Friday, December 17, 2021

கல்விக்கூடங்கள் மாறுமா ?

 

கல்விக்கூடங்கள் மாறுமா?  

 

கல்விக்கூடம் என்பது சமுதாயத்தின் வயல்-

உள்ளத்தில் உண்மையும் நடு நிலைமையும் பதிந்தால்தான் எத்ர்காலச்சமுதாயமாவது ஊழலும் வஞ்சமும் இல்லாமல் விளங்கமுடியும் – டாக்டர். மு.வரதராசனார்.

 எல்லோரும் ஓர்  நிறை  எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பார் மகாகவி பாரதி. பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்பார் அவ்வை. கல்வி பெரும் முக்கியத்துவம் அப்படி...

 இன்று நாம் காணும் கல்விக்கூடங்கள். நூறு சதவிகிதம் அப்படியில்லையே.

கல்விக்கூடங்களில் நம் கண் முன்னால் எத்தனை  ரகங்கள். பஞ்சாயத்து ஒன்றியம் நகராட்சி மாநகராட்சி என்று வகைவகையாய் ப்பள்ளி தொடங்குகிறது ,. தனியார் பள்ளிகளில் எத்தனை பிரிவுகள். அனேக தரங்களில் கிறித்துவ தனியார் பள்ளிகள்   டேராடூன் பள்ளிகள்  ஊட்டி கான்வெண்ட்கள் இசுலாமிய கல்வி க்கூடங்கள் விவேகானந்தா ராமகிருஷ்ணா கல்விக்கூடங்கள் டி ஏ வி பள்ளிகள் பத்மாசேஷாத்ரி பள்ளிகள் சைதன்யா நாராயணா சங்கர வித்யாலயாக்கள் வள்ளலார் கல்விக்கூடங்கள் விப்க்யார் பள்ளி டில்லி பப்ளிக் ஸ்கூல் சைனிக் பள்ளி, மத்ய அரசின் கேந்திர வித்யாலயாக்கள் ராஜிவ்காந்தி  மத்திய கல்வி நிலயங்கள்  ஐ ஐ டிக்கள்  ஆர் ஈ சிக்கள் என் ஈ சிக்கள்  வெளி நாட்டவர்களின் இந்திய க்கிளைப்பள்ளிகள் இன்னும் இப்படி ஆயிரம் வகையில் கண் முன்னே இங்கு  கல்விக்கூடங்கள்.

இதுவன்றி வெளி நாடுகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்ற இந்தியப்பெற்றோர்களும் அனேகம் இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் லண்டனிலும் சிங்கப்பூரிலும் ஆஸ்த்ரேலியாவிலும் ஜெர்மனியிலும் பயில்கிற  இந்திய மாணவர்கள் ஏராளம்.

 பலதரப்பட்ட கல்விக்கூடங்களில் படித்து விட்டு ரகம் ரகமாய்  வெளிவருகின்ற மாணவர்கள் எல்லோரும் எப்படி ஒரே மனோ நிலையில் இருப்பார்கள். சாதாரணமாக ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் தமிழ் வழி பயிலும் மாணவர்களை எங்கே மதித்தார்கள் மதிக்கிறார்கள். கார்ப்பரேஷன் பள்ளியில் பயிலும் மானவர்களைத் தரம்கூடிய தனியார்பள்ளி மாணவர்கள் கேவலமாகத்தானே பார்க்கிறார்கள்.  

 ஒரு இருபது ஆண்டுகள்  ஆகியிருக்கலாம். கடலூர் மஞ்சக்குப்பத்திலே தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் பரீட்சையின் போது, ஒருவன் தெரியாத கேள்விக்கு அடுத்தவனை விடை கேட்டான்  அடுத்தவனும் அவனுக்கு  பதில் சொல்லிவிட்டன் ஆக இரு பிள்ளைகளையும் தேர்வு மேற்பார்பார்வையாளர் பிடித்துவிட்டார்..  படிக்கும் அந்த  பள்ளியிலிருந்து அவர்கள் டி சி கொடுத்து அனுப்பப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்  தனியார் பள்ளி நிர்வாகத்தின் கால்களில் வீழ்ந்தும் கெஞ்சினார்கள் பயனில்லை.  அங்கு பயிலும் ஆயிரம் மாணவர்கள்  எதிரில் அந்த பெற்றோர்களின் மனம் அன்று என்ன பாடு பட்டிருக்கும்?   அந்த மாணவர்கள்  இருவரையும் அருகில் இருந்த முனிசிபல் பள்ளிக்கூடத்தில்தான் சேர்த்தார்கள்.  முனிசிபல் பள்ளிக்கூட மாணவர்களைத் தரமுயர்ந்த தனியார்பள்ளியின் மாணவர்கள்  பின் எப்படி மதிப்பார்கள்..

 தமிழ் நாட்டில் நெய்வேலிப்புது நகரில் தனியார் பள்ளிகள் இப்போது அனேகம். ஜநஹர் லால்  நேரு கனவு கண்ட அந்த ப்பொதுத்துறை மண்ணில் சலூன் கடையும் திரையரங்கங்களும் ஒன்றிய  அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டதுண்டு. அதுஅன்று

அந்நகரில்நிலக்கரி நிறுவன கார்ப்பரேஷன் பள்ளிகள் மட்டுமே அப்போது இயங்கின.. காலமும் கருத்தும்  மாறிப்போயிற்று.  இன்றோ வசதியுள்ள ஊழியர்களின் குடும்பப் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து பளிச்சென்று வெளிவருகிறார்கள். இந்த இருவகைப் பள்ளி மாணவர்களுக்கும் இடையே  தர வரிசையில் பெரிய ஏற்ற இறக்கங்களைக் கண்கூடாய்ப்பார்க்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ராமேசுவரம் நகராட்சிப்பள்ளியில் படிக்கவில்லையா? அணுவிஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எங்கே எந்தப்பள்ளியில் படித்தார். தெருக்கம்பத்து  லாந்தர்  வெளிச்சத்தில் ஜட்ஜ் முத்துசாமி அய்யர் படிக்கவில்லையா? முன்னாள் பாரதப் பிரதமர் லால்பகதூர்  சாஸ்திரி ஆற்றில் நீந்தி ப்பள்ளி சென்றது தெரியுமா? என்றெல்லாம் வினா வைக்கலாம் அது நியாயமாகிவிடாது.

எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். அமெரிக்க அய்க்கிய நாட்டுப்பள்ளிக்கூடங்களை பத்திரிகை உலகம் உதாரணத்திற்குக்கூட எடுத்து வெளிக்காட்டுவதில்லை. மேலைய தேயத்து  அரசாங்கப் பள்ளிகள் பற்றி இந்தியப்பத்திரிகைகள்  ஆரோக்கியமாய் விவாதிக்கலாமே.  அங்கு அரசாங்கத்தின் பள்ளிகள்தான் தரம் கூடியவையாக எல்லா ப்பிள்ளைகளும் பயிலும் கல்விக்கூடமாக. அனைவராலும் விரும்பப்படும் ஏன் போற்றப்படும் கல்வி நிலையங்களாக விளங்குகின்றன.

இந்தியப் பொதுவுடமைக்கட்சிகள் இது பற்றிப்[பேசவேண்டாமா? குறைந்த பட்சம்  தமக்குள் விவாதிக்க வேண்டாமா? கொடி உயர்த்தும் கோஷமிடும் தொழிற்சங்கங்கள் கட்டாயம் பேசவேண்டும்தான்.

கனடா ஜெர்மனி போன்ற நாடுகளில்  அனைத்து மக்களுக்கும் கல்வியும் அனைத்து  மக்களுக்கும் மருத்துவ வசதியும் அரசாங்கம் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறது.. ஆனால் இங்கு ஒரு நடுத்தரக் குடும்பத்துக்காரன் சம்பாரிப்பதையெல்லாம் லட்சம் லட்சமாய் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளையின் கல்விக்கென்று கொட்டிக் கொடுத்துவிட்டுச்சாகிறானே அது ஏன்?  இதற்கெல்லாம் மாற்றென்பது இல்லையா? யாரும் இது பற்றி கவலைப்படுகிறார்களா?  அங்கு அரசாங்கங்கள் வருமானவரியை  முப்பது சத்விகிதம் கறாராக வசூல் செய்கின்றன. ஆக சாத்தியமாகிறது என்பார்கள். இங்கு மட்டும் ஏனப்பா அது சாத்தியமாகாது..

 இந்திய மண்ணிற்கே பிரத்யேகமான சாதியக்கொடுமை மாணவர்களை எப்படி எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்து  அலைக்கழிக்கின்றது. எந்த ப்பள்ளிக்கூடமானாலும் சரி சாதிய நஞ்சு கலந்தேதான் அனுபவமாகிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவன் ரோஹித்  வெமுலா தற்கொலை செய்துகொண்டதை  கல்வியுலகம் மறக்கத்தான் முடியுமா? ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்களுக்கு  உயர் கல்விக்கூடங்களில் நாம் எந்த நம்பிக்கையை  விதைத்திருக்கிறோம்?

அண்மைக்காலமாக தமிழ் மண்ணில் பள்ளித்தலங்களில் கேள்விப்படும் பச்ச்சிளங்குழந்தைகளின் பாலியல் புகார்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன.  ஆசு இரியர்கள் எப்படி ஆசு பிரியர்கள் ஆனார்களோ ? கல்விக்கூடங்களில் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய போதனைகள் நீர்த்துப்போனதன் விளைவைத்தான் நாம் எதிர்கொள்கிறோம்.

தனியார் பள்ளி மாணவர்களிடம்  பணம் வசூலிப்பது பற்றி அரசாங்கம் ஆயிரம் அறிக்கைகள் அனுப்பி என்ன? கட்டிட நிதி வளர்ச்சி நிதி போக்குவரத்து க்கட்டணம் என்று பெயர் வைத்து பள்ளி நிர்வாகம் கறாராக வசூலிப்பதை யாராவது தடுத்துவிடமுடியுமா.  பெற்றோர் வெளியில் சொன்னால் குழந்தையின் படிப்பு என்னாவது. ஆக அது அதன் வழியில் தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது.

 வருடத்திற்கு ஐம்பது ஆயிரம் முதல்  மூன்று லட்சம் வரை மழலையர்  வகுப்புகளுக்கு வசூலிக்கும் பள்ளிகள்  இயங்கவே செய்கின்றன. ஆசிரியர்  மெய்யாய் பெறுகின்ற சம்பளத்தையும் அவர்களிடம் வாங்கப்படுகின்ற வேலையையும் யார் கண்காணிக்கமுடியும். ஆசிரியர்கள் என்ன நடக்கிறது என்று  உலகிற்குச் சொல்லிவிட்டால்  அடுத்த நாள்  அந்தப்பணிக்குத்தான் செல்லமுடியுமா?

இதன் இடையே  உலகமே  எதிர்பார்க்காத பிசாசாய் ஒரு பெருந்தொற்று தோன்றி மனிதச்சமுதாயமே திக்கு முக்கு ஆடி நிற்பது பெரும் சோகக்கதை

 உலக அளவில் பள்ளிக்கூட மாணவர்களும் ஆசிரியர் சமூகமும். மன நிலையில் வெகுவாகவே பாதிப்பட்டிருக்கிறார்கள்

தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கும் அவர்கள் செய்யும் செலவிற்கும் போக மீதமாய் கல்வி வியாபாரத்தில் கொள்ளையோகொள்ளை நடப்பதை நாம்  எல்லோரும் அறிவோம்.

நன்கு படித்த நடுத்தர ஏழைப்பெண்கள் வேறு வேலை கிடைக்காமல் ஆசிரியர் தொழிலைத்தேர்வு செய்து படும் துயரங்கள் சொல்லிமுடியுமா?

பூனைக்கு யாரே மணி கட்டுவது?.

---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

No comments:

Post a Comment