Sunday, September 9, 2018

pennaakatamபெண்ணாகடம் பெருமை பேசுவோம் -எஸ்ஸார்சி

நடு நாடு சான்றோர் உடைத்து என்று நவில்வர்.அதற்கொப்ப எண்ணற்ற ஞானியர்களைப்பிறப்பித்துப்பெருமை தேடிக்கொண்டது இந்த மண். இங்கே வரலாற்றுச்சிறப்பும் சமயத்துறையில் புகழும்,தொழில்வளச்செல்வமும் நிறைந்த நகரங்கள் பல உண்டு.அவற்றுள் முக்கியமான ஒன்று கடலூர் மாவட்டத்து ப் 'பெண்ணாடம்.'
வெள்ளாற்றங்கரைத்திகழும் பல சைவத்திருத்தலங்களில் இதுவும் ஒன்று.தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பேசும் சைவத்தை த்தூக்கிப்பிடித்த சீர்மிகு திருத்தலமே பெண்ணாடம்.
இன்று பெண்ணாடம் என்கிறோமே அது பெண் ஆ கடம் என்பதன் மரூஉ.ஒரு சமயம் தேவலோகத்து இந்திரன் சிவ பூசைக்குறிய மலர்களைக்கொண்டுவருமாறு ஒரு பெண், ஒரு பசு,ஒரு யானை என மூவரையும் பூவுலகுக்கு அனுப்பியதாகவும் இந்த ஊரின் அழகிலே மயங்கி அப்பெண்ணும், பசுவும்,யானையும்,இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஆக இவ்வூர் பெண்ணாவுகடம் என ஆயிற்று என்று தல வரலாறு பேசும்.
'தில்லை மூவாயிரவர்,கடந்தை ஆறாயிரவர்' என்ற சொல்வழக்கிலிருந்து பல நூற்றாண்டுகட்கு முன்னர் இவ்வூரில் ஆறாயிரம் அந்தணர்கள் வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.இன்றும் பாப்பான் குளம்,அரியராவியாய் அறியப்படும் அழகா ஏரி என்னும் ஊர்கள் இந்த செய்திக்கு ச்சான்றாய் நிற்கின்றன.
கார்காத்த வேளாளர்கள் மெய்கண்டாரையும் அவர் தந்தை அச்சுத களப்பாளரையும் தம் மரபினாக க்குறிப்பிடுவதற்கு இந்தப்பெண்ணாடம் தலமே காரணமாகும்.பெண்ணாடத்திற்கு வரலாற்றில் அனேக பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.அவை பெண்ணாகடம்,தூங்கானை மடம்,புஷ்பவனம்,சோக நாசனம்,சிவ வாசம்,மகேந்திரபுரம்,கடந்தை,பள்ளிகொண்டான் பட்டினம் என்பன.
பெண்ணாகடத்தை ச்சுற்றி நிற்கும் கிளிமங்கலமும்,கூடலூரும் சங்கப்புலவர்களின் தொடர்புடையன.
இவ்வூரை வளமுடையதாக்கும் வெள்ளாற்றின் மீது இருக்கும் 'ஏழு நீராடு துறைகள்' புனிதப்புகழுடன் பேசப்படுகின்றன.இவை பெரம்பலூர் மாவட்டத்து காளியாந்துறை,திருவாலந்துறை,திருமாந்துறை,ஆடுதுறை என நான்கும்,வசிட்டதுறை,திரு நெல்வாயில் அறத்துறை,சௌந்தரசோழத்துறை என க்கடலூர் மாவட்டத்து மூன்றும் ஆகும்.
திருஞானசம்பந்தருக்கு சிவிகையும் குடையும் திரு நெல்வாயில் அறத்துறையில்,யாதுமாகிய எம்பிரான் வழங்கியதாக பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
சைவ சமயத்தின் உயர்தனி நூலாகிய் 'சிவ ஞானபோதம்' இதனை இயற்றியவர் இந்த ஊரின் மெய்கண்டார்.மெய்கண்டாரின் முதல் மாணாக்கரான அருள்நந்திசிவாச்சாரியார், சகல ஆகம பண்டிதர் என வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.அவரே 'சிவ ஞானசித்தி' என்னும் அரிய நூலை வ்ழங்கிய பெருந்தகை ஆவார்.
மெய்கண்டாரின் தந்தை அச்சுதகளப்பாள பிள்ளை 13 ஆம் நூற்றாண்டில் அரசோச்சிய கோப்பெருஞ்சிங்கனின் கீழ் ஆட்சி புரிந்தவர்.தில்லை நடராசர் கோவில் கல்வெட்டுக்களிலும் அச்சுத களப்பாளர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கெடில நதிக்கரையில் உள்ள திருநாவலூரில் அரசன் கோப்பெரும்சிங்கன் மூன்றாவது ராஜ ராஜ சோழனை கி.பி. 1200ல் சிறைவைத்ததாக ஒரு வரலாற்று ச்செய்தியும் உண்டு.
யாப்பெருங்கலக்காரிகை இயற்றிய அமிர்தசாகரர் பத்தாம் நூற்றாண்டினர்.அவரின் இலக்கண நூலில் 'பெண்ணாகடத்தமர்'என்கிற சொல் பயின்று வருகிறது.
மெய்கண்டாரின் மாமன் காங்கய பூபதி ,நடு நாட்டு திருவெண்ணைநல்லூர்க்காரர்.மெய்கண்டாரின் தாய் மங்களாம்பிகை.
மெய்கண்டார் சிவ ஞானபோதம் வழங்கியதற்கு ஒரு நெடிய வரலாறு சொல்லப்படுகிறது. நந்தி தேவரின் மாணாக்கர் சனத்குமாரர்,சனத்குமாரரின் மாணாக்கர் சத்திய ஞான தரிசிகள்,இந்தப்பெரியவரின் மாணாக்கர் பரஞ்சோதி முனிகள்.பரஞ்சோதி கைலாய மலையிலிருந்து புறப்பட்டுத் தென்னாட்டு பொதிகைமலைக்கு அகத்தியமுனியைக்காணச்செல்கிறார்.அவரின் நிழல் மெய்கண்டார் என்னும் குழந்தையின் மீது பட்டுவிட பரஞ்சோதியின் விமானம் நின்று விடுகிறது.பரஞ்சோதி முனி கீழிறங்கி சுவேதவனப்பெருமாள் என்னும் அக்குழந்தைக்கு 'மெய்கண்டார்' என்னும் நாமம் சூட்டுகிறார்.அந்த மெய்கண்டார் பரஞ்சோதியிடம் சிவஞானபோதம் உபதேசம் பெறுகிறார்.
மெய்கண்டாரின் மாணாக்கர் அருணந்தியும் அவரின் மாணாக்கர் உமாபதி சிவாச்சாரியாரும் சைவ ஞானத்தில் நிகரற்று விளங்கியவர்கள்.மெய்கண்டார் கண்ட சமயம் 'சுத்தாத்வைத சைவ சித்தாந்த சமயம்' என்று வழங்கப்படுகிறது.
அச்சுத களப்பாளரின் வழிவந்தோர் இன்றும் பெண்ணாடம் மற்றும் அந்தப்பகுதியைச்சுற்றி சுற்றி இச்சைவ வரலாறு எல்லாம் தெரிந்தும் தெரியாமலும் வாழ்ந்துவருகின்றனர்.குருகுல ராயர்,கனக ராயர்,வாணாதிராயர்,பிரதானிகம்,என்ற பட்டப்பெயர்களோடு அவர்கள் அழைக்கப்பட்டதும் மறக்கப்பட்டே வருகின்றது.மணிமுத்தா நதி பிரதாபர்,விருத்தாசலத்திரியர்,கோபக்காரனார் என்கிற பட்டப்பெயர்களும் அவை ஒத்தவையே.
மெய்கண்டார் பதி பசு பாசம் இவை குறித்து ப்பின்வரும் விளக்கத்தைக்கொடுக்கிறார்.பதி-கடவுள்,பசு-உயிர்,பாசம்-உலகம். ஆணவம்,கன்மம், மாயை என்னும் மும்மலங்களை வென்று பசுவானது பாசத்தைவிட்டு பதியை அடைதல் முக்தி என்பதாம்.ஞான அளவில் நமசிவாய என்று பஞ்ச்சாட்சரத்தைத்தியானம் செய்தல் கன்ம பலன்களை நாசம் செய்யும் ஒரு யுக்தி என்றும் மெய்கண்டார் குறிப்பிடுகிறார்.இவ்வாறு சைவ த்தடத்தில் சிவ பேறு பெறுதல் மெய்கண்டாரால் உறுதி செய்யப்படுகிறது.
பெண்ணாகடம் என்னும் இத்திருத்தலம் சம்மந்தர், மற்றும் அப்பர் என்கிற திருநாவுக்கரசரால் தேவாரப்பாக்களில் ஆளப்பட்டுக்கிடக்கிறது.அருணகிரியாரின் திருப்புகழிலும் பெண்ணாடம் பற்றிப்பேசப்படுவதை நாம் குறிப்பிடலாம்.
சேக்கிழாரின் பெரிய புராணம் நமக்கு வேறு ஒரு நிகழ்ச்சியைச்சொல்கிறது.சமண சமயத்திலிருந்து விடுபட்ட அப்பர் பெருமானுக்கு பெண்ணாகடத்து தூங்கானை மாடத்து இறைவனால்தான் சைவக்குறிகளான சூலமும்,இடபமும் அமைவிக்கப்பட்டன.

'பொன்னார் திருவடிக்கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிச் செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இரும் கூற்றகல
மின்னொரு மூவிலை ச்சூலமென் மேற்பொறிமேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க்கொழுந்தே' என்று பேசுகிறார் அந்த திருநாவுக்கரசர் பிரான்.

'இக்கணம் இவர் சிவனடியார்,முன்னம் இவர் நமக்கு க்குற்றேவல் செய்தவர் என்பதற்காக கைகால் கழுவிப்பின் உணவருந்த ஒரு செம்பு நீர் அளிக்க மறுத்த தன் மனையாளின் கையைத்துணித்த சிவப்பற்றாளர். இவரே அறுபத்து மூவரில் கலிக்கம்ப நாயனார். பெண்ணாடத்தவர்.இந்த நாயனாருக்கு இவ்வூரில் திருக்கோவில் உள்ளது.
பெண்ணாகடத்து இறைவனின் திருப்பெயர் சுடர்க்கொழுந்து நாதர். இறைஅம்மை, கடந்தை நாயகி,அழகியகாதலி என்னும் இனிய தமிழ்ப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்.இக்கோவிலில் நந்திப்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்து காணப்படுகிறார்.அது பெருஞ்சிறப்பு.பெண்ணாகடம் ஊரினை வெள்ள் அழிவினின்று காத்து நின்றதால் இறைவனுக்கு பிரளகால ஈசுவரர் என்கிற திருநாமம்.
' கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்குங் கடந்தை த்தடங்கோயில்சேர் தூங்கானை மாடம்' என்று திருஞானசம்பந்தர் பேசுவார். அவரே' காதலியும் தானும் கருதி வாழும் தொல் சீர் கடந்தை' என இறைவனை அந்த இறையன்னையை அழகாக விவரிப்பார்.
இக்கோவிலின் அமைப்பு முறை பிற கோயில்களின் அமைப்பு முறையினின்று சற்று வேறுபட்டது.யானை தூங்கும் நிலையில் இக்கோயில் காட்சி அளிப்பதால் 'தூங்கானை மாடம்' என்று பெயர் பெறுகிறது.மூலவரைக்கோயிலின் உட்சுற்றில் இருந்தபடி நான்கு திக்குகளிலும் அடியார்கள் வழிபடுமாறு கல்லில் 'கண் துளை வழிகள்' செதுக்கப்பட்டுள்ளன.
மூலவர் விமானத்துக்கு அருகில் இரண்டு ஆள் உயரத்தில் ஒரு 'கட்டு மலை'. அதன் மீது ஒரு சிவன் கோவில் உள்ளது.அதனுள் உறை இறைவன் லிங்க வடிவில் 16 பட்டைகளில் தெரிகிறார். இந்த இறைவனை 'சௌந்தரேசுவரர்' என்று அழைப்பர்.
மெய்கண்டாருக்கு இவ்வூரில் ஒரு தனிக்கோயில் உள்ளது.மெய்கண்டாரின் மரபு வந்த நமசிவாய மூர்த்திகளே திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலகுரு ஆவார்.
பௌத்த சமயம் பெண்ணாகடத்தில் ஒரு காலத்தில் புகழோடு நிலவி வந்திருக்கலாம் என்பதற்கு புத்தர் ஏரியும் அதன் அருகே புத்தர் சிலையும் சாட்சிகளாய் நிற்கின்றன.சிற்றரசன் ஒருவரின் தலை நகராய் பெண்ணாகடம் இலங்கியது என்பதற்கு ஆதாரமாக 'மங்கலம்' என்று இறுதிச்சொல்பெற்று நான்கு திக்குகளிலும் நான்கு ஊர்கள் உள்ளன.அவை வடக்கே நந்திமங்கலம்,கிழக்கே கிளிமங்கலம்,தெற்கே சேந்தமங்கலம்,மேற்கே போத்திரமங்கலம் என்பனவாம்.
களப்பாளமேடு என்ற பெயருடைய பகுதி இவ்வூர் அருகே காணப்படுகிறது.இந்த மேட்டில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் களப்பாளரின் அரண்மனை இருந்திருக்கலாம் என்பதற்கு அங்கு கிடைக்கும் அள்வில் மிகப்பெரிய செங்கற்கள் சாட்சி சொல்கின்றன.

தமழ்ப்புலமையும் தமிழ் ஆர்வமுமுள்ள மக்களை இம்மண் பெற்று வந்திருக்கிறது.1934ல் கடந்தை தமிழ் ச்சங்கம் இங்கு தொடங்கப்ப்ட்டு இருக்கிறது என்பதும் ஒரு செய்தி.பொங்கல் வாழ்த்து அனுப்பும் மரபினை 1935ல் புலவர் இ.சிவகுருநாதன் இவ்வூரிலிருந்துதான் தொடங்கினார் என்பதனை தென்னாற்காடு மாவட்டம் என்னும் நூலில் எஸ். எம். லட்சுமணன் செட்டியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தன் பழம்பெறும் வரலாறுகளை முதிர்ந்த பண்பாட்டுக்கூறுகளையெல்லாம் மறந்து ஆரவாரம் ஏதுமற்ற சிறு நகரமாய் காட்சி தருகிறது.ஆழ்ந்து நோக்குபவர்கட்கு மட்டுமே இந்த மண்ணின் விரிவும் ஆழமும் தென்படக்கூடும்.
கரும்புப்பயிர் இம்மண்ணில் செழித்து வளருகிறது.இதனைப்பயன்கொண்டு அருணா சர்க்கரை ஆலை என் கிற பெரிய நிறுவனம் செல்வர் மருதப்பிள்ளை என்பவரால் இவ்வூரருகே இறையூரில் நிறுவப்பட்டது. இறையூரில்தான் சம்பந்தப்பெருமானுக்கு இறைவனும் இறைவியும் விருந்து படைத்ததாகப்புராணச்செய்தி
இந்த சுற்றுப்பட்டு மக்களுக்கு ஒரு பெரும் ஆதாரமாக அருணா ஆலை நடைபோட்டது.இன்று அருணாவுக்கு 'அம்பிகா சர்க்கரை ஆலை' என்று பெயர் மாறி இருக்கிறது.இரண்டு சிமெண்ட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் இவ்வூர் வெள்ளாற்றங்கரையின் தெற்கே நிறுவப்பட்டுள்ளன.
தத்துவ உலகில் சீர்மிகு சைவ சித்தாந்தம் இந்தமண்ணின் தனிப்பெரும் கொடையாகும்.ஆனால் காலம் எல்லா நல்ல விஷயங்களையும் கொள்ளைகொண்டு விடுமா என்கிற அச்சம் எழத்தான் செய்கிறது.
தமிழர் மதமான சைவத்தை உயிர்ப்பித்து ஆய்ந்து ஆய்ந்து செழுமைப்படுத்திக்காக்கும் நெறி காட்டும் நாயகர்களுக்குத்தான் எங்கு போவது.எல்லாம் இருந்தும் சைவமடங்கள் கண்களைமூடி மௌனம் காப்பதற்கு ஒரு நியாயமே இல்லை.
தமிழக ஐம்பதாண்டு அரசியலில் நாம் தொலைத்துவிட்ட செல்வங்களுள் தலையாயது 'தமிழ்ச்சைவம்' என்பது நமக்கு என்றேனும் விளங்குமா?யாரிட்ம் கோபித்துக்கொண்டு எத்னைத்தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்கிற விஷயம் நமக்கு எப்போது எட்டும்?
------------------------------------------------------------------

No comments:

Post a Comment