Sunday, March 10, 2013


வணக்கத்திற்குறிய வாசக நண்பர்க்கு,

நீங்கள் அறிந்த விஷயம்தான். இருப்பினும் சில பகிர்தல் உங்களோடு.

சிறுகதைகள் படைப்பாக்கத்தில் அதி நுட்பம் வாய்ந்தவை. ஓவியன் ஒருவனின்  ஓவியம் தீட்டுவதற்கான மனகதிக்கு  ஒப்ப  மனம் அமைவதுவே படைப்பாளிக்குச் சிறுகதையொன்று எழுதிமுடிப்பதற்கான உகந்த நேரம்.
 சிறுகதைகள் உயிர்ப்புள்ளவை.அவை வாசகனோடு உரையாடுவன.கண்கள் சிமிட்டிச் செய்தி சொல்வன.சிரிக்க வைப்பன.ஞான ஊற்றாகிச் சிந்திக்க விளிப்பன.கண்கள் கசிய  வாசக மனத்தை உலுக்கி எடுப்பன.படைப்பாக்கத்தில் சிறுகதைகள்  செய் நேர்த்தி கூடியவை.வாசகனோடு உரையாடும் எழுத்துச் சித்திரங்கள் அவை. வாசகனோடு  கொஞ்சிப்பேசும் அழகு மழலைகள். மனம் உருகிப் பாசம் பொழிவன.  மனம் பிழிந்து  அவை உடன் ஏசவும் பேசவும் வைக்கும். உணர்வு மேடையில் எதையும் விட்டுவைக்காதன அவை.
சிறுகதை எப்போது  எப்படி  எங்கே உயிர்க்கும் என்பது படைப்பாளி ஒருவனால் சொல்லவும் வைக்காது.எது  ஒன்று கதையாகும் என்றுவரை அது மனச்சிறையில் பள்ளி கொள்ளும் அது பின் எச்சமயம் சிறுகதையாகிச் சித்திக்கும் என்பதுவும்  அவனால் சொல்லிவிட முடியாது.
 வீட்டு வாசல் நிலைக்கதவொன்றில் குளவி ஒன்று கூடு கட்டி ரீங்கரிக்கலாம்.தென்னை மரக் கீற்று மட்டையொன்றில்  கட்டிய தேன் கூடொன்று தொங்கித் தொங்கி ஆடலாம். நேற்றுவரைப்பார்க்க வைக்காத பைங்கிளி ஒன்று தோட்டத்து வேப்பமரக்கிளையில்  சொந்தமாய் அமர்ந்து  உங்களோடு பேசலாம் ஆடிப் பாடலாம்.இவை இக்கணம் சாத்தியமாயின. இப்படித்தான் இப்போதில் இவை. இவை என்றுமே இவ்விதம் தான் என்கிறபடி யாரேனும் விடை தர  இயலுமா அப்படித்தான்  சிறுகதைகள்.
இருபது  முப்பது ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்து விட்ட ஒன்று என்று இல்லை இன்னும் ஆயிரம் ஆண்டு  முன்னே   கூட நிகழ்ந்துவிட்ட ஒரு சம்பவம் கதைக்குக்கருவாகி மனப்பத்தாயத்தில் கண்களை மூடி மூடித் திறக்கலாம். ஆயினும் அது சிறுகதை என்னும் உருவுகொண்டு வெளிப்பட  மனகதியில் எதுவோ  முகிழ்த்து முட்டுக்கட்டையொன்றைப் போடும். எது அப்படி படைப்பைத் தடுக்கிறது என்பதுவும் ஏன் அப்படியெல்லாம்  நிகழ்கிறது என்பதுவும் சொல்லிவிடுதல்   சாத்தியப்படாது.
இன்று பார்த்த ஒரு நிகழ்வு இன்றே கதையின் கருவாகி இப்போதே சிறுகதையின் உருவும் ஆகி வாசகனைத்தேடிக்கொண்டுபோயே சேர்ந்துவிடும்.அங்கீகரிக்கப்படும் ஒரு படைப்பாகவும் அது உருக்கொண்டு படைப்புத்தளத்தில்  கம்பீரமாய் உலா வரும்.அவை அவைகட்கு பிரம்ம லிபியின் திருவிளையாட்டுண்டு போலும்.
எனக்கு அனுபவமான விஷயங்களே என் கதைகளின் ஆதாரம். சில வாசகர்கட்கும் நேர்ந்துமிருக்கலாம். பட்டதில் சிலவற்றையேனும் வாசகனுக்குச்சொல்லிவிட வேண்டும் என்று என் மனஞ்சொல்லச் சிறுகதைகளாய் அவை இப்போது உங்களோடு.
சிறுகதைகளை வாசித்து  அவைகளை  என்னோடு சாலப்பகிர்ந்து பின்னும் என்னையொரு தகுவிடம் ஆற்றுப்படுத்திய பாசமிகு எழுத்தாளர்,எஸ்.ஷங்கர நாராயணன் அவர்கட்கு என் நன்றி.
தேசம்- எனது ஆறாவது சிறுகதைத்தொகுப்பு. நட்பின் ஆலாபனையே இது தொகுப்பாய்  வெளிவர ஆதாரம். திரு.உதய்கண்ணனுக்கு என் நன்றி.
                                                                                                                 வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
                                                                                                                                   அன்புடன்
                                                                                                                                    எஸ்ஸார்சி
23 அ, நேதாஜி நகர்
பெருங்களத்தூர்( முது)
சென்னை 600063.

செல் 9443200455