விழிப்பு -எஸ்ஸார்சி
'விழிப்பு' என்கிற புதினத்தை நான் எழுதி முடித்தேன். என் எழுத்துக்களை எப்போதும் வெளியிடும் அதே தருமங்குடி பானுசந்திரன் பதிப்பகம்தான் அதனையும் வெளியிட்டது.பானுசந்திரன் பதிப்பகம் எங்கே அந்த பதிப்பகத்தின் உரிமையாளர் யார் என்று யாரும் தேடிப்போய்விட வேண்டாம்.அப்படியாருமே எங்கும் இல்லை.பானுமதியில் முதலில் இருக்கும் பானுவையும் ராமசந்திரனில் கடைசியில் இருக்கும் சந்திரனையும் எடுத்துக்கொண்டு பானு சந்திரன் பதிப்பகம் என்று எனது பதிப்பகத்திற்குப் பெயர் வைக்க என் நண்பர் சபாதான் யோசனை சொன்னவர்
.காசே செலவில்லாமல் ஒருவன் தன் மனைவியைக்கொஞ்சம் மகிழவும் செய்துவிடலாம். அதில் அவருடைய நண்பனாகிய எனக்கும் சில சவுகரியங்கள் ஏற்படலாம். சபாசார் இதனை எல்லாம் நினைத்துக்கொண்டுதான் இப்படிச்சொல்லியிய்ருக்கவேண்டும். அந்த யுக்தியும் கொஞ்சம் வேலை செய்தது இல்லை என்று சொல்லிவிடமுடியாது. எனது கவிதை த்தொகுப்பு 'ரணம் சுமந்து' நானே சொந்தமாய் அதனை வெளியிட்டபோது என் மனைவி தனது இரண்டு வளையல்களைக் கழட்டிக்கொடுத்து உதவி செய்தாள்.
சபா சாரும் சாதாரண ஆளா என்ன பெரிய மனிதர் பிரபல பத்திரிகைகளில் எல்லாம் எழுதி எழுதி பெரிய ஜாம்பவான் என்கிறபடிக்குப் பெயர் வாங்கியிருக்கிறார். அவர் எனக்குச்சொன்ன யோசனை வீண்போகவில்லை.
மனைவியரின் பெயரை ஒரு எழுத்தாளன் தான் தொடங்க இருக்கிற பதிப்பகத்துக்கு வைத்து விடுவதானாலேயே எல்லாம் ஆ ஊ என்று எகிறிக்குதித்து மனம் மகிழ்ழ்ழ்ந்து போகிற சிறிய அல்லது பெரிய மனசுக்காரர்கள் யாராவது எங்கேயாவது உண்டா என்ன.இப்படி போட்டச்சின்னக் கணக்கு ஒரு காலத்தில் என்னிடம் இருந்ததுண்டு. புத்தகத்தை படிக்க கையில் எடுத்தவுடன் 'கொஞ்சம் கடைக்கு ப்போய்வரணும்' சொல்லாமல் இருந்தால் அதுவே பெரிய பெரிய ஒத்தாசை.
என் அம்மா பெயர் மீனாட்சி ஆக மீனாட்சி பதிப்பகம் என்று பெயர் வைக்கலாமென்று எல்லாம் அடி மனதில் நான் யோசனையில் இருந்தேன். சபாவிடமும் இது விஷயம் சொன்னேன்.' ஏதும் தெரிஞ்சிதான் யோசன பண்றீீங்களா' அவர் என்னைக்கடிந்துகொண்டார்.'இன்னும் யாரிடமும் இது பற்றி நான் சொல்லவில்லை உங்களிடம் மட்டும்தான் சொல்லி இருக்கிறேன்' நான் அவரிடம் மெதுவாகச் சொன்னேன்.' நல்ல காலம் எங்காவது ஒளறி கிளறி கொட்டிடாதிங்க' என்று எச்சரிக்கை வேறு தந்தார்.நான் இப்படி எல்லாம் நாக்கைப்பிடிங்கிக்கொண்டு பதிப்பகம் வைத்து ஏன் புத்தகம் போட வேண்டும் என்று கேள்வி உங்களுக்குள் எழலாம். எழவேண்டும். அதுவே சரி.
உங்களுக்கும் தெரிய்ம்தானே ஒருவரின் எழுத்துப்படைப்பில் ஆகச்சிறந்தது கவிதையாம். அது எழுதிப்பார்த்தால் அப்புறம் தெரியும் எந்த பதிப்பகத்தாரும் கவிதைகளைத் தொட்டுக்கூடப்பார்க்கமாட்டார்கள்.'யாரு சாரு இந்த காலத்துல கவிதையை எல்லாம் படிக்குறா. வேற என்ன உங்க கிட்ட இருக்கு' என்பார்கள்.நம்மிடம் இல்லாத ஒன்றை எப்படியோ தெரிந்து கொண்டு அது மட்டுமே இப்போது போணியாகிறது என்பார்கள்.ஆக பதிப்பகத்தாரிடம் போய் நின்று நின்று மொத்துக்கள் பல வாங்கி முடியாமல் போகவே நான் சொந்தமாகவே பதிப்பகம் வைத்து புத்தகம் போட்டுவிடுவது என்கிற ஒரு முடிவுக்கு வந்தேன்.
நல்ல முடிவோ இல்லை கெட்ட முடிவோ. சொந்தமாய்ப்பதிப்பகம் வைப்பது என்றால் ஒன்றும் பெரிய விஷயமில்லை. டபக் என்று குத்தினால் உங்கள் விலாசம் பேப்பரில் விழும் ஒரு ரப்பர்ஸ்டாம்பும் சாணி க்கலரில் ஒரு லெட்டர் பேடும் கைவசம் வந்து விட்டால் நீங்கள் பதிப்பாளர்தான். ஒரு மேசை நாற்காலி கூட எதற்கு?.தெருவுக்கு வரும் தபால்காரனிடம் பதிப்பகம் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். அப்படிச்சொல்லிவைிக்காவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.
தருமங்குடிக்கு அருகிலே உள்ள நகரம்தான் சமுத்திரகுப்பம்.மாவட்டத்தின் தலை நகரம் அது. சமுத்திரகுப்பத்துக்காரர்களில் இலக்கிய ப்பரிச்சியமுடைய அனேகமாக முன் பக்கமாவது கொஞ்சம் நரைத்துவிட்ட தலைமுடிக்காரர்கள் சிலர்கூடி ஒரு இலக்கிய அமைப்பு ஒன்றை நடத்திவந்தார்கள். 'நெய்தல்' என்பது அந்த இலக்கிய அமைப்பின் திரு நாமம் ஊர் சமுத்திரகுப்பம் என்பதால் நெய்தல் என்னும் பெயர் ஆகச்சரி என முடிவுக்கு வந்தார்கள்.அந்த அமைப்பில் நான் எழுதிய விழிப்பு புதினத்துக்கு ஒரு விமரிசனக்கூட்டம் நடத்துவதாக முடிவாகி எனக்கு அழைப்பு வந்தது.நானும் சட்டைக்கு எல்லாம் இஸ்திரிபோட்டுக்கொண்டு புறப்பட்டேன்.ரெண்டு தினங்கள் முன்பாகவே தருமங்குடி நாகலிங்கத்திடம் தலையைக்காட்டி முடி திருத்திக்கொண்டேன்.நாகலிங்கம்தான் எங்களூர் தருமங்குடியில் பரம்பரை நாவிதன்.
இலக்கியக்கூட்ட அழைப்பின் படி என் புதினத்தை விமரிசனம் செய்ய 'பொழிதல்' என்னும் இலக்கிய அமைப்பின் செயலாளர் ஜடாதரன் ஜம்புநாதனைப்போட்டிருந்தார்கள்.பொழில் இலக்கிய அமைப்பும் சமுத்திரகுப்பத்தில்தான் இயங்கி வந்தது. வாட்ட சாட்டமான ஜ்.ஜம்பு நாதனை அடியேனுக்குத்தெரியும்.அவர் கவிஞ்ராக அறியப்பட்டவர்.எந்தக்கவிதை வேண்டுமானாலும் எப்போது வந்து கேட்டாலும் எத்தனை நீளத்துக்கு நீங்கள் வேண்டும் என்றாலும் அவரிடம் நிச்சயம் கிடைக்கும்.இது இந்தப் பக்கத்தில் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.தெரியாத ரகசியங்கள் பலது இருக்கலாம்.அது பற்றி எல்லாம் நமக்கு.வியாஜ்ஜியம் எதுவும் இல்லை.
தமிழ்த்தாய்வாழ்த்து முடிந்து இலக்கியக் கூட்டம் ஆரம்பமாகியது.நெய்தல் அமைப்பின் தலைவர் நடு நாயகமாய் அமர நானும் ஜ்.ஜம்பு நாதனும் பக்கத்திற்கு ஒருவராக அமர்ந்துகொண்டோம்.எதிரே நாற்பதுபேருக்கு நாற்காலி போட்டிருந்தார்கள்.பாதி நாற்காலிகள் சும்மாதான் கிடந்தன.இலக்கிய கூட்டத்திற்கெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்பது சாத்தியாமா என்ன.ஒரு சின்ன சந்தேகம் தமிழ்த்தாய்வாழ்த்து பாடும்போது கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் தாய் மொழியாகக்கொண்ட இலக்கிய பிரகஸ்பதிகள் என்ன செய்ய வேண்டும் யோசித்து வையுங்கள்.
வரவேற்புரை முடிந்தது.தலைவர் உரை முடிந்தது.எனக்கு ஒரு வெள்ளை வேளேர் என்று ஒரு கதர்த் துண்டு போட்டு அமரவைத்தார்கள்.தலைவர் உரத்த குரலில் சொன்னார்.'இப்போது பொழில் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் ஜ்.ஜம்பு நாதன் தனது இலக்கிய விமரிசனத்தைத்தொடங்குவார்.அவர் குறைந்தது முப்பது மணித்துளிகள் எடுத்துக்கொள்ளலாம்.பிறகு நேருக்கு நேர் என்னும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். பேசப்படும் பொருள் 'விழிப்பு ஒரு சமூகப்புதினம்'. தலைவர் அமர்ந்து கொண்டார்.
ஜம்பு நாதன் பேசத்தொடங்கினார். எதிரே உட்கார்ந்திருந்த அனைவரையும் அவர்களே இவர்களே உவர்களே என்றார். கூட்டத்தலைவர் அவரின் காக்கைப்பாடினியத்தில் ஆழ்ந்த பயிற்சி பற்றிப்பேசினார். நெய்தல் என்னும் பெயர் இந்த இ;லக்கிய அமைப்பிற்கு எத்தனைப்பொருத்தம் என்று ஆரம்பித்து ப்பேசிக்கொண்டே போனார்.
சமுத்திரகுப்பம் அதன் வரலாறு என்று அடிக்கினார்.விழிப்பு நாவலுக்கு உங்களை நான் அழைத்து வருகிறேன். இப்படி ஆரம்பித்து .பேசிய அவர் போராட்டம் இல்லாமல் மனித வாழ்வில் ஒன்றும் இல்லை சமூகத்தில் .பெண்கள் விடுதலை அவர்களின் சரிபங்கு இல்லாமல் எதுவுமில்லை.சாதிய நஞ்சு சமூகத்தை எப்படி எப்படி எல்லாம் சீரழித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டே போனார். மார்க்சீயம் காட்டும் வெளிச்சத்தை முற்றாய்த் தெரிந்துகொள்ளுங்கள். கடைசியாய் ஒரு சமாச்சரம் உங்களுக்கு என்றார்.நமது தாய்த்தமிழ் மொழியின் வளர்ச்சி அதனில் நம் ஒவ்வொருவரின் கடமை என்ன என்று பட்டியலிட்டார் இவை அத்தனையும் வாசகனுக்கு மிகமிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான புதினம் விழிப்பு. புதினத்தில் வரும் பாத்திரங்கள் அனைவருமே போராளிகள். புதினத்தில் ஆசிரியரின் நடை தெளிந்த நல் நீரோடை.புத்தகத்தை கையில் எடுத்தவர்கள் முடித்துவிட்டு மட்டுமே கீழே வைப்பார்கள்.வாங்கிப்படியுங்கள் விழிப்பு புதினத்தை.வாழ்க்கையில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றால் அது விழிப்பு. படித்தவன் சொல்லுகிறேன் புதினத்தைப் படித்தவர்கள் இங்கு பாக்கியவான்கள். விழிப்பு புதினத்தை ஆசிரியர் மிக கவனமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.நல்ல ஒரு முயற்சி. தொடர்க அவர் எழுத்துப்பணிச்சிறக்க வாழ்த்துக்கள். ஒரு முக்கிய விஷயம் மாநில அரசின் இவ்வாண்டு புதினத்துக்கான விருது ஆசிரியரைத் தேடிவருவது என்பது மட்டும் நிச்சயம்' ஜடாதர ஜம்பு நாதன் முடித்துக்கொண்டார்.
பேசி முடித்த அவருக்கு என் பாராட்டுக்கள் சொன்னேன்.புதினத்தை க்கண்ணால் பார்க்காமலேயே பேசிமுடித்தவிதம் அவர் எத்தனை க்கெட்டிக்காரர் என்பதை எனக்கு சொல்லிற்று. புரட்சி போராட்டம் மார்க்சீயம் மகளிர் விடுதலை தமிழ் மொழி என்பது எதுவுமே ஒரு வார்த்தைக்கூட வராமல் எழுதப்பாட்ட பள்ளிக்கூடம் தெரியாத ஒரு ஆடு மேய்ப்பவனின் அன்றாட வாழ்க்கையைச்சித்தரிக்கும் ஒரு புதினம் விழிப்பு. விமரிசனக்கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த நாற்பது நாற்காலிகளில் பத்து நாற்காலிகள் மட்டும் நிரம்பியிருந்தன.மற்றயவை காலியாகக்கிடந்தன.நேர்காணல் கீர் காணல் எல்லாம் இல்லை
கூட்டம் முடிந்தது தலைவர் அறிவித்தார். சமுத்திரகுப்பத்திலிருந்து நான் கவலையுடன் வீடு திரும்பினேன். வெள்ளை நிற கதர்த்துண்டு என்னிடம் பத்திரமாக இருந்தது.மறு நாள் காலை ஜம்பு நாதன் தான் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.' அய்யாவுக்கு வாழ்த்துக்கள். நான் இலக்கியக் கூட்டத்தில் சொன்னபடியே இந்த ஆண்டு புதினத்துக்கான விருது அய்யாவுக்கு ன்னு ஜனமணி பேப்பர்ல செய்தி வந்திருக்கு. என் வாழ்த்துக்கள்'
' நன்றி சொல்லிவிட்டு போனை க்கீழே வைத்தேன்.பிறகு என்ன்னையே தெரியாத சிலர் தொலைபேசியில் கனமாக வாழ்த்து .சொன்னார்கள். சமுத்திர குப்பத்து அதே ஜ்.ஜம்பு நாதன் எனக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் தனது பொழில் இலக்கிய அமைப்பின் சார்பாக நடத்த இருக்கிறார். செய்தி வந்திருக்கிறது. நான் விருது வாங்கியவுடன்தான் அது. ஜ ஜவின் அழைப்பிதழ் வந்ததும் உங்களுக்கும் அனுப்பி வைப்பேன் அவசியம் தங்கள் வருகையை நான் எதிர்பார்க்கிறேன்.
------------------------------------------------------------------------------------------
இலக்கிய கூட்டத்தில் ஒரு படைப்பை அறிமுகம் செய்ய வந்த்வர் புத்தகத்தை படிக்காமலே எப்படிப் பேசி முடிக்கிறார் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்,மிக நன்று.
ReplyDeleteஇலக்கிய கூட்டத்தில் ஒரு படைப்பை அறிமுகம் செய்ய வந்த்வர் புத்தகத்தை படிக்காமலே எப்படிப் பேசி முடிக்கிறார் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்,மிக நன்று.
ReplyDelete