Sunday, March 14, 2021

வசதி - கதை

வசதி                                    -எஸ்ஸார்சி

மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார்க்கடிதம் எழுதினான்.  அந்த சுபாஷ் நகர் ஒரு பெரு நகரத்தை ஒட்டிய  புதிய குடியிருப்புப்பகுதி. அங்குதான் அவன் எலக்ட்ரிகல் கடை நடத்திக்கொண்டிருந்தான்

எண்ணிக்கையில் .பத்து இருக்கலாம்.   கீழ்த்தொட்டியிலிருந்து தண்ணீர் மேல் ஏற்றும் சிறு மோட்டார்கள் அவனிடம்  விற்பனைக்கு இருந்தன. யாரும் வாங்கிப்போகாமல்  கடையின் பெரிய அலமாரியின் மேலடுக்கில் அப்படியே தூங்கிக்கொண்டிருந்தன. இவைகளை எப்படி போணியாக்குவது. ஒரு மோட்டார் விலை ஆறாயிரம் ஆக  ஒரு அறுபது ஆயிரம்  ரூபாய்..  இருந்தாலும் எவ்வளவு நாட்களுக்குத்தான் அவைகளை விற்காமல்  வைத்துக்கொண்டிருப்பது.

 ’’பெரு மதிப்பிற்குறிய ’மாவட்ட ஆட்சித்தலைவரின்  கவனத்திற்கு ப்பணிவான வின்ணப்பம்.

 எங்கள் சுபாஷ் நகரில் வீடுகளுக்கு குடிதண்ணீர் கனெக்‌ஷன் கொடுத்து இருக்கிறார்கள். தெருவிலும் பொதுக்குழாய்கள் இருக்கின்றன. ஒரு சில வீடுகளில்  சிறிய மோட்டார் பொறுத்தி  திருட்டுத்தனமாக குடி தண்ணீர் எடுக்கிறார்கள். அதனால்  தெருவின் பொதுக்குழாயிலும் மோட்டார் பொறுத்தாமல் நியாயமாய் குடி நீர் இணைப்பு பெற்றுள்ள குடியிருப்புக்களிலும் தண்ணீர் சரியாக வருவது இல்லை.  இப்பகுதி மக்கள் மிகமிகக்கஷ்டப்படுகிறோம். ஆகவே அய்யா அவர்கள் உடனடியாக இந்தத்திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்து சுபாஷ் நகரில் எல்லோருக்கும் குடி தண்ணீர் நேர்மையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்’

மாவட்ட ஆட்சித்தலைவருக்குப்புகார் மனுவை அனுப்பி முடித்தான்.

ஒருவாரம் சென்றது. நகராட்சிக்காரர்கள். மாவட்ட ஆட்சியரிடமிருந்து என்ன ஆணை பெற்றார்களோ  அது தெரியவில்லை. ஒரு நாள் காலை. அதிகாலைதான்.. சுபாஷ் நகருக்கு  நகராட்சியின் பெரிய லாரி ஒன்றில் நான்கைந்து பேருக்கு தொற்றிக்கொண்டு வந்தார்கள்.  ஸ்டீல் வின்ச் ஸ்பானர் ரோப் இத்யாதிகள்  கைவசம் இருந்தன. கூடவே  நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் வந்திருந்தார்.

‘அப்படியே இங்க பாருங்க இந்த நகரு குடி தண்ணீர் கனெக்‌ஷனுங்க  சீரியல் நெம்பரு  அது அதுங்க விலாசம்  இருக்கு. நேரா போங்க சின்ன மோட்டார் போட்டு நம்ப சப்ளயை திருட்டுத்தனமா  எடுக்குறாங்களான்னு பாருங்க அப்பிடி இருந்தா. அலெர்ட். அந்த மோட்டரை நாம பறிமுதல் செய்யுறம்’

என்றார் அந்த ஆய்வாளர்.

அவன் எலக்ட்ரிகல் கடையிலிருந்து அங்கு என்ன நடக்கிறது என்று நோட்டம் விட்டான். ஒரு பத்து மோட்டர்களை இவர்கள் கழட்டிச்சென்றால் தேவலை. அவனிடம் விற்காமல் கிடப்பில்  கிடக்கும் பத்து மோட்டர்களை மீண்டும் போணியாக்கிவிடலாம்..  தீவிர யோசனையில் இருந்தான்.

‘இப்ப போறமே இது தண்ணி  வுடுற நேரம்தானா சாரு’

வயதில் மூத்த தொழிலாளி  நகராட்சி ஆய்வாளரைக்கேட்டுவைத்தான்/.

‘பிறகென்ன இதுதான் நாம குடி தண்ணி சப்ள பண்ற கரெக்ட் டயம்’ அதான் நாமளும் வந்துருக்கம். நீங்க போங்க போயி அந்த திருட்டு மோடாருவுள கழட்டிக்கொண்டாங்க. அதான் இப்பக்கி நம்ப  ஜோலி.  நா சொல்றது என்னன்னு தெரிதா’ கட்டளை தந்தார் ஆய்வாளர்.

குடிதண்ணீர் எடுக்கப்படும் எல்லா வீடுகளுக்கும் அந்தக்குழு சென்றால் அதுவே சரியாக இருக்கும். அதுதானில்லை. ஏனில்லை. அதற்குக்காரணம்  இலாமலா..

‘என் வீட்டுக்கு முந்தி வீட்ட வுட்டுப்புட்டு என் வீட்டுக்குள்ளாற நுழையுறிங்க. அங்கயும் சின்ன மோட்டாரு ஓடுதே’

என்றாள் ஒரு பாட்டி.

 பயனாளிங்க விலாசமும்  டாப் கனெகஷன்  நெம்பரும் எங்களுக்கு குடுத்து இருக்காங்க அது பிரகாரம் எங்க வேலய நாங்க செய்யுறம். நீங்க சொல்லுற அந்த வீட்டு விலாசம் இங்க எங்களண்ட இல்லயே’ என்றார் வந்திருந்த  மூத்த தொழிலாளி.

‘அவுங்க கனெக்‌ஷனே திருட்டு கனெக்‌ஷன்.  நாங்க அப்பிடி இல்லே. தண்ணி வரமாட்டேங்குதுன்னு கொழாயில சின்ன மோட்டரு செறுகியிருக்கம். அதான்.  நாங்க தண்ணி வரியும் கட்றமே. அவுங்க  அந்த அதயும் கட்றதில்லே. ஆனா அங்க திருட்டு மோட்டரு ஓடுது இது மாதிரிக்கு இன்னும் பல பேரு வூட்டுல  திருட்டு கனெக்‌ஷனுங்க இருக்கு சாரு. அங்க நீங்க போவுணும்ல

மூத்த தொழிலாளியிடம் கேட்டாள் அந்த ப்பாட்டி.

‘எங்க வேலய நாங்க செய்யுறம் அவ்வளவுதான்’

முடித்துக்கொண்டார்  அந்த மூத்த  நகராட்சி ஊழியர்.  நான்கைந்து தாய்மார்கள் நேரே நகராட்சி ஆய்வாளரிடம் வந்து கத்தினார்கள்.

‘ மோட்டர கழட்டி எடுத்துகினு போங்க. எங்க வூட்டுல நாலு கொடம் தண்ணி வேணுமே. சின்ன மோட்டர் போட்டாத்தான் அது வரும்  மோட்டர் இல்லன்னு வச்சிக்க வெறும் காத்துதான் வரும் தண்ணி வராது’ சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

‘ எதாயிருந்தாலும் எங்களுக்கும்  ஒசக்க பெரிய ஆபிசருங்க இருக்காங்க. அவுங்களை பாருங்க. ஒங்க கொறய சொல்லுங்க.’

என்றார் ஆய்வாளர்.

 நகராட்சி லாரியில் பத்து பதினைந்து மோட்டார்களை அங்கங்கு பார்த்து கழட்டிக்கொண்டுவந்து   தொழிலாளர்கள் அடுக்கினர். வண்டி புறப்பட்டது.

‘அநியாயம் அக்கிரும்பு’ புலம்பினர் சுபாஷ் நகர் வாசிகள்.

நகராட்சி லாரியில் அவர்கள் எடுத்துச்சென்ற அனைத்து மோட்டார்களுமே அவன் அவர்களுக்கு  தனது எலக்ட்ரிகல் கடையிலிருந்து விற்றவைதான். அந்த ஸ்டாக்கில்தானே இன்னும் பத்து மோட்டர்கள் கடையில் பாக்கியாகிக்கிடக்கின்றன.

எலக்ட்ரிகல் கடையிலிருந்து அவன்  நடந்த களேபரத்தைப்பார்த்துக்கொண்டேஇருந்தான்.

மாலை நேரம். ஒவ்வொருவராக மோட்டார் பறிகொடுத்த சுபாஷ் நகர்காரர்கள் கூடினார்கள். என்ன செய்வது என்று யோசித்தார்கள். தண்ணீர் வரியே கட்டாதவர் வீட்டில் மோட்டார் இருக்கும். தண்ணீர் வரும்..  திருட்டு கனெக்‌ஷன் திருட்டு.. மோட்டார். அக்குரும்பு அக்குரும்பு’.. மாறி மாறி இதனையே பேசினார்கள்.

‘ நாளைக்கு தண்ணி வேணுமே என்ன செய்வே’

ஓங்கிக்குரல் கொடுத்தார் ஒரு பெரியவர்.

அவரே சொன்னார்.

‘ கழட்டி எடுத்துட்டுப் போன மோட்டாருங்களை  நாம திரும்ப கொண்டாரணும். அது  ஒண்ணும் இப்பக்கி ஆவாது.  நாம  அதே எலக்ட்ரிகல் ஷாப்புக்கு  போவுறம். திரும்பவும்  காசு போட்டு புதுசா வாங்குறம். அதச்சொறுகி தண்ணி எடுப்பம்.வேற என்னா வழி இருக்கு. நாளைக்கு நாம வேலைக்கு போவுணும்.  நம்ப புள்ளிங்க ஸ்கூலுக்கு போவுனும்ல யாரு தப்புக்கு யாரு தண்டம்  அழுவுறது.‘. முடித்துக்கொண்டார்.

எலக்ட்ரிகல் கடைக்கு சொல்லிவைத்தாற்போல் ஒருவர்பின் ஒருவராய் சென்றனர். அந்த சிறிய மோட்டாரை அதே எலக்ட்ரிகல் கடையில் விலைக்கு வாங்கினர். வீட்டுக்குழாய் இணைப்பில்  அதனைத்திரும்பவும் பொறுத்தினர்.  குடி தண்ணீர் பழைய படிக்கு வந்தது.

ஆறுமாதம் கழிந்தது. நகராட்சிக்காரர்கள் தகவல் அனுப்பினார்கள்.  ஒவ்வொருவரும் ஐநூறு ரூபாய் நகராட்சிக்கு அபராதத்தொகை  எனக்கட்டினார்கள். ன ந்கராட்சிக்காரர்கள் கழட்டிச்சென்ற  அந்த அந்த மோட்டாரை திரும்பவும் பெற்றுக்கொண்டனர்.

அவன் எலக்ட்ரிகல் கடையில் இருந்தான்.  அவரவர்கள்  நகராட்சியிலிருந்து பழைய மோட்டாரை வாங்கிக்கொண்டு  தத்தம்  வீட்டுக்குச்செல்வதை உற்றுப்பார்த்தான்.

‘பத்திரமா  கொண்டுபோய் வீட்டுல வையுங்க இது ரிப்பேரா அது. அது ரிப்பேரானா இதுன்னு வச்சிகிடலாம். அதுலயும் ஒரு வசதி இருக்குது  அவர்களைப்பார்த்து  எலக்ட்ரிகல் கடைக்காரன் சொல்லி நிறுத்தினான்.

--------------------------------------------

---------------------------------------------------------------------------------------.

சரித்தான் - கதை

சரித்தான்                      

சார் கீழ் வீடு வாடகைக்கு விடறதா எழுதிப் போட்றிக்கிங்க.  பாத்தேன் எனக்கு வாடகைக்கு வீடு வேணுமே’

என்னிடம்தான். ஒருபெண்மணி தொலைபேசியில் பேசினாள். நான் முதல் தளத்தில் குடியிருக்கிறேன். கீழ் தரைதள வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.  ஆக  டு -லெட் போர்டு போட்டு இருக்கிறேன்.

‘ஆமாம். உங்களுக்கு  வாடகைக்கு வீடு வேணுமா’

‘ஆமாம் எனக்குத்தான் சார்’ அந்தப்பெண் பதில் சொன்னாள்.

‘ நாங்க வீடு வாடகைக்கு விட புரோக்கர்ங்கள அனுமதிக்கறது இல்ல’ நான் கண்டிப்[பாய்ச் சொன்னேன்.  எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கும் போது எல்லாமே எனக்குத் தெரிந்தமாதிரிதான் ஆரம்பிப்பேன்.

’‘வாடகை எவ்வளவு அட்வான்ஸ் எவ்வளவுன்னு  தெரியணுமே சொல்லுங்க’

’வாடகை அஞ்சி அட்வான்ஸ் பதினைந்து.  மாசம் பொறந்தா தேதி அஞ்சி க்குள்ள வாடகை வந்துடணும் நீங்க குடும்பமாதான வருவீங்க’

‘ஆமாம் சார். அதுல என்ன’

‘இல்ல நாங்க பேச்சலருக்கு விடறது இல்ல’  யாரும் பிரம்மச்சாரி என்கிற வார்த்தயை மட்டும் பிரயோகிப்பதில்லை. நானும் தான்.

‘சார் நாங்க குடும்பமாதான் வருகிறோம். நானு  எங்க சாரு அப்புறம் எங்களுக்கு பசங்க ரெண்டு பேரு’

‘அப்ப ரொம்ப சரி’ சின்ன குடும்பம்.  சாருன்னா  அது’

‘ எங்க வீட்டுக்காரருதான் சாரு’

 ’சரித்தான். வீட்டைப்பாக்க எப்ப வர்ரீங்க. ஆளுங்க கேட்டுகிட்டே இருக்காங்க. யாரு அட்வான்ஸ் மொதல்ல தர்ராங்களோ அவுங்களுக்கு நான் விட்டுடுவேன் பெற்வு வருத்தப்படாதிங்க’’

கறாராகத்தான் பேசினேன்.

‘சார்  நானே  தோ  ஏ டி எம் போயி ரூவா எடுத்துட்டு வந்து அடவான்ஸ் கொடுத்துடறேன்’

‘வீடு  உங்களுக்கு புடிக்கவேண்டாமா’

‘சாரு நான் உங்க வீட்டை பாத்து இருக்கேன்’  அதக்காலி பண்ணிகிட்டு  சொந்த வீட்டுக்குப்போன அந்த அய்யா என் கூட ஸ்கூல்ல டீச்சரா வேல பாக்குறவரு. அந்த வீட்டுக்கு நான் மொதல்லயே வந்து இருக்கன் ‘இந்தி டீச்சர் கமலான்னா அவுருக்குத்தெரியும்’

அந்தப்பெண் பதில் சொன்னாள். டீச்சர்  உத்யோகம் பரவாயில்லை வேறு யாராவது வருவதற்கு பதில் டீச்சர் என்றால் பரவாயில்லைதானே . எனக்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது.

அந்தப்பெண் அட்வான்ஸ்  பதினைந்தாயிரத்தைக்கொண்டு வந்து கொடுத்தாள். பழைய நோட்டும் புதிய நோட்டுமாக அட்வான்ஸ் தொகை இருந்தது.  கீழ் வீட்டு சாவியை அவள் வசம் ஒப்படைத்தேன்.

‘தண்ணி மோட்டாருக்கு தனியா  ரூவா  எர நூறு மாசம் ஒண்ணுக்கு வாடகையோட எனக்கு வந்துடணும்’ ஜம்பமாக ச்சொன்னேன்.

‘ அவளும் தலையை ஆட்டினாள்.

‘ கரண்டு அட்டைய புடிங்க இது வரைக்கும்  வந்த பில்லு கட்டியாச்சி. இனி மேலுக்கு நீங்க கட்டிகிறிங்க.  மீட்டர் ரீடிங்கை ஒரு எட்டு பாத்துகுங்க. தண்ணி மோட்டரு என்  வீட்டுக்கு வர்ர கரண்டுல ஓடுது. அதான் தண்ணி கரண்டுக்குன்னு  காசு எர நூறு ரூவா தனியா கேக்குறன்’

‘எல்லாம் ரைட்டாதான் இருக்கு’ அவர் பதில் சொன்னாள்.  ஒரு டீச்சருக்கு ரைட் ராங்க்தான் நிறையவே போணியாகிறது.

‘சாருக்கு எங்க வேலன்னு சொல்லுலயே’

‘அவுரும் என்னோட ஸ்கூலுக்கு த்தான் வர்ராரு’

அவள் பதில்தான் சொன்னாள். பதில் பூடகமாக இருந்தது.

ஒரு வாரம் சென்றது. மாதத்தின் முதல் நாள். நல்ல நாளாகவும் இருந்தது. குடி வருவதாகச்சொல்லிச்சென்ற அந்த இந்தி டீச்சர் வந்தும் விட்டார்.

வீட்டு வாசலில் டீ கேன் கட்டிய  பழைய சைக்கிள் நின்றது.

இந்தி டீச்சரின் கணவர். டீயை  எவர்சில்வர் கானில்எடுத்துக்கொண்டு சைக்கிளில் சுற்றி ச்சுற்றி வியாபாரம் செய்பவர். ஸ்கூலுக்கும் அவர்தான் டீ சப்ளை.  இப்படியாக டீ கொடுக்கும் போதுதான் இந்தி டீச்சருக்கும் அவருக்கும் சினேகம் தொடங்கி அது கல்யாணம் வரைக்கும் போனது போல.. பிறகு குடும்பம் அது இது என்றாகி விட்டதாக அந்த டீ மாஸ்டர் என்னிடம் சுய புராணம் சொன்னார். இந்தி டீச்சர் அந்தப்பக்கம் வரவில்லைதான்.

ரெண்டு பசங்க எனக்கு என்று  கமலா டீச்சர் சொன்னது பொய்யில்லை. அந்த பசங்க இருவருக்கும்  வயது முப்பதை தொட்டுக்கொண்டும் இருக்கலாம். ஒருவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள். ஆனால் மனைவி விபத்தொன்றில் இறந்து போனாளாம். அந்த தாயில்லா குழந்தைகளைப்பார்த்துக்கொண்டு  பெரிய பையன் வீட்டோடு இருக்கிறானாம். அடுத்தவனோ இப்போதுதான் திருமணம் முடித்து இருக்கிறான். அந்த புதுப்பெண்ணும் வளைகாப்புக்குத் தயாராகி நின்று கொண்டிருந்தாள்.

இந்தி டீச்சர்  ஸ்கூலுக்குப்புறப்படும்போதே அவர் கணவரின் டீ கேன் ரெடியாகி விடுகிறது. அவர் சைக்கிளை த்தள்ளிக்கொண்டே நடக்க டீச்சரும் உடன் சென்றுகொண்டிருந்தாள்.

நான் யோசித்துப்பார்த்தேன். இந்தி டீச்சர், டீ வியாபாரி  ரெண்டு பேர். பையன்கள்.  ரெண்டு.  அவர்களுக்கு சின்ன  சின்ன கம்பெனியில் வேலை. பெரிய பையனுக்கு மனைவி இல்லை. ஆனால் ரெண்டு குழந்தைகள்.  குழந்தைகளை கவனிக்கவேண்டுமே. ஆகத்தான் பெரிய பையன் வேலைக்குச்செல்வதில்லை.

ரெண்டு ரெண்டு ரெண்டு ஆக ஆறு பேர் இவர்களோடு பிரசவத்திர்கு இருக்கும் சின்ன மருமகள். மொத்தம் ஏழு பேர்.

இந்தி டீச்சரின் தாய் மட்டும் இருக்கிறாளாம். அந்தத்தாயுக்கு ரெண்டு பெண் குழந்தைகள்..இந்த மாதம் ஒரு பெண் வீடு அடுத்த மாதம் வேறு ஒரு பெண் வீடு என கண்டிஷன் போட்டு  மாரி மாறி அம்மாவைப் பார்த்துக்கொள்கிறார்களாம். ஆக ஒரு நாள் அந்தத்தாயும்  கமலா டீச்சர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

‘இங்கணு ஒரு மாசம்னா. அங்கணு ஒரு மாசம் என்னங்க நான் சொல்லுறது நாம்ப செய்யுற எதுலயும் ஒரு நெய்யாயம் இருக்கோணும்ல’ என்னிடம் அந்த டீச்சரின் தாய்  கொங்கு நாட்டு பாஷையில் சொல்லிக்கொண்டாள்.  இப்போது கீழ் வீட்டில் எட்டு நபர்கள் வாசம் செய்கிறார்கள்.

வாயிலில் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு இந்தி டீச்சர் நின்று கொண்டிருந்தாள்.

‘ என்ன விஷயம்’ கேட்டேன்.

‘ஒண்ணும் இல்லேங்க. சின்ன மருமகளோட அம்மா வர்ரேன்னாங்க. காணுல அதுக்கும் பெரசவத்துக்கு நாளு கிட்டத்துல வருதுல்ல அவுங்க வந்துட்டா நமக்கு கொஞ்சம் ஒத்தாசை’

  தல பிரசவம் தாய்  வீட்டுலதானே செய்வாங்க’

நான் கேட்டுப்பார்த்தேன்.

’அது ஒத்த ஆளு. ஆம்பள இல்லாத எடம்.  அந்த அம்மாவுக்குமே ரெண்டும் பொம்பள புள்ளைங்க. அப்புறம் யாரு எவுரு பெரசவம் பாப்பாங்க நீங்களே சொல்லுங்க’ வக்கீல் பேசுவது மாதிரிக்கு இந்தி டீச்சர் பேசினாள். அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. நான் வாயையே திறக்கவில்லை.

‘ இந்தி டீச்சரு வூடு இது தானெ கேட்டுக்கொண்டே ஒரு பாட்டியம்மாள் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.

‘ நீங்க யாரு’

நான்தான் வெடுக்கென்று கேட்டேன்.

‘சரியா போச்சி போங்க  சம்மந்தியம்மா வந்துருக்காங்க வாங்க வாங்க நீங்க வருணும் வருணும்’ ’ என்று சொல்லி இந்தி டீச்சர் அந்தப்பாட்டியைத்தன்  வீட்டின் உள்ளே அழைத்துப்போனாள்.

முன்னம் எழுவர். அந்த சம்மந்தி இந்த சம்மந்தி என இருவர். ஆக ஒன்பது பேருக்கு கீழ் வீட்டில்தான் வாசம். பேரனோ பேத்தியோ பிறந்தால் பத்தாகிவிடலாம்.

 இப்போதெல்லாம் நாளொன்றுக்கு மூன்று முறை தண்ணீர் மோட்டார் போடவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகரிக்கவும் கூடும்.

‘எங்களுக்குப் பசங்க ரெண்டு பேரு’

கீழ் வீட்டுக்குக்குடிவந்துள்ள  இந்தி டீச்சர் சொன்னது சரித்தான் அதில் மட்டும் எந்தத்தவறு  இல்லை.. பிறகென்ன.

----------------------------------------------------

வானவில்லின் எட்டாவது நிறம்

வானவில்லின் எட்டாவது நிறம்     

சத்தியத்தின் பேரழகை

காட்சியாய்க்கண்டவர்கள்

விண்டுரைக்க வரமாட்டார்

ஆகத்தான் கவியே சேதியுனக்கு

ஏழு வண்ண

வானகத்து வில்

கள்ளமிலா உள்ளத்துப்

பாட்டுக்காரனிடம் பகர்ந்தது

முப்பட்டை ஆடி

வெள்ளை ஒளிக்கற்றை

வானவில்லுக்கு நிறம் ஏழு

எத்தனைக்காலம்  இது சொல்வீர்

வானவில்லுக்குண்டு எட்டாவது நிறம்

எவ்வுயிரும் தம் உயிர்போல் உள்ளும்

உள்ளமுடைப்பெரியோர்க்கு

அன்புக்கண்ணுண்டு

அன்பேசிவமாகி அனுபவம் பயிலத்

தன்னால் தெரியும்

வானவில்லின் எட்டாவது நிறம்

வாழையடி வாழையென

வந்து வந்து

விடை ப்பெற்ற மானிடப்பரப்பில்

விரல் விட்டு என்ணிடலாம்

அன்புக்கண் கொண்டு

எட்டாவது நிறம்

ஆனந்திதோரை.

மாயத்திரையோ ஏழு

விலகிடத்தெரியும் அருள்ஜோதி

வடலூரார் காட்டிய மெய்

சொல்லல் விளங்குமா

சொல்லில் அடங்குமா

உள்ளன்பு மெய்யானால்

வசப்படும் உங்கள்

அன்புக்கண்ணுக்கு

வானவில்லின் எட்டாவது நிறம்.

Friday, March 5, 2021

நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்

Spread the love

நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்

Spread the love

அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட அனைவரின் ஒன்று பட்ட எழுச்சியே இந்த நாவலின் மையக் கரு.

நாவலின் செய்தி மிகவும் நேரடியானதும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டதும் ஆகும். 293ம் பக்கத்தில் வரும் இந்தப் பதிவே நாவலின் சாராம்சம்: “தாய் மொழியை ஆலயத்திலிருந்து ஓரம் கட்டியது. தலித் சமுதாயத்தை சமுதாயக் கட்டமைப்பிலிருந்து ஓரம் கட்டியது. தங்கை தமக்கை தாய்மார்களை கல்விக் கூடங்களிலிருந்து ஓரம் கட்டியது. இந்த மூன்றும் சரிசெய்யப் பட்டாலொழிய இங்கே எந்த சமூக நியதியும் நிறைவு பெறாது.”

தலை முடியை மழித்துக் கொள்ளாதற்காக ஊரை விட்டு ஒதுக்கு வைக்கப் படும் ஒரு பிராமண விதவை, மேல்சாதிக்காரர் சதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு தலித் இளைஞன் மற்றும் சிந்தனையாளரான ஒரு பெரியவர் இவர்களுக்கு உறுதுணையாகத் தமிழில் தேவாரம்பாடி பூஜை செய்ய விழையும் ஒரு (அதிசய) தீட்சதர் இவர்கள் ஒன்று பட்டு நிற்கின்றனர். இவர்கள் போராடி இன்னும் பலர் இவர்கள் போல எழுந்து வர என்றேனும் விடியும் என்னும் நன்னம்பிக்கையைத் தருவது இந்த நாவல்.

நாவலில் என்னை மிகவும் கவர்ந்தது சரியான உதாரணத்தை எஸ்ஸார்ஸி கையாண்டது. பிற்போக்கானதும் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானதுமான போக்கு சிதம்பரத்தில் வெளிப்படையாகத் தெரிவது. தேவாரம் ஓத ஒரு பக்தர் நீதி மன்றப் படிக் கட்டு ஏற வேண்டி வந்தது. இந்த நாவலில் தேவாரம் பாடிய ஒரு தீட்சதர் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். நாவல் கற்பனையானது என்றாலும் நிலவரம் என்னவோ இது தான்.

நாவலில் பல உரையாடல்கள் ஜெயகாந்தனின் பதிவுகளை நாம் நினைவு கூரச் செய்பவை. லட்சியவாதம் மிகுந்த உரையாடல்கள். ஆனால் இன்று நீர்த்துப் போனவற்றில் முக்கியமானது லட்சியவாதம். தனக்குள்ளேயே தன்னைப் பின்னிழுக்கும் பல தளைகளைச் சுமப்பவனே இலட்சியவாதி. அவனுக்கு சமூகம் தரும் நிராகரிப்பு வலி மிகுந்தது. வ உ சிதம்பரனாரின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்.

நாவலை சமுதாய மாற்றத்துக்கான ஒரு கருவியாக ஆசிரியர் காண்கிறார். அவர் சுட்டும் திசையில் நாம் நாவலை வாசிக்கிறோம். இந்த நாவலில் நாம் காண்பது இரு அணிகள். சமூக ஆர்வலர் ஒரு பக்கம்- மறுபக்கம் சாதிவாதம் பேசும் சுயநலவாதிகள்.

நிச்சயமாக சமூக ஆர்வலர் சிறுபான்மையினரே ஏன்? விரல் விட்டு எண்ணக் கூடியவரே.

நல்லவர் கெட்டவர் என்பது போல சமூக ஆர்வலர்- தன்னலாமானவர் என்று இரு பிரிவு இருக்கிறதா? அப்படிப் பிரிக்கும் அணுகுமுறை சரியா?

பெண்ணுரிமை பற்றிக் காலம் காலமாகப் பெரிதும் ஆண்களே பேசி வருவது ஒரு நகை முரண். பெண்களில் சுமங்கலி விதவை என்னும் வித்தியாசத்தை ஏன் பெண்கள் நிராகரிக்கவில்லை? எந்தக் கொலுவுக்காவது விதவைகள் அழைக்கப் பட்டு சுமங்கலிக்கு இணையான மரியாதைக்கு உட்படுத்தப் படுகிறாரா? இந்தக் கேள்வியை ஏன் சுமங்கலிப் பெண்கள் எழுப்புவதில்லை?

இடைசாதி அல்லது பிற்படுத்தப் பட்டோர் என்னும் பிரிவினர் தான் காலம் காலமாக நசுக்கப் பட்டதாக அரசியல் பேசும் போது தன் சாதிக்காரனால் தலித் நசுக்கப் படுவதைப் பற்றி ஏன் பேசுவதே இல்லை?

தீட்சதரோ அல்லது அய்யரோ அல்லது அய்யங்காரோ தமிழில் பூசை செய்தால் தட்டில் 500 வைக்கிறேன் என்று யாரேனும் கூறினால் மறுகணம் மனப்பாடம் செய்து அமர்க்களப் படுத்தி விட மாட்டாரா? கோயில்களில் தமிழ் ஒலித்தால் மட்டும் மனித நேயமில்லாத கூட்டம் மதத்தைத் துணையாக்கிச் செய்யும் ஆதிக்கம் அழிந்து விடுமா?

சுமங்கலியோ அல்லது இடைசாதித் தலைவர்களோ அல்லது கோயில் அர்ச்சகர் கூட்டமோ இவர்கள் தமக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தில் அல்லது அங்கீகரிப்பில் கிறங்கிக் கிடப்பவர்கள். அதை விட்டு விட்டு சமுதாய மறுமலர்ச்சி- மண்ணாங்கட்டி- தெருப்புழுதி என்று உளற அவர்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?

அதிகாரம் தரும் போதை- அங்கீகரிப்பு தரும் ஈர்ப்பு – கைத்தட்டலும் ஜால்ராவும் தரும் இன்னிசை இதைத் தாண்டியவன் எவனாவது இது வரை பிறந்திருக்கிறானா?

காவி உடை பூண்டவனுக்கு ஊடகமும் சீடரும் பொதுமக்களும் தரும் வணக்கம் எவ்வளவு வருடலாக இருக்கிறது?

அரசியல் தலைவனும் அவ்வாறே. எழுத்தாளனுக்கே இன்று ஒரு வாசகர் வட்டம் மாவட்டம் ரசிகர் மன்றம் என்று அதிகார-அங்கீகரிப்பு வேட்கை பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுகிறது இல்லையா? ஜால்ரா சத்தம் கேட்காவிட்டால் அவனுக்குத் தூக்கமே வருவதில்லையே.

எங்கே அதிகார வேட்கை இல்லையோ, எங்கே அங்கீகரிப்புக்கான அரிப்பு இல்லையோ அங்கே மட்டுமே அற உணர்வு நீர்க்காமல் நிமிர்ந்து நிற்கும்.

நீர்த்துப் போய் போலி அற விழுமியப் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு அலையும் இவர்களுக்கு நடுவே அறம் என்றுமே கனல் வீசாது.

நிமிர்ந்து நிற்கும் அச்சமின்மையும் எதற்கும் விலை போகாத ஆன்மீக நோக்கும் உள்ள பெண், தலித் அல்லது எழுத்தாளன் மட்டுமே புதியதோர் உலகின் தடங்களைக் கண்டு உலகுக்கே உரைக்க முடியும். ஆன்மீகம் வழிபாட்டுத்தலங்களைத் தாண்டி ‘இதுவே அறம்’ என்னும் தெளிவுக்கு மட்டுமே புலனாவது.

தேடல் உள்ளோர் யாரும் ஆன்மீகத்தில் இணைவார்கள். அரிய சகபயணிகளை இனம் கண்டு மனம் நிறைவார்கள்.

எஸ்ஸார்ஸியின் பதிவுகள் மாற்றத்தைக் கோருபவை. அந்தத் திசையில் நம்மை இட்டுச் செல்லும் படைப்புகள் தமிழில் அதிகம் இல்லை. அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.