Monday, June 29, 2015

vesayam -story

வெசயம் -எஸ்ஸார்சிஅனேகமாக புது வீட்டின் ஆசாரி வேலைகள் முடியும் சமயம்.நான்கு ஆசாரிகள் ஒரு மாதமாக தட்டி தட்டி வேலை செய்து நான்கு அறுகால் ஆறு ஜன்னல்கள் மஞ்சளைப் பூசிக்கொண்டுதயார் ஆனது.அவன் அனுவலகத்துக்கு ஒருமாதம் விடுப்பு போட்டான்..இதற்கு செலவு ஆகாத விடுப்பு பின் எதற்கு என்றுதான் தோன்றிற்று.
ரெடிமேடாகவே அறுகாலும் ஜன்னலும் மரவாடியில் தயாராக விற்பனைக்கு இல்லையா என்ன. நாமே ஆசாரி வைத்து செய்வது போல் ஆகுமா என்று சொல்கிறார்களே.
ரெடிமேடு ரெடிமேடு தான் நாம ஆசாரி வச்சி செய்யுறதுன்னா அது வேறதான் இப்படித்தானே பேச்சு காதில்விழுகிறது.
பூதாமூர் அவுசிங்க் போர்டுக்கு அருகில் மனை வாங்கியிருந்தான். அவனுக்குத் தெரிந்தவர்களும் அங்குதானே மனை வாங்கினார்கள்.கடைகால் போட்டு கிடக்கிறது.தரைக்கு மேலே இரண்டு அடிக்கு கருங்கல் சுவர் வெளியே தெரிகிறது.அதற்கு மேலாக காங்க்ரீட் பில்ட் போட்டிருக்கிறது'..மேற்கொண்டு வேலை ஆரம்பிப்பது அறுகால் ஜன்னல் ரெடியான பின்னர்தான் என்று அவனுக்கு க் கோவிதராஜு மேஸ்திரி அறிவிப்புகொடுத்துவிட்டார்.
'காலைல மாலைல தண்ணீய மாத்திரம் தவறாம காங்க்ரீட் கட்டு சுவத்துல அடிச்சிகிட்டே இருங்க.அது ரெம்ப முக்கியம்' சொல்லிப்போன மேஸ்திரி இன்னும் திரும்பி வந்து கட்டு வேலை தொடங்க ஒருமாதமாகலாம். அதற்குள் மர வேலைகள் முடிக்க வேண்டும். அனேகமாக மர வேலைகள் எல்லாமும் முடித்துவிட்டார்கள் நான்கு ஆசாரிகளுக்கு வேலை..அன்றுதான் கடைசி நாள்.வேலை வேலை சஞ்சாயம் என்பதால் இப்படி காண்ட்றாக்ட் என்று விட்டிருந்தால் இந்நேரம் வேலை எப்பவோ முடிந்து இருக்கும்.எட்டு மணி நேர உழைப்பு எட்டு மணி நேர உல்லாசம் எட்டு மணி நேர உறக்கம் என்கிற மூன்று 'உ' க்கள் எல்லாம் வேலை காண்றாக்ட் என்று சொல்லி விட்டால் பறந்தே போய்விடுகிறது.. .
'சாரு ராயல் கடைக்கு போயி பட்டை சீல வாங்கியாருணுமே'
' என்ன பெரிய ஆசாரியாரே வேலை சாய்ந்திரம் முடியப்போவுது இப்ப வந்து பட்டை சீல அது இது ண்றீரு'
'இதான் உங்கள் கிட்ட எனக்கு புடிக்காத வெஷயம். நான் என்னா வாயில போட்டு முழங்கிடப்போறனா; வாங்கியாங்க எதா இருந்தா என்ன வேலயானாதும் மிச்சத்தை சொச்சத்தை கெடாவிட்டுப்போறவன். நா வூட்டுக்குப் போவகுள்ள பாத்துகுங்க என்னா மடியில முடிஞ்சகிட்டு போறன்னுட்டு'
''நீங்க கேக்கறது எல்லாம் அப்ப அப்ப நா வாங்கித்தருலயா இப்ப வேல முடியப்போவுதேன்னு கேட்டேன்'
' இங்க உங்க வூட்டுக்கு தச்சு வேல நடக்குது சரக்கு முடிச்சி நா இங்க வச்சிருக்கிறதை நாலு பேரு பாத்தா ஆசாரி தேவுலாம். வாங்குன காசிக்கு வேலயும் நடந்து இருக்குன்னு நெனைக்கணும். வேற என்னா ஒரு வெஷயம் நீயும் நானும் காலமாயிப்போனாலும் நம்ம பேரனுக்கு பேரன் நம்ம தச்சு வேலய பாப்பான் தேவுலாம் வேலன்னு சந்தோஷப்படுவான் தெரிதா சாரு '
'இப்ப என்னா வேணும்'
'பட்டை சீலன்னு கேளு நாலு நறுக்கா ராயல் கடையில கேட்டு வாங்கியாரணும். ராயல்கடை பெரியபாயிக்குதெரியும் வேலாயுதம் காந்தி நகரு ஆசாரின்னு சொல்லுணும் அது .சொல்லுலன்னா காரியம்தான் சுகுரா எப்பிடி ஆவும்'
'பட்டை சீல எதுக்கு'
'ஆரம்பிச்சிட்டீகளே. இப்பதானே இம்மாம் பேசுனேன். ரம்பத்துல கூரம் இல்ல.சுத்தமா போயிட்டுது பட்டை சீல வச்சி சொரண்டியாவணும். வேலன்னா சுத்தமா இருக்குணும்ல'
அவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
முதுகுன்றம் ஜங்க்ஷன் ரோடில் ராயல் ஹார்டு வேர் ஸ்டோர் இருந்தது.பெரிய பாய் கடையில் நான்கைந்து ஆசாரிகள் நின்று கதைப்பேசிக்கொடிருந்தனர். கதை என்றால் கதை இல்லை. இவர்களுக்கு வேலை இல்லாமலா இங்கு நின்று இது பேசிக்கொள்கிறார்கள்.யார் வீட்டிலேனும் தச்சு வேலையில் மும்முரமாக இருப்பார்கள்.இடுக்கில் ராயல் கடைக்கு வந்து ஆசாரிகளுக்குள் விஷயம் பரிமாரிக்கொள்வார்கள்.விஷயம் என்றால் என்ன என்கிற அந்த பரம ரகசியம் எல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்..
'பட்டை சீல நாலு வேணும்'
'ஆசாரி யாரு'
'ஆசாரி யாரா இருந்தா என்னா பாயி'
'உன் நல்லதுக்குதான் சொல்றன்.வாங்கிகினு போயி அங்க முழிக்காம இருக்கணும்ல'
'காந்தி நகர் வேலாயுதம் ஆசாரி'
' அப்பிடிபோடு அருவாளை இண்ணைக்கு மாலையோட வேல முடியுதா'
'ஆமாம் அது எப்படி அந்த சேதி உங்களுக்குத்தெரியும் பாயி'
'இந்தா நாலு பட்டை சீல கொண்டு போயி அந்த ஆசாரிண்ட கொடு எனக்கு என் வேல கெடக்கு' அவன் நூறு ரூபாயை பெரிய பாயிடம் கொடுத்தான். பாக்கி வாங்கிக்கொண்டான்.சைக்கிள் காரியரில் வாங்கிய பட்டை சீலையை பத்திரமாக வைத்துக்கொண்டு அவன் சைக்கிளை மிதித்தான்.
பூதாமுர் வளையும் சாலையில் வண்டியைத்திருப்பினான்.எதிரே தலையில் பத்து தேக்க சட்டங்களைச்சுமந்துகொண்டு ஆசாரி ஒருவர் மெதுவாக தார்ச்சாலையைக்கடந்தார். மணிமுத்தார்ற்றுப்பக்கமாகத்தான் அவர் நெளித்து நெளித்து நடந்துகொண்டிருந்தார்..
'யாரு ஆசாரி போறது'
'ஏன் நாந்தான்'
அவன்வீட்டில் வேலைசெய்துகொண்டிருந்த நான்கு ஆசாரிகளில் ஒரு ஆசாரிதான் அவர்.தாடி வைத்தக்கொண்டிருந்தார்.
'என்ன சட்டம் எல்லாம் எடுத்துகிட்டு போறீங்க் யாருது எவ்ருது என்னா சேதி இது எல்லாம்' சத்தமாகக்கேட்டான்.
'என்னா சாரு இண்ணைக்கு வேல முடியுது.உங்க கெரகபிரவேஷம் இன்னும் வருணும் அதுக்கு ஆசாரிவ நாங்க ஒரு முக்காலி ஒரு விளக்குதண்டு ஒரு மணைப்பலகை இந்த மூணும் புத்சா சேஞ்ஜி தரோணும். எங்க மொறன்னு ஒண்ணு இருக்கு.புள்ளயாரு குந்த முக்காலி காமாட்சி வெளக்கு குந்த அப்படி இல்லைன்னா ரட்சுமி வெளக்கு.குந்த ஒரு வெளக்குதண்டு, ஊட்டுக்குவர்ர வூட்டுக்கு வர்ர அந்த அய்யிரு குந்த மணைப்பலக இதுவ மூணுமில்லன்னா அது அப்புறம் ஒரு வூடாவரது தான் எப்பிடி.நானு அந்த மூணையும் ரட்சணமா செஞ்சி கொண்டாந்து புது வீடு குடி நொழையகுள்ள கூடத்துல வைப்பன்'
அவனுக்குத்தலை சுற்றியது.ஆசாரி எதோ திருடிச்செல்வதாகவும் தான் அதனைக்கண்டு ப்பிடித்து விட்டதாகவும் மனதில் கணக்கு போட்ட அவனுக்கு ஒரு புது செய்தியை இந்த தாடி வைத்த ஆசாரி சொன்னார்.
' நீங்க ராமமா இல்ல பூசையா'
'பூசை' சரியாகத்தான் சொன்னோமா என்று யோசித்தான்.
' சாரு அதுக்குத்தக்கன ரட்சுமி வெளக்கு இல்லன்னா அந்த காமாட்சி வெளக்குக்கு தண்டு நானு செய்யகுள்ள அந்த குறி வைக்கோணும்'.
' சரிசரி ஆவுட்டும்'
அவன் வீடு நோக்கி சைக்கிளை மிதித்தான்.வீட்டில் மூன்று ஆசாரிகள் மட்டும் உட்கார்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்தனர்.
'இந்தாங்க பட்டை சீல'
'அப்பிடி வையுங்க சாரு'
'அவுசரமா வேனும்னு சொன்னீங்களே'
'வேல முடிஞ்சிப்போச்சி. இப்ப என்னாத்துக்கு பட்டை சீல அப்ப்டி வையுங்க'
'என்ன வேல முடிஞ்சிப்போச்சி'
'உங்க வூட்டு ஆசாரி வேலவ முடிஞ்சி போச்சின்னேன்'
'இப்ப வாங்கியாந்தது என்ன செய்ய கொண்டு போயி ராயல் கடையில பெரிய பாயிண்ட நானு குடுத்துடலாமா ஆசாரியாரே'
'ஓ அப்பிடி போவுதா சமாச்சாரம். நல்லா இருக்குது கதை. வேற வேல இருந்தா பாருங்க சாரு'
'இனி பட்டை சீலைக்கு வேலை இல்லதானே'
'சாரு நாங்க எங்க ரம்பத்துக்கு புதுசா கூரம் வச்சாதாம் நாளைக்கு ஒருத்தன் வீட்டுக்கு வேலைக்குப்போவுலாம்.அதுக்கு பட்டை சீல வேணாமா'
'சரி கெடக்கட்டும். இன்னொரு ஆசாரி தாடி வச்சவரு இருந்தாரே அவரு எங்கே'
'வருவாரு. வயிறு செத்த வலிக்குதுன்னு வெளியில போனாரு'
'எப்பிடி வருவாரு இங்க நானு என் கண்ணால பாத்தனே வர்ர வழியில. அது என்னா தேக்க சட்டம் எல்லாம் வாரிகிட்டு போறாரு'
'நீங்க கேட்டதுக்கு தாடிக்காரரு என்னா சொன்னாரு'
' புதுசா விளக்கு தண்டு முக்காலி மணைப்பலகைன்னு செய்து கொண்டாரென்னாரு'
'ரொம்ப மோசம் சாரு நீங்க ஒரு வெஷயத்தை தெரிஞ்சிகிட்டு அப்புறம் எங்கிட்டயும் கேக்குறது என்னா நெயாயம்' ..என்றார் அந்த காந்தி நகர் வேலாயுதம் ஆசாரி.
பாக்கி ரெண்டு ஆசாரிகளும் வெற்றிலை போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் கள்ளமாக பார்த்துக்கொண்டனர்.
'அந்த மூணு ஜாமானும் கெரகபிரவேசத்துக்கு வந்துபுடும்ல ஆசாரியாரே'
'கெடக்கு வுடுங்க அதையே பேசிகிட்டு. நாங்க கிளம்புறம் கோவிந்த ராசு மேஸ்திரி வந்தார்னா சேதி சொல்லுங்க.அவுரு வேல முடிச்சாருன்னா நானு வந்து கதவுவுள எல்லாம் மாட்டி ஆட வுட இங்க வருணும். அந்த வேல பாக்கி கெடக்கு'.
அந்த மூன்று ஆசாரிகளும் அப்போதே கிளம்பிப்போயினர்.கோவிந்தராசு மேஸ்திரி அவர் சொன்னபடி வந்தார் கட்டுவேலை பூச்சு வேலை எல்லாம் முடித்தார்.பின்னே அந்த காந்தி நகர் வேலாயுத ஆசாரி வந்தார் கதவுகளை அங்கங்கு மாட்டி மாட்டி ஆடவிட்டார்.
கிரகப்பிரவேசம் திருநாளும் வந்தது.கோவிந்தராசு மேஸ்திரியும் வேலாயுத ஆசாரியும் வந்தனர். அவன் இரண்டு பேருக்குமே தங்க மோதிரம் வேட்டி சட்டை வாங்கி வைத்துக்கொடுத்தான்.
'என்னா ஆசாரியாரே அந்த முக்காலி,விளக்கு தண்டு.மணைப்பலகை செஞ்சி கொண்டாரென்னு என் தேக்க சட்டத்தை கொண்டுபோன தாடி வச்ச ஆசாரி வருல'
'சாரு படிச்சிருக்கிங்க ஆனா அந்த அளவுக்கு வெசயம்தான் எட்டுல' வேலாயுத ஆசாரி அது மட்டுமே அவனிடம் சொல்லிவிட்டு அந்த காந்தி நகர் நோக்கி ப்புறப்பட்டார்..
--------------------------------------------------------------------------------------------------------------


ி
.

Thursday, June 25, 2015

theravusu -storyதெரவுசு -எஸ்ஸார்சிஅவன் வீட்டுத்தோட்டம் சின்னது அதனில் வேலி ஓரமாக நான்கு தேக்கு மரங்கள் இருந்தன.தருமங்குடிக்கு பக்கமாகத்தான் முதுகுன்றம்.. அந்த முதுகுன்றத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை. அந்த சந்தையில் வாங்கிய தேக்கங்கன்றுகள்தான் அவை.
மஞ்சள் வண்ண தலைப்பாகை கட்டிய சைக்கிள் காரனிடம்.அய்ந்து கன்றுகள் வாங்கினான்.ஈர சாக்கில் சுற்றப்பட்டு சைக்கிள் காரியரில் அவை மொத்தமாக சயனித்து இருந்தன அவன் . வீட்டு த்தோட்டத்தில் வேலி ஓரம் நட்ட அத்தனையும் பிழைத்தன. வளர்ந்தன. வானம் தொட்டன.ஒன்று மட்டும் ஓங்காமல் ந்ரேல் என்று இருந்தது. அப்புறம் கரேல் எனக் காய்ந்து போனது. அதனை ப்பிடுங்கி எறிந்தான்.பிழைத்தவையோ ஓங்கி ஒய்யாரமாக வளர்ந்தன. தேக்க இலைகள் ஒருவர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அகலித்து வெடித்தன. இலைகள் அவனிடம் என்னைப்பார் என் அழகைப்பார் என்றன.
'சார் வூட்ட்ல இருக்குறா'
வீட்டு வாயில் புறம் மோட்டார் சைக்கிளில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்தான் கூப்பிட்டு இருக்க வேண்டும்.
'நீங்க யாரு உங்களுக்கு என்ன வேணும்'
'நான் உங்க வீட்டு மனைக்கு பின் புற மனைக்காரன்.என்னை பாத்து இருக்க மாட்டிங்க.நான் வேல பாக்குறது வடலூர். அங்க பீங்கான் ஆலையில இருக்கேன். இப்ப இங்க என் மனையில ஒரு ஊடு கட்டுலாம்னு ஒரு யோசனையில இருக்கன்'
'உள்ள வாங்களன் வண்டியில இருந்துகிட்டு பேசுணுமா'
' உள்ள வந்து என்ன செய்யப்போறன்.வேலி ஓரமா இருக்குற நாலு தேக்கு மரங்களையும் நீங்க வெட்டி எடுத்துடணும்'
பச்சை மரங்களை வெட்டி எடுப்பது. எப்படி அவன் அதிர்ந்துபோனான்.
'என்னா யோசனை மரங்களை வெட்டி எடுத்துடுங்க. அவ்வளவுதான்.ஒரு பத்து நாளு பாப்பேன். ஒண்ணும் கதை ஆவுலன்னா அப்புறம் நானே வெட்ட வேண்டி வரும். எதுக்கும் வெஷயத்தை சொல்லிபுடணும்.அதான்'
அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தான். என்ன சொல்வது என்றுமே அவனுக்குத்த்தெரியவில்லை.
'அப்புறம் நான் கெளம்புறேன்' அவன் மோட்டார் சைக்கிளைத்திருப்பிக்கொண்டு வேறு பக்கம் போனான்.கூடவந்தனும் அவனோடு தொத்திக்கொண்டான்.
ஒரே குழப்பமாக இருந்தது.அவனுக்கு ஒரு அண்ணன். அவன் சென்னையில் வக்கீல் வேலை பார்த்தான்.அவனிடம் போன் போட்டு விவரம் கேட்கலாம் என்ற யோசனை வந்தது.தோட்டத்து பக்கமாய்ப்போய் ப்பார்த்தான்.நான்கு தேக்க.மரங்கள் நான்கும் கோபித்துக்கொண்ட மாதிரியே தெரிந்தது.'நாங்கள் என்ன பாவம் செய்தோம்.அதற்குள்ளாக எங்களை வெட்ட முடிவு எடுத்துவிட்டீர்கள் நீங்கள்' என்று அம்மரங்கள் அவனிடம் காற்றில் ஆடி ஆடித்தம் குறை சொல்லின..
நான்கு தேக்கு மரங்களையும் தொட்டுப்பார்த்தான்.ஒவ்வொரு மரமும் பதினைந்து அடி உயரத்துக்கு பருத்து உய்ர்ந்திருந்தது.அதற்கு மேலும் அவை உயரம்தான். கட்டாயம் பதினைந்து அடிக்கு உயரம் குறையவே செய்யாது.மரத்தை கைகளால் அணைத்துப்பார்த்தான்.அவற்றின் கனம் அறிந்தான்,எப்படியும் மொத்தமாக அறுபது சதுரத்துக்கு தேறும்.
வக்கீல் அண்ணனுக்கு போன் போட்டான். வக்கீல் அண்ணன் சென்னை தியாகராய நகரில் குடி இருந்தான்.அவனைக்கேட்காமல் அவன் எதுவும் செய்தது இல்லை.கேட்காமல் செய்து விட்டால் பின்னால் அண்ணனிடம் யார் பாட்டு வாங்குவது. கைபேசியை எடுத்து அண்ணனைக்கூப்பிட்டான்.
'அண்ண நானு பேசுறேன். ஒரு சேதி'
'சட்டுனு சொல்லு. உனக்குன்னு எதாவது சேதி இருந்துகிட்டே இருக்கும்'
' என் தோட்டத்துல இருக்குற தேக்க மரங்களை வெட்டுணுமாம் அந்த பின்புற மனகாரரு வூடு கட்டப்போறாராம்'
'அவருக்கு மரங்க இடைஞ்சலா இருக்குதா நீ பாத்தியா'
'பாத்தேன் அப்படி ஒண்ணுமில்லே இருந்தாலும்'
' இப்படியா பேசறது. அந்த மரங்க அவுரு மனைக்கு இடஞ்சலா இல்லையா அது மட்டும் சொல்லு'
'இடஞ்சல் தான்'
'அப்புறம் இதுல என்னா பேசுறது.நாட்டுதேக்கு சதுரம் ஆயிரத்து முந்நூறுன்னு கணக்கு போட்டா நாலும் எத்தனி சதுரம் வருது எம்மாம் காசு வருதுன்னு பாரு. உனக்கு மரம் தேவை கீவை யிருக்கா இல்லன்னா வெட்டு நல்ல வெலைக்கு குடுத்துடு; அப்புறம் வேற'
'வேற ஒண்ணும் இல்லே நான் வச்சிடறேன்' பேசி முடித்தான்.
நேறாகத் தென்கோட்டை வீதி நாடார் மர வாடிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான்.மரவாடி கல்லாவில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.
'என்னா வேணும்'
'தேக்கு மரம் சதுரம் என்ன விலைன்னு தெரிஞ்சிகிணும்'
'ஏன் மரம் வேணுமா இல்லையா அத மொதல்ல சொல்லு சாரு'
'இல்ல வெல தெரியணும்'
'வெலயா அதுவ ப்ர்மா சரக்குன்னா ரூவா ஆயிரத்து ஐநூறு கேரளான்னா இன்னும் நூறு கூட வரும்'
'நமப ஊர் தேக்கு வெல தெரியணும்'
'நாங்க அத எப்பவுமே விக்குறது இல்ல அப்புறம் வேற என்னா வேணும்'
' என் வூட்டுல நாலு தேக்கு மரம் இருக்கு. வெலைக்கு கொடுக்குலாம்னு'
'இது ஆசாரிவகிட்ட பேசுற சமாச்சாரம் மரவாடின்னா இங்க அய்ர்ன் சரக்குதாம் விக்குறம் நாட்டு மரம் எல்லாம் இல்ல'
'அயர்ன் சரக்குன்ன என்னங்க அய்யா'
'நீரு எடத்தைக்காலி செய்யி.மொத நீ கெளம்பு கெளம்பு'
அவன் வீட்டுக்கு உடன் புறப்பட்டு வந்தான். சைக்கிளை உருட்டிக்கொண்டேதான் வந்தான்.ஏறி பெடல் செய்து பார்த்தான். பின் வீல் அடிபட்டது. பின் சக்கர டயரில் காற்று குறைந்து இருந்தது.. சைக்கிள் கடைக்காரன் யாருமே கடை திறந்த பாடில்லை.
அவன் வீட்டு வாசலில் இருவர் நின்று பேசிக்கொண்டே இருந்தனர்.அதை நோட்டமிட்டான்.
'தேக்கு மரம் வெலைக்கு த்ர்ரீங்கன்னாங்க அதான் வந்தம்'
'யாரு சொன்னது'
'ஏன் மரவாடியிலபோயி கேட்டுகிட்டு வந்திங்க அது எங்களுக்கு தெரியும்ல'
' அந்தக்கதை ஏன் பேசிகிட்டு மரத்தை வந்து பாருங்க வாங்க தோட்டத்துக்கு போவுலாம்'
வீட்டுக்கு வந்த இருவரும் தேக்கமரத்தை தட்டி தட்டி பார்த்தனர். 'ரெண்டு மரம் சுகுரா இருக்கு.ரெண்டு மரத்துல சரியா நாதம் வருல.பொற கிற இருக்குலாம்'
என்றான் வந்தவர்களில் மூத்தவன்.
'நல்லா இருக்குறதுக்கு காசு அப்புறம் என்னா'
என்றான் வந்தவர்களில் இளையவன்.
இது கேட்டு அவன் திரு திரு என்று விழித்தான். அவனுக்கு குழப்பமாகவும் இருந்தது.
'இது அதோட பஞ்சாங்கம் எல்லாம் எதுக்கு எம்மாம் காசு கொடுப்பிங்க் அது மட்டும் சொல்லுங்க
'ம் மரத்தை அறுத்து போட்டாதான் சொல்லுலாம்'
' மரத்தை அறுத்துடுவம்' என்றான் இளையவன்.
'மரத்தை அப்புறம் அறுக்கலாம் மொதல்ல காசு எம்மான்னு பேசுவோம்' அவன் சுதாரித்துக்கொண்ட மாதிரி பேசினான்.
'ஏம் வெட்டியா பேசிகிட்டு, நாலு தேக்க மரம் நால்ரெண்டு எட்டு தர்ரம்'
'என்ன எட்டாயிரம்த்ானா பிச்ச காசா இருக்கு. எனக்கு எண்பதாயிரம் வருணும்'
கட கட என சிரித்தான். மூத்தவன்.

'மரத்தை அறுத்துபோட்டு வச்சிகிறேன் வெலய தெரிஞ்சிகிட்டு.அப்புறம் விக்குறது பாக்குலாம்'
'சாரு தேக்கு மரத்தை என்னுமா வெட்டுவ லேசுபட்ட சமாச்சரம் இல்லே.மரத்தை எப்பிடி ஏத்துகினு போவ எந்த மரவாடிகாரன் எப்பிடி அறுப்பான் பாரெஸ்ட் ரெவுன்யு ஆபிசரு டவுனு வியேவோ எல்லாம் எதுக்கு கொழா சட்டை போட்டுகினு குந்தி இருக்குறாங்க உன்னை வுட்டுடுவாங்களா' என்றான் வந்தவர்களில் இளையவன்.
அவனுக்குத்தலை சுற்றியது. இது எல்லாம் உண்மையா சும்மா இவர்கள் விடும் ரீலாக இருக்குமா என யோசித்தான்.
'இந்தா நாலு மரத்துக்கும் நாலு ஆயிரம் அச்சாரம் மேங்கொண்டு இன்னும் பத்து ரூவா தர்ரன் அது மரம் வெட்டகுள்ள குடுப்போம். என்னா எம் பேரு சங்கர ஆசாரி தே இருக்குற கார்குடல்தான் என் ஊரு இந்த பக்கத்துல யாருக்கும் தெரிஞ்ச பெரிய ஆசாரியும் தான் நான் ' என்றான் வந்திருந்த முதியவன்.
பணத்தை வாங்குவதா வேண்டாமா என்று யோசித்தான்.மனம் சலனமானது. உடன் சற்றுபயமாகவும் இருந்தது.அச்சத்தோடு நான்காயிரத்தை வாங்கி சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டான்.
' எண்ணைக்கு வருவிங்க மரம் வெட்ட'
'இண்ணைக்கு என்னா வெசாழனா அடுத்த வெசாழனுக்குள்ள சொச்ச காசு குடுத்துட்டு மரத்தை எடுத்துகுறம்.மரம் உள்ளார பொறன்னா எங்களுக்கு நஸ்டம்தான் என்னா செய்வ வெயாபாரம்னா வரும் போவும் அத பாக்குலாமா சாரு. மரம் பத்திரம் நாங்க வர்ரம்'
முதியவன் வாசலுக்கு வந்தான். இருவரும் அங்கிருந்து கிளம்பிப்போயினர.
அவன் பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்துவிட்டமாதிரி நினைத்தான்.அடுத்த வியாழன் வந்தது. இன்னும் அடுதத வியாழன் வந்தது. நாட்கள் ஓடின.தோட்டத்து மனைக்காரன் வந்தால் என்ன பதில் சொல்லுவது.அவனே மரங்களை வெட்டிக்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்பானோ என்று யோசித்தான்.
'சாரு சாரு'
'யாரது சாரு பூருன்னுகிட்டு' மெதுவாகத்தான் சொல்லிக்கொண்டான்.
'ரெண்டு நாளா என்னா ஒரே ரோசனையில இருக்க்றீீங்க என்னா சேதி' எதிர்வீட்டு பால்கடைக்காரன் ஆரம்பித்தான்.
'இல்ல தோட்டத்து மனையில வூடு கட்டப்போறாங்களாம். தேக்க மரம் வெட்டுணும்னு சொன்னாங்க. அச்சாரம் நாலாயிரம் வாங்கிப்புட்டேன். அந்த பாழாபோன ஆளுவ இன்னும் வருல நாளு இருவது ஆச்சி வந்து மரத்தை இன்னும் வெட்டுல'
'இப்ப என்ன அதுக்கு . நாளும் ஆயிபோச்சி இருவதுக்கு மேல நீவருல தோட்டத்து மனைக்காரன் என்னமுடுக்குறான். என்னா செய்வேன்னு சொல்லுறது. இப்ப இப்ப .எனக்கு ஒரு யோசனை அந்த பாக்கி பத்தாயிரம் நா தர்ரேன்.மரத்தை வெட்டிகுறன். எனக்கும் மரம் தேவை இருக்குது. கெடக்கட்டுமேன்னு இருந்தேன். நேரம் காலம் கூடி வருதே என்னா நான் சொல்றது'
'ரொம்ப நல்லது சாரு அந்த அச்சார பனம் நாலாயிரம் எங்கிட்ட இருக்குது. நானு என்ன செய்ய'
'அந்த நாயிவ வரும் வருட்டும். நா பாத்துகுறன். ஏங்கிக்க்ட்ட அந்த நாயை இட்ட்ாங்க உங்களுக்கு இதுல என்னா சோலி இருக்கு நா பாத்துக மாட்டனா பின்ன'
அவனுக்கு மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பழமலை நாதக்கடவுள் மட்டும் சும்மாயில்லை. அவரும் ஏதோ முடிந்தவரை உதவி செய்கிறார். மனத்திற்குள் பழமலை என்று சொல்லிக்கொண்டான்.
அவனுக்கு எப்படியோ ஒரு பதிநான்காயிரம் கைக்கு வந்து சேர்ந்துவிட்டதில் மகிழ்ச்சி.தேக்க மரங்களை வெட்டி எதிர் வீட்டு பால் கடைக்காரனே எடுத்துப்போனான்.
தோட்டத்து மனைக்காரன் கடைக்கால் பறிக்க வருவான் வருவான் என்று அவன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான்.தேக்க மரம் வெட்டி அவனுக்கு ஒத்தாசை செய்துவிட்டதைச்சொல்லி விடலாம் என்று தினம் தினம் யோசனையில் இருந்தான்.
ஒரு நாள் தோட்டத்துபக்கம் குல்லாவைத்த ஒரு பாய் ஏதோ சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்.
'அய்யா யாரு' அவன் கேட்டான்.
'என்னா சாரு என்ன மறந்துட்டிங்க.நானும் நீங்களும் ஒண்ணாதான் மனைவாங்குனம்.அந்த வள்ளல் முதலிகிட்ட.நானு துபாயி போயி ஆச்சி பத்து வருஷம் இருக்கும். நேத்துதான் ஊருக்குத் திரும்பி வந்தன்.நீங்க தோட்டத்துல தேக்கங்கண்ணு வச்சது கூடம் எனக்கு தெரியும்.அதுவுளயும் காணும் வெட்டிட்டிங்களா'
''இப்பதான் வெலைக்கு குடுத்தேன்.தோட்டத்துல தேக்க மரம் இருந்தா குடும்பத்துக்கு ஆவாதுன்னு எங்க ஊரு அய்யிரு வேற ஓயாம சொன்னாரு'
தேக்க மரத்தை எல்லாம் வெட்டச்சொன்னதும் ஆசாரியாக வந்து மரம் வெட்டிக்கொள்ள அச்சாரம் தந்ததும் அவன் எதிர்வீட்டு பால்கடைக்காரன் போட்ட நாடகம் என்று அவனுக்கு மண்டையில் உரைத்தது.
அவன் தோட்டத்தைவிட்டு த்தெரு பக்கம் வந்தான். பூணல் போட்டுக்கொண்ட புது ப்புது ஆசாரிகள் எதிர்வீட்டின் முன் கிடந்த தேக்க மரங்களை அளந்து அளந்து சாக் பீசாலும் கரிக்கட்டியாலும் வருவி கோடு போட்டுக்கொண்டிருந்தனர். 'நம்ம தெரவுசு யாருக்கு வரும்' என்று சொல்லி வாயிற்கதவை மட்டும் தாழிட்டு ப்படுத்து உறங்கிப்போனான்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
..
'

Saturday, June 20, 2015

manjal -story
மஞ்சள் -எஸ்ஸார்சி
தருமங்குடிக்கு நடு நாயகாமக இருந்தது ஒரு நந்தவனம்.அந்த நந்த வனத்திலிருந்து பறித்து எடுத்த மலர்களை மாலையாத்தொடுத்து தருமை நாதன் கோவிலுக்கு த்தானே தன் கையால் பின்னிய தென்னங்குடலையில் சுமந்து வருவார் அந்த கொட்டை கட்டி வாத்தியார். கழுத்தில் ஒரே ஒரு உருத்திராட்ச மணியை சிவப்புக்கயற்றில் கோர்த்துத்தன் கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தார் அவரை க்கோவில் வாத்தியார் கொட்டை கட்டி வாத்தியார் மாலைகட்டி வாத்தியார் இன்னும் ஏதோ பெயர் வைத்து தருமங்குடிக்காரர்கள் பாசமாக அழைத்தார்கள். வாத்தியார் என்பது மட்டும் வருமொழியில் இருத்தல் அவசியம்.நந்தவனத்தைச்சுற்றி தென்னை மரங்களை வளர்த்து ஆளாக்கி விட்டிருந்தனர் தருமங்குடிப்பெரியவர்கள். யாழப்பாண வகை தென்னை மரங்கள் சிலவும் நடு நடுவே இருந்தன.
.தருமங்குடி வெள்ளாழத்தெரு நீண்ட தெரு. இரட்டை சாரியும் வீடுகள்.சைவப்பிள்ளைகள் சிவ பூஜையும் திருமுறையோடு வெங்கல தாளமும் கை கொண்டு அவர்கள் ஊரை வலம் வந்த காலம் ஒன்று இருந்தது.அக்கிரகாரத்து பார்ப்னர்களின் வேத சாத்திர ஆகம சந்தேகங்களுக்குப்பதில் சொல்லி வழி காட்டுபவர்களாய் இருந்த பெரியவர்களுமே அந்த வெள்ளாழத்தெருவில் வசித்து வந்தார்கள். பார்ப்பனக்குடும்பங்களுக்குள் எழும் உள் நாட்டுப் பிரச்சனைகள் பலவற்றிற்கும் தீர்ப்பு சொல்பவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.அப்படிச்சொல்லப்படும் அந்த தீர்ப்புக்கள் வேத வாக்காக தருமங்குடி வாழ் பார்ப்பனர்களால் ஏற்கப்பட்டன.
ராமுவோடு சந்துருவும் சிவராமனும் பாலுவும் தருமங்குடி ச்சிறுவர்கள். ஐந்தாம் வகுப்பு. கிராம பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் பயின்றனர். தருமை நாதனின் கோவில் நந்தவனம் சுற்றி இந்த ப்பையன்களின் வீடுகள் இவர்களில் ராமுவோடு சந்துரு அக்கிரகாரத்து அம்பிகள்.மற்றவர்களுக்கு இருப்பிடம் அந்த வெள்ளாழத்தெரு.சிவராமனும் பாலுவும் கொஞ்சம் தைர்யசாலிகளாக இருந்தார்கள்.
அக்கிரகாரத்து சந்துருவுக்கு அசாத்திய துணிச்சலுண்டு.பாம்பை க்கையில் பிடித்துக்கொன்டு பாம்பு பார் பார் என்று கூவியபடி தட்டாமாலை சுற்றுவான்.கல் வீசினான் என்றால் எவ்வளவு உயர தென்னை மரம் இல்லை அது மாமரமானால்தான் என்ன காய்கள் அவன் எறிந்த கல் அவைமேல் பட்டதும் கீழே வந்து அவன் சொன்னது கேட்கும். அக்கிரகாரத்தில் இப்ப்டி எல்லாம்கூட பையன்கள் இருப்பார்களா என்ன இந்த சந்துரு மட்டும் அப்படி வித்தியாசமாக இருந்தான்.அவன்தான் பெரிய சைக்கிளை இரண்டாம் வகுப்பிலேயே பழகிக்கொண்டவன்.இரண்டு கைகளையும் ஹாண்டில்பாரைவிட்டு எடுத்துவிட்டு சைக்கிளை அவன் நெடுந்தூரம் ஓட்டிக்கொண்டுவருவதை ஊர் சனங்கள்அச்சத்தோடு பார்ப்பார்கள். தருமங்குடியில் எந்த கிணற்றிலும் இறங்குவான். வாளியைக்குடத்தை கிணற்றில் போட்டுவிட்டவர்கள் அவன் பின்னே சுற்றி சுற்றி வருவார்கள். காதில் ஒரு முறை அவனுக்கு சீழ் வந்ததது. ஆக பிளாஸ்டிக் பேப்பர் பையினால் தலையை மூடி இறுக்கிகட்டிக்கொண்டான். தருமைநாதன் கோவில் கிணற்றில் குதித்து குருக்களுக்கு அபிஷேக்குடத்தை எடுத்துக்கொடுத்தான்.தண்ணீரில் மூழ்கி குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் மட்டத்திலிருந்து வெளி வந்துவிட்டபின்னரும் அவன் தலையில் கட்டியிருந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுக்க முடியாமல் மூச்சுத்திணறினான். உயிரே போயிருக்க வேண்டிய கட்டம். எப்படியோ சமாளித்துக்கொண்டு பிழைத்து எழுந்தான். கிணற்றின் கரையில் நின்றிருந்த கோவில் குருக்கள் சாமா துடி துடித்துப்போனார் அந்த .தருமாம்பாள்தான் அவனைக்காப்பாற்றிவிட்டதாக அவனிடம் சொன்னார்.சாமா குருக்களுக்கு அவனிடத்தில் எத்தனையோ பிரியம். எல்லா கோவில் விசேஷங்களுக்கும் அவனைக்கட்டாயம் அழைத்துச்செல்வார்.
ராமுதான் அவன் நண்பர்கள் குழாத்திலேயே பயந்தாகொள்ளி.எதற்கெடுத்தாலும் ராமுவுக்கு அச்சம்.அவனும் தென்னைமரம் ஏற கற்றுக்கொண்டான்.. வாடகை சைக்கிள் கொண்டு வந்து பௌர்ணமி இரவு முச்சூடும் பழகினான். பட்டினத்தான் வாய்க்காலில் நீச்சல் அடிக்க மட்டும் அவனுக்கு ஏனோ நண்பர்க்ள் கொஞ்சம் தாமதமாக சொல்லிகொடுத்தனர்.
தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில். இறங்கினால் முதலில் ஒரு மணிப்பிள்ளை மோட்டார் கொட்டகை வரும். பேருந்து நிறுத்தம் எதிரே நெட்டை நாராயணன் மகன் வேலாயுதம் டீக்கடை போட்டிருந்தான்.தருமங்குடி செல்லும் கப்பி சாலையில் நடந்தால் தருமங்குடி சுடுகாடு தான் முதலில் கண்ணில் படும். ஏன் இப்படி என்று எல்லோரும் கேட்டுக்கொள்வார்கள். விடைதான் யாருக்கும் தெரியவில்லை. சுடலை தாண்டி பட்டினத்தான் வாய்க்காலுக்குப்.பிறகு பிள்ளையார்கோவில். மேற்கு நோக்கிய பிள்ளையார் கோவில்.இந்த சுற்றுப்பட்டில் என்ன தமிழகம் முழுவதும் தேடினாலும் மேற்கு பார்த்த பிள்ளையார் கோவிலை பார்க்கமுடியுமா என்றால் முடியாதுதான். அதுவும் நாகத்தை இடுப்பில் சுற்றிக்கொண்ட விநாயகர் சிலை.
. ராமுவுக்கு தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி த்தனியாக இரவில் ஊர் உள் வர அச்சம்.வழியில் தருமங்குடி சுடுகாடு வரும்.அங்கு பேய்கள் நடமாடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் அவனிடம் சொல்லி இருக்கிறார்களே.அவன் அம்மாதான் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என தோத்திரம் சொல்லிக்கொண்டு சுடுகாட்டை க்கடக்க அவனுக்குச்சொல்லிக்கொடுத்திருந்தாள்.எது சொன்னால் என்ன பயம் மட்டும் போக மாட்டேன் என்றுதான் அடம் பிடித்தது. தீப்பெட்டி ஒன்றை பாக்கெட்டில் வாங்கிப்போட்டுக்கொண்டு இரவில் நடப்பான்.எடை குறைவு விலை குறைவு வெட்டும் புலி தீப்பெட்டி மட்டும்தான். கையில் தீப்பெட்டி இருந்தால் பிசாசுகள் விலகிப்போகும் அவன் அம்மா சொன்னதுதான். சட்டைப் பையில் தீப்பெட்டி இருந்ததற்காக அவன் சிகரெட் பிடிக்கக்கூடும் என்று ஊகித்த வகுப்பு ஆசிரியரிடம் செமத்தையாய் அடி வாங்கியிருக்கிறான்.
சந்துருவும் பாலுவும் சிவராமனும் சேர்ந்து நந்தவனத்தில் யாழ்ப்பாண இள நீர் க்காய்கள் பறித்து சாப்பிட்டால் என்ன என முடிவு செய்தனர். கோவிலார்தான் நந்தவனப்பொறுப்பாளி.கோவிலார் என்றால் அவரும் வெள்ளாழத்தெருவில்தான் பெரிய வீட்டில் இருக்கிறார். இருந்தாலும் அவரைப்பார்க்க எல்லோருக்கும் பயமாக இருக்கிறதே பின் என்ன செய்வது.ஆகத்தான் நந்தவனத்திலுள்ள யாழ்ப்பாண தென்னை மரத்தில்.ஏறித்தேங்காய் இள நீர்க்காயாக பறித்து விடுவது என முடிவு செய்தார்கள். சந்துரு மரத்தில் ஏறுவது பாலுவும் சிவராமனும் இள நீர்க்காய்களை ப்பொறுக்கி எடுத்துக்கொண்டுபோய் நந்தவனத்தில் கீழ்ப்பகுதியிலுள்ள சிங்கபூர்கனக்கம்பரச் செடிகளுக்கு இடையில் பத்திரமாக பதுங்கவைப்பது என முடிவாகியது. வேறு ஒரு விஷயம் பிறகுதான் நினைவுக்கு வந்தது.வெள்ளாழத்தெருவில் பகல் ஒரு மணி முதல் நான்கு வரை யாரும் வெளியில் வரமாட்டார்கள்தான். ஆனால் தென்னை மரத்திலிருந்து தொப் தொப் என்று காய்களைப் பறித்துப்போட்டால் .சத்தம் வரும் அது அவர்களை எழுப்பிவிட்டுவிட்டால் என்ன செய்வது.ஆக தேங்காய் பறித்து அதனை முதுகில்கட்டிக்கொண்டுபோகும் பை ஒன்றில் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர்தான் சந்துரு மரத்திலிருந்து கீழே இறங்க வேண்டும். சிவராமன் இந்த யோசனைசொன்னான்.
தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை வேறு யார்கண்ணிலும் படாமல் இந்தத் திருட்டுக் காரியம் கச்சிதமாக நடை பெறுகிறதா என்பதைக்கண்காணிக்க ஒருவன் அவசியம் வேண்டுமே இப்படி பாலு ஒரு குறுக்குசால் ஓட்டினான்.சந்துரு தான் பஞ்சாங்க அய்யர் பிள்ளை ராமு பையனை அந்த ரகசிய வேலைக்கு அழைத்து வருவதாக உறுதி சொன்னான்.சிவராமனுக்கும் பாலுவுக்கும் ராமுவின் மேல் நம்பிக்கை இல்லை.'அவன் சுத்தமா த்கிர்யம் இல்லாத பயல். இந்த காரியம் எல்லாம்போய் அந்தப் பய செய்வானாம்' சிவராமன் கிண்டல் செய்தான்.'திருட்டு செய்றோம்னாலும் அதுக்கு ஒரு காவலு இல்லாம கதை ஆவாது' என்றான் மீண்டும் பாலு.சந்துருதான் எப்படியோ பேசி ராமுவை அழைத்து வந்து விடுவதாக உறுதி சொன்னான்.
மறு நாள் தருமங்குடி நந்தவனத்தில் யாழ்ப்பாண இள நீர் பறிக்கும் திருட்டு வேலை திட்டமிட்டபடி நடந்தது.ராமு காவல் காக்கும் வேலைக்கு வந்தான். 'வெள்ளாழத்தெருவுல யாராவது வருவது தெரிந்தால் நீ உன் வீட்டு நாயை அழைப்பத்போலே' ட்ரோதா ட்ரோதா' என்று மட்டும் குரல் கொடு அது போதும் என்றான் சந்துரு அவனிடம்.
நால்வருக்கும் நான்கு இள நீர் க்காய்கள் பறிக்க முடிவாகியது. சந்துரு சொன்னபடி தன் முதுகில் கட்டிக்கொண்ட யூரியா பையினுள் காய்களை போட்டுக்கொண்டு மரத்திலிருந்து இறங்கினான்..ஆளுக்கு ஒரு இள நீர்க்காய் என சந்துருவும் பாலுவும் தூக்கிக்கொண்டு நந்தவனத்துக்கள் போயினர். 'ராமு உன் காய் கீழ இருக்கு எடுத்துகிட்டு பின்னாலேயே வா' சிவராமன் கட்டளை தந்தான்.ராமு பைய நடந்து தென்னை மரத்துக்குக்கீழாகப்போனான்.அவர்கள் மூவரும் சிங்கப்பூர் கனகாம்பரப்புதருக்குள் சென்று அமர்ந்து கொண்டனர். ராமு இள நீர்க்காயை கையில் எடுக்கும் சமயம் கொட்டை கட்டி வாத்தியார் நந்தவனம் எதிர்பக்கமுள்ள திருக்குளத்திலிருந்து திரும்பி அங்கே வந்து நின்றார்.
'ஏண்டா உனக்கு இந்த வேலை ராமு இந்த வேகாத வெயில்ல தேங்கா அடிக்க கெளம்பிட்ட' கொட்டை கட்டி கத்த ஆரம்பித்தார். அவன் ஒன்றும் சொல்ல முடியாமல் திரு திரு என்று விழித்தான். கனகாம்பரப்புதருக்குள் இருந்து ஒன்றும் குரல் வரவேயில்லை. ராமு அவ்விடம் பார்ப்பதை நிறுத்திக்கொண்டான்.கோவிலார் வீட்டிற்கு கொட்டை கட்டி ராமுவை தர தர என்று இழுத்துக்கொண்டு போனார். திண்ணைக்கு வந்த கோவிலாரிடம் கொட்டைகட்டி வாத்தியார் சேதி சொன்னார். ராமு தரையைதான் பார்த்துக்கொண்டிருந்தான்.' பாப்பார புள்ள நீ என்னா காரியம் செய்யுற போடா இனிமே இந்த மாதிரி ஈன காரியம் எல்லாம் செய்யாத தெரிதா காதைப்புடி அஞ்சி தோப்புக்கரணம் போடு அப்புறம் கெளம்பு' என்றார் கோவிலார். தோப்புக்கரணம் காதைப்பிடித்துக்கொண்டு போட்டு முடித்தான் ராமு.
கொட்டைகட்டி கொண்டுபோன இள நீர்க்காயை வெட்டி கோவிலாருக்கு ஒரு கிளாசில் நிறைத்துக்கொடுத்து தன் ராஜ விசுவாசத்தைக்காட்டி முடித்தார்.இள நீர் மட்டையில் இருந்த வழுக்கையை கொட்டைகட்டியே எடுத்துக்கொள்ள கோவிலார் உத்த்ரவு போட்டார்.ராமு கண்கள் சிவக்க தன் வீடு திரும்பினான்.சிவராமன் பாலு சந்துரு மூவரும் அரசமரத்தடியில் ஜில்லி விலையாடிக்கொண்டிருந்தார்கள்.
'திருட்டு இள் நியை வூட்டுக்கொண்டு போயிட்ட என்னா பைய நீ' சிவராமன் ராமுவைப்பார்த்துக்கத்தினான்.
'மஞ்சக்கொல்லையார் கடையில தேங்காய கொண்டு போட்டு காசு வாங்கி முடிஞ்சிருப்பான்' பாலு தன் பங்குகுக்கு சொன்னான்.
'உன்ன இந்த வேலைக்கு கூட்டிகினு வந்தன் பாரு நான்' சந்துரு சொல்லி முடித்தான்..
ராமு அவர்களை ப்பார்க்கவே இல்லை. தன் வீட்டிற்குள் நுழைந்தான்.அப்பாவும் அம்மாவும் தயாராக நின்றுகொன்டிருந்தனர்.
'ஏண்டா உனக்கு இண்ணைக்கு தருமங்குடி ஸ்கூல்ல இருந்து ரெகார்ட் ஷீட் வாங்கிண்டு போயி.வளயமாதேவி ஸ்கூல்ல சேர்க்கணும். கையில சுத்தமா காசு இல்லே.அம்மா பத்து தேங்காய பொறுக்கி வச்சிருக்கா.அப்படியே வாழைக்கா பத்து இருக்கு.இந்த கூடய தூக்கிகோ.ஸ்கூலுக்கு போகலாம் வா வா' சொல்லிய அவன் அப்பாவிடம்
'கூடைய நீங்க எடுத்துகோங்கோ' அவன் அம்மா குரல் தாழ்த்திச் சொன்னாள்.
.ராமுவின் அம்மா அவன் தலைவாரி நெற்றிக்கு விபூதி இட்டுவிட்டு'கெளம்பு கெளம்பு ஸ்கூல்ல உன் ரெகார்ட் ஷீட் மட்டும் வாங்காம கெடக்காம் சந்துரு சிவராமன் பாலு இவா எல்லாரும் வாங்கிண்டு போயி அந்த வளயமாதேவி கோதண்டராமன் ஸ்கூல்ல சேத்துட்டா கையில காசு இல்லே அதனாலே பஞ்சாகங்கத்துல ஜனங்க அப்பாக்கு தானமா வச்சி குடுத்ததுல நல்லத பொறுக்கி இந்த கூடையில வச்சிருக்கேன்.
எடுத்துண்டு போயி சாத்தபாடிலேந்து பெரிய குட புடிச்சிண்டுண்டு நடந்து வர்ர அந்த பழனி வாத்தியாருண்ட கொடுத்துட்டு நமஸ்காரம் பண்னு உன் ரிக்கார்ட் ஷீட்ட கேளு' அம்மா சொல்லி முடித்தாள்.
அப்பா கூடையை எடுத்துக்கொண்டு நடக்க ராமு பின்னால் நடந்தான்.வெள்ளாழத்தெரு வழியாக ப்போய்த்தான் இடது பக்கம் திரும்பினால் நாகமணிந்த விநாயகர் கொவிலுக்கு எதிரே அந்த பள்ளிக்கூடம்.
வெள்ளாழத்தெரு நடு நாயகமாக இருந்த கோவிலார் வீட்டு வாசலில் கொட்டை கட்டி நின்று கொண்டிருக்க கோவிலார் திண்ணைமீது அமர்ந்திருந்தார்.
'என்ன அய்யரே கூடையில என்ன. உம் வீட்டுக்கு எப்பவும் கூடயில வரும் இப்ப போவுது'
''பையனுக்கு ரிகார்ட் ஷீட் வாங்கணும். வளயமாதேவி ஸ்கூல்ல சேர்க்கணும் கையில அஞ்சி பத்து இல்லே .கூடையில தேங்காயும் வாழைக்காயுமா பொறுக்கி எடுத்துண்டு இருக்கேன். இத எல்லாம் எடுத்துண்டு அந்த சாத்தப்பாடி பழனி வாத்தியார் சாட்சாத் அந்தப் பழநி முருகனா இருந்து மனசு வக்கணும். எனக்கு ரிகார்ட் ஷீட் கொடுக்கணும்'
'கூடய காட்டும்' கோவிலார் கட்டளையிட்டார்.
அப்பா கூடையைப்பிள்ளையிடம் காண்பித்தார்.சின்னதும் பெரிசுமாக அங்கங்கே மஞ்சளைப் பூசிக்கொண்டு தானத்தில் வந்த தேங்காய்கள் உள்ளே பத்திரமாக இருந்தன. ராமுவின் அப்பாதான் தருமங்குடி ஜனங்கள் வீட்டில் காரியம் செய்யும் போது தேங்காய்களில் அந்த மஞ்சளைப்பூசி இருக்கவும் வேண்டும்.வாழைக்காய்கள் மட்டும் கூடை ஓரமாக சயனித்துக்கிடந்தன.
'யாழ்ப்பாணக்காயுவ எதாவது உண்டான்னு பாத்தேன்'
' பிள்ளைவாளுக்கு தெரியாதா யாழ்ப்பாண காயுங்களை பிராம்ணனுக்கு யாராவது தானமா கொடுப்பாளா என்ன'
' இல்லே ' என்று சொல்லிய பிள்ளை ராமுவை முறைத்துப்பார்த்தார்.அவன் வெள்ளாழத்தெருவின் புழுதிகூடிய தரையை மட்டும் பார்த்துக்கொண்டான்.
' நான் ஸ்கூலுக்குப்போறன் அவன் தலை எழுத்தாவது இந்த தர்ப புல்லையும் மாங்கொத்துமா தூக்கிண்டு வீட்டுக்கு வீடு பல்ல காட்டிண்டு நிக்காம இருக்கணும். தருமாம்பா கண்ண திறந்து பாக்கணும்' சொல்லிய ராமுவின் அப்பா தேங்காய்க் கூடையோடு நடந்தார்.அவன் அப்பாவோடு கை யைபிடித்துகொண்டு பின்னே போனான்.
----------------------------------------------------.

Thursday, June 11, 2015

vizippu -story
விழிப்பு -எஸ்ஸார்சி
'விழிப்பு' என்கிற புதினத்தை நான் எழுதி முடித்தேன். என் எழுத்துக்களை எப்போதும் வெளியிடும் அதே தருமங்குடி பானுசந்திரன் பதிப்பகம்தான் அதனையும் வெளியிட்டது.பானுசந்திரன் பதிப்பகம் எங்கே அந்த பதிப்பகத்தின் உரிமையாளர் யார் என்று யாரும் தேடிப்போய்விட வேண்டாம்.அப்படியாருமே எங்கும் இல்லை.பானுமதியில் முதலில் இருக்கும் பானுவையும் ராமசந்திரனில் கடைசியில் இருக்கும் சந்திரனையும் எடுத்துக்கொண்டு பானு சந்திரன் பதிப்பகம் என்று எனது பதிப்பகத்திற்குப் பெயர் வைக்க என் நண்பர் சபாதான் யோசனை சொன்னவர்
.காசே செலவில்லாமல் ஒருவன் தன் மனைவியைக்கொஞ்சம் மகிழவும் செய்துவிடலாம். அதில் அவருடைய நண்பனாகிய எனக்கும் சில சவுகரியங்கள் ஏற்படலாம். சபாசார் இதனை எல்லாம் நினைத்துக்கொண்டுதான் இப்படிச்சொல்லியிய்ருக்கவேண்டும். அந்த யுக்தியும் கொஞ்சம் வேலை செய்தது இல்லை என்று சொல்லிவிடமுடியாது. எனது கவிதை த்தொகுப்பு 'ரணம் சுமந்து' நானே சொந்தமாய் அதனை வெளியிட்டபோது என் மனைவி தனது இரண்டு வளையல்களைக் கழட்டிக்கொடுத்து உதவி செய்தாள்.
சபா சாரும் சாதாரண ஆளா என்ன பெரிய மனிதர் பிரபல பத்திரிகைகளில் எல்லாம் எழுதி எழுதி பெரிய ஜாம்பவான் என்கிறபடிக்குப் பெயர் வாங்கியிருக்கிறார். அவர் எனக்குச்சொன்ன யோசனை வீண்போகவில்லை.
மனைவியரின் பெயரை ஒரு எழுத்தாளன் தான் தொடங்க இருக்கிற பதிப்பகத்துக்கு வைத்து விடுவதானாலேயே எல்லாம் ஆ ஊ என்று எகிறிக்குதித்து மனம் மகிழ்ழ்ழ்ந்து போகிற சிறிய அல்லது பெரிய மனசுக்காரர்கள் யாராவது எங்கேயாவது உண்டா என்ன.இப்படி போட்டச்சின்னக் கணக்கு ஒரு காலத்தில் என்னிடம் இருந்ததுண்டு. புத்தகத்தை படிக்க கையில் எடுத்தவுடன் 'கொஞ்சம் கடைக்கு ப்போய்வரணும்' சொல்லாமல் இருந்தால் அதுவே பெரிய பெரிய ஒத்தாசை.
என் அம்மா பெயர் மீனாட்சி ஆக மீனாட்சி பதிப்பகம் என்று பெயர் வைக்கலாமென்று எல்லாம் அடி மனதில் நான் யோசனையில் இருந்தேன். சபாவிடமும் இது விஷயம் சொன்னேன்.' ஏதும் தெரிஞ்சிதான் யோசன பண்றீீங்களா' அவர் என்னைக்கடிந்துகொண்டார்.'இன்னும் யாரிடமும் இது பற்றி நான் சொல்லவில்லை உங்களிடம் மட்டும்தான் சொல்லி இருக்கிறேன்' நான் அவரிடம் மெதுவாகச் சொன்னேன்.' நல்ல காலம் எங்காவது ஒளறி கிளறி கொட்டிடாதிங்க' என்று எச்சரிக்கை வேறு தந்தார்.நான் இப்படி எல்லாம் நாக்கைப்பிடிங்கிக்கொண்டு பதிப்பகம் வைத்து ஏன் புத்தகம் போட வேண்டும் என்று கேள்வி உங்களுக்குள் எழலாம். எழவேண்டும். அதுவே சரி.
உங்களுக்கும் தெரிய்ம்தானே ஒருவரின் எழுத்துப்படைப்பில் ஆகச்சிறந்தது கவிதையாம். அது எழுதிப்பார்த்தால் அப்புறம் தெரியும் எந்த பதிப்பகத்தாரும் கவிதைகளைத் தொட்டுக்கூடப்பார்க்கமாட்டார்கள்.'யாரு சாரு இந்த காலத்துல கவிதையை எல்லாம் படிக்குறா. வேற என்ன உங்க கிட்ட இருக்கு' என்பார்கள்.நம்மிடம் இல்லாத ஒன்றை எப்படியோ தெரிந்து கொண்டு அது மட்டுமே இப்போது போணியாகிறது என்பார்கள்.ஆக பதிப்பகத்தாரிடம் போய் நின்று நின்று மொத்துக்கள் பல வாங்கி முடியாமல் போகவே நான் சொந்தமாகவே பதிப்பகம் வைத்து புத்தகம் போட்டுவிடுவது என்கிற ஒரு முடிவுக்கு வந்தேன்.
நல்ல முடிவோ இல்லை கெட்ட முடிவோ. சொந்தமாய்ப்பதிப்பகம் வைப்பது என்றால் ஒன்றும் பெரிய விஷயமில்லை. டபக் என்று குத்தினால் உங்கள் விலாசம் பேப்பரில் விழும் ஒரு ரப்பர்ஸ்டாம்பும் சாணி க்கலரில் ஒரு லெட்டர் பேடும் கைவசம் வந்து விட்டால் நீங்கள் பதிப்பாளர்தான். ஒரு மேசை நாற்காலி கூட எதற்கு?.தெருவுக்கு வரும் தபால்காரனிடம் பதிப்பகம் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். அப்படிச்சொல்லிவைிக்காவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.
தருமங்குடிக்கு அருகிலே உள்ள நகரம்தான் சமுத்திரகுப்பம்.மாவட்டத்தின் தலை நகரம் அது. சமுத்திரகுப்பத்துக்காரர்களில் இலக்கிய ப்பரிச்சியமுடைய அனேகமாக முன் பக்கமாவது கொஞ்சம் நரைத்துவிட்ட தலைமுடிக்காரர்கள் சிலர்கூடி ஒரு இலக்கிய அமைப்பு ஒன்றை நடத்திவந்தார்கள். 'நெய்தல்' என்பது அந்த இலக்கிய அமைப்பின் திரு நாமம் ஊர் சமுத்திரகுப்பம் என்பதால் நெய்தல் என்னும் பெயர் ஆகச்சரி என முடிவுக்கு வந்தார்கள்.அந்த அமைப்பில் நான் எழுதிய விழிப்பு புதினத்துக்கு ஒரு விமரிசனக்கூட்டம் நடத்துவதாக முடிவாகி எனக்கு அழைப்பு வந்தது.நானும் சட்டைக்கு எல்லாம் இஸ்திரிபோட்டுக்கொண்டு புறப்பட்டேன்.ரெண்டு தினங்கள் முன்பாகவே தருமங்குடி நாகலிங்கத்திடம் தலையைக்காட்டி முடி திருத்திக்கொண்டேன்.நாகலிங்கம்தான் எங்களூர் தருமங்குடியில் பரம்பரை நாவிதன்.
இலக்கியக்கூட்ட அழைப்பின் படி என் புதினத்தை விமரிசனம் செய்ய 'பொழிதல்' என்னும் இலக்கிய அமைப்பின் செயலாளர் ஜடாதரன் ஜம்புநாதனைப்போட்டிருந்தார்கள்.பொழில் இலக்கிய அமைப்பும் சமுத்திரகுப்பத்தில்தான் இயங்கி வந்தது. வாட்ட சாட்டமான ஜ்.ஜம்பு நாதனை அடியேனுக்குத்தெரியும்.அவர் கவிஞ்ராக அறியப்பட்டவர்.எந்தக்கவிதை வேண்டுமானாலும் எப்போது வந்து கேட்டாலும் எத்தனை நீளத்துக்கு நீங்கள் வேண்டும் என்றாலும் அவரிடம் நிச்சயம் கிடைக்கும்.இது இந்தப் பக்கத்தில் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.தெரியாத ரகசியங்கள் பலது இருக்கலாம்.அது பற்றி எல்லாம் நமக்கு.வியாஜ்ஜியம் எதுவும் இல்லை.
தமிழ்த்தாய்வாழ்த்து முடிந்து இலக்கியக் கூட்டம் ஆரம்பமாகியது.நெய்தல் அமைப்பின் தலைவர் நடு நாயகமாய் அமர நானும் ஜ்.ஜம்பு நாதனும் பக்கத்திற்கு ஒருவராக அமர்ந்துகொண்டோம்.எதிரே நாற்பதுபேருக்கு நாற்காலி போட்டிருந்தார்கள்.பாதி நாற்காலிகள் சும்மாதான் கிடந்தன.இலக்கிய கூட்டத்திற்கெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்பது சாத்தியாமா என்ன.ஒரு சின்ன சந்தேகம் தமிழ்த்தாய்வாழ்த்து பாடும்போது கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் தாய் மொழியாகக்கொண்ட இலக்கிய பிரகஸ்பதிகள் என்ன செய்ய வேண்டும் யோசித்து வையுங்கள்.
வரவேற்புரை முடிந்தது.தலைவர் உரை முடிந்தது.எனக்கு ஒரு வெள்ளை வேளேர் என்று ஒரு கதர்த் துண்டு போட்டு அமரவைத்தார்கள்.தலைவர் உரத்த குரலில் சொன்னார்.'இப்போது பொழில் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் ஜ்.ஜம்பு நாதன் தனது இலக்கிய விமரிசனத்தைத்தொடங்குவார்.அவர் குறைந்தது முப்பது மணித்துளிகள் எடுத்துக்கொள்ளலாம்.பிறகு நேருக்கு நேர் என்னும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். பேசப்படும் பொருள் 'விழிப்பு ஒரு சமூகப்புதினம்'. தலைவர் அமர்ந்து கொண்டார்.
ஜம்பு நாதன் பேசத்தொடங்கினார். எதிரே உட்கார்ந்திருந்த அனைவரையும் அவர்களே இவர்களே உவர்களே என்றார். கூட்டத்தலைவர் அவரின் காக்கைப்பாடினியத்தில் ஆழ்ந்த பயிற்சி பற்றிப்பேசினார். நெய்தல் என்னும் பெயர் இந்த இ;லக்கிய அமைப்பிற்கு எத்தனைப்பொருத்தம் என்று ஆரம்பித்து ப்பேசிக்கொண்டே போனார்.
சமுத்திரகுப்பம் அதன் வரலாறு என்று அடிக்கினார்.விழிப்பு நாவலுக்கு உங்களை நான் அழைத்து வருகிறேன். இப்படி ஆரம்பித்து .பேசிய அவர் போராட்டம் இல்லாமல் மனித வாழ்வில் ஒன்றும் இல்லை சமூகத்தில் .பெண்கள் விடுதலை அவர்களின் சரிபங்கு இல்லாமல் எதுவுமில்லை.சாதிய நஞ்சு சமூகத்தை எப்படி எப்படி எல்லாம் சீரழித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டே போனார். மார்க்சீயம் காட்டும் வெளிச்சத்தை முற்றாய்த் தெரிந்துகொள்ளுங்கள். கடைசியாய் ஒரு சமாச்சரம் உங்களுக்கு என்றார்.நமது தாய்த்தமிழ் மொழியின் வளர்ச்சி அதனில் நம் ஒவ்வொருவரின் கடமை என்ன என்று பட்டியலிட்டார் இவை அத்தனையும் வாசகனுக்கு மிகமிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான புதினம் விழிப்பு. புதினத்தில் வரும் பாத்திரங்கள் அனைவருமே போராளிகள். புதினத்தில் ஆசிரியரின் நடை தெளிந்த நல் நீரோடை.புத்தகத்தை கையில் எடுத்தவர்கள் முடித்துவிட்டு மட்டுமே கீழே வைப்பார்கள்.வாங்கிப்படியுங்கள் விழிப்பு புதினத்தை.வாழ்க்கையில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றால் அது விழிப்பு. படித்தவன் சொல்லுகிறேன் புதினத்தைப் படித்தவர்கள் இங்கு பாக்கியவான்கள். விழிப்பு புதினத்தை ஆசிரியர் மிக கவனமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.நல்ல ஒரு முயற்சி. தொடர்க அவர் எழுத்துப்பணிச்சிறக்க வாழ்த்துக்கள். ஒரு முக்கிய விஷயம் மாநில அரசின் இவ்வாண்டு புதினத்துக்கான விருது ஆசிரியரைத் தேடிவருவது என்பது மட்டும் நிச்சயம்' ஜடாதர ஜம்பு நாதன் முடித்துக்கொண்டார்.
பேசி முடித்த அவருக்கு என் பாராட்டுக்கள் சொன்னேன்.புதினத்தை க்கண்ணால் பார்க்காமலேயே பேசிமுடித்தவிதம் அவர் எத்தனை க்கெட்டிக்காரர் என்பதை எனக்கு சொல்லிற்று. புரட்சி போராட்டம் மார்க்சீயம் மகளிர் விடுதலை தமிழ் மொழி என்பது எதுவுமே ஒரு வார்த்தைக்கூட வராமல் எழுதப்பாட்ட பள்ளிக்கூடம் தெரியாத ஒரு ஆடு மேய்ப்பவனின் அன்றாட வாழ்க்கையைச்சித்தரிக்கும் ஒரு புதினம் விழிப்பு. விமரிசனக்கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த நாற்பது நாற்காலிகளில் பத்து நாற்காலிகள் மட்டும் நிரம்பியிருந்தன.மற்றயவை காலியாகக்கிடந்தன.நேர்காணல் கீர் காணல் எல்லாம் இல்லை
கூட்டம் முடிந்தது தலைவர் அறிவித்தார். சமுத்திரகுப்பத்திலிருந்து நான் கவலையுடன் வீடு திரும்பினேன். வெள்ளை நிற கதர்த்துண்டு என்னிடம் பத்திரமாக இருந்தது.மறு நாள் காலை ஜம்பு நாதன் தான் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.' அய்யாவுக்கு வாழ்த்துக்கள். நான் இலக்கியக் கூட்டத்தில் சொன்னபடியே இந்த ஆண்டு புதினத்துக்கான விருது அய்யாவுக்கு ன்னு ஜனமணி பேப்பர்ல செய்தி வந்திருக்கு. என் வாழ்த்துக்கள்'
' நன்றி சொல்லிவிட்டு போனை க்கீழே வைத்தேன்.பிறகு என்ன்னையே தெரியாத சிலர் தொலைபேசியில் கனமாக வாழ்த்து .சொன்னார்கள். சமுத்திர குப்பத்து அதே ஜ்.ஜம்பு நாதன் எனக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் தனது பொழில் இலக்கிய அமைப்பின் சார்பாக நடத்த இருக்கிறார். செய்தி வந்திருக்கிறது. நான் விருது வாங்கியவுடன்தான் அது. ஜ ஜவின் அழைப்பிதழ் வந்ததும் உங்களுக்கும் அனுப்பி வைப்பேன் அவசியம் தங்கள் வருகையை நான் எதிர்பார்க்கிறேன்.
------------------------------------------------------------------------------------------

Tuesday, June 2, 2015

alpam -storyஅல்பம் -எஸ்ஸார்சி
பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ.அவன் முத்ல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் இரண்டு கரும்புகள் வாங்கி சைக்கிள் காரியரில் கட்டிக்கொண்டான்.சைக்கிள் எடுத்துக்கொண்டுபோய் கரும்பு வாங்கி வருவது அவனுக்கு நன்கு பழக்காமாகியிருந்தது.சைக்கிள் ஹாண்டில்பாரில் கருப்பங்கழிகளின் முனைப்பகுதியைத் தொங்கும்படி கட்டி சைக்கிள் காரியரில் கரும்பின் அடிப்பகுதியைக்கட்டிவிட்டால் போதும். நீங்கள் உங்கள் பாட்டுக்கு சைக்கிளை மிதித்துக்கொண்டு ஜம் ஜம்மென்று ராஜ பாட்டையில் போயிக்கொண்டே இருக்கலாம்.கரும்பின் சோலையை பத்திரமாக வளைத்துக்கட்டி எடுத்து வரவேண்டும்.சோலை இல்லாத கரும்பு சூரியனுக்கு ப்படைக்க முடியாது என்பது உலக மகாநீதி.
பெரும்பொங்கல் முடிந்தது. வீட்டில் கரும்புகள் இரண்டும் உன்னைப்பார் என்னைப்பார் என்று விழித்துக்கொண்டிருந்தன.அவன் வாங்கி வந்து படைத்து முடித்த அந்த க்கரும்புகளை தின்று முடிக்கவேண்டுமே.அவன் தான் பெற்ற பையன்களிடம் சொல்லிப்பார்த்தான்.கழுத்தில் டை க்கட்டிக்கொண்டு வேலைக்குப்போகும் பிள்ளைகள் கரும்பு தின்பதை எங்கே அறிந்திருக்கிறார்கள்.கதை ஒன்றும் ஆகவில்லை. அவன் மனைவிக்கு சர்க்கரை வியாதி.அவனுக்கும்தான். சுகர் என்பது வியாதியா இல்லை தமிழில் சொல்ல நோயா இல்லை ஒரு ப்ராப்ளமா இல்லை அது ஒரு பிரச்சனையா அல்லது குறைபாடா என்னவோ அது.
தானே தண்ணீீர் ஊற்றி பார்த்து பார்த்து வளர்த்த அவன் தருமங்குடி வீட்டு பலா மரத்தில் பழுத்த முழு பலாப்பழம் ஒன்றின் சுளைகள் அத்தனையும் எடுத்து எவர்சில்வர் பேசனில் வைத்துக்கொண்டு ஒரு நாள் மாலை கணவன் மனைவி இருவரும் வீட்டுக் கூடத்தில் சம்மணமிட்டு சாப்பிட்டுவிட்டுப்பின் தலைசுற்றியது.அருகே இருக்கும் ஒரு டாக்டரிடம் காண்பித்து இருவருக்குமே சுகர்வந்து இருப்பதை தெறிந்துகொண்டார்கள்.தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டுமாமே அப்படித்தான் சுகர் விஷயமும்.சுகர் வந்தவர்கள் காலத்தில் கொஞ்சம் அடங்கித்தான் போகிறார்கள்.
நூறு ரூபாய் முழு நோட்டாகக் கொடுத்து வாங்கி வந்த கரும்பை சாப்பிடுவதற்குத்தான் ஆளில்லை. கூடத்து மூலையில் துயின்ற கரும்புகளில் ஒரு கரும்பை எடுத்து பக்கத்து வீட்டு ப்பையன் ஒருவனிடம் ஜம்பமாய்க்கொடுத்து' தம்பி இந்த கரும்பை நீ சாப்பிடு' என்றான்.பையன் வெடுக்கென்று பதில்சொன்னான்.'கரும்பை தின்றதா இல்லை சாப்பிடறதா '. அவனுக்கு ப்பொட்டில் அறைந்த மாதிரிக்கு இருந்தது.கரும்பை வாங்கிக்கொண்டு போனான்.அது கூட பெரிய ஒத்தாசைதான்.இன்னும் இரண்டில் ஒன்று பாக்கி இருந்தது
பாக்கி இருந்த அந்த கரும்பினை அவனே இரண்டாக நறுக்கினான்.அடிப்பகுதி கூடக்கொஞ்சம் இனிக்குமாமே ஆக அதனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்..தெருவில் யாரும் இல்லை.கடைவாய்ப்பல்லில் வைத்து கரும்பைக்கடித்துத்தின்ன ஆரம்பித்தான்.அரைசாண் கரும்புக்கு ஒரு கணு இருக்கவே அதனை கடிக்க முடியாமல் யிணறினான். கணுக்களை கடிக்காமல் அப்படியே விட்டான்.கொண்டு வந்த கரும்பை க்காலி செய்துவிட்டதில் மனம் மகிழ்ச்சி பாவித்தது.இந்த பாழும் மனம் இருக்கின்றதே அது எது எதற்கெல்லாம் மகிழ்ச்சி பாவிப்பது எது எதற்கெல்லாம் துக்கப்படுவது என்கிற வெவஸ்தை இல்லாமல்தான் பழகிக்கொண்டிருக்கிறது.
'கரும்பு சாப்பீட்டாச்சா'
'ஆச்சு இன்னும் பாதி கரும்பு பாக்கி வச்சிருக்கேன் நீ எடுத்த்க்கோயேன்'
'அதயும் தின்னு தொலையறதுதானே ஏன் பாக்கி வக்கணும் காலாகாலத்துல போய்ச்சேரலாமே'
'அதான் எனக்கு சுகராச்சேன்னு பாதியோட நிறுத்திகிட்டேன்..நீ பாதி எடுத்துக்க'
'வயச்சாயிட்து அது ஒண்ணுதான்.எதுக்கு அத திங்க்ணும் அப்படி என்ன அவதிங்கற'
'காசு போட்டு வாங்கி வந்தது. கரும்பு யாரும் தொடல. எனக்கு மனசு கேக்கல'
'என்னவாவது பண்ணிக்கோங்கோ.கீழபடுத்துட்டாதான் தெரியும் மனுஷ லட்சணம் என்னங்கறது' .
அவனும் அவன் மனவியும் பேசிக்கொண்டார்கள்.அன்று இரவு சாப்பிடும்போது காரம் வேண்டாம் என்றான்.நாக்கு சற்று புண் ஆகியிருப்பது அவனுக்குத்தெரிய ஆரம்பித்தது.மறு நாள் காலை பல் துலக்கும்சமயம் கடைவாய்ப்பல் அருகே வ்லித்தது.அது எதோ சாதாரணமாக வலிப்பது இல்லையா என சமாதானம் சொல்லிக்கொண்டான்.மாலையில் ஈறு வீங்கியமாதிரிக்குத்தெரிந்தது.
'வெந்நீரில் கொஞ்சம் உப்பு போட்டு வாய்க்கொப்பளித்தான். ஒன்றும் உபத்திரவம் நின்றபாடில்லை.
' நான் கொஞ்சம் பல் டாக்டரை பாத்துட்டு வரணும்'
'ஏன் என்ன ஆச்சு பல்லுக்கு'
'இல்லை எகிறு வீங்கினமாதிரி தெரியுது'
'பாக்கி அரைக்கரும்பு இன்னும் இருக்குமே அத சாப்பிடுங்க சரியாயிடும்'
'இல்லை காசு போட்டு வாங்குன கரும்பாச்சேன்னு சாப்பிட்டேன்'
'எனாமா கரும்பு உங்களுக்கு யாராவது தர்ராங்க்ளா'
' நானு தந்தனே பாக்கி இருக்குற அரை கரும்பையும் அதே பக்கத்து வீட்டுபையனுக்கு கொடுத்துட்டேன்'
'டாக்டரப்பாத்துட்டுவாங்க'
அவன் மனவியிடம் சொல்லிக்கொண்டு ஒரு பல் டாக்டரைத்தேடிக்கொண்டுபோனான்.அந்த டாக்டரிடமும் கூட்டம் இருந்தது.பல்வலிக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள்.ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனை சொல்லிக்கொண்டு அங்கே நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவன் டாக்டரிடம் பற்களைக்காண்பித்தான்.
'கடைவாய்ப்பல்லு ரெண்டு தேஞ்சி இருக்கு. ஈறு வீங்கி இருக்கு.பல்லு சுத்தம் பண்ணணும்.ரெண்டு கடவாய்ப்பல்லும் வேறுவரையிலும் நோண்டி சுத்த்ம் பண்ணுற பெரிய வேல இருக்கு.ஆக எல்லாமா சேத்து பன்னெண்டு ஆயிரத்துக்கு வரும். என்னா சொல்றீங்க. ஒரு எக்ஸ்ரே எடுக்கணும் இன்னும் மருந்து மாத்திரைங்க வாங்கவேண்டியதுருக்கு'
'வீட்டுல சேதி சொல்லிட்டு பிரகு வர்ரன் டாக்டர்'
'அதுவும் சரி பணத்தோட நீங்க வாங்க பல்லுக்கு நா கர்ரண்டி ' பல் டாக்டர் முடித்துக்கொண்டார்.
வீடு ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கலாம். பொடி நடையாய் வீடு திரும்பினான்.
'' போன சேதி என்ன டாக்டரு என்ன சொன்னாரு'
'பொயிட்டு வந்தவன் சொல்ல மாட்ட்னா பறக்குற கெடந்து' அவன் முடித்த்க்கொண்டான்.பல் வலி அதிகமாயிற்று.சரியாக சாப்பிடமுடியாமல் இருந்தது.இரவில் ஒரு மாதிரியாக வலித்தது.பகலில் வேறு ஒரு மாதிரியாக வலித்தது.வலி வலிதான்.சாப்பிடுவதற்கு முன் ஒரு மாதிரியும் சாப்பிட்ட பின் வேறு மாதிரியும் வலித்தது. வீங்கியிருக்கும் பகுதியை ஒதுக்கி மற்றைய பற்களால் தின்று பார்த்தான். வலி குறைந்தால்தானே. பக்கத்து வீட்டுக்காரன் சொன்னபடிக்கு சிரிராம் கார பல்பொடி வாங்கி இரண்டு மூன்று முறை பல் தேய்த்தான். கருவேலம் குச்சி வைத்து பல் தேய்த்தான்.ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியாம் சொல்லிக்கொண்டான்.எத்தை தின்றால் பித்தம் தொலையும் என்றபடிக்கு பல் வலி இருந்தது.
அவனுக்கு லேசாக சுரம் வரும் போல் தெரிந்தது.
சாஃப்ட்வேரில் வேலைபார்க்கும் பையன் அப்பாவைப் பார்த்தான்.அவருக்கு ஏதோ பிரச்சனை அவனுக்கு ப்புரிய ஆரம்பித்தது.அம்மா தனக்கும் இந்த பல் வலி பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை என்று முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டாள்..
'வாங்க அப்பா பல் டாக்டர் கிட்ட நானே உங்களை கூப்பிட்டு போறேன்'
சரி என்று சொல்லி உடன் புறப்பட்டான்.அதே பல் டாக்டரிடம் பையன் அப்பாவைக்கூட்டிக்கொண்டு போனான்.. பல் டாக்டர் தந்தையும் மகனும் சேர்ந்து வந்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.
'ரெடியாதான வந்து இருக்கிங்க' என்ற டாக்டரிடம் இருவருமே ஓரே குரலில் 'ஆம் ' என்றனர். அவனை பல் டாக்டரின் அருகே இருக்குக்ம் நெடுக்கு ப்படுக்கையில் படுக்கச்சொன்ன டாக்டர்' சிஸ்டர் பில் அவரு பையங்கிட்ட கொடுங்க. பணம் கட்டியாச்சுன்னா ட்ரீட்மென்ட் தொடங்கலாம்'. சிஸ்டர் பன்னிரெண்டு ஆயிரத்துக்கு பிரேக் அப்போடு பில் கொடுத்தாள். பையன் அதிர்ந்து போனான்.வெளியில் எதுவும் தெரிகிறமாதிரி காட்டிக்கொள்ளவில்லை.தனது ஏ டி எம் வங்கிக் கார்டு கொடுத்து பில்லை க்கட்டி முடித்தான். மருத்துவப்பணிக்ள் தொடங்கி நடந்தன.
'நாளைக்கும் வரணும் ரெண்டு பல்லுக்கு கேப் போடணும். இன்னொரு நாளைக்கும் வரவேண்டியது இருக்கும் வந்துடுங்க'
டாக்டர் முடித்துக்கொண்டார்.
அவன் தன் பையனிடம்' தம்பி ஒரு சேதி இங்க நடந்த எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.அதான்'
'நான் ஏன் சொல்லப்போறன். நீ சொல்லாம இருந்தா போதாதா'
பையன் முடித்துக்கொண்டான். எதை அம்மாவிடம் அவன் சொல்லாமல் விட்டு இருக்கிறான்.இருவரும் வீடு நோக்கி நடந்தனர்.
' என்ன வேல முடிஞ்சுதா இப்ப வலி தேவலாமா' அவன் மனைவி ஆரம்பித்தாள்.அவன் தலையை ஆட்டினான்.
'ஏன் பேசக்கூடாதுன்னு டாக்டர் ஏதும் சொன்னாரா'
'வாயில பஞ்சு வச்சி டாக்டர் அனுப்பியிருக்கிறாரு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அப்பாவால பேசமுடியாது' பையன் அம்மாவுக்கு பதில் சொன்னான்.பன்னீராயிரம் செலவு ஆனது என்பது பற்றி எல்லாம் அவன் யாருக்கும் சொல்லவில்லை.
ஒரு மணி நேரம் முடிந்தது. டாக்டர் வைத்த பஞ்சை வாயிலிருந்து எடுத்துவிட்டு வாய்க்கொப்பளித்தான். அவனுக்கு இப்போது பல்வலி போன இடம் தெரியவில்லை.' இனிமே பொங்கலுக்கு கருப்பங்கழி மட்டும் வாங்கக்கூடாதுன்னு கண்டிஷனா இருக்கேன்'
வேக வேகமாய்ப்பேசினான்.
அவன் மனைவி பதில் சொன்னாள்' கரும்பு கழிவ வாங்குணும் அத சாமிக்கு படைக்கணும் நாம வாய மட்டும் ரவ பூட்டு போட்டுகணும்'
----------------------------------------------------------------------------------


...