Friday, May 24, 2019

நெட்டெழுத்து



 நெட்டெழுத்து                

நெட்டெழுத்தென்றால் யாருக்கேனும்
விளங்குமா இன்று?
நூறு ஆண்டுகட்கு முன்னர்
அம்மாவின் தந்தை
கொடுத்துவிட்டுப்போன
ஓட்டுவில்லை வீட்டுக்குப்
பச்சை வண்ணக்  காகிதத்தில்
வெள்ளைக்கார ராசா தலை போட்ட
பத்திரம் பத்திரமாய் இருக்கிறது
நானும் படித்துத்தான் இருக்கிறேன்.
இக்காலத்து ப்பிள்ளைகள்
கையெழுத்தைக்காட்டி படியென்றால்
கணினியில்  நீ அச்சடித்துக்கொடு
படிப்பேன் என்கிறார்கள்.
என் கையால் எழுதிய எழுத்துக்களை
என் பிள்ளைகள் படிக்க மலைக்கின்றன.
அச்செழுத்துமட்டுமே
படிக்கச்சாத்தியம் என்பதே நிலை
நல்லதுவா இது சரியென்று தோன்றவில்லை.
படைப்புக்களை எழுதிக்கொண்டு
பதிப்பாளரிடம் படைஎடுத்தால்
கதைஒன்றும் ஆகாது இனி
யூனிகோடில் கொண்டு வா
நடையைக்கட்டு உத்தரவு வருகிறது.
பனையோலை கொண்டு எழுத்தாணியால்
கம்பன் ராமாயணம் எழுதினானாம்
சடையப்பன்  வீட்டுத்
தாழ்வாரமெல்லாம் 
அம்பாரமென குவிந்து கிடந்ததாம்.
கோவில் மதில் சுற்றுச் சுவரெங்கும்
கல்வெட்டில் எழுதிய கதைகள்
 பலவுண்டு படிக்கத்தான் வருமோ
தனக்கே தத்து குத்து
தம்பிக்கு ரெண்டு குத்தா போ..
------------------------------------------------------



Wednesday, May 8, 2019

why?thus- translation poem


Why ? thus.                     Translation- essarci

Fallen in gutter
Raindrops  feel  not.
On a cascade fallen
They rejoice not.
Upon the earth fallen,
 boast not
For their  origination,- the sky.
pompously sitting on high pedestal
Men are restless and fuss display.
When stage is down
Looking  their faces only
 in a meloncholy mirror why?



vellam 9


சென்னையில் வெள்ளம் 9

  நேதாஜி நகரிலிருந்து இருவரும்  நடக்க ஆரம்பித்தோம் ஆதம்பாக்கம் போய்ச்சேரவேண்டுமே .கால்கள் குழைந்து சாமி எங்களை விட்டு விடு எனக்கெஞ்சின.அப்படி ஒரு களைப்பு.மனம் சோர்ந்து போய் இருந்தது. நீரை சுத்திகரித்து குடிதண்ணீராக வழங்கிக்கொண்டிருந்த பஞ்சாயத்து அலுவலகம் மூடிக்கிடந்தது பெருங்களத்தூர் பேரூராட்சியைச்சேர்ந்த பகுதிதான் இது..அதன் அருகே ஒரு ராட்சசக்கிணறு.அது தண்ணீர் நிறைந்து வழிந்து கொண்டிருந்ததை ப்பார்த்தேன். அருகே சிறிய குழந்தைகளுக்கான பூங்கா.அதனுள்ளாகவும்ஏகத்துக்கு மழை நீர். பார்வதி நகர் பிள்ளையார் கோவில் தெரு வந்தது.
‘புள்ளையாரு வெள்ளத்துல மூழ்கிட்டார்னு சொன்னாங்க’
‘ஆமாம்.யாரா இருந்தா என்ன. தண்ணீ வந்துதுன்னா.அது எதயும் பாக்காது. இயற்கை எல்லாமே அப்படித்தான்.சக்தி விநாயகரு கோவில்தானே அது’
‘ஆமாங்க சக்தி விநாயகர் கோவில்தான்’ அவள் பதில் சொன்னாள்’
                         மார்கழி மாதம் அதிகாலை பூசை.எங்கள் குடும்பமும் ஒரு நாளைக்கு திருப்பட்சித்திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.ஆனால் இப்போதைய நிலமை அப்படியா இருக்கிறது.சாமியின் பிழைப்பே பெரும் பிழைப்பு என்று ஆகிவிட்டிருந்தது. இருவரும் நிற்கும் இடத்திலிருந்தே மிதியடிகளை கழட்டிவிட்டு பிள்ளையாருக்கு  சிரம் தாழ்த்தி வணக்கம் சொன்னோம்.
’எல்லாத்தையும் நீந்தான் பாக்கணும். நாங்க செய்ய என்னா இருக்கு’ என் மனைவி முணுமுணுத்தாள்.
‘அப்படி இல்லே. மனுசங்க நாம செய்யவேண்டிய காரியம் இங்க எப்பவும் இருக்கு.. நெறையவே  இருக்கணும்.இல்லன்னா.ஒலகம் கொழம்பிப்போயிடும். நாம செய்யவேண்டியத செய்யணும்.செய்யறோம்.அப்புறம் பாக்கி எல்லாம்’
நான் அவளுக்கு ச்சொல்லிக்கொண்டிருந்தேன். அவள் காதில் வாங்கினாளா. இல்லையே   அவளுக்குத்தெரியாத விஷயம் உண்டா என்ன?. மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். காமராஜ் சாலையில் நாமம் போட்டுக்கொண்ட பெரியவர் ஒருவரின் வீடு. வீட்டு வாயிலில் அவர் நின்று கொண்டிருந்தார்.அவரின் மனைவி பாத்திரங்கள் சிலதுகளைக்கழுவி அடுக்கியவண்ணம் இருந்தார். நான் இதுவரை அவரிடம் எங்கே பேசி இருக்கிறேன். அவரைத்தெரியும் அவ்வளவே.அவரும் என்னுடன் பேசியது இல்லை. அவராகவே ஆரம்பித்தார்.
‘வாங்க வெள்ளம் எவ்வளவு தூரம் பாதிச்சிருக்கு?’
‘வணக்கம் அய்யா. கிரவுண்ட் ஃப்ளோர் வீட்டு உள்ள இருந்த சாமானுக எதுவும் தேறல.எல்லாம் காலியாயிட்டுது.டூவீலருங்க போர் மோட்டர் எலக்ட்ரிகல் சாமானுங்க எல்லாம் போச்சி.கம்ப்யூட்டர்.டீவி ஃப்ரிஜ் எல்லாம் போயிடுச்சி.துணிமணிங்க புஸ்தகம் எல்லாம்தான்’ பார்ப்பவர்களுக்கு இதை சொல்லிச்  சொல்லி எனக்கும் கடுப்பாகத்தான் இருந்தது.
‘எல்லாம் எவ்வளவுக்கு வரும்’
‘எல்லாம்னா வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கர செலவையும் சேத்து சொல்லுணுன்னா ஒரு மூணு லட்சம் ஆவும்’
‘ஏகப்பட்ட சேதம்தான்’
‘சென்னையில பாதிக்கு மேல இப்படித்தான்’
‘எனக்கு வீட்டு வாசல்ல தண்ணி அவ்வளவுதான். உள்ள வரட்டுமான்னு கேட்டுது.வேண்டாம்னு கைக்கூப்பி  வெள்ளத்த கேட்டுகிட்டேன் வீட்டுக்குள்ள.வரல‘ஆ இந்த காமராஜ் ரோடில் அந்த ரேசன் கடைவரைக்கும் தண்ணி நின்னுதே ‘மொத ஒரு  வெள்ளம்  முடிச்சூர் சாலையில அந்த  பார்வதி நகர் ஸ்டாப்பிங் வரைக்கும்கூட வந்துது. நாபாத்து இருக்கேன். அப்பா எம் ஜி ஆரு இருந்தாரு. இப்ப இருக்குறாங்க அந்த அம்மா.  இந்த வெள்ள சமாசாரம் அவுங்க அலட்டிக்கிட்ட மாதிரி தெரியல .அவுங்க கிட்ட வேற  எதனா இதவிட பெரிய  பிரச்சனையோ'
'  சென்னையில அப்ப இவ்வளவு ஜனம் இல்ல’
'சாஃப்ட்வேர் கம்பெனிங்க வந்த பெறவு தான் கூட்டம் கூடுனது' நாமக்காரர் சொன்னார். 
நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை என் மனைவியும் அவரின் மனைவியும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
‘என் பொண்ணு சரவண பவா நகர்ல பக்கத்தில இருந்தது. அவங்க வீட்டுல தண்ணி புகுந்து போச்சி.அவுங்க குடும்பமும் இங்க எங்களோடதான் இருக்காங்க.வீடு சீரானாதான் போவாங்க’
‘ என் வீடு நேதாஜி நகரு. நான் இப்ப ஆதம்பாக்கத்துல என் அண்ணான் வீட்டுல தங்கி இருக்கேன்..குரோம்பேட்டையில ஒரு வீடு வாடகைக்கு பாத்தும்  இருக்கு. நான் இங்க வர இன்னும் ஒரு மாசம் ஆகும்னு தோணுது’
‘அவ்வளவு ஏன் கரண்டு வரணும். அதுக்குள்ள போனது வந்தது சீர் பண்ணினா ஆச்சி’
சுலபமாகச்சொன்னார் பெரியவர்.
‘பார்க்கலாம்’
இருவரும் நடந்து பார்வதி நகர்  நிறுத்தம் வந்து நின்றுகொண்டோம்.
ஷேர் ஆட்டோக்கள் ஒன்றையும் காணோம்.பேருந்து எதுவும் இயங்குவதாகவும் தெரியவில்லை.
‘எதனா வரும் பாக்கலாம்’
‘ஒரு ஆட்டோ வந்தாலும் போயிடலாம் ஆனா காசு ஜாஸ்தியா கேப்பான்’
‘அதுக்கு என்னா செய்வ. அவுனுக்கு இதுதான் நேரம்னு சொல்லணும்’
ஒரு ஷேர் ஆட்டோக்காரன் அசுரவேகத்தில் வந்து எங்கள்: முன்பாக வளைத்து நிறுத்தினான்.
‘எங்க தாம்பரம்தானா ஏறு எறு’ என்றான்.
‘உள்ளார எங்க எடம் இருக்கு?’
என் மனைவி ஆரம்பித்தாள்.
‘எடம் என்னும் ரெண்டு பேருக்கு இருக்கு’
’யாரது நவுந்து எடம் குடு.இன்னிம் ரெண்டு பேரு குந்துணும்’ டிரைவர் விரட்டிப்பேசினார்.
வண்டியில் இருந்தவர்கள் எங்களை முறைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் எங்களை முறைத்ததில் தவறு ஒன்றும் இல்லை.இரண்டு பேர் உட்காருகிற இடம்.அதனில் மூன்று  பேர் உட்கார்ந்து கொள்ளலாம்.  தொலையட்டும், ஆனால்  நான்கு பேர் ஒருவரிசைக்கு என்பது அதிகம்தான்.ஒருவர் மாதிரி இன்னொருவர் இருப்பார்களா,அனேகமாக எடைகூடியவர்கள் தான் நம் நாட்டில் இப்போதெல்லாம் அதிகம்.ஆக எப்படி உட்காருவது அதெல்லாம் ஆட்டோ ஓட்டிகளுக்கு கணக்கு கிடையாது.அவர்களுக்கு கண்டது காசு. .
‘அந்த பத்து ரூவா நா எக்ஸ்ட்ராவா தர்ரேன் நீ வண்டியை எடு’ என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்.
‘இந்த சட்டப் பேச்சி இங்க வேணாம் யாரு அது. இறங்கிக. நானு எவ்வளவு பேர ஏத்துணும் அது எனக்கு தெரியும். நீ யாரு சொல்றது’
’ஆர் டி ஓ பர்மிஷன் வாங்கியா ஓட்டுற’
நடுத்தர வயதுக்காரர் கேள்வி வைத்தார்.
‘ஆயிரம் டாடா மேஜிக் ஓடுது. எல்லாம் தெரிஞ்சிதான் நாங்க பஜார் ரோட்டுலதான் ஓட்டுறம்.ஆனானப்பாட்ட பெரிய காஞ்சிபுரத்து பெரிய சாமியார வேலூர்ல  உள்ளார குந்தவச்சி அழவுபாத்த அந்த அம்மாவே எங்களுக்கு சட்டம் போட்டுது ஒண்ணும் ஆவுல. நீம்புரு கெளம்பி இருக்கிறீரு’
வாயைக்கொடுத்த நடுத்தர வயதுக்காரர் சுருங்கிப்போனார். வண்டியில் இருந்த எல்லோரும் அவரவர்கள் உடல் சுருக்கி யோகாசனம் செய்தனர். எங்களுக்கும் சற்று இடம் கிடைத்தது.
‘இப்ப எப்பிடி எடம் வருது. நம்ப சனம் எப்பவும் இந்த இதே கதியிலதான் இருக்கு.செத்த நேரம் நெருக்கி குந்துனா என்னா ஆயிடப்போவுது தாம்பரம் தோ வந்துடும்ல. நாம .தாயா புள்ளயா இருக்கலாமுல்ல’ ஆட்டோ காரன் உபதேசம் சொன்னான்.
ஷேர் ஆட்டோவில் சப்தம் வரவில்லை.
வண்டி தாம்பரம் ஜி எஸ் டி மேம்பாலம் கீழாக போய்க்கொண்டிருந்தது.
‘காசு எடுத்துக. அப்படியே ஒரு ஆசாமி எல்லாத்தையும் வாங்கி இங்க அனுப்பு’ ஆட்டோகாரன் கட்டளை தந்தான்.
எனக்கு ஆட்டோகாரனை நினைக்க பெருமையாகக்கூட இருந்தது.அவன் ஒரு சிற்றரசனாக அல்லவா  தன்னை பாவித்து நடந்து கொண்டான்.
எல்லோரும் வண்டியைவிட்டு இறங்கினார்கள். அந்த நடுத்தரவயதுக்காரர் அங்கேயே அமர்ந்து இறங்க மறுத்தார்.
‘ஒனக்கு தனியா வெத்தல பாக்கு வச்சி சொல்லுணுமா.சீ எறங்கு’
அவர் ஒன்றும் பேசவில்லை.
‘என்னா சேதி.’ அவரின் கையை பிடித்து தர தர என எழுத்த ஆட்டோகாரர்
‘எனக்கு இன்னும் ட்ரிப் எடுக்குணும்ல’ என்று விரட்டினார்.
ஒரு ஜீப் ஒன்று அந்த ஷேர் ஆட்டோ பக்கமாக வந்தது.அதனில் போக்குவரத்துத்துறை என்று வெள்ளை நிறத்தில்  எழுதி இருந்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய இருவர் ஆட்டோ ஓட்டியை  பார்த்து ‘வண்டியை ஓரங்கட்டு’ என்று மெதுவாகப்பேசினர்.  இருவரில் ஒருவர் ஃபைல் ஒன்றை கையில் தயாராக வைத்துக்கொண்டும் இருந்தார்.
‘ஆட்டோக்காரன் திரு திரு என்று விழிக்கத்தொடங்கினான்.  அவனுக்குக்கைகால்கள்  நடுக்கம் எடுத்தன. வண்டியில் அமர்ந்து இருந்த நடுத்தர வயதுக்காரர் போக்குவரத்துத்துறை ஜீப்பில் ஏறி அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தார்.
‘சாரு ஒரு வார்த்தை சொல்லி இருக்குலாம். ஒரு கோடி காட்டுனா தெரிஞ்கிட்டுஇருப்பனே. தப்பு நடந்து போச்சே. இப்ப  இந்த சாமிவ என்ன கதியில கொண்டு போயி நிறுத்துமோ.வண்டி ஒனருக்கு தெரிஞ்சா ஷேர்   ஆட்டோ சாவிய வச்சிட்டு வூட்டுக்கு போடா ன்னு சொல்லுவாரே.இது என்னடா தும்பம்’ என்று ஒப்பாரிவைக்க ஆரம்பித்தான்’
‘ நாம நம்ப வேலய பாப்பம்.இது மாதிரிக்கு ஆயிரம் சமாச்சாரம் நடக்கும்’என் மனைவி சொல்லிக்கொண்டே ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் நானும் அவளோடு நடந்து தாம்பரம் ரயில் நிலையம் வந்து டிக்கட் வாங்கிகக்கொண்டோம்.
‘எப்போதும் இங்க கூட்டமாத்தான் இருக்குது’ நான் சொல்லிக்கொண்டு பிளாட்ஃபாரம் நோக்கி நடக்கலானேன்.
ரயில் முதல் பிளாட்ஃபாரத்தில் வந்துவிட்டால்  நாம் ஏறுவதற்கு வசதி.எந்த பிளாட்ஃபாரத்தில் வருகிறது என்பதை ஒலிபெருக்கியில் சொல்வார்கள்.இந்தியில் ஆங்கிலத்தில் பிறகு தமிழில்.இதனை முதலில் தமிழில் என்று வைக்கலாம்.ஆனால் அப்படித்தான் இல்லை.பீகாரின்  லல்லு ரயில் மந்திரி ஆன பின்னர் வட இந்தியர்களின் ஆக்கிரமிப்புத்தான்.தமிழ் நாட்டில் ராமேசுவரம் போனாலும் பிஹார்காரன் தான் கவுண்டரில் டிக்கட் கொடுக்கிறான்.அது தொடரும் கதை.
இரண்டாவது பிளாட்ஃபாரத்தில் இருக்கும் ரயில் வண்டி கடற்கரைக்குச்செல்வதாக அறிவிப்பு செய்தார்கள். பிளாட்ஃபாரம் ஓரமாக நடந்து இரண்டாவது நடைமேடைக்கு வந்து ஒரு பெட்டி பார்த்து ஏறி அமர்ந்து கொண்டோம். தாம்பரத்திலிருந்து புறப்படுவதால் உட்கார இடம் கிடைத்தது..
‘ நாளைக்கு என்ன வேலை’
மனைவிதான் பதில் சொன்னாள்.
‘ நாளைக்கு க்காலையிலேயே புறப்பட்டு நேதாஜி நகருக்கு சென்றுவிடுங்கள்.வீட்டை சுத்தம் செய்யுங்கள்.பிறகு வாடகைக்கு குட்டியானை ஒன்று பிடித்து அடுப்பு சிலிண்டர் நறுக்காக நான்கு சமையல் பாத்திரம் வாளி குடம் அரிசி மிக்சி இன்னும் சிலதுகள் ஞாபகமாக மேல்வீட்டில் இருக்கும் நம் ஃபிரிஜ் படுக்கைக்கு ஏதேனும். துணிமணிகள் கொஞ்சம் என்று எடுத்துக்கொண்டு குரோம்பேட்டைக்கு வரவேண்டும்’
‘ நாளைக்கு இரவு அந்த புது ஜாகையில்தான் படுக்கை’
‘ஆமாம் நேதாஜி நகர் வீடு சீராகி ரெடியாக வேண்டும்’
‘மருமகள் அவளும் அவனும் ஒரு நடை நேதாஜி நகருக்குப் போய் வேண்டியது எடுத்துக்கொண்டு குரோம்பேட்டைக்கு வந்துவிடட்டும்.’
வண்டி திரிசூலம் தாண்டிக்கொண்டிருந்தது. விமான நிலையம் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது.
‘ஒரு ஃபிளைட்டும் இல்லை அங்க சேரும் சகதியும்தான்’
‘அடையாத்து மேல சிமெண்ட் பிளாக் போட்டு ஏர்போர்ட்டு கட்டியிருக்காங்கன்னு இப்பதான்  எனக்கு தெரியும்’
அவள் சொல்லிக்கொண்டாள்.’
மீனம்பாக்கம் எனும் ஆள் அரவம் குறைந்த ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அருகிலுள்ள ஜைன் கல்லூரிக்கு மாணவர்கள் வந்து போகும் சமயம் நட்டுமே பிளாட்ஃபாரத்தில் சந்தடி இருக்கும்.மற்ற நேரங்களில் ஸ்டேஷன் காற்று வாங்கிக்கொண்டு கிடக்கும் கல்லூரிக்கு வந்து படிப்பவர்களில்.பத்து காதல் ஜோடிகள் தயாராகி அங்கங்கு உட்கார்ந்துகொண்டு நெளிந்து நெளிந்து பேசிக்கொண்டு பொழுது போக்குவார்கள்.காண்பதற்கு அவர்களின் சேட்டைகள் எரிச்சலாகக்கூட தென்படும். .இயற்கை படுத்தும்பாடு. அவர்கள் என்னவோ செய்து செய்து  தீரவே தீராத அந்த ப்பசியை தீர்த்துக்கொள்ள முயற்சி மேற்கொள்கிறார்கள்.
‘பழவந்தாங்கல்னு பேர் வச்சி ஒரு ஸ்டேஷன் வர்ரதே.அங்க எறங்கி. நங்க நல்லூர்தானே போராங்க.பழவந்தாங்கல்னு ஒரு ஊர் எங்க இருக்கு’
‘அது எனக்கும் தெரியல. ஏன் பீச்சுக்கு போறதாதான் நாள் ஒண்ணுக்கு ஆயிரம் ரயில் பொறப்படுது தாம்பரத்திலேந்து. அதுல எறங்கினா பீச் வருமா என்ன. அங்க போயி எறங்கி ஆட்டோ காரனுக்கு ஐம்பது ரூவா கொடுத்தா பீச்சுக்கு  அவன் கொண்டு போயிவிடுவான். இல்லன்னா ஒரு ட்வுன் பஸ் பிடிக்கணும்’
பேசிக்கொண்டோம் இப்படி ஆயிரமுண்டு. 
மவுண்ட் ஸ்டேஷன் வந்துவிட்டது..இருவரும் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்தால் சக்தி நகர் குறிஞ்சி தெரு  அந்த அண்ணன் வீடு செல்ல முடியும்.
 மவுண்ட் ஸ்டேஷனில் மாடிப்படிகள். மனைவியால் ஏறமுடியாமல் திண்டாட்டமாக இருந்தது. காலைத்தூக்கி  அடுத்த படியில் வைக்க முடிந்தால்தனே. எப்போதும் இந்த கஷ்டம். மனைவிக்கு நாற்பத்தைந்து வயதுக்கு மேல் கால்முட்டிகள் அவள் சொன்னதைக்கேட்டால்தானே. பொதுவாக நடுத்தர வயதை எட்டும்போதே நம்மஊர்  பெண்களுக்குக் கால் மூட்டுக்கள் பலவீனம் அடைந்துவிடுகின்றன.கால்சியம் இழப்பு தான் பிரதான காரணம் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
‘இந்த கனரா வங்கி ஏ டி எம்  இன்னும் சீராகவில்லை’
‘எப்படிச்சாத்தியம் சேறும் சகதியும்தான் இன்னும் உள்ளே இருக்கிறதே'
அவளுக்குப்பதில் சொன்னேன்.
---------------------------------------------------------------------------------’



.

.



.