Sunday, May 1, 2016

vellam 1




சென்னையில் வெள்ளம் 1

சென்னை வாழ்க்கை.' சாமியோவ்' செத்துப்பிழைத்தோம். தீபாவளியன்றே மனம் லேசாக குறு குறுத்தது.ஏதோ பிரச்சனை வரவிருக்கிறது நாம் என்ன செய்ய ப்போகிறோம்.   கவலை யொன்று  லேசாக முளைத்து விட்டது.
                                            ஆகாயம் முட்டிய ஜவுளிக்கடைக்கடைகளும் அகண்டு விரிந்த வெடிக்கடைகளும் ஆரவாரம்தொலைத்து  சூம்பிப்போயின. தீபாவளியாவது மண்ணாங்கட்டியாவது. .மீறி வாங்கிவிட்ட மத்தாப்பு  வெடிகள் பிரிக்கப்படாமல்  கட்டாய்க்கிடக்கின் றன  வீட்டு  மூலையில்.
                                           சென்னை மா நகரின் சுற்றுப்புற வாழ்விடங்களில்  தாம்பரத்துக்கு  மேற்கே அந்த  மண்ணிவாக்கம் மற்றும் ,  ஸ்ரீபெரும்புதூர்  சாலையில்  ஐந்துகிலோமீட்டர் போனால்  வருவது முடிச்சூர்.
 முடிச்சூருக்கு முக்கால் கிலோமீட்டர் முன்பாக பார்வதி நகர்.அதனுள்ளே ஒரு கிலோமீட்டர் நடந்தால்  நேதாஜி நகர் வரும்.அங்கேதான் மண்  என்று  கொஞ்சம் வாங்கினேன்  ஒரு வீடெனவும் கட்டிக்கொண்டேன்.
                                           வீட்டு உரிமையாளர்கள் எல்லாம் தேவ ஜாதி என்றபடிக்கு எனக்கு எப்போதும் அனுபவம்.ஆகவே தான் இந்தச்  சொந்த வீடு.
வீடா அது  எத்தனைக்குப்   பெரியது  அந்தக்கேள்வி எல்லாம் வேண்டுமா  என்ன   .
                        இங்கு  காலம் காலமாய் ,ஓட்டும் ஆட்டோக்காரர்களுக்கும் கால் டேக்சிகாரர்களுக்கும் நேதாஜி நகர் வாசிகள் மனிதர்கள் இல்லை. தரையில்   ஊரும் ஜந்துக்கள்.
 ஆட்டோவில் ஏறி க்கொண்டு இதுவரை  அவர்களிடம் வாங்கிய பாட்டுக்கள் அதான் திட்டுக்கள் எவ்வளவோ.    நடு  இரவு நேரம் தாம்பரத்தில் இறங்கி விட்டோம்   பின்  வீடு  செல்லவேண்டுமென்றாலோ என்றாலோ  சொல்லவே வேண்டாம். ஆட்டோ  சார்ஜை நம்மிடம் இருமடங்காகக்  கூட்டி வாங்கத்தான் இத்தனை முஸ்தீபும் .
                                       திருச்சியில் என் சின்ன மகனுக்கு ஆண் குழந்தை  பிறந்ததைப்பார்த்துவிட்டு  வாடகை வேன் பிடித்து க் குடும்பத்தோடு சென்னைக் குத்  திரும்பினோம்.திருச்சியைத்தொட்டுக்கொண்டு ஓடும்  அகண்ட  காவிரியில்சொட்டுத்  தண்ணீரில்லை .கொள்ளிடம்வழக்கம் போல்  காய்ந்துகிடந்தது.பார்த்துக்கொண்டேதான் வந்தோம்
                  , அன்று மாலை நாங்கள் குடியிருக்கும் பழையபெருங்களத்தூருக்குள்  நுழைகிறோம்.  அந்த  நேதாஜி  நகருக்குள்   போகமுடியவில்லை எங்கும் .மழை, மாமழை பெய்துக்கொண் டே இருந்தது .
எங்கள் தெருவிலும்  முட்டிக்காலுக்கு மேலாகத் தண்ணீர் எப்படி வீட்டிற்குள் நுழைவது?  வீடடைத்  தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டோம்.
 என் குடும்பத்தோடு குடும்பம் என்றால்- என் மனையாள் என் பெரிய மகன் அவன் மனைவி  அதாவது என்   மருமகள்,  மற்றும்  ஒரு ஒண்ணரை வயது பேத்தி - திருச்சி சென்று  திரும்பிய எங்களில்  நானும் என் பெரிய பையனும்  பழைய   பெருங்களத்தூர்   நேதாஜி நகரிலேயே தைர்யமாகத்  தங்கி விட்டோம்.
இதுசரிப்படாது என்று   குடும்பத்து  மற்றவர்கள் ஆதம்பாக்கம் பெரிய அண்ணன்  வீடு  சென்றார்கள்.
  நேதாஜிநகரில் எங்கள்  தெருவில் இறங்கி  நடக்கிறோம். முழங்கால் முட்டும் தண்ணீர்.அச்சமும் அதிசயமும் விரவி மண்டைக்குள்  என்னவோ செய்தது.
முடிச்சூர் பகுதியில் வெள்ளம்.   தண்ணீரின்   அபரிமித  வருகை மட்டும் இல்லை. அதன் இழுப்பு வேகம் சொல்லி மாளாது. கொஞ்சம் ஏமாந்தால் அவ்வளவுதான் .நம்மைக்  கீழே தள்ளி விடும்  இழுத்து க்கொண்டு ஓடிவிடும்.
மனைவியை யும் மாட்டுப்பெண்ணையும்  பேத்தியோடு  ஆதம்பாக்கம் பெரிய அண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் திருப்தி.
                                    நானும் என் பெரிய பையனும் மட்டும் அந்த  நேதாஜிநகரில் இரவு தங்கி இருந்தோம்.மழை தன்  பாட்டுக்கு பெய்துகொண்டே இருந்தது.   தூக்கம் எங்கே வந்தது எழுந்து எழுந்து பார்த்துக்கொண்டோம் .  இரவு முழுவதும் வீதியில் கையில்  டார்ச் வைத்துக்கொண்டு மக்கள் இங்கும் அங்கும்  வெள்ள  நீரில் திரிந்துகொண்டேதான்  இருந்தார்கள். வெளியில்  மின்சாரம் இல்லை. வீட்டிலிருந்த  யுப்பி எஸ்சும்  தன்  பிராணனை விட்டுக்கொண்டே இருந்தது. மொபைல் போன்   சற்று நேரம்  வெளிச்சம்  தந்தது. ஒரு வழியாக  பொழுது விடிந்தது. மனதிற்குள் மட்டும்  விவரிக்க முடியாத  அச்சம், .
                     வீட்டு  பீரோவிலிருந்து   முக்கியமான  ரிக்கார்டுகளைத் துணிமணிகளைப்  பொறுக்கி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். வாயிற்படியிலேயே மழைநீர் நெஞ்சு தொட்டது .வீடு சற்று உயரமான வீடு என்பதால் மழைநீர்  வீட்டின் அடிக்கதவை தொட்டு தொட்டு எட்டிப்பார்த்தது.
 நாங்கள் தலா ஒருபளுவான  சூட்கேசினை தலையில் சுமந்துகொண்டு நடக்க ஆரம்பித்தோம்.வீட்டின் பின் புறம் ஒரு பள்ளம். அது தாண்டினால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கலாம்  .தாண்டிப்போகவேண்டிய பள்ளத்தில் தண்ணீர் கழுத்துவரை சென்றது.
இந்த பக்கத்து மின்சாரக்கம்பத்தில் பெரிய கயறு கட்டிக்கொண்டு  அடுத்த கரையில் நான்கு பேர்  வருபவர்களுக்கு உதவுவதற்காக 'கவனமா கவனமா வாங்க ' சொல்லிக்கொண்டு  நின்றிருந்தார்கள்.அவர்களைப்பார்த்ததும்தான் என் பையனுக்குக்  கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.கட்டியிருந்த நீளக்   கயறு பிடி த்துக்கொண்டு அணுஅணு வாக தண்ணீரில்   நடந்தோம்.எனக்கு க் கொஞ்சம்  நீச்சல் தெரியும்.நான் தருமங்குடி கிராமத்துக்காரன்.
அந்தக் காலத்தில் திருமுது குன்றத்து மணிமுத்தாற்றில் தெளிந்த தண்ணீர் ஓடும். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் திருமுதுகுன்றத்தில் தொலைபேசிப்பணி பார்த்த நான் நண்பர்களோடு அந்த  ஆற்றில்நீந்திக்  குளித்தது இன்றும் நினைவுக்கு வருகிறது.என் பையனுக்கு நீச்சல் தெரியாது.கற்றுக்கொடுக்க வாய்ப்பு இல்லாமல் போனது.  நகர்ப்புறத்து  வாழ்க்கை
.பின்னர் பணிமாற்றலில்  குடிவந்த  கடலூரில் ஒரு  நீச்சல் குளம். மஞ்சகுப்பம்  பெரிய மைதானத்தில்  கட்டி முடித்தார்கள் வாய்ப்பும் வந்தது. அப்போது அவர்களுக்குப்   பயம் கூடவே வந்து விட்டது. ஆக த்தண்ணீர் என்றால் நிரந்தரமான  அச்சம்.
தாம்பரத்திலிருந்து முடிச்சூர் வரும்  சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன.மழை தூறிக்கொண்டே இருந்தது.நானும் என் பெரிய பையனோடு நடைப்பயணமாகப்  புதுப்பெருங்களத்தூர் ரயில் நிலையம் வந்தோம். புதுப்பெருங்களத்தூரின் பெரிய ஏரியின் கரையை ஒட்டிய சாலை அந்த . ஏரிக்குள்ளாக எத்தனையோ வீடுகள்.  ஏரிக்குள் எத்தனையோ வீதிகளே இயங்கின.
பெருங்களத்தூர்  ரயில் நிறுத்தத்தில் ரயிலில் ஏறிவிடஆயிரம்பேர்  மூட்டை முடிச்சுகளோடு பிளாட்பாரத்தில் தயாராகத்தான்  நின்றார்கள்.சரியான  கூட்டம்.நெருக்கி அடித்துக்கொண்டபடியே  மின்சார ரயிலில் ஏறினோம். ம வுண்ட் ரயில் நிறுத்தத்தில் இறங்கி ஒரு ஆட்டோ  பிடித்து ஆதம்பாக்கத்திற்குச்சென்றோம்.அங்குதான்  என் பெரிய அண்ணனின்  வீடு. வாடகை ஃபிளாட் வீடுதான் . வீட்டுசொந்தக் காரர்
கொஞ்சம் நல்லவர்.வீட்டுக்காரரும் வாடகைக்கு க் குடியிருப்பவரும் கீழும் மேலும் குடியிருப்பது அவ்வளவுக்கு நல்லதல்ல என்பார்கள்.இந்த  வீட்டுக்காரர் வித்யாசமானவர்.
'மழை ஜாஸ்தி என்ன பண்ணுவீங்க.எப்பிடியிருக்கு?,அன்பாக விசாரித்தார்.அதுவே பெரிய ஒத்தாசை.ஒரு அய்ந்து நாட்கள் குடும்பத்தோடு ஆதம்பாக்க வாசம்.மழை ஏதோ குறைந்துவிட்டது போல் தோன்றியது. ஆதம்பாக்கத்தில் கொசு என்றால் அப்பப்பா சொல்லிமாளாது. கொசுவிரட்ட எனன்னவோ பாடு. புகை போடுதல்.கொசுவிரட்டி திரவத்தை மின்சாரம் மூலம் ஆவியாக்கிவிடுதல், கொசுச்  சுருள் புகை,கொசு விரட்டும்உடல்  மேல் பூச்சு.  சீலிங்  ஃபேன் உன்னைப்பிடி என்னைப்பிடி ஓடி என்ன பயன் இரவு முச்சூடும் கொசு பிடுங்கித்தின்றது தான் மிச்சம்
.நான் குடியிருந்த பழைய பெருங்களத்தூர் முடிச்சூர்  பக்கமெல்லாம்  பல கிரவுண்ட் ஃப்ளோர் வீடுகளில் மழைத் தண்ணீர் புகுந்து  ஆட்களை திண்டாட வைத்து விட்டது அனகாபுத்தூர்   எம்ஜிஆர் நகர்  கிண்டி  சைதாப்பேட்டை  வேளச்சேரி கோட்டூர்புரம்  அடையார்  என்று  குடியிருப்பு பகுதிகளில்   வண்ண வண்ண .பிளாஸ்டிக்   போட்டுக்கள்  சன்னமாய்   உறுமிக்கொண்டே நகர்ந்தன. . சென்னையில்  ஹெலிகாப்டர்கள்  சுற்றி சுற்றி வந்து அங்கங்கு  மக்களைக்  கரை சேர்த்த  நிகழ்வை  தொலைக்காட்சியில் பார்த்து க்கண்கள் கலங்கினோம்.
                                       நேதாஜி நகர் வீட்டில்  நாங்கள் மேல்தளத்திலும்  எனது சின்ன மகன் கீழ்வீட்டிலும் குடியிருந்தோம் ..சின்ன பையனுக்கு பெங்களூரில் வேலை.அவன் குடும்பம்மட்டும்   கீழ் வீட்டில் இருந்தது.
பெரியவன் குடும்பம் என்னோடு இருந்தது. பெரியவனுக்கு ஒரு பேத்தி. நானும் என் மனைவியும்  மேல் வீட்டில் ,  கீழ் வீட்டில் என அங்கும் இங்குமாய் இருப்போம். எனது  பொக்கிஷமாகிய   இலக்கிய   புத்தகங்கள் மேல் வீட்டில் வெள்ள த்  தண்ணீரைப்பார்க்காமல் தப்பிவிட்டன  அது எனக்கு  மழைக்கட வுள்  இந்திரன்  செய்த  ஒத்தாசை.
                                         சின்ன மருமகளின் புத்தகங்கள்   நீரில்  நனைந்து கொழ கொழ என  வாழ்வு  முடித்துக்கொண்டன . ஜவுளிகள்  கொஞ்சம்  நாஸ்தி.லேப்டாப் மேசை மின்விசிறி, கிரைண்டர் வெளி நாட்டு மிக்சி என்பன  கேவலமாய் பழுதாகிப்போனது.எல்லாமும் ஒரளவுக்குசரிசெய்துமுடித்தோம்  .ஆதம்பாக்கத்திலிருந்து வீட்டிற்குத்திரும்பி  வந்த நாங்கள் கீழ்வீடு சுத்தம் செய்யவே  ஒருவாரம் ஆனது. அந்தக் கீழ்வீடு சுத்தம் செய்வதற்குள்  ஒருவழி  ஆகிப்போனோம்  .
                                      வானில்,மீண்டும் கருமேகங்கள் கூடின. என்னவோ முடிவு செய்தன  எங்கும்  இருட்ட. ஆரம்பித்தது. வானிலை அறிவிப்புப்    புகழ் ரமணன் ஓயாமல் மழை வருகிறது வருகிறது  அறிவித்து க்கொண்டே இருந்தார்.மழை பெய்ய ஆரம்பித்தது.தெரு ஓரமாக ஒரு வாய்க்கால் அது எப்போதும் காய்ந்து கிடக்கும். அது இப்போதெல்லாம். இரு  கரையும்  தத்தளிக்கொண்டு தண்ணீர் செல்ல ஆரம்பித்தது.அதுதான் அடையாறு.   எங்களுக்கு இப்போதுதான் அதன்  பெயர்  சொன்னார்கள்.எனக்கு நம்பமுடியவில்லை. இனி புறப்பட்டுவிடவேண்டியதுதான்.இங்கு  சாத்தியப்படாது
என் மனைவி என் மருமகள்,பேத்தி மூவருமாக ஒரு ஆட்டோ பிடித்து குறுக்கு வழியாக புதுபெருங்களத்தூர் ரயில் நிலையம் அடைந்தோம்.மழை பெய்துகொண்டுதான் இருந்தது.இந்த முறை தி.நகருக்கு ச்சென்று நடு அண்ணன் வீட்டில் தங்கலாம் என்று. முடிவோடு புறப்பட்டோம்.
 ஆனால் திடீரென மழை நின்றது. பளிச்சென்று வெயில் வந்தது. என் மனைவி சொன்னாள்
.' நாம் பழையபடி நம் வீட்டுக்கேபோய்விடுவோம். என்ன சொல்றீங்க'
ஆரம்பித்தாள். என் மருமகளிடம் யோசனை கேட்டேன்
.'நல்லா வெயில் அடிக்குதே. நம்ப வீட்டுக்கே போய்விடலாம்' அவள் என் மனைவி சொன்னதை ஆமோதித்தாள். அத்திப்பூப்பது சாத்தியந்தானா. எப்போதேனும்இப்படி  ஒருவர் சொல்வதை மற்றொருவர் ஆமோதிப்பதும் உண்டு.
 மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு திரும்பவும் ஒரு ஆட்டோ பிடித்து எங்கள் நேதாஜி நகருக்கே  புறப்பட்டோம்.என் பேத்தி மட்டும் என் கையில் பத்திரமாக இருந்தாள்.என் மருமகள் மூட்டை முடிச்சுக்களை சுமக்க என் மனைவி சும்மாதான் நடந்துவந்தாள்.ஆனாலும் ரயில்வே டிராக்கைக்கடக்கும்சமயம் கீழே விழுந்து 'அய்யோ' என்று  அலறினாள். நான் திரும்பிப்பார்த்தேன்.என் மனைவியை இருவர் பிடித்துத்  தூக்கிவிட்டனர். ஒரு நிமிடம் கழிந்தது. அதே டிராக்கில் ரயில் வண்டி ஒன்று வேகமாக  சடக்புடக் என  கடந்து போனது.என் உடல் நடுங்கியது ஒருமுறை குலுங்கி முடித்தது. எல்லாம் ஈசன் செயல் என்பார்களே அது  போல் இதுவும்  இருக்கலாம்.  உள் மனம்  எனக்குச்  சொன்னது.
 என் மனைவியிடம் சென்று அவள் கையைப்பிடித்துக்கொண்டு மெது மெதுவாக நடத்தி அழைத்து வந்தேன்.அவள் நொண்டி நொண்டி நடந்துவந்தாள்.காலில் ஏதேனும் அடி பட்டும் இருக்கலாம்.வீட்டுக்குப்போய் பார்த்துக்கொள்வோம் என நினைத்தேன்.அதுவரைக்கும் அவள் தாக்குப்பிடிக்க வேண்டுமே என்கிற அச்சம்வேறு.என் பேத்தி பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதட்டமாக இருந்தாள்.ஒண்ணரை வயது பேத்திதான் இருந்தாலும்  அவ்வளவு விபரமாக முக பாவம் காட்டுபவள்.
ஆட்டோக்காரன் ஒருவனைப்பிடித்து அவனிடம் நேதாஜி நகர் பழைய பெருங்களத்தூர் செல்லவேண்டும் என்றேன்.'ஆட்டோ நேதாஜி நகர் போவாது கொஞ்சம் முன்னாடி எறக்கி விடுவேன்' என்று பதில் சொன்னான்.எப்படியோ ஒரு ஆட்டோ கிடைத்தது அது  பகவான் புண்யம் என்று நினைத்துக்கொண் டேன்.பளிச்சென்று காய்ந்த வெயில் எங்கோமறைந்துபோனது.இருட்ட ஆரம்பித்தது.சூல்கொண்ட  மேகங்கள் தயாராகின.ஆட்டோக் காரன்   வெகு தூரத்தில்  இறக்கிவிட்டான்.நனைந்து கொண்டே வீட்டுக்கு நடந்துபோனோம்.தெருவில் சல சல என மழை நீர் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டு இருந்தது.மேல்தள வீட்டுக்குள் நுழைந்து விட்டோமே தவிற பதற்றம் உள்ளுக்குள் இருப்பதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.மழை விடாமல் பெய்துகொண்டேதான் இருந்தது.
ஆதம்பாக்கம் அண்ணன் டெலிபோனில் பேசினார்.' உடன் புறப்படு. இங்கு வா பெருங்களத்தூர் .ரயில் நிலையம் வந்து டிக்கட் வாங்கிய நீ எப்படி திரும்பிப்போவாய்.மழை அதிகம் வரும் என்கிறார்கள்.அங்கு இருக்க வேண்டாம்.கிளம்பு முதலில் . வேறு எதுவும் பேசாதே' கட்டளை தந்தார்.
 என்ன செய்ய மூட்டை முடிச்சுக்களோடு மீண்டும் புறப்பட்டோம். தெருவில் பாதம் நனையும் தண்ணீர் இருந்தது.ஆளுக்கு ஒரு குடை பிடித்துக்கொண்டு பார்வதி நகர் வந்தோம்.நடக்கவே  முடியவில்லை. ஒரு ஆட்டோவையும் காணோம். என்னதான்  செய்வது? என் மனைவிக்கு கால் வலி வீக்கம் கூட இன்னும்  எல்லாமும் இருந்திருக்கும். அதனை சட்டை செய்ய நேரம் மன நிலை இருந்தால்தானே.
ஓட்டை லாரிசத்தத்தை கிளப்பிக் கொண்டு ஒரு ஆட்டோக்காரன் வந்தான்.தாம்பரத்திற்கு பேருந்து எதுவுமில்லை. கிருஷ்ணா நகர் வழியில் மார்பு அளவு தண்ணீர் போவதாகச்சொல்லிக்கொண்டார்கள்.
'நீங்க குடுக்கறதை குடுங்க நானு புது பெருங்களத்தூர் போறன்' நாங்கள் எல்லொரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டோம்
.என் அண்ணன்மகன்  போன் செய்தான்' சித்தப்பா புறப்பட்டாச்சா இன்னும் என்ன பண்றீீங்க' போனை வைத்தான்.
மேற்குத்தாம்பரத்திற்கு முடிச்சூரிலிருந்து எந்த போக்குவரத்தும் இல்லை.புதிய பெருங்களத்தூர் ரயில்வே நிலையம் போனால் போதும் என்று ஆகிவிட்டது.தெரு எங்கும் மழை நீர் கால் முட்டி அளவுக்கு பிரவாகித்துகொண்டிருந்தது. புதிய பெருங்களத்தூர் ஏரியை எட்டிப்பார்க்க பயம்  மனதைக் கவ்விப்பிடித்தது. ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று ஜிவ் ஜிவ் என்று வீசி அடித்தது. சாலையில் மக்கள் பதறி அடித்துக்கொண்டு இங்கும் அங்கும் நடந்தவண்ணம் இருந்தார்கள்.மாம்பலத்திற்கு மின்சார ரயிலில் டிக்கட் வாங்கினோம் எதற்கும் இருக்கட்டும் என்றுதான் .ஆனால் மவுண்டில் இறங்கி ஆதம்பாக்கம் அண்ணன் வீடு செல்வதுதான்எங்கள் முடிவு. ஆதம்பாக்கத்திலோ  எங்கும் கொசுக்கள் தொல்லை நினைத்தாலே அச்சமாக இருந்தது.தூக்கம் எங்கே வரப்போகிறது.மழை தூறிக்கொண்டே இருந்தது.மவுண்டில்மின்சாரவண்டியை விட்டு  இறங்கி அடித்து பிடித்துக்கொண்டு வெளியில் வந்தோம்.ஆட்டோக்கள் எதுவும் எங்கும் நகரவில்லை.அண்ணன் இருக்கும் சக்தி நகருக்கு ஆட்டோ கிடைக்குமா எனவிசாரித்தோம் .'ஆட்டோக்காரர்கள் 'வேற எதாவது பேசுங்க இப்ப ராத்திரி நேரம் கரண்டு இல்லே. தெருவுல எல்லாம் தண்ணி நிக்குது' பதில் சொன்னார்கள். அண்ணனுக்கு போன் செய்தேன். அவர் 'வீீட்டில் கரண்ட் இல்லை. தெருவில் தண்ணீர் இருக்கிறது. 'ஆட்டோக்காரன் வந்தால் வா. என் பையனும் இன்னும் வீடு வரவில்லை.அவன் ஆபிசை விட்டு கிளம்பி மூன்று மணி நேரமாகிவிட்டது.நீங்க எல்லாரும் தி நகர் சின்ன அண்ணன் வீட்டுக்குப்போயிடுங்க.இப்பக்கி அதான் வழி' போனைவைத்துவிட்டார்.
நாங்கள் எல்லொரும் நொண்டி அடித்துக்கொண்டு மீண்டும் படிகள் ஏறினோம். ஒரே வழுக்கல். சேறு.மாம்பலம் வரை டிக்கட் வாங்கி யிருந்ததால் ஒரு சவுகரியம்.  இங்கே  க்யூவில் நின்று டிக்கட் வாங்க வேண்டாம்.மழை பெய்து கொண்டே இருந்தது.கொட்டித்  தீர்த்தல் என்றால் இது தானோ என்னவோ அப்படி ஒரு மழை. மவுண்ட்  பேருந்து  நிலையத்தில் .பேருந்துகள் இயங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.
என் பெரிய மகன் . அவனுக்கு சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அவனுக்கு போன் போட்டேன்.' நீ நேராக தி நகர் பெரியப்பா வீட்டிற்கு வந்துவிடு.நாங்கள் அங்குதான் செல்கிறோம்'அவன் போனை வைத்துவிட்டான்.அங்கும் ஒரே மழையாகத்தான் இருக்கும்.
ரொம்ப நேரம் கழித்து ஒரு மின்சார ரயில் வந்தது.புற நகர் செல்லும் ரயிலைத்தான் அப்படிச்சொல்கிறேன்.மக்கள் ரயிலில் திணித்துக்கொண்டு வந்தார்கள்.நானும் என் மனைவியும் என் மருமகளும் பேத்தியும் கூட்டத்தோடு கூட்டமாக பிளாட்பாரத்தில் நிற்கிறோம்.மழையின் சாரலில் உடல் முழுவதும் நனைந்துவிட்டிருந்தது.என் பேத்தி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.மின்சார ரயில் பெட்டிக்குள் ஏறுவதற்குள் நாங்கள் பட்டபாடு சொல்லிமுடியாது.என் கையில் மூன்று லக்கேஜ்கள் இருந்தன.ரயில் பெட்டியின் வாசற்படியில் நிற்கும் கம்பியை அணை த் துக்கொண்டு நிற்கிறேன்.மழை 'வீஸ் வீஸ்' என்று பெய்த வண்ணம் இருந்தது.என் பேத்தியின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருந்தது.கூட்டம் அவளை நெறித்து விட்டு இருக்கலாம்.என் மனைவி ரயில்  பெட்டியுனுள் ஏறி இருக்கலாம். ஒன்றும் புரியவில்லை. வண்டி கிளம்பிவிட்டது. நான் எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடலாம் என்ற  அச்சத்தோடு நின்றுகொண்டு இருந்தேன்.கிண்டி நிலையம் வந்தது.மக்கள் இறங்கினார்கள்.பின் ஏறினார்கள்.எனக்கு உயிர் போய் உயிர் வந்தது.நான் வாயிற்படியில் அல்லவா மாட்டிக்கொண்டு விட்டேன்.கையில் சுமை வேறு. வண்டி அடையாறு  பாலம் தாண்டியபோது பயமாக இருந்தது. சீற்றத்துடன் சீரிப்பாயும்ஜலப்பிரவாகத்தை மிக நெருக்கத்தில் உணரமுடிந்தது.உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு மின்சார ரயில் பெட்டியின் கம்பத்தை இறுக்கிப்பிடித்தபடி நின்றேன்.சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சிலர் ஏறினார்கள்.சிலர் இறங்கினார்கள்.மழை அசுரகதியில் பெய்துகொண்டேதான் இருந்தது.
ஒரு வழியாக மாம்பலம் நிலையம் வந்தது.தி நகர் செல்பவர்களே ஏகத்துக்கு இறங்கினார்கள்.நானும் என் மனைவியும் வண்டியிலிருந்து எப்படியோ இறங்கி பிளாட்பாரத்தில் நின்றபடி மருமகளைத்தேடினோம்.அவள் குழந்தையைக்கையில் பிடித்துக்கொண்டு என்னபாடு பட்டாளோ இப்போது பிளாட்பாரத்தில் இறங்கி நிற்கிறாள்.குழந்தையை ச்சென்று பார்த்தேன்.அது பயந்துபோய் திரு திரு என்று விழித்துகொண்டிருந்தது. குழந்தை அழுது முடித்திருப்பதைமுகம் காட்டிக்கொடுத்தது.என்னிடம் தொத்திக்கொண்டிருந்த மூன்று பைகளும் சரியாகவே இருந்தன. மழை விட்டபாடில்லை. ஒரே கூட்டம்.ரயில் நிலையம் முழுவதும் தொப்பலாக நனைந்து இருந்தது. கால் வைத்த இடம் எல்லாம் ஒரே வழுக்கல்.மாடிப்படிகளில் ஏறி இறங்கினால் ரெங்கனாதன் தெரு. எங்கும் மக்களின் தலை.இடித்துக்கொண்டும் பிடித்துக்கொண்டும் மக்கள் அயர்ந்துபோய் ஊர்ந்த வண்ணமாக இருந்தனர்.ரெங்கனாதன் தெருவில் முழங்கால் அளவுக்குத்தண்ணீர் அழுக்குத் தண்ணீர்தான்  நின்று கொண்டிருந்தது.ராமேஸ்வரம் சாலையில் நாங்கள் திரும்பி நடந்தோம்.கால் முட்டி அளவுக்கு மழை நீர். ததகா புதகா என நடந்து கலா பிளாட் எங்கே என்று தேடிக்கண்டு பிடித்தோம்.அங்குதான் சின்ன அண்ணன் வீடு இருந்தது.வாடகை வீடு.இரவு பத்துமணிக்குஒருவழியாக  அண்ணன் வீட்டில் சாப்பிட்டுப்படுத்தோம்.
சின்ன அண்ணன் வீடு முழுவதும் ஈரமாக இருந்தது.அண்ணனும் அண்ணியும்  எத்தனை அன்பாக உபசரித்தார்கள்.மழை இன்னும் பெய்து கொண்டேதான் இருந்தது.தொலைக்காட்சிப்பெட்டியில் வானிலை த்தகவல் சொல்லும் அந்த ரமணன் தான் எல்லோர் மனதிலும் ஆட்சிசெய்துகொண்டிருந்தார்.அவர் சொல்படிக்குத்தான் வானம் செயல் பட்டுக்கொண்டிருந்தது....

.


.