Friday, September 16, 2016

anjalai ammaal




கடலூர் அஞ்சலை அம்மாள்-உங்களுக்குத்தெரியுமா? -எஸ்ஸார்சி


கடலூர் மண்ணின் ஓர் ஒப்பற்ற பெண்மணி இந்திய விடுதலை ப்போராட்ட வீராங்கனை தியாகி அஞ்சலை அம்மாள் 1890ல் பிறந்தார். தாய் நாட்டு விடுதலைப்போரில் பங்கேற்று ஏழு ஆண்டுகள் சிறையில் வாழ்ந்தவர். முப்பத்தோறாம் வயதில் தன் வயிற்றில் குழந்தையோடு கொடுஞ் சிறையில் அடைக்கப்பட்டவர்.
அஞ்சலையின் அம்மாளின் கணவர் முருகப்பா படையாச்சி ஒரு விடுதலைப்போராட்ட வீரர் இத்தேசத்தின் விடுதலைக்காக சிறை சென்ற குடும்பம் அவர்களது. அஞ்சலை அம்மாள் குழந்தையைப் பிரசவிக்க மட்டுமே சிறையினின்று விடுதலை செய்யப்பட்டு . மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.அம்மாக்கண்ணு என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட அஞ்சலையின் அந்தக்குழந்தையே பின்னாளில் தேசபிதா காந்தி அடிகளால் லீலாவதி என்று பெயர் சூட்டப்பெற்றார்.
அஞ்சலை அம்மாள் தென்னாட்டிலிருந்து விடுதலைப்போரில் ஈடுபட்ட எளிய குடும்பத்து முதல் பெண்மணி.நீலன் சிலை உடைப்புப்போராட்டம்-1927,உப்புக்காய்ச்சும் போராட்டம்-1937,சட்ட மறுப்பு இயக்கம் -1933,வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942, என தொடர்ந்து அனைத்து போராட்ட இயக்கங்க்ளிலும் மகத்தான பங்கேற்றவர்.
கர்னல் ஜேம்ஸ் நீல் என்பான் வெள்ளையர்களின் துப்பாக்கிப்படையைச்சார்ந்தவன். 1857ல் சிப்பாய்க்கலகம் என்னும் விடுதலைப்போரில் இந்திய்ர்களை க் காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்த மாகிராதகன். அவனுக்கு ஒரு 16 அடி சிலையை அன்றைய பிரிட்டீஷார் சென்னை மவுண்ட் ரோடில் நிறுவியிருந்தனர்.அதனை இடித்து நொறுக்கவே நீல் சிலை உடைப்புப் போராட்டம் நடைபெற்றது.இன்றோ அந்த கொலைபாதகனின் சிலை சென்னை மியூசியப் பழங்குப்பையில் உறங்கக்கிடக்கிறது.
மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு- என்னும் நூலை எழுதிய விடுதலை போராட்ட வீரர் எஸ்.என்.சோமயாஜுலு அந்த வரலாற்று நூலில் பின் வரும் விஷயத்தை ப்பதிவு செய்கிறார்..
'1923ல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் தண்டிக்கப்பட்ட சுமார் 100 தொண்டர்களை கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைக்குக்கொண்டு வந்தனர்.இதைக்கேள்வியுற்ற கடலூர் விடுதலை வீரர்கள் எஸ்.ஏ தெய்வ நாயக அய்யா,எம்.வி.சுதர்சனம் நாயுடு, அஞ்சலை அம்மாள் முதலியவர்கள் அனைவருக்கும் இரவு உணவு கொண்டு வந்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து ரயில் வந்ததும் வந்தே மாதரம் கோஷம் இட்டனர். ரயிலில் கொண்டுவரப்பட்ட மதுரைத்தொண்டர்களும் உற்சாகமடைந்து பதில் கோஷமிட்டனர். தியாகிகளைச் சிறைக்கு அழைத்து வந்த சார்ஜண்டும் போலிசாரும் திகைத்தனர். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் கைதிகள் அனைவரையும் ஒரு பக்கமாகக்கொண்டுபோய் வைத்தனர்.உடனே கேப்பர் மலைக்குக்கொண்டுபோக முயற்சித்தனர்.கடலூர் தேசபக்தர்கள் கொண்டு வந்த உணவை அவர்களுக்குக்கொடுக்க போலிசார் உடன்படவில்லை.சத்தியாக்கிரகவாதிகளும் கடலூர் சொந்தங்கள் கொண்டுவந்த உணவை உட்கொள்ளாமல் கேப்பர் சிறைக்கு வரமுடியாது என இரவு முழுவதும் பட்டினி கிடந்தனர்.
அதன்பின்னர் மறு நாள் அதிகாலை கடலூர் தேசபக்தரும் ஹோட்டல் உரிமையாளருமான வெங்கட்ட ராவ் அனைவருக்கும் சிற்றுண்டி கொண் டு கொடுத்தார். கைதிகளுடன் வந்த போலிசாரும் சாப்பிட்டனர்.எல்லோரும் மகிழ தெய்வ நாயக அய்யா,அஞ்சலையம்மாள்,சுதர்சனம் நாயுடு மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வீர வாழ்த்து கூறி வழியனுப்பி வைக்க மதுரைத்தொண்டர்கள் கேப்பர் சிறையை நோக்கிச்சென்றனர்.'
1927 ல் சென்னையில் காங்கிரஸ் இயக்கத்தின் 43 வ்து காங்கிரஸ் நடைபெற்றது.முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த டாக்டர்.எம்.ஏ அன்சாரி தலைமை ஏற்றார்.இம்மாநாட்டில் சைமன் கமிஷனை ப்பகிஷ்கரிப்பது என முடிவு செய்யப்பட்டது.பூரண விடுதலையே இந்திய மக்களின் குறிக்கோள் எனத்தீர்மானம் நிறைவேறியது.
சைமன் கமிஷன் பிரிட்டீஷாரால் இந்திய சட்டசபை மறு சீரமைப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. அப்போது நாடு முழுவதும் சைமன் கமிஷன் எதிர்ப்புப்போராட்டம் நடைபெற்றது. லாகூரில் இப்போராட்டத்தில் பஞ்சாபின் சிங்கம் எனப்போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ஈவிரக்கமற்ற வெள்ளையரகளின் குண்டாந்தடியால் அடிபட்டார். உயிர் நீத்தார்.
அதே சமயம் நெல்லை விடுதலை வீரர் சோமயாஜுலு தலைமையில் நீலன் சிலை தகர்ப்பு ப்போாட்டம் சென்னையில் நடைபெற்றதை க்குறிப்பிட வேண்டும். 43 வது காங்கிரஸ் சென்னை மா நாட்டிற்கு கடலூர் பகுதியிலிருந்து பெண்களைத்திரட்டி அணிவகுத்து அழைத்துச்சென்ற வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஆவார். தென்னாற்காடு மாவட்டம் கிராமங்கள் பலவற்றை த்தன்னகத்தே கொண்டது கிராம மக்களைக்கவர்ந்து ஈர்க்கும் ஆற்றல் பெற்ற பேச்சாளர் அஞ்சலை அம்மாள் என அவர் புகழப்பட்டார்.
கடலூரில் அஞ்சலை அம்மாள் இல்லத்தில் தேசபிதா காந்தி அண்ணலும் ஈ.வெ.ரா பெரியாரும் சந்தித்துப்பேசியுள்ளனர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
அஞ்சலையின் கணவர் முருகப்பா 1873ல் பிறந்தவர்.1927 விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.கடலூர், மற்றும் திருச்சி சிறைகளில் பலமுறை அடைக்கப்பட்டவர்.கணவனும் மனைவியும் நாட்டு விடுதலைக்காக சிறையில் அடைக்கப்படுதல் மிகப்பெரிய விஷயமல்லவா.தேச விடுதலைக்குப்போராடிய் அத்தனைத்தலைவர்களுக்குமா இப்படி வாய்த்தது.. கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பத்திற்கு த்தான் அப்படி ஒரு கொடுப்பினை.
1952 ஆம் ஆண்டு வரை கடலூர் சட்டமன்றத்தேர்தல்களில் அஞ்சலை அம்மாள் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதை எண்ணிப்பார்க்க நமது மனம் நெகிழ்ச்சி கொள்கிறது.
அஞ்சலை அம்மையாரின் கணவர் தியாகி முருகப்பா 1971 ஆம் ஆண்டு மறைந்துபோகிறார்..

அஞ்சலை அம்மாள் பெற்றெடுத்த செல்வமகள் பெயர் அம்மாக்கண்ணு.1927 நீலன் சிலை உடைப்புப்போராட்டத்தில் பங்கேற்று தனது ஒன்பது வயதில் சிறைக்குச் சென்றவர். நான்காண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சென்னை இளம்பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்.மூதறிஞர் ராஜாஜி அம்மாக்கண்ணுவை 'இவரே கடலூர் விடுதலை வீராங்கனை அஞ்சலை அம்மாளின் மகள்' என தேச பிதா மகாதமாவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அப்போது தேசபிதா காந்திய டிகள் அடைந்த பெருமகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அம்மாக்கண்ணுவை வார்தாவில் உள்ள தனது ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று பல ஆண்டுகள் அங்கே தங்கியிருக்கவும் வைத்தார்.அம்மாக்கண்ணுக்கு லீலாவதி என அண்ணல் காந்தியே பெயர் சூட்டிப் பெருமைபடுத்தியவர்.
தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவோடு வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய தமிழத்தின் வீர மகள் தில்லையாடி வள்ளியம்மை. அவரையும் விஞ்சிய தியாகத்தை ச் செய்த பெருமை இந்த கடலூர் திருமகளுக்கு உண்டென்று சொல்லவேண்டும்.கடலூர் மண் பெருமைகொள்ள வரலாற்றில் எத்தனையோ அருஞ்செயல்கள் இங்கே நிகழ் த்தப்பட்டுள்ளன.அத்தனையும் நோக்கக் கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பம் செய்த தியாகம் நிகரற்றது.
கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அஞ்சலை அம்மாளுக்கு ஒரு கையில் குழந்தை. மற்றொரு கையில் தாய் நாட்டு விடுதலைக்கொடி. போலிசார் தடி கொண்டு தாக்கியபோது தான் பெற்ற குழந்தையை கீழே விட்டு விட்டு விடுதலைக்கொடியை தூக்கிப்பிடித்த வீர ப்பெண்மணி கடலூர் அஞ்சலை அம்மாள். இது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் சரித்திர விஷயமாகும்.
வட ஆற்காடு மாவட்டத்தில் ஜமதக்னி என்னும் நாடறிந்த ஒரு விடுதலைப்போராட்ட வீரர். விடுதலை ப்போரில் பல போராட்டங்களைச்சந்தித்துச் சிறைசென்றவர். உலக மக்கலின் பார்வையைப்புரட்டிப்போட்ட பெருந்தோழர் காரல் மார்க்சின் 'மூலதனம்' என்னும் ஒப்பற்ற அரிய நூலைத்தமிழில் மொழிபெயர்த்த சீரிய பணிக்குச் சொந்தக்காரர். மார்க்சீயம் பயின்ற அந்தச் சிந்தனையாளர் லீலாவதியை தம் மனைவியாகத்திருமணம் செய்துகொண்டார்.தனது தாயையும் தந்தையையும் லீலாவதி சிறையில் சென்று பார்த்தபோது போராட்ட் வீரர் ஜமதக்னியையும் அவர் சந்திக்க நல் வாய்ப்பு கிடைத்தது. அது காலத்தால் காதல் என மலர்ந்து அவர்களின் திருமணத்தில் நிறைவு பெற்றது.இந்திய நாட்டின் அடிமை விலங்கொடித்து பரிபூரண விடுதலை கிட்டிய பின்னர் மட்டுமே திருமணம் குடும்ப வாழ்க்கை என்கிற விரதம் பூண்டு அவர்களிருவரும் அவ்விதமே செயல்பட்டனர் செய்தும் காட்டினர். புரட்சியாளர்களான மணமக்கள்.தாலிக்குப்பதிலாக அரிவாள் சுத்தியல் சின்னத்தை தங்கத்தகட்டில் பொறித்து அதனையே தாலியென ஏற்றுக்கொன்டனர்.. அன்று அவர்களின் திருமணச்செலவு என்பது வெறும் மூன்று ரூபாய் மட்டுமே.
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வரும் கொடுஞ்சிறையில் வாழ்ந்தனர். தாய் நாட்டு விடுதலை ஒன்றையே லட்சியம் எனக்கொண்டனர். இப்படி போராட்டவாழ்க்கையை அமைத்துக்கொண்ட எளிய மனிதர்களை, சுய நலம் கிஞ்சித்தும் அற்ற மற்றுமொரு ஒரு குடும்பத்தை, இந்நாட்டின் வேறு எங்கேனும் யாராலும் காட்டிவிடத்தான் இயலுமா?.
தமிழக விடுதலை வீரர்கள் இந்திய விடுதலை வரலாற்றில் செய்த அளப்பறிய தியாகங்கள் எண்ணற்றவை.வட இந்தியர்கள் எழுதிய இந்திய விடுதலை வரலாற்றில் அவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. .
நாமும் இங்கு அப்படித்தானே இருக்கிறோம். கடலூரில் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு நினைவுச்சின்னமாக ஏதேனும் ஒரு சிறிய சந்துக்காவது பெயர் வைத்து அம்மையார் நினைவைப் போற்றி இருக்கிறோமா?
புகழ்ந்தவைப்போற்றி ச்செயல் வெண்டும் என்னும் வள்ளுவரின் கட்டளை நமக்கும் உண்டல்லவா?
-------------------------------------------------------------------

.

vellam 2



சென்னையில் வெள்ளம்....2



அலுவலகத்திலிருந்து என் பெரிய பையன் நேராக  தியாகராய நகர் ராமேஸ்வரம் சாலைக்கு வந்துசேர்ந்தான்.தொப்பரையாக நனனைந்துதான் வீடு வந்தான்.சின்ன அண்ணன் வீடு தரை முழுவதும் ஈரம். தூக்கம் வரத்தான் செய்கிறது.தூங்கினால்தான் மனித மூளை திரும்பவும் தன் பாட்டுக்கு வேலை செய்ய இயலும்.ஒரே அரையில் அத்தனை பேரும் படுத்துக்கொண்டோம். சாக்கு பழம்புடவை கோரைப்பாய் எல்லாம்தான்.
காலையிலும் தூரல் விட்டால்தானே
.பெரியபையனும் அவன் மனைவியும்   ஓ எம் ஆர் சாலைக்குப்போய் அவரவர்கள் தம் பணியில் சேர்ந்துகொண்டார்கள்.நானும் என் மனைவியும் பேத்தியோடு சின்ன அண்ணன் வீட்டில் .வக்கீலுக்குப்படிக்கும் சின்ன அண்ணன் மகள் எங்களுக்குகூடயிருந்து  உதவிக்கொண்டிருந்தாள்.அண்ணிதான் எப்போதும்போல் சமையல்.அண்ணன் அ ங்கும் இங்கும் சென்று திரும்பி வீட்டிற்கு ஏதேனும் வாங்கிவருவதிலேயே குறியாக இருந்தார்
                                                             .மாலை நெல்லை எக்ஸ்பிரசில் பையனும் மருமகளும் பேத்தியும் சேரன் மாதேவிக்குப்புறப்பட்டார்கள். தமிழ் நாட்டு  அரசியலில் ஒரு பெரும்  திருப்பம் கொணரக் காரணமான  வவேசு அய்யரின்  ஆஸ்ரமம் இருந்த ஊர்தான்.மருமகளின் அந்த  ஊருக்குப்   போய்விட்டு திரும்பி வந்தால் மழை நின்றுவிடலாம் என்கிற ஒரு சின்ன   நம்பிக்கை.நான்தான் மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் ஏற்றிவிட்டேன்.நெல்லை துரித வண்டி மட்டும் என்ன மாம்பலத்தில்  நிற்குமா என்ன அவர்கள் எழும்பூருக்குச்சென்றுதான் ரயில் பிடித்தார்கள்
.அப்போது நெல்லையில் மழை பெய்துவிட்டிருந்தது.தாமிரபரணி மீதிருக்கும் சுலோசனா  முதலியார்   பாலத்தை ஆற்றுத் தண்ணீர் தொட்டுவிட்டால் அவ்வளவுதான் மழை.இனி பெய்யாது. இந்த வருடத்திற்கு இவ்வளவுதான் மழைகொள்முதல்    இதுவிஷயம்  என் சேரன்மகாதேவி  சம்பந்தி மாமா என்னிடம் போனில் சொன்னது உங்களுக்கும் தெரிந்து இருக்கட்டுமே என்று சொல்லிவைத்தேன்.
 நானும் என் மனைவியோடு மாலை நேரத்தில் ரெங்க நாதன் தெரு உசுமான் சாலை பனகல் பார்க் என சுற்றி வந்தேன்.பெண்கள் தியாகராய  நகர் வந்து விட்டு சும்மா இருப்பார்களா என்ன எதாவது ஒரு கடையில் ஏறி இறங்கி கையில் உள்ள காசினைக்கொடுத்து ஒரு பையை நிறைத்து தூக்கிக்கொண்டு வந்தால்தான் மனமடங்குகிறது. அவர்கள் மீது எதுவும் தவறு சொல்லிவிடாதீர்கள்.  தி நகர் மண் ராசிதான் இப்ப டிக்குப்  பெண்களை ஆட்டிப்படைக்கிறது.விஷயம் தெரிந்தவர்கள்  இதனை என்னிடம் சொன்னார்கள்.
மழை எங்கே விட்டது.பெய்து கொண்டேதான் இருந்தது.தொடர்ந்து பெய்யும் என ச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.கடல் மட்டும் என்னதான் செய்யும் எவ்வளவு தண்ணீரை உள்வாங்கும், 'அப்பா ஆளை விடுங்கள்' என அதுவும் புலம்பத்தான் தொடங்கியது.
நெல்லைசேரன்மாதேவிக்குப்போன மகன் அவன் மனைவி பேத்தியோடு                           சென்னைக்கு த்  திரும்பி வந்தனர்.மழை சற்று விட்ட மாதிரி தெரிந்தது. ஆக நாங்கள் எல்லோருமாக பழைய பெருங்களத்தூருக்குத்திரும்பிவிட தீர்மானித்தோம்.ஒரு மாலை நேரம் பார்த்து வாடகைக்கார் அமர்த்திக்கொண்டு தி. நகரிலிருந்து புறப்பட்டோம்.தாம்பரம் வந்து முடிச்சூர் சாலையில் திரும்பும் போது மனம் கொஞ்சம் கனத்தது.கிருஷ்ணா நகர் தாண்டும்போது சாலையில் தண்ணீர் காருக்குள் நுழைந்துவிடவில்லை.கார் இந்தப்பக்கத்திற்கு புதியது என்பதால் டிரைவர் கடக் புடக் என்று ஏதோ வண்டியை ஓட்டிக்கொண்டு பழைய பெருங்களத்தூர் வந்து பார்வதி நகர் தாண்டினார்  ஸ்ரீராம் நகர் வரை வந்து இனி வண்டி போகாது என்றார்.நாங்கள் அனைவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.நேதாஜி நகரில் தெருவெல்லாம் மழைத்  தண்ணீர்.முழங்கால் வரை.    தண்ணீர் வரவு . அவ்வளவுதான் மழை இனி வராது நாங்களே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம்.நாங்கள் வசிக்கும் தெருவில் முதல் வீட்டு தெலுங்கு  மாமி ' மழை இனி ஒன்றும் வராது.அப்படியே வந்தாலும் நாங்க எங்க வீட்டு மொட்டைமாடியில இருப்போம்.' என்றார்.  அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் சிறிய அறை கூட இருந்தது. நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
'நம்ம வீடு நம்ம வீடுதான்' என் மனைவி' சொன்னாள். நாங்கள்' 'ஆமாம் ஆமாம்' என்று பதில் சொன்னோம்.ஆனால் எல்லோருக்கும் அடி வயிற்றில் புளிகரைந்து கொண்டேதான் இருந்தது.மழை தூர ஆரம்பித்தது. காற்று எதுவும் வீசவில்லை. மின்னல் இல்லை.இடி சப்தம் எதுவும் இல்லை.இரவு முழுவதும் ஊமை மழை. ஊமைவெயில் இல்லையாஅப்படித்தான்.
நாங்கள் பால்க்காரன் வந்துவிட்டனா என எட்டிப்பார்த்தோம்.கேட்டில் தொங்கிக்கொண்டிருந்த பால் பாக்கெட் பை கனத்து தொங்கிக்கொண்டிருந்தது.நான் போய் பால் பாக்கெட்டுகளை எடுத்து வந்தேன்.மோர்   இங்கு   கடையில்கிடைக்க வில்லை நீல்கிரிஸ் கடைக்குப்போனால்  கிடைக்கலாம்.  கோதாஸ் காபித்தூள் வாங்கியது இன்னும் தீராமல் இருந்தது.காபி குடித்தாயிற்று.சமையலுக்கு என்ன இருக்கிறது என ஃபிரிட்ஜை திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
                                                  தெருவில் மைக் வைத்து என்னவோ அலறி யபடி செய்தி சொன்னார்கள்.
'செம்பரம்பாக்கம் ஏரி தண்ணி தொறந்தாச்சி.அவுங்க அவுங்க கையில் கனக்குற சாமானு ங்க எதுவும் எடுத்துக்காம இங்கிருந்து சட்டுனு கரையேறிப்போயிடணும். பேசக்கூட உங்களுக்கு இனி நேரம் இல்லை. புறப்படுங்க புறப்படுங்க' இது மட்டும்தான் சொன்னார்கள். இவ்வறிவிப்பு  எல்லா இடங்களிலும் நடந்திருக்குமா அநேகமாக வாய்ப்பில்லை.
               ஏடிம் கார்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் எடுத்துக்கொண்டு வீட்டை ப்பூட்டிக்கொண்டு தெருவுக்கு வந்திவிட்டோம்.
மழை தூரிக்கொண்டே இருந்தது.தெருவில் முட்டிக்கால் வரைக்கும் தண்ணீர். வீட்டை பூட்டிக்கொண்டு பல குடும்பங்கள் சென்றே விட்டதைக்காணமுடிந்தது.ஓரிருவர் வீட்டைபூட்டிக்கொண்டு புறப்படுவதா வேண்டாமா என்ற கலக்கத்தில் இருந்தனர்.  மனைவி ,மருமகள் பேத்தி என் பையன் என நாங்கள் தண்ணீரில் நடந்துகொண்டு இருந்தோம்.வானம் மேகத்தால் இருட்டிக்கிடந்தது.வழியில் பள்ளங்கள் சிறு மடுவு எல்லாம் இருந்தது.தண்ணீர் இப்போது தொடைவரைக்கும் வந்துவிட்டது.
'தண்ணீர் ஏறுது ஏறுது'
சொன்ன மனைவிக்கு
 'ஒண்ணும் பயமில்ல வா' என்றேன். என் பக்கத்து வீட்டுக்காரர் பரணி  தன் டூ வீலரை நான்கு தெருக்கள் முன்பாக ஒரு வேப்ப மரத்தடியில் ஒரு ஓரமாக நிறுத்திவைத்துக்கொண்டிருந்தார்.
'நம்ம ரெண்டு வண்டியுமே வீட்டு வாசல்ல நிறுத்தி வச்சிருக்கம்'
'இப்ப அது பேசி என்ன ஆவப்போவுது' என் பையன் எனக்குப்   பதில் சொன்னான்.
                                                  என் மனைவிக்கு புடவை முழுவதும் நனைந்து விட்டதால் திண்டாடி திண்டாடி நடந்தாள்.எப்போதும் ஒரு முட்டி சரியாக இயங்காததால் அவளால் கீழே தரையில் உட்காருவது என்பதெல்லாம் சிரம விஷயம் ஆயிற்று. எத்தனைக்களிம்புகள் மருந்துக்கடையில் விற்கிறதோ அவை அத்தனையும் வாங்கிப்போட்டாயிற்று. எதுவும் ஆகவில்லை. வலி வலிதான். அசவுகரியம்  அசவுகரியம்தான்  அதில் ஒன்றும் மாற்றம் வந்துவிடவில்லை.எலும்பு டாக்டர்கள் நரம்பு டாக்டர்கள் எத்தனயோ பேர். எல்லாரும் பார்த்து முடிந்தது. காலில் முட்டி மாற்று அறுவை செய்யலாம் என்கிறார்கள் சிலர்.என் மனவி இன்னுமதற்குச்சரி என்று சொல்லவில்லை.சொன்னால் பார்க்கலாம் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது.
என் பக்கத்து வீட்டு பரணி  தன் டூவீலரிடம் நின்றுகொண்டிருந்தார்.'இன்னும் மழை வருமா'என்று ஆகாயம் பார்த்துக்கொண்டிருந்தார்.
'என் வண்டியில உக்காருங்க நா பஸ் நிறுத்தத்தில் கொண்டுபோ விட்டுடறன்' என் மனைவியை தன் டூவீலரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
'நீங்க காலிபண்ணிட்டு புறப்படலயா'
'அதான் யாரு வீட்டுக்கு போவுலாம்னு யோசனை.தம்பி வீடா இல்லை மச்சான் வீட்டுக்குப்போலாமான்னு' எனக்கு பதில் சொன்னார்.
                                                              டூவீலர் எங்களுக்கு முன்பாக போய்க்கொண்டிருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு பை வைத்திருந்தோம்.எல்லாம் கனக்கத்தான் செய்தது.என் பேத்திக்கு இன்னும் இரண்டு வயது ஆகவில்லை. நடப்பவைகள் எல்லாமே அவளுக்குப்  புதிய விஷயங்கள்.எங்களுக்கும் கூட இப்படித்தான்.
                                 2005ல் சுனாமி  வந்தபோது நாங்கள் மஞ்சகுப்பம்  டெலிபோன் குவார்ட்டர்ஸில் குடியிருந்தோம்.நானும் என் சின்ன மகனும் சாப்பாட்டு அரிசி வாங்கத்தான் மஞ்சகுப்பம் மார்கெட் அருகேயுள்ள  முருகன் செட்டியார் மளிகைக் கடை வாயிலில் நின்றுகொண்டிருந்தோம்.
குய்யோ முறையோ ' என்று அலறி அடித்துக்கொண்டு மக்கள்கூட்டம்கூட்டமாக  உப்பல வாடி பகுதியிலிருந்து மேற்கே தலைதெறிக்க ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.'கடலு பொங்கி வருது கடலு பொங்கி வருது' என்று கூவிக்கொண்டே ஓடினார்கள்.மக்கள் சாரைசாரையாக கடலுக்கு எதிர்த்திசையில் ஓடிக்கொண்டேயிருந்தனர்.நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் மனிதர்கள் நடக்கக்கூட இடம் இல்லை.நாங்களும் அங்குக்  கூட்டத்தோடு கூடமாக ஓடியவர்களே .அப்படி ஓடினோம் என்றாலும் ஏடிஎம் கார்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டது என் மனைவிக்கு நினைவு வர  -இது  விஷயம் அவர்களுக்கு மட்டும்தானே  வரும்-  மஞ்சக்குப்பம் வீடு நோக்கி த்திரும்பவும் வேகு வேகு என்று நடக்க ஆரம்பித்தோம். அது  எல்லாம் எப்பவோ முடிந்துபோன கதை.இப்போது ஏனோ  .நினைவுக்குவருகிறதே.
                  என் மனைவியை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்காரர் பரணி  திரும்பிவிட்டார்.
'தாம்பரத்துக்கு பஸ் எதுவும் கிடையாது.ஆட்டோவும் போவாது. வழியில கிருஷ்ணா நகருல தண்ணீ. நீங்க புது பெருங்களத்தூருக்குப்போயி எலக்ட்ரிக் ரயில கியில புடிச்சாதான் உண்டு'
'நாங்க எதுவோ பண்ணிகரம். நீங்க மொதல்ல வீட்டை விட்டுட்டு கிளம்புங்க' நான் சொல்லிக்கொண்டேன்.
'எனக்கு அவ அம்மா வீட்டுக்கு போவ இஷ்டமில்ல.அவளுக்கு என் தம்பி வீட்டுக்கு வர பிரியமில்ல. என்ன செய்ய '
'இங்க நாலு நாளு அங்க நாலு நாளு இருக்கறது'
நான் சமாதானம் சொன்னேன்.இது என்ன பெரிய கண்டுபிடிப்பா அவர்களுக்குத்தெரியாததா நானே சொல்லிக்கொண்டேன். பரணி  வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
'உங்க வண்டிய ரெண்டையும் தண்ணில வுட்டுட்டு போறீங்க' சொல்லிய அவர் விடை பெற்றுக்கொண்டார்
.எனக்குத்தெரிந்த ஆட்டோக்காரன் ராஜ்ஜா வுக்குப்போன் போட்டேன்.'என்னா சாமி எங்க போவுணும்' என்றான்.
'அதான் புது பெருங்களத்தூர் ரயிலடிக்கு ப்போவுணும்'
'அங்க மட்டும் ஒண்ணு ரெண்டு ஆட்டோ போவுது. நா வர்ரன்'
நாங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தோம். வானம் உன்னை விட்டேனா பார் என்கிறபடிக்கு மேகங்களைத்  தன் மேலே திணித்துக்கொண்டிருந்தது. ஆட்டோக்காரன் ராஜ்ஜா  வந்தான். நாங்கள் நால்வரும் ஆட்டோவில்  ஏறினோம். பேத்தியைக்கூட்டினால் ஐந்துபேர்.மூன்று பேர் பின்னால். நான் பேத்தியைக்கையில் வைத்திருந்தேன்.என் பையன் ஆட்டோக்காரன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.  விட்டிருந்த மழை மீண்டும்  ஆரம்பித்தது.
'நானு சுத்திகிட்டு தாம்பரம் பஸ் ஸ்டேண்டு போவுறேன். நீங்க எதுக்கு புது பெருங்களத்துருக்கு போவுணும்'
'அதுக்கு காசு ஜாஸ்தி கேப்பிங்கல்ல' என்றாள் என் மனைவி.
'நீங்க கொடுக்குறத வாங்கிக்குவன். இண்ணைக்கு நேத்தி பழக்கமா. மழை பிச்சி கிணு வொதறும்போல'
ஆட்டோக்காரன் பதில் சொன்னான்.தாம்பரம் பஸ் ஸ்டேண்டைத்தான்  சானடோரியத்தில் கட்டியிருக்கிறார்கள்.மேற்கு தாம்பரம் அம்பேத்கர் சிலைக்கு நேராக எல்லா பேருந்துகளும் நின்று செல்கின்றன.ஒன்றன் பின் ஒன்றாகத்தான் நின்றுகொண்டிருக்கும் அவை.
மேற்கு தாம்பரம் இறங்கி நாங்கள் அனைவரும் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திற்குச்சென்றாக வேண்டும். ஆகாயம் பார்த்தேன் .அடர்ந்த மேகங்கள் திணித்துக்கொண்டு நின்றன. தேசிய சாலை 45 ஐ கடக்க சிக்னலில்பலர்  நின்றார்கள்.சிலர் சிக்னல் ஒன்று இருப்பதாகவே எண் ணவில்லை. தோன்றியது செய்தனர். பாதாசாரிகள் நடக்கலாம் என்கிற விதமாக பச்சை வண்ண மனிதன் சிக்னல் கம்பத்தில் ஒளிர்ந்தது. அவரவர்கள் சாலையைக்கடந்து கிழக்குப்பக்கம் போனார்கள். இது எப்படி வேலை செய்கிறது.யோசித்தேன். 'அது தப்புத்தப்பா வேலசெய்யுது' என் பையன் சொன்னான்.ஏனோ அப்படிச்சொன்னான்.எப்படித்தப்பு கேட்கும் நேரமா இது.
                           அரசுப்  பேருந்து  நிறுத்த இடத்தில் சிறிது நேரம் நின்று செல்லலாம் என முடிவு செய்தேன் . மழை ஜிவ்வென்று தொடங்கிற்று.அரசு பேருந்து டிக்கட் கவுன்ட்டர்   இரும்புத் தகட்டுக்கூரையின் கீழ் நிற்க  நான்  தலையை உள்ளே நுழைத்துக்கொண்டேன். அந்த கூரைக்குள் முன்னமேயே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞர் 'இங்கென்னா உள்ள வரீங்க நாங்க பஸ்சுக்கு போறவங்க மட்டும்தான் இங்க நிக்குலாம் எட்ட நவுறுங்க' என்று கத்தினார் .மழைக்கு  ஒதுங்கியது பொறுக்கமாட்டாத அந்த இளைஞரை  வருங்காலத்  தலைமுறையை  என்ன சொல்ல இருக்கிறது. ஆக  மழையில் நனைந்துகொண்டே நின்று இருந்தேன்.
 மனைவி மகன் மருமகள் பேத்தி என அந்த நால்வரும் மேற்குத்தாம்பரம் ரயில் நிலயத்திற்கு நடக்க ஆரம்பித்தார்கள். நான் பின் தொடர்ந்தேன்.சாலை எங்கும் மக்கள் வெள்ளமாக இருந்தது.எல்லோருக்கும் எங்கேயாவது சென்றுவிடவேண்டும்.சென்னை போதுமப்பா என்கிறபடிக்கு ஆகியிருக்கலாம் என்று நினைத்தேன்
.ரயில் நிலைய டிக்கட் கவுன்டர்களில் மக்கள் மக்கள் நீண்ட வரிசைக்கு நின்றார்கள்.ஒரு இடம் பார்த்து எலோரையும் இருக்கச்சொல்லிவிட்டு டிக்கட் எடுக்க வரிசையில் நின்றேன்.மக்கள் அனேகமாக நனைந்துதான் இருந்தனர்.யார் முகத்திலும் ஒரு ஜீவனைக்காண முடியவில்லை.அச்சம் அவரவர்கள் மென்னியைப்பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கவேண்டும் என்கிறபடி  அனுபவமானது.
'மாம்பலம் நாலு' கவுண்டரில் சொல்லி டிக்கட் கேட்டேன்.
'டிக்கட் தர்ரம் வண்டி எப்ப கெளம்பும்னு சொல்ல முடியாது' டிக்கட் தருபவர் எச்சரிக்கை செய்தார்.டிக்கட் ஒன்று ஐந்து ரூபாய்தானே மழையில் நனையாமல் எங்கேயாவது ஒதுங்கினால் போதும் என்று  மனம் சொல்லிக்கொண்டது.எல்லா ரயில் நிலையங்களும் கொஞ்சம் மேடான பகுதியிலேயே  அறிவோடு   கட்டியிருக்கிறார்கள்..வெள்ளைக்காரர்களுக்கு நன்றி சொல்லத்தான்வேண்டும் நாம்.டிக்கட்டை வாங்கிக்கொண்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு பிளாட்பாரம் நோக்கி நடந்தேன் . பிளாட்பாரத்தில் நிறகக்கூட இடம் இல்லை.குடை வைத்திருந்தோர்,ரெயின் கோட்டுக்காரர்கள்,பாலிதீன் பையை அவசரத்துக்கு த்தலையில் மாட்டிக்கொண்டவர்கள் என ரகங்கள் பல இருந்தன.பாதிக்குமேல் மழையில் நனைந்தவர்கள் பிளாட்பாரம் எங்கும் ஒரே ஈரம்.எங்கும் ஈரம்.எந்த ரயிலும் புறப்படுகிற மாதிரியே தெரியவில்லை.மழை அது தன் விருப்பத்துக்கு கொட்டிக்கொண்டே இருந்தது.யார் இவ்வளவு அடர்த்தியாய் மழையை பார்த்து இருக்கிறார்கள்.என்னசெய்யப்போகிறோம் என்கிற கவலை எல்லார் முகத்திலும் கொட்டையாய்   எழுதிக்கொண்டு தொங்கியது.தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கக்கூட இடம் கிடைக்குமா என்கிற கவலை த்   தொண்டையை அடைக்கத்தொடங்கியது
.ஒரு மின்சார ரயில் உடனே தாம்பரத்திலிருந்து புறப்பட்டுக் கடற்கரைக்குச்செல்லும் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிக்கொண்ட படியே ஒரு ரயில் டாண் என்று வந்து நின்றது.மக்கள் அதனுள்ளாகப்புக முண்டி அடித்துக்கொண்டார்கள். உயிரே போனாலும் அது அந்த   ரயில் பெட்டி உள்ளே போகட்டும் என்ற முடிவோடு மக்கள் ஏறினார்கள்.  பயந்து போனேன். மனைவிக்கு க்கூட்டத்தைக்கண்டால் எப்போதும் அச்சம்.ஏ ன்  அவளுக்கு   அச்சம்.
 இப்போதைக்கு அந்த க்கதை  விஸ்தாரமாய்ச் சொல்கிறமாதிரி இல்லை.சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். தமிழ்ச் சமூகத்தில் ஒரு இனத்தவருக்கு த்தனி ஒதுக்கீடு வேண்டும் என்கிற போராட்டம் அப்போது  நடந்து கொண்டிருந்தது.கடலூர் மாவட்டத்து  விருத்தாசலம் அருகே  நானும் என் மனைவியும் ஒரு பேருந்தில்  ஊர்  திரும்பிக்கொண்டிருந்தோம்.சாலை  மறியல் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.ஆயிரக்கணக்கில் மக்கள் சாலையை மறித்துக்கொண்டுநின்றார்கள் கல் வீச்சு ஆரம்பித்தது. நெய்வேலி ஊத்தங்கால்  அருகேதான்  இந்த நிகழ்வு. எங்களுடன் கைக்  குழந்தையைத் தூ க்கிகொண்டு போயிருந்தோம்.என் மனைவி  குழந்தையை த்தன் மடியில்போட்டுக்கொண்டு  தன்  முதுகால்   ஜல்லிக்கற்களின்  தாக்குதலை  எதிர்கொண்டாள்.தலையில்  ஆறு தையல் போட்டு அதோடு   ஒருமாதம் படுக்கையில் கிடந்தாள்.குழந்தைக்கு ஒன்றும்  ஆகவில்லை. அதனை  எங்கே  அவள்  மறப்பது.
                                                     பெண்கள் பெட்டி, முதல்வகுப்பு எதுவாக இருந்தால் என்ன ரயில் கடற்கரை செல்கிறதா அது போதும் செக்கிங்க் கிக்கிங் எல்லாம் யார் சட்டை செய்தார்கள்.
'இந்த ரயில்ல ஏறி நம்மால போக முடியாது. நாம செத்தே போயிடுவோம் கொழந்த வேற இருக்கு'  மனைவியும்  பையனு ம்  திகைத்துப்போய் நின்றிருந்தார்கள் .ரயில்புறப்பட்டது.ரயிலுக்கு வெளியே தொங்கியவர்கள் எண்ணிக்கை உள்ளே இருந்தவர்களுக்கு ச்சமமாகவே இருந்திருக்கும். இனி ரயில் வருமா நாம் அதனில் ஏறிப்போக முடியுமா என்று பயம் வந்தது.அந்த நேரம் பார்த்து திருச்செந்தூர் துரித வண்டி உருமிக்கொண்டே  ஐந்தாவது  பிளா ட்பாரத்தில் வந்து நின்றது. பிளாட்பாரத்தில் நின்றிருந்தோர் அதற்குள்ளாகவும்  முண்டியடித்து ஏறி நிற்க ஆரம்பித்தனர்.மழை அது தன் போக்கிற்குப்பெய்துகொண்டே இருந்தது.இப்படியும் கூட ஒரு  மழை பெய்யுமா என்ன யார் கண்டார்கள்.பெய்கின்ற மழையில் தாம்பரம் ஊரே மூழ்கிவிடுமோ  அச்சமாக இருந்தது.
நான் என் மனைவியின் கையைப்பிடித்துகொண்டு திருச்செந்தூர் வண்டியை  நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.என் மகனும் மருமகளும் உடன் வந்தார்கள்.பேத்தி நடப்பது எல்லாவற்றையும் கவனமாகப்பார்த்துக்கொண்டே வந்தாள்.' நாம் லோகல் வண்டிக்குத்தானே டிக்கட் வாங்கினோம்.இந்த துரித வண்டியில் ஏறிப்போகலாமா கூடாதா' என்கிற கேள்வி மனதிற்குள் எழுந்தது.பையனிடம் லேசாக விசாரித்தேன்.'எதாவது ஆகட்டும்.மொதல்ல இங்கிருந்து போயிடணும்' அவன் எனக்குப்பதில் சொன்னான்.என் மனைவிக்கோ மருமகளுக்கோ இது பற்றி எல்லாம்  கவலை இருப்பதாகவே தெரியவில்லை.ஒரு ரிசர்வேஷன் பெட்டியில் நுழைய ப்படியில் காலை எடுத்து  வைத்தேன்


.'இது ரிசர்வேஷன் பெட்டி' 'இங்க யாரும் ஏறக்கூடாது' ஒரு முதியவர் கத்தஆரம்பித்தார்.






பெட்டிக்குள்ளிருந்து வாயிற்கதவு வரை ஓடிவந்து வழி மறித்தார்..