Friday, September 16, 2016

anjalai ammaal




கடலூர் அஞ்சலை அம்மாள்-உங்களுக்குத்தெரியுமா? -எஸ்ஸார்சி


கடலூர் மண்ணின் ஓர் ஒப்பற்ற பெண்மணி இந்திய விடுதலை ப்போராட்ட வீராங்கனை தியாகி அஞ்சலை அம்மாள் 1890ல் பிறந்தார். தாய் நாட்டு விடுதலைப்போரில் பங்கேற்று ஏழு ஆண்டுகள் சிறையில் வாழ்ந்தவர். முப்பத்தோறாம் வயதில் தன் வயிற்றில் குழந்தையோடு கொடுஞ் சிறையில் அடைக்கப்பட்டவர்.
அஞ்சலையின் அம்மாளின் கணவர் முருகப்பா படையாச்சி ஒரு விடுதலைப்போராட்ட வீரர் இத்தேசத்தின் விடுதலைக்காக சிறை சென்ற குடும்பம் அவர்களது. அஞ்சலை அம்மாள் குழந்தையைப் பிரசவிக்க மட்டுமே சிறையினின்று விடுதலை செய்யப்பட்டு . மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.அம்மாக்கண்ணு என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட அஞ்சலையின் அந்தக்குழந்தையே பின்னாளில் தேசபிதா காந்தி அடிகளால் லீலாவதி என்று பெயர் சூட்டப்பெற்றார்.
அஞ்சலை அம்மாள் தென்னாட்டிலிருந்து விடுதலைப்போரில் ஈடுபட்ட எளிய குடும்பத்து முதல் பெண்மணி.நீலன் சிலை உடைப்புப்போராட்டம்-1927,உப்புக்காய்ச்சும் போராட்டம்-1937,சட்ட மறுப்பு இயக்கம் -1933,வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942, என தொடர்ந்து அனைத்து போராட்ட இயக்கங்க்ளிலும் மகத்தான பங்கேற்றவர்.
கர்னல் ஜேம்ஸ் நீல் என்பான் வெள்ளையர்களின் துப்பாக்கிப்படையைச்சார்ந்தவன். 1857ல் சிப்பாய்க்கலகம் என்னும் விடுதலைப்போரில் இந்திய்ர்களை க் காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்த மாகிராதகன். அவனுக்கு ஒரு 16 அடி சிலையை அன்றைய பிரிட்டீஷார் சென்னை மவுண்ட் ரோடில் நிறுவியிருந்தனர்.அதனை இடித்து நொறுக்கவே நீல் சிலை உடைப்புப் போராட்டம் நடைபெற்றது.இன்றோ அந்த கொலைபாதகனின் சிலை சென்னை மியூசியப் பழங்குப்பையில் உறங்கக்கிடக்கிறது.
மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு- என்னும் நூலை எழுதிய விடுதலை போராட்ட வீரர் எஸ்.என்.சோமயாஜுலு அந்த வரலாற்று நூலில் பின் வரும் விஷயத்தை ப்பதிவு செய்கிறார்..
'1923ல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் தண்டிக்கப்பட்ட சுமார் 100 தொண்டர்களை கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைக்குக்கொண்டு வந்தனர்.இதைக்கேள்வியுற்ற கடலூர் விடுதலை வீரர்கள் எஸ்.ஏ தெய்வ நாயக அய்யா,எம்.வி.சுதர்சனம் நாயுடு, அஞ்சலை அம்மாள் முதலியவர்கள் அனைவருக்கும் இரவு உணவு கொண்டு வந்து திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து ரயில் வந்ததும் வந்தே மாதரம் கோஷம் இட்டனர். ரயிலில் கொண்டுவரப்பட்ட மதுரைத்தொண்டர்களும் உற்சாகமடைந்து பதில் கோஷமிட்டனர். தியாகிகளைச் சிறைக்கு அழைத்து வந்த சார்ஜண்டும் போலிசாரும் திகைத்தனர். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் கைதிகள் அனைவரையும் ஒரு பக்கமாகக்கொண்டுபோய் வைத்தனர்.உடனே கேப்பர் மலைக்குக்கொண்டுபோக முயற்சித்தனர்.கடலூர் தேசபக்தர்கள் கொண்டு வந்த உணவை அவர்களுக்குக்கொடுக்க போலிசார் உடன்படவில்லை.சத்தியாக்கிரகவாதிகளும் கடலூர் சொந்தங்கள் கொண்டுவந்த உணவை உட்கொள்ளாமல் கேப்பர் சிறைக்கு வரமுடியாது என இரவு முழுவதும் பட்டினி கிடந்தனர்.
அதன்பின்னர் மறு நாள் அதிகாலை கடலூர் தேசபக்தரும் ஹோட்டல் உரிமையாளருமான வெங்கட்ட ராவ் அனைவருக்கும் சிற்றுண்டி கொண் டு கொடுத்தார். கைதிகளுடன் வந்த போலிசாரும் சாப்பிட்டனர்.எல்லோரும் மகிழ தெய்வ நாயக அய்யா,அஞ்சலையம்மாள்,சுதர்சனம் நாயுடு மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வீர வாழ்த்து கூறி வழியனுப்பி வைக்க மதுரைத்தொண்டர்கள் கேப்பர் சிறையை நோக்கிச்சென்றனர்.'
1927 ல் சென்னையில் காங்கிரஸ் இயக்கத்தின் 43 வ்து காங்கிரஸ் நடைபெற்றது.முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த டாக்டர்.எம்.ஏ அன்சாரி தலைமை ஏற்றார்.இம்மாநாட்டில் சைமன் கமிஷனை ப்பகிஷ்கரிப்பது என முடிவு செய்யப்பட்டது.பூரண விடுதலையே இந்திய மக்களின் குறிக்கோள் எனத்தீர்மானம் நிறைவேறியது.
சைமன் கமிஷன் பிரிட்டீஷாரால் இந்திய சட்டசபை மறு சீரமைப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. அப்போது நாடு முழுவதும் சைமன் கமிஷன் எதிர்ப்புப்போராட்டம் நடைபெற்றது. லாகூரில் இப்போராட்டத்தில் பஞ்சாபின் சிங்கம் எனப்போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ஈவிரக்கமற்ற வெள்ளையரகளின் குண்டாந்தடியால் அடிபட்டார். உயிர் நீத்தார்.
அதே சமயம் நெல்லை விடுதலை வீரர் சோமயாஜுலு தலைமையில் நீலன் சிலை தகர்ப்பு ப்போாட்டம் சென்னையில் நடைபெற்றதை க்குறிப்பிட வேண்டும். 43 வது காங்கிரஸ் சென்னை மா நாட்டிற்கு கடலூர் பகுதியிலிருந்து பெண்களைத்திரட்டி அணிவகுத்து அழைத்துச்சென்ற வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஆவார். தென்னாற்காடு மாவட்டம் கிராமங்கள் பலவற்றை த்தன்னகத்தே கொண்டது கிராம மக்களைக்கவர்ந்து ஈர்க்கும் ஆற்றல் பெற்ற பேச்சாளர் அஞ்சலை அம்மாள் என அவர் புகழப்பட்டார்.
கடலூரில் அஞ்சலை அம்மாள் இல்லத்தில் தேசபிதா காந்தி அண்ணலும் ஈ.வெ.ரா பெரியாரும் சந்தித்துப்பேசியுள்ளனர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
அஞ்சலையின் கணவர் முருகப்பா 1873ல் பிறந்தவர்.1927 விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.கடலூர், மற்றும் திருச்சி சிறைகளில் பலமுறை அடைக்கப்பட்டவர்.கணவனும் மனைவியும் நாட்டு விடுதலைக்காக சிறையில் அடைக்கப்படுதல் மிகப்பெரிய விஷயமல்லவா.தேச விடுதலைக்குப்போராடிய் அத்தனைத்தலைவர்களுக்குமா இப்படி வாய்த்தது.. கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பத்திற்கு த்தான் அப்படி ஒரு கொடுப்பினை.
1952 ஆம் ஆண்டு வரை கடலூர் சட்டமன்றத்தேர்தல்களில் அஞ்சலை அம்மாள் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதை எண்ணிப்பார்க்க நமது மனம் நெகிழ்ச்சி கொள்கிறது.
அஞ்சலை அம்மையாரின் கணவர் தியாகி முருகப்பா 1971 ஆம் ஆண்டு மறைந்துபோகிறார்..

அஞ்சலை அம்மாள் பெற்றெடுத்த செல்வமகள் பெயர் அம்மாக்கண்ணு.1927 நீலன் சிலை உடைப்புப்போராட்டத்தில் பங்கேற்று தனது ஒன்பது வயதில் சிறைக்குச் சென்றவர். நான்காண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சென்னை இளம்பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்.மூதறிஞர் ராஜாஜி அம்மாக்கண்ணுவை 'இவரே கடலூர் விடுதலை வீராங்கனை அஞ்சலை அம்மாளின் மகள்' என தேச பிதா மகாதமாவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அப்போது தேசபிதா காந்திய டிகள் அடைந்த பெருமகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அம்மாக்கண்ணுவை வார்தாவில் உள்ள தனது ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று பல ஆண்டுகள் அங்கே தங்கியிருக்கவும் வைத்தார்.அம்மாக்கண்ணுக்கு லீலாவதி என அண்ணல் காந்தியே பெயர் சூட்டிப் பெருமைபடுத்தியவர்.
தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவோடு வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய தமிழத்தின் வீர மகள் தில்லையாடி வள்ளியம்மை. அவரையும் விஞ்சிய தியாகத்தை ச் செய்த பெருமை இந்த கடலூர் திருமகளுக்கு உண்டென்று சொல்லவேண்டும்.கடலூர் மண் பெருமைகொள்ள வரலாற்றில் எத்தனையோ அருஞ்செயல்கள் இங்கே நிகழ் த்தப்பட்டுள்ளன.அத்தனையும் நோக்கக் கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பம் செய்த தியாகம் நிகரற்றது.
கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அஞ்சலை அம்மாளுக்கு ஒரு கையில் குழந்தை. மற்றொரு கையில் தாய் நாட்டு விடுதலைக்கொடி. போலிசார் தடி கொண்டு தாக்கியபோது தான் பெற்ற குழந்தையை கீழே விட்டு விட்டு விடுதலைக்கொடியை தூக்கிப்பிடித்த வீர ப்பெண்மணி கடலூர் அஞ்சலை அம்மாள். இது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் சரித்திர விஷயமாகும்.
வட ஆற்காடு மாவட்டத்தில் ஜமதக்னி என்னும் நாடறிந்த ஒரு விடுதலைப்போராட்ட வீரர். விடுதலை ப்போரில் பல போராட்டங்களைச்சந்தித்துச் சிறைசென்றவர். உலக மக்கலின் பார்வையைப்புரட்டிப்போட்ட பெருந்தோழர் காரல் மார்க்சின் 'மூலதனம்' என்னும் ஒப்பற்ற அரிய நூலைத்தமிழில் மொழிபெயர்த்த சீரிய பணிக்குச் சொந்தக்காரர். மார்க்சீயம் பயின்ற அந்தச் சிந்தனையாளர் லீலாவதியை தம் மனைவியாகத்திருமணம் செய்துகொண்டார்.தனது தாயையும் தந்தையையும் லீலாவதி சிறையில் சென்று பார்த்தபோது போராட்ட் வீரர் ஜமதக்னியையும் அவர் சந்திக்க நல் வாய்ப்பு கிடைத்தது. அது காலத்தால் காதல் என மலர்ந்து அவர்களின் திருமணத்தில் நிறைவு பெற்றது.இந்திய நாட்டின் அடிமை விலங்கொடித்து பரிபூரண விடுதலை கிட்டிய பின்னர் மட்டுமே திருமணம் குடும்ப வாழ்க்கை என்கிற விரதம் பூண்டு அவர்களிருவரும் அவ்விதமே செயல்பட்டனர் செய்தும் காட்டினர். புரட்சியாளர்களான மணமக்கள்.தாலிக்குப்பதிலாக அரிவாள் சுத்தியல் சின்னத்தை தங்கத்தகட்டில் பொறித்து அதனையே தாலியென ஏற்றுக்கொன்டனர்.. அன்று அவர்களின் திருமணச்செலவு என்பது வெறும் மூன்று ரூபாய் மட்டுமே.
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வரும் கொடுஞ்சிறையில் வாழ்ந்தனர். தாய் நாட்டு விடுதலை ஒன்றையே லட்சியம் எனக்கொண்டனர். இப்படி போராட்டவாழ்க்கையை அமைத்துக்கொண்ட எளிய மனிதர்களை, சுய நலம் கிஞ்சித்தும் அற்ற மற்றுமொரு ஒரு குடும்பத்தை, இந்நாட்டின் வேறு எங்கேனும் யாராலும் காட்டிவிடத்தான் இயலுமா?.
தமிழக விடுதலை வீரர்கள் இந்திய விடுதலை வரலாற்றில் செய்த அளப்பறிய தியாகங்கள் எண்ணற்றவை.வட இந்தியர்கள் எழுதிய இந்திய விடுதலை வரலாற்றில் அவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. .
நாமும் இங்கு அப்படித்தானே இருக்கிறோம். கடலூரில் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு நினைவுச்சின்னமாக ஏதேனும் ஒரு சிறிய சந்துக்காவது பெயர் வைத்து அம்மையார் நினைவைப் போற்றி இருக்கிறோமா?
புகழ்ந்தவைப்போற்றி ச்செயல் வெண்டும் என்னும் வள்ளுவரின் கட்டளை நமக்கும் உண்டல்லவா?
-------------------------------------------------------------------

.

No comments:

Post a Comment