Sunday, September 23, 2018

maartam-storyமாற்றம் -எஸ்ஸார்சி

நான் சென்னைக்குச்செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். ' சென்னை' எனப் பளிச்சென்று எழுதி வைத்துக்கொண்டு புதுவைப் பேருந்து நிலயத்தில் பேருந்துகள் சில அணிவகுத்து நின்றன.
நானும் என் மனைவியும் சீர்காழிக்குப்பக்கமாக ஒரு பயணம் போய்வந்தோம்... மிகநெருங்கிய உறவினர் இறப்பொன்றுக்குச்சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தோம்.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் வண்டியின் முன்பக்கத்தில்
சென்னை என்று எழுதிய போர்டு இருக்கிறதே என்று ஏறி அமர்ந்துவிடவும் முடிகிறதா அதுதான் இல்லை.ஒரு.பத்து பேருந்துக்கு ஒன்பது பேருந்து கிழக்கு கடற்கரை ச்சாலை(ECR) வழி என்று சொல்லி நம்மை ஏமாற்றி விடுகின்றன. தாம்பரம் வழி சென்றால் தான் என் வீடு போய்ச்சேர வசதியாக இருக்கும். பேருந்துகளில் சில பெருங்களத்தூரோடு பைபாசில் போய்விடும் ஆக தாம்பரம் போகாது .
சென்னைக்கு ப்.புதுச்சேரியிலிருந்து புறப்படும் வண்டிகளில் மரக்காணம் வழி சென்று மதுராந்தகம் ஏரிக்கரை காட்டி கிராமத்து அழகை எல்லாம் பாரடா பார் எனப் பார்க்க வைத்து பயண நேரத்தை க்கொஞ்சம் கூட்டி காலை வாறி விடும் ரகமும் உண்டு.
இதோ திண்டிவனம் வழியே பைபாசில் கோயம்பேடு செல்லும் ஒரு பேருந்தைக்கண்டுபிடித்தாயிற்று.அதற்குத்தானே இத்தனைப்பாடு.பேருந்துக்குள்ளாாக ஏறி இடம் போடவேண்டும்.இடம் போடுவதில் ஏத்தனை சண்டை.பொறுத்தார் பூமி ஆள்வார் பொறாதார் காடாள்வார் என்கிற வசனம் எல்லாம் இங்கே கவைக்கு உதவுமா?.அந்தப்பேருந்தில் இரண்டு வழிகள் இருந்தன.முன் பக்கமும் பின் பக்கமும் மக்கள் முண்டி அடித்துக்கொண்டு ஏறினார்கள்.மூட்டை முடிச்சுக்கள் ,குழந்தைக்குட்டிகள், கைகால் முடியாதவர்கள், காயலாக்காரர்கள் ஏறுகிறார்களே என்று யாரும் தாட்சண்ணியம் பார்ப்பதில்லை. பார்க்க முடியாத படிக்கு நடப்புக்கள் சிக்கலாகிக் கிடக்கின்றன.
.தலை வலியும் திருகு வலியும் அவர் அவர்களுக்கு வந்தால் மட்டுமே சில பூடகமான சமாச்சாரங்கள் அம்பலப்படுகின்றன.எப்படியோ ஒரு இரண்டு பேர் அமரும் இருக்கையைப்பிடித்துவிட்டேன்.ஒரு பேருந்தில் அமர்ந்து பயணிக்க ஒரு சீட்டுக்கிடைத்துவிட்டதில் ஒரு நிம்மதி அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று பொய் சொல்வானேன்.
வண்டி கிளம்ப இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? என் மனைவி வினா வைத்தாள்.இன்னும் பத்து நிமிடம் ஆகலாம் என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள்.'லோடாயிட்டா கெளம்பிடறதுதான். வண்டியின் கண்டக்டர் வெடுக்கென்று பதில் சொன்னார்.
'பாத் ரூம் போய் வரலாமா?' என் மனைவி கண்டக்டருக்கு வினா வைத்தாள்.'பேசாதிங்க சட்டுனு போனாமா வந்தமான்னு வாங்க' அவர் கட்டளை தந்தார்.ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவள் வசம் கொடுத்தேன்.
'இது இங்க செல்லுமா,தமிழ் நாட்டிலே பத்து ரூபாய் நாணயத்தை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.அதன் பிறப்பில் என்னவோ குறையாம். புதுச்சேரியிலுமா அப்படி?'இந்த விஷயத்தில் தமிழ் நாடென்ன புதுச்சேரி என்ன எல்லாம் ஒன்றுதான்' அவள் பதில் சொன்னாள்.ஒரு இருபது ரூபாய் கொடுக்க அந்த நோட்டோடு போனாள் உடன் வந்தாள். நான் தான் அதைக்கொடுத்து அதுவும் இப்போதுதானே அனுப்பினேன். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. என்னிடம் ஒரு பத்து ரூபாயை பாக்கி என நீட்டினாள்.அதுவும் ஒரு பத்து ரூபாய் நாணயம்.'மீண்டும் இப்படி கோகிலாவா' என்றேன்.
'சென்னை செல்பவர்களுக்கு ஒன்றும் பிரச்சனையே இல்லை. இந்த பத்து ரூபாய் நாணயம் அங்கு ஓடிவிடும்' பாத் ரூம் பொறுப்பாளி சொன்னதாகச்சொன்னாள் அவள்.
எங்கள் இருக்கைக்குப்பக்கத்தில் பத்து கல்லூரி மாணவர்கள் ஏறி அமர்ந்திருந்தார்கள்.அதனில் நான்கு பேருக்குப்பெண்கள்.எல்லோருமே இருபது வயதுகளில் தெரிந்தார்கள்.யாருக்கும் வாய் ஓயவில்லை.பேசிக்கொண்டே இருந்தார்கள்.சத்தம் போட்டு ப்பேசினார்கள்.பத்து பேருமே தமிழ் நாட்டுக்காரர்கள் இல்லை.இந்தியும் ஆங்கிலமும் பேசினார்கள் எத்தனை வேகம்..புதுச்சேரியில் என்ன படிக்கிறார்களோ அது ஒன்றும் தெரியவில்லை.கண்டக்டர் டிக்கட் போட்டுக்கொண்டு வந்தார் பத்து பேருக்கும் பத்து சீட்டு ஒரு மாணவனே வாங்கி முடித்தான். இனி கன ஜோர்.ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டார்கள். தாடை பிடித்துக்கொஞ்சிக்கொண்டார்கள்.எது எதனையோ கொண்டு வந்திருந்ததை ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டுக்கொண்டார்கள்.'பொது மக்கள் பயணம் செல்லும் அரசுப் பேருந்திலா இப்படி?' என்மனைவி என்னைக்கேட்டாள்.மெதுவாகத்தான் என்னைக்கேட்டாள்.அதற்குள் ஒரு மாணவ எங்களை முறைக்க ஆரம்பித்தாள்.'அவர்களுக்கு தமிழும் தெரியலாம்' என்றேன்.
'நமக்குத்தான் தமிழ் மட்டுமே தெரியும்'
'அது நமது வரலாறு' நான் பதில் சொன்னேன்.. மாணவிகள் ஒரு சிலர் இந்திப்பாடல் ஒன்றை பாடினர்.கோரசாக எல்லோரும் அதையே பாடிக்கொண்டார்கள்.எங்களுக்குப்பின்னால் இருக்கையில் இருந்த ஒருவர் நடுத்தர வயதிருக்கலாம். நெளிய ஆரம்பித்தார். எழுந்து கொண்டார்.'படிக்கிற பசங்கதானே நீங்க நல்ல படியாவரமாட்டிங்களா. அட்டூழியம் பண்ணுறீீங்க.இது பொது மக்கள் பயணம் செய்ற்து.கொஞ்சம் அடங்கிப்போனம்னா நல்லது.தெரிதா' என்று சத்தம் போட்டார்.பத்து பேரும் அந்த மனிதரை ஒரு முறை பார்த்துக்கொண்டனர்.அவ்வளவுதான்.
கண்டக்டர் அருகில் வந்தார்.'காலேஜ் பசங்க கிட்ட எல்லாம் யாரு பேசி மீள முடியும்.புசுக்குன்னு வண்டிய நிப்பாட்டி ப்போடுவாங்க.அதுவும் இதுங்க நம்ம பாஷையும் பேசறது இல்லயே.நாம என்னா பேசுனா என்ன அதுங்களுக்கு வெளங்கப்போவுது.இன்னும் செத்த நேரம் பொறுமையா இருந்தா போதும்'சமாதானம் சொல்லிக்கொண்டர் 'இதுவே தனியார் வண்டின்னா இப்படி கும்மாளம் போடுவாங்களா வாயையும் இன்னொண்ணையும் இழுத்து மூடிகுனு உக்காந்து இருப்பாங்க' மீண்டும் சொன்னார் அந்த நடுத்தர வயதுக்காரர்.உடன் என் மனைவியும் ஆரம்பித்தாள் அதுவும் ன்னிடம்தான்'யாராவது ஒருத்தர் கேக்குணும்.பொது எடத்துல எப்பிடி நடந்துகுறதுன்னு இருக்கு.அதுக்குன்னு ஒரு அளவு வேணாம்' நான் தான் அவளுக்கு சமாதானம் சொன்னேன்.'சென்னையில மின்சார ரயில்ல எப்பிடி இருக்கு.ஜோடி ஜோடியா என்ன என்ன அசிங்கமா நடக்குது.யாராவது வாய தொறக்க முடியுமா ஒரு பார்க்குக்கு இல்ல பீச்சுக்கு போய் நிம்மதியா உக்காரமுடியாதா ஏன் ஒரு கோவிலு கொளம்னு போனாலும் இதே கண்றாவிதான்' எங்களை ஒரு முறை பேருந்தின் நடத்துனர் பார்த்து ப்புன்னகை செய்தார்.நாங்கள் பேசுவதில் அவருக்கு ஒரு சமாதானம் தெரிவதாய் உணர முடிந்தது.' நிர்வாகத்துல வேல செஞ்சி கை நிறைய சம்பளம் வாங்குற கண்டக்டருவ இந்த் அநியாயத்தைக்கேக்குணும் அப்பத்தான் அது சரியாவுமிருக்கும்' அந்த நடுத்தர வயதுக்காரர் மீண்டும் ஆரம்பித்தார். அவருக்கு முன் தலை மட்டும் கொஞ்சம் முடி இல்லாமல் வழுக்கைஆக இருந்தது.பேருந்தில் சற்று அமைதி நிலவியது.வண்டி கிளியனூர் தாண்டிக்கொண்டிருந்தது.'அவரு ஆம்பளை அத கேட்டாரு எல்லாருமா கேக்குறாங்க.அது அது முழிக்கறத பாருங்க' என்றாள் என் மனைவி.சில நிமிடங்கள் மட்டுமே கடந்தன.அந்த பத்து பேரும் கொல் என்று சிரித்தார்கள். அந்த முன் வழுக்கை நடுத்தர வயதுக்காரரை ப்பர்த்துப் பத்துபேரும் 'கொக்கு'காட்டினார்கள்.
பின் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டு தலைமுடியை வருடினார்கள்.கொஞ்சிக்கொண்டார்கள்.இன்னும் என்ன எல்லாமோ செய்துகொண்டார்கள்.பார்க்க அருவறுப்பாகவே உண்ர முடிந்தது.' நீங்க எல்லாம் பெசாசு சென்மமா எங்க ஊருக்குப் ,படிக்க இல்ல பொழைக்க வர்ரீங்க ஆனா உங்க கொழுப்பு கூடிகிட்டேத்தான போவுதுது. வண்டியில நாகரீகமா வருலாமுல்ல' சொல்லிய நடுத்தர வயதுக்காரர் அமைதி ஆனார்.'நமக்கு ஏன் வம்பு.எந்த கழுதயாவது எங்கயாவது மேயுட்டும் ' நான் என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.அந்த பத்து பேரில் ஒருத்தி கைபேசியை எடுத்தாள் ஏதோ நம்பரைப்போட்டாள்..நான்கு வார்த்தைதான் பேசினாள். கைபேசியை வைத்துவிட்டாள்.அந்த பத்துபேருக்கும் என்னவோ சமிக்ஞை செய்தாள்.எல்லோரும் கப்சிப் ஆயினர். எங்கும் அமைதி.அந்த பத்துபேரா இப்படி என்று எனக்கு அய்யம்தான் வந்தது.'கதவுன்னா அதுக்கு கண்டிப்பா ஒரு தாப்பா இருக்கணும்' என்றாள் என் மனைவி.வழுக்கைத்தலை நடுத்தர வயதுக்காரர் உறங்க ஆரம்பித்தார். வண்டி திண்டிவனத்தை த்தொட்டுக்கொண்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலை.மேம்பாலம் வருவதற்கு முன்பாகவே இருவர் எங்கள் வண்டியை நிறுத்தினர்.'வண்டிய இங்க நிறுத்துறாங்க ஏன்.எதனா ரிப்பேரா' நான் சொல்லிக்கொண்டிருந்தேன்.
வண்டியில் ஏறிய இருவரும் கண்டக்டரை நோக்கிச்சென்றார்கள்.'யாரு அது குடிச்சுட்டு கலாட்டா பண்றது'
ஒரு சேர வினா வைத்தனர்.'யாரும் அப்பிடி இல்லயே.ஒண்ணும் இங்க தகறாறு எதுவும் நடக்கவே இல்ல' என்றார் கண்டக்டர்.சற்று நேரம் முன்பு கைபேசியில் போன் செய்த அந்த இந்திக்கரப்பெண் வழுக்கைத்தலையரை கைகாட்டினாள்.அவர் இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார். வண்டியில் ஏறிய இருவரில் ஒரு மீசைக்காரர் வழுக்கைத்தலையரின் சட்டையைப்பிடித்துக்கொண்டார்.'ஏய் எழுந்திரிடா.இங்க என்ன வண்டில குடிச்சுட்டு கலாட்டா பண்றயாம்.இறங்குடா கீழே. உன்னை நாலு தட்டினாதான் சரியா வருவ' தூக்கத்தில் இருந்த அந்த நடுத்தர வயதுக்காரர் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தார்.'நீங்க யாரு. நீங்க என்ன ஏன் அடிச்சிவிரட்டுறீங்க' என்று ஓங்கிக்கத்தினார்.'ஸ்டேசனுக்கு வந்தா புரியும் யாருன்னு' பதில் சொன்னார் மீசைக்காரர்.
'கழுதைய இறக்கி விடு.நாங்க அங்க பாத்துகறம்' என்றார் கண்டக்டரிடம் அந்தக் காவல் அதிகாரி. இருவருமே ம்ஃப்டியில் இருந்தனர். அங்கு என்னதான் நடக்கிறது என்று நான் உற்று உற்றுப் பார்த்திக்கொண்டிருந்தேன்.' அங்க பாக்காதிங்க நமக்கு ஏன் இந்த வீண் வம்பு ' என் மனைவி எச்சரித்தாள்.'அதுவ இப்ப நம்பள பாத்து கூடம் மொறைக்குதே' அந்த பத்து பேரையும் பார்த்து அவள் சொல்லிக்கொண்டாள்.வழுக்கைத்தலையரை நெட்டியபடி சென்றனர் மஃப்டியில் வந்த காவல் துறையினர் இருவரும்
.'இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியில்ல.நானு ஏதும் போலிசு கம்ப்ளயிண்டு குடுக்கல.அந்த ஆசாமியும் தப்பா எதுவும் பேசிடல.அவரு குடிச்சிபுட்டு மப்பு லயும் இல்ல.ஆனா ரெண்டு வார்த்தை நல்லதுக்குத்தான் கேட்டாரு. படிக்கிற புள்ளிவ. நம்ப பாஷை தெரியாத புள்ளிவதான் .அதுக்குன்னு இம்புட்டு கொடுமையா' புலம்பிக்கொண்டே இருந்தார் கண்டக்டர்.
நடுத்தர வயது வழுக்கைத்தலையரின் துணிப்பை ஒன்று அவரின் காலுக்கு க்கீழாக இருந்ததை,அவர் மறந்து போய் வண்டியில் விட்டு ச்சென்றதை என் மனைவியிடம் காட்டினேன்.' மொதல்ல நம்ப பொழப்பை பாப்பம். செத்த கம்முன்னு வாங்க' என்று மனைவி என்னை விரட்டினாள்.
'எல்லாம் அந்த போன் போட்டுப் பேசுனவ அவ செய்ததுதான். அந்த பொம்பள நாம பேசுற பாச ரவையும் தெரியாதவ. அவளுக்கு பாரு நம்மூருல இம்மாம் பவுரு.நாயம் பேசுன மனுசன் ஒரு நல்லவரு அடி உத வாங்கிகிட்டு ப்போறாரு.கேக்குறதுக்குத்தான் யாருமில்ல.' என் மனைவி மெதுவாகச்சொன்னாள்.
' நாம இருக்குற ஊர்லதான் ஆவுட்டும், இப்ப எல்லாம் நாம பேசுற பாசய பேசுற நம்ம சனத்த, எங்கனா பாக்குறயா? காணோமே உனக்குத்தெரியாது. புள்ள, உலகமே மாறிகிட்டு வருது' நான் பதில் சொன்னேன்.அவர்கள் சேட்டையை மீண்டும் ஆரம்பித்தனர்.நான் என் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.
'திண்டிவனம் சீட்டு எறங்கிக' கண்டக்டர் ஆணை இட்டுக்கொன்டு இருந்தார்.அந்த பத்துபேரின் அரட்டையும் கலாட்டாவும் உச்ச கதியில் தொடர்ந்து கொண்டிருந்தது.
--------------------------------------------------------------

Sunday, September 9, 2018

paavannanin kavithaikaL 8


8  பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.


 ( பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது 'பச்சைக்கிளியே பறந்துவா' அது அவர் சிறுவர்கட்கு எழுதிய கவிதைகள். என்னுடைய தேடுதல் நிறைவடையவில்லை
அவரிடமே தொலைபேசியில் விசாரித்தேன்.'எனக்குத்தங்களின் கவிதைத்தொகுப்பு வேண்டும்' என்றேன்.
'நகலெடுத்து அனுப்பட்டுமா' என்றார்.நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன் அவருக்குப் பதில் சொன்னேன்.2017 ஜூன் முதல் வாரம். பெங்களூரு மாநகரின் அல்சூரில் அவர் இல்லத்திலேயே அவரைச்சந்திக்கும் பேறு பெற்றேன்.. அவர் எழுதிய 'குழந்தையைப்பின் தொடரும் காலம்' 'கனவில் வந்த சிறுமி' 'புன்னகையின் வெளிச்சம்' எனக்கவிதைத்தொகுப்புக்கள் அவரே நகலெடுத்து எனக்கு அன்போடு வழங்கினார்.நெகிழ்ந்துபோனேன்.பாவண்ணனின் கவிதா மனம் பற்றிய ஒரு புரிதலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள அவையே எனக்குக் கூடுதல் அடிப்படை).
படைப்புத்தளத்தில் கவிதைக்கு இணையாக எதுவுமில்லை. பிற எவையும் கவிதையின் பின் தொடர்வன மட்டுமே.ஆன்மாவின் வெளிப்பாடு கவிதை.மன நிழல்அது. மன ப்பூரணத்தின் பூப்புமே.கவிஞனின் ஆழத்தை ஆகிருதியை அலாரிப்பை ஆனந்தத்தை அது அளக்க வல்லது. மனித மனம்படுபாட்டை சுடுவேதனையின் சூக்குமத்தை ஓயாது குடையும் தத்துவக் குமைதலை, அறச்சீற்றம் மேலோங்கிக் கொப்பளித்து எழும் கோபத்தை,கொஞ்சி மலரும் அழகுக்காதலை, கலவி யின் அருட்கொடையாம் குழவி தரும் பெருங்களிப்பை, ஆடு முகர்ந்து மேயும் பச்சை சிறுபுல் தொடக்கம், ஆகாயம் தொடும் பனிச்சிகர த்தை நோக்க நோக்க உள்ளத்தில் ஓயாது துளைத்து எடுக்கும் ஞானத்துருவலை ச் செய்தியாய்ச்சொல்லவரும் உன்னதம் கவிதை.
'கவிதை எழுத
வாழ்வினூடே
ஓடும் தர்க்கத்தின்
இழையை உணரும்
திறன் வேண்டும்.' என்று வரையறை தருவார் கவிஞர் பிரமிள்.
பூமண்டல இருப்பில் நீர் நிலைகள் முக்கியமானவை.நீர் நிலைகள் இல்லா எவ்வண்டக்கோளமும் உயிர் நிலைத்தலின் செய்திதெரியாதன.எத்தனைப்பிரம்மாண்டமும் ஒரு மனித உயிரின் பார்வையில் அனுபவமாகதவரை அர்த்தமற்றன.ஆக நீர் முக்கியமானது.நீர் நிலைகள் மிக மிகமுக்கியமானவை.
'ஓடும் நீர் ஒரு தேவதை
கால் நடைகள் தாகம் தீர்ப்பன
நதிகள் வணக்கத்திற்குரியன
நீர் அமிருதம்
அதுவே ஔஷதம்
கடவுள் நீரை வாழ்த்துக.'(ரிக்1.1.23) நாம் தெரிந்தும் இருக்கலாம்.
பாவண்ணனுக்கு அவர் பிறந்த வளவனூரின் ஏரி ஆக முக்கியமானது.அதைத்தொட்டுப்பேசாத அவரின் கவிதைப் படைப்பு அபூர்வம்.பேச்சுக்குப்பேச்சு வார்த்தைக்கு வார்த்தைக்கு ஏரியின் கதைதான் அவரிடமிருந்து இயல்பாக அது புறப்பட்டுவரும்.எத்தனையோ மேடைப்பேச்சுக்கள் கேட்டிருப்போம் அத்தனையிலும் அந்த ஏரியின் சிலாகிப்பு.
'குழந்தையைப்பின் தொடரும் காலம்' நாற்பத்து நான்கு கவிதைகளைக்கொண்ட ஒரு கவிதை நூலாக விடியல் பதிப்பகம் கோவை கொண்டு வந்திருக்கிறது.கவிஞர் பாவண்ணன் நூலின் முன்னுரையில் புதுவைக்காரர், ம.லெ.தங்கப்பாவை மெத்தப்பணிவோடு எண்ணிப்பார்க்கிறார்.
' அன்புள்ள அம்மாவுக்கு' என சமர்ப்பிக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு இப்படித்தொடங்குகிறது.
'வறண்ட ஏரிக்குள் கம்மங்காடு
காவல் காக்கும் மூத்தபையனுக்குக்
கூழெடுத்து வருவாள் அம்மா.'
உழைக்கும் பிள்ளை கூழ்குடித்துஓய்வெடுக்க அதனில் மீந்த அந்த கஞ்சியைக்குடித்து ப்பசி ஆற்றிக்கொள்கிறாள் அன்னை. இத்தனையும் அரங்கேறுவது வறண்டு காட்சி தரும் அந்த ஏரிக்குள்ளே. அந்த ஏரி ஒரு பேரன்னை.அவள் மடி தருவது 'கம்பு'. ஏரியின்நீர் நிறைந்தால் ஊரே செழிக்கும். என் செய்ய? சுக்காய் வறண்டு கிடக்கும் ஏரி கம்பையேனும் விளைவித்து த்தன்மக்களை உயிர் பிழைக்க வைக்கிறது.
அந்தத்தாய் சொல்கிறாள்,
'அன்புதான் மொதல் படிப்பு
அதுக்கப்பறம்தான் பட்டப்படிப்பு'
வணங்கக்குவிகிறது அந்தத்தாயை வாசகனின் இரு கைகளும் தான்.அன்பேசிவம்.அன்பைத்தொலைத்துவிட்டு பெற்ற கல்வி வாழ்க்கை அங்காடியில் செல்லாக்காசு.இப்படிப்பேசுதல் இக்கணம் சாத்தியமா என்ன,லட்சம் கொடுத் த பின்னரே ஒரு மழலைக்கு ப்பள்ளியில் இடம் உறுதி செய்யப்படும் கலி காலம். என்றேனும் ஒரு நாள் இந்தத்துயரும் தொலையும் என்கிற நம்பிக்கையை விட்டுவிட முடியுமா?
எல்லா படைப்பாளியையும் ஒப்ப பாவண்ணனுக்கு பயணங்களில் ஈடுபாடு அதிகம். ஊர்ந்து செல்லும் ரயில் பயணங்களில் அவருக்கு அத்தனை வசீகரம்.சன்னோலரம் குந்தி இயற்கையை ரசிப்பதில் எல்லையில்லா ஆனந்தம்.வெவ்வேறு ஊர்கள்,வெவ்வேறு மனிதர்கள்,வெவ்வேறு மொழிகள்,வெவ்வேறு பண்பாடுகள் இவை அத்தனையும் அனுபவித்து த்தெரிய கிட்டிய பெருவாய்ப்பு.
பாவண்ணனின் வளவனூரில் ரயில் நிலையம் இருந்தது.அதனை சமீபமாய் மூடிவிட்டார்கள்.ரயில் இப்போது வளவனூரில் நிற்பதில்லை. பாவண்ணன் ஒரு சிறுவனாய் அந்த ரயில் நிலயத்தை ச்சுற்றிவந்த இனிய நாட்கள் அவருக்கு மனத்திரையில் காட்சி ஆகின்றன.
'இடித்துச்சிதைத்தார்கள் ஒரு நாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை
காரணங்கள் சொல்வதா கஷ்டம்
'பஸ்ங்க வந்து ரயில அழிச்சாச்சி
வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ்ல ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில புடிப்பானா'
வாழும் சமூகம் தர்க்க நியாயம் பேசுவதை பாவண்ணன் காட்சிப்படுத்துகிறார்.'தண்டவாளம் மட்டும் இருக்கிறது,பழசின் மிச்சம் போல' கவிதை முடிகிறது.
தான் இளமையில் வாழ்ந்த ஊரை ஒரு படைப்பாளியால் மறக்க முடியாது.பாவண்ணன் என்னும் கவிஞனை அவர் சிறுவனாக வாழ்ந்திட்ட அந்த ஊர் விட்டுவிடுமா? அடிமனதில் அதே நினைவு அது தோய்ந்து கிடக்கிறதே.'கனவு வழி' என்னும் கவிதை அவருக்கு எந்த ஊர் இப்போது முக்கியம் என்பதைச்சொல்கிறது.தான் வாழ்ந்த அந்த வளவனூர் மட்டுமென்ன நாகரீகம் என்னும் பெயரில் உலா வரும் விபரீதங்களுக்கு விதி விலக்கு பெற்றதா?.கிராமங்கள் தம் அமைதி தொலைத்து எத்தனையோ ஆண்டுகள் ஆயின.
'இந்த நகரம் என்னைப்பிணைத்த சங்கிலி
என்று தெரியும்
இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்
என்கிற விதியும் தெரியும்' என்று உள்ளது பேசுகிறார் பாவண்ணன்.
மரங்கள் ஒரு படைப்பாளியை வெகுவாக பாதிக்கவே செய்கின்றன.ஒவ்வொரு கவிஞனும் மரத்தை மனிதனைப்போலவே நேசிக்கிறான்.அவற்றோடு பேசிப்பார்க்கிறான்.கொஞ்சி முடிக்கிறான்.உணர்வுகளைப்பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறான்.பண்டைய தமிழ் இலக்கியங்கள் அப்படிப்பேசும் செய்தி அறிவோம்.வான் உயர்ந்த மரம் தனக்கு முன்னவள் போல். அவள் நிழலில் கலவிச்செய்தி பகிருதல் சீர் மரபன்று என்கிற தமிழர் பண்பாட்டுஉச்சம் பேசியதுஅறிந்தவர்கள் நாம். நம்மோடு வாழும் விருட்சங்கள் நம் உறவே.பாவண்ணன் விருட்சங்களை ஆழமாய் நேசிக்கிறார். 'வீடு' என்னும் கவிதை அழகாக இப்படிப்பேசுகிறது.
'நண்பரின் வீட்டு வாசலில்
ஒரு தாய்போல நிற்கிறது தென்னை மரம்'
அது ஆசீர்வதிக்கிறது. வாழ்வு கொடுக்கிறது. மக்களை மகிழவைக்கிறது. இனியஉற்சாகத்தை அள்ளி வழங்குகிறது.தென்னைமரம் தாயாக நிற்க நண்பரின்வீடு அதன் காலடியில். வீடு ஒரு குழந்தையாகித்தவழ்கிறது. இன்றைக்கும் தென்னையை த்தெய்வமாய்ப்போற்றும் கேரளப்பண்பு நம் நினைவில் வந்து நிழலாடுகிறது.
'காற்றில் விழுந்த மரம்' என்னும் கவிதை மரம் மனிதர்கட்கு விலங்குகட்கு நிழல் கொடுக்க ப் பந்தலாகி நின்றதை,பறவைகட்கு சரணாலயமாக இருந்ததைப்பேசுகிறது.
'ஊர்க்கடைசியில் இருந்த அம்மரம்
மண் பிளந்து விழுந்திருப்பது கண்டேன்
மழையோடு வந்த காற்று
ஏதோ வெறியின் வேகத்தில்
மரத்தை அடியோடு வீழ்த்திவிட்டது
மரத்தைத்தழுவிக்காற்றுக்கும்
காற்றைத்தழுவி மரத்துக்கும்
உண்டாகி வந்த நெருக்கம்
தகர்ந்தது ஏனென்று புரியவில்லை.'
உட்காரவந்த பறவைகள் மரம் வீழ்ந்ததுகண்டு ஏமாந்துபோகின்றன.பாவண்ணனுக்கு மரம் வீழ்ந்துகிடப்பது மனிதன் வீழ்ந்துகிடப்பதாக அனுபமாகிறது. முறிந்துபோயின மனிதக்கைகள். அதனில் நிணம் இரத்தம் கவிஞர் காணுகிறார்.வாடியபயிரைக்கண்டபோதெல்லாம் வாடிய அந்த வடலூர் வள்ளலை வாசக மனம் மனத்திரையில் தோழமையோடு கொண்டுதருகிறது.
நம்பிக்கை இருக்கவே செய்கிறது. பச்சை இலைகொண்டு அம்மரம் இனித் துளிர்க்கும். கவிதை நல்ல விஷயத்தை ச் சுட்டி முடிக்கிறது.
வாடகை வீட்டில் மரம் வளர்ப்போர் வீடு மாறி வேறு இடம் செல்லும்போது அவர்கள் வளர்த்து ஆளாக்கிய ஒரு மரத்தை விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயம்.வீட்டுச்சொந்தக்காரரிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார் கவிஞர்.
'வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்.'
இனி 'கனவில் வந்த சிறுமி' என்னும் இரண்டாவது தொகுப்புக்கு வருவோம். தஞ்சை அன்னம் வெளியீடு.52 கவிதைகள் இந்த க்கவிதை நூலை அழகு படுத்துகின்றன.பாவண்ணனின் வளவனூர் நண்பர் மோகனுக்கும் அவர் மனையாள் ரேவதிக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தொகுப்பு இது.
தென்பெண்ணை மீது ஆறாக்காதல் கொண்டவர் பாவண்ணன். தென்பெண்ணை அவர் ஊர் அருகே ஓடும் ஆறு.
இன்று அது காய்ந்து கிடக்கிறது.எப்போதேனும் தண்ணீர் வரக்கூடும் அவ்வளவே.
'வற்றாமல் வைத்துக்கொள்ளும் விதம்
ஆற்றுக்கும் தெரியவில்லை
மனிதனுக்கும் தெரியவில்லை'. என்கிறார் பாவண்ணன்.ஆறு உயிரோடு தன்னிடம் முறையிடுவதாகவே உணர்கிறார்.
'பொசுக்கும் வெப்பம் தாளாமல்
புரளும் போதெல்லாம்
வானத்தை நோக்கி முறையிடுகிறது
மேகங்களைக்கண்டதுமே
கண்ணுக்குத்தெரியாத கைகளை நீட்டி
காப்பாற்ற வேண்டி க்கதருகிறது.' தென்பெண்ணையின் சோகம் இங்கே வாசகனின் சோகமாய் அனுபவமாகிறது.காவிரித்தென்பெண்ணை பாலாறு ஓடி, தமிழ் நாட்டின் மேனி செழித்தகதை எல்லாம் இப்போது பேசமுடிகிறதா,காலம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு க்கேலி பேசுகிறது.
'மண்ணாகிப்போன ஆற்றின் வயிற்றில்
சாராய உலைகள் எரிகின்றன' கவிதை சமூகம் தடம் இறங்கிப்போனதை ச்சுட்டி ச்செல்கிறது..
பாவண்ணனுக்குப்பிடித்தது மரங்கள். 'ஆலமரம்' என்னும் ஒரு கவிதை அவர் மனதிற்குள்ளாக ஓங்கி த்தழைத்து நிழல் பரப்பி அவருக்கு கிச்சுகிச்சு மூட்டி மகிழ்கிறது.
'ஏரிக்கரையில் நிற்கும் மரமல்ல
அடையாற்றில் நிற்கும் மரமுமல்ல
எந்தத்தோப்பிலும் அந்த மரம் இல்லை
இந்த உலகத்திலேயே அந்த மரம் இல்லை
ஆல மரம்ஒரு கனவு' என்கிறார் கவிஞர்.காற்றிடம் கவிதை பேசும் கவிஞனுக்கு விண்மீன்களுடன் கைகுலுக்க முடிகிறது.ஆலம் விழுதுகள் அவர் கரம் பற்றி நேசம் சொல்கின்றன.
'மரத்தின் பாடல்' என்னும் கவிதையில்,
'மரத்தின் மொழி விளங்காத
மனிதக்கூட்டம்
கானத்தைக்காற்றெனச்சொல்லும்
கண்மூடி உறக்கம் கொள்ளும்' என்கிறார் பாவண்ணன்.மரம் அதன் மொழி பேசுகிறது.அது புரியாத மனிதர் கூட்டம் அதன் கீழே இளைப்பாறுகிறது.மரம் இசைக்கிறது. மனிதர்கள்அதனைக்காற்று என்கிறார்கள்.பாரதி குயிற்பாட்டிலே இப்படிச்சொல்வார்.
'கானப்பறவை கல கல எனும் ஓசையிலும்
காற்று மரங்கிளைடை காட்டும் இசைகளிலும்'
மரங்களிடை காற்று இசை எழுப்புவதை அனுபவித்த பாரதி மனத்தைப்பறிகொடுத்து நின்றிருக்கிறார்.பாவண்ணன் தென்னாட்டுத் திரிகூட மலையின் அந்த அழகில் தன்னை மறந்து போகிறார்.'உயிரின் இசை' கவிதை பெரிய கவிதை. மனத்தின் லயிப்பை சித்திரப்படுத்தும் கவியாவணம்.மலையும் அருவியும் காற்றும் பிரமிக்கவைக்கிறது கவிஞனை.கவிதைப்பிரவாகம் பாரதியின் குயில்பாட்டை நினைவுக்குக்கொண்டுவந்து இன்பம் கூட்டுகிறது.வாழுலகமும், அதன் இருப்பும் ஒதுங்கி ப்போக ஆனந்தப்பறவை களி நடனமிடுவதை க்காண வாய்க்கிறது.
'ஹைபெரியான்' கவிதையில் ஆங்கிலக்கவி கீட்சு இப்படிச்சொல்வார்.
'Mortal, that thou may'st understand aright
I humanise my sayings to thine ear
Making comparisons of earthly things
Or thou better listen to the wind
whose language is to thee a barren noise
Though it blows legend-laden thro'the trees.'
'நிலையா மனிதர்க்கு மானுடக்கவிதை சொல்லும் என் போன்ற கவியைவிட, காற்றை கவனியுங்கள் மனிதர்களே, மரங்களிடைத்தவழும் அது காவியம் பல சுமந்து அல்லவா வீசுகிறது'மனிதன் ஒருவனால் சொல்லியும் எழுதியும் சாத்தியமாகா கண்ணீர்க் கவிதை வரிகளை அவை அள்ளித்தருகின்றனவே.' என்கிறார் கீட்சு.
பாவண்ணன் 'சரித்திரம்' என்னும் கவிதையில்
'கண்கள் கைகள் கால்கள்
எல்லாம் உண்டு மரத்துக்கு'
அத்தோடு இல்லை கவிஞர் தொடர்கிறார்,
ஒவ்வொரு ஒரு மரமும் இலைவிரல் நீட்டி எழுதிவைக்கிறது.காற்றின் அகன்ற பக்கங்களிலே எழுதி வைக்கிறது. அந்த அளவு ஆழ்ந்து எழுதப்பட்ட ஒரு சரித்திரம் வேறெங்கும் இல்லை. மனிதன் ஆயுள் முழுக்க முயன்றாலும் அது அறிய இயலா சரித்திரம்.எழுதிக்கொண்டே போகிறார் பாவண்ணன்.
கவி கீட்சு இலக்கணம் சொல்வதுபோல் 'அழகுடை ஒரு பொருள், வர்ஷிப்பது நிலைத்த ஆனந்தத்தை.'
''கைவிரித்து அலையுமொரு மேகம்
நானோ அது எனத்தோன்றும் பித்து'
நோக்கும் திசை எல்லாம் நாம் அன்றி வேறில்லை எனபதை அனுபவிக்க வாய்க்கிறது பாவண்ணன் என்னும் ஒரு மெய்யான தமிழ்க் கவிஞருக்கு. சுடர் முகம் தூக்கி மானிட சமுத்திரம் நான் நான் என்று கூவிய பாரதிதாசன் நம் கண் முன்னே வந்துபோகிறார்.'தெய்வம் நீ என்றுணர்' என்னும் அந்த அத்வைத உளநிலையை அனுபவிக்காத எவரும் கவிதையின் அமுதினை வாசகனுக்குக்கொண்டுதரவும் முடியாது.
'கள்ள நடை நடந்து
காது மடல் தீண்டி
மின்சாரம் போல் இசையைப்பாய்ச்சிவிட்டு
எங்கோ ஓடி ஒளிகிறாய்
உன் தீண்டலால் எழுந்த
ஆயிரமாயிரம் அதிர்வலைகள் நடுவே
தத்தளித்துத்திண்றும் என் கண்முன்
துண்டுச்சித்திரங்களாய்
மோதிச்சிதறுகிறது உன்முகம்
அது என்ன அது என்ன
பார்க்க விரியும் கண்ணின் மடல்களை
பட்டென்று மூடிப்பரவுகிறது
உன் இசை.'
நாத இன்பம். அதனை ஒளித்து ஒளித்துவைத்துக்கொண்டு கண்சிமிட்டிக்காட்டுகிறது காற்று.உடன் நம் சிந்தனைக்கு வருவது விக்ரமாதித்தன் சொல்லும் கவிதை இலக்கணமே.
'ஒரு உண்மையான கவிதை தன்னளவில் தனி அழகு கொண்டதாகவே இருக்கிறது.ஒரு உண்மையான கவிஞன் தன்னளவில் தனி வியக்தி கொன்டவனாகவே இருக்கிறான்.ஒரு மொழி இது போல அசலான கவிதைகளுக்காவே காத்திருக்கிறது.ஒரு இனம் இப்படிப்பட்ட கவிஞர்களாலேயே கௌரவம் பெறுகிறது.'
பாவண்ணன் கர்நாடக மாநிலத்தில் வாழ்கிறார்.பிழைப்புக்குச்சென்ற பேரூர் பெங்களூரு. ஆற்றும் பணி மத்திய அரசாங்கத்ததுதான் என்றாலும் அன்றாடம் பழகுவது கன்னட மொழி பேசும் நண்பர்களோடுதானே.மக்களை ஒன்றாக இணைக்கவேண்டிய காவிரியின் கொடை அப்போதைக்கு அப்போது பிணக்கில் கொண்டு நிறுத்திப்பார்க்கிறது.கன்னடம் பயின்று அதன் இலக்கிய வளங்களை தமிழுக்குத்தந்த மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் சிகரம் என பாவண்ணன் திகழ்கிறார். ஆனால் அவரின் 'கண்ணாடி' அவருடைய அனுபவத்தை இப்படிப்பேசுகிறது.
'எந்தெந்த நெஞ்சில் நெருப்பிருக்குமோ
எந்தெந்த கைகளில் வன்மம் வழியுமோ
பதறிச்சோர்வடைகிறது மனம்
பீறிடும் அச்ச ஊற்றில்
தடுமாறிப்புரண்டோடி
கரையொதுங்கும் எண்ணச்சடலங்கள்
காற்றில் கரையாத கூச்சலால்
கால் நடுங்கும் வெளியே செல்ல
இன்னொருமொழி புழங்கும் ஊரில்
வாழத்தந்த விலை பெரிது.'
வாசகமனம் கவிதைவரிகளை வாசித்து கனத்துப்போகிறது.உயர உயர ப்பறந்தாலும் ஒரு பறவை அதன் மரப்பொந்திற்குத்தானே மீளவும் வந்து வாழ்க்கை நடத்தவேண்டிய யதார்த்தம் இருக்கிறது.
'இல்லாத இடம்' என்கிற தலைப்பில் ஒரு கவிதை பொட்டில் அறைந்த மாதிரி ஒரு நியாயம் சொல்கிறது.கவிஞருக்கு ஒரு வண்டிக்குள் பயணிக்க இடம் இல்லாதுபோனது.இடம் எப்படிக்கிடைக்கும்.பொழுதுக்கும் அவர் ஊர் சுற்றி. தனக்கென ஒரு இடத்திற்கு எங்கே போவது.மலை மரம் சூரியன் எனச்சுற்றி சுற்றி சுற்றித்திரிந்ததால்தான் இப்படி.யாரும் அவருக்காக ப்பரிந்து பேசவில்லை.பெரியவர்கள் அவரை சட்டை செய்யவில்லை.குழந்தைகள் கூட அவரை மறந்து இனிப்புத் தின்பண்டங்களைத்தேடி நிற்கின்றன.
'அவர்கள் உலகத்தில் நான் இல்லாதபோது
அவர்களோடு செய்யும் பயணத்தால் என்ன பயன்'
இது சமூகப்பிரக்ஞையுள்ள மனிதர்கள் படும் அவஸ்தை. குமரி முனையில் திருவள்ளுவருக்கு சிலை வானுயர எழுப்பலாம்.கங்கைக்கரையில் சிலை வைக்கக்கட்டுரை பக்கம் பக்கமாய் எழுதலாம். ஆனால் உழுவோரை உலகத்தார்க்கு அச்சாணியாகச்சொன்ன அந்தத்திருவள்ளுவரை யார் புரிந்துகொள்வார்கள்.வோட்டுப்பெட்டியே குலதெய்வம் என்கிற அந்த உண்மை எத்தனை யதார்த்தமாக அனுபவமாகிறது.
'கனவில் வந்த சிறுமி' என்னும் இந்நூலின் தலைப்புக்கவிதை ஒர் அழகு மலர்.வார்த்தைகளின் பிரயோகம் இங்கே கவித்திறனை மெருகிட்டுக்காட்டுகிறது.அந்தந்த வார்த்தையும் அதனதன் இடங்களில் கச்சிதமாய், ஒரு மலரின் இதழ்களெனப்பொருந்தி கவிசெய் நேர்த்திக்குக்கட்டியம் கூறுகின்றன.
'காலம் முழுக்க அவள் காலடியைத்தொடரும்
காட்டாற்றின் தடமானேன்-அவள்
கண்களில் பொங்குகின்றன கருணைக்கடல்கள்
வா வா என்றபடி முன்னே ஓடுகிறாள் அவள்
மலைகள் காடென்று போய்க்கொண்டே இருக்கிறாள்
அவள் அழைப்பென்னும் அமுதம் பருகி
ஆனந்தக்கூத்தாடும் பித்துற்றேன்
மேகங்களை நோக்கி மிதந்து செல்கிறாள் அவள்
நட்சத்திரங்களை கலைத்துப்போடுகிறாள்
ஓடுகிறேன் நடக்கிறேன் விழுகிறேன் எழுகிறேன்'
கவிதையை வாசிக்கும் தருணம் நாமும் ஓடி நடந்து விழுந்து எழும் அனுபவம் பெற்றுவிடுகிறோம் கவிதை வாசிப்பில் 'ஒய்யாரமாய் த்தவழ்தல்' வாசகனுக்குக் கண்ணெதிரே நிகழ்கிறது.
அடுத்த தொகுப்பு 'புன்னகையின் வெளிச்சம்'.சந்தியா சென்னை வெளியீடு.58 கவிதைகள் கொண்ட கவிதைப்புத்தகம் இது.முன்னுரையில் ஒரு செய்தி.'ஒரு மாவீரனுக்கே உரிய துணிச்சலோடு எல்லாத்தடைகளையும்கடந்து நிற்கிற அவர் தோற்றத்தை நினைத்துக்கொண்டதும் என் மனம் உற்சாகத்தால் நிறையும். வற்றாத நம்பிக்கைக்கும் குறையாத உற்சாகத்துக்கும் மறுபெயர்தான் தேவராசன்' அந்த இனிய நட்புக்கு இந்தக்கவிதைகள் காணிக்கை ஆக்கப்பட்டுள்ளன.பாவண்ணனின் அன்புத்துணைவியார் அமுதா.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பார்கள். அவர் அப்படியே.கவிஞர் பாவண்ணன் தன்னுரையில் அந்தப்பெண்மையின் இனிய உந்துதலுக்கு நன்றி சொல்கிறார்.'
பூ' என்னும் கவிதை குழந்தைகளின் மீது அவர் கொள்ளும் அன்பைப்பேசுகிறது.குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மொழி தனித்துவமானது. அவர்களின் நம்பிக்கைகள் செல்வதோ வேறு ஒரு தடம்.அவர்களோடு பழகி மகிழ்ச்சி கொள்ளுதல் ஒரு கலை.ஒரு வித்தியாசமான ஆளுமை. பாவண்ணனுக்கு அந்தக்கலை எளிதாகக்கைகூடுகிறது.கவிதையில் குழந்தையொன்று அவரின் கன்னம் கிள்ளிவிட்டு ஓடுகின்றது.
'முடித்தல்'என்னும் கவிதை தொலைபேசியில்பேசி முடித்த பின்னே நினைவுக்கு க்கொண்டுவரும் ஒரு விஷயம். அது தான் சொல்ல மறந்த கதை பற்றி அழகாகப்பேசுகிறது.அற்புதமாய் உரை முடித்தல் எல்லோருக்கும் கைகூடுவது இல்லை.ஏதோ விடுபட்டுப்போய் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.பாவண்ணன் தொலைபேசிக்காரர் ஆயிற்றே.பேசும் கலை அத்தனையும் செய்நேர்த்தியொடு அறிந்தவர்தான்.இருப்பினும் கவிதை இப்படிப்பேசவே செய்கிறது.

'இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக
உன்னுடன் சொல்லிப்பகிர்ந்துகொள்ள
நினைவுகளை சீய்க்கிறது மனக்காகம்'
இங்கே மனக்காகம் சீய்க்கிறது என்னும் சொல்லாட்சி வாசகனுக்கு புத்துணர்ச்சி தருகிறது. பறவைகள் கவிஞனை எப்போதும் அசைத்துப்பார்க்கின்றன.அதற்கு திருவள்ளுவர் தொடங்கி சான்றுகாட்டலாம். மனத உயிரையே பறவையாகக்காண்பவர் அவர். வனப்பறவை ஒன்றின் துயரம் கேட்டே வால்மீகி பெருங்க்ாவியம் படைத்தார்.மயிலும் குயிலும் வள்ளல் ராமலிங்கரோடு தத்துவம் பேசி மகிழ்ந்தன.ஷெல்லி என்னும் மாகவி வானம்பாடியை நோக்கினான். மகிழ்ச்சியில் பங்கு கேட்டு மன்றாடினான்.குயிலைக்கொண்டாடிய பாரதியின் கவிதைகள் தமிழின் படைப்பு உச்சமாகவே நமக்கு அனுபவமாகும்.சடாயு என்னும் ஒரு கழுகு ப்பறவை ஒரு பெண்ணின் பாதுகாவலனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு உயிர்முடித்த கதையை ராமாயணம் பேசும்.பாவண்ணனின்'பிறவி' என்னும் கவிதை காகங்களோடு அவரின் நட்பு குறித்து சிலாகித்துப்பேசுகின்றன.
'அதிகாலையொன்றில்
காக்கைகூட்டில் விழித்தெழுந்தேன்
என் வருகையை
அருகிலிருந்த நட்புக்காக்கைகள்
கரைந்து கொண்டாடின.
ஏதோ ஒரு திசையிலிருந்து
ஒவ்வொன்றய் இறங்கி வந்து நலம் விசாரித்தன
பித்ருக்காக்கைகள்.'
மறைந்த முன்னோர்களை எப்போதும் இந்தப்பறவை வழி நினைவூட்டும் நமது பண்பாட்டுக்கூறு பாவண்ணனை மட்டும் விட்டுவைக்குமா என்ன?
வாழும் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பும் ஒரு எழுத்தாளனுக்கு நிச்சயமாக இருக்கவே செய்கிறது. unacknowledged legilators தானே இலக்கியக்காரர்கள்.'நாடகம்' என்னும் கவிதை ஒரு வேட்பாளர் தேர்தலுக்கு ஓட்டுக்கேட்க வரும் அந்த காட்சியை ப்படம் பிடிக்கிறது.பல நூறு மக்கள்.அது ஒரு யாத்திரை போல்.வேட்பாளர் கைகள் வணங்கிக் குவித்தபடி.வெள்ளை உடை, அதனில் ரோஜா மணம்,இல்லை மல்லிகை மணம்,இல்லை அது எதுவோ,உணர்ச்சிப்பிரவாகத்தில் தொண்டர்கள்,கண்ணிமைக்கா மக்கள் கூட்டம்,ஆரத்தித்தட்டுக்கள் அவைபெறும் நூறு ரூபாய்ப்பணம், குழந்தைக்குத்தமிழ்ப்பெயர் சூட்டல்,தண்ணீர், தெருவிளக்கு,ரேஷன் அரிசி என்று ஆரம்பித்த பெண்களிடம் விசேஷமாக நின்றார் வாக்குறுதி தந்தார்,பயிற்சி பெற்ற நாடகக்காரர்கள் போல் எல்லோரும் கச்சிதமாக நடித்தனர்.காட்சி முடிந்தது. அந்தத்தெருவே இப்போது வேரு ஒரு காட்சிக்கு தன்னைத்தயாரித்து க்கொள்கிறது.ஓவியமாகத்தீட்டி நடப்புக்களை கண்முன்னே கொண்டு தருகிறார் பாவண்ணன். இத்தொகுப்பில் இறுதியாக
'ஆதரவு' என்னும் கவிதை ஒரு வேலைக்காரச்சிறுமி தன்னை ச்சுற்றி சுற்றி ஏங்கித்தவிக்கும் ஒரு குட்டி நாய்க்கு இடம் அளிக்க முடியாத கையறு நிலையை ச்சித்தரிக்கிறது.
தனக்கே தத்துகுத்து என்கிற வாழ்க்கை. தன்னையே நாடி வந்த அந்த குட்டி நாய்க்கு எப்படி பரிவு காட்டுவது. இது வேலைக்காரச்சிறுமியின் சோகம். அது வாசகனையும் தொத்திக்கொள்கிறது.பாவண்ணனின் கண்களில் படாத நிகழ்வென எதுவும் இல்லை.அவரின் கவிதை மனம் விரிந்து பரந்து உயர்ந்து ஆழ்ந்து நோக்குகிறது.
ஓங்கிய ஒரு மரம். அதனில் தொங்கும் கனிகள்.அணில் ஒன்று அந்த மரக்கிளையில் இங்கும் அங்கும் நகர்கிறது, விளையாடுகிறது. தொடர்கிறது அந்த அணிலின் விளையாட்டு.பாவண்ணனுக்கு மனித மரணம் என்பது அவ்வணிலின் விளையாட்டாய்த்தெரிகிறது.
'நடந்துசெல்லும் மானுடக்கூட்டத்தின்
பாதங்களுக்குக்கீழே
நிழல் போல் ஒட்டிக்கிடக்கிறது மரணம்'
என்கிறார் கவிஞர்.''நாம எங்க போனா என்ன நம்ம நெழல் நம்மோட' என்பார்களே அது நினைவுக்கு வருகிறது.அவரின் கவிதைகளைத்தேடி ஆழ்ந்து வாசியுங்கள்.இப்படி முடிக்கலாம்.
பாவண்ணன் என்னும் கவிஞரை வரவேற்போம். அவரின் கவிதை கனம் கூடியது. தமிழ்க்கவிதை இருப்புக்கு வளம் கூட்டுவது.பயிலும்போதெல்லாம் பாவண்ணன் கவிதைகள் ஒரு புத்துணர்ச்சியை ஒரு புதிய அனுபவத்தை அளிக்க வல்லன.
-------------------------------------------------------------------------

thaiyalai uyarvu sey -bharathi


'தையலை உயர்வு செய்' - எஸ்ஸார்சி


பெண்களைப்போற்றிய பேராசான் பாரதி. மாகவி பாரதிக்கு முன்னர் மகளிரின் விடுதலையில் இத்தனை ஆழமாக அக்கரை காட்டியவர்கள் யார் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் கோடிட்டுச்சொல்லும்படியாக தமிழ் மண்ணில் யாரும் இல்லை
.பாரதியின் குரு, சகோதரி நிவேதிதை மிகச் சரியாக வழிகாட்டியதனால் பாரதிக்கு மகளிரைப்பற்றிய பார்வை விசாலமானது. படைப்புத்தளத்தில் அடிவயிற்றிலிருந்து எழும் உணர்வுக்கொப்பளித்து ச்சிந்தனையை உலுக்கிட பாரதிபோல் யாரும் எழுதிடவில்லை.பாரதிதான் அதனைத்தொடங்கி வைக்கிறார்.அன்னமூட்டிய அன்னை ஆணையில் அனலை விழுங்குவோம் பாரதி முழக்கமிடுகிறார்.நிவேதிதை பாரதியின் ஞானகுரு.பாரதியின் கண்களைத்திறந்துவிட்ட மாமேதை.மெய்யான முற்போக்கின் ஊற்றுக்கண்.
கற்பினை ஆணுக்கும் பெண்னுக்கும் பொதுவில் வைத்தவன் பாரதி. திருவள்ளுவர் இது விஷயத்தில் பெண்டிரை மட்டுமே சுட்டிக் 'கற்பெனும் திண்மை' என்கிறார்.சிலப்பதிகாரமோ கண்ணகியைக்கற்பின் செல்வி என்று போற்றுகிறது.கம்பன் சீதையைத் திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வி என்று பேசுகிறார்.பாரதிக்கு கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.சமத்துவமானது.
அடுப்படியில் சமைத்தல் மட்டுமா அவள் தொழில்.சட்டங்கள் இயற்றுவாள்.பாராளப்புறப்படுவாள்.புரட்சிப்பெண் அன்றோ அவள்.ஆணுக்குப்பெண் என்றும் இளைத்தவள் இல்லை பாரதிக்கு.
பராசக்தியே பாரதிக்குக்கடவுள்.மாகாளியே அவன் கும்பிடும் தெய்வம்.சோவியத் நாட்டில் மாகாளி கடைக்கண் வைத்துத்தான் புரட்சி சாத்தியமானதுவாய் பேசுவான் பாரதி.
பாஞ்சாலி சபதத்தில் பாரத அன்னையை பாஞ்சாலியாகப்பாவித்து ப்படைத்தப் பெருந்தகையோன் பாரதி.அவரின் கவிதைகள் அனல் வீசுபவை.கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் என்று நம்பிக்கை விதை வழங்குவோன்அவன்.வெள்ளையர்களை விரட்டிய பின்னர்தான் பாரதிக்கு இந்தியத்தாய் ஆனந்தக்கூத்திடுவாள்.பாஞ்சாலியின் சபதம் பாரத அன்னையின் அடிமை விலங்கு ஒடித்த காவியமாக பாரதிக்கு அனுபவமாகிறது.நாட்டின் சுதந்திரத்தை 'சுதந்திர தேவியாய்த்தரிசித்தவன் பாரதி.
தம்ழ் இனத்துப்பெண்டிர் பிஜித்தீவின் கரும்பு வயல்களில் வியர்வையும் குருதியும் சிந்தி பாழும் வயிற்றுக்கு உழைத்துச்சாவதை எண்ணி எண்ணி ஏங்கி நின்றவன் பாரதி.நாம் அழுதுகொண்டிருக்கவா பிறந்தோம் ஆண் பிள்ளைகளா நாம்? வினா தொடுக்கிறான் பாரதி.
தமிழைத்தேனாய்ப்பாவித்தவன் பாரதி செந்தமிழ் நாடு என்று வாயினால் சொன்னாலே தேன் வந்து தன் காதிலே பாய்வதாய் உணர்ந்தவன் பாரதி.வானத்தைக்கிழித்து நீ வைகுண்டம் பர்க்கவேண்டாம்.'தமிழ் பயில்' என்று கட்டளை தருகிறான் மாகவி.தமிழின் சுவை கண்டார் இங்கு அமரர் நிலை கண்டார் என்று நெஞ்சு நிமிர்த்திப்பேசிய பெருமனதுக்காரன்..
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பேசி 'சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்' கட்டளை தருகிறான்.'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'என்று வேண்டுதல் வைக்கிறான்.
வாழ்கிற மண் மீது ஆறாக்காதல் கொண்டவன் இக்கவிஞன்.எத்தனை வளம் உண்டு புவிமேலே அவை அத்தனையும் பெற்றுச்சிறப்பாய் நிற்கிறாள் தமிழ்த்தாய் என்கிறான். தமிழ் மண்ணை பெற்ற தாயாய் நேசித்தவன்.தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற தாய் என்று கும்பிடடி பாப்பா' என்று பாடிய கவிஞன்.த்மிழ் நாட்டை முதன் முதலா 'திரு நாடு' என்று போற்றுகிறான் பாரதி.
பாரதிக்கு தமிழ், தமிழ் நாடு,இந்தியா,இப்பூவுலகு,பேரண்டம் எல்லாமே பெண் உரு தான்.பராசக்தியின் பல் வேறு காட்சி மாற்றங்கள் அவை.காலமே அவனுக்கு வனம்.காளித்தாய் பேரண்டமாம் மரத்தில் சுற்றித்திரியும் அழகு வண்டு. அத்தனையையும்.'யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய்' என்று பெண் தெய்வத்தை நிறைவாக வாழ்த்திய கவிஞன்.
பெண்பால் கவிஞர் அவ்வை மூதாட்டியை பாரதியைத்தன் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறான்.சாதி இரண்டொழிய வேறில்லை,இங்கு நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று பாடிய அவ்வையைவிட புரட்சிக்காரி யார்? நமக்கு வினா வைக்கிறான் பாரதி.
'தையலை உயர்வுசெய் என்று' வேண்டுகிறான் கவிஞன். சிறியரை மேம்படச்செய்தால் தெய்வம் அத்தனை பேரையும் வாழ்த்தும் என்கிறான்.நீ என்ன இறைவனை வாழ்த்துவது உனது செயல்பாட்டால் இறைவன் இந்த மண் மீது வந்து, உன்னை வாழ்த்தட்டும் என்று கட்டுடைத்துப்பேசுகிறான் பாரதி.
மண்னின் மாண்புகளை மதித்துப்போற்றிய மாகவி பெண்விடுதலைக்கு வெளிச்சம் பாய்ச்சிய ஞானக்கதிரவன்.
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணைவாசகத்து உட்பொருளாக அந்த பெண்தெய்வம் அவனுக்குக்காட்சியாகிறது.
'பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா' என்று கொக்கரித்த பேரன்புக்குச்சொந்தக்காரன்.பெண்விடுதலையொடு தன்னை எப்போதும் இணைத்துக்கொண்ட பாரதி பெண்விடுதலைக்குக்குரல் தந்த பொதுவுடைமையாளன். வரலாற்றில் நிலைத்த விஷயம் வணக்கத்திற்குறியஅந்தப்பேருண்மையே.
---------------------------------------------------------

ambedkaraippayiluvom


அம்பேத்காரை ப்பயிலுவோம்.- எஸ்ஸார்சி

பீமராவ் ராம்ஜி அம்பேதகார் மராட்டிய மண்,மனித சமுதாயத்திற்கு அளித்த பெருங்கொடை.சட்டவல்லுநர்,பேராசிரியர்,நீீதிமான்,சமூக விஞ்ஞானி,சமூகப்புரட்சியாளர்,சமூகப்போராளி,திறனார்ந்த அரசியலாளர்,இந்திய அரசியல் சட்ட சிற்பி, தேசியத்தலைவர் எனப்பல்வேறு சிறப்புப்பெயர்களால் போற்றப்படுபவர்.இவை அத்தனைக்கும் மேலாக ஒரு நேர்மையான சிந்தனையாளர்.புரட்சிகர ஆக்கங்களின் ஊற்றுக்கண்.
1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தந்தை ராம்ஜி சக்பாலுக்கும்,தாய் பீமாபாயுக்கும் தவப்புதல்வனாய் மராட்டிய மாநிலத்து 'மௌ'(mhow) என்னும் ஊரில் தோன்றியவர்.அம்பேத்கார் தன் குடும்பத்தில் 14வது குழந்தையாவார். இந்திய மண்ணில் உயர்வானது என்று தன்னைக்கருதிக்கொண்ட ஒரு போலிச்சமூகம் ஒதுக்கித்தள்ளிய தீண்டத்தகாதவர்கள் மத்தியில் அம்பேத்கார்' மகர் 'இனத்தச்சேர்ந்தவர்.
அம்பேதகாரின் தந்தையும், பாட்டானாரும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள்.தாய் வழியிலும் அவருக்கு ராணுவப்பின்புலம் இருந்து இருக்கிறது.போராளியாய்,வெற்றி இலக்குடையவர்களாய்,அநீதி கண்டு ஆத்திரப்படுபவர்களாய் மகர் இனத்து மக்கள் விளங்கி வந்திருப்பதும் தொடர் வரலாறு.
தனக்கு உற்ற துணையாக பள்ளியில் இருந்த அம்பேத்கார் என்கிற ஒரு ஆசிரியரின் பெயரை, நன்றிக்கடனாகத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு பீமராம்ஜி சக்பால் என்பதை பீமராம்ஜி அம்பேத்கார் என மாற்றிக்கொண்டார். அந்த ஆசிரியர் அம்பேத்கார் ஒரு பிராம்ண வகுப்பினர் என்பதுவும் குறிப்பிடப்படவேண்டும்.
பயின்ற பள்ளியில் தாங்கமுடியாத வன்கொடுமைக்கு ஆளாகி, வடமொழி பயிலுவதனின்றும் தடுக்கப்பட்டு,இழிக்கப்பட்டும் பழிக்கப்பட்டும் அம்பேதகார் கல்வி கற்றார்.கல்வியின் மீது அவர் கொண்ட காதல் ஈடு இணை இல்லாத ஒன்றாகும்.அம்பேத்காருக்கு அறிவுப்பசி எந்நேரமும் கனன்று கொண்டிருந்தது.
தனக்கு 14 வயதாகும் போது அம்பேத்கார், ரமாபாய் என்னும் ஒன்பது வயது சிறுமியைத்திருமணம் செய்துகொண்டார்.
பரோடா மன்னர் சத்யஜித்ராவ் கேக்வர்டு ,அம்பேத்கார் கல்லூரியில் சேர்ந்து பயில உற்ற துணையாக இருந்தார்.அமெரிக்க கொலம்பியப்பல்கலைக்கழகத்திலும்,இங்கிலாந்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்- லும் அவர் கல்வி கற்றார். கல்லூரிப்படிப்பு முடிந்து இந்தியா திரும்பிய அம்பேத்கார் பரோடா மன்னர் அவையில் ராணுவச்செயலாளராகப்பணியில் சேர்ந்தார்.
சாதீயக்கொடு நஞ்சு தான் பயின்றவைகளை எல்லாம் ஏறிமிதித்து கொட்டமடிப்பதைக்கண்டு அம்பேத்கார் நெஞ்சம் பதறினார்.பரோடா பணி இல்லை என்றானது. பம்பாயில் அரசியல் பொருளாதாரம் போதிக்கும் கல்லூரி ஆசிரியராகப்பணியில் சேர்ந்தார்.கல்லூரியிலும் சாதிக்கொடுமைகள் தொடர்ந்தன.கோலாப்பூர் மகாராஜா உதவியுடோடு மீண்டும் படிக்க லண்டன் பயணமாமார்.1923ல் இந்தியா திரும்பிய அம்பேத்கார் வக்கீல் தொழிலை ஏற்றுக்கொண்டார்.பார் அட் லா பட்டமும் டாக்டர் பட்டமும் இந்திய சாதியத்தின் முன் அலைக்கழிக்கப்பட்டன.
தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக லண்டன் வட்ட மேஜை மா நாட்டில் கலந்துகொண்டு தீண்டப்படாதவர்களுக்கு த்னி வோட்டு வங்கி வேண்டும் என்று குரல் கொடுத்தார்.1932ல் ராம் சே மக்டனால்டு அதை அமலுக்குக்கொணர அரசின் அறிக்கை வெளியிட்டார்.அந்த முயற்சியை எதிர்த்து மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தைத்தொடங்கினார் இந்து மக்களில் ஒரு இனத்தவரை ப்பிரித்து ப்பார்ப்பதில் காந்திஜிக்கு சம்மதமில்லை. நாம் அவர்களுக்கும் அவர்கள் நமக்கும் வோட் செய்யவேண்டும்.அவர்களுக்கு பிரதி நிதியை அவர்களே தேர்வு செய்து கொள்வது என்பது நம் சமுதாயத்தைக் கூறு போட்டுவிடும் என்றுணர்ந்த காந்திஜி தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தினார்.
தேசபிதாவை இழந்து விடுவோம் என்கிற மிக இக்கட்டான சூழ்நிலை.அம்பேத்கார் தனது நிலையை மாற்றிக்கொண்டு தேச பிதாவை காத்து உதவினார். .24 செப்டம்பர் 1932 ல் பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.தனது கோரிக்கைவெற்றி பெறுவது என்பதைவிட மகாத்மாவின் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்று விட்டுகொடுத்து உயர்ந்தார். ஆகப் பெரிய மனதுக்குச்சொந்தகாரர் அம்பேத்கார்.
மராட்டிய புரட்சிவீரர் ஜோதிபா புலே மீது அளப்பரிய மரியாதைகொன்டவராக அம்பேத்கார் விளங்கினார்.தான் படைத்த'சூத்திரர்கள் யார்'(who were sudras?) என்ற நூலை புலே க்கு சமர்ப்பணம் செய்தார்.அன்றைய சட்டசபைக்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அம்பேத்கார்.வங்க மண்ணின் தரம் எப்போதும் சற்று உய்ர்ந்தே இருப்பதை இன்றைக்கும் நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
அம்பேத்காரின் இரு அற்புத குணங்கள் கடினமான பணியை விரும்பி ஏற்பது,விமரிசனத்தை விட்டுக்கொடுக்காதது என்பன.சோஷலிசத்தில் கம்யூனிசத்தில் நம்பிக்கை வைத்திருந்த அம்பேத்கார் புத்தக் கம்யூனிசம் என்று ஒரு விளக்கம் தந்தார்.
அரிசனங்களின் கோவில் நுழைவு போராட்டம் என்பதை புறந்தள்ளிய அம்பேத்கார் 'there is nothimg in the entryof temples' என்கிறார். இங்கு எல்லாமும் அரசியல் உரிமை பெறுவதில் தான் இருக்கிறது என்று வாதிட்டார்.
அம்பேத்கார், காந்திஜியை . மக்கள் மகாத்மா என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ளாதவர்.இந்து மதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு த்துணை நிற்றல் என்பதுவே காந்திஜியின் புரிதல் என்றால் அதனைச் சகித்துக்கொள்ள முடியாது என்று மறுக்கிறார் அம்பேத்கார்.
சட்ட அமைச்சராக பிரதமர் நேருபிரானோடு பணியாற்றிய அம்பேத்கார் இந்து மத சட்ட விவகாரங்களில் தனது ஆரோக்கியமான பரிந்துரைகளை ஏற்காத மத்திய அரசாங்கத்தோடு முரண்பட்டார். பின்னர் பதவி விலகினார்.
டிசம்பர் 6 1956ல் தான் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
அம்பேத்காருக்கு ஒருவர் செய்யும் மரியாதை அண்ணலின் சிந்தனைகளைப்பயிலுதல் என்பதே.விசாலப்பார்வையும்,ஆழ்ந்த சிந்தனையும்,ஒளிர் வழித்தடமும் அம்பேத்கார் நமக்கு வழங்கிய செல்வங்கள்.
பிரச்சனைகள் சிக்கலாகி இறுகும் நமது இந்திய அரசியல் சூழலில் அம்பேத்காரின் சிந்தனைகளை மறுவாசிப்பு செய்தல் கட்டாயமாகும்.யாந்திரிகமாக மட்டுமே அவரின் சிந்தனைகளைப்பயின்று த்ன் முனைப்புக்கு இயங்கு தளமாக அதனை ஆக்கிக்கொள்வது அவரின் நினைவுக்கு விழுமியம் சேர்க்காது.
சாதியக்கட்டமைப்புச்சிக்கல்களை விளங்கிக்கொள்வது என்பது அதனை த்தனக்கு வோட்டு வங்கியாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதுவேவாக இன்றைய அரசியல்வாதிகட்கு நடைமுறையாகி இருக்கிறது. இச்சூழல் ஆரோக்கியமானது அன்று.
கல்வியால் அறிவும் அறிவால் சிந்தனையும் சிந்தனையால் செயல் சிறப்பதுவும் ஒரு தரமான சமூக தளத்திற்கு இட்டுச்செல்லும்.எது கல்வி எது அறிவு எதுசிந்தனை எதுவெல்லாம் செயல் என்பதில் அம்பேதகாரின் எழுத்துக்கள் நமக்குப்பேருதவி செய்யும்.
யார் எப்பாடு பட்டால்தான் என்ன? யார் எக்கேடு கெட்டால்தான் என்ன? தேர்தலில் வெற்றியை தருவிப்பது எப்படி என்பதுவே மனித வாழ்க்கையாய்ச் சுருங்கிப்போய் விட்டோமே நாம்.
--------------------------------------

pennaakatamபெண்ணாகடம் பெருமை பேசுவோம் -எஸ்ஸார்சி

நடு நாடு சான்றோர் உடைத்து என்று நவில்வர்.அதற்கொப்ப எண்ணற்ற ஞானியர்களைப்பிறப்பித்துப்பெருமை தேடிக்கொண்டது இந்த மண். இங்கே வரலாற்றுச்சிறப்பும் சமயத்துறையில் புகழும்,தொழில்வளச்செல்வமும் நிறைந்த நகரங்கள் பல உண்டு.அவற்றுள் முக்கியமான ஒன்று கடலூர் மாவட்டத்து ப் 'பெண்ணாடம்.'
வெள்ளாற்றங்கரைத்திகழும் பல சைவத்திருத்தலங்களில் இதுவும் ஒன்று.தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பேசும் சைவத்தை த்தூக்கிப்பிடித்த சீர்மிகு திருத்தலமே பெண்ணாடம்.
இன்று பெண்ணாடம் என்கிறோமே அது பெண் ஆ கடம் என்பதன் மரூஉ.ஒரு சமயம் தேவலோகத்து இந்திரன் சிவ பூசைக்குறிய மலர்களைக்கொண்டுவருமாறு ஒரு பெண், ஒரு பசு,ஒரு யானை என மூவரையும் பூவுலகுக்கு அனுப்பியதாகவும் இந்த ஊரின் அழகிலே மயங்கி அப்பெண்ணும், பசுவும்,யானையும்,இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஆக இவ்வூர் பெண்ணாவுகடம் என ஆயிற்று என்று தல வரலாறு பேசும்.
'தில்லை மூவாயிரவர்,கடந்தை ஆறாயிரவர்' என்ற சொல்வழக்கிலிருந்து பல நூற்றாண்டுகட்கு முன்னர் இவ்வூரில் ஆறாயிரம் அந்தணர்கள் வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.இன்றும் பாப்பான் குளம்,அரியராவியாய் அறியப்படும் அழகா ஏரி என்னும் ஊர்கள் இந்த செய்திக்கு ச்சான்றாய் நிற்கின்றன.
கார்காத்த வேளாளர்கள் மெய்கண்டாரையும் அவர் தந்தை அச்சுத களப்பாளரையும் தம் மரபினாக க்குறிப்பிடுவதற்கு இந்தப்பெண்ணாடம் தலமே காரணமாகும்.பெண்ணாடத்திற்கு வரலாற்றில் அனேக பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.அவை பெண்ணாகடம்,தூங்கானை மடம்,புஷ்பவனம்,சோக நாசனம்,சிவ வாசம்,மகேந்திரபுரம்,கடந்தை,பள்ளிகொண்டான் பட்டினம் என்பன.
பெண்ணாகடத்தை ச்சுற்றி நிற்கும் கிளிமங்கலமும்,கூடலூரும் சங்கப்புலவர்களின் தொடர்புடையன.
இவ்வூரை வளமுடையதாக்கும் வெள்ளாற்றின் மீது இருக்கும் 'ஏழு நீராடு துறைகள்' புனிதப்புகழுடன் பேசப்படுகின்றன.இவை பெரம்பலூர் மாவட்டத்து காளியாந்துறை,திருவாலந்துறை,திருமாந்துறை,ஆடுதுறை என நான்கும்,வசிட்டதுறை,திரு நெல்வாயில் அறத்துறை,சௌந்தரசோழத்துறை என க்கடலூர் மாவட்டத்து மூன்றும் ஆகும்.
திருஞானசம்பந்தருக்கு சிவிகையும் குடையும் திரு நெல்வாயில் அறத்துறையில்,யாதுமாகிய எம்பிரான் வழங்கியதாக பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
சைவ சமயத்தின் உயர்தனி நூலாகிய் 'சிவ ஞானபோதம்' இதனை இயற்றியவர் இந்த ஊரின் மெய்கண்டார்.மெய்கண்டாரின் முதல் மாணாக்கரான அருள்நந்திசிவாச்சாரியார், சகல ஆகம பண்டிதர் என வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.அவரே 'சிவ ஞானசித்தி' என்னும் அரிய நூலை வ்ழங்கிய பெருந்தகை ஆவார்.
மெய்கண்டாரின் தந்தை அச்சுதகளப்பாள பிள்ளை 13 ஆம் நூற்றாண்டில் அரசோச்சிய கோப்பெருஞ்சிங்கனின் கீழ் ஆட்சி புரிந்தவர்.தில்லை நடராசர் கோவில் கல்வெட்டுக்களிலும் அச்சுத களப்பாளர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கெடில நதிக்கரையில் உள்ள திருநாவலூரில் அரசன் கோப்பெரும்சிங்கன் மூன்றாவது ராஜ ராஜ சோழனை கி.பி. 1200ல் சிறைவைத்ததாக ஒரு வரலாற்று ச்செய்தியும் உண்டு.
யாப்பெருங்கலக்காரிகை இயற்றிய அமிர்தசாகரர் பத்தாம் நூற்றாண்டினர்.அவரின் இலக்கண நூலில் 'பெண்ணாகடத்தமர்'என்கிற சொல் பயின்று வருகிறது.
மெய்கண்டாரின் மாமன் காங்கய பூபதி ,நடு நாட்டு திருவெண்ணைநல்லூர்க்காரர்.மெய்கண்டாரின் தாய் மங்களாம்பிகை.
மெய்கண்டார் சிவ ஞானபோதம் வழங்கியதற்கு ஒரு நெடிய வரலாறு சொல்லப்படுகிறது. நந்தி தேவரின் மாணாக்கர் சனத்குமாரர்,சனத்குமாரரின் மாணாக்கர் சத்திய ஞான தரிசிகள்,இந்தப்பெரியவரின் மாணாக்கர் பரஞ்சோதி முனிகள்.பரஞ்சோதி கைலாய மலையிலிருந்து புறப்பட்டுத் தென்னாட்டு பொதிகைமலைக்கு அகத்தியமுனியைக்காணச்செல்கிறார்.அவரின் நிழல் மெய்கண்டார் என்னும் குழந்தையின் மீது பட்டுவிட பரஞ்சோதியின் விமானம் நின்று விடுகிறது.பரஞ்சோதி முனி கீழிறங்கி சுவேதவனப்பெருமாள் என்னும் அக்குழந்தைக்கு 'மெய்கண்டார்' என்னும் நாமம் சூட்டுகிறார்.அந்த மெய்கண்டார் பரஞ்சோதியிடம் சிவஞானபோதம் உபதேசம் பெறுகிறார்.
மெய்கண்டாரின் மாணாக்கர் அருணந்தியும் அவரின் மாணாக்கர் உமாபதி சிவாச்சாரியாரும் சைவ ஞானத்தில் நிகரற்று விளங்கியவர்கள்.மெய்கண்டார் கண்ட சமயம் 'சுத்தாத்வைத சைவ சித்தாந்த சமயம்' என்று வழங்கப்படுகிறது.
அச்சுத களப்பாளரின் வழிவந்தோர் இன்றும் பெண்ணாடம் மற்றும் அந்தப்பகுதியைச்சுற்றி சுற்றி இச்சைவ வரலாறு எல்லாம் தெரிந்தும் தெரியாமலும் வாழ்ந்துவருகின்றனர்.குருகுல ராயர்,கனக ராயர்,வாணாதிராயர்,பிரதானிகம்,என்ற பட்டப்பெயர்களோடு அவர்கள் அழைக்கப்பட்டதும் மறக்கப்பட்டே வருகின்றது.மணிமுத்தா நதி பிரதாபர்,விருத்தாசலத்திரியர்,கோபக்காரனார் என்கிற பட்டப்பெயர்களும் அவை ஒத்தவையே.
மெய்கண்டார் பதி பசு பாசம் இவை குறித்து ப்பின்வரும் விளக்கத்தைக்கொடுக்கிறார்.பதி-கடவுள்,பசு-உயிர்,பாசம்-உலகம். ஆணவம்,கன்மம், மாயை என்னும் மும்மலங்களை வென்று பசுவானது பாசத்தைவிட்டு பதியை அடைதல் முக்தி என்பதாம்.ஞான அளவில் நமசிவாய என்று பஞ்ச்சாட்சரத்தைத்தியானம் செய்தல் கன்ம பலன்களை நாசம் செய்யும் ஒரு யுக்தி என்றும் மெய்கண்டார் குறிப்பிடுகிறார்.இவ்வாறு சைவ த்தடத்தில் சிவ பேறு பெறுதல் மெய்கண்டாரால் உறுதி செய்யப்படுகிறது.
பெண்ணாகடம் என்னும் இத்திருத்தலம் சம்மந்தர், மற்றும் அப்பர் என்கிற திருநாவுக்கரசரால் தேவாரப்பாக்களில் ஆளப்பட்டுக்கிடக்கிறது.அருணகிரியாரின் திருப்புகழிலும் பெண்ணாடம் பற்றிப்பேசப்படுவதை நாம் குறிப்பிடலாம்.
சேக்கிழாரின் பெரிய புராணம் நமக்கு வேறு ஒரு நிகழ்ச்சியைச்சொல்கிறது.சமண சமயத்திலிருந்து விடுபட்ட அப்பர் பெருமானுக்கு பெண்ணாகடத்து தூங்கானை மாடத்து இறைவனால்தான் சைவக்குறிகளான சூலமும்,இடபமும் அமைவிக்கப்பட்டன.

'பொன்னார் திருவடிக்கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிச் செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இரும் கூற்றகல
மின்னொரு மூவிலை ச்சூலமென் மேற்பொறிமேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க்கொழுந்தே' என்று பேசுகிறார் அந்த திருநாவுக்கரசர் பிரான்.

'இக்கணம் இவர் சிவனடியார்,முன்னம் இவர் நமக்கு க்குற்றேவல் செய்தவர் என்பதற்காக கைகால் கழுவிப்பின் உணவருந்த ஒரு செம்பு நீர் அளிக்க மறுத்த தன் மனையாளின் கையைத்துணித்த சிவப்பற்றாளர். இவரே அறுபத்து மூவரில் கலிக்கம்ப நாயனார். பெண்ணாடத்தவர்.இந்த நாயனாருக்கு இவ்வூரில் திருக்கோவில் உள்ளது.
பெண்ணாகடத்து இறைவனின் திருப்பெயர் சுடர்க்கொழுந்து நாதர். இறைஅம்மை, கடந்தை நாயகி,அழகியகாதலி என்னும் இனிய தமிழ்ப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்.இக்கோவிலில் நந்திப்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்து காணப்படுகிறார்.அது பெருஞ்சிறப்பு.பெண்ணாகடம் ஊரினை வெள்ள் அழிவினின்று காத்து நின்றதால் இறைவனுக்கு பிரளகால ஈசுவரர் என்கிற திருநாமம்.
' கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்குங் கடந்தை த்தடங்கோயில்சேர் தூங்கானை மாடம்' என்று திருஞானசம்பந்தர் பேசுவார். அவரே' காதலியும் தானும் கருதி வாழும் தொல் சீர் கடந்தை' என இறைவனை அந்த இறையன்னையை அழகாக விவரிப்பார்.
இக்கோவிலின் அமைப்பு முறை பிற கோயில்களின் அமைப்பு முறையினின்று சற்று வேறுபட்டது.யானை தூங்கும் நிலையில் இக்கோயில் காட்சி அளிப்பதால் 'தூங்கானை மாடம்' என்று பெயர் பெறுகிறது.மூலவரைக்கோயிலின் உட்சுற்றில் இருந்தபடி நான்கு திக்குகளிலும் அடியார்கள் வழிபடுமாறு கல்லில் 'கண் துளை வழிகள்' செதுக்கப்பட்டுள்ளன.
மூலவர் விமானத்துக்கு அருகில் இரண்டு ஆள் உயரத்தில் ஒரு 'கட்டு மலை'. அதன் மீது ஒரு சிவன் கோவில் உள்ளது.அதனுள் உறை இறைவன் லிங்க வடிவில் 16 பட்டைகளில் தெரிகிறார். இந்த இறைவனை 'சௌந்தரேசுவரர்' என்று அழைப்பர்.
மெய்கண்டாருக்கு இவ்வூரில் ஒரு தனிக்கோயில் உள்ளது.மெய்கண்டாரின் மரபு வந்த நமசிவாய மூர்த்திகளே திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலகுரு ஆவார்.
பௌத்த சமயம் பெண்ணாகடத்தில் ஒரு காலத்தில் புகழோடு நிலவி வந்திருக்கலாம் என்பதற்கு புத்தர் ஏரியும் அதன் அருகே புத்தர் சிலையும் சாட்சிகளாய் நிற்கின்றன.சிற்றரசன் ஒருவரின் தலை நகராய் பெண்ணாகடம் இலங்கியது என்பதற்கு ஆதாரமாக 'மங்கலம்' என்று இறுதிச்சொல்பெற்று நான்கு திக்குகளிலும் நான்கு ஊர்கள் உள்ளன.அவை வடக்கே நந்திமங்கலம்,கிழக்கே கிளிமங்கலம்,தெற்கே சேந்தமங்கலம்,மேற்கே போத்திரமங்கலம் என்பனவாம்.
களப்பாளமேடு என்ற பெயருடைய பகுதி இவ்வூர் அருகே காணப்படுகிறது.இந்த மேட்டில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் களப்பாளரின் அரண்மனை இருந்திருக்கலாம் என்பதற்கு அங்கு கிடைக்கும் அள்வில் மிகப்பெரிய செங்கற்கள் சாட்சி சொல்கின்றன.

தமழ்ப்புலமையும் தமிழ் ஆர்வமுமுள்ள மக்களை இம்மண் பெற்று வந்திருக்கிறது.1934ல் கடந்தை தமிழ் ச்சங்கம் இங்கு தொடங்கப்ப்ட்டு இருக்கிறது என்பதும் ஒரு செய்தி.பொங்கல் வாழ்த்து அனுப்பும் மரபினை 1935ல் புலவர் இ.சிவகுருநாதன் இவ்வூரிலிருந்துதான் தொடங்கினார் என்பதனை தென்னாற்காடு மாவட்டம் என்னும் நூலில் எஸ். எம். லட்சுமணன் செட்டியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தன் பழம்பெறும் வரலாறுகளை முதிர்ந்த பண்பாட்டுக்கூறுகளையெல்லாம் மறந்து ஆரவாரம் ஏதுமற்ற சிறு நகரமாய் காட்சி தருகிறது.ஆழ்ந்து நோக்குபவர்கட்கு மட்டுமே இந்த மண்ணின் விரிவும் ஆழமும் தென்படக்கூடும்.
கரும்புப்பயிர் இம்மண்ணில் செழித்து வளருகிறது.இதனைப்பயன்கொண்டு அருணா சர்க்கரை ஆலை என் கிற பெரிய நிறுவனம் செல்வர் மருதப்பிள்ளை என்பவரால் இவ்வூரருகே இறையூரில் நிறுவப்பட்டது. இறையூரில்தான் சம்பந்தப்பெருமானுக்கு இறைவனும் இறைவியும் விருந்து படைத்ததாகப்புராணச்செய்தி
இந்த சுற்றுப்பட்டு மக்களுக்கு ஒரு பெரும் ஆதாரமாக அருணா ஆலை நடைபோட்டது.இன்று அருணாவுக்கு 'அம்பிகா சர்க்கரை ஆலை' என்று பெயர் மாறி இருக்கிறது.இரண்டு சிமெண்ட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் இவ்வூர் வெள்ளாற்றங்கரையின் தெற்கே நிறுவப்பட்டுள்ளன.
தத்துவ உலகில் சீர்மிகு சைவ சித்தாந்தம் இந்தமண்ணின் தனிப்பெரும் கொடையாகும்.ஆனால் காலம் எல்லா நல்ல விஷயங்களையும் கொள்ளைகொண்டு விடுமா என்கிற அச்சம் எழத்தான் செய்கிறது.
தமிழர் மதமான சைவத்தை உயிர்ப்பித்து ஆய்ந்து ஆய்ந்து செழுமைப்படுத்திக்காக்கும் நெறி காட்டும் நாயகர்களுக்குத்தான் எங்கு போவது.எல்லாம் இருந்தும் சைவமடங்கள் கண்களைமூடி மௌனம் காப்பதற்கு ஒரு நியாயமே இல்லை.
தமிழக ஐம்பதாண்டு அரசியலில் நாம் தொலைத்துவிட்ட செல்வங்களுள் தலையாயது 'தமிழ்ச்சைவம்' என்பது நமக்கு என்றேனும் விளங்குமா?யாரிட்ம் கோபித்துக்கொண்டு எத்னைத்தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்கிற விஷயம் நமக்கு எப்போது எட்டும்?
------------------------------------------------------------------

vellam 5


சென்னையில் வெள்ளம் - 5

ஆட்டோக்காரன் தனக்குத்தெரிந்த வெள்ளச்செய்திகளை சொல்லிக்கொண்டேபோனான்.'அடையாற்று த்தண்ணீ நந்தனம் ரோடுல.மெட் றோவுக்கு வெட்டுன ரோட்டுக் குழியில  பூந்து பொறப்புட்டுடுச்சி.ஆத்துல என்னா என்னாவோ  வூட்டு ஜாமானுவ மொத்தமா அடிச்சிகினு போனது. பத்து பைசா நீ கேட்டா  உனக்கு  குடுப்பானா.எல்லாம் போவுது கடலுக்கு'.

லேசான தூரல்.எந்த பேருந்தையும் சாலையில் காணோம்.எல்லா பேருந்துகளும் ஓரங்கட்டப்பட்டு அசிங்கமாக நின்றுகொண்டிருந்தன.பேருந்துக்காரர்கள் வண்டியை எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தனர்.எந்த சாலை எது வரைக்கும் நல்லபடியாக இருக்கும் என்பதே அனுமானிக்க முடியாமல் இருந்தது.பந்தோபஸ்துக்கு என நின்றுகொண்டிருந்த போலிசுகாரர்கள்'வண்டி போனா ஏறுங்க.எதயும் ஒண்ணும் உறுதியா சொல்ல முடியாது' என்றனர்.மக்கள் ஆங்கங்கே நின்று நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
'எல்லாம் ஏரியையும் ஒடச்சி உட்டுட்டானுவ.பின்ன என்ன செய்வ.செம்பரம் பாக்கத்தை இப்பிடி  தொறந்ததுதான்  பெரிய ஆபத்து' என்று பேசிக்கொண்டனர்.
ஆட்டோக்காரன் அண்ணாசாலையில்  நடு ரோட்டில் ஓட்டிக்கொண்டிருந்தான்.சாலையில்தான் பேருந்துகள் இல்லையே.சைதாப்பேட்டை வந்தது.மக்கள் கூட்டம்கூட்டமாக நின்று அடையாற்றை வேடிக்கை பார்த்தனர்.
'தண்ணீ ரோட்டுல ஆக்ரோஷமா பொறண்டுபோச்சி. இப்ப செத்த  அடங்கிப்போவுது.கர ஓரம் இருந்த சனம் கோ   ன் னு கத்துகிட்டு மூலைக்கு ஒண்ணா ஒடுனது.எந்த கதயை சொல்லுவ' என்றான் ஆட்டோ ஓட்டி
.                                                   சைதாபேட்டை மைன்ரோடெல்லாம் கசா முசா என்று கிடந்தது.ஊரே எதுவோ புதிய கோர  உருவத்தைத்தாங்கிய மாதிரிக்குத்தெரிந்தது.
கலைஞர் மணிவிழா நினைவு வளைவு தாண்டி ஆஜானுபாகு பனகல் மாளிகையோ  எனக்கு மட்டும் ஒன்றுமில்லை என அப்படியே நின்று கொண்டிருந்தது.அடையாற்றில் இன்னும் மழை த்தண்ணீர் கோபமாகத்தான் சீறி நுரைத்துக்கொண்டோடியது. கரையைக்கடந்த  மழை நீர் ஊரை அச்சுறுத்தியது மட்டும் இப்போது  கொஞ்சம் அடங்கிவிட்டிருந்தது. ஆற்றின் கரையோரம் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் குடியிருப்புக்கள் சிதறிக்கிடந்தன.குப்பையைக்கிளறிக்கொண்டு சிலர் இங்கும் அங்கும் நின்று கொண்டிருந்தார்கள். தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக கண்ணில் தென்படும் அந்த இடங்களெல்லாம் வெறிச்சோடி க்  காட்சியாயின. அவை எங்கேனும் பாதுகாப்பான  மேடான இடம் நோக்கிச்சென்றும்  இருக்கலாம். கட்சிக்கொடி மரங்கள் அங்கங்கு தென்பட்டன. அவை கொடியைத்தொலைத்துவிட்டு அம்மணமாக நின்று கொண்டிருந்தன.ஆகாயத்தில் கழுகுகள் ஏகத்துக்கு விர்விரென்று பறந்தன.வட்டமிட்டன.அடையாற்றில் அடித்துவரப்பட்ட குப்பை கூளங்கள் ஆற்றின் கரை ஓரம் மலையெனக்கிடந்தன.சாலையில் பேருந்துகள் இங்கொன்றும் அங்கொன்றும் நிறுத்தப்பட்டு இருந்தன.சில அவை எங்கே செல்கிறது என்பது சொல்லும் பலகையைத்தொலைத்துவிட்டிருந்தன.
மக்கள் நம் கையில் ஒன்றும் இல்லை எது நடக்கணுமோ அது நடக்குது என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பதைப்பார்க்கமுடிந்தது. அனுபவித்த மழை நீர் அச்சம் மக்களை அப்படிப்பேச வைத்தது.ஆட்டோக்காரன் எங்களை கிண்டியில் கொண்டு சேர்த்துவிட்டான்.கிண்டி ரேஸ் கோர்ஸ் முன்பாக ரயில் நிலையம் வெறிச்சொடிக்கிடந்தது.

ரயில் எதுவும் ஓடவில்லை. நின்றிருந்த ரயில் பெட்டிக்குள் சில மனிதர்கள் அடைத்துக்கொண்டு கிடந்தார்கள்.அவர்களை அங்கிருந்து யாரும் விரட்டிவிடவில்லை என்பது மனதிற்கு ஆறுதலான விஷயம் . ரேஸ் கோர்ஸ் சாலையில் நரிக்குறவ்ர்கள் கும்பல் கும்பலாக நின்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.அவர்களுக்கு நடுவாக ஒரு சவம் ஒன்று கிடத்தப்பட்டிருந்தது. அது ஆணின் சடலமோ பெண்ணின் சடலமோ  தெரியவில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் புரியவில்லை.சத்தம் மட்டும் அதிகமாக வந்துகொண்டே இருந்தது
.ரயில் ரோடு ஒட்டி  ஓரமாக வந்த எங்களின் ஆட்டோ   கே வி  கல்யாண மண்டபத்தைத்தாண்டியது  எங்கு எங்கெல்லாமோ சுற்றி பிருந்தாவனம் நகர் மையின் ரோடை ஆட்டோ சென்றடைந்தது.இதுவே பெரிய சாதனையாக நான் உணர ஆரம்பித்தேன்.
'இதுலயே ஆதம்பாக்கம் அந்த  சக்தி நகருக்கு  போயிடலாம்'
என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.ஆட்டோக்காரன்' எனக்கு ஒண்ணுமில்ல.எது வரைக்கும் போமுடியுதோ அதுவரைக்கும் நான் வர்ரேன்.காசு கணக்கு பாக்காதிங்க .போவுற  தூரம்  பாத்து அதுக்குத்தக்கன போட்டுக்குடுக்கணும் ஒரு .மனுஷன் இதுல ஆட்டோ ஓட்டிகிட்டு வர்ரதுதான் பெரிசு. எனக்கும் குடும்பம் புள்ள குட்டிங்க இருக்குது.வவுத்து பொழப்புக்குத்தான் நானு வர்ரன்' சொல்லிக்கொண்டான்.என் மனைவி என்னைப்பார்த்துக்கொண்டாள்.அவன் சொல்வதும் சரிதான் என்கிற விதமாக அவளின் பார்வை இருந்தது.
சாலை எங்கும் மழை நீர்..நண்டுகள் நத்தைகள் அட்டைகள் பாம்புகள் தவளைகள் மரவட்டைகள் என ஊர்ந்துகொண்டே இருந்தன.சில அரைபட்டும் பிளவு பட்டும் நாறிக்கொண்டு கிடந்தன.காக்கைகள் தம் பசிக்கு அவைகளை கொத்திகொண்டே இருந்தன.சாலைகள் மீதெல்லாம் தண்ணீரும் தழை களுமாகக்கிடந்தன.பிருந்தாவன் நகர் மெயின் ரோடில் எந்தக்கடையும் திறந்து இல்லை. மூலைக்கொன்றாக கை பம்புகள் மட்டும் லொபுக் புடுக் என்று குரெலழுப்பிக்கொண்டு தண்ணீர் தந்தன.அந்த ஓலி மட்டும் ஓயவே இல்லை.மழை தூறுவதும் பின்னர் விடுவதும் என அது   இன்னும் நின்றபாடில்லை.தெருக்களில் முழங்கால் மட்டும் தண்ணீர். பள்ளமான தெருக்கள் இன்னும் மோசமாக இருந்தன.வீதி ஓரங்களில் நின்றுகொண்டிருந்த கார்கள் கண்ண றாவியாகக்காட்சி தந்தன.மழைக்  காற்றில் முறிந்து விழுந்த வாழை மரங்களின் காய் பூ தண்டு என சாலையில் பெண்கள் விற்றுகொண்டு போனார்கள்.முருங்கை பப்பாளி கீரை வகைகள் வியாபாரமாயின.
பிருந்தாவன் நகர் மையின் ரோடின் கடைசி பகுதி வந்தாயிற்று. இரண்டு பக்க தெருக்களில் பார்க்கும் தூரம் எல்லாம் தண்ணீர் நின்றுகொண்டிருந்தது.ஏ டி எம் கள் நோயுற்றுக்கிடந்தன.பத்து கடைகளுக்கு ஒரு கடை திறந்து வைத்திருந்தார்கள்.உடனுக்குடன் மூடி க்கொண்டார்கள்.சரக்குகள் எதுவும் வந்தால்தானே வியாபாரம் உயிர்ப்போடு நடக்கும். எதற்கும் வழி இல்லையே.சக்தி நகர். குறிஞ்சி தெரு வாந்தாயிற்று.
இரண்டாம் முறை அண்ணன் வீடு.அண்ணன் வீடு என்றால் அண்ணன் மகன் வீடுதான்.அண்ணன் தருமங்குடி கிராமத்தை விட்டு க்கிளம்பி ஆண்டுகள் சில ஆகிவிட்டன.ஆறு மாதம் ஒரு முறை என தருமங்குடி வீட்டை எட்டிப்பார்ப்பார். எங்கள் அம்மாவின்வீடு. அம்மாதான் எங்களுக்கு அதனை கொடுத்துவிட்டு கண்ணை மூடினார். அம்மா உயில்படி அதில் எங்களுக்குச்சரி   பங்கு. அந்த வீட்டை  ப்ழுதுபார்ப்பதே பெரிய வேலை.வீட்டை யாருக்கும் வாடகைக்கு விட்டுவிடலாம்.ஆனால் நல்ல மனிதர்கள் வேண்டுமே.அதற்கு எங்கே போவது.அதுதானே   இன்றைக்கு மிகவும் சிரமம் .
                                     அண்ணன் எங்கள் எல்லோரையும் அன்பாக வரவேற்றார்.
'நீங்க வந்த முகூர்த்தம் கொஞ்சம் கரண்டு வந்து இருக்கு'
'ரொம்ப சந்தோஷம்.கரண்டு பாத்து அஞ்சி நாளாச்சி.இண்ணைக்கி ஆறாவது நாள்'
'இது எவ்வளவு நாழி இருக்கும்னு சொல்லமுடியாது.அதானால எது முக்கியமோ அத செஞ்சினூடணும்'
'சரி அண்ணே.மொதல்ல செல் போன்  சார்ஜ் போடணும்'
'சார்ஜ் போடலாம்.போன் வேல செய்யணுமே.எங்க பாத்தாலும் தண்ணியாச்சே'
'சார்ஜ் போட்டு வச்சிகுங்க. அப்புறமா பேசறது பேசாதது எல்லாம் பாத்துகலாம்'
அண்ணி  அருகே வந்தாள்.
'மொதல்ல கை கால் அலம்பிகோங்க. சாப்புட வாங்கோ சாப்புடுங்கோ அப்புறம் பாக்கி கதங்க . எப்ப சாப்புட்டுதோ நீங்க'
அண்ணி  சொல்லி நிறுத்தினாள்.அண்ணி  எப்போதும்  அப்படித்தான்.அன்னபூரணி.
'கொஞ்சம் துணிய தொவைக்கணும் மொதல்ல'
என் மருமகள் சன்னமாக ஆரம்பித்தாள்.
'மோட்டார் பொயிண்டிருக்கு. அந்த காரியமும் முக்கியம். ஆதம்பாக்கத்துலதான் கரண்டு மொதல்ல குடுத்து இருக்கான்.இன்னும் தி.நகர்ல எல்லாம் கரண்டு வல்ல'
அண்ணன் சொல்லிக்கொண்டார்.
'பேப்பர் வர்ரதா என்ன'
'பேப்பரா அது பாத்து எவ்வளவு நாளாாச்சி' அன்ணன் பதில் சொன்னார்.
'டிவி இல்லே.ரேடியோங்கறதுமறந்து போச்சே.மொபைல் வேல செய்யாது. தண்ணிக்கு  கை பம்பு  .எதனா ஒரு எண்ணெய் போட்டா  திரியில  எரியும் காமாட்சி வெளக்கு. இதுதான் இப்ப வாழ்க்கே'
'கெணரு எல்லாம் நாசமாயிட்டுது.கை பம்புன்னு ஒண்ணு இருக்கு.அங்கங்க லொடுக்கு புடுக்குன்னு சப்தம் வர்ரதே'
அண்ணா சொல்லிக்கொண்டார்.
ஃபேன் ஓடிக்கொண்டிருக்கிறது.கரண்ட்தான் வாழ்க்கை என்றாகி எவ்வளவுகாலம் ஆகி விட்டது.மின்சாரம் இல்லாட்டா பைத்தியம் பிடித்த மாதிரி ஆயிடுது'
'இண்ணைக்கி இங்க கரண்டு வந்துருக்கு.அங்க பழைய பெருங்கள த்தூர்ல எல்லாம் எப்படி இருக்குமோ?'
'நானும் என்பையனும் போயி பார்க்கணும்.பார்த்தாதான் தெரியும் என்ன எல்லாம் ஆயி இருக்குன்னு'
' பாத்தாதான் தெரியும்.மேற்கொண்டும்  என்ன செய்யணும்னு' அண்ணன் சொல்லிக்கொண்டார்.ஆதம்பாக்கம் அண்ணன்வீட்டிலே மதிய உணவு சாப்பிட்டோம்.சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு பழைய பெருங்களத்தூர் சென்று வீட்டை பார்த்துவரலாம் என்கிற தீர்மானம்.
'காபி சாப்பிடுங்கோ உடனே பொறப்படுங்கோ' என் மனைவி கட்டளை தந்தாள்.
'எப்பிடிப்போவேள்' மன்னி கையில் காபிக்குக் கழுவி வைத்திருந்த டபரா செட்டோடு ஆரம்பித்தாள்.
'நன்னா விஜாரிச்சுக்கணும். மின்சார ரயில் பத்து நாளைக்கு அப்பறம் இண்ணைக்கு சாயந்தரமா பொறப்படும்னு சொல்றா.தாம்பரத்திலேந்து         முடி ச்சூர் போற அந்த ரோடு எப்பிடி இருக்குமோ,நல்ல நாள்ளயே நாழி பாலுக்கு வழி இல்லாத சேதிதான,இப்ப என்ன கிழிச்சுடப்போறது'
'மொதல்ல பொறப்பட்டு போயிபாக்கட்டும்.அந்த ரோடு சரியில்லன்னா புது பெருங்களத்தூர் போயி அங்கே இருந்து ஏரிக்கர ஓரமா போற ரோடுல நடந்தே கூட பழைய பெருங்களத்தூர் போயிடலாம்' என் மனைவி தன் ஓரகத்திக்குப்பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அண்ணன் குடும்ப த்திற்கும் எங்களால் எவ்வளவோ அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் வேறு என்ன செய்வது? அவருடைய மனைவி மகன் மருமகள்,பேத்தி என அவர்களோடு நாங்கள் குழந்தையைச்சேர்த்து ஐந்து பேர்.ஒருவேளைக்குப்பத்து பேருக்கு சமைத்தாகவேண்டும்.இதில் யாருக்கேனும் ஒருவர் இருவருக்கு உடல் அசௌகரியமாகிவிடும்.டாக்டரைக்கண்டுபிடிப்பதே சிரமம். ஆஸ்பத்திரி போய் வருதல் இன்னும் சிரமம்.ஏடிஎம்கள் சவம் என தூங்கிக்கொண்டு கிடந்தன.பணப்புழக்கம் நொண்டிதான்  அடித்துக்கொண்டு இருந்தது.தி.நகர் சின்ன அண்ணன் வீட்டிலோ இன்னும் கொஞ்சம்  தங்கி இருப்பது முடியாத துபோல் ஆகிவிட்டது.வீடு சிறியது.அவரின் மகள் வீட்டில் இருந்தாள்.அதுதான் கொஞ்சம் ஒத்தாசை.
காபி சாப்பிட்ட கையோடு நானும் என் பெரிய பையனும் நேதாஜி நகருக்குப்புறப்பட்டோம்.
சிறிய குடைகள் இரண்டு.டார்ச் விளக்கு குடிப்பதற்குத்தண்ணீர் என்று எடுத்துக்கொண்டோம்.
'வீட்டுசாவி இருக்கா'
'பத்திரமா இருக்கு' பையன் சொன்னான்.முதல் தளத்தில் நாங்கள் இருந்தோம்.கீழ் தரைதளத்தில் என் சின்ன பையனின் குடும்பம். அவனுக்குத்தான்  பெங்களூரில் வேலை.அவன் மனைவி பிரசவத்துக்குப்போயிருக்கிறாள். இது விஷயம் முதலிலேயே நான் குறிப்பிட்டபடிதான்.  அங்கு ப்பேரன் புண்யகாவசனத்திற்கு திருச்சிக்குப்போய் திரும்பும் சமயம்தானே இத்தனை மழையும்.திருச்சியில் நன்றாகத்தான் வெய்யில் அடித்தது.காவிரியில் கருத்துசலசலத்த கருஞ்  சாக்கடையையும் கொள்ளிடத்தில் மணல் மைதானத்தையும் தான் கண்டு வந்தோம்.சென்னையில்தானே இந்தக்கொள்ளை சமாசாரம்  எல்லாம்.
பிருந்தாவன் நகர் மையின் ரோடில் ஒரு ஆட்டோ பார்க்கமுடியவில்லை.ஆதம்பாக்கம் டி ஏ வி பள்ளி இருக்கும் தெருவில் மழை நீர் நிறைத்துக்கொண்டிருந்தது.அந்தப்பள்ளியில்தான் என் அன்ணனின் பேத்தி படித்துக்கொண்டிருந்தாள்.இந்த பேத்தியின் படிப்புக்காகத்தான் என் அண்ணன் நேதாஜி நகரில் என் வீட்டூக்கு அடுத்த வீட்டு ஜாகையைக்காலிசெய்துவிட்டு இந்த ஆதம்பாக்கம் எனும் கொசு க்ஷேத்திரத்திற்கு   வந்து சேர்ந்தார் .இல்லாவிட்டால் இந்த செம்பரம்பாக்க வெள்ள   அவஸ்தையை எல்லாம் இரண்டு குடும்பமும் சேர்ந்து பட்டுக்கொண்டிருக்கும்.அது ஏதோ நல்லகாலம். அண்ணன்  இங்கு  வந்ததால் எங்களுக்கு  ஒதுங்க ஒரு இடம் கிடைத்தது.
பிருந்தாவன் பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் எங்களைப்போல் இருவர் நின்றுகொண்டிருந்தனர்.
'பஸ் வருதா' என்றேன்
'உங்களுக்கு ஏதும் தெரியுமான்னு பாத்தேன்'
பெரியவர் எனக்குப்பதில் சொன்னார்.
'எலக்ட்ரிக் ட்ரைன்  போவும்னு சொன்னாங்களே'
'அங்க போனாதான் நமக்கு அந்த சேதி என்னன்னு புரியும்'
அவர் மீண்டும் எனக்குப்பதில் சொன்னார்.
'இங்க கரண்டு இல்ல.தெருவுல மழைத் தண்ணி.கேபிள் முழுகி கெடக்கு.உங்க பக்கம்'
அவரே மீண்டும் ஆரம்பித்தார்.
'குறிஞ்சி நகர்ல கரண்டு வருது உடனே   போவுதுன்னு சொல்றாங்க'
'உங்களுக்கு எந்த ஊரு'
'முடிச்சூர் ரோடுல பழைய பெருங்களத்தூரு'
'முடிச்சூர்னா கேக்கவே வேண்டாம்.அங்கதான் ரொம்பவும் பிரச்சனை.அப்புறமா அந்த  வேளச்சேரி'
'நீங்க சொல்றது ரொம்ப  சரி' பதில் சொன்னேன்.
அவர்கள் ஒன்றும் அசைவதாக இல்லை. அங்கேயே நின்றுகொண்டு இருந்தனர்.
'பஸ் ஆட்டோ எதாவது வருணும்.நாங்க அததான் பாக்குறம்'
பெரியவர் பதில் சொன்னார்.அவருக்கு அருகில் நின்றிருந்தவர் கண்களில் கருப்புக்கண்ணாடி போட்டிருந்தார்.காட்டராக்ட் ஆப்ரேஷன் செய்துகொண்டிருக்கவேண்டும்.அவர் வாயையே திறக்கவில்லை.கையில் பெரிய  குடை ஒன்று  கட்டை பிடிபோட்டது வைத்திருந்தார்.
மழை எப்போதும் வரலாம் என்றபடிக்கு வானம் இருந்தது.நாங்கள் இருவரும் மவுண்ட் ஸ்டேஷன் நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.தெருக்கள் எல்லாம் ஒரே  நாற்றம்.அங்கங்கே எலிகள் பெருச்சாளிகள் செத்துக்கிடந்தன.பூனைக்குட்டிகள் இறந்து அந்த உடல்களை காக்கைகள் தம் அலகுகளால் கொத்தி க்கொத்தி இழுத்து விகாரப்படுத்தி மனசை இம்சித்தன.காற்று மழையில் முறிந்த வாழைமரங்களின் குலைகள் தார் தாராய் வீதி ஓரத்தில் பரப்பிவைத்து விற்றுக்கொண்டிருந்தாள் ஒரு பெண். காயை பூவை   வாங்குவதற்குத்தான் அங்கே ஆட்கள் யாரும் வரவே   இல்லை.டீக்கடை மூலைக்கொன்று திறந்து வியாபாரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள் விமானங்கள் என தாழப்பறந்து சேதங்களை நோட்டமிட்டன.ஆட்டோகாரர்கள் தமது வண்டிகளை சீர்செய்துவிட்டு யாரேனும் அழைக்கிறார்களா எனத்துழாவிக்கொண்டு நின்றனர்.
'ரயிலு ஓடுனா சனம் வரும்' என்றான் ஒரு ஆட்டோக்காரன்.
'ரயிலு ஓடுதா' என்றேன்.
'இப்பறம் போவும்னு சொல்றாங்க' எனக்கு பதில் சொன்னான் அவன்.
மவுண்ட் ஸ்டேஷன் சமீபமானது.அருகிருந்த ஏ டி எம் கள் ஜீவனற்று  கோரமாய்க் கிடந்தன .அவைகளைச் சுற்றிலும் தெரு நாய்கள் காதல் வயப்பட்டு ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு நின்றன.மன்மதனுக்குத்தான்  ஒய்வேது .அவைகளும் பாவம்  என்னதான் செய்யும் எண்ணிக்கொண்டேன்.மழை நீர் ஏ டி எம் உள்ளாக புகுந்து தரை முழுவதும் சொத சொத என்றிருந்தது.
புக்கிங் கவுண்டர் முன்பாக சொல்ல முடியாத கூட்டம்.முதல் ரயில் அல்லவா வரப்போகிறது.எத்தனயோ நாட்களாக  தண்டவாளங்கள் ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டன.இப்படி ஏதும் நிகழ்ந்தால்தானே தண்டவாளத்திற்கும் ஓய்வு.எண்ணிப்பார்த்தேன்.உலகம் சுழல்வதும் அது சூரியனைச்சுற்றிக்கொண்டு சாய்ந்தபடியே வருவதும் நின்று விட்டால் என்னவாகும். மனிதனின் சிறிய அறிவுக்கு விடை தென்படாத  வினாக்கள்  குறித்து யோசித்துத்தான்  என்ன பிரயோசனம்.
                                                     டிக்கட்  வாங்கஇருவரும் வரிசையில் நின்றோம்.முதலில் ஒரு கவுண்டர்தான் இயங்கிக்கொண்டிருந்தது.திடீரென மற்றொரு கவுண்டரும் திறந்துகொண்டது. டிக்கட் வழங்க ஒரு பெரியவர் ஆயத்தமானார். ரயில் வருவது உறுதிதான்.
'நீ போய் அந்த வரிசையில் நில்லேன்.நான் இங்கு நிற்கிறேன்'
'அதுவும் சரி' என்று பதில் சொல்லிய பையன் அந்த கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டான்.
யார் முதலில் டிக்கட் வாங்கினாலும் அடுத்தவரிடம் உடன் வந்து சொல்லிவிடுதல் மிக முக்கியம் எச்சரிக்கை செய்து கொண்டோம்.தாம்பரம் வரை போகும் ரயிலா இல்லை செங்கல்பட்டு வரை செல்லும் ரயிலா வரப்போகிறதா என்கிற விஷயம் இன்னும் ருசுவாகவில்லை.முன்பாக  நிற்பவரிடம் தயங்கித்தயங்கி கேள்வி வைத்தேன்.
'நீங்க எங்கப்போகணும்'
'நான் பெருங்களத்தூர் போகணும்' அவரின் கேள்விக்குப்பதில் சொன்னேன்.
'நான் சிங்கப்பெருமாள் கோவில் போகணும்' அவர் மீண்டும் சொன்னார்.
'டிக்கட் வாங்கும்போதுதான் அது தெரியும்போல'
'இப்ப சரி' என்று சொல்லி நிறுத்திக்கொண்டார்.நான்தான் டிக்கட் வாங்கபோகிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அதற்குள் என் பையன்'நான் வாங்கிட்டேன் நீ டிக்கட் வாங்காதே' என்று ஓங்கிக்குரல் கொடுத்தான்.
நான் வரிசையைவிட்டு வெளியில் வந்தேன்.எனக்குப்பின்னே நின்றவரின் முகம் சற்றுப்பிரகாசம் கூடியது.மனிதர்களுக்கு எதில் எதிலோ ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.திருப்தி அதிருப்தி என்பவைகளின்  மனக் கோர்ப்புதான் இந்த மானிட வாழ்க்கை.
பரங்கிமலை ரயில் நிலையத்தைத்தான் மவுண்ட் என்கிறார்கள். ஒரு சிலர் சென்ட் தாமஸ் மவுண்ட் என்று முழுப்பெயரையும் சொல்வதுண்டு. இங்கு தண்டவாளத்தைத்தவிர மற்ற இடங்களில் எல்லாம் மழை நீர் ஆக்கிரமித்து   நின்றுகொண்டிருந்தது.
'தண்ணி இன்னும் இருக்குது பாரு' என்றேன்.
'மழத்தண்ணி எங்க போவுணும்னுகற சிந்தை இல்லாமதான்  ஜனங்களுக்கு  சென்னையில வாழ்க்கை.சுயநலம்தான் இங்க  மூச்சுக்காத்துன்னு ஆகிப்போச்சு' என் பையன் தனக்குத்தெரிந்ததைச்சொன்னான்
                                  .' பயணிகளுக்கு ஓர் கனிவான அறிவிப்பு செங்கல்பட்டு வரை செல்லும் தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது நடைமேடையை வந்தடையும் இது எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.'என்னும் அந்த  அறிவிப்பு வந்தது.நடைமேடையில் நல்ல கூட்டம்.எப்படியாவது ஏறித்தான் ஆகவேண்டும்.காவல் பணியாளர்கள் விசில் ஒலி எழுப்பி உஷார் படுத்திக்கொண்டிருந்தார்கள்.நடைமேடையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தத்தமது கைகளில் ஏதோ ஒன்று வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.நிலைய அதிகாரி அறை முன்பாக ரயில் பணியாளர்ஒரு  பெண்தான் கையில் சிவப்புக்கொடியும் பச்சைக்கொடியும் வைத்துக்கொண்டு ரயில் வருவதை நோக்கிக்கொண்டிருந்தார்.ரயில் வருவதற்கான அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது.தூரத்தில் ஒரு ராட்சத மண் புழு ஒன்றின் தலை மாதிரிக்கு ஒன்று தெரிந்தது.ஆம்  ரயில் வண்டி வந்தது.நடை மேடையில் வந்து  நின்றுகொண்டது.மவுண்ட்  நிலையம் இறங்குபவர்கள் கட கட என இறங்கினார்கள்.ஓரிருவர் தட்டுத்தடுமாறி கீழே இறங்கினர்.ஏறுகின்ற கூட்டம் பட் பட் என தன்னை வண்டியில் திணித்துக்கொண்டு இருந்தது.
'இன்னும் இந்த ரயில் பிச்சைக்காரர்கள் தம்தொழிலை ஆரம்பிக்கவில்லை' என்றேன்.
'இன்னும் ரெண்டு நாட்கள் ஆகாதா.'
'சென்னையில் ரயில் பிச்சைக்காரர்கள் ஒரு அழகுதான்.நீட்டாக ஆடை அணிந்து கொண்டு.நல்ல காலணியும் போட்டுக்கொண்டு நடக்கிறார்கள்.நல்ல தமிழில் பேசுகிறார்கள்.இருக்கைகள் காலியாக இருந்தாலும் அமரவே மாட்டார்கள்.அவர்களே பிச்சை போடுபவர்களுக்கு ச்சில்லரை கொடுத்தும் உதவுகிறார்கள்.பாதி பேருக்கு மேல் ஊனமுற்றவர்கள்.கண் தெரியாதவர்கள் சற்று அதிகம்.எல்லோருமே ஒழுக்கமானவர்களாகத்தான் தெரிகிறார்கள்'
' நீ என்ன அவர்களுக்கு சங்கம் வைத்து நடத்துவது போல ப்பேசுகிறாய்'
'இல்லயப்பா ஏதோ தோன்றியது சொன்னேன்'
'திரு நங்கைகள் ரயிலில் காசு கேட்பதை ப்பார்த்து இருக்கிறாயா நீ'
'அவர்கள் வேறு மாதிரி.கை  தட்டுவார்கள் இயற்கைதான் எப்படி எல்லாம் படைத்து வேடிக்கை பார்க்கிறது.அவர்கள் நிலையில் இருந்தால் ஒழிய அந்த கஷ்டத்தை  நாம் உணரத்தான் முடியுமா?'
'ஏன் அப்பா இறைவன் என்று சொல்லாமல் இயற்கை படைத்து விட்டதாய் ச்சொல்கிறாய்'
'புரியாத ஒரு விஷயம்.அது இயற்கையோ.இறைவனோ'
'சில விஷயங்கள் புரியாமல் இருப்பது கூட நமக்கு இயற்கை சாதித்துக்  கொடுத்த  சவுகரியமே ''
வண்டியில் இருப்பவர்கள் எங்கள் இருவரையும் வேடிக்கை ப்பார்க்க ஆரம்பித்தார்கள். ஆக இது விஷயம் பேசுவதை நிறுத்திக்கொண்டோம்.வண்டி தாம்பரத்தை நெருங்கிவிட்டிருந்தது.நல்ல கூட்டம்.உட்கார்ந்துகொண்டு வந்திருந்தால் வழியெல்லாம் எப்படி இருந்தது என்பது பார்த்து இருக்கலாம்.அதுதான் முடியவில்லை.வழக்கம்போல் மூன்றாவது நடைமேடையில் வண்டி நிறுத்தப்பட்டது.பாதி பேருக்கு மேல் இறங்கிக்கொண்டனர்.தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனை நன்கு பார்க்கவும் வாய்த்தது.ஓரிருவர் வண்டியில் ஏறிக்கொண்டனர்.
'உக்காரலாம் எடம் இருக்கே'
'இன்னும் ஒரு ரெண்டு நிமிஷத்தில எறங்கணும்'
எனக்கு பையன் சொன்னான்.பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டு நான் ஒரு இருக்கை பார்த்து அமர்ந்தேன்.தாம்பரத்திலிருந்து ஒன்றும் பிரச்சனை இல்லை.ஆனால் முடிச்சூருக்கு பேருந்து செல்கிறதா என்றுதான் தெரியாமல் இருந்தது.பெருங்களத்தூர் வந்தது.நாங்களும் வண்டியை விட்டு இறங்கினோம்.ரயில் நிலையத்தில் மேம்பாலம் கட்டும் பணி அசுரத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.மனிதர்களின் தேவை விரிவாகிக்கொண்டேதான் போகிறது.மக்கள் எல்லாம் நகரம் நோக்கி குடிபெயரப்  பித்தாகி நிற்கிறார்கள்.எல்லோருக்கும் ஏதேனும் ஒரு தேவை இருந்துகொண்டே இருக்கிறது.நகரம் வந்து என்ன சவுகரியப்படப்போகிறார்கள் என்றால் ஒன்றுமில்லை.நகரத்தில்  ஏதோ ஒரு  வேலையைத்தேடிக்கொள்ள வாய்க்கிறது.'கெட்டும் பட்டணம் சேர்' என்று சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.பெருங்களத்தூரின் ரயில்வே நிலையத்தின் அந்த வடக்கு முனையில் குப்பென  மூத்திர வாடை. இந்த பெருங்களத்தூரை பேருந்து நிலையமாக வேறு மாற்றி இருக்கிறார்களே.கோயம்பேட்டில் ஒரு  பெரிய பேருந்து நிலையம். இந்த பெருங்களத்தூரில் வெறும் சாலை மட்டுமே. ஆனால் ஆயிரம் ஆயிரமாய் மக்கள் இறங்கி ஏறுகிறார்கள்.யாருக்கும் எந்த வசதியும் கிடையாது.எதைப்பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை.யோசிக்க நேரம் மட்டுமிருக்கிறதா என்ன?.அதுவும்தான் இல்லை.
'பாத்து வா கருங்கல்லு ஜல்லிவ கொட்டிக்கிடக்குது. கொஞ்சம் வழுக்குது' என் மகன் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.நானும் தத்தக்கா புத்தக்கா என்று நடந்தேன்.புக்கிங் கவுண்டரில் டிக்கட் வாங்குவோரின் நீண்ட வரிசை..டிக்கட் வாங்கியவர்கள் ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள்.தெருவின் இரண்டு புறமும் இரு சக்கரவாகனம் பாதுகாப்பிற்காக நிறுத்தும் வாடகைக்கடைகள் இருந்தன.வண்டிகள் வரிசை வரிசையாக நின்றுகொண்டிருந்தன.அவை அத்தனையும் பள்ளிக்குழந்தைகள் என சமத்தாக நின்று கொண்டிருந்தன.
'நம்ப வண்டிய இங்கே நிறுத்திவிட்டிருக்கலாம்.தவறிவிட்டோம்'
'எதனை யோசிக்க முடிகிறது.வாழும் இடத்தைவிட்டு உயிர் பிழைக்க வேறு ஒரு இடம்  வந்துவிட்டால் அதுவே   போதும் என்கிற இக்கட்டில் மாட்டிக்கொண்ட மனிதர்களின் கதி எப்போதும்  இப்படித்தான்'
நான் அவனுக்கு ச்சொல்லிக்கொன்டேன்.
'இலங்கைத்தமிழர்களை நினைத்துப்பார்க்கிறேன்.எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு எங்கு எங்கெல்லாமோபோய் நிற்கதியாய் நிற்கிறார்கள்.புலம் பெயர்ந்த இந்தத்தமிழர்களின் சோகங்கள் சொல்லி மாளாது.சொந்த மண்ணைவிட்டு ஓடிவந்த மக்கள் எங்கேயாவது  நிம்மதியாக வாழ்கிறார்களா என்ன?'
ரயில் நிலையம் செல்லும் அந்தத்தெரு முடிந்தது
இந்திரா காந்தியின் வெள்ளைச்சிலைமுன்பாக இருவரும் நின்றுகொண்டிருந்தோம்.இந்திராகாந்தி  சிலையை சற்று  உயரமான பீடத்தில்வைத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள்  கவனிக்கவேண்டும்
'ஆட்டோ ஏதும் கிடைக்குமா'
'பார்ப்போம் இங்கு கிடைக்கலாம் மழை .பாதிப்பு  வெள்ள  பாதிப்பு இல்லாத இடம்தான் இது' சொல்லிய நான் ஆட்டோக்காரர்கள் யாரேனும் உண்டா என்று தேடினேன்.ஒரு ஆட்டோக்காரன் வந்தான்.அதனுள்ளாக இரு இசுலாமியப்பெண்மணிகள் அமர்ந்து இருந்தனர்.
ஆட்டோக்காரன் நிறுத்தினான்.
'எங்க போவுணும்'
'பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் உள்ளார நேதாஜி நகரு போகணும்'
'பார்வதி நகர் போவுலாம். நேதாஜி நகரு  பெறவு பாப்பம். நீங்க  இங்கயே இருங்க நா  வரேன். தெ இந்த சூராத்தம்மன் கோவிலுவரைக்கும் போயி சவாரிய இறக்கிவிட்டு வந்துருவேன்'
'நாங்க வெயிட் பண்றம். நீங்க அவசியம் வரணும்' நான் பதில்சொன்னேன்.
'இங்க எல்லாம் ஒண்ணும் பாதிப்பு இல்ல'
'ஆமாம் அப்பா.இது கொஞ்சம் மேட்டுப்பகுதி.  நேரமாகியது.'
'இன்னுமா அந்த ஆட்டோக்காரன் வர்ரான்'
'அதான் நானும் பாக்கறேன்.இத்தனி நாழிக்கு அவன் வந்து இருக்கலாம்'
'வரல்ல.அவன எதிர்ப்பாக்குறதில ஒண்ணும் பிரயோசனம் இல்ல'
'வேற ஆட்டோக்காரன் யாருமே காணும்'
'அப்பா நாம பொடி நடையா போயிடுவோம்.நமக்கு நேரம் ஆயிடும்.இருட்டுறதுக்குள்ள ஆதம்பாக்கம்  திரும்பிப் போயிடணும்'
' சரிதான் அந்த ஆட்டோக்காரன் வந்தபாடில்லை. அவனுக்கு வேறு ஏதும் கிராக்கி வந்திருக்கலாம்.நாம் காத்து இருப்போமா இல்லை வேறு ஏதும் வண்டி பிடித்து போய்விட்டோமா என்பது அவனுக்கும்தெரிய நியாமில்லை'
ஆட்டோக்காரனை இனி எதிர்பார்க்கவேண்டாம் என நடக்க ஆரம்பித்தோம்.அருகிலிருந்த கழிவு நீர்க்கால்வாய் தண்ணீர் நிறைத்துக்கொண்டு நுரைத்துக்கொண்டு கண்ணில் பட்டது.அழுக்கு தண்ணீர் இன்னமும்   சென்றபாடில்லை.ஏதேனும் அடைப்பு இருக்கலாம். தண்ணீர் செல்வதை தடுத்தும்  இருக்கலாம்.வருமுன் காப்போம் என்பதெல்லாம் வாய்  வார்த்தையோடு சரி.பிரச்சனை வந்தால்தான்  அதன் ஆழம்  தெரிகிறது ஒவ்வொன்றையும் அதனுடைய விபரீதம் என்னவென்பதை அனுபவித்தே தெரிந்துகொள்ள வாய்க்கிறது.
டீக்கடைகள் ஒன்று இரண்டு திறந்து வைத்திருந்தார்கள்.கடையைச்சுற்றி நல்லகூட்டம்.நாங்கள் இருவரும் சீனுவாசப்பெருமாள் கோவில் தாண்டிக்கொண்டிருந்தோம்.பெருங்களத்தூர் ஏரியை ஒட்டிய அந்த சாலையை  நன்கு போட்டிருந்தார்கள்.மழையும் வெள்ளமும் அந்த சாலையை விட்டு வைத்திருந்தது.மக்கள் அந்த சாலையை நன்கு பயன்படுத்தமுடிந்தது.பெருங்களத்தூர் ஏரியின் கிழக்குப்பகுதியும் வடக்குப்பகுதியும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது.ஒரு ஐம்பது வீடுகளாவது ஏரியின் உள்ளே இருப்பதை ப்பார்க்க முடிந்தது. அரசாங்கத்தின் மின்சாரமும் தண்ணீர்க்குழாய்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.இந்த மழை அங்கு வாழ்ந்த மக்களை ஒன்றும் பாதித்துவிடவும் இல்லை.தடி எடுத்தவன் மட்டுமே  தண்டல்காரன் என்பதுதான் இப்போது   நடைமுறை.ஆக  ஆக்கிரமிப்புக்காரர்களின்  எண்ணிக்கை க்கூடிக்கொண்டே போகமுடியும். வீட்டு வாயிலில் ஒரு கொடிக்கம்பம் மிக மிக  முக்கியம்
                                ஏரியின் கரையில் ஒரு புற்றுக்கோயில் இருந்தது.அந்த அம்மன் கோயில் சிலை முன்னால் நிறைய நிறைய  வளையல்கள் அடுக்கு அடுக்காய் தொங்கவிடப்பட்டிருந்தன.மனிதர்களின் வேண்டுதல்கள்.  .நிறைவேற்றப்பட்டதற்கு அவை சாட்சி கூறி க்கொண்டு நின்றன. நாத்திகர்கள்  பார்த்தால் சற்று  வருத்தமும் படலாம்.
'நாய்வ நெறைய இருக்கு பாத்து போ'
நான் என் பையனுக்குச்சொல்லிக்கொண்டு இருந்தேன்.மழை வெள்ள பாதிப்புக்கள் அவைகளுக்கும் இருக்கத்தானே செய்யும்.
'ஏரியிலிருந்து ஜிவ் ஜிவ்வுனு ஊதக்காத்து வீசுது'
'ஏரியை எட்டிப்பார்க்கலாமா'
'அதற்கெல்லாம் இப்போது நேரம் ஏது' நான் பதில் சொன்னேன்.ஊரும் உலகமும் சென்னையை நோக்கிக்கொண்டிருந்தன.சென்னைக்கு என்னவோ ஆகிவிட்டதெனத்தான் மக்கள் பேசிக்கொண்டர்கள்.
பறவைகள் மரத்தில் அமர்ந்தவை அம்மரத்தைச் சுற்றி சுற்றி மீண்டும் அங்கேயே அமர்ந்து தம் சோகத்தைப்பாடிக்கொண்டிருந்தன.ஒரு அசாதரணமான சூழல்.உயிரினங்கள் அனைத்தும் சிக்கிகொண்டு தவிக்கவே செய்தன.
எனக்கு வண்டலூர் மிருகக்காட்சி சாலையின் நினைவு வந்துபோயிற்று.அவை அங்கே என்ன பாடு பட்டுக்கொண்டிருக்குமோ.நோக்கிய இடமெல்லாம் வெறும் தண்ணீர் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
பழைய பெருங்களத்தூருக்கு வடக்காகத்திரும்பும் சாலை ஓரம் ஒரு ஈமச்சடங்கு மண்டபம்.அதனுள்ளாக மக்கள் கூட்டம்,வெள்ள பாதிப்பு அவர்களை அங்கே கொண்டு நிறுத்தி இருக்கிறது. மண்டபத்தின் வாயிலில் ஓரு கிழவி மீன்களைக் கூடையில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தாள்.மீன்கள்   அத்தனை  அம்சமாக இருந்தன. வெள்ளம் அவைகளை மட்டும்  உற்சாகப்படுத்தி இருக்கலாம்
====================.
'.
.