Monday, July 6, 2026

கடலூரில் தமிழ் விழா

 

 

 

கடலூரில்  சிரில் நினைவு அறக்கட்டளையின் தமிழ் விழா

 

தோழர் சிரில் நினைவு  அறக்கட்டளை  கடலூர் நிகழ்த்திய  தமிழ் விழா 27/6/2026 சனியன்று மாலை  பி் எஸ் என் எல்   பொதுமேலாளர் அலுவலக வாயிலில்  வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இருபத்தியிரண்டாம் ஆண்டு  தமிழ் விழா இது.  விழாவுக்கான   அனைத்து ஏற்பாடுகளையும் கடலூர் மாவட்டச்சங்கம் என். எஃப் .டி. இ    சிறப்பாகச் செய்திருந்தது.

நிகழ்ச்சிக்கு தோழர்   கே. சீனுவாசன் தலைமை ஏற்றார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு  விழா  துவங்கியது. கடலூர் நகரத்து தமிழ் ஆர்வலர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகிகள் பிஎஸ் என் எல்  ஊழியர்கள் அதிகாரிகள் எனத்  தோழர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.

 சிரில் அறக்கட்டளையின் செயலர் வீ. லோகநாதன்  வரவேற்புரை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி ஒரு  அற்புதமான விளக்கம்  அளித்தார். ’தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்கிற பாரதியின் வரிகளை உயர்த்திப்பேசினார். அடுத்து சிரில் அறக்கட்டளையின் மேனாள் ஒருங்கிணைப்பாளர் எஸ்ஸார்சி தொடக்க உரை ஆற்றினார். கடலூ மண்ணின் பெருமைகளை வள்ளலாரர் தொடங்கி  அஞ்சலை அம்மாள் ஜெயகாந்தன் ஞானியார் அடிகள் என்று  வரிசைப்படுத்தின்மார்.  சிரிலின் சிறுகதை ‘நிர்வாணம்’ பற்றியும் எடுத்துரைத்தார். இந்தியாவிலேயே தாய்மொழிக்கு இத்தகைய சிறப்பு செய்யும் விழா  கடலூர் மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது என்பதனைப் பெருமையோடு குறிப்பிட்டார். கடலூர் தோழர்கள் செயல்பாட்டால் வித்தியாசமானவர்கள் என்பதைத் தொட்டுக்காட்டினார்.

தலைமை உரை ஆற்றிய சிரில் அறக்கட்டளையின் தலைவர்  கே. சீனுவாசன் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும்  திருக்குறள் சிறப்பு பற்றியும் குறிப்பிட்டார். அடுத்துப் பேசிய என் எஃப் டி இ  தமிழ் மாநிலத்தலைவர்  சேலம் பாலக்குமார் கடலூர் மாவட்டத்துத் தொழிற்சங்க வரலாறு குறித்துப் பெருமையோடு பதிவு செய்தார். தோழர் ஸ்ரீதரின்    முனைப்பான  இயக்கப்பணி குறித்துப் பெருமையோடு குறிப்பிட்டார்.

 அடுத்துப்பேசிய துணைப்பொதுமேலாளர். பாலசந்திரன் அவர்கள்  ஆழ்ந்த கருத்துக்களை முன்வைத்துப் பேசினார். தமிழ் மொழி போல் ஒரு  பெருமை மிகு மொழியை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாது என்றார். தொல்காப்பியம் தொட்டு அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஐம்பெருக் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் தெய்வத்தமிழ் நூல்கள் பன்னிரு திருமுறை நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தமிமிழின் விழுமியங்களை  அழகாய்ப் பதிவு செய்தார். பரிசு பெறும் மாணவச்செல்வங்களை நிறைவாக வாழ்த்தினார்.

சிதம்பரம் தோழியர்  வை.  உஷா மாணவச்செல்வங்களுக்கு முத்தாய்ப்பான அறிவுரைகள் வழங்கிப் உற்சாகப்படுத்தினார்.  சம்மேனச்செயலர் ஸ்ரீதர்  கடலூர் தொலைபேசி  மாவட்டத்தின்  தொழிற்சங்கச்  சிறப்பு பற்றிக்குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு   தான்  பணியிலிருந்து  ஓய்வு பெறவிருப்பதையும்  உணர்ச்சிப்பெருக்கோடு பதிவு செய்தார். அடுத்துப்பேசிய   கடலூர் மாவட்டச்செயலாளர் அ.சு. குருபிரசாத்    கடலூர் பி. எஸ்.என் எல் தோழர்களின் சமூகப்பொறுப்பு பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.

 கடலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர். ஜானகி.ராஜா நிகழ்ச்சியின்  சிறப்பு அழைப்பாளர்’.  வணக்கம் வள்ளுவா’’ என்கிற தலைப்பில்  இலக்கியப் பேருரை ஆற்றினார். தேசபிதா  மகாத்மா காந்தி திருக்குறளின் சிறப்பு பற்றி  எப்படி அறிந்து கொண்டார் என்பதை விவரித்தார்.   புத்துயிர்ப்பு   இலக்கியப் பொக்கிஷத்தை    வழங்கிய   உலகறிந்த  ருஷ்ய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய்,   ’தனக்குத்  திருக்குறளின் மொழிபெயர்ப்பே  ஆதர்சமாக இருந்தது’ என்று மகாத்மாவிடம் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக  தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற   பி. எஸ். என் .எல்   மாணவச்செல்வங்கள் அறுவர்  பணமுடிப்பும் சான்றிதழும் பெற்றார்கள்.  தமிழ்ப்பாடம் மற்றும் பேச்சுப்போட்டியில்   வெற்றி பெற்ற  கடலூர் அரசுப்பள்ளி  மாணவர்கள் 16 பேருக்கு பணமுடிப்பும் சான்றிதழும் வழங்கப்பட்டன.,

விழாவின் நிறைவாக கச்சிதமானதொரு நன்றியுரையை சிரில் அறக்கட்டளையின் பொருளாளர் தோழர்.  செ. ஆனந்தன் வழங்கினார். தேசிய கீதத்தோடு தமிழ்விழா இனிதே நிறைவுக்கு வந்தது.

 தமிழ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும்  சிரில் அறக்கட்டளை இரவு  சிற்றுண்டி  வழங்கி  சிறப்பித்தது  மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்- பாரதிதாசன்.

 

-----------------------------------------------------------------------------------

 

 

 

 

Thursday, June 18, 2026

விட்டல் ராவ் ஒர் கலைச்சுரங்கம்

 

 

விட்டல் ராவ்  ஓர் கலைச்சுரங்கம் 

 

’ஒரே ஒரு சிறுகதை  விட்டல் ராவ் உரையாடல்கள்’  என்னும்  கட்டுரை நூலை எழுத்தாளர் பாவண்ணன்  படைத்திருக்கிறார். எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்களோடு பாவண்ணன் நிகழ்த்திய உரையாடல்  இங்கே  ஒரு நூலாகியிருக்கிறது. விட்டல்  ஓர்   கலைகளின் சுரங்கம் என்பதைத் தெரிவிக்கும்  பலகணியாய்  இந்நூல் வாசகனுக்கு அனுபவமாகிறது.

 சந்தியா பதிப்பகம் இந்நூலை கொண்டு வந்திருக்கிறது. மணியான பத்தொன்பது கட்டுரைகளைக்கொண்ட இந்நூல் 262 பக்கங்களாய் விரிகிறது.  இப்படைப்பின் பெரும்பாலான கட்டுரைகள் அம்ருதா இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இந்த நூலை  இவ்விரு  இலக்கியப் பெருமக்களுக்கும் நண்பராய் இருந்த   நாடறிந்த  எழுத்தாளர்   அமரர்  அசோகமித்திரனுக்குப் பாவண்ணன் வணக்கத்தோடு சமர்ப்பித்திருக்கிறார்.

பாவண்ணனும் விட்டல்ராவும் பெங்களூருவில் வசித்து வருகின்ற எழுத்தாளுமைகள். இருவரும் வெளியூர்களில் நிகழும் பல இலக்கிய நிகழ்வுகளுக்குச் சேர்ந்தே பயணித்திருப்பதும்,  வாழிடம் அண்மை என்பதால் இவரும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதும்   இந்நூல்  உருப்பெற உதவியிருக்கின்றது. இந்நூலை வாசிக்கின்றபோது பகவத்கீதையின் வினாவிடைப் பாணி  காட்சியாவதாய் நான் உணர்ந்தேன். விட்டல்ராவ் கீதையின் விளக்கம் சொல்லும்  கண்ணனாக, பாவண்ணன் வினா வைக்கும் பார்த்தனாக எனக்கு அனுபவமானார்கள். பாவண்ணன் வாசகர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வினாக்கள் வைப்பதை நாம் உணரலாம்.

பாவண்ணன் தனது முன்னுரையில் மிகச்சிறப்பாக இந்நூலின் முக்கியத்துவம் பற்றிக்குறிப்பிடுகிறார்.

‘விட்டல் ராவுடன் உரையாடுவது ஒரு நூலகத்துக்குச்சென்று புத்தகம் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானது. அவர் உரையாடத்தொடங்கினால் எண்ணற்ற தகவல்கள் வந்துகொண்டேயிருக்கும். அவருடைய நினைவாற்றல் ஒரு பெரும்புதையல். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நம் கண் முன்னால் நிகழ்த்திக்காட்டும் ஆற்றல் அவருக்குண்டு. அவர் வழியாக எண்ணற்ற மனிதர்களைப் பற்றித்தெரிந்து கொண்டேன்.’

ஒவ்வொரு கட்டுரையிலும்  பாவண்ணன் தனக்கு நேர்ந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறார். அவைகளின் ஒரு முனையை விட்டல் ராவோடு பகிர்ந்து கொள்கிறார். விட்டல் அதனைப் பற்றிக்கொண்டு  தனது சொந்த  அனுபங்களை அருவியெனக் கொட்டுகிறார். அதனை வாசகப் பெருமக்களுக்குக் கடத்துகிறார் பாவண்ணன்.

முதல் கட்டுரைக்குக்  கபாலி என்று பெயர் கொடுத்திருக்கிறார் பாவண்ணன்.  தினமணிக்கதிரில்  அறுபது எழுபதுகளில் விட்டல் ராவ் தான்  எழுதிய கதைகளை இரண்டு தொகுதிகளாக பைண்ட் செய்து வைத்திருக்கிறார். அதில் ஒரு தொகுதியை படிக்க  வாங்கி வந்த பாவண்ணனுக்கு விட்டல் ராவின்  சிறுகதைப்படைப்புகளில் ’ கபாலி’ என்னும் சிறுகதை  மிகவும் பிடித்துப்போகிறது. கபாலி ஒரு பேட்டை ரவுடி. அதே ஊரில் வீரய்யா  என்பவன் இன்னொரு ரவுடி.  கபாலிக்குக் கான்ஸ்டபிள் துரை  வேண்டியவராகிறார். அதே ஸ்டேஷனைச்சார்ந்த கான்ஸ்டபிள் சாயிராம்  வீரய்யாவுடன் நெருக்கமாகிறார். இருவேறு ரவுடிக் கும்பல்களுக்கிடையே  சதா மோதல்கள் நடக்கின்றன. இரு வேறு கான்ஸ்டபிள்களுக்கு  இடையேயும்  பொறாமையும் போட்டியும்  தொடர்கின்றன,  அதிர்ச்சி அளிப்பதாய்  கபாலியின் மரணம் நிகழ்கிறது. அவனது உடல் சாக்கடையை அடைத்துக்கொண்டு கிடக்க அதனை வெளியே எடுத்துப் போடுகிறார்கள். இந்தக்கதையை  நண்பர்  விட்டல் ராவோடு தொடங்குகிறார் பாவண்ணன். அந்தக் கபாலி கதைக்குள் இன்னும் பல கதைகள் இருப்பதாய் விட்டல் ராவ் ஆரம்பிக்கிறார். ஒரு  சினிமா நடிகையோடு  அவனுக்குப் பழக்கம்  ஏற்படுகிறது. அந்த நடிகை  ஷூட்டிங்க்  முடித்த கையோடு  ஷாப்பிங்க் போகும் சமயம்  கபாலி பார்த்து விடுகிறான். அவனுக்கு என்னமோ கிளு கிளுப்பு. அந்த நடிகையைக் கட்டிப்பிடித்து  மார்பகத்தை கடித்தே விடுகிறான்.  அவனை யாராலும் பிடிக்கவே முடிய வில்லை. எங்கு போனான் என்றே தெரியவில்லை. ஒரு நாள் அவன்  சவம் சாக்கடையில் அடைத்துக்கிடந்ததது. இந்த நிகழ்வைத்தான்  நடிகை சமாசாரத்தை மட்டும் நீக்கிவிட்டு ’கபாலி’ என்னும் சிறுகதையாக விட்டல்  எழுதியிருக்கிறார்.  அதற்குத் தினமணிக்கதிரில்  எழு நூற்றி ஐம்பது ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது.  அதனை பெற்றுக்கொண்ட விட்டல் ராவ்  ஆதம்பாக்கத்தில் தன் வீட்டுக் கழிப்பறையைப்  பேசின் வைத்த நவீன கழிப்பறையாக மாற்றியிருக்கிறார். அதுவரைக்கும் கையில் காசில்லாத்தால்  லெட்ரின் கழிவுகளை தானும் தனது மனைவியும் இரவில் யாருக்கும் தெரியாமல்  வெகுதூரம் எடுத்துக்கொண்டு போய் கொட்டி சுத்தம் செய்து வந்திருக்கிறார்கள். எளிமை  நேர்மை உண்மை   இவைதானே விட்டல்ராவ்.

கபாலி கட்டுரையை இப்படி முடிக்கிறார் பாவண்ணன். ‘ ஒரு கதை,அந்தக் கதைக்குள்ள ஒரு கதை, அதுக்குப் பின்னணியா  இன்னொரு ஒரு கதை எல்லாமே அருமை’

அடுத்தக் கட்டுரை  இரண்டு ரோஜாப்பூக்கள். ஒரு சமயம் ’சர்வோதயம்’ மலர்கிறது இதழுக்காக  லால் பகதூர் சாஸ்திரி பற்றி ஒரு கட்டுரையைப் பாவண்ணன்  எழுதிக்கொண்டிருக்கிறார். விட்டல் ராவ் கை பேசியில் அவரை அழைக்கிறார்.’நீங்க சாஸ்திரியைப் பார்த்திருக்கீங்களா சார்?’ வினா வைக்கிறார் பாவண்ணன். தான் அவரை நேரில் பார்த்திருப்பதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ‘உண்மையாவா சார்? யாராவது அழைச்சிட்டு போனாங்களா,,இல்ல நீங்களா பாத்தீங்களா” என்கிறார் பாவண்ணன். அதற்கு விடையாக ஒரு நீண்ட கதை சொல்கிறார் விட்டல் ராவ்.   பிரசன்ன வெங்கடேசன் என்னும் கும்பகோணத்துக்காரர் தன்னோடு ஆப்ரேட்டராக சென்னையில் பணியாற்றியவர். அந்த  நண்பரின் வாழ்க்கையைச்சொல்கிறார் விட்டல் ராவ்.  பிரசன்னா  தொலைபேசியில் இயங்கிய என் எஃப் டி இ தொழிற்சங்கத்தில் தீவிரப் பற்றோடு இருந்தவர்.  தொழிற்சங்கப் பணியாய் டில்லியில்  தாதா கோஷ் பவனுக்கு அடிக்கடிச் செல்வார். அப்படிச் செல்கின்றபோது  கோபண்ணா என்கிற காங்கிரஸ் காரரோடு  அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டாகிறது.  அப்படியே  சூழலியலாளர் பகுகுணாவோடும் நெருக்கமாகிறார். ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ் நாட்டைப்பற்றி ஏதோ அய்யம் வர அதற்கு விடை சொல்லும் முகத்தான் பிரசன்னா அனுப்பப்பட்டிருக்கிறார். சாஸ்திரியோடு பிரசன்னா   பேசியிருக்கிறார்.  அச்சந்திப்பு முடியும் போது இரண்டு ரோஜாப்பூக்களை சாஸ்திரி பிரசன்னாவிடம் வழங்கியிருக்கிறார். அதனைத் தேவலோகத்து மலர்களாய் நினைத்து பிரசன்னா தனது டைரியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார்.  தனக்குத்  தெரிந்த எல்லோருக்கும் அதனைப் பெருமையோடு காண்பிக்கவும் செய்தார். அவர்தான் விட்டல் ராவை பிரதமர்  சாஸ்திரியின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றவர்.

பிரசன்னா நல்ல புத்திசாலி. இலாகா தேர்வு எழுதி ஜே இ பதவிக்குத் தகுதியானார். மேலுள்ள அதிகாரிகள் பயிற்சி வகுப்புக்கு  அவரை அனுப்பாமல் முடக்கிப்போட்டார்கள். அதனை எதிர் கொள்ள டிரிப்யூனலுக்குப்போனார்.  நீதிமன்றத்தில் வென்றார் ஆயினும் அவரை  எதோ சாக்கு சொல்லி பயிற்சிக்கு அனுப்பாமல்  அதிகாரிகள் காலம் கடத்தினார்கள். வெறுத்துப்போன பிரசன்னா  தனக்கு எந்தப் பதவி உயர்வும்  வேண்டாமென்று ஆப்ரேட்டராகவே பணி தொடர்ந்தார். வாழ்க்கைத்துணைவியாய் ஒரு பெண்ணை மணந்தார். அதுவுமே விளங்கவில்லை. மண வாழ்க்கை முறிந்து போனது. கைக்குழந்தையோடு டில்லி சென்ற மனைவி அவரை முற்றாக மறந்து போனார்.  பிரசன்னாவைக் குடிப்பழக்கம் தொற்றியது.   ஒரு நாள் அனாதையாய் இறந்து போனார். அவரின் இறப்பு நிகழ்வும்,  சவ அடக்கமும் சோக மயமானது. பிரசன்னாவின் வாழ்க்கையையே விட்டல் ராவ் காம்ரேட் என்கிற நாவலாக எழுதினார்.

‘த் ச் பாவம்,  பிரசன்னன்தான் பாதி சினிமாவுல  எழுந்து போகிற மாதிரி  அரை கொறயா வாழ்ந்துட்டு போயிட்டாரு’ என்று  உரையாடலை முடிக்கிறார் விட்டல் ராவ்.

  மூன்றாவதாக வரும்  கட்டுரை எஸ்.வி.எஸ் என்னும் மாமனிதர்.   பாவண்ணன் சென்னையில் காந்தி கல்வி நிலையத்தில்  அ. இராமசாமி எழுதிய ‘தமிழ் நாட்டில் காந்தி’ என்னும் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று பேசுகிறார். அது தக்கர் பாபா வளாகம். அவ்வளாகத்தைப் பல்வேறு கோணங்களில் நிழற்படமெடுத்து  விட்டல் ராவுக்குக்காண்பிக்கிறார் பாவண்ணன். விட்டல் ராவ் அங்கிருந்த ராஜாஜி நூலகத்தை உருவாக்கிய எஸ்.வி.சுப்ரமணியம் பற்றி உரையைத் தொடங்குகிறார். எஸ்.வி.எஸ்  ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.  காந்தியத் தொண்டர். விடுதலைப்போரில் சிறைக்கு ஏகியவர். கல்கியின்  நண்பர். சிறு கதைகள் சில படைத்தவர். கல்கியில் துணையாசிரியர். இலக்கியச்சிந்தனை அமைப்போடு இயங்கியவர்.இசையரசி         எம் எஸ், திகசி, அசோகமித்திரன்  ஆகியவர்களோடு பழகியவர்.

‘ஒவ்வொரு செங்கல்லா வச்சி வீடு கட்டறதுமாதிரி சிறுகச்சிறுக  பாடு பட்டு அந்த நூலகத்தை உருவாக்கினார் எஸ். வி. எஸ். துரதிருஷ்ட வசமா அவருடைய மரணத்துக்குப் பிறகு  எதிர்பார்த்த அளவுக்கு  அந்த நூலகம் சரியா இயங்கல.’  தன் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார் விட்டல் ராவ்.

மைலாப்பூர்  பாரதிய வித்யா பவன் இராஜாஜி பெயரில் ஒரு நூலகம் உருவாக்கி நடத்த முனைந்தார்கள். தக்கர் பாபா வளாகத்தில் இருந்த எஸ்.வி.எஸ் நூலகம் முழுவதுமாய் இராஜாஜி நூலகத்திற்கு இடம் பெயர்ந்து  எஸ். வி. எஸ் நூலகம் காணாமல் போயிற்று.

அடுத்து வருவது’ நாற்பது ரூபாய் ’  என்று தலைப்பிட்ட கட்டுரை. விட்டல் ராவும்  இயல்பாய் ஒரு ஓவியர். எழும்பூர்  கலைப்பள்ளியில் பயின்றவர். பாவண்ணனும் ஓவியம் பற்றி நன்கு  அறிந்தவர்தான். மாடலாக ஓவியம் வரைவதற்கு வந்து நிற்கும்  எளிய பெண் அவள் உடன் வரும் அவளின் சிறு குழந்தை. மாடலுக்கு நிற்கும்   அவள் கை ரிக்‌ஷா இழுப்பவனின் மனைவி  அப்பெண்ணுக்குக் கூலி ஐந்து ரூபாய். அது பற்றி விபரம் சொல்கிறார் விட்டல்.

‘’பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டி்ஸ்ட்  மனசுக்குள்ளயும்  ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும்.அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக  ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது .எந்த மாடலுடைய படத்தையும் எந்த ஸ்டுடியோவுலயும் எந்த ஆர்டிஸ்டும் வரையமாட்டான். அது ஒரு அறம். கண்ணால பார்க்கிற  உருவத்துக்கு அவன் தன் நெஞ்சில இருக்கிற உருவத்தைத்தான் கொடுப்பான்’

என்கிற அரிய செய்தியை விட்டல் ராவ் வழி  வாசகர்க்குச்சொல்கிறார் பாவண்ணன்.  அங்கிருந்த எல்லோரிடமிருந்தும்  பணம் வசூலித்து ஒரு நாற்பது ரூபாயை அந்த மாடலுக்காக  வந்த பெண்ணுக்குக் கொடுத்தனுப்புகிறார்கள் என்கிற  நல்ல செய்தியும் கட்டுரையில் வருகிறது.

’பாலர் பாடல்கள்’ என்னும் தலைப்போடு வரும் அடுத்த கட்டுரையில் விட்டல் ராவ் தனது சிறுவயதில் கற்றுக்கொண்ட ஆங்கிலப் பாடல்களை அழகாக ஒப்பித்து அசத்துகிறார்.

‘Cocks crow in the morn

To tell us to rise

And he who lies late

Will never be wise  என்கிற  சேவல் பற்றிய பாடல்,

‘Cock a doodle do

My dame has lost her shoe  என்கிற மற்றுமொரு சேவல் பாடல்

‘Her arms across her breast she laid

She was more fair than words can say

Barefooted  came the beggar maid

Before the king Cophetua.  என்கிற கோமாளி ராஜா ஒரு பிச்சைக்காரப் பெண்ணை மணக்கும்  பாடல் ஒன்று கூட வெளிப்படுகிறது  விட்டல் ராவின் மனக்குகையிலிருந்து.

அடுத்து வரும் கட்டுரை’ ஒரே ஒரு சிறுகதை’. இந்நூலுக்குத்தலைப்பாய் அமைந்த கட்டுரை. தினமணியின் ஆழ்ந்த  வாசகரான பாவண்ணன் தினமணியில்  அம்ஷன் குமார் பற்றியும், சாகித்ய அகாதெமியின் சிறுகதைத்தொகுப்பு  பற்றியும் கலாரசிகன் குறிப்பிட்டுள்ளது பற்றி விட்டல்ராவோடு பேச்சுத்தொடங்குகிறார். விட்டல் ராவ் கலைஞன் பதிப்பகத்து மாசிலாமணி யின்   ஆலோசனையில் இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்னும் தொகுப்பு வேலையை ஆரம்பித்த கதையைச் சொல்கிறார்.  எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே சிறுகதைத் தொகுப்பிலே சேர்ப்பதற்கு  தன் கதையைத் தானே தேர்வு செய்தது சொல்கிறார். எழுத்தாளர்கள் பட்டியலை  ஜெயகாந்தன் வாங்கிப்பார்க்கிறார். அதனில் இருவர் பெயர் விட்டுப் போயிற்று என்கிறார்.  பி. ச. குப்புசாமியும், பி. ஸ்ரீனிவாசனும் அந்த இருவர். குப்புசாமியின் கதை கங்கவரம், ஸ்ரீனிவாசனின் கதை திருமணம் என்கிற ஒரு  குறிப்பும்  தருகிறார். அந்த இருவரின் விலாசமும் தருகிறார். விட்டல்ராவ் ஒரு   கடிதம் எழுதிட திருப்பத்தூரிலிருந்து  குப்புசாமி கங்கவரம் கதையை அனுப்பி வைக்கிறார். சென்னையிலிருந்த ஸ்ரீனிவாசனை விட்டல் ராவ் நேரில் சென்று சந்திக்கிறார்.’ திருமணம்’ சிறுகதையைப் பெற்றுக்கொள்கிறார். இதுவரை ஒரு தொகுப்புமே போடாத  எழுத்தாளர் ஸ்ரீனிவாசனிடமிருந்து இருபது  சிறுகதைகளை வாங்கி வந்து  அதனை ஒரு தொகுப்பாக்க முனைகிறார் விட்டல் ராவ். அதுதான் நடைபெறவேயில்லை.  அந்தப்பதிப்பகத்தாரரோ கதைகளைத் தொலைத்தும் விடுகிறார்.   பதிப்பாளரின் பெயரை  விட்டல் ராவ் குறிப்பிடவும் இல்லை. விட்டல் ராவ் தொகுத்த  நூறு கதைகளில் ஒன்றாக  ஸ்ரீனிவாசனின் திருமணம் இடம் பெறுகிறது. ஆனால் தொகுப்பைக் கண்ணால் பார்க்காமலே மறைந்து விடுகிறார் ஸ்ரீனிவாசன்.

’’ஒரு தொகுப்புக்கான கனவு’  என்று தலைப்பிட்ட கட்டுரையில் பாவண்ணன்  வி. கமலா ராவ் பற்றிக்குறிப்பிடுகிறார். கமலா ராவ்  என்கிற பெயரில் இரண்டு சிறுகதைகள் ஒன்று  ‘பாசம் பிரிவதில்லை’  மற்றொன்று ‘ எஞ்சின் தண்ணீர்’ இவ்விரண்டு கதைகளைப் பற்றி விரிவாகப்பேசுகிறார்.  பாவண்ணன் விட்டல் ராவிடம்  கமலா ராவ் யாரெனக் கேட்கிறார். விட்டல் ராவின் மனைவிதான் அந்த கமலா ராவ்.  இதனை அறிந்த பாவண்ணன் வியந்து போகிறார். விட்டல் ராவ் தனது மனைவி   கமலா  ஏழு சிறுகதைகள் எழுதி அவை வெவ்வேறு  இதழ்களில் பிரசுரமானதைப் பற்றிக்குறிப்பிடுகிறார். அவைகளைச் சரியாக பாதுகாத்து வைக்காதது பற்றி விட்டல் ராவ் வருத்தப்படுகிறார். அவைகளை எப்படியேனும் தேடிக்கண்டு பிடித்து ஒரு தொகுப்பாய்க் கொண்டு வரலாம் என்கிற  உருப்படியானதொரு யோசனையை வைக்கிறார் பாவண்ணன்.

பாகவதரின் பாடல்கள் என்னும் கட்டுரையில் பாவண்ணன் தனது தந்தை பலராமன்   தியாகராஜ பாகவதரின் பாடல்களில்  எத்தனை ஈடுபாடு கொண்டிருந்தார் என்று  தொடங்குகிறார். விட்டல் ராவ் அவரது குடும்பமே பாகவதரின் பாடல்களில் தோய்ந்து போயிருந்ததைக் குறிப்பிடுகிறார். ‘ பவளக்கொடிதான் பாகவதரு முதல் படம். அவருக்கு அதுல ’அர்ஜுனன் நானடி மானேன்னு’ ஒரு பாட்டக்கேட்டு கிறங்காத ஆளே அந்தக் காலத்துல தமிழ்நாட்டுல இல்லை. ஒரே படத்துல அவர் புகழ் உச்சிக்கே போயிட்டாரு’ என்று சொல்லிக்கொண்டே போகிறார்.

  கிருஷ்ணகிரியிலேந்து சென்னைக்குப்போகிற வழியில்  காட்னாம் பட்டி என்றொரு ஊர் உள்ளது. அங்கு ஒரு மலை முருகன் கோவில். அந்தக்கோவிலில் நிகழும் அன்னதானம், அங்கு ஒரு வாய் பேசாத சாமியார் இருந்தார். அவருக்கு சட்டி சாமியார் என்று பெயர். அன்னதான  சட்டியைக்   கயிற்றால் கட்டி  அதனைத் தன் இடுப்பில் சுற்றியபடி அவர் முருகன்  கோவிலை வலம் வருவார்.  வேறு ஒரு சிவாச்சாரியார் அந்தக்கோவிலுக்குப்  புதிதாய் வர சட்டி சாமியாருக்கும் அவருக்கும் பிரச்சனை எழுகிறது.  அந்தப்புதியவர் சட்டி சாமியாரை  விரட்டி அடித்தார். சட்டி சாமியார் ஒரு மலையில் ஏறி விழுந்து இறந்து போகிறார். பிறகு பாகவதர் பற்றிய விபரம் சொல்கிறார் விட்டல் ராவ்.

‘காட்னாம்பட்டியில் முதல் கச்சேரி எப்பவும் கே .பி. சுந்தராம்பாள் கச்சேரிதான்.அருமையா பாடி ஆரம்பிச்சி வைப்பாங்க.அடுத்த நாள் லோகநாதன் கச்சேரி. அதுக்கப்புறம் சி. எஸ். ஜெயராமன் பாடுவாரு. அதுக்கப்பறம் நம்ம தியாகராஜ பாகவதர் வருவாரு’

பாகவதருடைய  இரண்டு பாடல்கள், ஒன்று  ‘கைமாறு செய்வதுண்டோ- காந்திஜிக்கு கைமாறு செய்வதுண்டோ, மற்றும் ஒன்று ‘காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பதும் எளிதாமோ’ இவைகளைச் சிறப்பாக விட்டல் ராவ்  பாடி முடிக்கிறார்.

’அந்தக்காலத்து நண்பர்கள்’ என்கிற கட்டுரை,  விட்டல் ராவுடைய  பள்ளிக்கூட நண்பர் சந்திரசேகர் பற்றிப் பேசுகிறது. அவருடைய இறப்பு செய்தியை அவருடைய பிள்ளையே  விட்டலிடம் போனில் தெரிவிக்கிறார். அதிர்ந்து போகிறார்   விட்டல் ராவ். பாவண்ணனிடம் சந்திரசேகர் பற்றிய முழு விபரமும் சொல்லப்படுகிறது. சந்திரசேகருடைய தந்தை  ஸ்ரீகண்டையா. கன்னடம் பேசுபவர். அவருக்கு ஒன்பது குழந்தைகள். அவர்களின் பெயர்கள் தொழில் வாழ்க்கை அத்தனையும்  வாசகர்க்குப் பட்டியல் போட்டுத்தருகிறார் விட்டல் ராவ்.

அடுத்த கட்டுரை ’ மகத்தான ரசிகர்’. அக்கட்டுரையில்  க. நா. சு வுக்கு  ஒரு சமயம் தொண்டை கட்டிப்போன செய்தியையும், அதற்குக் காரணமான நார்த்தங்காய் ஜூஸ் பற்றியும்  க. நா. சுவின் மனைவியே அவரிடம்  சொன்னதைப் பகிர்கிறார் விட்டல் ராவ்.அந்த  மாமி க. நா. சு பற்றி,’ இவருக்குப் புத்தியே இல்லைங்க’ என்று சொன்னதையும்,  அதனையே யாரோ தனக்கு பெரிய விருது அறிவிப்பு செய்வது போல் க.நா.சு பாவித்துக்கேட்டதையும்  அழகாய்ச் சொல்கிறார். வெளி நாட்டுப்பத்திரிகையில் ஆங்கிலத்தில் க. நா. சு எழுதிய கட்டுரைக்கு எழுபது டாலர் சன்மானம் வருகிறது. அதனை  ரூபாயாக மாற்றி  ஐந்து ரூபாயை மாமிக்குக்கொடுத்துவிட்டு மற்றதை க. நா.சு   மசால் தோசை, காபி சாப்பிட்டே முடித்ததை நகைச்சுவையோடு சொல்லிப்போகிறார் விட்டல் ராவ்.

அடுத்த கட்டுரை ’அதிகாரத்தின் கதை’.  புகழ்பெற்ற சம்ஸ்கார திரைப்படம் பார்த்த பாவணணன் மறுநாள் விட்டல் ராவைச் சந்திக்கிறார். விட்டல் ராவ் வீட்டில்  ஒரு நோட்டுப்புத்தகத்தில்  செய்தித்தாள்களின் நறுக்குகள்  ஒட்டப்பட்டிருந்ததைக் கவனிக்கிறார் பாவண்ணன். இங்கிலாந்தில் லெய்செஸ்டர் என்னும் இடத்தில்   ஒரு கழிவு நீர்க்கால்வாயைச் சுத்தம் செய்தபோது  கிடைத்த ஒரு சவப்பெட்டியைப் பற்றிய செய்திக்குறிப்பு ஆர்வமூட்டுவதாக இருந்தது. அந்த சவப்பெட்டியில் இருந்த எலும்புக்கூடு  மூன்றாம் ரிச்சர்ட் என்கிற அரசனுடையது என்பதை பல ஆய்வுகளுக்குப்பிறகு கண்டு பிடித்தனர். அதனைச்சகலஅரச  மரியாதையோடுமீண்டும் அடக்கம் செய்கிறார்கள்.  மாபெரும்  எழுத்தாளர் ஷே்க்ஸ்பியர் இந்த அரசனை வைத்து  மூன்றாம் ரிச்சர்ட் என்கிற பேசப்பட்ட நாடகத்தைப்படைத்தார்.

தொடர்ந்து வருவது ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்னும் கட்டுரை. இக்கட்டுரை ஓவியம் வரைவோர் பற்றிய கட்டுரை. கல்கத்தா பம்பாய்  கேரளம் சென்னை என்று பல்வேறு ஓவியப்பள்ளிகள் குறித்தும்  விரிவாகப்பேசுகிறார் விட்டல் ராவ். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள  தேவிபிரசாத் ராய்  செளத்ரியின்  உழைப்பாளர் சிலை பற்றியும் பேச்சு வருகிறது.சென்னையில் நாற்பத்தைந்து வருஷம் வாழ்ந்த விட்டல் ராவ்  ஆர். சூடாமணி என்னும் எழுத்தாளர் மிகச்சிறந்த ஓவியரும் கூட என்பதை அறியாது போனதற்காக மிகவே வருத்தப்படுகிறார்.

விட்டல் ராவ் வாட்டர் கலர் ஓவியம் பற்றி ஒரு வரையறை தருகிறார்.‘வாட்டர் கலர் பெயிண்டிங்கறது சாதாரண விஷயமில்லை பாவண்ணன். ஒரே ஒரு சின்ன ஸ்ட்ரோக்  தப்பா போனாலும் மொத்த படமும்  வீணாயிடும். திருத்திப்போட வழியே இருக்காது. நாலஞ்சி மடங்கு உழைப்பைப் போட்டாத்தான் நல்லா வரும். அதுல சூடாமணியம்மா ரொம்ப திறமைசாலியா  இருந்திருக்காங்க.ஒரே ஊருக்குள்ள  ரொம்ப பக்கத்திலே இருந்துங்கூட தவற விட்டுவிட்டேங்கற எண்ணம்தான் வருத்தமா இருக்குது’

 கலையின் வெற்றி என்கிற  அடுத்த கட்டுரை இல்லுஸ்ட்ரேடெட் வீக்லி ஆஃப் இந்தியா ஆசிரியர்  குஷ்வந்த் சிங் பற்றி விரிவாக அலசுகிறது. அவ்வார இதழை  உயர்தட்டு  மக்களுக்கானது என்பதிலிருந்தும்   எல்லோருக்குமானதாக  மாற்றியது அவர்தான்.  இதழில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு பிரதான பங்களிப்பு தந்தவர் அவரே . யு . ஆர் . அனந்தமூர்த்தியின் சம்ஸ்கார  நாவலை ஏ. கே ராமானுஜம் வழியாக மொழிபெய்ர்க்க வைத்து  அவர்  வெளியிட்டார்.  எம். டி வாசுதேவ நாயரின் ஒப்போள் என்கிற நாவலையும், தி. ஜானகிராமனின்  அம்மா வந்தாள் என்கிற நாவலையும்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.  ப்ரிஞ்சால் ஸ்டோரி என்னும்  ஒரு  புதுமைக்கதையையும் அவர் வெளியிட்டார். ஒரு  குண்டு கத்திரிக்காய் ஒருவர் கா;லில் மிதிபட்டுவிட  அந்த மிதிபட்ட உருவம் அடுத்தவருக்கு பிள்ளையார் மாதிரி தெரிகிறது. அதுவும் ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு வழிபடப்படுகிறது. பின்னர்  அதுவே  காய்ந்து குச்சியாகி   சிலுவையில் அறையப்பட்ட ஏசுவாய்  ஒருவருக்குத் தெரிய அப்படியேயும்   வழிபடப்படுகிறது. பிறகு அதுவே ஒரு  முஸ்லிம் பெரியவருக்கு,   சூஃபி யின் உருவாய்த்தெரிகிறது. அதை எடுத்துப்போய் அவரும் வழிபடுகிறார். எத்தனை அடுக்கு அடுக்காய்  கடவுள் பற்றிய சமூக விமரிசனம் செய்து பேசுகிறார் குஷ்வந்த் சிங் என்கிறார் விட்டல் ராவ். 

’இரண்டு ஓவியங்கள்’ என்கிற கட்டுரை தொடர்ந்து வருகிறது. எழுத்தாளர்கள் பலர் ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். தாகூர்  பாவண்ணன்  விட்டல் ராவ்                          வே. சபாநாயகம் போன்ற எழுத்தாளர்கள் ஓவியம் வரைவதிலும்  மிகுந்த ஆர்வமுடன் இருந்திருக்கிறார்கள். விட்டல் ராவ் ஓவியம் பற்றி மிக ஆழ்ந்த விஷயங்களைக் கற்றுத்தேர்ந்தவர். இதை  அவருடைய  படைப்புக்களே உணர்த்துகின்றன.  விட்டல் ராவ் இரண்டு ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டு  இக்கட்டுரையில்  பேசுகிறார். ஒன்று மெட்ராஸ் வெயில் பற்றிய அழகான ஓவியம்.  சென்னைக்கோடை வெயில். ஒரு பனை மரம். அதன் நிழலில் ஒரு தம்பதியர். குடை பிடித்துக்கொண்ட  அவர்களின் குழந்தைகள் இருவர்.

 மற்றொன்று மெட்ராஸ் மழை பற்றிய ஓவியம். ’சோன்னு கொட்டுற மழையில ஒரு தெருவுக்குள்ள  பல பேரு சுத்தி சுத்தி நடக்கறாங்க. மழை பெய்யுதேன்னு மத்த ஊருல ஒதுங்கி நிக்கிறமாதிரி மெட்ராஸ்ல யாரும் ஒதுங்கி நிக்கற பழக்கமில்லை.’ என்கிறார்.   ‘கொட்டோ கொட்டுனு அடிக்குற மழையில ஏராளமான குடைகள் மட்டுமே தெரியற காட்சி அது. யாருடைய முகமும் ஓவியத்துல கிடையாது. அதே மாதிரி  எல்லாருடைய கால்கள்ளயும் விதம் விதமான ஹவாய் செருப்புகள். யாருடைய முகமும் ஓவியத்துல கெடையாது. எல்லாருமே  முதுகுப்பக்கம் மட்டுமே  தெரியற மனிதர்கள்.’ என்கிற ஓவியம் பற்றிய செய்தி வருகிறது.

’தற்செயல்களும் திருப்பு முனைகளும்’  என்னும் கட்டுரையில்  இலங்க வானொலியின்  பி. எச். அப்துல் ஹமீத் பற்றி பாவண்ணன் தொடங்கி வைக்கிறார்.  விட்டல் ராவ்  வீணை. எஸ். பாலச்சந்தர் தொடர்பு  அவருக்கு எப்படி ஏற்பட்டது  என்பது பற்றியும், அவரால் ஒரு  குடத்துள் இட்ட விளக்காய் இருந்த  ஒரு நெல்லூர் மனிதர், விஜயவாடா வானொலியில் எப்படி  நிலையக்கலைஞரானார் என்கிற வரலாறு பற்றியும் பேசுகிறார்.

’சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்’ என்னும் அடுத்த கட்டுரை மவுண்ட் ரோடு கீதா ஹோட்டலுக்குப் பக்கத்தில் ஒரு  சிறிய அறையில் பழைய புத்தகக்கடை வைத்திருந்த சிவா பற்றிப் பேசுகிறது. ஆதம்பாக்கத்தில் சூப்பர் மார்கெட் வைத்திருந்த  ஹரி என்பவர் புராதனக் கோட்டை கொத்தளங்கள் பற்றி  மிகுந்த  ஈடுபாடு உடையவர். காமிராக்காரர். அவரும் விட்டலுக்கு நெருங்கிய  நண்பரானார். இருவருக்கும் தொல் பொருள் பற்றிய   மிகை ஆர்வம் உறவுக்குக் காரணமாகிறது. அந்த ஹரியே பழைய புத்தகக்கடைக்கு விட்டல் ராவை  ஆற்றுப்படுத்தியவர்.

அடுத்த கட்டுரை ‘நினைக்கப்படும்’. இதனில்  ஜெர்மானிய கதே கால்வி்ட்ஸ் பற்றி விவாதிக்கப்படுகிறது.  கால்விட்ஸ்  மிகச்சிறந்த ஓவியர். உலகப்புகழ் பெற்றவர். இவருடைய ஓவியங்களையும்  அவரே  தன்னைத்தான் செதுக்கிய சிற்பத்தையும்,   தீட்டிய ஓவியத்தையும் சென்னை மாக்ஸ்முல்லர் பவனில் 1967 வாக்கில் கண்டதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ஜெர்மனியில் நடந்த இரண்டு உலகப்போர்களும் அவரை வெகுவாகப் பாதித்துவிட்டன. அக்கால ஜெர்மனி  துக்கத்தைத்தான் அனுபவித்தது. அந்த துக்கத்தைக் கலையாக மடை மாற்றிய கலைஞர்  கால்விட்ஸ்.  இறந்துபோன    ஒரு குழந்தையின் உடலைத்தன் மார்போடு அணைத்திருக்கும் அவரின்  ஓவியத்தைக்கண்டு மனம் பதைக்கிறார் பாவண்ணன்.

’அதிசய மனிதரும் அற்புத ஓவியங்களும்’ என்னும் அடுத்த கட்டுரை பிரதிவாதி பயங்கரம்  அன்னங்கர ஆச்சாரியார்  காஞ்சீபுரம்  வீட்டில் காணப்பட்ட  செராமிக் ஓவியங்கள் பற்றி வியந்துபேசுகிறது. பெல்ஜியத்திலிருந்து காஞ்சீபுரம் வீட்டுக்கூடத்திற்கு வந்த ராமாயண பீங்கான் ஒவியங்கள் பற்றிக்கேள்விப்பட  நாம் வியந்து போகிறோம்.

இறுதியாக இப்புத்தகத்தில் வந்துள்ள கட்டுரை ‘விசித்திரமானவர்கள்’.  இது மைசூரில் இருந்த ‘த்வன்யலோகா’ என்னும் கலைஞர்களை ஆதரிக்கும் அமைப்பு பற்றிப்பேசுகிறது. இந்த அமைப்போடு நெருக்கமாய் இருந்த விட்டல் ராவை எண்ணி வாசகன் பிரமித்துப்போகிறான்.’ ஒரு எழுத்தாளனுக்குத் தொடர்ச்சியா  நாற்பத்தியஞ்சி நாட்கள்  தங்கறதுக்கு  த்வன்யலோகாவுல அறை ஒதுக்கிக் கொடுப்பாங்க. சிவராம கரந்த்,  ஐயப்ப பணிக்கர், ஏ.கே ராமானுஜம்,ஆர்.கே நாராயண். ஜயந்த் மகாபாதரா போன்றோர் அங்கு தங்கி கலைத்தவம் புரிந்திருக்கிறார்கள்.  ஆங்கிலக்  கவி  நிசிம் எழிக்கலும் அப்படி வந்து  அங்கு தங்கியிருக்கிறார். அவர் விட்டல் ராவுக்கு நெருக்கமாகி இருக்கிறார். நூலகத்தில்  படிக்க வாங்கிய புத்தகத்தைத் தன் அறையில் வைத்துவிட்டு மறந்து பம்பாய் போன நிசிம் எழிக்கல் திரும்பவும் மைசூர்  த்வன்யலோகா வந்து அதனை நூலகரிடம் ஒப்படைக்கிறார். அவ்வறையில் அப்போது  தங்கியிருந்தவர்தான் நண்பர் விட்டல் ராவ்.

’தமிழ் நாட்டுல  இப்படி ஒரு அமைப்பு இருந்தா நல்லா இருக்கும். அந்தக்கனவு என்னைக்கு நிறைவேறுமோ தெரியல’ என்று தன் ஆதங்கம் சொல்கிறார் பாவண்ணன். தமிழ் மண்ணில் சாதியும் அரசியலும் அதனைச் சாத்தியமாக்க விடுமா என்ன? என்பது என் வினா.

இந்த நூலை வாசித்த போது  இரு  பெரு நதிகள் சந்தித்துக்கொண்டு பேசியமாதிரி  அல்லவா  நான் உணர்ந்தேன்.

-------------------------------------------

 

 

Wednesday, May 13, 2026

சின்ன விஷயம் -short story

 

 

 

 

சின்ன விஷயம்                                           

 

 

’காலில் இது ஏது ? புது செருப்பு’  தன் காலைப்பார்த்துக்கொண்டான். ஆமாம் அது   அவன் செருப்பில்லை .  ’வேறு ஒருவர் செருப்புதான். ’அது இருக்கட்டும்  இது எப்படி  என் காலுக்கு வந்தது’. முணு முணுத்தான். அவன் செராக்ஸ் போடுவதற்குப் போன கடையிலிருந்து   வேகு வேகு  என்று வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.  

அம்மாவுக்கு பூர்வீகம் தருமங்குடி.   நாட்டு ஓடு போட்ட  ஒரு  கல் வீடும்  பெரிய தோட்டமும் அம்மா பெயரில்  இருந்தது. அம்மா  தான் இறப்பதற்கு முன்பாகத் தன் வீட்டையும் தோட்டத்தையும்  பையன்களுக்கு   உயில்  எழுதி வைத்தாள். முடிந்து போனாள். பையன்கள் என்றால்  அவனும்  அவனோடு உடன் பிறந்த இரண்டு சகோதரர்களையும் சேர்த்துத்தான் சொல்லவேண்டும்.

அந்த வீடு   அவனுடைய அம்மா தாத்தா வாங்கியது.  அதன்  கிரையப்பத்திரத்தில் உள்ள நீள அகல கணக்குப்  பார்த்ததில் ஒரு பக்கம் உள்ள நீளம்  இன்னொரு  பக்கத்தில் காணோம். செவ்வகமாய் இருக்கவேண்டிய மனை வரைப்படம் நாற்கரமாய் காட்சியானது. பத்திரத்தில் உள்ள படி பார்த்தால் மனையின் மொத்த  பரப்பு  இருபத்தி நாலு செண்ட்டுக்கு  வரவேண்டும்.  ஏனோ  குடியிருக்கும்  வீட்டோடு சேர்ந்து தோட்ட நிலத்தையும்  அளந்து பார்த்தில் பதினைந்தே செண்டுதான் வந்தது. வீட்டையும் தோட்டத்தையும்   சரியாய் அளந்து கொடுக்க வருவாய்த்துறைக்கு   விண்ணப்பித்தான். நிலம் அளக்கும் சர்வேயரை வீட்டிற்கு  அழைத்து  வருவதற்குள்  போதும் போதும் என்றாகிவிட்டது.  ஒரு மாப்பிள்ளையை ஜானவாசத்திற்கு  அழைத்து வருவது போல்  அல்லவா அவனுக்கு  அது அனுபவமானது.  அப்படி வந்த சர்வேயர் நிலத்தை அளக்க  அவன் வீட்டில் அளவை சங்கிலியைப் பிடித்தார். அவன் தயாராய்க்கூர்  சீவி வைத்திருந்த  வேப்பம்  முளைக்குச்சிகளை அங்கங்கு நட்டார். ஒரு பதினைந்து அடி அளவு  அகலத்தில் குறைகிறது. கிரைய  பத்திரத்தில்  கண்டுள்ளபடிக்கு   அது தன் வசமுள்ள  அரசாங்க வரைப்படத்தில் இல்லையே என்றார்.

‘இதுக்கு நா என்ன செய்யணும்’

‘இந்த ஊரு தருமங்குடி  முதுகுன்றம் தாலுக்கா, இதுவே  ரெவின்யூ டிவிசனாவும் இருக்கு.  ஆக முதுகுன்றம்கோட்டாட்சியருக்கு மனு ஒன்னு எழுதி குடுங்க.   அவுருதான் இந்த அளவுல எது சரின்னு எது தப்புன்னு சொல்லணும்’

கிரைய பத்திரத்தில்  குறிப்பிட்டுள்ள  நீளம் அகலம்,  எஃப். எம். பி அரசு நிலவரை படத்தில் இல்லை குறைகிறது. இது விஷயம் தெரிந்துகொள்ளவே  ஆறு மாதமானது. வீட்டுப்  பத்திர சொத்து விபரத்தையும்  ரெவின்யூ அலுவலக மேப்பையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே  இது தெரிந்து விடும்.  ஆனால்  இதற்குச் சங்கிலியைத் தூக்கிக்கொண்டு அளக்கிறேன்  பார் என்று  சர்வேயர் வீட்டுக்கு  ஏன்  வரவேண்டும்.   கூடவே தருமங்குடி வி ஏ ஓ வும் ’இதனில் நானில்லாமலா’ என்று வந்திருந்தார்.  அவர்கள் அளவைக்கு  வந்த அன்று அந்த  இருவரும் கேட்டது  எல்லாமும் கொடுத்தான் அதில் எந்த குறையும் வைக்கவில்லை அவன்.

அந்த சர்வேயர் அவனுக்குச் சொன்னபடி  முதுகுன்றம் கோட்டாட்சியருக்கு  மனு கொடுக்கவேண்டும்.   பத்திர நகலுக்கும் பட்டா  நகலுக்கும்  செராக்ஸ்  போடத்தான்  அவன்  அந்தக்கடைக்குப் போயிருந்தான். அப்படிப் போன இடத்தில்  அவனது செருப்பை யாரோ காலில் மாட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். தெரிந்தா இப்படிச் செய்வார்கள். தெரியாமல்தான் இது நடந்திருக்ககூடும். இனி என்ன செய்ய ?.  உடன் அந்த  செராக்ஸ் கடையை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தான். செருப்பை நாம்தான் மாற்றி போட்டுக்கொண்டு வந்துவிட்டோமா இல்லை இது ஒரே ஒரு ஜோடிதான் வாசலில் பாக்கியாய் இருந்து  அதைச் சரியாயக கவனிக்காமல் நாமே  காலில் மாட்டிக்கொண்டு விட்டோமா. அவனுக்கு  ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் காலில் போட்டிருக்கும் செருப்பு மட்டும் அவனதில்லை என்பதில் உறுதியாயிருந்தான்.

செராக்ஸ் கடை வந்தாயிற்று. செருப்புக்காலோடு  வாடிக்கையாளர்கள் யாரும் அந்தக் கடையின் உள்ளே செல்வதில்லை.  அதுப்படியே  அவன் தான் போட்டிருந்த செருப்பைக்கடை  வாசலில் கழட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.

‘இப்ப சித்த மிந்தி  உங்க கடைக்கு வந்து  பத்திர காபி  செராக்ஸ் போட்டுகிட்டு  போனேன் சார். என் செருப்பு மாறிப்  போயிருக்கு. யாரோ என் செருப்பை போட்டுகிட்டு போயிருக்கணும்’ அவன் ஆரம்பித்தான். செராக்ஸ்கடை வைத்திருப்பவரின் மனைவி  அந்தக்கடையிலேயே  கணவருக்கு ஒத்தாசையாக இருந்தாள். அவள்   செருப்புப் பிரச்சனையில்  மாட்டிக்கொண்ட  அவனையே கவனித்து பார்த்துக்கொண்டிருந்தாள். கடைக்காரரோடு அவன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.

‘சார். ஒரே  ஒரு பெரியவர் உங்களுக்கு மின்னாடி செராக்ஸ் போட்டுகிட்டு போனாரு’

‘அப்ப அவர்தான் என் செருப்பை மாத்தி போட்டுகிட்டு போயிருக்கணும்’

‘சார் அவுரு  நல்ல மனுஷன். அப்பிடி நெதானம் இல்லாம எதையும் செய்றவரு இல்ல.’

‘நான்  இங்க கொஞ்சம் வெயிட் பண்றேன்.  தெரியாம போட்டுகிட்டு போனவங்க  யாராவது திரும்பி வந்து  என் செருப்ப என் கிட்ட  குடுத்துட்டும் போகலாமில்ல’

‘பேஷா வெயிட் பண்ணுங்க.  இந்த சேர்ல உக்காருங்க.  ஆனா எனக்கு தெரிஞ்சி அவுரு  பெர்ஃபெக்ட்டான ஆசாமி’

’உங்களுக்குத்தான் நல்லா தெரியும் அவர. எனக்கு சுத்தமாத் தெரியாது.தவறுதலா கூட  எதுவும் நடந்திருக்கலாம்.   ஆர்த்தோ டாக்டர்  எனக்குன்னு பிரஸ்கிர்ப்ஷன்  எழுதிக்  குடுத்து  பிரத்யேகமா  தயார் பண்ணின செருப்பு. அதுக்குன்னு  ஸ்பெஷலா  ஒரு செருப்பு தெச்சி தர்ர தொழிலாளி அந்த டாக்டர்கிட்ட  வந்து போறாரு. எனக்கு குதிகாலு வலின்னு அந்த ஆர்த்தோ  டாக்டர் கிட்ட போயி நின்னேன். அவரு அந்த வலிக்குற குதிக்கால எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாரு. குதிகாலு எலும்பு ரொம்ப ஒழச்சி தேஞ்சிடுச்சி. அந்த தேஞ்ச எலும்ப சப்போர்ட் பண்ணறதுக்கு புதுசா ஒரு எலும்பு  மொளச்சி இருக்கு. அதனாலதான் அந்த வலின்னு’ டாக்டர்  அவனிடம் சொல்லியதை ஒரு பாட்டம் ஒப்பித்தான்.

‘என்ன டாக்டர் அப்பிடி எல்லாம்  கூட இருக்குமா. எலும்பு தேஞ்சி  போச்சின்னா இன்னொரு எலும்பு  கூட அந்த எடத்துல மொளைச்சி வந்துடுமா’ அவன் டாக்டரையே திரும்பவும் கேட்டிருக்கிறான்.

‘மொளச்சி வந்துருக்கே. அப்பிடி  ஒரு எலும்பு  வர்ரதும் சாதாரணமா  நடக்கறதுதான். இந்த எலும்பு தேஞ்சிடுச்சி.  தேஞ்ச எலும்ப  சப்போட் பண்ண இன்னொரு எலும்பு வேணும்னு  நம்ப ஒடம்பு  முடிவு பண்ணி நடக்கற வேல இது.  நம்ப மூளைக்கும் அங்க நடந்த  அந்த வேலைக்கும் தொடர்பு இருக்கும். ஆனா நமக்கு மட்டும்  அது வெளங்காது.  நமக்கு தெரியாம எவ்வளவோ வேலைங்க  நம்ப  ஒடம்புக்குள்ள நடக்குது. அப்பிடித்தான் இதுவும்’ டாக்டர் சொல்லியிருக்கிறார்.

யோசிக்கும்போது  விஷயங்கள் ஒவ்வொன்றாய் அவன் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன.

அவனுக்கு வந்த குதிகால் வலிக்காக வாங்கியது. அது விலை கூடிய  பகிள்ஸ் வைத்த செருப்பு. செருப்பில் ஒரு கர்வ் அமைப்பு அதன் நடுப்பகுதியில்  மேடாக இருக்கும்.இதனை தைத்து வழங்கும் நிறுவனம் ஆதம்பாக்கத்தில் இருப்பதையும் அங்கிருந்து தாம்பரத்தில் இருக்கும் ஆர்த்தோ டாக்டருக்கு, குதிகால் வலியைக் குறைக்கும் செருப்பு  டெலிவரி செய்யப்படுவதையும், அவன் அறிந்திருந்தான். ஒரு  ஜோடி செருப்பின் விலையே மூவாயிரம் ரூபாய் ஆனது. இந்த லட்சணத்தில் ஆர்த்தோ டாக்டர் வீட்டுக்குள்ளே ஒரு செருப்பும் வீட்டுக்கு வெளியே போகும் போது  வேறு ஒரு செருப்பும் என இரண்டு செட் கட்டாயம்  வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறார். அவன் தான்  ரூபாய் மூவாயிரம் கொடுத்து ஒரு ஜோடி   மட்டும் வாங்கினான்.  காலில் போட்டு நடந்து பார்த்தான்.  குதிக் கால் வலி குறைந்து போனது. அந்த வகை செருப்பை காலில் மாட்டிக்கொண்டால் அவன் உயரம் சற்றுக்  கூடிப்போவதுவாய்க்கூட   உணர்ந்தான்.

செராக்ஸ்கடைக்காரரும் அவர் மனைவியும் அவர்களுக்குள்ளாக   இப்படிப் பேசிக்கொண்டார்கள். அவனும்  கூட அதில் கவனமாகவே இருந்தான்.

‘செருப்பு மாறின விஷயம்  எனக்கும் கஷ்டமா இருக்குங்க. ஏங்க அந்த பெரியவரு வீட்டுக்கு பக்கத்து வீடு என் சிநேகிதி வீடு. அந்த சிநேகிதி   இது விஷயம் என்னிடம்  முன்னமே சொல்லியிருக்கா. அந்த சிநேகிதிக்கு  இப்ப  ஒரு போன் போடுவோம். அந்த பெரியவர அழச்சி பேச சொல்லுவம்’

‘நல்லா தெரியுமா உனக்கு. பெரியவரு வீடு உன் சிநேகிதி வீட்டுக்கு பக்கத்து வீடுதானா.’

‘அது சரிதாங்க . அதுல ஒன்னும் தப்பு இல்ல.

செராக்ஸ் கடைக்காரரின்  மனைவி தன் சிநேகிதிக்குப் போன் போட்டார்.  செருப்பு மாறிப்போன விபரம் சொன்னார்.’ அடுத்த வீட்டு பெரியவர என் கிட்ட  கொஞ்சம் பேசச் சொல்லுங்க ’  என்று கேட்டுக்கொண்டாள். பெரியவர் வந்தார். போனில் பேசினார்.’ என் செருப்புதான் எங்கிட்ட இருக்கு. வேற யாராவது மாத்தி போட்டுகிட்டு போயிருப்பாங்க   உங்க கடையிலேயே  நல்லா பாருங்க என்றார். பட்டென்று போனை வைத்துவிட்டார்.

அந்த நேரம் பார்த்து அவன் மனைவியிடமிருந்து  மொபைலில்  அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘ என்ன சேதி’ என்றான். அவள் ஆரம்பித்தாள். ‘ மொதல்ல  நீங்க கால்ல போட்டுறுக்கறது யார் செருப்புன்னு பாருங்க. உங்க செருப்ப எதுன்னு  நீங்க பாத்து போடாம  உங்க பையன் செருப்ப மாட்டிகிட்டு போயிருக்கீங்க.  இங்க அவன்    என்னண்ட வந்து   சத்தம் போடுறான். அவனுக்கு இப்ப வெளியில எங்கோ போகணுமாம்.  உங்க செருப்பு  கூடம் உங்களுக்கு தெரியாதா. யார் செருப்பையாவது மாட்டிகிட்டு கெளம்பறதா. வயசு மட்டும்  ஆவுது அவ்வளவுதான்’

‘அப்ப என்  பக்கிள்ஸ் வச்ச ஆர்த்தோ செருப்பு’

‘நீங்க அங்காண்ட போனீங்க. கேஸ் சிலிண்டர் காரரு வந்தாரு. அவரு உங்க செருப்ப மாத்தி போட்டுகிட்டு போயிட்டாரு.  அவரே  எனக்கு போன் போட்டாரு விஷயம் சொன்னாரு.  அவருதும்  பக்கிள்ஸ் வச்ச செருப்பாம்.  நம்ம  வீட்டுக்கு திரும்பவும்  வந்தாரு. அவர்  செருப்பை அவர் போட்டுக்கொண்டாரு. ’ பக்கிள்ஸ்  போட்ட உங்க  செருப்பை அவரே  செராக்ஸ் கடைக்கு  வந்து,  உங்களை  நேரா பாத்து உங்க கிட்டயே  குடுத்துடறேன்னு சொன்னாரு’

‘அதுக்குள்ள இவ்வளவு கதை ஆயிடுச்சா. இப்பதான் உயிர்  எனக்கு வந்த மாதிரிக்கு இருக்கு’

‘அது வரட்டும்.  இப்ப நம்ம பையன் செருப்ப மறக்காம திரும்ப  எடுத்துகிட்டு வரணும். அதான் ரெம்ப முக்கியம்’

‘நா என்  கையில புடிச்சிகினு வந்துடறேன்’

‘அதான் தப்பு. செருப்ப  கையில  தூக்கிகிட்டு  ரோட்டுல வருவாங்களா. எதுதாவது தெரியுதா உங்களுக்கு’

‘பின்ன’

‘முக்கியமா உங்க கிட்ட  சொல்லுணும். ஒரு பிளாஸ்டிக் பையி,  செராக்ஸ் போடுற டாகுமெண்ட்  பேப்பரெல்லாம் வச்சி  எடுத்துகிட்டு போனீங்களே, அது உள்ள பையன் செருப்பை  போட்டு கீட்டு கொண்டாராதிங்க’

‘அது கூடமா எனக்கு தெரியாது’ அவன் சொல்வதற்குள்  அவள் போனை வைத்து விட்டாள்.

‘ அவனும் அவன் மனையாளும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்த   செராக்ஸ் கடைக்காரரின் மனைவி ஒரு மஞ்சள்  தாம்பூலப்பையைக்  கொண்டு  வந்தாள். அதனுள்ளாக   பையனின் செருப்பை  அவன்தான்  நுழைத்தாள்.

‘இப்ப இத கையில புடிச்சிகினு ரைட்டா போங்க’ என்றாள். அவனுக்குச் சிரிப்பாய் வந்தது.

செராக்ஸ் கடை வாயிலில் சிலிண்டர் காரர் வந்து அவனை ’சார் சார்’  என்று அழைத்துக்கொண்டிருந்தார்.  அவனுடைய  பக்கிள்ஸ் போட்ட செருப்பு  கேஸ் சிலிண்டர்  வண்டியின் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருந்தது.செராக்ஸ் கடைக்காரரும் அவர் மனைவியும் அவனையும் அந்த சிலிண்டர் காரரையுமே  மாறி மாறி  பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேஸ் சிலிண்டர் வண்டிக்காரர் அவனுடைய செருப்பை எடுத்து அவனிடம் நீட்டினார். ‘ செய்யிற  வேலயில  பதனம் இருக்கணும்  சாரு’  வேகமாய்ச்  சொன்னார். அவனிடம் புன்முறுவலும் செய்தார்.  அப்படித்தானும்   செருப்பு மாற்றி போட்டுக்கொண்டு  போய்விட்டதை  மனதில் எண்ணி வண்டியை  மிதித்துக்கொண்டே  நகர்ந்து போனார்.அவர் கால்களிலும் பக்கிள்ஸ் போட்ட  செருப்பு இருப்பதை அவன் கவனித்தான்

.‘ ரெண்டு ரூவாய  மனுசன் சம்பாரிக்கறதுக்குள்ள எவ்வளவு பிரச்சனை’ என்றார் செராக்ஸ் கடைக்காரர்.

----------------------------------------------------------------------------------------------------

 

 

 

.

 

 

 

 

ரதியின் மன்மதன் ( akkalur iravi)

 

அக்களூர் இரவியின் சிறுகதைகள் ‘ ரதியின் மன்மதன்”           

 

அக்களூர் இரவியின்  சிறுகதைத்தொகுப்பு ‘ரதியின் மன்மதன்’. பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய எழுத்துப் படைப்பு. அக்களூர் இரவி  ஆங்கிலம்- தமிழ்,  மொழிபெயர்ப்பில்  உச்சம் தொட்டவர்.  கனவு நகரம் காஞ்சீபுரம் என்னும் அரிய கட்டுரை நூலைத்தந்தவர்.  வாசகர்கள் மத்தியில்  உய்ர்வாகப் பேசப்பட்ட அந்த நூலை சந்தியாநடராஜன்  வெளியிட்டார். சிறுகதைத் தளத்தில்  அக்களூர்  இரவி  கூடுதலாய்ச் சாதிக்கமுடியும் என்பதை’ ரதியின் மன்மதன்’  வழி வாசகர்கள்  அறிய வாய்க்கிறது. இப்படைப்பை நாற்கரம் வெளியிட்டிருக்கிறது. நாற்கரத்தின் நல்லு இதனை கவனத்தோடு கொண்டு வந்திருக்கிறார். இலக்கிய  நட்பின் இமயம்  தஞ்சாவூர்க் கவிராயரின் அணிந்துரையோடு  இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.’ ஜரிகை வேலைப்பாடுகளோ ஜோடனையோ  இல்லாத வாழ்வில் சந்திக்கின்ற,  மனிதர்களை  எதிர்கொள்கிற நிகழ்வுகளைச் சொல்லும் கதைகள் இவை’ என்கிற அரியதொரு  விளக்கத்தைத் தஞ்சைக் கவிராயர் வழங்கிருக்கிறார்.

முதல் சிறுகதை ‘விநியோகம்’. பிள்ளையாருக்குப் படைக்கும் குருக்கள் காலி  நிவேதனத் தூக்கை சந்நதிக்குக் கொண்டு வருகிறார். பிள்ளையாருக்கு  எதை வைத்துப் படைப்பது. தவறு நிகழ்ந்து விட்டது. அவசரத்தில் காலித்தூக்கை   சைக்கிளில் மாட்டிக்கொண்டு  கோவிலுக்கு வந்துவிட்டார். ஆபத்பாந்தவனாக  உள்ளூர் பிரசிடெண்டின் மனைவி இரண்டு தூக்குகளில் சர்க்கரைப்பொங்கலும் கொத்துக்கடலை சுண்டலும்  விநாயகரின்  படையலுக்குக் கொண்டு தருகிறார். பிரசிடெண்டின் பையனுக்கு சிதம்பரம் காலேஜில் இடம் கிடைத்துவிட்டதாம். ஆகக் கடவுளுக்கு நன்றி சொல்லத்தான்  அவர் வந்திருக்கிறார்.  ஆலய மணி வேக வேகமாக அடிக்கப்படுகிறது. கோவிலில்  பசியோடு காத்துக்கொண்டிருந்த சேவார்த்திகளுக்குப் பிரசாத விநியோகம் உறுதிப்படுகிறது. தினம் தினம் பிள்ளையாருக்குத் தவறாமல்  அபிஷேகம் செய்து ,  அமுது படைக்கும்  குருக்கள்தானவர்.  ஒரே ஒரு நாள்  தெரியாமல்  நிகழ்ந்துவிட்ட தவறுக்காக அவர்  தண்டிக்கப்படவில்லை. அன்று நிவேதனங்கள் அனைவருக்கும் வழங்கி  அந்தக்கடவுளே குருக்களைக் காப்பாற்றி விடுகிறார். இப்படிப் போகிற  ஒரு சுவாரசியமான கதை. விநாயகரையும்  சிறுகதையில்  அடிக்கடி பேச வைக்கிறார் இரவி.

 கையெழுத்து என்று தலைப்பிட்ட ஒரு  சிறுகதை. பள்ளியில் தரப்படும்  ஸ்காலர்ஷிப் பணம் முப்பது ரூபாயை பெற்றுத் தன் தந்தையிடம் கொடுத்தனுப்ப வேண்டும். அதற்காகத்  தந்தையும் மகனும் தலைமை ஆசிரியர் அறை முன்னர் கால் வலிக்க  நிற்கிறார்கள். பையனுக்கோ  வகுப்பில் பாடம் போய்க்கொண்டிருக்கிறது. ’வகுப்பைக் கவனிப்பதையும்  விட ஸ்காலர்ஷிப் பணம் முக்கியமாகி விட்டதா உனக்கு’ எனத் தலைமை ஆசிரியர் அவனைத் திட்டுகிறார்.  முப்பது ரூபாய் பெரிய பணமாய்  அவன் ஏழைத் தந்தைக்குப் பெரிய  ஒத்தாசையாய்  அமையுமே எனத் தீவிரமாய்   யோசிக்கிறான். அவன் வகுப்பாசிரியர் அப்போது அங்கே வருகிறார். அவன்தான்   வகுப்பில் முதல் ரேங்க் வாங்குபவன் என்பதை உறுதி செய்கிறார். உடன்   தலைமை ஆசிரியர்  ஆணையிடுகிறார்.   அவனுக்கு அந்த ஸ்காலர்ஷிப் பணம்  பட்டுவாடா ஆகிறது . கையெழுத்துப்போட்டு அந்தப் பணம் பெற்றுக்கொள்ளத்தானே அப்பாவும்  பள்ளிக்கு   அழைக்கப்பட்டிருக்கிறார்.  தந்தை தன் பெயரை  ஒவ்வொரு  எழுத்தாய் எழுதவே திணறிப்போகிறார். ’மூணாவது மட்டுமே படித்த அப்பா’ அந்த  அப்பாவுக்கு மரியாதை செய்யும் மகன்.

அடுத்து ஒரு  சிறுகதை..’ ரதியின் மன்மதன்’ இந்தத் தொகுப்பிற்குத் தலைப்பாக அமைந்து சிறக்கும் கதை. ஒவ்வொரு எழுத்தாளரும் வாசிக்கவேண்டிய அற்புதமான படைப்பு. படிக்கும் வாசகர்கள் நெகிழ்ந்து போவார்கள். இதனை ஒரு முத்திரைக்கதையாகவே  சொல்லலாம்.படித்தவுடன் வாசகர் மனதில் அமர்ந்துகொள்ளும் தகுதி பெற்ற கதை. ஒவ்வொரு  நிகழ்வையும் சித்திரமாய்ச் செதுக்கிய அக்களூர் இரவியை மனம் நிறைந்து பாராட்டலாம்.  ஐம்பது வயது முதியவர் சிறு கதையின் நாயகன். மணமாகாதவர்.மனம் விட்டுப்பேசவும்  ஒரு ஆறுதல் கூறவும்  அவருக்கு ஒரு துணை வேண்டும். அப்படி ஒரு பெண்ணும்  அமைந்து விடுகிறாள். ஊரார் ஆயிரம் பேசுவர்தான்.  ஈவிரக்கமற்றது காலம். அவள் இறந்தும் விடுகிறாள். அம்முதியவர்  அவளுக்கு  இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்புகிறார். அவரின்  மன வலி யாருக்குத்தான்   புரியும். அக்களூர் இரவி தத்ரூபமாக அந்த பாத்திரத்தை நம்மோடு  அமர்ந்து பேச வைக்கிறார். உள்ளூரில் காமன் தீ உற்சவம் நிகழ்கிறது. அதனில்  பாராளும்  பரமன் ஈசனுக்குக் காதல் தீ  மூட்ட முயன்று  மன்மதன் தோற்றுப்போகிறான்.   ஈசனின்  நெற்றிக்கண்ணின்  தீயில் சாம்பலாகிறான். முக்கண்ணன்  மன்மதனைச் சும்மா விடுவானா , மதுரையில்   நக்கீரரை எரித்த நயனம்தானே அது.

 மன்மதனின் ரதியோ  தன் கணவன்  சாம்பலாகிய  சோகத்தைக் கொட்டித்தீர்க்கிறாள். முக்கடவுளரையும் அழைத்து நடந்துவிட்ட அநீதிக்கு  நியாயம் கேட்கிறாள். மன்மதனுக்கு ஒரு   காமக்கணக்கு. அதற்கு  பரமனின் பதிலா இது ,  எங்கேனும் அடுக்குமா  சொல்லுங்கள் தேவர்களே என்கிறாள். ஒரு நியாயம் கிடைக்கிறது. அவள் கண்ணுக்கு மட்டுமே தென்படும்  கணவன் மன்மதன் கிடைத்துவிடுகிறான். போயும் போயும் இவனைப்போய் அந்தப்பெண் காதலித்தாளே என்று ஊரில்  புலம்புவோம். அவள் கண்ணுக்கு அவன் எப்படித்தெரிந்தான் என்பது  நாம் அறியமாட்டோம். ஈசன் கட்டளை அல்லவா அது. காதல்  குருடு.  இன்றும் நாளையும் என்றும் தான்.

உள்ளூர் கோவிலில் காமன் தகனம் முடிந்தது. அம்முதியவர் தன் துணைவி  விடைபெற்றதை நினைத்துப்பார்க்கிறார். ரதி தன் மன்மதனுக்குக் காட்டிய அதே  சோகரசத்தைக் கொட்டித்தீர்க்கிறார். அற்புதமான பாடல் வரிகள்.

’திருக்கணைகள் தாம் தொடுக்க

சிவனுடைய கண்ணாலே

தீயா யெரித்தாரோத்

தேமொழியே தாதிகளா..

முல்லையரும்போ

முகமெல்லாம் பிஞ்சரும்போ

கொல்லையரும்போ

கூடுவது மெக்காலம்

யெள்ளுக்குள் எண்ணெய்போலே

இருந்தோம் சிலகாலம்…

பாடிப்பாடி  கேவி அழுகிறார் அம்முதியவர்.

தனக்கென அங்கீகாரமோ மதிப்போ மரியாதையோ  நல்லதொரு வாழ்க்கையோ  இல்லை., தனக்கிருந்த ஒரு துணையின் இழப்பை இந்தச்சந்தர்ப்பத்தில் ஆற்றாமையோடு, ரதி மன்மதன் பாடல்களை, அந்த ஒப்பாரிப் பாடல்களைப் பாடி  மனத்தை இலேசாக்கிக் கொள்கிறாரோ? என்கிறார் இரவி. அற்புதமாய் வந்திருக்கிறது சிறுகதை.

 அப்படி இருக்கக்கூடாது – என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை. கதிருக்குக் கிருஷ்ணன் என்கிற  கல்லூரி நண்பன். அவன் குடும்பத்தில் தொடரும் துயரங்கள்.  இப்படிக்கூட நடக்குமா என்று நம்மைத் திடுக்கிடவே வைக்கின்றன. கிருஷ்ணனின் அப்பா இறந்து போகிறார்.  கிருஷ்ணனின் சகோதரிகளுக்குத் திருமணங்கள் தள்ளிக்கொண்டே போனது. எல்லாம் இருந்தும்  குடும்பத்தில் நல்லது எதுவும் நடைபெறவில்லை. ஒரு நாள் லட்சுமி என்கிற அக்கா இறந்து போனாள்.  பிறகு ஜெயா அக்கா  விடை பெற்றுக்கொண்டாள்.  சில  நாட்கள் சென்றன. கிருஷ்ணனின் அம்மாவும் இறந்து போகிறாள். கிருஷ்ணன் அங்கும் இங்கும்  எனக்கடன் வாங்கி காலம் தள்ளுகிறான்.  பெயர் கெட்டுப்போகிறது. ஒரு நாள் அவன் தம்பி,   கிருஷ்ணனுக்கு உடல் நிலை சரியில்லை  ஆக  மருத்துவ மனைக்குக் கூட்டிக்கொண்டு போனதாக அக்கம் பக்கத்தார்  சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த செய்தியும்  பிறகு வர இல்லை. கைக்குழந்தையோடு ஒரு பெண் அவர்கள் வீட்டு வாசலில்  நின்று குய்யோ முறையோ என்று  சத்தம் போட்டுவிட்டுச்சென்றதாயும் கதிர் கேள்வி.ப்படுகிறான்.   இப்படி துயரப்படமட்டுமே சபிக்கப்பட்ட ஒரு  குடும்பம். ஈவிரக்கம் வரண்டுபோன  இயற்கையின் தீண்டல்.  இது  விண்டுணரமுடியாத புதிர் என்கிறார் இரவி. வழிமொழிகிறோம் நாமும்.

‘வாழும் கலை’ சிறுகதை  கலை வாழ்வதைப்பேசுகிறது. ஆயின்   அக்கலைஞன் துயரத்தில் சுருங்கிப்போவதையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. ஒரு கலைஞன் ஒருத்திக்கு  இரண்டு குழந்தைகளைக் கொடுத்துவிட்டு வேறு ஒருத்தியுடன்  ஒடிப்போகிறான். அந்தத் தாயும் வேடம் கட்டி கூத்தாடுபவள்தான். அவள் பெற்ற மகன் தான்  அந்த கிருஷ்ணமூர்த்தி. குறவன் குறத்தி டான்ஸ் பஃபூன் வேடம் என பல வேஷங்களைக் கட்டி ஆடுபவன். வள்ளித்திருமணம்   நாடகத்தை முடித்துக்கொடுக்க மேடைக்குச் செல்கிறான். தன்னப்பெற்ற அன்னை இறந்து போகிறாள். கிருஷ்ணமூர்த்தி கலைத்தாயை வணங்கி அந்த நிகழ்வை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறான்.அவன் அன்னையே  தனக்கு இட்ட ஆணை  இது என்கிறான்.

‘ஊசி மணி பாசிமணி ஐசலக்கா

விக்க விக்க வந்தோம் விக்க வந்தோம்

ஐசலக்கா  லக்காடி

ஏமாத்தும் திருட்டும் ஐசலக்கா

எங்க மனதில் இருந்ததில்லை

ஐசலக்கா லக்காடி’

 

குற மக்களின்  டால்டா டப்பாக்கள்  மேடையில் ஒலியை ஓங்கி  எழுப்புகின்றன.  இரவிக்கு நாடகக்கலையில் ஆர்வம் இருக்கலாம் அப்படியும்கூட    நமக்கு  ஊகிக்க வாய்க்கிறது.

’நிலமென்னும் நல்லாள்’ என்கிற தலைப்பில் உள்ள  சிறுகதைக்கு வருவோம். கிராமங்களில் வயல்களை விட்டு நகரங்களுக்கு வேலைக்கு வருகிறார்கள்.  ஒரு சாண் வயிற்றுப்  பிழைப்புக்காக  மக்கள் படும் துன்பங்களை எடுத்து வைக்கிறது இக்கதை. செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ஒரு விவசாயி எத்தனை அவமானங்களை எதிர்கொள்கிறார் என்பதனை பிரத்யட்சமாகச் சொல்கிறார் இரவி. அவருக்கு டி்ப்ஸ் ஐம்பது ரூபாய்  தர நினைக்கிறார் அது அவர் தன் மானத்தைக் காயப்படுத்திவிடுமோ என்று  அஞ்சுகிறார். கொல்லானூரில்  பத்து பேருக்குத் தன் வயலில் வேலை  கொடுத்து வாழ்வளித்துக்கொண்டிருந்த  காவிரி டெல்ட்டா  விவசாயி  ஒரு  சாலையோர உணவு விடுதி வாயிலில் படும் அவமானங்கள் வாசகனை ரணப்படுத்துகின்றன.’ஊர்ல அவர் முன்னால நின்னு எவரும் பேசவே பயப்படுவாங்க’  என்று அந்தப்பெரியவரின் ஊர்க்காரர் சொல்லும் கொசுறு  சேதி ஒரு விவசாயி சிறுத்துப் போய் நிற்பதை  நம் கன்முன்னே காட்சியாக்குகிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சொன்ன  பொய்யாமொழியாரைத்தான்  வாசகன் எண்னிப்பாக்கிறான்.

யதார்த்தமான  இயற்கை வருணனை. பிசிறில்லாத நடையழகு, சமுதாய உணர்வு கூடிய கதை மய்யம் என நகர்ந்து செல்லும் அக்களூர் இரவியின்  சிறுகதைகள் வாசக  மனதைச் சிறைப்பிடிக்கவே செய்கின்றன. ரதியின் மன்மதன்  சிறுகதைத்தொகுப்பு  அக்களூர் இரவியின்  வெற்றிப்படைப்பாக  அமைந்து சிறக்கிறது..

-------------------------------------------------------------------------------