Wednesday, July 30, 2014

Tagore- story






வீடு திரும்புதல் - ரவிந்திர நாத் தாகூர்
தமிழில்- எஸ்ஸார்சி

இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன்.அவனுக்கு ஒரு யோசனை.கிறுக்கு யோசனைதான்.இதோ இந்த ஆற்றங்கரை மண்திட்டு மீது கிடக்கிறதே ஒரு பெரிய மரம் அது ஒரு படகின் நடு த்தூணுக்கு எனத்தான் வைத்திருக்கிறார்கள் இதனை இந்த இடத்திலிருந்து உருட்டி உருட்டி விளையாடினால் என்ன.இந்த மரத்துக்கு உரிமைக்காரன் சண்டைக்கு வருவான். வரட்டுமே எல்லோருக்கும் அது சிரிப்பாயும் இருக்கும். அவனின் சக தோழர்கள் எல்லோரும் சரி என்றார்கள். மரத்தை உருட்டிவிட தயாராகி நின்றார்கள்.பதிக்கின் இளைய சகோதரன் மக்கன் மட்டும் அமுத்தலாக அங்கே நடந்து வந்தான். அந்த மரத்தின் மீது சட்டமாய் அமர்ந்து கொண்டான்.மவுனமாவே இருந்தான்.பையன்கள் எல்லோருக்கும் ஒரே குழப்பம்.கூட்டத்தில் ஒருவன் அவனைப்பிடித்து இழுத்து ' உடன் இடத்தை விட்டு எழுந்திரு' என்றான்.மக்கன் இன்னும் அமைதியாய் அமர்ந்திருந்தான்.இவ்வித விளையாட்டுக்களின் அற்பத்தனத்தை மக்கன் யோசித்தபடியே இருந்தான்.
'மக்கன் நீ மரத்தை விட்டு இந்த நிமிட்மே எழுந்திரு இல்லாவிட்டால் உன்னைத் துவைத்து எடுத்து விடுவேன் என்ன தெரிகிறதா '
என்றான் பதிக்
மக்கன் இன்னும் கொஞ்சம் சவுகரியாமாகவே நகர்ந்து அமர்ந்துகொண்டான்.
எல்லோருக்கும் மத்தியில் தனது தர்பாருக்கு ஊறு ஏற்பட்டுவிட்டதாகவும் இனி சும்மா விடமுடியாது எனவும் பதிக் எண்ணினான்.ஒன்றும் யோசனை வரவில்லை இப்படிச்செய்தாலென்ன இந்த மரத்தை அப்படியே அவன் அமர்ந்திருக்கவே உருட்டினால் இன்னும் கொஞ்சம் ஜாலியாக இருக்கும் என எண்ணினான். மக்கனும் கீழே தள்ளப்படுவான் ஆக அந்த மரமும் உருளும் என்பதாக முடிவாகியது.மக்கன் எழுந்திருக்கவே முடியாது என சட்டமாகத்தான் அமர்ந்திருந்தான். எல்லோரையும் போல இந்த வீண் ஜம்பத்தில் ஆபத்தும் இருப்பதை மக்கன் சட்டை செய்யவில்லை.
பையன்கள் எல்லோரும் மரத்தை தம்மால் முடிந்த மட்டும் நெட்டித்தள்ள, 'ஒன்று இரண்டு மூன்று ஓடு மரமே ஓடு' என்று சப்தமிட்டார்கள்.மரம் உருண்டது. மக்கனின் அமர்வும் திண்ணமான அந்த அசையாத முடிவும் கூடவே உருண்டு போனது.
பையன்கள் எல்லாரும் ஆ ஊ என்று சப்தமிட்டனர். சந்தோஷப்பட்டனர்.ஆனால் பதிக் அதிர்ந்து போயிருந்தான். என்ன வரவிருக்கின்றது என்று அவன் அறிவான்.மக்கன் விதி வசப்பாட்டவனாய் கோபக்கனல் தெறிக்க தரைமீதிருந்து எழுந்தான்.பதிக்கின் முகத்தில் குத்தினான்.அடித்தான் உதைத்தான். பின்னர் மக்கன் அழுது கொண்டே வீடு சென்றான்.முதல் கட்டம் இது முடிந்துபோனது.
பதிக் தன் முகம் துடைத்துக்கொண்டான். ஆற்று நீரில் ஒரு பகுதி மூழ்கியிருந்த படகின் மீது அமர்ந்து கோரைப்புல் ஒன்றை கடித்துக்கொண்டிருந்தான்.ஒரு படகு அப்போது கரைக்கு வந்தது.அதனில் பயணித்த நடுத்தர வயதுக்காரன், தலை நரைத்து மீசை பழுப்பாகியவன் கரைக்கு நடந்து வந்தான்.பதிக் அமர்ந்திருப்பதைப்பார்த்து' பையா இங்கு சக்ரவர்த்தி வீடு எது அறிவாயோ' எனக்கேட்டான்.கோரையைக்கடித்தபடி பதிக்' ஆ இருக்குது பார் அந்த வீடு' பதிலுரைத்தான்.வந்திருக்கும் புதியவனுக்கு விளங்கவில்லை.மீண்டும் வினவினான்.கால்களைத்தொங்கபோட்டு,ஆட்டியபடி'போயி ப்பாரயா' என்றான் பதிக்.கோரைப்புல்லை மீண்டும் கடிக்க ஆரம்பித்தான்.
பதிக் வீட்டிலிருந்து அங்கு வந்த வேலையாள் பதிக்கிடம் அம்மா அவனை அழைப்பதாக சேதி சொன்னான். அவன் அசையவில்லை. வந்த வேலக்காரன் ஒன்றும் நடவாது என முடிவு செய்து பதிக்கை குண்டு கட்டாகத்தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தான்.ஆ ஊ என்று பதிக் கூச்சலிட்டு கால்களை உதைத்துக்கொன்டான். கதை ஒன்றும் ஆகவில்லை.
பதிக் வீட்ட்னுள் நுழையவும் அவன் அம்மா 'மீண்டும் மீண்டும் தம்பியை அடிப்பது என்றே இருக்கிறாய? கோபமாய்க்கேட்டாள்.ஒன்றும் அறியாதவன் போல'நான் அடிக்கவில்லையே. உனக்கு யார் அப்படிச்சொன்னது? என்றான்.
'பொய சொல்லாதே தெரியர்தா' என்று அதட்டினாள்.
'நான் அடிக்கவில்லை' என்கிறேன். 'நீயே மக்கனைக்கேள் நான் அடித்தேனா'
மக்கன் தான் முன்பு சொன்னதை உறுதி செய்து' அம்மா பதிக் என்னை அடித்தான்தான்' என்றான்.
பதிக் பொறுமை இழந்தான்.அநீதி இது என முடிவுக்கு வந்தான். பதிக் இடத்தை விட்டு எழுந்தான். மக்கனைப்பிடித்து பொத் பொதென சாத்தினான்.
'பொய்யா சொல்கிறாய் நீ அதற்குத்தான் வாங்கிக்கொள் இந்த உதை' என்று கர்ஜித்தான்.
மக்கனின் அம்மா மக்கனை ஒருபக்கம் இழுத்து பதிக்கை அடுத்த புறம் தள்ளி அடி அடி என அடித்தாள்.அவன் அலறினான். அம்மாவை த்தள்ளினான்.'ஏண்டா கடங்காரா அம்மாவையே நீ அடிச்சிடுவயா' கத்தினாள்.
இந்த நேரம் பார்த்துஅந்த நரைத்த தலை நடுத்தரவயதுக்காரன் வீட்டின் உள்ளே நுழைந்து' என்ன இங்கு சண்டை' என்றான். பதிக்கிற்கு அவனைப்பார்க கூச்சமாயும் வெட்கமாயும் இருந்தது.ஆனால் அம்மா கொஞ்சம் பின்னே தள்ளி நின்று அங்கு வந்த புதியவனை ப்பார்த்தாள்.கோபம் எங்கோ போக ஆச்சரியத்தில் திளைத்தாள்.அவளுக்கு அவள் சகோதரன் வந்திருப்பது தெரிந்து, 'அண்ணா வா வா எங்கிருந்து வருகிறாய்?' என்றாள்.
அண்ணனின் பாதம் தொட்டு வணங்கினாள்.அவள் கல்யாணத்திற்குப் பின் மும்பை சென்று ஏதோ வியாபாரம் செய்யத்தொடங்கியவன்.அவள் கணவன் இற்ந்துபோனான். அப்போது கூட இந்த அண்ணன் பிஷம்பர் மும்பையில்தான் இருந்தான்.இப்போதுதான் கொல்கத்தா வந்திருக்கிறான் அப்படியே சகோதரி எங்கே இருக்கிறாள் என விசாரித்துக்கேட்டு இங்கு வந்திருக்கிறான்.
சில தினங்கள் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருந்தது.குழந்தைகள் எப்படி ப்ப்டிக்கிறார்கள் என க்கேட்ட பிஷம்பருக்கு அம்மா பதிக்கின் ஓயாதா சேட்டையை ச்சொன்னாள்.பதிக் சோம்பேரி,சொல்வதைக்கேட்கமாட்டான் முரடண் என்றாள். சின்னவன் மக்கன் பத்தரை மாத்து தங்கம் சொன்னது செய்வான் படிப்பிலும் சரி மிகவும் கெட்டிக்காரன் என்றாள்.பதிக்கை தன்னோடு கொல்கத்தாவுக்கு அழைத்துப்போய் தன் குழந்தைகளோடு படிக்கவைப்பதாய் பிஷம்பர் சொன்னான்.விதவைத்தாய் உடனே சரி என்றாள்.பிஷம்பர் பதிக்கைக்கேட்டான். அவனும் 'சரி நான் ரெடி' என்று தான் தயாராய் இருப்பதாய்ச்சொன்னான்.
அம்மாவுக்கு பதிக் ஊருக்குப்போவது விடுதலையாய் இருந்தது.அம்மா தப்புக்கணக்குத்தான் போட்டிருக்கிறாள்.சகோதரர்களிடையே அன்பு ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை. பதிக் மக்கனை ஆற்றில் பிடித்து தள்ளி விட்டுவிடுவானோ,மண்டையை உடைத்து விடுவானோ இல்லை இன்னும் ஏதேனும் ஆபத்தில் மாட்டிவிடுவானோ தினம் தினம் அச்சப்பட்டவள் அம்மா.பதிக் சட்டென ஊருக்குப்போவதற்கு ஒத்துக்கொண்டதுகூட அம்மாவுக்கு இனம் புரியாத ஒரு கலக்கத்தையே உண்டாக்கியது.
பதிக் அவன் மாமாவை 'எப்போது நாம் கிள்ம்புவது' என நொடிக்கு நொடி நச்சரித்தான். ஏகமாய் அமர்க்களத்தில் இருந்தான்.இரவு கூட அதே நினைப்பு. உறக்கம் கூட வரவில்லை. அவனிடமிருந்த மீன் பிடிக்கும் தூண்டில்,பெரிய பட்டம்,கோலிகுண்டுகள் எல்லாவற்றையும் எடுத்து தன் சகோதரனிடம் கொடுத்தான்.கிளம்பும் சமயம் மக்கனிடம் அத்தனை அன்பாயும் பெருந்தன்மையாயும் பதிக் நடந்துகொண்டான்.
கொல்கத்தா வந்த பதிக் அத்தையை அப்போதுதான் முதல் தடவையாய்ப்பார்க்கிறான். இவன் தன் வீட்டிற்கு ஒரு புதிய வரவாய் ஆனது அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. அத்தைக்கு அவள் மூன்று பையன்களே போதும்.இன்னும் எதற்கு அதிகமாய். ஒரு பட்டிக்காட்டுப்பையன் அதுவும் பதினான்கு வயது விடலைப்பையன்.அவள் கடுப்பானாள்.பிஷம்பர் இந்த தவறை செய்வதற்கு முன்பு ஒருதடவைக்கு இருதடவை யோசித்து செய்திருக்கலாம்.
.
இந்த காலத்தில் பதினான்கு வயது விடலைப்பையனை வைத்துச் சமாளிப்பது எத்தனைத்துன்பம்.அவன் எதற்கு உபயோகம்.என்ன பிரயோசனம். அவனை க்குழந்தை எனக்கொஞ்சுவதா இல்லை என்னதான் செய்ய,அவனேதும் சொன்னாலோ அவனை செறுபிள்ளை என்கிறார்கள் இல்லை என்றால் ரெண்டுங்கெட்டான் என்கிறார்கள்.அவன் சொல்வது இங்கு எந்த சபை ஏற்கும்.அந்த பதிநான்கு வயது என்பது பொல்லாத வளர் பருவம். சட்டையும் டிராயரும் அவன் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கமுடிகிறதா என்ன குரல் எப்படி எல்லாம் மாறுகிறது கரகரப்பு வருகிறது தடுமாறுகிறது.முகம் கோணலாகி முதிர்ந்துபோகிறது. சின்னக்குழந்தையாய் இருப்பது என்பது எவ்வளவோ தேவலாம் ஆனால் இந்த பதினான்கு வயதுப்பையனை எப்படி எதிர்கொள்வது.அந்த பையனுக்கேகூட இது விஷயம் தெரிய வரும்.பெரியவர்களோடு பேசும் சமயம் படபட என வேகமாய்ப்போயிக்கொண்டே இருப்பான்,இல்லை வெட்கப்பட்டுக்கொண்டு அசிங்கமாக நெளிவான் தன்னையே பின் நொந்துகொள்வான்.
என்னதான் இருந்தாலும் இில்லை என்றாலும் இந்த விடலைப்பருவத்திலேதான் அன்புக்காக ஒருவன் ஏக்கம்கொள்கிறான்.தன்னை எல்லோரும் அங்கீகாரம் செய்ய வேண்டும் என அவாவுகிறான்.அவனை யார் மதிக்கிறார்களோ அவர்களுக்கு அடிமையாகிப்பணி செய்ய விழைகிறான். ஆனால் யாரும் அவன் மீது நேராக அன்போ பாசமோ காட்டுவதில்லை. அது அவ்வளவு சரியாக இருக்காது ஆக யாரும் அன்புசெய்வதை அவனிடம் விரும்பி விரும்பிச்செய்வதில்லை. அவன் எங்கே கெட்டுப்போய்விடுவோனோ எனத்தான் அஞ்சுகிறார்கள்.. பார்க்கிற அனைவ்ரும் கறாராக அல்லது கண்டிப்புடன் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தன் எஜமானனை தொலைத்துவிட்டதால் தனித்துவிடப்பட்ட ஒரு நாய என அவன் அலைய வேண்டியவனாகிறான். பதினான்கு வயதுப்பையலுக்கு அவன் சொந்த வீடுதான் சொர்க்கம்.புது மனிதர்களோடு ஒரு புது இடத்தில் காலம் ஓட்டுவது ஏதோ இருக்கும் அவ்வளவே.பெண்கள் அவனை அன்பாக மட்டும் பார்ப்பார்கள். வெறுமே பார்ப்பார்கள். ஆனால் மதித்துப்பார்க்கமாட்டார்கள்.அவனுக்கு இதுகள் எல்லாம் எட்டுமோ .என்றால் இல்லை.
பதிக்கிற்கு கொல்கத்தா புது இடம். அத்தைக்கு அவன் அழையா விருந்தாளி.எப்போதும் கரிச்சுக்கொட்டுவாள் அத்தை.சட்டை செய்தால்தானே. அத்தையவள்.அவனுக்கு ஒரு சிறியவேலை கொடுத்துவிட்டாலும் ஆகா ஊகூ என அந்த காரியத்தை ச்செய்து காட்டுவான். அத்தையோ 'முட்டாளாய் இருக்காதே படிப்பு பாடம் வேலை எதாவது இருந்தால் பார்' 'என்பாள்.அவன் மனம் சூம்பிப்போவான்.இப்படி இறுக்கிப்போட்ட ஒரு சூழல் அத்தை வீட்டில் எங்கே மூச்சு விட முடிகிறது.வெளியில் எங்காவது சுற்றி வந்தால் தேவலை. இதமான காற்று வாங்கி மூச்சு விட்டால் சிறிது சந்தோஷப்படலாம்.கொல்கத்தாவில் எங்கும் வீீடுகள் சுவர்கள், வீடுகள் சுவர்கள் இப்படித்தான். தன் ஊரை வீட்டை இரவுக்கனவில் மட்டுமே எண்ணிப்பார்க்க முடிகிறது. பச்சை நிறத்தால் ஒளிரும் புல்வெளி,பட்டம் விடும் அந்த அழகு இடம்,அகன்ற ஆற்றங்கரை அதன் கரையில் ஓயாதுபாடும் அவன் பாட்டு, போடும் கூச்சல்,தொங்கும் மரக்கிளை அதனிலிருந்து ஆற்றுக்குள் எகிறுதல், நீந்துதல், அவன் சகாக்கள் அவர்கள் மத்தியில் அவனின் தலைமை, அவன் அம்மாவின் கொடுரம் , அவளின் அவன் பற்றிய ஒரு தப்பான அபிப்ராயம் இவை அவனை இரவும் பகலுமாக்கிரமித்தன.
ஒரு அன்பிற்கு ஏங்கும் விலங்கானான் பதிக்.அவன் மனதில் வார்த்தையால் சொல்லிவிடவும் முடியாத ஒரு தணியாத ஆசை இருந்தது.அம்மாவின் அன்புக்காக ஏங்கினான்.பசுவின் கன்று மங்கும் மாலைப்போதில் தன் தாயுக்கு ஏங்கும் ஏக்கம் அவனுள் குடிகொண்டு இருந்தது.இந்த விலங்கின அன்புணர்வு ஒரு கூச்சத்தில் ஒரு பதற்றத்தில் ஒரு வினோதத்தில் ஒரு விகாரத்தில்..கொப்பளித்தது.யார் அதனைப்புரிந்துகொண்டார்கள்.அவனை அவன் மனதை அது விழுங்கிக்கொண்டிருப்பதை இங்கு யார் கவனித்தார்கள்.
பதிக் தான் அந்த பள்ளிக்கூடத்திலேயே பின்தங்கிய பகுதியினின்று வந்திருப்பவன்.அவனுக்கும் மற்ற பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகம்..ஆசிரியரின் வினாவுக்கெல்லாம் அமைதியாக மட்டுமே இருப்பான்.விடை தெரியவில்லையே.பின் என்ன செய்வான்.அடியும் உதையும் மழையாய்ப்பொழிந்தன.அவன் அடி சுமக்கும் ஒரு கழுதையாகிப்போனான்.சக மாணவர்கள் விளையாடும் தருணம் பதிக் ஆகாயம் பார்ப்பான். அங்கிருக்கும் சன்னலை அடுத்த வீட்டுக் கூரையை முறைப்பான். அகஸ்மாத்தாக யாரேனும் சிறுவர்கள் மொட்டைமாடியில் விளையாடுவது அவன் கண்ணில் பட்டுவிடும். தானும் அப்படி விளையாடவேண்டும் என மனம் ஏங்குவான்.
ஒரு நாள் தைர்யத்தை எல்லாம் வரவழைத்துக்கொண்டு,'மாமா நான் எப்போது வீட்டிற்கு செல்வேன்?' கேட்டுவிட்டான்.
'பொறு விடுமுறை வரவேண்டாமா' பதில் சொன்னார் மாமா.
நவம்பர் மாதம்தான் விடுமுறை வரும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதுவரை எப்படிப்பொறுப்பது.
ஒரு நாள் தன் பாடபுத்தகத்தை தொலைத்துவிட்டான் பதிக். மற்ற புத்தகங்களை எல்லாம் துணைக்குவைத்துக்கொண்டாலும் அந்த பாடபுத்தகத்தை அவனால் தயார் செய்ய முடியவில்லை. முடியவில்லைதான். ஆசிரியரின் கருணையில்லா பிரம்படி தினமும் விழுந்தது.அவன் எல்லாருக்கும் கேவலமாய்த்தெரிந்தான். அவன் அத்தை பையன்கள் அவன் அங்கு இருப்பதை அவமானமாய்ப்பார்த்தார்கள்.பள்ளியின் மற்ற பிள்ளைகளைவிட அவர்களே கேலியும் கிண்டலும் அதிகம் செய்தார்கள்.. கடைசியாக அவன் அத்தையிடம்சென்று புத்தகம் தொலைந்து போனதைச்சொன்னான்.அவள் உதட்டைப்பிதுக்கிக்கொண்டு'நீ ஒரு குசும்பன்டா சரியான நாட்டுப்புறத்தாந்தானேடா நீ. என் குடும்பத்தையும் நான் பார்த்துக்கொண்டு உனக்கு மாசம் ஐந்து தடவையா புத்தகம் வாங்கி நொட்டமுடுயும்? ' என்றாள்.
அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போதே பதிக்கிற்கு தலை வலித்தது.கைகால்கள் நடுங்கின. அவனுக்கு மலேரியா காய்ச்சல் வரலாம் .. அவன் அத்தையை எண்ணி எண்ணி அச்சம் அதிகமாகியது.அத்தைக்கு நம்மால் இன்னும் இப்படியுமா தொல்லை என எண்ணினான்
மறு நாள் காலைவிடிந்தது. பதிக்கைக்காணவில்லை.எங்கு தேடியும் ஒன்றும் ஆகவில்லை. பேய் மழை கொட்டியது. தேடிப்போனவர்கள் கைவிரித்துகொண்டு மழையில் தொப்பற நனைந்து மட்டுமே வீடு வந்தார்கள்.
பிஷம்பர் போலிசில் புகார் ஒன்றை க்கொடுத்தார்.
அன்று மாலை பிஷம்பர் வீட்டு முன்பாக போலிஸ் வேன் ஒன்று வந்து நின்றது. இரண்டு கான்ஸ்டபல்கள் பதிக்கை அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்தார்கள்.மழை கொட்டு கொட்டென்று இன்னும் கொட்டிக்கொண்டிருந்தது. பதிக் சுத்தமாய் நனைந்து இருந்தான். உடல் சேறு பூசிக்கொண்டிருந்தது. கைகால்கள் படபட என நடுங்கிக்கொண்டிருந்தன.. கண்கள் காய்ச்சலில் சிவந்து போயிருந்தன.பிஷம்பர் பதிக்கைத் தன் தோளில் சுமந்து வீட்டின் உள்ளே சென்றார்.
பிஷம்பரின் மனவி ஆரம்பித்தாள்' இந்தப்பயைலால எத்தனை இம்சை. இவனை முன்னமேயே அவன் வீட்டுக்கு தொறத்தி இருக்கலாம் நீங்கள்'.
பதிக்கின் காதில் இது விழவே, தேம்பி அழுது கொண்டே சொன்னான்' மாமா நான் என் வீட்டுக்குத்தான் திரும்ப போயிக்கொண்டு இருந்தேன். இந்த காவலர்கள்தான் என்னை ப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்து விட்டனர்'.

அவனுக்குக்காய்ச்சல் அதிகமானது.இரவு முழுக்க பினாத்திக்கொண்டே இருந்தான். பிஷம்பர் மாமா ,ஒரு டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தார். .பதிக் கண்களைத்திறந்து' இன்னும் லீவு வரவில்லையா மாமா. நான் இப்போது வீட்டுக்குப்போகலாமா' என்றான். அவன் கண்கள் மின்னி சுர வேகத்தைக்கூடிக்காட்டின
பிஷம்பர் தன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத்துடைத்துக்கொண்டான்.பதிக்கின் மெலிந்த கைகளைத்தொட்டு வருடினான். இரவு முழுவதும் பிஷம்பர் உறங்கவேயில்லை.' அம்மா என்னை நீ அப்படி அடிக்காதே நான் உன்னிடம் உன்மையைத்தான் சொன்னேன்' என உளறிக்கொண்டே படுக்கையில் கிடந்தான்.
ஒரு கணம் கண் விழித்து நல்ல உணர்வு வந்தவனாக அறையை நோட்டம் விட்டான்.யாரையோ அவன் கண்கள் தேடிச்சோர்ந்தன அவன் தலகணையில் மீண்டும் தலை புதைத்தான். எதிரே இருந்த சுவரை வெறித்தபடி ப்பார்த்துக்கொண்டான். விம்மும் ஒலி மட்டும் கேட்க முடிந்தது. இப்போது பிஷம்பருக்கு அந்த பதிக்கின் விருப்பம் என்ன என்பது அறிய முடிந்தது.அவன் காதருகே சென்று,'உன் அம்மாவை இவ்விடம் அழைத்து இருக்கிறேன் பதிக்' என்றார்..
அன்றைய நாள் முடிந்தது. டாக்டர் பதிக்கின் நிலமை மிக மிக மோசம் என்று தாழ்ந்த குரலில் சொல்லிச்சென்றார்.
பதிக் கூவினான்,'ஆற்று தண்ணீ ஆழம் பாரு அது அளக்கும் குறியப்.பாரு இப்போ பதினெட்டு அடி. ஆகா இப்போ பாரு அதுவே இருபத்து நாலு, ஆழக்குறியப் பாரு' ஆற்றில் நீராவி படகு ஓட்டிகள் ஆழத்தையும் படகின் நேர் நிலை குறித்தும் கட்டளை தருவது நித்தம் நித்தம் கேட்டிருப்பவன் பதிக். இப்போது அளக்கமுடியாத ஒரு கடலின் ஆழத்தை அல்லவா அளக்க முயன்றுகொண்டிருந்தான்.
ஊரிலிருந்து வந்த பதிக்கின் அம்மா ஒரு சுழற்காற்று போலே அவன் கிடக்கும் அறையுள்ளே நுழைந்தாள். பதிக்கை இப்படியும் அப்படியும் புரட்டி பரட்டி ப்பார்த்தாள். விசும்பினாள். கேவினாள்.கோவென்று கூச்சலிட்டு அழுதாள். பிஷம்பர் அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றான்.அவள் பதிக்கின் படுக்கையில் முட்டிக்கொண்டாள்.'பதிக் என் செல்லமே என் செல்லமே' என்று கத்தினாள். செல்லத்தின் கைகால்கள் அசைவது நின்று போயிற்று.'ஆ' என அவன் சொல்லிக் கடைசியாய் நிறுத்தினான்.
'என் செல்லமே என் அய்யாவே என் ராசாவே' அம்மா விசும்பி விசும்பி அங்கு அழுது கொண்டேயிருந்தாள்..
பதிக் யாரையும், குறிப்பாக அங்கிருந்த யாரையும், பார்க்காமலே தன் தலையை மட்டும் திருப்பிக்கொண்டு சொன்னான்.' இப்போதுதானே அம்மா எனக்கு விடுமுறை'.
--------------------------------------------------------------------------.

.

.