Wednesday, December 29, 2021

குருவந்தனம்

 

 

 

குரு வந்தனம்                       

 

 குயவன் களிமண்ணை  சுழலும்  அச்சக்கரத்தில் எடுத்து  எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான்  எதனைச் செய்வான்  சட்டியா பானையா அதனதன்  மடக்கா,  எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா சாலா  சாலும்கரகம்தானா  யார் அறிவார்?.

  அந்தச்சக்கரம் அமர்ந்த  களிமண்  எதுவாக  உருப் பெறும்  எப்படி அதன் வடிவம் இருக்கும்,  அக்குயவன் சுழலும் சக்கரத்தை எதுவரை சுழற்றுவான் எப்போது நிறுத்துவான் யாருக்குத்தெரியும். அனைத்தும் அவன் விருப்பம். மனிதர்கள் அந்தக்குயவனின் கைக்கு அகப்படக்காத்திருக்கும் களிமண் அவ்வளவே.

 ராபர்ட் பிரொளனிங் என்னும் ஆங்கிலக்கவிஞன் எழுதிய ஒரு கவிதை.. கவிதையின் பெயர் ரப்பி பென் எஸ்ரா.  கவிராயர்  ராபர்ட்பிரொளனிங்    சொல்லுவார். ’கடவுள்  ஓர் குயவன். அவனுக்கு முன்னால் தயாராக  பிசைந்து பிசைந்து வைக்கப்பட்டிருக்கிறது கூடை நிறைய களிமண்.  அவன் ஆணைக்கு ஏற்பச்சுழலக் காத்திருக்கும் ஒரு சக்கரம் இவ்வுலகம்.

செல்லப்பா வகுப்பில்  இப்படிச்சொல்லிக்கொண்டே போவார்.  முதுகலை இறுதிப்பருவம் கவிதையியல் அவனுக்குச் சொல்லிக்கொடுத்த பேராசான் அவர்.  

அவன் மனம் மட்டும் வேறு வேறு வழியில் சென்று  அவனைத் துளைத்துக்கொண்டேகொண்டே இருந்தது.

மனித முயற்சி என்ற ஒன்று  இல்லையா என்ன? அதற்கு  உரிய மாண்பென்தும்  உண்டுதானே பிறந்த குழந்தைக்கு நடக்கக்கற்றுத்தர வேண்டாமா பேசக்கற்றுத்தரவேண்டாமா?   தத்தி த்தத்தி விழுந்து விழுந்து  அடி பட்டு பின் எழுந்துதானே அது நடை பழகவேண்டும். மழலைச்சொல் பேசிப்பேசி  பின்னர்தானே சட்டமாய்ப் பேசவரும்.

உணவும் உடையும் உறையுளும்  இங்கு வாழும் மக்களுக்கு .யார் கொண்டு தருவார் ? . மனிதர்கள்தானே அயராது உழைத்து அவை அவை  உருவாக்கித்தரவேண்டும். காலைக்கட்டிக்கொண்டு  நீயும் நானும் ஒரு மூலைபார்த்து  உட்கார்ந்து விட்டால் இவை எல்லாம் எப்படி சாத்தியமாகும்.

 மனிதன் வயற்காட்டில்  மாடாய் உழைத்து  உற்பத்தி செய்யாவிட்டால் சட்டியும் பானையும் சமையல் கூடத்தில்  சயனித்துக்கொண்டு என்ன செய்யும். .

ஆங்கிலப்பேராசான் செல்லப்பா நடத்திக்கொண்டே போவார்.  கிராமரியன்ஸ் ஃபுனெரல் என்னும் கவிதையிலிருந்து மேற்கோள் வந்து வந்து விழும். அதுவுமே பிரெளனிங் எழுதிய கவிதைதான்.   ’வாழும்  இக்கணத்து  இன்பம் ஒன்று மட்டுமே என்பது  தெருநாயுக்கும் குரங்குக்கும்தான் மனிதனுக்கு  அவ்விதம் இல்லையே.  மனிதன் முக்காலத்தையும் கணக்கில் கொண்டு  வாழ்வை தீர்மானிக்க வேண்டும்’

’மனிதன் வாழ்ந்து முடிக்கப்பிறந்தவனில்லையப்பா.. அவன் மென்மேலும் அறிந்துகொள்ளப்பிறந்தவன்’

 பேராசான் அந்தக்கவிதையிலிருந்து சொல்லிக்கொண்டேபோவார்.

’மெமொராபிலியா’ என்னும் கவிதைக்குத்தாவுவார்...

‘ஷெல்லி எனும் கவிஞரை

ஒரு நாள்  நீ

சாதாரணமாய்ப் பார்த்தாயல்லவா

அவர் நின்றார் உன்னோடு பேசினார்தானே

நீயும் அவரோடு திரும்பப்பேசினாய்

எத்தனை ப்புதுமை

எத்தனைக்கு அரிது இது அறிவாயோ

அத்தனைக்கும் பிறகு

முன் எப்படி இருந்தாயோ 

அப்படித்தான்  இருப்பாயோ

இப்போதும்’ நீ.’

’ஒரு கவிஞனுக்கு இதனைவிட இன்னொரு கவிஞன் பெருமை சேர்த்துவிட முடியுமா’ என்பார்.

.’’உலகம் மாறுகிறது

உன் ஆன்மா அப்பேரான்மா நிலையில் மாற்றமில்லை.

உன்னுள் இருக்கும் அது

இருந்தது இருக்கிறது  என்றும் இருக்கும்

சுழலும் சக்கரம் பின் போகும்

ஏன் நிற்கும்கூட..

களிமண்  வைத்திருக்கும்

குயவன் மட்டுமே

அறிவான் மொத்தமும்’.

எத்தனை அழகாகக் கவி பிரெளனிங் மனித வாழ்க்கையை  எடுத்து வைக்கிறார்   செல்லப்பா  தொடர்வார்.

‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி

 நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

 கொண்டு வந்தான் ஒரு தோண்டி

மெத்தக்கூத்தாடி கூத்தாடிப்

போட்டுடைத்தாண்டி

என்னும்  கடுவெளிச்சித்தர் பாடலை ப்ரெளனிங்கின் பாடலோடு ஒப்பிட்டு ச்சிலாகிப்பார். வகுப்பே வாய்பொத்தி அமர்ந்து உற்சாகமாய்க் கேட்கும்.

  ஆங்கிலக்கவிஞன் பிரெளனிங்கின் கவிதை நூலை இக்கணமே வாங்கி முற்றாய்ப்படித்துவிடவேண்டும். அவன் முடிவு செய்தான். ரப்பி பென் எஸ்ரா இந்த ஒரு கவிதை மட்டுமே அவனுக்கு சிலபஸ். என்றாலும் என்ன ?..  

 தான் வாழும் நகரத்தில் பழைய புத்தகக்கடைகளைத்தேடிதேடி அலைந்தான். அந்தத்திருவல்லிக்கேணி கடற்கரை சமீபமாய்த்தான்  இந்த  வகைப் புத்தகங்கள் எல்லாம் விற்பார்கள். அவன் எத்தனையோ புத்தகங்கள் இப்படி வாங்கியிருக்கிறான்.  கடைத்தெருவில் நடை பாதையில் முட்டு முட்டாய் க்கொட்டிவைத்திருக்கும்  பழைய புத்தகங்களில் அந்த பிரெளனிங் கவிதையைத்தேட ஆரம்பித்தான்.

‘ என்ன தேடுற’

‘உனக்கு சொன்னா புரியுமா’

‘தேவுலாம்டா  இது என்கட நா வியாவாரி’

‘ சொல்லுறேன் பிரெளனிங் கவிதைகள்’

‘ அப்படிச்சொல்லு, இங்க்லீஷ் கவிதங்க கேக்குற,  தனியா வச்சிருக்கேன் பாரு’

அவன் ஒரு தனி அடுக்கைக்காட்டினான்.

  அடுக்கி இருக்குறது சும்மா கொழப்பாதே. நெதானமா பாரு நீ கேக்குறது இருக்கும்’

அவன் வரிசையாக பார்த்துக்கொண்டே வந்தான். ஷெல்லி. வர்ட்ஸ்வர்த். லாங் ஃபெல்லோ, ஜான் டன், மில்டன், ஷேக்ஸ்பியர் எமர்சன். எமிலி ஃப்ராஸ்ட், எட்கர் ஆலன் போ, வால்ட் விட்மன், ஷெரிடன், தாகூர் ஆர் கே நாராயண் ராஜாராவ் இன்னும் எத்தனை பேர்..

‘கெடச்சிதா’

‘பாக்குறேன்’

பிரெளனிங் எழுதிய ’லாஸ்ட் ரைட் டுகெதர்’ எனும் கவிதைக்கு குதிரை இரண்டுடன்  அழகழாய் ஆணும் பெண்ணும் என அட்டைப்படம் போட்ட பழைய புத்தகம் ஒன்று கிடைத்துவிட்டது. அவன் அதை தட்டி எடுத்துக்கொண்டான்.

‘ கொண்டா கொண்டா’

அவனிடம் அதை ஒப்படைத்தான். கடைக்காரன் ஒரு புரட்டு புரட்டுனான்.

‘ எடு நூறு’

‘ நூறா’

அவன் புத்தகத்தைப்புரட்டி இரண்டாம்பக்கத்தில் விலை என்ன போட்டிருக்கிறது என்று பார்த்தான். ப்ரைஸ் அதற்குப்பிறகு வட்டமாய் ஓட்டை... விலை  மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது.

‘ என்னா பாக்குற வெலயா’

‘ அது ஏன் உனக்கு  எது எடுத்தாலும் அந்த கட்டில நூறு ரூவாதான்’

‘ அது எப்பிடி? போட்டிருக்கிற விலய  கிழிச்ச’ நீ’

‘ பொஸ்தகம் வேணுமா வெலய போய் பெரிசா பாக்குற’

‘ நான் கேக்குறதுல என்ன தப்பு’

‘ தப்புதான் அந்த பலான பலான  புத்தகம்னு  சொல்லு வெல கொறச்சி தாரேன். இத வெல கொறச்சி குடுத்தா அதுவும் தப்பு தெரிமா’

அவன் தொடர்ந்தான்.

’பெரிய மனுஷன் பெரிய மனுஷன் படிக்கணும்னு எழுதுனது . நாயிங்க நாயிங்களுக்கு எழுதுன சமாச்சாரமில்ல. எதுல போய் காசி பாக்குற அது உள்ர என்னா சமாச்சாரம் இருக்கு. எனக்குத் தெரியாது. ஆனா அந்த முட்டுல கை வச்சிட்டு  தேடுனா அவன் பெரிய மனுஷன்’ ’

‘ பின்ன ஏன் வெலய கிழிச்ச’

‘ ஒண்ணும் கேக்காத சாமி’.  அவன் போட்டிருக்கும் கிழிந்த பனியனை கைவிட்டு தூக்கி த்திருப்பிக்காட்டினான். அவன் வயிறு மட்டும் கச்சிதமாகத் தெரிந்தது..’’’ அவன் எதுவும் பேசவில்லை.

 யாரோ பளார் என்று கன்னத்தில் அறைந்தமாதிரிக்கு உணர்ந்தான். . நூறு ரூபாயை எடுத்து அவனிடம் பவ்யமாய் நீட்டினான்.

  உசந்த மனுஷன ரவ நாழில அசிங்கப்படுத்திடட’’.’ சொல்லிய கடைக்காரன் அந்த நூறு ரூபாயை கண்ணில் ஒற்றிக்கொண்டு  சுருக்குத் துணிப்பையில் போட்டுக்கொண்டான்.

 

----------------------------------------

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment