Friday, May 24, 2019

நெட்டெழுத்து



 நெட்டெழுத்து                

நெட்டெழுத்தென்றால் யாருக்கேனும்
விளங்குமா இன்று?
நூறு ஆண்டுகட்கு முன்னர்
அம்மாவின் தந்தை
கொடுத்துவிட்டுப்போன
ஓட்டுவில்லை வீட்டுக்குப்
பச்சை வண்ணக்  காகிதத்தில்
வெள்ளைக்கார ராசா தலை போட்ட
பத்திரம் பத்திரமாய் இருக்கிறது
நானும் படித்துத்தான் இருக்கிறேன்.
இக்காலத்து ப்பிள்ளைகள்
கையெழுத்தைக்காட்டி படியென்றால்
கணினியில்  நீ அச்சடித்துக்கொடு
படிப்பேன் என்கிறார்கள்.
என் கையால் எழுதிய எழுத்துக்களை
என் பிள்ளைகள் படிக்க மலைக்கின்றன.
அச்செழுத்துமட்டுமே
படிக்கச்சாத்தியம் என்பதே நிலை
நல்லதுவா இது சரியென்று தோன்றவில்லை.
படைப்புக்களை எழுதிக்கொண்டு
பதிப்பாளரிடம் படைஎடுத்தால்
கதைஒன்றும் ஆகாது இனி
யூனிகோடில் கொண்டு வா
நடையைக்கட்டு உத்தரவு வருகிறது.
பனையோலை கொண்டு எழுத்தாணியால்
கம்பன் ராமாயணம் எழுதினானாம்
சடையப்பன்  வீட்டுத்
தாழ்வாரமெல்லாம் 
அம்பாரமென குவிந்து கிடந்ததாம்.
கோவில் மதில் சுற்றுச் சுவரெங்கும்
கல்வெட்டில் எழுதிய கதைகள்
 பலவுண்டு படிக்கத்தான் வருமோ
தனக்கே தத்து குத்து
தம்பிக்கு ரெண்டு குத்தா போ..
------------------------------------------------------



No comments:

Post a Comment