Monday, November 11, 2019

vellam 12
சென்னையில் வெள்ளம் 12

சென்னையைப்பற்றி நிறைய சமாச்சாரங்கள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருந்தன. 2050 வாக்கில் சென்னையை அந்த வங்காளவிரிகுடா விழுங்கிவிடும் என்றார்கள். மரினா கடற்கரைக்குச்சென்று பாருங்கள் கடல்தான் உயரத்தில் இருக்கிறது. சென்னை பள்ளத்தில் கிடக்கிறது என்று  அச்சத்தோடு பேசிக்கொண்டார்கள்.
சென்னையை ச்சுற்றிலும் இருந்தன  நூற்றுக்கக்காண ஏரிகள்  அவையுள்ளே  எப்படி  இத்தனைக் கட்டிடங்கள்.  மாநகரத்தில் மூன்று ஆறுகள் இருந்தனவே அடையாறு கூவம் பக்கிங்காம் கால்வாய் என அவை எப்படி தம் மாண்பு தொலைத்து நாறிப்போயின.
ஆற்றங்கரை புறம்போக்கு ஆக்கிரமிப்புத்தான் வெள்ளம் இப்படி சென்னையைப் பாதிக்க முழுமுதற்காரணம் என்று எழுதினார்கள்.புறம்போக்கு நிலங்களை வீடு கட்டி ஆக்கிரமித்ததுதான் ஆறு சிறுத்துப்போனதற்கும் அடிப்படை என்றார்கள். நீதி மன்றங்கள் திடீரென விழித்துக்கொண்டன. வாஸ்து புருடன் அப்படித்தான் விழிப்பானாம். 
ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கள் உடனே அகற்றப்படுதல்  வேண்டும் என  நீதி  அம்மன்றங்கள் உத்தரவு பிறப்பித்தன. தொடர்ந்து இது பற்றியே மக்கள் பேசிக்கொண்டார்கள்.
ரேஷன் கார்டு அட்டையை நகலெடுத்து அதனோடு வங்கிக்கணக்கின் புத்தக முதல் பக்கத்தையும் நகலெடுத்து அவைகள் இரண்டையும் கொண்டு போய் அந்தந்த பகுதிக்கு வெள்ள ப்பாழ்க்கணக்கு பார்க்கவரும் அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும்.அப்படி ஒப்படைத்தால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஐயாயிரம் ரூபாய் அவர் வங்கிக்கணக்கில் தமிழக அரசால் வரவுவைக்கப்படும் என்று மாநில அரசாங்கம் பத்திரிகையில் அறிவிப்பு செய்தது. அது பற்றி மக்கள் கூடிக்  கூடி முடிந்த மட்டும்  பேசிக்கொண்டார்கள்.’இது எல்லாம் ஒரு அரசாங்கத்தின் உதவியா’ என அய்யாயிரத்தை க்கேலி பெசியவர்கள் இருந்தார்கள்.ஆனால் எல்லோரும் அந்தப்பணம் தம் வங்கிக்கணக்கில் எப்போது வந்து சேரும் எனத்தவங்கிடந்தார்கள்.அங்கே வந்துவிட்டது இங்கே வந்துவிட்டது என்றார்கள்.சில இடங்களில் அப்படி வந்தும் இருந்தன. வாராமலும் இருந்தன. அது பற்றி கூடிக்கூடி அத்தனை  அக்கறையோடுவிவாதித்தார்கள். சென்னை வெள்ளசெய்தியோடு இந்த அரசு இலவசமாய் ப்பணம் வழங்குதல் சம்பந்தப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்துகொண்டே இருந்தன.
 இலவசமாய் வழங்கபடும் ஒன்று தனக்கு க்கிடைக்காமல்போய்  விட்டால் என்ன ஆவது இந்த மனிதப்பிறவியே வீண் என்கிற இந்த விசாரம்  மக்களை த்தொற்றிக்கொண்டு வினைபுரியத்தொடங்கியது.                          உலகத்தை த்தன் கெடுமதியால் ஆட்டிப்படைத்த இட்லர் தனது ‘காம்பியர்’ என்னும் நூலில் இப்படி எழுதுவான்.  இட்லருக்கு அவன் என்பதே சரி. 
சமுதாயத்தில் மேல்தட்டு மக்களைப்பற்றி  அரசு கவலைப்படவேண்டாம். அவர்களை அவர்களே நன்கு பார்த்துக்கொள்வார்கள்.அவர்களுக்கு அரசாங்கம் இரண்டாம் பட்சம்தான். கடைசிதட்டிலே இருப்பவர்கள் கஞ்சிக்குச்சண்டை போட்டுக்கொண்டு வீதியில் சாராயம் குடித்து கும்மாளமடிப்பார்கள்.அரசாங்கம் ஒன்று இருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை. இந்த மத்தியதர வர்க்கம் இருக்கிறதே அதுதான் அரசாங்கத்திற்கு ஏதேனும் பிரச்சனை உண்டாக்கிக்கொண்டு திரியும். அவர்களுக்கு  வீடு கட்ட இல்லை ஒரு தொழில் தொடங்க என்று  சொல்லிக் கடன் தொகை ஒன்று  ரொக்கமாய்க் கொடுத்து விட வேண்டும்.அவரவர்கள் அது அதனை ச்செய்துகொண்டு அப்படிஅப்படி  போய்க்கொண்டு இருப்பார்கள். வீடு கட்டியவர்கள் வீட்டை சுத்தமாக ஒட்டடை நீக்கி வெள்ளை அடித்துப்பராமரித்தல் என்பதிலும் வாங்கிய கடனுக்கு  அந்த வங்கி வட்டியை  சரியாக க் கணக்கு  ப்போடப்பட்டிருக்கிறதா என்பதிலும்கவனமாய் இருப்பார்கள்.கடனைத் தவணை தவணையாய்த் திருப்பிக்கட்டியதற்கு கொடுக்கப்பட்ட வங்கி ரசீதுகளை அடுக்கிவைத்து அழகுக்கணக்கு பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.அவர்களால் நமக்கு வேறு பிரச்சனை எதுவுமே  வந்துவிடாது. திரும்பி வராதக்கடன்களும் இருக்கவேசெய்யும் அதில் ஒன்றும் அதிசயம் இல்லை.  இப்படி நடைமுறைக்குகந்த யோசனை சொல்லும் இட்லர் என் நினைவில் வந்து போனான். . அந்த காம்பியர் புத்தகம் எப்போதோ நான் படித்தது..
’                  நான் நேதாஜி நகருக்குப்போய் பார்த்துவருகிறேன்’ என் மனைவியிடம் சொல்லிக்கொண்டேன். என் பெரிய பையனும் அவன் மனைவியும் கணிப்பொறி மென்பொருள் பணிக்கு அந்த பழைய மகாபலிபுரம் சாலைக்கு சென்று பின் குரோம்பேட்டை புதிய ஜாகைக்கு வந்து வந்து போயிக்கொண்டு இருந்தார்கள். பேத்திதான் என் மனைவியோடு ஒட்டிக்கொண்டு இருப்பவள்.
                என் மனைவி  தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் கீழே இருக்கும் பரணி வீட்டுக்குப் போய்வந்தாள். அந்த வீட்டில் இருவரும் வேலைக்குச்  சென்றுவிடுவதால் அந்தவீடும் அனேகமாக பூட்டிக்கிடந்தது. நேரம் கிடைத்தபோது குமரன் குன்றம் சென்று முருகனைப்பார்த்துவருவாள்.  எங்கள் குலதெய்வமும் சாமிமலை  முருகன். 
குமரன் குன்றம் கோவிலில் படிகள் ஏறி இறங்குவது மனைவியால் முடிவதில்லை .காலை சற்றுத்தூக்கி அடுத்த படியில் வைக்க அவளால் முடிவதில்லை.பெண்களில் அனேகம் சதைபோட்டுக்கொண்டு அவஸ்தை படுகிறார்கள்.  வயது தாண்டினால் அவர்களுக்கு ப்பிரச்சனை தொடங்கிவிடுகிறது.
 ஒரு நாள்  மனைவியை சானடோரியம் பார்வதி மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றேன். அவள் டாக்டரிடம் தன் முட்டிவலி பற்றிக்கூறினாள். மூட்டு மாற்று சிகிச்சைதான் ஒரே வழி என்றார்கள். இரண்டு லட்சம் வரை செலவு வரலாம். இரண்டு மாதம்  வரை  இப்படி சிகிச்சை செய்துகொண்டவர் படுக்கையில்தான். இருக்கவேண்டும்.அவருக்குச்செய்யவேண்டியது எல்லாவற்றையும் அடுத்தவர்தான் பார்த்து பார்த்துச் செய்யவேண்டும். என் மனைவி மேலும் கீழும் பார்த்தாள்.
‘அறுவை சிகிச்சையின் பலன் எப்படி இருக்கும்?’
டாக்டரை க்கேட்டாள் அவள். ’அனேகமாக நல்ல பலன்தான் கிடைக்கும். எத்தனையோ பேர் இந்த சிகிச்சை செய்து கொண்டு நன்றாக. நடக்கிறார்கள்’
என்றார் டாக்டர்.
முட்டி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட யாரிடமாவது கேட்டுவிட்டு  பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம் என்று என்னிடம் மனைவி சொன்னாள்.
‘அப்படியே செய்வோம்’ அவளுக்குப்பதில் சொல்லி வைத்தேன்.

’கரண்ட் எப்போது வரும் அதுதான் நேதாஜி நகரில் மிக முக்கியம்’ என் மனைவி என்னிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். 
               நான் குரோம்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டேன் ஷேர் ஆட்டோக்காரர்கள் ஒருவர் பின் வருவார்கள் ஆனால் இன்று ஏனோ ஒரு ஷேர் ஆட்யோக்காரனையும் காணோம். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அது  எப்படியாவது போகட்டும்.  நகரப்பேருந்துகள் வரிசையாக வந்து கொண்டிருந்தன.தாம்பரம் வந்து சேர்ந்தேன்.இங்கும் ஷேர் ஆட்டோக்காரர்கள் யாரும் காத்துக்கொண்டிருக்கவில்லை. ‘முடிச்சூர் முடிச்சூர்’ என்று கத்திக்கொண்டே இருப்பார்கள். நல்ல வெயில் அடிக்கத்தொடங்கியிருந்தது. இனி மழைக்கு வாய்ப்பில்லை. சாலையில் சகதிகள் காய்ந்து தரை பளிச்சென்றிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வண்டிகள் முடிச்சூர் வழிதான் செல்லும். அப்படி ஒரு வண்டி வந்தது.
‘வண்டலூர் போயி போவுது முடிச்சூர் யாரும் ஏறாதே’ கண்டக்டர் எச்சரிக்கை கொடுத்தார்.
இனி அந்த 55 எண்  மாநகர வண்டிதான் வரவேண்டும். அது நிச்சயமாக வரும். முடிச்சூர் செல்பவர்கள் அதனைத்தான் பிடித்தாகவேண்டும். நின்றுகொண்டே இருந்தேன். கால் வலித்தது.என்னைப்போல் நூற்றுக்கணக்கில் நின்றுகொண்டிருந்தார்கள்.ஷேர் ஆட்டோகாரர்கள் வரவில்லை என்றால் பயணிகளுக்கு பெரிய அவஸ்தை. அந்த வண்டியில் பயணிப்பது அதைவிட பெரிய அவஸ்தை. மூன்று பேர் அமரும் சீட்டில் நான்கு பேர் திணித்துக்கொள்ளவேண்டுமே. இந்த வண்டிக்கெல்லாம் அரசு பர்மிட் தரப்படவில்லை.இந்த டாடா மேஜிக் தயாரிப்புக்களை ஓட்டுபவர்களுக்கும்  எந்த அனுமதியும் அரசாங்கம் தரவில்லை என்கிறார்கள். அது என்ன ஒரு சமாச்சாரம். இது போல் இன்னும் எத்தனையோ.
எதிரே இருக்கும் தேவாலயத்தில் ஒலி பெருக்கி இயங்கிக்கொண்டிருந்தது.அது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும். மணி பத்தாகியது என்பதை ஒவ்வொன்றாக அடித்து ச்சொன்னது. மணி ஒலி கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. அதற்குப்பிறகு வேத வசனம். அதன் எண்களை விடாமல் சொல்லிக்கொண்டே போனது.  வசனத்திற்கான எண்கள் சேர்த்துச்சொல்லப்படத்தான் வேண்டும் என்பது மரபாக வந்திருக்கலாம்..
 நல்ல.விஷயங்கள் சமுதாய மேம்பாட்டிற்கான  தேவச்செய்திகள் காலம்காலமாக சொல்லப்பட்டுத்தான் வருகின்றன. அதனை ஒரு சடங்காகப்  பொது ஜனம் பார்த்து ப்பழக்கப்பட்டுவிட்டார்கள்.அவை தமக்குச்சொல்லப்பாட்டிருப்பதாகவும் தமது வாழ்க்கை செம்மையுறத்தான் சொல்லப்பட்டிருப்பதாகவும் ஏற்றுக் கொள்ள மருவுகிறார்கள்.
 ஒரு ஏசுபெருமானையோ ஒரு புத்தரையோ ஒரு மகாத்மா காந்தியையோ உலகம் காண ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.அப்படித்தான் அது அனுபவமாகிறது. சிதம்பரத்தில் தங்கிக்கல்லூரிப்படிப்பைத்தொடர்கையில் வடக்கு வீதியி இருந்த காந்தி அமைதி நிலையத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பிரார்த்தனைக்கூட்டத்தில் கீதையும் பைபிளும் குரானும் படித்துவிட்டு அமைதியாகத்தியானம் செய்துவிட்டு
 ’ரகுபதிராகவ ராஜாராம்
,பதீத பாவன சீதாராம்
.ஈஸ்வர அல்லா தேரே நாம்
,சபுகோ ஷண்மதி தே பகவான்’
என்று மன நிறைவோடு எல்லோருமாகப்  பாடிமுடிப்பதை இன்று எண்ணிப்பார்க்கையில் மனம் கர்வப்பட்டு நிற்கிறது.தேசபிதா  காந்தியைக்கொன்றுவிட்ட நமக்கு மன்னிப்பு என்றும் கிடையாதுதான்.. விமரிசனங்கள் அவர் மீதும் இருக்கத்தான் செய்யும் நாம் ஏற்றுக்கொண்ட அந்தக்.கடவுள்கள் கூட விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களில்லைதான்.
                   ஷேர் ஆட்டோகாரர்கள் இயங்குவது சட்டப்படி சரியில்லை தவறு ஆனால் அவர்கள் ஒரு நாள் சவாரிக்கு வரவில்லை என்றால் மக்கள் தவிர்த்துப்போகிறார்கள்.
ஒரு 55 எண் பேருந்து மெது மெது வாக வந்தது வண்டியில் கால் வைக்க இடமில்லை. அதனில் ஏற ஒரு வண்டி ஜனம் காத்துக்கிடக்கிறது. வயதில் மூத்த பெருமக்கள்.உடல் நிலை பாதிக்கப்பட்டோர் குழந்தைகள் சாமான் செட்டுக்களை வைத்துக்கொண்டு ஏறத்துடிப்போர் என மக்கள் வகை வகையாய் இருந்தனர். வண்டி வந்து நின்றது. என்னால் ஏறிவிடமுடியும் என்கிற நம்பிக்கை இல்லாமல்தான்  நின்றுகொண்டிருந்தேன்.
‘பாத்தா கதெ ஆவுமா. ஏறிடவேண்டியதுதான்’ என் பக்கத்தில் நிற்பவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கும் எதுவோ அவசரமாக இருக்கலாம்.
‘என் பின்னாலயே நில்லுங்க ஏறுங்க யாரையும் பாக்காதிங்க யோசனை பண்ணாதிங்க’ அவர் எனக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. அவர் சொல்லியபடியே அவர் பின்னால் நிற்பது என முடிவுசெய்தேன். 55 பேருந்து வந்து அப்பாடி என்று எங்கள் முன்னால்  நின்றது.இறங்குவதற்கு யாருமில்லை. இரண்டு வாயிற்படிகளிலும் மக்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். மனத்தைத்திடப்படுத்திக்கொண்டு வண்டியில் ஏறிவிட்டேன்.இன்னும் மக்கள் கீழே நின்றுகொண்டு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி ஏறினேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு யோசனை சொன்னவரைத்தேடினேன். அவரைக்காணசவில்லை.அவர் இன்னும்கீழே நிறுகொண்டிருந்தார்.வண்டியில் ஏறவில்லை.
சிலர் நன்றாக பாடம் நடத்துவார்கள். அவரிடம் படித்தவர்கள் எல்லாம் தேர்வில் பாஸாகிவிடுவார்கள். ஆனால் பாடம் நடத்திய அந்த ஆசிரியர் ஏனோ தோல்வியுற்று நிற்பார். அந்தக்கதை நினைவுக்கு வந்தது..ஐ ஏ எஸ் தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று  ஒரு பயிற்சிக்கல்லூரி தொடங்கினாராம். அதனில் பயின்றவர்கள் எல்லாரும் கலக்டர்கள் ஆகிவிட்டார்களாம். இப்படியும் சென்னையில் ஒரு செய்தி சொல்வார்கள்.
              வண்டி இந்து மிஷன் மருத்துவ மனை  அருகே நின்றது.’வண்டியில் நிற்பவர்கள்  சிலர் கீழே  இறங்கி நின்றுகொண்டார்கள். கண்டக்டர் சீட்டு போட்டுக்கொண்டே இருந்தார். உனக்கு எனக்கு என்று சீட்டு வாங்கி முடித்தனர். கண்டக்டர் விசில் கொடுத்தார். வண்டி கிளம்பியது. ஒவ்வொரு நிறுத்தமாக நின்றது. இறங்குவதற்குத்தான் ஆட்கள் முண்டி அடித்துக்கொண்டார்கள். ஏறுவதற்கு அப்படியில்லை. தொழிற்சாலைகள் அனேகம் ஊரின் அந்தப்பக்கம்தான். தொழிற்சாலை ப்பணிக்குச்செல்பவர்களுக்கு என்று மஞ்சள் மஞ்சளாக பேருந்துகள் இருக்கின்றன. அவர்கள் அதனில் சென்றுவிடுவார்கள். பள்ளிக்குழந்தைகள்,கல்லூரி மாணவர்கள் எல்லோருக்கும் தனித் தனி பேருந்துகள் உண்டுதான் அவர்களும் இந்த வண்டியில் ஏற மாட்டார்கள்.அப்படியும் சில பள்ளி கல்லூரி மாணவர்கள் பாஸ் வைத்துக்கொண்டு வண்டியில் ஏறித்தான் இருந்தார்கள். அவர்கள் இப்படி  ரகம் எதனிலும் மாட்டாதவர்களாக இருக்கலாம்.
        பிள்ளையார் கோவில்  குளம் நிறுத்தம் வந்தது. வண்டியில்பாதி காலியாகிவிட்டது. குளத்தை எட்டிப்பார்த்தேன். குளம் தண்ணீரால் நிரம்பி அழகாகவும் அச்சம் தருவதாகவும் காட்சி அளித்தது. குளத்தைச்சுற்றிலும் நடை பாதைக்கு என்று தடம் போட்டிருக்கிறார்கள். அதனை மழை  நீர் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தது.
குளத்திற்கு மேற்குப்பகுதிக்கரையில் பீமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது பஞ்ச பாண்டவர்களில் பீமன் வழிபட்ட சிவபெருமான் கோவில் என்று அந்தக்கோவிலில் வரலாறு எழுதியிருக்கிறார்கள். 
கிருஷ்ணா நகர் சாலையில் இன்னும் வெள்ள நீர் வடிந்தபாடில்லை. தெருக்களிலும் தண்ணீர் நின்றுகொண்டிருந்தது. அதுவரைக்கும் உள்ள  இந்தப்பகுதி மேற்கு த்தாம்பரம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு . பாரதி நகர் பத்மாவதி கல்யாணமண்டபம் தாண்டி பழைய பெருங்களத்தூர் அம்பேத்கார் நிறுத்தம் வந்தது. 
நான் பேருந்திலிருந்து இறங்கி செல்லி அம்மன் கோவில் வழியாக நடக்க ஆரம்பித்தேன்.வெள்ளம் பாதிக்காத அனேக வீதிகளைப்பார்க்கும்போது நாம் இப்படி பள்ளப்பகுதியில் வீடு கட்டி குடிவந்தோமே என்று எப்போதும்போல் வருத்தம் இருந்தது.
வெள்ளைசட்டை போட்டுக்கொண்ட இருவர் காக்கி கால்சட்டையோடு நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப்பார்க்க மின்சார இலாகா ஊழியர்கள் என ஊகிக்கமுடிந்தது. பிள்ளையார் கோவில் தெரு டிரான்ஸ்ஃபார்மரின் கீழ் பத்துபேருக்கு நின்று ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இந்தப்பகுதிக்கு மின்சாரம் வந்திருக்கலாம் என நினைத்தேன். அது சரிதான். ஆக நேதாஜி நகருக்கும் மின்சாரம் கொடுத்திருப்பார்கள்.
சிலர் வீட்டில் மின்சார மோடார்கள் இயங்கிக்கொண்டிருப்பதைக்கேட்க முடிந்தது. இப்படிக்கு அந்த இயங்கு ஓசை கேட்டு எத்தனையோ நாட்கள் ஆயிற்று நம்பிக்கையின் இருப்பு தான் மனித வாழ்க்கையாக மலர்கிறது..மனித முயற்சியும்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.எத்தனை இடர் வந்தால் என்ன ஓய்ந்துபோய் அமர்ந்துவிடத்தான் சாத்தியப்படுமா என்ன.
இரவு பகலாக மின்சாரத்தொழிலாளர்கள் வேலைசெய்து இதனை சாதித்து இருப்பதாக பார்வதி நகரில் பேசிக்கொண்டார்கள். எத்தனையோ ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தமிழ் நாட்டின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம்  சென்னைக்கு வந்து நிர்மாணிப்புப்பணி செய்தார்கள். அவர்களின் மனித நேயம் வந்தனை க்குரியதே. சம்பளம் வாங்கிக்கொண்டுதானே இத்தனையும்  செய்தார்கள் என்று சொன்னால் அது தவறு.
பிள்ளையார் கோவில் தெரு தாண்டினேன். வ.உ.சி தெரு என்று பெயரிடப்பட்ட தெருவில் நடந்துகொண்டிருந்தேன். வ உ சி தவறில்லாமல் எழுதி இருக்கிறார்கள். தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தது. அதனை பெருங்களத்தூர் பேரூராட்சி நடத்திக்கொண்டிருந்தது. ஆறு ரூபாய் கொடுத்தால் ஒரு  பெரியகேன் நிறைத்துக்கொண்டு தண்ணீர் கிடைக்கும்.வீட்டில் அக்வா கார்டு வாங்கி நிர்வகிக்க முடியாதவர்கள் இங்கேதான் தண்ணீருக்கு வந்து காலி கேனோடு நிற்பபார்கள். இப்போது பார்த்தால் அந்த இடம் வெறிச்சோடிக்கிடந்தது. யாரும் இல்லை. 'க்யூவில் நிற்கவும்'  என்று கொட்டை எழுத்தில் எழுதியதுமட்டும் கண்ணில் பட்டது. நானும் வருடத்தில் ஓரிரு முறை கேனை எடுத்துக்கொண்டு தண்ணீர் வாங்க வருவதுண்டு, ராட்சசக்கிணறு ஒன்று பக்கத்தில் இருக்கிறது.  நம் பூட்டன்கள் தோண்டியதுதான்.அந்தத்தண்ணீர் தான் இங்கு குடி நீர் வழங்கப்படுவதற்கு ஆதாரம். கிணற்றை ச்சுற்றிலும் வாழை மரங்களும் கொய்யா மரங்களும் பின்னிக்கொண்டு அடர்ந்து கிடந்தன.
வாஞ்சி நாதன் தெரு தாண்டினேன்.அந்த சுதந்திர போராட்ட வீரரை யாரோ சிலர் இன்னும் நினைவு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.மறந்துவிடவில்லை மொத்தத்தில் .ஒரு லட்சத்து எண்பதாயிரம்  மனிதஉயிர்கள் பலி கொடுத்துத்தான்  நமது நாட்டு விடுதலை பெறப்பட்டதாக ஒரு கணக்குச்  சொல்வார்கள். சத்தியமும் அகிம்சையும் போராட்டத்தில்  முன் நின்ற விஷயமும் பிரதானமானது.  தேச பிதா காந்தி கையிலெடுத்த ஆயுதங்கள் அவை. கூர்மையான  ஆயுதங்கள் தானே அவையும். 
மு.வரதராசனார் தெருவில் திரும்பி நேதாஜி நகருக்கு திரும்பிக்கொண்டேன்.
ராஜசேகர் சார் இரண்டாம் தெருவில் நின்றுகொண்டு கீழே எதனையோ தேடிக்கொண்டிருந்தார்.
‘என்ன தேடுறீங்க’
‘சைக்கிள் சாவி வண்டியிலேந்து கீழே உழுந்துது’
‘அப்பிடி எல்லாம்  சாவி உழாது’
‘உழுந்து போச்சே’ எனக்குச்சொன்னார். 
. நானும் அவரோடு சேர்ந்து தேட ஆரம்பித்தேன்.
‘வெறும் சாவியா’’
‘வெல்லம் போட்டசாவிதான்’
ராஜசேகர் சிரித்துக்கொண்டார்.
‘சணல் போட்டு கட்டி வச்சதுதான்’
நானும் சேகர் சாரும் சைக்கிள் சாவியை தெரு முழுவதும் தேடினோம். அது கிடைக்கவே இல்லை.
‘ நீங்க என்ன காரியமா வந்திங்களோ’
‘’இங்க என்ன ஆச்சோன்னு பாக்க வந்தேன்’
‘ஒரு செய்தி. கரண்ட் வந்துடுச்சி’
‘வழியிலயே பாத்தேன். கரண்டு வந்துச்சின்னு தெரிஞ்சிகிட்டன்.இப்ப என்ன செய்யணும்னு சொல்லுங்க’
சேகர் சார் சைக்கிள் சாவி தேடுவதை நிறுத்திக்கொண்டார்.
‘ஒரு எலக்ட்ரீசியன வரச்சொன்னம் அவன் சுச்சு போர்டு பாத்தான். கரண்டு மோட்டார் எல்லாம் கூட பாத்தான். மீட்டர் பாக்ஸ்  வீணாயிடுச்சின்னு சொன்னான்..ஃபேன எல்லாம் கூட கழட்டி தொடச்சி சரி பண்ணினான். ஆனா என் வீடு கீழ் வீடு. வெள்ளத்தண்ணீல மூழ்கி கெடந்துது. உங்க கீழ் வீடும் அப்பிடித்தான்.  கண்டிஷன் பாத்துட்டு தண்ணீ மோட்டார் போடுங்க. மேல் வீட்டுல ஒண்ணும் பிரச்சனை இருக்காது. கரண்டு மீட்டருவ போனது  போனதுதான்’
‘அப்ப கரண்டு எப்பிடி கணக்கு பண்ணுவாங்க’
‘அது ஈ பி காரங்க வேல. அத அவங்க பாத்துகுவங்க. அதுல நமக்கு வேல இல்ல.’
சேகர் சார் தன் வீடு நோக்கிப்புறப்பட்டார். நான் என் மேல் தள வீட்டைத்திறந்து அச்சத்தோடு ஒரு சுவிட்ச்சை ப்போட்டுப்பாத்தேன் லைட் ஒன்றும் எரியல்லை/
ஆக கரண்ட் என்பது வீட்டுக்குள் இன்னும் வந்தபாடில்லை. கீழாக உள்ள மெயின் பாக்ஸ் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. அது மறந்து போனேன். வெள்ளம் வந்த பின்னே எல்லா வீட்டு மெயின்களும் ஆஃப் செய்யப்பட்டுத்தான் வைக்கப்பட்டன. இனி ஒரு எலக்ட்ரீசியன் வந்தால்தான் நிலமை புரியும்.
இந்தப்பகுதியில் சுரேஷ் என்னும் எலக்டிரிசியன் எனக்குத்தெரிந்தவர். அவரை அழைத்துப்பேசலாம் என்று யோசனையில் இருந்தேன். இந்த மொபைல் போன் எல்லாம் இந்தப்பகுதியில் இன்னும் வேலைசெய்யத்தொடங்கிவிட்டதா என்பது தெரியவில்லை. சட்டைப்பையில் இருந்த மொபைல் போன் எடுத்து சுரேஷ் பிளம்பர் என்கிற எண்ணுக்கு போன் போன் போட்டேன்.  அழைப்பபுமணி அடிக்கிற மாதிரியும் இருக்கிறது அடிக்காத மாதிரியும் தோன்றியது. ஒன்றும் சொல்வதற்கில்லை.
வீட்டு வாயிலில் இருவர் நின்றுகொண்டு எலக்டிரிகல் வேலை ஏதும் இருந்தா சொல்லுங்க சார் என்று கூவியபடி இருந்தனர். இப்படி எல்லாம்கூட  நமக்கு  நடக்குமா என்றால் நடந்ததே. . அவர்களை நோக்கி ஓடிவந்தேன்.
‘வாங்க உள்ளார’
அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
‘ நீங்க யாரு எலக்ட்ரிகல் வேல தெரியுமா உங்களுக்கு’
‘ நாங்க ரெண்டு பேருமே இந்த ஊர் ஆளு இல்ல. தெக்குத்தி காரங்கதான். எலக்ட்ரிகல் வேல தெரியும். இங்க இப்ப வேல கனமா கெடக்குது ஆளுவதான் இல்லன்னு பேப்பர்ல பாத்தம் வந்தம். வந்து ஆச்சி ஒரு வாரம் ஆவுது’
அவர்கள் சொல்வது சரி என்றுதான் பட்டது.
‘ நாங்க இந்த பழைய பெருங்களத்தூர்ல அனேக வூடுகள்ள வேல பாத்துருக்கம். சந்தேகம்னா கேட்டுகிங்க.அதுல ஒண்ணும் தப்பு இல்ல’
‘ நீங்க வேல பாக்குறீங்க நானு கூலி கொடுக்குறன். அவ்வளவுதான’
‘சாரு உங்க மோட்டார தொடச்சி போட்டுபாக்குறம்.பிட் தண்ணி இல்லாம தொடக்கிறம். அத மொதல்ல பாக்குறம். வூட்டுக்கு கரண்டு வருதான்னு தெரியுமா பாத்திங்களா’
‘அது பாக்குல’
‘மீட்டரு கெட்டு கெடக்கு  அபுறம்  எப்படி பாக்குறது’
அந்த இருவரில் கருப்பாக இருந்த உயரமானவன் கேள்வி கேட்ட குள்ள மனிதனுக்கு பதில் சொன்னான்.
உயரமானவன் தன் கையில் டெஸ்டரை எடுத்துக்கொண்டு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ள சுவர் அருகே சென்று நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
வீட்டின் ஃபீஸ் இன்னும் ஆன் செய்யப்படவில்லை.
’கரண்டு வருது’
‘ வூட்டுல எந்த சொச்சியும் போட்டுவைக்கலயான்னு பாத்துகுங்க அது முக்கியம்’
நான் அதனை உறுதி செய்துகொண்டேன். வீட்டில் எந்த சுவிச்சும் போடப்படவில்லை.
‘ஃபீஸ் போடுறேன். மேல் வீட்டுல சொச்சி போட்டு பாருங்க’
என்றவன்
‘ நீ ஏன் நிக்குற அந்த மோட்டார பாரு. அது கத என்னான்னு தெரியுணும்’
அடுத்தவனுக்கு க்கட்டளை பிறப்பித்தான்..
 நான் முதல்தளத்திலுள்ள என் ஜாகைக்குப்போய் போர்டிகோவில் இருந்த ஃபேன் சுவிட்சை ப்போட்டுப்பார்த்தேன். ஃபேன் நன்றாக ஓடியது.  மேல் தளத்தில் உள்ளே இருந்த மின்சார சுவிச் அமைப்பில் கோளாறு எதுவும் இல்லை. மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
கீழே வேலை செய்துகொண்டிருந்த இரண்டு எலக்ட்ரீசியன்களும் மோட்டாரை சுத்தம் செய்து அதனை ஓட விட்டார்கள். அது ஓடியது.ஓடும் சப்தம் நாராசமாக இருந்தது.
‘இத பெறவு பாத்துகலாம். இப்பக்கி  மோட்டார் ஓடணும்தண்ணீ வரணும். அது முக்கியம்].இருவருமே சொன்னார்கள்.
மோட்டார் போட்டு தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது.தண்ணீர்தான் மனிதனுக்கு இன்றியமையாத தேவை. ஆதிகாலத்து நம் முன்னோர ஆற்றங்கரையோரம் மட்டுமே குடியேறி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்தினார்கள்.தண்ணீர் அத்தனை முக்கியம் என்பதை அவர்கள் தெளிவாய் அறிந்து வைத்திருந்தார்கள்.
கரிகால் சோழன் வீராணம் ஏரியை எத்தனை முன் யோசனையோடு அமைத்து விட்டிருக்கிறான்.அந்தக்கரை மீது எத்தனையோ முறை நான் நடந்துமிருக்கிறேன். மக்கள் தொகை அதிகமில்லாத அந்தக் காலம். மாதம் மும்மாரி பெய்திட்ட காலம். கர்நாடக அணைகள் ஜனிக்காத பொற் க்காலம். கன்னடர்கள் தமிழர்கள் என்று வேற்றுமை கருத்தரிக்காத வஸந்தகாலம். வானத்துக் கருமேகங்கள்  நம்மை புறந்தள்ளாத நற்காலம்.         
கரிகால் சோழனின் பெரிய மனம் வீரநாராயணன் ஏரியை காணும்போதெல்லாம் என்னை வந்து வந்து ஆக்கிரமித்துவிடும் இன்று மா நகராம் பெரும் சென்னைக்கு க்குடி நீர் வழங்கிக்கூட வீராணம் ஏரி கரிகால்  வளத்தானை  அச்சோழனை  நமக்கு நினைவு படுத்துகிறது.
        ‘சாரு மோட்டர் ரெடி ஊட்ட கழுவி வுடுங்க. கீழ் வூடு நல்லா காயட்டும்.பெறவு கரண்டுல சுச்சில  ஃபேனுல என்னான்னு பாக்குலாம். ஃபிரிஜ் நல்லா தொடச்சி காயவையுங்க. டீவி போனது போனதுதான். மிக்சி கிரண்டரு போயிடுச்சி. லாப்டாப்பை காப்பாத்தாம வுட்டுபுட்டிங்க அது எல்லாம்  ஒரு செமயா. அதோட டி வியையும் கெழட்டி மேல் வூட்டுல பத்ரமா வச்சிருக்கலாம் போனது போச்சி. அதுக்கு இப்ப என்ன செய்ய முடியும்’
எலக்டிரிசியன் விஸ்தாரமாக சொல்லிக்கொண்டே போனான்.
 நாம் குடியிருக்கும் தெருவில்  வெள்ளத்தண்ணீர் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தால் அச்சம் வந்து கவ்விக்கொள்கிறதே.எதை எங்கே சரியாக யோசித்து செயலாற்ற வைக்கிறது . பாழும் மனம் இப்படிக்கு  அசை போட்டபடியே இருந்தது.
       வீட்டுக்குள் மின்சாரம் வருகிறது.அதுவரைக்கும் நிம்மதியாக உணர்ந்தேன். வீட்டுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை கணக்கிடும் மீட்டர்கள் கோவிந்தா ஆகிவிட்டன. அவை சற்றும் அசையவில்லை. என்வீட்டில்தான் என்று இல்லை. தரை தளத்தில் இருந்த எலக்ட்ரிகல் அயிட்டம் யார் வீட்டில் இருந்தால் என்ன? எதுவும்தான்  இயங்கவில்லை.
        வீட்டில் செலவாகும் மின்சாரத்துக்கு ஈபி காரர்கள்  ஏதோ ஒரு குல்மத் கணக்கு போடுவார்கள். நாம் கட்டிவிடவேண்டியதுதான்.குலமத் கணக்கு என்றால் என்ன என்று சொல்ல வேண்டுமே. 
          விருத்தாசலம்   தொலைபேசி நிலயத்தில்  நான் அன்று வேலை செய்தேன். அந்த ஊரில்முந்நூறு தொலைபேசிகள் இயங்கின. தொலை பேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டு சந்தாதாரர்கள் தேவுடு காக்கவேண்டிவரும். எந்த எண் உங்களுக்கு  வேண்டும் என்பார்கள்  நாம்அவர்களிடம்  வேண்டிய எண்ணைச்  சொல்ல வேண்டும்.அந்த எண்ணுக்கு இணைப்பு கொடுப்பார்கள். அவர்களே அந்த எண்ணுக்கு ரிங் கொடுப்பார்கள். பேசி முடித்துவிட்டால் அவர்களுக்கு இண்டிகேஷன் கிடைக்கும். நம்மை இணைப்பிலிருந்து அவிழ்த்தும் விட்டு விடுவார்கள்.இது உள்ளூர் தொலைபேசி சேவை.
 வெளியூர் போன் பேசவேண்டும் என்றால் டிரங்கால் புக் செய்து காத்திருக்க வேண்டும்.போன்சொந்தமாக இல்லாத ஏழை மனிதர்கள் போஸ்டாபீசுக்கு சென்று காத்துக்கிடக்கவேண்டும்  அணாவாசைக்கு  ஒரு முறை கால் கிடைக்கும் அது  கிடைக்காமலும் போய்விடும்.
    வெளி நாடு கால் பேசுவது என்பது ஒரு தனிக்கதை, அந்த ஓவர்சீஸ் காலை சென்னை வழியாக கனெக்ட் செய்து பேசக்கொடுப்பார்கள். அது ஏதோ மேஜர் சர்ஜரிக்கு இணையாகத்தான்  கவனம் பெற்றுக்கொள்ளும்.  பேசுபவர்களுக்கு ஏதோ அரை குறையாகக்  காதில் விழும் மனத்தைத்  திருப்தி செய்துகொள்ளவேண்டியதுதான்.
குல்மத்துக்கு விளக்கம் கொடுக்கலாம் என்று ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன். தொலைபேசி நிலயத்தில் வேலைசெய்த நாங்கள் ஒரு மலையாள மாமி மெஸ் ஒன்றில் வாடிக்கையாக சாப்பிடுவோம். அங்கு ஒரு கணக்கு நோட்டு இருக்கும்.  மெஸ்ஸில் சாப்பிட்டவர்கள் தம் பில் தொகையை அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட பக்கத்தில் தேதி எழுதி சாப்பிட்ட  தொகையைக் குறிப்பிட வேண்டும். 
மாதாமாதம் சம்பளம் வாங்கும் சமயம்  மொத்த பணத்தையும் கொடுத்து  கணக்கை நேர் செய்யவேண்டும்.  மெஸ்சில் ஒரு முறை அந்தக்கணக்கு நோட்டுதொலைந்துபோவிட்டது இல்லை யாரோ  அதைச்சுருட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஆக யார் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்ன தொகை ஆனது என்பதை அப்படி இப்படி  யோசித்து மேற்படி  மலையாள மாமி  ஒவ்வொருவருக்கும்  இன்னது தொகை என்றார்கள்.
‘இது என்ன கணக்கு’ நான்தான் மலயாளமாமியை க்கேட்டேன்.
‘இது ஒரு குல்மத் கணக்கு’ மாமி எனக்கு பதில் சொன்னார்கள். அந்தப்படிக்குத்தான் வீட்டுக்கு வீடு  மீட்டர் சரி செய்யப்படும் வரைக்கும் மின்சார இலாகாவினர் நமக்கும் கட்டணம் விதிக்க முடியும். அந்த குல்மத் சமாச்சாரம் இனி எப்படியாவது ஆகட்டும். என்  வீட்டைப்பூட்டிவிட்டு குரோம்பேட்டைக்கு ப்புறப்பட்டேன்  
இனி இந்த நேதாஜி நகருக்கு மீண்டும் குடி வருவது எப்படி என்கிற  சிந்தனை எனக்குள்  சுழலத் தொடங்கியது.
----------------------------   

  .
..