வேண்டியதாயிற்று.
எனக்குள் இன்னும் அந்த மாரிகோவில் விசேஷத்துக்கு காணிக்கை கேட்டு என் வீடு தேடிவந்த பூசாரியிடம் அன்று என் மனைவி பேசியவிதம் ரணமாய் உறுத்திக்கொண்டே இருந்தது.
போலிசின் மோப்ப நாய் திருடுபோன என் வீட்டிலிருந்து ஓடியது. அது சரி. ஏன் அந்த நாய், மாரியம்மன் கோவில். வாசல்வரை ஓடி பின் நின்றுகொண்டது.இதனை அடிக்கடி யோசித்துப்பார்த்துக்கொள்வேன்..
இந்த இரண்டிற்கும் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாதுதானே...
-------------------------------------------------------------------------------------------------------------