Sunday, September 9, 2018

ambedkaraippayiluvom


அம்பேத்காரை ப்பயிலுவோம்.- எஸ்ஸார்சி

பீமராவ் ராம்ஜி அம்பேதகார் மராட்டிய மண்,மனித சமுதாயத்திற்கு அளித்த பெருங்கொடை.சட்டவல்லுநர்,பேராசிரியர்,நீீதிமான்,சமூக விஞ்ஞானி,சமூகப்புரட்சியாளர்,சமூகப்போராளி,திறனார்ந்த அரசியலாளர்,இந்திய அரசியல் சட்ட சிற்பி, தேசியத்தலைவர் எனப்பல்வேறு சிறப்புப்பெயர்களால் போற்றப்படுபவர்.இவை அத்தனைக்கும் மேலாக ஒரு நேர்மையான சிந்தனையாளர்.புரட்சிகர ஆக்கங்களின் ஊற்றுக்கண்.
1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தந்தை ராம்ஜி சக்பாலுக்கும்,தாய் பீமாபாயுக்கும் தவப்புதல்வனாய் மராட்டிய மாநிலத்து 'மௌ'(mhow) என்னும் ஊரில் தோன்றியவர்.அம்பேத்கார் தன் குடும்பத்தில் 14வது குழந்தையாவார். இந்திய மண்ணில் உயர்வானது என்று தன்னைக்கருதிக்கொண்ட ஒரு போலிச்சமூகம் ஒதுக்கித்தள்ளிய தீண்டத்தகாதவர்கள் மத்தியில் அம்பேத்கார்' மகர் 'இனத்தச்சேர்ந்தவர்.
அம்பேதகாரின் தந்தையும், பாட்டானாரும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள்.தாய் வழியிலும் அவருக்கு ராணுவப்பின்புலம் இருந்து இருக்கிறது.போராளியாய்,வெற்றி இலக்குடையவர்களாய்,அநீதி கண்டு ஆத்திரப்படுபவர்களாய் மகர் இனத்து மக்கள் விளங்கி வந்திருப்பதும் தொடர் வரலாறு.
தனக்கு உற்ற துணையாக பள்ளியில் இருந்த அம்பேத்கார் என்கிற ஒரு ஆசிரியரின் பெயரை, நன்றிக்கடனாகத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு பீமராம்ஜி சக்பால் என்பதை பீமராம்ஜி அம்பேத்கார் என மாற்றிக்கொண்டார். அந்த ஆசிரியர் அம்பேத்கார் ஒரு பிராம்ண வகுப்பினர் என்பதுவும் குறிப்பிடப்படவேண்டும்.
பயின்ற பள்ளியில் தாங்கமுடியாத வன்கொடுமைக்கு ஆளாகி, வடமொழி பயிலுவதனின்றும் தடுக்கப்பட்டு,இழிக்கப்பட்டும் பழிக்கப்பட்டும் அம்பேதகார் கல்வி கற்றார்.கல்வியின் மீது அவர் கொண்ட காதல் ஈடு இணை இல்லாத ஒன்றாகும்.அம்பேத்காருக்கு அறிவுப்பசி எந்நேரமும் கனன்று கொண்டிருந்தது.
தனக்கு 14 வயதாகும் போது அம்பேத்கார், ரமாபாய் என்னும் ஒன்பது வயது சிறுமியைத்திருமணம் செய்துகொண்டார்.
பரோடா மன்னர் சத்யஜித்ராவ் கேக்வர்டு ,அம்பேத்கார் கல்லூரியில் சேர்ந்து பயில உற்ற துணையாக இருந்தார்.அமெரிக்க கொலம்பியப்பல்கலைக்கழகத்திலும்,இங்கிலாந்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்- லும் அவர் கல்வி கற்றார். கல்லூரிப்படிப்பு முடிந்து இந்தியா திரும்பிய அம்பேத்கார் பரோடா மன்னர் அவையில் ராணுவச்செயலாளராகப்பணியில் சேர்ந்தார்.
சாதீயக்கொடு நஞ்சு தான் பயின்றவைகளை எல்லாம் ஏறிமிதித்து கொட்டமடிப்பதைக்கண்டு அம்பேத்கார் நெஞ்சம் பதறினார்.பரோடா பணி இல்லை என்றானது. பம்பாயில் அரசியல் பொருளாதாரம் போதிக்கும் கல்லூரி ஆசிரியராகப்பணியில் சேர்ந்தார்.கல்லூரியிலும் சாதிக்கொடுமைகள் தொடர்ந்தன.கோலாப்பூர் மகாராஜா உதவியுடோடு மீண்டும் படிக்க லண்டன் பயணமாமார்.1923ல் இந்தியா திரும்பிய அம்பேத்கார் வக்கீல் தொழிலை ஏற்றுக்கொண்டார்.பார் அட் லா பட்டமும் டாக்டர் பட்டமும் இந்திய சாதியத்தின் முன் அலைக்கழிக்கப்பட்டன.
தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக லண்டன் வட்ட மேஜை மா நாட்டில் கலந்துகொண்டு தீண்டப்படாதவர்களுக்கு த்னி வோட்டு வங்கி வேண்டும் என்று குரல் கொடுத்தார்.1932ல் ராம் சே மக்டனால்டு அதை அமலுக்குக்கொணர அரசின் அறிக்கை வெளியிட்டார்.அந்த முயற்சியை எதிர்த்து மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தைத்தொடங்கினார் இந்து மக்களில் ஒரு இனத்தவரை ப்பிரித்து ப்பார்ப்பதில் காந்திஜிக்கு சம்மதமில்லை. நாம் அவர்களுக்கும் அவர்கள் நமக்கும் வோட் செய்யவேண்டும்.அவர்களுக்கு பிரதி நிதியை அவர்களே தேர்வு செய்து கொள்வது என்பது நம் சமுதாயத்தைக் கூறு போட்டுவிடும் என்றுணர்ந்த காந்திஜி தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தினார்.
தேசபிதாவை இழந்து விடுவோம் என்கிற மிக இக்கட்டான சூழ்நிலை.அம்பேத்கார் தனது நிலையை மாற்றிக்கொண்டு தேச பிதாவை காத்து உதவினார். .24 செப்டம்பர் 1932 ல் பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.தனது கோரிக்கைவெற்றி பெறுவது என்பதைவிட மகாத்மாவின் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்று விட்டுகொடுத்து உயர்ந்தார். ஆகப் பெரிய மனதுக்குச்சொந்தகாரர் அம்பேத்கார்.
மராட்டிய புரட்சிவீரர் ஜோதிபா புலே மீது அளப்பரிய மரியாதைகொன்டவராக அம்பேத்கார் விளங்கினார்.தான் படைத்த'சூத்திரர்கள் யார்'(who were sudras?) என்ற நூலை புலே க்கு சமர்ப்பணம் செய்தார்.அன்றைய சட்டசபைக்கு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அம்பேத்கார்.வங்க மண்ணின் தரம் எப்போதும் சற்று உய்ர்ந்தே இருப்பதை இன்றைக்கும் நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
அம்பேத்காரின் இரு அற்புத குணங்கள் கடினமான பணியை விரும்பி ஏற்பது,விமரிசனத்தை விட்டுக்கொடுக்காதது என்பன.சோஷலிசத்தில் கம்யூனிசத்தில் நம்பிக்கை வைத்திருந்த அம்பேத்கார் புத்தக் கம்யூனிசம் என்று ஒரு விளக்கம் தந்தார்.
அரிசனங்களின் கோவில் நுழைவு போராட்டம் என்பதை புறந்தள்ளிய அம்பேத்கார் 'there is nothimg in the entryof temples' என்கிறார். இங்கு எல்லாமும் அரசியல் உரிமை பெறுவதில் தான் இருக்கிறது என்று வாதிட்டார்.
அம்பேத்கார், காந்திஜியை . மக்கள் மகாத்மா என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ளாதவர்.இந்து மதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு த்துணை நிற்றல் என்பதுவே காந்திஜியின் புரிதல் என்றால் அதனைச் சகித்துக்கொள்ள முடியாது என்று மறுக்கிறார் அம்பேத்கார்.
சட்ட அமைச்சராக பிரதமர் நேருபிரானோடு பணியாற்றிய அம்பேத்கார் இந்து மத சட்ட விவகாரங்களில் தனது ஆரோக்கியமான பரிந்துரைகளை ஏற்காத மத்திய அரசாங்கத்தோடு முரண்பட்டார். பின்னர் பதவி விலகினார்.
டிசம்பர் 6 1956ல் தான் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
அம்பேத்காருக்கு ஒருவர் செய்யும் மரியாதை அண்ணலின் சிந்தனைகளைப்பயிலுதல் என்பதே.விசாலப்பார்வையும்,ஆழ்ந்த சிந்தனையும்,ஒளிர் வழித்தடமும் அம்பேத்கார் நமக்கு வழங்கிய செல்வங்கள்.
பிரச்சனைகள் சிக்கலாகி இறுகும் நமது இந்திய அரசியல் சூழலில் அம்பேத்காரின் சிந்தனைகளை மறுவாசிப்பு செய்தல் கட்டாயமாகும்.யாந்திரிகமாக மட்டுமே அவரின் சிந்தனைகளைப்பயின்று த்ன் முனைப்புக்கு இயங்கு தளமாக அதனை ஆக்கிக்கொள்வது அவரின் நினைவுக்கு விழுமியம் சேர்க்காது.
சாதியக்கட்டமைப்புச்சிக்கல்களை விளங்கிக்கொள்வது என்பது அதனை த்தனக்கு வோட்டு வங்கியாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதுவேவாக இன்றைய அரசியல்வாதிகட்கு நடைமுறையாகி இருக்கிறது. இச்சூழல் ஆரோக்கியமானது அன்று.
கல்வியால் அறிவும் அறிவால் சிந்தனையும் சிந்தனையால் செயல் சிறப்பதுவும் ஒரு தரமான சமூக தளத்திற்கு இட்டுச்செல்லும்.எது கல்வி எது அறிவு எதுசிந்தனை எதுவெல்லாம் செயல் என்பதில் அம்பேதகாரின் எழுத்துக்கள் நமக்குப்பேருதவி செய்யும்.
யார் எப்பாடு பட்டால்தான் என்ன? யார் எக்கேடு கெட்டால்தான் என்ன? தேர்தலில் வெற்றியை தருவிப்பது எப்படி என்பதுவே மனித வாழ்க்கையாய்ச் சுருங்கிப்போய் விட்டோமே நாம்.
--------------------------------------

No comments:

Post a Comment