Wednesday, December 29, 2021

குருவந்தனம்

 

 

 

குரு வந்தனம்                       

 

 குயவன் களிமண்ணை  சுழலும்  அச்சக்கரத்தில் எடுத்து  எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான்  எதனைச் செய்வான்  சட்டியா பானையா அதனதன்  மடக்கா,  எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா சாலா  சாலும்கரகம்தானா  யார் அறிவார்?.

  அந்தச்சக்கரம் அமர்ந்த  களிமண்  எதுவாக  உருப் பெறும்  எப்படி அதன் வடிவம் இருக்கும்,  அக்குயவன் சுழலும் சக்கரத்தை எதுவரை சுழற்றுவான் எப்போது நிறுத்துவான் யாருக்குத்தெரியும். அனைத்தும் அவன் விருப்பம். மனிதர்கள் அந்தக்குயவனின் கைக்கு அகப்படக்காத்திருக்கும் களிமண் அவ்வளவே.

 ராபர்ட் பிரொளனிங் என்னும் ஆங்கிலக்கவிஞன் எழுதிய ஒரு கவிதை.. கவிதையின் பெயர் ரப்பி பென் எஸ்ரா.  கவிராயர்  ராபர்ட்பிரொளனிங்    சொல்லுவார். ’கடவுள்  ஓர் குயவன். அவனுக்கு முன்னால் தயாராக  பிசைந்து பிசைந்து வைக்கப்பட்டிருக்கிறது கூடை நிறைய களிமண்.  அவன் ஆணைக்கு ஏற்பச்சுழலக் காத்திருக்கும் ஒரு சக்கரம் இவ்வுலகம்.

செல்லப்பா வகுப்பில்  இப்படிச்சொல்லிக்கொண்டே போவார்.  முதுகலை இறுதிப்பருவம் கவிதையியல் அவனுக்குச் சொல்லிக்கொடுத்த பேராசான் அவர்.  

அவன் மனம் மட்டும் வேறு வேறு வழியில் சென்று  அவனைத் துளைத்துக்கொண்டேகொண்டே இருந்தது.

மனித முயற்சி என்ற ஒன்று  இல்லையா என்ன? அதற்கு  உரிய மாண்பென்தும்  உண்டுதானே பிறந்த குழந்தைக்கு நடக்கக்கற்றுத்தர வேண்டாமா பேசக்கற்றுத்தரவேண்டாமா?   தத்தி த்தத்தி விழுந்து விழுந்து  அடி பட்டு பின் எழுந்துதானே அது நடை பழகவேண்டும். மழலைச்சொல் பேசிப்பேசி  பின்னர்தானே சட்டமாய்ப் பேசவரும்.

உணவும் உடையும் உறையுளும்  இங்கு வாழும் மக்களுக்கு .யார் கொண்டு தருவார் ? . மனிதர்கள்தானே அயராது உழைத்து அவை அவை  உருவாக்கித்தரவேண்டும். காலைக்கட்டிக்கொண்டு  நீயும் நானும் ஒரு மூலைபார்த்து  உட்கார்ந்து விட்டால் இவை எல்லாம் எப்படி சாத்தியமாகும்.

 மனிதன் வயற்காட்டில்  மாடாய் உழைத்து  உற்பத்தி செய்யாவிட்டால் சட்டியும் பானையும் சமையல் கூடத்தில்  சயனித்துக்கொண்டு என்ன செய்யும். .

ஆங்கிலப்பேராசான் செல்லப்பா நடத்திக்கொண்டே போவார்.  கிராமரியன்ஸ் ஃபுனெரல் என்னும் கவிதையிலிருந்து மேற்கோள் வந்து வந்து விழும். அதுவுமே பிரெளனிங் எழுதிய கவிதைதான்.   ’வாழும்  இக்கணத்து  இன்பம் ஒன்று மட்டுமே என்பது  தெருநாயுக்கும் குரங்குக்கும்தான் மனிதனுக்கு  அவ்விதம் இல்லையே.  மனிதன் முக்காலத்தையும் கணக்கில் கொண்டு  வாழ்வை தீர்மானிக்க வேண்டும்’

’மனிதன் வாழ்ந்து முடிக்கப்பிறந்தவனில்லையப்பா.. அவன் மென்மேலும் அறிந்துகொள்ளப்பிறந்தவன்’

 பேராசான் அந்தக்கவிதையிலிருந்து சொல்லிக்கொண்டேபோவார்.

’மெமொராபிலியா’ என்னும் கவிதைக்குத்தாவுவார்...

‘ஷெல்லி எனும் கவிஞரை

ஒரு நாள்  நீ

சாதாரணமாய்ப் பார்த்தாயல்லவா

அவர் நின்றார் உன்னோடு பேசினார்தானே

நீயும் அவரோடு திரும்பப்பேசினாய்

எத்தனை ப்புதுமை

எத்தனைக்கு அரிது இது அறிவாயோ

அத்தனைக்கும் பிறகு

முன் எப்படி இருந்தாயோ 

அப்படித்தான்  இருப்பாயோ

இப்போதும்’ நீ.’

’ஒரு கவிஞனுக்கு இதனைவிட இன்னொரு கவிஞன் பெருமை சேர்த்துவிட முடியுமா’ என்பார்.

.’’உலகம் மாறுகிறது

உன் ஆன்மா அப்பேரான்மா நிலையில் மாற்றமில்லை.

உன்னுள் இருக்கும் அது

இருந்தது இருக்கிறது  என்றும் இருக்கும்

சுழலும் சக்கரம் பின் போகும்

ஏன் நிற்கும்கூட..

களிமண்  வைத்திருக்கும்

குயவன் மட்டுமே

அறிவான் மொத்தமும்’.

எத்தனை அழகாகக் கவி பிரெளனிங் மனித வாழ்க்கையை  எடுத்து வைக்கிறார்   செல்லப்பா  தொடர்வார்.

‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி

 நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

 கொண்டு வந்தான் ஒரு தோண்டி

மெத்தக்கூத்தாடி கூத்தாடிப்

போட்டுடைத்தாண்டி

என்னும்  கடுவெளிச்சித்தர் பாடலை ப்ரெளனிங்கின் பாடலோடு ஒப்பிட்டு ச்சிலாகிப்பார். வகுப்பே வாய்பொத்தி அமர்ந்து உற்சாகமாய்க் கேட்கும்.

  ஆங்கிலக்கவிஞன் பிரெளனிங்கின் கவிதை நூலை இக்கணமே வாங்கி முற்றாய்ப்படித்துவிடவேண்டும். அவன் முடிவு செய்தான். ரப்பி பென் எஸ்ரா இந்த ஒரு கவிதை மட்டுமே அவனுக்கு சிலபஸ். என்றாலும் என்ன ?..  

 தான் வாழும் நகரத்தில் பழைய புத்தகக்கடைகளைத்தேடிதேடி அலைந்தான். அந்தத்திருவல்லிக்கேணி கடற்கரை சமீபமாய்த்தான்  இந்த  வகைப் புத்தகங்கள் எல்லாம் விற்பார்கள். அவன் எத்தனையோ புத்தகங்கள் இப்படி வாங்கியிருக்கிறான்.  கடைத்தெருவில் நடை பாதையில் முட்டு முட்டாய் க்கொட்டிவைத்திருக்கும்  பழைய புத்தகங்களில் அந்த பிரெளனிங் கவிதையைத்தேட ஆரம்பித்தான்.

‘ என்ன தேடுற’

‘உனக்கு சொன்னா புரியுமா’

‘தேவுலாம்டா  இது என்கட நா வியாவாரி’

‘ சொல்லுறேன் பிரெளனிங் கவிதைகள்’

‘ அப்படிச்சொல்லு, இங்க்லீஷ் கவிதங்க கேக்குற,  தனியா வச்சிருக்கேன் பாரு’

அவன் ஒரு தனி அடுக்கைக்காட்டினான்.

  அடுக்கி இருக்குறது சும்மா கொழப்பாதே. நெதானமா பாரு நீ கேக்குறது இருக்கும்’

அவன் வரிசையாக பார்த்துக்கொண்டே வந்தான். ஷெல்லி. வர்ட்ஸ்வர்த். லாங் ஃபெல்லோ, ஜான் டன், மில்டன், ஷேக்ஸ்பியர் எமர்சன். எமிலி ஃப்ராஸ்ட், எட்கர் ஆலன் போ, வால்ட் விட்மன், ஷெரிடன், தாகூர் ஆர் கே நாராயண் ராஜாராவ் இன்னும் எத்தனை பேர்..

‘கெடச்சிதா’

‘பாக்குறேன்’

பிரெளனிங் எழுதிய ’லாஸ்ட் ரைட் டுகெதர்’ எனும் கவிதைக்கு குதிரை இரண்டுடன்  அழகழாய் ஆணும் பெண்ணும் என அட்டைப்படம் போட்ட பழைய புத்தகம் ஒன்று கிடைத்துவிட்டது. அவன் அதை தட்டி எடுத்துக்கொண்டான்.

‘ கொண்டா கொண்டா’

அவனிடம் அதை ஒப்படைத்தான். கடைக்காரன் ஒரு புரட்டு புரட்டுனான்.

‘ எடு நூறு’

‘ நூறா’

அவன் புத்தகத்தைப்புரட்டி இரண்டாம்பக்கத்தில் விலை என்ன போட்டிருக்கிறது என்று பார்த்தான். ப்ரைஸ் அதற்குப்பிறகு வட்டமாய் ஓட்டை... விலை  மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது.

‘ என்னா பாக்குற வெலயா’

‘ அது ஏன் உனக்கு  எது எடுத்தாலும் அந்த கட்டில நூறு ரூவாதான்’

‘ அது எப்பிடி? போட்டிருக்கிற விலய  கிழிச்ச’ நீ’

‘ பொஸ்தகம் வேணுமா வெலய போய் பெரிசா பாக்குற’

‘ நான் கேக்குறதுல என்ன தப்பு’

‘ தப்புதான் அந்த பலான பலான  புத்தகம்னு  சொல்லு வெல கொறச்சி தாரேன். இத வெல கொறச்சி குடுத்தா அதுவும் தப்பு தெரிமா’

அவன் தொடர்ந்தான்.

’பெரிய மனுஷன் பெரிய மனுஷன் படிக்கணும்னு எழுதுனது . நாயிங்க நாயிங்களுக்கு எழுதுன சமாச்சாரமில்ல. எதுல போய் காசி பாக்குற அது உள்ர என்னா சமாச்சாரம் இருக்கு. எனக்குத் தெரியாது. ஆனா அந்த முட்டுல கை வச்சிட்டு  தேடுனா அவன் பெரிய மனுஷன்’ ’

‘ பின்ன ஏன் வெலய கிழிச்ச’

‘ ஒண்ணும் கேக்காத சாமி’.  அவன் போட்டிருக்கும் கிழிந்த பனியனை கைவிட்டு தூக்கி த்திருப்பிக்காட்டினான். அவன் வயிறு மட்டும் கச்சிதமாகத் தெரிந்தது..’’’ அவன் எதுவும் பேசவில்லை.

 யாரோ பளார் என்று கன்னத்தில் அறைந்தமாதிரிக்கு உணர்ந்தான். . நூறு ரூபாயை எடுத்து அவனிடம் பவ்யமாய் நீட்டினான்.

  உசந்த மனுஷன ரவ நாழில அசிங்கப்படுத்திடட’’.’ சொல்லிய கடைக்காரன் அந்த நூறு ரூபாயை கண்ணில் ஒற்றிக்கொண்டு  சுருக்குத் துணிப்பையில் போட்டுக்கொண்டான்.

 

----------------------------------------

 

 

 

 

 

 

 

 

Sunday, December 19, 2021

 

கனவு மெய்ப்படும்

 

 

 

எஸ்ஸார்சி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கனவு மெய்ப்படும்

புதினம்

எஸ்ஸார்சி

முதற்பதிப்பு:2001

மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி

பக்கங்கள் : 8+234

விலை ரூ


 

 

 

 

 

 

 

"தொன்மந் தொட்டு

கிராமப்புற மூலை முடுக்குகளில்

தன் உழைப்பை நல்கி

அடக்கு முறைகளுக்கும்

அவமானங்களுக்கும்

இன்றும் இலக்காகும்

கபடத்தின் நிழலே

அறியா அந்த

உத்தம உழைப்பாளர்களின்

உள்ளம் தொழுது"......

 


முதலாம் பதிப்புரை

கவிதை, கட்டுரை, கதைநூல்கள் எனப் பல தளத்திலும் தமது படைப்புக்களை வழங்கிவரும் தரமான எழுத்தாளர் திரு,எஸ்ஸார்சி அவர்களின் நல்லதோர் புதினமாகக் கனவு மெய்ப்படும் எனும் வட்டார வழக்கு நாவல் தற்போது வெளிவருகின்றது.

புதுநெறிக் கவிஞர், பேராசிரியர் திரு..பழமலய் அவர்கள், திரு.எஸ்ஸார்சியின் முந்தைய நாவல் குறித்த பாராட்டுரையில் விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்ற வட்டாரத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இவர்தம் எழுத்தினைக் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது கூறறினை மெய்ப்பிக்கும் பாங்கில் இதோ ஒரு கிராமியக் காவியம் இப் புதினமாகப் பரிமளிப்பதை வாசக அன்பர்கள் சுவைத்து மகிழலாம்.

நிலாவில் கால்வைத்த...... இக்காலத்திலும் சாதிப் பேய்களின் சதியாட்டமும், வர்ணாசிரமப் பேதங்களின் முடக்குவாத நடைமுறைகளும், புதிய அரசியல் வன்மங்களும் கோலோச்சிய, தருமங்குடி என்னும் ஒரு கிராமத்தின் சகலப் பிரிவு மனிதர்களையும் உள்ளபடிச் சித்தரித்து ஆசிரியர் இப்புதினத்தை வடித்துள்ளார்.

திரு.எஸ்ஸார்சியின் இக்கதை, கருப்பொருளாலும், வட்டார வழக்கு நடையழகாலும் உயர்ந்து மிளிர்கின்றது.

இடத்திற்கும், பாத்திரத்திற்கும் பொருந்திய உயிரோடடமான உரையாடல் புதினமெங்கும் சுடர்வீசுகின்றன. கதை மாந்தர் எல்லோருமே யதார்த்தத்தின் அச்சுக்கள் என்றாலும், முடிதிருத்தும் நாகலிங்கமும், துணி வெளுக்கும் சிங்காரமும் மாசிமகத் திருவிழாவிற்காக நாள் முழுதும் பயணித்து, வழி நெடுக நேரும் அவர் தம் சுகானுபவக் காட்சிகளும் பேச்சுகளும்  படிப்போர் எவர்க்கும் நல்ல நகைச்சுவை தருவன.

நம் தமிழகத்தில்& தருமங்குடி என்னும மாதிரி கிராமத்தின் சூழலில், அங்குள்ள மக்களின் வாழ்வில் நேர்ந்த ஏற்ற, இறக்கங்களை வரைந்து காட்டும் இப்புதினம், நம் நாட்டின் இன்றைய ஒட்டுமொத்த சமூகத்திற்கு விழிப்பூட்டும நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது.

சீரிய சமுதாய இலக்கோடு கூடிய இப்புதின நூலை வெளியிட எங்கட்கு வாய்ப்பளித்த நூசிரியர் திரு எஸ்ஸார்சி அவர்கட்கும், இவ்வெளியீட்டில் துணை நின்ற நண்பர் திரு. குறிஞ்சிவேலன் அவர்கட்கும், இதனைச் சிறந்த முறையில் அச்சிட்டு வழங்கிய சுபம் அச்சத்தார்க்கும் எங்கள் நன்றிகள் உரியன.

சு.சம்பந்தன்

மணியம் பதிப்பகம்

குறிஞ்சிப்பாடி

 


என்னுரை   (முதல் பதிப்பு 2001)

எழுத்தாளனின் படைப்பு விஸ்தாரமாய் வெளிப்படுவதற்கு நாவல் தகு ஊடகம். அவ்வகையில் இந்த நாவல் கனவு மெய்ப்படும் எனக்குப் பூரணமாய் விஸ்தீரணம் தந்தது.

நடு நாட்டுக் கிராமப்புற நிலவியல் அமைப்புக்களை, அங்கு உலா வருகின்ற அன்புச் சகோதர சகோதரிகளை,அவர்களிடை எழும் சிக்கல்களை, பெறப் படுகின்ற அவமானங்களை, அவ்வவமானங்கள் விளைவிக்கின்ற மன ரணங்களை, தன்மான எழுச்சி அங்கு தருவிக்கும் போரட்டாங்களை, அப்போராட்டங்கள் பின் சிறுமைப் படுத்தப்படுதலை, ஈன அரசியலின் சித்து விளையாட்டுக்களை, சுயம் பற்றிய சிலரின் சிந்தனைச் சிறுமையை, தருமங்குடி மக்களின் எளிமையை, வெகுளித்தனத்தை, கோபா வேசத்தை, வக்கிர உக்கிரங்களின் ஆக்கிரமிப்பு பெறாத பிஞ்சு உள்ளங்களை, எஞ்சி நிற்கின்ற பண்ணை அடிமைத்தனத்தின் கொடு விஷத்தை, பிரச்சனைகளின்றும் ஒதுங்கி வாழ்கின்ற சத்தியவான்களை, உழைத்து உழைத்து வயிற்றுப்பசி மட்டுமே ஆற்றி இற்றுக் கொள்ளும் மனித அவலங்களை ஓரளவுக்கேனும் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளேன்.

சமூகப் பிரச்சனைகளினின்றும் சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதையும், கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுவதையும், மாற்றம் என்பது புரட்சிகரமானதுவாய், வெகு எளிதில் கிட்டி விடுவதாய், வீழ்த்திவிட முடியாததுவாய், பூரணமாய் அமைந்து விடுவதில்லை என்பதையும் நிகழ் அரசியலில் அறம் மறந்து தன்னிருப்பு மட்டுமே துருத்துக் கொண்டு நிற்கின்ற அவலம் தொடர்கின்றவரை, புரட்சிகர மாற்றம் என்பது ஏமாற்றமே என்பதையும் இந்நாவல் மூலம் உணர்த்த விரும்புகிறேன்.

பிரதானமாய் இப்படைப்பு, கிராமப்புற தொன்ம வழிவந்த தொழிலாளர்களின் சோகம் பற்றிப் பேசுகிறது. முடிதிருத்தும் கலைஞனும், துணி வெளுக்கும் தொழிலாளியும் சந்திக்கின்ற மனித நேயமற்ற அன்றாட நடப்புக்களை வாசகனுக்கு எடுத்தியம்புகிறது.

மார்க்சியமும் அறிவியலும் சமூகக் கொடுமைகளைக் களைவதில் தம்பங்கு ஆற்றுகின்றன என்பதை உள்வாங்கிய  என் சிந்தனை -மார்க்சியம் அதனின் நடைமுறை பலவீனங்கைளை கணக்கில் எடுத்துக் கொண்டும் கூட, இன்றளவும் வேறு மாற்று வெடிபடாததை, வேறு சிந்தனைத்தடம் அதனைப் புறந்தள்ள முடியாத அற்புதத்தை, மார்க்சியம் மீது சாதாரண மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத அற நம்பிக்கையை -நிறைவோடு இப்படைப்பில் யதார்த்தமாய் வெளிப்படுத்துகிறது.

கனவு மெய்ப்படும் வெளிவர தோழமையோடு உதவி செய்த மதிப்பிற்குரிய பெருந்தகை, எழுத்தாளர் குறிஞ்சி வேலனார்க்கு என் வணக்கங்கள்.

இந்நாவலை வெளியிட்டுப் பெருமைப்படுத்திய குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகத்துச் செம்மல் திரு சம்பந்தம் அவர்கட்கு என்றென்றும் நன்றி உடையவன் ஆவேன்.

சிதம்பரம் சுபம் அச்சத்து நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, குருசாமி ஆகியோர்க்கும் என் நன்றி உரியதாகிறது.

                                          வணக்கத்துடன்

                                           எஸ்ஸார்சி

 

கனவு மெய்ப்படும்

1

அன்று தருமங்குடியில் இப்படி நடந்தது.

"டட் டட் டட்" பறை ஒலி எழுப்பிக்கொண்டு நான்கைந்து பேர்கள் ஊரை வலம் வந்து முடித்தார்கள். ஊரின் நடுவே நீலவானத்தை அளந்து நிற்கும் அரச மரத்துக்குக் கீழாய் நின்று கொண்டார்கள். மீண்டும் டட் டட் டட் ஒரு சேர ஒலி எழுப்பினார்கள்.

"ஊரு...காரங்களுக்கு அறிவிக்கிறது என்னண்ணா நாங்க தொழிலாளிங்க நாலு பேரும் இனிமேலுக்கும் வெட்டியானுங்கன்னு கெடயாது எங்களை அப்படிக் கூப்பிடறதும் முடிஞ்சிபோச்சி. நாங்க எதனா கூலி வே செஞ்சி பொழச்சிக்கிறம். மாடு செத்ததுன்னு இனி எங்களுக்கு சேதி வரக்கூடாது. மாடு செத்துன்னு இனி எங்களுக்கு சேதி வரவே கூடாது அவுங்க செத்த மாட்டை அவுங்க அவுங்க அப்புறப்படுத்திக்னும்" டட் டட் டட் ஒருமுறை பறை ஒலி எழுப்பினார்கள்.

"ஊருகாரங்களுக்கு இதனால் அறிவிப்பது என்னண்ணா இனி பிரேதம் உழுந்துதுண்ணா சுடல வேலய அந்த அந்த ஜனம் பாத்துக்க வேண்டியது. எங்களுக்கு சேதி சொல்லுறது இனிவேணாம், நாங்களும் வரமாட்டோம்."

டட் டட் டட் மீண்டும் ஒருமுறை பறை ஒலி,

"ஊரு காரங்களுக்கு இதன் மூலம் அறிவிப்பது என்னண்ணா எழவு சேதி சொல்லுறது, செரா பொளக்கிறது, பாடைகட்டிக் கொடுக்கிறது, சொக்கப்பானைக்கு மெலாறு கட்டுகிறது, அம்பு போடுறதுக்கு மண்ணு கொளப்பி கொண்டாறது, இதுக மாதிரியா எந்த வேலயும் எங்களுக்கு இனி கெடயாது. சாமியேன்னு கீழே உழுந்து நெட்டைத் தடியா தெண்டம் இடுறது இனி இல்லே. எல்லா செறுமையும் இன்னையோட முடிஞ்சி போச்சி.

டட் டட் டட் மீண்டும் ஒலி.

நால்வரும் சுட்ட மண்சட்டி போர்த்திய ஒலி எழுப்பும் பறைத் தோலைக் கிழித்து வீதியில் வீசினார்கன். நான்கு அம்மணச்சட்டிகளையும் கீழே போட்டு தம் கால்களால் ஓங்கி ஓங்கி மிதித்து முடித்தார்கள்.

இந்த தொழிலாளர்களில் வயதில் மூத்த ஒருவரை குரல் ஓங்கி அழைத்தார் நடுப்பிள்ளை. அவரோடு தருமங்குடி நாட்டாண்மை ராமலிங்கரும் உடன் இருந்தார் அவர்கள் இருவருக்கும் பின்னால் தருமங்குடி பஞ்சாங்க ஐயரும், நாவிதன் நாகலிங்கமும் நின்று கொண்டிருந்தார்கள்.

’பெரியவனே’ நடுப்பிள்ளை ஓங்கி அழைத்தார்

பறை கிழித்த நால்வரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

’ஏம்பா உங்களைத்தான்’

நால்வரும் ஒரு சேர நின்றார்கள்

’ஏனுங்க’

’என்னத்தைச் சொல்லிப்போறீங்க’

’மூணுதரம் சொல்லுல’ என்றான் சிறியவன்.

’நாங்க வெட்டியானுங்கன்னு அந்த ஈன வேலய செய்யுறது வுடுறம் அவ்வளவுதான்’, என்றார் மூத்தவர், மீதமிருந்த மூன்று பேரும் அமைதியாய் இருந்தனர்.

’வெளி ஊர்லந்து ஆளு வரவழிச்சிப் பாக்குலாம்’ என்றார் பிள்ளை வெடுக்கென்று.

சிறுவன் விருட்டென்று பதில் சொன்னான்.

’அந்தக் கதெ இங்க நடக்காது அந்த வேலவுள செய்ய எங்க சாதி சனம் எங்கிருந்தும் வராது. அவ்வளவுதான்’

’அப்பண்ணா நாம்ப நாம்ப செஞ்சிகிறதா?’

’ஏன், செஞ்சிக என்ன தப்பு? நாம சூத்த நாம கழுவிக்கல’ என்றான் சிறுவன்.

’ஏலே வாய்ப் பொத்துடா’ என்றார் மூத்த தொழிலாளி

’செத்தமாடு தூக்குறது’  இது நாட்டண்மை.

’சும்மா வளத்தாதிங்க. நாங்க வெவசாயக் கூலியா இல்ல வேறு எதனா வேல செஞ்சி பொழச்சிகிறம். நீங்க தான் உங்க செத்தமாட்டை அப்புறப் படத்தனும்’.

விளக்கமாய்ச் சொன்னார் மூத்தவர்.

’தோலு’       மீண்டும் நாட்டாண்மை.

’நீங்க எடுத்துக் கழுவிக் காயப்போட்டு வித்துகுங்க உங்களுக்குத் துட்டு வரும்’

பதில் சொன்னான் சின்னவன்.

வாயு நீளுது என்றார் நடுப்பிள்ளை.

நால்வரும் நகர்ந்து போயினர். நாட்டாண்மை ராமலிங்கரும் நடப்பிள்ளையும் தீவிர யோசனையில் இருந்தனர். தருமங்குடியில் இனி என்ன செய்வது என்று சிந்தனை அவர்களைக் கவ்விக்கொண்டது.

நாகலிங்கமும், பஞ்சாங்க ஐயரும் பேசிக்கொண்டார்கள்.

’இனி வரமாட்டானுக’

’நாகலிங்கம், அவனுக போரபடி பாத்தா, வர மாட்டானுக போலத்தான்’

’காலம் மலையேறிப் போச்சி. அவுகஅவுக அவுக வேலய பாக்குறதுன்னு வரும்போல சாமி’

நடுப்பிள்ளை நாகலிங்கத்தை அழைத்தார். ’ஏலே நாகலிங்கம். நாளைக்கு சாயந்திரமா ஒரு பஞ்சாயத்து கூட்டணும். நாட்டமையும் சொல்லி இருக்காரு. ஊரு சனம் தலைக்கட்டுக்கு ஒரு ஆளு அவசியம் இருக்கணும். பிரச்சனை விபரீதம்’

’சேதி சொல்லி விட்டுடுறேன்\ என்று பதில் சொன்னான் நாகலிங்கம்.

ஐயர் நகர்ந்து நடுப்பிள்ளையிடம் வந்து நின்று கொண்டார்.

’நெசமா பிள்ளை’

’ஐயர்வாள், தப்ப கிழிச்சி, சட்டியை ஒடச்சி போடுறது பாக்குல இதுல இன்னும் என்னா பெய்யி நெசம்?’

’ஆமாம்’

’நான் என் வாயாலே சொல்லுணும்’

இல்லை

’நாளைக்கு பஞ்சாயத்து கூடுது. சொச்சத்தை அதுலே பேசிக்கலாம்’ என்றார் நடுப்பிள்ளை.

நாட்டாண்மை நடுப்பிள்ளை சொல்வதை முற்றாய் ஆமோதித்து நின்று கொண்டிருந்தார். ஐயரும் நாகலிங்கமும் கலைந்து சென்று கொண்டிருந்தனர். தருமங்குடி அச்சம் விரவிய ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தது.

2

தருமங்குடி கிராமத்துப் பஞ்சாயத்து காலையிலேயே கூட்டப்பட்டிருந்தது. நாட்டாண்மை, ராமலிங்கரும், நடுப்பிள்ளையும் அரசமரத்தடியில் நாற்காலியிட்டு அமர்ந்திருந்தனர்.

அடுப்புக்கரிக்கு இணையான நிறத்தில் இருந்த பிள்ளையின், தலையில் இருந்த கட்டுக்குடுமி வெள்ளை வெளேர் என்று இருந்தது.

’வெட்டியானுங்க வந்திருக்கானுக’

என்றார் நடுப்பிள்ளை.

’உரக்கப்பேசாதிங்க’ என்றார் நாட்டாண்மை.

தொழிலாளிகள் நால்வரும் வந்திருந்தனர்.நாகலிங்கமும் பஞ்சாங்க ஐயரும் வழக்கம்போல் ஒரு மூலையில் நின்று நடக்கப் போவதைக் கவனித்த வண்ணமிருந்தனர்.

’எல்லோரும் வந்துட்டமா?’

’ஆமாம்’ ஏகோபித்துச்சொன்னது கூட்டம்.

’எந்தத்தெருவும் பாக்கி இல்லியே?’

’இல்லே’  என்றது கூட்டம்

’பிள்ளை நீங்களே வெஷயத்தைப் பேசுங்க’

என்றார் நாட்டாண்மை.

’எல்லார்க்கும் வணக்கம். இன்னைக்கு நாம கூடி இருக்கிறது இந்த தொழிலாளிங்க பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்கும், புரிஞ்சிக்கறதுக்கும்’ கூட்டம் அமைதியாய் இருந்தது.

நான்கு தொழிலாளர்களில் மூவர் அமர்ந்து கொண்டிருக்க மூத்ததொழிலாளி மட்டும் நின்று கொண்டிருந்தார்.

’நீ எதாவது சொல்லணும்னா, சொல்லிடு’

’அதுவும் சரிதான்’ மூத்த தொழிலாளி பேச ஆரம்பித்தார். ’தருமங்குடி ஊரு சனங்களுக்கு வணக்கம் இது நாள் வரை தலமுறை தலைமுறையா நாங்க சவம் எடுக்கறதுக்கு துணை நிக்குறது, மாடுசெத்துதுன்ன தூக்குறதுன்னு வேல செஞ்சம். நீங்க இட்ட பல வேலைகளை முடிச்சம். ஆமாம் தப்பு அடிச்சம். இன்னிலேந்து நாங்க இதுக எதுவும் செய்யுறது இல்லேன்னு முடிவு’

கூட்டத்தின் நடுவாய் அமர்ந்திருந்த ஒரு நெட்டை மனிதர் எழுந்து கொண்டார்.

’ஏன்னு சொல்லணும் சும்மா பேசப்படாது’.

’நீங்க அந்த ஜோலிகள ஏன் செய்யுறது இல்லே? அதுக கேவுலம்னு தானே கேவுலம்ங்கர வேலய நாங்க ஏன் செய்யுணும்?’

எல்லோருமா செஞ்சா, அந்த கேவுலம் பொதுவா பூடுமில்லே, அதான்’.

’நீங்க செய்யப் போறது இல்லே. நாங்க வெளியூர்லந்து ஆள வரவழிச்சி அந்தக் கேவுலத்தைச் செஞ்சிகறம்! சொல்லி முடித்தார் நெட்டை மனிதர்.

தொழிலாளிகளில் மூத்தவர் பதில் சொன்னார் நேத்திக்கு வுட்டகதெ இன்னைக்குத் தொடுறீங்க. சுத்துப் பட்டு கிராமத்துலயும் இதுக நிறுத்திப்புடுவாங்க. கொஞ்ச நாள் புடிக்கும், அவ்வளவுதான் இங்க வந்து இந்த ஈனவேலய யாரும் செய்ய மாட்டாங்க. செய்ய உடமாட்டம். இது செய்ய முடியாதுன்னுட்டு நாங்க வுடுல இதுக நாங்க செய்யறது இல்லேன்னு முடிவு செஞ்சி இருக்கம்’

நாட்டாண்மை குறிப்பிட்டார்.

’திடீர்னு ஒரு நாளைக்கு காலைல வந்து நாங்க எங்க வேலய நிறுத்திப் புடுவம்னா எப்படி? நாங்க அதுக்குத் தக்கன தயார் ஆவுறது இல்ல? மாத்து ஏற்பாடு செய்யறது அதுக்கு அவுகாசம் கொடுக்கறது இல்ல. நல்லா யோசனை பண்ணுங்க’

தொழிலாளியில் மூத்தவரே பின்னும் பேசினார்.

’நாங்க நேரம் சொல்லி நிறுத்தினா, நீங்க வேறு ரோசனையில் எறங்குவீங்க’

’அப்படி போவுதா வெஷயம்’ நடுப்பிள்ளை வெடுக்கென்று பேசினார்.

’நீங்க உங்க வேலய நிறுத்தினா, நாகலிங்கம் அவன் முடிதிருத்தறத நிறுத்தி ஐயரு சாமி படைக்கறத நிறுத்தி, சிங்காரம் தொரைப்பாட்டுல துணி வெளுக்கறதை நிறுத்தி, ஆசாரி, கொல்லன், தட்டான், கொயவன், குடியானவன் அவங்க அவங்க ஜோலிய வுட்டுட்டுப் போனா என்னா ஆவுறுது’

மூத்த தொழிலாளி பட்டென்று பதில் சொன்னான்.

"எங்க சொடலயே வேற .பொணஞ்சுடறதுக்குன்னு உங்க சொடலயே வேற. எங்க சவத்த உங்க சுடலையில் வைக்கிறது இல்லே. அதுதானே இன்னைக்கும்."

நாட்டாண்மை மீண்டும் குறுக்கிட்டார்.

’கதைக்கு வருவம். மோளத்தை கிழிச்சிப்பிட்டானுவ. அடக்கம் அதுக்கு வரமாட்டானுவ. இனி அதை அதை நாமளே பாக்குறது எப்படின்னு யோசனை பண்ணணும்’

நடுப்பிள்ளை அது நம்மம கதை’ என்று முடித்துக் கொண்டார். தொழிலாளர்கள் மூவரும், இனி அவுங்க அவுங்க வேலய அவுங்க பாக்குலாம் என்று சொல்லய நால்வரும் இடத்தைக்காலி செய்து நடந்து கொண்டிருந்தனர்.

3

நாகலிங்கம் தன் கத்திப்பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டான். வெள்ளாழத்தெரு வழியாய வழக்கமாய் புறப்படுவான். தினமும் மழித்து கொள்பவர்கள். இருக்கவே செய்தார்கள். நாள் நட்சத்திரம் பார்த்து மட்டுமே பிள்ளைமார்களில் அனேர் முடிதிருத்திக் கொண்டார்கள். செவ்வாய்க்கிழமைகளில் வெள்ளாழத் தெருவில் வேலை அருகி இருக்கும். வசதிமிகுந்த வெள்ளாழர்கள் கத்தியை அவர்களே வாங்கி வைத்துக் கொண்டு நாகலிங்கத்திடம் கொடுத்து தன் வரைக்கும் வேலைக்குக் கோடுத்து பத்திரமாய் மீட்டுக் கொண்டனர். வெள்ளாழக்கருத்தில் இதுவும் அடக்கம்.

வெள்ளாழத்தெரு முடிந்து சிறிய அக்கிரவாரம் வழியாய் நடந்தான் நாகலிங்கம்.

பங்சாங்க ஐயர் வீட்டு முன்பாய் சற்று நின்றான். சாமி இருக்காங்களா

’யாரு நாகலிங்கமா டேய் உள்ளவாடா’

ஐயரின் குரல்திரன் கேட்டது. ஊரில் அனேகருக்கு டா போட்டுத்தான் ஐயர் பழகி இருந்தார். மேல்தட்டு பிள்ளைமார்களில் யாருக்கும் இது பொருந்தாது.

ஐயரின் வீடு ஒத்தைத் தாழ்வாரமாய் இருந்தது, ஒரு நீட்டு வாலாய் வீடு முடிந்து போய் இருந்தது, ஐயர் லை கவிழ்த்து அமர்ந்திருநதார். அவரின் குடுமி கன்னா பின்னா என கலைந்து தெரிந்தது. க்ஷவரிக்கப்படாத முகம் அச்சத்தை பிரவாகித்துக் கொண்டிருந்தது அவரின் அருகே அவரின் மனைவி ஏதோ அழுத்தமாய் நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆழ்ந்த துயரத்தில் இருப்பதாய் இருவரையும் அறிய முடிந்தது.

’சாமி என்னா சமாச்சாரம்’

’நாகலிங்கம் என் பசுமாடு போயிட்டுதுடா’

’ஏன் என்னசாமி சொல்றீங்க’

’மாடு சூலா இருந்திச்சி மாடு கண்ணு போடுன்னானுவ. நேத்திலேந்து தெறணிச்சி படுத்துது. சாணம் போடுல. தீனி எடுக்கல’

’பெறகு’

’காசியத்தான்  அழச்சி கிட்டு வந்தேன்’

காசிதான் மாட்டு வைத்தியம் என்னும் வாகடம் தருமங்குடியில், பயின்றவன். அடிக்கடி உருட்டுக்கட்டைக் கணக்காய் சுருட்டு ஊதுவான். சிரித்தமுகமாய். கரேர் என்ற நிறத்தில் இருப்பான். ஏதேனும் பச்சிலையைக் கையில் குழைத்துக் கொண்டே இருப்பான்,

"வாகுடம் காசி மாட்டு ஆசனவாயிலே சுருட்ட ஊதி பாத்து இருப்பாரே"

’எல்லாம் செஞ்சான் கத ஆவுல’

’வேற எவனும் இல்லையா’

’காசிதான் பாத்தான் பெறகுமாடு அலறி கத்திச்சி. கையுகாலு உதச்சிகிச்சு கண்ணு இரண்டும் சொருகி வயித்துல கண்ணு குட்டி வேற’

கண்களைத் துடைத்துக் கொண்டார் ஐயர்

’பிரசவம் ஆகாத படிக்கு சன்னி வச்சிருக்கும்’

’அதான்னு நெனக்கிறேன்’

’யாரு குடுத்த மாடு சாமி’

’ நடுப்பிள்ளை குடுத்த மாடு அவுங்க வீட்டுல அந்த கெழ ஆச்சி காலம் ஆகையிலே வாலை உறிவி கைலாயம் போனாங்க நான்தான் மாட்டைச் படிச்சிக்கினு வூட்டுக்கு வந்தேன் மாடு சாது. லட்சுமி மாதிரியா’

’கெழ ஆச்சி கைலாயம் போயிட்டங்களா’

லேசாய் சிரித்து கொண்டான் நாகலிங்கம்

’கோதானம் மாடு மாதிரி தெரியல சாமிஅது நல்ல ரட்சணமா இருந்திச்சி’

’நல்லா கேட்ட நாகலிங்கம் கத்தி கையிலேன்னாலும் கனமூளைடா உனக்கு கெழ ஆச்சி கண்ணைமூடும்போது, நடுப்பிள்ளை மாட்டுக்காரனை ஒரு பசுமாட்டை புடிச்சி கிட்டு வாடான்னாரு. அவன் பாட்டுக்கு நல்ல ரட்சணமா ஒரு பசுவை குளிப்பாட்டி பொட்டு வைச்சி கொண்டாந்து நிறுத்திட்டான். பெறகு நடுப்பிள்ளைக்கு ஒன்னும் சொல்ல முடியாம இருந்துது. அதெ மீண்டும் கொட்டாயிலே கட்டிட்டு வேற ஒரு சப்பையா கெழமா கொண்டாந்துடுலாம்னு யோசனை பண்ணினாரு.

’மாட்டுக்காரன்தான் மாட்டைக்கழுவி பொட்டு போட்டப்பறம் கொட்டாயில  கட்டக் கூடாது தானம் கொடுக்க கொண்டாந்ததுன்னு கறாறாச் சொல்லிப் புட்டான் கெழ ஆச்சியும் வாலை புடிச்சிக்கினு கைலாயம் போயிட்டா அப்பறம் மாடு எங்கிட்டேதான்’

’இப்ப வுட்டுட்டிங்களே’

’என்ன செய்ய என் நேரம் கிரக பலன் சரியில்லே. சனி எட்டுல வந்து இருக்கான்  பெறகு அவனோட படாதபாடு படுறேன்’

 

’வேற தெருவுக்கு போவுணும் சாமி’ என்று நாகலிங்கம் லேசாகத் தன் பணியை நினைவு படுத்திக் கொண்டான்.

’நாகலிங்கம் உன்னைக் கூப்பிட்டது. எதுக்குத் தெரியுமோ. ஒரு யோசனை கேக்கத்தான். மாடு செத்தது செத்துப் போச்சி. இப்ப என்ன செய்ய’

’ஆமாம் மறந்து போனேன் சாமி அவாளு வர மாட்டாக கறாரா பேசிட்டு போயிட்டாங்க இப்ப மாட்டை அப்புறப்படுத்தணுமே’

 

’நீ செத்த ஒத்தாசை செஞ்சின்னா தேவலாம்’

’சாமி கவுறு ஏதும் வச்சி இருக்கிங்களா’

’மாடு கட்டுற கவுறு இருக்கு’

ஐயரின் மனைவி இன்னும் சோகமாக அமர்ந்திருந்தாள் எதுவும் பேசாமல் இருந்தாள். நாகலிங்கம் ஐயர் வீட்டு அம்மாளை ஒர் முறை பார்த்துக் கொண்டான். நாகலிங்கமும் ஐயரும் தோட்டத்து பக்கமாய்ச் சென்னறார்கள் மாடு வேப்பமரத்துக்குக் கிழாய்க் கிடந்தது. வயிறு பெருத்து உப்பி இருந்தது.கண்கள் பிதுங்கி அசிங்கமாய் இருந்தன. பச்சை சாணி வெளிப்பட்டுச் கிடந்தது. ஒரிரு காக்கைகள் மாடு இறந்து விட்டது உணர்ந்து சுற்றும் முற்றும் பறந்து மகிழ்ச்சி பாவித்துக் கொண்டன.

’சாமி மாட்டு மேல என்ன குறி’

’அது எட்டு போட்டுறப்பான். கெடக்காரன் றுமுகம் மாடு கறப்பு இல்லேன்னா கெடயில கெடக்கும் அப்ப ஆறுமுகக் கோனாரு சூட்டான் கோலால எட்டு போட்டுட்டான், அடையாளத்துக்குத்தான். அதுபோட்டு வருஷம் பல ஆச்சி’

’வண்ணான் துணிக்கு குறி போடுற மாதிரிதான்’ பட்டென்று சொன்னான் நாகலிங்கம்.

நாகலிங்கம் மாட்டின் கால்களை ஜோடி ஜோடியாய்ப் பிணைத்துக் கட்டினான். இழுத்துப் பார்த்தான்.அசையாக் கல்லாய்க் கிடந்து அது.

’இது ஒண்ணும் ஆவுற கதெ இல்லே’ என்றான் நாகலிங்கம்

’மாடுயாரு மேய்க்கிறது’

’நம்ம ராமசாமி ஊராகாலிதான். அவன் இப்ப வந்துடுவான் வர்ர நேரம்’

’ஆவுட்டும் அவனும் வரட்டும், மாட்டு வவுத்துல கன்னு இருக்கு அது இந்நேரம் செத்திருக்கும் . அதுவும் வவுத்துல இருக்கிறபடியா அடக்கமும் ஆவாது.’

’அந்த வுவத்தெரிச்ச வேற’

ஐயர் அமைதியாய் நின்றார். தன் கண்களை ஒரு முறை துடைத்துக் கொண்டார்.

’சாமி’ என்று கத்தினான்

’நீ போய் உள்ள குந்து’ என்று ஐயரை அதட்டினான்

’கன்னுக்குட்டிய வெளிய கொண்ணாந்து ஆகாயம் காட்டணும். செனமாடுல்ல’ என்று முடித்தான்

ஐயர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு வீட்டின் உள்ளாய்ச் சென்று வீட்டுப் பின் கதவை பட்டென்று சாத்திக் கொண்டார்.

’நீம்புரு எப்ப வந்திரு.’

’காலைதான் ஐயருகிட்ட மாட்டிகிட்டேன். பாவம் மாடுவேற செத்துகிடந்தது. ரவ வவுத்த கிழிச்சாலும் போதுங்கறேன்’

நாகலிங்கமும் ராமசாமியும் மாட்டினை பரபர என்று இழுத்து கொண்டு நகர்ந்தனர். ஐநூறு அடிதூரமாவது எப்படியோ கடந்து ஒருகாட்டு முள்மர நிழலில் நின்று கொண்டனர். கால்களை அவிழ்த்து கயிறு மீட்டுக் கொண்டான் ராமசாமி. நாகலிங்கம் தன் கூரிய கத்தியால் மாட்டின் வயிறு கீறி கன்றுக்குட்டியின் தலை தெறிய வைத்து முடித்தான்.

’இனி நாயுவ இல்ல நரியுவ’ என்றான் ராமசாமி.

’மலை கழுவுவ எமனாட்டம் ஆபாரு’ என்றான் நாகலிங்கம். தூரத்து நாட்டுக்கருவ மரத்தில் கழுகுகள் ராணுவ அணிவகுப்பில் தயாராய் அமர்ந்து இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தன.

4

தருமங்குடியின் விபரம் அறியாச் சிறுவர்கள் முதலாய் நாகலிங்கம், நாகலிங்கம் என்றே அவனை பெயர்ச்சொல்லி அழைத்தனர். துணிவெளுக்கும் பணியை சிங்காரவேலு என்கிற சிங்காரம் செய்து கொண்டிருந்தான். சிங்கார வேலுவோடு அவனின் உடன் பங்காளி கந்தனும் இருக்கவே செய்தான்.

தருமங்குடியில் நாகலிங்கமும், கந்தனும், சிங்கார வேலுவும், ஊரைச் சுற்றிச்சுற்றி வருபவர்களாய்தென்பட்டார்கள். தொழிலாளி என்பது தருமங்குடியில் இவர்களை மட்டுமே குறித்தது.

தருமங்குடி தருமைநாதன் கோவிலில் சிவராத்திரி பூசை விசேஷமாய் நடைபெறும் இரவு நான்கு யாமமும் நான்கு காலபூசை. நாகலிங்கத்திற்கு இரண்டாவது கால பூசையும் சிங்காரவேலுவுக்கு மூன்றாவது காலபூசையும் என்றோ ஒதுக்கப்பட்டு இருந்தன,

இந்த மண்டகப்படிகள் அவர்களுக்கு பெருமை கூட்டு வனமாய் இருந்தன. அன்றுமட்டுமே தருமங்குடி தருமை நதான் கோவிலில் அவர்கட்கு மாலை அணிவித்து கௌரவம் சேர்க்கப்பட்டது. முதல் விபூதியும் கட்டனை தாரர் என்ற முறையில் அவர்கட்கு அன்று வழங்கப்படும். இது காலம் காலமாய் தொடர்ந்து வருகின்ற ஒன்று.. இவை எப்போது தொடங்கின என்பது ஆய்ந்து.சொல்ல முடியாமல் இருந்தது.

தருமைநாதன் சன்னதியில் ஊரில் உள்ள தலைக் கட்டுகளின் பிரதிநிதியாய் தெரிபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருகட்டனை வழங்கப்பட்டு இருந்தது. அன்று அவர்களின் செலவு அபிஷேகமும் நிவேதனமும்.

சித்திரை மாதம் தொடங்கும் வருடப்பிறப்பிலிருந்து மாதாமாதம் வரும் பௌர்ணமி, சிலமாதங்களில் எப்போதேனும் வரும் இரண்டு,பெர்ணமிகள், வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடி வெள்ளிகள்,  ஆவணி மூலம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி விழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி விடியற்காலை பூசை, தை வெள்ளிகள், மாசிமகம், பங்குனி உத்திரம் என்று அடுக்கடுக்காய் வைபவங்கள் இருந்தன. இவை அன்றியும் இடுக்குகளில் சில சிறிய விசேஷங்கள் இருக்கவே செய்தன.

நாககலிங்கத்தின் மனைவி. அவனுடன் எப்போதும் உழலும் அவள் மொட்டை என்ற பெயரிலேயே தருமங்குடியில், அறியப்பட்டிருந்தாள். ஆனால் அவள் மொட்டையாய் தென்பட்டதே இல்லை. அவளுக்கு அடர்ந்த கருங்கூந்தல் இருக்கத்தான் செய்தது.

நாகலிங்கத்திற்கு ஒரு மகன் அவனுக்கு ஊர் நடுப்பிள்ளையின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. நடுப்பிள்ளைக்கு ஞானசம்பந்தம் என்று அழகுப் பெயர் உண்டு. இதனை எப்படியோ அந்த நாகலிங்கம் அறிந்து கொண்டிருந்தான். தன் வாரிசுக்கும் அப்பெயரே சூட்டி மகிழ்ந்து போனான்.

ஊருக்கு நாகலிங்கத்தின் வாரிசு சின்னவன் அவனை சின்னான் என்றும் கூட ஊர்மக்கள் அழைத்து பழகி இருந்தனர்.

தெழிலாளிக்கு கல் வீடா என்பதில் அனேகர் தருமங்குடியில் ஆச்சரியப்பட்டதுண்டு கல்வீடு என்பது செங்கற்களால் கட்டப்பட்டு நாட்டுவில்லை ஓடுகளால் நெளிநெளி வரிசையாய் போர்த்தப்பட்டிருக்கும். தொழிலாளர்கட்கு கல் வீடென்பது தருமங்குடியில் என்றோ தொடங்கி  இருந்து வருவதாய். அது  தருமங்குடியின் அதிசமாயும் அறியப்பட்டது. அக்கிராமத்தின் மண்விளைஞர்கள் நான்குபேரும்கூட கல்வீடுகளிலேயே வசித்து வந்தார்கள். துணிவெளுக்கும் சிங்காரத்திற்குமே கூட கல்வீடு. . ஆசாரிகள். தச்சர்கள் கல் வீடுகளில். அக்கிரஹாரத்துப் பஞ்சாங்க ஐயர்வீடும், சிவாசாச்சரியார் வீடும்  நெடுக்கு வாக்கில் கல்வீடுகளாய்,

கிராமங்களில் கல்வீடுகள், குடியிருப்போரின் பெருமை அறிவிப்பன. கூரைவீட்டார்கள் கல்வீட்டார்களை கௌரவம் கூட்டியே கணக்குப் போட்டார்கள்.

சிவராத்திரியன்று தருமைநாதன் கோயில் இரண்டாவது யாமத்துப். பூசை உபயம் நாகலிங்கத்திற்கானதாய் இருந்தது. சந்நிதியில் திராவிட தோத்திரங்கள் பாடுவதற்தாய் ருத்திராட்சம் கட்டிய பேரூர் பிள்ளை நிச்சயம் இருப்பார் பேரூர் என்னும் ஊரில் பிறந்து, இதத்தருமங்குடிக்கு மாப்பிள்ளையாய் வந்துத் தங்கிப்போனவர் அவரின் பெயர் வேறு ஏதும் இருந்திருக்கலாம். ஆனால் ஊர் அவரை பேருர் பிள்ளையாய் மட்டுமே சொல்லிப் பழகி இருந்தது. அவரின் குரல் வளம் சற்றுக்குறைந்ததுதான். ஆனால் அவரின் உழைப்பு பெரிது. தேவாரப் பாடல்களை அவர் அதி நுணுக்கமாய் அறிந்திருந்தார். குரல் வளம் அவருக்குக் குறைந்து போனதற்காய் ஊரில் யாரும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தனர். தருமை நாதன் சந்நிதியில் சிவாச்சாரியார் தேவாரம் பாடுவதற்கான சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும் சிவா திருச்கிறறம்பலம் என்று தொடங்கி விடுவார் பிள்ளை. கையில் தாயாராய் வெண்கலத்தில் தாளம் ஒன்று வைத்திருப்பார். அது பளபள என்று தேய்பட்டு மின்னிக் கொண்டு நிற்கும் காதில் கடுக்கன் வெள்ளைக்கல் வைத்ததுவாய் கழுத்தில் சிவப்புக்கயிறு. அது ஒரு உருத்திராட்சத்தை சுமந்து நெருக்கிக் கொண்டு நிற்கும் அவரின் தேவாரப்பாட்டு நிறைவு பெற்றதற்காய் மீண்டும் சிவா திறச்சிற்றம்பலம் என்று சொல்லிவிட மாட்டாரா என்று சிலர் ஏங்கிக் கொண்டு நிற்பர், பாடுகின்றபேதெல்லாம் அவரின் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் சுரந்து ஓடிக் கொண்டு நிற்கும். தோடுடைய செவியனும், சொற்றுணை வேதியனும், பாலுக்குப் பாலகனும், பொன்னும் மெய்ப் பொருளும் தருவானும் நிச்சயமாய் அவரின் பாட்டுக்களில் இடம்பிடிக்கும்.

ஒவ்வொரு நாள் சிறப்பு பூசைக்கு பின்னால் பேரூர் பிள்ளைக்கு மரியாதை நிமித்தம் ஒரு தேய்காய் மூடி வைத்துக் கொடுப்பதை சிவாச்சாரியார் விடாமல் அனுசரித்து வந்து கொண்டிருந்தார்.

5

நடுப்பிள்ளையின் தூரத்து உறவுக்காரர் ஒருமுறை சிதம்பரத்தை அடுத்த சிவாயத்திலிருந்து தருமங்குடி வந்திருந்தார். அவரை நடுப்பிள்ளை வீட்டு கிழநாய் கடித்துவிட்டது. அந்த நாய்க்கடிக்கு நாகலிங்கம்தான் சிகிச்சை செய்து முடிந்தான். நாகலிங்கம் ஊர் கோடியிலுள்ள ஓர் தென்னந்தோப்பின் வேலியிருந்து இரண்டு விதமாய் பச்சிலைகள் எடுத்து அரைத்துக் கொண்டு வந்து கட்டினான்.

தருமங்குடியில் மஞ்சள் காமலை நோய்க்கும் அவனே பச்சிலை மருந்து கொடுத்து வந்தான் கிராமத்து மக்கள் நாகலிங்கத்தை அணுகி தாமே பச்சிலை பெற்றும் போயினர்.

அக்கிராமத்தில் அப்போதைக்கு அப்போது கேள்விப்படும் காணாக்கடிகளுக்கும் நாகலிங்கம் பச்சிலை மருந்து தருவான். எது கடித்தது என்பது அறியாத போது அதனை காணக்கடி என்று பெயரிட்டு மக்கள் அழைத்து பழகியிருந்தனர்.

தேள்கடிக்கு ஒரு கை கண்ட பச்சிலையை வைத்திருந்தான். நாகலிங்கம் அதனைக் கொட்டு வாயில் வைத்துவிட்டால் போதும் விஷம் முறிக்கப்பட்டு வலி குறைய ஆரம்பிக்கும். ஆனேக நோய்களுக்கு மருத்துவ சேவை செய்பவனாய் நாகலிங்கம் அறியப்பட்டான்.

தன் மனைவி மொட்டைக்கும் பச்சிலைகளையும் அவற்றின் குண விஷயங்களைப் பற்றியும் அவள் சொல்லிக் கொடுத்திருந்தான். மொட்டை ஊரில் பிரசவம் பார்க்கும் பணிப்பெண்ணாய் வலம் வருவாள் தருமங்குடியில் மொத்த குழந்தைகளின் பிரசவத்திற்கும் மொட்டைதான் மருத்துவச்சியாய் இருந்தான்.

சின்னவன் தான் ஒரு நாள் கேட்டான்.

’ஏம்மா உன் யேரு என்ன!

’ஏன் மொட்டை’

அதுவேதான் உன் பெயரா ஆமா ஏன் மாத்தி வைச்சிகலயா

’போவுட்டும் எது இருந்தா என்ன

’என் பேரு’

’சின்னவன்’

’இல்லே சொல்லு’ என்று தாயிடம் அமைதியாய் கேட்டான் அவன்

’நா சொல்லமாட்டேன். அது தப்புல்ல. நடுப்பிள்ளை பேருன்று அப்பன் சொல்லும்’

தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் மொட்டை.

நாகலிங்கம் எங்கோ சென்று தன் தொழில் பார்த்து விட்டு வீடு திரும்பிய வண்ணம் இருந்தான்.

’கையில் என்ன’ என்றாள் மொட்டை

’வாழக்கச்சலு ரெண்டு’

’யாரு குடுத்தது’

’யாரு குடுப்பா’

’ஐயரு வூட்டுல’

’பின்ன’ நாகலிங்கம் சிரித்துக் கொண்டான்.

’இந்த கழுத எங்கே’

’ஏன் அப்டி சொல்லூற’

அஞ்சி வருஷம் முழுசா பள்ளிக்கொடம் போக இல்லே. கத்திப் புட்டிய தூக்கிகினு அல்லல் படப் போவுது கழுதே

’அதுக்கென்ன’ என்றாள் மொட்டை

’அதான் கழுதென்னேன்’

’இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லே’ என்றாள் மொட்டை. சின்னவன் அங்கு வந்து நின்று கொண்டான். வாழக்கச்சல்களை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டான். ’நல்லத்தான் இருக்கு’ என்றான்

6

தருமங்குடியில் எந்த ஒரு நபரும் நாகலிங்கம் என்ற பெயர் சூட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

அதனில் ஊர் மக்கள் கூடுத்ல் அக்கறையுடன் இருந்தார்கள். தெருவில் போவோரும் வருவோரும் கூவிக் கூவி அழைத்த அந்தப்பெயர் ஈனப்பட்டுப் போனதுவாய் எண்ணினார்கள் மற்றும் யாரேனும் தன் பிள்ளையை பெயர் மட்டுமே கருதி ஊர்த்தொழிலாளிக்குப் பதிலாய் என்று நினைத்துக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்ற பெருங் கவலையில் அப்படி இருந்தார்கள்.

சிங்காரவேலு, சிங்காரம் என்கிற பெயரும் சலவைத் தொழிலாளியினது ஆகி அப்படியே ஆயிற்று தம் வாரிசுகட்கு சிங்காரம் என்ற பெயர் வைக்கப்படாமல் இருக்க ஊர் மக்கள் கவனமாய் இருந்தார்கள்.

நாகலிங்கமும் சிங்காரமும் அடுத்த ஊரில் கம்பத்துக் காரர்களின் திருப்பெயர்களாவும் இருக்கலாம். தருமங்குடியைப் பொருத்தவரை அவரை நீசப்படுத்தப்பட்டு விட்டதாய் மக்கள் முடிவு செய்து கொண்டார்கள். அருவருக்கும் பெயர்களாகி அவை முகம்சுளிக்கவே துணையாயின. ஆனால் நாகலிங்கமும் சிங்காரமுமே ஊரில் நிகழும் சாவுக்கும் வாழ்வுக்கும் துணை நின்றார்கள். ஈனக்கூலி பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் நடத்தப்படும் விதம் அவர்கட்கு நெஞ்சில் ரணத்தையே தருவிக்கும் ஒன்றாயிருந்து. ரணம் சுமப்பதே வாழக்கையாய்ப் பழகிப் போனது.

சிங்காரத்திற்கு ஒரே மகன் அவன் சிங்காரபாலன். அவனை ஊரில் சிங்காரபாலன் என்பதற்குபதிலாய் பாலன் என்றே அழைத்து மகழ்ச்சி பாவித்தார்கள். பாலன் என்ற பெயரும் இனி தருமங்குடியில் ஈனமாகிவிடும்தான். தந்தையோடு அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு வந்தான் பாலன். தருமங்குடிக்கு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் எனும் பெரும் பதவி வகிக்க ஒரு நாமதாரி வந்திருந்தார். அவர் நாமம்தரித்து மட்டுமே வெளிக்கிளம்புவார். அவரை நாமதாரி ராமதாரி ராமக்கார ஆபிசர் என்றே தருமங்குடி அழைத்தது.

ராமதாரிக்கு துணி சலவை செய்து சிங்காரம் நேர்த்தியாய் அளித்துக்கொண்டடிருந்தான். அவரின் துணிகளைத் தொட்டு அலசிப்பிழித்து காயாவைத்து மடித்துக் கொடுப்பதில் இனம் புரியாத கர்வம் ஏனோ அப்போது அப்போது தலைகாட்டிச் சென்று கொண்டிருந்தது உண்மை. சிங்காரம் ஓர்நாள் சிங்காரபாலனை ராமதாரி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.

ராமதாரி தான் கேட்டார்.

’பையன் என்ன படிக்கிறான்’

’நாலு கௌாஸ் படிச்சது கழுதெ அதோடு சரி’

’கழுதை படிக்கறதுக்கு என்ன’

சிங்காரபாலன் சிரித்துக் கொண்டான்.

’படிக்குலாம்’ என்றான்

ஏன் படிக்கறது

பாலன் அமைதியாய் நின்றான்.

’வாயுல கொழுக்கட்டை வச்சிருக்காறு’ என்றான் சிங்காரம்.

’அப்பனோடு சுத்தறத்தகுத்தான் நேரம் சரியா போவுது’ என்றான் பாலன்.

’அரி; ரொம்ப தாண்டுது. புண்டம் திங்கல புண்டம்’

’சும்மா இரு சிங்காரம் நான் பேசிக்கிட்டு இருக்கன்ல’ என்றார் இன்ஸ்பெக்டர்.

பாலன் அமைதியாய் இருந்தான். ராமதாரி சிரித்துக் கொண்டார்.

’இவனை எங்கிட்டயே  வுட்டுடு சிங்காரம் நான் பார்த்துகறேன்’. ராமதாரி அழுத்தமாய்ச் சொன்னார். சிங்காரம் நெடுஞ்சாண்கிடையாய் ராமதாரியின் முன்பாய் கீழே விழுந்து அவரின் கால்களைப் பற்றிக்கொண்டுக் கிடந்தான்.

’கல்லுக்குக்குனிஞ்சி மல்லுக்கு நிக்குறது என்னோடு போவுட்டும் என்சாமி’

’எழுந்திரு சிங்கராம் இது அசிங்கம்ல’

தன்தகப்பனையே வெறித்துப் பார்த்தான் பாலன். தன் தந்தையின் கண்கள் நிறைத்துக்கொண்டு நீர் இருப்பதை நோக்கினான். குரல் கனத்துப் பேசினான் சிங்காரம்.

’கடவுளே, ஏழுமலையானே, ஐயாரூபத்தில பாக்குறேன்’ என்றான் சிங்காரம்.

’கழுதை உழுந்து கும்புடலாம்லே’ என்றான் சிங்காரம்.

பாலன் கீழே விழுந்து ராமதாரியின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

சிங்காரம் பேச ஆரம்பித்தான். குரல் இன்னும் கம்மித்தான் இருந்தது. ’சாமி  நீங்க காலால வுடுற வேலய ஏன் கையாலே செய்யுறேன். இந்த நாயி தாயத்தது தாய முழுங்கிட்டு நிக்குது உலக்கயா. நீங்க கண்ணு தொறந்து வுடுங்க. என் செம இறக்கி வைக்கதான் அந்த கடவுளு உங்களை இங்க கொண்டாந்திருக்காரு’

கண்களைத்துடைத்துக் கொண்டாள் சிங்காரம். பாலன் தன் தந்தையை உற்று நோக்கினான். தன்னிடம் எப்போதும்  ஜம்பம் பேசும் தனது தந்தை இப்படிக்கூனிக் குறுகி நின்று குரல் கம்மிப்பேசுவது அவனுக்கு ஒரே அதிர்ச்சியாய் இருந்தது.

’பையன் இங்க இருக்கட்டும் நீ போ’ என்றார் ராமதாரி. அன்று பாலனை விட்டுவிட்டு வந்ததுதான். ஆண்டுகள் பல உருண்டோடின.

இப்போது பாலனுக்கு அரசாங்க வேலையாகவே ஒரு சிறிய பணி கிடைத்து விட்டது என்றும் நல்ல சம்பளம் என்று பேசிக்கொண்டனர். ஊர் ஊராய் பணி மாற்றத்தில் அவன் அடிக்கடிச் செல்வதாயும் ஊரார் அறிந்திருந்தனர்.

7

தருமங்குடிக்கு அண்மையில் தெரியும் நகரம் நெய்வேலி, தருமங்குடியிலிருந்து நடந்தே சென்றுவிட முடியும். ஐந்து மைல் இருக்கலாம். அங்கு நிலக்கரி வெட்டி எடுப்பது பற்றியும் நாடே அறிந்துதான் இருந்தது. இங்கு மின்சாரம் எடுப்பதும் ஒரு பிரதான வேலையாய் இருந்தது. என்றோ முந்திரிக்காடாய் இருந்த ஊர். செம்மண் பெட்டையாய் அறியப்பட்டும் கிடந்தது. தருமங்குடி ஐயர் தான் சொல்லிக் கொண்டிருப்பார்.

’ஒரு ரயில்ரோடு, ஒரு ரயிலுபெட்டி ஓரமா நிக்கும். அதுல  வர்ர கார்டு ரயிலு வரும்போது, எறங்கி டிக்கட் குடுத்துட்டு அப்படியே ஏறிகினு போய்விடுவார் அவ்வளவு தான் வேறு என்ன இருந்திச்சி. கடலூர் தொறைமுகத்தி லேர்ந்து விருத்தாசலம் வழியாய் சேலம் போவுற லைனு இது.’ என்பார் ஐயர்,

 நாட்டாண்மை ராமலிங்கம் எட்டு கண்ணு விட்டெறியும் ஜபர் தஸ்துக்காரர், ஐயரோடு சேர்ந்து கொள்வார்.

’சம்புலிங்க மொதலி வெள்ளாமைக்கு கெணரு வெட்டிப்பாக்கையிலே கரப்பா மெதந்தது. தாசில்தாரு வந்தாரு. அப்புறம் யாரோ எவுரோவந்தாங்க. ஆராட்சி பண்ணி இது பிஞ்சி நெலக்கரிண்ணு முடிவு பண்ணினாங்க. ஒண்ணுக்கும் ஆவாது செவுத்துல முட்டிக்கிறதான்னு ஓரங்கட்டினதை  ரஷ்யாக்காரனுங்கதான் கரண்டு எடுக்கலாம் பாருன்னு மாரு தட்டுனானுவ’ இப்படித்தான் ராமலிங்கம் சொல்லிக்கொண்டே போவார்.

’’அந்த நேரு மெனக்கெட்டது இவ்வளவும்’ என்பார் ஐயர். நேருபற்றிப் பேசும்போது ஐயரும்  நேரு ஆயிடறதா நெனச்சிக்குவாருதான்’ என்று கேலி பேசி சிரிப்பார் நாட்டாண்மை.

’கோஷ்ன்னு ஒரு வடக்கத்தி எஞ்சினியர் நெய்வேலியில் தங்கி அடிநாள்ல வேலை செஞ்சாரு. இப்ப  மந்தாரகுப்பம் ரோட்டுக்கும் வடக்கால கெடக்குற பழைய கல்லுவூட்டுலதான் தங்கி இருந்தாரு. அந்த வூட்டுல இப்ப டெலிபோன் ஆபிசு அது இது வச்சிருக்கானுவ. கோஷ் ஆர்ட்டிஷன் பம்புபோட்டு போட்டு தண்ணி வரவழிச்சி காட்டுனாறு. தானா தண்ணீவருர குழாயுங்க இந்த பக்கத்தில் கனமா அப்பத்தான் வந்தது!  என்பார் நாட்டாண்மை.

அப்போதுதான் தருமங்குடியில் இரண்டு ஆர்டிஷன் குழாய்கள் போடப்பட்டன. அவை தண்ணீரைக் கொப்பளித்து கொப்பளித்து கோபுரமாயக் கொட்டின. இவைகள் இப்போது கண்ணில் தென்படாதபவைகளாயின. ஆர்டிஷன் ஊற்றுக்கள் இருந்த இடம் தூர்ந்து போய் குழாய்கள் மருத்து அடைபட்டுப்  போயும் இருக்கலாம்தான்.

சுரங்க நகரம் நெய்வேலியில் ஒரு சினிமா அரங்கம் இருந்தது. பாண்டியநாயகம் என்ற பெயருடைய அத்தியேட்டரில் அப்போது சரசுவதி சபதம் ஓடிக்கொண்டிருந்தது. சிங்காரவேலுவும் நாகலிங்கமும் நெய்வேலி சென்று சரசுவதி சபதம் பார்த்துவிட்டு வருவதாய் முடிவு செய்தார்கள்.

’நடந்த பூடுலாம்’ என்றான் சிங்காரம்

’பின்ன காருல ஏறிபோணுமா கொழுப்பா’ சொல்லி முடித்தான் நாகலிங்கம்.

இருவரும் நெய்வேலி நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஊமை வெயிலாய் இருந்தது. தருமங்குடிக்கு வடக்குப்பகுதி வயல் வெளியில் ஐந்துமைல் நடந்தால் நெய்வேலி வரும். ஒற்றையடிப் பாதையாய், நெல்வயல்களுக்கு நடுவே வழி சென்று கொண்டிருந்தது. இருவரும் ஆராபுரி ஏரிக்கரைமீது நடந்தார்கள். அந்த எரிக்கு ஆராபுரி என்றே பெயர் வழங்கப் பட்டு வழக்கில் இருக்கிறது. ஏரிக்கரையில் கருப்புமண் பொறுக்கு பொறுக்காய்க் கிடந்தது. அதன் மீது நடப்பது பொறுபொறு என்று அத்தனை இதமாய் இருந்தது. இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.

தூரத்தில் நெய்வேலி செல்லும் ரோட்டுப்பாதை தெரிந்தது.. அப்பாதையில் மாட்டு வண்டிகள் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்ந்து சென்றன.

’ஏன் சிங்காரம் மிதியடி போடுவியா’

நாகலிங்கம் பல்லெல்லாம் வெளித்தெரிய களுக்’ கென்று சிரித்தான்.

’என்னா புதுப்பழக்கம் இனிமேதானா வரப்போகுது’

சிங்காரம் பட்டென்று பதில் சொன்னான்.

ஆராபுரியில் நடுத்திட்டாய் நீர்பரப்பு சுருங்கித் தெரிந்தது. அதனை அடர்த்தியாய் கோரைகள் வளர்ந்து நெருங்கி மறைத்த வண்ணமிருந்தன. ஓரிரு எருமைகள் கோரைப்புற்களை அசமடக்கி தலையை தூக்கி ஆட்டிக் கொண்டிருந்தன.

’தோ தெரியற மாதிரில்ல இருக்க’

’அப்படித்தான் தெரியும் ஆனா போவப் போவ போய் கிட்டே இருக்கும்’

’மண்ணு மலையாட்டம் கெடக்குதல்ல அதுதான் சுரங்கத்துல வெட்டுறது. கொஞ்சம் உசரத்துல ராட்சத குரங்கு வாலு சுருட்டிகினு குந்துனாபுல இருக்குதே அது மண்ணு கொணாந்து கொணாந்து கொட்டுகிற மெஷினு’.

சிங்காரம் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

’உசர உசர குழாயா நாலு நிக்குது பாரு அங்கதான் கரண்டு எடுக்காருணுவ’

நாகலிங்கத்துக்கு விஷயங்கள் தெரிந்தே இருந்தன. சிங்காரதிற்கும் நாகலிங்கம் மூத்தவன் என்றாலும் செய்திகள் அறிந்து கொள்வதில் பிறருக்குச் சொல்வதில் அனுபவமாகி இருந்தான். ஆராபுரி ஏரியின் மீது விவசாயிகள் ஓரிருவர் மும்முராமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.

’ஆராபுரிய கொழப்புனா எதாவது தேறுமா’

என்றான் சிங்காரம்

’உன்னால என்னால ஆவுற கதெ இல்லே’.

’ஆனையை கட்டி இதுங்கறதுன்னு சொன்னா அதுக்குத்தன வேணுமில்ல’

’நான் கொழப்பி கெண்ட புடிச்சிகுக்கேன் கொண்டாந்து ஆக்கித் தின்றுருக்கேன்’

’ஆமா எனக்குத் தெரியா கதெ திருட்டுத்தனமா சனம் கூத்துப் பாக்கையில் பொதகட்டக் குழியில ராவிருப்பே’ சிங்கராம் சிரித்துக் கொண்டான்.

ரவ நேரம்னாலும் ராசாதான்

’ஆம்மாம் கூசாதான்’ என்றான் நாகலிங்கம் நாகலிங்கம் ஓர் துணிப்பை வைத்திருந்தான். அதற்கு காது ஒன்று மட்டுமே இருந்தது.

’இத என்னா செவுட்டு பையா’

’ஆமாம் குருட்டு பையி’ நாகலிங்கம் வெடுக்கென்று பதில் சொன்னான்.

’என்னா அதுவுள்ள’

’சொக்கா வைச்சிருக்கேன் டவுனுகிட்ட போகையிலே போட்டுக்கிலாம்னு’

நாகலிங்கம் கள்ளத்தமைமாய்ச் சிரித்து பாதியில் நிறுத்தினான்.

’நெத்துதான்’

’நான் சட்டை கொண்டாந்து இருக்கேன் யோசனை பண்ணித்தான்’

’என்னா யோசளை’

’நெய்வேலில மொட்டை யோட தம்பி இருக்கான் அவன் கடை வச்சிருக்கான் அம்பட்டன் கடைதான் ஆனா வெள்ளக்காரனுவளுக்கு செரக்கிறான்று கேழ்வி’ தன்தோள் மீது இருந்து துண்டை எடுத்து மீண்டும் அதே இடந்திலேயே அதனை இருத்தி நடந்தான் நாகலிங்கம்,

’சட்டை நடுப்பிள்ளயது தானே’

’சிங்கராம் ஊரு சட்டையுவ கல்லுல மொத்தி வெளுக்கறது நீ உன்கிட்டநான் என்ன மறைக்கக்கெடக்குது’

’ஆனா இது வர்ரைக்கும் ஒரு சட்டை போட்டுகினது இல்ல’

’எப்படி ஆவும்’

’சட்டை போட்டுகினு சாமின்னு மாடாட்டம் உழுந்து கும்புட்டம்னா நல்லா இருக்குமா’.

’சட்டி ஒரு கையில புட்டி ஒரு கையில போனா எப்படி ஆவும்’

ஆராபுரி முடியும் தரவாயில் ஓர் சிறியவரப்பு வந்தது அதன் அருகே நீர் குட்டையாய்த் தேங்கிக் கிடந்தது அதனில் புதைக்கட்டை போட்டிருந்தார்கள் பனை மரத்தையோ, தென்னைமரத்தையோ உள்ளாய்க் குடைந்து விட்டு ஒரு பக்கத்தில் பொத்தலிட்டும் வைத்து இருந்தார்கள் குட்டை நீர் அதன் வழியே வெளிப்பட்டு சலசலத்துக் கொண்டு இருந்தது நீர் பிரவாகத்தை எதிர்த்து மகிழ்ச்சி பாவித்த அப்பாவி மீன்ள் புதைக்கட்டைக்கு அப்பால் உள்ள குழியில் விழுந்து சிறைபட்டுத் துடித்துக் கொண்டிருந்தன.

’ஆளு யாரையும் காணும்’

’ஒரு கை அள்ளி இப்ப என்னா செய்யுவ’

’சரசுபதி சபதம் பாக்கப்போறம் இது ஏன் இப்ப இமுஷை’

’ஆமாம் தருமங்குடி கூத்துல சரசுபதி வேஷம் கட்டுறவரு சந்தரக் கோனாரு புறாமார்க்கு சுருட்டை புடிச்சிகினு கெடப்பாரு நாலுவரி பாடுனா சுருட்டை இரண்டு இழுப்பு இழுப்பாரு சரசுபதியே சுருட்டுச் குடிக்கிற மாதிரி இருக்கும்’.

சிங்காரம் ஒரு முறை சிரித்தான். புதைகட்டைப் போட்டவனை யெங்கும் காணவில்லை,

சிங்காரமும் நாகலிங்கமும் நடந்து கொண்டிருந்ததார்கள் இடையே பரவானாறு குறுக்கிட்டது.

’தட தடன்னு பாரு தண்ணீ கருப்பா’

’கரி கழுவி வர்ர தண்ணி கருப்பா கர்ரேர்ன்னு’

பரவனாற்றில் முழங்கால் அளவு நீர் இருந்தது ஒரத்தில் சம்மங்கோரை உயரமாய் வளர்ந்திருந்தது சம்புகள் பூத்தும் இருந்தன நாகலிங்கம் முன்னதாக நடந்து கொண்டிருந்தான் சிங்காரம் பைய பின்னால் நடந்து வந்தான்.

’இதில மீனு இருக்குமா’

’இல்லாம என்ன’

’கரப்பா தண்ணி வந்த அண்ணிக்கி முழுச்சிருக்கும் அப்பறம் அதுவேருசியாய் போயிருக்கும் என்னா’

இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். இப்போது நெய்வேலி கண்களுக்குப் பெரிதாய் தெரிந்தது.

’சினிமா கொட்டகை தெரியுதில்ல’

’ஆமாம் மஞ்சளா உசரமா தெரியுதே அதான்’

பாதைக்குப் பக்கத்தில் சம்புலிங்க முதலியார் பைப் வந்தது இந்தப்பகுதியில் தான் சம்புலிங்க முதலியார் தங்கி விவசாயம் செய்து இருக்கிறார். குட்டையொன்று கன்னா பின்னா என்று கிடந்தது குட்டையின்மேற்குக்கரையில் ஒரு பாம்பு புத்தென்று உயரமாய்த் தெரிந்தது அதன் அருகில் சுட்டமண் பொம்மைகள் இரண்ட இடுப்பில் கைவத்து பாதையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த வண்ணமாய் இருந்தன செங்கற்கள் நான்கு குத்து வாட்டில் நின்று யாரோ என்றோ நம்பிக்கையில் வைத்துவிட்டுப் போனதை பத்திரமாய் காத்து நின்றன.

’சந்தைதோப்பு நெருங்கிகிட்டு இருக்கோம்’

’சரிதான்’ என்றான் சிங்காரம்.

செவ்வாய்தோறும் சந்தை நடக்கிற இடம் ஆடுகள், மாடுகள் காய்கறிகள் அரிசி, புளி வெல்லம் இத்யாதிகள் விலைக்கு வந்துபோகும்.

’நானு வந்தது இல்ல’

’நான் நாலஞ்சி தர்ரம் வந்திருக்கேன்’. என்றான் நாகலிங்கம் வேகமாய். பழைய நெய்வேலி வந்தது. இரண்டு தெருவுக்கு கூரைவீடுகளாய்த் தெரிந்தன. ஒருசிறு பிள்ளையார் கோவில் தெரிந்தது. அது தாண்டி ஒரு குட்டை பாசி படர்ந்து பச்சைப்பசேல் என்றிருந்தது. ஒரு பிள்ளையார் சிலையும் முதிர்ந்த ஆலமரமம் இருந்தன.

’மணி எத்தனி இருக்கும்’

’நாலு ஆவும்’

நான்குமூலை ரோடு வந்தது. நான்கு ரோடுகளின் சந்திப்பே இப்படி பெயர் பெற்றது .அவரவர்கள் குறுக்கும்நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.

’கெழக்க சொயளனும்’ என்றான் நாகலிங்கம்

’ஆள, டவுனு வந்துட்டம்’ சிரித்துக்கொண்டான் சிங்காரம். நாகலிங்கம் பையில் பத்திரமாய் வைத்திருந்த சட்டையை இன்னும் தொடமால் இருந்தான்.

’அண்ணே நீ வேஷம் கட்டுல’

’அடடா’ என்றான் நாகலிங்கம். அவசர அவசரமாய் தன் துணிப்பையுள் ஒளிந்து கிடந்த சட்டையை வெளியில் எடுத்து உதறிக்கொண்டான்.

’பாண்ச்ர்’ என்று குரல்கொடுத்து தன் இருகைகளை நுழைத்து பொத்தான்களைப் பொருத்தி, ஓர்முறை தன்னையே பார்த்துக் கொண்டான்.

’நல்லாத்தான் இருக்கு’ என்றான் சிங்காரம். நான்கைந்து கடைகள் தாண்டின. நாகலிங்கம் ஓர் மாதிரியாய் நடக்க ஆரம்பித்தான் செயற்கை கூடிய தன் நடையை தானே ரசித்துக்கொண்டான் நாகலிங்கம் தலையை ஓர் முறை கோதிவிட்டுக் கொண்டான்,

’நல்லாத்தான் இருக்க வுடு’

’என்னா பண்ணுறது’

நாகலிங்கம் தன் மைத்துனன் சலூன்கடை வாயிலில் நின்று கொண்டான். சலூன் ஒரு புளிய ரத்தின் கீழாய் இருந்தது.

’கடைபேரு என்னா’

’பேரு என்னா நான்கண்டேன் ஆறுவிரலு ஆறுமுகம் சலூன்னு சொன்னா தெரியும்’